கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எங்கள் குடும்பச் செல்வங்கள்

Sunday, May 22, 2005

{யாழ் இனிது குழல் இனிதென்பர் மழலைமொழி கேளாதோர்}

P5070010
எழில்

'மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினில் இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்'

P5070017
ஈழன் (தமிழுக்கு) மக்ஸீம்(ரஷ்யனுக்கு)

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'

File0001
மயூரதி

'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்'

P4260005
கீர்த்திகன்

'சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக்கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என் வழிக்கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள் பயனொறில்லை'

கவிதைவரிகள்: பாரதியார்

Friday, May 20, 2005

வசந்தகாலத்தில்
வருகின்ற வாரயிறுதிகளுக்கு
தனித்துவமான வனப்புண்டு

இயற்கையின் விசித்திரங்களுடன்
விரிகின்ற மலர்களும்
அதன்,
வர்ணங்களையும் வாசத்தையும்
தம்முடன் காவிச்செல்கின்றதான
பிரமையைத்தரும் பெண்களும்
புத்துணர்ச்சி ஊட்டுவர்
மனதுக்கு

நண்பர்கள் கூட்டம்
நல்ல உணவு விடுதிகள்
திரைப்படங்கள்
அரையிருட்டுக் கிளப்புக்கள்
சிலவேளைகளில்
இத்தனையாம் மணித்துளியில் விழிக்கவேண்டுமென்ற
அவதியில்லா ஆனந்தச்சயனம்
இப்படித்தான்
பொழுதுகள் கழியும் பலருக்கு

கிளப்பிற்கு வரும்
அறிமுகமில்லா நங்கைகளுடன்
whine-up செய்தாடப் பிரியப்படும்
சிலருக்கு
மானப்பிரச்சினையாகி விடுகின்றது
தாம் அழைத்துச்செல்லும்
சகோதரிகளை தோழிகளை
யாரோ ஒரு அந்நியன்
கூட ஆடவரும்படி அழைக்கும்போது

இழுத்து மூடிய
கதவைத்துளைத்து
குண்டொன்று பாய
காலணியைக் கழற்றிய நிலையிலேயே
சரிந்து வீழ்கின்றாள்
ஒரு பெண்

அவள்
ஆவிபிரியும் கடைசிக்கணங்களை
நிராதரவாய் பார்க்கும் தகப்பன்
சித்தம் குழப்புகின்றான்

அனைத்து அடையாளங்களும் மறைத்து
தலைமறைவு வாழ்க்கையில்
வெற்றுப்பொழுதுகள் கழிக்கும்
*Bullet
நீயும் அறிதல் கூடும்
உனனிடம் இருப்பதுவும்
ஒரு உயிர்
அதைக் காவுகொள்ள காத்துக்கொண்டிருப்பதுவும்
ஒரு புல்லட்தான்
என்று.

*ஒரு சூட்டுச்சம்பவ கொலைவழக்கில் தேடப்படும் ஒருவரின் nick name

Untitled

Wednesday, May 11, 2005

ஒவ்வொருவரின் வருகைகளும்
கண்காணிக்கப்பட்டு
அவர்களின் முன்/பின் கதைகள்
மூச்சுக்கூட விடமுடியா
பெரும்புகையாய் கிளம்பும்
விழாக்கள்
மனதிற்கு உவப்பில்லாதவை

பிரியமானவர்களின் விருந்துகள்
புறக்கணிக்கமுடியாதன.

பிறரைக் காயப்படுத்தித்தான்
நம்பிக்கைகள்
வாழவேண்டுமென்பதில்லை
மனிதர்கள் முக்கியம்
எனக்கு.

நெளிநெளியான
வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை
அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை
இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல்
இருக்க முடிவதில்லை

சூழலின் இறுக்கந்தளர்த்தி
சிறுபுன்னகையுடன்
இவர்களை இரசிக்கத்தொடங்கினால்
விழாக்களின் உயிர்ப்பை
அறிந்துகொள்ளலாம்
சிலவேளைகளில்

இன்றைய விருந்தில்
தேனீக்களாய் பறந்துதிரிந்து
அறுசுவையுணவு பரிமாறிய
வளரிளம்பெண்கள் சிலிர்ப்பூட்டினர்
கோடைகாலத்து சிறுமழைபோல

அவர்களுடன் உரையாடுவதற்கான
காலமும் தனிமையும்
கனிந்தபோதும்
இப்படி
இயல்பாய் சிரித்துப்பழகுபவர்களை
'வேசிகள்' என விளித்து
நக்கலும் (பாலியல்) சேட்டைகளும் செய்யும்
என்னைப்போன்றவர்களின்
நினைவுவர
விலகிப்போகின்றேன்
புன்னகைகளுடன்

முகஞ்சுழிக்காது
அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும்
அவர்களை
ஒரு மேசையில் அமர்த்தி
சில மெழுகுதிரிகளை ஒளிரவிட்டு
ஆறுதலாய்
உணவு பரிமாறும் ஆசை
எழுகிறது எனக்குள்

விழாவின் முடிவில்
எஞ்சியிருந்த
அலங்கரிக்கப்பட்டிருந்த பலூன்களை
ஒன்றாய் இணைத்து
நிலவினொளியில் பறக்கவிடுகையில்
குதூகலத்துடன்
ஆடத்தொடங்குகின்றான்
அண்ணாவின் மகன்

அவன் நடனம் கண்டு
கலகலவெனச் சிரிக்கும்
அந்தப்பெண்களை அவதானிக்கையில்
என் ஆயுட்காலத்தின் எந்தக்கணத்திலும்
பெண்களை
வெறுக்கமுடியாது போலத்தான் தோன்றுகின்றது.

May 07/05
...dedicated to one of my brother's sons...

ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம்

Thursday, May 05, 2005

சென்ற வருடத்துப் பிற்பகுதியில்தான் ராப் பாடல்களை ஆர்வத்துடன் கேட்கத்தொடங்கியிருந்தேன். மென்மையான பாடல்களில் ஆரம்பித்து, கானாப் பாடல்களில் வெறிபிடித்து அலைந்த ஒருவன், ராப் பாடல்களை நோக்கிப் பயணிப்பது பெரிய விடயமல்ல. ராப் பாடல்களைக் கேட்கக்கேட்க அந்தக் கலைஞர்களின் பின்புலம் பற்றி அறியும் ஆவல் தொற்றிக்கொள்ள, ராப் பாடல்களுக்கான சஞ்சிகைகளையும், அவர்களைப் பற்றி வெளிவந்த திரைப்படங்களையும் பார்க்கத்தொடங்கினேன். 

அண்மையில் டூபாக்(Tupac)கின் வாழ்க்கை வரலாற்றை ஒரு ஆவணமாகக் காட்சிப்படுத்தும், Tupac:Resurrection என்ற படத்தையும், அதற்கு முன் Eminem, Eminemவாக நடித்து வெளிவந்த, 8 Mile படத்தையும் பார்த்திருந்தேன்.ராப் பாடல்களிலும் கானாப் பாடல்களிலும் பல ஒற்றுமைகளை அவதானிக்கலாம். இரண்டுமே விளிம்புநிலை மனிதர்களின் ஆளுமையை விரித்துச் சொல்பவை; வரிகளில் கெட்ட வார்த்தைகள் மிகச் சாதாரணமாய் புழங்கும். கானாப் பாடல்களைப் போல, அநேக ராப் பாடல்களும் கணநேரத்தில் தோன்றுபவை. 8 miles படத்தைப் பார்த்தால் மிக அழகாக இதையெல்லாம் காட்சிப்படுத்தியிருப்பார்கள். உடலை முறிக்கும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் ஒருவர் சும்மா ஒரு பாடலைத் தன்பாட்டில் தொடங்க, அப்படியே சங்கிலி இணைப்புக்களாய் மற்றவர்கள் தொடர்ந்தபடி இருப்பார்கள். ராப் பாடல்களுக்கான போட்டிகளில் கொடுக்கப்படும் பீட்ஸ¤ற்கு(beats) உடனேயே பாடல்களைப் புனைந்தபடி, லயத்தையும் தவறவிடாமல் இருக்கவேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.



ராப் பாடல்களின் ஒரு முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருப்பவர் Tupac. தனது இருபத்தைந்து வயதிலேயே வன்முறைக்கு இரையாகிவிட்டாரென்றாலும், அவர் அந்தக்குறைந்த வயதிலேயே தனது சமூகத்திற்காய் சிந்தித்து, அரச அதிகார மையங்களுக்கு எதிராய் கடும் விமர்சனத்தை தனது பாடல்களிலும், நேரடிப்பேச்சிலும் வைத்திருக்கின்றார். ஒரு பேட்டியில் டூபாக் கூறுவார், அமெரிக்கா அரசாங்கம், FBI, பொலிசார் எல்லாமே ஒருவிதமான காங்குகளாலேயே நடத்தப்படுகின்றது. ஆனால் கறுப்பின மக்கள் மட்டுமே காங்குகளாய் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதிலேயே ஆரம்பிக்கின்றது, 

கறுப்பின மக்களுக்கெதிரான நிறவெறி என்று. இன்னும், அமெரிக்கா அரசாங்கம் உண்மையில் வீதியில்திரியும் வன்முறைக்கும்பல்களை, சரியான வேலைத்திட்டங்களுடன் முற்றாக இல்லாமற்செய்துவிடமுடியும், ஆனால் அவையிற்கு அப்படிச் செய்துவிடுவதிலோ, கறுப்பின மக்கள் வன்முறையற்ற வாழ்வு வாழ்வதிலோ அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. அதனால்தான் அரசமைப்புக்கள் எதுவுமே உருப்படியாகச் செய்யாமல் இருக்கின்றன என்று. தனது வாழ்க்கை, Thug Life என்று பிரகடனப்படுத்தி (இப்போது இந்த வார்த்தை ராப் பாடல்களில் சாதாரணமாகிவிட்டாலும்) டூபாக்தான் இதை முன்வைத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். தன்னைப் போன்ற மக்கள் வன்முறையை வாழ்வு முறையாகத் தேர்ந்தெடுக்க திணிக்கப்பட்டு இருக்கின்றார்களே தவிர, விரும்பி இந்த வாழ்க்கை முறையை ஏற்றவர்களில்லை என்று இறுதியாய் சிறையில் இருந்து வந்த சமயத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில் சொல்கின்றார். 

பசியில் இருக்கும் ஒருவன் உணவு வேண்டுமென்றால், முதலில் ஒரு வீட்டின் கதவைத் தட்டலாம். திறக்காவிட்டால், உடைத்து விட்டு கேட்கலாம். அதுவும் சாத்தியமில்லையென்றால் திருடியே கொள்ளலாம் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். டூபாக் எந்த வன்முறை recordம் இல்லாமல் ஒரு கறுப்பர் என்ற அடையாளத்திற்காகவே சும்மா முதலில் சிறையில் அடைக்கப்படுகின்றார் (பதின்ம வயதில் சிறைக்குப்போகும் கொடுமையைப் போல ஒன்றும் இல்லையென்ற்கின்றார். அதுவும் அங்கே கிட்டத்தட்ட 30, 40 வயதில் இருப்பவர்களுடன் பழகும்போது வாழ்க்கையே நிலைகுலைந்து போய்விடும் என்று, அப்படியொருத்தரும் பதின்மவயதில், சிறைக்குச் செல்லாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்கின்றார்). பிறகு அதுவே அவரை வன்முறையாளனாக்கின்றது. முதலில் துவக்கெடுத்துச் சுட்டதும் பொலிசாரை நோக்கித்தான். அப்படியே தொடங்கிய வன்முறைக்காய், அவர் இசைத்தட்டுக்கள் விற்று வந்த பணத்தின் பெரும்பகுதியை (கோர்ட், கேஸ்) என்று செலவழித்துமிருக்கின்றார். பிறகு வன்முறை வழக்குகளுடன், பெண்கள் மீதான் பாலியல் குற்றச்சாட்டுக்களும் தொடர அவர் வாழ்வில் நிம்மதியில்லாமல் அலையத்தொடங்குகின்றார்.

அரசாங்கத்தின் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கத்தொடங்க, அவர்மீது பல பொய்யான வழக்குகள் எல்லாம் அரச தரப்பால் தொடரப்படுகின்றன. எனினும் அதையும் மீறி, அவரது இசைத்தட்டுக்கள் மிகப்பெரும் வரவேற்பை இரசிகர்களின் மீது பெறுகின்றன. அதற்கு இன்னொருகாரணம்,மிகக்கடுமையான வார்த்தைப் பயன்பாடுகளும், பாடல் வரிகளை அரசியல்படுத்தியமையும். இவ்வாறு ஒரு போராட்டம் குணம் டூபாக்கிற்கு எப்படி வருகின்றதென்றால், அவரது தாயிடமிருந்தும், புறக்கணிப்பிலிருந்தும் என்றும் நாம் கண்டுகொள்ளலாம். டூபாக்கின் தாயார் கறுப்பின மக்களின் எழுச்சிக்காய் போராடிய, Black Panthers இயக்கத்தில் தீவிரமாய் இயங்கிய ஒரு பெண்மணியாவார். 

கிட்டத்தட்ட டூபாக்கைக் கருவாக வயிற்றில் தாங்கிய அதிககாலங்களில் டூபாக்கின் தாயார் சிறையில்தான் கழித்திருக்கின்றார். . தனது தாயின் போராட்டக்குணம்தான் தனக்கும் வந்திருக்கின்றது என்று டூபாக் பலவிடங்களில் கூறியிருக்கின்றார். இளவயதில் தான் வளர்ந்த இடத்தில் இருந்த ஏழ்மையைக் காணச்சகிக்காது நீயுயோர்க், நியூஜேர்சி, லொஸ் ஏஞ்சல்ஸ் என்று ஓவ்வொரு இடமாய் ஓடிப்போனபோதும், எங்கேயும் கறுப்பினமக்களின் வாழ்க்கை ஒரேமாதிரி மிகவும் கொடுமையாக இருந்தைப் பார்த்த கோபந்தான் தன்னை இப்படியொரு போராட்டப்பாட்டுக்காரனாக ஆக்கியது என்கின்றார் டூபாக். 25வயது வயதில், மைக் டைசனின் பிரபல்யம் வாய்ந்த ஒரு குத்துச்சண்டைப் போட்டியைப் பார்த்துவருகின்றபொழுதில், தெருவோரத்தில் சுடப்படுகின்றார். முதலில் பலமுறைகள் சுடப்பட்டும், தப்பிய அவர் இந்தமுறையும் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் இருந்த அவரது இரசிகர்களால் டூபாக்கின் இளவயது மரணத்தைத் தாங்கமுடியாமல் போகின்றது. இன்றும், கிட்டத்தட்ட பத்துவருடங்கள் ஆனபின்னும், டூபாக் எந்த இசைத்தட்டு வந்தாலும் சிலவாரங்களாவது (எம்ஜிஆர் படங்கள் போல) billboardல் முதலிடத்தில் இருக்காமற் போவதில்லை (அண்மைக்கால உதாரணம், Eminem தயாரித்த, டுபாக்கின் Loyal to the Game).



இன்றைய பொழுதில் அதிகம் பேசப்படும் ராப் கலைஞர்களில் முக்கியமானவர்கள், எமினமும், 50centம். இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் single mothersல் வளர்க்கப்பட்டவர்கள். இன்னமும் தமது தந்தை யார் என்ற உண்மை தெரியாதவர்கள் (பிரபல்யமான பொழுதில் அதை அறிவதில் தங்களுக்கு எந்த விருப்பமும் இல்லையெனவும் பிரகடனப்படுத்தியவர்கள்) இவர்கள் இருவரினதும் தாயார்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். 50Centன் தாயாரை யாரோ சுட்டுத்தான் கொன்றிருக்கின்றார்கள். தாயாரைக் கொன்றவர் குறித்து அறியும் ஆவல் இருக்கின்றதா என்று வினாவியபோது, தனது தாயார் 15வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தவர். பிறகு cracks விற்றுத்தான் வாழ்க்கையை நடத்தியவர். கட்டாயம் அவர் crackஆல் அல்லது துவக்கால் இறப்பதைத் தவிர வேறொரு முடிவை எப்படி எதிர்பார்க்கமுடியும் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 

எமினமின் பாடல்கள் கிட்டத்தட்ட டூபாக்கின்(அதிக கடுமை இல்லையெனினும்) பாடல்களுக்கு அண்மையாக உள்ளன. அமெரிக்கா அரசாங்கத்தையும், ஈராக் போரையும் நிர்த்தாட்சணமின்றி Mosh என்ற பாடலில் விமர்சிக்கின்றார். அவ்வாறே, மைக்கல் ஜாக்சனின் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தையும் கிண்டலத்துப் பாடுகின்றார். மைக்கல் ஜாக்சனின் பாடல்குறித்து பலரிடமிருந்து, மிகக்கடுமையான விமர்சனம் வந்திருக்கின்றது. எனினும் அவர் தான் கூறியது சரியென்று, எந்தச் சமரசமும் செய்யாது இன்னும் இருப்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றது. அந்தப்பாடலில்கூட (Just Lose it), தனக்குக் கூட ஒரு ஆளுமையாக இருந்த மைக்கல் ஜாக்சனின் இன்றைய காலத்து வீழ்ச்சியைத்தான் எமினெம் கூறுகின்றார்.



50Cent ஒரு முக்கிய பாடகர் என்பதைவிட, அவரது கோமாளித்தனங்கள்தான் முக்கியமானது. அவர் ஆரம்பத்திலேயே தனது கொள்கை என்னவென்பதைச் சொல்லிவிடுகின்றார். Get rich or Die trying என்றுதான் கூறிக்கொண்டு வருகின்றார். இன்றைக்கு மிகப்பெருஞ் செல்வந்தராகிவிட்டார். அவரது G-unitம், ஆடை விற்பனைகளும் வெற்றி நடைபோடுகின்றன. அண்மையில் வெளிவந்த The Massacre இன்னும் billboardல் முதலிடத்தில்தான் நிற்கின்றது. இந்த இசைத்தட்டை வெளிவந்த ஒருவாரத்தில், கிட்டத்தட்ட 1.8 மில்லியன பிரதிகள் விற்கப்பட்டிருக்கின்றன. 50Centன் வாய் சும்மா இருக்காது. ஜோர்ஜ்.புஷ் மாதிரி யாரையாவது எதிரிகளை உருவாக்கிக்கொண்டேயிருப்பார். ஏற்கனவே Fat Joe, Jadakissயோடு beefs செய்தது காணாது என்று இப்போது The Game என்பவரோடு சண்டைபிடிக்கத்தொடங்கிவிட்டார். அதன் எதிரொலிதான், நியுயோர்க்கிலுள்ள ரேடியோ நிலையத்தருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சண்டை. அதில் The Gameன் நண்பர் படுகாயமடைந்திருக்கின்றார்.

இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்தான், 50Cent, The Gameயோடு சேர்ந்து The Documentary என்று ஒரு இசைத்தட்டை வெளியிட்டிருந்தார். நிலைமை இன்னும் கடுமையாகப் போகப்போகின்றது என்று உணர்ந்த, 50Cent பிறகு The Gameயோடு, ஒரு இணக்கத்தைச் சேர்ந்து செய்திருந்தார். இந்தக் கூட்டத்தை, அமெரிக்கா/கனடா ஊடகங்கள், ஒரு சமாதான உடன்படிக்கைக்கு நிகராய் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தன. இன்னும் 50Cent, குண்டுதுளைக்காத இரண்டு ஜீப்புகளை ஒவ்வொன்றும் ஒரு லட்சத்திற்கும் மேலாகச் செலவு செய்து, நியுயோர்கிலும், லொஸ் ஏஞ்சலிலும் வைத்திருக்க்கின்றார். இவ்வளவு செலவு செய்து வைத்திருந்தும், '........ guys don't like to shoot me' என்று அவ்வவ்போது கவலைப்படுகின்றார். அண்மையில் G-unit குழுவிலுள்ள Lloyd Banksன் விருந்திற்கு, supriseயாய் கலந்துகொண்டு, (bullet-proofs அங்கியுடன்) ஒரு பாடலையும், சனங்களுக்கருகில் நின்று 'பயமில்லாமல்' பாடியுமிருக்கின்றார். கிட்டத்தட்ட ஒன்பது முறைகள் சூடுவாங்கியவர், என்பதால் நிரம்ப எண்ணிக்கையான பாதுகாவலர்களுடன் திரிபவர். இத்தனை அபத்தங்கள் இருந்தாலும், 50Cent அருமையாகப் பாடக்கூடியவர் என்பதை மறுக்கமுயாது. காமத்தை அப்படியே மனதில் வழியவிடும், Candy Shop என்ற் ஒரு பாடலிற்காகவே அவரது இறுதி இசைத்தட்டை வாங்கலாம்.



Snopp Dogg கிட்டத்தட்ட டூபாக் போல பிரபல்யமானவர். இவரில் என்னை வியக்க வைப்பது இவருக்கு ஒழுங்காக நடனமாடவோ அல்லது ஊடகங்கள் முன்வைக்கும் 'ஆண்மை'க்குரிய உடலமைப்போ இல்லாமலே இரசிகர்களை எப்படி ஈர்த்துக்கொண்டார் என்பது. இவரது அண்மைய வரவான, Rhythm & Gangsta: The Masterpiece ல் உள்ள பாடல்களில், 'Drop it like it's hot' மிகப்பிரபல்யம் வாய்ந்தது. அந்த இசைத்தட்டில் ஒரு பாடலில், 'leave her, dunt hit her' என்ற வரிகள் வரும் இன்னொரு பாடலும் எனக்குப் பிடித்தமானது. வழமையான Bitches, M****F** போன்ற வார்த்தைகள் இருந்தாலும், ஆகக்குறைந்தது, விலகிப்போகும் பெண்ணிற்கு வன்முறையால் பதில் சொல்லாது, சும்மா விலகிவிடு என்று அவர் சொல்வதை, அவரது இரசிகர்கள் கொஞ்சமாவது கவனிக்கத்தான் செய்வார்கள் என்று நம்புகின்றேன். அவரது நேர்காணலில் ஒரு நிருபர் இப்படிக் கேட்பார், 'Drugs அடிக்கின்றீர்களா?' என்று அவர் 'இல்லையே அதை நிறுத்தி கனகாலம் ஆயிட்டேதே' என்பார். 'அப்படியா? எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன?' என்று நிருபர் ஆச்சரியத்துடன் திரும்பிக்கேட்க, 'ம்...சில வாரங்களாய்த்தான்' என்று அவர் கூறியதிலுள்ள நகைச்சுவையை இரசித்துமிருக்கின்றேன்.



ராப் கலைஞர்கள் தமது திசையை இன்றைய காலகட்டத்தில் மாற்றிவிட்டனரென்ற குற்றச்சாட்டை சில கட்டுரைகளில் வாசித்திருக்கின்றேன். பத்து வருடங்களுக்கு முன்வரை அதிகாரங்களுக்கெதிராய் அறைகூவல் விடுபவையாய் இருந்தவை, இன்று காமத்திலும், தனிநபர்/குழு வன்முறையோடு தேங்கிவிடுகின்றன என்று கூறுகின்றனர். தமது ஆலபங்களை பிரபல்யப்படுத்துவதற்காய், ராப் பாடகர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. Janet Jackson, Super Bowlல் தனது மார்பைக் காட்டியதும், 50Cent, The Gameயோடு சுடுபட்டதும் கூட தமது ஆல்பங்களை விளம்பரப்படுத்தும் உத்திகளே என்கின்றனர். ராப் பாடல்களில் மிக முக்கியமான குறையாக நான் பார்ப்பது அவை பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையும், பாடல்களைக் காட்சிப்படுத்தும்போது பெண்களைக்காட்டும் முறையையும்தான். இப்படியான் சித்தரிப்புக்கள்தான் பெண் ராப் பாடகர்களின் பாடல்களிலும் இருப்பது கண்டு வியந்துமிருக்கின்றேன். 

ஏன் பெண் பாடகிகளால் இந்த ஆணாதிக்கத்தன்மையைப் பிரித்துணர முடிவதில்லை என்று யோசித்திருக்கின்றேன். இல்லாவிட்டால், இப்படியிருப்பதுதான் கலாச்சாரம் என்று ஆக்கிவிட்டார்களோ தெரியவில்லை. பதினமத்தைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு ராப் பாடல்கள் வாழ்வில் பெரிதாய் எதையும் திசை திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் பதினமத்தில் இருப்பவர்களுக்கு இந்தப்பாடல்கள் பெண்கள் பற்றிய பிழையான புரிதல்களைக் கொடுத்துவிடக்கூடும். உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் ராப் பாடல்களை ஆர்வமாகக்கேட்கத்தொடங்கிகாலத்தின்பின் பல விசயங்களை அறிந்திருக்கின்றேன்/பெற்றிருக்கின்றேன் என்றுதான் சொல்லவேண்டும். முக்கியமாய், சரியென்று நான் நினைப்பதை, பிறரின் முகத்திற்கு நேரெதிரே சொல்லும் துணிவு, எனக்கு இன்றைய பொழுதில் ஒரளவுக்காவது இருக்கின்றதென்றால், அது ராப்பாடல்களின் மூலம் வந்தது என்றுதான் கூறுவேன். வாழ்வில், எத்தனையோ புனிதப்பிரகிருதிகள் உடைந்துபோவதைப் பார்க்கும்போது, தாங்களும் பலவீனமான ஆகிருதிகள் என்பதை மறைக்காமல், பாடிக்கொண்டிருக்கும் ராப் பாடகர்களையும் சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.

(குறிப்பு: மேலேயுள்ளவை நான் வாங்கிய சில இசைத்தட்டுக்களின் முகப்புப் படங்கள்)

பத்திரிகையாளர் சிவராம் (தராக்கி) கொழும்பில் கொலை

Thursday, April 28, 2005


இன்னொரு கறுப்பு நாள்


photo

81 மே 31 இரவு

ராணி!
இன்னும் வரவில்லையென்று
அச்சம் சூழ
வாசலைப் பார்த்தபடி
எனக்காக காத்திருப்பாய்.

ஆதரவிற்கு
உன்னருகில் யாருண்டு...?
வீட்டினுள்ளே
சின்னஞ் சிறுசுகள்
மூலைக்கொன்றாய்
விழுந்து படுத்திருக்கும்.

வெறிச்சோடிய வீதியில்
நாய்கள் குரைக்க
விரைந்தோடிய ஒருவனால்
செய்திகள் பரவ
இன்னும் கலங்குவாய்.

தொலைவில்
உறுமும் ஜீப்பின் ஒலியில்
விளக்கை அணைத்து
இருளில் நின்றிப்பாய்.

உயிரைக் கையில் பிடித்தபடி
குண்டாந் தடிக்கும்
துப்பாக்கி வெடிக்கும்
தப்பியோடிய மக்களில் ஒருவனாய்
என்னை நினைத்திருப்பாய்.

நானோ...!
நம்பிக்கையின்
கடைசித் துளியும் வடிந்து
மரணத்தருகே.

சூழவும்
உடைபடும் கடைகளின் ஒலியும்,
வெறிக் கூச்சலும்,
வேற்று மொழியும்
விண்ணுயர்ந்த தீச்சுவாலையும்.

-மு.புஷ்பராஜன்

(1981/அலை-18)
நன்றி: மரணத்துள் வாழ்வோம்: ஈழத்துக் கவிதைகள்
{இந்தக்கவிதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர் வாழ்வில் எந்தமாற்றமும் வரவில்லை என்பதைத்தான் யதார்த்தம் கோரமுகத்துடன் மீண்டும் இன்றையபொழுதிலும் நிரூபிக்கின்றது.}

சில சஞ்சிகைகள்: சிறு குறிப்புக்கள்

Thursday, April 21, 2005

பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005



தமிழர் தகவல் மாத இதழ், ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இச் சிறப்பிதழ் வெளிவர பத்மநாப ஜயர் முன்னின்று உழைத்திருக்கின்றார். பெரும்பாலான சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாயிருந்தபோதும், ஈழத்துச் சிறுகதைகளை ஒரேயிடத்தில் பார்க்கும் அரிய வாய்ப்பு இவ்விதழில் இருக்கின்றது. சென்ற தலைமுறைகாலத்தவர்களாகிய, எஸ்.எஸ்.எம்.ராமையா, மு.தளையசிங்கம், வ.அ.இராசரத்தினம், என்.கே.ரகுநாதன் தொடங்கி இன்றைய தலைமுறைகால எழுத்தாளர்களின் படைப்புக்கள் வரை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சாந்தனின் கிருஷ்ணன் தூது, எஸ்.எல்.எம்.மன்சூரின் சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும், உமா வரதராஜனின் அரசனின் வருகை, எஸ்.எல்.எம்.ஹனிபாவின் மக்கத்து சால்வை, பார்த்திபனின் தீவு மனிதன், ரஞ்சகுமாரின் கோளறு பதிகம், குமார் மூர்த்தியின் மஞ்சள் குருவி போன்றவை எழுதப்பட்ட காலங்களில் பரவலாகப் பேசப்பட்ட ஆக்கங்கள். இங்கே வலைப்பதிவில் எழுதும் பெயரிலியின் திறப்புக்கோர்வையும், பிரதீபா தில்லைநாதனின், இன்றில் பழந்தேவதைகள் தூசிபடிந்த வீணை கொஞ்சம் நினைவுகளும் உள்ளன. பிரதீபா எழுதிவற்றில் எனக்குப் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. காதலையும் அதன் இழப்பையும் மிகவும் இயல்பாய் எனக்கு நெருக்கான மொழியில் சொல்வதால் என்னை அந்தக்கதை பாதித்திருந்தது. அ.ரவி, நிரூபா, பா.ரஞ்சினி, திசேரா போன்றவர்களின் கதைகள், நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றன. ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் தமது படைப்புக்களை தொகுப்பாய் வெளியிடுவதில் மிகுந்த சோம்பலாக இருப்பதில் (அதில் என்ன பெருமையோ எனக்கு இன்னும் புரியவில்லை) இவ்வாறான தொகுப்புக்களைத்தான் விரிந்த வாசிப்புகளுக்காய் எதிர்ப்பார்த்திருக்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் இதை சாத்தியமாக்கிய பத்மநாப ஜயரினதும் ஏனையவர்களினது உழைப்பு நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.

காலம் -இதழ் 23



இருபத்து மூன்றாவது இதழாக மார்ச் மாதத்தில், காலம் வெளிவந்திருக்கின்றது. அ.முத்துலிங்கத்தின் நேர்காணல் இதில் முக்கிய அம்சம். அ.முத்துலிங்கத்தின் கதைகள் போலவே, நேர்காணலின் அவரது பதில்களும் புன்னகையை வரவைக்கின்றது. அ.முத்துலிங்கம் கூறுவது மாதிரி, 'ஆனால் எனக்கு ஒரு துக்கம் உண்டு. கனடா இலங்கை இல்லை: இந்தியா இல்லை: மலேசியா இல்லை: முன்னேறிய நாடுகளில் ஒன்று. Yaan Martel, Michael Ondaatje, Alice Munro போன்ற உலகத்து தலை சிறந்த எழுத்தாளர்கள் வசிக்கும் நாடு. இவர்கள் ஒழுங்கு செய்யும் இலக்கியக் கூட்டங்களுக்கோ, சந்திப்புக்களுக்கோ, நாமும் போய் எமது இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மையநீரோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு கட்டணமும் கட்டாமல் பயன்படுத்துவதற்கு நூலகங்கள் நிறைய இருக்கின்றன. இலக்கிய ஆய்வுகளுக்கு அரச ஆதரவு கொடுக்கிறது. அவற்றின் முழுப்பயனையும் நாங்கள் பெறவில்லை. அடுத்த தலைமுறையாவது இதை நிவர்த்தி செய்யட்டும்' என்று கூறியதை கனடாவில் என்றில்லாது அனைத்து புலம்பெயர் நாடுகளுள்ள இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கவனத்தில் கொள்ளலாம். (Yann Martel பற்றி வாசித்தளவில், அவர் தனது Life of Pi ஜ எழுதும்வரை பணத்திற்கு கஷ்டப்பட்டவர். ஒரு நாவல் எழுதுவதற்காய் மும்பாய் போய், திருப்தி வராமல் கொஞ்சம் எழுதிய நாவலொன்றைக் கிழித்தெறிந்துவிட்டு, இருந்த சொற்பபணத்தில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலாப்போனபோது ஒரு பட்டேலின் கதையைக் கேட்டபின் தான், பிரபலமான Life of Piஜ எழுதியிருந்தார். புக்கர் பரிசு இந்த நாவலிற்காய் அவருக்குக் கிடைத்திருந்தது). சிறுகதைச் சிறப்பிதழ் என்று காலத்தின் முன்னட்டையில் குறிப்பிட்டிருந்தாலும், நான் வாசித்த தெளிவத்தை யோசப், மு.பொன்னப்பலம், க.கலாமோகன், மணிவேலுப்பிள்ளை ஆகியோரின் கதைகள் மிகவும் மோசமானவை. என்.கே. மகாலிங்கம் (சினுவா ஆச்சியின் சிதைவுகளை, இவர் மொழிபெயர்த்து காலச்சுவடும் காலமும் இணைந்து வெளியிட்டதென்று நினைக்கின்றேன்), சார்த்தரின் சுவர் என்ற கதையை மொழிபெயர்த்துள்ளார். சற்று நீளமான கதை. செல்வா கனகநாயகம் எழுதியுள்ள இலக்கியத்திறனாய்வும் இலக்கிய வரலாறும் மிகுந்த dry தன்மையுள்ள கட்டுரை. பல்லைக் கடித்துக்கொண்டு முழுதாய் வாசித்துமுடித்தபோதும், என்னால் எதுவுமே அதிலிருந்து கிரகிக்கமுடியவில்லை. தேவகாந்தன், ஷோபாசக்தியின் 'ம்' குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார். ஷோபாசக்தியின், 'ம்' மற்றும் 'கொரில்லா' குறித்து சற்று விரிவாக இன்னொரு பதிவு எழுத விருப்பமுள்ளது (முக்கியமாய் நண்பர்கள் பலருடன் விவாதித்ததை தொகுத்து எழுதும் எண்ணம் ஒன்று எனக்கு உள்ளது). மற்றபடி குறிப்பிட்டுச்சொல்லும்படியாக 23வது காலம் இதழில் இல்லை. ஒரு புலம்பெயர்ந்த சூழலில் கால ஒழுங்கு இல்லாவிட்டாலும் 23வது இதழை காலம் ஆசிரியர் செல்வம் வெளியிடுவதைப் பாராட்டத்தான் வேண்டும்.

அறிதுயில்- இதழ் 2



கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேலை ஆசிரியர்களாகக் கொண்டு அறிதுயில் என்றொரு சஞ்சிகை வெளிவருகின்றது. இது இரண்டாவது இதழ். முதலாவது இதழை பிரமீள் சிறப்பிதழாக வெங்கட்சாமிநாதன் கனடா வந்தசமயத்தில் வெளியிட்டதாய் கற்சுறா கூறுகின்றார். தெரிதாவுடன் ஓர் உரையாடல் என்ற ர·பேலின் ஆங்கிலம் வழி தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கின்றது. கருமையம் நடத்திய நாடகஙள் குறித்து வரனும், கெளசல்யாவும் இரண்டு விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். பத்மநாப ஜயரிற்கு இயல்விருது வழங்குவது குறித்த தமது அதிருப்தியை கற்சுறாவும், எம்.ஆர்.ஸ்ராலினும் கட்டுரைகளில் முன்வைக்கின்றனர். பத்மநாப ஜயரிற்கு கொடுக்கப்படும் விருதில் எனக்கு எதிர்நிலை இல்லையெனினும், கற்சுறா வினாவுவதுபோல இயல்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் பற்றியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் வெளிப்படையாக அறிவிக்கப்படவேண்டும் என்றுதான் நானும் நினைக்கின்றேன். '' இந்தத் தெரிவுக்குழு தமது ஒவ்வொருத்தரின் பெயரில் விருது கொடுத்தால் நாம் ஒருபோதும் அதுபற்றி அக்கறைப்படப்போவதில்லை.... அதை விடுத்து ரொரண்டோ பல்கலைக்கழகம், கனடாத் தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியம் என்று மொத்தக் குத்தகையில் விருதுக்கு பெயரிட்டு விட்டு இந்த விருதைக் கொடுக்கும்போதுதான் சிக்கல் வருகின்றது' என்று கற்சுறா கூறுவதில் நியாயம் உள்ளதுபோலத்தான் எனக்கும்படுகின்றது. அறிதுயில் தொடர்ந்து வெளிவரவேண்டும். ஆனால் ஒருவரே பல்வேறு பெயர்களில் எழுதி சஞ்சிகையின் பக்கங்களை நிரப்பாமல், ஏனையவருக்கும் பக்கங்களை பகிர்ந்துகொண்டால் நல்லதுபோலத்தோன்றியது. அறிதுயிலை நீங்கள் இணையத்திலும் வாசிக்கலாம்.

தேவகாந்தனின் 'கதாகாலம்'



தேவகாந்தனின் கதாகாலம் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தபொழுதில் வெங்கட் விரிவான ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருப்பதால் சில குறிப்புக்களை மட்டும் கூறிவிட்டு ஓடிவிடுகின்றேன். வரன், மகாபாரதம் பிராமணீயத்திலிருந்து வந்தது என்று கூறினாலும், சிவதாசன் அதை மறுதலித்திருந்தார். அதனால்தான் அவர் யுகாந்தாவின் மகாபாரதத்தை முன்னிலைப்படுத்தினார் என்று நினைக்கின்றேன். எனினும் இதுகுறித்த விரிவான விவாதம் நடைபெறாதது என்னளவில் ஏமாற்றமே. தேவகாந்தனின் கதாவிலாசம் மறுவாசிப்பில்லை என்று வரனும், கற்சுறாவும் மறுதலித்திருந்தனர் (re-reading மட்டுமே, retold அல்ல). நான் இந்த நூலை இன்னும் வாசிக்காதபடியால் விரிவாக எதுவும் கூறமுடியாது எனினும், விமர்சித்தவர்களின் குரல்களைக் கேட்டதை வைத்துப்பார்க்கும்போது மகாபாரதத்தில் விடுபட்ட பகுதிகளைத்தான் தேவகாந்தன் சொல்ல முயன்றிருக்கின்றார் போலத்தோன்றியது. முக்கியமாய் பெண்ணிய வாசிப்பில், இது எந்தவிதத்திலும் அசல் பிரதியைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என்று நிர்மலா கூறியதற்கு, எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்றால் மகாபாரதத்தை மறுவாசிப்பது சாத்தியமில்லை, ஒரு புதுப்பிரதியைத்தான் எழுதவேண்டும் என்று தேவகாந்தன் கூறியிருந்தார்.



யுத்த எதிர்ப்பு அதில் சாராம்சமாய் இருக்கின்றது என்பதற்தாய், கொழுத்த முலைகளும், கங்கை போன்ற புனிதமும் கொண்ட பெண்களைச் சித்தரிக்கும் ஆசிரியனை கேள்விப்படுத்தாமல் இருக்கமுடியாது. ஒரு பெண்ணின் மனோநிலையில், பிற்போக்குத்தனமான ஒரு நாவலாகத்தான் அடையாளங்கொள்வேன் என்று நிர்மலா கூறியசமயத்தில், பின்நவீனத்துவவாதியாக தனது பேச்சின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்திய வரன், படுப்பது போன்ற சில வார்த்தைகளை ஒரு சாதாரண ஆணாதிக்கவாதி நிலையில் நின்று கூறியது வியப்தைத்தான் ஏற்படுத்தியது. அத்தோடு, போரிற்கு ஆண் சென்றால், ஊரில் இருக்கும் பிற ஆண்களுடன் உறவுகொள்வதற்கான சுதந்திரம் பெண்களுக்கு முற்காலத்தில் இருந்ததெனவும் சுட்டிக்காட்டியதுடன், கள்ளஞ்செய்து பிற ஆண்களுடன் பெண் படுப்பதைவிட, இப்படி வெளிப்படையாக உறவுகள் வைக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு முற்காலத்தில் இருந்தது என்று சுட்டிக்காட்டினார். பல ஆண்களுடன் ஒரு பெண உறவு கொள்வதால் பெண்ணின் பிற பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது அப்படியிருக்கும் சுதந்திரந்தான் பெண்கள் வேண்டி நிற்கும் உண்மையான சுதந்திரமா? வரன் இப்படி அபத்தமாய் கூறினார் என்றால், அருகிலிருந்த மகாலிங்கம், ஓம் எனக்குத் தெரிய அநுராதபுரத்திலுள்ள ஒரு கிராமத்திலும் இப்படியான வழக்கம் இன்னும் இருக்கின்றது என்று ஒத்துப்பாடினார். பெண்களுக்கு பல ஆண்களுடன் உறவு இருக்கின்ற சமூகம் exist ஆகின்றதா அல்லது இல்லையா என்பதல்ல கேள்வி. இன்றைய நாம் வாழும் சமூகத்தில் பெண்கள் குறித்து நீங்கள் என்ன கருத்தை தேவகாந்தனின் கதாவிலாசத்தை முன்வைத்து கூறுகின்றீர்கள் என்பதுதான் என்னைப்பொறுத்தவரை முக்கியம். யுத்த எதிர்ப்பு இருந்தாலும், பிற்போக்குத்தனமான பெண்ணடிமைப்பிரதியாய், கதாவிலாசம் இருப்பின் (வாசிக்கும்போது தெரிந்தால்) நிச்சயம் நான் இந்தப்பிரதியை நிராகரிக்கவே செய்வேன். வரன், அசல் மகாபாரதத்தில், சாபக்கேடு அல்லது பாவம் என்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றமாதிரி, தேவகாந்தனின் நாவலில் இரண்டு பக்கங்களுக்கொருமுறை காமம் பற்றிய விவரணைகள் இருப்பதாய் கூறியது முக்கிய விடயம். அதுவும் சிலசமயங்களில் ஒரே வார்த்தைகள் திரும்பத்திரும்ப வருவது வாசிக்கையில் அலுப்பைத்தருவதாகவும், இப்படித் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கும் பணி பதிப்பாளருக்குரியது என்று குறிப்பிட்டது முக்கியமான குறிப்பு . ஆனால் பிரதியை வாசித்து விமர்சித்த அனைவரும் தேவகாந்தனின் எழுத்து நடை மிகச்சிறப்பாகவும் கவிதை நடையிற்கருகிலும் இருக்கின்றது என்று பாராட்டியிருந்தனர்.



இரண்டாம் அமர்வில், ஏன் இப்படியான புத்தகத்தை வெளியிட வேண்டிய அவசியம் காலத்திற்கு வந்தது என்று கேட்கப்பட்டபோது, காலம் செல்வம் இது ஒரு யுத்த எதிர்ப்பிற்கான பிரதி, இன்னவும் துரியோதனன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று கூறினார். முதலாம் அமர்வு முடிந்து விடப்பட்ட இடைவெளியில் வழங்கப்பட்ட வடையை தவறுதலாக கீழே விழுத்தி, சரி விற்பனைக்காய் வைக்கப்பட்ட புத்தகஙகளைப் பார்த்துவிட்டு இன்னொரு வடையை ஆறுதலாக எடுக்கலாம் என்று நினைத்து, பிறகு போய்பார்த்தால், வடைப்பிரியர்கள் வடைகளை அடையாளமில்லாது முடித்துவிட்டிருந்தனர். வடை சாப்பிடும் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேனென்று கவலையுடன் யோசனையிலிருந்த எனக்கு, காலம் செல்வம், துரியோதனன் இன்னும் இருக்கின்றான் என்று கூறியது ஒரு அசரீரீயாகக் கேட்க, 'அப்படியெனில் யார் அந்தத் துரியோதனன்'? என்று நான் செல்வத்தைப் பார்த்துக்கேட்க, செல்வமோ, 'இப்போது கூறமுடியாது' என்று என்னைத் திரும்பி பார்த்துக் கூறினார். பிறகு மகாலிங்கமும், தேவகாந்தனும் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார், ஆனால் அவர் நெருங்கிப்பழகிய ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் கூட தேவகாந்தனின் படைப்புக்கள் குறித்து எதுவும் கூறாது மெளனஞ்சாதிப்பதாய் கூறினார். ஜந்து பாகங்களாய் தேவகாந்தன் எழுதிய பெரிய சைஸ் புத்தகங்களைத் தானும் வாசிக்கவில்லை என்றே மகாலிங்கமும் கூறினார். பெரிய சைஸ் புத்தகங்களை தனது இளமைப்பருவத்திற்கு பிறகு வாசிப்பது என்றால் அலர்ஜி என்று கூறியபோது, அப்படியெனில் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், பின் தொடரும் நிழலின் குரலும் நீங்கள் வாசிக்கவில்லையா என்று நான் கேட்க நினைத்தேன். அந்த சமயம்பார்த்து காலம் செல்வம் கேக்குகளை பரிமாறத் தொடங்கியிருந்தார் (பார்க்க மேலேயுள்ள படம்). கேள்வி கேட்பதைவிட ஆக்ககுறைந்தது வடையைப்போலல்லாது கேக்கையாவது சுவைபார்த்துவிடு என்று எனது ஆறாவது அறிவு எச்சரிக்கை செய்ய வழமைபோல உணவுக்கு பின் எனது கண்கள் அலைபாயத்தொடங்கிவிட்டன (கேக் மிகவும் ருசியாகவும் இருந்தது).அறையினுள் விவாதமாய் சிலவற்றை காரசாரமாய் உரையாடினாலும், வெளியில் நண்பர்களாய் முகங்களைச் சுழிக்காது, இயல்பாய் அனைவரும் பேசியது மனதிற்கு மிகவும் நிறைவைத்தந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்.
.......
தேவகாந்தனின் கையெழுத்திடும் புகைப்படம் மட்டும்: இங்கிருந்து

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு

Tuesday, April 19, 2005

விரைவில் ரொரண்டோவில் வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடத்தலாமென்று ஒரு எண்ணம் மதியும், கறுப்பியும், பெயரிலியின் பதிவில் பின்னூட்டங்கள் இட்டபின் எனக்கும் தோன்றியுள்ளது. அதற்கான சில யோசனைகளை கனடாவில் வசிக்கும் ஒரு 'குடி'மகன் என்ற வகையில் நானும் முன்வைக்கலாம் என்று யோசித்துள்ளேன்.

முதலாவது முக்கிய நிபந்தனையாக சந்திப்பின்போது புகைப்படங்கள் எடுத்தல் தடைசெய்யப்படவேண்டும். புகைப்படங்கள் எடுத்து எமது உண்மையான வயதுகள் தெரியும்பட்சத்தில் இதுவரை நாம் (முக்கியமாய் நான்) எமது தளத்தில் கட்டியெழுப்பிய பிம்பங்கள் அனைத்தும் உடைந்துவிடும் அபாயம் இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கையாய் இருக்கவிரும்புகின்றேன்.

இரண்டாவது, சந்திப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் தமது பதினாறு வயதுப் புகைப்படங்களுடன் வரவும். அந்தப்படங்களை பிரசுரிப்பதன் மூலம் ஏனைய நாடுகளிலுள்ள நண்பர்களை நாம் இன்னும் பதின்மவயதில் இருப்பவர் என்று இலகுவாய் நம்பவைக்கலாம். படங்களின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிப்பதற்காய் சிறந்த கிராபிக் கலைஞரான பெயரிலியின் உதவியையும் நாம் நாடத்தயங்கத்தேவையில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

முக்கியமாய், கலந்துகொள்ளப்போகும் அனைவரும் சுவையான உணவுப்பதார்த்தங்களை தங்களுடன் கொண்டுவரவேண்டும். அதுவும் தாங்களாகவே தயாரித்ததாகவே இருக்கவேண்டும். சந்திப்பின்போது ஏனைய வலைப்பதிவர்கள் இந்த உணவு எப்படித் தயாரிக்கப்பட்டது என்று ஏதேனும் சந்தேகம் எழுப்பினால், அந்த உணவின் ரெசிப்பியைத் தடங்களின்றி, விளக்கமாய்க் கூறவேண்டும். அவ்வாறு கூறாதுபட்சத்தில் கூட்டத்திலிருந்து முற்றுமுழுதாக வெளியேற்றப்படுவீர்கள்.

உணவை உண்பதுவும் இரசிப்பதுவும் நமது முக்கிய விடயமாக இருப்பதால், உங்கள் பதினாறு வயதுப்புகைப்படங்களில் ஏதாவது உணவு தெரியும்படி பார்த்துக்கொள்ளவும். அப்படியெனில்தான் சம்பவங்களுடன் விபரிக்கும்போது நமது புகைப்படங்களையும் ஏனையவர்கள் இலகுவில் நம்புவார்கள்.

எந்தக்காரணம் கொண்டும் இலக்கியமோ அல்லது இலக்கியவாதிகள் பற்றியோ சந்திப்பின்போது பேசக்கூடாது. அவ்வாறு வாய்தவறிப்பேசுபவர்களுக்குத் தண்டனையாக மதியின் பதிவிலுள்ள சிறுவர் பாடலொன்றைப் பாடச்சொல்வதுடன், அந்தப்பாடலுக்கு அபிநயித்துக்காட்டவும் வேண்டப்படுவர்.

இறுதியாய் நமது சந்திப்பை வரலாறு காணாத சந்திப்பாய், ஆக்ககுறைந்தது 24 பேராவது (சென்னைச் சந்திப்பில் 23 பேர் பங்குபற்றியதால்) கலந்துகொள்ளவேண்டும். ஆகவே இப்படியொரு மிகப்பெரும் சந்திப்பை நிகழ்த்தவேண்டியிருப்பதால் கலந்துகொள்ளும் நண்பர்கள் தமது பெயர்களுடன், தமது வலைப்பதிவுகளையும் முன்கூட்டியே பதிவுசெய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள். 23 பேரைத் தாண்டாவிட்டால், நான் வேறு சில பெயர்களில் புதிய வலைப்பதிவுகளை உருவாக்கி இந்தந்தப் பெயரிலுள்ள நண்பரகள் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்று பிறகு பீலா விட்டு பிறரை இலகுவில் நம்பவைக்கலாம். எனினும் காசி, ஒரே ஜபி முகவரியில் இருந்து பல தளங்களை உருவாக்கினால் என்னைக் கையும் மெய்யுமாக பிடித்துவிடக்கூடும் என்ற பயமிருப்பதால், புதிய தளங்கள் உருவாக்கும் இந்த இன்பச்சுமையை ஏனைய நண்பர்கள் என்னோடு தயவு செய்து பகிர்ந்துகொள்ள முன்வரவும். இந்தச் சமயத்தில் பதின்மத்தில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகள், உறவுக்காரர்கள் புகைப்படங்களையும் இயலுமாயின் கொண்டுவரவும். எனெனில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு நபர்களின் புகைப்படத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாலேயே இவ்வாறு கேட்கப்படுகின்றீர்கள்.



இவ்வாறு இதுவரைகாலமும் உலகம் கண்டிராத வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடப்பதையறிந்த ஒன்ராறியோ மாநில முதலமைச்சர், தானும் ஏதேனும் உதவிசெய்யவேண்டும் நேற்றுத் தொலைபேசியில் கூறி, எமது சந்திப்பு நடப்பதற்காய் மாகாணப் பாராளுமன்றத்தை நமக்கு ஒதுக்கித் தருவதாய் மகிழ்ச்சியுடன் கூறினார். வருடத்தில் ஆகக்குறைந்தது மூன்று மாதங்கள் மட்டும் பாராளுமன்றத்திற்கு சமூகளித்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தில் சுற்றுலாச்செய்யும் அவரதும் ஏனைய அமைச்சர்களின் அன்புக்கு வலைப்பதிவர்களின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். எனினும் எமது சந்திப்பு நடப்பதால் கோடைகால பாராளுமன்ற ஒன்றுகூடலை ஒத்திவைக்க வரவேண்டியிருக்குமே என்று ஒரு சாதாரண 'குடி'மகனின் போதையுடன் நான் கேட்டபோது, சார்ஸினதும் கமீலாவினதும் திருமணத்திற்கு சென்று நேரடியாக வாழ்த்த முடியாமற்போய்விட்டது, உங்கள் சந்திப்பைச் சாட்டாக கொண்டு நானும் எனது கட்சி எம்பிக்களும் இங்கிலாந்திற்கு விடுமுறைக்குச் செல்ல இதுவே சரியான தருணம், நீ இது குறித்து அதிகம் கவலைப்படதேவையில்லை என்று சற்று அதட்டித் தெரிவித்துக்கொண்டார்.

கனடா வாழ் வலைப்பதிவர்கள் சந்திக்கின்றோம் என்றாலும் ஒருவருக்கு விதிவிலக்க அளிக்கலாம் என்று நினைக்கின்றேன். அமெரிக்காவிற்குச் சொந்தமான பிரதேசமெனினும் கனடாவிற்கு வடக்கே இருக்கின்ற அலாஸ்காவில் தற்சமயம் வசிக்கும் தங்கமணிக்கு இந்த golden opportunity வழங்கப்படுகின்றது. எனினும் அவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் துருவக்கரடியையும் இந்தச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடும் என்பதால் இது குறித்து இறுதிமுடிவை நண்பர்களாய் சேர்ந்து எடுத்தல் நல்லதெனத்தோன்றுகின்றது. தங்கமணிக்கு அனுமதியளித்தால், உலகமேப்பில் கனடாவிற்கு மேற்குப்பக்கமாய் மிக அருகில் இருக்கும் ஜப்பானில் வசிக்கும் தன்னையும் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று ரோசாவசந்தும் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் அவரை கலந்துகொள்ளாமற்செய்ய என்னிடம் ஒரு வழியுண்டு. அவர் சந்திப்பில் கல்ந்துகொள்ளும்பட்சத்தில், எந்தச்சமயத்திலேனும் இளையராஜாவின் பாடலை முணுமுணுக்கவோ, உரத்துப்பாடவோ கூடாது என்று ஒரு சட்டம்போட்டோம் எனில், 'என்னாலே ஒருக்காலும் அப்படியிருக்கமுடியாது டோய்' என்று அவராகவே ஒதுங்கிக்கொள்வார் என்பது எனது நம்பிக்கை.



இதை எழுதும்சமயத்தில் வெளியே வசந்தகாலம் உருகிக்கொண்டிருப்பது தெரிகின்றது. நண்பர்களுக்கு வெளிப்புறத்திடலில்தான் சந்திக்க அதிக விருப்பம் இருக்கக்கூடும் என்பதுவும் புரிகின்றபடியால், நயாகரா நீர்வீழ்ச்சியிற்கு அருகில் சந்திப்பை நடத்தினால் மிக நல்லாயிருக்கும்போலத்தோன்றுகின்றது. எனினும் அதில் ஒரு சிக்கலுண்டு. இப்படி நாம் ஒரு வரலாறு காணாத சந்திப்பை நிகழ்த்த இருப்பதாலும், அது அமெரிக்கா பார்டருக்கு அருகிலிருப்பதாலும், அமெரிக்காவிலிருந்து எதிரிகள் (முக்கியமாய் கார்த்திக் & பெயரிலி) பொறாமையின் நிமிர்த்தம் இந்தச்சந்திப்பைக் குழப்ப்பக்கூடும் என்ற ஒரு அச்சம் எழுகின்றது. ஆகவே நமது சந்திப்புக்கு பாதுகாப்புத்தர கனடீய இராணுவத்தையும், சும்மா கண்ட கண்ட இடத்தில் எல்லாம் காரை நிறுத்தி, McDonalds burgersஜ freeயாய் சாப்பிட்டு தொந்தி வளர்க்கும் பொலிசினதும் உதவியைக்கேட்பதாய் உத்தேசித்துள்ளேன். இறுதியாய் வந்த மின்னஞ்சலில்படி நமது பிரதம மந்தியும் நமது வரலாற்றுச் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த வைரஸ் மூலம் ஒரு வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் இதுவரை காலமும் எப்போதாவது அமெரிகாவுடன் hockeyயில் விளையாடி வெல்வதை, அமெரிகாவுடன் போரில் ஈடுபட்டு வெற்றிகொள்வதுமாதிரியான பெருமிதத்தில் இருக்கும் எங்களுக்கு, அமெரிக்க வலைப்பதிவர்களுக்கு நேரடியாகச் சவாலிட்டு இப்படியொரு சந்திப்பை நடத்துவது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாய் கூறியுள்ளார். அத்துடன் இதுவே வரலாற்றில் நிகழ்ந்து மிகப்பெரும் வலைப்பதிவர் சந்திப்பு என்று கின்னஸ்காரகளும் ஒத்துக்கொண்டால், நமது வலைப்பதிவு நடந்த நாளை ஒவ்வொரு வருடமும் தேசிய விடுமுறையாக அறிவித்து மக்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்போவதாகவும் கூறியுள்ளார்.

இறுதியில், கனடாவில் ஒரேயொரு பசுவில் mad cow disease கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே தனது இறைச்சி இறக்குமதியைத் தடைசெய்த அமெரிக்காவில், இப்போது பொதுசனத்திற்கு தெரியாமல் mad cow நோயால் பாதிக்கப்ப்ட்ட மாடுகள் பராமரிக்கப்படுவதுவதை பிபிசி documentary செய்துள்ளதைக் கண்டு அமெரிக்கா சனாதிபதி ஜோர்ஜ்.w.புஷ் கதிகலங்கி, வெள்ளை மாளிகையைக் கண்ணீர்மாளிகையாக்கிக் கொண்டிருக்கின்றார் என்ற ஒரு செய்தியைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன். எனவே அவரது சோகக்கதைகளை எழுதுவதற்காய் ஒரு வலைப்பதிவு அவருக்காய் உருவாக்கவேண்டுமெனவும், ஈராக்கில் எண்ணெய்க்குதங்கள் தீப்பற்றியெறிவதால், அவரது Texas எண்ணெய்க்கம்பனிகள் பணப்பற்றாக்குறையால் நிலைகுலைந்து இருப்பதால் ஓசாம பின்லாடன் கொஞ்சம் இரக்கங்காட்டி ஜோர்ஜ் புஷ்ஷிற்கு பில்லியனில் பணம் கடன் கொடுக்கவேண்டும் என்ற அறிக்கையை நாங்கள் எழுதி ஒசாமாவிற்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் நண்பர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

வரலாறு காணாத சந்திப்பைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பின்னூட்டமாயோ அல்லது தனிப்பதிவாயோ எழுதி ஆதரவு தரவேண்டும் என்று கண்ணீர்மல்க உங்களிடம் இறைஞ்சிக்கேட்கின்றேன்.

(புகைப்படங்கள்)

'Life was too small to contain her'

Tuesday, April 12, 2005

Sylvia: திரைப்படம் பற்றிய ஒரு  பார்வை

சில்வியா, இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கின்றது. அவரது கவிதைகள் பத்திரிக்கைகளில் நிராகரிக்கப்படுகின்ற துயரத்துடன், Ted Hughesன் கவிதையால் ஈர்க்கப்பட்டு, இருவரும் காதலிக்கத்தொடங்குகின்றனர். பிறகு நானகு மாதங்களில் இருவரும் திருமணமும் செய்துகொள்கின்றனர். மாலைப்பொழுதுகளில் நண்பர்களுடன் சிறு அறைகளில் கவிதை வாசிப்புக்கள் நிகழ்கின்றன. Faster, Faster என்று ஆண் கவிஞர்கள் கிண்டலடித்தாலும், ஆண்களுக்கு நிகராய் கவிதைகளை வேகத்துடன் சில்வியா வாசிக்கின்றார். கவிதைகளை மனிதர்களின் முன்னால் மட்டுமல்லாது, காதலின் களிப்பில் மாடுகளுக்கு முன்னாலும் Miltonனா அல்லது Chaucerரா பிடிக்கும் என்று ரெட்டிடம் (டெட்?) கேட்டு, கவிதைகள் சொல்கையில், சில்வியாவின் இதமான மனது தெரிகின்றது.


Tedற்கு நியுயோர்க்கில் கவிதைக்கான பரிசு கிடைக்க, சில்வியா ரெட்டோடு அமெரிக்காவிற்கு மீண்டும் குடிபெயர்கின்றார். அங்கே சில்வியாவின் தாயால், மூன்றுவருடங்களுக்கு முன் சில்வியா தூக்கமாத்திரை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார் என்ற செய்தி ரெட்டிற்கு சொல்லப்படுகின்றது. இப்படி அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் தன் மகளை கவனமாகப் பார்த்துக்கொள் என்று ஒர் தாயின் நிலையிலிருந்து சில்வியாவின் தாயார் கேட்டுக்கொள்கின்றார். பிறகு அவர்கள் கடற்கரையுடன் இருக்கும் பண்ணைக்கு விடுமுறைக்குச் செய்கின்றனர். ரெட் வற்புறுத்திக்கேட்டும், சூழல் இனிமையாக இருந்தும், சில்வியாவால் கவிதைகள் எழுதமுடியவில்லை. சமைப்பதிலும், பான் கேக்குகளை விதவிதமாய்ச் செய்வதையும் ஒரு படைப்பாய் செய்து சந்தோசம் காண்கின்றார். இப்படி கவிதைகள் எழுதாமல், சில்வியா இருப்பதைப் பார்க்க ரெட்டிற்கு சினமாய் இருப்பினும், அதை அவ்வளவாக வெளிக்காட்டாமல் இருக்கின்றார். பிறகு அமெரிக்காச் சூழல் தமது படைப்புக்களுக்கான் உந்துசக்தியைத்தராது என்று ரெட் சில்வியாவை இங்கிலாந்திற்கு அழைத்துச்செல்கின்றார். அங்கே தனது முதலாவது குழந்தையைப் பெறுகின்றார் சில்வியா. ரெட் கவிதைகள் எழுதிக் குவித்து பிரபலமடைய, சில்வியா ஒரு குடும்பப்பெண்ணுக்குரிய அனைத்தையும் செய்யவேண்டிய நிலையில் கவிதைகள் எழுதவேண்டியிருப்பதையே நிறுத்த வேண்டியிருக்கின்றது. அது அவருக்கு இன்னும் மனவழுத்த்தைத் தருகின்றது. ரெட்டிற்கு வேறு பெண்களுடன் தொடர்புகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகமும் வருகின்றது சில்வியாவிற்கு. ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுப்பாய் வெளியிட்டபோதும், அது உரிய கவனத்தை விமர்சகர்களிடம் பெறாது வீணே போகின்றது. விமர்சகர்களும், சில்வியாவை ரெட் என்ற கவிஞனின் மனைவியாய் பார்க்கப்படுவது, சில்வியாவிற்கு இன்னும் அசெளகரியத்தைத் தருகின்றது. அதை உடைப்பதற்காய், தன்னை Mrs.Hughes என்று அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்து, சில்வியா பிளாத் என்ற அறிமுகம் செய்து தனது எதிர்ப்பை இயன்றளவு காட்டுகின்றார். பணப்பற்றாக்குறை, குழந்தைகள் வளர்ப்பு என்ற பல சிக்கல்களினால், தமது வீட்டை விற்றுவிட்டு இங்கிலாந்தின் கிராமப்புறமான வீட்டிற்கு குழந்தைகளுடன் குடிபெயர்கின்றனர்.


அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும்போது, சில்வியாவிற்கு, ரெட் இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கும் தொடர்பு வெட்டவெளிச்சமாய்த் தெரிகின்றது. The truth talks to me என்று மிக நிதானமாய்ச் சொல்லி, Get out என்று ரெட்டைப் பார்த்துச் சொல்கின்றார். இவ்வாறு கூறுகின்றபோதும், ரெட்டின் பிரிவு சில்வியாவை மிகவும் வருத்துகின்றது. தனது 23வயதில் முதன்முதலில் ரெட்டை சந்தித்து காதல் வயப்பட்டு திருமணஞ்செய்ததிலிருந்து மிக அபரிதமான அன்பை சில்வியா ரெட் மீது வைத்திருக்கின்றார். தன்னைப்போலவே உறவில் நேர்மையாக ரெட் இருப்பார் என்ற சில்வியாவின் நம்பிக்கை இடிந்துபோக, குழந்தைகளை காரில் இருத்திவிட்டு ஆற்றில் தற்கொலை செய்ய நினைக்கின்றார். ஆனால் குழந்தைகளைப் பிரிந்து போக இளகிய மனங்கொண்ட சில்வியாவால் முடியாதுபோகவே, பிறகு குழந்தைகளுடன், இன்னொரு இடத்திற்குச் சென்று வாழத்தொடங்குகின்றார் (Yates வாழ்ந்த வீட்டில்).

மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு சில்வியா திரும்புகின்றார். ரெட்டைப் பிரிந்த முதல் மாதத்தில் மிக உக்கிரமான, அற்புதமான பல கவிதைகளை எழுதுகின்றார். 'கடவுள் என் மூலமாக வலிகளை கவிதைகளில் பேசுகின்றார்' என்று, கவிதைகள் மிகவும் கடுமையாக இருக்கின்றது என்ற ஒரு விமர்சகரிற்குப் பதிலாக சில்வியா சொல்கின்றார். ரெட்டினதும், சில்வியாவினதும் நண்பர் ஒருவர் ரெட்டைப் பிரிந்த வாழ்க்கை இப்போது எப்படி இருக்கின்றது என்கின்றபோது, தான் தனது குழந்தைகளுடன், சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, தனக்குப் பிடித்தமான கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பது தனக்கு இன்றைய பொழுதில் மிகப்பிடித்தமாய் இருக்கின்றது என்கின்றார். இனி தான் ஒரு புதிய காதலனைத் தேடவேண்டும் என்று தனது வாழ்க்கை துளிர்ப்பதை சற்று நகைச்சுவையுடன் கூறுகின்றார். இப்படிக் கூறுகின்றபோதும், ரெட்டின் மீதான் அளவிலாக் காதலைத் தொலைக்க முடியாது சில்வியா தடுமாறுகின்றார். ஒரு கிறிஸ்மஸ் நாளில் ரெட் குழந்தைகளைப் பார்க்க வருகின்றார். 'சில்வியா உன்னையும் தான் பார்க்க வந்தேன், உட்கார்ந்து ஆறுதலாகப் பேசமுடியுமா?' என்று ரெட் கேட்கின்றார். முதலும், கடைசியுமாய் சில்வியா, Are you still fucking her? என்று கேட்கின்றார். விடையை மெளனமாகத் தந்தபடி ரெட் சில்வியாவின் வீட்டை விட்டு அகல்கின்றார். பனிக்காலங்களில் மிகவும் மனவழுத்தம் கூடி சில்வியா I'm edge of the world என்று கூறியபடி தவித்துக்கொண்டு பொழுதுகளைக் கழிக்கின்றார். இறுதியில் நண்பன் மூலம், ரெட்டை ஒரு இரவு விருந்திற்கு சில்வியா அழைக்கின்றார். அழகாய்க் கழிகின்றது அந்த இரவு. உடலுறவு கொண்டபின், ரெட்டைத் தான் மிகவும் missed பண்ணியதாகவும், இனி எமது வாழ்வில் வசந்தம் துளிர்க்கப்போகின்றதும் என்று சில்வியா கூறுகின்றார். 'அந்தப்பெண்ணை விட என்னைத்தானே நீ மிகவும் நேசிக்கின்றாய்' என்று ஒரு பேதைப்பெண்ணின் இயல்புடன் ரெட்டுடன் வினாவுகின்றார்.

இனி நாங்கள் மீண்டும் Devon நகரிற்குச் சென்று, அழகான வசந்தத்தையும் இரசிக்கவும், தனக்கு இவ்வளவு காலமாய் இடைஞ்சல் செய்யும் பனிக்காலத்தையும் உன் துணையுடன் கடக்கவும் முடியுமென்றும் கூறுகின்றார். குழந்தைகளுடனும், நமது படைப்புத்தொழிலுடனும், ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் கழிக்கப்போகும் காலத்தை கனவுடன் விபரிக்கின்றார் சில்வியா. இறுதியாய், 'நீ அந்தப்பெண்ணை முற்றுமுழுதாய் விட்டு விட்டு என்னோடும் குழந்தைகளோடும் வருவாய்தானே?' என்று அன்பு ததுப்ப ரெட்டிடம் கேட்கின்றார். 'இல்லை' என்கின்றார் ரெட்டி. 'ஏன்?' என்கின்றபோது, அந்தப்பெண் கருத்தரித்துவிட்டார் என்று ரெட் கூற சில்வியாவின் கனவுகள் நொருங்குகின்றன. (இந்தக்காட்சியில் மிக நுட்பமாக ஆண்களின் சூட்சம விளையாட்டு சித்தரிக்கப்பட்டிருந்தது போல எனக்குத் தெரிந்தது. ஏற்கனவே ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கி வந்த, ரெட் அதை முதலில் கூறமுடியாது சில்வியாவுடன் உடலுறவு கொண்டு, தமது வாழ்வு இயல்புக்கு வந்தமாதிரியான பாவனையுடன் நடந்துகொள்கின்றார். அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்து தன்னோடு மட்டும் இரு என்று மற்றப்பெண் கேட்டாலும், சில்வியா மூன்றாவது முறையாக கரு தரித்திருக்கின்றார் என்று ஒரு சாட்டுச்சொல்லிக்கொண்டபடி இருபெண்களோடும் உறவைத் தொடரலாம் என்ற ஆணின் நுட்பமான திறன் வெளிப்படுவதாய்த் தெரிந்தது.)

ஏற்கனவே மனவழுத்தததால் அவ்வவ்போது நொடிந்துபோகும் சில்வியா இறுதியாய், தனது கவிதையொன்றில் கூறியதுமாதிரி,
'Dying
Is an art, like everything else,
I do it exceptionally well.

I do it so it feels like hell.
I do it so it feels real.
I guess you could say I've a call.'

அவனிற்குள் தலையை வைத்து, காபன்மொனக்சைட்டைச் சுவாசித்து தனது முடிவை மிகக் கச்சிதமாய் எடுக்கின்றார்.

Gwyneth Paltrow, சில்வியா பிளாத்தாய் மிக இயல்பாய் நடிக்கின்றார். Daniel Craig, Tedயாய் நடித்திருப்பினும், சில்வியாவின் பாத்திரத்தின் முன் ஈடுகொடுக்கமுடியாமல் சிலவேளைகளில் தடுமாறுகின்றார். இந்தப்படத்தை ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டும் முறை பார்த்தேன். அதியற்புதமாய் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஏதோ அதிக நெருக்கத்தை சில்வியாவின் வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. வாழ்வில் நேர்மையாக இருந்தால் கட்டாயம் நேர்மையாய் எல்லா விடயங்களும் நமக்கும் நடக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த என் நம்பிக்கையை இன்னொரு முறை சில்வியாவின் வாழ்க்கை நிராகரித்திருந்தது. ஏன் சில்வியா ரெட் தன்னைப் புறக்கணித்தவுடன் வேறொரு துணையைத்தேடாமல், ஒரு பெரும் பிணியைப்போல ரெட்டின் நினைவுகளுடனும், அவரின் அவ்வப்போதைய வரவுகளிலும் ஒட்டிக்கொண்டிருந்தார் என்பதற்கான காரணம் சில்வியாவைத் தவிர எவருக்கும் புரியப்போவதில்லை. துணையின் மீது அளவற்ற காதல் கொண்டு குழந்தையாய் உருகிய சில்வியாவில் எனக்குத் தெரிந்த பல கீழைத்தேய பெண்களின் வாழ்வினைக் கண்டேன். எந்தத்தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், பெண்களுக்கு என்று பொதுவான பல விசயங்கள் இருக்கின்றன என்பதற்கு சில்வியாவின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டும் கூட. இந்தச் சமயத்தில் மிக இளவயதில் தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் நினைவு வருவதையும் தவிர்க்கமுடியவில்லை.
....
சில்வியாவின் கவிதையொன்றின் இணைப்பை (Lady Lazarus ) தருகின்றேன். தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் மிகவும் சந்தோசமாயிருக்கும். (எனக்குத் தெரிந்த மொழியில் பெயர்த்து, எனக்குப் பிடித்தமான சில்வியாவைச் சிதைக்க விருப்பமில்லை).

இசைக்கலைஞர்கள் + 'Dash' = சாம்பார் பதிவு

Friday, April 08, 2005

இன்று பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சுவாரசியமான செய்தி கண்ணில்பட்டது. கனடாவில் சிறந்த இசைக்கலைஞர்களுக்காகக் கொடுக்கப்படும் அதியுயர்விருதான Junoவைப் (கிட்டத்தட்ட Grammy போல) பெற்ற ஒரு கலைஞன், subway பாட்டுக்காரனாயிருக்கின்றார் என்பது. ஒரு விருதல்ல, இரண்டு விருதுகளைப்பெற்றபின்னும், ரொரண்டாவில் அதிக சனப்புழக்கமுள்ள Bloor சப்வேயில் பாடிக்கொண்டிருக்கிறார் என்று பத்திரிக்கையில் புகைப்படத்துடன் வந்திருந்தது.. கென்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆபிரிக்கா இசையுடன், Jazz/Bluesயை இணைத்து புது இசைக்கோர்வைகளையெல்லாம் முயற்சித்திருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது. இசைப்பதற்கு மிகக்குறைந்த இடங்கள் உள்ள இந்த நகரில், அதிக திறமையுள்ள இசைக்கலைஞர்கள் இருப்பதுதான் தன்னை ஒரு புகையிரதப்பாடகனாக்கியது என்று அவர் கூறியதுபோதும், இப்படி நேரடியாக மக்களுக்காய் வாசிப்பது கூட தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எவ்வித சுயபச்சாபமும் இன்றி பேசியது இன்னும் பிடித்திருந்தது.
....
ஒவ்வொரு முறையும் வேலை முடிந்து சப்வேயிற்குள் செல்லும்போது, படிக்கட்டுகளில் அருகில் இசையை நிறைத்தபடி இருக்கும் கலைஞர்கள் மீதும், மூலைகளில் முடங்கியபடி do you have any change என்று கேட்பதைத் தவிர வேறெந்தத் தொந்தரவும் தராத வீடற்ற மனிதர்கள் ((homeless people) மீதும் பரிவாய் பார்வைகளை வீசியபடித்தான் போய்க்கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கொஞ்சம் சில்லறைகள் சேர்த்து, பணம் அறவிடாது இசையை, மிருதுவாய் காதுகளில் பரப்பியபடி இருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைப்பேன். சிலவேளைகளில் அவ்வாறு செய்யமுடிகின்றபோதும், அநேகவேளைகளில் அப்படிப் போட்டால், மற்ற மனிதர்கள் ஒருமாதிரியாகப் பார்ப்பார்களோ என்ற பொதுப்புத்தியில் பின்வாங்கியிருக்கின்றேன். வேலை முடிந்து வரும் அலுப்பை, இவர்களின் இசையில், ஓரத்தில் நின்று ஆறுதலாகக் கேட்டபடி கரைக்கவேண்டும் என்பதுதான் என் நெடுநாளைய விருப்பம். ஆனால், இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பின்னால், நானும் ஓடாவிட்டால் என்னை வேறுவிதமாய் பார்த்துவிடுகிறார்கள் என்ற பயத்தில், சனத்திரள்ப் பெருஜோதியில் இலகுவில் ஜக்கியமாகிவிடுவேன். இன்றும் வேலை முடிந்து வரும்போது, தன்னிலை மறந்தநிலையில் ஒரு பெண் மிக அற்புதமாய் கிற்றார் வாசித்தபடியிருந்தார். இசையோடு அந்தப்பெண்ணையும் இரசிக்கும் வாய்ப்பு கைக்கெட்டியதூரத்திலிருந்தாலும், நான் நவீனமனிதனுக்குரிய அடையாளத்துடன் அந்த இடத்தைவிட்டு காற்றைவிடவும் விரைவாக அகன்றிருந்தேன்.
.....
எப்போதும் கைவிட்டுப்போன/புறக்கணிக்கப்பட்ட விசயங்களின் நனவிடைதோய்தல்களில் இருக்கும் என்னால், ஏன் மனதிற்குப் பிடித்த, இதமான அனுபவங்கள் தரும் இந்தமாதிரியான விடயங்களை இயல்பாய் செய்யமுடிவதில்லை என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஆறிப்போன புண்ணைத் தோண்டிப்பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறதென்று ஒரு கதைக்கு வைத்துக்கொண்டாலும், வாழ்க்கையில் நிகழ்ந்த/நிகழும் அற்புதமான கணங்களையேன் ஒரு வண்ணத்துப்பூச்சியின் வர்ணங்களைப்போல இலகுவில் மனதில் தேக்கிவைக்கமுடியாதிருக்கின்றதென்றது என்ற உளவியலின் புதிர் இன்னும் புரியவில்லை.
....
நல்ல இசையையும், அதையிசைக்கும் கலைஞியையும் தவறவிட்டுவிட்டேனென்று, சப்வேயிற்குள், 50cent, Oliviaவுடன் பாடும், Candy Shopஐ இரசித்துக்கொண்டு வந்தபோது, தனியார் பாடசாலைகளில் படிக்கும் சில மாணவிகளைக் கண்டேன். அவர்களை குட்டைப்பாவாடையுடன் பார்த்தபோது எனக்குள் பலவருடங்களாய் இருக்கும் கேள்வியை, மனத்தின் அலை ஒரு துரும்பைப்போல எடுத்தெறிய, ஞாபகத்திற்கு மீண்டும் வந்தது. குட்டைப்பாவாடை போடுவது அவரவர் சுதந்திரம் என்றபோதும், இறுக்கமான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் எங்களிடம்தான் இருக்கின்றது என்று வியாபார உத்தியிற்கு நிகராய் உரத்துப்பேசும் கத்தோலிக்க பாடசாலைகள் எப்படி இந்தமாதிரியான குட்டைப்பாவாடைகளை தமது யூனிபோர்மாய் அங்கீகரிக்கின்றன என்ற சூட்சமம் இன்னும் விளங்கவில்லை. நான் பார்த்தவரையில் பல பெண்கள் அதை அணிந்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதைத்தான் அவதானித்திருக்கின்றேன். பஸ்சில், சப்வேயில் ஆசனங்கள் இருந்தாலும் அந்தக்குட்டைப்பாவாடைகளுடன் அமர்வதன் அசெளகரியம் கருதி அதிகமான பொழுதில் நின்றபடியேதான் பயணிக்கின்றார்கள். எனது அண்ணாவின் மகனும் கத்தோலிக்கப்பாடசாலைக்குத்தான் போகின்றான். அண்ணிதான், வீட்டில் அவனது குழப்படியைக் கண்டுவிட்டு இவனை கத்தோலிக்கப்பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் திருந்தமாட்டான் என்று அனுப்பியவர். எனக்கு அவன் public schoolற்குப் போவதே விருப்பம். அத்தோடு, என்ன குழப்படி என்றாலும் அவன் அந்தந்தக்காலத்தில் அவற்றைச்செய்து திருந்திக்கொண்டு வாழ்வில் நகர்வது நல்லதே தவிர, இப்படி இருக்கக்கூடாது ஒரு ஒழுக்க அட்டவணையை முன்கூட்டியே தயாரிப்பவர்களிடம் போனால் அவன் சடுதியாக தவறான திசைக்குப்போகும் சாத்தியம் அதிகமுள்ளதெனத்தான் அண்ணா குடும்பத்தினரிடம் நான் அடிக்கடி கூறுவேன்.

எனினும் அண்ணாவின் மகனின் அசாதாரண வளர்ச்சியைப்பார்க்கும்போது (இதைப்பற்றிப் பிறகு கூறுகின்றேன்) இப்படிச் சொல்வது கூடப்பயமாயிருக்கிறது. 'சிச்சியா நீங்கள் private பாடசாலைக்குப் போய் பெண்களை குட்டைப்பாவாடையுடன் இரசிக்கவில்லையென்ற பொறாமையில்தான், கத்தோலிக்கப் பாடசாலைக்கு அனுப்பிய என்னையும் இடையில் நிறுத்தி, public பாடசாலைக்கு போகச்சொன்னீர்களா என்று தனது பதினைந்தாவது வயதில் என்னைப்பார்த்து அவன் கேட்கவும்கூடும்.
.....
அவனுக்கு இயல்பாய் இருக்கும் குறும்புத்தனம் போலவே புத்திசாலித்தனமும் அதிகம். என்னைச் சீண்டிப்பார்க்காவிட்டால் நானும் அவனது புத்திசாலித்தனத்தைப் பிறரைப்போல் மனதாரப் பாராட்டியிருப்பேன். ஆனால் அவன் தனது புத்திசாலித்தனத்தை எல்லாம் என்னிடம் முதலில் பரீட்சித்துப்பார்ப்பதில் தான், உள்ளது பிரச்சினை. சில வாரங்களுக்கு முன், எங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா அவனைச் சாமி கும்பிடச்சொன்னார். ஜந்து வயது இருக்கும் அவன், வீட்டிலுள்ள ஒவ்வொருத்தரின் பெயரையும் சொல்லி அவர்கள் நல்லாயிருக்கவேண்டும் என்று வழிபட்டான். இவன் சிச்சியா என்று விளிக்க, நானும், எனக்காய் இவன் ஏதோ விசேடமாய் கடவுளிடம் கேட்கப்போகின்றான் என்று காதைக் கூர்மையாக்கிக்கொண்டேன். ஆனால் பாருங்கள் அவன் என்ன கடவுளிடம் கேட்டான் என்று: எந்தநேரம் பார்த்தாலும் சிச்சியா computerற்கு முன்னாலே இருக்கின்றார். அப்படி இருக்காமல் நல்ல புத்தியை அவருக்கு கொடுவென்று என்று வழிபடத்தொடங்கிவிட்டான். அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் அம்மாவிற்கும் நல்ல சந்தோசம். தான் மனதிற்குள் நினைப்பதையே தன் பேரனும் சொல்லிவிட்டான் என்று அம்மாவும் உவகைகொண்டதில் பிழையில்லைத்தானே. கடவுளிடம் முறையிட்டதுடன் நிற்பாட்டினால் கூடப் பரவாயில்லை. பிறகு இரண்டு அண்ணாமாருக்கும் தொலைபேசி எடுத்து, தனது பிரார்த்தனையின் நல்நோக்கத்தை விபரிக்க எல்லாம் தொடங்கிவிட்டான். அத்தோடு, தங்களின் வீட்டுக்கு வந்தாலும், எவரோடும் கதைக்காமல் உடனே அங்கேயும் computer அறையினுள் நான் சத்தம்போடாமல் நுழைந்துவிடுவேன் என்ற துணைச்சாட்சியையும் கூடவே சேர்த்துக்கொண்டான். சரி, குடும்பத்திற்குள்ளேயென்றால் கூட பரவாயில்லை, கொஞ்சம் சமாளிக்கலாம். அவ்வவ்போது தோழிகளிடன் தொலைபேசும்போது இவனுக்கும் இடையில் கதைக்கக்கொடுப்பேன். அப்படி ஒரு சிநேகிதியுடன் அண்மையில் கதைக்கும்போது, இந்த விசயத்தை அந்தத்தோழிக்கும் போட்டுக்கொடுத்துவிட்டான் (தோழிகள் என்றாலும் பரவாயில்லை, கொஞ்சம் அசடுவழிந்தால், சரி பிழைத்துப்போ என்று திருப்பவும் நண்பனாக்கிக்கொள்வார்கள். ஆனால் ஒரு காதலி ஒருவர் இருந்து, இப்படி என் 'மற்றத் திறமைகளையும்' புகழ்ந்தால் என் நிலை என்னாவது? காதலுக்கு பொய்தாண்டா அழகடா என்று சொன்னால் கேட்கும் வயதிலா அவன் இருக்கின்றான்). என்னுடைய புகழை அகிலமெங்கும் பரப்ப, கொஞ்சக்காலம் போனால், தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கக்கூட தயங்கமாட்டான் போலத்தான் அவன் போகின்ற போக்கைப் பார்த்தால் தெரிகின்றது. அவன் இவ்வாறு எதையாவது எழுதத்தொடங்கமுன்னர், என்னுடைய 'சுயசரிதை'யை நானே எழுதி, சரணாகதி அடைவதுதான் நல்லது போல இப்போது தோன்றுகின்றது.
.......
அவனை கத்தோலிக்கப் பாடசாலைக்குச் சேர்ப்பதற்கு, முன் தகுதியாய், ஞானஸ்தானம் பெற்றிருக்கவேண்டுமென்று பாடசாலை நிர்வாகத்தில் சொல்லிருந்தார்கள். அண்ணி கிறிஸ்தவ மத நம்பிக்கையுடையவர் (அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அல்லது எல்லா மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவர் என்றும் சொல்லலாம்). இந்த வழிபாட்டு முறையிலும் நமது 'புத்திசாலிக்கு' சில தினங்களுக்கு முன் ஒரு சந்தேகம் வந்து வழமைபோல் என்னிடமே நேரடியாக வந்தான் (உலகத்தில் அப்பாவியாக இருப்பதைப் போல ஒரு துன்பம் இல்லையப்பா). இங்கே (எங்கள் வீட்டுக்கு) வந்தால் 'அப்புசாமி' என்று கும்பிட்டு விபூதி பூசுகின்றேன். வீட்டிலோ அல்லது பாடசாலையிலோ விபூதி பூசாமல், ஆமேன்(Amen)என்று கைகளை நெஞ்சுக்கு குறுக்காய் வைத்துச் சொல்கின்றேன். எது சரியான முறை என்று கெதியாய் சொல்லுங்கோ என்று கேட்டான். எனது நிலை அப்பமிழுத்த குரங்கின் நிலை போல் ஆயிற்று. எனினும் கொஞ்சம் சமாளித்தபடி, நீ உனக்குப் பிடித்த இரண்டு முறையிலும் கும்பிடலாம், உனது அம்மா ஆமேன் என்றும், உனது அப்பா அப்புசாமி என்றும் கும்பிடுபவர்கள். எனவே நீ எப்படியும் கும்பிடலாம், you're luckydடா என்று கொஞ்சம் சமாளித்தேன். 'Yeah' என்றபடி கொஞ்சம் யோசித்துக்கொண்டு போய் சுவாமிப்படத்திற்கு முன் நின்று, அப்புசாமி என்று வழிபாட்டைத் தொடங்கி ஆமேன் என்று முடித்துவிட்டு இது எப்படி இருக்கிறதென்றான். ஆகா, இப்படியே போனால் இவன் விரைவில், புதிய மதம் ஒன்றைத் தொடங்கி, என்னையும் அந்தமதத்தின் முதலாவது சிஷ்யனாக மாற்றிவிடுவேனோ என்று பயம், அவனது வழிபாட்டைப் பார்த்தவுடன் எனக்கு வந்துவிட்டது.
.........
பாடசாலைக்குப் போகமுன்னர் நல்ல தமிழில் பேசிக்கொண்டிருந்தான். இப்போது முக்கால்வாசி ஆங்கிலத்தில் கதைப்பதைப் பார்த்துவிட்டு, இனி நீ தமிழ் வகுப்புக்களுக்கு போகவேண்டும் என்று ஒருமுறை கூறினேன். அது Stupid class,என்னால் போகமுடியாது என்று அடம்பிடித்தான். சரியடா, நீ தமிழ் கிளாஸிற்குப் போகத்தேவையில்லை, உனக்குப் பிடித்த stupid classற்குப் போ (அப்படியே தமிழ் வகுப்புக்குப் போவதற்கு சம்மதம் சொல்வான் என்ற நப்பாசைதான்) என்று கூறினேன். அவனோ, You are stupid என்று சொல்லிவிட்டு கனக்க அலம்பத்தொடங்கிவிட்டான். எல்லோருக்கும் தெரிந்த உண்மை இவனுக்கும் தெரிந்துவிட்டதே என்ற கவலை ஒருபுறமிருந்தாலும், நான் எப்ரல் முதலாந்திகதியை விமரிசையாகக் கொண்டாடியதும் தெரிந்துவிட்டதோ என்ற சந்தேகம்தான் இப்போது என்னை அதிகம் தொந்தரவு செய்கின்றது (உள்ளுணர்வாலே அனைத்தையும் அறியும்மழலைச் சித்தனாய் இருப்பானோ தெரியாது). ஒருநாள் பாடசாலைக்குப் போய் வந்துவிட்டு, எல்லோருக்கும் செல்லப்பெயர் (Nick Name) இருக்கின்றது தனக்கு இல்லையென்றான். சரி, உனக்கு Robotsல் வரும் Rodneyயா அல்லது The Incrediblesல் வருகின்ற Dashயா பிடிக்கும் என்று நானும் அண்ணாவும் கேட்டோம். தனக்கு Dashயே செல்லப் பெயராய் வைக்கும்படிச் சொல்லிவிட்டு, Dash மாதிரி மூச்சைப்பிடித்தபடி ஓடிக்காட்டி, தனக்கு அந்தப்பெயர் பொருத்தமானதே என்பதையும் நிரூபித்துக்காட்டினான். வருகின்ற மாதம் தியேட்டருக்கு வருகின்ற Star Warsஐ பார்த்துவிட்டு புதிதாய் ஒரு Nick name வைக்கின்றானோ தெரியாது. எப்படியென்றாலும், நான் இரசித்துப்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையை, அவனது செல்லப் பெயர்கள் தாண்டாது என்பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது.
.....
இப்போது சொல்லுங்கள், ஜந்து வயதில் இப்படி இருப்பவன், நாளை public பாடசாலைக்கு அனுப்பினால், குட்டைப்பாவாடைப் பெண்களை தான் பார்த்துவிடுவேன் என்ற பொறாமையில்தான் சிச்சியா அனுப்பினார் என்று ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிப்பானோ, இல்லையோ?
..........
இறுதியாய், தொலைக்காட்சியில் இரவுச் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ரொரண்டோ zooவில் ஒரு குரங்கிற்கு, புதிதாய் பிறந்த குட்டிக்கு என்னபெயர் வைப்பது என்று மக்களிடம் உதவி கேட்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்குத் தெரிந்தளவில், அந்தக் குட்டிக்கு வைப்பதற்கு எனது பெயரைத் தவிர வேறொன்றும் சிறப்பாக இருக்காது என்று தோன்றுவதால், எனது பெயரைச் சிபார்சு செய்வதாய் இருக்கின்றேன். வாசிக்கும் உங்களுக்கும், நான் சொல்வதில் சம்மதம் என்றால் நாளை, சென்னையிலும், நீயு ஜெர்சியிலும் நடைபெறவுள்ள வலைப்பதிவர் ஒன்றுகூடலுக்கு சென்று எனக்கு வோட்டுப் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நான் பார்த்த தமிழகம்

Sunday, March 27, 2005

{வியந்ததும், சிலிர்த்தும், திகைத்ததும் பற்றிய சில குறிப்புக்கள்}

(1)
சிறுவயதில் வாசித்த புத்தகங்களிலிருந்து தமிழகத்து நகரங்களும், தெருக்களும் எனக்குள் ஒரு பெருமரமாய் வேர்களைப்பரப்பியபடி இருந்தன. அவை, எனக்கு அருகிலிருந்த ஈழத்தின் ஒழுங்கைளையும், ஊர்களையும் விட மிகவும் பரீட்சயமாயிருந்தன. ஈழத்தின் அழகான பிரதேசங்களான கடலோரங்களையும், மலை சார்ந்த இடங்களையும் பார்ப்பதையும் விட தமிழகத்திற்கே எப்போதேனும் சென்றுவிடவேண்டும் என்றே சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்டிருக்கின்றேன். ஈழப்போராட்டம் உக்கிரமாவதற்கு முன்பான பொழுதுகளில் சாதாரண படகுகளிலெல்லாம் தமிழகத்து விரும்பியபோதெல்லாம் ஈழத்திலிருந்து சென்றிருக்கின்றார்கள் என்ற குறிப்புக்களை வாசிக்கும்பொழுதெல்லாம் ஒருவித வியப்பு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. எனெனில் போர், தமிழகத்திற்குப் போவதென்பதை இமயமலையின் உச்சியிற்கு ஏறுவதைப்போல, பிறகு என் வயதொத்தவர்களில் ஏற்படுத்தியிருந்தது.

சென்ற வருடம் எதிர்பாராத ஒரு தருணத்தில் தமிழகத்திற்கான பயணம் வாய்த்திருந்தது. எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணம் சென்னையில் நடைபெற இருந்ததால் அம்மா, அக்கா குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து பயணிக்கவேண்டியிருந்தது. ஒரு நள்ளிரவில் கொழும்பில் பயணத்தைத் தொடங்கி விடிகாலைப்பொழுதில் மீனம்பாக்கத்தில் வந்திறங்கியிருந்தோம். பதின்மத்தின் ஆரம்பத்தில் வாசித்த பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' எனக்குள் மீனம்பாக்க விமான நிலையத்தை பற்றிய நிலையான ஒரு சித்திரத்தை வரைந்திருக்க, ஒரு வித கிளர்ச்சியுடன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன். சனநடமாட்டம் அதிகமாகாத தெருக்களில் கார் விரைந்துசெல்ல, ஒரு சிறுவனுக்குரிய குதூகலத்துடன் விழிகள் விரித்தபடி சென்னையை இரசித்தபடி சாலிக்கிராமத்தை சென்றடைந்தேன்.

ஏற்கனவே திருமணத்திற்காய் வந்து நின்ற கூட்டத்தில் (நாங்கள் தான் கடைசியாய் இணைந்துகொண்டோம்) கஷ்டப்பட்டு ஒரிடம் பிடித்து நித்திரையில் கொஞ்சநேரம் ஆழ்ந்திருக்க, அக்கா பாண்டி பஜாரிற்கு போகின்றோம் வரப்போகின்றாயா என்று உலுப்பி எழுப்பினார். எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த வேலையான நித்திரையை விட்டுவிட மனதிற்கு இசைவில்லையாயினும், பாண்டி பஜார் என்ற பெயர் எனது உடம்பில் இரசாயன மாற்றம் (காதலுக்கு மட்டுமா இரசாயன மாற்றம் நிகழவேண்டும்) எதையோ ஏற்படுத்தி உற்சாகத்தைத் தர ஓமென்று அவர்களுடன் புறப்பட்டுச்சென்றேன். கடைகளுக்கு போனால் பெண்களின் நிலவரம் என்னவென்று சொல்லதேவையில்லை, அத்தோடு திருமணத்திற்கான shopping என்றால் சொல்லவும் வேண்டுமா? நானொருவன் மட்டும் ஆணாயிருக்க மிகுதியெல்லாம் பெண்களாய் இருக்க, அவர்கள் ஒரு திருவிழாவாய் கடைகளுக்குப்போவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். என்னுடைய Chemistry பிழைத்துப்போய்விட்டதே என்று வையிரவருக்கு பின்னால் நாய் ஓடிக்கொண்டிருப்பதைப்போல அவர்களும் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். பாண்டிபஜாரில் ஒரு வெள்ளிக்கடை இருக்கிறதே. கீழே, மேலே, பக்கவாட்டில் என்று எங்கும் ஒரே வெள்ளிமயந்தான். ஒரு குறிப்பிட்ட வயதில் வெள்ளியில் ஆசை மிகக்கொண்டு ஆபரணங்களாய் அணிந்துகொண்டு கனடாவில் திரிந்திருக்கின்றேன் (வீட்டுக்குத்தெரியாமற்தான்). இந்தக் கடைக்குப்போனால் அப்படியே என் முழு உடலையுமே வெள்ளியில் உருக்கி வார்த்துவிடுவார்கள் போல இருந்தது. இனியும் வைரவருக்கு நாய் மாதிரி உங்களுடன் திரியமுடியாது என்று அக்காவிற்கு கூறிவிட்டு ஒரு மூலைக்கடையில் விற்றுக்கொண்டிருந்த அந்த மாதத்து புதிய பார்வையையும், தீராநதியையும் வாங்கிக்கொண்டு வெள்ளிக்கடைக்கு (பெயர் ஞாபகத்திலில்லை) முன் போடப்பட்ட நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டேன். புத்தகங்களை வாசித்துக்கொண்டு கடந்துபோகும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பது சுவாரசியமான விடயந்தானே. You so sweet yah என்று காதலனுடன் உருகிக்கொண்டிருந்த இளம்பெண்ணும், எங்கையோ வேலையில் இருந்த கணவனை வெருட்டிக்கொண்டிருந்த பேரிளம்பெண்ணும் பக்கத்து நாற்காலிகளில் இருந்து செல்போனிக்கொண்டிருக்க நானும் விரைவில் அஷ்டவதானியாகிக்கொண்டிருந்தேன். அதைவிட ஆப்பிள்களையும், மாதுளம்பழங்களையும் மிக நுட்பமான வியாபாரத்தந்திரங்களுடன் விற்றுக்கொண்டிருந்த இரண்டு நடைபாதை வியாபாரிகளையும் இரசித்துக்கொண்டு திருவிழா எப்போதாவது முடியட்டுமென்று இப்போது சலிப்பின்றி வேடிக்கை பார்கத்தொடங்கியிருந்தேன். பிறகு, எங்களுடன் வந்த ஒரு Group உற்சாகமேலீட்டால் சரவணா storesற்கு (யாரோ பாண்டிபஜாரில் பொருட்கள் வாங்கும்போது அங்கே நல்லபொருட்கள் வாங்கலாம் என்று நமது பெண்களுக்கு சொல்ல) ஓட்டோ பிடித்து ஓடிவிட்டதால் ஒருமாதிரி எல்லோரையும் ஒன்று சேர்ந்து வாகனத்தில் பசியோடு வீடு திரும்பினோம்.

சில மாதங்களாய் வெயில் உருக்கிக்கொண்டிருந்த சென்னையில், நான் சென்ற நாளிலிருந்து நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த விடயத்தை ஒரு அவதானமாய் அங்கு பழக்கமான நண்பர்கள் சொன்னபோது, 'நல்லார் ஒருவர் சென்னை வரல் அவர் பொருட்டெல்லார்க்கும் பெய்யும் மழை' என்று எனது வரவை 'கொஞ்சம்' உயர்வு நவிற்சியாய் சொல்லி அவர்களுக்கு கடுப்பேத்திக்கொண்டியிருந்தேன். அப்படியே யாராவது சென்னை எப்படியிருக்கிறது என்று கேட்டபோதெல்லாம், 'சென்னையில் ஒரு மழைக்காலம்' என்றுதான் 'கவித்துவமாய்' கூறியுமிருக்கின்றேன். (இதை வாசிக்கும் தமிழகத்து நண்பர்களுக்கும் மற்றும் முதல்வருக்கும் ஒரு வேண்டுகோள், தண்ணீர் பஞ்சம் வந்து நீங்கள் கஷ்டப்பட்டால் என்னை இலவச விமானச்சீட்டுத் தந்து அழைத்தால் உங்களுக்கு மழை உத்தரவாதம் என்றும் சொல்லிக்கொள்கின்றேன்.)

எங்களுடன் இலண்டனிலிருந்து வந்த உறவினன் ஒருவன் இருந்தான். வந்த அன்றிரவே நாங்கள் இரண்டுபேரும், மற்ற ஆக்களுக்கு தெரியாமல் chicken 65 வெட்டுவது என்று திட்டமிட்டோம் (திருமண சமயத்தில் அசைவம் சாப்பிடுவதில்லை என்று ஒரு 'சம்பிரதாயம்' எங்கடை சனங்களுக்கு). மாலை மங்கி, வெப்பமும் தணிந்து இரவு திரையிட்ட பொழுதில், சன நடமாட்டம் குறைந்த ஒரு கடையில் போய் உட்கார்ந்து Chicken 65, பரோட்டா (நம்ம ஊரில் அது, கொத்துரொட்டி) என்று ஒரு பிடிபிடித்தோம். நாம் பேசிய தமிழ் பிடிபட அந்தக்கடையின் ஊழியர்களுக்கு கடினமாயிருந்தபோதும், மிகவும் அன்புடன் என்னவெல்லாம் வேண்டும் என்று பொறுமையாய் கேட்டு இனிதாய் உபசரித்தார்கள். அப்படியே இரண்டு பார்சல்கள் கட்டித்தரச்சொல்லி தங்கி நின்ற இடத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றோம். அதற்குக் காரணம் ஒன்றிருந்தது. திருமணத்திற்காய் வந்த உறவுகளில் இரண்டு உறவுக்காரப்பெண்கள் இருந்தார்கள். இந்தப் பெண்ணை நீயும், மற்றப்பெண்ணையும் நானும் காதலிக்க வைப்பது என்று கையெழுத்தில்லாத ஒரு சமரச உடன்படிக்கையை நானும் அந்த உறவுக்காரனும் செய்திருந்தோம். ஒரு திருமணத்திற்காய் வந்தவர்கள் மூன்று திருமணங்களைச் செய்துவிட்டு திருப்பினால், உறவுகளுக்கு செலவு குறையுமே என்ற எமது நல்ல எண்ணந்தான் இதற்கு காரணம். ஒரு மாதிரியாக ஒளித்துக்கொண்டு போய் chicken 65 ஐயும், பரோட்டாவையும் மொட்டை மாடியில் வைத்துக்கொடுத்துவிட்டு, அந்தப்பெண்களிடம் கதைக்கத் தொடங்கினோம். அவர்களும் Chicken Wingsஐ கடித்துக்கொண்டு, 'எங்களுக்கு வெளிநாட்டிலை இருக்கின்ற பெடியங்களை திருமணம் செய்யப்பிடிக்காது, அவங்கள் அங்கே செய்யிற குழப்படியெல்லாம் செய்துவிட்டு இங்கை வந்து girlsஐ marry பண்ணிக்கொண்டு போறாங்கள்' என்று எமது ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டார்கள். ச்சீய் இந்தப் பழம் புளிக்கும் என்னைத் தேற்றியபடி ஒரு காதலின் தோல்வியை அந்த மொட்டை மாடியிரவில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்களுக்கு நான் காணிக்கை செய்தேன்.

ஆனால் மொட்டை மாடி, மழையைச் சென்னைக்கொண்டு வந்த இந்தப்பெடியனைக் கைவிடத்தயாரில்லை. அடுத்த நாள் முன்னிரவில் நானும் அந்த உறவுக்காரப் பையனும் மொட்டை மாடியில் இருந்து கதைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தென்னை மரங்கள் கிளை விரித்திருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் (நான் சூட்டிய பெயர் சென்னைத்தேவதை) கைகளை அசைத்தபடி நடமாடிக்கொண்டிருப்பதை மொட்டைமாடியின் விளிம்பிலிருந்து கண்டேன். என்னடாப்பா, பிள்ளைக்கு ஏதோ மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டதோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் தெரிந்து, புத்தகத்திலிருப்பதை மனப்பாடம் செய்வதற்காய் அந்தப்பெண் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் என்று. எப்படியோ சென்னைத்தேவதையின் கவனத்தை ஈர்த்து நானொருத்தன் மாடியில் நிற்பதைப் பார்க்கவும் செய்துவிட்டேன். பிறகு மொட்டை மாடி எனக்கு வீட்டுக்குள் போய்க்கொண்டிருந்த FTVஐ விடவும் சுவாரசியமாக போய்விட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு சென்னைத்தேவதை படிப்பதற்காய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வருவதும், நானும் அந்தநேரங்களிலெல்லாம் மொட்டை மாடிக்கு வந்துவிடுவதும் நிகழ்ந்துவிடும் (மகள் ஏனிப்படி குறிப்பிட்ட நேரங்களில் எல்லாம் வெளியே புத்தகத்தோடு வருகின்றார் என்று சந்தேகப்படாத சென்னைப்பெண்ணின் தாயார் நீடுழி வாழ்க). எத்தனை முறைதான் ஒரு வார்த்தை கூடப்பேசாமல் பார்வைகளால் பேசிக்கொண்டிருக்க முடியும்? ஒரு நாள் நேரடித்தாக்குதலில் இறங்குவதென்று உறவுக்காரனையும் கூட்டுக்கொண்டு அந்தப்பெண் இருந்த தெருவிற்கு இறங்கிப்போனேன். ஆனால் நான் இறங்கிய நேரத்தில் ராகுவோ கேதுவோ சனியனோ இருந்திருக்க வேண்டும். விதி தன் பகடைக்காய்களை இரண்டாம் தடவையாக உருட்டத்தொடங்கிவிட்டது. நாம் அந்தப்பெண்ணின் இடத்தை அடைந்தபோது அவரது தகப்பன் வீரப்பத்திரசாமி மாதிரி பெரிய மீசையோடு வீட்டு முகப்பில் நின்றுகொண்டிருந்தார். எனக்கு காதலினால் வரும் படபடப்பைவிட அவர் ஏதாவது திருப்பாச்சி அரிவாளை உருவிவிடுவாரோ என்ற பதைபதைப்புத்தான் கூடிவிட்டது. (வாசிப்பவர்களுக்கு என் உணர்நிலை விளங்கவில்லையென்றால், 'காதல்' படத்தில் தன்னை பின் தொடரும் நாயகனை, தன் தந்தையைக் கூட்டிக்கொண்டு ஜஸ்கிறிம் வாங்கிக்குடித்து பயமுறுத்தும் நாயகி வரும் காட்சியை நினைவுபடுத்தவும்). சரி இனியெதுவும் பேசமுடியாது என்று தொடர்ந்து நடந்துகொண்டிருந்தால், அந்தத் தெரு இரண்டு வீடுகள் தாண்டியவுடன் முடிந்துவிட்டது. அட, ஈழத்தில், கனடாவில் இழக்காது பத்திரமாய் வைத்திருந்த உயிரை சென்னையில் காவு கொடுக்கவேண்டிவரப்போகின்றதே என்ற பயம் எனக்குள் வந்துவிட்டது. நாங்கள் அந்தப்பெண்ணின் வீட்டைக் கடந்துபோகமுன்னரே, எங்களது நடை, அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டே நாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பெண்ணின் தந்தையாருக்கு நன்கு விளங்கியிருக்கும். தெருவும் முடிந்து இனி உடனே திரும்பிப்போனால், நிச்சயம் எங்களின் குழப்படி அவருக்கு தெரியாமற்போகாது என்பது நிச்சயம். அப்போதுதான் எனது உறவுக்காரனுக்கு ஆறறிவு விழித்துக்கொள்ள, முறைத்துக்கொண்ட அந்தப்பெண்ணின் தந்தையிடமே நேரே சென்று (சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட, சண்டைக்காரனின் காலில் விழுவது உத்தமம் என்று லண்டனிலும் சொல்லிக்கொடுத்திருக்கின்றார்கள் போலும்), 'நாங்கள் சென்னைக்குப் புதிது, எப்படி காவிரி கோனரிற்குப் போவதென்று சொல்லமுடியுமா' எனது cool யாய் கேட்டு எனது உயிரை மீளவும் கொண்டுவந்து தந்தான். சென்னைத்தேவதை அப்பாவியாய் எங்கள பரிதாப நிலையைக் கண்டு கொடுப்பிற்குள் சிரித்திருப்பார் என்றெல்லாம் உங்களுக்குச் சொல்லதேவையில்லை.

சில நாள்களின் பின் பாடசாலை ஆரம்பிக்கப்போவதால், உறவுக்காரன் லண்டனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டான். பிறகு எனது மொட்டைமாடிப் பொழுதுகள் நீண்டபோதும், கீழே சென்று, அந்தப்பெண்ணோடு கதைக்கும் ஆசை போய்விட்டது. அத்தோடு தனியே மொட்டை மாடியில் நேரங்கழிப்பதைப் பார்த்த எனது அக்காவிற்கும், மாமாவிற்கும் கொஞ்சம் சந்தேகமும் வர அடிக்கடி மேலே வந்து security guard வேலை அவர்கள் செய்யத்தொடங்கிவிட்டனர். இருந்த ஒரு மகளையும், எனக்கு கட்டிக்கொடுக்காது (என்னை விட மகளுக்கு வயதுகூடத்தான்) யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, இப்போது உளவாளி வேலையும் பார்ப்பது நியாயந்தானோ என்று மாமாவிடம் கேட்க ஆசையிருந்தாலும், பெரியோரைக் கனம்பண்ணுதல் என்ற நல்லதொரு கொள்கையினால் இதை நான், அவரிடம் கேட்கவில்லை.

(2)
ஒரு மத்தியான பொழுதில் ஸ்பென்சர் பிளாசாவுக்கு நானும், உறவுக்காரனும் (லண்டனுக்குப்போகமுன்னர்), அந்த இரு இளம் பெண்களும் ஓட்டோவில் புறப்பட்டோம். ஆட்டோக்காரருடன் மிகவும் பம்பலடித்துக்கொண்டு ஸ்பென்சரில் போயிறங்கினோம். ஓட்டோக்காரரும் சென்னையில் பார்க்கவேண்டிய மற்ற இடங்களையும் விரிவாக எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். ஸ்பென்சர், நாம் போயிருந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெல்லிய இருட்டிலும், வெக்கையிலும் புழுங்கிக்கொண்டிருந்தது. என்னதான் என்றாலும், நாலைந்து தமிழ்ப்புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லையென்று லாண்ட்மாக்கில் 5%ற்கும் குறைவான இட ஒதுக்கீட்டில் ஒரு மூலையில் முடங்கிக்கிடந்த தமிழ்ப்பகுதியை தேடி ஐந்தாறு புத்தகங்களை தேடி எடுத்தேன். பிறகு நானும் ஒரு பெண்ணும் ஒரிடமும் உறவுக்காரனும் மற்றபெண்ணும் இன்னொரு இடத்தில் என சனநெரிசலில் தவறுப்பட்டு தேடிக்கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தோம் (அன்றிரவே உறவுக்காரனுக்கு இலண்டனுக்குப் போகவேண்டியிருந்தது). இடையில் அண்ணாசாலையால் வரும்போது 'அண்ணாசாலையில் சென்னை அண்ணாசாலையில், ஒரு ஏழு வர்ண வானவில்லைப் பார்த்தேன்' என்று உரத்துப் பாடி, ஆட்டோக்காரரையும், வெளியில் போய்க்கொண்டிருந்தவர்களையும் கொஞ்சம் முழிக்கவைத்தோம்.

ஏ.வி.எம்மில் சுழலும் பூமிப்பந்தைத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அருகில்தானே இருக்கிறது என்று ஒரு மாலைப்பொழுதில் நடந்துபோய் பார்த்தால், மிகச்சிறிய உருண்டையில் உலகம் இருந்ததைப் பார்த்து சரியான ஏமாற்றமாயிருந்தது. அப்படியே பக்கத்தில் திருப்பாச்சி சூட்டிங் நடப்பதை அவதானித்தபோதும், நான் உள்ளே போனால் இயக்குநனர் விஜயை விட்டுவிட்டு என்னை த்ரிஷாவுடன் ஆடச்சொல்லிவிடுவோரோ என்ற பயத்தில் நான் உள்ளே போய் சூட்டிங் பார்க்கவில்லை. திருவள்ளுவர் கோட்டம் பார்க்க விருப்பமிருந்தும், ஒரு தமிழக நண்பர் அது நன்கு இப்போது பராமரிக்கப்படுவதில்லை என்று சொல்ல அந்த ஆசையை நிறைவேற்றமுடியாமல் போயிவிட்டது. அவ்வாறே கோயம்பேடு மார்க்கட்டையும், பஸ் ஸ்டாண்டையும் (அக்கா சொன்னார் ஆசியாவில் இது இரண்டாவதோ மூன்றாவதோ பெரிய பஸ்தரிப்பு நிலையம் என்று, தகவல் சரியா தெரியவில்லை) முழுதாக ஆறுதலாகச் சுற்றிப்பார்க்க முடியாமல் போய்விட்டது. அம்மா மற்றும் வந்திருந்த உறவுக்காரர் எல்லாம் திருப்பதி இன்னபிற கோயில்களுக்கு செல்ல, நான் மொட்டைமாடியை விட்டுப்பிரிய மனமில்லாததால், அக்காவோடு நின்று அவரது குழந்தையை day care செய்வதாய் சொல்லி தங்கிவிட்டேன்.

(3)



ஒரு விடிகாலைப்பொழுதில் மகாபலிபுரத்திற்கு போனோம். அந்த நெடும்வீதியில்தால் சூர்யா 'காக்க காக்க' பாடலை Qualisல் ஆடிப்பாடினார் என்று டிரைவர் அண்ணா சொல்ல, நானும் என்னை சூர்யாவாய் கற்பனை செய்துகொண்டு ஜோதிகா எங்கையாவது தெருவில் நிற்கின்றாரோ என்று தேடிக்கொண்டு மகாலிபுரம் போய் சேர்ந்தேன். ஒரளவு அதிகாலையில் போனதால் மிகக்குறைவாக மக்கள் இருந்தார்கள். கடற்கரை மிகவும் அழகாகவிருந்தது (ம்..ட்சுனாமி வந்து எவ்வளவு சேதத்தை உண்டுபண்ணியதோ?). பிறகு சிற்பங்களை இரசிக்கப்போனோம். இத்தனைகாலமும் ஒரு கனவாய் இருந்ததை நெருங்கிப்பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியிற்கு அளவேயில்லை. ஆற அமர நெடுந்தூரம் நடந்து எல்லாம், சிற்பங்களையும் கோயில் மாதிரி அமைப்புடன் இருந்த கட்டடங்களையும் பார்த்தோம். பல்லவர் காலத்திலிருந்தே ஓய்ந்துவிடாத உளியின் சத்தம் இன்னும் அங்கே சிலைகள் செய்துகொண்டிருப்பவர்களிடம் தொடவதைக் கண்டேன். எவ்வளவு அற்புதமாய் சிலைகள் எல்லாம் செதுக்கிக்கொண்டிருக்கின்றார்கள். பிள்ளையார் எல்லாம் கம்பியூட்டருடன் இருப்பதைப் பார்க்கும்போது இவர்களது உழைப்பும் சரியான வழியில் அடையாளாங்காட்டப்படாததால் ஒருவித சமரசத்திற்கு வந்துவிட்டார்கள் என்ற நிஜத்தின் கொடுமை புரிந்தது.



பிறகு அப்படியே செஞ்சியினூடாக போய்க்கொண்டிருக்கும்போது, உயர்ந்து நின்ற செஞ்சி மலைக்கோட்டை ஒரு காலத்தைப் பிரதிபலித்தபடி நின்றது கண்ணில் தெரிந்தது. அதில் ஏறிப்பார்க்க ஆவல் இருந்தாலும் ஒரு நாளிலேயே காஞ்சிபுரம் வரை போய் சென்னை திரும்பும் எண்ணம் இருந்ததால் சாத்தியமாகவில்லை. புளியமரங்கள் நிரையாக நின்ற வீதியும், பசுமை விரித்த வயல்களும் செஞ்சிக்கு அழகு கொடுத்தன. இடையில் இறங்கி வயலில் நின்று படமும் எடுத்துக்கொண்டோம். வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் 'கவனம் பார்த்து நடவுங்கள் முள்ளுவேலி ஆடுகளுக்காய் போடப்பட்டிருக்கிறது' என்று பரிவோடு சொன்னார்கள். வயலும், சற்றுப்பாழடைந்த மாதிரி இருந்த கிணறும் எங்கள் ஊரை நினைவுபடுத்தியது. ஊரில், சிறுவயதில் அம்மாவோடு புல்லுப் பிடுங்குவதறகாய் சென்ற வயல் எல்லாம் நினைவில் வந்துபோயிற்று.



அப்படியே திருவண்ணமலையைப் போய்ச்சேர்ந்தோம். அந்தக் கோபுரங்களின் உயரத்தை எவர் பார்த்தாலும் ஒரு கணமாவது வியக்கத்தான் செய்வர். இதுவரைகாலமும் மாவிட்டபுரக்கோபுரத்தை பெரிதாக நினைத்த என்னை நான்கு திசைகளிலும் விரிந்த கிடந்த திருவண்ணாமலைக் கோபுரங்கள் திகைக்க வைத்தன. அதைவிட உள்ளே அமைந்திருந்த தீர்த்தக்கேணிகளும் (ஆனால் பராமரிப்பற்று இருந்தன) அந்த சூழலுக்கு மிகவும் இரம்மியத்தைக் கொடுத்திருந்தன. திருவண்ணாமலைக்கு போவது என் நெடுங்காலக் கனவாய் இருந்தது. யோகி ராம்சுரத்குமார் உயிருடன் இருந்தகாலங்களில் எப்படியாவது ஒருமுறையாவது திருவண்ணமலைக்கு சென்றிடவேண்டும் என்ற ஆசையிருந்தது. இன்றைய பொழுதில் என மன சஞ்சலங்கள், கவலைகள் என எதுவந்தாலும் நான் மனத்திரையில் கொண்டுவருவது யோகி ராம்சுரத்குமார்தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை மாதிரி எனக்கு அவர். இன்றும் எனது அறையில் சுவாமிப்படங்களைவிட அவரது படத்தைத்தான் படுக்கைக்கருகில் வைத்திருக்கின்றேன். திருவண்ணாமலையில் வந்ததற்கு ஆகக்குறைந்தது யோகி ராம்சுரத்குமாரினதும், ரமண மகரிஷியினதும் சமாதிகளைப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரம் போதாததால் அவற்றையெல்லாம் பார்க்கமுடியாது போய்விட்டது. மதியப்பொழுதில், சரவணபவனில் Chicken 65 போல brocolli யில் செய்த சைவ உணவும் மிகவும் உருசியாகவிருந்தது. இப்படித்தான் மச்சாளின் திருமணப்பொழுதில் தமிழகத்து சாப்பாட்டை நல்லாய் வெட்டு வெட்டினேன். பன்னீர்கறியின் சுவைக்காய் இன்னொரு முறை கட்டாயம் தமிழகம் போகத்தான் வேண்டும். நாங்கள் சாப்பிடுவதைப் போலன்றி தமிழகத்தவர் வேறு மாதிரி சாப்பிடுபவர்கள் என்று சி.புஷ்பராஜாவின் 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' வாசித்தபோது பிறகு அறிந்தேன். நாங்கள் எல்லாக் கறிகளையும் ஒரே நேரத்தில் பிசைந்து சாப்பிடத்தொடங்கிவிடுவோம். தமிழகத்து வாசிகள் ஒவ்வொரு கறிகளுடன்தான் சாப்பிடுவார்கள். இப்படி தமிழகத்தில் ஒரேநேரத்தில் கறிகளைப் பிசைந்து சாப்பிடுபவர்கள் நரிக்குறவர் இனம் மட்டுந்தான் என்று பிறகு கேள்விப்பட்டேன். பரவாயிலலை நாங்களும் ஏதோ ஒருவிதத்தில் நாடற்றவர்களாய், நாடோடிகளாய் இருப்பதால் இப்படிச் சாப்பிட்டால் தவறில்லை என்று யார் கேட்டாலும் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். (வாசிக்கும் நண்பர்கள் பயப்பிடவேண்டாம் அடுத்தமுறை வரும்போது அப்படிச் சாப்பிட பழகிக்கொண்டு வருகின்றேன்).



இறுதியில் காஞ்சிபுரத்தில் சில கோயில்களுக்குச் சென்றோம். பிறகு பெண்கள் காஞ்சிபுரத்தில் புடைவைகள் பார்க்க கடைகளுக்கு ஏறியிறங்கத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரர்கள் கையால் நெய்வதற்கும் மெஷினால் நெய்வதற்கும் இடையிலுள்ள வித்தியாசங்களையெல்லாம் விளங்கப்படுத்தினார்கள். நானும், எதிர்காலத்தில் வரப்போகும் துணைக்காய என்ன கலரில் புடைவை வாங்கலாம் என்று கனவு கண்டுகொண்டு அவர்களின் பின் வழமைபோல அலையத்தொடங்கினேன்.

திருமண விசயத்திற்காய் வந்தததாலும், உறவுக்காரர்கள் நிரம்ப இருந்ததாலும் அதிக இடங்களுக்குப்போகவில்லை. பக்கத்திலிருந்த பெசண்ட் நகர் பீச்சிற்கோ அல்லது அசோக் நகரிலிருந்த உதயம் தியேட்டரில் ஒரு படமோ பார்க்கவில்லை என்பது மிகவும் சோகமான விடயந்தான். பாண்டிச்சேரிக்கும் (அய்யோ நீங்கள் நினைக்கின்ற விடயத்திற்கு அல்ல) கேரளாவிற்கும் போகாததும் மற்றொருபுறத்தில் கவலைதான். அதிலும் தமிழகத்தில் சந்தித்தவர்கள் எல்லாம், ஈழத்தவரின் பல விடயங்கள் (தேங்காய்ப்பூச்சாப்பாடு உட்பட) கேரள மக்களோடு ஒத்துக்கொள்ளப்போக்கூடியதென்று சொன்னதை, நேரில் சென்று அவதானிக்கமுடியாது போய்விட்டது. சிலவேளைகளில் ஆலப்புழையிலோ வேறெங்கோ கோபிகா போல ஒரு பெண் எனக்காய் வீணையை வாசித்துக்கொண்டு காத்திருந்திருக்கவும்கூடும் என்பதை நினைத்தால் இன்னும் நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது. பரவாயில்லை, இன்னொரு தமிழகப்பயணம் சாத்தியப்படாமலா போகப்போகின்றது. அடுத்தமுறை போனால், நிறைவேறாத ஆசைகளைப் பூர்த்தி செய்வதுடன், பிரியமுள்ள பல வலைப்பதிவு நண்பர்களையும் சந்திக்கமுடியுந்தானே. ஆகா இந்தக்கனவை இன்றிலிருந்து ஒரு செடியைபோல வளர்ப்பது கூட மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய்த்தானிருக்கிறது.

{எவரெவரோ எல்லாம், அவருக்கு இவருக்கு என்று சமர்ப்பணம் செய்யும்போது, இந்தப்பயணக்குறிப்பை சென்னையில் நின்ற வாரம் முழுதும் பரவசமான நிலையில் என்னை வைத்திருந்த சென்னைத்தேவதைக்கு காணிக்கையாக்குகின்றேன். நேரங்கனிந்தால், 'சென்னைத்தேவதையும் மழைக்காலமும்' என்று செல்வராகவனின் '7/G ரெயின்போ காலனி' போல மொட்டைமாடியைப் பின்னணியாகக்கொண்டு ஒரு திரைப்படத்தையும் எடுத்து அந்தத் தேவதைக்கே காணிக்கையும் செய்வேன் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.}