எனது ஸென் ஆசிரியரான தாய் ஒருமுறை விமானநிலையத்துக்குப் போனபோது அவரது மாணவர் ஒருவரிடம், 'இப்போது புத்தர் இருந்திருந்தால் விமானமேறிப் போயிருப்பாரா?' எனக் கேட்டிருக்கின்றார். அவரது மாணவர் அதற்குப் பதிலளிக்க முன்னரே, 'நிச்சயமாக புத்தர் விமானமேறி பல்வேறு கண்டங்களுக்கு தம்மத்தைப் போதிக்க சென்றிருப்பார்' என்று தாயே சொல்லியிருக்கின்றார்.
புத்தர் மறைந்தபின் பல்வேறு பிரிவுகள் பெளத்தத்தில் தோன்றியிருந்தன. அதில் தேரவாத பெளத்தம், பாலி மொழியில் இருந்த புத்தரின் போதனைகளை அப்படியே பின்பற்றி ஞானமடைதல் என்ற பாதையில் போக, மகாயான பெளத்தமோ புத்தரின் போதனைகளை ஒரு வாகனமாக்கி தனியொருவரும் பிறரும் கூட்டாக ஞானமடைதல் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்தது.
தேரவாத பெளத்ததில் புத்தர் ஒருவரே மூலவர், மகாயான பெளத்ததில் பல புத்தர்களுக்கும், போதிசத்துவர்களுக்கும் இடமுண்டு. அவர்கள் போதிசத்துவர்களாக இருந்து பிறருக்கு கற்பிப்பதன் பொருட்டு நிர்வாணமடைதலைத் தள்ளிவைக்கவும் முடியும் என்று மகாயானம் கூறுகின்றது.
என்னுடைய ஆசிரியர் தாய் மகாயானப் பிரிவைச் சேர்ந்தவர். எனவே அவர் மகாயானத்துக்குரிய தனித்துவமான Lotus Sutra, Heart Sutra போன்றவற்றை அடிக்கடி பாவிப்பார். அதற்காய் தேரவாதப் பிரிவு பாவிக்கும் பாளி கனன்களை முற்றாக விலத்தி வைத்தவர் என்றில்லை. தேவைக்கேற்ப அந்தப் பாளி கனன்களையும் அவர் பாவிப்பதுண்டு.
*
இன்று அமெரிக்காவிலும், கனடாவிலும் பாரிய பனிப்பொழிவு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 'Walk for Peace' என்று 120 பயணத்தில் 92ஆவது நாளாகத் தொடர்ந்து நடந்தபடியிருக்கும் பிக்குகளை (கிட்டத்தட்ட இப்போது 2 மில்லியன் மக்கள் சமூகவலைத்தளத்தில் பின் தொடர்கின்றார்கள்) தயவுசெய்து இன்றாவது நடக்காது ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுங்கள் என்று பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். என்றாலும் தினம் 20-30 மைல்களாவது நடப்பது என்று தீர்மானித்தன்படி இன்றைக்கும் அவர்கள் பெரும்பனிக்குள்ளும், சறுக்கும் தெருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நீண்ட பயணத்தைத் தொடங்கிய பிக்குவான பின்னங்கரா, தான் இதுகுறித்து மூன்று வருடங்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு மக்கள் அமெரிக்காவிலும், உலகிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதுவே அமைதிக்காக நடப்பதற்கான சரியான தருணமென நடக்கத் தீர்மானித்தேன் என்று கூறியிருந்தார். அவரின் ஆசிரியர்கள் அனுமதி கொடுக்க, பிற பிக்குகளோடு சேர்ந்து கடந்த புரட்டாதி மாதத்தில் இருந்து நடக்கத் தொடங்கியிருந்தார். ஆரவாமின்றித் தொடங்கிய இந்த நடைப்பயணம், இப்போது ஒவ்வொரு நகரின் மக்கள், மேயர்கள், கவர்னர்கள் கலந்துகொள்ள இன்று அது ஒரு பெரும் நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரமோ, 'இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்/ அப்பொழுது எனக்காக பேச எவருமே இல்லை' என்ற மார்ட்டின் மொல்வரின் கவிதைபோல, அரசதிகாரம் குடியேறிகள்/வந்தேறிகளைப் பிடித்து அனுப்பப் போகின்றோமெனத் தொடங்கி, இறுதியில் சொந்தமக்களையே சுட்டுக் கொல்கின்ற கொடுங்காலத்துக்கு அது இப்போது வந்துவிட்டது. எல்லா நம்பிக்கைகளும் இழக்கப்பட்டு கைவிடப்பட்ட மக்களுக்கு இந்த 'அமைதிக்காக நடத்தல்' என்பது கொஞ்சம் கருணையுடன் பற்றிக்கொள்ளும் ஓர் 'ஊடகமாக' இருக்கின்றது.
பிக்குகளும் தொடர்ச்சியாக தனியொருவரின் அமைதியே முக்கியமென தமது உரைகளில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஏதோ ஓரிடத்தில் நீங்கள் ஏன் இந்த அரசியல் அடாவடிகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது என்று கேட்கப்பட்டபோது, நாங்கள் அமைதிக்காக நடப்பவர்கள், ஒருவகையில் எமது ஆன்மீகப்பாதை அரசியல் பேசக்கூடாது என்பதைத் தடை செய்திருக்கின்றது. ஆனால் எங்களின் 'அமைதிக்கான நடத்தல்' என்பது நாளை நீதிக்காக நடத்தல் (Walk for Justice) என்பதற்கான விதையாக மற்றவர்களிடம் மாறினால் அதுவும் மகிழ்ச்சியானது என்றே அவர்கள் கூறியிருந்தனர்.
இன்னொரு இடத்தில், தனிமனிதர்கள் தாங்கள் கடுமையாக இன்னொருவரால விமர்சிக்கப்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்று கேட்கப்பட்டது. 'உங்கள் மீது ஒருவர் நெருப்புக் கோளத்தை வீசுகின்றார் என்றால், அதை நீங்கள் தாங்கிக் கொண்டால்தான் அந்த நெருப்பு உங்களை எரிக்கும். அதை ஏந்தாமல் கைவிடுங்கள். அப்படி கைவிடும்போது அந்த வினை எறிந்தவருக்கே மீளச் சென்று சேரும். ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அது உங்களுக்கானதாக மாறிவிடும், கவனம்' என்று ஒரு பிக்கு சொன்னார்.
இதற்கு மேலும் வலுவூட்ட, 'நீங்கள் நினைக்கின்றீர்களா, நாங்கள் இப்படி நடந்துவரும்போது எல்லாமே நல்லதுதான் நடக்கின்றது என்று. பல இடங்களில் எங்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கின்றார்கள். ஒருபொழுது காரின் சைலன்சரை அழுத்து எங்கள் முகம் முழுதும் கரியபுகையைப் படரவிட்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து நான் எதிர்வினை புரியவேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கக்கூடும். நாங்கள் அதைச் செய்யவில்லை, வழமைபோல எல்லோரையும் ஆசிர்வதிப்பதுபோல நீங்கள் நலமாகவும், மகிழ்வாகவும், அமைதியாகவும் இருங்கள் எனச் சொல்லிவிட்டுத்தான் அந்த மனதுக்கு உவக்காத சூழலையும் தாண்டி வந்து கொண்டிருக்கின்றோம்' என்று கூறியிருக்கின்றனர்.
இந்த அமைதிக்கான நடத்தலை முன்னின்று வழிநடத்தும் பன்னங்கரா என்கின்ற துறவி 44 வயதுடையவர். அவரது பதின்மத்தில் அமெரிக்காவுக்கு வந்து பொறியியலில் பட்டம் பெற்றுவிட்டு, இரண்டு வருடங்களாகச் செய்த வேலையை உதறிவிட்டு, பிக்குவாக மாற மடாலயத்தில் சேர்கின்றார். கிட்டத்தட்ட 17 வருடங்களாக துறவியாக அவர் இருக்கின்றார். ஆக இந்த 17 ஆண்டு தீராத பயிற்சியாலும், தேடலாலும் இந்தப் பிக்கு அவ்வளவு அமைதியாக ஒவ்வொரு விடயத்தையும் எதிர்கொள்ள முடிகின்றது, மக்களின் மனங்களோடு நெருக்கமாக உரையாடத் தெரிகின்றது.
பன்னங்கரா எனது ஆசிரியர் தாயைப் போன்று வியட்னாமியப் பின்னணியில் இருந்து வருகின்றவர். ஆனால் தேரவாதப் பெளத்தப் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவேதான் அவர் தெருக்களில் குழந்தைகளையும், முதியவர்களையும், நோயாளிகளையும் காண்கின்றபோது பிரித் ஓதி, கையில் நூலைக் கட்டி விடுகின்றார். இப்போது ஒவ்வொரு பெரும் கூட்டங்களின் பின்னும் Peace Bracelet எனக்கூறி அந்த நூலை மக்களுக்கும் அதை வழங்குகின்றார்கள். இது நீங்கள் எங்களைப் போன்ற பெளத்த துறவிகளைச் சந்தித்தீர்கள் என்பதற்காக மட்டுமின்றி, எங்களோடு சேர்ந்து (அபெளதீகமாக) வாஷிங்டன் டிஸிக்கு நடந்து வருவதாக நினைவூட்டவும் மட்டுமில்லாது, உங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களோடு சேர்ந்து அமைதியாக நடந்து வருவதற்கு இது எனச் சொல்லி அந்த நூலினை வழங்குகின்றார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின் அழிவின் பின்பாக, "இருண்ட காலங்களில் பாடல்கள் இருக்குமா? ஆம், பாடல்கள் இருக்கும், இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்" என்று பிரெக்ட் எழுதியிருப்பார். அப்படி இருண்ட காலங்களைப் பற்றி மட்டுமில்லை, நம்பிக்கை தரும் ஒளியைப் பற்றியும் பாடல்கள் இருக்குமென்பதை இந்த 'அமைதிக்காக நடத்தல்' நமக்குச் சொல்கின்றது. ஹெமிங்வேயோ அல்லது யாரோ, "நாங்கள் எல்லோரும் உடைந்து போனவர்கள், ஆனால் அப்படி உடையும்போதுதான் ஒளி உள்ளே நுழையும்' என்று சொன்னமாதிரி அவநம்பிக்கையான காலங்களில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு எழும் இவ்வாறான கரங்கள்தான் எவ்வளவு இதமானவை.
***
நன்றி: புகைப்படம் (walk for peace fb page)

0 comments:
Post a Comment