கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்

Saturday, November 02, 2019


'எழுதியதால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்' என ஒரு பெண்மணி, காலி இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த  அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கி பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால்  வசந்த அவனது காதலியைச் சந்திக்கும் நாளாக அது இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நயோமிக்கு கடல் மீது அளவற்ற விருப்பு இருந்தது. நீர்கொழும்பு, அறுகம்பே, ஹிக்கடுவ, பாசிக்குடா என கடற்கரைகளைத் தேடி அடிக்கடி வசந்தவும், நயோமியும் போய்க்கொண்டிருப்பார்கள். சனம் அதிகம் இல்லையென்றால் நயோமி உடனேயே நீருக்குள் இறங்கிவிடுவாள். இம்முறை காலியைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். வசந்த அங்கே போய்ச்சேரும்வரை காலி இலக்கிய விழா அன்றுதான் தொடங்குகின்றது என்பதைப்பற்றி அவன் அறிந்திருக்கவில்லை.

இலங்கையில் போர் முடிந்து அப்போதுதான் ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. வசந்தவை யுத்தம் மிகவும் பாதித்திருந்தது.  ஒரு ட்றோஸ்கியவாதியான அவனால், மிலேச்சனத்தனமாக அதை நிகழ்த்தி முடித்த அரசை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.  கொடூரமான யுத்தம் நடந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் முள்வேலிகளுக்குள் இருக்கும்போது இப்படியொரு இலக்கிய  நிகழ்வு அவசியமா எனப் பலர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இலங்கையில் போர் முடிந்தபின்னும் எழுதுபவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை எனச்சொல்லி, ஒரான் பாமுக்கும் கிரண் தேசாயும்  இந்த‌ நிகழ்வுக்கு வராது பகிஷ்கரித்துமிருந்தனர்.

அந்தப் பெண்மணி வெள்ளையுடையில் நின்று அவரின் பிள்ளைகளோடு கொடுத்துக்கொண்டிருந்த துண்டுப்பிரசுரத்தை வாங்கிக்கொண்டு, நயோமி இன்னும் கண்டியிலிருந்து வந்து சேராததால் கடற்கரைப் பக்கமாக வசந்த நடக்கத் தொடங்கியிருந்தான். நெடிதுயர்ந்து நின்ற கலங்கரை விளக்கை, அதனருகில் நின்ற தென்னை மரங்கள் ஆரத்தழுவது போல காற்று வீசிக்கொண்டிருந்தது. அதன் வெண்மை வசந்தவுக்கு விகாரைகளை நினைவுபடுத்தின. இறுதியில் எப்போது விகாரைக்குப் போனேன் என்பதே அவனுக்கு மறந்துபோயிருந்தது. இந்த வெண்மை என்பது உண்மையில் அமைதியை நினைவூட்டுகின்றதா, இல்லை அதற்குள் சொல்லப்படாத பதற்றமான கதைகளை புதைத்து வைத்திருக்கின்றதா எனவும் வசந்தவுக்குக் குழப்பமாயிருந்தது. காலி இலக்கிய விழாவுக்கு எல்லோரும் குதூகலத்துடன் வர்ணமயமான ஆடைகளுடன் வந்துகொண்டிருக்கையில், வெள்ளையுடையில் துண்டுப்பிரசுரம் கொடுத்த பெண்மணியைப் போலத்தான், இந்த கலங்கரை விளக்கும் தனக்கான‌ துயரத்துடன் இருக்கிறதோ என‌ அவன் நினைத்துக்கொண்டான்.

தென்னை மரங்களின் நிழலில் அமர்ந்தவாறு வசந்த அந்தத் துண்டுப்பிரசுரத்தை வாசிக்கத் தொடங்கினான். 2010இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்பாக தனது கணவன் கடத்தப்பட்டதாகவும், அதற்குப் பிறகு அவரைப் பற்றி இற்றைவரை எந்தச் செய்தியும் தெரியாமல் இருக்கின்றது என்றும், உங்களைப் போன்று எழுதியதற்காகவே எனது கணவர் காணாமற்போனார் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்த வசந்தவுக்கு இந்தப் பத்திரிகையாளர் கடத்தப்பட்ட ஒரு வருடத்துக்கு முன்னர்தான், இலங்கையில் ஆங்கில வாரவிதழின் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் கொல்லப்பட்ட சம்பவமும் நினைவில் வந்துபோனது. அந்த ஆசிரியர் எழுதிய இறுதிக்கட்டுரையே 'அவர்கள் என்னைத்தேடி ஒருநாள் வருவார்கள்' என்பதாக இருந்ததுதான் இன்னும் பெருஞ்சோகம்.

இந்த அழகான தீவுதான் அடுக்கடுக்காய் எத்தனை அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. பெரும் போர் நிகழ்ந்து முடிவதற்கு முன்னர் சூனாமி வந்து ஒரு பேரிழப்பைக் கொடுத்துவிட்டும் போயிருந்தது. வசந்த‌ வந்து இறங்கிய ரெயினைப் போல ஒன்று காலியிலிருந்து கடற்கரையோரமாக‌ மாத்தறைக்குப் போய்க்கொண்டிருந்தபோது, அப்படியே சூனாமி விழுங்கியிருந்தது. அதில் இருந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் சொற்ப நிமிடங்களில் இல்லாமற் போயிருந்தனர். உல்லாசப்பயணிகளுக்குரிய நகராய் இப்போது காலி நகரம் மினுங்கினாலும் உள்ளுக்குள் துயரை வைத்து குலுங்கி அழுவது போலத்தான் வசந்தவுக்குத் தோன்றியது. இப்படி, கூட யோசித்து அல்லலுறமால் இருக்க நயோமி விரைவில் வந்தால், எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்தபடி பாறைகளில் மோதி எழும் கடலலைகளை நோக்கி வசந்த பார்வையைத் திருப்பினான்.

