கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாடற்றவனின் குறிப்புகள் - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Friday, October 16, 2026

இளங்கோ கவிதைகள்
    ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
  
    (வெளியிடப்பட்டது: 17 ஜூலை 2013 )


யாழ்ப்பாணத்து இளங்கவிஞர் இளங்கோ தந்துள்ள கவிதைத் தொகுப்பு ‘நாடற்றவனின் குறிப்புகள்!’ புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் வலைப்பதிவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இத்தொகுப்பில் 53 கவிதைகள் உள்ளன. கவிதைகளின் பாடுபொருள் போர்க்கால ரணங்கள், அவலம், இழப்பு மற்றும் தன்னம்பிக்கை, காதல் என விரிகின்றன. மொழிவளத்துடன் நுணுக்கமான வெளிப்பாட்டையும் துணைக்கு அழைத்துக் கொள்வது இவரது சிறப்பு!



 ‘அமைதியின் மணம்’ போர்க்கால அவலத்துடன் தொடங்குகிறது. கவிதையின் இடையில்..

 எதிர்வீட்டு அக்காவின்
 ஆடைக்குள் குண்டிருப்பதால்
 எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
 அமைதியானவர்கள் முலைகள் திருகி
 கூட்டாய்ப் படர்கையில்
 அசையாய்ச் சாட்சிகளாவது
 நானும் மதிய வெயிலும்

எனும்போது மனித மன வக்கிரத்தின் கோரசாட்சி விட்டுச் செல்லும் ரணம் கொடியது. அந்தப் பெண் என்ன ஆனாள் என்பதை அடுத்த வரிகள் காட்டுகின்றன.

 நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியில்
 ஆழ்மனத்தின் துலங்கல்கள் சிதைவுற
 மழலையாகிச் சிரித்தபடி
 காணாமல் போனாள் அக்கா
 ஓர் நாள்

கவிதை தரும் சோகம் சித்திரம் வாசகர் மனம் பிளக்கச் செய்கிறது. இக்கவிதையின் பிற்பகுதியில் மனத்துணிவு கவிஞருக்குப் பக்கபலமாக உள்ளது.

 நேற்று பரவிய வெறுமை
 துடைத்தெறிந்து
 நாளையை மீண்டும் சுகிக்க
 எங்கிருந்தோ எழும் மிடுக்கு

என்பதில் தன்னம்பிக்கை அழகாகத் துளிர்த்துள்ளது.
 
 ‘இலையுதிர்காலத்து பிரியங்கள்’ – நன்றாகத் தொடங்குகிறது.
 
 தனிமையை
 ஒரு பூச்செடியாய் வளர்க்கத் தொடங்குகையில்
 இலைகளாகவும் கனிகளாகவும்
 மலர வைத்தேன்
 பகிர முடியாத என் பிரியங்களை

என்ற வரிகளில் ‘பூச்செடி’ என்பது புதிய உவமையாக ஒளிர்கிறது. அதைத் தொடரும் குறியீடுகள் எளிமையான வெளியீட்டு முறையில் தெளிவான கருத்துருவாக்கம் கொண்டுள்ளன.

 ‘எதிர் உலகம்’ கவிதை, கணவன்-மனைவி பிணக்கு பற்றிப் பேசுகிறது.

நம்முடைய துயரங்களை
இன்னொரு உயிரில் கரைப்பது
புணருமிரு பாம்புகளை
சிதைத்துவிட்டு
குற்றத்துடன் நகர்வதற்கு நிகர்

என்பது அழுத்தமான பதிவு!

 இந்த அதிகாலைப் பனி
 தெருவை அழகாக்குவது போல்
 நமது ஈகோக்கள் கரைந்து போகின்ற
 ஒரு நாளில் இயல்பாய் புன்னகைக்கலாம்

என்ற வரிகளில் நல்லுறவை மீண்டும் அவாவுகிற நல்லெண்ணம் தெரிகிறது.

 இன்னும் நூலிழைக் காரணங்களுடன்
 ஊசலாடுகிறது
 உறவு

என்ற வெளிப்பாட்டில் நுட்பமான சொல்லாட்சி ரசிக்கத்தக்கது.

 ‘அழிவின் தீரா நடனங்கள்’ கையறுநிலையை சுட்டுகிறது.

 அழிவுகளிலிருந்து
 எதை நோக்கிய தேடலுள்ளதென
 வினாவிய தோழிக்கு
 அரங்கம் நிரம்பிய நிசப்தமே
 விடையாக வழிந்தது

என்ற வரிகள் திசை காண இயலாத இறுக்கத்தை நம்முன் வைக்கின்றன.

 ‘ஒற்றைக் கல் மூக்குத்தி’ – ஒரு நல்ல படிமத்தைக் காட்டுகிறது.

 கத்திகளாய்க் குத்திக் கொண்டிருந்த
 கடந்த காலம் தூர்ந்து போக
 சிறகுகள் முளைக்கின்றன
 மனவெளி முழுவதும்

இதில் மனவெளிச்சம், மிகுந்த நம்பிக்கை தருகிறது.

 பளிச்சிடும்
 உன் மூக்குத்தியைப் போல்
 நினைவுகளை விரும்பிய போது
 அணியவும் எறியவும்
 முடியுமெனில்
 எவ்வளவு நன்றாகவிருக்குமெனும்
 ----------------------------------------------------
 ஆண் - பெண் உறவு எல்லா துயரங்களையும் மறக்கச் செய்யும் என்னும் நிலையை உணர்த்திக் கவிதை முடிகிறது.

 ‘மழைக்காலப் பெண்’ – என்ற கவிதை பெண்ணின் இக்கட்டான சூழலைக் கருப்பொருளாகக் கொண்டது.

மொத்தத்தில் இளங்கோ கவிதைகள் சராசரிக்கும் மேல் உள்ளன. இன்னும் பல கவிதைகளைப் பற்றி பேச வைக்கும் இத்தொகுப்பை வாசகர் படித்து மகிழலாம் என்ற நம்பிக்கை தருகிறது. பாராட்டுகள்!

 

*** 

நன்றி: கீற்று இணையத்தளம்

கார்காலக் குறிப்புகள் - 164

Tuesday, October 13, 2026

 கலைஞர்களாக இருப்பது...

***

பாடகர் Ed Shreen ஐ அறியாதவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பார்கள். அவருடைய Thinking Out Loud, Shape of You போன்ற பல பாடல்களுக்கு நான் தீவிர இரசிகனும் கூட. ஆனால் இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.

அவர் தனது இசை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாய் பல்வேறு நாடுகளில் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதில் பல கலைஞர்கள் அவருடன் இணைந்து  பாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு பாடகர்/ராப்பரான  Macklemore, வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்.

 
இப்படி பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தால் இஸ்ரேலிய ஆதரவு பெரு முதலாளிகள் என்ன செய்வார்கள். எட்டிடம் தொடர்ந்து Macklemore நிகழ்ச்சியில் சேர்த்தால் பிரமாண்ட அரங்குகளில் நிகழ்வுகளை நடத்த இடம் தரமாட்டோம் என்று மிரட்டியிருக்கின்றனர்.

நமது பையன் எட் பயந்துபோய் Macklemore ஐ தனது நிகழ்வுகளில் இருந்து அகற்றியிருக்கின்றான்.
அதன் பிறகு நடந்ததுதான் நம் தமிழ்ச்சூழலில் இருக்கும் எழுத்தாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.

*

எட்டின் நிகழ்வில் Macklemore போல வெவ்வேறு Actகளில் பங்குபற்றிய இசைஞர்கள்  இப்போது Macklemore இற்கும் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்து இந்த இசை நிகழ்வுகளிலிருந்து முற்றாக வெளியேறியிருக்கின்றனர்.

அதைத்தான் அசலான கலைஞர்கள் செய்வார்கள் அல்லவா?

இவர்கள் எட்டின் நண்பர்களாகவும், எட்டின் மூலமாகவே இவர்களின் இசைப்பாதை செழுமையானது என்கின்றபோதும் இவர்கள் பிரபல்யமா, அறமா என்ற கேள்வி வந்தபோது, அறத்தின் பாதையைத் தெளிவாகத் தெரிந்தெடுத்திருக்கின்றனர்.

அதிலும் ஐரிஷ் பின்னணியில் வந்த Rowe and Beoga கலைஞர்கள் விடுத்த அறிக்கையில்...
"நாங்கள் காலனித்துவத்தைப் புரிந்துகொண்ட ஐரிஷ் மக்கள். பாலஸ்தீனத்திற்கான ஐரிஷ் கலைஞர்கள் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களான நாங்கள் நீதியின் பொருட்டு அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர்களும் கூட, அவ்வாறே மேலும் தொடர்ந்து  இருப்போம்.'  என்று சொல்லியிருக்கின்றார்கள்.

அதிலும்,  எட் ஷீரனைத் தனது நண்பர் என்று குறிப்பிட்ட ரோவ், எட்டே தனது வாழ்க்கையையே மாற்றியவர் என்று கூறினாலும்,.

"ஆனால் ஐரிஷ் மக்களாகிய எங்களுக்கு இனப்படுகொலை, கட்டாயப் பஞ்சம், வன்முறையான ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றி மிக நன்றாகவே தெரியும். மேலும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நியாயமான குரல்களை எழுப்புபவர்களை மௌனமாக்க பில்லியனர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்திருக்கின்றார் என்பதுதான் நாம் அவதானிக்க வேண்டியது.

இன்னொரு கலைஞரான லூக்கஸ் கிரஹம் ( Lukas Graham):

“நீங்கள் பெரும்பணத்தை வைத்திருப்பதால், ஒரு உரையாடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமையை உங்களுக்குத் தந்துவிடாது. யார் பேச வேண்டும் அல்லது எந்தத் துயரத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதை ஒருவரின் வங்கிக் கணக்கு இருப்பு ஒருபோதும் தீர்மானிக்கக் கூடாது” என்று நேரடியாகவே பெரும் முதலாளிகள் எந்த அரசியலை நாம் பேசவேண்டும் என்று சொல்வதற்கு எதிராகப் பேசியிருக்கின்றார்.

"Artists must not be silenced when they speak up for the oppressed" என்று அதில் விலகிய இன்னொரு கலைஞரான  Finneasவும் கூறியிருக்கிறார்.

நம்பிக்கை தருகின்ற புதுத்தலைமுறைகள்..!

***

(உதவிய தளங்கள், CBC and CityTV News)

 

கார்காலக் குறிப்புகள் - 163

Saturday, October 10, 2026

 

கடந்த ஞாயிறு மாலையில் நான் வசிக்கும் இடத்திற்கருகில் இருக்கும் நாற்சந்தியில் ஒரு விபத்து. காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. மோட்டார்சைக்கிளில் வந்த முப்பதுகளையொட்டிய இளைஞன் மரணமாகியிருந்தான்.  ஆம்புலன்ஸ்கள் அறம்புறமாக ஓடித்திரிந்தன. நாற்சந்தியை மூடி விசாரணைக்காக மணித்தியாலக்கணக்கில் வைத்திருந்தார்கள்.

நான் அந்த இறந்துபோன இளைஞனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் விபத்தைச் சந்திக்க  ஒரு நிமிடம் முன்னர்வரை எத்தனை கனவுகளுடள் பறந்து கொண்டு இருந்திருப்பான் என்று நினைவுகள் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது மீள்வாசிப்பில் இருந்த உமா வரதராஜனின் 'எல்லாமும் ஒன்றல்ல' தொகுப்பில் அவர் தனது நண்பரான வீ.ஆனந்தனைப் பற்றி எழுதியது ஞாபகத்துக்கு வந்தது. 



ஒரு எழுத்தாளராகப் பரிணாமித்துக் கொண்டிருந்த ஆனந்தன் அப்போது தபால்காரராக வேலை செய்து கொண்டிருந்திருக்கின்றார். உமா தனது நண்பர்களுடன் வியூகம் என்ற இலக்கிய அமைப்பாக எண்பதுகளில் ஒன்றாகச் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரு சிலரில் ஆனந்தன் ஒருவர்.

ஆனந்தன் தனது வேலை நிமித்தம் செல்லும்போது பஸ் தரித்து நிற்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் அடிக்கடி உமாவை சந்தித்துவிட்டுப் போவார். அப்படி ஒரு நாள் (சரியாகச் சொல்வதனால் ஒரு மார்கழி 05) உமாவைச் சந்தித்துவிட்டு பஸ்ஸில் ஏறிப்போகும் ஆனந்தன் அடுத்த 45 நிமிடங்களில் இராணுவத்துக்கும் இயக்கத்துக்கும் நடக்கும் சண்டையில் மாட்டுப்பட்டு இறந்து போகின்றார்.

உமா, ஆனந்தனின் நினைவை இப்போது ஆனந்தன் உயிரோடு இருந்திருந்தால் எப்படி இருப்பார் என்று நனவிடை தோய்கின்றார். அப்படித் தோய்ந்தொழுகி ஆனந்தனைச் சந்தித்த முதல் சந்திப்புவரை எங்களை இழுத்துச் செல்கிறார். ஆனந்தன், அவருக்குள் எழுந்த ஆர்வத்தால் தன் இயல்பிலே மலையாள மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து கதைகளை மொழிபெயர்த்திருக்கின்றார். உமா ஒருவரை நினைவுகூரும்போது அவர்களின் நினைவை மட்டுமில்லை, அந்தக் காலத்தை, அவர்கள் வாசித்த நூல்கள் என்று பலவற்றை எழுந்தமானமாக, ஆனால் நுட்பமாக எழுதிச் செல்கின்றார்.

ஆனந்தனின் நினைவை மீட்கும்போது, 'பன்கர் வாடி, இலட்சிய இந்து ஹோட்டல், நீலகண்டப் பறவையைத் தேடி, சோர்ட் -உனது பெருகும் வெள்ளம், சம்ஸ்க்கார், சித்தார்த்தா, அழிந்தபிறகு, மண்ணும் மனிதரும், செம்மீன், அண்டைவீட்டார் போன்ற மொழிபெயர்ப்ப்புக்களை வாசித்துவிட்டு மணிக்கணக்கில் (ஆனந்தனுடன்) பேசியிருக்கின்றோம்' என்று எழுதும்போது நாம் ஆனந்தனின் நினைவுடன் அவர்கள் வாசித்த நூல்களை, நாம் வாசிக்கவேண்டிய நூல்களுக்கான குறிப்புகளை நினைவுக்குறிப்பு ஒன்றிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றோம்.

உமா 'வியூக'க் கால நண்பராக இருந்த ஆனந்தனை மட்டுமில்லை, அவர்களின் குழுவில் இருந்த நற்பிட்டிமுனை பளீலையும் இப்படியான ஆயுதங்களுக்கு பலிகொடுத்திருக்கின்றார்.

*
இப்படி கொல்லப்பட்ட நிஜவாழ்வில் உமாவுக்கு நெருக்கமான, அவரின் கதைகளில் மிஸிஸ் சமரவீரா என்று வருகின்ற ஷாந்தினி சமரவீரா என்கின்ற ஒரு வைத்தியரைப் பற்றியும் அறிகிறோம். அவர் வங்காளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதை உமாவின் அல்புனைவுகளின் வழி கண்டுகொள்கிறோம்..

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் பிறந்த ஷாந்தினி, சமரவீரா என்கின்ற சிங்களவரைச் சந்தித்து திருமணம் செய்கின்றார். பின்னர் இருவரும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கிற்கு (கல்முனைக்கு) பணி நிமித்தம் வருகின்றார்கள். ஒருநாள் ஷாந்தினியை ஒரு இயக்கக்காரன் (அல்லது அப்படி தன்னைச் சொல்லிக்கொண்டவன்?) கப்பம் கேட்டு ஷாந்தினியை மிரட்டுகின்றான். அவர் அதைக் கொடுக்க மறுக்கும்போது ஷாந்தினியின் கழுத்தை வெட்டிவிட்டுப் போகிறான்.  குற்றுயுயிரும் குலையுயிருமாகக் கிடந்த ஷாந்தினியை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவில் எங்கோ பிறந்து சிங்களவரை மணந்து கடைசியில் ஒரு தமிழரால் கொல்லப்பட்ட ஷாந்தினி கல்முனையில்தான் மீளாத்துயில் கொள்கின்றார் என்று உமா எழுதுகின்றார்.

ஆக இப்படியான சூழலில் இருந்துதான் எங்களின் முன்னோடிகள் இலக்கியத்தை வளர்த்தார்கள், எழுதிப் பார்த்தார்கள் என்றறியும்போது நமக்குள் பதற்றம் மீளவும் வருகின்றது. ஆனால் அதை எவ்வித உயர்வுநவிற்சியும் ஆக்காது இயல்பென்றுதான் போர்க்காலத்தில் இருந்த அனைத்து படைப்பாளிகளும் எளிதாகச் சொல்லிக் கடப்பார்கள் என்பது வேறுவிடயம்.

இத்தகை துயரத்தையும் பதற்றத்தையும் யுத்த நிலத்தினுள் வாழ்ந்திடாத எந்தத் தமிழ் மனதாலும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடியாது.

***

 

ஜெயமோகனை எதிர்கொள்ளல்..

Tuesday, October 06, 2026

 

நனவிடை தோய்தல்:

ஜெயமோகனை நான் நேரடியாகச் சந்திக்கும்போது என் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தேன். அவருக்கு அது முதலாவது கனடாப் பயணம். முந்நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த நகரொன்றில் பல்கலைக்கழகப் படிப்பில் இருந்த நான்  இதற்காக ரொறொண்டோவிற்கு வந்திருந்தேன்.

இதற்கு முக்கிய காரணம், என் நண்பரும், எனக்கு இலக்கியத்தில் mentor ஆக இருந்த மைக்கேல்.

ஜெயமோகனைச் சந்திக்க முன்னரே மைக்கேல், நான், இரமணி எனப் பலர் 'திண்ணை' மற்றும் 'பதிவுகள்' விவாதக்களங்களில் களமாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களோடு ஜெயமோகனும் இந்த விவாதத் தளங்களில் நின்றாடிக் கொண்டிருந்தார்.

இப்போது நினைத்தால் கூட சற்று திகைப்பாக இருந்தாலும், நான் என் இலக்கிய அறிமுகத்தில் இருந்து இன்றுவரை ஜெயமோகனுக்கு எதிர்த்தரப்பாக இருந்திருக்கின்றேன் என்பதுதான். சிலவேளைகளிலே தொடக்கத்திலே எனக்கு சுந்தர ராமசாமி, பிரமிள், பிரேம்-ரமேஷ், நகுலன், நாகார்ஜூனன் போன்றவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் ஜெயமோகன் பக்கம் போக எதுவும் அவ்வளவு உந்தித் தள்ளவிடவில்லையோ தெரியவில்லை.

ஜெயமோகனும் இந்த விவாதக் களங்களில் இறங்கியிருந்ததால், எங்களில் பலர் இலக்கியத்தை உன்னதமாக்கலுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மைக்கேல்தான், 'ஜெயமோகன் கனடாவுக்கு வருகின்றார், ஜெயமோகனின் படைப்புக்கள் மீதான விமர்சனங்களை வைக்க நல்லதொரு சந்தர்ப்பம், வாருங்கள்' என்று அழைத்திருந்தார்.

இப்படி அழைத்திருந்த மைக்கேலையும் அப்போதுதான் நான்  நேரில் சந்திக்கப் போகின்றேன் என்பதால் எனக்கு அது ஓர் உற்சாகமான பயணமாக இருந்தது.

ஆனால் அந்தச் சந்திப்பு முடிந்து வந்தபோது மைக்கேல் எனக்காகக் கொண்டு வந்த புத்தகங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் 'உப பாண்டவம்', சாரு நிவேதிதாவின் 'ஸீரோ டிகிரி', எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் சேர்ந்து எழுதிய 'பெரியார்:சுயமரியாதை சுயதர்மம்'.

புத்தகங்களின் பட்டியலைப் பாருங்கள். ஒரு ஜெயமோகன் நூலைக் கூட மைக்கேல் எனக்கு வாசிக்கக் கொண்டு வந்து தரவில்லை. இத்தனைக்கும் ஜெயமோகன் அப்போது மொன்றியல் நகரிலிருந்த மைக்கேலின் வீட்டில் ஓரிரு நாள்கள் தங்கியும் இருந்தவர். இப்போது புரிந்திருக்கும்  நான் ஏன் மைக்கேலை என் mentor எனச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்று.

*

தீதும் நன்றும்:

ஜெயமோகனோடு நேரடிச் சமர் எதுவென முதலில் யோசிக்கும்போது வெங்கட் சாமிநாதன் இங்கே இயல்விருது வாங்க வந்தபோது நிகழ்ந்தது என நினைக்கின்றேன். வெ.சா கனடாவுக்கு வந்தபோது, கனடா தமிழ் இலக்கியம் குறித்து வெ.சா என்ன அறிந்திருக்கின்றார் அல்லது அப்படியான ஒரு கேள்வியை அந்த நிகழ்வில் கேட்டிருந்தேன் என நினைவு.

அதை இப்போது போல அன்றும் எழுத்தில் பதிவு செய்ததால், ஜெயமோகன், 'டிசே தமிழன் ஒரு சாதி வெறியன்' என்றளவுக்கு தரை லோக்கலில் அடித்து களத்தில் இறங்கியிருந்தார். 'இந்த அளவுக்கு சாதி நோக்கும் வன்மமும் கொண்ட ஓர் அணுகுமுறை எந்த ஈழ எழுத்தாளர் மீதாவது தமிழ் வாசகர்களாலோ திறனாய்வாளர்களாலோ காட்டப்பட்டுள்ளனவா என்பதை அவர்கள் யோசிக்கவேண்டும்' என ஜெயமோகன் என்னைப் பற்றி முடிவுரை எழுதியிருந்தார்.

நான் அந்த நிகழ்வில் என்ன நடந்தது, எவ்வாறு வெசாவினால் பதிலளிக்கப்பட்டது, நான் இவை குறித்து என்ன நினைக்கின்றேன் என்று என் இருபதுகளின் போதாமையோடு ஒரு சிறு கட்டுரையை எழுத, அந்தப் பதிவில் எங்குமே தெரியாத அல்லது நான் யாரென்ற பின்புலமே தெரியாத ஜெயமோகன் இப்படி அறுதியும் இறுதியுமாக எனக்கு ஓர் முடிவை எழுதியிருந்தார். எனது கட்டுரையைத் தொடர்ந்து அதில் ஜெயமோகன், சுமதி ரூபன், வெங்கட் சாமிநாதன் போன்றோர் எதிர்வினைகளை எழுதியிருந்தார்கள் [1].

தமிழகத்தில்தான் பிராமண ஆதிக்கம், இலங்கையில் அது வெள்ளாள ஆதிக்கம். ஜெயமோகனுக்கு ஒருவரை அடித்து கீழிறக்க வேண்டுமென்றால் facts checking/references அவசியமில்லை. என்ன அந்த மனநிலைக்கு வருகின்றதோ அப்படியே எழுத்தாக்கிவிடுவார். இப்போது பிரேம் ஜெயமோகன் எழுதிய 'காந்தி' நூல் பற்றிய விமர்சனத்தை அவரது முகநூலிலே எழுதுகின்றார். வாசித்துவிடுங்கள், அது இன்னொரு உதாரணம் [2].

இதன்மூலம் என்ன சொல்ல வருகின்றேன் என்றால், ஜெயமோகனால் நான் என் ஆரம்ப கட்டங்களிலே 'அமோகமாக இலக்கிய உலகிற்கு மனமார வரவேற்கப்பட்டவன்' என்று நினைவூட்டிக் கொள்ள மட்டுமே.

ஆக, இவ்வாறு ஒரு மாற்றுத்தரப்பாக, அவரைத் தொடர்ந்து பலவிடயங்களில் மறுதலித்து மட்டுமில்லாது, அதை எழுத்தில் தொடர்ந்து பதிவு செய்து கொண்டும் கடந்த 20 வருடங்களாக வருகின்றவனுக்கு, இப்போது ஜெயமோகன் மட்டுமில்லை, அவருடைய சிஷ்யர்கள் அடித்துத் துவைப்பது கூட ஒன்றும் பயமுறுத்திவிடாது என்று சொல்லவே.

இல்லாவிட்டால் நான் இந்த இலக்கிய உலகில் இருந்து எப்போதோ ஓடி ஒளிந்திருக்க வேண்டும். அல்லது ஆகக்குறைந்தது இப்போது பலர் அடைக்கலம் ஆவது போல ஜெயமோகன் மடத்திலே தஞ்சம் புகுந்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளம் பாயும்போது ஆலமரத்தை விட, சாய்கின்ற நாணலே தொடர்ந்து நின்றுபிடிக்கும் என்று எனக்குச் சிறுவயதில் சொல்லித் தந்தது போல, நாணலாக ஒரு ஓரத்தில் இப்போதும் வீழ்ந்துவிடாது நிற்கிறேன் போலும்.

*

தீ:

இவ்வாறாக வெங்கட் சாமிநாதனை முன்வைத்து தொடங்கிய இலக்கிய வெள்ளோட்டத்தோடு, அடிக்கடி நான் ஜெயமோகனைச் சீண்டுவதும், அவர் வெகுண்டெழுவதுமென பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்கின்றன.

அவரது 'அறம்' சிறுகதைகள் பற்றி நான் ஒரு விமர்சனத்தை எழுதினேன் [3]. அது வழமை போல ஜெயமோகனைச் சுட்டது, எனவே 'ஒரு ஈழ எழுத்தாளருக்கு.. ' என்று மீண்டும் ஒரு பரணி பாடினார் [4]. அதில் என்னை சாதி வெறியனிலிருந்து, இப்போது கொஞ்சம் பதவி உயர்வு கொடுத்து 'சிங்கள மக்களை அனுதாபத்துடன் பார்க்க டி செ தமிழனால் முடியும் என்றால் மட்டுமே அவர் தமிழர்களின் வாழ்க்கையை எழுத முடியும்.' என்று ஏதோ நான் சிங்கள மக்களை வெறுப்பவன் என்கின்ற அருமையான அறிவுரையை வழங்கியிருந்தார்.

திரும்பவும் ஜெயமோகனுக்கு தன்னை நெருங்கியவர்களையோ அல்லது தன் படைப்புக்களையோ ஒருவர் விமர்சிக்கின்றாரோ என்றவுடன் வருகின்ற பதற்றந்தான் இது. எவ்வித facts checking/references இல்லாத அதேவகை எழுத்து நடை.  

அதில் அவர் 'டி.செ.தமிழன் மறக்க வேண்டியது அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த அரசியல் காழ்ப்புகளையே. எளிய தரப்புகளாக அனைத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை. அந்த பார்வையைக் கொண்டு அவரால் ஒரு நல்ல நாலு வரி கவிதை கூட எழுதி விட முடியாது.' என்றிருந்தார்.

அப்போது நானொரு நூலை மட்டும் வெளியிட்டிருந்தேன். அது ஒரு கவிதைத் தொகுப்பு. அதற்கு தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் 'ஏலாதி' விருதும் கிடைத்திருந்தது. இப்படி ஜெயமோகன் ஒருபக்கம் 'சாபம்' விட இன்னொரு பக்கம் ஏதோ ஒரு தரப்பு நான் 'நான்கு வரி கவிதையை நன்றாக எழுதியிருக்கின்றேன்' என்று விருது தருகின்றார்களே என, மார்க்ஸின் முரணியக்க விதி என் வாழ்விலும் விளையாடுகிறதே என்று திகைத்துப் போய் நின்றிருக்கின்றேன்.

இப்போது  ஜெயமோகன் மற்றும் ஜெயமோகனின் சிஷ்யர்கள் எனக்கு எதிராக எழுதுவதைப் பார்த்து, நான் மதிக்கும் ஒரு படைப்பாளி உள்பெட்டிக்குள் வந்து 'இதற்கெல்லாம் கவலைப்படக்கூடாது, நாம் எழுதுவதால் இருக்கின்றோம், ஆகவே தொடர்ந்து எழுதவேண்டும்' என்றெல்லாம் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி ஆற்றுப்படுத்தியபோது அவரிடம் இப்படிச் சொன்னேன். 'ஜெயமோகன் ஒரேயொரு புத்தகத்தை நான் வெளியிட்டிருந்த காலத்தில் உன்னால் எழுதவே முடியாது என்று சாபம் போட்டார், பாருங்கள்,  இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக 10 புத்தகங்களை வெளியிட்டுவிட்டேன். இப்போது மீண்டும் திட்டுவதால் எப்படியும் என் வாழ்க்கைக்காலம் முடிவதற்குள் இன்னும் ஐந்தோ பத்தோ புத்தகங்களை வெளியிட்டுவிடுவேன்'.

*

சடங்கு:

சரி ஜெயமோகனோடு எல்லாமே எதிர்மறையாகத்தான் என் அனுபவங்கள் இருக்கின்றதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று சொல்வேன். அதைப் பற்றிக் கொஞ்சம் பேசாவிட்டால் இது முழுமை பெறாது.

ஜெயமோகனை இங்கே ஒரு திரைப்பட விழாவுக்கு பிறகான காலங்களில் அழைத்திருந்தார்கள். அவர் சிறப்பு விருந்தினராகப் பேசி அடுத்து நானும் சில நண்பர்களும் 'விமர்சகர்களுக்கான விருதை' திரைப்படமொன்றுக்கு அறிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

நண்பர்கள் என்னை அத் திரைப்படத்தை எப்படித் தெரிந்தெடுத்தோம் என்று விளக்கம் சொல்லி விருதை அறிவிக்கச் சொன்னார்கள். நான் சொன்னது நான்கைந்து வரிகள்தான்.

'எங்களுக்கே இந்தத் திரைப்படத்துக்குச் சரியாக விருதைக் கொடுக்கின்றோமா என்று சற்று தயக்கம் இருந்தது. ஆனால் இதற்கு முன்னர் பேசிய ஜெயமோகனுக்கு நாங்கள் விருது கொடுக்கும் திரைப்படம் பிடிக்கவேயில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆகவே இப்போது உறுதியாகச் சொல்கிறேன், நாங்கள் சரியாகவே சிறப்பான திரைப்படத்தைத் தெரிவு செய்திருக்கின்றோம்' என்று.

'நாசமாய்ப் போனவனே, நீ இலக்கியத்தில் நேர்மையானவனாக இருக்கலாம். ஜெயமோகனுக்கு மாற்றுத் தரப்பாகக் கூட இருக்கலாம் ஆனால் அதற்கு பொதுச் சபையிலே இப்படி ஜெயமோகனை நிராகரித்து சொல்லவா வேண்டும். இது அவருக்கான சபை. நீ இப்படி அவரை பொதுவில் நிராகரித்துப் பேசியது முறையில்லை' என்று அப்போது எனக்கு காதலியாக இருந்தவர் திட்டியிருந்தார்.

என்ன செய்ய, எழுத்தில்தான் நான் இப்படி மூர்க்கமாக இருக்கின்றேன். என்னைத் தனிப்படத் தெரிந்தவர்க்கு நான் வெளியில் ஒரு சாதுவான பூனை என்பது தெரியும். அந்த நேரத்தில் ஏதோ மலையாள நீலி வந்து அருட்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாவில் அப்படியான வார்த்தைகள் வந்து விழுந்திருக்க முடியுமா என்ன?

ஆனால் ஜெயமோகன் நிகழ்வு முடிந்தவுடன் என்னை வந்து அரவணைத்துக் கொண்டார். அன்றிரவு அவர் எழுதிய பதிவில் 'அவருக்கும் (டிசே) எனக்குமான கருத்து வேறுபாடுகள் தமிழில் முக்கால் நூற்றாண்டு பழக்கமுள்ளவை, நானும் அவரும் மட்டும் பேசித் தீர்த்துவிட முடியாதவை என்றும் சொன்னேன். இதில் எந்தத் தரப்பும் சரியாக இருக்கலாம். எதை எழுதிக் காட்டுகிறோம் என்பதே கடைசியில் முக்கியம்' [5] என்று எழுதி சுமுகமாக முடித்துக் கொண்டார்.

பின்னர் எனது கதையொன்றை 'அம்ருதா'வில் வாசித்துவிட்டு 'கோபிகா என்ன செய்தாள்' நன்றாக இருக்கின்றது என்று தனது தளத்தில் ஒரு தனிப்பதிவு எழுதிப் பாராட்டினார் [6].

*
முறுவல்:

என் தனிப்பட்ட வாழ்வில் நான் இருண்ட காலத்தில் போய்க் கொண்டிருந்தபோது எவருக்கேனும் எழுதி அதைக் கடக்கவேண்டும் என்று நினைத்தபோது இதுவரை என்னை தனிப்பட அறியாத எவருக்கேனும் எழுதிப்பார்த்தால் நல்லது என்று தோன்றியது.

இப்போது யோசித்தாலும் சற்று வியப்பாக இருந்தாலும், ஜெயமோகனுக்கு எழுதலாம் என்று அப்போது தோன்றியது. ஆனால் எதையும் முழுமையாகச் சொல்லாமல், ஓரு மறைமுகக் குறிப்பாக கடினகாலத்தில் இருக்கின்றேன் என்று ஒரு கடிதத்தை எழுதியிருதேன். அவர் 'நீங்கள் எதையோ சொல்ல விரும்புகின்றீர்கள். என்னோடு தயக்கமின்றி தனிப்பட்டு உரையாடலாம்' என்று கதகதப்புடன் சொல்லியிருந்தார். ஆனால் நான் பிறகு எந்தக் கடிதத்தையும் தொடர்ந்து அவருக்கு எழுதவில்லை.

ஆனால் அந்தக் கடிதத்தில் நான் மெக்ஸிக்கோவுக்குப் போன பயணத்தையும், இலங்கையில் இருந்து வந்த எமக்கும் மெக்ஸிக்கோவின் மாயன்களுக்குமான பொதுத்தன்மை பற்றியும் கொஞ்சம் சிலாகித்து எழுதியிருந்தேன். அவர்தான் இது சுவாரசியமாக இருக்கிறது. ஒரு புனைவாக எழுதுங்களென அந்தக் கடிதத்தில் உற்சாகமூட்டியிருந்தார்.

அப்படி எழுதத் தொடங்கி, நாவலாக பல வருடங்களாக முடிக்காதிருந்த என் நாவலை, பிரபஞ்சன் நினைவாக நடந்த நாவல் போட்டிக்கு, 'எனக்கு நாவல் எழுத வருகின்றதா என்ற தயக்கத்துடன், முயற்சித்துப் பார்க்கலாம்' என்று அனுப்பி வைக்க அது பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

 'மெக்ஸிக்கோ'வுக்கு பரிசு கிடைத்தவுடன் ஜெயமோகன் இதற்கு ஏதோ ஒரு காரணமாக இருந்தவர் என்பதால் அவருக்கு 'இப்படிப் பரிசு கிடைத்தது, உங்களின் கடிதத்திலிருந்து எனக்குக் கிடைத்த உற்சாகத்தில் அதை எழுதிப் பார்த்தேன்,  மிக்க நன்றி' என்று அவருக்கு அனுப்பியிருந்தேன். அவரும் அதற்கு ஒரு மறுமொழி அனுப்பியிருந்தார். இவைதான் அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள். அழகான நினைவுகளும் கூட.

பிறகு அவ்வப்போது ஜெயமோகன் கனடா வரும்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் கதைத்துக் கொள்வோம். அண்மையில் கனடாவுக்கு அவர் வந்தபோதும் பல இலக்கிய நண்பர்கள் அவரைச் சந்திக்க வரவில்லை. ஆனால் ஜெயமோகனோடு எனக்கு எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சந்திப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

*

தேடல்:

இம்முறை மைக்கேலும், நானும் சேர்ந்து அவரின் நிகழ்வுக்குப் போயிருந்தோம். உண்மையில் அன்று என் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த கேள்வி, 'ஜெயமோகன் நீங்கள் அறம் கதைகள் உட்பட தொடர்ச்சியாக அறத்தை ஏதோ ஒருவகையில் வலியுறுத்திக் கொள்பவர். ஆனால் எந்தவகையில் நீங்கள் கோணங்கியின் பாலியல் துஷ்பிரயோகத்தை அறிந்தபின் அவரின் பக்கம் நின்று பேசமுடிகிறது' என்றுதான் பொதுச் சபையில் கேட்க விரும்பினேன். எனக்கும் கோணங்கியை அப்படிப் பிடிக்குந்தான் (நிறைய அவர் குறித்து எழுதியிருக்கின்றேன்). ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பு மிக வலுவாக தமது மனவடுக்களைச் சொல்லும்போது ஆகக்குறைந்தது அவர்களை ஆதரிக்காவிட்டாலும், மெளனமாக இருந்திருக்கலாமே, நமது குடும்பத்தில் அப்படி ஒருவர் பாதிக்கப்பட்டுச் சொன்னாலும், அவர் இலக்கியவாதி அப்படியெல்லாம் எதிர்த்துப் பேசக்கூடாது என்று இலக்கியவாதியின் பக்கம் நின்றிருப்போமா என்று எனக்கு ஜெயமோகன் ஏதோ 'அறம்' சார்ந்த தலைப்பில் பேசப் பேச தலைக்குள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் ஏற்கனவே பொதுச்சபை 'நாகரிகம்' அறியாது திரைப்பட விழாவில் வாய் திறந்த  அனுபவம் இருந்ததால் கஷ்டப்பட்டு என்னை அடக்கிக் கொண்டேன். நிகழ்வு முடிந்தபின் ஜெயமோகனின் அண்மைக்கால கதைகள் குறித்து சில நிமிடங்கள் பேசியபின் அவரிடமிருந்து விடைபெற்றிருந்தேன்.

இப்போது பார்க்கும்போது ஒரு வட்டம் சரியாக முடிந்திருக்கின்றது போலத் தோன்றுகிறது. நான் என் இருபதுகளில் இருக்கும்போது மைக்கேலோடு சந்தித்த ஜெயமோகனை அதே மைக்கேலோடு மீண்டும் நீண்ட இடைவெளியின் பின் சந்தித்திருக்கின்றேன்.

இனி இங்கே  ஜெயமோகன் வந்தால், ஜெயமோகனின் நிகழ்வுகளுக்குச் சென்று ஜெயமோகனைச் சந்திப்பது என்கின்ற என் விருப்பத்துக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.

மைக்கேலோடு சேர்ந்து தொடங்கிய இந்தச் சந்திப்பு மைக்கேல் அருகணைந்து ஒரு  முடிவை அடைவதும் என்னைப் பொறுத்துவரை மகிழ்ச்சியானதே.

*

வலை:

இறுதியில் ஜெயமோகன் எனக்காக எழுதிய கட்டுரையின் சில புள்ளிகளைப் பற்றி மட்டும் தொட்டுவிட்டு இதை நிறைவு செய்யலாம் என நினைக்கின்றேன்.

ஜெயமோகன் என்னை அண்மையில் அமெரிக்காவில் நடந்த 'வாழும் தமிழுக்கு' அழைக்க நினைத்ததாகவும் பிறகு நான் எதையும் 'உருப்படியாக' எழுதவில்லை என்பதை அறிந்து அந்த எண்ணத்தை நிராகரித்ததுமாக எழுதியிருக்கின்றார் [7]. ஒர் எழுத்தாளனாக வளராத நான் ஜெயமோகனின் எண்ணத்தில் 'ஒரு சிறு இலையானாகப் பறந்து கொண்டிருந்தேன்' என்பது எவ்வளவு 'பெருமை'யானது. அதற்கு முதலில் நன்றி.

ஆனால் அதைவிட நான் அதிகம் வியப்பது அவரது தன்னம்பிக்கையை. ஏனென்றால் ஏதோ அவர் கூப்பிட்டவுடன் நான் உடனே ஓடி வந்திருப்பேன் என்று நம்புகின்றாரே, அதுதான் என்னை அப்படித் திகைக்க வைக்கின்றது.

'எழுத்தாளனாக' இல்லாத இப்போது மட்டுமில்லை, நாளை நீங்கள் பாராட்டும் நல்லதொரு படைப்பை எழுதி ஓர் எழுத்தாளனாக உங்கள் ISO அங்கீகாரம் பெற்றால் கூட நான் ஒருபோதும் உங்களின் அமைப்புச் சார்ந்த எந்த ஏற்பையும் ஏற்கப் போவதில்லை. அவ்வாறு நான் அதை ஏற்கும் காலம் வருமாயின், அது இந்த 20 வருட காலமாக நான் இலக்கிய உலகில் இருப்பதிலே மிகப்பெரும் வீழ்ச்சியுடைய ஒருவனாக என்னை அறிவித்துக் கொள்ளும் காலமாக  மட்டுமே இருக்கும். ஆகவே அப்படிப்பட்ட எந்த அவப்பெயரையும் நீங்கள் எனக்குத் எந்தப்பொழுதிலும் தந்துவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் நான் ஒரு மாற்றுத்தரப்பாகவே உங்களுக்கு எப்போதும் இருக்க விரும்புவேன். ஏனெனில் என்னுடைய முன்னோடிகள் பட்டியலில் நீங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. அப்படி நீங்கள் தரும் ஒரு ஏற்பை ஏற்றுக்கொள்வது என்பது என்னை மட்டுமில்லை நான் என் முன்னோடிகளாகக் கொள்வோரையும் அவமதிப்பதாகவே அது இருக்கும்.

ஆகவே எப்போதும் நாங்கள் 'மரியாதைக்குரிய எதிரி'களாக இலக்கிய உலகில் எழுதும்வரை இருப்போமாக.

*

வீ:

இப்போது விபாஸனாவுக்குப் போய் வந்ததால், எதை எழுதினாலும்/பேசினாலும் இந்த 'நான்' என்கின்ற அகங்காரத்தைப் பற்றியே சிந்தனை போகின்றது. கொஞ்சம் அதை ஒதுக்கிவைத்துவிட்டு எனது இந்த 'நானை'ப் பற்றிப் பேசுகின்றேன்.

நான் எனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது அதற்கு முன்னர் பத்து வருடங்களாகக் கவிதைகள் எழுதி வந்திருந்தேன் (அதன் பின்னர் கவிதை எழுதுவதைக் கைவிட்டேன் என்பது வேறுவிடயம்). அவ்வாறே பத்து வருடங்களாகக் கதைகளை எழுதத் தொடங்கி, பன்னிரண்டு கதைகளை அதற்குப் பிறகு தொகுப்பாக்கினேன். அதற்குப் பிறகு (2013-2023) ஒரு பத்துக் கதைகளைத்தான் புதிதாய் எழுதியிருந்தேன். அதைத்தான் அண்மையில் தொகுப்பாக்கினேன் ('நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'). இடையில் ஒரு நாவலையும், குறுநாவலையும் எழுதியிருந்தேன். மெக்ஸிக்கோ எழுதத் தொடங்கியது 2013, வெளிவந்தது 2019.

பாருங்கள் வருடத்துக்கு ஒரு கதை எழுதுகின்றவனுக்கு, இந்த இருபது வருடங்களில்  ஒரு நாவலும் ஒரு குறுநாவலும் எழுதியவனுக்கு, கவிதைகள் எழுதுவதை முற்றாக நிறுத்தியவனுக்கு இலக்கியத்தில் எங்கேனும் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று ஆசையிருக்கும் என்று  சொன்னால் யாரும் நம்புவார்களா?

இத்தனைக்கும் இதுவரை வந்த சில விருதுகளைக் கூட என் முன்னோடிகளுக்குக் கொடுக்காத விருதுகள் எனக்கு வேண்டாம் என்று (ஜெயமோகனின் ஆதரவுத்தளங்கள் தர விரும்பிய விருதுகள் உட்பட) நிராகரித்தவனுக்கு, இதுவரைகால இலக்கிய வாழ்வில் ஒரு நேர்காணல் கூட கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடிப்பவனுக்கு (அவ்வப்போது சிலர் வந்து கேட்பார்கள்) உண்மையில் இலக்கியத்தின் பொருட்டு என்ன  வேண்டும் என்று எனக்கே கூட கேள்விகள் எழுவதுண்டு.

அதற்கான விடை மிக எளிதானது.

எனக்கு வாசிப்பதும் எழுதுவதும் மிகப்பிடித்தமானது. அதன் மூலம் என்னை நான் மீள மீள உயிர்ப்பித்துக் கொள்கிறேன். ஒருவகை தேய்வழக்கு இருந்தாலும், நான் எனக்காகவே எழுதுகின்றேன். அப்படி நான் எனக்காக எழுதுவதை இன்னும் இரண்டு பேர் வாசித்தால் அது மிக்க மகிழ்ச்சியே.

ஜெயமோகனே இன்று இலக்கிய விமர்சனம் என்பதே இல்லை என்று அண்மையில் தீர்ப்பெழுதிவிட்டார். விமர்சனம் எழுதினாலே தொட்டாற்சிணுங்கி போல மனதை எழுத்தாளர்கள் சுருக்குகின்றார்கள் என்றும் அதில் எழுதியிருந்தார். இன்றுவரை நான் செய்து கொண்டிருக்கின்ற உரையாடல்கள் எதிலும் என் படைப்புகள் குறித்து வந்துவிடக்கூடாது என்று கவனமாகவே இருக்கின்றேன். எவரும் என் நூல்களை வாசிப்பது போல, அதேயளவு சுதந்திரத்துடன் முற்றாக நிராகரிக்கலாம் என்கிற நம்பிக்கையுடையவன். என் படைப்புக்கள் நிராகரிக்கப்பட்ட எந்த இடத்திலும் என் எழுத்துக்காக நான் நியாயம் கேட்டு நின்றதே இல்லை.

அது என் எளிய பின் நவீனத்துவ புரிதலின்படி வந்தது; ஆசிரியர் இறந்துவிட்டார்'. ஆகவே நான் ஒரு கருத்துச் சொல்வதாக இருந்தாலும் அங்கே நான் இன்னொரு சகவாசகனே தவிர, அந்தப் பிரதியை எழுதிய ஆசிரியனே இல்லை.

*

இனியொரு விதி செய்வோம்:

மீண்டும் ஒரு தேய்வழக்கு: 'உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள், உங்கள் மீது பிரபஞ்சம் மலர்களைப் பொழியும்' என்பார்கள். நான் எனக்காகவே எழுதும் எழுத்தை வாசிக்கும் சிலர் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் மெளனமான வாசகர்கள் என்பதை இந்தியாவுக்கோ/இலங்கைக்கோ/ஐரோப்பாவுக்கோ பயணிக்கும்போது கண்டிருக்கின்றேன். ஒரு கடைசிப் பயணி இருக்கும்வரை ஒரு ரெயின் ஜப்பானில் ஓடிக்கொண்டிருந்தது என்று எங்கேயோ வாசித்ததுபோல, ஒரெயொரு வாசகராவது நான் எழுத விரும்பும் காலம்வரை  என்னை, எங்கோ இருந்து வாசிப்பார் என்றே  நம்புகின்றேன்.

மேலும் நான் எழுத்தை எனக்கு மிக அந்தரங்கமாகவும் கொள்கின்றேன். இப்படிஎழுத வந்ததனால், வாழ்வில் ஏதோ ஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றேன். எனக்கு இப்படி காதல்களும், சில தீவிர வாசகர்களும் எழுத்தால்  அருளப்படும்போது நான் எப்படி எழுத்தை வெறுப்பேன். அதனால்தான் இந்த எழுத்து சலிப்பையும், சோகத்தையும் தருகிறது என்று என்னோடு சமகாலத்தில் எழுத வந்த பலர் எழுத்தில் இருந்து இடைநடுவில் ஒதுங்கியபோதும் நான் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் போலும்.

அதுபோலவே எழுத்தாளர்கள் பலரின் சாபத்தை வாங்கினாலும், நான் ஒருபோதும் அதன் நிமித்தம் இந்த எழுத்தைச் சபித்ததும் இல்லை.

உண்மையில் அன்றாடம் தரும் அவதிகளைத் தவிர்த்து நான் அகத்தில் நிறைவாகவே எழுத்தின் நிமித்தம் இருக்கின்றேன். அதை அடைவது எவ்வளவு கடினம் என்பதை என்னைப் போன்ற கொந்தளிப்பான மனமும், போரில் குழந்தைக்காலத்தையும், பதின்மங்களையும் கடந்த ஒருவனுக்கு நன்கு தெரியும். எனவே நானாக கைவிட்டாலின்றி இந்த விவாதங்கள்/விமர்சனங்களினூடாக எழுத்தை விட்டு ஓடிப்போகின்றவனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்.

சரி, இந்த 'நான்' என்கின்ற தன் அகங்கார அலட்டல்கள் இத்தோடு போதும்.

*
ஆண்மை:

கடந்த கட்டுரையிலும், இந்தக் கட்டுரையிலும் என் தரப்பைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கின்றேன். இதைத்தாண்டி பதிலளிக்காதவை ஏதும் இருந்தால் என் எழுத்தின் போதாமை என வாசிப்பவர்கள் எடுத்துக் கொண்டால் போதும்.

உரையாடல் என்பது இரண்டு தரப்புகள் சில பொதுவான புள்ளிகளை அங்கீகரித்து, மாற்றுப்புள்ளிகளை உரையாடுவது. விவாதம் என்பது அனைத்தையும் அடித்துப் புரட்டி தன் தரப்பு மட்டுமே சரியென்று விவாதிப்பது. நான் எப்போதும் உரையாடல்களை விரும்புகின்றேன். ஏனெனில் அதில்தான் இவற்றை வாசிக்கும் மூன்றாம் தரப்புக்குப் பெற்றுக் கொள்ள ஏதேனும் இருக்கும். அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு விலத்திவிடுவேன்.

நகைச்சுவையாக நண்பர்களிடம் அவ்வப்போது இப்படிச் சொல்வதுண்டு: 'ஜெயமோகனை விமர்சித்து எழுதுவதையெல்லாம் அவருடைய அணுக்கச் சீடர்கள் ஜெயமோகனுக்கு உடனேயே அனுப்பி வைக்கின்றார்கள். ஆனால் உண்மையில் ஜெயமோகனின் எழுத்தைப் பற்றி நல்லதாகவோ அல்லது அவரை வேறு பலர் அவரின் தனிப்பட்ட வாழ்வு/அவர் இளமையில் கடந்து வந்த உளவியல் சிக்கல்களை விமர்சித்து எழுதும்போது நான் ஜெயமோகன் என்கின்ற படைப்பாளியின் பக்கம் நிற்கின்றேன் என்று  அவரை ஆதரித்து எழுதிய கட்டுரைகளையோ ஏன் ஜெயமோகனுக்கு ஒருவரும் அனுப்பி வைக்கின்றார்கள் இல்லை' என்று சொல்வதுண்டு.

இப்போது இந்த ஈழத்துச் சிஷ்யர்களே வேறு வேறு புனைபெயரில் ஜெயமோகன் அவரது மனப்பதற்றங்களுடன் என்னைத் திட்டுவதற்கு ஏதுவாக என் எழுத்துக்களை அனுப்புவதுபோல, நானும் இனிவரும் காலங்களில் வெவ்வேறு புனைபெயரில் ஜெயமோகனுக்கு ஆதரவாக  நான் எழுதிய கட்டுரைகளை ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கலாமென்று நினைக்கின்றேன்.

*
வரலாற்றில் வாழ்தல்:

இவ்வாறான விடயத்தையே கடைசியாக நடந்த 'படுபட்சி' உரையாடல்களிலும் செய்திருந்தேன் [8 & 9]. 'படுபட்சி' குறித்து எழுதும்போதும் இப்படி விமர்சனம் வைக்கலாமா என்று சிலநாட்களாக அதை ஒத்திவைத்தபடியே இருந்தேன். எழுத்துக்கென்று ஒரு மனசாட்சி இருக்கின்றதல்லவா. 'இப்படி உனக்குத் தோன்றுவதை நீ எழுதாவிட்டால் அது அறமாகாது' என்று தொடர்ச்சியான உள்குரலின் தொந்தரவாலே அதை எழுதி முடித்திருந்தேன்.

அப்படி 'படுபட்சி' குறித்து எழுதியதற்கும் மூவர் கூட்டணி தொடர்ச்சியாக எனக்கு எதிர்வினை எழுதி முடித்திருந்தார்கள். இவர்கள் மூன்று பேரும் எழுதியபோதும், தலை பேசாது (இந்தத் தலை ஜெயமோகன் அல்ல) வால்கள் மட்டும் ஆடும்போது  எதையும் பேசக்கூடாது என்று அமைதியாகக் கடந்து வந்திருந்தேன்.

அப்படி 'படுபட்சி'யில் நான் இடையீடு செய்ததைக் குறிப்பிட்டு வேறு சிலர் தம் வாசிப்பில் எழுதியபோது மூன்றாம்தரப்பு அதைக் கவனித்திருக்கின்றது, ஏதோ பொருட்படுத்தும்படி எழுதியிருக்கின்றேன் என்று சற்று நிம்மதி பிறகு வந்திருந்தது.

இப்போதும் நான் பொதுவாக 'ஆசான்களின் பாதிப்பு கூடாது, அசல்தன்மையில் கவனம் குவியுங்கள்' என்பதற்கும் 'தொப்பியைப் போட்டுக் கொள்கின்றவர்கள்' சரமாரியாக எழுதிக் குவிக்கின்றார்கள். இம்முறையும் தலையாடாமல் வால்கள் ஆடியபோதும் பொறுமையாகவே இருந்தேன். இறுதியில் 'தலை'யாகிய ஜெயமோகன் ஆட்டகளத்துக்கு வந்த பிறகே இவற்றை எழுதத் தொடங்கினேன்.

அதேவேளை இதை எழுதத் தொடங்குபோது மிகத் தெளிவாக 'தேனீக்கூட்டுக்கு கல் எறிகின்றேன், தொடர்ந்து வந்து சிஷ்யர்கள் கொட்டுவார்கள், ஆசானின் தளத்துக்கு தங்கள் இணைப்புக்களை அனுப்பி தம் புகழ் பாடுவார்கள்' என்ற புரிதலோடே எழுத வந்திருந்தேன். எப்படியும் இந்த வருடம் முடியும்வரை என்னைத் திட்டி இலக்கியத்தின் பேருண்மையை நிரூபிக்க அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்றே நம்புகின்றேன்.

ஜெயமோகனே பல இடங்களில் எழுதியிருப்பார். தன்னுடைய நிறைய வாசகர்கள் தன்னைப் பற்றி எதிர்மறையாக எழுதப்பட்டதைப் பார்த்து, பின் தொடர்ந்து வந்துதான் தன் தீவிர வாசகர்கள் ஆனவர்கள் என்று. தயவுசெய்து அந்தப் பிழையை மட்டும் என் பொருட்டு செய்துவிடாதீர்கள் என்று என்னை நிராகரித்து எழுதும் அவருக்கும் அவரின சிஷ்யர்களுக்குச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

ஆக இந்த உரையாடல்களிலிருந்து முற்றாக இத்தோடு விலகிக் கொள்கின்றேன். இது குறித்து இனி எதையும் எவருடனும் உரையாடப் போவதில்லை.

அகத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன் மனநிறைவுடன் அல்லவா கட்டுரையை முடிக்க வேண்டும். ஜெயமோகனோடு தான் இந்த உரையாடல் என்பதால், அவரின் வார்த்தைகளுடனேயே இனிதாக இதை முடித்துக் கொள்வோம்.

"டி.செ தமிழனை சந்தித்தேன். உற்சாகமான இளைஞராக இருந்தார். அவரிடம் பேசமுடிந்தது, எனக்கு மிக மனநிறைவை அளித்தது. என்னிடம் கடுமையான மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தார். அப்படி அவர் என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் பல கருத்துக்கள் அவரது மனப்பிரமைகள் என்பதே என் எண்ணம். நான் அப்படி எதைப் பற்றியும் மிக உறுதியான கருத்துக் கொண்டவன் அல்ல. பல கோணங்களில் யோசித்துப் பார்ப்பவன். அது யதார்த்தமாகவும், வழக்கமான வரிகளை மீறிச் செல்வதாகவும் இருக்கவேண்டும் என விரும்புபவன் அவ்வளவுதான்

ஆனால் நம் தலைமுறையில் அதிகம் வாசிக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். இலக்கியத்தை தீவிரமான அர்ப்பணிப்புடன் அணுகுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது.  எந்த மாற்றுக்கருத்தையும் தனிப்பட்ட ஐயங்கள் இல்லாமல் விவாதிக்கலாமென்றும், அதிலும் அவருக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகள் தமிழில் முக்கால் நூற்றாண்டு பழக்கமுள்ளவை, நானும் அவரும் மட்டும் பேசித் தீர்த்துவிட முடியாதவை என்றும் சொன்னேன். இதில் எந்தத் தரப்பும் சரியாக இருக்கலாம். எதை எழுதிக் காட்டுகிறோம் என்பதே கடைசியில் முக்கியம். அவரது இளமையின் வேகம் எனக்குப் பிடித்திருந்தது. அது இருபது வருடம் முன்புள்ள நான்.  ஆகவே என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான சந்திப்புதான்." [5]

ஜெயமோகன் குறிப்பிடுவது போல நமது வேறுபாடுகள் முக்கால் நூற்றாண்டு பழக்கமுள்ளவை. பேசியும் எளிதில் தீர்த்துவிட முடியாதவை. என்றாலும் என்ன தொடர்ச்சியான மாற்று/முரணியக்க உரையாடல்களில் இன்று போல எப்போதும் இருப்போம்.

இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

***

(உபதலைப்புகள்: எனது ஆசிரியர்களில் ஒருவராகக் கொள்கின்ற எஸ்.பொவின் நூல்களின் பெயர்கள்)

உசாத்துணைகள்:
[1] பதிவுகளில் நான், ஜெயமோகன், சுமதி, வெசா எழுதியவை: https://www.geotamil.com/.../2021.../553-2012-01-01-00-28-07
[2] பிரேம், ஜெயமோகனின் 'காந்தி' குறித்து எழுதியது: https://www.facebook.com/eluttalar.pirem/posts/3559822610864704
[3] 'அறம்' குறித்து நான் எழுதியது: http://djthamilan.blogspot.com/2011/02/blog-post.html
[4] 'ஓர் ஈழ எழுத்தாளனுக்கு' ஜெயமோகன் எழுதியது https://www.jeyamohan.in/16766/
[5] டொரண்டோதிரைப்பட விழா: ஜெயமோகன் எழுதியது:
https://www.jeyamohan.in/16831/
[6] கோபிகா செய்து என்ன - ஜெயமோகன் எழுதியது:
https://www.jeyamohan.in/41049/
[7] ஜெயமோகனின் கட்டுரை
https://www.jeyamohan.in/237901/
[8} படுபட்சி 1: https://djthamilan.blogspot.com/2025/11/blog-post_27.html
[9] படுபட்சி 2: https://djthamilan.blogspot.com/2025/12/blog-post_14.html


 

கார்காலக் குறிப்புகள் - 162

Friday, October 02, 2026

 

எனது வாசிப்பின் தொடக்க காலங்களில் புதுமைப்பித்தனையும், அழகிரிசாமியையும் வாசித்தபோது ஏனோ புதுமைப்பித்தனை விட அழகிரிசாமியின் கதைகள் அதிகம் என்னை வசீகரித்துக் கொண்டன. இப்போது மீண்டும் இருவரையும் மீள வாசித்தால் அதே எண்ணம் இருக்குமா என்று தெரியாது. ஆனால் அழகிரிசாமியின் மீது இன்னும் வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

அண்மையில் கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் (1951-1970) பெருந்தொகுப்பாக பழ.அதியமானால தொகுக்கப்பட்டது வெளிவந்தது.  இரண்டு தொகுதிகளாக ஆயிரம் பக்கங்கள் அளவில் அது அமைந்திருக்கின்றது. எனக்கு அது இன்னும் கிடைக்காததால் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே இந்த நூலின் வெளியீட்டு விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றியதைக் கேட்டிருக்கின்றேன். இப்போது அதில் தேர்ந்தெடுத்த சில பக்கங்களை (1961-1967) வாசிக்க 'தினவு' இதழின் மூலம் சந்தர்ப்பம் வாய்த்தது.
 
 

 

முழுமையாக இத் தொகுப்பை வாசிக்காமல் கருத்துச் சொல்வது முறையல்ல என்றாலும் அழகிரிசாமி அவரது சமகாலத்து எழுத்தாளர்கள் மீது கறாரான விமர்சனத்தைக் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. ஜானகிராமனின் 'அம்மா வந்தாளை', அழகிரிசாமி 'மிகவும் மெல்லிய குரலில் இறுதியில் பலஹீனமாகக் கதையைச் சொல்லி (ஜானகிராமன்) முடித்திருக்கிறார்' என்று எழுதுகின்றார்.

அழகிரிசாமி, புதுமைப்பித்தனை, சுந்தர ராமசாமியை, ஜெயகாந்தனை, ஜானகிராமனை தமிழ்நாட்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்றும், இப்போது சிறுகதைகளின் பொற்காலம் என்றும் குறிப்பிடுகின்றார். அழகிரிசாமி நன்றாக கதைகள் எழுதினாலும், இந்தப் பட்டியலுக்குள் தயக்கமின்றி வரக்கூடியவர் என்றாலும், நமது சமகாலத்து எழுத்தாளர்கள் போல தனது பெயரைச் சேர்க்கும் 'பேராசை' எதுவும் அழகிரிசாமிக்கு இல்லாதது மகிழ்ச்சியாக இருந்தது.

அதுமட்டுமில்லாது அவர் யாரை இந்தப் பட்டியலில் இருந்து நிராகரிக்கின்றார் என்பதைப் பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கும்: 'மெளனி, ராமாமிருதம், கு.ப.ரா, பிச்சமூர்த்தி ஆகியவர்களைத் தலைசிறந்த எழுத்தாளர்கள் என்று பிரச்சாரம் செய்து ஊரை ஏமாற்றுகிற ஆசாமிகளைக் கடுமையாகத் தாக்கி கட்டுரைகள் எழுதவேண்டும்' என்று ( ஆகஸ்ட் 21, 1966 ஞாயிறு) குறிப்பில் எழுதுகிறார்.

ஆக அன்றும் ஒரு படைப்பாளி ஆதரித்த/நிராகரித்த எழுத்தாளர்கள் என்றொரு பட்டியல் இருந்திருக்கின்றது. ஆனால் அப்படிச் செய்தும் அவர் ஆதரித்த, நிராகரித்த இரண்டு தரப்புமே இன்றும் காலத்தில் இருந்து உதிர்ந்து போகாது இருக்கவும் செய்கின்றனர். ஆகவேதான் நானும் ஒரு பெருங்குடைக்குக் கீழே ஒற்றைப்படையாக எல்லோரையும் எழுத்தின் நிமித்தம் கொண்டு வராதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன். மேலும் ஒரு தரப்பு நிராகரித்தவுடன், மறுதரப்பும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்பதும் இல்லை. இன்றும் மெளனியும்,கு.ப.ராவும் நம் வாசிப்புக்களில் இருந்து மறைந்து போய்விடவும் இல்லை.

இன்னொரு சுவாரசியமான குறிப்பு, பாரதி படங்களைப் பல்வேறு பகுதிகளில் திறந்து வைக்கும் நிகழ்வில் அழகிரிசாமி ஆங்கிலமொழி மூலம் படிக்கும் கல்வியை நிறுத்தி, தனித் தமிழின் மூலம் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். அதேவேளை இன்னொரு இடத்தில் 'இன்று இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நகரில் காலிகள் விஷமம் மிகுதியாகி, தெருவில் நடமாடுவதே பயங்கரமாக இருந்தது' என்று 1965இல் எழுதிய குறிப்பில் சொல்கிறார்.

*

இவையெல்லாவற்றையும் விட ஒரு சாதாரண மனிதராய் குடும்பம் என்ற அமைப்புக்குள் நாளாந்தத்தில் அல்லாடிய ஒருவராக அழகிரிசாமியைப் பார்க்க முடிகிறது.

1966இல் எழுதிய குறிப்பில், 'இன்று இரவு 8 மணி வரையிலும் ஒரு கப் காபிகூடக் குடிக்காமல் பட்டினி கிடந்தேன். என் பட்டினியைப் பற்றியோ, பசித்துடிப்பு பற்றியோ, உயிர்த்துடிப்பு பற்றியோ கவலைப்படாதவர்கள் மத்தியில் இப்படிப் பட்டினி கிடந்து அவதிப்படவும் அவமானப்பட்டுப் புழுங்கவும் வேண்டிய ஒரு கட்டம், என் 43வது வயதில், 4 பிள்ளைகளுக்கு தகப்பனான பிறகும் வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? இதைவிடப் பெரிய எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக வேண்டி இருக்குமோ தெரியவில்லை' என்று சொல்லிவிட்டு நாளை தீபாவளி என்று எழுதுகிறார்.

இன்னொரு இடத்தில் (1967), 'மறுபடியும் வீட்டில் எனக்குச் சுமுகமான சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. மிகவும் கசந்து போயிருக்கிறேன். என் அன்பை எவ்வளவு தூரம் உதாசீனம் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் உதாசீனம் செய்யவும், என்னைப் பற்றி இழிவாக நினைக்கவும் ஒவ்வொருவரும் ஏன் இப்படிக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்' என்று சுயவிரக்கத்தில் கரைகின்ற அழகிரிசாமியையும் நாம் இங்கே காண்கின்றோம்.

புதுமைப்பித்தனின் வறுமை நாம் அறிந்தது. அழகிரிசாமியும் வறுமை துரத்தத்தான்  இலங்கைக்கும், மலேஷியாவுக்கும் வேலை தேடிப் பயணித்தவர் என்று தெரிந்தாலும் அவர் சென்று கொண்டிருந்த வறுமையும் குடும்பச்சுமையும் இவ்வளவு ஆழமானது என்பது இந்தக் குறிப்புகளை வாசிக்கும்வரை எனக்குத் தெரிந்ததில்லை.

ஆனால் இதைத் தாண்டி அழகிரிசாமி இலக்கியத்தில் உண்மையோடு இயங்கியதால்தான் அவரின் கதைகளை மட்டுமில்லை அவரின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். ஏதோ ஒரு தருணத்தில் இலக்கியத்தைக் கைவிட்டு ஒரு சாதாரண 'குடும்பஸ்தவனாக' அழகிரிசாமி ஆகியிருந்தால், அவர் இந்தளவுக்கு அடுத்த தலைமுறைகளால் நினைவுகூரப்பட்டிருப்பாரா என்பதும் கேள்விக்குறியானது.

புதுமைப்பித்தன், அழகிரிசாமி, பிரமிள் போன்றோரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, இன்று ஒரளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாமேதான் தமிழ் இலக்கியத்தை வாழ வைத்துக் கொண்டு இருப்பதான பிரமைகளில் தம்மை மட்டுமில்லை  நம்மையும் மூழ்கடிக்கும் சில இலக்கியவாதிகளைப் பார்க்கும்போது நமக்கு மெல்லிய புன்னகை வருகின்றதல்லவா?

***

 

கார்காலக் குறிப்புகள் - 161

Thursday, October 01, 2026


இன்று காரில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. சும்மாவே தெரிந்த நண்பர்கள் அழைத்தாலே எங்கேயாவது போய் ஒளிந்துகொள்பவன் நான். ஆகவே தெரியாத இலக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்தது என்பதால் அப்படியே விட்டுவிட்டிருந்தேன்.

பிறகுதான் தெரிந்தது அது எனது நாவலான 'மெக்ஸிக்கோ'வை வாசித்துவிட்டு ஒருவர் அழைத்திருக்கின்றார். என் படைப்பை வாசித்துவிட்டு அப்படியே அவர் போயிருக்கலாம். ஆனால் எனது தொலைபேசி இலக்கத்தை என் பதிப்பாளரிடமிருந்து வாங்கி தனக்கான நேரத்தைச் செலவிட்டு அழைத்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

இத்தனைக்கும் மெக்ஸிக்கோ வெளிவந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இன்றைக்கும் அது வாசிக்கப்படுவதும், யாரையோ பாதிக்கச் செய்கின்றது என்பதும் என்னளவில் நிறைவளிப்பது.


மெக்ஸிக்கோ வாசித்தவர் எனக்கு ஒரு voice note அனுப்பியிருந்தார். அதன்பிறகு தொலைபேசியில் அழைத்திருக்கின்றார்.  அலைபேசியை சில நாட்களுக்கு முன் மாற்றியதால் Whatsapp Notificationஐ  turn on செய்யவும் இல்லை. இதனால் நான் இவற்றைக் கவனிக்காதது மட்டுமில்லை, மெக்ஸிக்கோவின் பதிப்பாளரான வேடியப்பன் அனுப்பியிருந்த தகவலையும்  அப்போது பார்த்திருக்கவில்லை.

Uploaded Image

இவ்வாறு மெக்ஸிக்கோ கவனிக்கப்படுவது ஒருபுறமிருக்க அதைச் சிலர் நிராகரிக்கவும் செய்கின்றனர். அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எந்தப் படைப்பும் எல்லோருக்கும் ஏற்ற படைப்பாக ஒருபொழுதும் ஆவதில்லை. ஒரு விமர்சனத்தில் எதையாவது கற்றுக்கொள்வதற்கு இருந்தால் அது மிக நல்லது; காழ்ப்பாக தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டிருந்தால் அதை நிராகரித்தும் செல்லலாம்.  ஒரு வாசகருக்கு படைப்பை ஏற்கும்/நிராகரிக்கும் உரிமை இருப்பதைப் போல, ஒரு படைப்பாளிக்கும் ஒரு விமர்சனத்தை ஏற்கும்/நிராகரிக்கும் சுதந்திரம் இருக்கின்றது.

மேலும், ஒரு படைப்பு எப்படி ஒரு தரப்பால் நிராகரிக்கப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளும் வாசகர்களால் காலத்தின் நீட்சியில் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என்று நம்புகின்றவன் நான். அப்படி இல்லாதுவிட்டால் அவர்களின் காலத்தில் நிராகரிக்கப்பட்ட காஃப்கா வான்கோ போன்ற அரிய படைப்பாளிகள் இன்று நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.

ஆக எந்தப்படைப்பாயினும் அது அசல்தன்மையில் இருந்தால் அதற்கான வாசகப்பரப்பைப் பெற்றுக் கொள்ளும். அதை நாம் காலமான நமது முன்னோடி எழுத்தாளர்களின் இன்றும் காலத்தால் கரையுண்டு போகாத அவர்களின் படைப்புக்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

*
இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் 'பாவனை' எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது 'குருவின்' பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார்.

நான் சொன்னேன், காலமான படைப்பாளிகளின் பாதிப்பு இருந்தால் கூட கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்; சமகாலத்தில் எழுதும் ஒரு படைப்பாளியின் பாதிப்பு இருந்தால் அதை ஏன் ஒருவர் வாசிக்கப் போகின்றார். அசலாக அதை எழுதும் 'குரு' எழுத்தாளர்களே நமக்குப் போதுமே என்றேன்.

 "பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்" என்று இயேசு தன்னைச் சிலுவையில் அறையும்போது சொன்னதைக் கூட இவர்களுக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் இவ்வாறு பாவனை செய்து 'அதே நடையில்' எழுதுவதை தெரிந்தே செய்கின்றவர்களுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தப் 'பித்தம்'  இப்போது தெளியப் போவதில்லை.

ஆனால் அவர்கள் எழுதும்போது ஒன்றைக் கவனத்தில் கொள்ளலாம். உண்மையிலே எழுத்து எனக்கு அந்தரங்கமான மகிழ்வையும் நிறைவையும் இப்படிப் பாவனை/பாதிப்போடு எழுதுகின்றபோது தருகின்றதா, இல்லையா? என்று.

சிலவேளை தங்களுக்குள் ஏதோ ஒரு தருணத்தில் ஆழ்ந்து பார்க்கின்றபோது அவர்களைப் போன்றோர் தமது தனித்துவத்தை எழுத்தில் கண்டடையக்கூடும். அப்படி எழுதுகின்ற எழுத்துக்களே அவர்களை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துமே தவிர, பாவனை எழுத்துக்கள் அல்ல.

*
மெக்ஸிக்கோ வாசித்துவிட்டு பேச விரும்பிய நண்பரின் அழைப்பை நான் எடுத்திருந்தாலும் எனக்குப் பேசுவதற்கு நாவல் குறித்து எதுவும் இருக்கப் போவதில்லை. எழுதியவர் அந்த நாவலைப் பற்றிப் பேச பிரதிக்கு அப்பால் என்ன சுவாரசியமாக இருக்கப் போகின்றது.

கடந்தகாலத்தில் அவ்வாறு மெக்ஸிக்கோ பற்றியோ மற்ற என் படைப்புக்கள் பற்றியோ பேச விரும்பியவர்களுடன், நான் வேறு விடயங்களைப் பேசியே கடந்து வந்திருக்கின்றேன்.

ஒருவர் ஒரு படைப்பை வாசித்துவிட்டு நேரமெடுத்து அது குறித்து பேச விரும்புகின்றார் என்று அறிவதே எனக்குப் போதுமானது. அது எனக்குத் தரும் நிறைவை வேறு எதுவும் தரப்போவதில்லை.

அத்துடன் என் படைப்பை வாசித்து ஒருவர் தனது கருத்தை எழுத்திலோ/பேச்சிலோ பகிரும்போது அவரை வாசகராக அல்ல, அவரை நண்பராகவே நான் ஒவ்வொருமுறையும் நினைத்துக் கொள்வதுண்டு.

இப்போது மெக்ஸிக்கோ வாசித்து என்னோடு பேச விரும்பிய நண்பருக்கு நன்றி. நீங்கள் இந்த அழகிய கோடை நாளை இன்னும் வனப்புடையதாக எனக்கு ஆக்கியிருக்கின்றீர்கள்.

அவ்வாறே பதிப்பாளர் வேடியப்பனுப்புக்கும் மிக்க நன்றி.

***