Wednesday, August 21, 2019

பயணம்: கேரளா/தமிழகம்

சில தெறிப்புகள்

கொச்சியில் இருக்கும் கலைக்கூடங்கள் என்னை எப்போதும் வசீகரிப்பவை. கடந்தமுறை கொச்சியிற்குச் சென்றபோது Kochi-Muziris Biennale நடைபெற்ற காலம் என்பதால் கலைகளின் கொண்டாட்டமாக இருந்தது. இம்முறை அந்தக் காலம் இல்லாதபடியால் நிரந்தரமாக அங்கே இருக்கும் கலைக்கூடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒருநாள் முழுதும் அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். இந்தக் கலைக்கூடங்களில் பொதுவாக முன்பக்கத்தில் இவ்வாறான ஓவியங்கள் பார்ப்பதற்கும்/ (சிலவேளைகளில்)விற்பதற்கும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதைத்தாண்டிச் சென்றால் cafeக்கள் உள்ளே இருக்கும். இந்த இடங்களில் தனியே ஓவியங்கள் என்றில்லாது இசை, இன்னபிற விடயங்களும் நிகழ்ந்தபடி இருக்கும்.

David Hall Art Cafe யில் அற்புதமான வடிவமைப்புடன் பியானோ உள்ளிட்ட வாத்தியங்களுடன் இசை நிகழ்ச்சி நடத்தும் இடமும் இருந்தது. மற்றது கஃபேயில் ஏதும் காசு கொடுத்து வாங்காவிட்டாலும், ஆறுதலாக ஓவியங்களை இலவசமாக இரசிக்கலாம். நான் David Hallற்குப் போனபோது, அதற்குப் பொறுப்பாக இருந்தவர் தானாகவே வந்து இந்த இடத்தின் வரலாறு, இதில் காட்சிக்கு வைத்திருக்கும் ஓவியர்கள் பற்றியெல்லாம் மலர்ந்த முகத்துடன் விளக்கமளித்தார்.

உலகில் ஆயிரத்தெட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது கலைகள் அவசியமா என்ற கேள்விகள் இருந்தாலும், இவை நம் உள்மனதின் அந்தரங்கங்களோடு உரையாடுபவை. எப்போதும் எதையோ பெறுவதற்காய் ஓடும் வாழ்க்கையிற்கு கொஞ்சம் 'ஆசுவாசத்தை' த் தருபவை. கடந்தமுறை ஸ்பெயினுக்குப் போனபோது ஒரு மியூசியத்தின் ஒதுக்குப்புறத்தில் சின்னக் கிற்றாரை வைத்துப் பாடல்களைப் பாடிய இசைஞனின் குரலில் என்னோடு கூட வந்த நண்பர் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். Once againல் தனது மகளோடு இசை நிகழ்ச்சி கேட்கும் பெண் சட்டென்று உடைந்து அழுவாரே, அதைவிடவும் அதிகமாகவும். இவற்றுக்கெல்லாம் ஏன் என்று கேட்டால் அவர்களிடம் தெளிவான பதில் இருப்பதில்லை. ஆனால் நம் ஆழ்மனதின் எதையோ கலை தீண்டுகிறது. நாம் அதன் அலைவரிசைக்குப் போகும்போது நம்மை அறியாமலே நமக்குள் இறுக்கிப்பிடித்து வைத்திருக்கும் அழுத்தங்கள் கரைந்துபோகின்றன. நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சியைப் பெறுகின்றோம்.

வ்வாறே ஒருநாள் மழை பொழிவதும் விடுவதுமாக இருந்த இரவு வேளையில் கொச்சியிலிருந்த பிரின்ஸஸ் வீதியில் நடந்துகொண்டிருந்தேன். திண்ணை வைத்த சிறு காலரியில் நீண்ட தாடி வைத்த, வேட்டியை மடித்துக்கட்டிய ஒரு ஓவியர் தன்பாட்டில் பேசியபடி ஒரு பெரிய கான்வாஸில் வர்ணங்களை விசிறியபடி இருந்தார். நான் அவர் வரைவதை வெளி இருட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்க, எனது மனது என்னையறியாமலே எடையற்றுப் போய்க்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.அவரோடு பேச விரும்பியபோதும், அவர் தன் ஓவியத்தோடு தோய்ந்துவிட்ட அந்த மனோநிலையைக் குழப்பிவிடக்கூடாதென்ற கவனத்துடன் அவர் என்னைப் பார்க்கமுன்னரே விலத்திப் போயிருந்தேன்.

உண்மையாகவே கலையில் தோய்ந்த மனங்கள் தம்மை முன்னிறுத்துவதில்லை. தம் கண்களுக்குப் புலப்படாத யாருக்காவோ அவர்கள் வரைந்துகொண்டோ, இசைத்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்கின்றார்கள். அந்த அலைவரிசையை நாம் சரியாகக் கண்டுபிடிக்கும்போது அந்தக்கலை நமக்கான கலையாகவும் ஆகிவிடுகின்றது.

தொடுபுழாவில் நின்றபோது லெவின் என்றொரு நண்பரைச் சந்தித்திருந்தேன். மிகச் சுவாரசியமான மனிதர். எந்த விடயம் கேட்டாலும் அதுபற்றித் தெரிந்திருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தைச் சந்தித்து, அதன் விளைவுகள் உடனே தெரியாதுவிடினும் 6 மாதங்களின் பின் அது நரம்புகளைத் தாக்கியது அறிந்தபோது அவரது இரண்டு கால்களும் பாதிப்புற்றிருப்பது தெரிந்திருக்கிறது. அதனால் இப்போது நடப்பது என்பதே ஒரு பெரும் வேதனையான விடயம் அவர்க்கு. நாங்கள் 1 நிமிடத்தில் நடக்கும் தூரத்திற்கு அவருக்கு ஆகக்குறைந்தது 15-20 நிமிடங்களாவது எடுக்கும். ஒவ்வொரு அடியையும் மிக மெதுவாக எடுக்கவைக்கவேண்டும். எனினும் இவ்வாறு ஆகியதற்கு இப்போது கவலைப்படுவதில்லை எனச் சொல்லும் வாழ்வின் மீதான அளப்பெரும் காதல் கொண்டவர்.

ஏதோ ஒரு பேச்சின்போது கேரளாவில் முதன்முதலில் தமது தாத்தாதான் விதவையான பெண்ணை மறுமணம் செய்துகொண்டவர் என்றும் அதனால் தாம் ஊரிலிருந்து விலக்கப்பட்ட குடும்பம் எனவும் சொன்னார். இப்படிச் செய்ததால் அவரின் பாட்டியும், அவரின் தாத்தாவும் பெரும்பாலானோர்க்குக் கேரளாவில் தெரிந்தவர்கள் என்று அவர்களின் பெயரையும் ஊரையும் சொன்னார், நான்தான் இப்போது அவற்றை மறந்துவிட்டேன்.

நம்பூதிரிகளான அவருக்கு எப்படி லெவின் என்ற பெயரென இன்னொரு கேரள நண்பர் ஆச்சரியப்பட்டார். டால்ஸ்டாயின் அன்னா கரீனாவில் வரும் லெவின் பாதிப்பில் வைத்திருக்கலாமென நான் சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன். ஆம், டால்ஸ்டாயை வாசித்த தனது தாத்தாதான் அந்தப் பெயரைத் தனக்கு வைத்தார் என்று லெவின் சொன்னது இன்னொரு வியப்பு.
அவர்தான் கொச்சினில் நல்லதொரு பிரியாணிக்கடை சொல்லுங்கள் என்றபோது, Kayeesஐ கைகாட்டினார். அங்கே எப்போதும் சனம் குழுமிக்கொண்டிருந்தாலும், பிரியாணி தவிர்ந்து வேறு எந்த உணவும் இல்லை என்பது அந்தக் கடையின் சிறப்பு. ரூபாய் 150ற்கு வயிறு நிரம்பச் சாப்பிடுமளவுக்கு மட்டுமல்ல சுவையாகவும் இருந்தது.

'Oru Visheshapetta Biriyani Kissa' என்ற அண்மையில் வந்த மலையாளத் திரைப்படமும் பிரியாணி பற்றியே பேசுகின்றது. கோழிக்கோட்டிலிருக்கும் ஒரு மசூதியில் ஒவ்வொரு ஞாயிறும் ஒரு ஹாஜியார் இலவசமாக பிரியாணி வழங்குகின்றார். ஊரே அந்தப் பிரியாணிக்கு அடிமையாக இருக்கின்றது. ஊர்ப்பெரியவரான ஹாஜியார் தனது காலமான மனைவியின் பெயரில் இதைப் பல வருடங்களாகச் செய்துவருகின்றபோது, 20 வருடங்களுக்கு மேலாக அங்கே பிரியாணி செய்துகொண்டு இருக்கும் ராஜன் என்ற சமையல்காரர் மரணமடைய, தொடர்ந்து பிரியாணி வழங்குவதில் வரும் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படமிது. சில வெளிப்படையான குறைகள் இதிலிருந்தாலும் சிரித்தபடி பார்க்கலாம். இறுதியில் அந்தப் பிரியாணி வாசந்தான் ஒரு தற்கொலையைத் தடுக்கிறது, ஊர் மக்களைச் சேர்த்து வைக்கின்றது. முதிய/நடுத்தர வயதில் இருக்கும் இருவர்க்கிடையில் வரும் காதலை ஊருக்குப் புரிந்துகொள்ளவும் வைக்கின்றது.

