கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திரைப்படங்கள் குறித்த சில குறிப்புகள்..

Sunday, April 28, 2024

  (ஓவியங்கள்: ஊக்ரா) 

 

னது அண்மைக்கால பதிவுகளை ஒரு தமிழ்நாட்டு இயக்குநர் வாசித்திருக்கின்றார் போலும். முக்கியமாக ப்யூகோவ்ஸ்கி பற்றியும், திரைப்படங்கள் குறித்தும் நான் எழுதியது அவருக்குப் பிடித்திருந்தது. எனக்கு அவரின் தொடர்பு எண்ணை அனுப்பியதோடல்லாது, voice message ம் விட்டிருந்தார். எனக்கு அவர் பிடித்த நெறியாளர் மட்டுமில்லாது, அவரின் சினிமா/இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்களையும் நான் பின் தொடர்ந்து கொண்டிருப்பவன் என்பதால் அவரது அழைப்பு ஒரு இனிய அதிர்ச்சியாக இருந்தது. நேரமிருக்கும்போது பேசுவோம், உங்களின் திரைக்கதையோடு சேர்ந்து வேலை செய்வோம் என்று அழைத்திருந்தார். அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்குக் காலம் கனியுமா இல்லையா என்பதை எதிர்காலத்துக்கு விட்டாலும், இதை ஏன் சொல்கின்றேன் என்றால், எழுத்து அழைத்துச் செல்லும் வியப்பான திசைகளைப் பற்றிக் குறிப்பிடத்தான்.

நேற்று வேலையால் வந்த களைப்பு இருந்தாலும் (இந்த வேலை என் நேரத்தையும், மனதையும் அடிவரை உறிஞ்சி எடுத்து சோர்வுறச் செய்தாலும்) ஒரு நண்பரின் தொலைபேசி அழைப்புக்குப் பதில் அழைப்பு எடுத்திருந்தேன். ஏதேதோ சொல்லமுடியாத காரணங்களால் தனித்திருப்பவர்கள் மீது எனக்கு அதீத ஈர்ப்புண்டு. நண்பர் தனது இளமைக்காலத்தில் பார்த்த சிங்களப் படங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவை பெரும்பாலும் கறுப்பு-வெள்ளையானவை. ஆனால் அந்தக் காட்சிகள் அவரிடம் இவ்வளவு தசாப்தங்கள் ஆனபிறகும் மறக்காமல் இருக்க, அவற்றையெல்லாம் விரிவாக நினைவுபடுத்த அவரால் முடிந்தது. இத்தனைக்கும் அவருக்குச் சிங்களம் தெரியாது. திரைப்படத்தின் மொழி தெரியாமலே அத்திரைப்படங்கள் கவர்ந்திருக்கின்றன மட்டுமில்லை, இத்திரைப்படங்களே தன்னை எழுத்து, இன்னபிற கலைகளுக்கும் கைகோர்த்து அழைத்துச் சென்றன என்றார். இப்போது தானெழுதும் எதற்கும், இந்த 'மொழி' தெரியாத திரைப்படங்களே அடிப்படைக் காரணமென நெகிழ்ந்தார். அப்படியெனில் திரை என்னும் காட்சிமொழி எவ்வளவு வீரியமானது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இலங்கையில் நின்றபோது நண்பர் இளங்கோ ராம் தனது திரைப்படமான 'Tentigo' ஐ எனக்கான தனிப்பட்ட காட்சியாகத் திரையிட்டுக் காட்டியிருந்தார். இத்திரைப்படத்தின் கதை என்பது கொஞ்சம் 'ரிஸ்கி'யானது. பார்வையாளர் அதன் முக்கிய கதையிழையைத் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்டால், முழுத்திரைப்படமே அபத்தமாகிப் போய்விடும். கத்தியில் கால் வைத்து நடக்கும் கதையில் திரைக்கதை வலுவாகக் கட்டியமைக்கப்பட்டதால் என்னால் முழுத்திரைப்படத்தோடும் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. இப்போது அது Tallinn, Glasgow போன்ற இடங்களில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அதற்கு விருதுகளும் கிடைத்திருக்கின்றன. முற்றுமுழுதாக சிங்களக் கலைஞர்கள் நடித்த அந்த சிங்களத் திரைப்படத்தை நான் அவர்களின் வாழ்வியல் தெரிந்த ஒருவனைப் போல இருந்து இரசித்தேன். விரைவில் இளங்கோ ராம் இந்தியாவிலும் சென்று திரைப்படத்தை இயக்கவிருக்கின்றார் என நினைக்கின்றேன். பிரசன்னா விதானகேயும் இப்போது மலையாள நடிகர்களை வைத்து இந்தியாவில் ஒரு படத்தை இயக்கியிருக்கின்றார். எனவே திரைப்படங்கள் மொழியைத் தாண்டிய பார்வையாளர்களை மட்டுமில்லை, நல்ல நெறியாளர்களை அவர்கள் படங்களை இயக்க நாடுகள் தாண்டியும் அழைத்துச் செல்லும் எனச் சொல்லிக் கொள்ளலாம்.

 

ன்று இலங்கையில் எடுத்த ஒரு திரைப்படத்தை இங்குள்ள திரையரங்குச் சென்று பார்த்தேன். என் நண்பனின் பங்கும் திரைக்குப் பின்னால் இருக்கின்றது என்பதாலும் அதைத் தவறவிடக்கூடாது என்று நினைத்தேன். அரங்கு நிறையப் பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை, நடிகர்கள் தேர்வு கூட நன்றாக இருந்தது. ஆனால் திரைக்கதையின்போது குழுவினர் அனைவரும் நன்றாகத் தூங்கிவிட்டனர் என நினைக்கின்றேன்.

இன்றைய காலங்களில் மனதுக்கு உவப்பில்லாத புத்தகங்கள்/திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளும் காலத்துக்கு வந்துவிட்டேன். ஆனால் இத்திரைப்படம் உண்மையிலேயே தலையிடியைத் தந்திருந்தது. அது என்னை எவ்வளவு புறமொதுக்கியதென்றால், படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓரிரு கட்டுரைகளை அலைபேசியில் வாசித்து முடிக்கும் அளவுக்குச் செய்திருந்தது.

இவர்கள் புதியவர்கள் என்பதால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் 30 நிமிடங்களுக்குள் ஒரு குறுந்திரைப்படமாக எடுக்க வேண்டியதை 2 மணித்தியாலம் நீளமாக எடுத்து பார்வையாளர்களைக் கொல்லக்கூடாது. திரைப்படம் முழுதும் அபத்தம் நீக்கமற இருப்பது ஒருபுறம் இருந்தால், கதையே இல்லாமல் சும்மா 'காட்சிகளை' இனி அலுப்பே ஆக முடியாது என்றளவுக்கு நீட்டித்துக் கொண்டிருந்தனர்.

தம்பிமாரே, இதைத்தான் நான் 10 வருடங்களுக்கு முன்னர் இங்கு தமிழ்த்திரைப்பட விழாக்களின்போது ஜூரிகளில் ஒருவராக இருந்தபோது வருடம் வருடம் பார்த்தேன். அந்தச் சோகத்தையே இப்போது நீங்களும் வைத்துச் செய்து கொண்டிருந்தால் நியாயமா? திரைப்படம் என்பது எத்தனைபேரின் கடினமான உழைப்பால் முழுவடிவம் எடுத்திருக்கும்? நீங்கள் திரைக்கதையை நன்கு செதுக்கி, வலுவாக்கி இருந்தால் அனைவரின் உழைப்பும் மதிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இப்படி உங்களோடு உழைத்தவர்களை மட்டுமில்லை, உங்களை நம்பி படம் பார்க்க வந்தவர்களையும் கைகழுவிட்டுவிட்டு, திரைப்படம் முடிந்தபின் திரையில் 'இந்திய சினிமாவிட்டு ஈழச்சினிமாவை ஆதரவளிக்கவேண்டும்' என்று விரிவுரை கொடுப்பது நியாயமா சொல்லுங்கள். உங்களின் படைப்பை நம்பித்தானே -பிற தமிழ்/ஆங்கில படங்களுக்குக் கொடுக்கும் ரிக்கெட் விலையை விடக் கூட கொடுத்து- பார்வையாளர்கள் நாங்கள் வந்து அரங்கை நிறைத்து இருந்தோம். ஆனால் நீங்கள் நமக்குத் தந்ததுதான் என்ன? இதைவிட கடந்தவருடத்தில், "சாம் சூஸைட் பண்ணப் போறானில்" சின்ன அதிர்ச்சியைக் கதையின் முடிவில் வைத்து, கடற்கரை, தேவாலயப் பின்னணியில் நல்லதொரு குறுந்திரைப்படம் தந்தவர்களும் இதே யாழ்ப்பாணத்தவர்கள்தானே?

ஆக, ஈழத்து/புலம்பெயர் படங்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை என்றெல்லாம் குறைகூறாது, நல்லதொரு திரைப்படத்தை முதலில் தாருங்கள். ஒரு திரைப்படம் ஓடுமா, ஓடாதா என்பதைவிட நாங்கள் எங்களால் இயன்றவரை சிறந்த படைப்பைக் கொடுத்திருக்கின்றோம் என்று மனநிறைவை நீங்கள் அடைதலே முக்கியம். மேலும் தயவுசெய்து தமிழகத்துப் படங்களைப் போல போலி செய்யாதீர்கள். அது உங்களை எங்குமே அழைத்துச் செல்லாது. அது உங்களின் தன்னிருப்பையே இறுதியில் அழித்துவிடும். தமிழகத்துத் திரைப்படம் போல பாவனை செய்துகொண்டு, இந்தியத்திரைப்படங்களை விடுத்து ஈழச்சினிமாவுக்கு ஆதரவு தாருங்களென நீங்கள் கேட்பது எவ்வளவு போலித்தனமானது இல்லையா? நகைச்சுவையே வராத விடயங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் திரையில் இறக்குவதைப் போல ஓர் ஆபாசம் இல்லையென்பதை நீங்கள் ஒருநாள் அறிந்து வெட்கிக்கவும் கூடும்.

அறிவுரையாக இல்லாது உங்கள் தோளணைத்து நிறைய மலையாள, சிங்களத் திரைப்படங்களை பாருங்கள் எனச் சொல்லப் பிரியப்படுகின்றேன். இயன்றால் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நல்ல கதைகளை வாசியுங்கள். அதிலிருந்தும் திரைக்கதைகளை உருவாக்க முயலுங்கள். நல்ல கதையோடு வந்தால் நீங்கள் கேட்காமலே ஈழத்தவர் அல்ல, உலகத்தவர்களே கூட உங்களை அரவணைத்துக் கொள்வார்கள். 

 

லக்கியத்துக்குக் கூட மொழி என்கின்ற ஓர் எல்லை இருக்கின்றது. ஆனால் திரைப்படங்கள் அழைத்துச் செல்லும் திசைகளோ விசாலமானது. எனது நண்பர் மொழியே தெரியாத சிங்களத் திரைப்படங்களைப் பார்த்து இன்றும் சிலாகித்துக் கொண்டிருப்பதைப் போல, மிகப்பெரும் தணிக்கையிருந்தும் ஈரானிலிருந்து வரும் திரைப்படங்களைப் பார்த்து நான் நெகிழ்வுற்றதைப் போல உங்களுக்கான சிறகுகளை விரிப்பதற்கும் இந்த வானம் பரந்திருக்கின்றது. உங்கள் கூட்டுழைப்பை இத்திரைப்படத்தைப் போல வீணாக்கிவிடாதீர்கள். கற்றுக்கொள்ளும் ஆவல் இருப்பின் நீங்கள் நம்மண்ணின் தனித்துவங்களோடு ஒரு மகேஷின்டே பிரதிக்காரத்தையோ, Children of Heaven யோ, Oba Nathuwa Oba Ekka எடுக்க முடியும். ஆனால் நீங்கள் உங்கள் திரைக்கதைகளுக்கு நேர்மையாகவும், அசலாகவும் இருக்கவேண்டும். நாளை அப்படியான நெறியாளர்களாக மாற என் வாழ்த்துகள், ஆனால் இப்படியான தலையிடிகளைத் தொடர்ந்து தருவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோடிகளிடமிருந்து நல்லதை மட்டுமில்லை, நல்லதல்லாதவற்றை செய்யாததையும் கற்றுக் கொள்ளலாம், தவறே இல்லை. அதைக் கொஞ்சம் பொறுமையாகக் கூடக் கற்றுக்கொள்ளலாம். எம் கனவுகள் எங்கும் பறந்துபோய் விடவும் மாட்டாது.

ஒரு வீடற்றவராக (homeless) இருந்த ப்யூகோவ்ஸ்கி தனது எழுத்துக்களால் பிரபல்யமடைய, ஹாலிவூட் அவரைத் திரைக்கதை எழுத அழைக்கின்றது. அப்படி அவர் எழுதிய கதையைக் கொண்டு இயக்கப்பட்டதே Barfly என்கின்ற திரைப்படம். இத்திரைப்பட உருவாக்கத்தை அருகில் இருந்து பார்த்த ப்யூகோவ்ஸ்கி பின்னர் எழுதியதே 'ஹாலிவூட்' என்கின்ற நாவல். இந்நாவலை வாசித்திருந்தால் அதில் எப்படி ஹாலிவூட் உலகை எள்ளல் செய்திருப்பார் என்பது நமக்குப் புரியும். அதுதான் ப்யூகோவ்ஸ்கி. தன்னை அழைத்து மரியாதை கொடுத்த ஹாலிவூட்டையே நக்கலடிக்க முடிந்த அசல் படைப்பாளி அவர். அதனால்தான் அவரை இன்றும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட என்னோடு பேச விரும்பிய இயக்குநரை, எனக்கு ஏன் முக்கியமானவர் என்றால் அவர் நல்ல திரைப்படத்தையும், எழுத்தையும் நமக்குத் தந்திருக்கின்றார் என்பதால் ஆகும். அவர் என்னோடு பேசவில்லையென்றாலும் அவரின் படைப்பினூடாக அவர் என்றென்றைக்கும் எனக்கு நெருக்கமாகவே இருந்திருப்பார். அதுதான் கலை நம்மை அழைத்துச் செல்கின்ற பாதையாகும்.

******************

 

(Mar 10, 2024) 

கார்காலக் குறிப்புகள் - 31

Saturday, April 27, 2024

 -காதலர் தினம்-

 ஓவியங்கள்: சின்மயா



ன்று காலையிலேயே ஒரு டசின் ரோஜாப்பூக்கள் வாங்கப் போனபோது, கடையில் வேலை செய்த பெண் you are a good man என்றார். எப்போதாவது அரிதாகத்தான் வாழ்வில்  நான் நல்ல மனிதன் என்று சொல்லக் கேட்பதால் அந்த வார்த்தையை அப்படியே எடுத்திருக்கலாம். இது என் காதலிக்கு இல்லை என் கம்பனிக்கு என்றேன். ரோஜா மலர்கள் போல மலர்ந்த அந்த முகம் கனடாப் பனிக்குளிர் போலச் சுருங்கிவிட்டது.


இப்போதெல்லாம் இளையவர்கள் எப்படி காதல்களைக் கொண்டாடுகின்றார்களோ தெரியாது. ஆனால் என் இளமைக்காலங்களில் நான் மகிழ்வாகக் கொண்டாடியிருக்கின்றேன். ஒவ்வொரு காதலும் துயரமாகப் பின்னாட்களில் (அது இயல்பன்றோ) மாறினாலும் காதல்களின் நிமித்தம் ஒருபோதும் சலித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கொரு காதல் வந்திருந்தது. ஆனால் நாமிருவரும் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள். காதலியைக் காண்பதென்றால் 400 கிலோமீற்றர்கள் பயணித்துச் சென்று பார்க்க வேண்டும். எப்போதும் என் காதல்கள் தொலைதூரக் காதல்கள்தான். நகரம்  தாண்டி மட்டுமல்ல‌ கடல்கள் தாண்டி கண்டங்கள் தாண்டியவை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் என் உயிர் இருக்குமென்று அரக்கர்கள்  நம் கதைகளில் சொல்வதெல்லாம் பொய். அவ்வளவு தொலைவில் இருப்பது அரக்கர்களின் உயிரல்ல, காதலிகளின் ஆழங்காண முடியா இதயங்கள் என்பேன் நான் உறுதியாய்.

என் பல்கலைக்கழகக் காதலியை காதலிக்கத் தொடங்கிவிட்டேன் என்றாலும், நான் அப்போது அவரை நேரில் சந்திக்கவில்லை. எனவே சில மாதங்களின்  பின் வந்த 'காதலர் தினத்தில்' நேரடியாகச் சந்திப்பதென நாம் முடிவு செய்தோம். கனடாவில் பல்கலைக்கழகங்களில் பெப்ரவரியில் ஒரு கிழமை பரிட்சைக்குப் படிப்பதற்கென‌ விடுமுறை விடுவார்கள். ரொறொண்டோ நகருக்கு வந்து அண்ணாவின் வீட்டில் நின்றுதான் காதலியைச் சந்திக்க முடியும். ஒரு மாதிரியாக அன்றையகாலத்தில் 'டிரெண்டாக' இருந்த பெரிய சிவப்பு டெடியையும், ஒரு டசின் ரோஜாக்களையும் முதல் நாளிலேயே வாங்கிவிட்டேன். ஆனால் வீட்டுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும். (எத்தனை கழுதை வயதானாலும் ஆண்களுக்கு இதே பிரச்சினை. கல்யாணமான சில ஆண்கள்,   தம் மனைவிக்குத் தெரியாமல் காதலிக்கு ரோஜாக்கள் கொடுக்க இப்படித்தான் இப்போதும் அவதிப்படுகின்றார்கள் என்றும் கேள்விப்படுகின்றேன்).

இங்கே நம்மவர்கள் பூஜையறையாகப் பாவிக்கும் ஒரு அலுமாரிக்குக் கீழே என் புனிதமான காதல் வெகுமதிகளை ஒளித்து வைத்துவிட்டேன். திரிஷ்யம் படத்தில் இறந்த உடலை, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் ஸ்டேனிலேயே புதைக்கும் மோகன்லாலின் கிரிமினல் மூளையெல்லாம் என் காதலின் முன் பிச்சையெடுக்க வேண்டும். 



டுத்த நாள் காதலர் தினத்தன்று காதலியை அவரின் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றேன். ஒரு அமைதியான புராதனமான கட்டிடம். இப்போதும் அது நன்கு நினைவிருக்கின்றது. அவருக்கு என்னை முதல் சந்திப்பதில் இருக்கும் பதற்றத்தில் நான் கொடுத்த ரோஜாக்கள் பத்தா பன்னிரண்டா என்று எண்ண நேரமிருக்கவில்லை.. 'இப்படியா கொத்தாக கொண்டு வந்து ரோஜாக்களைத் தருவது' என்று எனக்குப் பேச்சு விழுந்தது. பத்துத்தலை இராவணன் போல, நீங்கள் ஒருவரே பன்னிரண்டு காதலிகளுக்குச் சமமென்று குறியீடாகத்தான் இப்படித் தருகின்றேன் என்று சொல்ல ஆசை இருந்தது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

இறுதியாய்ச் சந்திப்பு முடிந்தபோது டெடியை எப்படியோ அவர் தனது புத்தகப் பையினுள் அமுக்கி அடக்கிவிட்டார். ரோஜாப்பூக்களை வீட்டுக்குக் கொண்டுபோனால் அதை தன் இறுதியஞ்சலி மலர்வளையமாகத்தான் வைக்கவேண்டி வருமென்று சொல்லி, அவ்வளவு ரோஜாக்களையும் குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டார். மானமுள்ள ஆல்பா ஆணாக இருந்தால் அப்போதே நீ அந்தக் காதலை முறித்திருக்கவேண்டுமென நீங்கள் சொல்வது கேட்கின்றது. ஆனால் எப்படியோ இரண்டு வருடங்களுக்கு அந்த காதல் நீண்டது ஒரு வரலாற்றுச் சோகந்தான். எனக்கு மட்டுமில்லை, அவருக்குந்தான்!


இந்த ரோஜாக்கொத்து நிகழ்வுக்கு முன் சற்றுப் பின்னோக்கிப்ப் போனால், என் உயர்கல்லூரிக் காலம் தட்டுப்படும். அப்போதுதான் கனடாவுக்கு வந்தே ஒன்றிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போதும்... (நீங்கள் நினைப்பது சரிதான்) ஒரு குறுங்காதல் வந்திருந்தது. அது காதலே இல்லையென்று என் பள்ளிக்கால நண்பர்கள் இப்போதும் அடித்துச் சொல்வார்கள். ஆனால் அது எனக்குக் காதலேதான். இல்லாவிட்டால் அது உடைந்தபோது (அல்லது நிராகரிக்கப்பட்டபோது) தற்கொலைவரை போயிருக்கமாட்டேன். அந்தப் பதின்மக் காதலிக்கு இப்படி ஒரு காதலர் தினத்தில் நம் கையில் கிடைத்த‌ காசுக்கேற்ப ஒரு ரோஜாவும், ஒரு வாழ்த்தட்டையும் வாங்கி கொடுப்பதற்காய் வைத்திருந்தேன். வீட்டில் இருந்து என் காதல் உள்ளத்தை அழகாக வாழ்த்தட்டையில் வரைய முடியாதென்பதால், பள்ளிக்கு விடிகாலையிலே போய் ரோஜாவும் அட்டையுமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். எனது வகுப்பு ஆசிரியர் அதைக் கண்டுவிட்டார். 'நடக்கட்டும் நடக்கட்டும்' எனச் சொல்லியபடி ஒரு புன்னகையால் கடந்துபோனார். இலங்கையில் என்றால் இதற்காக என்னைப் பாடசாலையில் இருந்தே துரத்தியிருப்பார்கள். மேலும் எங்கள் பாடசாலையில் அப்போது 'அநாமதேயமாக' காதலர் தினமன்று எதையாவது அனுப்பிக் காதலை வளர்க்கவெல்லாம் அனுமதிப்பார்கள். அதாவது வகுப்பு நடக்கும்போது காதல் விருப்புக்கள் வெகுமதியுடன் எல்லாம் வந்து சேரும்.

நான் ஒற்றை ரோஜாவும், வாழ்த்தட்டையும் எழுதிக் கொடுத்த அந்த பதின்மக் காதல் இரண்டு வருடங்கள் கூட‌ அல்ல, இரண்டு மாதங்களிலேயே பள்ளியிலேயே விடைபெற்றுப் போனது பற்றியெல்லாம் உங்களுக்கு நீட்டி முழங்கத் தேவையில்லை. நீங்கள் அதை நன்கே அறிவீர்கள்!

இன்று எங்கள் நிறுவனத்தில் காதலர் தினத்தின் பொருட்டு கிளைண்ட்களுக்கு ஏதோ சமூகவலைத்தளத்தில் போட்டிவைத்து பரிசொன்று கொடுக்கின்றார்கள். புத்துணர்வான ரோஜாக்களை நீதான் காலையில் சென்றுவாங்கி வரவேண்டுமென என்னை அனுப்பிவிட்டார்கள். வேலையில் செய்வது எல்லாமே ஆணிபிடுங்குகின்ற எதற்கும் உதவாத வேலைதான். இப்படி ரோஜாப்பூக்களை வாங்கி யாரோ ஒரு முகம் புன்னகைப்பதைப் பார்ப்பது எல்லாவற்றையும் விடப் பெறுமதியானதுதானே. எனவே பூச்சியத்துக்குக் கீழே 15 ஆக கடும்குளிர் இருந்தபோதும் மன்மதனின் ரதிக்குக் கைப்பிள்ளையாகப் போனேன்.

ஆமாம், அது சரி இதையெல்லாம் ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஒரு ஆல்பா ஆணை சும்மா போகின்றபோக்கில் ஒருவர் சொன்ன you are a good man அருட்டிவிட்டது போல.  

ஆனாலும் காதலிப்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காய் கர்த்தர் அயல்வீட்டுக்காரனையும் நேசிக்கச் சொன்னார் என்பதற்காக பக்கத்துவீட்டு கல்யாணமான பெண்ணையெல்லாம் நேசிப்பதாக அடம்பிடிக்கக் கூடாது. அப்படி நினைப்பு வந்தால் தலையில் தேசிக்காயை நன்கு தேய்த்துக்கொள்ளவும் அல்லது பனிக்குள் தனியே உருண்டு புரண்டு கொள்ளவும்.


******

(Feb 14, 2024)

காப்ரியல் மார்க்வெஸ்ஸின் 'ஆகஸ்ட் வரைக்கும்' (Until August)

Friday, April 26, 2024

 

மது மரணத்தின் பின் தமது படைப்புக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்கள் காஃப்காவும் சிவரமணியும். ஆனால் அவர்களின் இறுதி விருப்புக்கு மாறாக அவை வெளியிடப்பட்டதால் நாம் காஃப்காவையும் சிவரமணியையும் இன்றுவரை பேசிக் கொண்டிருக்கின்றோம்.  ரொபர்தோ பொலானோ போன்ற‌ சில படைப்பாளிகள் அவர்கள் மரணத்தின் பின் பிரபல்யம் அடைந்தவர்கள். அந்த புகழின் வெளிச்சத்தினால் பிற்காலத்தில் ரொபர்த்தோ பொலானோவின் முடிக்கப்படாத நாவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறே இப்போது மார்க்வெஸ் 'அழிக்கப்பட வேண்டிய நாவல்' என்று குறிப்பிட்ட அவரின் நாவலான 'ஆகஸ்ட் வரைக்கும்' வெளிவந்திருக்கின்றது.

மார்க்வெஸ் 2014 இல் காலமாகியவர். அவருக்கு கிட்டத்தட்ட அதற்குப் பத்து வருடங்களுக்கு முன்னரே நினைவு மறதி தொடங்கியிருந்தது. அவருடைய சுயசரிதையான  ‘கதைசொல்வதற்காக வாழ்கின்றேன்’ (Living to tell a tale) இல் 'வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல, எதை நினைவில் வைத்திருக்கின்றோம் அதை எப்படி நினைவு கூர்கின்றோம் என்பதே முக்கியமானது' என்ற பிரபல்யம் வாய்ந்த வரிகள் இருக்கின்றன.

அவ்வாறு இருக்க விரும்பிய மார்க்வெஸிற்கு அவரின் இறுதிக்காலத்தில் நினைவுகள் மங்கிப் போனது துயரமானது. மார்க்வெஸ் அவரின் நினைவுகள் மங்கும் காலங்களில் இரண்டு நாவல்களை எழுதி வைத்திருந்தார். அதில் ஒன்றே 2004 இல் வெளிவந்த (Memories of My Melancholy Whores) மற்ற நாவலான 'ஆகஸ்ட் வரைக்கும்' முடிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்த நாவலைப் பெரும் நாவலாக எழுதும் கனவு அவருக்குள் ஏற்கனவே விரிந்திருந்தது. அதனால்தான் 1999 இல் ஐரோப்பாவில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இதன் முதல் அத்தியாயத்தை வாசித்திருக்கின்றார். இது ஒரு சிறுகதையாக(?) எஸ்பஞோலிலும், பின்னர் ஆங்கிலத்தில் நியூ யோர்க்கரிலும் வெளியானது.

இந்த நாவலை ஐந்து முறை திருத்தங்கள் செய்தபின் இதைப் பிரசுரிக்கலாம் என்கின்ற ஓர் குறிப்பும், இன்னொரு இடத்தில் இது பிரசுரிக்காமல் அழிக்கப்படவேண்டும் என்கின்ற மார்க்வெஸின் விருப்பும் இருந்திருக்கின்றன. இப்போது மார்க்வெஸின் பிள்ளைகளால் 'வாசகர்களின் மகிழ்வின் பொருட்டு' வெளியிடப்பட்டிருக்கின்றது. ஒருவகையில் வாசகர்களாகிய நாம் காபோவின் வாழ்வைக் கொண்டாடும் இறுதி அடையாளமாக இந்தப் புதினத்தை எடுத்துக் கொள்ளலாம்.



னா என்கின்ற 40களின் மத்தியில் இருக்கின்ற பெண், ஒவ்வொரு வருடமும் பெயர் குறிக்கப்படாத ஒரு கரீபியன் தீவொன்றுக்கு ஆவணியில் சென்று கொண்டிருக்கின்றார். அங்கே அவரின் தாயார் புதைக்கப்பட்டிருக்கின்றார். ஆசிரியரான அனாவின் அம்மா நெடுங்காலம் வாழ்ந்த இடமாக வேறு எதுவோ இருக்க, ஏன் இந்தத் தொலைதூரத்து தீவை தன்னைப் புதைப்பதற்கு தேர்ந்தெடுத்தார் என்பது அனாவிற்கும் வியப்பாக இருக்கின்றது.

அனா, இரண்டு பிள்ளைகளின் தாய். கன்னித்தன்மையோடே திருமணம் செய்யவேண்டும் என்று விரும்பி அவரின் காதலைத் திருமணஞ் செய்து 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவ்வாறு ஒரு ஆவணியில் தீவுக்குச் செல்லும் அனாவுக்கு அங்கே சந்தித்த ஒர் அந்நியனுடன் ஈர்ப்பு ஏற்படுகின்றது. அந்த விருப்புக்குப் பெரிதாக ஏதும் காரணம் இருக்கவில்லை. அவனோடு பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே, அவனைத் தன் அறைக்கு வாவென்று அழைத்துவிட்டு செல்கின்றார். அந்த உடல்சார்ந்த உறவை எப்படி விபரிப்பது என்று தெரியாவிட்டாலும், அனா 'என்னளவில் இந்த வேட்கை மகிழ்ச்சியாக இருந்தது' என்கின்றார். ஆனால் காலையில் அந்த அந்நியன் அனா வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்துக்குள் 20 டொலர் பில்லை வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றான். இது அனாவுக்கு அந்த உடல் சார்ந்த மகிழ்வைத் தாண்டி அவமானமாக இருக்கின்றது. எல்லா நினைவுகளையும் அதே தீவில் புதைத்துவிட்டு அனா தனது குடும்பத்துக்கும், நாளாந்த வாழ்க்கையும் திரும்பி விடுகின்றார்.

அவ்வாறு அடுத்தடுத்த வருடங்களில் வெவ்வேறான ஆண்களுடன் அனா -இந்த அம்மாவின் நினைவிடத்துக்கு வரும்- ஒரு நாள் பகல்/இரவுப் பயணத்தில் உறவு கொள்கின்றார். இரண்டாவது முறை உறவு கொள்ளும் அனாவை அந்தளவு 'மயக்கி' தனது வாகனத்தில் ஒரு திறந்த வெளிக்கு அழைத்துச் செல்கின்றார். அந்த உறவு முடிந்த சில காலத்தில் அந்த ஆண் பெண்களோடு உறவு வைத்துவிட்டு அவர்களைக் கொலை செய்யும் ஓர் கொலைகாரன் என்பதைக் கண்டறிகின்றார். இவ்வாறு அனா சந்திக்கும் ஒவ்வொரு ஆணும் விசித்திரமானவர்களாக இருக்கின்றார்கள்.

அதற்கு அடுத்த முறை அனா தனது விடுதியறையில் வைத்து உறவுகொள்ளும் ஆண், தன்னையொரு மதகுரு என்கின்றான். பிறகு இல்லை, தான் காப்புறுதி சேகரிக்க இந்த தீவுக்கு அடிக்கடி வரும் ஒரு காப்புறுதி முகவர் என்கின்றான். அவன் அடுத்த நாள் காலையில் அனா வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் எதையோ வைத்துவிட்டுச் செல்வதை அனா குளித்தபடி கவனிக்கின்றார். இவனும் அந்த 20 டொலர் தாளை வைத்து அவமானப்படுத்தியவனைப் போன்ற இன்னொருவனா என பதகளிக்கும்போது, நல்லவேளையாக அவன் தனது விஸிட்டிங் அட்டையை வைத்துவிட்டுச் செல்கின்றான்.

அனா, இந்த 'ஒருநாள்' உறவுகளில் வருடமொன்றுக்கு நுழைந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் அவரின் பிள்ளைகளிலிருந்து விலகுகின்றார். இந்த உறவுகளை அவரின் நீண்டநாள் கணவனிடமிருந்து மறைத்தாலும், கணவனுக்கு வேறு உறவுகள் இருக்கின்றது என்பதை மறைமுகமாக உணர்கின்றார். இவர்களின் இருவரினதும் மணவாழ்க்கை அவ்வளவு அழகாக ஒரு காலத்தில் இருந்துமிருக்கின்றது. இப்போதெல்லாம் அனா இரவுகளில் ஒழுங்கான தூக்கமில்லாது, பதற்றத்திற்கும், மனவழுத்ததிற்கும் உள்ளாகின்றார். இவ்வாறான திருமணத்துக்கு அப்பாலான உறவுதான் தேவையென்றால் ஏன் இவ்வளவு தூரம் போய் அதைக் கணடடைய வேண்டும், தான் வாழும் பெருநகரத்திலேயே இந்த வகை ஆண்களை அடையலாந்தானே என யோசிக்கின்றார். இவ்வாறு ஒவ்வொரு ஆவணியும் ஏதோ ஒரு புதிய ஆணைத் தேடும் பயணங்களை சிலவேளைகளில் ஆண்கள் எளிதாகக் கிடைத்தும்  அந்த ஆண்களின் வேட்கையை மட்டுமின்றி தன் விருப்பையும் மூடி வைத்துக் கொள்கின்றார். ஒருவகையில் அனாவுக்கு இந்த உறவுகள் அடிக்கடி சலித்துப் போகின்றதென்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவர் எதையோ இந்தப் பயணங்களில்/இந்த ஆண்களில் தேடிக் கொண்டிருக்கின்றார் என்பதும் புரிகின்றது.



றுதியில் அவரின் அம்மாவின் நினைவிடத்துக்கு அனா மட்டும் ஒவ்வொரு வருடமும் வருவதில்லை. அம்மாவின் ஓர் இரகசியக் காதலனும் அங்கே அடிக்கடி வந்து தன் தாயை நினைவுகூர்வதை அந்தக் கல்லறையில் நிரப்பப்பட்டிருக்கும் மலர்களால் கண்டு கொள்கின்றார். முன்பு வருடத்துக்கு மூன்றோ நான்கோ முறை இந்தத் தீவுக்கு வரும் தனது தாயாருக்கு ஏதோ ஒரு இரகசிய உறவு இருந்திருக்கின்றது. அதனால்தான் தன்னை அங்கே புதைக்கவேண்டும் என்று இறுதியாசையாக அதை முன்வைத்தார் என்பது அனாவிற்கு விளங்குகின்றது.

அனா வழமையாக நிற்கும் ஒருபகல் மட்டும் நிற்காது அடுத்த நாள் மதியமும் அங்கே தங்கு நின்று, அந்தக் கல்லறையைத் தோண்டச் செய்து, அம்மாவின் மிச்சமுள்ள எலும்புகளை எடுத்துக் கொண்டு படகெடுத்து தான் வாழும் பெரும் நகர் மீள்வதுடன் நாவல் நிறைவுறுகின்றது.

தன் தாயின் எலும்புகளுடன் நகர் மீளும் அனா ஒருபோதும் இந்தத் தீவுக்கு இனி திருப்பப் போவதில்லை என்பது வாசிக்கும் நமக்குப் புரிகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் அம்மாவின் அஞ்சலிக்காய் வரும் அனாவிற்கு அவை பெரும்பாலும் மறக்கமுடியாத நாளாகத்தான் இருக்கின்றது. அவர் சந்திக்கும் ஆண்கள் அநேகவேளைகளில் ஏமாற்றங்களைத் தந்தாலும், அவர் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து தனது குடும்பத்தை விட்டு தனியே பயணித்தபடியே இருக்கின்றார். மத்திய வயதில் குடும்ப வாழ்க்கை அலுக்கத் தொடங்குகையில் இவ்வாறான 'சிறு நெருப்பு' தனது மகளுக்கும் தேவையென்று அந்தத் தாயார் தனது அனுபவங்களினூடாக‌ சிலவேளை யோசித்துமிருக்கலாம்.

மார்க்வெஸ்ஸை ஆராதிப்பவர்க்கு - நெடுங்காலமாக இனிய கனிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெருமரம், தனது மூப்பில் கடைசிக் கனியைக் கொடுப்பதில்லையா? அவ்வாறே மார்க்வெஸ் நமக்காய் இந்தப் பூமியில் கடைசியாக வாசிக்க விட்டு வைத்த பிரதியென இதை நாம் விமர்சனங்களைச் சற்றுத் தள்ளிவைத்து கொண்டாடலாம்.

ஒருவனை சிலகாலமாக டேட்டிங் செய்துகொண்டிருந்த ஒரு தோழி, முதன்முறையாக அவனோடு உடலுறவு கொண்டு அது நிறைவுற்றபின் அவன் எனக்கு முத்தம் எதுவும் தரவில்லை, அப்போது அவன் ஒரு அந்நியனாகத் தெரிந்தான், அத்தோடு அவனோடு நான் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை, விலகி வந்துவிட்டேன் என்றார். ஓர் உறவின் நிறைவின் பின் ஒரு முத்தம் கொடுக்காததால் ஓர் உறவு முறிந்து போகுமா என்பது எனக்கு அப்போது வியப்பாயிருந்தது. அதுபோலத்தான் இந்த நாவலில் வரும் அனா, தனது தாயின் எலும்புகளை எடுத்துக்கொண்டு அதுவரை கிளர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்த அந்தத் தீவிலிருந்து முற்றுமுழுதாக விலகி வருவது. எல்லாவற்றையும் நாம் எங்கேயே முடித்து வைக்க வேண்டியிருக்கின்றது என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்தத்தான். அதற்குச் சிலவேளைகளில்  நம் மனம் விசித்திரமான காரணங்களைக் கண்டுபிடித்து   இவ்வாறு ஆறுதல்படுத்திக் கொள்கின்றது போலும்.

****************
 

படம் 03 - மார்க்வெஸ் அவரின் கையெழுத்தில் திருத்திய பக்கம் 

 ( Apr 01, 2024)