நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

பயணக்குறிப்புகள் - 11 (Peru)

Wednesday, December 30, 2015

இசை முழங்கிய இரவு
-Ollantaytambo, Peru -

நான் அந்த நகரில் சில இரவுகள் தங்குவதெற்கெனத் தேர்ந்தெடுத்ததே அது வரலாற்றுச் சிறப்புமிக்க நாகரிகமொன்றின் முக்கியமான இடம் என்பதால் மட்டுமன்று. மலைகளால் சூழ்ந்த அந்தச் சிறுநகர் மிக அமைதியானதென்று கேள்விப்பட்டதாலே, அங்கே மூன்று இரவுகள் தங்குவதற்குத் தீர்மானித்திருந்தேன்.
தெருக்கள் கூட இன்றும் கற்களால் நிரவப்பட்ட (cobblestone) பாதைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டினதும் உட்புறங்கள் மாற்றமடைந்துவிட்டாலும், நான் தங்கி நின்ற வீட்டுச் சுவர் உட்பட எல்லாமே நூற்றாண்டுகளுக்கு முன் கற்கள் கொண்டு கட்டப்பட்ட மதில்களாகவே இருக்கின்றன. என்ன, அன்றைய காலத்தில் மதில்களினூடு வெளியே பார்க்க யன்னல்களாய் இருந்தவை எல்லாம் இன்று அடைக்கப்பட்டிருந்தது மட்டுமே சிறு மாற்றம். தெருக்கள் என்றவுடன் நீங்கள் பெரிதாகக் கற்பனை செய்துவிடக்கூடாது. நான்குபேர் சமாந்தரமாக நடந்துபோகக்கூடிய அளவுக்கு மட்டுமே அகலமுடியவை அவை.
இந்நகரிலும் எல்லா நகர்களுக்கும் இருக்கக்கூடிய முக்கிய அரங்கும் அதை நான்குபுறமும் (நாற்சார் வீடுகளைப் போல) சுற்றிச் செல்கின்ற தெருக்களும் இருக்கின்றன. நான் போயிருந்த இரண்டாம் நாளில் நகரின் வருடாந்தக் கொண்டாடம் களைகட்டத்தொடங்கியது, எனக்கு தற்செயலான ஒரு விடயம்.
முதல்நாளிலேயே அரங்கிலும் அதன் முன்றலிலும் ஒத்திகைகள், உணவுக்கடைகள் என ஒரே உற்சாகம். எல்லாமே பூர்வீகக் குடிகளின் நடனங்கள். புல்லாங்குழலினதும் மெல்லிய பறையிசைப்பினதும் பின்னணி மனதை எங்கெங்கோ அலைக்கழிக்கத் தொடங்கின. ஒத்திகையில் ஆடத்தொங்கிய பெண்களுக்கு ரீமா சென், நயந்தரா, த்ரிஷா எனப் பெயரிட்டபடி அவர்களை விழிகளால் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். இடையிடையே வாழ்வில் என்னை அலைக்கழித்த பெண்களின் பெயரையும் சூட்டி மகிழ்ந்தபடி இருந்தாலும், இன்று உலகம் சுருங்கி அவர்களோ அவர்களோடு சம்பந்தப்பட்டவர்களோ வாசித்துவிட்டால் என்னாவது என்ற அச்சங் காரணமாய் அவர்களின் பெயரை இங்கே தவிர்த்துக் கொள்கின்றேன்.
அடுத்த இருநாட்களும் பகலிலிருந்து விடிய விடிய கொண்டாட்டமாய் அந்த நகர் குதூகலித்துக்கொண்டிருந்தது. பகலில் அணிவகுப்புக்களும் ஆடல்களும், இரவில் இசையும் போதையுமாய் நகர் மிதக்கத் தொடங்கியது. இசை அதிர அதிர மது எங்கும் பெருகிக்கொண்டிருந்தது. மதுவை பெட்டிகளில் வைத்து விற்றுக்கொண்டிருந்தவர்களே கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் மாறி தாங்கள் விற்கக்கொண்டுவந்த மதுவைப் பகிர்ந்து அருந்தத் தொடங்கினார்கள்.
மது அருந்ததுதல் என்பது நமக்குத் தெரிந்தவர்களுடன் உற்சாகமாய்க் கொண்டாடுதல் அல்லவா? மதுப்போத்தல்களை வாங்கி நடுவில் வைத்துவிட்டு வட்டமாய் இருந்து கதைப்பதும் ஆடுவதுமே அவர்களின் கலாசாரத்தின் ஒரு பகுதி.
கொண்டாட்டத்தின்போது எவரையும் வட்டத்திலிருந்து வெளியே விட்டுவிடக்கூடாது என்பது எவ்வளவு அழகான விடயம். அவ்வாறு நடுவில் பெரும் மதுக்குவளைகளை வைக்க இடமில்லாதபோது அந்த வட்டத்தில் ஒருவரிடம் பெரும் மதுக்குவளைகள் கொடுக்கப்படும், அவர் வட்டத்திற்குள் நிற்பவர்களின் கிண்ணங்களில் மதுவை நிரப்புக்கொடுத்தபடி இருப்பார்.

துப்போத்தல் ஒன்றை வாங்கிய சிறுகுவளையில் நிரப்பி அருந்தியபடி இசையை இரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கூட்டம் என்னை தங்களின் வட்டத்தில் இணைத்துக்கொண்டது. அவர்கள் மதுவை விற்பவர்களாகவும் இருந்தார்கள். ஒரு வயதுமுதிர்ந்த மூதாட்டி தன்னோடு ஆடக்கேட்டார். ஆடினேன். பின்னர் அந்த வட்டத்தில் நிற்பவர்களுக்கு மதுவை நிரப்பும் ஒரு முக்கிய தகுதியையும் அந்த மூதாட்டியும் மற்றப் பெண்களும் தந்தனர்.
அதுவல்ல குறிப்பிடவேண்டியது. நிரப்பும் குவளைகளை அவர்கள் அருந்தி முடித்த வேகம். ஒவ்வொருமுறையும் குடித்துமுடித்துவிட்டு புறங்கையில் குவளையை தலைகீழாக வைத்துக் காண்பிப்பார்கள். அவர்கள் அருந்திமுடித்துவிடும் வேகத்திற்கு நானும் குடித்தாகவேண்டும் என்பது அவர்களின் அன்பு நிபந்தனை. அவ்வாறு முடியாதவிடத்தில் அவர்கள் அடுத்த குவளையை நிரப்பமாட்டார்கள். நான் முடிப்பதற்காய்க் காத்திருப்பார்கள். இந்த வேகத்தில் போனால் நான் தரையில் நிற்கமுடியாது; நிலவில் தான் மிதக்கவேண்டும் என்று எடுத்துச் சொல்லவும் மொழி நமக்கிடையில் தடங்கலாய் இருந்தது.
அருந்துவதற்கும், நிரப்புவதற்கும் கையில் பெரும்/சிறு குவளைகளுடன் நிலை தடுமாறிக்கொண்டிருக்கையில், ஒரு பெண் ஆட வரும்படி நம் வட்டத்திற்கு வெளியிலிருந்து அழைத்தார். கையில் இருக்கும் பெரும் குவளைகளுடன் ஆட முடியாதென சைகையால் அவருக்குத் தெரிவித்தேன். பெரும் குவளையை வட்டத்தில் இருக்கும் வேறு எவரிடமாவது கொடுத்துவிட்டு வரச் சொன்னார். இதற்கிடையில் நம் வட்டத்திலிருந்து மூதாட்டி உற்சாகமாக என்னை இழுத்து மீண்டும் ஆடத்தொடங்கினார். மேய்ச்சலிலிருந்து வழி நழுவிப்போகும் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பர்கள் அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் அல்லவா? அந்த மூதாட்டி மேய்ப்பர்களில் ஒருவர். நானொரு ஆட்டுக்குட்டியெனச் சொல்லவும் வேண்டுமா?

