Monday, December 01, 2025

கார்காலக் குறிப்புகள் - 119

 

டந்த சில நாட்களாக ரேய் பிராட்பரியின் 'Zen in the art of writing' ஐ வாசித்துக் கொண்டிருந்தேன். அது அவரின் எழுத்து அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகளாகும்.  இதில் 1950 இலிருந்து 1990 வரை அவர் எழுதிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகளை வாசிக்கும்போது ரேய் எவ்வளவு ஆழமாக எழுத்தை நேசித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. அத்துடன் அவர் எவ்வளவு தான் விரும்பிய எழுத்துக்காக உழைத்திருக்கின்றார் என்பதையும் நாம் கண்டுகொள்ளவும் முடியும்.


டந்த சில நாட்களாக ரேய் பிராட்பரியின் 'Zen in the art of writing' ஐ வாசித்துக் கொண்டிருந்தேன். அது அவரின் எழுத்து அனுபவங்கள் சார்ந்த கட்டுரைகளாகும்.  இதில் 1950 இலிருந்து 1990 வரை அவர் எழுதிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டுரைகளை வாசிக்கும்போது ரேய் எவ்வளவு ஆழமாக எழுத்தை நேசித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. அத்துடன் அவர் எவ்வளவு தான் விரும்பிய எழுத்துக்காக உழைத்திருக்கின்றார் என்பதையும் நாம் கண்டுகொள்ளவும் முடியும்.
Uploaded Image

ஒரு புதிய எழுத்தாளருக்குத் தேவைப்படும் பல விடயங்களை தன் அனுபவம் சார்ந்து ரேய் இதில் சொல்லிக்கொண்டே போகின்றார். அதில் ஒன்று தினமும் ஆயிரம் வார்த்தைகள் எழுதுவது. ஒருவருக்கு சிறுகதை எழுத்தாளராக விருப்பம் என்றால், வாரம் ஒருகதை என ஒரு வருடத்துக்கு நிறுத்தாமல் கதைகளை எழுத வேண்டும் என்கின்றார். ஒரு வருடத்தில் அப்போது 52 கதைகளையாவது எழுதியிருப்பீர்கள். நிச்சயமாக அதில்  தூக்கி எறியவோ/எரிக்கவோ வேண்டிய நிறையக் கதைகள் இருக்கும். ஆனால் அந்த 52இல் எப்படியேனும் ஒரு  சில  நல்ல சிறுகதைகளையாவது உங்களையறியாது எழுதியிருப்பீர்கள் என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்வீர்கள் என்கின்றார். அவரது பன்னிரண்டாவது வயதில் இருந்தே இப்படி தினம் எழுதும் பழக்கத்தை ரேய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே ஒரு புனைகதை எழுத்தாளருக்கு தினம் கவிதைகள் வாசிப்பது என்பது முக்கியமானது என்கின்றார். கவிதையானது நம் மனதில் படிமமாக, உருவமாக, ஏதேனும் ஒரு அரிய சொல்லாகத் தங்கிவிடுகின்றது. அவ்வாறே  நாம் கதைகளையும் ஏதேனும் ஒரு புதிய சொல்,  ஒரு படிமம் போன்றவற்றில் இருந்து நெய்து கொள்ளமுடியும் என்கின்றார். ரேய் நீண்டகாலத்துக்கு இரவு தூங்கிவிட்டு எழுந்தவுடன் கனவில் வருகின்ற சொற்களைக் குறித்துக்கொள்வார் என்றும் பிறகு அந்தச் சொற்களை வேறு சொற்களுடன் இணைத்துப் பார்த்து தன் புனைவை எழுதுவார் என்றும் சொல்கிறார். அதுபோலவே ஓரிரு பக்கமாயினும், இரண்டு சிறுகதைகளையும், புனைவல்லாத ஓரிரு கட்டுரைகளையும் தினம் வாசிப்பது ஒரு படைப்பாளிக்கு முக்கியம் என்கின்றார்.

ரேய் அவரின் பிரசித்தம் பெற்ற 'Fahrenheit 451' எழுதிய கதையைச் சுவாரசியமாக இந்தத் தொகுப்பில் சொல்கிறார். அவரிற்கு அப்போது குடும்பம் வந்துவிட்டது. பிள்ளைகள் அவரை வீட்டில் இருந்து எழுத விடுவதில்லை. ரேய் அருகிலிருந்த நூலகத்தின் நிலவறையில் எழுதுவதற்கு ஓரிடத்தைக் கண்டுபிடிக்கின்றார். அங்கே ஒரு பத்து சதம் போட்டால், ஒரு ரைப்ரைட்டரை அரை மணித்தியாலத்துக்கு வாடகைக்கு எடுத்து எழுதலாம். அவ்வாறு எட்டு டொலர் எண்பது சதத்தோடு எழுதிய நாவல்தான் 'பாரனைட் 451' என்று சொல்கிறார். இதை எழுதும்போது என்ன சிக்கல் என்றால், ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் 10 சதம் போட்டால்தான் தொடர்ந்து எழுதமுடியும். எழுத்து உள்ளே பொங்கிவரும்போது ரைப்ரைட்டர் நிற்பதும், அதற்குள் காசைப் போடுவதும் ஒரு தலையிடி பிடித்த பிரச்சினை என்கின்றார்.

நூல்கள் தடைசெய்யப்பட்டு அப்படி எங்கேனும் நூல்கள் கண்டுபிடித்தால் எரிக்கின்ற சட்டம் இருக்கின்ற இந்த நாவலை, நான் பல நூற்றுக்கணக்கான நூல்கள் கொண்ட ஒரு நூலகத்தில்தான் எழுதினேன் என்றால் உங்களால் நம்பமுடியுமா என்று ரேய் நம்மிடம் கேட்கிறார்.

துபோலவே 70களில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைதான், 'Zen in the art of writing'. உண்மையில் ரேயுக்கு அப்போது ஸென் குறித்து எதுவும் தெரியாது. அவர் அப்போதுதான்  'Zen in the Art of Archery' ஐ வாசித்திருக்கின்றார்.  ஒரு வித்தையில் தேர்ச்சி பெறவேண்டுமென்றால் அதில் கூறப்பட்ட 'Don't Think' என்பது இவரைக் கவர்கின்றது. ஓர் ஓட்டக்காரனோ, நீச்சல்காரனோ ஓடும்போதோ நீந்தும்போதோ எதையும் யோசிப்பதில்லை. அவனது சிந்தனை முழுதும் ஒரு உடலாக குவிகின்றது. அதுபோலவே எழுதும்போதும் நீங்கள் எதையும் யோசிக்காமல் என்ன வருகின்றதோ அதை எழுதுங்கள் என்கின்றார். WORK -RELAXATION- DON'T THINK இந்த மூன்றையும் தாரக மந்திரமாகக் கொண்டு, உங்களுக்கு விரும்பிய ஒழுங்கில் அதை மாற்றி அமைத்து, தீவிரமாக எழுதுங்கள் என்கின்ற கட்டுரை இந்த நூலில் நல்லதொரு கட்டுரையாகும்.

ரேய், தனது கதைகளை தனித்தனிப் பெயர்ச்சொற்களாக (Nouns) எழுதி அவற்றை சம்பவங்கள்/பாத்திரங்களை இணைப்பதன் மூலம் கதைகளாக எழுதுவது தனக்கு இலகுவாக இருக்கின்றது என்கின்றார். அதைபோல எதை எழுத உட்காரும்போதும் அதைக் குறித்து எதையும்  யோசிக்காது எது வருகின்றதோ அதை அப்படியே எழுதுங்கள் என்கின்றார்.

அப்படி எழுதும் முதற்பிரதிதான் உங்களுக்குச் சந்தோசம் தரக்கூடியது. பிறகு நீங்கள் திருத்தி வெட்டி முறித்து செய்யபோகும் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரப்போவதில்லை. ஆகவே அந்த முதற்பிரதி தரும் இன்பத்தை ஒருபோதும் கைவிடாமல் அந்தக் கதையை அதன் போக்கில் யோசிப்பதற்கு இடங்கொடுக்காமல் எழுதிச் செல்லுங்கள் என்கின்றார்.

நம் மொழியில் 'கண்டதையும் கற்று பண்டிதன் ஆகுங்கள்' என்று சொல்வதுபோல, ரேய் தொடக்க காலத்தில் உங்களால் முடிந்தவரை அளவு கணக்கில்லாது எழுதுங்கள். அதில் நிச்சயம் எறியவேண்டியவை நிறைய இருந்தாலும், காலம் செல்லச் செல்ல உங்களை அறியாமலே நீங்கள் தரமான படைப்புக்களை எழுதத் தொடங்கிவிடுவீர்கள் என்கின்றார் ('Quantity gives experience. From experience alone can quality come').

அதுபோல நல்லதொரு படைப்பாளி என்பவர், சிறந்ததை எழுதுவது மட்டுமில்லை, எதை எழுதக்கூடாது, எதை ஒரு படைப்பில் சேர்க்கக்கூடாது, எப்படி எளிமையாகச் சொல்வது என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும், அதுவே சிறந்த கலையை உருவாக்கும் என்கின்றார்.

ஒரு பியானோ கலைஞன் ஒவ்வொருநாளும் பயிற்சி பெறவில்லை என்றால், அது அவனுக்குத் தெரியும். இரண்டு நாட்களாகப் பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரு விமர்சகர் கண்டுபிடித்துவிடுவார். அதே கலைஞன் மூன்றுநாட்கள் பியானோவைத் தொடவில்லை என்றால், அவனுடைய பார்வையாளர்கள் எளிதில் அதை அறிந்து விடுவார்கள். அதுபோலவே எழுதுகின்றவர்களும் உண்மையில் எழுத்தின் மீது ஆர்வமும் விருப்பும் இருக்கின்றதென்றால் தினம் அது எவ்வகை எழுத்தாக இருப்பினும் தொடர்ந்து எழுதுங்கள் என்கின்றார்.

எனக்குப் பிடித்த ரேயினுடைய  ஒரு மேற்கோள் இருக்கின்றது: அது இப்படிச் சொல்வதாக இருக்கும்: "உங்களை யதார்த்தம் அழிக்காது இருக்க வேண்டுமாயின் நீங்கள் எழுத்தின் போதையோடு எப்போதும் இருக்க வேண்டும்".

***

No comments:

Post a Comment