ஓவியம்: பிருந்தாஜினி
சல்மான் ருஷ்டி தனது புதிய நூலில் (Knife) கவிஞர்கள், நாவலாசிரியர்கள் பற்றி எழுதியிருப்பார். அவரின் காதலியான எலிஸா (பின்னாளில் மனைவி/நாவலாசிரியை) கவிஞர் என்பதால் கவிஞர்களின் உலகைப் பற்றிச் சிலாகித்திருப்பார். கவிஞர்கள் மற்றவர்களின் கவிதைகளை வாசித்து உற்சாகமூட்டுபவர்கள் என்றும், கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் ஒன்றாகச் சேர்ந்து பங்குபற்றும் தோழமையுணர்வு உடையவர்கள் என்றும், தன்னைப் போன்ற உரைநடையாளர்களோ (நாவலாசிரியர்கள்) ஒரு தனித்துவிடப்பட்ட தீவில் எவருமில்லாது தனிமையில் சுழன்று கொண்டிருப்பவர்களாக இருக்கின்றோம் எனவும் சொல்லியிருப்பார். உரைநடையாளர்கள் போல, கவிஞர்கள் அவ்வளவு பணம் சம்பாதிக்காவிட்டாலும், அவர்களின் அச்சிறு உலகு, அவர்களை நெருக்கமானவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும் கவிதையுலகினுள் வைத்திருக்கின்றது என்கின்றார்.
நம் தமிழ்ச்சூழலில் அசோகமித்திரனோ 'தான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு ஓர் எழுத்தாளனைச் சதாசர்வ காலமும் அழுத்துமாயின் அவனுடைய படைப்புகள் விசேஷப் பரிமாணங்கள் கொள்வது மிகவும் சிரமம். தன்னை இந்த உலகத்தின் முழுமையாகக் கருதாது இதிலுள்ள கணக்கற்றவரையும் தன்னைப் போல நினைக்க முடிவதற்குத் தளராத கற்பனை வேண்டும்' என்றிருக்கின்றார்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் போனதில் இருந்து முழுநேரப் படைப்பாளியாக, குடும்பம்/உறவுகள் அனைத்தையும் விலத்தி கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்த பிரமிள் கூட எங்கேயும் இந்தச் சமூகம் என்னைக் கொண்டாடவில்லை என்று ஒப்பாரி வைத்ததை எங்கேயும் எழுதியதாகக் காணவில்லை. இத்தனைக்கும் அவருக்குச் சிறு சிறு உதவிகள் செய்தோரைக் கூட, எழுத்தின் அறத்தின் நிமித்தம் அவர்களோடு முரண்பட்டு எதிரிகளாக்கி கொண்டதுதான் அவர் அதிகம்.
அண்மைக்காலமாக நம் சூழலில் 'எழுத்தாளனைக் கொண்டாவில்லை'. 'நான் உலக இலக்கியங்களை வாசித்தவன்', 'நான் படைப்பாளி, நீ சாதாரணமானவன்' என்ற அறைகூவல்களைப் பார்க்கின்றேன். இதுவரைகாலமும் இந்த 'வியாதி' அதிகம் தமிழ்நாட்டுப் பக்கமாய்த்தான் இருந்தது. இப்போது ஈழம்/புலம்பெயர்ந்த சூழலிலும் வந்துகொண்டு இருப்பதைப் பார்க்க இந்த 'கொரானா வைரஸை'க் கண்டு உலகின் இன்னொரு மூலைக்குச் சென்று அடைக்கலந் தேட வேண்டியிருக்கின்றதோவென அஞ்ச வேண்டியிருக்கின்றது
படைப்பு நிலை சார்ந்து அகத்தில் உருவாகும் நெகிழ்வான தருணங்களையும், அவை தனிப்பட்ட தன்னுணர்தலாக மாறுதலடையக் கூடுமென்பதையும் ஏற்கனவே பலவிடங்களில் எழுதியிருக்கின்றென். அது எழுத்துச் சார்ந்து மட்டுமில்லை, இசை, நடனம், சிற்பமென நுண்கலையின் எதற்கும் பொருந்தக்கூடியது. நமக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கு இருக்கின்றது என்பதையும் நினைவுகொள்வோம். இதை இன்னும் விரித்து பயணம்,தியானம், விளையாட்டு என வேறு புலங்களுக்கும் விரித்துப் பார்க்கலாம்.
படைப்பாளி X வாசகர் என்பதையே பின்நவீனத்துவம் எப்போதோ நிராகரித்துவிட்டதன் பின்பும், இப்போது படைப்பாளி X சாதாரணன் என்று பேசிக்கொண்டிருப்பதை விட அபத்தமொன்று இருக்காது. அதிலும் நமக்குத்தான் எல்லாம் தெரியும், உனது கடமை அமைதியாக இருந்து கேட்கவேண்டும் என்று எந்தப் படைப்பாளியோ/படைப்போ சொல்லத் தொடங்கும்போது அந்தப் படைப்பாளிக்கு/படைப்புக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை என்பதை ஒரு வாசகர் எளிதாகப் புரிந்துகொள்ளமாட்டாரா என்ன? ஒருவருக்குத் தனது எழுத்து மீது நம்பிக்கை இருந்தால் இவ்வாறான பிரகடனங்களே தேவையில்லை. அந்தப் படைப்பு/எழுத்து அவரை சிகரத்தில் தன்னியல்பிலே கொண்டுபோய் வைத்து ஒளிர வைக்கும்.
தன்னைப் பொதுவாழ்விலிருந்து உருமறைத்துக் கொண்ட குந்தேராவுக்கோ அல்லது தமிழ்ச்சூழலில் தன்னை மிகவும் எளிமையாக முன்வைத்த அசோகமித்திரனுக்கோ தமது படைப்புக்களினூடாக அவர்கள் அடைந்த தன்னுணர்தல்கள், இந்த புறவயமாக புகழ்/கொண்டாட்டம் என்பதைவிடப் பெரிது என்பது அவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆனால் நானொரு எழுத்தாளன், நம்மைக் கொண்டாடவில்லை, நீங்களெல்லாம் சாதாரணமானவர்கள் என்பவர்கள் நிச்சயம் மன ஆழங்களின் மர்மங்களுக்கு எழுத்தினூடாகச் சென்றிருக்க வாய்ப்பு மிக அரிதே. தியானத்தில் மூழ்கும்போது ஒருவர் தியானம் செய்கின்றேன் என்று நினைத்துக்கொண்டாலே அது தியானம் இல்லை என்பதுபோல, ஒருவர் எழுத்தைப் புறவயமாகப் பார்த்து, அதற்கான பிரதிபலன்களையோ/பிரகடனங்களையோ எதிர்ப்பார்க்கும்போது அவர்களிடமிருந்து எழுத்தும் பெரும்பாலும் விலகிப் போய்விடவே செய்கின்றது.
அதிலும் இன்னுஞ்சிலர் ‘நான் தான் இலக்கியங்களை அதிகம் வாசித்தவன்’ என்கின்றபோது அவர்களை நினைத்துச் சிரிப்புத்தான் வருகின்றது. இலக்கிய உலகில் இருந்தால் வாசித்தலும், எழுதுதலும் இயல்புதானே. இதிலென்ன நான் கூட வாசித்தவன், குறைய வாசித்தவன் என்ற தராதரங்கள் இருக்கப் போகின்றது. முன்பு உலகத்திரைப்படங்களைப் பார்ப்பது என்பது ஒரு 'மோஸ்தராக' இருந்ததைப் போல (அதன் அபத்தம் 'உலகநாயகன்' என்கின்ற பட்டங்கள்வரை போனது), இப்போது உலக இலக்கியங்களை வாசித்தவன் என்கின்ற 'லேபிள்'களையும் எழுத்தினூடாகப் பார்க்கின்றேன் ( sigh). அதைவிட அயோக்கியத்தனம், அப்படி வாசிப்பதால் நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்கவேண்டும் என்கின்ற அதிகாரம். இதைத் திமிர் என்பதைவிட வேறெப்படி அழைக்க முடியும். மேலும் நாம் எழுதுவது என்பதே ஒருவகை உரையாடல் என்று எடுத்துக்கொண்டால் கூட, இப்படி அதிகாரத்தில் இருந்துகொண்டு யாரோடு உரையாடமுடியும் அல்லது எவரோடு உரையாடப் போகின்றோம்?
நான் ஒருகாலத்தில் நம்பிக்கை வைத்த எங்களுக்கு அடுத்த தலைமுறையில் கூட, ஒவ்வொரு படைப்பிலும்/எழுத்திலும் இந்த அதிகாரம்/ஆணவத்தோடு பேசுக்கொள்வதைப் பார்க்கும்போது கோபம் வருவதைவிட அவர்களைப் பார்க்கக் கவலையாக இருக்கின்றது. இவ்வளவு காலமும் நீங்கள் வாசித்தது, உரையாடியதே எல்லாமே இப்படி 'நான்' என்கின்ற அதிகாரத்தை நோக்கி நகரத்தானா என அவர்கள் மீது சலிப்பே எஞ்சுகின்றது. எமக்கு முன்னோடிப் படைப்பாளிகளில் சிலரில் இவ்வாறு எழுத்தாளர் என்பதால் வரும் அதிகாரமும்/தன்னகங்காரமும் இருந்தால் கூட, அவர்கள் தொடர்ச்சியாக நீண்டகாலமாக எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதை ஏதோ ஒருவகையில் அவர்களின் படைப்பின் மீதான மரியாதையின் நிமித்தம் சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நம் ஈழத்து/புலம்பெயர் புதிய தலைமுறையின் (பெரும்பாலானோர்) 'எமக்கு அனைத்தும் தெரியும்' என்ற பதாதைகளோடு தம்மை முன்னிறுத்தும்போது, போக வேண்டிய பாதை இன்னும் நெடிது, பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைத் தவிர வேறெதை அவர்களுக்குச் சொல்லிவிட முடியும்?
மேலும் நிறையச் சத்தம் இலக்கியத்துக்கு அவ்வளவு நல்லதல்ல, படைப்பின் பேரிரைச்சலுக்கு முன் படைப்பாளி ஒரு சிறுதுளி. அந்தச் சிறுதுளி, தன் படைப்பின் மூலம் பேரருவியாக மாறுவதை அனுபவித்திருந்தால், புறவயமான இந்தப் பிரகடனங்கள்/அறைகூவல்கள் எல்லாமே வெறும் தூசியென்பது நல்லதொரு படைப்புள்ளத்துக்குத் தெரியும்.
தன் மனம், தான் செய்துவிட்ட குற்றத்தில் வதங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும் என ''வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்/தான்அறி குற்றப் படின்' என்ற குறளில் வள்ளுவர் சொல்வதைப் போல, ஒரு படைப்புள்ளம் தன் படைப்பின் மூலம் அதிகாரத்தையும் ஆணவத்தையுந்தான் மேவுகின்றது என்றால், படைப்பாளி என்கின்ற நிலையால் வரும் 'ஞானந்தான்' என்னவாகி இருந்துவிடப் போகின்றது.
****************
(May, 2024)