விடிகாலையில் எழுந்து
சற்று தூரம் பயணித்து, விரும்பிய ஒரு விடயத்துக்காகச் செல்வது
மகிழ்ச்சி தரக்கூடியது. காலையிலே எல்லாமே புத்துணர்ச்சியாக இருக்கும். மனித சஞ்சாரம் குறைவாக
இருந்து, மனதிலும் எவ்வித தேவையில்லாச் சிந்தனைகளும் தோன்றாத எந்த நாளுமே என்னைப்
பொருத்தவரை ஆசிர்வதிக்கப்பட்ட நாளே. தோட்டப் பண்ணைகள் கடந்து, வயல் காற்றை சுவாசித்தபடி
விகாரையைப் போய்ச் சேர்ந்தேன்.
இதற்கு முன் சில புத்த விகாரைகளுக்குச் சென்றபோதும், அவை கருணையையும், சகோதரத்துவத்தையும் ஏதோ ஒருவகையில் கைவிட்ட மாதிரித் தெரிந்ததால், பிறகு அந்த இடங்களுக்குப் போக மனம் அவாவியதில்லை. அதற்கு மாறாக என்னைப் போன்றவர்கள் அந்நியர்களாக இருந்தாலும் இந்த மடாலாயம் நம்மை மற்றவர்களாக உணரவைக்காதது நிம்மதியாக இருந்தது.
காலை இடைவெளி
முடிந்தபின், இசைத்தலோடு தியானம் தொடங்கியது. இலங்கையில் இருக்கும் தொலைகாட்சி 30-40 அலைவரிசைகளிலாவது, பிக்குகள் புத்தரின் போதனைகளைப் போதிக்கின்றோம் என்று எங்களைப் பிரித்தோதிக் கொன்று கொண்டேயிருப்பார்கள். இங்கே புத்தரின் பாடங்களைப் பாளியில் இசைத்து, பின்னர் ஆங்கிலத்தில் பாடியபோதுதான், இவ்வளவுகாலமும் பாளியைத்தான் சிங்களம் என்று நினைத்துக் கொண்டேன் என்று அறிந்துகொண்டேன். வெட்கந்தான் ஆனால் அவமானப்பட ஏதுமில்லை. ஏனெனில் நான் தமிழ்ப் பெளத்ததைப்
பரப்பும் பணியில் முதலாவதாக களத்தில் இறங்காலாமோவென யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். யாரோ ஒரு சிங்கள
ஆய்வாளர், தமிழ்ப் பெளத்தம் பற்றியொரு ஆய்வுக் கட்டுரையை தமிழகத்தில் வாசித்தபோது, முடிவுரையாக தனது காலத்தில் இலங்கையில்
தமிழ்ப் பெளத்ததிற்காக ஒரு விகாரை தொடங்கப்படுவதைப்
பார்க்கும் கனவு தனக்கு இருக்கின்றதாகச்
சொல்லியிருந்ததாக நினைவிருக்கின்றது.
பாளியில்/ஆங்கிலத்தில்
இசைத்த பிறகு ஆசிரியரின் உரையும், கேள்வி பதில்களும் நீண்டன. Mindfulness என்றால் என்ன, ஒருவர் multi- tasking செய்வது mindfulness தானா, 'விடுதலையான (அல்லது ஞானமடைந்த) மனம்' எப்படி இயல்பு வாழ்க்கையைப் பார்க்கும் என்று பல கேள்விகள் கேட்கப்பட்டன.
சிலர் தியானத்தை/புத்தரை அறிதலைவிட, நிறைய நூல்களை வாசித்து எளிய கேள்விகளைக் கூட
சிக்கலான மொழியில் பயமுறுத்திக் கேட்டனர். அவர்களுக்கு கல்குதிரையும், கோணங்கியின் நாவல்களையும் அனுப்பி உங்களை விட நாங்கள் மொழியைத்
திருகிச் சிக்கலாக்குவதில் வல்லவர்கள் என்று சவால் விட ஆசை எழும்பினாலும்,
கோணங்கி செய்த சில காரியங்களால் வந்த
ஆசையை வாயிற்குள் மென்று விழுங்கினேன்.
இதற்குப் பிறகும் பல்வேறுவகையான பழங்கள் (எனக்குப் பிடித்த பலாப்பழமும், மாம்பழமும் அங்கே இருக்கவில்லை, அடுத்தமுறை வைக்கச் சொல்லிக் கேட்கவேண்டும்), குளிர்களி என்று வைத்திருந்தார்கள். இங்கே நிறைய பிக்குகள் வசித்து வருகின்றார்கள். ஒரு பிக்கு எப்போதும் சிரித்த முகத்துடன் ஓடியாடிக் கொண்டிருந்தார். இங்குள்ள இன்னொரு பிக்கு அவரின் புத்த போதனை காணொளிகளால் உலகம் முழுதும் பிரபல்யமானவர். அவரைச் சந்தித்தால் ஒரு சுயமி அவரோடு எடுக்கவேண்டும் என்பது ஒரு நண்பரது வேண்டுகோள். என் மனம் ஆனந்தத்தில் ததும்பிக் கொண்டு இருக்கும்போது இவ்வாறான சுயமி எடுக்கும் சிறுபிள்ளைத்தனங்களில் ஈடுபடுமா என்ன? என் விருப்பம் அறிந்த அந்த கனிவான பிக்குவும் என் கண்களுக்குக் காட்சியளிக்காது எங்கெயோ மறைந்து போயிருந்தார்.
புத்தமடாலயத்தோடு ஆறவமர நடக்க அதைச் சுற்றி இடமும் இருந்தது. நிறைய பூக்களுடன் அந்த வெளிப்பரப்பும் அழகாகக் கோடையில் தெரிந்தது. நான் பழங்களையும், குளிர்களியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து பகோடாவுக்கு அருகில் சென்றமர்ந்தேன். அதை வழிபட்டவர்களின் முகங்களும், கொளுத்தப்பட்ட சாம்பிராணிக் குச்சிகளும், பிரகாசமான வெயிலும் ஒருவித அமைதிக்கு அழைத்துச் சென்றது. அப்போது ஒரு வெள்ளைக்கார பிக்கு ஒவ்வொரு மரமாய்ச் சென்று குருவிகள் சாப்பிட தொங்கவிடப்பட்ட சாடிகளில் தானியத்தை இட்டபடி தரைக்கு நோகாமல் நடந்து கொண்டிருந்தார். இப்படித் தியானமும், மாமிசமும் அருளப்படும் ஓரிடத்தில் நானும் ஒரு பிக்குவாக மாறலாமோ என்றுகூட எண்ணத் தோன்றியது.
மதிய
உணவு இடைவெளியின்போது ஒரு பெண்மணியைச் சந்தித்தேன்.
அவர் சுவீடனைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் பிள்ளைகள் ஒருவர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தததால் சுவீடனைக் கைவிட்டு கனடாவுக்கு வசிக்க வந்துவிட்டார். பிள்ளைகளும் வளர்ந்து அவரவர் வாழ்க்கையை வாழப் புறப்பட்டபின் தனக்கு வந்த தனிமையில் என்ன
செய்வதென்று உறைந்து போயிருக்கின்றார். கிறிஸ்தவப் பின்னணியில் இருந்து வந்தவர்க்கு அதைத் தாண்டிய ஆன்மீகமொன்று தேவைப்பட்டிருக்கின்றது. இந்த புத்த மடாலயம்
தனக்கு மிகுந்த அமைதியைத் தருகின்றது என்றார்.
இப்படியான முழுநாள்
தியான வகுப்புக்கு மட்டுமில்லை, சும்மா இங்கே வந்து அமர்ந்தாலே தனக்கு அமைதி கிடைக்கின்றதென்றார். மேலும் காலையில் 45 நிமிடங்கள் காரில் பயணித்து வருவதை நிம்மதியாக இருக்கின்றதென்றார். அவரின் கடைசிப்பிள்ளை அரைவாசி சுவீடிஷ் மிகுதிப் பாதி பங்களாதேஷி என்று
சொன்னார். பரவாயில்லை, நன்றாகத்தான் வாழ்ந்திருக்கின்றார்/வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என நினைத்தேன்.
அன்று மாலை ஐரோப்பாக் கிண்ணத்திற்கான ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்குமான இறுதி ஆட்டம் இருந்தது. அதே நேரத்தில் யுவன் சந்திரசேகரோடு ஒரு கலந்துரையாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் ஆட்டத்தைப் பார்க்காதுவிட்டால் எனது எஸ்பநோல் தோழிகள் மனம் உடைந்துவிடுவார்கள் என்பதால், தியானத்தின் முழுப்பகுதியும் முடியமுன்னர் மடாலயத்தை விட்டு வெளியேறத் தொடங்கினேன். ஆனால் மீண்டும் அங்கே வருவேன் என்பது மனதில் உறுதியாகி விட்டிருந்தது.