கொச்சியில்  எழுந்தமானமாக உலாவிக்கொண்டிருந்தபோது Ginger House என்கின்ற மியூசியமும், உணவகும் சேர்ந்திருந்த இடத்துக்குள் நுழைந்திருந்தேன். மழை பொழிந்துகொண்டிருந்த காலம் என்பதால் சனங்கள் உள்ளே அவ்வளவாக இருக்கவில்லை. கப்பச்சினோவைப் பார்த்தபடி சொல்லிவிட்டு  சாம்பல் பூசிக் கிடந்த கடலைப் பார்த்தபடி இருந்தேன்.

புராதனமான பொருட்களை வைத்து இதை அழகுபடுத்தி இருந்தார்கள். அநேகமான பொருட்கள் மரத்தாலேயே செய்யப்பட்டிருந்தன. பிரமாண்டமான நடராஜர் சிலையை 1900களின் நடுப்பகுதியில் யாரோ ஒரு செட்டியார் கோயம்புத்தூரிலிருந்து கொச்சினிலிருந்த யாருக்கோ கொடுத்ததாக அதனடியில் பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே நீண்ட கப்பலும் அழகாகப் பராமரிக்கப்படுகின்றது. மிகுந்த மனோரதியத்தையும், அமைதியையும் தரக்கூடிய இடம்.

கொச்சிக்குப் போகின்றவர்கள் இதைத் தவறவிடக்கூடாது என்றால் எவரும் கேட்கப்போவதில்லை என்பதால் அண்மையில் வந்த செல்வராகவனின் NGK படத்தில் 'அன்பே பேரன்பே' பாட்டின் தொடக்கக்காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டிருக்கிறது, உங்கள் காதலிகளுடன் சென்று பாருங்கள் என்றால்தான் நம் தமிழ் மனதின் ஆழத்திற்குச் சென்று தைக்கும் என்பதால் அதையும் குறிப்பிட்டு விடுகின்றேன்.


துரையிலிருந்த ஆனைமலைக்குப் போவதற்கு என்று தீர்மானித்ததே முக்கியமாய் சமணச் சிற்பங்களைப் (மலையில் குடைந்திருக்கும் தீர்த்தங்கரர்களை) பார்ப்பற்காகவேயாகும். ஆனால் துயரம் என்னவென்றால் நாங்கள் போனபோது அதைப் பார்ப்பதற்குச் செல்லும் வழி பூட்டப்பட்டிருந்தது. சிலவேளைகளில் காலை என்பதால் பூட்டப்பட்டிருக்கலாம், அருகிலிருக்கும் நரசிங்கர் கோயிலை முதலில் பார்த்துவிட்டு வருவோம் என்று போனோம். திருமாலின் உக்கிரவடிவினரான நரசிங்கரைப் பாறையில் வைத்துச் செதுக்கியிருக்கின்றனர். நரசிங்கர் இருப்பது மாதிரி இந்த ஆனைமலையில் இன்னும் நிறைய குடகுக்கோயில்கள் இருப்பதாகவும் அதில் பெரும்பாலானவை சிவனுக்குரியவை என்றும் எங்கையோ வாசித்ததாக நினைவு.சைவமும், சமணமும் தளைத்தோங்கிய ஓரிடத்தில் வைஷ்ணவம் முக்கியமான அடையாளமாக இன்றையகாலத்தில் தன்னை நிலைநிறுத்தியிருப்பதன் வரலாற்றை மதுரையை முன்வைத்து வாசிப்பதுகூட ஒருவகையில் சுவாரசியமாக இருக்கக்கூடும்.

நரசிங்கரைப் பார்த்துவிட்டு வரும்போதும் சமணர் சிற்பங்களைப் பார்க்கும் வழி பூட்டப்பட்டிருந்தது. அருகிலிருந்தவர்களிடம் இது எப்போது திறக்கும் என்று விசாரித்தபோது, யாரோ ஒருவரிடம் திறப்பு இருக்கிறது, அவர் வந்தால்தான் திறப்பார் எனச் சொன்னார்கள். எங்களைக்கூட்டி வந்த வாகன சாரதி, சரி கள்ளழகர் கோயிலைப் பார்த்துவிட்டு திரும்பவும் மாட்டுத்தாவணிக்குப் போகும்போது பார்க்கலாம் என்றார். கள்ளழகரையும், பழமுதிர்ச்சோலை முருகனையும் பார்த்துவிட்டுத் திரும்பியபோதும் அது பூட்டப்பட்டிருந்தது. எனக்கு வந்த ஏமாற்றத்தில், நான் அந்தச் சாரதி அண்ணாவிடம், படலை ஏறித் தாண்டிப் போய்ப் பார்க்கட்டா எனக் கேட்டேன் (படலை தாண்டினாலும் ஒரு அரைமணித்தியாலம் மேலே ஏறினால்தான் அந்தச் சிற்பங்கள் வரும்). இறுதிவரை அங்கிருந்த மகாவீரரையோ, பார்சுவ நாதரையோ, அம்பிகாவையோ பார்க்க முடியாது போனதில் கவலையாகவே இருந்தது.

அதுபோலவே திருமலைநாயக்கர் மஹாலைப் பற்றி வாசித்தும், திரைப்படங்களில் பார்த்தும் மிகப்பெரும் கனவுகளுடன் அங்கே போயிருந்தேன். ஒரளவு கவனமாகப் பராமரித்தாலும் முதன்மை மண்டபத்தில் புறாக்களின் அட்டகாசத்தால் எந்த இடத்திலும் கால் வைக்கமுடியாது இருந்தது. இத்தனைக்கும்  அங்கே துப்பரவு செய்து தொழிலார்கள் அடிக்கடி அதைச் சுத்தப்படுத்தியபடியே இருந்தார்கள். வெளியில் நிறையச் சிலைகள் உடைந்த/உடைக்கப்பட்ட நிலையில் வெயிலில் வாடிக்கொண்டிருக்கையில் நமக்குப் புராதனங்கள் மீது எவ்வளவு 'அக்கறை' என்பது விளங்கியது. உள்ளேயிருந்த ஒரு மண்டபம் மட்டுமே அருமையாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

சென்னையிற்கு வந்து நின்றபோது, தங்கி நின்ற விடுதியில் அருகில் இருக்கும் இடங்களைப் பார்க்க, நடந்துபோயிருந்தேன். அப்படி உலாப்போனபோது ஏதாவது சுவாரசியமான இடம் இருக்கா என்று தேடியபோது 10 downing street pub இருப்பதாய் கூகிள் ஐயா கூறினார். அட இது நமது சாரு அடிக்கடி போகும் இடமாயிற்றே, அங்கே அவரைச் சந்திக்க முடியாவிட்டால் கூட, நாயோடு நடையுலா வரும் த்ரிஷாவையாவது தற்செயலாகச் சந்திக்கலாம் என்ற பேராசையுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் போனேன். துயரம் என்னவென்றால் அந்த இடத்தைச் சுற்று சுற்றிப் பார்த்தபோதும் அது எங்கையோ மறைந்து போயிருந்தது. அருகிலிருந்த மசூதியை, அப்படியே அதற்கருகில் இருந்த தெருக்களில் தொலைந்து குறுகிய 'சந்து'களுக்குள்ளால் போய் ஒரு சிறுதெய்வக் கோயிலை எல்லாம் பார்த்தேன். ஆனால் 10 downing pub மட்டும் drowning ஆகிவிட்டது.

பிறகு திரும்பும் வழியில் 'தானியம்' இயற்கை அங்காடியைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளே போய்ப்பார்த்தபோதுதான், இந்த 'கருப்பட்டி கடலை மிட்டயை'ப் பார்த்தேன். இதை அறிமுகப்படுத்திய ஸ்டாலினையும் (குக்கூ ஊடாகவோ அல்லது ஜெயமோகனின் தளத்தின் ஊடாகவோ, எதுவென மறந்துவிட்டேன்), அவர் தன் பொறியியல் தொழிலை விட்டுவிட்டு தனக்குப் பிடித்த விடயமான பனங்கருப்பட்டித் தயாரிப்புக்குத் திரும்பியதையும் வாசித்திருந்தேன்.

வாழ்விலும் (முகநூலிலும்) நிறைய எதிர்மறைகளைப் பார்த்தது, இப்போது அவற்றை இயன்றவரை விலத்தி வரப் பிரயத்தனம் செய்பவன் என்றவகையில் ஸ்டாலின் போன்றவர்களும், நேர்மறையாக வாழ்வைத் தரிசிக்க விரும்பும் அவர்களின் விடாமுயற்சிகளும் வசீகரிக்கின்றன.

--------------------------------------------------------------

நன்றி: 'அம்ருதா' ‍ ஆவணி, 2019

No comments:

Post a Comment