புத்தரும் நானும்

புத்தரும் நானும்
அனுபவப்புனைவு

சிறுகதைத்தொகுப்பு

சிறுகதைத்தொகுப்பு
திறனாய்வு

கள்ளி

கள்ளி
கதை

கவிதை

கவிதை
ஆங்கிலம்

'காலச்சுவடு' கண்ணனின் அதிகாரத்திமிர்

Thursday, July 14, 2016

ன்று கறுப்பின மற்றும் பெண்ணியவாதிகளின் எழுத்துக்களை மேலோட்டமாய் வாசித்துப் பார்த்தாலே எப்படி எல்லாவற்றையும் அடித்துத் துவைத்துப் போடுகின்றார்கள் என்று தெரியும். பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் நம்மிடையே கொண்டு வந்து சேந்த நுண்ணரசியல் பார்வை எப்படி இதுவரை செலுத்தப்பட்டு வந்த கருத்தியல் மீது 'பெரும்போர்' நடத்திக்கொண்டிருப்பதையும் நாமறிவோம்.

இவ்வகை எழுத்தின்/பேச்சின் மூலம் நாம் இதுவரை காவிக்கொண்டுவந்த நம் சிந்தனை முறை மீதான வெட்கத்தை மட்டும் வரச்செய்வதோடு அல்லாது, மிகக் கவனமாக எதையென்றாலும் இனி நாம் எழுத/பேசவேண்டுமென வற்புறுத்துகின்றன. 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதைப் போலவே, நாம் பயன்படுத்தும் 'ஓவ்வொரு சொல்லுக்கும் ஓர் அரசியல் இருக்கும்' கவனமாகப் பாவிக்கவேண்டுமென நம்மைக் கோருகின்றன. இதன் நீட்சியிலேயே நமக்கிருக்கும் privileges பற்றி கேள்விகள் எழுப்பப்படுவதோடு, பன்மைத்துவம் பற்றியும் பேச விழைகின்றது.

பன்மைத்துவம் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து ஒற்றைத்தன்மையாக மாறுவதைத் தொடர்ந்து இடையீடு செய்கின்றது. ஒரு தேசத்தின் கீழ, ஒரு மொழியின் கீழ், ஒரு அரசனின் கீழ், ஒரு குடையின் கீழ் ஒன்றிணையுமாறு அறைகூவல் விடப்படுவதை இது எதிர்க்கின்றது. மேலும் உனது 'உயர்ந்த' இடமென நீ காவிக்கொண்டிருந்த இடத்திற்கு என்னை வரும்படி அழைக்காதே, எனது இடம் என்னவாக இருக்கிறதோ, அதை அங்கீகரி, உனக்குள் என்னிருப்பை அடக்காதே, அது ஒருவகை அதிகாரம் எனத் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

இப்படியெல்லாம் ஏன் இப்போது விளக்கங்கொடுக்கவேண்டும். தமிழ்ச்சூழலில் மிகவிரிவாகவே 90களில் இவையெல்லாம் பேசப்பட்டும் விட்டன. ஆனால் இன்னமும் தமது privileges என்னவென்பதைப் பற்றி துளிகூட அறியாது, அது குறித்து சிறிதும் கூட வெட்கம் கொள்ளாது, எல்லாவற்றையும் ஒற்றையடையாளத்திற்குள் காலச்சுவடு கண்ணன் என்று அவரது நண்பர்களாலும், நம்மால் செல்லத்துடன் 'கா.சு.கண்ணன்' என அழைக்கப்படுகின்ற கண்ணன் சுந்தரம் இவ்வாறு எழுதியிருப்பதால்தான் இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. "பாமினி என்றொரு எழுத்துருவை பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட பால் பொடி , இடி ஆப்பம் அளவுக்கு அவர்கள் அடையாளமாக உள்ளது என்றால் மிகை இல்லை. 1995 முதலே அவர்கள் எங்களைக் கொடுமைப்படுத்துவதில் பாமினிக்கு முக்கிய இடம் உண்டு. அடங்காப்பிடரி. எந்த எழுத்துரு மாற்றிக்கும் முழுமையாக இணங்காது . கண்டாலே எனக்கு ரத்த அழுத்தம் கூடும். இன்று தமிழ் உலகம் unicode க்கு நகர்ந்துவிட்டது. அவர்கள் பாமினியை விட்டு நகர்வார்களா? நான் தமிழ் இன சர்வாதிகாரியானால் முதல் நடவடிக்கை பாமினி ஒழிப்புதான். அதற்குப் பின்தான் தனி நாடு."

இதில் தெரிவதெல்லாம் அப்பட்டமான அதிகாரத் திமிரன்றி வேறெதுவாக இருக்கமுடியும்? பாமினி போன்று ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துருக்களுக்கு நீண்ட வரலாறுண்டு. எனக்குத் தெரிந்து 90களின் நடுப்பகுதியில் நான் தமிழில் எழுதத்தொடங்கியபோது பாமினியே எனக்குத் தெரிந்ததும் இலவசமானதுமான ஒரு எழுத்துரு. 2000களின் நடுப்பகுதியில் முரசு அஞ்சலுக்கு மாறியபோதும், பலர் இன்னும் பாமினியில் அதன் தட்டச்சு விசைகள் நன்கு பழகிவிட்டதால் இப்போதும் பாவிக்கின்றார்கள். இன்றைய காலத்தில் சுரதா போன்றவர்கள் இலகுவாய் எந்த தகுதரத்திற்கும் மாற்றுவதற்கான செயல்நிரலிகளை உருவாக்கியும்விட்டார்கள்.

