கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 56

Friday, November 08, 2024

 போருக்குள் வாழ்ந்தவர்கள் துயரம் ஒருவகையென்றால், அதிலிருந்து தப்பி அகதியாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களின் சோகம் இன்னொரு வகையானது. நாம் போரையும், அகதிகளையும் புரிந்துகொள்கின்றோம் என நினைக்கின்றோம். ஆனால் அது பொதுமையான புரிதலே தவிர, அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்த ஒவ்வொரு அகதியினதும் வாழ்வென்பதை முழுமையாக எவராலும் புரிந்துகொள்ள முடியாது .

குர்டிஷ் எழுத்தாளரான புர்ஹான் ஸென்மெஸ் 'Sins and Innocents' என்கின்ற தனது நாவலில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்த ஒரு அகதியின் வாழ்வைச் சொல்கின்றார். ஆனால் இந்த நாவலை குர்டிஷ் - துருக்கி போராட்டங்களுக்குள் செல்லாமல், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரில் ஒரு குர்டிஷ் ஆணுக்கும், ஈரானியப் பெண்ணுக்கும் இடையில் முகிழும் நேசத்தினூடாக சமகாலத்தையும், கடந்தகாலத்தையும் விவரிக்கின்றார். ஒரு நேர்கோட்டுத் தன்மை இல்லாது, குர்டிஷ் நாடோடிக்கதைகளாலும், கிராமியப் பாடல்களாலும் இந்த நாவலை எழுதிச் செல்வதுதான் இன்னும் அழகாக இருக்கின்றது.

இங்கிலாந்தில் ஓர் அகதிபடும் அவதியை, நித்திரை இல்லாத இரவுகளை, 'உனது நாட்டுக்குத் திரும்பிப் போ' என்கின்ற பதின்மவயதினரின் இனத்துவேஷத்தை, விட்கன்ஸ்டெய்யினின் கல்லறையில் பகல்களைக் கழிக்கும் புலம்பெயர்வின் நிமித்தம் அந்நியமாகிப் போன ப்ரானிடெவோவில் யுத்த நிலங்களிலிருந்து தப்பிவந்த நாம் எம்மை அடையாளங் காண்கின்றோம்.

ப்ரானிடாவோவின் யுத்தகால வாழ்க்கை மட்டுமில்லை, புலம்பெயர் அகதி வாழ்வும் நமக்குப் பரிட்சயமானது. குர்டிஷ் மலைக்கிராமமொன்றில் பிறந்து, தனது மொழியில் கல்விகற்கமுடியாது, துருக்கி மொழியில் கற்கும் ப்ரானிடாவோவில் நாம் நமது மொழிக்கான போராட்டதைக் காண்கின்றோம். இரண்டு வகையான 'யதார்த்தில்' வாழ்ந்த தன் இளம் பருவமே தன்னை பின்னாளில் எழுத்தின் மீது ஈர்ப்பு வரச் செய்ததென்று புர்ஹான் ஒரு நேர்காணலில் சொல்கின்றார்.

தனது தாய்மொழியான குர்டிஷ் அகவயமாகவும், வெளியுலகில் புழங்கு மொழியான துருக்கி புறவயமாகவும் தன்னை அறிந்து கொள்ள உதவின என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு துருக்கி மொழியில் தனது நாவல்களை எழுதிய புர்ஹான் இப்போது தனது கடைசி நாவலை குர்டிஷில் எழுதி வெளியிட்டிருக்கின்றார். இது ஒருவகையில் மீண்டும் வேரினை நோக்கி திரும்புதல் எனலாம். இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் புகழடைந்த நைஜீரியா எழுத்தாளரனா சினுவா ஆச்சுபேயும் தனது தாய்மொழியில் இறுதிக்காலத்தில் எழுதுபவராகவும் மாறியிருந்தார்.

இந்த நாவலில் புர்ஹான், சித்தரிக்கும் குர்திய நிலப்பரப்பான ஹேன்னா, மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டு காலத் தனிமை'யில் வரும் மகோந்தாவை நினைவுபடுத்துதாக ஒருவர் நினைத்தாலும், எனக்கு இந்த நாவலின் சொல்லப்படும் நாடோடிக் கதையும், அந்தக் கதையின் நாயகனான ஃபெர்மன் செய்த கொலைகளும் ஒருவகையில் மார்க்வெஸின் 'முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்' கதையின் சாயலை நினைவுபடுத்தியிருந்தது.

மார்க்வெஸ்ஸும், போர்ஹேஸும், டால்ஸ்டாயும் புர்ஹானுக்குப் பிடித்தவர்கள். முக்கியமாக புலம்பெயர் வாழ்வு தனித்தலையும்போது தென்படும் மனிதர்களின் சோகம் அப்பிய முகங்களை ப்ரானிடாவோ பார்க்கும்போது டால்ஸ்டாயின் 'மகிழ்ச்சியான அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்; மகிழ்ச்சியற்ற ஒவ்வொருவரும் தத்தம் வழியில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள்' என்ற வசனங்களை அடிக்கடி நினைவு கொள்கிறார்.

போருக்குள் வாழ்ந்தவர்கள், முக்கியமாக புலம்பெயர் தேசத்திலிருந்து எழுதுபவர்க்கு முக்கியமான இரண்டு புனைவுகளாக மிலான் குந்தேராவின் 'Ignorance' ஐயும், ஹைனர் சலீமின் 'The Father's Rifle' ஐயும் நான் உதாரணமாகச் சொல்வதுண்டு. இப்போது புர்ஹானின் 'Sins and Innocents' ஐயும் இனிச் சேர்த்துச் சொல்லலாம். இதில் நாடோடிக்கதைகளாலும், கவிதைகளாலும் மாந்தீர்கத்தன்மையுடன், போரையும், தாய் நிலம் பிரிந்து வந்த துயரத்தையும் சொல்வது அவ்வளவு ஆழமாக மனதில் ஊடுருகின்றது.

இந்த நாவலை வாசிக்கும்போது நாவலாசிரியரான புர்ஹானின் வாழ்க்கை இணைத்துப் பார்ப்பதும் ஒரு வாசகருக்கு வாசிப்பில் நிகழலாம். தனது வாழ்வின் சில பகுதிகளை முன்வைத்து தனது கதையையல்ல, ஒரு புனைவையே எழுதியுள்ளேன் என்றுதான் புர்ஹான் சொல்கின்றார். புர்ஹான் குர்டிஷ்காரர். மின்சார வசதியே இல்லாத தனது கிராமத்திலிருந்து தன் 17வயதில் இஸ்தான்புல்லுக்குப் படிக்க வந்து பிறகு சட்டத்தரணியானவர். அன்றையகாலத்தில் ஒரு தீவிர இடதுசாரியாக இருந்த புர்ஹானை துருக்கிய பொலிஸ் கைது செய்து பயங்கரமாகச் சித்திரவதை செய்தபோது, துருக்கியிலிருந்து தப்பி இங்கிலாந்துக்கு அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்தவர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் துருக்கிக்குத் திரும்பிப் போக முடியாது தடுக்கப்பட்டவர். கவிதைகளின்பால் அதிக ஈர்ப்புடன் இருந்தவர். தனது முதல் நாவலை எழுத பத்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்தவர். இன்றைக்கு புர்ஹான் கவனித்துக்குரிய எழுத்தாளர், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்களால் தொடங்கப்பட்ட PEN அமைப்பின் தலைவருங் கூட .

ஒரு காலத்தில் அகதியாய், கையில் காசில்லாது, பயணிப்பதற்கென இருந்த சைக்கிளும் திருடப்பட்டு, சாப்பிடாது மழையில் தெப்பலாக நனைந்து வந்து தனிமையில் இங்கிலாந்தில் வருந்திய நாவலில் சித்தரிக்கப்படுகின்ற ஒர் அகதியின் வாழ்க்கையை புர்ஹானும் வாழ்ந்திருக்கக் கூடும்.

தனது சொந்த மொழியில் பேசவோ எழுதவோ முடியாது இரவல் மொழியில் தன்னை வெளிப்படுத்துபவருக்கு சுதந்திரத்தின் அருமை தெரியும். எல்லோர்க்கும் 'சொர்க்கமாக'த் தெரியும் மேற்குலகு வாழ்வு எப்படி ஒரு அகதிக்கு அத்தனை அச்சங்களையும், தூங்கமுடியா இரவுகளையும் கொடுக்கின்றது என்பது புர்ஹானுக்கு மட்டுமில்லை, நமக்கும் ஒரளவு புரியும்.

 
***************

('Sins and Innocents' என்கின்ற இந்நாவல் தமிழில் 'பாவங்களும் அப்பாவிகளும்' என்று முடவன் குட்டி முகம்மது அலியால் அருமையாக மொழிபெயர்க்கப்பட்டு 'காலச்சுவடு' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.)

0 comments: