Tuesday, September 23, 2025

கார்காலக் குறிப்புகள் - 113

 

நான் கனடாவிற்கு வந்து உயர்கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த காலங்களில் இங்கே இரண்டு பெரிய தமிழ் வன்முறைக் குழுக்கள் (Gangs)இருந்தன. இலங்கையின் இரண்டு பிரதேசங்களைக் கொண்டு அவை இயங்கினாலும், அதில் பிரதேசவாதம் இல்லாது வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருந்தார்கள். நான் வசித்துக் கொண்டிருந்த பகுதியில்தான் ஒரு குழுவின் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒரு கேந்திர நிலையமாக  கோப்பிக் கடை இருந்தது. அந்த கோப்பிக் கடையைத்தாண்டித்தான் நான் ஒவ்வொருநாளும் பாடசாலைக்குப் போக வேண்டியிருக்கும். அன்று அந்தக் கடையைச் சுற்றியிருந்த அடுக்கங்களில் நிறையத் தமிழர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அந்தக் கோப்பிக் கடையை மையமாக நிறையச் சூட்டுச் சம்பவங்கள் நடக்கும். அந்தச் சம்பவங்களைப் பற்றி அதைவிட நிறையக் கதைகள் கற்பனைகளோடு பேசப்படும். எனவே இவையெல்லாம் எங்கள் பாடசாலையிலும் எதிரொலிக்காது விடுமா என்ன?


எங்கள் பாடசாலையில் இருந்தும் பலர் இப்படி வன்முறைக் குழுக்களோடு ஜக்கியமானார்கள். ஆனால் எங்கள் பாடசாலையில் சண்டைகள் இந்தப் பெரும் குழுக்களால் நிகழ்ந்ததில்லை.  பெரும் மன்னர்கள் இருக்க குறுநில மன்னர்கள் புஜத்தைக் காட்டுவதைப் போல இவர்கள் ஏதேனும் சின்னக்குழுக்களோடு சண்டைபிடித்து விட்டுவர பாடசாலையில் மற்றக்குழு வந்து சேர சண்டை நடக்கும். பெரும்பாலும் ஆயுதங்களில்லாது சண்டை நடக்கும். துப்பாக்கிகள் எங்கள் பாடசாலையில் சீறியதில்லை. ஒருமுறை கத்திச் சண்டை நடக்க, ஒரு அப்பாவியான நண்பன் இதைத் தடுக்கப் போக அவனுக்குக் கத்திக்குத்து விழுந்திருந்தது.

அன்று சண்டைக்குக் காரணமானவன், நான் பின்னர் பல்கலைக்கழகத்துப் போன காலங்களில், பெரிய 'பிஸ்தா'வாக மாறி, இந்த நாட்டில் இருக்க முடியாத வன்முறையாளன் எனத் திருப்பவும் இலங்கைக்கு திருப்பியனுப்பட்டான். இப்போதும் இலங்கையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த பெரும் குழுக்களில் இருந்த இன்னொருவரும் எங்களுக்கு முன்னரான வகுப்புக்களில் படித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் அவர் இந்த குழுக்களில் இருக்கின்றாரா என்றே நம்ப முடியாதவளவுக்கு 'நோஞ்சனாக' இருப்பார். என்னைப் போன்றவர்களோடு அவ்வளவு அன்பாகவும் நடந்து கொண்டிருப்பார். அந்தக் காலங்களில் இந்தக் குழுச்சண்டையால் சில அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இந்தச் சண்டைகள் நடக்கும்போது இடைநடுவில் மாட்டிய பாவப்பட்டவர்களாக இருப்பார்கள்.

சிலவேளைகளில் இலக்கு வைத்தவர்கள் வேறு இருக்க, இவர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்கள். அப்படி அன்றைய காலத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட -எந்தக் குழுவிலோ/வன்முறையிலோ ஈடுபடாத- ஒரு இளைஞனின் கொலையில் மேலே குறிப்பிட்ட இந்த 'நோஞ்சான்' தான் துப்பாக்கி triggerஐ  இழுத்தார் என்று ஒரு கதையை 20 வருடங்களின் பின் கேள்விப்பட்டேன்.

எனது சகோதரர் ஒரு கிரிக்கெட் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். என்னையும் அவர் இழுத்துக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்வார். அன்று விளையாடிய சில இளைஞர்கள் இந்தக் குழுவோடு தொடர்பில் இருந்தார்கள். அன்று ஒருவர் ஒரு பழைய காரை வைத்திருப்பதென்பதே பெரிய விடயம். அண்ணா தனது பழைய காரில் விளையாடும் இரண்டு மூன்றுபேரை ஏற்றிக்கொண்டு வருவார். ஒருமுறை எங்களோடு காரில் வந்தவர் வெள்ளை டவலுக்குள் எதையோ சுற்றி வைத்துக்கொண்டு வந்தார். அந்த டவல் அப்படியே காருக்குள் இருக்க நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். இடைநடுவில் மற்றக் குழு இவர்களைத் தேடி கிரவுண்டை நோக்கி வருகின்றது என்று மைதானம் அமளிப்பட்டது.

அப்போதுதான் எங்களோடு காரில் வந்தவர், 'அவங்கள் வரட்டும், எதற்கும் ரெடியென்றுதான் சாமானோடு வந்திறங்கினேன்' என்று சொல்லத்தான் அவர் டவலுக்குள் சுற்றிக்கொண்டு வந்து துப்பாக்கி என்பது விளங்கியது. என் சகோதரருக்கும், எனக்கும் பயம் வந்துவிட்டது. இவங்கள் சுடுபடப்போகின்றாங்கள் என்பதைவிட, பொலிஸ் வந்துவிட்டால் எங்களின் ஆட்டம் அவ்வளவுதான்.

நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அன்றைய நாள் முடிந்தது. அதற்குப் பிறகு நான் கிரிக்கெட்டுக்காகப் போகும்போது ஏறும் நபர்கள் கையில் என்ன வைத்திருக்கின்றோம் என்பதில் அவதானமாக இருந்தோம். இப்படி எதற்கும் தயாராக 'வீரம் விளைந்தவர்கள்' ஒருபுறம் என்றால், இன்னொரு இடத்தில் படங்காட்டுபவர்களுக்கும் குறையில்லாது இருக்கும். இந்த வன்முறை குழுக்களோடு சம்பந்தப்பட்ட ஒருவர் எப்போதும் 'பீலா' காட்டிக் கொண்டிருப்பவர்கள். எங்கள் பக்கமாய் மற்றக்குழு வந்து வாணவேடிக்கை காட்டிவிட்டுப் போக, எங்கள் பக்கக் குழு 'அசெம்பிள்' ஆகி அவர்களைத் துரத்திக்கொண்டு போவதாய் 'ரீல்'ஸ் காட்டும். அதில் முன்னணியில் இருப்பவர் இவர். அதாவது துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு படங்காட்ட வருவார். இவர் இருந்த குழுக்காரரே, 'இவன் சண்டை நடக்கும்போது எங்கையோ ஒளிந்துகிடப்பான், ஆனால் எல்லாம் முடிந்தபின் துவக்கோடு படங்காட்ட வந்துவிடுவான்' என்று நக்கலடிக்குமளவுக்கு இவர் அவ்வளவு பிரபல்யம்.

ஆனால் என்ன பரிதாபம் என்றால், இப்படி படங்காட்டி ஒரு நாள் இருந்தபோது, பொலிஸ் இவரைத் துப்பாக்கியோடு சிறைக்குள் போட்டிருந்தது. இவர் இப்போது என்ன செய்கின்றார் என்று கேட்கக்கூடாது. அவர் இன்று மில்லியன்கணக்கில் பணம்புரளும் ஒரு முக்கிய வணிகர் . ஆக இன்று படங்காட்டிக் கொண்டிருக்கும் யூ-டியூப்பர்ஸ்க்கு இவரொரு முன்னோடி/influencer என்றும் சொல்லலாம்.

*

ந்தக் காலப்பகுதியிலே நான் எழுத வந்தவன் என்பதால், என் கவிதைகளில் பெரும்பாலும் இந்த வன்முறை பேசுபொருளாக இருந்திருக்கின்றது. கவிதைகள் மட்டுமில்லை, என் முதல் சிறுகதை கூட இந்த வன்முறையைப் பேசுவதாகவே எழுதப்பட்டது. 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பை வாசிப்பவர்கள் இதன் சுவடுகளை பல கவிதைகளில் எளிதாகப் பார்க்க முடியும்.

அன்று எங்களோடு ஒருவன் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். நாங்கள் ஆண்களும், பெண்களுமென ஏழெட்டுப் பேர்களைக் கொண்ட குழுவாக அன்றிருந்தோம். வன்முறைக்கும் எமக்கும் எந்தத் தொடர்புகளுமில்லை.  அப்போதுதான் கனடாவுக்குள் காலடி வைத்தவர்கள் என்ற ஒற்றைக் காரணமே எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்திருந்தது.

இவனுக்கு வயது மூத்த சகோதரர்களும் எங்களோடு படித்துக் கொண்டிருந்தனர். இவர் மிக அப்பாவியானவன். உயரத்திலும், வயதிலும் (2 வயது) எல்லோரையும் விட குறைவானவாக இருந்தான். எனவே எப்போதும் இளைய சகோதரன் போன்ற வாஞ்சை அவனோடு எமக்கு இருக்கும்.

நான் பல்கலைக்கழகத்துக்குச் சென்றதோடு அவனடோன தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் காதல் என்ற பெருங்கடல் நட்பை ஒரு சிறுகுளமாக ஆக்கியதால், நண்பர்களோடு நேரம் செலவளிக்காமல் பின்னர் போய்விட்டது. நெடும் வருடங்களின் இந்தச் சகோதரர்களிடையே சண்டை எனக் கேள்விப்பட்டேன்.

ஒன்றாக சினிமாத் தியேட்டர்கள் நடத்தி வந்தவர்களிடம் இருந்து இவன் தனித்து படங்களை வாடகைத் தியேட்டர்களை திரையிடச் செய்திருக்கின்றான். அதனால் கோபமடைந்த மற்றச் சகோதர்கள் இவன் திரையிட்ட அரங்குகளின் திரைகளைக் கிழித்தும், பார்வையாளர்களுக்கு பெப்பர் ஸ்பிரே செய்து குழப்பி படங்களைத் திரையிடாது தடுத்தார்கள் எனவும் கேள்விப்பட்டேன். சகோதர்களிடையே இப்படி ஒரு கடும் வன்மம் உருவாகுமா என்று திகைப்பாக இருந்தது.

அப்படி ஒரு monopoly யாக திரையிடப்படுவதை கையகப்படுத்திய எங்கள் நண்பனின் சகோதர்கள் பிறகு வெவ்வேறு வியாபாரங்களிலும் கால்களை ஆழப்பதிக்க, மீண்டும் குழுக்களிடையே வன்முறை என்ற செய்திகள் வரத் தொடங்கின. இந்நகரத்தில் இப்போது நடக்கும் சம்பவங்களோடு இவர்களைத் தொடர்புபடுத்தி செய்திகள் நிஜமும்/கற்பனையுமாக சிறகடித்துப் பறக்கத் தொடங்குகின்றன. ஏன் இந்த நகரில் குறிப்பிட்ட திரையரங்குகளை விட வேறெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படாது இருக்கின்றதென்பதற்கான, ஊற்றுக்கள் கூட இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.

இப்படியாக பாடசாலை காலத்திலிருந்தே வன்முறையோடு Thugs Life ஐ பார்த்து வளர்ந்த என்னைப் பார்த்துத்தான், இன்னமும் பெண்களின் காலடியில்தான் தனது உலகம் சுழல்வதாக வாழ்கின்றான் என்று இந்தச் சமூகம் சபிக்கின்றது என்பது எவ்வளவு அவலமானது!

*****

(Jun 02, 2025)

No comments:

Post a Comment