A.I ஐயும், எமது போராட்டங்களும்..
**


தொலைதூரத்தில் வசிக்கும் நண்பர் எனது 'பராசக்தி' கட்டுரையை வாசித்திருக்கின்றார். அவர் அதன் பிறகு அந்தக் கட்டுரை குறித்து ஏ.ஐயோடு உரையாடியிருக்கின்றார்.

அவரின் ஒரு கேள்வி சுவாரசியமானது.

தமிழகத்தைப் போல இலங்கையில் நமக்கு ஒரு அண்ணாத்துரை இருந்திருந்தால், தமிழகம் போல ஒரு சுயநிர்ணயமுள்ள மாநிலமாக நாம் மாறியிருப்போமா என்று.

அவர் பெற்ற பதிலை இங்கே பகிர முன்னர், ஏஐ என்பது தரவுகளில் (data) மிகப் பெருமளவு தங்கியிருக்கும் என்கின்ற எளிய உண்மை நமக்குத் தெரிந்திருக்கும். அந்தத் தரவுகள் பல்வேறு வகை neural networks மூலம் ஊட்டப்படுவது என்பதையும் ஒரு புரிதலுக்காக ஞாபகம் வைத்திருப்போம்.

Uploaded Image


எனது பல்கலைக்கழக பொறியியல் இறுதியாண்டில் என் final project இந்த neural networks என்பதும், அந்த இழையைப் பிடித்துத் தொடர்ந்து போயிருந்தால் நான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருப்பேனா என்ற துயரக்கதைக்கு உங்களை இப்போது அழைத்துச் செல்லப் போவதில்லை.

எனக்கு இங்கொரு நண்பர் இருக்கின்றார். அவருக்குப் புலிகளைப் பிடிப்பதில்லை. அவர் போராட்டத்தின் நிமித்தம் வந்து சேர்ந்த பாதையின் அடிப்படையில் அதை என்னால் புரிந்துகொள்ளவும் முடியும். அவருக்கு ஏஐ மீது அவ்வளவு காதல். இலவச ஏஐகளை மட்டுமில்லை, காசு கொடுத்து பிறிமியம் ஏஐ சேவைகளைப் பெறுகின்றவளவுக்கு அதில் அவருக்குப் பைத்தியம்.

அவர் தினமும் ஏஐயோடு பேசிக் கொண்டிருப்பவர். அவருடைய முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருப்பது இந்த ஏஜக்களை எப்படியேனும் 'பாஸிசப் புலிகள்' என்று சொல்ல வைக்க வேண்டும் என்பது.

அவர் எப்படி விதம் விதமாகக் கேள்விகள் கேட்டு ஏஐயை மடக்கினாலும், அதன் எல்லை புலிகள் பயங்கரவாதிகள் வரை போகின்றதே தவிர பாஸிசப் புலிகள் என்ற சிகரத்தை அடைவதில்லை. இதை அவரே பலமுறை எனக்குச் சொல்லியிருக்கின்றார்.

புலிகள் பாஸிசக்காரர்களோ, தீவிரவாதிகளோ, புரட்சியாளர்களோ எவராக இருந்தாலும், ஏஐ அதற்கு ஊட்டப்பட்ட தரவுகளை வைத்துத்தான் அதனால் பதிலளிக்க முடியும். உதாரணத்திற்கு பெருமளவு தரவுகள், புலிகள் போராளிகள் என்று சொல்லப்பட்ட கட்டுரைகளினூடாக எடுக்கப்பட்டிருந்தால், அது அதை வைத்துத்தான் உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் ('தரவு'களே மாபெரும் செல்வம்).

இந்த 'பாஸிஸப் புலி' நண்பரோ புலிகள் போராளிகள் என்று தொடக்கத்தில் ஏஜ சொல்ல, புலிகள் இங்கே குண்டு வைத்தார்கள், இப்படி மக்களைக் கொலை செய்தார்கள் என்று கேள்வி கேட்டு மடக்கி பாஸிசப் புலிகள் என்று சொல்ல வைக்க முயற்சித்திருக்கின்றார். ஆனால் நண்பரால் வெற்றி காணமுடியவில்லை. இதை எழுதும் இந்தக் கணத்தில் கூட அவர் மனந்தளராத வேதாளம் போல ஏஐ என்னும் விக்கிரமாதித்தனோடு போராடிக் கொண்டிருக்கலாம்.

*

இப்போது மீண்டும் பராசக்தி விடயத்துக்கு, இலங்கையில் அண்ணாத்துரை நமது போராட்டத்தை 50/60களில் தலைமை தாங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற விடயத்துக்கு வருவோம். இந்தக் கேள்வியைக் கேட்ட நண்பருக்கு ஏஐ, 'அதனால் “அண்ணாத்துரை முறை” வெற்றியின் வாய்ப்பை உயர்த்தக் கூடும்; ஆனால் இந்த கட்டமைப்பு கட்டுப்பாடுகளை முழுமையாக அகற்ற முடியாது" என்று முடிவைக் கொடுத்திருக்கின்றது. அதாவது இலங்கையில் ஒரு அண்ணாத்துரை இருந்திருந்தாலும் பெரிதாக மாற்றம் வந்திருக்காது என்பது ஏஐயின் பதில்.

 ஏனெனில் இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி (Unitary) முறை, இந்தியாவில் இருப்பதோ கூட்டாட்சி (Federal) முறை என்று, ஏஐ தான் வந்திருக்கும் முடிவுக்கு ஆதரவாக சான்றுகளைக் கொடுத்திருக்கின்றது.

நான் சொல்வது, அந்த ஒற்றையாட்சி முறையை நாம் எமது 50களின் நடத்திய போராட்டங்களால் காலப்போக்கில் வேறு வகையில் மாற்றியிருக்க முடியும் என்பதை. 1987 இலங்கை- இந்திய ஒப்பந்தம், வரலாற்றுரீதியாக தமிழ்பேசும் மக்கள் வாழும் தாயகம் என்று இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை அங்கீகரித்து, இரண்டையும் இணைத்து இதற்கென ஒரு முதலமைச்சரையும், அமைச்சர்களையும் உருவாக்கியிருந்தது. இதன் மூலம் காணி, கல்வி, பொலிஸ் போன்ற அதிகாரங்களையும் இந்த வடகிழக்கு மாகாணசபைக்கு 13வது சட்டதிருத்தம் (13th Amendment)  மூலம் வழங்கியது.

அதை நடைமுறைப்படுத்துவதில் சாத்தியம் இருந்ததா இல்லையா என்பதைவிட, இந்த பதின்மூன்றாவது சட்டதிருத்தம் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு சென்றிடக்கூடிய ஒரு வழியாகும்.

இந்தியா சுதந்திரமடைந்ததன் (1947) பிறகும் பல்வேறு சமஸ்தானங்கள் இயங்கியபோதும், மொழிவாரிச் சட்டதிருத்தம் கொண்டு வந்தபோதே, தமிழ்நாடு, ஆந்திரா கர்னாடகா, கேரளா என்று மொழிவழி மாநிலங்கள் உருவாகியிருந்தன. அவ்வாறே சிலவேளைகளில் இந்த 1987இல் வடக்கும் கிழக்கும் இணைந்த 13வது சட்டதிருத்தம் சரியாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கையின் பல மாகாணங்கள் தமக்கான பொலிஸ்/காணி/கல்வி போன்றவற்றுக்கான தமக்கான தனி அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.

Uploaded Image

நமது ஈழத்து அரசியல் ஆய்வாளர்கள் அடிக்கடி உதாரணம் காட்டும் சுவிஸ் நாட்டைப் போலவும் நாம் ஆகியிருப்போம். சுவிஸில் ஒவ்வொரு கந்தோனும் (மாநிலமும்), அங்கே டொச், இத்தாலியன், பிரெஞ்ச் பேசும் மக்கள் எவர் அதிகம் வசிக்கின்றார்களோ, அதுவே முதல் மொழியாகவும், மற்ற மொழிகள் இணைப்பு மொழியாகவும் கற்பிக்கப்படுவதை நாமறிவோம்.

இலங்கையை விட மிகச் சிறிய நாடான சுவிஸிலே இப்படி டொச், இத்தாலியன், பிரெஞ்ச் மொழிவாரி மாநிலங்கள் இருக்கும்போது, நமது நாட்டில் சிங்களமும், தமிழும் மட்டுமே பூர்வீக மக்களின் பேசுமொழியாக இருக்கையில் எவ்வளவு எளிதாக அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கலாம். மேலும் இவ்வாறு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வரும்போது மத்தியில் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி,சர்வதிகாரமும் பொருந்திய ஒருவராக இல்லாது போகும் நிலைமையும் எளிதில் ஏற்பட்டிருக்கும்.

*
இப்போது ஏஐ யிடம் வருவோம். எனது நண்பர் 'அண்ணாத்துரை இலங்கையில் பிறந்திருந்தால்?' என்ற கேள்விக்கு இப்படி ஒரு பதிலைத் தந்ததுபோல நாம் வேறொரு கேள்வியை ஏஐயிடம் கேட்டுப் பார்க்கலாம்.

ஒரு ஃபிடல் காஸ்ரோ இலங்கையில் பிறந்து தமிழர் ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்தால், என்ன நடந்திருக்கும்? என வினாவினால் என்ன பதில் வந்திருக்கும். நான் ஏஐயிடம் போகப் போவதில்லை. நாமாக சும்மா யோசித்துப் பார்ப்போம்.

ஃபிடல் கியூபாப் புரட்சியை வென்றதால், அவர் இலங்கையில் நமது ஆயுதப் போராட்டத்தை வென்று தந்திருப்பார் என்று சொல்லுமா? அல்லது இலங்கையின் தமிழர் சனத்தொகை, வாழிட நிலப்பரப்பு என்பவற்றைக் கணக்கில் கொண்டு இது வெல்ல முடியாத ஆயுதப் போராட்டம் என்று சொல்லியிருக்குமா? இதை வாசிக்கும் நீங்கள் ஏஐயிடம் உதவிகோராது ஒரு பதிலைச் சொல்லிப் பாருங்கள்.

அவ்வளவு அதிகம் தூரம் போகப் போகவில்லை, கியூபாப் புரட்சியில் ஒரு சர்வதேசப் போராளி நட்சத்திரமாக மாறிய சே குவேரா, ஏன் கொங்கோவிலோ, பொலிவியாவிலோ தோற்றுப் போனார் என்று கேட்டுப் பார்த்தால் நமக்குப் பதில்கள் கிடைக்கலாம்.

ஏஐ என்பது எப்போதும் நடக்கச் சாத்தியமுள்ள விடைகளை நமக்குத் தரலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு இலங்கையில் நாம் புரட்சியொன்றை நடத்தப் போகின்றோம், அது வெல்வதற்கு சாத்தியமுள்ள அதியுயர் பெறுபேற்றைத் தருக என்று ஏஜயிடம் கேட்டால் அது கடந்தகால தரவுகளை வைத்து, மிகுந்த accuracy யோடு ஒரு பதிலைத் தரும். அதை வைத்துக் கொண்டு ஒரு புரட்சியைச் செய்தால் நாம் வென்றுவிடமுடியுமா என்ன? கள நிலவரம் வேறு வகையானது. அதைத் தரவுகளை மட்டும் வைத்து நிர்ணயிக்க முடியாது.

அண்மைய இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். அமெரிக்க இராணுவம் வெனிசுவேலாவில் தாக்குதலை நடத்தியபோது அது குறித்து ஏஜயிடம் டிரம்ப் அங்கிள் கேள்வி கேட்டிருந்தால், அது நிச்சயம் நீங்கள் தாக்குதல் நடத்தி வெனிசுலேவாவின் ஜனாதிபதியை பணயக்கைதியாக கடத்தி வருவதாய் இருப்பின், உங்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றுதான் தரவுகளை வைத்துச் சொல்லியிருக்கும். ஆனால் இத்தாக்குதலில் கிட்டத்தட்ட  நூறுபேர் கொல்லப்பட்டும் அமெரிக்கத் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவே இல்லை.

இத்தனைக்கும் வெனிசுவேலாவில் உயிரிழந்தவர்களில் வெனிசுவேலா ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள்தான் அதிகம்.  இப்படி எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாமல் அமெரிக்கக்காரர்கள் தப்பினார்கள் என்பதை ஏஜ கூட -அதன் தரவுகளை வைத்து- நம்பியிருக்காது. ஆனால் கள யதார்த்தம் இப்படியும் நடக்கலாம் என்பதை நிரூபித்திருக்கின்றது.

*

 ஃபிடல் காஸ்ரோ முதல் புரட்சியின்போது  கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட பின்னர்  விடுதலையாகி, இரண்டாம் புரட்சியின் போது வென்றவர். இதேமாதிரி இலங்கையில் ஜேவிபியின் தலைவர் றோகண விஜயவீரா முதல் 'சேகுவராப் புரட்சி'யின்போது கைதுசெய்யப்பட்டு விடுதலையானவர். இரண்டாம்முறை அதே புரட்சியைச் செய்யப்போய் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்.

சிலவேளை றோகண விஜயவீரா, முதல் புரட்சியில் கைதாகி விடுதலையானவுடன், நமது ஏஜக்கு (ஃபிடல் காஸ்ரோ புரட்சி முறை) ஊட்டப்பட்டு இருந்தால், 'தோழரே சென்று வருக, இப்படித்தான் ஃபிடல் முதலில் சிறைக்குப் போய் இரண்டாம் புரட்சியில் வாகை சூடியவர். உங்களுக்கும் வெற்றி நிச்சயம்' என்றுதான் ஏஜ அனுப்பி வைத்திருக்கும்.  ஆனால் நடந்ததுதான் என்ன?

***
ஓவியம்: பிருந்தாஜினி