நயோமி வந்தபோது பேராதனை வளாகத்துக்குள் நிகழும் அரசியல்  முரண்பாடுகளை கூடவே எடுத்து வந்திருந்தாள். பேராதனை எப்போதும் இலங்கையின் எரியும் பிரச்சினைகளின் மையங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. இதமான‌காலை, ஏற்கனவே காணாமற்போனவரின் துண்டுப்பிரசுரத்தால் குழப்பப்பட்டதால் வசந்தவுக்கு, நயோமி தன் கூடவே கொண்டுவந்திருந்த கம்பஸ் அரசியலைக் கொஞ்சம் தள்ளிவைத்தால் நல்லது போலத் தோன்றியது.

லியனகே அன்று தனது பத்திரிகை அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வரும்வழியில் வீட்டுக்கு ஏதேனும் வாங்கிவரவேண்டுமா என தனது மனைவி நிமாலியிடம் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்ததால் வீதிகள் எல்லாம் அமர்களப்பட்டுக்கொண்டிருந்தன. பச்சையும் நீலமுமான பின்னணியில் இரு பிரதானகட்சியின் வேட்பாளர்களும் மக்களிடம் வாக்குக் கேட்டு சுவர்களில் நிரம்பியிருந்தார்கள்.

நீண்டகாலமாக நடந்த யுத்தம் அப்போதுதான் முடிவுக்கு வந்ததால் பேரரசருக்குரிய மமதையுடன் ஜனாதிபதி  சிரித்துக்கொண்டிருந்தார். எதிரிகள் வெளியில் இருந்து வருவதில்லை, உள்ளேயே உருவாகின்றனர் என்பதற்கிணங்க ஜனாதிபதிக்காய் போரை முன்னின்று நடத்திய இராணுவத்தளபதி எதிர்க்கட்சியினரால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட, தேர்தல்களம் சூடு பிடித்தது. ஒருபொழுது தோள் மீது கைபோட்டு ஒன்றாக நடந்த இரு நண்பர்கள் இப்போது உறுமிக்கொண்டு தத்தமது எதிர்த்தரப்பை துவைத்துப் போட வெறியுடன் திரிந்துகொண்டிருந்தார்கள்.

லியனகே அவரின் வீட்டுக்கான சிறிய ஒழுங்கையில் இறங்கி நடந்துகொண்டிருந்தபோது, அவருக்காய் ஒளித்து நின்றவர்களால் இரகசியமாகக் கடத்தப்பட்டார். தன்னுடைய கணவர் யாரேனும் நண்பர்களோடு எங்கேனும் கதைத்துக்கொண்டிருக்கலாம் என காத்துக்கொண்டிருந்த நிமாலிக்கு நேரம் செல்லச் செல்லப் பதற்றம் வரத்தொடங்கியது. லியனகேயின் அலைபேசிக்கு அழைத்தபோதும் அழைப்புக்கள் எங்கோ பாழில் தொலைந்துகொண்டிருந்தன. இனியும் பொறுக்கமுடியாது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோது, லியனகே கொழும்பிலிருந்து இன்னொரு தொலைவான நகருக்கு கைகளும், கால்களும் கட்டப்பட்டு, கறுப்புத்துணி வாயிற்குள் திணிக்கப்பட்டு, வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டபின்னும் லியனகேவுக்கு என்ன நடந்தது என்று எவருக்குந் தெரிந்திருக்கவில்லை. போரை எல்லாவித சாணக்கியங்களுடன் நடத்தி முடித்தவரை, ஒன்றுபட்ட இலங்கை என்ற கோஷத்தில் மீண்டும் மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு முதன்மைத் தளபதியாக நின்று யுத்தத்தை கொடூரமாய் நிகழ்த்தி முடித்தவர், தேர்தல் தோல்வியின் பின் சிறைக்குள் அடைக்கப்பட்டு, அதற்கான ‘நன்றிக்கடன்’ தீர்க்கப்பட்டது. ஆயுதங்கள் மட்டுமில்லை அதிகாரமும் கூரான இருமுனைகள் கொண்டவை என‌ நிரூபிக்கப்பட்டு இராணுவத்தளபதி ஒரு கோமாளியைப் போல அரசியல் களத்தில் ஆக்கப்பட்டார். அவர் முன்னின்று நடத்திய பெரும்போரின் வெற்றியைக் கூடக் காலம் தன் காலில் மிதித்துத் துவைத்துவிட்டு, முன்னே நகரத் தொடங்கியது. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின்  அதிகார ருசி என்பது வெற்றிக்களிப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. அது பிறகு தன்னைக் கேள்விகேட்போரை, தனக்கெதிராகக் கருத்துச் சொல்வோரை, கழுத்தை இறுக்கிக் கொல்லவும் செய்தது.  வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட‌ லியனகேயும் எந்தத் தடயங்களுமில்லாது மக்களின் நினைவுகளில் இருந்து மெல்ல மெல்லமாக மறையத் தொடங்கினார்.

நேரம் மதியத்தை நெருங்கியபோதும் எவரும் கடலுக்குள் இறங்கியிருக்கவில்லை. வந்திருந்த காதலர்க்கு நீராடுவதைவிட செய்வதற்கு நிறையச் சுவாரசியமான வேறு விடயங்கள் இருந்தன. காலிக்கோட்டையில் பசுமை படிந்த மறைவிடங்களில் குடைகளுடனும், குடைகளின்றியும் இருந்த காதலர்கள் அந்த வெயிலுக்குள்ளும் தங்களுக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள் மத்தியானம் தாண்டியபின் சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்குவார்கள். மாலையாகும்போது கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறுவர்கள் பாடசாலை முடிந்து வந்து மீன்குஞ்சுகளைப் போல குதித்துக் கும்மாளமிடுவார்கள்.

சனம் குறைய என்பதால் நயோமிக்கு கடலுக்கு இறங்க ஆசையிருந்தாலும், அன்று வழமையை விட அலைகள் சற்று மூர்க்கமாக இருந்தால் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. காணாமற்போன பத்திரிகையாளனைப் பற்றிய துண்டுப்பிரசுரத்தை வாசித்து மனதை எங்கையோ தொலைத்துவிட்ட வசந்தவைப் பார்க்க நயோமிக்குக் கொஞ்சம் பரிதாபம் வந்தது.  நாட்டில் நடக்கும் எதற்கென்றாலும் உடனேயே துலங்கலைக் காட்டி சுருங்கிப்போகின்றவனாக வசந்த இருப்பதை பலமுறை பார்த்துப் பழகிவிட்டாள். எனினும் இம்முறை தமக்குரிய‌ ஒருநாளை இப்படி அவன் அரசியலில் தொலைத்துவிடக்கூடாதென்று விரும்பினாள்.

‘யுத்தம் நடந்த பொழுதைவிட, இப்போது இன்னும் அரசியல் கோமாளிகள் கூடிவிட்டார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு கோமாளித்தனங்களுக்கும் நாங்கள் வருந்திக்கொண்டிருந்தால் எங்களின் வாழ்க்கையில் ஒருநாள் கூட நிம்மதியாக வாழமுடியாது’ என நயோமி வசந்தவிடம் சொன்னாள். 'அப்படியெனில் இப்படி ஒருவர் காணாமற்போனதற்கு வருத்தப்படக்கூடாது என்கின்றாயா?’ என்றான் வசந்த.  'இல்லை, கொல்லப்பட்டவர்கள் மட்டுமில்லை, எதற்காக காணாமல் ஆக்கப்பட்டோம் என்று அறியாமலே உயிரைத் தொலைத்தவர்கள் ஆயிரமாயிரம் பேர் நம் நாட்டில் இருக்கின்றார்கள், எத்தனை பேருக்காய் நாம் நினைத்து வருந்துவது’ எனப் பெருமூச்சை விட்டாள் நயோமி.

நயோமி கூறுவதில் நியாயங்கள் இருப்பதை வசந்த உணர்ந்துகொண்டாலும், அவனது ட்ரொஸ்கிய மனதுக்கு அதை ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருந்தது. இந்த நாட்டில் மனிதர்கள் காணாமல் மட்டுமில்லாது யுத்தம் முடிந்தபின்னும் நாட்டைவிட்டு உயிருக்கு அஞ்சியும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் வசந்த நன்கு அறிந்திருந்தான். சில வருடங்களுக்கு முன் வசந்த முழுநேரமாக, தான் நம்பிய நான்காம் அகிலம் கட்சிக்குக் களப்பணியாற்றிக் கொண்டிருந்தான். எனினும் யுத்தம் தீவிரமாகிக் கொண்டிருந்தபோது எந்தச் சிறு எதிர்க்குரலையும் அரசு சகித்துக்கொள்ளாது அடக்கவும் கண்காணிக்கவும் தொடங்கவும் வசந்தவைப் போன்றவர்கள் தலைமறைவுக்குப் போயிருந்தார்கள். அதன்பிறகு எந்தச் செயற்பாடுகளுக்கும் இலங்கையில் இடமிருக்கவில்லை. அவர்களில் சிலர் இரகசியமாகக் கிடைத்த சில மனிதவுரிமை மீறல் விடீயோக்களோடு வெளிநாடு போக, இலங்கை உளவுத்துறை நாட்டுக்குள் இருந்தவர்களை நெருக்கத் தொடங்கியிருந்தது. சிலரைச் சித்திரவதைகளுக்குப் பெயர்பெற்ற‌ நான்காம் மாடிக்குக் கொண்டு போய் தலைகீழாகக் கட்டி விசாரித்துமிருந்தார்கள்.

இவ்வாறு நாட்டின் நிலைமைகளினால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருந்த வசந்தவுக்கு, லியனகேயின் மனைவி நிமாலி  காலி இலக்கிய நிகழ்வில் துண்டுப்பிரசுரத்தை, பிள்ளைகளுடன் நின்று  கொடுத்ததைப் பார்த்தவுடன், அவனது மனது அந்தரப்படத் தொடங்கியது. ஒரு பத்திரிகையாளரான லியனகேவுக்காக இல்லையெனினும், அவரைக் காணாமல் தவிக்கும் நிமாலிக்காக, லியனகேவுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு, இச் சம்பவத்தை தொடக்கத்திலிருந்து பின்தொடர்ந்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் வசந்தவுக்குள் பெருகத் தொடங்கியது.

லியனகே இப்படிக் கடத்தப்பட்டு காணாமற்போனதற்கு முன்னரும் ஒருமுறை கடத்தப்பட்டிருந்தார். அப்போது அவரைக் கடத்திய முகமூடி மனிதர்கள், லியனகேயை ஓர் இரவு தம்மோடு வைத்திருந்துவிட்டு குப்பைகள் மலையாகக் குவிந்திருக்கும் வறக்காப்பொலவில் அடுத்தநாள் காலையில் கண்ணை கட்டிக்கொண்டுவந்து விட்டு சென்றிருந்தனர். எதற்காகக் கடத்தினார்கள் என்பது கடத்தப்பட்ட லியனகே உட்பட எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. தவறாகக் கடத்திவிட்டோம் எனச் சொன்னதாகத்தான் லியனகே தனது குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கின்றார். ஒரு நெருங்கிய நண்பனிடம் மட்டும் 'மச்சான் இனி பேனாவால் எதையும் எழுத முடியாது, எதை இவங்களுக்கு எதிராக எழுதினாலும் இந்த நாசமறுப்பான்கள் மோப்பம் பிடித்துவிடுவான்கள்' என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு லியனகே மெல்லிய குரலில் சொல்லியிருக்கின்றார்.

இந்த நிகழ்வுகளை  ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த‌ வசந்தவுக்கு இப்போது ஏன் லியனகே மீண்டும் கடத்தப்பட்டுக் காணாமற் போயிருக்கின்றார் என யோசித்தபோது குழப்பமே வந்தது. நிச்சயம் முதலில் கடத்தப்பட்டதற்கும், இப்போது கடத்திக் காணாமற்போனதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும் என வசந்த நினைத்தான். முதன்முதலில் இப்படிக் கடத்தப்பட்டபின், லியனகேயை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி அவரது நண்பர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். என்ன நடந்தாலும் என் சொந்த நாட்டிலேயே இருப்பேன் எனப் பிடிவாதமாக இருந்ததால், லியனகே இப்படி அநியாயமாகக் காணாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுவிட்டாரே என்ற கவலை எல்லோருக்குள்ளும் இருந்தது.
போர் நடந்த காலங்களில் மட்டுமில்லை, யுத்தம் முடிந்தபின்னரும் கூட‌ இலங்கையில் எதையும் பேசும், எழுதும் சுதந்திரம் இல்லை என்பது முழு உலகும் அறிந்த செய்தியாகவே இருந்தது. எனினும் பிறரைப் போல, பத்திரிகையாளர் என்று எவரும் இப்படிக் காணாமற் போனதில்லை.

பத்திரிகையாளர்  காணாமற்போவதில்லை என்றவுடன் ஏதோ இலங்கை அரசும், இராணுவமும் அவர்களின் பேனா முனையில் பயம் கொண்டிருக்கின்றது என்பதல்ல அர்த்தம். நேரத்தைக் கடத்தி வீணாக்காமல், நேரடியாகவே வேறொரு உலகுக்குத்  துப்பாக்கிக் குண்டால் அனுப்பிவைத்துவிடுவார்கள். ஒரு பட்டப்பகலில் காரில் போய்க்கொண்டிருந்த லசந்தவை மறித்து, அவ்வாறுதான் சுட்டுக்கொன்றிருந்தார்கள். லியனகேவையும் கொல்லவேண்டுமென விரும்பியிருந்தால் இவர்கள் உடனேயே கொன்றிருக்கலாம். அவ்வளவு வசதிகளும், வாய்ப்புக்களும் இலங்கைத் திருநாட்டில் இருக்கும்போது, லியன்கேயை கடத்தியதற்கு அவரிடம்  ஏதோ ஒன்று இரகசியமாக இருந்து அதைக் கடத்தியவர்கள் அறியவேண்டியிருந்திருக்கின்றது போலும் என வசந்த வேறொரு திசையில் நின்று எண்ணிப் பார்த்தான்.

லியனகே  காணாமற்போனதை எங்கேயிருந்து தொடங்கலாமென்று வசந்த யோசித்தபோது ஓர் இடதுசாரி அவனின் நினைவுக்கு வந்தார். இன்றையகாலத்தில் அவர் அரசதரப்போடு சமரசம் செய்துவிட்டாலும், அவர் இதுகுறித்து என்ன சொல்வார் என அறிய வசந்த அவரை அணுகினான்.  அவர் லியனகே ஒரு ஊடகவியளாராக இருந்தபோதும், பத்திரிகா தர்மத்துக்கு ஏற்ப ஒழுகி நடக்கவில்லை. அவ்வப்போது மஞ்சள்பத்திரிகைகளின் தரத்துக்கு கீழிறங்கி எழுதியிருக்கின்றார் எனக் கோபமாகச் சொன்னார்.

ஒருமுறை, திருமணமாகிய‌ அமைச்சர் அடிக்கடி ஒளிந்துபோய்க்கொண்டிருந்த அவரின் இரகசியக் காதலியின் வீட்டைத் துப்பறிந்து லியனகே கண்டுபிடித்திருக்கின்றார். அதுமட்டுமின்றி தகவல் சேகரிக்கின்றேன் என அமைச்சரின் காதலியை அடிக்கடி சந்தித்து, அந்தப் பெண்மணியோடும் லியனகேவுக்கு ஓர் இரகசியமான உறவு வந்திருக்கின்றது.சாதாரண மனிதனே தன் காதலியை இன்னொருவன் கவர்ந்துவிட்டான் என்று அறிந்தாலே பொறுமையாக இருக்கமாட்டான். அதுவும் அமைச்சராக இருந்த, அடியாட்களோடு அதிகாரத்தில் திளைத்த ஒருவர் அமைதியாக இருப்பாரா? தன்னைப் பற்றிய செய்திகளை மஞ்சள்தனமாய் எழுதியதற்காக மட்டுமின்றி, தன் காதலியையும் கவர்ந்து சென்றதற்காகவும் கோபப்பட்டுத்தான் அந்த அமைச்சரின் ஆட்கள் லியனகேயைக் கடத்திக் காணாமற் செய்திருக்கின்றனர் என அந்த இடதுசாரி சொன்னார்.

சந்தவுக்கு ஏன் இந்தப் இடதுசாரிகள் எல்லாம், வரவர பிறழ்ந்துபோய் பேசுகின்றார்கள் என நினைக்க அலுப்பு வந்தது. தற்போதைய ஜனாதிபதி கூட ஒருகாலத்தில் இடதுசாரிதான். ஜேவிபியினரை அன்றைய அரசு தேடித்தேடிக் கொன்றபோது அவர்களுக்காய்ப் பேச, ஐ.நாவின் மனிதவுரிமை அமர்வுகளிலும் கலந்துகொண்டவர். அப்படிப்பட்டவர் இன்று தமிழர்களில் உயிர்களை மட்டுமில்லை, தனக்கெதிராகப் பேசும் சிங்களவர்களைக் கூட சிறைக்கும், விரும்பினால் இல்லாமல் ஆக்குவதுக்கும்  தயாராகவே இருந்தார். இவ்வாறு நிலைமைகள் தலைகீழாக மாறும்போது, இந்த இடதுசாரி இப்படிச் சொல்வதைக் கூட சகித்துக்கொள்ளவேண்டும் என்று தனக்குள் சமாதானம் செய்துவிட்டு, லியனகே எதற்காக கடத்தப்பட்டார், அப்படி என்னதான் அவரிடம் இரகசியமாக இருந்திருக்கின்றது என வசந்த மீண்டும் யோசித்துப் பார்க்கத் தொடங்கினேன்.

இதன் நிமித்தம்  நூலகம் ஒன்றுக்குப்போய் பழைய பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தபோது சுவாரசியமான ஒரு செய்தி வசந்தவின் கண்களில் தென்பட்டது.  லியனகே எதிர்க்கட்சியில் போட்டியிட்ட இராணுவத்தளபதியின் தீவிர ஆதரவாளர்.   அந்தத் தளபதி ஜனாதிபதி தேர்தலில் வெல்லவேண்டும் என்று லியனகே விரும்பியிருக்கின்றார். ஆகவே ஜனாதிபதி தேர்தலின் இரண்டு நாட்களுக்கு முன், தான் கடத்தப்படுவது போல ஒரு நாடகமாடி இருக்கின்றார். அந்த நாடகத்தின் மூலம், நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி ஜனாதிபதியாக இருப்பவரைத் தோற்கவைக்கலாம் என லியனகேயும் அவரின் நண்பர்களும் திட்டமிட்டிருக்கின்றார்கள். இராணுவத்தளபதி தேர்தலின் வெற்றி பெற்றவுடன் வெளியே வருவதாக இருந்த லியனகே, இராணுவத்தளபதி தோற்றதால் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டு,  தன்னைத்தானே மறைத்து  காணாமல் செய்துவிட்டார்.

அது மட்டுமில்லாது லியனகே மிகுந்த வறுமையிலும் இருந்திருக்கின்றார். அவர் இன்னொரு நண்பரிடம்  ரூபா முந்நூறைக் கடன் வாங்கியிருக்கின்றார். தனது போனுக்குச் சார்ஜ் செய்ய‌க் கூடக் காசில்லாது நண்பர்களின் உதவி கேட்ட கதைகளும் இருக்கின்றன. வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் லியனகே தனது பணநெருக்கடியை ஈடுகட்ட இப்படியான சதிவேலைகளில்  இறங்கியிருக்கின்றார். இறுதியில் அது அவருக்கு எதிராகவே திரும்ப, தன்னைக் கடத்தப்பட்டது போல நாடகமாகிக்கொண்டு லியனகே வேறு எங்கோ நாட்டில் தலைமறைவாக‌ உலாவிக்கொண்டிருக்கின்றார் என அந்தப் பத்திரிகைச் செய்தி நீண்டது.

இப்படியான செய்தியை அறிந்ததாலோ என்னவோ, ஜெனீவாவில் இலங்கை அரசு, தமிழர்களை இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யவில்லை என்று நிரூபிக்கச் சென்ற அமைச்சரிடம் , லியனகே காணாமற்போனதைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, லியனகே காணாமலோ, கொல்லப்படவோ இல்லை. அவர் நம் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு ஒரு ஐரோப்பிய நாட்டில் தலைமறைவாக இருக்கின்றார். அண்மையில் கூட லியனகே அவரின் மனைவியான நிமாலியிடம் தொலைபேசியில் பேசியிருக்கின்றார் என்று எவ்வித உறுத்தலுமின்றி அந்த அமைச்சர் சொல்லியிருக்கின்றார். அந்தப் பொழுதில் லியனகேயின் மனைவி நிமாலி  தன் கணவனை எப்பாடுபட்டேனும் உயிருடன் பெறவேண்டும் என்பதற்காக கொழும்பில் சனநெருக்கடி மிக்க‌ தெருவொன்றில் மிகப்பெரிய காளிபடத்தை வைத்து, பொலிஸ் நெருக்கடி கொடுக்கக் கொடுக்க ஒரு பூசை செய்திருந்தார்.

சந்த இவ்வாறாக லியனகே பற்றிய பத்திரிகைச் செய்திகளைச் சேகரித்தபடியும், தனக்குத் தெரிந்த ஊடக நண்பர்களுக்கு தொலைபேசி அழைத்து விசாரித்தபடியும் இருப்பதைப் பார்த்து நயோமிக்கு இது எங்கே போய் முடியப்போகின்றது என்று சற்றுப் பயம் வரத்தொடங்கியது. ஏற்கனவே தீவிர அரசியலுக்குள் மூழ்கிப்போனவனை ஒருவாறு வெளியில் துடித்துக்கொண்டிருந்த மீனை எடுத்துத் தொட்டிக்குள் போட்டுவிட்டேன் என ஆசுவாசமாய் மூச்சை விட்டுக் கொண்டிருந்தவளுக்கு வசந்த லியனகேயின் விடயத்திற்குள் போகவும், என்ன செய்வதென்றும் விளங்காதிருந்தது. பரிதாபமாய் எல்லோரிடமும் நீதியை இரந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிமாலிக்காக மனமிரங்கினாலும், நிமாலி போல தானும் தனது காதலனை இழந்துவிடக்கூடுமென்ற நினைப்பு அவளுக்கு நெஞ்சை அடைக்கச் செய்தது. ஏற்கனவே வசந்தவின் நண்பர்கள் இலங்கையை விட்டுப்போகும்போது எடுத்துச் சென்ற விடீயோக்க‌ள் சனல- ‍4இல் ஒளிபரப்பட்டு இலங்கை கொதிநிலையில் பொங்கியும் கொண்டிருந்தது.

ஒருநாள் நயோமியுடன் பொரளைச் சந்தியில் நடந்துகொண்டிருந்தபோது வசந்த அதன் அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டைச் சுட்டிக் காட்டி, ‘இந்த இடத்தின் வரலாறு தெரியுமா?’ என்றான். சந்தியில் இருந்த பெட்டிக்கடைகளைப் பார்த்துக்கொண்டும், அவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பத்திரிகைகளின் தலைப்புச்செய்திகளையும்  வாசித்துக்கொண்டும் வந்த நயோமிக்கு வசந்த என்ன கேட்கின்றான் என்பது முதலில் விளங்கவில்லை. 'என்ன?' என்றாள். ‘இந்த இடத்தில் தான் 1983 இல் ஒரு தமிழனை நிர்வாணமாக்கி பெற்றோல் ஊற்றி நம்மாட்கள் எரித்தார்கள்' என்றான். சட்டென்று நயோமிக்குக் கடந்தகாலத்துக்கு நீந்திப் போனது போல காடையர்கள் முன் நிர்வாணமாக நின்ற‌ நீண்டகால்களுடைய தமிழனின் புகைப்படம் நினைவில் வந்துபோனது. 'அன்றே நாங்கள் அதைத் தடுத்துநிறுத்தியிருந்தால் முப்பது ஆண்டுகால யுத்தத்திற்குள் போயிருக்கத்தேவையில்லை' என்றான் வசந்த. 'நம்மைப் போன்ற சாமன்யர்களுக்கு எந்தக் காலத்தில் அதிகாரம் இருந்தது. அதிகாரம் இல்லாது எதைத்தான் தடுத்த நிறுத்தமுடியும்?’ எனச் சோர்வுடன் சொன்னாள் நயோமி.