கண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது என்பதும் அல்ல. இது அவரின் அதிகாரத்திமிர். பிறரை/பிறதை மறுக்கும் ஒற்றைத்தன்மை. தான் தமிழினத்திற்கு சர்வாதிகாரியானால் பாமினியை ஒழிப்பாராம். இதை கொஞ்சம் நீட்டித்து கணணியில் தமிழ் எழுதத்தெரியாதவர்களையெல்லாம் அவர் சிறைக்குள் தள்ளிச் சித்திரவதையும் செய்யக்கூடும்; யாருக்குத் தெரியும்?

கா.சு.கண்ணன், நீங்கள் இனித்தான் சர்வாதிகாரி ஆகவேண்டுமென்றில்லை. ஏற்கனவே உங்களின் பிறப்பால் வந்த privilege ஆல் அப்படித்தான் கடந்தகாலங்களில் பலமுறை இருந்திருக்கின்றீர்கள்; செயற்பட்டிருக்கின்றீர்கள். வேண்டுமெனில் இன்னொருமுறை சர்வாதிகாரியாக முடிசூட்டிக் கொள்கின்றீர்களெனச் சொல்லுங்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

கடந்தகாலங்களில் மூர்க்கமாய் சிலரை/ சிலதை எதிர்ப்பதிலிருந்து optimistic நிலையை அண்மைக்காலங்களில் வந்தடைந்திருப்பதாய்ச் சொல்லியிருந்தேன். எனினும்....
"காலச்சுவடுக்கு எதிரான 'அம்பாசிடர்கள்' தேவையென்றால் என்னைப் போன்றவர்களை காலச்சுவடினர் அணுகலாம். பத்து வருடங்களுக்கு முன்னே காலச்சுவடில் எழுதுவதில்லை/எதையும் எழுதி அனுப்புவதில்லை என்ற தீர்மானத்தை இப்போதும் கடைப்பிடிப்பது என்பது 'எதிர் அம்பாசிடர்களுக்கான' ஒரு தகுதியாக எடுததுக்கொள்ளலாம் அல்லவா? "
என சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்தேன். அது தவறில்லையெனத் தெரிகிறது. நன்றி கண்ணன்.

சிலரை/சிலதைப்பற்றிய நிலைப்பாட்டில் என்ன நடந்தாலும் இப்போதைக்கு மாறுவதில்லையென உறுதியாகவே இருக்கின்றேன். மேலே கூறிய காலச்சுவடு ஒன்று, கிழக்கு பதிப்பகம் மற்றொன்று; கிழக்கு பதிப்பிக்கும் எந்த நூலையும் வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் பதிப்பகம் தொடங்கிய காலத்திலிருந்து இன்னும் மாற்றவில்லை. இம்முறை சென்னைப் புத்தகக்கண்காட்சியில் 10நாட்களுக்கு மேலாய் சுற்றியப்போதும், ஒருநாள் கூட கிழக்குப் பதிப்பகக் கடைப்பக்கம் காலே எட்டி வைக்கவில்லை.
ஆகவேதான் காலச்சுவடு கண்ணனோடு முகநூலில் நண்பனாகவோ அல்லது அவரைப் பின் தொடரவோ விரும்பியதில்லை. எனக்குப் பிடித்த நண்பர்கள் தங்கள் நூற்களை காலச்சுவடு ஊடாகப் பதிப்பித்தபோதும், காலச்சுவடு பதிப்பகத்திற்கு இருக்கும் முகநூல் பக்கத்தில் கூட இணையக்கூடாதெனவே இப்போதும் உறுதியாய் இருக்கின்றேன்.

இதைவிட கண்ணனின் இந்தப்பதிவுக்கு விருப்பக்குறி இட்ட நண்பர்களைப் பார்க்கும்போது காலச்சுவடு கண்ணனை விட இன்னும் அச்சமாயிருக்கிறது, நாமெல்லோரும் எங்கு சென்றுகொண்டிருக்கின்றோம் என்று.

இப்படியெல்லாம் எழுதியதெற்கெல்லாம் கண்ணனுக்கு மிகப் பெரிய எதிர்ப்பு வரப்போவதில்லை என்பதையும் அறிவேன். எனக்குத் தெரிந்து இப்போது ரமணி, ஸ்பாட்டகஸ்தாசன் போன்ற ஒரு சிலரே எதிர்த்து எழுதியிருக்கின்றார்கள். அவ்வாறு ஒருமாதிரி பெரும் எதிர்ப்பு எழுந்தால் கூட இதெல்லாம் நகைச்சுவைக்கு எழுதியதெனச் சொல்லிவிட்டு எளிதாய் கண்ணன் தப்பிப் போகலாம்.

அப்படிச் செய்யும்போது நாங்கள் சிரிப்பதற்கு இப்போதே கண்ணனைப் பார்த்தும் காலச்சுவடைப் பார்த்தும் எங்களின் பின்புறங்களைத் திரும்பிக்கொள்கின்றோம்.

இருபது வருடமாய் ஒரு சஞ்சிகை நடத்தும், நூற்களைப் பதிப்பிக்கும் ஒருவரால் இப்படித்தான் எழுந்தமானமாய் எழுதமுடிகிறதென்றால், நமது தமிழ்ச்சூழலின் 'வளர்ச்சி' பற்றி எண்ணிப்பார்க்க உண்மையிலே சோர்வாகவே இருக்கிறது.

(இது குறித்து, நண்பர் ஒருவர் அனுப்பிவைத்த சான்றுகளுக்கு நன்றி, இந்தப் பதிவிற்கு கீழே எழுதப்பட்ட பா.கிருஷ்ணன் மற்றும் கண்ணனின் பின்னூட்டங்கள் இன்னும் எரிச்சலூட்டுபவை. அதுகுறித்து வேறொரு பொழுதில்)

(Sep 03, 2015)

0 comments: