Friday, February 28, 2025

கார்காலக் குறிப்புகள் - 76

 

யுவான் ரூல்ஃபோவின் 'தங்கச் சேவல்' (The Golden Cockerel)
*********************

1.

எனது சிறுவயதுகளில் எங்களின் மாமா ஆட்டுக் கிடாய்களை வளர்த்துக் கொண்டிருந்தார். அவை என்னை விட உயரமாகவும், திடமாகவும் மட்டுமின்றி, கிட்டே போனால் அதன் கொம்புகளால் என்னை முட்டி வீழ்த்திவிடும் மூர்க்கத்தோடு இருக்கும். இந்தக் கிடாய்கள் கோயில் வேள்விகளுக்கு வெட்டுவதற்கென வளர்க்கப்பட்டன என்பதை பிறகான காலங்களில் அறிந்தேன். எனது குழந்தைப் பருவத்தில் விடுதலை இயக்கங்கள் வைத்ததே சட்டம் என்று இருந்ததால் அன்று வேள்விகள் கோயில்களில் தடை செய்யப்பட்டதாக இருந்தது. என்கின்றபோதும் இரகசியமாக வேள்விகள் நடந்து கொண்டிருந்தன; மாமா கிடாய்களை அவற்றின் பொருட்டு இன்னும் இரகசியமாக வளர்த்துக் கொண்டிருந்தார்.

மாமாவின் வீட்டில் கிடாய்களை இந்தளவு கம்பீரமாகப் பார்த்தது போல, அவர் வளர்த்துக்கொண்டிருந்த சேவல்களையும் நான் ஊரில் எந்த வீட்டிலும் பார்க்காதவை. அந்தச் சேவல்கள் அவ்வளவு உயர்ந்தவையாகவும், பல்வேறு வர்ணங்களிலும் இருந்தன. அவற்றின் தனித்துவத்தை உணர்ந்து வியந்தபோது அம்மா இவை சண்டைகளுக்காக வளர்க்கப்படும் சேவல்கள் என்று சொல்லியிருக்கின்றார். அம்மாவின் இளமைக்காலத்தில் சேவல் சண்டைகள் இயல்பாக நடந்திருக்க வேண்டும். அங்கேயும் இரகசியமாக சேவல்களின் செட்டையில் பிளேட்டுக்களையும், சிறுகத்திகளையும் செருகி எதிராளிச் சேவல்களை தோற்கடிக்கும் கதைகளை அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது அறிதலின்படி எமது ஊர்களில் ஆயுதங்கள் எதுவும் செருகப்படாது இயல்பான சேவல்ச் சண்டைகள்தான் நடந்திருக்க வேண்டும்.

இந்த நினைவுகள் அனைத்தும் யுவான் ரூல்ஃபோவின் 'தங்கச் சேவலை' (The Golden Cockerel) வாசிக்கும்போது வந்து போயின. யுவான் இந்த நாவலை 1958 இல் எழுதிவிட்டார். ஆனால் இது ஸ்பானிஷில் 1980 இல் பதிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அண்மையில் (2017) வெளிவந்திருந்தது.

'தங்கச் சேவல்' நாவல் மெக்ஸிக்கோ புரட்சி நடந்த பத்தாண்டுகளில் நடக்கின்ற கதை. மிக வறிய நிலையில் வாழும் டியோனிஸியோ (Dionisio Pinzon) முக்கிய பாத்திரம். டியோனிஸியோவும் (டியோ) அவரது சுகவீனமுற்ற தாயும் பட்டினியில் உழல்கின்றார்கள். இவர்களின் ஊரில் செய்வதற்கு எந்தத் தொழில்களும் இல்லை. வயல்களில் வேலை செய்வதென்றாலும் டியோனிஸியோவுக்கு பிறந்ததிலிருந்தே கையொன்று சரியாக இயங்காதிருப்பதால் அதுவும் முடியாதிருக்கின்றது.

டியோவின் வேலையாக அவரின் ஊரில் ஒரு மாடோ, ஒரு குழந்தையோ அல்லது ஒரு பெண்ணோ காணாமற் போகும்போது, அதை ஊர்களின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அறிவிப்பதாகும். அப்படி அறிவிப்புக்களைச் செய்தால் கூட தொலைந்துவிட்ட மாடுகள் திரும்பக் கண்டுபிடிக்கப்படாதவிடத்து டியோவிற்கு யாரும் அவர் செய்யும் வேலைக்காக பணம் கொடுப்பதுமில்லை.

இவ்வாறான அறிவிப்புக்களை மட்டுமின்றி அப்போது மெக்ஸிக்கோவில் பிரபல்யமாக இருந்த சூதாட்டம், காளை அடக்குதல், சேவல் சண்டைகள் போன்றவை நடக்கும்போதும் அது குறித்த அறிவித்தல்களைச் செய்கின்றவனாக டியோ இருக்கின்றான். ஒரு சேவல் சண்டையின்போது அறிவித்தல் கொடுத்தபடி இருக்கும்போது, சேவலொன்று காயமுற்றுத் தோற்கின்றது. அதன் சொந்தக்காரர் அந்த ஒரு பக்க செட்டை முறிந்த சேவலைக் கொல்லச் சொல்கின்றார். அப்போது குறுக்கிடும் டியோ அதை அப்படியே உயிரோடு தனக்குத் தரும்படி வேண்டுகின்றான். அவ்வாறு டியோவிடம் வந்து சேர்வதே இந்த தங்கச் சேவல்.

2.

டியோ காயமுற்று சேவலை மண்ணில் புதைத்து வைத்து காப்பாற்றி விடுகின்றான். சேவல் கொஞ்சம் கொஞ்சமாக காயமாறும்போது அவனது சுகவீனமுற்ற தாய் இறந்துவிடுகின்றார். தனது தாய் இந்தச் சேவலை குணப்படுத்தவே அவரின் உயிரை விட்டிருக்கின்றார் என டியோ நம்புகின்றேன். தாயை உரிய முறையில் நல்லதொரு சவப்பெட்டியில் கொண்டுபோய் புதைக்கக்கூட டியோவிடம் வசதியில்லை. எங்கோ தெருவில் கொல்லப்பட்ட விலங்கை ஏதோ ஒரு கடதாசிப் பெட்டியில் கொண்டுபோய் புதைப்பதுபோல தாயைக் காவிக்கொண்டு டியோ செல்கின்றான் என ஊர் மக்கள் கேலி செய்கின்றனர்.

இருக்கும் வறுமையோடு, இந்த அவமானமும் சேர்ந்து கொள்ள, இனி இந்த ஊருக்கு ஒருபோதும் திரும்புவதில்லையென டியோ தனது தங்கச் சேவலுடன் புறப்படுகின்றான். வெவ்வேறு ஊர்களில் நடக்கும் சேவல் சண்டைகளில் இந்தத் தங்கச் சேவல் வெற்றி பெற, அதன்மூலம் தன் வாழ்க்கையை நடத்திச் சென்றபடி இருக்கின்றான் டியோ.

அப்போதுதான் பெர்னார்டாவை, டியோ சந்திக்கின்றான். பெர்னாடா கோழிச்சண்டைகளின் இடைவெளிகளில் பாடுகின்ற முக்கிய பாடகி. இனிமையான குரலைக் கொண்டவள் மட்டுமின்றி டியோவை வசீகரிக்கின்ற அழகியும் கூட. அவளின் அழகில் கிறங்கினாலும், பெர்னாடாவின் வசதிக்கு முன் தான் எதுவுமில்லை என டியோ நினைக்கின்றான். அப்போதுதான் பெர்னாடா ஒரு 'டீலுக்கு' டியோவை அணுகின்றான். உனது தங்கச் சேவலை எங்களுக்குத் தந்துவிடு, உனக்கு 1,500 பெஸோக்கள் தருகின்றேன் என்கின்றாள்.

டியோவோ, இது எனக்கு வெற்றிகள் குவித்துத் தருகின்ற அதிஷ்ட சேவல், இதை ஒருபோதும் விற்கும் எண்ணமில்லை என்கின்றான். பெர்னாடவோ, 'நான் சொல்வதைக் கேள், இன்னும் கொஞ்சக் காலங்களில் நீ இதை இழப்பாய்' என்று 'ஆருடம்' கூறுகின்றாள்.

அந்தக் காலங்களில் பெர்னாடா, லோரென்ஸோ என்கின்ற மிகப் பெரும் சேவல் சண்டைக்காரனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றாள். அவனே பெர்னாடாவை தங்கச் சேவலை வாங்க டியோவிடம் அனுப்புகின்றான்.

இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில், டியோ தனது ஒரே சொத்தான தங்கச் சேவலை சண்டையொன்றில் இழக்கின்றான். சேவல் சண்டையின் இடைநடுவில் தோற்கும் தனது தங்கச் சேவலைக் காப்பாற்றிவிடலாம் என்று டியோ நினைக்கின்றபோது தங்கச் சேவலை, மற்றச் சேவல் ஆக்ரோஷமாக வெட்டிக் கொன்றுவிடுகின்றது. மெக்ஸிக்கோவின் சேவல் சண்டைகள் மிகுந்த வன்முறையானது. சேவல்களின் செட்டைகளில் கத்தியைச் செருகி நடக்கின்ற இரத்தச் சகதிச் சண்டைகள் அவை.

தனக்கு வருமானத்தைத் தந்து கொண்டிருந்த தங்கச் சேவலை இழந்த துயரத்தோடு மீண்டும் ஊருக்குத் திரும்பும் யோசனையில் இருக்கின்றான் டியோ. தங்கச்சேவல் பல போட்டிகளில் வென்று பணம் நன்கு புழங்கிய காலத்தில் ஒருமுறை டியோ தனது ஊருக்குச் சென்றிருக்கின்றான். தான் ஊரை விட்டு வரும்போது தனது தாயாரை உரிய மரியாதையின்றிப் புதைத்ததால்
, ஆடம்பரம் மிகுந்த சவப்பெட்டியை வாங்கிவந்து அதில் தனது தாயைப் புதைக்க விரும்புகின்றான். அப்படி புதைக்கப்படும்போது தாய் இறப்பின் பின்னாவது நிம்மதியாக உறங்குவார் என டியோ நம்புகின்றான்.

ஆனால் ஊர் மதகுருவும், மேயரும் புதைக்கப்பட்ட இறந்த உடலை மீண்டும் தோண்டியெடுத்தல் வழக்கத்தில் இல்லை என்று உறுதியாக மறுக்கின்றனர். இதனால் கோபமடையும் டியோ, நான் இலஞ்சம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி தாயை மீண்டும் தோண்டியெடுப்பேன் என்கின்றான். டியோவும், மற்றவர்களும் தோண்டியபோதும் தாயின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டியோ தனது தாயைப் புதைக்கும்போது எந்த நினைவிடத்தையோ, சிலுவையையோ அடையாளத்துக்கு அங்கு வைக்கவில்லை. டியோ ஏமாற்றத்துடன் வாங்கிய அந்தச் சவப்பெட்டியோடு திரும்புகின்றான்.

3.

இப்போது தங்கச் சேவலும் இறந்தபின் என்ன செய்வதென்று திகைத்தபோது மீண்டும் பெர்னாடாவைச் சந்திக்கின்றான். பெர்னாடா அவனுக்கு கொஞ்சம் காசு கொடுத்து இந்த சீட்டு இலக்கங்களைச் சொல்லென்று சூதாட்டத்துக்கு அழைத்துச் செல்கின்றாள். டியோவோ நான் தோற்றால் உனக்குத் தருவதற்கு எந்தப் பணமும் என்னிடமும் இல்லையென்கின்றான். 'நீ ஆடு, நிச்சயம் வெல்வாய்' என்கின்றாள் பெர்னாடா. அவன் அந்த ஆட்டத்தில் நிறையப் பணத்தை வெல்கின்றான்.

பெர்னாடாவும், அவளின் காதலனுமாகிய லோரென்ஸியோவும் தங்களோடு டியோவை வேலை செய்யக் கேட்கின்றார்கள். உண்மையில் லோரென்ஸியோவும், பெர்னடாவும் இந்த சேவல்ச்சண்டைகளையும், சூதாட்டங்களையும் பின்னணியில் இருந்து தீர்மானிக்கும் (fix) சூதாட்டக்காரர்கள். இதனால்தான் அந்தச் சூதாட்டத்தில் டியோ வெல்கின்றான். அவ்வாறே அவர்கள் சேவல் சண்டைகளையும் எந்தச் சேவல் வெல்லும் என்றும் முன்னரே தீர்மானிப்பவர்கள். அதற்கேற்ப எதிர்த்தரப்பு எப்படி சிறந்த சண்டைக்கோழியாக இறக்கியிருந்தாலும், திட்டமிட்டு அதைத் தோற்கடிக்கக்கூடிய சூதனமான சூதாட்டக்காரர்கள்.

டியோ, இவ்வளவு பேர் இருக்க என்னை ஏன் தேர்ந்தெடுக்கின்றீர்கள் எனக் கேட்கின்றான். யாரோ ஒருவரைத் தேர்தெடுக்கவேண்டும் அல்லவா? அப்படியான ஒரு அதிஷ்டக்காரன் நீ என்கின்றாள் பெர்னாடா. பிறகான காலங்களில் பெர்னாடா வெவ்வேறு ஊர்களில் பாட, டியோ சேவல் சண்டைகளில் -முன்னரே வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு சூதாடியாக - சேவல்களைக் கொண்டலையும் ஒருவனாகவும் மாறுகின்றான்.

இவ்வாறு ஒவ்வொரு ஊர் ஊராக அலையும்போது இவர்களின் முதலாளியான சேவல் சண்டைக்காரனான லொரென்ஸியோ ஒரு பெரும் வீட்டில் தங்கிவிடுகின்றான். ஒருகட்டத்தில் டியோ, பெர்னாடாவிடம் தன்னைத் திருமணம் செய்யக் கேட்கின்றான். பெர்னாடாவோ தான் அலைந்து திரிபவள், இதற்கு முன்னரும் பல ஆண்கள் கேட்டிருக்கின்றனர், எனக்குத் திருமணம் செய்து ஓரிடத்தில் இருப்பது பிடிக்காது என்கின்றாள். இல்லை, நீ என்னைத் திருமணம் செய்தாலும் இதே மாதிரி ஓரிடத்தில் இருக்காது நாம் அலைந்து கொண்டிருக்கலாம் என்று டியோ உறுதி செய்கின்றான்.

திருமணம் நடக்கின்றது. பெர்னாடாவை அருகில் வைத்திருப்பதால் டியோ சேவல் சண்டைகளில் மட்டுமில்லை, சூதாடுவதிலும் வெற்றிகளைக் குவித்தபடி இருக்கின்றான். அவள் அந்தளவுக்கு ஒரு அதிஷ்டக்காரியாக டியோவுக்கு இருக்கின்றான். இப்போது அவர்களுக்கு பத்து வயது மகளும் இருக்கின்றாள். ஒருமுறை இவர்களின் முதலாளியான லொரென்ஸியோவின் மாளிகையைக் கடந்து போகையில் அவனைச் சந்திக்கின்றனர்.

லொரென்ஸியோ இப்போது நடக்கமுடியாது சக்கர நாற்காலியில் வாழ்வைக் கஷ்டப்பட்டுக் கழிக்கின்றான். அந்த இரவில் டியோவும்
, லொரென்ஸியோவும் சூதாடுகின்றனர். லொரென்ஸியோ ஒவ்வொன்றாக இழந்து இறுதியில் அவன் இருக்கும் மாளிகையும் இழக்கின்றான். சூதாடுவதற்கு எதுவும் இல்லாதபோது எல்லாவற்றையும் நீ எடுத்துக் கொள் என்று டியோவிடம் லொரென்ஸியோ சொல்கின்றான். இது அசலான ஆட்டமில்லை, அத்தோடு நீங்கள் என் வாழ்வை வளப்படுத்தியவர் மட்டுமில்லை, இந்த ஆட்டங்களின் சூதுகளையும் எனக்குக் கற்றுத்தந்தவர், நான் இந்த மாளிகையை எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்கின்றான் டியோ.

இல்லை, இது அசலான ஒரு சூதாட்டம். இப்படி தோற்றபின் உனக்கு நான் சூது வைத்து ஆடியதைத் தரவில்லை என்றால் எனது தந்தை கூட என்னை மன்னிக்கமாட்டார். நீயே அனைத்தும் எடுத்துக் கொள் என்கின்றான் லொரென்ஸியோ. மேலும், 'நீ, நான் தான் உனக்கு அனைத்தையும் செய்தது என்கின்றாய், அது தவறு. You owe everything to this filthy bruja!' என்று கோபத்தோடு பெர்னாடோவைச் சுட்டிகாட்டிவிட்டு லொரென்ஸியோ போய்விடுகின்றான். ஏனெனில் எப்போது பெர்னாடா லொரென்ஸியோவைக் கைவிட்டுப் போனாளோ, அப்போதே அவனின் அதிஷ்டம் இல்லாமற் போய்விட்டிருந்தது.

4.

காலங்கள் கடந்தபடி இருக்கின்றன. டியோவுக்குத் தொடர்ந்து அலைந்தபடி இருப்பதில் அலுப்பு வருகின்றது. லொரென்ஸியோ இறந்தபின்
, டியோ பெர்னாடாவைக் கூட்டிக்கொண்டுபோய் அந்த மாளிகைக்கு வாழப் போகின்றான். அங்கேயே வைத்து சூதாட்டங்களை நடத்துகின்றான். மிகப் பெரும் செல்வந்தர்கள் அந்த மாளிகையில் தங்கி இருந்து இரவிரவாக சூதாடுகின்றனர். பெர்னாடா டியோவின் அதிஷ்டதேவதை என்பதால், அவளை சூதாட்டம் ஆடும்போது தன் கண்பார்வையிலே டியோ வைத்துக் கொள்கின்றான்.

ஆனால் பெர்னாடாவிற்கோ இந்த வாழ்க்கை அலுக்கின்றது. அலைந்து திரிவதில் பெரு விருப்பமும், பாடுவதில் தன்னைக் கண்டுபிடிப்பவளுமான பெர்னாடா ஒருநாள் சொல்லிக் கொள்ளாமல் இந்த வீட்டிலிருந்து போய்விடுகின்றாள். டியோ, பெர்னாடா எப்படி தன் குழந்தையோடு போய் பிழைத்துக் கொள்வாள், எப்படியேனும் திரும்பி வந்துவிடுவாள் என்று அவளைத் தேடிப் போகாது இருந்துவிடுகின்றான். ஆனால் சூதாட்டத்தில் பெர்னாடா இல்லாததால் அவனின் அதிஷ்டம் போய், தொடர்ந்து தோற்கத் தொடங்குகின்றான்.

சில காலத்துக்குப் பிறகு டியோவின் நண்பன் பெர்னாடாவை ஓர் ஊரில் காண்கின்றாள். பெர்னாடா எவ்வித சோகமும் இல்லாது அவ்வளவு சந்தோசமாக இருக்கின்றாள். எனக்கு இந்த மகள் மட்டுமில்லை என்றால், நான் டியோவைக் கூட நினைத்துக் கொள்ளமாட்டேன் என்று சிரித்தபடி சொல்கின்றாள். அவ்வாறாக டியோ இல்லாமலே அவள் தனது இசைக்குழுவுடன் மகிழ்ச்சியான வாழ்வை நடத்திக் கொண்டு போகின்றாள். ஆனால் டியோவால் பெர்னாடா இல்லாது வாழ முடியாதிருக்கின்றது. தனது ஆணவத்தை விட்டு பெர்னாடாவைத் தேடிப் போகின்றான்.

அவளில்லாதுவிட்டால் எந்தச் சூதாட்டம் என்றாலும் தான் தோற்பேன் என்பது அவனுக்கு விளங்குகின்றது. உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதொரு வாழ்க்கை கிடைக்கும் மீண்டும் தன்னிடம் வந்துவிடு என பெர்னாடாவிடம் சொல்கின்றான் டியோ. அவளோ, 'You dont know me at all, Dionisio Pinzon! And I'm telling you right now that as long as I'm strong enough to get around i won't be walled in' என, என்னைச் சுற்றி ஒரு சுவர் இருப்பதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை என்கின்றாள்.

இதன்பின்னர் டியோவும் அலைந்து திரிபவனாக பெர்னாடாவோடு சேர்ந்து மீண்டும் மாறுகின்றான். ஆனால் இறுதியில் நடப்பதோ மாபெரும் துயரம். அது பெர்னாடாவை, டியோ சுவர்களுக்குள் வலுக்கட்டாயமாக மீண்டும் அடைப்பதால் நடக்கின்றது. பெர்னாடா மட்டுமின்றி அவளின் மகளும் திசை மாறுகின்றனர். இக்குறுநாவல் முடியும்போது இருவரின் மரணம் ஒருசேர நிகழ்கின்றது. ஆனால் அந்த இறுதி முடிவைக்கூட யுவான் அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருப்பார்.

இந்தப் புனைவு யுவானின் 'பெத்ரோ பராமோ' போன்ற சிக்கலான மாய யதார்த்தக் கதை சொல்லல் முறையில் எழுதப்பட்டதல்ல. மிக நேரடியான, ஆனால் மெக்ஸிக்கோவின் அன்றைய நிலவியலும், பண்பாடும், அரசியலும் கலந்து எழுதப்பட்ட ஒரு முக்கிய படைப்பாகும். இங்கு மாய யதார்த்தம் வெளிப்படையாக எழுத்தில் இல்லாதபோதும், மறைமுகமாக இருப்பதை ஒரு நுட்பமான வாசகர் கண்டுகொள்ள முடியும்.

ஒரு படைப்பாளி தன் வாழ்க்கைக் காலத்தில் சிறந்த ஒரு படைப்பைக் கொடுத்தபின் அதைத் தாண்டி எழுதுவது அவ்வளவு எளிதல்ல. இன்றைக்கு சிறந்த படைப்பாளிகள் எனச் சொல்லப்பட்டவர்களின் முக்கிய நாவலைக் கொண்டே அவர்களின் பிற படைப்புக்கள் ஒப்பிடப்படுவதைக் காண்கின்றோம். அதனால் சிலவேளைகளில் அவர்களின் மற்றப் படைப்புக்களின் உள்ளடக்குகள் விரிவாகப் பேசப்படாது போகும் அபாயமும் நிகழ்ந்திருக்கின்றன. மார்க்வெஸ்ஸிற்கு 'One Hundred Years of Solitude', ஹெமிங்வேயிற்கு 'Old man and Sea', குந்தேராவிற்கு 'The Unbearable Lightness of Being', ஹென்றி மில்லருக்கு 'Tropic of Cancer', மைக்கல் ஒண்டாச்சிக்கு 'The English Patient' என நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் புனைவை யுவானின் 'பெத்ரோ பராமாவிற்கு நிகராக ஒப்பிட முடியாது என்றாலும், இது சிறந்த வாசிப்பைத் தருகின்ற படைப்புகளில் ஒன்றெனத் துணிந்து சொல்லலாம். வாசிக்கத் தொடங்கும்போது, ஒரு மோசமான நாவலைத்தான் வாசிக்கின்றேனா எனத்தான் யோசித்தேன். ஆனால் நள்ளிரவு தாண்டியும் சில மணித்தியாலங்கள்வரை நேரந்தெரியாது இந்த படைப்பிற்குள் மூழ்கியிருக்க முடிந்திருந்தது. அந்தளவுக்கு சுவாரசியமாக இருந்தது.

யுவானின் இந்த குறுநாவலில் அவர் அன்றைய காலத்தைய விடயங்களை எவ்வளவு எளிதாகச் சொல்லிச் செல்கின்றார் என்பது சிலாகிக்கக் கூடியது. யுவானின் படைப்புக்களில் வரும் பெண் பாத்திரங்கள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. அது 'பெத்ரோ பராமோ'வில் வரும் சூசனா ஆகட்டும் அல்லது இந்த நாவலில் வரும் பெர்னாடாவாகட்டும், அவர்கள் அவ்வளவு தனித்துவமாக இருக்கின்றார்கள். அதேவேளை அவ்வளவு உறுதியான பெண்களைக் கூட இந்த சமூகமும், அவர்களைச் சுற்றியிருக்கும் ஆண்களும் சாதாரண பெண்களைப் போல ஆக்கிவிடுகின்றனர் என்பதையும் யுவான் காட்டத் தவறவதும் இல்லை.

ஒரு நாவல் 1958இல் எழுதி முடிக்கப்பட்டபோதும், இவ்வளவு சுவாரசியமாகவும், எளிமையான எழுத்து நடையிலும், ஆழமான விடயங்களையும் தொட்டுச் செல்வது வியப்பாகத்தான் இருக்கின்றது. இந்த வியப்பை தனது குறுகிய நாவல்களில் தரும் இன்னொருவராக சமகாலத்து சிலியின் எழுத்தாளரான அலெஜாந்திரோ ஸாம்பரா எனக்கு நினைவில் வருகின்றார். அலெஜாந்திரோவின் 'The Private Lives of Trees', 'Bonsai', 'Ways of going home' போன்றவற்றை வாசித்தவர்க்கு நான் சொல்வது இன்னும் எளிதாய்ப் புரியும்.

*****************

 

Black&White Photos by Juan Rulfo
(தை 01, 2025)

 

No comments:

Post a Comment