கனடாவில் வாழும் எழுத்தாளரான
இளங்கோவின் ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்”
எனும் சிறுகதைத் தொகுப்பு சென்னையிலுள்ள டிஸ்கவரி ப்பளிகேஷன்ஸ்
நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இளங்கோவின்
எட்டாவது நூலான இது மொத்தம் 142 பக்கங்களிற் பத்துச் சிறுகதைகளைக்
கொண்டுள்ளது. இந்நூல் தொடர்பான இலக்கியப்பகுப்பாய்வை அடிப்படையாக கொண்ட
அறிமுகம் ஒன்றினை வழங்குதலே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.
இத்தொகுப்பினை
வாசித்தபோது, எழுத்தாளரின் பின்னணி, நோக்கம் என்பவற்றை விட, அவரின்
எழுத்து எவ்வாறு வாசகர் மனதில் அர்த்தங்களை உருவாக்குகிறது என்பது எனக்கு
முக்கியமாகத் தெரிந்தது. குறிப்பாக, இளங்கோ ”உறைந்த நதி”எனும் சிறுகதையின்
இறுதியிற் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு கோட்பாட்டாளர் ரோலண்ட் பார்த்ஸின்
(Roland Barthes) "ஆசிரியர் இறந்துவிட்டார்" (The Death of the Author)
என்ற கருத்துநிலையுடன் எனக்குப் பெரும் இணக்கம் உண்டு. ”நூலாசிரியர்
பற்றிய விடயங்கள் வாசகரின் இலக்கிய அனுபவத்துக்குப் புறம்பானவை. எனவே
இலக்கியப் படைப்பு எவ்வாறு விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும் என்பதை ஆசிரியர்
பற்றிய செய்திகள் தீர்மானிக்கக்கூடாது” என்று பார்த் அக்கட்டுரையில்
வாதிடுகிறார். இலக்கியப் பிரதியின் அர்த்தம் பிரதியுடனான வாசகர்
தொடர்புகளிலிருந்தே பிறக்கிறது. எனவே "ஆசிரியர் என்ன சொன்னார்?"
என்பதிலிருந்து "பிரதி என்ன சொல்கிறது?" அல்லது "வாசகர் அதில் என்ன
காண்கிறார்?" என்பது நோக்கி இக்கோட்பாடு நம் கவனத்தைத் திருப்புகிறது.
அவ்வகையில்,
இளங்கோவின் கதைகள் வாசகரின் பங்களிப்பைப் பெரிதும் வேண்டுவன. வாசகர்
பிரதியுடன் கொள்ளக்கூடிய ஆழ்ந்த ஈடுபாடு மூலமே இக்கதைகளுக்கான அர்த்தங்களை
அவர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அத்தகைய வாசிப்பு அனுபவங்களை
உருவாக்குவதற்குப் பன்முகப்பின்னற்கதைகள் (layered narratives), மேம்பட்ட
கதைசொல்லல் உத்திகள் (advanced storytelling techniques) குறியீடும்,
உருவகமும் (symbolism and metaphor), வேண்டுமென்றே விடப்பட்ட கதை
இடைவெளிகளும் மௌனங்களும் (intentional gaps and silences) போன்ற
நுட்பங்கள் இத்தொகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன இவை குறித்த
சுருக்கமான விளக்கங்களை அளிக்கும் அதே சமயம், இக்கட்டுரையைக் கதைகளில்
அவதானிக்கக் கூடிய பொதுப்பண்புகளான களப்பின்னணி (setting), பாத்திரங்கள்,
கருப்பொருட்கள், கையாளப்படும் மொழியின் இயல்பு என்பவை குறித்த
அறிமுகத்துடன் தொடங்குகிறேன்.
இத்தொகுப்பில் காணப்படும் கதைகளின் களங்கள் வேறுபடுகின்றன.
அதற்கேற்ப, அவை பேசும் விடயங்களும் வேறுபடுகின்றன. இலங்கையை மட்டும்
நிகழிடமாகக் கொண்ட மூன்றுகதைகள் வரலாறு, அரசியல், காதல், வன்முறை,
துயரநினைவுகள் முதலானவற்றுடன் ஆழமான தொடர்பு கொண்டவையாகக் காணப்படுகின்றன.
ஆனால், கனடாவை நிகழிடமாகக் கொண்ட ஐந்து கதைகள் சமூக வரலாற்றுத் துயரங்களை
விடுத்துப் புலம்பெயர் வாழ்க்கையில் தனிமனிதர் எதிர்கொள்ளும் தனிமை,
அந்நியமயமாதல் (alienation), மனநலச்சிக்கல்கள், பாலியல் நோக்குநிலை (sexual
orientation), வெவ்வேறு இனங்களுக்கிடையிலான காதலுறவு, தனிநபர் ஆன்மிகம்
(personal spirituality) போன்ற விடயங்களை ஆராய்கின்றன. தாய்லாந்தை
நிகழ்களனாகக் கொண்ட ”இயக்கக்காரி” எனும் கதை அதிர்ச்சி (trauma), நினைவு
(memory), பாலின அடிப்படையிலான வன்முறை (gendered violence) ஆகிய
கருப்பொருள்களை மையப்படுத்துகிறது. இலங்கையையும் கனடாவையும் நிகழிடங்களாகக்
கொண்ட ”கௌரி” எனும் சிறுகதை பதின்மவயதுக் காதல், வன்முறை, புலப்பெயர்வு,
போருக்குப் பிந்தைய புலம்பெயர்ந்தோர் அரசியல் என்பவற்றைப் பேசுகிறது.
இக்கதைகளில்
தோன்றும் பெரும்பாலான கதைமாந்தர்கள் போர்களால், அரசியல் ஒடுக்குமுறைகளால்,
மற்றும் பல்விதமான உளச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர்
போரின் ஆறாவடுவைச் சுமந்து கொண்டு, அதன் பின்விளைவுகளோடு வாழ்பவர்கள்.
சிலர் புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பெறுபேறுகளாகும் தனிமை, அந்நியப்படுகை,
அடையாளச் சிக்கல் போன்றவற்றால் தவிப்பவர்கள் . எடுத்துக்காட்டாக, மனநோய்கள்
தரக்கூடிய சவால்கள், தனிமை ஆகியவற்றின் தீர்க்கப்படாத சிக்கல்களை
முன்னிலைப்படுத்தும் “ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதை
இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத ஒரு தனிநபருக்காகக் குரல் கொடுப்பதைக்
காண்கிறோம். தனது பாலியல் நோக்குநிலையை வெளிப்படுத்த முடியாத பெண்ணும்,
பிள்ளைப்பருவப் பாலியல் அத்துமீறல்களினால் பாதிப்புற்ற பெண்ணும்
இத்தொகுப்பில் இடம் பெறுகின்றனர். சமூகத்துடன் பூரணமாக ஒன்றிணைய முடியாத
நிலையில் உள்ள, ஒருவித மன வெறுமையுடன் வாழும் இவர்களை விளிம்புநிலை
மனிதர்கள் (marginalized) என்று கூறலாம்.
மேலும்,
இத்தொகுப்பு உளரீதியான பிரச்சினைகளுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்
முக்கியத்துவம் அளித்திருக்கக் காணலாம். இப்பிரச்சினைகளை (அ) உளவடு
((trauma) மற்றும் (ஆ) உளவியல் நோய்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
இவ்வகைப்பாட்டை இலக்கிய வாசகர் என்ற ரீதியில் செய்கிறேனே தவிர உளவியலாளர்
நிலைமையில் இருந்தன்று என்பதைக் கவனிக்கவும். “இயக்கக்காரி” எனும்
கதையில், இளம் வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான கதாநாயகியின்
மனரீதியான பெரும்பாதிப்பு வெளிப்படுகிறது.
அதேபோல், ”வெள்ளவாய்க்கால்
வைரவர்” கதையில், இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களால் பாதிக்கப்படும்
சிறுவனின் உளவியற் பாதிப்பு மிக யதார்த்தமாகக் காட்டப்படுகிறது. இதைவிட,
தனிமையால் பாதிக்கப்பட்ட மற்றும் நீடித்த உளவியல் சிக்கல்களால் தவிக்கும்
கதாபாத்திரங்களையும் சில கதைகள் முன்வைக்கின்றன.
”ஏகாந்தம் என்பதும் உனது
பெயர்” எனும் கதையில், bipolar disorder கொண்ட ஒரு பாத்திரத்தைச்
சந்திக்கிறோம். ”உறைந்த நதி” எனும் கதையில், தன்னுடைய பண்பாட்டுக்கு
அந்நியமான ஒரு பெண்ணைக் காதலித்து, அந்த உறவின் முறிவால் உளவியற்
சிதைவுக்குள்ளாகும் ( psychological breakdown) கதாபாத்திரம் முக்கியமான
இடத்தைப் பெறுகிறது. அதேசமயம் நவீன வாழ்க்கை இருத்தலியத்தில் உணரப்படும்
தவிர்க்கமுடியாத தனிமை (inescapable loneliness), அந்நியமாதல்
(alienation) என்பவற்றைப் புலம்பெயர் சமூகத்தில் இளைஞர்கள்
எதிர்கொள்கின்றனர் என்பதை ”Mr. K” , ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர்
சிரித்துக் கொண்டிருந்தார்” போன்ற கதைகளும் உணர்த்துகின்றன.
பொதுவாக,
இந்தக் கதைகள் பாலுணர்வை நுட்பமாகக் ககையாளுகின்றன. இது வெறும் உடல்
ரீதியான செயல் என்பதைத் தாண்டி, ஆழ்ந்த உளவியல், இருத்தலியல் என்பவற்றின்
பரிமாண வெளிப்பாடாகவே கதைகளில் சித்திரிக்கப்படுகிறது. உதாரணமாக,
”ஏகாந்தம் என்பதும் உனது பெயர்” எனும் கதையில் bipolar disorder ஆல்
பாதிக்கப்பட்ட பாத்திரத்தின் எதிர்பாராத விதமாக மாறக்கூடிய உளநிலைகள் ,
நிலையான உறவுகள் உருவாகுவதைச் சிக்கலாக்குகின்றன. அதே சமயம். குறிப்பிட்ட
மனச்சூழலில் பாலியல் நெருக்கமானது தற்காலிகமாக இருந்தாலும் கூட, சுயத்தினை
உறுதிப்படுத்துவதாக அமையக் காணலாம். அதே போன்று ”Mr. K” கதையில் Kafka இன்
நூல்களில் ஈடுபாடு கொண்ட இளைஞனுக்கும், அவன் காதலிக்குமிடையில் உள்ள
உடல்ரீதியான நெருக்கம் குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. இது உடல்
ரீதியான நெருக்கத்தின் மூலம் ஒருவித இருத்தலியல் அடித்தளத்தை அவன்
கண்டறிகிறான் என்பதைக் காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும்
மேலாக “நான் உன்னை முத்தமிட்டபோது புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்”
என்ற கதையில், பாலியல் உறவு தாந்திரிக பௌத்தத்தின் அடிப்படையில் இருத்தலிய
விடுதலைக்கான, ஆன்மிக மீட்சிக்கான வழியாகச் சித்திரிக்கப்படுகின்றது.
புத்தரின் புன்னகையுடன் முத்தத்தை இணைப்பது - சரீர இணைப்புக்கும் ஆன்மிக
விழிப்புணர்வுக்கும் இடையிலான ஒரு சந்திப்புப் புள்ளியைக் குறிக்கிறது.
சிற்றின்பமும் புனிதமும் ஒன்றையொன்று தொடும் புள்ளியை நோக்கிக் கதை
நகர்கிறது. அத் தொடர்பு ஏற்பட்ட தருணம் விடுதலையை உணர்தலின் தருணமாக
மாறுகிறது. அது “ என்னிலிருந்து எனது நானை விடுவித்துக்கொண்ட சுதந்திரம்”
ஆகும். இருத்தலிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இளைஞன் கண்டு அடைந்த விடுதலை
இது. இலங்கையைக் களமாகக் கொண்ட”முள்ளிவாய்க்கால்”, ”கௌரி” எனும் கதைகளில்
இடம் பெறும் பதின்மவயதுக் காதற் சித்திரிப்பை மேற்கூறியவற்றுடன்
ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இத்
தொகுப்பிலுள்ள கதைகளில் நிகழ்வுகளோ, பாத்திரங்களோ
இலட்சியமயப்படுத்தப்படுவது (romanticization) தவிர்க்கப்படுகிறது. இதனால்
கதைகளின் எழுத்துநடை, பெரும்பாலும், புறவயமானதாயும் உணர்ச்சிகளை
எழுப்பாததாயும் அமைகிறது. கதைசொல்லி தன் சொந்த நினைவுகளை, அனுபவங்களை
அமைதியாக ஆவணப்படுத்துவது போன்றதொரு யதார்த்தமான நடை இங்கு
காணப்படுகின்றது. பேச்சுத்தமிழ்ப் பிரயோகமோ அல்லது ஆங்கில வார்த்தைப்
பிரயோகங்களோ இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் பெரும்பாலும் நியமத் தமிழே
(standard Tamil) பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது அவ்வப்போது
புனைவுக்கும் அல்புனைவுக்கும் (non-fiction) இடையிலான எல்லையைத்
தெளிவற்றதாக்குகிறது. எனினும், நான் கூறுவது எல்லாக்கதைகளுக்குக்கும்
பொருந்தும் என்றும் சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாக, ”நானுன்னை
முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார் ” என்ற கதையிலும்
”வெள்ளவாய்க்கால் வைரவர் ” என்ற கதையிலும் இந்த ஆவணத் தமிழ் நடையின்
நெகிழ்வுத்தன்மையை அவதானிக்கலாம். ”நானுன்னை முத்தமிடுகையில் புத்தர்
சிரித்துக் கொண்டிருந்தார் ” என்ற கதையில் மொழியானது உணர்ச்சி
நிறைந்ததாய் சரளமாகவும், இயல்பாகவும், தெளிவாகவும் நீரோடை போலச் செல்கிறது.
”வெள்ளவாய்க்கால் வைரவர் ” கதையில் மூத்தண்ணையின் பாத்திர வர்ணனை ஓர்
ஓவியம் போன்று வாசகர் மனதில் படிகிறது.
அத்துடன்,
குறியீட்டு வலுக் கொண்ட ஆழமான மொழியும் இங்கு உண்டு. எடுத்துக்காட்டாக,
”உறைந்த நதி” என்ற கதையில் இடம்பெறும் வலை என்ற குறியீட்டு பிம்பம் பற்றிய
வர்ணனையைக் குறிப்பிடலாம்.
”வலை, வலை, வலை. எல்லாமே வலையாகத்
தெரிந்து கொண்டிருந்து. சிலவேளைகளில் தானே ஒரு வலையாக
ஆகிக்கொண்டிருக்கின்றேனோ என்ற எண்ணம் அவனுக்குள்ளும் எழுந்து
கொண்டிருந்தது. ஒரு வலையை அகற்ற இன்னொரு வலை; அந்த இன்னொரு வலையை அகற்ற
இன்னுமின்னுமாக நிறைய வலைகள். வலைகளை மீன்கள் மட்டுமில்லை மனிதர்களுந்தான்
விரும்புவதில்லை. சிலந்தி வகைகளில் ஏதோவொரு சிலந்தியினம் தனது வலையிற் தானே
மாட்டித் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரோ எழுதியிருந்ததை வாசித்தது
அவனது நினைவலைகளில் வந்து போயிற்று.” (பக்கம் 121)
இது
ஒரு வலுவான உளவியற் சித்திரம் ஆகும். விடுதலைக்கான ஒவ்வொரு முயற்சியும்
மற்றொரு வடிவிலான கட்டுப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்ற கருத்தினை
மையமாகக் கொண்டது. ‘வலை’ என்ற குறியீடு, உளவியற் சிக்கல்களில் சிக்கி,
விடுதலை ஒருபோதும் சாத்தியமற்றது என எண்ணும் பாத்திரத்தின் நம்பிக்கை
குலைந்த நிலையை வர்ணிக்கிறது. அத்துடன், சிலந்தியானது தான் பின்னிய சொந்த
வலையிலேயே சிக்கி அழிந்து போவது பற்றிய குறிப்பு, கதையின் இறுதியில் வரும்
பாத்திரத்தின் தற்கொலையினை முன்கூட்டியே சூசகமாக உணர்த்துவதாக உள்ளது
(foreshadowing). இவ்வர்ணனை இடம்பெறும் “உறைந்த நதி” என்ற தலைப்பே
மனச்சிதைவுக்கு ஆளாகிக் கொண்டு செல்லும் பாத்திரத்தின் உளப்பிரச்சினையைக்
குறிப்பாகச் சுட்டும் உளவியல் உருவகமாகும். உறைநிலையிலுள்ள நதியின்
உட்புறத்தே மறைந்திருக்கும் பதற்றம் கதையின் இறுதியில் வன்முறையாக
வெடிப்பதைக் காணலாம்.
அடுத்து, இத்தொகுப்பில் காணப்படும் சில
கதைசொல்லல் உத்திகள் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிடல் வேண்டும்.
சிறுகதையின் ஆழத்தை மேம்படுத்துவதற்காக ஊடுபனுவலாக்கம் (inter-textuality)
என்ற உத்தி பயன்படுத்தப்படுவதுண்டு. இது பெரும்பாலும் குறிப்புகள்,
ஒப்புமைகள் அல்லது நேரடி மேற்கோள்கள் மூலம் நிகழும். இத்தொகுப்பிலுள்ள “Mr.
K”
எனும் கதை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இங்கு Kafka
எழுதிய நூல்களும், அவரது கருத்துகள் பற்றிய குறிப்புகளும், அவர் எழுதிய
”பெர்லின் பொம்மை” என்ற கதையும் , எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் நேர்காணலின்
சில பகுதிகளும் காணப்படுகின்றன. இவை “Mr. K” எனும் கதையின்
கருப்பொருட்களை மேம்படுத்துவதுடன், கதையில் நேரடியாகக் கூறப்படாத விடயங்களை
உய்த்துணர்ந்து கொள்ளவும் உதவுகின்றன.
அதுபோன்று
“பறந்துபோன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்” என்ற கதை பல்குரல்
கொண்டதாயும் (polyphony), ஒருவரின் அநுபவம் மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக்
கூறப்படுதலால் பல் அடுக்குகள் கொண்டதாயும் (multi-layered narration)
அமைந்துள்ளது. Metafiction என்ற உத்தியையும் இக்கதை பயன்படுத்தக் காணலாம்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: லெஸ்பியன் உறவில் இருக்கும் தன் தோழியின்
கதையை கேட்டுப் பதிவு செய்யும் கலிஸ்தீனோ ”அவர் [தோழி] கூறிய கதையை
விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச்சூழல் குறித்த
பதற்றமும், எனக்குள்ளே இருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக்
கூற விரும்புகிறேன்” என்று கூறுகிறான். இது விளிம்புநிலை மனிதர்களுடைய
கதைகளைப் பிறர் கூற முனைதலைக் கதைக்குள்ளேயே வைத்து விமர்சிப்பதாகும்.
கதையின் ஒருபகுதியாகவே இது அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
விடுபடுதல் (Omission) என்பது ஒரு கதை சொல்லும் உத்தியாகக் கருதப்படலாம்
என்பதற்கு ”முள்ளிவாய்க்கால்” என்ற கதையை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
அதாவது கதையிற் சேர்க்கப்பட்டவை போன்று விடுபட்டவையும் அர்த்தமுடையதாக
இருக்கும் பட்சத்தில் விடுபடுதல் என்பது கதைசொல்லல் செயற்பாட்டில் ஆற்றல்
மிக்க கருவியாக அமைந்துவிடுகிறது. ”முள்ளிவாய்க்கால்” என்ற கதை
காணாமலாக்கப்பட்ட போராளி ஒருவரின் காதற் கதை. தமிழீழ இலட்சியத்தை விட
அதிகமாகத் தன்னையே தனது காதலன் நேசித்தான் என்று நம்பும் ஓர் இளம் பெண்ணின்
கதையும் கூட. பெரும் அரசியல் கதையாடல்களை ஓரங்கட்டும் காதற்கதை இது.
உள்ளார்ந்தமான காதற்கதைகள் முள்ளிவாய்க்கால் தொடர்பான அரசியற்
பெருங்கதையாடல்களுக்குள்ளே காணாமல் போய்விடுகின்றன என்பதை இக்கதை
உணர்த்துகிறது. தனிநபர் துயரங்களைப் பொதுமைப்படுத்திப் பார்ப்பதையும் இது
நுட்பமாக எதிர்க்கிறது.
அதேசமயம்
இக்கதையில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடுமைகள் விவரிக்கப்படவே இல்லை.
அந்தப் பெண் அக்கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறாள், அதைக்
கேட்டுக்கொண்டிருந்த மனிதரும் அவை பற்றிக் கேட்கவில்லை. ஒரு போராளி
காணாமல் ஆக்கப்பட்டான் என்பது எண்ணற்ற உயிர்கள் அழிக்கப்பட்டமைக்கும், பலர்
காணாமல் ஆக்கப்பட்டமைக்குமான பெருங்குறியீடாக விளங்குகிறது என்றே நான்
கருதுகிறேன். இந்தக் கதை என்ன சொல்கிறது என்பதை விட, இது சொல்லாமல்
விட்டவை தொடர்பான நினைவுகளே மனதைக் கனக்க வைக்கின்றன. பிரதியின் இந்த
மௌனம் மொழியாற் பேசவொணொத வலிகளைப் பிரதிபலிக்கிறது.
கதைகளைப்,
பொதுவாக சம்பவங்களை மையமாகக் கொண்ட கதைகள் (action-driven), பாத்திரத்தை
மையமாகக் கொண்ட கதைகள் (character-driven) என வகுப்பது வழக்கம். ஆனால்
தொகுப்பில் உள்ள கதைகளை இந்த இருமுனைப் பாகுபாடுகளுக்குள் உள்ளடக்குவது
என்பது கடினம். பொதுவாக, இக்கதைகளைக் கருப்பொருட்களை மையமாகக் கொண்டெழுந்த
கதைகள் ((theme- driven) எனலாம். எனினும் பாத்திரச்சிறப்பு மேவிய கதை
(charcater -driven) என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு அரசியல், போர்
வன்முறை, சமயம், ஆன்மிகம் , நாட்டுப்புற மரபுகள், மனவடு, தற்கொலை எனப்
பல்வேறு கூறுகள் ஒன்று சேரும் ”வெள்ளவாய்க்கால் வைரவர்” என்ற கதையைக்
கூறலாம். ஒரு சிறுவன் வாயிலாகச் சொல்லப்படும் இக்கதையில் மூத்தண்ணையின்
உருவமும், குணாதிசயங்களும், செயற்பாடுகளும் மிக்க சுவாரஸ்யமாக
விவரிக்கப்படுக்கின்றன. நீதியையும் காவலையும் பிரதிபலிக்கும் வைரவருடன்
மூத்தண்ணை கதையில் ஒன்றுபடுத்தப்படுகிறார். வன்முறை சிறுவர்களை எவ்வாறு
பாதிக்கின்றது என்பதைக் காட்டும் நல்லதொரு சிறுகதை இது.. இக்கதையில் இடம்
பெறும் சிறுவனின் அம்மா பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.. பௌதிக உலகம்,
ஆன்மிக உலகம் இரண்டினையும் இணைப்பவளாய் அவள் திகழ்கிறாள். ஆன்மிக உலகின்
பிரதிநிதியான மூத்தண்ணையைச் சோறிட்டுக் காப்பவளாகவும், இறுதியில் மகனைத்
தற்கொலையினின்று காப்பவளாகவும் அவள் விளங்குகிறாள்.
நிறைவாக,
இக்கதைகள் குறிப்பிடத்தக்க இலக்கிய நேர்த்தியுடனும் நுட்பத்துடனும்
எழுதப்பட்டுள்ளன. இவை நேரடியான, உணர்ச்சிபூர்வமான மொழியில் சொல்லப்படும்
கதைகளுக்குப் பழக்கப்பட்ட தமிழ் வாசகர்களின் வாசிப்பு அநுபவத்தை விரிவாக்க
விழைகின்றன. சில கதைகள் முதலில் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால்
இந்தக் குழப்பம் (ambiguity ) வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்று,
தலைப்புகள், பெரும்பாலும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன.
ஆனால் அதே நேரத்தில் கதைகள் எளிதான தீர்வுகளைத் தர மறுக்கின்றன. அறரீதியான
மதிப்பீடுகளுடன் இக்கதைகளை வாசித்தல் சாத்தியமில்லை. ஏனெனில் அவை பொதுவாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட ”உண்மைகளுக்கான” மாற்றுப் பார்வைகளை முன்வைக்க, அல்லது
அவற்றைக் கேள்விக்கு உட்படுத்த முனைகின்றன. சுருங்கச் சொல்லின், நம்மை
வெறுமனே வாசித்தற் செயற்பாட்டிற்கு அப்பால், மனத்தடைகள் இன்றி, ஆழமாகச்
சிந்திக்க தூண்டுகின்றன.
*****
(நன்றி: 'கலைமுகம்' - அமுத மலர் (80)
0 comments:
Post a Comment