நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Thursday, September 05, 2019


நடுகல்லும், கானல் தேசமும்..
.............................................................


இனி நமது படைப்பாளிகளுக்கு முன்னாலுள்ள பெரும் சவால் என்னவென்றால் உம்பர்த்தோ ஈக்கோ ஓரிடத்தில் சொல்வதுபோல, வாசகருக்கு எது வேண்டுமெனத் தெரிந்து எழுதுவதல்ல. நமது ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றமாதிரி வாசகரை மாற்றுகின்ற வித்தையை நாம் எழுத்தினூடாக அறியவேண்டியிருக்கின்றது' என்பது பற்றியே நாம் யோசிக்க வேண்டியிருக்கின்றது. அதுவே நம் எல்லோருக்கும் முன்னால் உள்ள சவால். அதை எப்படி எதிர்கொள்கின்றோம், தாண்டிச் செல்கின்றோம் என்பது குறித்து இனி நாம் அக்கறைப்பட வேண்டியிருக்கின்றது"
('ஆதிரை' நாவல் குறித்த என் வாசிப்பில்)


1.
கடந்த வாரங்களில் தீபச்செல்வனின் 'நடுகல்'லையும், நொயல் நடேசனின் 'கானல் தேசத்தை'யும் வாசித்து முடித்திருந்தேன். தீபச்செல்வனின் நடுகல்லை ஒரு auto fiction ஆக எடுத்துக்கொள்ளலாம். நொயல் நடேசன், தான் போரை அறியாதவன் என முன்னுரையிலே நேர்மையாக அறிவித்துவிட்டு போர் பற்றி தனது நாவலில் எழுதுகின்றார். ஆனால் அது இறுதிப்போர் நடந்த காலத்தில் அங்கே வாழாத ஷோபாசக்தி box கதைப்புத்தகத்தில் உருவாக்கிய கற்பித நிலப்பரப்பில் நிகழ்வது போன்று சம்பவங்கள் நடப்பதில்லை.

கானல்தேசம் நமக்கு அறிமுகமான நிலப்பரப்பில் நமக்கு நன்கு தெரிந்த சம்பவங்களினூடு நகர்கின்றது. இதேபோன்றே தீபச்செல்வனின் எழுத்துக்களைப் பின் தொடர்பவர்க்கும் அவர் இந்த நாவலில் குறிப்பிடும் பல சம்பவங்களை ஏற்கனவே அறிந்திருக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கும்.

எனவே இந்த இரண்டு நாவல்களையும் வாசிக்கும்போது தீபச்செல்வனும், நொயல் நடேசனும் நமக்கு அறிந்த சம்பவங்களினூடாக நம்மை எப்படி தமது நாவல்களுக்குள் ஆழ இழுத்துக்கொண்டு செல்லப்போகின்றார்கள் என்பதையே அவதானித்தபடியே இருந்தேன். தீபச்செல்வனுக்கு போர் குறித்த நிறைந்த அனுபவங்கள் இருந்தது. நடேசனுக்கு கதையைச் சொல்வதற்கான அலுப்பில்லா மொழி வாய்த்திருந்தது. எனினும் இருவருமே இந்த நாவல்களை அவ்வளவு எளிதில் மறந்துபோய் விட முடியாத படைப்பாக மாற்றமுடியாது அந்தரத்தில் நிறுத்திவைத்தவர்களாகவே கொள்ளவேண்டியிருக்கின்றது.

இருவருக்கும் இந்த நாவல்களில் இருக்கும் முக்கிய சிக்கல் என்னவென்றால் அவர்களை அறியாமலே அவர்களின் அரசியல் தனித்துத் துருத்திக்கொண்டு நின்றதைச் சொல்லலாம். ஒருவருக்கு தனிப்பட்ட அரசியல் இருப்பதும், அதை முன்வைப்பதும் தவறில்லை. அபுனைவுகளில் அதை வெளிப்படையாக முன்வைக்கலாம். ஆனால் புனைவுகளில் அதைச் சூட்சுமாகப் பேசி வாசிப்பவரைப் பாதிக்கச் செய்யாமல், நடந்த/நடக்காத சம்பவங்களை தமக்கேற்ற அரசியலுக்கேற்றமாதிரி எழுதிச் செல்வது புனைவுகளுக்கு என்றுமே அழகு சேர்க்கப்போவதில்லை.

