Friday, November 07, 2025

வாசகர்கள்..!

 

மது ரமேஷ் பிரேதன் காலமானபோது அவர் குறித்து பகிரப்பட்ட பதிவுகளைப் பார்த்தபோது, ரமேஷ் உயிரோடு இருந்த காலங்களில் இவற்றில் ஒரு பத்துவீதமானவர்களாவது அவரை வாசித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் சொல்லியிருந்தால் எவ்வளவு அகமகிழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் பலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை எழுத்துக்காக  காலங்காலமாக அர்ப்பணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் அங்கீகாரம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி வாசகர்கள் உரையாடும்போதுதான் அதிகம் நிகழ்கின்றது. அதுவே அவர்களைத் தமிழ்ச்சூழலில் சோர்ந்து போகாது தொடர்ந்து   உற்சாகமாக எழுத வைக்கின்றதாகவும் இருக்கின்றது.


பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமான சில வாசகர்களாவது இருப்பார்கள். நானென் சிறுவயதுகளில் பாலகுமாரனின் மூழ்கியிருந்தபோது வாசகரான தேவகோட்டை வா மூர்த்தி (?) என்பவரின் அநேக கடிதங்கள் முன்னுரை போல பாலகுமாரனின் நாவல்களில் பிரசுரிக்கப்பட்டபடி இருக்கும். பாலகுமாரனின் மீதிருந்த அன்பால், இப்படியொரு ஒரு தீவிர வாசகனாக என் கடிதம் ஒன்றாவது பிரசுரிக்க வேண்டுமெனக் கனவு கண்டிருக்கின்றேன். அவ்வாறு ஹென்றி மில்லருக்கு அனானிஸ், நபகோவுக்கு வேரா(Vera), தமிழில் பிரமிளுக்கு கால சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் என்று எண்ணற்ற வாசக உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


*


கொழும்பில் ஒரு கஃபேயில், எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் நூல் பற்றிய உரையாடலுக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள். கஃபேயின் மேற்றளத்தில் ஒரு பத்து நண்பர்கள் இலக்கியம் பேசி கொண்டுவிட்டு, கீழே இறங்கி வந்தபோது அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். நான், அவரையும் மேலே அழைத்து வந்திருக்கலாம் என்று சொன்னபோது, பரவாயில்லை என்று இருவரும் சொன்னார்கள்.


அந்த நண்பர் எனது 'மெக்ஸிக்கோ' வாசித்து, அதன் மீது அவ்வளவு நேசத்துடன் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களும் பாடமென்றளவுக்கு அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வாசித்துமிருந்தார். அண்மையில்தான் இன்னொரு விடயமும் தெரிந்தது. அந்த நண்பர் தனது புத்தகங்களை காதலியின் வீட்டில் கொடுத்து வைத்திருக்கின்றார். அவ்வளவு வாசிப்பில் ஆர்வமில்லாத அவரின் காதலி தற்செயலாக 'மெக்ஸிக்கோ'வை எடுத்து வாசித்திருக்கின்றார். அது அந்தப் பெண்ணுக்கும் பிடித்ததால், இந்த நண்பர் 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' நிகழ்வுக்கு வந்ததால், 'மெக்ஸிக்கோ' எழுதியவர் யாரென்று பார்க்க ஆவலுடன் வந்திருக்கின்றார். இது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதைச் சொன்னார். அடடா இப்படியான ஒருவரை முறையாக வரவேற்கவில்லையே என எனக்குக் கொஞ்சம் வருத்தமிருந்தது.


இப்படித்தான் இன்னொரு வாசகர் இருக்கின்றார். அவர்தான் எனக்குக் கிடைத்த மிக இளம் வாசகர் என்று நினைக்கின்றேன். 'மெக்ஸிக்கோ' அவர் தனது பதினைந்து வயதுகளிலே வாசித்திருந்தார். அவரின் அக்காவின் சேகரத்தில் இருந்து எடுத்து வாசித்திருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விடயத்தை இந்த 'இளம் வாசகனை'ப் பற்றி பகிர்ந்தபோது, 'மெக்ஸிக்கோ' அவரைப் போன்றவர்கள் வாசிக்க ஏற்ற நாவலா என்று ஒரு சிறு உரையாடல் எனது முகநூலில் போனது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.


அவர் இன்று பல்கலைக்கழகத்துக்கு முதலாமாண்டு போகின்ற மாணவன். 'மெக்ஸிக்கோ'வோடு மட்டும் நிற்காது எனது அண்மைய நூலான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' வரை வாசித்த வாசகர். தனது அக்காவோடு எனது எழுத்துக்கள் எப்படி மாறுதலடைந்து கொண்டு போகின்றது என்பதை எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவரை'த் தேடி வாசித்து உரையாடியிருக்கின்றார். அவரது அக்காவிற்கு தம்பி தன்னைவிட அதிகம் என் எழுத்துக்களை நுணுக்கமாக வாசிக்கின்றார் என்று திகைப்பு.


அண்மையில் கொழும்பில் அவர் வயதொத்ததவர்கள் கூடிப் பேசும் இலக்கியக் கூட்டத்திலும் தனக்குப் பிடித்த புத்தகம் என்று 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருக்கிந்தார்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இன்று கூட அந்தப் புத்தகத்தை யாரோ ஒரு சிங்களத் தோழிக்கு (அவர் எழுத்துக்கூட்டி தமிழை வாசிப்பவர்) கொடுத்து அந்தத் தோழி வாசித்துக் கொண்டிருந்தபோது இன்னொருவர் அதைப் பார்த்து, 'இளங்கோவின் நூலையா வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' என்று சொல்லி அவர்கள் என் எழுத்துக்களை விவாதித்திருக்கின்றனர். அதன் முடிவில்தான் இந்த புதிய நண்பர் எனக்கு நேசத்தை ஒரு காணொளியாக அனுப்பி வைத்தார்.


பதின்மத்தின் விளிம்பிலும், இருபதுகளின் தொடக்கத்திலும் இருக்கும் ஒரு புதிய தலைமுறை (என் எழுத்தை வாசிப்பதால் மட்டும் அல்ல) நூல்களை வாசிப்பதும் உரையாடுவதும் நிறைவாக இருக்கின்றது. அவர்களினூடாக புதியவர்கள் எழுத வந்து தமிழ்ச்சூழலின் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் கூடும். இப்படியான வயதுகளில்தான் அதுவரை நான் வாசித்தவற்றின் திசையை மாற்றிய எஸ்.பொவின் 'ஆண்மை'யையும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யும் கண்டடைந்திருக்கின்றேன். அவ்வாறு தொடங்கிய ஒரு புதிய வாசிப்பு எழுச்சியும் வீழ்ச்சியுமான என் அலைச்சறுக்கு வாழ்க்கையில் என்னை துயரங்களில் எப்போதும் மூழ்கவிடாது கரைசேர்த்திருக்கின்றது. 


இந்த இளையவர்களுக்கும், அவர்களின் வாசிப்பு, அவர்களின் தத்தளிப்புக்களின் மட்டுமில்லாது, இனிய தருணங்களுக்கும் துணை நிற்கட்டுமாக. இதுவே அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக நாளை ஆக்குமென நம்பிக்கையும் கொள்கிறேன்.


***
 

No comments:

Post a Comment