ட்டத்திலிருந்து வெளியே நின்று அந்தப் பெண் இன்னும் அழைத்துக்கொண்டே இருந்தார். ஆனால் மேய்ப்பர் வட்டத்திலிருந்து ஆட்டுக்குட்டி நழுவிப்போய்விடக் கூடாதென்பதிலேயே கவனமாக இருந்தார். ஆனால் ஆட்டுக்குட்டியோ சரியோ தவறோ ஒருபோதும் வட்டத்திற்குள் எப்போதும் தங்கிவிட விரும்புவதில்லை. அதற்கு வழி தவறிப்போவதும், மனங்குலைந்து போவதும் புதியதல்ல. எதையெதையோ பெறுவதற்காய் எதையெதையோ எல்லாம் இழக்கவேண்டும் என்பதையும் அது நன்கறியும். ஒருகட்டத்தில் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பவர் இன்னொரு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கியபோது வட்டத்தை விட்டு தானாகவே இந்தக்குட்டி வழி தவறிப்போனது.
அது இன்னொரு இளமையான ஆட்டுடன் அழகான ஒரு உலகை ஆட்டத்தினூடு கண்டுகொள்ளத் தொடங்கியது. ஆட்டமும் ஆடுபவரும் ஒன்றாகப் போகும்போது ஆட்ட அசைவுகளுக்கு எந்த மதிப்பும் இருப்பதுமில்லை. மகிழ்ச்சியுடன் ஆட்டுக்குட்டி சுழலத்தொடங்கியது. பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாதபோதும் எதிரே ஆடிக்கொண்டிருந்த ஆட்டின் வாயசைவில் தனக்கான ஒரு பாடலை இந்த ஆட்டுக்குட்டி உருவாக்கியபடி இருந்தது.
அப் பெருங்கூட்டத்தின் தனியனாகவும், சில சமயம் பெருங்கூட்டத்தின் ஒரு பகுதியாகவும் தன்னை உணர்ந்து கொள்ளவும் தொடங்கியது. பறவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை என்பதுமாதிரி, இந்த இடத்தில் தான் எதுவுமேயில்லை, எவராகவும் முகமூடியை அணியவோ அல்லது எந்தச் சுவடை விட்டுச்செல்வேனோ எனக் கவலைப்படவேண்டியதில்லை என்கின்ற பெரும் நிம்மதியையும் உணர்ந்து கொண்டது.
இறுதியில் இந்தப் பெருங்கூட்டத்தில் தன்னையும் ஒருவனாய் மதித்து, நடனமாட அழைத்தற்கு ஆட்டுக்குட்டி நன்றியுடன் அந்தப் பெண்ணை அணைத்து நன்றி சொல்லியது. இந்த நள்ளிரவு இப்படி அழகாகவும் மிருதாகவும் இருக்குமென பகலில் கூட எந்த சமிக்ஞையையும் தெரியவில்லையே என தற்செயலாய் ஆசிர்வதிக்கப்பட்ட நாளை நினைத்து ஆட்டுக்குட்டி அதிசயித்துக்கொண்டது.
தன் தங்குமிட அறை நோக்கி cobbles நிறைந்த சிறுதெருவால் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது உண்மையிலே நிலவில் மிதப்பது போலவே தன்னை ஆட்டுக்குட்டி உருவகித்துக்கொண்டது. தலையை முட்டும் கூரை அறையில் தன்னுடலை கிடத்தியபோதும் இசை யன்னலினூடாக அதிர்ந்துகொண்டிருந்தது;
முகம் முழுதும் மலர்ந்து, அணைத்து வழியனுப்பிய அந்த இளைய ஆட்டின் விழிகள் மிதந்தபடியே இருந்தது இந்த ஆட்டுகுட்டியின் மனம் முழுதும்.

0 comments: