எவ்வளவு அழகான விடயம் இது!
தாம் படித்த பாடசாலைக்கு இரு மாணவிகள் இருபது இலட்சம் செலவு செய்து நூலகத்தை சீரமைத்திருக்கின்றார்கள். அதுவும் பாடசாலை நூலகம் உள்ளிட நூலகம் உள்ளிட்ட நூலகங்களைத் தேடித் தேடி வாசித்த அனுபவத்தை இவர் கூறுவதும், நூல்களே தனது முதல் துணைவன் என்று கணவர் நகைச்சுவையாக அடிக்கடி சொல்வதையும் கேட்க ஆனந்தமாக இருக்கின்றது.
எனது நூலக அனுபவங்களை ஏற்கனவே பலமுறை எழுதிவிட்டதால், என்னைப் பின் தொடர்பவர்களுக்கு அது அலுக்க அலுக்கத் தெரியும். ஊரில் நான் படித்த பாடசாலைக்கு ஓர் அரிய நூலகம் இருந்தது. அது பாடசாலை அதிபரின் அலுவலகத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் அருகில் இருந்ததாலும் எப்போதும் நூலகம் நம் அனைவரின் கண்களுக்குப்பட்டபடியே இருக்கும். ஆனால் (O/L) வரை) பதினாறு வயதுக்குள் இருப்பவர்க்கு (படிப்பு கெட்டுவிடும்?) உள்ளே அனுமதி இல்லாததால் யன்னலுக்குள்ளால் எட்டிப் பார்த்தபடி என் பாடசாலைக் காலம் கழிந்திருந்தது.
நான் பதினாறு வயதுக்குப் பிறகு அந்தப் பாடசாலையில் படிக்கவும் இல்லை. பாடசாலையும் என் 12/13 வயதில் என்னைப் போலவே அகதியாகவே உள்ளூருக்குள்ளே அலையவும் தொடங்கிவிட்டது. அப்போதும் இடம்பெயர்ந்து மருதனாமடத்தில் சொந்தமாய் ஓலைக்கொட்டில்கள் போட்டு நம் பாடசாலை இயங்கியபோது, இடப்பெயர்வோடு நூலகத்து நூல்களையும் கொண்டு வந்திருந்தனர். அவற்றைத் தூசிதுடைத்து ஒழுங்காய் அடுக்கும் வேலை என்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்திருந்தது. அப்போதுகூட இந்த தன்னார்வள வேலையின் நிமித்தம் பாடசாலை அதிபர் ஏதேனும் ஒன்றிரண்டு புத்தகங்களையாவது எனக்கு இலவசமாக வாசிக்கத் தருவார் என நம்பினேன்.
அந்த ஆசையெல்லாம் 'மண்'ணோடு போனதுபோல அதிபர் எதையும் தராத புத்தகக் கஞ்சனாக இருந்தார் என்பதையும் நினைவூகூரவேண்டும். ஆனால் இப்படியாக நம் அகதிப் பாடசாலையைத் தன் சொந்தப் பிள்ளைப்போல ஊர் ஊராகக் கொண்டு திரிந்த அந்த அதிபரையும் அவரின் ஓய்வுக்காலத்தில் நம் இயக்கம் போட்டுத்தள்ளியது என்பதால், பாவம் அந்த நல்ல ஆத்மா நிம்மதியாகத் தூங்கட்டும்.
இப்போது என் பாடசாலை மீண்டும் தன் சொந்த ஊருக்கு (எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான்) திரும்பிவிட்டது. ஆனால் என்ன பரிதாபம். முன்பு விசாலமான் இடத்தில், அனைவரும் பார்க்கக்கூடியதாக இருந்த நூலகத்தை -இடைஞ்சல் என்று- எங்கோ ஒரு ஒதுக்குப் புறத்தில் கொண்டு போய் மறைத்துவிட்டார்கள். கடைசியாக ஊருக்கும், ஊர்ப்பாடசாலைக்கும் போன நான், வடிவேல் 'எங்கேடா இங்கே இருந்த கிணறைக் காணவில்லை' என்று தேடியதுபோல எங்கள் பாடசாலை நூலகத்தைத் தேடியதுதான் மிச்சம்.
இப்படியாக 'வளர்ச்சி/ உலகமயமாதல்' நூல்கள் வாசிப்பதை மிகவும் சுருக்கி கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இந்தப் பெண்களைப் போன்றவர்கள் நூலகங்களுக்காக தம் நேரத்தையும் பணத்தையும் ஒதுக்குவது மிகவும் பாராட்டிற்குரியது.
சற்று கடந்தகாலத்தைப் பற்றி யோசியுங்கள். இப்போதுபோல அலைபேசிகளில் உலகம் சுருங்கிவிடாத காலங்களில், என்னைப் போன்ற சிறுவர்களின் -அதுவும் மூடுண்ட போர்க்காலத்தில் வாழ்ந்தவர்க்கு - யுத்தத்திற்கு வெளியே, அழகான உலகம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை மட்டுமின்றி வாழ்வதற்கான உயிர்ப்பையும் தந்தவை எமக்கு அன்று கைகளில் கிடைத்துக் கொண்டிருந்த புத்தகங்கள் மட்டுமே.
சிரியாவில் கொடும் உள்ளூர் யுத்தம் நடக்கையில் அத்தனை இழப்புகள், இடப்பெயர்வுகளுக்கும் அப்பால் அந்த சில இளைஞர்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சில் தப்பும் நூல்களைச் சேகரித்துக் கொண்டு, நடமாடும் நூலகத்தை நடத்தி போரின் நடுவிலும் நூல்களை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்ததுதானே பின்னர் 'சிரியாவில் தலைமறைவு நூலகம்' என்ற ஒரு நூலாக நம் கைகளுக்கு வந்து சிலிர்க்கவும் நெகிழவும் வைத்தது.
கிருஷ்ணானந்தியும் அவரது தோழியும் போன்று எண்ணற்ற மனிதர்கள் இன்னும் நம் நிலத்தை நூல்களால் நிறைக்கட்டும். நூல்களால் நிறைப்பது மட்டுமின்றி -எனக்கு சிறுவயதில் பாடசாலை நூலகத்தில் நிகழ்ந்தது போலவன்றி- வாசிக்க விரும்பும் அனைவரும் எளிதாய் நூல்களை வாசிப்பதற்கான வழிகளும் திறக்கட்டுமாக..!
*
'All Quiet on the Western Front', 'Conclave' ஆகிய படங்களை எடுத்த நெறியாளரின் புதிய படம். இது ஏற்கனவே நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. தனது அசல் முகத்தைத் மறைத்து சூதாட்டத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை எப்படி பெண் ஒருத்தி அதளபாதாளத்தில் விழுந்துவிடாமல் தடுக்கின்றாளா/இல்லையா என்பது பற்றிய கதை. ஒரு மேலைத்தேயத்தவனில் கீழைத்தேய பெளத்த கதையான 'பசித்த பேய்கள்' பாதிப்புச் செலுத்துவதை, தனிமனிதன் ஒருவனின் வீழ்ச்சியுற்ற ஆன்மாவை, அந்த ஆன்மீகம் அல்லது தொன்மம் காப்பாற்றுகின்றதா என்று அறிய விரும்புவர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்.
*
செந்தில்குமார் நடராஜனின் சிறுகதைத் தொகுப்பு இது. அண்மையில் வாசித்தவற்றில் மனமொன்றி வாசித்த கதைகளின் தொகுப்பு என இதைச் சொல்லலாம். தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து இப்போது சிங்கப்பூரில் தொழில் நிமித்தம் வசிப்பவர் செந்தில்குமார். 'பேழை', 'முதுகுப்பாறை' தவிர்ந்த ஏனைய கதைகள் அனைத்தும் சிங்கப்பூர், மலேசியாவை, பர்மாவைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதைகள். எனக்கு 'சன்னதம்', 'பேழை', 'மறுமொழி', 'பிறழ்வு' ஆகிய கதைகள் நெருக்கமாக இருந்தன. ஒருவர் பிறந்த மண்ணை மட்டுமில்லை புலம்பெயர்ந்த நிலத்தையும் நுட்பமாக பார்க்காதவிடத்து இவ்வாறான கதைகளை எழுதியிருக்கவே முடியாது. தமிழில் சமகாலத்தில் அலுப்புத்தரும் ஒரே வகையான கதைசொல்லல் முறை/மொழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, புத்துணர்ச்சியான மொழியில் இதில் கதைகள் சொல்லப்படுவது எனக்குப் பிடித்திருந்தது. இது செந்தில்குமாரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
*
நெறியாளர் யாரென்று தெரியாமலே ஒருவர் திரைப்படத்தில் வைக்கும் பிரேம்களை வைத்தே யார் இந்த இயக்குநர் என்று கண்டுபிடிக்கு முடியும் என்றால் அது என்னைப் பொருத்தவரை Wes Anderson ஆகத்தான் இருப்பார். அன்டர்சனின் புதிய படம் வந்த ஞாபகம் இல்லாததால் தற்செயலாக இத்திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கியபோது நெறியாளர் பெயர் திரையில் தோன்றமுன்னரே அந்த முதல் பிரேமிலே இது அன்டர்சனின் திரைப்படமாக இருக்கும் என்று கண்டுபிடித்துவிட்டேன். அன்டர்சனின் பெரும்பாலான திரைப்படங்களில் பெரிதாக கதை என்று எதுவும் இருக்காது. ஆனால் அவை எடுக்கப்படும் விதத்தில் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கும். அவரின் Budapest Hotel படத்துக்குப் பிறகு நான் இரசித்துப் பார்த்த திரைப்படம் இதுவென்று சொல்வேன். பெரும் நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் வந்து போகின்றளவுக்கு அன்டர்சனின் திரைப்படங்களுக்கு ஒரு மரியாதை திரையுலகில் இருக்கின்றது. கொஞ்சம் பொறுமையாக அதிகம் பரிட்சயமில்லாத திரைமொழியில், ஆனால் அவ்வளவு அழகான திரைச்சட்டங்களுடன் (visual treats) ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்கான திரைப்படம் இது.
****
No comments:
Post a Comment