இருவருமே தமது அரசியலைப் பேசுவதால், தமக்கு உவப்பில்லாத பலதை மறைப்பதுமில்லாமல், மறுதரப்பில் நிற்போரை எதிரிகளாக/துரோகிகளாகக் கட்டமைக்கின்றனர். அது இன்னும் அலுப்பைக் கொடுப்பது மட்டுமில்லாது நமது அரசியல்/ஆயுதப்போராட்ட வரலாறு தெரிந்த நமக்கு எரிச்சலையும் கொண்டுவருகின்றது. இரண்டு பேருக்கும் மறுதரப்பை தமது பாத்திரங்களினூடாக 'கூடுவிட்டு கூடுபாய்ந்து' விளங்கிக்கொள்ளும் பெருவெளியை அவர்களின் இந்த நாவல்கள் வழங்கியபோதும், அவர்கள் தமது தரப்புக்களை/அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தப் போனதால் அந்த அரிய சந்தர்ப்பத்தைக்கூட இழந்துவிட்டிருந்தார்கள் என்பதுதான் இன்னும் சோகமானது.

தீபச்செல்வன் தனது நாவலில் அடிக்கடி தொலைந்துபோகும் ஒரு தகப்பனின் பாத்திரத்தினூடாக ஒரு சிறுவனின் சிறுவயது ஏக்கங்களை இன்னும் ஆழமாகக் கொண்டு வந்திருக்கலாம். அதுபோல கதைசொல்லியான வினோதனின் சகோதரன் இயகத்தில் சேருவதிலிருந்து களத்தில் பலியாகும்வரை ஒரு சிறுவனின் மனோநிலைக்குள் போயிருந்தால் அதை வாசிப்பவருக்கு நெருடச் செய்கின்றதான ஒரு மொழியைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் அதை மீறி அரசியல் கறுப்பு வெள்ளைக்குள் அகப்பட்ட ஒரு வளர்ந்த ஆண் வந்தவுடன் இந்தக் கனதியான இழப்பின் துயர் கூட சாதாரண சம்பவங்களாக வாசிப்பவருக்குக் கடந்துபோகின்றது.

இவ்வாறு இந்த நாவலில் தமையனைத் தேடுவதைப் போல, தமிழ்கவி 'வானம் வெளிச்சிரும்' நாவலில் களமுனைக்குப் போன தனது பிள்ளைகளைத் தேடும் ஒரு தாயின் தேடுதலை எழுதியிருப்பார். இறுதியில் தாய் தன் பிள்ளையின் முகத்தைக் காணாமலே புதல்வன் களத்தில் சாவை அடைந்திருப்பான். அங்கே ஒரு தாயின் தேடல் மட்டுமே இருக்கின்றதே தவிர, அங்கே இயக்கத்தினதோ/தமிழ்த்தேசியத்தினதோ அரசியலோ வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. ஆனால் அந்த துயரமான தேடலினூடு தமிழ்கவி ஒருவகையில் தமக்குப் போராட வேண்டியிருப்பதற்கான அவசியத்தையும் வாசிக்கும் எமக்கு நேரடியாகச் சொல்லாமலே உணர்த்தியபடி எழுதியிருப்பார். அந்தத் தேடல் நமக்குள் எதையோ உருகவைப்பதுபோல தீபச்செல்வனின் நாவல் நம்மை உணரவைப்பதில்லை. அது மட்டுமில்லாது போராடச் சென்றவர்கள் களநிலை மாறுகின்றபோது உயிரைத் தக்கவைப்பதற்காய் மறுதரப்பிற்கு மாறும்போது அவர்களை துரோகியாக்கி வாசிப்பவரை அப்பாத்திரங்களை வெறுக்கவும் கோருகின்றது.

நமது போராட்டம் இப்படி பெரும் அழிவைக் கொண்டுவந்து பத்தாண்டுகள் ஆகியபின்னும், இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்னரான நிலைமையில் நின்று இப்படிப் பேசுவதற்கு அரசியல் மேடைகளில் சிலவேளைகளில் கைதட்டல்கள் கிடைக்கலாம். ஆனால் புனைவில் அதை வைப்பதற்கு தீபச்செல்வன் இயக்கத்தின்/கட்சியிற்கான அறிக்கையையா எழுதுகின்றார் எனத்தான் கேட்கத் தோன்றுகின்றது. கவிஞராக இருந்து சிறுகதைகளும்/ நாவல்களும் எழுதத்தொடங்கிய தமிழ்நதி போன்ற பலருக்கு ஒரு கவித்துவ மொழி எளிதில் வாய்த்திருக்கின்றது. ஆனால் அது கூட கவிஞராக இருக்கும் தீபச்செல்வனில் அவ்வளவு வெளிப்படாது உலர்ந்த மொழியால் எழுதப்பட்டது போல நடுகல்லை வாசிக்கும்போதும் தோன்றியிருந்தது.

தீபச்செல்வன் இப்படி ஒரு தரப்பை மறுதரப்பிற்கு இடமே கொடுக்காது 'வெறுக்கத்தக்க மற்றதாக' வைத்துப் பேசுகின்றார் என்றால், நடேசனோ தீபச்செல்வன் மற்றதாக்கும் இன்னொரு தரப்பை, தனது அரசியல் தெரிவாக எடுத்துக்கொண்டு எழுதுகின்றார். அதைக் கூட நாம் வாசித்து விளங்கிக்கொள்ளட்டும் என்ற பொறுமை கூட இல்லாது முன்னுரையிலே எல்லாவற்றையும் எழுதி நடேசன் வாசகருக்கு அலுப்பூட்டுகின்றார் (இப்படி எஸ்.ரா தனது நாவல்களில் எழுதி எங்களை அழவைப்பார். இப்போது நடேசன். எனினும் நான் நாவலை வாசித்துமுடித்துவிட்டே பிறகு முன்னுரையை வாசித்திருந்தேன்). கிட்டத்தட்ட நானூறு பக்கங்கள் அளவு நீளும் பெரிய நாவலில் இப்படி முன்னுரையில் சுருங்கக்கூறுவது ஒருவர் அவரது வாசகருக்கு மட்டுமில்லை, அவர் எழுதும் நாவலுக்கே செய்யும் மிகப் பெரும் அவமானமாகும். நானூறு பக்கங்களில் ஒரு வாசகர் விளங்கிக்கொள்ளாததை முன்னுரையில் கொடுக்கும் நான்கைந்து பக்கங்களா சொல்லிக்கொடுக்கும். இல்லை இந்த நாவல் நம் கவனத்தைக் கோரக்கேட்கின்ற அரசியலை இந்த முன்னுரை மாற்றிவிடுமா என்ன?


2.
நடேசனுக்கு நம் பலருக்கு அவ்வளவு வாய்த்திடாத ஒரு புனைவுமொழி வாய்த்திருக்கின்றது. இந்த நாவலை வாசிக்கும்போது, போர்ச்சூழலே தெரியாத அவர் நிறைய ஆய்வுகளும் செய்திருக்கின்றார் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது. எனினும் நாவலின் பாத்திரங்களை விட நடேசன் என்ற தனிமனிதரின் அரசியல் அந்தந்த பாத்திரங்களின் இயல்பை மீறி வெளிப்படத்தொடங்கியவுடன் நமக்கு அலுப்பு வந்துவிடுகின்றது. இந்த நாவலின் ஒரு மாபெரும் தவறு என்னவென்றால் அநேக பாத்திரங்களை படர்க்கையில்/மூன்றாம் நபராக அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு அவற்றை தன்மையில்/தன்னிலையில் பேசவைப்பதாகும். ஆகக்குறைந்தது பெண்களின் பாத்திரங்களையாவது படர்க்கையில் பேசவைத்திருக்கலாம். ஆணாகிய நாம் பெண்ணின் தன்னிலையில் நின்று பேசுவது பெண்களுக்கான வெளியை நாமே எடுத்துக்கொள்வதாகும். ஆக அவர்களின் குரல்களில் அவர்களே பேசவேண்டும். நாம் பேசவிரும்பும் பெண்களின் பாத்திரங்களை படர்க்கையிலோ/முன்னிலையிலோ பேசுவதே நியாயம் என நினைவுகொள்வோம்.

தொடக்கத்தில் நாவல் மிகுந்த சுவாரசியமாக நகர்கின்றது. ஆனால் போகப் போக நாவலின் பாத்திரங்களுக்குள் நடேசனின் தனிப்பட்ட அரசியல் போதும் போதென்று நிரம்பி வழியும்போது, நாம் எதுவுமே செய்வதறியாது திகைக்கச் செய்கின்றோம். ஆகவேதான் நாவல் முடியும்போது பல விடயங்கள் 'லொஜிக்கே' இல்லாமல் நிறைவடைந்துபோகின்றன. துணுக்காய் சித்திரவதைக் கூடங்களோ, முஸ்லிம்களின் வெளியேற்றமோ, புலிகளின் தற்கொலைப்படையோ நாம் ஏற்கனவே நன்கு அறிந்தவை என்கின்றபோது அதை ஒருவர் எப்படி பாதிக்கின்றமாதிரி எழுதுவார் என்பதையே ஒரு வாசகராக நான் தேடிப்பார்ப்பேன்.

அதிலும் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அனுதாபத்தோடு அணுகினாலும், பிறகு அப்படி வெளியேறுகின்ற ஒரு முஸ்லிம் பாத்திரம் கடும் சித்திரவதைக்குள்ளாக்கி, அவரே பிறகு புலிகள் கொழும்பில் நடத்தும் குண்டுத்தாக்குதல்களுக்கு எல்லாம் உதவுவதாய் எழுதியதைக் கவனமாகப் பரிசீலித்திருக்கலாம். ஒருவகையில் முஸ்லிம்களின் வெளியேற்றம், அந்த முஸ்லிமுக்குக் கொடுக்கப்பட்ட சித்திரவதைகள் எல்லாவற்றையும் நீர்த்துப்போகக்கூடியதாக அந்த முஸ்லிம் பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.


அதுபோலவே புலிகளுக்கு கிறிஸ்தவப் பாதிரிமார்கள் உதவுகின்றார்கள் என்று அவர்களை மிகப் பெரும் பாவிகளாக உருவகிக்கின்ற இந்நாவல் மறுபுறத்தில் சிங்கள புத்த பிக்கு (மகிந்த) போருக்கு ஆட்களைச் சேர்ப்பதைப் பெருமிதமாகக் காட்டுகின்றது. அதிலும் அந்தப் பிக்கு தனது சகோதரர்கள் இராணுவத்தில் இருக்கின்றார்கள் என புளங்காகிதம் அடைகின்றார் என எழுதுவது அந்தப் பாத்திரத்தினூடாக நடேசனின் சுய அரசியல் விருப்பு வடியத்தொடங்குவதைப் பார்க்கின்றோம்.

இறுதியுத்தத்தில் உதவ வரும் இந்திய உளவுத்துறையினரை, அவர்கள் 80களில் இயக்கங்களுக்கு ஆயுதங்கொடுத்த பாவத்தை நீக்க, இலங்கை இராணுவத்தோடு சேர வந்திருப்பதாய் இந்த நாவலின் பாத்திரங்களினூடாகச் சொல்வது கூடப்பரவாயில்லை, ஆனால் இந்திய இராணுவமும், இந்திய அரசும் glorify செய்யப்படுவதைத்தான் சகிக்க முடியவில்லை. ஏதோ இப்போது இந்திய இராணுவம்/அரசு அமைதியை விரும்புவதாய்க் காட்டும்போது நாம் எந்த நூற்றாண்டில் இருக்கின்றோம் என்று அதிசயக்கத்தான் முடிகிறது. நடேசன் என்கின்ற படைப்பாளி காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடப்பதற்குக் கூட அவ்வளவு தொலைவு போகத்தேவையில்லை, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் கொல்லப்பட்ட/சித்திரவதைக்குள்ளான மக்களை மனதில் நிறுத்தியிருந்தாலே இந்திய இராணுவத்தை பெருமிதப்படுத்த வேண்டியிருக்காது. அவர் ஆகக்குறைந்தது சோளகர் தொட்டியையாவது பொறுமையாக வாசிக்கவேண்டும். வீரப்பனோடு ஆகக்குறைந்தது பத்தோ இருபதோ பேர்கள் தான் இருந்திருப்பார்கள். ஆனால் அந்த இருபது பேரைத் தேடிக்கொல்கின்றோம் என்று தொடங்கிய அதிரடிப்படையினர் செய்த சித்திரவதைகளையும்/பாலியல் வன்புணர்வுகளையும் எந்த அரசின் இறையாண்மையின் கீழ் ஏற்றுக்கொள்வது? எந்த இராணுவமாயினும் அதிகாரத்தின் கோரப்பற்களோடுதான் எல்லோரையும் வேட்டையாடும் எனப் புரிந்துகொள்வது ஒரு படைப்பாளியின் எளிய அறமாக அல்லவா இருக்கவேண்டும்?


3.

தீபச்செல்வனுக்கு இயக்கம் ஒரு புனிதம் என்றால், நடேசனுக்கு இலங்கை/இந்திய இராணுவம், இயக்கத்தை அழிக்க வந்ததால் புனிதமாகி விடுகின்றனர். ஆகவேதான் தலதா மாளிகை குண்டுவெடிப்பை விவரித்துப் பேசுகின்ற இந்த நாவலில் நவாலி தேவாலயம் உள்ளிட்ட எந்த பொதுமக்கள் படுகொலையும் சம்பவங்களாகக் கூட குறிப்பிடமுடியாமல் எளிதாகக் கடந்து போக முடிகின்றது. புலிகளில் விரும்பி இணைந்து போராடி தற்கொலைப்போராளியாகப் போகவும் தயாராக இருக்கின்ற கார்த்திகா, பிறகு தனது அண்ணி அவுஸ்திரேலியா அரசுக்கான உளவாளி என்கின்றபோது அண்ணா நீயும் உளவாளி அண்ணியும் உளவாளிதான் என எளிய வார்த்தைகளாலேயே ஏற்றுக்கொள்வதெல்லாம் கற்பனையில்தான் நடக்கமுடியும். ஒரு போராட்டத்தை தனக்குத் தெரிந்த நம்பிக்கை/அறங்களோடு ஏற்றுக்கொண்டு போராடிய அந்தப்பெண் பாத்திரம் அவ்வளவு எளிதில் தனது போராட்டம் அழிந்துபோவதை/அதற்குத் துணைபுரிந்தவர்களை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலை எப்படி வந்ததெனச் சொல்லாமல் இப்படி எளிய முடிவுகளுக்கு வருவதெல்லாம் நாவலின் பலவீனங்கள்தான்.


அதுபோலவே முக்கிய பாத்திரம் பதின்மத்தில் பாதிரியாரால் அவுஸ்திரேலியாவுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அனுப்பிவைக்கும்போதே அவரிடம் பாதரும் இயக்கமும் எதையோ எதிர்பார்க்குமென அவர் மட்டுமில்லை அவரின் புலி எதிர்ப்பாளரான இடதுசாரி பெரியப்பாவுக்குக் கூடவா விளங்காது போயிருக்கும். இயக்கத்தை அவ்வளவு வெறுக்கும் அந்தப் பெரியப்பா இவ்வளவு அப்பாவியா இந்த விடயத்தில் இருந்திருப்பார். புலிகளோடு தொடர்பிலிருக்கும் பாதிரியார் 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' எனத் தெரியாமலா அனுப்பி வைத்திருப்பார்கள்?

தீபச்செல்வனும், நடேசனும் அவர்வர்களின் அனுபவங்களினூடாகவோ/அறிதல்களினூடாகவோ அவர்களுக்குரிய அரசியலைக் கொண்டிருப்பது தவறில்லை. ஆனால் அதை நேரடியாக அபுனைவாகச் சொல்லியிருந்தால் நமக்கு அவர்களின் அரசியலை விளங்கிக்கொள்வது எளிதாக இருந்திருக்கும். ஒருவரின் தனிப்பட்ட அரசியல் தேர்வு என நாமும் அவர்களைப் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் புனைவு என்பது நமக்கு பெரிய வெளியை விரித்துத் தருவது. அங்கே நாமல்லாத நமக்கு உவப்பில்லாத பாத்திரங்கள்/சம்பவங்களுக்குள் உள்நுழைந்து நம்மை உருமாற்றிப் பார்க்கும் வாய்ப்புக்கள் பெருகிக்கிடக்கும். நமக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் தரப்பைக் கூட அது ஏன் அப்படி உரையாடுகின்றது என்று புரிந்துகொள்வதற்கான வெளியையும், நிதானத்தையும் புனைவு ஒரு படைப்பாளிக்குத் தரும். அதைப் புரிந்துகொண்டு நாம் அந்தப் பாத்திரங்களுக்குள் இறங்கும்போது வாசிப்பவருக்குப் புதிய அனுபவத்தை - முக்கியமான தான் எதிர்த்தரப்பு என நினைக்கும் குரலைக்கூட செவிமடுக்கும் அற்புதமான சந்தர்ப்பத்தைக் கொடுக்கும். அதை இந்த இரண்டு பேருமே எதிர்த்தரப்பாக/எதிர்களாக/துரோகிகளாக மட்டுமாகக் காட்டும்போது அவர்களின் படைப்புக்களும் நம்மிலிருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.

இந்த இரண்டு நாவல்களை வாசிக்கும்போது, நடேசனோ தீபச்செல்வனோ சொல்லும் தரப்புக்கள் அல்ல, இவர்கள் இரண்டு பேருமே சொல்லாது தவறவிட்டு நடுவில் சிக்கிக்கொண்டு அந்தரத்தில் மிதக்கும் ஒரு தரப்பாகவே நமது கதைகள் அலைந்துகொண்டிருக்கின்றன என்றே எண்ணத்தோன்றியது. அதை வாசிக்க, ஒரு தரப்பை நியாயப்படுத்த மற்றத் தரப்பை துவிதமுனையில் நிறுத்தாத தமது அரசியல் நிலைப்பாடுகளில் மட்டும் இறுகிக்கொள்ளாத படைப்பாளிகளுக்காக நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலும். இவர்கள் இருவருமே கூட தமது அடுத்த படைப்புக்களில் தமது அரசியல் நிலைப்பாடுகளைத் திணிக்காது தம் பாத்திரங்களினூடாக மட்டுமே பேசமுடியுமென்றால் நம்மைப் பாதிக்கும் சிறந்த அரசியல் நாவல்களைத் தரவும் கூடும்.


இறுதியில் இரண்டு சம்பவங்களைச் சொல்கின்றேன்.


(1) ஈழத்தில் இறுதிப்போர் நடைபெற்ற காலங்களில் எனக்குத் தெரிந்த இருவர் இயக்க ஆதரவாளர்களாக இருந்தார்கள். பிறகு இருவரின் சகோதரர்களையும் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்புக்குப் பிடித்துக்கொண்டு சென்றார்கள். ஒருவரின் சகோதர் மீண்டு வரமுடியாது அவருக்கு துயரமான முடிவு நேர்ந்தது. மற்றவரின் சகோதரர் ஒருமாதிரி இறுதியுத்தத்தில் தப்பி தடுப்பு முகாமில் இருந்து உயிரோடு வெளியே வந்தார்

இப்போது அவர்களின் சகோதரர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் தீவிரமாக இருக்கின்றனர். ஆக ஒரு சம்பவம் ஒருவரின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குள்ளால் அல்ல, அந்த இரண்டுபேரின் ஆழ்மனதிற்குள் நுழைவதன் மூலம் நாம் இந்தப் போரை இன்னும் நெருக்கமாக நிதானமாக அணுகிப்பார்க்கலாம்.

(2) இறுதிப்போரின் கடைசிக்கணம் வரை இருந்து, தடுப்பு முகாமிற்குள் பல மாதங்கள், தன் தாய் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என அறியமுடியாது மனம் சிதறி வந்த என் தோழி ஒருவர் பற்றியது. அவர் இறுதியுத்தத்தில் நடந்ததை என்னோடு பகிர்ந்துகொண்டவை சொல்லில் சொல்லி மாளாதவை. வன்னிக்குள் பதின்மத்தில் இருந்தபோது அவர் விரும்பி புலிகளில் சேர்ந்தபோது புலிகள் திருப்பி அனுப்பியதோடல்லாது, பெற்றோரையும் கூப்பிட்டு அவரைக் கையளித்திருக்கின்றனர். பின்னர் இயக்கம் கட்டாய ஆட்சேர்ப்பின்போது அவரைச் சேர்க்கவந்தபோது பங்கருக்குள் நெடுநாட்கள் ஒளிந்திருந்து ஒருமுறை பிடிபட்டிருக்கின்றார். வீட்டிற்கு ஒரெயொரு பிள்ளை என்றபடியால் எப்படியோ கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து ஒருமாதிரி தப்பிவிட்டார். ஒருகாலத்தில் இயக்கத்தில் விரும்பிச் சேர்ந்தவர் பிறகேன் இயக்கத்தில் போய்ச்சேரவே விரும்பவில்லை என்பதை மட்டுமின்றி இவ்வளவையும் பார்த்துவிட்டும் இன்றும் புலிகளை ஆதரிப்பவராகவும் இருக்கின்றார், அது ஏன் என்றும் நாம் யோசித்துப் பார்க்கலாம்.

இந்த இரண்டு சம்பவங்களைப்போல தமது நாவலில் படைத்தபாத்திரங்கள்/சம்பவங்களைப் பற்றியும், நமது போராட்டம் எவ்வளவு சிக்கலானது என்றும் இவ்விரு படைப்பாளிகளுக்குள்ளும் ஓர் எண்ணம் அலைந்துதிரிந்து தொடர்ந்து தொந்தரவுபடுத்தியிருந்தால், இவ்வாறு கறுப்பு வெள்ளையான பாத்திரங்களைக் கொண்டு தமது நாவல்களை எழுதத் தயங்கியிருப்பார்கள் அல்லது மாற்றியெழுதவாவது விரும்பியிருப்பார்கள். நமக்கு உடன்பாடில்லாத விடயங்களை/பாத்திரங்களைக் கூட அங்கே/அதில் அப்படியிருப்பதற்கு ஏதோ நியாயம் இருந்திருக்கூடுமென நம்மை யோசிக்கவைப்பதில்தான் அல்லவா படைப்பின் 'அழகியல்' இருக்கிறது. அதை இவ்வளவு அழிவைப் பார்த்தபின்னும் நாம் கற்றுக்கொள்ளாவிட்டால் வேறு எதைத்தான் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.


0 comments: