கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'

Friday, October 17, 2025

நூல் அறிமுகக் குறிப்பு. -அரசி விக்னேஸ்வரன்


பிந்திய இரண்டாயிரங்களில்   இணையப் பாவனை வளர்ந்து Blog மூலம் தமது எழுத்து, வாசிப்பு உலகை இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருப்பவர் இளங்கோ. கவிதை, சிறுகதை, நாவல் என புனைவு இலக்கியத்திலும் திரைப்பட விமர்சனம், பயணக்கட்டுரைகள் என்றவகையில் அபுனைவு எழுத்திலும் கால்பதித்திருப்பவர். தனக்கேயுரிய மொழிநடையுடன் அவர் எழுதும் முகப்புத்தகப் பதிவுகள் கூட சுவாரசியமான வாசிப்புக்குகந்தவை.  அவரது எட்டாவது புத்தகமும் இரண்டாவது சிறுகதைத் தொகுதியுமான "நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்" என்ற நூல் கடந்த ஜூலை பத்தொன்பதாம் திகதி மாலை ரோறொன்றோவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

இந்தப்புத்தகம் 2011 முதல் 2024 வரையான 13 வருட காலப்பகுதிக்குள் இளங்கோ எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பாக சென்னை டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில் வெளிவந்துள்ளது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் இளங்கோ தனது புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.  புத்தகத்தின் உள்ளடக்கத்தினுள் புகமுன்னர் எனக்கு இருந்த விமர்சனம் என்னவெனில் இந்தப் புத்தகத்துக்கு ஏன் எந்த முன்னுரையும் எழுத்திச் சேர்க்கப்படவில்லை என்பதுதான். புத்தகத்தின் பின் அட்டையில் பா.அ. ஐயகரன் அவர்களின் ஒரு சின்னக் குறிப்பு மட்டும் இடம்பெற்றிருக்கிறது. 


இந்தப் புத்தகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இளங்கோ பல இதழ்களில் எழுதி வெளியிட்ட கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை காலக் கிரமத்தில் புத்தகத்தில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதும் தெளிவற்று இருந்தது. உள்ளடக்கப் பக்கத்தில் கதைகள் எழுதப்பட்ட ஆண்டுகளையும் சேர்த்திருக்கலாம். இவற்றில் மிகப்பழைய கதை எது என்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லாக் கதைகளையும் நான் இருமுறை புரட்டிப் பார்க்கவேண்டியிருந்தது.


முதல் வாசிப்பில் இளங்கோவின் புத்தகம் எனக்கு ஒரு சுவாரசியமான  இலகுவான வாசிப்புக்கு உகந்த ஒன்றாகவே பட்டது. ஆனால் வாசித்து முடித்தபின்னர் யோசிக்க யோசிக்க அர்த்தங்கள் புலப்படும் தன்மை கொண்ட கதைகளைக் கொண்டிருந்தது. புத்தக வெளியீடன்று உரையாற்றிய மைதிலி தயாநிதி அவர்கள் பின் நவீனத்துவப் பார்வையுடன் இக்கதைகளை ஆராய்ந்திருந்தார். வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான வாசிப்பனுவத்தையும் அர்த்தப்படுத்தல்களையும் இக்கதைகள் கோரி நிற்பதைப்  புரிந்து கொள்ள முடிந்தது. 


புத்தகத்தின் தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகின்றது. இலங்கை அரசியல் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் பலருக்கு புத்தர் என்பவர் அதிகாரத்தினதும்  ஆக்கிரமிப்பினதும் குறியீடாகத் தெரியலாம்.   மனைவியையும் குழந்தையை யும் விட்டு சந்நியாசியாகிய அவருக்கும் முத்தத்திற்கும்  என்ன சம்பந்தம் என்றும் சிலர் நினைக்கலாம். கதைசொல்லி தேடும் அமைதி, திருப்தி அல்லது பூரணம் என்பதற்கு கதைசொல்லி அவரைக் குறியீடாக்குகிறான். தலைப்புக் கதை அதற்கு நல்ல உதாரணம். புத்தர் கதைசொல்லியை ஒரு அவதானியாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அல்லது அவர் தன்னைப் பார்ததுக்கொண்டிருக்க வேண்டும் என்று கதைசொல்லி அவாப்படுகிறான். வெளியில் தெரியாத அவன் மன ஓட்டங்களுக்கு புத்தர் சாட்சியாகிறார். அவன் வாழ் க்கையின் அர்த்தத்தைக்  காதல் , காமத்தினூடு கண்டடைகிறபோது புத்தரை அங்கே கண்டடைகிறான்.  இளங்கோவின் கதைகளில் புத்தர் மட்டுமல்ல, இடையிடையே வைரவர், இயேசுநாதர், யோகர் சுவாமி, சோக்கிரடீஸ், காஃப்கா, எனப் பலரும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தினூடு வந்து போகிறார்கள். 


முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த விடயம் இளங்கோவின் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் வரும் கதைசொல்லியின் தன்மை. அவன் புறஉலகில் சஞ்சரிப்பது கனவு போல இருக்கும் அளவுக்கு அக உலகில் அதிகம் சஞ்சரிப்பவனாக இருக்கிறான். மாநகரவாசியாகவும் தளைகள் அற்றவனாகவும் எல்லாவற்றிலும் இருந்து விலகியவனுமாக இருக்கிறான். இந்த "அந்நியனை"த்தான் "விளிம்பு நிலை மனிதனாக" மைதிலி தயாநிதி அவர்கள் நோக்கினார்கள். 


ஆனால் எனக்கு அவன் நினைத்த நேரம் நினைத்த முடிவை எடுக்ககூடிய, முகம் தெரியாத ஒரு பெண்ணோடு திட்டமிடாத ஒரு தாய்லாந்துப் பயணத்துக்கு ஒரே நாளில் கிளம்பிவிடக்கூடிய அல்லது வேலைக்கு லீவு போட்டுவிட்டு கால் போன போக்கில் நடந்து வழியில் உணவகத்தில் உணவருந்தி ஏற்கனவே பிரிந்த பழைய காதலியுடன் இரவு விடுதியில் தாங்கிவரக்கூடிய, ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் வரைமுறைகளுக்கும் அப்பாற்பட்ட  வாழ்வை வாழ்பவனாகத்  தெரிந்தான். அந்தக் கதைசொல்லியின் மனவோட்டத்தினூடு பயணிப்பதும் அவனது பார்வைக்குள்ளால் நகரங்களையும் இயற்கையையும் தரிசிப்பதும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது.


இந்தப் புத்தகத்தில் ஒரு சில கதைகள் மொழி பெயர்ப்புக் கதைகளாக இருந்திருக்கலாம் என்று தோன்றுமளவுக்கு இலங்கை அல்லது புலம்பெயந்த தமிழ்க்  கதாபாத்திரங்களை அல்லது பழக்கமான இடங்களை குறிப்பிடாமலேயே அமைந்திருந்தன. ஆனால் ஒரு சில கதைகள் போர், இலங்கை அரசியல் என்பவற்றை நேரடியாகவே தொட்டிருக்கின்றன. 



தொகுப்பின் முதலாவது கதை "அரசன் அன்று கொன்றால் லியனகே நின்று கொல்வார்". இக்கதையில் கதாநாயகன் ஒரு  சிங்கள இளைஞனாக இருக்கிறான். அரசியல் போராட்டம், ஆயுதப்போராட்டம் எல்லாம் தோற்ற நிலையில் பேனாவால் போர்தொடுத்த ஊடகவியலாளர்கள் எல்லாரும் காணாமல் போய்க்கொண்டிருந்த வேளையில் எல்லாருக்கும் இருந்த ஆற்றாமையை இந்தக்கதை தொடுகிறது. குற்றவாளிக்கு இருக்கும் குற்றவுணர்சசியை வைத்தே ஒருவகை பழிவாங்கலை நடாத்திகாட்டுகிறது எதிர்பாராத திருப்பத்தினைக் கொண்ட இந்தக் கதை. 


"வெள்ளவாய்க்கால் வைரவர்" என்னும் இன்னொரு கதை இந்திய இராணுவக் காலத்தில் அமைந்து, ஒரு சிறுவனைக் கதைசொல்லியாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுவது போல் அநேகமான இடகங்களில் இருந்தாலும் சில இடங்களில் அவன் வளர்ந்தபின் சொல்வதுபோல, இளங்கோவின் வழமையான கதைசொல்லி எட்டிப்பார்க்கும் இடங்களில் அமைகிறது. இந்தக் கதையும் காவல் தெய்வமான வைரவரைக் கூடக் காக்க முடியாத, அநியாயங்கள் நடப்பதை பார்த்தும் மௌனியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் ஆற்றாமையையம் அது ஏற்படுத்தக்கூடிய ஆழமான மனவடுவினையும் துலக்குகிறது. 


இந்தத் தொகுப்பில் எல்லாக் கதைகளிலும் இழையோடும் இன்னொரு கருப்பொருள் காதல். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேறாத அல்லது நிலைக்காத காதலாகவே அமைகிறது. "முள்ளிவாய்க்கால்" என்னும் கதையில்  பதின்ம வயதில்  மலர்ந்து பின் யுத்த காலத்தையும் இறுதிப்போரையும் தாண்டி  கடைசிவரை ஒருவருக்கொருவர் சொல்லப்படாமலேயே போய்விட்டாலும் வாசகர்களின் மனதில் பதிந்து விடக்கூடிய ஒரு காதலுக்கு இளங்கோவின் கதைசொல்லி சாட்சியாகிறான். 


தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்பட வேண்டியதென நான் நம்பும் அதிகம் புரிந்துகொள்ளப்படாத  உளவியல் நோய்க்கூறுகளையும்  சில கதைகள் தொட்டுச்செல்கின்றன. "ஏகாந்தம் என்பதும் உனது பெயர்" கதையில் "Bipolar disorder " இனால் பாதிக்கப்பட்ட கதைசொல்லி அது தன்னை எப்படிப்  பாதிக்கிறது என்பதை அவனே மனதுக்குள் கவனித்துக்கொண்டு இருப்பதும் அதற்கு ஒரு உதாரணம். பராமரிக்கப்படாத உளவியல் சிக்கல்கள் எவ்வளவு துரத்துக்கு ஒருவரை இட்டுச்செல்லக்கூடும் என்பதை "உறைந்த நதி" கதை எமக்கு உறைக்க வைக்கிறது. 


தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளைப் பற்றியும் எழுதுவதற்கு நிறைய இருப்பினும் இக்கதைகள்  வாசகர்களின் தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தையும் கோருபவை  என்பதால் வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டும், இளங்கோ தொடர்ந்தும் எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் கொண்டுவந்திருக்கும் ஒரு தனித்துவமான இடத்தை இன்னும் விஸ்தரிக்க வேண்டும் என்ற அவாவுடன் இந்தக் குறிப்பை முடித்துக்கொள்கிறேன்.

 

*******


('அம்ருதா' ஐப்பசி இதழில் வெளிவந்தது; கனடாவில் நடைபெற்ற 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியதன் சுருக்கிய எழுத்து வடிவம்)


0 comments: