கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 88

Saturday, April 26, 2025

 

Paris Review,  2025-Spring Issueஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, நஸீர் றபாவின், 'போர் முடிந்துவிட்டது' (The War Is Over) கவிதைகளைக் கண்டேன். நஸீர் 1963 காஸாவில் பிறந்தவர். இந்த கவிதைகள் இப்போது பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை மட்டுமில்லை, என்னைப் போன்ற போருக்குள் வாழ்ந்த அனைவருக்கும் அதன் கொடுமைகளை நினைவுபடுத்துபவை.  இதைத் தமிழாக்குவதன் மூலம் ஒருவகையில் நானெனது யுத்தகால அனுபவங்களை  மீள நினைத்துக் கொள்கிறேன். அரபிக்கில் எழுதப்பட்ட இந்த கவிதைகளை ஆங்கிலத்தில் Wiam El-Tamami மொழியாக்கம் செய்திருக்கின்றார்.
**


போர் முடிந்துவிட்டது
-நஸீர் றபா
(தமிழில்: இளங்கோ)

1.

போர் முடிந்துவிட்டது.
நான் என் உடலைப் பரிசோதிக்கிறேன்—
என் தலை, விரல்கள், கைகள்—
எல்லாம் அங்கே இருக்கிறது.
அவையெல்லாம் இப்போதுதான், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது போல.


2.
போர் முடிந்துவிட்டது.
நான் வானத்தைப் பார்க்கிறேன்.
பறவைகள், மேகங்கள் என அனைத்தையும் நான் தவறவிட்டிருக்கின்றேன்,
போர் விமானங்களைத் தவிர.


3.
போர் முடிந்துவிட்டது.
துடைப்பம் உடைந்த கதவின் தூசை, கண்ணாடித் துண்டுகளை, திருகாணிகளைத் துடைக்கிறது.
அது சிதைக்கப்பட்ட சுவரின் கற்களை,
விளிம்பில் தங்கமுலாம் பூசப்பட்ட தேநீர்க் குவளைகளை,
குடும்ப புகைப்படங்களின் சட்டகங்களை துடைக்கிறது.
குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள்; இரவுணவு தட்டுக்கள்.
இவை அனைத்தும் துடைத்தெடுக்கப்பட்டு, என் இதயத்தில் எங்கோ ஓரிடத்தில் குவிந்தன.


4.
போர் முடிந்துவிட்டது.
அம்மா மன்னிப்போடு  வந்தார்.
நீ அடைக்கலம் பெற எந்த இடமும் இல்லை -
கல்லறைகள் எல்லாம் அதன் விளிம்புவரை நிரம்பி வழிகின்றதென
அவர் சொன்னார்.


5.
போர் முடிந்துவிட்டது.
நானென் கைகளால் தலையை மூடிக்கொண்டு ஓடினேன்.
மழை பெய்யவில்லை, அவ்வளவு வெயிலும் இல்லை -
நான் பயப்பிடவும் இல்லை -
இப்படியாக ஓடுவதற்கு நான் பழக்கப்பட்டு விட்டிருந்தேன்.


6.
போர் முடிந்துவிட்டது.
நான் ரொட்டியை எடுக்கிறேன், நிறையப் ரொட்டிகளை.
ஒவ்வோர் நண்பனுக்கும் ஒரு ரொட்டியென எடுத்துக்கொண்டு
கல்லறைத்தோட்டத்தை நோக்கிச் செல்கிறேன்.


7.
போர் முடிந்துவிட்டது.
உறக்கத்துக்குப் போவது குறித்து நான் யோசிக்கிறேன்.
தங்கள் பயணங்களுக்குப் போன நண்பர்கள் அனைவரும்
என்னோடு மாலையைக் கழிக்க திரும்பி வருகிறார்கள்.
தனித்து, நானெனது தேநீரை அருந்துகிறேன்.


8.
போர் முடிந்துவிட்டது.
குழந்தைகள பள்ளிக்குத் திரும்புகின்றார்கள்
அங்கே போரால் இடம்பெயர்ந்தவர்கள் வாழ்வதைப் பார்க்கிறார்கள்.
தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குத் திரும்புகின்றார்கள்
அங்கே சிதைந்த இடிபாடுகளைப் பார்க்கின்றார்கள்.
வைத்தியர்கள் மருத்துவமனைக்குத் திரும்புகின்றார்கள்,
அது நோய்களால் நிரம்பியிருப்பதைப் பார்க்கிறார்கள்.
அனைவரும் தமது வீடுகளுக்குத் திரும்ப இப்போது அஞ்சுகிறார்கள்.
அதுவும் இப்படி காணாமற் போயிருக்குமோவெனும்  பயத்தால்.


9.
போர் முடிந்துவிட்டது.
எல்லாவற்றையும், எல்லாவற்றையும்
பார்த்த பறவைகள்
பாடியபடி இருக்கின்றன.
இராணுவத்தினரும் தொடர்ந்து பாடியபடி இருக்கின்றனர்.


10.
போர் முடிந்துவிட்டது.
கட்டடங்களைக் கட்டுபவர்கள் வருகின்றார்கள்:
அவர்கள் வளைவுகளுடன் கூடிய கதவுகளைக் கட்டுகிறார்கள்;
கூரைகள் உயரமாக உள்ளன;
யுத்தத்தில் உயிர்பிழைத்தவர்கள் முன்னரைவிட உயரமாக இருக்கின்றனர்.
நீதிமன்ற வளாகத்துள் டாங்கிகள் நுழைகின்றன,
தலைகள் சாய்கின்றன.


11.
போர் முடிந்துவிட்டது.
பலகணிகளில் நின்று ஆயிரக்கணக்கான குழந்தைகள்
கடந்துசெல்பவர்கள் மீது பரிசு மழையைப் பொழிகிறார்கள்:
ஈத் ஆடைகள், வர்ணக் காலணிகள், அவர்களுக்கு இனி தேவையில்லாத புத்தகங்கள்,
உறைந்த சிரிப்புகள், அவர்களின் அம்மாக்களின் கண்ணீர்.
வழிப்போக்கர்களோ இரத்த ஆற்றுக்குள் நின்று  போரின் முடிவைக் கொண்டாடுகின்றார்கள்.


12.
போர் முடிந்துவிட்டது.
நான் எனது தொலைக்காட்சியை அணைக்கிறேன்,
பின்னர் எனது அலைபேசியையும் அணைத்துவிட்டு தூக்கத்துக்குப் போகின்றேன்.
என் கொடுங்கனவுக்குள் இன்னொரு போர் தொடங்குகின்றது.
*

 

(Apr 11 ,2025)

கார்காலக் குறிப்புகள் - 87

Tuesday, April 22, 2025

 

லக்கியம் போல அரசியல் எனக்கு நெருக்கமானதில்லை. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அரசியலுள்ளது என்கின்ற தெளிவு இருக்கின்றது. கனடாவில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, பெரும்பாலும் வாக்களித்து என் 'ஜனநாயக் கடமை'யை செய்பவன். மேலும் வெளிப்படையாக, இங்குள்ள ஒரளவு இடதுசாரி சார்புள்ள 'புதிய ஜனநாயகக்கட்சி'யை (New Democratic Party) ஆதரிப்பவன் எனச் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

நான் வேட்பாளர்களைப் பார்த்தல்ல, கட்சியை மட்டும் பார்த்து வாக்களிக்கும் ஒருவன். நண்பர்கள் அவ்வப்போது தனிப்பட்ட வேட்பாளர்களைப் பார்த்தும், அடிப்படைவாதக் கட்சிகள் வென்றிடாதிருக்க தந்திரோபாயமாக வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றபோது, அவ்வப்போது அவர்களோடு நட்பு முரண் உரையாடல்களைச் செய்ததும் உண்டு.

இம்முறை முதன்முறையாக லிபரல் கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதாக இருக்கின்றேன். அந்த வேட்பாளர் ஜூவனிட்டா நாதன் (Juanita Nathan). ஜூவனிட்டா நீண்டகாலமாக அரசியல் களத்தில் இருப்பவர். பாடசாலை டிரஸ்டியாக, பின்னர் கவுன்சிலராக என அவர் தொடர்ந்து வென்று பொதுமக்களோடு எப்போதும் இருப்பவர்.

அவரை நான் அரசியல் களங்களில் அல்ல, நமது இலக்கியக் கூட்டங்களிலும், சமூகம் சார்ந்த நிகழ்வுகளிலுமே பெரும்பாலும் சந்தித்திருக்கின்றேன். எளிமையாக அணுகக்கூடிய ஒருவர். தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் மீதும் அக்கறையுடைய ஒருவர் என்பதை அவரது கடந்த கால அரசியல் வாழ்வை அவதானித்தவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இம்முறை லிபரல் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், அவர் இதுவரை காலமும் அரசியல் களத்தில் நின்ற தொகுதி அவருக்கு ஒதுக்கப்படாது ஒரு குறையே. என்கின்றபோதும் இப்போது நிற்கும் தொகுதியான Pickering-Brooklin இல் அவர் புதிய முகமாக இருந்தாலும் அவர் ஒரு சிறந்த வேட்பாளராக இருப்பாரென்பதே என் கணிப்பு.

ஜூவனிட்டாக்கு இருக்கும் தமிழ் மீதான ஆர்வத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சில வருடங்களாக கல்விபயின்று, கடந்தவருடம் மொழியியலில் முதுமாணிப்பட்டத்தையும் (MA in linguistics. Focus on Dravidian Languages including Tamil) பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


டந்த சனிக்கிழமை அவர் சித்திரை 28,  நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தனது அலுவலகத்தைத் தன் தொகுதியில் திறந்திருந்தார். அவரைப் போன்றவர்கள் அரசியல் களங்களில் வெற்றிபெறுவது நாம் வெற்றி பெறுவதைப் போன்ற மகிழ்வைத் தரக்கூடியது என்பதால், அவரை வாழ்த்துவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்தேன்.

என் நண்பர்களுக்கு என் அரசியல் சார்பு தெரியுமென்பதால், உனக்கு பரவாயில்லையா எனக் கேட்டார்கள். லிபரல் கட்சியை விட, எனக்கு ஜுவனிட்டாவின் அரசியல் வாழ்வு தெரியும்; அவரை நான் சந்திப்பதில் ஒருபோதும் மறுப்பேதுமில்லை என நண்பர்கள் அனைவருமாக அவருக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றிருந்தோம்.

ஜூவனிட்டா நிற்கும் தொகுதியில், பழைமைவாதக் கட்சிக்கும் வேட்பாளராக பல தமிழர்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தும் நம் தமிழ் கலாசாரத்தால், அவர்கள் அனைவரும் விலக்கப்பட்டு வேற்றின பெண்மணி ஒருவர்தான் இப்போது பழைமைவாதக் கட்சியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

அப்படி ஒரு பழைமைவாத வேட்பாளரை ஆதரித்து அதற்காய் உழைத்த நண்பர் ஒருவரையும் இச்சந்திப்புக்கு முன்னர் சந்தித்திருந்தோம். அந்த நண்பர் ஜூவனிட்டாவின் தொகுதியில் வாழ்பவர் என்பதால், நீங்கள் ஜூவனிட்டாவுக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டோம். அவரின் பழைமைவாத தமிழ் வேட்பாளர் களத்தில் இல்லாததாலோ என்னவோ, ஜூவனிட்டாவுக்கு வாக்களிப்பேன் என்றார். ஆக, நாம் ஒரு வாக்கை ஏற்கனவே ஜுவனிட்டாவுக்குச் சேகரித்துவிட்டோம் என நினைக்கின்றேன்.

இலங்கையிலோ/இந்தியாவிலோ தேர்தல் நடந்தால், தாங்களே நேரடியாக களத்தில் நிற்பதாக ஆவேசம் காட்டும் புலம்பெயர் தமிழர்கள், தாம் வாழும் நாடுகளில் நிகழும் தேர்தல்களின்போது அவ்வளவாக ஆவேசம் காட்டுவதில்லை. ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் அரசுக்கள் நம் மீது மட்டுமில்லை, நம் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்க்கையையும் பாதிக்கச் செய்வது என்ற உண்மையை உணர்ந்து நல்லாட்சி செய்யக்கூடிய அரசுக்களை தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும். இங்கே நடக்கும் தேர்தல்களைப் பற்றி இன்னும் விரிவாக உரையாடவேண்டும்; களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டும்.

நான் இருக்கும் தேர்தல் தொகுதியில் ஜூவனிட்டா போட்டியிடவில்லையென்றாலும், நேரமும்/காலமும் வாய்க்கும்போது அவரின் தேர்தல் பரப்புரைகளின்போது, தன்னார்வளராக வேலை செய்யும் விருப்பம் இருக்கிறது. ஜூவனிட்டாவின் தொகுதியில் இருக்கும் நண்பர்களை அவருக்கு வாக்களிக்க வேண்டுமென மனமுவந்து கேட்கின்றேன். உங்கள் வாக்கு வீணாகாது நல்லதொரு நாடாளுமன்ற உறுப்பினரையே நீங்கள் தேர்வு செய்கின்றீர்களென்பது உறுதி!


ஜூவனிட்டாவைச் சந்தித்தபோது அவர் 'என்னிடம் நீங்கள் என்டிபி ஆதரவாளர் அல்லவா, எங்கே இப்படி?' என்று வியப்புடன் கேட்டார்.

'அப்படி வேறொரு கட்சிக்கு நீண்டகால ஆதரவாளனாக இருந்தவனை உங்கள் பக்கம் இம்முறை கொண்டுவந்தது உங்களின் நீண்டகால உழைப்பும், சமூகம் சார்ந்த அர்ப்பணிப்பும்' என்றேன்.

எப்போதும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாது, நல்லவை நிகழும்போது அவற்றை மனமுவந்து பாராட்டவும் பின்னிற்கக் கூடாது. அப்போதுதான் ஆரோக்கியமான அரசியல் சூழலை நாம் உருவாக்க முடியும் என நம்புகின்றேன்.

**********


(சித்திரை 08, 2025)


கார்காலக் குறிப்புகள் - 86

Saturday, April 19, 2025

 

டந்த சில நாட்களாக என் பால்யகால பள்ளி நண்பர்களோடு நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நண்பனால் இது சாத்தியமாயிருந்தது. இனியதான பாடசாலை நாட்கள் இல்லாது நம் வாழ்க்கையைக் கடந்து வந்திருப்போமா என்ன? மகிழ்வும், துயரமுமான நினைவுகள் நமக்கிடையில் நுரைத்துத் ததும்பிக் கொண்டிருந்தன.

அதுவும் நாம் பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடசாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது படித்தவர்கள். ஆகவே அந்தக் காலத்தில் நிகழ்ந்த இரகசியங்கள் பலவற்றை மாறி மாறி நாம் பகிர்ந்து கொண்டிருந்தோம். யாழில் என்னுடைய 15 வயது வரைதான் கழிந்திருந்தன. பாடசாலையில் படித்த வருடங்கள் 10 வருடங்கள் என்றால், எங்கள் பாடசாலை இந்தக் காலத்தில் நான்கைந்து இடங்களில் இடம்பெயர்ந்திருக்கின்றது. பண்டத்தரிப்பு, அளவெட்டி, இணுவில், மருதனார்மடம் என்று எமது பாடசாலை மாலை நேரமாக இயங்கியபோது, ஓர் உண்மையான தேவ விசுவாசியைப் போல அது சென்ற ஊர்களெல்லாம் நாங்களும் சென்று படித்துக் கொண்டிருந்தோம்.

நன்றாக படிப்பில் பிரகாசித்த நண்பர்கள் இந்தக் காலத்தில் யாழ் நகரின் முக்கிய பாடசாலைகளில் சென்று படிக்கச் சென்றிருந்தார்கள். இறுதியில் இப்படி வாடகைப் பாடசாலையில் மாலை நேரமாக இயங்கமுடியாதென்று, நாங்களாகவே சொந்தக் காலில் நிற்கவேண்டுமென்று பாடசாலையை மருதனார்மடத்தில் கட்ட ஆரம்பித்தோம். பாடசாலையை கட்ட ஆரம்பிக்கின்றோம் என்றவுடன் கற்பனையை அதிகம் விரிக்காதீர்கள். அப்போது சீமெந்தைக் (cement) காண்பதென்பதே தங்கத்தைக் காண்பதைப் போன்றது. எங்கள் பாடசாலை ஓலைக் கொட்டகையாகக் கட்டப்பட்டது. மேலே தென்னோலைகளாலும், அடியில் உறுதியான மரங்களாலும், எப்படி அசல் பாடசாலை இருந்ததோ அதே அமைப்பில் கட்டினோம்.

எங்கள் பாடசாலையில் ஒரு தனித்துவம் நடுவில் மைதானம் இருக்க அதைச் சுற்றித்தான் பாடசாலை வகுப்புகள் இருந்தன. அதேபோன்ற அமைப்பில் மருதனார்மடத்தில் வகுப்புகள் அமைக்கப்பட்டன. சிறிய மைதானம் போன்ற அமைப்புக்கூட எங்களுக்கு இங்கிருந்தது. பாடசாலை இல்லாத நேரங்களில் என்னைப் போன்றவர்கள் மட்டையையும், பந்தையும் கொண்டு விளையாடியபோது, எங்கள் அதிபர் இந்த ஓலைக்கொட்டகையே எப்போது காற்றில் விழுமென்றிருக்கும்போது கிரிக்கெட் தான் உங்களுக்கு வேண்டியிருக்கின்றது என்று அடித்துத் துரத்தியுமிருந்தார்.

அசல் பாடசாலையில் 1500 மேற்பட்டவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். பாடசாலையும் எங்களைப் போல அகதியாக அலைந்து மருதனார்மடத்தில் சொந்தக் குடிலில் தங்கியபோது எப்படியாவது 1000 பேராவது படித்திருப்போம். எங்கள் தரத்தில் கூட நான்கு டிவிஷன்கள் இருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படித்திருப்போமென நினைக்கின்றேன். 1000 பேர் படிக்கும் பாடசாலையில், அதுவும் ஆண்களும்/பெண்களும் படிக்கும் ஓரிடத்தில் கழிவறைப் பிரச்சினைகளை, தண்ணீர்ப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் யோசித்து பாருங்கள். ஆனால் இப்படி 1008 பிரச்சினை இருந்தபோதும் நாம் அப்போது சந்தோசமாகவே படித்தோம்,

கணிதவகுப்பில் கணக்குப் பிழையாகச் செய்த கோபத்தில் எமது கொப்பிகளைத் தூக்கியெறிந்தார்கள்,  தமிழில் நளவெண்பாப் பாடல்களையும் மனனமாக்கி வராததால், புறங்கையை நீட்டவைத்து பிரம்பால் அடித்தார்கள். சமூகக்கல்வியில் வரைபடங்களில் பிழையாக இடங்களைக் குறித்ததால், காதுகளை முறுக்கினார்கள்.  இப்படி இவையெல்லாம் நிகழ்ந்தபோதும், 'இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என பிரபஞ்சன் சொன்னதுபோல, நாங்கள் பெண்களின் பின் சுழன்றோம், அவர்களின் கடைக்கண் பார்வைக்காய்க் காத்திருந்தோம், நண்பர்களுக்காக நமது 'கனவு' காதலிகளைக் கைவிட்டோம் என பலது நிகழ்ந்து கொண்டிருந்தன.

இந்தக் காலத்தில்தான் இணுவிலில் பிள்ளையார் கோயிலுக்கருகில் இந்திய இராணுவம் பாவித்து விட்டுப்போன ஒரு தரிசு நிலத்தை துப்பரவாக்கி ஒரு மைதானத்தைத் தயார் செய்தோம். ஒரு பக்கம் குப்பைகள் புதைந்து கிடக்க, மறுகரையில் பக்கத்தில் இருந்த அரிசி ஆலையின் கழிவு உமி கொட்டப்பட்டிருக்க, நாளும் பொழுதுமாக அவற்றைச் சுத்தம் செய்து கிரிக்கெட்டும், உதைபந்தாட்டமும் ஆடும் மைதானமாக ஆக்கியிருந்தோம். அங்கேதான் நான் 15 வயது கிரிக்கெட் கப்டனாக இருந்து எங்கள் அணியை வழி நடத்தியிருந்தேன். அப்போது அங்கே நடந்த சோகக் கதைகளை இப்போது மறந்துவிடுவோம்.

என்றாலும், "மப்பன்றிக் கால மழை காணாத மண்ணிலே/ சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது/ ஏர் ஏறாது; காளை இழுக்காது/
அந் நிலத்தின்/பாறை பிளந்து பயன் விளைப்பான் என்னூரான்./ ஆழத்து நீருக்கு அகழ்வான் அவன். நாற்று/ வாழத்தன் ஆவி வழங்குவான். ஆதலால்/ பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் நன் நெல்லு"
என்று எங்கள் பாடசாலையில் பயின்ற மஹாகவி பாடியதைப் போல, நாங்கள் எத்தனை தடங்கல்/தோல்வி/துயர் சூழ்ந்தபோதும் எங்கள் முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. அதனால்தான் சொந்தமாய் ஓரிடத்தில் பாடசாலையையும், எமக்கென்று பாடசாலைக்கு 3-4 கிலோமீற்றர்கள் தொலைவில் மைதானத்தையும் அமைத்திருந்தோம். அதில் உயிர்ப்பையும், சொந்தக்காலில் நிற்கின்றோம் என்கின்ற நிமிர்வையும் கண்டிருந்தோம்.

அசலான பாடசாலை இருந்தபோது, 15 வயதுக்குட்பட்டோர் உதைபந்தாட்ட அணியில் முதலாவது போட்டியில் முதலாவது கோலையும் நானே அடித்திருந்தேன். அதன் பிறகு நான் எந்தக் கோலையும் அடிக்கவில்லை என்பது வேறு விடயம். பழைய கதைகளைக் கிளறினாலும், எங்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்களை மட்டும் நினைப்பதே ஆடவர்க்கு அழகு என்க.

இவ்வாறு நாங்களும் சென்.ஹென்றிஸூம் மாவட்ட அளவுக்குச் சென்றிருந்தபோது, யாழ் நகர் பாடசாலையிடம் 7-0 என்ற அளவில் படுதோல்வியடைந்திருந்தோம். அதில் எதிரணியின் ஒரு வீரன் மட்டும் 5 கோல்களை எமக்கெதிராக அடித்திருந்தான். இப்போதுதான் நண்பரொருவன் ஓர் உண்மையைச் சொன்னான். அந்தப் போட்டி கொக்குவில் இந்துக் கல்லூரியில்தான் நடந்திருந்தது. எதிரணியின் உள்வீட்டு இரகசியத்தை அறிவதற்காக இந்த நண்பனைத்தான் உளவாளியாக மற்றப்பக்கமாக அனுப்பியிருந்தோம்.

அவன் இப்படி அதிக கோலடித்த எதிரணி வீரன் எங்கள் வயதைவிடக் கூடிய வயதுடையவன்; ஆனால் எங்கள் வகுப்பில் படித்ததால் அதையவர்கள் கவனிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, எங்கள் கோச்சிடம் இதை ஒரு பெட்டிஷனாக சொல்லச் சொல்லியிருக்கின்றான். ஆனால் எவரும் இதை 'சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் எங்களை வென்ற எதிரணி அடுத்த ஆட்டத்தை இன்னொரு பாடசாலையோடு ஆடியபோது அவர்கள் கண்டுபிடித்து புகார் செய்ததால் நம்மை படுதோல்வியடைச் செய்த அணி disqualified செய்யப்பட்டுவிட்டது என்றான்.

நானும் இதையெல்லாம் கேட்டுவிட்டு, எங்கள் வகுப்பில் இருந்த பெண்களும் எங்களுக்கு வயது மூத்த அண்ணாக்களை இப்படி disqualify செய்திருந்தால், நாங்களும் எங்களுக்குப் பிடித்த பெண்களை காதலித்து இல்லறம் என்னும் நல்லறத்தை, வள்ளுவன் - வாசுகி போல வாழ்ந்திருப்போமே எனக் கவலையோடு சொன்னேன். எப்போதும் எங்களுக்கு அதிஷ்டம் வாசல் கதவைத் தட்டுகிறதே தவிர, வீட்டுக்குள் வரமாட்டேன் என அடம்பிடிக்கிறதென எனது மற்றொரு நண்பன் ஏதோ தனது பழைய ஞாபகத்தை வைத்துச் சொன்னான். அந்தந்த நேரத்து அநியாயங்கள்!

ப்படி எங்கள் பாடசாலை ஒவ்வொரு இடமாக அகதியாக இடம்பெயர்ந்தபோதும், மருதனார்மடத்தில் சொந்தமாக குடிலை அமைத்தபோதும் எங்களுக்கு ஒரேயொரு அதிபரே இருந்தார். பிள்ளைகளே இல்லாத அந்த அதிபரை - அப்போது அவரோடு முரண்பட எத்தனை காரணங்கள் இருந்தாலும்- இப்போது நினைத்தால் ஒரு தேவதூதன் போலத்தான் தோன்றுகின்றார். சென்ரல் காலேஜீல் கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தபோது, ஒரு பழைய பந்து காணாமற் போனதற்கே கப்டனான என்னிடம் கணக்குக் கேட்ட விசர் மனுசன் அந்தாள். அவ்வப்போது கே.கே.எஸ் வீதியில் சைக்கிளில் போகும்போது அவர் வீட்டில் நின்று அப்பா பேசும்போது, அடக்கமான மாணவனாக இருந்து உள்ளுக்குள் 'இந்த மண் எங்களின் சொறி மண்' என்றும் எரிச்சலில் பாடியிருக்கின்றேன். அப்படிப் பாடியபோதும் நான் பாடசாலையை விட்டு நீங்கியபின், இவனொரு நன்மாணவன் என்று character certificate என்று எழுதித் தந்த நல்ல மனுசன்.

அவர் பின்னர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்று ஏதோ ஒரு அமைப்பில் இயங்கியபோது அவரையும் இயக்கம் சுட்டுப் பலிவாங்கியது மிகுந்த துயரமானது. அப்போது இந்தக் கொலைக்கெதிரான குரல்கள் மெளனமாக்கப்பட்டபோதும், அந்த அதிபரின் பெயரில் ஒரு மண்டபம் எங்கள் பாடசாலையில் இப்போது மிளிர்ந்துகொண்டிருப்பது ஆறுதளிப்பது.

இதே காலகட்டத்தில் எங்கள் உதைபந்தாட்ட குழுவில் சகோதரர்கள் இருவர் விளையாடியிருந்தனர். எங்களை விட ஒருவர் ஒரு வயது கூடியவர்; மற்றவர் ஒரு வயது குறைந்தவர். அவர்கள் கொஞ்சம் படம் காட்டுவார்கள்; ஆனால் நல்ல விளையாட்டுத் திறமை அவர்களிடம் இருந்தது. அந்த சகோதர்களுக்கு பாடசாலையில் ஒரு பெயர் இருந்தது. அந்த குடும்பத்தில் 5 பேரும் எங்கள் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் எனச் சொல்வார்கள். அப்போது அவர்களில் இளைய சகோதரனும் படித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொழுக்/மொழுக்கென்று குட்டிச்சிறுவனாக அவன் இருப்பான்.

அந்த பஞ்சபாண்ட சகோதர்களோடு உதைபந்து விளையாடிய நினைவுகளை மீட்டபோது நண்பரொருவன், 'உனக்கு அந்த குட்டிப் பையன் இப்போது என்ன செய்துகொண்டிருகின்றான் என்று தெரியுமா' என்று கேட்டான். நான் இல்லையேயென முழித்தேன். 'டேய் அவன்தான்டா இப்போது யாழ்ப்பாணத்து எம்.பியாக இருக்கின்ற அருச்சுனா!'

**********


ஓவியம்: ஜி.கோபிகிருஷ்ணன்

(Apr 06, 2025)

சங்கரி சந்திரனின் ‘சூரியக்கடவுளின் பாடல்’ (Song of the Sun God)

Saturday, April 12, 2025

 

லக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படத் தொடங்கியதை சிங்கள அதிகார வர்க்கம் நன்கு விளங்கிக்கொண்டதால்தான், அரிய நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், ஆவணங்களையும் கொண்டிருந்த யாழ் நூலகத்தை எரித்தது. ஆனால் பெளதீகமான நூல்களைத்தான் அழிக்க முடியும், இனமொன்றின் வரலாற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என்பதே உண்மை. அதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் ஈழப்போராட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 
அவ்வாறு நமக்குப் பரிச்சயமான கதைகளைச் சொல்கின்ற ஒரு ஆவணமாக சங்கரி சந்திரனின் ‘சூரியக் கடவுளின் பாடல்’ (Song of the Sun God) எனும் நாவலைச் சொல்லலாம். சங்கரி, 70களின் மத்தியில் ஈழத்தமிழ்ப் பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிறந்தவர். நாவல், 1930களில், இலங்கையின் தெல்லிப்பளையிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் தொடங்குகின்றது. கொழும்பில் பிரபலமான ஒரு வைத்தியரான ரஞ்சன், நளாவைத் திருமணம் செய்கின்றார். ரஞ்சன், நளா தம்பதிக்கு பிரியா, நந்தன் என்கின்ற இருபிள்ளைகள் பிறக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் (1956) நடைபெறும் இனக்கலவரத்தில், கல்லோயா எனும் இடத்தில் நளாவின் உடன்பிறவாச் சகோதரனான மோகன் கொல்லப்படுகின்றார். அவரின் மனைவியான வாணி சிங்களக்காடையர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார். இந்நிகழ்வுகளின் சாட்சியமாக அவர்களின் எட்டுவயது மகள் தாரா இருக்கின்றார்.
 
மோகன் – வாணி தம்பதியினரின் பிள்ளையான தாரா, இக்கொடும் நிகழ்வின்பின், நளாவின் பிள்ளைகளில் ஒருவராக வளர்த்தெடுக்கப்படுகின்றார். இந்த மூன்று பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை நாவல் சொல்கின்றபோது, அவர்களோடு கூடவே நாட்டின் இனப்பிரச்சினை சிக்கலாவதையும் நாம் அவதானிக்கின்றோம். தமிழர்களின் தொடக்ககால அமைதிப் போராட்டங்கள் வன்முறையின் மூலம் குழப்பப்பட்டதால், தந்தை செல்வநாயகத்தின் கட்சியினர் எப்படி தனித் தமிழீழப் பிரகடனம் எனும் முடிவிற்கு வந்தார்கள் என்பதையும் இந்நாவல் கவனப்படுத்துகின்றது.
 
நெருக்கமான சகோதரிகளைப் போல வளரும் பிரியாவும், தாராவும் ஒருபொழுது பிரிகின்ற சந்தர்ப்பம் வருகின்றது. வைத்தியரான தாரா இலங்கையில் தங்கிவிட, பிரியா சிவாவைத் திருமணம் செய்து இங்கிலாந்துக்குப் போகின்றார். தாரா யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலை செய்கின்ற 80களின் தொடக்கத்தில், ‘இயக்கப் பெடியங்களுக்கு’ வைத்திய உதவிகள் செய்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குள்ளாகிறார். பாலியல் வல்லுறவுக்கும் ஆளாகின்றார்.
 
அதன் நிமித்தம் தாராவுக்குப் பிறக்கின்ற குழந்தையே ஸ்மிருதி. ஆனால் அந்தக் குழந்தை தன்னோடு (இலங்கையில்) வளர்ந்தால், தனக்கும் தன் தாய்க்கும் நிகழ்ந்த பாலியல் வன்முறையே தன் குழந்தைக்கும் நிகழக்கூடுமென்று அஞ்சி, ஸ்மிருதி பிறந்தவுடனேயே அவரைப் பிரியாவிடம் வளர்க்கக் கொடுக்கின்றார் தாரா. அவர் தனது சொந்தப் பிள்ளையைக் கையளித்துவிட்டு, போராளிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு உதவி செய்கின்ற ஒரு வைத்தியராக தன்னை மாற்றிக் கொள்கின்றார்.
 
இந்த நாவலானது 1930களில் தொடங்கி, 2010வரை நீள்கின்ற, மூன்று தலைமுறைகளின் கதைகளைச் சொல்கின்ற ஒரு புதினமாகும். ஒருவகையில் குடும்பங்களின் கதைகளினூடாக இந்தக் காலகட்டத்தின் ஈழத்தின் நிலைமாறும் அரசியல்/ ஆயுத வரலாறும் சமாந்தரமாகச் சொல்லப்படுகின்றது. இலங்கைப் பிரதமரினதும், ஜனாதிபதியினதும் வைத்தியராக இருக்கும் ரஞ்சனுக்கு இலங்கையில் இருந்து வெளியேறும் கனவு ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் எண்பதுகளில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், 83 ஜூலைக் கலவரமும் அவரை இலங்கைச் சூழலைவிட்டு வெளிநாட்டுக்குப்போக உந்தித்தள்ளுகின்றது. ரஞ்சனும், நளாவும் 83 இனப்படுகொலையில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்புகின்றனர். காடையர் கூட்டம் நளாவை நெருப்பு மூட்டிக் கொல்ல முயற்சிக்கின்றது. அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், ரஞ்சன் ஜனாதிபதியின் வைத்தியர் என்று கண்டுபிடிக்கிறார். அதனால் ரஞ்சனும் நளாவும் உயிர் தப்புகின்றனர். 
 
ரஞ்சன், நளா, அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் வெளிநாட்டுக்கு அகதியாக அடைக்கலம் கேட்டுச் செல்கின்றபோது இலங்கையைவிட்டு வெளியேற தாரா மட்டும் மறுத்து விடுகின்றார். எக்காரணம் கொண்டும் இலங்கையைவிட்டு வெளியேற விரும்பாத ஒருவராக அவர் இருக்கின்றார். அதேவேளை பிரியா, தாராவை வெளிநாட்டுக்கு வந்துவிடும்படியும், அவரின் குழந்தையான ஸ்மிருதியை தன்னோடு சேர்ந்து வளர்க்கலாமென்றும் சொல்கின்றபோது, தாரா அந்த அழைப்பை உறுதியாக மறுத்துவிடுகின்றார். ஸ்மிருதி, உண்மையான தாய் யாரென்று அறியாது பிரியாவின் குழந்தையாக வளர்கின்றார். பின்னர் பெரியவளாகித் திருமணம் செய்கின்றார். குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றார். அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து, வாழவும் செய்கின்றார்.
 
முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவடையும்போது, தாரா அங்கே கடமையாற்றும் ஒரு வைத்தியராக இருக்கின்றார். அவர் இறுதியுத்தத்தில் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து, இலங்கை இராணுவமும், விடுதலைப்புலிகளும் யுத்தத்தின்போது செய்த மனிதவுரிமை மீறல்கள் குறித்துச் சாட்சியமளிக்கின்றார்.
 
 
ருகட்டத்தில் ஸ்மிருதிக்கு உண்மையைச் சொல்லவேண்டிய சந்தர்ப்பம் வருகின்றது. இறுதியில் தாராவின் மகளான ஸ்மிருதி, தான் யாருடைய குழந்தை என்று அறியும்போது அதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்கின்றார் என்பதையும், அதன்பிறகு அவருக்கும், அவரை வளர்த்த ‘தாயான’ பிரியாவிற்குமான உறவு என்னமாதிரி ஆகின்றது என்பதையும், வாசிக்கும் போது எம்மைப் பாதிக்கச் செய்யும் அளவிற்கு மிக ஆழமாக எழுதிச் செல்கின்றார், சங்கரி.
 

2000களின் தொடக்கத்தில் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அதிரடியாக ‘இனி தமிழ் இலக்கியத்தை புலம்பெயர்ந்தோரோ தலைமை தாங்குவார்கள்’ என்று அறைகூவல் செய்தார். அதன் நிமித்தம் ‘தமிழ் ஊழியமே என் சுவிஷேசமென’ அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பா, கனடா எனப் பயணங்களைச் செய்து, புலம்பெயர்ந்து எழுதுபவர்களை அவரின் ‘தமிழ்த்துவத்தின்’ கீழ் ஒருங்கிணைக்கவும் முயன்றார். ஆயினும் அன்றிலிருந்து இன்றுவரை, அதற்கான சில விடிவெள்ளிகள் புலம்பெயர்ந்த தேசத்தில் தோன்றியிருக்கின்றதே தவிர, அவை தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் வேரூன்றவில்லை. ஒருவகையில் அது அவரது உதிர்ந்துபோன கனவெனச் சொல்லலாம். ஆனால் அதிஷ்டவசமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் அடுத்ததலைமுறை அவரவர் வாழும் நாடுகளில் காத்திரமான எழுத்தாளர்களாக முகிழ்த்துவரத் தொடங்கியிருக்கின்றது. அவர்கள் தமிழில் எழுதாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலானோரின் கதைக்களம் ஈழத்தைப் பின்புலமாக வைத்தே எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனுக் அருட்பிரகாசம், வி.வி. (வாசுகி) கணேசானந்தன், ஷாரோன் பாலா, எஸ்ஜே சித்து, சங்கரி சந்திரன் என்று இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
 
இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழே வாசிக்கத் தெரியாது. வாசுகி, ஷாரோன், சங்கரி, சித்து போன்றோர் எழுபது/ எண்பதுகளில் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கு, தமிழில் எழுதப்பட்டவற்றையும்/ எழுதப்படுபவைகளையும் சரியாக வாசிக்கக்கூடத் தெரியாது. ஆனால் அவ்வளவு தத்ரூபமாக, யதார்த்தத்திலிருந்து விலகாமல் ஈழப்போராட்ட வரலாறு குறித்து எழுதுகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் தமிழ் வாழ்வு குறித்து தேடித்தேடி வாசிக்கின்றனர். தாங்கள் எழுதும் நாவல்களுக்காக பல்வேறு ஈழத்தமிழர்களைச் சந்தித்துப் பேசி தகவல்களைச் சேகரிக்கின்றனர்.
 
தனது உறவுகளை வெவ்வேறு நாடுகளில் சந்திக்கும்போது எழுதிய குறிப்புகளை வைத்திருந்தது இந்நாவலை எழுதுவதற்கு, மிகவும் உதவியது என சங்கரி சொல்கின்றார். அத்துடன் அவரின் அம்மம்மாவிடமிருந்து நிறையத் தகவல்களைப் பெற்றும் இருக்கின்றார். இதனை அவர் நாவலாக்க பத்து வருடங்களுக்கு மேலாகி இருக்கின்றது. இப்போது சங்கரி ஒரு கவனம் பெற்ற எழுத்தாளர். இந்நாவலுக்குப் பிறகு வெளியான ‘கறுவாத்தோட்டத்தில் தேநீர் நேரம்’ (Chai Time at Cinnamon Garden) என்ற நாவலுக்காக அவுஸ்திரேலியாவின் மதிப்பு வாய்ந்த ‘Miles Franklin Award’ விருதையும், பணப்பரிசாக 60,000 அவுஸ்திரேலிய டொலர்களையும் பெற்றிருக்கின்றார்.
 
 
ழம் பற்றி ஷாரோன் பாலா, சங்கரி சந்திரன் போன்ற இலங்கையில் பிறக்காதவர்கள் எழுதும் புதினங்கள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன. அவர்கள் ஈழத்தில் நடந்த முக்கிய சம்பவங்களை எவ்வித தயக்கமோ, சார்போ இல்லாது, உள்ளதை உள்ளபடி எழுதுகின்றனர். தமிழர்களின் திசைமாறிய மொழிக்கான/ நிலத்துக்கான போராட்டத்தை எவ்வளவிற்கு வெளிப்படையாகச் சொல்கின்றார்களோ, அந்தளவிற்கு ஈழத்தமிழர்கள் ஏன் போராட வேண்டி வந்தது என்பதையும் நேர்மையாக எழுதுகின்றனர்.
 
இன்றைக்கு தமிழ்ச்சூழலில், பிற்காலத்தைய ஆயுதப்போராட்டம் திசைமாறிப்போனதை வைத்து, தமிழர்கள் போராடப்புறப்பட்ட ஆரம்பப் புள்ளிகளே பிழையானது என்று நிரூபிக்க பலர் கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றனர். 50களில் அகிம்சைப் போராட்டமாக வெளிப்பட்ட தமிழரின் குரல்களை, சிங்களப் பேரினவாதம் எப்படி வன்முறையால் நசுக்கியது என்பதை சங்கரி, ஷாரோன் போன்றோர் மிகச்சரியாகவே முன்வைக்கின்றனர். 
 
தமிழரசுக்கட்சியினர் காலி முகத்திடலில் தனிச் சிங்களமொழிச் சட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்தபோது, சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட காடையர்களால் அது வன்முறைகொண்டு அடக்கப்பட்டது. இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு மட்டக்களப்பு/ அம்பாறை போன்ற கிழக்குத் தமிழ் மக்களும் ஆதரவளித்திருந்தனர். 
 
அந்த ஆதரவைக் காணச்சகிக்காமலேயே, 1956இல் கல்லோயாக் குடியேற்றப் பகுதியில் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த நிகழ்வு அன்று நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது அதற்கான பதில் நடவடிக்கை அன்றைய அரசால் எடுக்கப்பட்டிருந்தாலோ, 1958இல் அது பெரும் இனக்கலவரமாக வெடித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. அதன் பிறகும் எத்தனையோ படுகொலைகள் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு, 1983இல் அது பெரும் வெறுப்பு அரசியலாக வெடித்து, 3000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் திட்டமிடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் கசப்பான உண்மையாகும். இதே சிங்களப் பெரும்பான்மை அரசு, இலங்கை சுதந்திரமடைய முன்னர், தமிழர்களுக்கு நிகழ்த்தியது போல, முஸ்லிம்கள் மீதும் கலவரங்களை நிகழ்த்தியதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பேரினவாதிகள் தமது அரசியலைச் செய்வதற்காக, ஏதேனும் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது வெறுப்பை உமிழ்வது அவசியமான தேவையாக இருக்கின்றது போலும்.
 
எங்குமே அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறாத அரிய நூல்கள் இருந்த யாழ் நூலகத்தை இவர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் ஆயுதப்போராட்டமாக மாறிய தமிழர் போராட்டத்தையும் மிக மோசமான முறையில் தோற்கடித்தார்கள். ஆனாலும் உண்மைகள் ஒருபோதும் புதைவதில்லை என்பதற்கிணங்க, தாம் செய்த தவறுகளோடு சேர்த்து, சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகங்களையும் வெளிப்படுத்தும் புதினங்களை தமிழர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அதை தமிழ் நிலத்தில் பிறக்காத/ வாழாத புதிய தலைமுறையும் எழுத்தில் கொண்டுவருவதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. தமிழில் எழுதாவிட்டாலும், தமிழ் தமது அடையாளம் என்கின்ற புரிதலோடு இருக்கின்ற இப்புதிய தலைமுறைகள், புலம்பெயர் தேசத்தில் இருந்தபடி, சிங்களப் பேரினவாதிகளின் மனச்சாட்சியை நிலைகுலையச் செய்கின்றன.
 
இந்த நாவலில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவின் மூன்றாம் தலைமுறை, தமது உண்மையான ‘ஊர்’ எதுவாக இருக்கும் என்று தங்களுக்குள் தேடியபடி இருப்பார்கள். ஏதோ ஓரிடத்தில் அவர்கள், நாம் ‘இலங்கை அவுஸ்திரேலியர்கள்’ என்று அழைக்கப்படுவதை எதிர்த்து, ‘அவுஸ்திரேலிய தமிழர்கள்’ என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றோம் எனச் சொல்வார்கள். கனடாவில்கூட இங்கு பிறந்த தலைமுறை தம்மை ஈழத்தமிழர்களாகவும், தமிழ்க் கனேடியர்களாகவுமே அடையாளப்படுத்த விரும்புகின்றார்கள். ஒருவகையில் தம்மை/ தமது பெற்றோரை சக குடிமக்களாக மதிக்காத நாடான இலங்கையை தமது அடையாளமாக முன்வைக்க இந்தத் தலைமுறையினர் விரும்புவதில்லை என்றுகூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.
 
‘சூரியக் கடவுளின் பாடல்’ என்கின்ற இந்த நாவலில் இராமாயணம்/ மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் பேசப்படுகின்றன. பாஞ்சாலியை அர்ஜூனன் திருமணம் செய்துவிட்டு வரும்போது, அர்ஜூனன் தனது தாய் குந்திதேவியிடம் ‘நான் ஓர் அரிய பொருளைக் கொண்டுவந்திருக்கின்றேன்’ எனச் சொல்லுகின்றான். குந்திதேவி ‘நீ அதை ஐவரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ எனச் சொல்லுகின்றார். இதனால் பாஞ்சாலி பஞ்சபாண்டவர் ஐவருக்கும் மனைவியாகின்றார். அந்தக் கதை இந்த நாவலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நினைவூட்டப்படுகின்றது. இந்த நாவலில் வரும் நளா, பிரியா, தாரா என பெரும்பாலான பாத்திரங்கள் தம் வாழ்வை பிறருடன் பெருந்தன்மையுடன் பகிர்ந்துகொள்கின்றன. பிறருக்காக வாழ விழைகின்றவர்களாகவே இந்தப் பெண் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்தேசத்தில் வாழும் பிரியாவை விட, ஈழத்தில் வாழும் தாராவை, ஸ்மிருதியை எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவராகவும்/ முற்போக்கானவராகவும் படைத்திருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.
 
மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வை மட்டுமன்றி, அவர்களூடாக ஈழத்தின் 80 ஆண்டுகால தமிழர்களின் வரலாற்றையும் இந்நாவல் எடுத்துரைக்கின்றது. அலுப்பின்றி வாசிக்கக்கூடிய சுவாரசியமான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலைச் சமகாலத்தில் வெளிவந்த முக்கிய புதினங்களில் ஒன்றெனச் சொல்லலாம்.
 
 
******
 
( நன்றி: 'எழுநா' - மாசி/2025)

கார்காலக் குறிப்புகள் - 85

Friday, April 04, 2025

 

ஓர் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கின்றீர்கள். அந்த எழுத்து உங்களை அப்படி வசீகரிக்கின்றது. நல்லதொரு படைப்பைத் தந்த அந்த  எழுத்தாளருக்கு நன்றி சொல்ல விரும்பும்போது நீங்கள் என்ன செய்வீர்கள். நான் சங்கரியின் நாவலை வாசித்து முடித்த மகிழ்ச்சியில், அவரின் எழுத்துக்களில் எதையாவது தமிழாக்க வேண்டுமென விரும்பினேன். அதுவே இந்தக் கட்டுரை.

சங்கரி தனது நாவல்கள், தான் கட்டியமைக்க விரும்பும் சமூகங்களுக்கும், சொல்ல வேண்டிய கதைகளுக்குமான காதல் கடிதமே என்று ஓரிடத்தில் சொல்லியிருப்பார். அவ்வாறே நானும் இந்த தமிழாக்கத்தை, ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளருக்கு அனுப்ப விரும்பும் 'காதல் கடிதம்' எனச் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகின்றேன்.


************

நாவலுடனான அந்தரங்கத் தொடர்பு
-சங்கரி சந்திரன்
(தமிழில்: இளங்கோ)


எனது குழந்தைகள், எங்கள் மூதாதையர் தாய்நிலத்துக்கு வெளியே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர். சில சமயங்களில், 'எங்கள் மூதாதையர் தாய்நிலம்' (our ancestral homeland) என்ற வார்த்தைகள் அவர்கள் வேறு யாருக்கோ சொந்தமானது போல் உணர்த்துகின்றன - அந்த வெளிப்பாட்டுக்கு எனக்கு உரிமை இல்லை. இவ்வளவு இரத்தம் சிந்தப்பட்ட யாழ்ப்பாண தீபகற்பத்தின் கடினமான, சிவந்த பூமியுடன் எங்களுக்கு பெளதீக ரீதியான தொடர்பு இல்லை. நாங்கள், நாட்டின் உள்நாட்டுப் போர் காரணமாக முப்பது ஆண்டுகளாக  அங்கு செல்ல முடியவில்லை, மேலும் இந்த யுத்தம் பல குடும்ப உறுப்பினர்களின் கட்டாய புலம்பெயர்வை விரைவுபடுத்தியும் இருந்தது.

அந்த மூன்று தசாப்தங்கள் எனக்கு ஒரு வளர்ச்சிப் பாதையாக அமைந்தன. அந்த நேரத்தில், என் பெற்றோர் போரைப் பற்றிய கோபத்துடனும் துக்கத்துடனும் போராடுவதையும், அதிலிருந்து தப்பி வந்ததால் குற்ற உணர்ச்சியுடன் தத்தளிப்பதையும் நான் பார்த்தேன். வெவ்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கு வெளியே நடந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டதோடு, எனது மாமிகளும், மாமாக்களும் (இலங்கையில்) நடந்த சமீபத்திய அட்டூழியங்களைப் பற்றி மென்மையான தொனியில் பேசிய பல சந்திப்புக்களில் இடையில் தூங்கியுமிருக்கின்றேன். இங்கேயே 'இனக்கலவரம்', 'இனப்படுகொலை' போன்ற புதிய சொற்களைக் கற்றுக்கொண்டேன்.

*

முற்றுமுழுதாக வெள்ளையினத்தவர் மட்டுமே கற்ற என் பள்ளிக்கூடத்தில், ஒவ்வொரு  ஆசிரியருக்கும் முன் 22 எழுத்துகள் கொண்ட எனது முழுப்பெயரை பொறுமையாக எழுதுவதில், என் சீனி சம்பல் சாண்ட்விச்களை நண்பர்களிடமிருந்து மறைப்பதில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்களின்போது அப்பா வீட்டை விட்டு வருவதற்கு முன்பு அவரது நெற்றியில் பூசிய திருநீற்றைத் துடைக்குமாறு கெஞ்சுவதில் என நான் என் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். கோவில்களுக்குச் செல்வதற்குப் பதிலாக 'பெவர்லி ஹில்ஸ் -90210' ஐப் பார்ப்பதற்கான எனது உரிமையை நிலைநாட்டுவதற்காக,  உறவினர்களின் விருந்து நிகழ்வுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குச் செல்வதற்காக, என் சகோதரன் மீசையை வழிப்பதற்குப் பாவிக்கும் நுரையை நானும் பாவிக்க அனுமதிக்குமாறு என் அம்மாவிடம் கண்ணீருடன் இறைஞ்சுவதாக,  என்  பதின்மக் காலங்கள் கழிந்தன. நான் என் பெற்றோரிடமிருந்தும், என் சமூகத்திலிருந்தும் தப்பியோடிப் போய் என் இளமைப் பருவத்தைப் பின்னர் கழித்தேன். ஆனால், அவர்களை விலத்தி வந்தவுடன், அவர்கள் அருகில் இல்லையேயென அவர்களுக்காக ஏங்கியுமிருக்கின்றேன்.

எனது 23வது வயதில், சிட்னியில்  இருந்து ஒரு விமானத்தில் ஏறி (கனடா)மொன்றியலுக்கும், பின்னர் இலண்டனுக்கும் சென்றேன், அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு நான் வீடு திரும்பவே இல்லை. இந்த இறுதி பத்தாண்டுகளில், நான் சில விடயங்களைச் செய்தேன். நான் சமூக நீதிக்காகப் பணியாற்றத் தொடங்கினேன், எனக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.,  இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் மிலேச்சத்தனமாய்ப் படுகொலைகள் செய்யப்பட்ட செய்திகளைப் பார்த்தேன்.

அப்போது நான் இலங்கையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டேன். சிட்னியில் வசித்து வந்த என் அம்மம்மாவை அடிக்கடி தொலைபேசியில் அழைக்கத் தொடங்கினேன். 12 வருடங்களாக, நான் இலண்டனில் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துவதற்காக அம்மப்பாவுடன் வாரந்தோறும் முப்பது வினாடிகள் உரையாடுவேன்; அதைத் தொடர்ந்து அம்மம்மாவுடன் நீண்ட நேரம் பேசுவேன், அவருக்கு என்னிடம் அம்பலப்படுத்த வேண்டிய இரகசியங்களும், சொல்லவேண்டிய புகார்களும் நிறைய இருந்தன.

இந்தப் பத்தாண்டுகளின் நடுப்பகுதியில், இலண்டன் மருத்துவமனையின் குளியலறைத் தரையில் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இந்த அனுபவம் ஒருபோதும் எளிதானது அல்ல. என் மன நலத்தையும்,  மீண்டும் கர்ப்பம் தரிக்கும் எனது வெறி குறித்தும் கண்டு அஞ்சிய என் கணவர், என்னை படைப்பு எழுத்து வகுப்பிற்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். மீண்டும் ஒரு குழந்தையை உருவாக்கும் ஆறுதல் நமக்குக் கிடைக்கும் வரை, வார்த்தைகளின் உருவாக்கம் எனக்கு ஆறுதல் அளிக்கும் என்று அவர் நினைத்தார்.

ஆகவே, என் அலுவலகத்திற்கு எதிரே இருந்த ஓர் எழுத்து வகுப்புக்குச் சென்றேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வாரமும் எனது வாரத்தின் சிறந்த இரண்டு மணிநேரங்கள் அதுவாக அமைந்திருந்தது.  எங்கள் ஆசிரியர், ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்தக் கதாபாத்திரத்திற்கு 'வேலை'களைச் செய்யக் கொடுக்குமாறு எங்களிடம் கேட்டார். நான், எப்போதும் எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்துக்கொண்டிருந்த ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன் - அல்லது அதை மீண்டும் உருவாக்கினேன்;  அது எனது அம்மம்மா. நான் அந்தப்பாத்திரத்துக்கு காட்சிகளையும், செயல்களையும் வழங்கி, இறுதியாக ஒரு கதையையும் கொடுத்து வளர்த்தெடுத்தேன். அந்த வகுப்பின் குறிப்புகளிலிருந்து, என் தாத்தா பாட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு இளம் தம்பதியினரை மையமாகக் கொண்ட "சூரியக் கடவுளின் பாடல்" (Song of the Sun God) என்கின்ற ஒரு நாவலை எழுதினேன்.

எனது அப்பா இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு, நமது வரலாறு, போர், கலாசாரம் மற்றும் சமூகம் பற்றி அவர் முன்னர் என்னிடம் சொன்ன அனைத்தையும் நான் நினைவில் வைத்திருந்ததற்கு, நன்றி தெரிவிக்க என்னை அழைத்தார். கடந்த நான்கு தசாப்தங்களாக அவர் சொல்லி வந்ததை நான்  கூர்ந்து கேட்டது பற்றி அவர் (கனிவுடன்) ஆச்சரியப்பட்டார்.

*

அம்மப்பா இறந்த சில வருடங்களுக்குப் பிறகு,  எனது அம்மம்மா ஒரு முதியோர் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தார். இது மிகவும் கதகதப்பும் கனிவும் நிறைந்த ஓர் அன்பான இடம், இங்கு வசிப்பவர்களில் பலர் இலங்கைத் தமிழர்கள், அதே போல் இங்கிருக்கும் ஊழியர்களும், பராமரிப்பாளர்களும் தமிழர்களாகவே இருந்தனர். அங்கு இருந்தவர்களில் பலர் தாம் இலங்கையிலே ஏற்கனவே ஒருவரையொருவர் அறிந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். என் குழந்தைகள் நான் எனது அம்மம்மாவைப் பார்க்க முதியோர் இல்லத்திற்குச் செல்லும் பயணங்களில்போது என்னுடன் இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அம்மம்மாவைப் பார்க்கச் செல்கையில், எனது கஸின்களையும், நண்பர்களையும் சந்தித்திருக்கின்றோம். அவர்கள் தங்கள் அம்மம்மாக்களையும் அப்பப்பாக்களையும் பார்க்க வந்திருக்கின்றார்கள். எந்தவொரு முதியவரின் அறையிலும், நான்கு தலைமுறை குடும்பங்கள் வரை பேசுவதும், சிரிப்பதும், கேட்பதும், சண்டையிடுவதும், கற்றுக்கொள்வதுமாகவும் இருக்கும்.

எனது அம்மம்மாவின் அறையில், என் சிறுவயதில் எனக்கு நினைவிருக்கும் தெய்வங்களுக்கென ஒரு சிறிய சன்னதி உள்ளது . அங்கே அம்மப்பாவுக்குச் பிடித்தமான பிள்ளையாரும், அம்மம்மாவுக்குப் பிடித்தமான  முருகனும் உள்ளார்கள்.  அந்த இடத்தில் இப்போது அம்மப்பாவின் புகைப்படம் இருக்கின்றது. அதில் அவருடைய நெற்றியில் உள்ள திருநீறு தேய்ந்து போயிருந்தால், அதை நான் மீண்டும் அங்கே பூசி விடுவதும் உண்டு.

நாங்கள் எங்கள் அம்மம்மாவை முதியோர் இல்லத்தில் சந்திக்கும்போது, ​​நாங்கள் அவரை தாழ்வாரங்களின் ஊடாக ஒரு நடைக்கு அழைத்துச் செல்வோம், மற்ற முதியவர்களின் அறைகளைக் கடந்து செல்லும்போது, ​​அங்கிருப்பவர்களின் கதைகளையும், தனது கதையைப் போன்று  அவர் எங்களிடம் சொல்லிச் சென்றபடி இருப்பார்.

அம்மம்மா ஒரு வசீகரமான கதைசொல்லி, ஒவ்வொரு கதையையும் எப்போதும் ஓர் அறிமுகத்துடன் தொடங்குவார், இன்றைய நாளுக்கு, பல தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கும் ஒரு கதையிலிருந்து அவை ஆரம்பிக்கும். அவருடைய கதைகள் பெரும்பாலும் பக்கத்து அறைகள் மற்றும் தாழ்வாரங்களில் உலாவும், அவருடைய நண்பர்களைப் பற்றிய அதிக ரகசியங்களையும் புகார்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்; மேலும் அந்த ரகசியங்களும் புகார்களும் எப்போதும் அவர்களின் இளமைப் பருவத்திலிருந்தே பொதுவாக உருவாகியிருக்கின்றன. அம்மம்மாவுக்கு மேலும் மேலும் வயதாகியபோது, ​​அவருடைய கடந்த கால நினைவுகள்,  மிகவும் தெளிவாக இருந்தன, மேலும் சில வழிகளில் அவருடைய நிகழ்கால யதார்த்தத்தை விட அவை உண்மையானவையாகவும் இருந்தன.

இப்படியாக எல்லோரும் சேர்ந்து, இந்த முதியோர் இல்லத்தில், அம்மம்மாவின் கதைகளைக் கேட்பதும், எங்கள் உறவினர்களைச் சந்திப்பதும், அவர்களின் கதைகளைப் புரிந்துகொள்வதும் என்பது ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவது போன்றதாகும். இந்தக் கதைகள் 'சந்திரன்களின்' நான்காவது, ஆனால் இறுதி தலைமுறை அல்லாத, எனது குழந்தைகளையும், எங்கள் மூதாதையர் நிலத்துடன் இணைக்கின்றன.

இந்தக் கதைகள் எங்கள் குடும்பத்தின் கடந்த காலத்தையும், எங்கள் தாய்நாட்டின் வரலாற்றையும் உறுதியாகப் பிணைக்கின்றன. இந்தக் கதைகள், இந்த இடத்தில், எனது அடுத்த நாவலான "கறுவாத் தோட்டத்தில் தேநீர் நேரத்துக்கு'  (Chai Time at Cinnamon Gardens) அடிப்படையாக அமைந்தன . அந்தப் புதினம்,  நாங்கள் கட்டியமைக்க விரும்பும் எங்கள் சமூகங்களுக்கும், நாங்கள் சொல்ல விரும்பும் கதைகளுக்குமான,  எனது காதல் கடிதம் ஆகும்.

*********

 

( சங்கரி சந்திரன் ஆங்கிலத்தில் எழுதிய 'Personal Connection to the Novel' கட்டுரையின் தமிழாக்கம்)


கார்காலக் குறிப்புகள் - 84

Wednesday, April 02, 2025

 

ரு குடும்பத்தின் மூன்று மகன்கள் தாயின் இறுதிக்கணங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கூடுகின்றார்கள். அதில் ஒரு மகன் இங்கிலாந்தில், 20 வருடங்களுக்கு மேலாக ஊருக்குத் திரும்பாமல் இருக்கின்றார். அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை, குடும்பத்தின் விருப்புக்கு எதிராகத் திருமணம் செய்தவர். இப்போது அவர் தனது மனைவியோடும், பிள்ளைகளோடும் முதன்முதலில் திரும்பி வந்திருக்கின்றார்.

அம்மா நாராயிணி உயிரோடு இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று வைத்தியர்களால் கெடு கொடுக்கப்பட்டபின்னர் மகன்களுக்கு இடையிலும், மகன்களின் பிள்ளைகளுக்கும் இடையில் நிகழும் சம்பவங்களே 'நாராயிணியின் மூன்றுமக்கள்' (Narayaneente Moonnaanmakkal) என்னும் திரைப்படமாகும்.

பெரும்பாலான அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இடையில் உள்ள உறவைப் போலவே, சகோதரன்களுக்கும் இடையிலான உறவும் இருப்பதாக நான் நினைப்பதுண்டு. சகோதரர்களுக்கிடையில் இருக்கும் நேசம் என்பது எப்போதும் உள்ளார்ந்து இருப்பது. அதுபோலவே முரண்களும் பெரும்பாலும் வெளிப்படையாகப் பேசப்படாமலே கடக்கப்படுவதும் உண்டு. இதை இந்தத் திரைப்படம் அழகாகக் காட்டுகின்றது.

தாய் மீதான பாசம் இருப்பதினும், நாளாந்த வாழ்வின் நெருக்கடிகள் மகன்களை, தாய் விரைவில் இறந்துவிடவேண்டும் என்று நினைக்கச் செய்கின்றது. அதேவேளை 20 வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் ஒருவன், தனது குழந்தைகளுக்கு தான் உலாவித் திரிந்த இடங்களையும், இரசித்த பெண்களையும் சொல்லிப் போகும் காட்சிகள் நுட்பமாக இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன.


ந்த திரைப்படத்தில் ஒரு பிறழ் உறவும் முக்கிய சம்பவமாகின்றது. கலை என்பது அதன் எல்லைகளை சற்று விசாலித்து விசாரணை செய்வதாகவும் இருக்கவேண்டும். ஒரு பிறழ் உறவைக் கூட அதை ஆகவும் ஆபாசமாக்காமல் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்தால்
, அதை எவ்வாறு எதிர்கொள்வது என்று பார்வையாளர்களிடையே ஒரு கேள்வியாக இத்திரைப்படம் வைப்பது எனக்குப் பிடித்திருந்தது. அதுபோலவே நிலம் விற்கும் காட்சியில் நாராயணியின் மூத்தமகன், வேண்டுமென்றே நிலத்தின் விலையை அதிகளவில் விற்க முயல்வார். அதன் மூலம் இவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டதை, நிலம் என்பது எப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமானதென இதில் காட்டப்படுவதும், சாதி வெளிப்படையாக இங்கே பேசப்படுவதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

இவ்வளவு தீர்க்கமாக, வாழ்வை மிக நிதானமாக எதிர்கொள்ளும் ஆதிரா போன்ற பெண்கள் கூட vulnerable ஆக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான காட்சிகள், பெண்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள், கறுப்பு/வெள்ளையாக மட்டும் நோக்கவேண்டியதில்லை என்று சொல்பவை. அத்துடன் ஆதிரா தான் எது செய்கின்றேன் என்பதை நன்கு தெரிந்தவர் மட்டுமில்லை (முதுமாணி சமூகவியலில் படித்து விட்டும் வீட்டில் இருப்பது/மற்றவர்களைப் போல அரச உத்தியோகத்தில் போய் தன் சுயத்தைத் தொலைக்கவிரும்பாது பெற்றோரின் விருப்புக்கு எதிராகப் பேசுவது மட்டுமின்றி), காதல் தோல்வியில் இருக்கும் தன் கஸினான நிகிலுக்கு அவர் காதலைப் பற்றிக் கொடுக்கும் வியாக்கியானமும் அருமையானது. நாம் சந்திக்கும் பெரும்பாலான ஆளுமையுள்ள பெண்கள், ஏதோ ஒரு இடத்தில் உடைந்துபோனவர்களாக/ உடைந்துகொண்டிருப்பவர்களாக இருப்பதை அவதானித்திருந்தால், ஆதிராவின் பாத்திரத்தை எளிதாக விளங்கிக் கொள்வோம் அவரின் அந்த பிறழ் உறவைக்கூட ஒருவகையில் புரிந்து கொள்ள முடியும்.

கோழிக்கோட்டிலிருக்கும் நாராயிணியின் மூன்று மக்களில், திருமணமே செய்யாமல் தனித்து தாயைப் பார்க்கும் மகனான சேதுவே, பல விடயங்களில் முற்போக்கானவராக மற்ற மகன்களை விட இருக்கின்றார். அவர் தன் பெறாமக்களோடு நெருங்கிப் பேசுவராக, அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தேர்வுகளை மட்டுமின்றி, கஞ்சா அடிக்கும் அவர்களை அரவணைத்துப் பேசுபவராகவும் சேதுவே இருக்கின்றார்.

ஒருவகையில் உற்றுப்பார்த்தால் எல்லாக் குடும்பங்களும், உள்ளே பல்வேறு இடங்களில் உடைந்து போய்த்தான் இருக்கின்றன. ஆனால் குடும்பத்துக்குள் நெருக்கடி என்று வரும்போது அவர்களே ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்க ஓடிவருபவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களால்தான் குடும்பங்கள் அதன் இத்தனை நூற்றாண்டுகாலச் சுமைகளைத் தாண்டியும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்க முடிகின்றது.

கோமாவுக்குப் போய்விட்ட தாய் நாராயிணிக்கு தன் மூன்று மகன்களுக்குள் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று தெரியாது. ஆனால் அந்தத் தாயின் இறுதிக்காலத்தில் அவரின் மகன்கள் அனைவரும் நெடுங்காலத்தின் பின் ஒன்றுகூடும் சந்தர்ப்பம் வந்து, அவர்கள் தமது நிறை/குறைகளுடன் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் முயல்கின்றனர். இது ஒரு தாயாக நாராயணிக்கு சந்தோசத்தையும், மனநிறைவையும் தராதா என்ன?

***********

 

(Mar 25, 2025)