வேடன்
***
நானெனது இருபதுகளில் ராப் பாடல்களில் மூழ்கியிருந்தவன். ஏற்கனவே இலங்கையில்
இருந்த ஒடுக்குமுறையின்
நிமித்தம் கனடாவுக்குத் தப்பி வந்தவன். இந்தப்
புதிய கனடா என்கின்ற
பனி நிலத்திலும் ஓரமாக (முக்கியமாக
பாடசாலை/பல்கலைக்கழகம்) வாழ
நிர்ப்பந்திக்கப்பட்டபோது, கறுப்பினத்தவர்களின் ராப் கவர்ந்திழுக்காது இருந்தால்தான் வியப்பாக
இருக்கும். ராப் பாடல்களின் மீதான பெருவிருப்பு பின்னர் உதிர்ந்துபோனாலும்,
அந்த உலகம் எனக்குள்ளே
இருந்த கோபம்/வெறுப்பு/சலிப்பு போன்றவற்றைக் கடந்துவர அன்று உதவியிருக்கின்றது.
புலம்பெயர் சூழலில் அவ்வப்போது சில இளைஞர்கள் ராப் பாடல்களைப் பாடி, இசைத்தட்டுக்களை வெளியிட்டபோதும், அவர்களிடம் ஓர் தொடர்ச்சி இல்லாததால் அதை ஒரு பெரும் விடயமாகக் குறிப்பிட்டுப் பேச முடியாது போய்விட்டது. தமிழக/ஈழத்துச் சூழலில் ராப் பாடல்கள் வந்து சேர நீண்டகாலம் எடுத்திருந்தது. அந்தவகையில் ராப் பாடல்களின் சரியான மூலவடிவத்தை எடுத்துக்கொண்டவர் என்று தமிழகக் கலைஞர் அறிவைச் சொல்லலாம். ஆனால் அவரும் ஏதோ ஒருவகையில் தன்னிருப்பைத் தக்கவைக்க தமிழ்ச் சினிமாச் சூழலுக்குள் போக வேண்டியிருந்தது. நமது இலக்கியவாதிகளின் பெரும்பாலானோரின் கடைசிப்புகலிடம் (அல்லது இரகசிய ஆசை) சினிமாவாக இருப்பதைப் போன்று, சுயாதீன இசைக்கலைஞர்களும் இறுதியில் சென்றுசேர வேண்டிய இடமாக திரைச்சூழலே இருக்கின்றது.
அந்தவகையில் கேரளச் சூழலில் இருந்து வந்த வேடனை நான் பின் தொடர்ந்து வந்திருக்கின்றேன். அவரின் 'குரலற்றவரின் குரல்' பாடல் வெளிவந்தபோது அது அதிக கவனத்தைப் பெற்றது. அப்போது அவரை (5 வருடங்களுக்கு முன்) யாரெனத் தேடியபோது ஆதிவாசிகளின் பின்னணியில் இருந்து வருகின்றவர் என்று ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் பின்னால் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து 'அகதி'யாக இடம்பெயர்ந்த தாயுக்கும், திரிச்சூர் தந்தைக்கும் பிறந்தவர் என்பதை அறிந்துகொண்டேன். மிக வறுமையான 'ரெசிடென்ஸி' சூழலில் வளர்ந்த வேடன் வீரியமான அரசியலை தன் பாடல்களில் வெளிப்படையாகப் பாடத் தொடங்கினார்.
எப்படி ராப்பில் Tupac போன்றவர்கள் அரசு/பொலிஸ் உள்ளிட்ட அதிகாரத்தை கடுமையாக விமர்சித்து கறுப்பின மக்களை அரசியல்படுத்தினார்களோ, அப்படி ஒருவராக வேடன் வரக்கூடுமென நினைத்தேன். ஆனால் அவர் இடையில் வேறொரு பாதைக்குச் செல்லத் தொடங்கினார். ஒருகட்டத்தில் பல பெண்கள் தம்மீது அத்துமீறியதாக வேடனுக்கு எதிராக பேச வந்தார்கள். அவர்கள் அதை அறிக்கையாக வெளியிட்டு நீதி கோரியபோது, வேடன் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை எழுதினார். எனினும் அந்த மன்னிப்புப்பதிவு பொறுப்புக்கூறலற்ற மன்னிப்பு என பாதிக்கப்பட்ட பெண்கள் மறுதலித்தார்கள். இன்னொருபக்கம் ஒரு தலித்தாக இருக்கும் வேடன் மீது ஆதிக்கச்சாதிகள் செய்யும் சதி என்று பேசப்பட்டபோது, வேடனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தலித் பெண்ணாக இருக்கின்றார் என்றும் அப்போது பதில் கூறப்பட்டது.
இப்படி பாலியல் துஷ்பிரயோகங்களில் எந்த ஆணும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டதில்லை என்றவகையில் நடிகை பார்வதி வேடனின் மன்னிப்புக்கடிதத்திற்கு இன்ஸ்டாவில் 'லைக்' இட்டிருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த மன்னிப்பு பொறுப்புணர்ந்து genuine ஆனதல்ல என்றபோது, பார்வதி தனது 'லைக்'கை மீள எடுத்து அதற்காய் மன்னிப்பைக் கேட்டிருந்தார். எதற்கு இதையேன் விரிவாகச் சொல்கின்றேன் என்றால், எவ்வளவு நுண்ணியமாக இந்த விடயத்தை மலையாளப் பெண்கள் கையாண்டிருக்கின்றார்கள் என்பதற்காகும்.
*
ஒருவகையில் இந்த விடயங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானபோது வேடனுக்கு 25 வயதுக்குள்ளே இருந்தது. ஒரு முதிரா இளைஞன், சட்டென்று கிடைத்த தன் பிரபல்யத்தைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் என்று பார்க்காது, மலையாளப் பெண்கள் வெளிப்படையாக இது குறித்துப் பேசினார்கள். இந்த நேரத்தில் இவ்வாறான விடயங்களில் பெண்களுக்கு நமது தமிழ்ச்சூழல் கொடுக்கும் தோழமையுணர்வையும், எதிர்வினைகளையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஒரு கலைஞனாக இதன்பின்னும் வேடன் வளர்ந்துகொண்டே இருந்தார். சுயாதீன பாடல்களை வெளியிட்டதோடு மட்டுமில்லாது, கடந்த வருடம் வந்து மிகவும் கவனத்தைப் பெற்ற திரைப்படங்களான மஞ்சுமல் பாய்ஸ், கொண்டல், All We Imagine as Light போன்றவற்றிலும் பாடியிருக்கின்றார்.
இன்னொரு வகையில் அவரது பாடல்கள் இன்னுமின்னும் அரசியல்மயமாகிக் கொண்டிருக்கின்றது. அதிகாரத்தை நோக்கி மிகக் காட்டமாகக் கேள்விகளை எழும்புகின்றார். அதன் நிமித்தந்தான் அவர் சில வாரங்களுக்கு முன் 'கஞ்சா கேஸ்'ஸில் வேடன் கைது செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது. அப்படி கஞ்சா கேஸில் அகப்பட்டபோது அவர் அணிந்திருந்த சங்கிலி அசலான சிறுத்தைப் பல்லால் செய்யப்பட்டது என்று வன இலாக்காவினாலும் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இவ்வாறு சட்டமும்/அதிகாரமும் அவரைத் தொடர்ந்து தொந்தர்வு செய்து கொண்டிருக்கின்றது. அதற்கான காரணிகளை வேடனும் ஒருவகையில் உருவாக்கிக் கொண்டபடி இருக்கின்றார்.
இப்போது வேடன் ஒரு காதல் பாட்டைப் பாடியிருக்கின்றார். 3 வாரங்களில் 'MAUNA LOA' பாடல், 5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து வேடனுக்கு ஒரு பெருந்திரளான இரசிகர்கள் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவருக்கு இப்போது ஒரு காதலி இருப்பதாகவும் பொதுவெளியில் சொல்லப்படுகின்றது. சிலவேளைகளில் இனியான காலத்தில் வேடன் ஒரு முதிர்ச்சியடைந்த ஆணாக, பெண்கள் சார்ந்த விடயங்களை அணுகவும் கூடும்.
*
வேடன் குறித்து இன்னொரு விடயத்தைச் சொல்லவேண்டும். நமது புலம்பெயர்/ஈழ சமூகம் பல விடயங்களில் தூங்கிக் கொண்டு சட்டென்று 'முழித்து'க் கொள்ளும் ஒரு சமூகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. நீங்கள் கலை/இலக்கியங்களில் எவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்தாலும் தடித்த தோலோடு, உங்களை உற்சாகப்படுத்த ஓரடி கூட எடுத்து வைக்காது. ஆனால் யாரேனும் அந்நியர்கள் அந்த கலைஞர்களை ஏற்றுக்கொண்டால் போதும். உடனேயே கும்பம்/மாலை வைத்து வரவேற்று இவர் நம்மவரென கூட்டம் கூட்டமாக வந்து பொதுவெளியில் அவர்களை வியந்தோத்தும்.
அப்படித்தான் யாரோ ஒரு புண்ணியவான் இப்படி வேடனை ஒரு பாடலில் கண்டுகொண்டுவிட்டார். 4 வருடங்களுக்கு முன் வெளிவந்த வேடனின் 'பூமி ஞான் வாழுமிடம்' (Bhoomi Njan Vazhunidam) பாடலில் பல்வேறு நாட்டு ஒடுக்குமுறைகள்/போராடும் இயக்கங்கள் உசாத்துணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதில் 'இலங்கையில் புலிகளினது தாகம் தீரா இனி நடப்போம்' என்ற வரிகள் வருகின்றது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்த வரிகளோடு, வேடனின் தாய் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெரிந்ததோடு, 'ஒரு யாழ்ப்பாணத்தமிழன் பாடுகின்றான்' என்று எல்லாப் பக்கத்திலும் காணொளியை வெளியிட்டு இப்போது 'தெறி'க்க விடுகின்றார்கள்.
வேடனின் இந்தப் பாடலிற்கு முன்னோடியாக மாயா அருள்பிரகாசத்தின் (MIA) பாடலான 'Sun showers' ஐ சொல்லலாம். மேலும் மாயா அதில் புலிகளின் பெண் போராளிகளைப் போல ஆடைகள் அணிந்து வந்து 'Like PLO/ I don't surrender' என்றேல்லாம் பாடுவார். புலிகளைப் போல ஆடையணிந்தாலும் அவர் அதில் வெளிப்படையாகப் பாடுவது பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியாகும். வேடனோ இதில் ஒடுக்குமுறை நடக்கும் ஒவ்வொரு இடத்தையும் ஒரிருவரிகளால் குறிப்பிட்டு பாடிவிட்டு எளிதில் விலகிச் செல்கின்றார்.
*
வேடனின் பாடலை ஈழத்தோடு இணைத்து பொதுவெளிகளில் புகழ்ந்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள், வேடன் மீது பாதிக்கப்பட்ட பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கலைஞர்கள் இயல்பிலே பலவீனமானவர்கள்/பிறழ்வானவர்கள் என்று சாட்டுச் சொல்லாது, அவர்களின் கலைப்படைப்புக்களினால் கிடைக்கும் புகழைப் போல, இந்தக் குற்றச்சாட்டுக்களையும் நேரடியாக அவர்கள் எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூறும் கடமையிலிருந்து அவ்வளவு எளிதில் தப்பிச் செல்லவும் முடியாது.
அது ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, தனக்கான ஓரிடத்தை இசையுலகில் இப்போது சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கின்ற, ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வேடனாக இருந்தால் கூட.
*******
(May 20 , 2025)
No comments:
Post a Comment