Tuesday, November 04, 2025

கார்காலக் குறிப்புகள் - 117

 

 காளமாடன் (பைசன்)

***


லை என்பது எப்போதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான். கலை என்பதன் நோக்கமே படைப்பும்/படைத்தல் சார்ந்ததும். அதன் நிமித்தம் கிடைக்கும் புகழ்,பணம், செல்வாக்கு என்பதல்ல, படைப்பின் மகிழ்ச்சிக்கு அப்பால் கிடைப்பவை. எனவே ஓர் உண்மையான படைப்பாளி படைப்பின் மூலம் கிடைக்கும் by product குறித்து அவ்வளவு அக்கறைப்படமாட்டார் என்று நினைக்கின்றேன்.


இப்போது இங்கு முதல் காட்சியாக பார்த்து வந்த காளமாடன் (பைசன்) அவ்வளவு மனம் நிறைந்திருக்கின்றது. வழமையான விளையாட்டு சார்ந்த திரைப்படங்களுக்கு ஒரு வாய்ப்பாடு இருக்கின்றது. அவ்வாறான எல்லைக்கோடுகளை ஆழப்புழா ஜிம்கானா போன்ற மலையாளப் படங்கள் உடைக்ககூடும், ஆனால் டங்கலோ, இறுதிச்சுற்றோ, சர்பட்டா பரம்பரையோ, ஏன் காளமாடனோ உடைத்தல் சற்றுக் கடினமானதுதான்; அதைப் புரிந்துகொள்ளவும் முடியும்.


ஆனால் அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று மிகச் சிறப்பாக தன்னை மாரி செல்வராஜ் 'காளமாடனை' நமக்கு அளித்திருக்கின்றார். அதிலும் ஓடுக்கப்பட்ட சாதி/ஆதிக்க சாதிகளை அதன் சிக்கல்கள்/வன்மங்கள்/சண்டைகள் என்று காட்டியிருந்தாலும், அனைவருக்கும் சொல்லப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பது, முக்கியமாக துவிதநிலையில் நாயக ௴ எதிர்நாயக் விம்பங்களை நவீனத்துவ நிலையில் நின்று கட்டியமைக்காததும் முக்கியமானது.


எனக்கு இரத்தம் பிடிப்பதில்லை. அதற்கு என் சிறுவயதில் போரின் நிமித்தம் எறிகணை வீழ்ந்து இரத்தம் தோயத்தோய வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததில் இருந்து எங்கும் பார்க்கப் பிடிப்பதில்லை. திரைகளில் என்றால் கண்ணை மூடிவிடும் சுதந்திரத்தை எப்போதும் அனுபவிப்பவன். இதிலும் வன்முறை கடுமையாகக் காட்டப்படுகின்றது. ஆனால் சட்டென்று இப்படி சாதித்தலைவர்களின் (அல்லது ரெளடிகள் என விளிக்கப்பட்ட) பல கதைகளை/செய்திகளை முகப்பில் தாங்கிவந்த ஜூனியர் விகடன்களைப் பார்த்த ஞாபகம் வருகின்றது.


மாரி பத்திரிகைச் செய்திகளில் இருந்து கடந்தகால யதார்த்தத்தை மட்டுமில்லை, அசலான மனிதர்களின் சாயல்களுள்ள பாத்திரங்களையும் காளமாடனில் கொண்டு வருவது அருமையானது. அதுபோலவே இந்தச் சாதிச்சகதிகளுக்குள் விரும்பாமாலே சிக்கிகொள்ளும் ஒருவனது (அப்பாவி என்று சொல்வது அல்லது காட்சிப்படுத்துவது கூட பிறருக்கு ஏற்ற அரசியலைச் சொல்வதுதானல்லவா?) வாழ்வில் நாமும் ஒரு அங்கமாகின்றோம். அவனைப் போல நாங்களும் அவன் ஊர் என்கின்ற சாதிநோய் பிடித்த நிலப்பரப்பிலிருந்து தப்பிப்போக வழிகள் திறக்காதா என ஏங்குகின்றோம்.


இதில் தகப்பனாக வரும் பசுபதிதான் எல்லாப் பாத்திரங்களையும் விட ஓர் முன்னே நிற்கின்றார் என நினைக்கின்றேன். ஏனெனில் அந்தப் பாத்திரமே கடந்தகாலத்தின் எல்லா அவமானங்களை அறிந்தும், அதேவேளை நிகழ்காலத்தில் மகனைக் காப்பாற்றி பத்திரமாக வேறொரு கரை சேர்க்க விரும்பும் இந்தத் தலைமுறையின் ஒருவராகவும் இரண்டு காலங்களிலும் காலூன்றி நிற்பவராக இருக்கின்றார்.


துருவ்வை படத்தின் நீண்டநேரம் வரை விக்ரமின் இளம் பிரதியொன்றைப் பார்க்கின்றேனா என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதைத்தாண்டி அவர் உடல்மொழியில் தன்னை அந்தப் பாத்திரத்தில் கரையும் போது, அவர் அந்தத் திருநெல்வேலியின் அசல் பாத்திரங்களில் ஒரு பாத்திரமாக கரைந்துவிடுகின்றார். ஒரு நடிகர் தன்னை இயக்குநனருக்குக் கொடுக்கும்போது எப்படி உருமாறமுடியும் என்பதற்கு இப்படத்தில் துருவ்வும், மாரியின் மற்றப்படமான 'மாமன்னனில்' வடிவேலும் நல்லதொரு உதாரணங்கள்.


என்னைப் போன்ற ஊரில் இருந்து வந்தவர்க்கு ஒரு துறையில் பிரகாசிப்பது என்பது எவ்வளவு கடினமென்று தெரியும். அதுவும் படிக்கும் பாடசாலையில் இருந்து பல்வேறு மட்டங்களில் நம்மை கீழிறக்க நம் கண்ணுக்குத் தெரியாத கரங்களோடு போராடிக் கொள்ளவேண்டும். அதுவும் ஒருவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டால், அவன் தன் திறமையைக் காட்ட மட்டுமல்ல, தன்னையொரு சக உயிரியாகத் தன்னை நிரூபிகவே தன் காலம் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கின்றது என்பதற்கு காளமாடன் நம்முன் சாட்சியாக இருக்கின்றது.


லை என்ன செய்யும்? நாம் வாழாத வாழ்வைக்கூட அதன் ஒரு பகுதியாக நம்மைக் கரைத்து அந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க வைக்கும். நமது போலிப் பெருமிதங்களையும், சாதி ஆணவங்களையும் இது உங்களின் அடையாளங்களல்ல, அழுக்குகள் என்று ஒவ்வொருவரையும் உணரவைக்கும். அதை இந்தக் காளமாடன் செய்திருக்கின்றான். 


நமது ஈழப்போராட்டம் முடிவடைந்தபின் நமக்கான நீதியைக் கோருவதற்கு நாம் மற்றவர்கள் குற்றவுணர்வை அடைகின்றமாதிரியான படைப்புக்களைக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டேயிருப்பவன். எங்கள் வீரக்கதைகளைச் சொல்லி கடந்தகாலத்தில் நிலைத்து நிற்பதால் நமக்கு மட்டுமில்லை, அநியாயமாக இறந்துபோனவர்க்கும் நாம் அநீதி செய்தவர்களாகின்றோம். மேலும் நமது படைப்புக்கள் நம்மை ஒடுக்கிய இனத்தோடு மட்டுமில்லை, நாம் ஒடுக்கிய இனத்தோடும், ஏன் நமக்கிடையிலும் கூட உரையாடல்களைச் செய்வதாக இருக்க வேண்டும். 


மாரி இந்த காளமாடனினில் -அவரின் முன்னை திரைப்படங்களைப் போல- ஏன் அதைவிட இன்னும் மேலாக- ஆதிக்க சாதிகளிடையே ஓர் உரையாடலை - உணர்ச்சிவசப்படாது செய்ய வந்திருக்கின்றார். இந்திய/தமிழ்ச் சினிமாவின் செல்வாக்கில் அதைப் போல பாவனை செய்கின்ற நம் ஈழத்து/புலம்பெயர் சினிமாக்காரர்கள் ஆகக்குறைந்தது மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களிடமிருந்து, எப்படி முரண்பாடுகளை நேர்மறையான கலைகளாக முன்வைப்பது என்கின்ற திசைகளைக் கற்றுக்கொள்ளலாம்.


மாரியும் ஓர் நேர்காணலில் சொல்லியிருப்பார், 'வாழை'யில் ஒரு நடந்தகதையை அப்படியோ சொல்லியிருக்கின்றேன். அதில் உரையாடல்களைச் செய்வதற்கு ஏதுமில்லை. அங்கே பார்வையாளர்களுக்கு ஒரு பெரும் மெளனத்தையே விட்டுச் சென்றேன். ஆனால் காளமாடான் பல்வேறு உரையாடல்களை அது நேரோ எதிரோ உருவாக்குவதையே விரும்புகின்றேன்  என்று கூறியிருப்பார்.


மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, எந்தக் காட்சியிலும் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து இன்னொரு தரப்பை உணர்ச்சியூட்டக்கூடிய அசலான கதையை பொதுவெளியில் பார்வையாளருக்கு முன்னே வைப்பதற்கு வீரத்தினால் அல்ல, ஒருவர் தன் கலையை அந்தளவுக்கு நம்பினால்தான் இவ்வாறு அச்சமின்றி ஓர் படைப்பை வைக்கமுடியும். அந்தவகையில் மாரி பாராட்டுக்குரியவர்.


இப்போது முன்புபோல அல்லாது மிகக் குறைவாக வருடத்துக்கு இரண்டோ/மூன்றோ தமிழ்த் திரைப்படங்களைத்தான் திரையரங்குக்குச் சென்று பார்ப்பேன். ஆனால் கடைசியாக வந்த மாரியின் 'மாமன்னன்', 'வாழை', இப்போது 'காளமாடன்' எல்லாவற்றையும் தவறவிடாது திரையங்கில் பார்த்தது மட்டுமின்றி முதல் காட்சியாக இவற்றைப் பார்த்திருக்கின்றேன் என்பதும் மாரி மீது என்னைப் போன்ற பார்வையாளர்கள் இன்னும் நம்பிக்கை இழக்காது இருக்கின்றோம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்கமுடியும்?



********

No comments:

Post a Comment