-திசைகளைத் தொலைப்பவனுக்கு காற்றில் தோன்றும் வழிகாட்டிகள்
நீண்டகாலத்துக்குப் பிறகு என் நெடுநாள் நண்பனை திருவண்ணாமலையில்
சந்தித்தேன். நாங்களிருவரும் ஒரே பல்கலைக்கழகத்திற்கு கனடாவில்
சென்றிருந்தவர்கள். அவர் எனக்குச் சீனியர் என்றாலும் இறுதி வருடங்களில்
நான் அவரோடு நெருக்கமானவன். வளாகம் தாண்டி வந்தபின்னர் இன்னும் நெருக்கமான
நட்பு எங்களுடையது.
வாழ்க்கையில் எங்களைச் சந்தர்ப்பங்கள் பல
தடவைகள் தட்டியபோதும் 'Dump and Dumper' திரைப்படத்தில் வருவதைப் போல
தவறவிட்டவர்கள். திருவண்ணாமலையில் நள்ளிரவு தாண்டி எங்களின் பழைய
நினைவுகளை, இடையில் பகிராத காலங்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தோம்.
Dump and Dumper To (Two என்பதை To என்று பெயரிட்டதே ஒருவகை எள்ளல்தான்)
இரண்டாவது பகுதி அண்மையில் வந்ததைப் பார்த்தேன் என அவரிடம்
சொல்லிக்கொண்டிருந்தேன். இத்திரைப்படத்தின் தொடக்கத்தில், நண்பரை
ஏமாற்றுவதற்காய் எவ்வித நோயுமேயில்லாது 20 வருடங்கள் எதுவும் பேசாமல்
சக்கரநாற்காலியில் இருந்த ஜிம் காரியின் நடிப்பைப் பகிர்ந்து
சிரித்துக்கொண்டிருந்தோம்.
எங்களின் கைகளில் அருந்துவதற்கான
பானமும், கொறிப்பதற்கான nutsகளுமிருக்க மலை எங்களின் எல்லாக்கதைகளுக்கும்,
சட்டென்று இடையில் எழும் மெளனங்களுக்கும் சாட்சியமாய்
நின்றுகொண்டிருந்தது.
சென்னையிலிருந்த நண்பரினூடாக எங்களுக்கு
குக்கூ நண்பர்கள் சிலரோடு அறிமுகங்கிடைத்தது. ரமணாச்சிரமத்திற்கு
எதிரிலிருந்த Quovadisற்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தோம். அழகான
வடிவமைப்போடு மிகுந்த அமைதிதரும் இடமாய் அது இருந்தது.
இதையெல்லாவற்றையும்விட, சுவையான தேநீரும், அருமையான சைவச்சாப்பாடும்
குறைந்த விலைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. கீழ்த்தளத்திலிருந்த
ஸ்டூடியோவில் நண்பர்கள் பொழுதைக் கழிக்க, நான் மேலே நிறைய மரஞ்செடிகளோடு
அமைதியாயிருந்த மொட்டைமாடியில் இருந்து மலையைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
குக்கூ தங்களுக்குச் சொந்தமாய் ஒரு நிலத்தை ஜவ்வாதுமலையில்
வாங்கியிருந்தனர். அத்தோடு அந்த மலைக்குப் போய் பல்வேறு வகையான
புகைப்படங்கள் எடுத்திருந்ததையும் குக்கூ நண்பரொருவர் காட்ட, எனது
நண்பருக்கு ஜவ்வாது மலைக்குப் போகும் ஆசை பொங்கத் தொடங்கிவிட்டது.
ஜவ்வாதுமலையைப் பார்ப்பதென்றால் விடிகாலை 4.30(?) மணியளவில்
திருவண்ணாமலையிலிருந்து பஸ்போகும் அங்கிருந்து மலையின் அடிவாரத்திற்குப்
போய், பிறகு வேறொரு பஸ் எடுத்துப்போகவேண்டும் எனச் சொன்னார்கள்.
நானும் நண்பரும் கனடாவிலும் அமெரிக்காவிலும் சேர்ந்து
பயணித்திருக்கின்றோம். புத்தர் கூறியமாதிரி பயணத்தைத் தொடங்குவதே
முக்கியம், எங்கே போய்ச் செல்வது என்பது அவ்வளவு அவசியமில்லை என்பதுமாதிரி
எங்களின் பயணங்களும் நாம் செல்லவிரும்பும் இடங்களை விட திசைகளைத் தொலைத்து
வேறெங்காவதுதான் முடியும். அந்தளவிற்கு நாங்கள் 'வரைபடங்களை' நன்றாக
வாசிக்கத் தெரிந்தவர்கள்.
ஜவ்வாதுமலையின் அழகைப் பற்றிக்
கேள்விப்பட்டவுடன், நண்பர் உடனே அங்கே போகவேண்டுமெனச் சொல்லிவிட்டார்.
எனக்கோ ஒழுங்கான ஆயத்தங்களில்லாது செவிவழிக்கதையைக் கேட்டு மட்டும்
போகமுடியுமா என்ற தயக்கம். பஸ்சில் போவதில்லை, உள்ளூருக்குள் சும்மா
ஓடிக்கொண்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிளில்தான் போவதென்றும் அவர்
கூறிவிட்டார். 150 கிலோமீற்றர்கள் தாண்டிய மலையேறும் சாகசத்திற்கு இது
போதுமா என்பதைப்பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. விடிகாலை என்னை
எழுப்பிவிட்டதோடு மட்டுமில்லாது, இரவும் எங்கேயாவது நிற்கவேண்டி வரும்
மாற்றுடைகளைக் கொண்டுவரச் சொல்லி என்னை மேலும் பயமுறுத்தினார்.
இருள்பிரியா விடிகாலையில் மோட்டார்சைக்கிளில்
சீறிப்பாய்ந்துகொண்டிருந்தபோது எனக்கு 'சே'யின் மோட்டார் சைக்கிளின்
பயணத்தைப் போல ஒரு கிளர்ச்சி எழுந்தது. ஆனால் யமுனா ஜவ்வாது(?) ஊரைக்
கடந்தபின் ஆட்களையே அவ்வளவு காணமுடியாதிருந்தது. மலையில் மேலே மேலே
செல்லும் பயணம். நிறைய ஊசிமுனைத் திருப்பங்கள். குளிர் இன்னுமின்னும்
அதிகரிக்கவும் தொடங்கிவிட்டது. ஆனால் எதிரே தெரிந்த மலைகளும், மரங்களும்
மிகுந்த குதூகலத்தை மனதிற்கு கொண்டு வந்திருந்தன.
குளிர் கூட
கூடப் பசிக்கத் தொடங்கியது. அத்தோடு தண்ணீர், சிற்றுண்டிகள் போன்ற எந்த
அத்தியாவசிய பொருட்களையும் நம் பயணப்பொதிகளில் வைத்திருக்காதது
தெரிந்தபோது, நாம் இன்னமும் மாறாத அசலான Dump and Dumper தான் என்று
நினைவுபடுத்தி -அந்தப் பசிக்கொடுமையிலும்- சிரித்துக்கொண்டோம். எங்கேயாவது
கடை தென்படாதா எனத் தேடிக்கொண்டே போனோம். அவ்வப்போது சிலர் மோட்டார்
சைக்கிள்கள் எதிர்ப்புறத்தில் வந்ததைத் தவிர ஒரே அமைதி.
பசி
வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். எனக்கு பசி வரும்போது நான்
யாரென்றே தெரியாத அளவுக்கு கொடூரமான ஒருவனாய் மாறிப்போகின்றவன். நமக்கு
பசியாற்ற வந்த அமுதசுரபியாய் ஒரு சின்னக்கடை தென்பட்டது. ஒரு முஸ்லிம்
குடும்பத்தினர் அந்தக் கடையை வைத்திருந்தனர். நாங்கள் பிஸ்கட்டுக்களையும்
சோடாக்களையும் வாங்கிக்கொண்டோம். அதிகாலைக் குளிருக்கு தேநீர் குடித்தால்
நல்லதென நினைத்து எங்களுக்குத் தேநீர் கிடைக்குமா எனக் கேட்டோம். தாங்கள்
தேநீர் விற்பதில்லை எனச் சொல்லிவிட்டு சற்று இருங்கள் தேநீர் தயாரித்துத்
தருகின்றேனென அந்தக் கடையில் நின்ற பெண் சொன்னார். கடையோடு இருந்த வீட்டில்
அவர்கள் தேநீர் தயாரிக்க, நாங்கள் அந்த பெண்ணோடும் அவரின் தாயாரோடும்
கதைக்கத் தொடங்கினோம்.
அவர் தாங்கள் மட்டுமே இந்த இடத்தில் ஒரு
முஸ்லிம் குடும்பம் எனவும், தற்சமயம் கணவர் இன்னொரு நகருக்குப்
போயிருக்கின்றார் எனவும் தம் குடும்பத்தைப் பற்றிச்
சொல்லிக்கொண்டிருந்தார். நிறையக் கோழிகள் தான் வளர்த்ததாகவும் ஆனால்
யாரென்று தெரியாமல் கோழிகளை களவெடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்ததால்
இப்போது கோழிகள் வளர்ப்பதில்லை எனவும் சொன்னார். சிறிதுநேரத்திற்குள்ளேயே
நெருக்கமானவர்கள் போல அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்கள்.
நண்பர் ஒரு சிறந்த புகைப்படக்காரர். அந்த வயதுபோன அம்மாவைப் படம்
பிடிக்கலாமாவெனக் கேட்டு படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். குளிருக்கு மிக
நன்றாகத் தேநீர் இருந்தது. இரண்டு பேருக்கும் மேலாக அவர்கள் எங்களுக்குத்
தேநீர் தயாரித்தும் இருந்தனர்.
இன்னும் குடியுங்களென மேலும்
தேநீர்க் கோப்பைகளை நிரப்பினர். யாரென்று தெரியாத அந்நியர்களுக்காய்
அவர்கள் இப்படி நேரமெடுத்து தேநீர் தயாரித்ததில் மனம் நெகிழ்ந்திருந்தது.
அதுமட்டுமில்லாது தேநீருக்கான பணத்தைக் கொடுத்தபோதும் அதை வாங்க
மறுதலித்து, எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் தேநீர்
கொடுக்கமாட்டோமா? அதற்கெல்லாம் பணம் வாங்குவோமா என்ன? என்றபோது நாங்கள்
மிகவும் நெகிழ்ந்திருந்தோம். ஏன் அடிக்கடி தெரியாத இடங்களுக்குப்
பயணிக்கவேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தை நான் கண்டடைந்துகொண்ட ஒரு தருணம்.
எங்களின் திட்டத்தில் முதலில் வீமன் நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதாய்
இருந்தது. ஒருமாதிரியாக வரும்/போகும் ஆட்களிடம் இடம் விசாரித்து
நீர்வீழ்ச்சியைச் சென்றடைந்திருந்தோம். ஆனால் இது நீர்வீழ்ச்சியிற்கான
பருவம் இல்லையென்றபடியால் நீர் கொஞ்சமாகவே இருந்தது. எவருமேயில்லாத அந்த
நீர்வீழ்ச்சிக்கருகில் புகைப்படங்களையும், பக்கத்திலிருந்த புளியமரங்களில்
புளியங்காய்களைப் பிடுங்கித்தின்றபடியும் அடுத்து ஒரு ஏரியிற்குப் போகத்
தயாரானோம்.
அங்கும் பெரிதாய் எவரையும் காணவில்லை. ஏரிக்குள் ஓடும்
படகொன்றை வாடகைக்கு வைத்திருந்த சிறுவன் ஒருவன் மட்டும் 'அண்ணா சவாரிக்கு
வருகின்றீர்களா?' எனக் கேட்டார். எங்களுக்கு படகுச்சவாரி செய்ய
ஆசையிருந்தாலும், குள்ளர்மலைக்குப் போவதே எங்களின் பயணத்தின்
முக்கியபுள்ளியாக இருந்ததால் நேரமிருந்தால் வருகின்றோமென ஏரியைச் சுற்றிப்
பார்க்கத் தொடங்கினோம். ஒரு கரையில் நாற்றுக்களை பெண்களும் ஆண்களுமாய்
நட்டுக்கொண்டிருந்தார்கள். அதை நிதானமாய்ப் புகைப்படம் எடுக்க
ஆசையிருந்தாலும், அவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தில்
மோட்டார்சைக்கிள் ஓடும்போதே எடுத்துக்கொண்டோம். இப்படித்தான்
செஞ்சிக்கோட்டையிற்குப் போகும்போதும் இடையில் தென்பட்ட மலைகளைப் படங்களை
எடுத்துக்கொண்டிருந்தோம். ஆங்காங்கே நிறைய மலைகளை
உடைத்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படக்கருவிகளோடு நிற்கும் எங்களை யாரும்
சகாயத்தின் ஆட்களென நினைத்து அடித்து உதைத்துவிடுவார்களோடு என்ற பயத்தோடே
நாங்கள் புகைப்படம் எடுத்ததும் நினைவுக்கு வந்தது. செல்கின்ற இடைவழியில்
சிறுகுன்றிலிருந்த முருகன் கோயிலுக்கு ஏறிப் பார்த்தோம். கருணாநிதி 'உபயம்' கொடுத்து
கட்டிக்கொடுக்கப்பட்ட கோயில் மண்டபத்தில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.
குள்ளர்மலைக்குப் போவதற்கென்று சரியான வழிகாட்டல்கள் இல்லை. ஒவ்வொருவரும்
ஒவ்வொருமாதிரி சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தைத்தாண்டி
மீண்டும் அந்த முஸ்லிம் குடும்பத்தினரின் கடைவரை வந்திருந்தோம்.
நாம் குள்ளர்மலையைக் கடந்துவந்ததை அவர்கள் சொல்லத்தான் அதுவும் தெரிந்தது.
குள்ளர் மலைக்கு மோட்டார்சைக்கிளில் போகமுடியாதென்பதால் ஒருவீட்டில் (ஏதோ
எங்களுக்குத் தெரிந்தவர் மாதிரி) விட்டுவிட்டு வயல்களுக்குள் நடக்கத்
தொடங்கினோம். குள்ளர்மலைக்குப் போவதற்கு இதுவா சரியான வழி என்று சிலரிடம்
விசாரித்தபோது, இதுதான் வழி, ஆனால் உங்களால் அந்த உயரத்திற்கு ஏறமுடியுமா
எனக் கேட்டனர். நாங்கள் எத்தனை ஹக்கிங் செய்திருப்போம், இதெல்லாம் பெரிய
விடயமா என நான் நினைத்துக்கொண்டேன்.
குள்ளர் மலைக்கு
அருகிலிருக்கும் கிராமத்திலிருக்கும் ஒருவரும் எங்களோடு சேர்ந்து
நடந்துவரத்தொடங்கினார். அவர் அருகிலிருந்த நகருக்குச் முதல்நாள் சென்று
செயற்கை உரம் வாங்கி தலையில் வைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். மிகவும்
செங்குத்தான கடினமான பாதை அது. கொஞ்சத்தூரம் நடக்கத் தொடங்கியவுடனேயே
எனக்கு மூச்சுத்திணறி அஸ்மா இழுக்கத் தொடங்கிவிட்டது. ஒருகட்டத்தில்
என்னால் இந்த மலையில் ஏறவே முடியாது என்று நம்பத்தொடங்கினேன். நான்
கஷ்டப்படுவதைத் தெரிந்து எங்களோடு நடந்துவந்தவர் அடிக்கடி ஓய்வெடுக்கச்
சொன்னார். எனக்கு இது ஒரு பயணம், ஆனால் மலையில் வசிப்பவர்களுக்கு
தினந்தோறும் இப்படி வந்துபோவது எவ்வளவு சிரமமாய் இருக்குமென யோசித்துப்
பார்த்தேன். எப்படி விவசாயம் செய்கின்றீர்கள்? எப்படி உங்கள் வாழ்க்கை
இருக்கிறதென நண்பர் அவரோடு நிறையக் கதைத்துக்கொண்டிருந்தார். ஒழுங்கான
பாதையே இல்லாத இதில் எந்த வாகனமும் ஓடவே முடியாது. கலெக்டர் இரண்டு
மூன்றுமுறை வந்துபார்த்தும் ஒழுங்காய்த் தெரு போடுவதற்கான எதையும்
செய்யவில்லை என்றார். மழைக்காலத்தில் வெள்ளம் ஓடினால் மனிதர்கள் மலையில்
ஏறவே முடியாது. அப்படியாயின் அவசர விடயங்களுக்காய் மக்கள் எப்படி
வருவார்களென்ற நிறையக் கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டிருந்தன.
நாங்கள் எங்கேயிருந்து வருகின்றோம், என்ன செய்கின்றோம் எனக் கேட்டார்.
நண்பர், நாங்கள் சென்னையில் வசிப்பவர்கள் என மட்டும் பொதுவாய்ச் சொன்னார்.
நான் அதிகம் அவர்கள் பேசுவதையே கேட்டுக்கொண்டேயிருந்தேன். ஏதாவது தொடர்ந்து
பேசினால் நான் தமிழ்நாட்டுக்காரன் இல்லை என்பது தெரிந்துவிடும் என்பதும்
ஒரு காரணம். அநேக ஊர்க்காரர்களைப் போல அவர் தான் இன்ன சாதியென்று கூறி
நாங்கள் என்ன சாதியெனக் கேட்டார். நண்பர் எங்களுக்குச் சாதி தெரியாது எனச்
சொன்னார். சென்னையிலிருந்து வருகின்ற எல்லோரும் இப்படித்தான்
சொல்கின்றீர்கள். உங்கள் பெற்றோரிடம் இதையெல்லாம் கேட்டு
அறிந்துகொள்ளக்கூடாதா என்றார். ஒருமாதிரி நண்பர் வேறு விடயங்களைக் கதைத்துத்
திசை திருப்பிவிட்டார்.
தனது ஊர் வந்தவுடன் வழிகாட்டியவர்
பிரிந்துவிட்டார். ஒழுங்கான வழிதெரியாது வீட்டு பின்வளவுகளால் நடந்துபோன
எங்களைச் சிலர், யாரையேனும் ஒருவரை வழிகாட்டியாகக் கொண்டுசெல்லுங்கள் எனச்
சொன்னார்கள். ஓரிடத்தில் நாங்கள் குள்ளர்மலைக்குச் செல்கின்றோம்
எனச்சொன்னபோது, ஒவ்வொருநாளும் எங்கிருந்தோதெல்லாம் ஆட்கள்
வருகிறார்கள், நிறைய வெள்ளைக்காரர்களும் வருகின்றார்கள், அவ்வளவு
முக்கியமான இடமா இது என வியந்தார்கள். இன்னொரு இடத்தில் திசைமாறி திகைத்து
நின்றபோது ஒரு பெண் இப்படிச் செல்லுங்களென உதவிக்கு வந்தார். அத்தோடு
விடாது, நானும் இங்கே நிறையக்காலம் வசிக்கின்றேன், இதுவரை ஒருமுறைகூட
குள்ளர்மலைக்குப் போனதில்லை, என்னையும் அழைத்துச் செல்லுங்களென சற்று
நகைச்சுவையாகக் கேட்டார். எங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதில் என்ன
தயக்கமா இருக்கப்போகின்றது. ஆனால் நாங்கள் மீண்டும் உயிரோடு ஊர்
திரும்பவேண்டுமே என நினைத்துக்கொண்டேன்.
ஒருமாதிரியாக ஒரு மலையில்
ஏறி மேலே போய்ப் பார்த்தால் நாங்கள் பிழையான இடத்தில் நிற்பது விளங்கியது.
'குள்ளர்மலை' இன்னொரு மலையில் இருந்தது. இனி மலை மாறியெல்லாம் என்னால்
ஏறமுடியாது, வேண்டுமானால் கொஞ்சம் படத்தை வந்த வழியில் எடுத்துப்போட்டு
குள்ளர்மலைக்குப் போனோம் எனப் படங்காட்டுவோம் என நண்பரிடம் சொல்லிவிட்டேன்.
நண்பரோ எப்படியெனினும் குள்ளர்மலையில் ஏறுவது, அப்படி முடியாவிட்டால்
எங்கேயாவது இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் ஏறுவது என்று தீவிரமாய் இருந்தார்.
தவறான மலையில் ஏறி திகைத்தபோதுதான் ஒரு வழிகாட்டியை ஊரிலிருந்து
கூட்டிக்கொண்டுவந்திருக்கலாம் என்பது உறைத்தது. மீண்டும் நாங்கள் Dump and
Dumperதான் அதில் சந்தேகமில்லை என உறுதியெடுத்துக்கொண்டோம்.
மற்ற
மலைக்கு எப்படி ஏறுவதென்றும் தெரியவில்லை. கொண்டுவந்த தண்ணீரும்
முடிந்துவிட்டது. எங்களுக்கு யாரேனும் உதவமாட்டார்களா என கத்திக்கொண்டு
நடக்கத் தொடங்கினோம். யாரோ மலைக்கு விறகுபொறுக்க வந்தவருக்கு எங்களின்
அவலக்குரல் கேட்டிருக்கின்றது.
அவர் ஒரு வயதுபோன அம்மா. அவர்
வாருங்கள் நான் வழிகாட்டுகின்றேனென முன்வந்தார். தண்ணீர்த் தாகமாய்
இருக்கின்றது என்றபோது போகும்வழியில் தனது குடிசையிலிருந்து எங்களுக்கு
செம்பில் தண்ணீர் கொண்டுவந்து தந்தார். அவர் யாரோடு இருக்கின்றார் எப்படி
வாழ்கிறார் எனக் கேட்டபோது, தனக்கு பிள்ளைகள் எவருமில்லை, இப்போது
இருப்பவர்களும் தன்னைக் கஷ்டப்படுத்துகிறார்கள் எனத் தன் துன்பத்தைச்
சொல்லி அழத்தொடங்கிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாய் போய்விட்டது
என்பதைவிட, அந்த இடத்தில் என்ன செய்வது என்றும் விளங்கவில்லை. அம்மா
அழவேண்டாம் என்று சொல்லிக் கைகளைப் பிசைந்துகொண்டிருப்பதைத் தவிர எங்களிடம்
அவரை ஆற்றுப்படுத்துவதற்கான எந்த வார்த்தைகளும் இருக்கவுமில்லை.
அந்த அம்மா தந்த தண்ணீரின் உற்சாகத்தில் குள்ளர்வீடுகள் இருக்கும் மலையில்
ஏறத்தொடங்கினோம். குள்ளர்மலை என்பது நமது பங்கர்களை நினைவுபடுத்தும்
கற்களால் கொண்டமைக்கப்பட்ட சிறுவீடுகள். இவ்வீடுகள் சிறிதாக இருப்பதால்
குள்ளர்மலை என அழைக்கப்படுகின்றதே தவிர, உண்மையில் குள்ளமனிதர்கள் இந்த
இடத்தில் வசித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. இதற்கு முன் வந்திருந்த
நண்பர் சொன்னதன்படி, இங்கே அடிக்கடி ஆதிவாசிகள் வருகின்றார்கள் என்பதை
அறிந்திருந்தோம். இச்சிறுகல் வீடுகளில் சற்று கால்களை மடக்கிப்
படுக்கமுடியும். தியானம் செய்வதற்கு மிகச் சிறந்த இடம். அமைதியும்
குளிர்மையும் உள்ளே -எந்த வெயிலுக்குள்ளும்- வாய்க்கக்கூடியது.
எங்களுக்கு இது அமைந்திருந்த சூழ்நிலை மிகவும் பிடித்துக்கொண்டது. நாங்கள்
போனபோது எவருமே மேலே இருக்கவில்லை. நாங்களும் கொஞ்ச மாடுகளும்
மட்டுமேயிருந்தோம். நண்பர் இரவை இங்கே கழிக்கலாமென உறுதியாய் நின்றார்.
எனக்கும் -காம்பிங் போன்ற அனுபவத்தைத் தரும் என்பதால்- தங்கலாமென
விருப்பமிருந்தது எனினும் நம்மிடம் இரவிற்கான எந்தத் தயார்ப்படுத்தல்களும்
இருக்கவில்லை. முக்கியமாய் சாப்பாடு எதுவும் இருக்கவில்லை.
வாங்குவதென்றாலும் கீழே இறங்கி ஊருக்குள் செல்லவேண்டும். அங்கேயும்
சாப்பாட்டுக்கடைகள் இருப்பதற்கான சாத்தியமெதுவும் இருக்கவில்லை.
புதிய பிரதேசம், அமைதியான சூழ்நிலை, தன்போக்கிலேயே உங்கள் மனதில்
இருப்பதையெல்லாம் பேசிவிடச் செய்திருப்பதை அவதானித்திருக்கின்றீர்களா?
நண்பரிடம் நான் கடந்த சில வருடங்களில் தாண்டி வந்த இருண்டகாலங்களைப்
பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். வாழ்க்கை என்பது சட்டென்று
திசைமாறிவிடக்கூடியதன் அபத்தங்கள் பற்றி நம் உரையாடல்கள்
நீண்டுகொண்டிருந்தன. கனடாவில் சில வருடங்கள் முன்னிருந்த நண்பனை சென்னை,
திருவண்ணாமலை என அலைபோல காலம் இழுத்துக்கொண்டு போகவில்லையா? இனி
என்றைக்குமாய் கனடா திரும்பமுடியாத ஒரு காலம் நண்பனுக்குள் கனிந்து
கொண்டிருப்பதை நான் அவர் நேரடியாகச் சொல்லாமலே உணர்ந்துகொண்டிருந்தேன்.
வெயில் மெல்ல மெல்ல இறங்கிப் போய்க்கொண்டிருந்தது.
மெல்லிய இருளுக்குள் நாங்கள்
மலையிலிருந்து கீழே இறங்கி நடக்கத்தொடங்கினோம். பாதை இப்போது கொஞ்சம்
பழக்கமாயிருந்தது. திருவண்ணாமலை போய்ச்சேர நள்ளிரவு பதினொன்றாகிவிட்டது.
இடையில் பொலிஸ் எங்களை மறிக்க, ஏதோ சொல்லிச் சமாளித்து வந்தோம்.
கிட்டத்தட்ட 250 கிலோமீற்றர்களுக்கு மேலாய் பயணித்திருந்தோம். இதுவரை
இவ்வளவு நீண்டதூரம் ஒருநாளில் மோட்டார்சைக்கிளில் பயணித்தில்லை என நண்பர்
வியந்தார்.
எதையும் ஒழுங்காய் திட்டமிடாத ஒரு பயணம், நாம்
பார்க்க விரும்பிய இடங்களுக்குப் போய்ச் சேர்ந்ததில் எங்களுக்குத்
திருப்தியாய் இருந்தது. பயணத்தில் பார்த்த இடங்களை விட, யாரென்றே தெரியாத
எங்களை விருந்தாளிகளாய் நினைத்து மிகுந்த நேசத்துடன் தேநீர் வழங்கிய அந்த
முஸ்லிம் பெண்களையும், தண்ணீர் தந்து தன் தனிமையைப் பகிர்ந்த அந்த
அம்மாவையும் சந்தித்ததே என்னளவில் மறக்கமுடியாத விடயங்கள். இப்போதும்
அவர்களே என் நினைவில் மிதந்துகொண்டிருக்கின்றார்கள்.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இளங்கோ
11/11/2015 10:32:00 AMஅருமையான குறிப்பு. வாசிக்கச் சுகமாகவிருக்கின்றபோதுங்கூட, எங்கோ வருத்தம் அதிலே பரவிக்கிடப்பதாகவும் உணர்கிறேன். நிறையச் சொல்லவிரும்புகிறேன். ஆனால், இங்கோ பேஸ்புக்கிலோ அல்ல. முடிந்தால், தொலைபேசியிலோ நேரிலோ
பெயரிலி, நீண்டகாலத்துக்குப் பிறகு உங்களின் பின்னூட்டத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
11/11/2015 11:28:00 AMஎன்னை நீண்டகாலமாய் அறிந்தவரும் அவதானித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவரல்லவா நீங்கள். நிச்சயம் தொலைபேசியியோ அல்லது நேரிலோ பேசுவோம்.
அருமையான பகிர்வு.
11/11/2015 11:37:00 AMஅருமை
11/11/2015 08:40:00 PMநன்றி.
11/11/2015 10:59:00 PMPost a Comment