'அதிகாரம் இல்லாதுவிட்டாலும், நமக்குக் கிடைக்கும் வெளிகளில் இருந்து நமது குரல்களை எழுப்பியிருக்கவேண்டும். இப்போது லியனகே கடத்தப்பட்டுக் காணாமல் போனதையும் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் முந்தைய வரலாறு திரும்பவும் வராது என்று எப்படி நம்புவது? கடந்தகாலத்தை மாற்றமுடியாது. ஆனால் நிகழ்காலத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பது எதிர்காலத்துக்கு முக்கியமானது’ என்றான் வசந்த.

வசந்த இப்போது என்ன சொல்ல வருகின்றான் என்பது நயோமிவுக்குப் புரியத்தான் செய்தது. அவள் கவலைப்பட்டு, லியனகேயின் விடயத்திலிருந்து தள்ளியிருக்கச் சொல்ல‌ப் போகின்றாள் என்பதை உள்ளுணர்ந்துதான் வசந்த இப்படிப் பூடகமாய்க் கதைக்கின்றான் என்பதை விளங்கிக்கொள்ள நயோமிவுக்கு நேரம் அதிகம் எடுக்கவில்லை. 'என்றாலும்..' என இழுத்த நயோமிவை,'வா நீண்டகாலமாய் எந்த விகாரைக்குள்ளும் போகவில்லை' என இழுத்துக்கொண்டு பொரளைச் சந்தியிலிருந்த விகாரைக்குள் நுழையத்தொடங்கினான் வசந்த.

விகாரைக்குப் போனதற்கு அடுத்தநாள் வசந்த, லியனகே பணிபுரிந்த பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றான். அவர் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தமை தொடர்பாக லியனகேக்கு இராணுவத்தில் உள்ளிலிருந்து சில ஆவணங்களை ஒருவர் எடுத்துக் கொடுத்திருக்கின்றார் என்றார். அதை முன்வைத்து லியனகே கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் கடத்தப்பட்டிருக்கின்றார் என்று அந்த ஆசிரியர் தான் உறுதிபட நம்புவதாகச் சொன்னார். அவ்வாறு எழுதுவதற்கு லியனகே சில தகவல்களைக் கைபட எழுதிவைத்திருந்ததைக் கூட அந்த ஆசிரியர் வசந்தவிற்குக் காட்டியிருந்தார்.

லியனகே கடத்தப்பட்ட நான்காம் நாள் உடல் ஒன்று நீர்கொழும்பு சதுப்புநிலத்தில் மிதக்கின்றது என்று தகவல் அறிந்து பதற்றத்துடன் சென்று பார்த்ததையும் அவர் ஞாபகப்படுத்தினார். அந்த உடலம் லியனகேயினது அல்ல என்பதை அறிந்தபின் தனக்கு  நிம்மதி வந்ததென்றார். ‘போர்க்காலத்திலும், போர்க்காலத்தின் பின்னரும் இப்படி வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் அநேகம் தமிழர்களாக இருக்கையில், ஏன் நம்மைப்போன்ற ஒரு சிங்களவரான லியனகேயைக் கடத்தினார்கள் என்பதுதான் பெரும் புதிராக இருக்கின்றது’ என இன்னும் குழப்பினார் அவர்.
இப்படி அந்த ஆசிரியர் சொல்லவும், வசந்தவிற்கு நிச்சயம் லியன்கேவை கடத்தியதற்கு அவரிடம் ஓர் இரகசியம் இருந்திருக்கின்றது. அதை அறியத்தான் கடத்தியிருக்கின்றார்கள் என்பதும், அதை அறிந்தபின் எங்கேயேனும் கொண்டுபோய் காணாமற் செய்திருக்கின்றார்கள் என்பதும் இன்னும் உறுதியாகியது போலத் தோன்றியது.   

ன்னிப் பெரும் நிலப்பரப்பில் இறுதிப்போரை நடத்திய மேன்மை நிறைந்த ஜனாதிபதிக்கு சோதிடத்திலும், மாந்தீரிகத்திலும் நிறைய நம்பிக்கை இருந்தது. போரை நடத்தியபோது சாத்திரம் பார்த்து முக்கிய முடிவுகளை எடுத்தது மட்டுமின்றி, அவரின் ஒவ்வொருநாளும் கூட சோதிடர்கள் வகுத்துக்கொடுத்த நியதிப்படியே நடந்தேறிக்கொண்டிருந்தது. என்னென்ன நேரத்துக்கு தினம் காலையில் எழவேண்டும் என்பதைக் கூட அலாரம் வைத்து எழும்பக்கூடியவராக ஜனாதிபதி இருந்தார். அதேமாதிரி அவரோ அல்லது அவரது சகோதரர்களோ தமக்கு வேண்டாதவர்களைக் காணாமற்செய்யும்போதும் நல்ல நேரம் பார்த்துத்தான் அவற்றையும் செய்வார்கள் என்ற ஒரு கதையும் நாட்டுக்குள் இருந்தது.

ஜனாதிபதியின் இந்தப் பலவீனத்தை அறிந்துகொண்ட எவரோ ஒருவர் ஜனாதிபதியின் இல்லத்துக்கு மனித சாம்பலை அஞ்சல்களிலும், பொதிகளிலும் அனுப்பத் தொடங்கினார். தற்செயலாக ஒருநாள் அதைத் திறந்து பார்த்த ஜனாதிபதியின் அந்தரங்கச் செயலாளர் பதறியடித்துக் கொண்டு ஓடினார். அந்தச் செயலாளரின் ஓட்டம் பிறகு நாட்டைவிட்டு வேறொரு நாட்டுக்கு அவர் தூதுவராகப் போகும்வரை நிற்கவில்லை.  இவ்வாறு ஜனாதிபதியின் பல்வேறு அலுவலக முகவரிகளுக்கு நாட்டின் வெவ்வேறு திசைகளிலிருந்தும் வரத்தொடங்கிய மனித சாம்பலினால் எல்லோரும் பதற்றமடையத் தொடங்கினர்.

சோதிடர்கள் ஜனாதிபதிக்குக் கெட்டகாலம் தொடங்கிவிட்டது என்பதை அறியத்தொடங்கினர். எனினும் அவரிடம் அதைக் கூறுவதற்குப் பயந்து, சவக்காடுகளிலிருந்து மனித சாம்பலை எடுத்து அனுப்புவரிடம் ஜனாதிபதிக்கான கெட்டசகுனம் இருக்கிறது, விரைவில் அவரை அழிக்கவேண்டுமென எச்சரித்தனர். தமக்கெதிராகப் பேசுபவர்களை எளிதாக இல்லாமற்செய்த ஜனாதிபதியின் சகோதரர்களுக்கோ இப்படி மனிதச்சாம்பலை யார் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவதில் தலையிடி வரத்தொடங்கியது. கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை என பல்வேறு பிரதேசங்களிலிருந்து மனித சாம்பல் அனுப்பப்பட,  ஒருவர் அல்ல, ஒரு பெரும் கும்பலே இதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமென எல்லோரும் நம்பத்தொடங்கினர்.     

மனிதசாம்பல் தொடர்ந்து வந்துகொண்டிருக்க, ஜனாதிபதியின் உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமாக நலியத்தொடங்கியது. அவரது உடலுக்கு ஒன்றுமில்லை, அவர் நிறைய யோசித்துத்தான் அவருக்கு இப்படியாயிற்று என அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் சொன்னார்கள். ஜனாதிபதியின் மனைவி கூட கொஞ்சக்காலத்துக்கு இந்த சோதிடர்களை நமது வாசஸ்தலத்திலிருந்து தள்ளிவையுங்கள் என அக்கறையுடன் சொன்னார். ஜனாதிபதியோ தனது உடல்நலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, ஆனால் சாத்திரக்காரர்களை ஒருபோதும் வெளியில் விடமாட்டேனென அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.

தமையனின் உடல்நலத்தில் அக்கறைகொண்ட அவரின் இளையசகோதரர்கள் தமது ஒற்றர்களை நாடெங்கிலும் அனுப்பத் தொடங்கினர். மனித சாம்பலை, ‘நீ யுத்தத்தில் அழித்தவர்களின் சாம்பல் இவை’ என எழுதி யார் அனுப்புகின்றார்களென கண்டுபிடிக்க அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். அவ்வாறு சந்தேக வளையத்தை இறுக்கியபோது, இருந்த நெடும்பட்டியலில் லியன்கேயும் ஒருவராக இருந்தார்.

பட்டியலில் இருந்த ஒவ்வொருத்தரும் விசாரணைக்கு மர்மமான முறைகளில் எதற்கான அழைக்கப்படுகின்றோம் என்றறியாது கடத்தப்பட்டார்கள். அவ்வாறுதான் லியனகேயும் முதன்முதலில் கடத்தப்பட்டிருக்கின்றார். பிறகு அவரது கையெழுத்தை, மனித சாம்பல் வைத்து அனுப்பப்பட்ட கடிதங்களோடு வந்த கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றனர். அவரது கையெழுத்து அதேமாதிரி இல்லாததால் முதன்முதலில் கடத்தப்பட்டபோது தப்பிவிட்டார். ஆகவேதான் அவரை உயிரோடு அடுத்தநாள் வறக்கப்பொலவில் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்து இறக்கிவிட்டிருந்தனர்.

இவ்வாறு மனித சாம்பல் ஜனாதிபதி வாசல்தலத்துக்கு பல மாதங்களாக வந்துகொண்டிருந்தாலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபின், ஒருநாளிலேயே பலமுறை அவை அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தது மட்டுமின்றி, ஜனாதிபதியின் சகோதரர்களின் வீடுகளுக்கும் போகத் தொடங்கியிருந்தன. ‘முப்பதாண்டுகளாக தொந்தரவு கொடுத்திருந்த கொட்டியாவைக் கூட அழித்துவிட்டோம், ஆனால் இந்த மனிதச் சாம்பல் அனுப்பும் குழுவைத்தான் இன்னும் பிடிக்கமுடியவில்லை’ என ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் ஐந்து நட்சத்திர விடுதியில் விஸ்கியை அருந்தியபடி கவலையும்பட்டிருக்கின்றார்.

னித சாம்பலை லியனகே அனுப்பவில்லை என்று முதல் தடவை கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்றால், ஏன் பிறகு கடத்தப்பட்டுக் காணாமற்போனார் என்று, கிடைத்த விபரங்களை வைத்து ஆராய்ந்த வசந்தவுக்கு ஒரே மர்மமாய் இருந்தது..  ஏதோ ஒருமுனையைப் பிடித்து லியனகேயின் கடத்தலுக்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்த வசந்தவிற்கு ஏன் இதற்குள் நுழைந்தேன் என்கின்றமாதிரியான குழப்பம் வந்தது. தான் சேகரித்த விடயங்களை யாருடனாவது பகிர்ந்துகொள்ளலாம் என்றால் நாட்டின் சூழ்நிலையில் எவரையும் நம்பமுடியாதிருந்தது.

இந்தக் கடத்தலை வசந்த இப்படி தீவிரமாகப் பின் தொடர்கின்றான் என்றறிந்தாலே லியனகேயைப் போல வசந்தவையும் அடையாளமின்றிக் காணாமற் செய்ய நிறையக் கரங்கள் காத்துக்கொண்டிருந்தன. எந்த இரகசியம் எனினும் பகிர்ந்தால்,  வெளியில் போகாது இருக்கக்கூடிய ஒருவர் என்றால் நயோமிதான். ஆனால் அவளுக்கு இப்படி, தான் தீவிரமாக லியனகேயின் விடயத்தில் இருக்கின்றேன் என்றால், கவலையுறுவாள் எனபதால் அவளோடும் இது குறித்துக் கதைக்க வசந்தவுக்கு தயக்கமாயிருந்தது.

லியனகேவை இரண்டாவது தடவையாக கடத்தியவர்கள் முன்னாள் தமிழ் போராளிகள் என ஒரு தகவல் வசந்தாவுக்குப் பரிமாறப்பட்டது. அவர்கள் இலங்கை இராணுவத்தின் உளவுப்பிரிவால் உள்வாங்கப்பட்டவர்கள் என்றும், ஒரு தமிழ் எம்.பியை நாரஹன்பிட்டியாவில் வைத்துச் சுட்டுக்கொல்வதற்கும் இந்த குழுவினரே பாவிக்கப்பட்டனர் எனவும் சொல்லப்பட்டது. அது உண்மையா அல்லது இல்லையா என்பதை அறிய வசந்த அவ்வளவு அக்கறை காட்டவில்லை.  ஆயுதங்களில்லாத‌ அப்பாவி மக்களையே மனிதாபிமானமின்றிக் கொன்ற ஓர் அரசு அவர்களுக்கெதிராகப் போராடியவர்களை எப்படித் தந்திரமாகப் பாவிக்கும் என்பதையும் வசந்த நன்கு அறிந்து வைத்திருந்தான்.

லியனகேயைக் கடத்திக்கொண்டு போனவர்கள் முதலில் கிரிகெல இராணுவமுகாமுக்குக் கொண்டு சென்றார்கள். லியனகேவுக்கு கடந்தமுறை போல, இம்முறையும் தன்னை உயிரோடு விட்டுவிடுவார்கள் என்று சிறுநம்பிக்கை அவரைத் தலைகீழாகச் சித்திரவதைக்காய்த் தொங்கவிட்டபோதும் இருந்திருக்கின்றது. முதல்கட்ட விசாரணைகள் முடிந்தபின், அவரின் பண்ணைவீடு இருந்த தம்புள்ளவுக்குக் கொண்டு போய், அந்த வீட்டில் சில இடங்களை இராணுவத்தினர் தோண்டிப் பார்த்திருக்கின்றனர். பின்னர் தமிழர்களும் முஸ்லிம்களும் நிறைந்து வாழும் கிழக்கு மாகாணத்துக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கின்றனர். அக்கறைப்பற்றில் நடந்த விசாரணைகளில் மரணத்தின் வாசனையை நுகர்ந்த லியன்கேயின் கடைசிமூச்சு திருகோணமலையின் வாழைத்தோட்டம் ஒன்றில் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது.

அங்கேதான் கடைசி யுத்தத்தில் சரணடைந்த முக்கியமான போராளித்தளபதிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு ஒவ்வொருத்தராகக் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. சித்திரவதையினால் மரணமடைந்த லியனகேயை அந்த வாழைத்தோட்டத்துக்குள் புதைத்திருக்கின்றார்கள். ஒன்றிரண்டு நாட்களில் பெய்த பெருமழையினால் இளகிய மண்ணில் லியனகே மிதக்கத் தொடங்க அவரது உடலத்தைப் படகில் கொண்டுபோய் பிறகு நடுக்கடலில் போட்டிருக்கின்றார்கள்.

வசந்த இந்த சம்பவத்தின் ஒவ்வொரு சிறு தகவல்களையும் திரட்டி முழுதாக ஒரு கோர ஓவியத்தை உருவாக்கி விட்டிருந்தான், வேறு எந்தக் காரணத்தையும்விட ஜனாதிபதியின் சகோதரரின் கையிலிருந்த உளவுத்துறையினர், லியனகேயைக் கொண்டுபோய் வாழைத்தோட்டத்தில் புதைத்தமைக்கு  லியனகேதான் மனித‌ சாம்பலை அனுப்பிக்கொண்டிருந்தார் என உறுதியாக நம்பியதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது.  இந்த நாட்டில் ஆயுதம் தூக்கியவர்களைக் கொன்ற காலம் போய், இப்போது மனித சாம்பலை அனுப்புகின்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரிலும் கொல்லத்தொடங்கிவிட்டார்கள் என நினைத்த வசந்தவுக்கு நடுக்கம் வந்தது.

லியனகே கடத்தப்பட்டுக் காணாமல் போனதுடன் மனித சாம்பல் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. மேன்மை தாங்கிய சனாதிபதி  கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறத்தொடங்கியிருந்தார். மனித சாம்பலில்தான் அவரைப் பீடித்திருந்த நோய் இருந்திருக்கின்றதென சோதிடர்கள் சரியாகக் கணித்துச் சொன்னார்கள். மீண்டும் அவர் உற்சாகமாக நடமாடத் தொடங்கினார். ஆனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எவருமே நம்பமுடியாதளவுக்கு தோற்கடிக்கப்பட்டார்.  எதற்கெனக் கொல்லப்படுகின்றோம் என்று தெரியாமல் செத்தவர்களின் ஆவிகள் அவ்வளவு எளிதில் அமைதியடைவதில்லை.  அவர்களின் பழிவாங்கல்தான் பெரும்போரை வென்று கொடுத்தவரையே அரியாசனத்தில் இருந்து இறக்கியது என்று மக்கள் கிசுகிசுக்கத் தொடங்கினார்கள்.  ஜனாதிபதி தனது பதவியின் கடைசிநாளன்று வாசஸ்தலத்தை  விட்டு வெளியேறியபோது மீண்டும் மனித சாம்பல்பொதி ஒன்று அவரது வீட்டு வாசலுக்கு   வந்திருந்தது.

வீட்டில் மின்னடுப்பு இருக்கும்போது எதற்கு இப்படி விறகுக்கட்டைகளை எரித்து வீணாய்ச் சாம்பலாக்கின்றாய்’ என்று நயோமி வசந்தவைப் பார்த்துக் கேட்க அவன் மெல்லிய புன்னகையோடு கடந்துபோனான். இப்போது வசந்தவுக்குத் திருமணமாகி ஒரு மகளும் பிறந்திருந்தாள். நயோமியும் மகளும் தூங்கியபின், விறகால் எரித்த சாம்பலை அஞ்சலுறைக்குள் பத்திரமாக இட்டு, ‘மேன்மை தங்கிய முன்னாள் ஜனாதிபதிக்கு,  இது உங்களைப் பதவியிலிருந்து இறக்கிப் பழிதீர்த்த லியனகேயின் சாம்பல்’ என கணனியின் முன் இருந்து தட்டச்சுச் செய்யத்தொடங்கினான் வசந்த.

………………………………………………...

( நன்றி: 'அம்ருதா' & 'காலச்சுவடு' - ஐப்பசி, 2019)

3 comments:

இளங்கோ-டிசே said...

நன்றி.

11/03/2019 01:43:00 PM
ரவீன் said...

அருமை... அருமை..

11/04/2019 05:56:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி ரவீன்

11/06/2019 09:04:00 PM