பல அரிய விடயங்கள் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன. நமக்குத்தான் அவற்றின் அருமையை புரிவதில்லை. எளிதாகக் கிடைக்கும் விடயங்களுக்கு மதிப்பிருப்பதில்லை என்று நமக்குச் சொல்லியிருப்பதால் அவற்றை அனுபவிப்பதில் நாம் அவ்வளவு ஆர்வமாகக் காட்டுவதில்லை. இலக்கியமோ, ஆன்மீகமோ, பயணமோ எதுவாயினும் ஒத்த எண்ண அலைவரிசையைக் கொண்ட மனிதர்களோடு இருப்பதும் உரையாடுவதும் நன்மை பயக்கக்கூடியது. அவ்வாறு ஓர் அலைவரிசையை உருவாக்கக் கடினமானால், நான் சந்தித்த அந்தப் பெண்மணியைப் போல தனித்துக் கூட நாம் விருப்பும் விடயங்களைத் தேடிச் செல்லலாம்.
தியான வகுப்பின்போது ஆசிரியர், நாம் கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோ வாழப்போவதில்லை, நிகழில் வாழ்கின்றோம் என்று சொல்கின்றோம். ஆனால் அது கூட தவறாகிப் போய்விடலாம். ஏனெனில் மீண்டும் நாம் சும்மா வார்த்தைகளின் சுழலுக்குள் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கின்றது. எனவே நிகழில் இருக்கின்றோம் என்பதையும் உறூதியாகப் பற்றிக்கொள்ளாமல், முற்றுமுழுதாகக் கைவிட்டுவிடவேண்டும் என்று சொன்னார். ஏனெனில் எல்லா சொற்களும், கருத்துக்களும் நம்மை மீண்டும் அலசி ஆராயும் இறுக்கமான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும். அதனால் எவ்விதப் பலனும் ஆழ்மனதுக்கு கிடைக்கப்போவதில்லை.
அதனால்தான் ஸென்னில் ஆசிரியராக இருப்பவர்கள், ஏதேனும் தமது சீடர்களுக்குச் சொல்லும்போது அது அந்தக் கணத்தில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாவிடின் அந்த விடயத்தைக் அப்படியே கைவிட வேண்டுமெனச் சொல்வார்கள். அந்தக் கணத்தில் நாம் விழிப்பாக இருந்தால் அந்த விடயத்தைச் சட்டென்று விளங்கிக் கொண்டிருப்போம். அப்படியாக இல்லாதவிடத்தில் அதற்கான அர்த்தம் என்னவென்று கேட்டுக் கேட்டு பின்னர் நாம் குழம்பத் தேவையில்லை.
புத்தர் போதித்துக் கொண்டிருக்கும்போது பூச்சொரிகின்றது. அப்போது போதிசத்துவரான மஞ்சுசிறி அப்படியான ஆனந்தத்தில் திளைக்கின்றார். மஞ்சுசிறி அந்தக் கணத்தில் ஞானமடைந்துவிட்டது புத்தருக்குத் தெரிகின்றது. அவருக்கு ஒரு மலரைக் கொடுத்து புத்தர் வாழ்த்துகின்றார் என்றொரு கதை இருக்கின்றது. ஆனால் ஞானமடைதல் புத்தருடன் அவ்வளவு நெருக்கமாக இருந்த ஆனந்தருக்கு புத்தரின் இறப்பின் பின்னே நிகழ்கின்றது. ஆனந்தா ஏதோ ஒருவகையில் புத்தரைக் கைவிட முடியாதவராக புத்தர் வாழ்ந்த காலங்களில் இருந்திருக்கின்றார். ஒன்றை முற்றுமுழுதாக கைவிடாது இன்னொரு புதிய விடயம் நிகழ வாய்ப்புக்கள் அரிதென்பதற்கு ஆனந்தா நமக்கு உதாரணமாக இருக்கின்றார். அது புத்தராக இருந்தாலென்ன, நமக்குப் பிடித்தமான விடயங்களாக இருந்தாலென்ன நாம் முற்றுமுழுதாக அவற்றைக் கைவிடத்தான் வேண்டும்.
'மகிழ்ச்சிக்கான பாதையென்று எதுவுமில்லை, மகிழ்ச்சியே பாதை' என்பது எனது ஆசிரியரான தாய் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் நாம் வார்த்தைகளில் மட்டும் இதை மனப்பாடம் செய்து வைத்திருக்கின்றோமா அல்லது மகிழ்ச்சியாக நம்மை ஆக்கிக் கொள்கின்றோமா என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.
************
(July 16)