"கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது என்று நம்புபவன் நான். ஒரு படைப்பு எவ்வித ஆழமற்று, அப்பாவித்தனமாக இருந்தாலும், அது தன்னளவில் பாவனை செய்யாது இருக்கின்றதா என்பதைக் கூர்ந்து கவனிக்க விரும்புவன் நான்." என அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வாறு பாவனை செய்யும் படைப்பாக 'படுபட்சி' வந்திருப்பதுதான் கவலையானது. வெளியுலகிற்கு சொல்ல வேண்டிய அவசியமான, ஒரு தனி மனிதனுக்கு நிகழ்ந்த அனுபவங்களை இன்னொருவரால் சிதைக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக நாம் 'படுபட்சி'யை முன்வைக்க முடியும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சூழலில் ஒற்றைக்குரலின் ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுவிட்டது. ஒருகாலத்தில் பின் நவீனத்துவத்தோடு இணைத்து தங்களைப் பேச விரும்பியவர்களே அதன் அடிப்படைக் கூறுகளையே விளங்கிக் கொள்ளாமல்தான் இப்படி தங்களை அன்று அடையாளப்படுத்தினார்களோ என்று நினைக்கும்போது அவர்களைப் பற்றி உண்மையிலே கவலையாக இருக்கின்றது.
இத்தனைக்கும் இது Auto Fiction என முகப்பில் சொல்லப்பட்டு விமானம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முயன்ற ஒரு இளைஞனின் பயணமும் பாடுகளும் என விளம்பரத்தப்படுகின்றது. இந்த நூலை உருவாக்கியவர்களுக்கு Autofiction என்ற அர்த்தம் உண்மையில் தெரியுமா என்பதே குழப்பமாக இருக்கின்றது. Autofiction என்பது உண்மைச் சம்பவங்களில் அடிப்படையில் புனைவை இணைப்பது. ஆனால் அது உண்மைச் சம்பவங்களை (context) முற்றாக விலத்திப் போகவும் முடியாது. அந்த சூழலில்/சம்பவங்களில் நாம் புனைவை விரும்பியவளவு சேர்க்கலாம். ஆனால் நடக்காத கதைகளை நடந்ததாகச் சொல்வது Auto Fiction ஆகாது. உதாரணத்துக்கு இந்தக் கதைசொல்பவனும், அவனின் தந்தையும், புலிகளின் கருணா அம்மானைச் சந்திப்பதாக இந்நூலில் ஓரிடத்தில் வரும். நிஜத்தில் அவர்கள் கருணா அம்மானைச் சந்தித்தார்களோ இல்லையோ, ஆனால் அந்தக் காலத்தில் கிழக்கில் ஒரு முக்கிய ஆளுமையாக கருணா அம்மான் இருந்ததால், அவரின் பாத்திர அமைப்பு Autofiction வகைக்குள் வரக்கூடியதே.
ஆனால் இதே கதைசொல்லி அமெரிக்கா வந்து, அவருக்கு ஒரு மெக்ஸிக்கோ பெண் காதலியாக (திருமணம்?) இருப்பது வாழ்வியல் உண்மையாக இருக்கும்போது, அவன் ஒரு ஆஸ்திரேலியா அபோர்ஜின் பெண்ணைத் திருமணம் செய்பவனாகவும், அவர்களுக்கு ஓர் அபார்ஜின் குழந்தை இருப்பதாகவும் சித்தரிப்பது மிகக் கொடூரமானது. எப்படி காலனித்துவவாதிகள்,/ஆதிக்கசாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை தமது சொந்தநலன்/புகழ் சார்ந்து பயன்படுத்தும் அபத்த அரசியலை நிகழ்த்தினார்களோ அதற்கு நிகராக 'படுபட்சி'யில் இவ்வாறாக ஆஸ்திரேலியா பூர்வீகக்குடிகள் பயன்படுத்தப்படுவது மோசமானது மட்டுமில்லை, கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.
மேலும் ஒற்றைக்குரலின் ஆபத்து என்பது, மேலாதிக்க வெள்ளையினத்தவர், -தமிழில்- ஆதிக்கசாதிகளின் மோசமான செல்வாக்கு என்பது அவர்கள் பிறரை தமது மொழிகளிலே கதைகளைச் சொல்ல வற்புறுத்துவதாகும். இந்த நூலில் மட்டக்களப்பு மக்களின் தனித்துவமான குரலையே கபளீகரம் செய்திருக்கின்றனர். இது ஒரு பொதுமொழியில் எழுதப்பட்டதால் மட்டும் அல்ல, அசலான யாழ்ப்பாண மொழியும் இங்கே நுட்பமாக கலந்திருக்கின்றது என்பதைக் கவனப்படுத்தியாக வேண்டும்.
எனக்கு மட்டக்களப்பு சார்ந்த மிகக்குறைவான அனுபவங்களே உள்ளன. ஆனால் இன்றும் பல கிழக்கு மாகாண தோழிகள் நட்பில் இருக்கின்றனர். இந்த நூலில் கதைசொல்லி ஒரு கிழக்குமாகாண பெண்ணோடு காதல் வயப்படும்போது, 'நீர்' என்று விளித்து உரையாடல் செய்யப்படுகின்றது. அதை நான் பழகிய எந்த மட்டக்களப்புப் பெண்ணிடமும் கண்டதில்லை. அதுமட்டுமின்றி அவர்களோடு நான் என் யாழ் பேச்சுவழக்கில் சிலவேளைகளில் 'நீர்' என்று உரையாட முயலும்போது அது தங்களுக்கு செளகரியமில்லாத பேச்சுமொழியென்று ஆரம்பத்திலே கறாராகத் தவிர்க்கவும் சொல்லியிருக்கின்றார்கள்.
இவ்வாறு சாதாரண காதல் மொழியைக் கூட இந்த நூலில் கொத்துப்பரோட்டா போட்டு அதன் அசல் தன்மை கொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த நூலின் ஆசிரியரான டிலுக்சனும், நானும் கிட்டத்தட்ட ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்களாவோம். ஆனால் அவரின் பாடசாலைக் காலத்தைப் பற்றிய பாடத்திட்டம் எல்லாமே வேற்றுகிரகவாசிகள் பேசுவது போல இருக்கின்றது. உதாரணத்துக்கு பத்தாம் வகுப்பு சித்தியடைந்து பதினொராம் வகுப்பில் அறிவியல் பிரிவுக்குப் போவதாகவும், அதில் அவரின் காதலியோடு உரையாடல்களும் வருகின்றன. முதலாவது எமது காலத்தவர்கள் பதினோராம் வகுப்பு என்றே பாவிப்பதில்லை. அது ஏ/எல் என்று ஆகிவிடும். பத்தாம் வகுப்பும் ஓ/எல் ஆகிவிடும். மேலும் அறிவியல் என்ற தனிப்பிரிவோ, ஏன் ஒரு தனிப்பாடமோ 80களில் பிறந்தவர்களின் பாடத்திட்டத்தில் நானறிந்து இருந்ததாய் ஞாபகத்தில் இல்லை.
இதெல்லாம் ஒரு பெரியவிடயமா என்று ஒருவர் கேட்கலாம். இந்த நுண்ணிய விடயங்கள் மூலந்தான் நாம் ஒரு காலத்தின் கதையைச் சொல்லமுடியும். அதுபோலவே நாம் போரின் குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதால், டிலுக்சன் தனது விமானியாக விரும்பும் கனவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது விபரிக்கப்படவே இல்லை. இதை அவர் கனடாவில் நடந்த உரையில், தான் பயிற்சிபெறப் பட்ட கஷ்டங்களைச் சொல்லியதின் ஒரு துளியேனும் இந்நூலில் பதியப்படவே இல்லை என்பது துயரமானது.
நமது காலங்களில் பொருளாதாரத்தடை காரணமாக யாழில் சாதாரண பட்டரிகளே அருமருந்த பொருளாக இருந்தது. ஏனெனில் சாதாரண 'டோர்ச் பட்டரிகள்' கூட ஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அரசு நினைத்து தடை செய்யப்பட்டிருந்த காலம். மின்சாரமும் என் பதின்மத்தில் பெரும்பகுதியில் இருக்கவே இல்லை. அவ்வாறே அதேகாலத்தில் கிழக்கு மாகாணமும் தனக்குரிய பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டிருக்கும். அதிலிருந்து ஒரு இளைஞன் தனது கனவான (prototype) விமானத்தை அமைப்பதன் எல்லைவரை போகின்றான் என்றால் அது எவ்வளவு கடிய பயணமாக இருக்கும். ஆனால் நான் அதை உணருகின்ற அரிய தருணங்களோ, நாம் வியந்து பார்க்கும் சம்பவங்களோ அசல்தன்மையோடு இங்கே விபரிக்கப்படவே இல்லை.
இதிலிருக்கும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், நாவல் அல்ல, Autofiction என்று சொல்லியிருப்பதால்... இங்கே டிலுக்சனின் தந்தையார் டிலுக்ஷன் விமானத்தை மட்டக்களப்பில் வடிவமைக்க முன்னரே நூலில் இறந்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது. கனடாவில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் தந்தையார் வந்திருந்தது மட்டுமின்றி, தந்தையார்தான் இந்த விமானம் அமைப்பதற்கு பல வழிகளில் உதவினார் என்று டிலுக்ஷன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியெனில் எதை அய்யா உண்மைகளின் அடிப்படைகளில் நூலில் நீங்கள் சொல்ல வருகின்றீர்கள்.
அதுமட்டுமின்றி டிலுக்ஷன் தனக்கு இரு அம்மாமார்கள் இருக்கின்றனர் என்றார் தனது உரையில். தனது பயாலாஜிக்கல் அம்மா, உண்மையில் வாய் பேசாத, காது கேட்காத ஒருவர் எனச் சொல்கின்றார். அந்த அம்மாவை இப்படி இந்த நூலில் அநியாமாக சாதாரணமாகப் பேசக்கூடிய ஒரு பாத்திரமாக எழுதி கொன்றுவிட்டீர்களே என்றுதான் என் மனம் அலறியது. அதுவும் இப்படி ஒரு அசலான அம்மாவை அப்படியே டிலுக்சனின் அனுபவங்களினூடு கொண்டுவரும்போது எவ்வளவு வீரியமான அம்மாவாக இருந்திருப்பார். அந்த வாய் பேசமுடியாத அம்மாவை மறைத்து வேறொருவராக அடையாளப்படுத்துவது கூட அயோக்கியத்தனந்தான்.
டிலுக்ஷனின் தந்தையாருக்கு அவரின் தாயார் தவிர்த்து இன்னொரு மனைவியும் இருப்பது இந்த நூலில் சொல்லப்படுகின்றது. இதை டிலுக்ஷன் அவரின் பதின்மத்தில் அறிகின்றார். இப்படி இன்னொரு பெண், தனது தந்தைக்கு மனைவியாக இருக்கின்றார் என்று ஒரு பதின்மன் அறிகின்றபோது எந்தளவு உளவியல் சிக்கலுக்குள் போயிருக்க வேண்டியிருக்கும். ஆனால் அது தந்தையின் புறவயமான பார்வையில் இந்த இன்னொரு உறவு எளிதாகச் சித்தரிக்கப்படுகின்றது. காலம் கடந்து போகையில் ஒரு முதிர்ச்சியில் இவ்வாறான பிறழ் உறவு(?)களை ஒரு பிள்ளை ஏற்றுக் கொள்ளக்கூடும். ஆனால் ஒரு பதின்மனுக்கு இது எவ்வளவு மனப்போராட்டத்தை அந்த வயதில் ஏற்படுத்தும் என்பதைக் கூட விரிவாகப் பதிவு செய்யவில்லை.
இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், வெளியே போர்ச்சூழல், குடும்பத்தில் இந்த உறவுப்பிறழ்வு, இவற்றுக்கிடையேதான் டிலுக்ஷன் தனது கனவான விமானியாகவும், தனி விமானத்தை உருவாக்கவும் முயன்றிருக்கின்றார் என்பதை வாசிப்பவரிடையே கடத்துதல் அல்லவா நூலில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
மேலும் அந்த அம்மாவையும், டிலுக்ஷனின் தங்கையையும் கூட ஒருகட்டத்தில் நூலில் கொன்றுவிடுகின்றனர். நிஜத்தில் அந்த வாய் பேசமுடியாத தாய் இலங்கையிலும், அந்தச் சகோதரி இப்போது ஜேர்மனியிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கின்றார். அப்படியாயின் படுபட்சியில் யாருடைய கதைகளை நீங்கள் எங்களுக்குப் பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?
இப்படி இந்த படுபட்சியில் நிறைய அபத்தங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அண்மையில் எந்தப் புனைவையும் இவ்வளவு எரிச்சலுடன் இப்படி ஒரு பாவனை செய்யும் முதல் அத்தியாயத்தை வாசித்ததாக ஞாபகத்தில் இல்லை. ஒரு நாளில் சில மணித்தியாலங்களில் இந்த நூலை வாசித்து முடித்திருந்தாலும், முதல் அத்தியாயம் வாசித்துவிட்டு ஒரு பெரும் இடைவெளிவிட்டே பிறகு வாசிக்கத் தொடங்கினேன். அந்தளவுக்கு ஒரு நல்ல கதையை வீணாக்கிவிட்டார்களே என்ற துயரமே வந்தது. (நூலை வாசிக்க முன்னரே நூலைப் பற்றித் தெரியுமா என்று கேட்காதீர்கள். டிலுக்சனின் உரையை நேரில் கேட்டுவிட்டே நூலை வாசித்தேன்).
அன்புள்ள டிலுக்சன், நீங்கள் பிறரின் குரல்களைக் கேட்பவராக இருந்தால் உங்களுக்கு ஒன்று சொல்வேன். உங்களின் கதையை இன்னொருவரிடம் கொடுத்து அவர் உங்களின் கதையை தனது மொழியில் எழுதி அவரின் இன்னொரு நூலைப் போன்று இதை மாற்றி வைத்திருக்கும் பெரும் கொடுஞ்செயலைச் செய்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது. ஆனால் எப்படி உங்கள் அசலான கதையின் ஆன்மா கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இந்த நூலில் இருக்கின்றதோ, அதற்கு உயிர்கொடுத்து தயவு செய்து அடுத்த திருத்திய பிரதியில், இந்த நூலை உங்கள் சொந்த மொழியில் மீண்டும் எழுதுங்கள். உங்களின் மொழி எவ்வளவு நொய்மையாக இருந்தாலும், உங்கள் மொழியில், மட்டக்களப்பு வாசம் நிறைந்த அனுபவங்களை நீங்கள் எழுதும்போதே அது உங்கள் அசலான கதையாக மாறும்.
தொடக்கத்தில் கூறியதுபோல, கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது, ஆனால் உங்களின் இந்த 'படுபட்சி'யோ அவ்வளவு பாவனைகளுடன் வந்திருக்கின்றது. ஒரு வாசகராக படுபட்சியை வாசிக்கும்போது அதில் தெரிவது நீங்களல்ல, அதில் பளிச்சிடுவது உங்களுக்கு எழுத உதவி புரிந்தவரின் அரசியலும், அவரின் மொழியும் மட்டுமே என்பது எவ்வளவு துயரமானது.
அது உங்களுக்கு எந்தச் சிறப்பையும் தரப்போவதில்லை. ஒரு அசலான மனிதனின் கதையை, என் சமகால வயதுடைய ஒருவனின் தனித்துவமான வரலாறை நான் ஒருபோதும் இப்படியான ஒரு குரலில் வாசிக்க விரும்பப் போவதே இல்லை.
***


0 comments:
Post a Comment