Sunday, August 25, 2019

டாங்கிகளும், போர் எதிர்ப்பும்

அண்மையில் கிங்ஸ்டன் நகருக்குச் சென்றிருந்தோம். எனக்குப் பிடித்தமான நகர்களில் இதுவுமொன்று. ஆயிரம் குட்டித்தீவுகளும் (Thousand Islands), போர்ட் ஹென்றியும் (Fort Henry), புராதனக் கட்டடங்களும் எனப் பல இருந்தாலும், இங்கேயே கனடிய இராணுவத்தின் பயிற்சி நிலையமும் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் இந்த முகாமைக் கடந்துபோகின்றவன் என்கின்றபோதும் இம்முறை காட்சியிற்கு வைத்திருந்த சில டாங்கிகளைக் கண்டுவிட்டு அருகில் போய்ப் பார்த்தோம்.

கூடவந்த நண்பருக்கு போர் பற்றிய அனுபவங்கள் இல்லாததால் அவருக்கு டாங்கிகளுடனான என் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேரடியாக முதன்முதலில் டாங்கிகளைக் கண்டதென்றால் இந்திய இராணுவகாலத்தில்தான். இந்திய இராணுவத்தின் டாங்கிகள் தெருக்களில் அடையாளமிட்டுப் போகாத தார் ரோட்டுக்களே அன்றைய கால யாழில் இல்லையெனச் சொல்லலாம்.

எப்போதுமே மிக அச்சமூட்டும் ஒரு விடயமாக டாங்கிகள் இருந்திருக்கின்றன. பிரம்படியில் புலிகளின் முகாமைத் தாக்க பாரசூட்டுக்களில் குதித்த இராணுவத்தைப் புலிகள் சுட்டதையடுத்து, இந்திய இராணுவம் வீதிகளிலும், வீட்டுக்குள்ளும் இருந்த மக்களை தெருவில் படுக்கவைத்து டாங்கிகளினால் சிதைத்துக் கொன்றதை எவராலும் மறக்கமுடியாதது. இந்தியத் தேசியக்கொடியில் சுழன்றுகொண்டிருக்கும் தர்மசக்கரத்திற்கு இதெல்லாம் தர்மசங்கடமாய் ஒருபோதுமாய் இருந்ததில்லை. சில இந்திய இலக்கியவாதிகள் ஈழப்போராட்டம் பற்றி எழுதும்போது வரும் எரிச்சலில் , அட்டூழியங்கள் செய்த இந்திய இராணுத்தையே கட்டிப்பிடித்து முத்தமிடலாம் போலத் தோன்றுவது வேறுவிடயம்.

கூட வந்த நண்பருக்கு போர்க்காலத்தில் நடந்தவற்றை மேலும் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

இலங்கை இராணுவம் நிலங்களைக் கைப்பற்றுவதற்கு டாங்கிகளை முன்னிறுத்திய காலம் ஒன்றிருந்தது. முந்தைய காலங்களில் யானைப்படை போன்று பின்னாட்களில் டாங்கிகள். இயக்கம் விக்டர் கவச எதிர்ப்பு அணியென்று ஒன்றையே உருவாக்கியிருந்தது. டாங்கிகள் நடத்தும் தாக்குதல் பற்றியும், அவற்றை எதிர்த்து நிகழ்ந்த களங்களையும் வாசிக்க விரும்புபவர்கள் பெண்புலிகள் எழுதித்தொகுத்த 'வேருமாகி விழுதுமாகி' என்ற நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன்.

சமாதான காலம் எனப்பட்ட 2000களின் தொடக்கத்தில் ஆனையிறவில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட டாங்கி இடைநடுவில் கைவிடப்பட்டிருந்ததை அதைக் கடந்தவர்கள் கண்டிருக்கக்கூடும். அவ்வாறு ஒருமுறை ஆனையிறவைக் கடந்தபோது புகைப்படம் எடுத்திருக்கின்றேன். இப்போது எங்கோ அது தவறிவிட்டது.  கிறிஸ்டோபர் ஒண்டாச்சி எழுதிய 'Woolf in Ceylon'லிலும் இதைப் புகைப்படத்துடன் பதிவு செய்திருப்பார்.

போருக்குள் பிறந்தவர்/வளர்ந்தவர்/அனுபவித்தவர்களுக்கு அதிகாரங்கள் மீது மட்டுமில்லை, இந்த ஆயுத உபகரணங்கள் மீதும் எவ்வளவு வெறுப்பு இருக்குமென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. 1989 மாணவர் புரட்சியில் சீனாவில் தியான்மென் சதுக்கத்தில் நிரையாக வந்துகொண்டிருக்கும் டாங்கிகளை எதிர்த்து நிற்கும் ஒரு மாணவனின் புகைப்படம் அத்தகை வலிமை வாய்ந்தது. வரலாறு எவரையும் அவ்வளவு எளிதாய் விடுதலை செய்யாது என்பதற்கு அந்த மாணவனின் தனித்த எதிர்ப்பு எல்லோரையும் இன்றும் தொந்தரவு செய்தபடியிருக்கின்றது. அந்த எதிர்ப்பு நடந்த காலங்களில்தான் இந்திய இராணுவத்தின் டாங்கிகள் எமது நிலத்தை உழுதபடி சென்றுகொண்டிருந்தன.

இராணுவத்தை/ஆயுதங்களை glorify செய்பவர்கள் மீது எப்போதும் எரிச்சலே வந்துகொண்டிருக்கின்றது. இதில் ஏறக்கூடாதென்றார்கள். ஆயுதங்கள் மீதிருக்கும் வெறுப்பில், யாரையோ காவுகொள்வதற்கு குறிபார்த்துக் காத்திருப்பது போல இருக்கும் ஏவுகுழாயின் அருகில் சமாதான சமிக்ஞையைக் காட்டி ஆறுதல்கொள்வதே நமக்கான எளிய வழி.

(Aug 25, 2016)

No comments:

Post a Comment