கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொட்டியா

Thursday, July 21, 2011

நன்றி: அம்ருதா(ஆடி/2011) 

1.
அவ‌ர்க‌ள் அப்ப‌டி அவ‌னைப் பிடித்து எழுப்பிய‌போது அதிர்ச்சியாக‌ இருந்த‌து. அதிர்ச்சியை விட அருவ‌ருப்பாய் இருந்த‌து என‌த்தான் சொல்ல‌வேண்டும். அதிர்ச்சி அருவ‌ருப்பு இர‌ண்டும் திர‌ண்டு கோப‌மாய்ப் பொங்க‌த் தொட‌ங்கிய‌போது, அதை நேர‌டியாக‌க் காட்ட‌முடியாதத‌ற்கு அவ‌ர்க‌ளின் தோள்க‌ளில் தொங்கிய‌ துப்பாக்கிக‌ள் ஒரு கார‌ண‌மாய் இருந்த‌து. ச‌ருவ‌ச்ச‌ட்டியைக் க‌விழ்த்துப் போட்டாற்போல‌ இரும்புக் க‌வ‌ச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌லைக‌ளில் தொங்கிக்கொண்டிருந்த‌ன‌. இரு காதுக‌ளையும் இணைத்து நாடியைச் சுற்றியோடிய‌ க‌றுப்பு நாடா 'ச‌ருவ‌ச்ச‌ட்டி' த‌லையில் இருந்து விழாது தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த‌து. அந்த‌க் க‌றுப்பு நாடாவை அறுத்து, க‌ழுத்தில் இறுக்கி அவ‌ர்க‌ளைக் கொன்றால் என்ன‌ என்ற‌ எண்ண‌ம் அந்த‌ அப‌த்த‌மான‌ நேர‌த்திலும் அவ‌னுக்குள் ஓடிய‌து. அன்றைய‌ ச‌ம்ப‌வ‌த்தின்பின் தான் அவ‌னுக்கு க‌ரும் ப‌ச்சை நிற‌த்திலும், ஆண்க‌ள் அணியும் நீண்ட‌ கால‌ணிக‌ள் மீதும் வெறுப்பு வ‌ந்திருக்க‌ வேண்டும்.

கொழும்பில் எல்லா வீதிக‌ளுக்கும் த‌லையான‌ வீதி என‌ ந‌ம்ப‌ப்ப‌டும் காலி வீதியில் வெள்ள‌வ‌த்தையும் தெஹிவ‌ளையும் பிணைந்துகொள்ளும் விகாரை வீதிக்கு அருகில்தான் அவனது தற்காலிக வசிப்பிடம். காலி வீதியின் முக‌ப்பில் 'சிலோன் இன்' மெல்லிய‌ நீல‌ நிறத்தில் உய‌ர்ந்து நின்று எல்லாவற்றையும் விடுப்புப் பார்த்துக்கொண்டிருக்கும். இன்னும் துல்லிய‌மாக‌ச் சொல்வ‌தென்றால் அனுர‌த்த‌ ர‌த்வ‌த்த‌ யாப்பா ப‌ட்டுவாவில் சிங்க‌க் கொடியை ஏற்ற‌ இன்னும் சில‌ மாத‌ங்க‌ளே இருந்த‌தான‌ கால‌ப் பொழுது அது.

சிலோன் இன் இலிருந்து உள்ளே ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினால் சில‌ ப‌ல‌ச‌ர‌க்குக் க‌டைக‌ளையும் பெட்டிக் க‌டைக‌ளையும் க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். அதைச் சற்றுத் தாண்டினால் பெரு நகரத்து நெரிச‌லுக்கும், ஆரவாரத்திற்கும் த‌ன‌க்கும் எவ்விதத் தொட‌ர்புமில்லையென‌ ஆழ்துயிலில் நிற்கும் வெள்ளைநிற‌ விகாரை வரும். அங்கே மாலையில் -சூரியன் மறைகிறதோ இல்லையோ- தாம‌ரையும் அரளியும் காவியபடி கூந்தல் நீர் விசுக்கிப் போவர், பெண்கள். பிறகு வருவது வ‌ல‌ப்புற‌த்தில் தைய‌ல்க‌டையும், எதிரே சிகை அல‌ங்கார‌க் க‌டையையும். ச‌லூனுக்குள் 'காத‌லன்' ந‌க்மாவும் 'வீரா' ரோஜாவும் வ‌ழுவ‌ழுப்பான‌ தாளில் இர‌ண்ட‌டி உய‌ர‌ச்சுவ‌ரில் -புத்த‌ர் ப‌ற்றிய‌ நினைவுக‌ளைக் க‌லைத்து விட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌வே- சிரித்துக்கொண்டிருப்பார்க‌ள். இனி வ‌ரும் பாதையினுள் முத‌ன்முத‌லாக‌ நுழையும் ஒருவ‌ராக‌ இருப்பின் அவ‌ர் த‌ன் மூக்கினைப் பொத்திக் கொள்பவ‌ராக‌ இருப்பார். ஏனெனில் இப்போது க‌ளுபோவிலையின் 'புக‌ழ்பெற்ற‌' கால்வாயைக் க‌ட‌க்க‌ வேண்டியிருக்கும். உருக்கி ஊற்றும் தார்க்க‌லரிலேயே ஓடும் நீர் இருக்கிற‌தென்றால் அத‌ன் ந‌றும‌ண‌ம் ப‌ற்றி வித‌ந்துரைக்க‌த் தேவையில்லை.

பாலத்தைத்தாண்டினால் வருவது ஐந்து வீதிச்ச‌ந்தி. உட‌னேயே இட‌துப‌க்க‌ம் திரும்பிக் கால்வாயோடு ச‌மாந்த‌ர‌மாய் ந‌ட‌ந்தால் அவ‌னிருக்கும் வாட‌கை வீட்டை எளிதில் அடையாள‌ங் காண‌லாம். இஃதொரு விதானையின் பெரிய‌வீடு. அவ‌ர் சின்ன‌ வீட்டிலிருந்துகொண்டு இதை ப‌குதி ப‌குதியாய்ப் பிரித்து வாட‌கைக்குக் கொடுத்திருக்கிறார். 'ப‌' வ‌டிவ‌த்தில்தான் இவ்வீடு இருக்கிற‌து. ஆனால் இவ‌ன் குடியிருந்த‌து 'ப‌' வ‌டிவில் உள்ள‌ட‌க்கிய‌ ப‌குதியில் அல்ல‌. 'ப‌'னாவிற்குக் குற்றுப் போட்டு 'ப்' ஆக்கியிருந்த‌ க‌ராஜ் கொட்ட‌கைக்குள்தான் அவ‌னின் இருப்பு. ஏதாவ‌து ஏஜென்சியிட‌ம் காசைக் கொட்டிக் கொடுத்துவிட்டு வெளிநாடொன்றுக்கு ஓடுவ‌த‌ற்கு அவ‌னைக் குடும்ப‌ நிலவ‌ர‌மும் நாட்டு நிலைமைக‌ளும் த‌ள்ளிவிட்டிருந்த‌து. அவ‌ன் தனது ப‌தினைந்தாவ‌து வ‌ய‌தை ச‌ங்குப்பிட்டிப் ப‌ட‌குத்துறையில் கழித்துக் க‌ட‌ந்துவ‌ந்திருந்தான். அத‌ற்கு முத‌ல்நாள் ப‌க‌லில்தான் இர‌ண்டாந்த‌வ‌ணைக் க‌ணித‌ப் ப‌ரீட்சையை எழுதி, க‌டைசிவ‌ரை த‌ன் ப‌ய‌ண‌த்தை மிக‌ இர‌க‌சிய‌மாக‌ வைத்துக்கொண்டான். ப‌ரீட்சைத்தாளை வைத்து எழுதும் (பைல்)ம‌ட்டையில் பிள்ளையார் என்றும்போல‌ முக‌ம் ம‌ல‌ர‌ப் பிர‌காச‌மாக‌ இருந்தார். இட‌துப‌க்க‌த்தில் அவ‌னுக்குப் பிடித்த‌ பெண் த‌ன் இள‌முலை மேசையில் தொட‌ குனிந்து தீவிர‌மாய் ப‌ரீட்சையை எழுதிக்கொண்டிருந்ததாள். 'நான் கொழும்புக்குப் போகிறேன், இனி என்றென்றைக்குமாய் உங்க‌ளைக் காண‌முடியாது' என‌ப் பிரியாவிடை அவளிடம் பெற‌முடியாப் புற‌ச்சூழ‌லின் துய‌ர‌ம் அவ‌னுக்குள் ஒரு க‌ருங்க‌ற்பாறையாக‌ க‌ன‌த்துக் கிடக்கிறது.

2.
அவ‌னோடு அந்த‌ க‌ராஜ் வீட்டை இன்னுமிர‌ண்டு பேர் ப‌கிர்ந்துகொண்டிருந்தன‌ர். ஒருவ‌ர் ப‌ம்ப‌ல‌ப்பிட்டியிலிருந்த‌ சாப்பாட்டுக்க‌டையில் வேலை செய்துகொண்டிருந்தார். ம‌ற்ற‌வ‌ர் மொற‌ட்டுவ‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு போய்க்கொண்டிருந்தார். சாப்பாட்டுக் க‌டையில் வேலை செய்த‌வ‌ர் அவ‌னுக்கு உற‌வின‌ராய் இருந்த‌தால் இந்த‌ இட‌ம் எளிதாக‌ அவ‌னுக்குக் கிடைந்திருந்த‌து. இருந்த‌ க‌ராஜ் வீட்டிற்கு வெளிக்கதவுக்கு மட்டுந்தான் பூட்டு இருந்த‌து. உள்ளே ஒப்புக்கு இர‌ண்டு அறைக‌ளாய் ம‌ர‌ப்பல‌கைக‌ளை வைத்துப் பிரித்துவைத்திருந்தார்க‌ள், ஆனால் கதவுகளில்லை. ஆமி செக்கிங்கிற்காய் வ‌ருகின்றார்க‌ள் என்றால் ஒரே அம‌ளி தும‌ளியாக‌த்தான் இருக்கும். நிறைய‌க் குடும்ப‌ங்க‌ள் இந்த‌ 'ப்' வீட்டில் இருப்ப‌தால் ஒரு வீட்டில் ஆமி நுழைந்துவிட்டான் என்றால் எல்லா வீடுக‌ளும் ச‌ட‌ச‌ட‌வென்று விழித்துத் த‌யார் நிலைக்கு வ‌ந்துவிடும். ஆமி பூட்டிய‌ க‌த‌வை 'த‌ட‌த‌ட‌'வென‌ ஓங்கி அறைய‌முன்ன‌ரே கத‌வைத் திற‌ந்துவிட்டு -நிவார‌ண‌த்திற்கு வ‌ரிசையில் நிற்ப‌துபோல‌- ஆமியின் ப‌ரிசோத‌னைக‌ளுக்காய் த‌யாராகிவிடுவார்க‌ள். இப்ப‌டி அடிக்க‌டி இர‌வுக‌ளில் ஆமி சோதனைக்கு செய்வ‌தால் அவ‌ர்க‌ளுக்கு இது ப‌ழ‌க்க‌மாகி விட்டது.

இவன் கொழும்பில் இருந்தபோது, ஆமி முதன்முதலாய் செக்கிங்கிக்காய் வந்தது மறக்கமுடியாத ஓர் அனுபவம் எனத்தான் சொல்லவேண்டும். ஆமிக்காரர்கள் வருகின்றார்களென‌ அண்ணாக்கள் க‌ராஜ் வீட்டின் கதவைத் திறந்துவிட்டு ஆமியின் சோதனைக்குத் தயாராய் நிற்க‌ இவ‌னோ ஆழ்ந்த‌ நித்திரையில் இருந்தான். ப‌தினைந்து வ‌ய‌துக்கார‌ன் தானே, ப‌டுத்திருக்கின்றான் கிட‌க்க‌ட்டுமென‌ அந்த‌ அண்ணாக்க‌ளும் இவ‌னை எழுப்ப‌வில்லை. அறைக்குள் நுழைந்த‌ ஆமி இவ‌னை அப்ப‌டிப் பிடித்து எழுப்புவான் என்று இவன் நினைத்தே பார்க்கவேயில்லை. இடுப்பில் க‌ட்டியிருந்த‌ சார‌மும் அவிழ்ந்து கிட‌க்க‌, உட‌லில் எத்த‌னையோ இட‌மிருக்க‌ குறியில் கை வைத்து எழுப்பியதுதான் இவ‌னுக்கு அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஆமியையும் அவ‌ன் பிடித்திருந்த‌ இட‌த்தையும் க‌ண்டு திடுக்கிட்டு சார‌த்தை இறுக்கிக் க‌ட்ட‌ முய‌ன்ற‌போது 'செக்கிங் ப‌ண்ண‌வேண்டும் அப்ப‌டியே சுவ‌ரோடு போய் நில்' என்றான் ஆமிக்காரன். சார‌மும் இல்லாது உட‌ல் முழுதும் நிர்வாண‌மாக‌த் தெளிவாக‌த் தெரிய‌, இவ‌ன் என்ன‌ இத‌ற்குள் பூனாவையா தேட‌ப்போகிறான் என்ற‌ கோப‌ம் வ‌ர‌, ஆற்றாமையுடன் சுவ‌ரைப் பார்த்த‌ப‌டி போய் நின்றான். ஆமிக்கார‌ன் நாலைந்து நிமிட‌ங்கள் ஆறுத‌லாக‌ த‌ன் 'ப‌ரிசோத‌னை'யைத் த‌ட‌விச் தடவிச் செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போலப்போனான். பிற‌கு எல்லா வீடுகளையும் சோதனை செய்து விட்டுக் கடந்து போகும்போது ஏதோ ஆமிக்கார‌ன் சிங்க‌ள‌த்தில் சொன்னான். என்ன‌ சொல்கிறான் என்று கேட்ட‌போது, 'இப்ப‌டி புதிசாய் ஒரு பெடிய‌ன் இங்கே வ‌ந்திருக்கின்றான் என்று எங்க‌ளுக்குத் தெரியாதே; இனி அடிக்க‌டி வாறோம்' என்று சொல்லியிருக்கின்றான் எனச் சொன்னார்க‌ள். 'ஏன் அண்ணை, ஆமிக்கார‌ன் வாறான் என்று என்னை எழுப்பிவிட‌க்கூடாதே' என‌க் கோப‌த்துட‌ன் அண்ணாக்க‌ளைப் பார்த்து இவன் சொன்னான். அன்றைய இரவில், பிறகு இவனால் ஒழுங்காய் நித்திரை கொள்ளமுடியவில்லை. காமமோ சித்திர‌வ‌தையோ அவைய‌வை த‌ம் குறிக்கோள்க‌ளை குறியில் போய் இறுதியில் பூர்த்தி செய்கின்ற‌தென‌ இவன் த‌ன‌க்குள் நினைத்துக்கொண்டான்.

3.
அவ‌ருக்கு அழ‌கான‌ நீண்ட‌ த‌மிழ்ப் பெய‌ர் இருந்த‌து. ஆனால் 'குதிரை' என்ற‌ ப‌ட்ட‌ப்பெய‌ரே இய‌ற்பெய‌ர் போல‌ ஆகிவிட்டிருந்த‌து. மைதான‌த்தில் நூறு மீற்ற‌ரும், இருநூறு மீற்ற‌ரும் அவ‌ர் ஓடும்போது உண்மையில் பிட‌றி சிலிர்த்து ஓடும் குதிரையைப் போல‌த்தான் காட்சிய‌ளிப்பார். அவ்வ‌ள‌வு வேக‌ம். குதிரைதான் அவ‌னின் க‌ல்லூரியில் ப‌ல‌ புதிய‌வைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தினார். அவ‌ரின் காற்று வேக‌ ஓட்ட‌த்திற்காய் பாட‌சாலை நிர்வாக‌மே த‌லைவ‌ண‌ங்கி நின்ற‌தில் விய‌ப்பில்லைத்தான். அதேபோல் அவ‌ரைக் காத‌லிக்க‌ நின்ற‌ பெடிய‌ங்க‌ளின் வ‌ரிசையும் நூறு மீற்ற‌ர்க‌ளுக்கு அப்பாலும் நீள‌க்கூடிய‌து. அவ‌னும் மூன்று வ‌ருட‌ம் முந்திப்பிற‌ந்திருந்தால் அந்த‌ வ‌ரிசையில் முன்னே நிற்க‌ சண்டை பிடித்திருக்கக் கூடும். குதிரையின் ஓட்ட‌த் திற‌மை க‌ண்டு, அதை வ‌ள‌ர்க்க‌ ந‌ல்ல‌தொரு ப‌யிற்சியாள‌ர் இருந்தார். எல்லாப் பெண்க‌ளும் ஒற்றைச் ச‌டையில் அல்லது இர‌ட்டைச் சடையில் பின்னி வ‌ர‌வேண்டுமென்ற‌ பாட‌சாலை விதி கூட, குதிரையின் 'போனி ரெயிலுக்காய்' கொஞ்சக்காலம் த‌ள‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. முத‌ன் முத‌லாய் 'ஸ்ராட்டிங் ப்ள‌க்' வைத்து, ம‌ண்ணிற‌ க‌ல‌ர் ர‌ன்னிங் சோர்ட்சில் ப‌ளப‌ள‌ப்பான தொடை தெரிய‌ குதிரை ஓடிய‌போது அவ‌னுக்கு வ‌ந்த‌ க‌ன‌வு வித்தியாசமாக இருந்தது. த‌ன‌க்குத்தான் அந்த‌க் க‌ன‌வு முதலில் ப்ரஷாய் வ‌ந்த‌தா அல்லது அன்றைய‌ நாளில் நூறு மீற்ற‌ர் நீண்ட‌ வ‌ரிசையில் நின்ற எல்லாப் பெடிய‌ங்க‌ளுக்குள் நுழைந்து கடைசியாகத்தான் தனக்கு அந்த‌க் க‌ன‌வு நுழைந்த‌தா எனவும் இவன் குழம்பியிருக்கின்றான்.

ஒவ்வொரு நாள் மாலையிலும், க‌டிகார‌மும் கையுமாய் ஏன் ப‌யிற்சியாள‌ர் ஒரிரு ம‌ணித்தியால‌ங்க‌ள் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌யிற்சி கொடுக்கிறார் என்ப‌தை இவ‌னால் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள முடியவில்லை. ஓடுவ‌த‌ற்கு யாரும் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌யிற்சியெடுப்பார்களா என ஏள‌ன‌மாய்த்தான் இதை அவ‌ன் பார்ப்ப‌துண்டு. குதிரையும், ப‌யிற்சியாள‌ரும் சேர்ந்து திட்ட‌மிட்டு த‌ங்க‌ளைப் போன்றவ‌ர்க‌ளுக்கு பிலிம் காட்டுகின்றார்க‌ள் எனத்தான் இவன் முதலில் எண்ணிக்கொண்டான். ஓடுவ‌த‌ற்கு ப‌யிற்சி பெற‌வேண்டுமென்றால், இவனின் வீட்டு ஒழுங்கைக்குள் குதிரையை விட்டாலே ந‌ல்லாய்ப் ப‌யிற்சி எடுக்க‌லாமே. ஒழுங்கைக்குள் நாய்க‌ள் 'இந்தா பார் உன்ரை குண்டியைக் க‌டிக்கிறேன்' என‌ வாயை ஆவென்றுகொண்டு நீர் வ‌டிய‌த் துரத்த துர‌த்த, அந்தப் ப‌ய‌த்தில் ஓடி ஓடித்தானே இவ‌ன் நன்கு ஓட்ட‌ப்ப‌யிற்சி எடுக்கின்ற‌வ‌ன்.

இதையே ஒருநாள் குதிரையிட‌ம் நேர‌டியாக‌ப் போய்ச் சொல்லியும் விட்டான். இர‌ண்டு மூன்று வ‌ய‌து குறைவாக‌ இருப்ப‌தும் ஒருவகையில் நல்லதுதான். குதிரையோடு நெருங்கிப் ப‌ழ‌க‌லாம், தூர‌த்தில் நூறுமீற்ற‌ர் வ‌ரிசையில் நின்று, குதிரைக்கு க‌டிவாள‌ம் போட‌ அலைகின்ற‌ பெடியங்களுக்கு, தான் இப்ப‌டி குதிரையோடு பேசித்திரிவ‌து வ‌யிற்றில் நெருப்பைப் பற்றி எரிக்க‌ச் செய்யும் என்ப‌தும் இவ‌னுக்கு ந‌ன்கு தெரியுந்தான். இப்ப‌டி தான் ஒழுங்கைக்குள் ஓடிப் ப‌யிற்சி பெறும் இர‌க‌சிய‌த்தை இவன் சொன்ன‌தும் குதிரைக்கு ஒரே சிரிப்பு. 'அப்ப‌டியா! அங்கே பார் சைக்கிளில் நான்கை பேர் எங்க‌ளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்க‌ள் அல்ல‌வா, அவ‌ங்க‌ளிட‌ம் போய்ச் சொல்லு! இப்ப‌டிச் சும்மா பொழுதைக் க‌ழிக்காது, உங்க‌டை ஒழுங்கை நாய்க‌ளோடு ரெயினிங் எடுத்து, ப‌ள்ளிக்கூட‌த்துக்கு மெட‌ல் வாங்கிக்கொடுக்க‌ச் சொல்' என்றார் குதிரை. இவ‌னும் ந‌ல்ல‌ பிள்ளையாக‌ குதிரை கூறிய‌தை அச்ச‌ர‌ம் பிசகாது அப்படியே போய் அவ‌ர்க‌ளிட‌ம் ஒப்புவிக்க ஒரே தூச‌ண‌ம‌ழை பொழிய‌ப்ப‌ட்ட‌து. இப்ப‌டியாக‌த்தான் அவ‌ன் த‌மிழிலிருந்த அனைத்துச் 'செந்த‌மிழ்' வார்த்தைக‌ளையும் க‌ற்றுக்கொண்டான். இத‌ற்காக‌வேனும் அவ‌ன் குதிரையை என்றும் ந‌ன்றியுட‌ன் நினைவுகூர‌த்தான் வேண்டும்.

இவ‌ன் நாய்க‌ளோடு ஓடி ப‌யிற்சி பெற்ற‌தைப் போல‌ அன்றி, ஒழுங்காய்ப் ப‌யிற்சி பெற்ற‌தாலோ என்னவோ குதிரை எல்லா இட‌ங்க‌ளிலும் ந‌ன்றாக‌ ஓடினார். பாட‌சாலை தாண்டி வ‌ல‌ய‌ம், வ‌ட்டார‌ம் என‌ உய‌ர‌ங்க‌ளைத்தாண்டி மாவ‌ட்ட‌த்திலும், எவ‌ரும் ஜெயிக்க‌ முடியாத‌ புரவியென குதிரை சாதித்துக் காட்டிய‌து. இனி அகில‌ இல‌ங்கைதான் மிச்சம். பயிற்சியாள‌ருக்கு ந‌ம்பிக்கை இருந்த‌து, பாட‌சாலை முழுவதற்கும் ந‌ம்பிக்கை இருந்த‌து. இவ‌ர்க‌ள் எல்லோரையும் விட‌ குதிரைக்கு இன்னும் த‌ன்னில் ந‌ம்பிக்கையிருந்த‌து. குதிரை அகில‌ இல‌ங்கையில் தம் ''ப‌ட்டிக்காட்டு'ப் பாட‌சாலையின் புக‌ழைப் ப‌ர‌ப்ப‌, ப‌த‌க்க‌ம் வெல்வார் என இவன் உட்பட எல்லோரும் ந‌ம்பிக் காத்திருக்க‌த் தொட‌ங்கினார்கள்.

-2010-
(இன்னும் வ‌ரும்)

கொட்டியா (இறுதிப்பகுதி)

0 comments: