கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

புதினம்

Friday, October 20, 2006

-கள்ளம்' நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்-

நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக்கடந்தபடியும் போய்க்கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச்சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் 'அடாவடிகளை' சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக்கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.

kallam

ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். 'கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி' என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

ஜூம்னாவுடன், ராஜூ சேரியில் வசித்தாலும் மற்றப் பெண்களின் நெருக்கத்தால் ஜூம்னா விலத்திப் போகின்றாள். அவள் பூமாலை கட்டி சம்பாதித்துக்கொள்கின்றாள். ஆனால் ஜூம்னாவின் ராஜூவாக மட்டுமே ராஜூ அந்தச் சேரி மக்களால் பார்க்கப்படுகின்றான். ராஜூவை சந்திக்க முன், எத்தனையோ ஆண்களோடு படுக்கையில் சல்லாபிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜூம்னாவுக்கு ஆண் உடல் வெறுத்துப் போகின்றது. அவளுக்கு ராஜுவின் உடலல்ல, தனக்காய் ஒருத்தன் இருக்கின்றான் என்ற துணையே தேவைப்படுகின்றது. ராஜூவுக்கும் காமத்தால் தன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஒரு பெண் ஜூம்னா என்பது மட்டும் தெளிவாய்த் தெரியும்.

ராஜூவின் தஞ்சாவூர்க்கலையும் நவீன ஓவியப்பரீட்சயமும் கலந்த ஓவியங்களின் புகழ் தஞ்சாவூரில் மட்டுமில்லாது, தமிழ்நாடு தாண்டி வெளியிலும் பரவுகின்றது. இறுதியில் 'உனக்கு ஒன்றுமே தெரியாது' என்று திட்டி அனுப்பிய ராஜூவின் தந்தை, மகனின் திறமை கண்டு வியந்து தனக்குப்பின் தனது ஓவிய நிறுவனத்தை நீதான் நடத்தவேண்டும் என்று சேரிக்குள் வருகின்றார். ராஜுவோ இன்னும் என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையேன விசராந்தியாகச் சிரிக்கின்றான். மேலும் சேரிக்கு வரமுன்னர் தன்னில் மையல்கொண்ட நண்பனின் தங்கை தனது தந்தையிற்கு மனைவியாக இருப்பதைக் கண்டு இது வாழ்வின் விந்தையென திகைக்கின்றான்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் (சாதிக்குள்) சனாதனமாய் இறுகிக்கிடந்து விரைவில் அழிந்துபோய்விடும் என்ற தஞ்சாவூர் ஓவியப்பாணியை எல்லாச் சமூகங்களிலும் பரப்பி -காலங்களுக்கேற்ப மாற்றமடைந்து- தொடர்ந்து உயிர்த்திருக்கும் என்று நம்பிக்கை கொள்கின்றான் ராஜூ. சேரிக்குள் இருந்த பறையர், தேவர், கவுண்டர் பெண்களை மட்டுமில்லை, உயர்சாதியினராக தங்களைக் காட்டிக்கொள்வதில் பெருமிதப்படும் பிராமணப்பெண்களும் சேரிக்கு வந்து கற்கப்போகின்றோம் என்கின்றபோது ராஜு மறுப்பேதுமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றான். ஆனால் அதேசமயம் பாடத்திட்டங்களிலுள்ள கற்பித்தல்முறைகளை நிராகரித்து நேரடியாக ஓவியம் வரைவதிலிருந்து கலையைக் கற்றுக்கொள்வதையே ராஜூ ஊக்கப்படுத்துகின்றான். எனினும் அவன் தனக்குப்பின் இந்தக்கலையைப் பரப்புவார்கள் என்று தீவிரமாய் நம்புகின்ற ஒரு பெண் தற்கொலை செய்துகொள்கின்றாள். இன்னொரு பெண் யாரோ ஒருவனுடன் சென்னைக்கு ஓடிப்போகின்றாள். இப்படியாக வீழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. எனினும் காற்றைப் போன்றவன் கலைஞன், வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பற்றிக் கவலைப்படாது தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருப்பான் என்கின்றமாதிரி ராஜூ எவ்வித அறிவிப்போ எதிர்காலத் திட்டமிடல்களோ இன்றி அந்தச் சேரியை விட்டு வெளியேறத்தொடங்குகின்றான். அப்படியே நாவலும் நிறைவுபெறுகின்றது.

இந்த நாவலில் ராஜூ என்ற ஒரு பாத்திரத்தைத் தவிர கவனப்படுத்திருக்கும் மிகுதி அனைத்துப் பாத்திரங்களும் பெண்களே. நாவலில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சேரியே முக்கிய கதைக்களனாய் இருக்கின்றது. சேரியின் மொழிநடையில் அம்மக்களின் வாழ்வுப்ப்க்கங்கள் இயல்பாய் விரித்துவைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாகரீகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதுமட்டுமே உன்னதமான வாழ்க்கையென நம்பிக்கொண்டிருக்கும் பலரால், இந்நாவலின் மொழிநடையை அவ்வளவு இலகுவாய் ஜீரணிக்கமுடியாது. எல்லாக் 'கெட்ட வார்த்தைகளும்', எல்லா 'அசிங்கங்களும்' (நாவல் ஆரம்பிப்பதே பாலியல் தொழில் செய்யப்படும் ஒரு பகுதியில்.. கெட்ட வார்த்தைகளுடன் தான் உரையாடலும் ஆரம்பிக்கும்) முகமூடிகளின்றி இந்நாவலில் பேசப்படுகின்றது. ஒரே களத்தில் இந்நாவல் சுழன்றாலும் பாத்திரங்களின் உரையாடல்களால் நாவலை அலுப்பின்றி வாசித்து முடிக்கக்கூடியதாய் இருப்பதை நாவலின் பலம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் ஒருவித மணிப்பிரவாள நடைக்குள் ப்ரகாஷ் சிக்கிக்கொண்டிருப்பது வாசிப்பிற்கு இடையூறு ஊட்டுவதும், சேரி மக்களின் பேச்சின் நடுவில் கூட இந்த மணிப்பிரவாளநடை கதாசிரியரை அறியாமலே வந்துவிடுவதும் ப்லவீனம் எனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். (இந்நாவல் தஞ்சை ப்ரகாஷ் எழுத முடியாமல் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம் இருந்தபொழுதுகளில் ப்ரகாஷ் கூறக்கூற அவரின் நண்ப்ரொருவரால் எழுதப்ப்படடது என்ற குறிப்பையும் நாம் சேர்த்து வாசிக்கவேண்டும்).

நாவலில் விளிம்பு நிலை மக்களே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தாலும், சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் குறித்த அரசியல் குறித்தும் கவனிக்கவேண்டும். உதாரணமாய் 'பற சனத்த சும்மா சொல்லக்கூடாது. படுன்னு மடிய விரிக்கிறாளே(ப 172)' என்பதுமாதிரியான வாக்கியங்களை சேரியிலுள்ள பெண்கள் உபயோகிக்கின்றனர் (சேரியில் பறையர், கவுண்டர், தேவர் என்று எல்லவிதமான சனங்களும் இருக்கின்றனர்). இவ்வாறான உரையாடல்களை வாசிக்கும்போது அது பாத்திரங்களின் அடிமனக்குரலா இல்லை கதாசிரியரின் குரலா என்ற சந்தேகம் வருகின்றது.

இந்நாவலில் சமப்பாலுறவு பெண்கள் பற்றிய வர்ணனைகள் வருவதும், நாவலின் முடிவில் கூட இருபெண்களுடையே அவ்வாறான் ஒரு உறவு முகிழலாம் என்றமாதிரியான குறிப்பை விட்டுச்செல்வதும் குறிப்பிடவேண்டியதொன்று. இந்தக் கதையிலிருக்கும் பல பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாய் நடமாடிய /நடமாடும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ப்ரகாஷ். இந்நாவலில் குறிப்பிட்டதைவிட மிக வெளிப்படையும், அழுக்க்குகளும் கசடுகளும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் நிரம்பிய மனிதர்கள் அவர்கள் என்றாலும் அவற்றை அப்படியே அடையாளப்படுத்த/ஏற்றுக்கொள்ள தமிழ்ச்சமூகம் இன்னும் வள்ர்ந்துவிடவில்லை என்ற தனது ஆதங்கத்தையும் ப்ரகாஷ் வெளிப்படுத்துகின்றார். நாவலை வாசித்தபோது ஒரு வாசக மனோநிலையில் நின்று யோசித்துப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே'யும், ஆதவனின் 'காகித மலர்'களும். 'கள்ளம்' நாவல் இவற்றின் பாதிப்பிலிருந்து எழுந்தது என்று நிறுவுவதல்ல இதன் அர்த்தம். நாகராஜனால் விபரிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்ணும், 'காகிதமலரில்' வரும் உலகோடு ஒட்டிவாழ முடியாத (வெறுமை/தனிமை)யும் கொண்ட ஆணும் உடனே நினைவில் வந்து ஒட்டிக்கொள்கின்றனர்.

(2)
-ப்ரகாஷ் இன்று உயிரோடு இல்லாதபடியால்- அவர் முன்னுரையில் எழுப்பியிருந்த கேள்வியை யோசிக்கும்போது, காமம் உட்பட்ட இன்னபிற விடயங்களைத் தமிழில் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாய் இன்றையபொழுதில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் என்றால் ரமேஷு -பிரேமைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். அவர்கள் தமது இருபது வயதில் எழுதிய 'அதீதனின் இதிகாசத்திலிருந்து' தொடர்ந்து உடல்மொழி பற்றிய உரையாடல்களை விரிவாக்கியபடி இருக்கின்றார்கள். உடலை வியந்தபடியே அவ்வுடலை பல்வேறு கூறுகளாய் துண்டு துண்டுகளாக்கியபடி உடல் மொழியின் வினோதங்களை, உணர்ச்சியின் குவியல்களாக்கிவிடாது உரையாடுவதை ரமேஷ்-பிரேமின் எழுத்துக்களில் காணலாம். ஆனால் அதிலும் பல பலவீனங்கள் இருப்பதாய் தோழியொருவர் அடிக்கடி குறிப்பிடுவார்; அது அவரது வாசிப்பு.

சாரு நிவேதிதா மீது சில விடயங்களில் மரியாதை இருந்தாலும் -அவரோ அல்லது அவரின் நண்பர்களோ- சாருவை பாலியல் சேர்ந்த எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தும்போது சற்று அதிகப்படியோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. சாருவின் சீ(ஜீ)ரோ டிகிரியிலிருந்து, இன்றைய (இணையத்திலிருக்கும்) பத்திகள்வரை -வாசிக்கும்போது- அவரின் பாலியல் பற்றிய உரையாடல்கள் நிமிடங்களுக்குள் jerk-off ஆக்கிவிடுகின்ற வகையைச் சேர்ந்த எழுத்தே தவிர காமத்தை அதன் இயல்போடு அணுகவில்லை என்றே கூறதோன்றுகின்றது. ஆனால் அதே சாருவே மற்ற நாட்டு இலக்கியங்கள்/திரைப்படங்களை வாசித்துவிட்டு அவர்கள் காமத்தை கலாபூர்வமாய் எழுதுகின்றனர்/எடுத்துத்தள்ளுகின்றனர் -தமிழில் தன்னைத்தவிர எவருமில்லை- என்று புலம்புவது என்பது முரண்நகைதான்.

ஜெயமோகனின் எழுத்துக்களில் காமம் இருந்தாலும் -ஒழுங்கு/ஒழுக்கம் என்பதில் ஜெயமோகனுக்கு இருக்கும் தீரா விருப்பால்- உடல்கள் பகிர்வது குறித்து குற்றவுணர்வுடன் அல்லது அவமானத்துடன் நகர்வதாய் பல இடங்களில் காட்டப்படுகின்றதே தவிர பரிபூரணத்தை அடைய முயற்சிக்கும் புள்ளிகளை வந்தடைவதே இல்லை. அதேபோன்று ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துக்களில், பாலியல் சார்ந்த சித்தரிப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றவேளைகளில், அவரது வர்ணனைகள் அதிகவேளைகளில் காமத்தை உணர்ச்சிக்குவியலாக்கும் முயற்சிகளாகிப் போய்விடுகின்றன. இந்தவகையில் ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல் உடல்மொழி குறித்து தீவிரமாய் உரையாடவிட்டாலும், விளிம்புநிலை மக்களினூடாக -இயன்றளவுக்கு- காமத்தை இயல்பாய் அணுகியிருக்கின்றதே என்றுதான் கூறத்தோன்றுகின்றது.

எனக்கான தெருக்கள்

Thursday, October 12, 2006

நான்கு பருவங்களில் பிடித்த பருவம் எதுவென்றால் இலைதுளிர்காலம் என்று தயங்காமல் சொல்வேன். இயற்கையின் நடனத்தினால் தெருக்களுக்கு வெவ்வேறு வர்ணம் வந்துவிடுவதைப் போல, பருவங்களுக்கேற்ப தெருக்களுக்கு விதம்விதமான வாசனைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? மழை பெய்து சுத்தமாய்த் துடைத்துவிட்ட, அதிகம் வாகனங்கள் பயணிக்காத ஒரு தெருவில் என்னைப் போல இப்போது நீங்கள் நடந்துகொண்டிருப்பீர்கள் என்றால் நிச்சயம் தெருவுக்குரிய தனித்துவமான வாசனையை நீங்களும் அனுபவித்து சிலிர்த்திருப்பீர்கள்.

புத்தனுக்கு பின்னால் ஒளிரும் வட்டத்தைப் போல, நிலவு மிகப்பிரமாண்டமாய் இந்நெடுங்கட்டடத்தின் பின்னால் விகசித்தெழுகின்றது. தெருவில் விழும் இக்கீற்றுக்களை உங்களுக்கு பிடித்தமான உருவங்களாய் நீங்கள் கற்பனை செய்து கொள்ளவும் கூடும். இயற்கையின் ஆலிங்கனத்தால் சிலிர்த்து சிவப்பும் செம்மஞ்சளுமாய் வெட்கிக்கின்ற மரங்களின் இலைகளினூடாக நீளும் நிலவின் கீற்றுக்கள் எனக்குள் சீன எழுத்துக்களாய்/கிறுக்கல்களாய் உருமாற்றம் பெறுகின்றன. சிறுவயதில் மிகவும் பாதித்த சீன ஓவியங்களும், அவற்றில் அதிகம் தோன்றும் மூங்கில்களும் பண்டாக்கரடிகளும் இப்போதும் நினைவில் தேயாமல் கைகோர்த்து வருகின்றன போலும்.

chinese2

இப்படி அமைதியும் அழகும் வாய்த்த தெருக்களாய் ஊரில் ஒருபோதும் எந்தத் தெருவும் இருந்ததில்லை. ஊர்த் தெருக்களை நினைத்தால் சந்திகளில் மிதக்கின்ற உடல்கள்தான் உடனே நினைவுகளில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. ஆறடிக்கும் குறைவான தெருவைக் கடப்பதற்காய் உயிரைப் பயணம் வைத்திருக்கின்றீர்களா? இந்தியா இராணுவ காலத்தில் அப்படிக் கடந்திருக்கின்றோம், உயிரையும் பொருட்படுத்தாது. உயிர் மீதான் அக்கறையின்மையால் அல்ல; பசியின் நிமித்தத்தால் -உயிர் இழக்கும் பயமின்றி- என்னைப் போன்றவர்கள் கடந்திருக்கின்றோம். எங்கள் வீடுகளையும், அருகில் மிகப்பரந்திருக்கும் வயல்களையும் பிரிப்பது சிறு தெருத்தான். இந்திய இராணுவ காலத்தில் மிகப்பட்டினியாய் இருந்த காலங்கள் அவை. அடிக்கடி ஊரடங்குச் சட்டங்களும் வெளியிலிருந்து உணவுகளும் வராத பொழுதுகள். பசியைத் தீர்ப்பதற்கு என்று இருந்த ஒரேயொரு அட்சய பாத்திரம், யுத்தத்தால் இடைநடுவில் கைவிடப்பட்ட தோட்டங்கள். அங்கே வாடியும் வதங்கியும் இருக்கும் வெங்காயம், கோவா, தக்காளி, பீற்றூட் போன்றவை மட்டுமில்லை, களையாக வளரும் சாறணை(?) கூட எங்களின் பசிக்கு உணவாகியிருக்கிறது.

இந்த பீற்றூட்டிலிருந்தும் வெங்காயத்திலிருந்தும் இப்படி விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கமுடியுமா என்று அம்மா கறிகள் சமைத்து வியக்க வைத்த காலங்கள் அவை. அருகிலிருந்த சந்தியிலிருக்கும் இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தெருவைக் கடப்பது அவ்வளவு இலகுவில்லை. நாங்கள் சிறுவர்கள். இந்திய இராணுவம் எங்களில் பரிவு வைத்ததாலோ அல்லது அவர்களின் கண்களில் 'தீவிரவாதிகளாய்' வளர்வதற்கான பருவத்தை அடையாத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சூடு வாங்காமல் தப்பியிருக்கிறோம். ஆனால் அவ்வாறு அதிஸ்டம் வாய்க்காது சூடு வாங்கி கால்களை இழந்தவர்களையும், கைதாகி சித்திரவதைக்குள்ளானவர்களையும் நான் அறிவேன்..

ஈழத்தின் அனேக தெருக்களுக்கு வடுக்களாய் செல்களோ, குண்டுகளோ அல்லது கெலி அடித்த சன்ன நேர்கோடுகளோ இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கப்படும் 30 கலிபர், 50 கலிபர் சன்னக்கோதுகளை தேடி தேடிப் பொறுக்கிச் சேகரித்திருக்கின்றோம். இங்கே சிறுவர்கள் முத்திரைகளையும், நாணயங்களையும் சேகரிப்பதுபோல சன்னக் கோதுகளை யார் அதிகம் சேர்ப்பது என்ற போட்டி எங்களில் அநேகருக்கு இருக்கும்.

ஒருமுறை இப்படித்தான் சித்தியின் மகனும், அவரின் நண்பனும் -அவரும் ஏதோ ஒருவகையில் உறவுதான்- இராணுவம் முன்னேறுகின்றான் என்று வேலிகளை வெட்டி வெட்டி சனங்களை தெருக்களால் போகாமல் ஒழுங்கைகளுக்கால் போகச் செய்துகொண்டிருந்தார்கள். தார் ரோடுகளில் தப்பியோடினால் இலங்கை இராணுவத்தின் கெலி துரத்திச் சுடக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. கொஞ்சச்சனங்களை அனுப்பிவிட்டு எங்கள் மாமியொருவரை அனுப்பிய சொற்பபொழுதில் செல்லொன்று விழுந்து அந்த நண்பர் படுகாயமடைகின்றார். சித்தியின் மகன் அதிசயமாய் தப்பிக்கொள்கின்றான். செல்லால் படுகாயமடைந்தவரை ஒருமாதிரி அம்புலண்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். (அந்தப்பொழுதில் காயப்படுகின்றவர்களை காவிக்கொண்டு செல்லும் எந்த வாகனமும் அம்புலன்ஸ்தான்). அந்த வாகனத்தையும் துரத்திச் துரத்திச் சுடுகின்றது கெலி. செல்லடிபட்ட நண்பர் இடைநடுவில் காயத்தின் நிமித்தம் இறந்துவிடுகின்றார். சித்தியின் மகனுக்கு கெலிச்சன்னம் முழங்காலுக்குள்ளால் பாய்ந்து போகின்றது. பிறகு நெடுங்காலத்துக்கு காலை மடக்கமுடியாமல் நடக்கவோ சைக்கிள் ஓட்டவோ முடியாது அவதிப்பட்டதை அருகிலிருந்து கண்டிருக்கின்றேன். நாங்கள் கொழும்புக்கு பெயர்ந்தபொழுதுகளில் அவர் போராளியாக மாறிவிட்டிருந்தார் என்ற செய்தி வந்திருந்தது. இப்படி எத்தனையோ சம்பவங்களின் சாட்சிகளாய் பல தெருக்கள் வடுக்களை வாங்கியபடி உறைந்துபோயிருக்கின்றன. தாங்கள் வாய் திறந்து இப்படிப்பட்ட சம்பவங்களைப் பேசினால் உலகம் தற்கொலை செய்துகொள்ளும் என்ற பயத்தில்தான் இந்தத் தெருக்கள் நிசப்தமாகி இருக்கின்றன போலும்.

இலையுதிர்காலத்தெருக்களை பற்றி உரையாட ஆரம்பித்து நினைவுகள் எங்கையோ அலைய ஆரம்பித்துவிட்டன. 'எல்லாத் தெருக்களும் உனது வீட்டு வாசலில் முடிகின்றன' என்ற கவிதை வரிகளைப்போல எதைப் பற்றிப் பேசினாலும் ஊர் பற்றிய நினைவுகள் வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. விலத்த வேண்டும் என்று வீம்பாய் நினைக்க நினைக்க அவை இன்னும் ப்லவந்தமாய் ஒட்டிக்கொள்ளுவதன் காரணம் ஏனென்று இன்னும் புரிவதில்லை. இலையுதிர்காலத்துக்கு வனப்பும் குளிர்ச்சியும் இறக்கைகளாகி விடுவதைப்போல, பறக்கத் துடிக்கும் அந்த இறக்கைகளை இழுத்து விழுத்திவிடும் காற்றைப்போல நோய்களும் இந்தப்பருவத்தில் வந்துவிடுகின்றன. அடிக்கடிவரும் தடிமனும், இருமலும், சிலவேளைகளில் கூடவே சேர்ந்துவிடும் இழுப்பும் மிகச் சோர்வு தரக்கூடியன. தனிமையில் என்னை விடுங்கள் என்றாலும் அம்மாவால் விடமுடிவதில்லை. தினமும் அளந்து வார்தைகள் பேசுபவன் வருத்தத்தின் நிமித்தம் அதையும் பேசாமலிருப்பதை அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியாது போலும்.

'மஞ்சள் வெள்ளை நீலமாய்
மாத்திரைகள்
வெளிறிய உறக்கத்தை
குதறிக் கொண்டிருக்க
கடிகார முள்ளின் அசைவுக்கும்
இதயத்தின் அதிர்வுக்குமிடையிலான
கணப்பொழுதுகளை அளந்தபடி
கரையும் இரவுகளில்
என் காய்ச்சலைக் கடன்வாங்கிய
தலையணையின் வெம்மையில்
உன் நெஞ்சுச் சூட்டினைக் கண்டுணர்ந்து
ஆழ முகம் புதைத்துக் கொள்ளவும்
சீறும் புலியாய்
வெறிகொண்டெழும் தாபம்
என் கட்டுக்களையும் மீறி...

காதல் இதமானதென்று
எவர் சொன்னார்..?'
(~அம்பனா)

இந்தப்பின்னிரவை எப்படிக் கழிப்பது? இணையத்தில் சதுரங்கம் ஆடலாம். சுவாரசியமாய் முடியும்வரை பார்க்கவைத்த Basic Instinct-2ன் நுட்பமான மனவுணர்வுகளை இன்னொருமுறை அசைபோடலாம். ஏ.ஜே அற்புதமாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரஞ்சகுமாரின் 'கோசலையை' -புத்தக அலுமாரியிலிருந்து Lutesong & Lamentஐ கண்டெடுத்து- வாசிக்கலாம். இல்லையெனில், 'ஒரு நரம்பு/இப்போது/என் மூளையைக் கொத்துகிறது!/இன்று காலையில்தான் இந்தப் பாம்பு/ எனக்குள்ளே வந்தது./நேற்று முன்தினம்/இரு தரப்பிலும்/சுமார் நூறுபேர்வரை மரணம் என்ற/பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,/யாரோ என் கண்ணை/கல்லால் தட்டு'வதாய்- என்கின்ற சோலைக்கிளியின் வரிகளோடு தாயகச்செய்திகள் வாசித்து உறக்கத்தைத் தொலைக்கலாம்.

தற்செயலாய் அறைக்குள் இருந்து வெளியே விரியும் புத்தரின் சாந்தத்தையொத்த தெருவைப் பார்க்கின்றேன். சில வருடஙளுக்கு முன் வன்னிக்குச் சென்றபோது இரண்டு கண்களுமிழந்த ஒரு போராளி சொல்கின்றான்.....'இன்று எந்த கஷ்டமும் இல்லாமல் A9னால் வந்துவிட்டீர்கள். ஆனால் இந்தப்பாதையின் ஒவ்வொரு அடிக்காயும் எத்தனை போராளிகள், மக்கள், மரங்கள் உயிரைக் கொடுத்திருக்கின்றார்கள் தெரியுமா? இன்று தார் போடப்பட்டு மினுங்கிக்கொண்டிருக்கும் இந்த ரோட்டுக்கீழே எத்தனையோ பேரின் சதைகளும் இரத்தமும் வலிகளும் உறைந்துபோய்க்க்கிடக்கின்றன'.

இப்போதெல்லாம் இங்குள்ள தெருக்களைப் பார்க்கும்போது விபத்தில் அநியாயமாக இறந்துபோன தோழன் வருகின்றான். ஊர்த்தெருக்களை நினைத்தால் கண்களிழந்த போராளியிலிருந்து இன்னும் பலர் ஞாபகிக்கின்றனர். இந்த இலையுதிர்காலத்து தெருக்களுக்கு அழகும் அமைதியும் உள்ளன என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது மாயத்தோற்றந்தானோ? புத்தர் கொடுத்து வைத்தவன்; அவனை அமைதியாக்க ஒரு போதிமரமாவது அவனுக்காய் காத்திருந்திருக்கின்றது. எனக்கான தெருக்களிலோ போதிமரங்கள் வளர்வதற்கான எந்தச் சுவடுகளும் இருப்பதில்லை.

தொலைதல்

Thursday, October 05, 2006

P3240033

(1)
ஒன்ராறியோ வாவியில்
சிறகென அலையும் நான்
பாண்டிச்சேரிக் கடற்கரையில்
உருமாற்றம் அடைகிறேன்
மனிதனாய்

பிரேமும் ரமேஷும்
அடுத்த கவிதைக்கான சர்ச்சையில்
தம்மிருப்பு மறந்து
வெகு தீவிரமாய்

'அம்மாவின் சாயலில் துணையைக்கண்ட'
கவிதையில் மிதந்த ஆணாதிக்கத்தை
விமர்சித்த தோழியின்
கோபத்தை விளம்புகின்றேன்;
புத்தரால் ஆட்கொண்ட
நீவிர்
புத்தரால் ஆகர்சிக்கப்பட்ட மக்கள் கூட்டத்து
தீவு அரசியலை
கட்டுடைக்காது அமைதியாவதேனோ?
கூடவே சேர்க்கின்றேன் என்கேள்வியையும்

எல்லாவற்றினின்றும் விடுபடும்
சித்தம் - இன்னும்
வாய்க்கவில்லை என்கின்றனர்

பிரேமும் ரமேஷும் பிரமீளும்
நிறைய நிறைய
எடையிழந்து
'சிறகென மிதக்கின்றேன்'
மீண்டும் நான்

படுக்கை முழுதும் - சிலவேளைகளில்
நெஞ்சில் தவழும் மழலைகளாகவும்
கவிதைப் புத்தகங்கள்.
..................

(2)
பின்னேரங்களில்
காயப்பட்ட உடலாய்
சூரியன் நிறந்தேய
போரின் வலிகாவி
ஊரூராய் அலைந்திருக்கின்றோம்
கால்கள் வலிக்க

வேலை நிமித்தம்
திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது
மாதங்களின் முடிவில்
அறைந்து சாத்தப்படும் கதவுகளின்
அவமானம்
முகத்தில் தெறித்தாலும்
இரவல் வாங்கி
பொங்கிப்படைக்க மறந்ததில்லை
சோறும் பருப்பும்

அம்மா,
பகிர்வதற்கான பிரியங்களை
பால்யம்
கருங்கற்பாறையாக்கி
மனதின் அடுக்குகளில் திணிக்க
முரட்டுமொழி பேசும்
ஆம்பிளையும் ஆயினேன்

'வலிகளைத் தந்தவளுக்கு
வன்மத்தையல்ல;
வாழ்த்தை
திருப்பிக்கொடுத்தலே நேசமென'
தலைகோதி
போர்வை இழுத்துவிட்டு
நகர்ந்த இரவில் நெகிழ்ந்தேன்
நானுனக்கு இன்னமும்
-என்றுமே- வளர்ந்துவிடாத மழலையென.
...................


(3)
ஒரு கொலையைப்பற்றி
உரையாடுகையில்
மற்றொரு கொலை எங்கேயெனக்கேட்கிறது
திணிக்கப்பட்டு...
உருமாற்றமடைந்த மூளை

கொலைகளிலும்
என் இருப்பை நிரூபித்து எழுதாவிட்டால்
கைகளின் அரிப்பை சொல்லிமாளாது

வசதியான சூழலில்
உண்டுறுறங்கி புணர்ந்து
அறிவுஜீவித்தனமாய் பேசாவிட்டால்
வந்த நாடு கற்றுத்தந்த
மனிதாபிமானத்துக்கும் மதிப்பில்லை

கடைசிக் கணத்தில்
கையைக் காலை இழந்தோ;
இல்லை
முலைகளை குதறக்கொடுத்தோ
உயிரைத் தக்கவைத்திருக்காலாமென்று
அவர்கள் நினைத்தது...

மதுக்கோப்பையில்
முண்டங்களாய் மிதப்பதையும்
பூகம்பமாய் நடுங்குவதையும்
மட்டும்
நிறுத்தவே முடிவதில்லை
வரைமுறையற்று எவ்வளவு குடித்தாலும்.
.............

(4)
விரல்களை மடக்கி விரிப்பதற்குள்
கூடிவிடும்
சப்வே சனங்களைப்போல
ஆகிவிடுகிறது காதல்
மூச்சுத்திணறலாய்

ஒரு இரெயினும்
இன்னொரு இரெயினும் சந்திப்பதற்குள்
நகரவேண்டியிருக்கிறது
முத்தமிட்டு

கசங்கிய ஆடையில்
வருவது
நம் வாசமென்ற
சிலிர்த்த காலம் போய்
மாலை வந்து
வியர்வையூறும் ஆடைகளை
தோய்க்கவேண்டுமெனும் நினைவே
எஞ்சுகிறது
இன்றைய நம்முறவில்.


Photo: @ chinese lantern festival

அகாலம்

Tuesday, September 19, 2006

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை
எப்படியெதிர்கொள்வதென
மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில்
பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன்
நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி
எல்லாப் புத்தகங்களும்
மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதேதவிர
இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை
இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில்
புரட்டத்தொடங்குகின்றான்
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை.
சில்வியா பிளாத்தின் கவிதையோடு
விரியுமொரு தாளில்
உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை
இவன் உற்றுநோக்கியபொழுதில்தான்
நண்பனின் வாசனை உதிர்ந்திருக்கவேண்டும்
தனிமை இருகரங்கொண்டு தோளிலழுத்த
துயரினில்மூழ்கி விறைத்துக்கொண்டிருக்கும் இரவை
சிறுவனாயிருப்பின்
அம்மாவின் முதுகின்பின் முடங்கிப்படுத்தாவது
கடந்துபோயிருக்கலாம்
'என்னைவிட்டுபோயிட்டானடா' என
ஆஸ்பத்திரி ப்ளோரில்
பதறியோடிவந்து விரல்நடுங்கும் காதலிக்கு
ஆறுதல்கூற வார்த்தையில்லா மொழியின் வெறுமை
மூளைசிதைந்து
வடிந்துகொண்டிருந்த நண்பனின் குருதியாய்
இவனில் பரவ
கள்ளிச்செடிகளில் தேன்குடித்து
பூவிலமர்ந்த தும்பிகளை
துரத்தியோடிய
சிறுவயதுநினைவுகள்
சட்டமிட்ட ஓவியமாய் உறைந்துபோகின்றது.

ஊருமில்லை; பால்யம் விரிந்த ஒழுங்கைகளுமில்லை;
இனி நீயுமில்லை.


(தோழனுக்கு....16092006)

Friday, September 15, 2006

abs2

பழுத்த இலைகள்
உதிர்ந்து விடைகொடுக்க
சாம்பர் வானக்குதிரையிலேறி
மிதக்குமென் பயணம்
மழையாக முடிவுறுகிறது
யுத்தபூமிகளில்

கந்தக வெடிலையும்
இரத்தச் சகதியையும் சுமந்தபடி
ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை
தமக்கான இரையாக்குகின்றன
வட்டமிடும் வல்லூறுகள்

புறமுதுகிட்டு
பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தேத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை
நினைவுகூர்கிறாள்
தன்முலைகளை அறுத்தெறிந்து

ஓர் அரும்பு
மலர்வதைப் போல
மரணித்தவர்களை உயிர்ப்பிக்கவும்
காற்று வீசுவதைப் போல
விழுப்புண்களை ஆற்றவும்
இயற்கையால் முடியவில்லையெனும் ஆதங்கத்தில்
பரிதி
பூமிபிளந்து
தனக்கான புதைகுழியைத் தோண்டத்தொடங்குகின்றது

அடர்ந்த காட்டில்
மூன்று நாட்களாய் சாப்பிடாதலையும்
ஒரு கெரில்லாப்போராளி
புழுக்கள் மிதக்கும்
அழுக்குத்தண்ணீரை அருந்துகையில்
விழிகளில் விரியும்
மக்களுக்கான கனவுகள்
பிரசவித்துவிடுகின்றன
எளிதில் தீர்க்கமுடியா
போர் குறித்த சிக்கலான சூத்திரங்களை.

2006.09.13
(திலீபனுக்கு.......)
ஓவியம்

ஒற்றைத்தாளில் படியும் நினைவுகள்....!

Monday, September 11, 2006

-யாருக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் யாருக்காகவோ எழுதிய குறிப்புக்கள்-

சென்ற சனிக்கிழமை Black Eyed Peasன் concertற்கு போயிருந்தேன். ஷக்கிராவின் (Shakira) இசை நிகழ்வுக்குப் போகவேண்டும் என்று நுழைவுச்சீட்டுக்கள் தேடிக்கொண்டிருந்தபோது, Black Eyed Peasம் நகரிற்கு வருகின்றார்கள் என்று அறிந்து சந்தோசத்தில் இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுக்கள் எடுத்திருந்தேன். 15,000 ற்கு மேற்பட்ட இரசிகர்கள் என்றால் கொண்ட்டாட்டத்திற்கு சொல்லவும் வேண்டுமா? என்ன சற்றுக் குளிராய் இருந்தது. சரி கதகதப்பாயிருக்கட்டும் என்று நண்பனும் நானும் பியரும் கூலரும் வாங்கிக்கொண்டு வந்தால் ரிகன்னா (Rihanna) சிறப்பு விருந்தாளியாக வந்து கலக்கத் தொடங்கியிருந்தார். DJ வாரும் வாரும்; வந்து பாட்டைத் திருப்பப் போடும், நான் ஆடப்போகின்றேன் என்று அவர் எனக்கு தனிப்பட்ட அழைப்புக் கொடுக்க, மேடையில் அசல் ஆட, கீழே நூற்றுக்கணக்கான ரொரண்டோ ரிகன்னாக்கள் ஆட, யாரை எந்த ஒழுங்கில் பார்த்து இரசிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கவே அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. ஏன் தான் இப்படியான அரிய தருணங்கள் சடுதியாய் முடிந்துவிடுகின்றன என்பது ஒருபோதும் விளங்குவதில்லை.

Rihanna-32
Rihanna

Black Eyed Peas பற்றி நேரங் கிடைத்தால் விரிவாக எழுதவேண்டும். குளிர் கூட கூட நண்பன் சொன்னான், 'இவங்கள் நுழைவுச்சீட்டோடு மூன்று பியர்கள் இலவசமாய் வழங்கியிருக்கவேண்டும்' என்று. நானும் 'இரசிகர்களின் மனமறிந்த பொன்மனச்செம்மல் நீதான்டா' என்றொரு பாராட்டுப்பத்திரம் அவனுக்கு வழங்கிவிட்டு, 'பசிக்கிறது வா Pizza Slice வாங்கிச் சாப்பிடுவம்' என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன். பசி தாஙகமுடியாமல் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் இரண்டாவது முறையும் Pizzaவிற்கு போக, ஆயிரக்கணக்கான சனத்துக்கு இடையிலும் எங்களை அடையாளங்கண்டுகொண்ட அந்த Pizza விற்கும் பெண், Oh you guys again?ஆ என்றார். நாங்களும் ஓமோம் இசைத் தாகத்தைவிட வயிற்றுப்பசிதான் எங்களுக்கு அதிகமாயிருக்கிறது என்று அவரைச் சமாளித்துவிட்டு வர, Will I Am, 'Toronto Girls are so hot' என்று கூற நாங்களும் Pizza உண்ட தென்பில் ஓமோம் என்று உரத்தகுரலில் வழிமொழிந்தோம். பிறகு முடிகின்ற நேரத்தில் Black Eyed Peas, க... க... கனடா... ரொ... ரொ... ரொரண்டோ என்று -கிட்டத்தட்ட தமிழ் பாடல் beatல்- தொடங்கி Jump Jump Toronto Jump Jump என்று அவர்கள் உச்சநிலைக்குப் போக, நாங்கள் எல்லோரும் Fly தான். நல்லவேளை அன்றைக்கு வானம் சற்று உயரத்தில் இருந்தது, இல்லாவிட்டால் எங்களின் தலைகள் வானத்தில் முட்டி எத்தனைபேருக்கு காயம் வந்திருக்குமோ தெரியாது.

blackeyed
Black Eyed Peas
...................................

'இருக்கும்
பிரியமான மனிதர்களையும்
இழப்பதற்கு இன்னொரு பெயர்தான்
இலக்கியம்'

என்று ஒரு சோர்ந்துபோன நாளில் பதிந்து வைத்ததைப்போல, பிரியப்பட்டு வாங்கும்/சேகரிக்கும் பொருட்களை உடைக்கவும் தொலைக்கவும் செய்யும் பொழுதுகளிலும் சோகம் புகைமூட்டமாய் கவியச் செய்கிறது. அதிலும் பிரியமான மனிதர்கள் வாங்கித்தந்த பொருட்களை தொலைத்துக் கொண்டிருக்கையில், அந்த மனிதர்களின் அன்பையையும், நம் மீது அவர்கள் வைக்கும் நம்பிக்கையையும் இழப்பதுபோன்ற உணர்வுதான் தலைதூக்குகின்றன. என்றாலும் எவ்வளவுதான் அக்கறையாயிருந்தாலும் இழப்பதும் உடைப்பதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

...................................

இரண்டு வாரங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன். ஆங்கிலப்படம் பார்ககலாம் என்று நானும், நண்பனும் தீர்மானித்து எந்த புதுப்படம் பார்ப்பது என்று அலசிக்கொண்டிருந்தோம். World Trade Center பார்ப்பமா என்று நான் கேட்க, அமெரிக்கத் தேசியத்தையும், 'அமெரிக்காக் கனவு'களையும் பார்ப்பதை விட, தூங்கிவிடுவது நிம்மதி தரும் ஒருவிடயம் என்றான் நண்பன். அதுவும் சரிதான் என்று நானும் வழிமொழிந்து, அன்றையபொழுதில் எந்தப்படத்துக்கும் போகாமல், லெபனானில் நடந்த சம்பவத்துக்கு கனடா எடுத்த நிலைப்பாட்டுக்காய் Prime Minister Stephen Harperஐ திட்டிக்கொண்டிருந்தோம் இந்த லெபனான் பிரச்சினையின் நீட்சியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த ப்ளொக் க்யூபெக்காவும் (Bloc Quebec), 'Stephen Harperடனான் தேனிலவு முடிந்துவிட்டது' என்று அறிவித்திருந்தது. மற்றொரு கட்சியான என்டிபியின் தலைவர் Jack Layton, 'Prime Minister Stephen Harper, ஜோர்ஜ் புஷ்சின் cheer leader' என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். இப்போது ஆப்கானிஸ்தானில் அந்தமாதிரி அல்லவா கனடிய இராணுவம் அடிவாங்குகின்றது. இந்த அரசியல் கோமாளித்தனத்தில் பரிதாபமாய் காவுகொள்ளப்படும் இராணுவத்தினரைப் பற்றி ஆளும்வர்க்கத்திற்கு ஏது கவலை?

ம்...அடிக்கடி இப்படித்தான் எதற்கோ செல்வதற்கு/செய்வதற்கு என்று தீர்மானித்து எதையெதையோ நாங்கள் செய்துகொண்டிருப்போம். சாதாரணமாகவே ஒரு விசர் நிலையில் திரியும் எஙகளைப் போன்றவர்கள் விசர்த்தனமாய் அமெரிக்கா புகழ் பாடும் திரைப்படங்களைப் பார்த்து இன்னும் விசர்நிலையின் உச்ச நிலையை அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் அனேகமாய் தியேட்டருக்குச் சென்று பார்க்கின்ற படங்களாய் Superman Returns, Pirates of Caribbean போன்ற வகைகளய்த்தான் இருக்கும். இவ்வாறான படங்கள் பிடிக்கவில்லையானால் கூட, தியேட்டரோடு வசைகளை எறிந்துவிட்டு வெளியில் வரும்போது இயல்புக்கு வந்துவிடலாம்.

Ladder_49_poster

தற்செயலாய், Ladder 49 என்ற படத்தை பார்க்கும்போது அது மிகவும் பிடித்துவிட்டது. இத்திரைப்படத்தில் Joaquin Phoenix, John Travolt போன்ற தேர்ச்சி பெற்ற நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள் என்பதால் அல்ல, எளிமையான கதை சொல்லல் முறையில் மனதில் சலனங்களை உருவாக்கியிருந்தது. தாதித் தொழிலை(Nurses), sex symbol ஒன்றாய் ஆக்குவதைப் போலதான் அனேகமாய் Firefighters ஐயும் ஒரு symbol ஆக்குவார்கள். ஆனால் இந்தப்படம் அவர்களின் இன்னொருபக்கத்தை -வீரதீர பராக்கிரமச் செயல்கள் அன்றியும், 'ஆண்மையின் அழகு' வழிவதாகவும் காட்டாது- ஒரு சாதாரண தீயணைப்பாளனின் பார்வையில், அவனுக்குப் பின்னுள்ள குடும்பம், கடமை, ஆபத்துக்கள் என்று நகர்கின்றது.

நீ வாங்கித் தந்த ஈரானிய படங்களும், அகிரா குரோசோவின் Dreams ம் இருக்கின்றன. மனம் அமைதி கொள்கின்ற நிசப்தமான பின்னிரவுகளில் அவற்றைப் பார்க்கத் தொடங்கவேண்டும். மேலும் இங்கே இப்போது சீனா கலாச்சாரத்தை மையப்படுத்தி Lantern Festival நடக்கின்றது. கரீபனா பார்க்கப்போனபோது இந்த விழாவுக்காய் அலங்கரிக்கத் தொடங்கியிருந்த மிகப்பிரமாணடமான புத்தர் சிலைகளும், ட்ராகன்கள் போல வடிவமைக்கப்பட்ட படகுகளும் மனதை மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன.
உன்னை அதிகம் வசீகரிப்பவை சீனக் கலாச்சாரமும், ஆபிரிக்காக் கலாச்சாரமும் தானே. நீயும் இந்நகரில் இருந்திருந்தால் அந்த நிகழ்வுக்கு சேர்ந்து போயிருக்கலாம்.

...................................

திருமணங்கள் மட்டுமில்லை ஏனைய அலுப்பூட்டும் விழாக்களுக்கும் அவ்வளவாய் போவதில்லை. ஈழத்தில் இருந்தபோது பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதிலேயே சாமர்த்திய விழாக்களுக்குப் போவதை நிறுத்தியாயிற்று. சிலவேளைகளில் மச்சாள்மார், நெருங்கிய உறவுகளின் சாமத்திய விழாக்களுக்கு வாவென்று அம்மா கெஞ்சுகின்றபோதும் போவதில்லை. பிறகு பெற்றோரும் விழாக்கள் நடக்கும்போது தங்களை காரில் ஏற்றி இறக்க மட்டும் என்னை உதவிக்கு கூப்பிடுவதோடு அமைதியாகிவிட்டார்கள். நண்பர்களின் திருமணங்கள் என்கின்றபோது தவிர்க்கமுடியாது தலைகாட்ட வேண்டியிருக்கிறது. அண்மையில் வளாகத்தில் படித்த நண்பனின் திருமணத்துக்கு போவது என்று தயார்படுத்திவிட்டு கொஞ்சம் உறங்கி எழுந்தால், என்னைத் தன்னோடு கூட்டிப்போவதாய் உறுதியளித்த நண்பன் மறந்துபோய் விழாவுக்குப்போய்விட -அவனது செல்லிடப்பேசியும் உயிர்ப்பில்லாது உறங்கிவிட- என்ன முகவரி என்றும் ஒழுங்காய்க்கேட்காமல் விட்டிட்டேனே என்று கொஞ்சநேரம் குழம்பிவிட்டு...... பிறகு என்ன? வழமைபோல, எனக்கு எனது தூக்கத்தைத் நிம்மதியாய்த் தொடரச்செய்யும் வரம் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தேன். நல்லவேளை திருமணம் நடந்த நண்பனும் எங்களின் அலைவரிசையில் இருப்பதால் 'நிலைமையை' விளக்கியதும் பின்னர் விளங்கிக்கொண்டான்.

என்றாலும் என்ன? என்னைப் பழிவாங்குவதற்கென்று ஒரு திருமண வைபவம் காத்துக்கொண்டிருந்திருக்கின்றது என்பது எனக்கு முன்கூட்டியே தெரியாமற்போய்விட்டது. இந்தப் பெண்ணையும் அவரின் குடும்பத்தையும் நெடுங்காலமாய் தெரியும். எங்கள் குடும்பம் எல்லோருக்கும் அவர்கள் மிகவும் பரீட்சயமானவர்கள். வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, என் பெற்றோர் -அக்காவின் திருமணத்துகாய்- கொழும்பு சென்றபோது, தங்கள் வீட்டுக்கு எந்த நேரமும் வந்து சாப்பிடலாம் என்று அன்போடு அழைப்பு விடுததவர்கள். அத்தோடு தமிழ் ஆக்கள் குறைந்த அந்நகரில், தனிமை ததும்பி வழிந்த நாட்களில், அவர்கள் நட்பாய் இருந்தது மிகவும் இதமாய் இருந்த பொழுதுகள் அவை. 'எழுதிக் கிழிப்பதில்' அலுப்பு வந்து நிறுத்தியிருந்த காலகட்டத்தில, நீ எழுதத்தான் வேண்டும் என்று நாலைந்து பக்கத்தில் நம்பிக்கை தரும் வார்த்தைகளில் அவர்களில் ஒருவர் எழுதித்தந்தது இப்போதும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. அந்தப்பெண்களில் ஒருவருக்கு திருமணம் சில வருடங்களுக்கு முன் நடந்தபோது -தேர்வுகள் இருக்கிறது என்று - சும்மா தட்டிக்கழித்துவிட அவர் என்னோடு பேசுவதை பின்னாளில் நிறுத்திவிட, அந்தப்பயத்தில் அவர்களின் சகோதரியின் திருமணத்துக்காவது தலைகாட்டவேண்டும் என்று போயிருந்தேன்.

எண்ணூறு பேர் அமரக்கூடிய பெரிய மண்டப்பத்தில்தான் நிகழ்வு நடந்தது. நான் போவதற்கு முன்னால்- மாப்பிள்ளையும் பெண்ணும்- குதிரை வண்டிலில்- வந்திறங்கினார்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அப்பாடா நான் அந்த இம்சையிலிருந்து தப்பிவிட்டேன் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட, சட்டென்று இரண்டு பெரிய திரைகளில் 'சுட்டும் விழிச்சுடர்' ஒலிக்க, அட நம்ம அசினை பார்க்கலாம் என்று விழிகளை உயர்த்தினால், அங்கே இந்த மாப்பிள்ளையும் பெண்ணும், அசினும் சூர்யாவுமாக மாறி ஏதோ ஒரு பார்க்கில் காதல் டூயட் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அஸினின் தீவிர இரசிகனான என்னால் இதை எல்லாம் சகித்துக்கொள்ளமுடியுமா என்ன? இதுக்கு மேல் இருக்கமுடியாது என்றுதான் வெளியே வந்து உன்னோடு தொலைபேசுகின்றேன்.

-----------------------------------------

சென்ற வாரவிறுதியில் ஒரு நண்பன் கார் விபத்தில் சிக்கி தலையில் பலமாய் அடிப்பட்டு இன்னும் நினைவு திரும்பாமல் வைத்தியசாலையில் இருக்கின்றான். அவன் விரைவில் நலம்பெற வேண்டும் என்று மனம் கதறுகிறது. என் சிறுவயது நண்பன். ஊரில் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே வகுப்பில்தான் நாம் இரண்டுபேரும் படித்திருந்தோம். அவனோடு தான் முதன் முதலில் சைக்கிள் ஓடப்பழகியதும், கிரிக்கெட் விளையாடுவதற்கு என ஊர் ஊராய் அலைந்ததும் என்று பலப்பல நினைவுகள் மனதில் மிதக்கின்றன. புலம்பெயர்ந்த பின் பழைய நட்பின் நெருக்கம் குறைந்துவிட்டாலும், விபத்தில் சிக்கிவிட்டான் என்றறிந்தவுடன் அவன் இயல்புநிலைக்கு வரவேண்டும் என்று மனம் மிகவும் அவாவுகிறது. இந்த நினைவின் கனத்தோடு வாரப் பத்திரிகையை புரட்டினால், சென்றவாரம் இங்கு பதினாறு வயதும், இருபத்திரண்டும் வயதுமான இரண்டு தமிழ்ப்பெண்கள் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கின்றார்களாம். போரை விட்டு எவ்வளவு தூரம் விலத்தி வந்தாலும் அநியாயச் சாவுகள் எம்மை விட்டு என்றும் அகலாது போலும்.
.................................

வாசிப்பு இடைமறிப்பு

Wednesday, September 06, 2006

ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து....

' *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை., மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்கு கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக் காக்க மதங்கள் இல்லை. சாதியையும், மதத்தையும், ஆண் மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விதத்தில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழஙக முடியும்.'

raj

'தலித்திய விமர்சனக்கட்டுரைகள்' எனப்பெயரிடப்பட்ட இத்தொகுப்பில் வெவேறு காலகட்டத்தில் ராஜ்கெளதமனால் எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகள் இருக்கின்றன. 'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்', 'குடும்பம் பெண்ணியம்', 'பின்னை நவீனத்துவமும் தலித் சிந்தனைகளும்', 'தலித்தியப்பார்வையில் பாரதி', 'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்பவை குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும். விரிவாகவும், சான்றாதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் இவை உண்மைக்கு அண்மையாக இருக்கின்றன என்ற வாசிப்பனுவத்தை எளிதாகப் பெறமுடிகின்றது.

'தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்' என்ற கட்டுரையில் ஜெயகாந்தன் எப்படி ஒரு காலத்தில் கலகக்காராக இருந்து இறுதியில் 'ஜெயஜெய சங்கரா' பாடி இந்துமதப்பெரும் ஜோதியில் கலந்தார் என்பதை ராஜ்கெளதமன் அடையாளங் காட்டுகின்றார். 'இந்து மத்த்தில் புதைந்துள்ள கர்மவினைக் கோட்பாடில் ஏறுவரியையை ஜெயகாந்தனிடம் காணமுடியும்' என்று ஜெயகாந்தனுக்கு எழுதப்பட்டுள்ள முடிவுரை சரிபோலத்தான் தோன்றுகின்றது. அதேபோன்று ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் நாவல்களில் சித்தரிக்க்கபடும் தலித்துக்கள் எவ்வாறு கீழ்த்தரமாகக் காட்டப்படுகின்றார்கள் என்பதைச் அடையாளங்காட்டுவதோடு, பூமணி போன்ற சில தலித் எழுத்தாளர்கள் கூட மெல்ல மெல்ல உயர்சாதிக் கதாபாத்திரங்களை தங்கள் படைப்புக்களில் முக்கியபாத்திரங்களாக்கி நாவல் படைப்பதையும் ராஜ்கெளதமன் சுட்டிக்காட்டத்தவறவில்லை. அதே போன்று டானியலின் நாவல்களை முன்வைத்து, -எந்தமதமானாலும்- மதம் மாறினால் கூட சாதி இழிவும், பிரிவுகளும் நீங்கிவிடாது என்பதையும் கட்டுரையாசிரியர் கவனப்படுத்துகின்றார்.

நிறப்பிரிகை விவாதக்கூட்டமொன்றிற்காய் 90களில் வாசிக்கபட்ட, 'குடும்பம், பெண்ணியம்' முக்கியமான ஒரு கட்டுரை. பெண்ணிற்கான சுதந்திரத்தை பெண்கள தமக்கான வழிகளில் தேடுவதே மிகச்சிறந்த வழியாக இருக்குமென்பதையும், தலித்துக்களைப் போலவன்றி இன்னும் கடும் சவால்களையும் வீழ்ச்சிகளையும் சந்தித்தே பெண்கள் தமக்கான விடுதலையைப் பெறமுடியும் என்று ராஜ்கெளதமன் இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றார். மேற்கத்தைய பெண்ணிய சிந்தனைவாதிககளின் முக்கிய விவாதப்புள்ளிகள் மிக விரிவாக இக்கட்டுரையில் மேற்கோள்களுடன் பேசப்படுதைக் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

அதேபோன்று பாரதியைத் தலித்தியப் பார்வையில் கட்டுடைக்கும் கட்டுரையும் மிக அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது. 'பெண்ணையும், தலித்துக்களையும் முறையே சக்தி, சகோதரர்கள் என்று ஓர்மையாய் மதிக்கின்ற பாரதியே, கோழைத்தனத்தையும், இழிவையும் குறிப்பிடும்போது ஓர்மையின்றி 'பெட்டை', 'புலை' என்று எழுதிவிடுகின்றார் (ப 158). பாரதி தனது காலத்தைய பிற உயர்சாதிக்காரர்களின் சிந்தனைகளில் இருந்து பெரிதாக வேறுபடவில்லை என்றாலும் (அதற்கான ஆதாரங்கள் விரிவாக இக்கட்டுரையில் பேசப்படுகின்றன), பாரதி உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மனதார விரும்பியவர் என்பதை எவரும் துளியளவும் சந்தேகிக்கமுடியாது என்கிறார் ராஜ்கெளதமன்.

'தலித் பார்வையில் (இந்து) மதம்' என்ற கட்டுரையில் தலித்துக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மூன்று முக்கிய ஆளுமைகளான அண்ணல் அம்பேத்கார், பெரியார் ஈ.வே.ரா, அயோத்திதாச பண்டிதர் பற்றி பேசப்படுகின்றன. அம்பேத்காரும், அயோத்திதாசரும் சாதி ஒழிப்பைப் பற்றி அதிகம் பேசியதாகவும், பெரியார் மத ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் இக்கட்டுரை பேசுகிறது. நாத்திகராய் பலர் மாறினாலும் அவர்களுக்குள்ளும் சாதியக்கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதால் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்காரும், அயோத்திதாசரும் முன் வைத்த சாதி ஒழிப்பே. பெரியார் முன்வைத்த மத ஒழிப்பை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றார் ராஜ்கெளதமன். அதேவேளை மத ஒழிப்பைவிட சாதி ஒழிப்புக்காய்த்தான் நீண்ட பாதையில் மிகவும் கடினமாய் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றார்.

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், அயோத்திதாசர் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சாதிக்குள் முடங்கிப்போனதையும், அம்பேத்கார் -சாதி ஒழிப்புக்கு மட்டுந்தான் முக்கியத்துவம் கொடுத்தார் என்றால்- ஏன் அவர் தலித்துக்களை மதங்கள் (பவுத்தம், இஸ்லாம்) மாறச்சொல்லியிருக்கவேண்டும்? அதற்கான பின்னணி என்ன? என்பதைக் கவனப்படுத்தவும் தவறவிட்டு விடுகின்றார் ராஜ்கெளதமன். இன்றைய தலித் விடுதலை என்பது அம்பேத்காரியத்தையும், பெரியாரியத்தையும், மார்க்ஸிசத்தையும் உள்ளடக்கி, ஒன்றின் இடைவெளியை/போதாமையை மற்றொன்றதை வைத்து நிரப்புவதன் மூலம் சாத்தியமாவதற்கான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் அம்பேதகாரையோ, பெரியாரையோ ஒருவருக்கொருவர் தாழ்த்தி -தனிப்பட்ட மனிதர்கள் மீதிருக்கும் காழ்ப்புணர்வுக்காய்- அரசியல் செய்யும் வழிமுறைகளை தவிர்த்தல் நன்றாக இருக்கும் போல தோன்றுகின்றது.

மிக விரிவாக எழுதப்பட்ட (மேலே குறிப்பிடப்பட்ட) கட்டுரைகள் எவ்வளவு முக்கியமானவையோ, அதேபோன்று ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமானவையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், 'சிலுவைராஜ் சரித்திரம்' 'காலச்சுமை' போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இலக்கியத்திலும் தலித் அரசியலிலும் ஈர்ப்புள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஒரு ஆளுமையாக/ வழிகாட்டியாக எழுத்தால் இருக்கக்கூடிய ராஜ்கெளதமனும் -நாளை ஜெயகாந்தனைப் போல-'ஜெய ஜெய' கோசம் பாடிக்கொண்டு பார்ப்பனியத்தில் இரண்டறக்கலந்து நமக்கு ஆசிகளை வழங்காமல் இருந்தால் சரி.


* தமிழக தலித்தும் தலித் இலக்கியமும் என்ற கட்டுரையிலிருந்து...

இண்டியா அரி - சிறு குறிப்புக்கள்

Friday, September 01, 2006

டென்வர், கொலராடோவில் 1975ல் பிறந்த இண்டியா அரி (India Arie), பாடுவதில் மட்டுமில்லாது அவரது வீரியமிக்க பாடல்வரிகளாலும் அதிகம் கவனம் பெறுபவர். 2000 ஆண்டளவில் இசையுலகிறகு வந்து இதுவரை மூன்று இசைத் தொகுப்புக்களை (Acoustic Soul ,Voyage To India, Testimony: Vol. 1, Life & Relationship) வெளியிட்டுள்ளார்.
india3
'எனது இசைத்தட்டை வெளியிடும்போது எந்த நிறுவனத்தினூடு வெளியிடவேண்டும் என்று அலையவில்லை; என்னை, எனது இசையை எவற்றோடும் சமரசம் செய்யாமல் வெளியிடவேண்டும் என்பதில் மட்டுமே அதிகம் கவனஞ்செலுத்தினேன்' என்று கூறுகின்ற இண்டியா அரி, சென்ற மாதமளவில் Testimony: Vol. 1, Life & Relationship என்ற தனது மூன்றாவது இசைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். மகாத்மா காந்தியின் மீதிருந்த ஈர்ப்பினால் இண்டியா (India) என்ற பெயரையும், அரி (Arie) என்று தாயால் செல்லமாய் அழைக்கப்பட்டதை பிற்பகுதியாகவும் சேர்த்து இண்டியா அரி ஆகியிருக்கின்றார்.

2001ல் வெளிவந்த 'வீடியோ' என்ற பாடல்தான் இண்டியா அரியின் தனித்துவத்தை வெளிப்படுத்தியது. தனது பெண் என்ற அடையாளத்தை அந்தப் பாடலில் இண்டியா அரி தேட முயல்கின்றார்...

'நான் உனது வீடியோவிலிருக்கும் சாதாரண பெண் அல்ல
நான் ஒரு பேரழகியைப் போல வடிவமைக்கப்பட்டவளுமல்ல
ஆனால் நான் அறிந்துவைத்திருக்கின்றேன்
என்னை நானே எப்படி அளவிறந்து நேசிப்பது என்று
ஏனெனில் நானொரு அரசிளங்குமரி
எனது பெறுமதி நான் அணிந்திருக்கும் ஆடைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை
இண்டியா அரியாக இருப்பதற்கு எது தேவையோ
அதை மட்டுமே நான் அணிவேன்'


இந்தப்பாடலோடு அண்மையில் பிரபல்யம் அடைந்த பிங்கின்(Pink), Stupid Girls ஐ ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிங்கும் தனது பாடலில் வெகுசன ஊடகங்கள் பெண் பற்றி கட்டமைக்கபடும் விம்பங்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அதில் ஒரிடத்தில் இப்படி வரும்...., 'என்னவாயிற்று? /அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாகும் இந்தப் பெண்ணின் கனவுக்கு/ அவள் இப்போது 50CENTன் வீடியோவில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்/' என்று.

தனிப்பாடலான 'வீடியோ' இண்டியா அரியை பிற பாடகர்களிலிருந்து வித்தியாசமாய் காட்டியது என்றால், அவரது இரண்டாவது இசைத் தொகுப்பான் 'இந்தியாவுக்கான பயணம்' (Voyage to India), அவரை அதிக இசை இரசிகர்களிடம் அறிமுகம் செய்திருப்பதோடு கிராமி விருதுகளையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

'எதுவென்றாலும் நீ எனக்குச் சொல்லித்தந்தாய்
நானும் காரணங்களோடு கற்றுக்கொண்டேன்
நான் நம்புகின்றேன்; நாங்கள் நட்சத்திரங்களில் எழுதப்பட்டவர்கள்
'நாளை' எதை வைத்திருக்கின்றது என்று தெரியாது
நான் இந்தக் கணத்தில் வாழ்கின்றவள்
நான் ஆணெனும் உனக்காய் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றேன்
நீ, நான் - எனது பிரார்த்தனைகளில் கேட்கின்ற எல்லாமாயும் இருக்கின்றாய்
ஆகவே உன்னை எனது தேவதைகள்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும்
உனது அன்பு என் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றது
நீ எனது வாழ்வின் பிடிமானம்
நான் சிரித்துக்கொண்டிருப்பதற்கும் நீயே காரணம்
நீ ஒரு அழகிய வியப்பு!
'

என்று தனது இரண்டாவது இசைத்தட்டில் மலரும் புதிய உறவில் சிலிர்த்துப்போகின்ற இண்டியா அரி, மூன்றாவது இசைத்தட்டிலும் உறவுகளைப் பற்றியே பேசுகின்றார். தனது கடந்த (மூன்றாண்டு)கால உறவையும், பின் நிகழ்ந்த பிரிவையும் இறுதியாய் வந்த இசைத்தொகுப்பில் சொல்ல விளைவதாகவும், ஆனால் கசப்பான நினைவுகளில் தங்கிவிடாது வாழ்வின் இயல்பென வலிகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்வதையே தான் பேச விரும்புவதாகவும் அரி கூறுகின்றார். Wings of Forgivenessல்....

'நெல்சன் மண்டேலாவால்
தன்னை ஒடுக்கியவர்களை மன்னிக்கமுடியுமென்றால்
நான் நிச்சயம் உன்னை மன்னிப்பேன், உனது தனித்துவத்திற்காய்.
.....
காந்தியால் persecutionஐ (தமிழ் மொழிபெயர்ப்பு என்ன?) மன்னிக்க முடியுமென்றால்
நிச்சயமாய் உனது பரிதாபத்துக்காய் என்னால் உன்னை மன்னிக்கமுடியும்.
....
இயேசு அவருக்குச் செய்யப்பட்ட கொடூரங்களை மன்னிக்கின்றார் என்றால்
நிச்சயமாய் நாங்கள் இதற்கொரு முடிவு கண்டு நகரமுடி
யும்'

என்று மன்னிப்பதன் மகோன்னதத்தை அருமையாக கூறுகின்றார். அதே பாடலில்.....

'குற்றங்களும் இரகசியஙளும்
நிறைந்த கடலில்
நான் நீந்தத்தொடங்கினேன்
என்னை யாரென
அடையாளங்காண்பதற்காய்.....
யாருமற்ற ஒரு தீவில்
எனக்குரிய தனிமையில்
உயர்ந்த உண்மை எதுவெனக் கேட்டேன்...'

என்று கூறிவிட்டு, நமக்கு நாமே நேர்மையாக இருப்பதுதான் அதியுயர்ந்த உண்மையாக இருக்கும் என்று தனக்குச் சொல்லப்பட்டதாய் கூறிக்கொள்ளவும் செய்கின்றார்.
indianew
அதே போல இன்னோரு பாடலான 'I am not my hair', ஒரு பெண்ணின் தலைமயிரை வைத்து சமூகம் செய்யும் அரசியல் குறித்து பேசுகின்றது. (தமிழ்பெண்களுக்கு உள்ளது போன்றே) கறுப்பினப் பெண்களுக்கு அவர்கள் எப்படி தலைமயிரை கட்டமைக்கவேண்டும் என்ற நெருக்குதல்கள் இருக்கின்றன என்கிறார் அரி. ஒவ்வொரு பருவத்திலும் எப்படி எப்படி தனது தலைமயிர் அலங்காரங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தன என்றும், பிறர் இவ்வாறான தலைமயிர் அலங்காரத்தை முன்மாதிரியாக வைத்து எப்படி எல்லாம் ஒரு பெண்ணைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்/பேசுகின்றனர் என்பதையும் இந்தப்பாடல் பேசுகிறது. இறுதியில் தனக்குரியதை தேர்வு செய்யும் உரிமை தனக்கு மட்டுமே என்று கூறுகின்றார். பெண்களின் தலைமயிரை வைத்து ஆண்கள் செய்யும் அரசியலை மிக அழகாக புற்றுநோய வந்த பெண்ணின் படிமம் மூலம் உடைத்துக்காட்டுகின்றார்.

மார்பகப் புற்றுநோயும், அதன் பின்பான சிகிச்சையும்
அவளது அழகையும் பெருமையையும் எடுத்துச் சென்றன
அவள் கடவுளிடம் உறுதிமொழி எடுத்தாள்
நான் உயிர்தப்பினேன் என்றால்
எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சந்தோசிப்பேன் என்று
தேசியத் தொலைக்காட்சியில்
அவளது கண்கள் மின்னலடிக்கின்றன வைரங்களாய்
அவளது வழுக்கைத் தலை ஒரு முழுநிலவாய் மினுங்குகின்றது
முழு உலகுக்குமாய் அவள் இப்போது பாடிக்கொண்டிருக்கின்றாள்...hey
'

indai2

வனப்புடன் இருப்பதாய் கட்டமைக்கப்படும் அமெரிக்க வாழ்வியலை, பிரேசில் நாட்டில் தான் சந்தித்த பையன் ஒருவனின் பார்வையால் அரி சீர்குலைத்துக்காட்டுகின்றார் இப்படியாக....,

'என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை
உணரவைத்தான்
பிரேசில் நாட்டில்
ஒரு ஒதுக்குப்புறத்தில் சந்தித்த
இளஞ்சகோதரன்;
அவனும் என்னைப் போலவே பாடவிரும்பினான்
அவனது வீட்டுக்கு யன்னல்களோ கதவுகளோ இருக்கவில்லை
ஒரு எளிய வாழ்க்கை வாழும் அவன் மிகுந்த ஏழ்மையாக இருந்தான்
இவற்றுக்கும் மேலாய் அவனுக்கு பார்வையும் இல்லை
ஆனால் அது அவன் 'ஒளி'யைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை
அவன் கேட்டான், அமெரிக்கா எப்படி இருக்குமென்று
எனது பதில் முழுதும் முறைப்பாடுகளாகவே இருந்தன
அவன் சொன்னான், இங்கே வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது...
அவன் எனக்கு சொல்லித் தந்தான்;
சொர்க்கம் என்பது எனது மனதின் உள்ளேதான் உள்ளது என்று.'

Pop, R&B, Rap பாடுபவர்களின் பாடல்களை ஓரளவு உற்றுக கவனிக்கின்றவன் என்றவகையில், இண்டியா அரியின் பாடல் ஒவ்வொன்றும் ஒரு கவிதைக்குரிய தனித்துவத்துடன் மிளிர்கின்றன என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம் என்று நினைக்கின்றேன் (Kanye Westன் பாடல்களிலும் இவ்வாறான நம்பிக்கைகள் துலங்குகின்றன). இண்டியா அரியின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கதையை அவற்றின் பின்புலங்களுடன்/அரசியல்களுடன் விரித்துச் சொல்ல முயல்கின்றன. அவற்றில் அதீத காழ்ப்போ, வெறுப்போ இல்லாது சமூகத்தின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து மனிதர்களை பலவீனங்களுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வை இன்னும் ஆழமாய் நேசிக்க அரியின் பாடல்கள் கற்றுத் தருகின்றன என்பதுவும் முக்கியமானது. மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட நொய்ந்துபோன வார்த்தைகளை வைத்து பாடல்கள் இயற்றப்படுவதைத் தவிர்த்து தனக்குரிய தனித்துவங்களுடன் புதிய படிமங்களையும், அர்த்தங்களையும் தேடும் அரியின் பாடல்கள் கேட்கும் எவரையும் இலகுவில் வசீகரிக்கச் செய்வதில் வியப்பேதுமில்லைதானே.

குறிஞ்சிப்பூ

Thursday, August 31, 2006

பயணஞ் செய்தலை ஓடுகின்ற ஆற்றுக்கு உவமிக்கலாம் போலத் தோன்றுகின்றது. இப்போது ஓடுகின்ற ஆறு முன்னர் ஓடியது போன்றதல்ல என்பது போல ஒவ்வொரு பயணமும் புதுப்புது அனுபவங்களை, சிலிர்ப்புக்களை தந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே நேர்கோட்டில் நகர்ந்துகொண்டிருக்கும் நாளாந்த வாழ்வை இடைவெட்டி ஒழுங்கைக் குலைக்கச் செய்கின்ற பயணங்கள் எப்போதும் சுவாரசியந்தரக்கூடியனதான். வீட்டில், வீட்டின் அறைகளுக்குள் மட்டுமே மர்மச்சுழிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன எனக்கற்பிதம் செய்து, பொழுதை வெயிலோடு பந்தென எறிந்து அலுப்புடன் ஆட்டம் ஆடுகின்றவனுக்கு வெளியே கால்களை முன்னகர்த்தும் எந்த அனுபவமும் அலுக்கப் போவதுமில்லை.

வாழ்வை ஒரு கொண்டாடும் நகர் அது. தம் பண்பாடுகளை கலாச்சாரங்களை செழிப்புடன் வைத்திருக்க விரும்புவர்கள் எனினும் தமது நம்பிக்கைகளை எவர் மீதும் திணிக்க விரும்புவதில்லை அந்நகர் வாழ் மக்கள். தேவாலயங்கள், ஆடுகின்ற கிளப்புக்கள், நிர்வாண விடுதிகள், தெருவில் சிகரெட் பிடித்தபடி,ஒளிரும் தோள்பைகளை தாங்கியபடி மனிதநாகரிகத்தின் 'ஆதித் தொழில்' செய்யும் பெண்கள், ஒரினப்பாலாருக்கான் கேளிக்கை அரங்குகள், 'பெண்களுக்கு மட்டும் அனுமதி'யென அழைப்புவிடுக்கும் விடுதிகள் எல்லாமே/எல்லோருமே நிரம்பக் கிடைக்கும் உங்கள் நம்பிக்கைக்களுக்கேற்ப, நீங்கள் வரிந்துகொண்ட வாழ்வின் பாதைக்கேற்ப எதையேனும் ஒன்றைத் தெரிவுசெய்யலாம்; இல்லையெனில் விலத்திப்போகலாம். ஆனால் எவரும் எவரையும் மிரட்டமுடியாது; எவரும் எவர் மீதும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விடவும் முடியாது.

e4

ஆமாம் அந்த ஆண்டு
மலர்கள் நிறையப் பூத்திருந்த ஓர் ஆண்டு
கண்ணுக்கு மைதீட்டிய பலபெண்கள்
அந்த ஆண்டில்
வீதிகளில் உலவினர் தேர்போல
(ப 10)


ஊரில் இருந்தவரை பழமை வாய்ந்த கோயில்களின் மீது ஈர்ப்பிருந்தது. வருகின்ற வருமானத்துக்கேற்ப வர்ணங்களைப் பூசி, இன்னுமின்னும் மனிதர்களை வர்ண'ஜிகினா'க்காட்டி உள்ளிழுக்கும் கோயில்களைவிட, பழமை ஊறிய, பாசி படிந்த, சிலைகளின் செப்பு துருவேறிய தலங்கள் மீது அதிக ஈர்ப்புண்டு. அதுவரை சாதாரணமாய் தெரிந்த பெண்கள் எல்லாம் கோயிலுக்கு வரும்போது விபரித்துச் சொல்லமுடியாத உணர்வுகளை மனதுக்குள் கிளர்த்திக்கொண்டிருக்கின்றார்கள். . 'உன் கடைக்கண் பார்வை பெற்றால்...' எல்லாவற்றையும் சாதித்துவிடுவேன் என்று பாரதி எழுதும்போது அவன் கோயிலொன்றுக்கு அருகிலிருந்திருக்கவும் கூடும். சனநெரிசல்களிடையே,மூலஸ்தானக் கடவுளைக் காண்பது எவ்வளவு கடினமானதோ, அவவளவு கடினமானது தோழிகளுடன், பெற்றோருடன், சகோதரகளுடன் வரும் ஒரு பெண்ணுடன் கோயிலில் வைத்து இயல்பாய் உரையாடுவதும். எனினும் இத்தகைய இறுக்கங்களிடையேயும் பார்வைகள் பரிமாறப்படுகின்றன், மவுன பாசைகள் கற்றலையில் அதிர்வெண்ணாகின்றன, திருநீறு சந்தனம் பிடித்தமான கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறான பொழுதுகளில் மனம் மிகச் சாந்தியடைந்து உலகம் தழுவிய அன்பு பெருக்கெடுத்து ஓடவும் தொடங்குகின்றது. கடவுளர்களும் தமது இருப்பிறகான ஒரே நோககம் -இனங்களை மொழிகளை மதங்களைத்தாண்டிய - இவ்வாறான பொழுதுகளை உருவாக்குதலேயென மனம் நிறைந்து புன்னகைக்கக்கூடும்.

காலம் செல்லச் செல்ல கோயில்கள் மீதும் கடவுளர் மீதும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்துபோய் சித்தர்களோடும் யோகிகளோடும் இப்போது எஞ்சி நிற்கின்றது. சிறுவயதில் உனக்குப் பிடித்தமான கார்த்திகேயன் பின்பான பொழுதுகளில் உலர்ந்துவிட்டான். என்னைப் போலன்றி, உனக்குள் கடவுளின் மரணம் விரைவில் நிகழ்ந்தமைக்கு, உனது பரந்த வாசிப்பும், இடதுசாரிக் குடும்ப பின்புலமும் ஒரு காரணமாய் இருக்கக்கூடும். குறிஞ்சி மலையில் குமரன் புன்னகை ததும்ப வீற்றிருக்கின்றான். அவனைப் பார்க்க எல்லாப் பருவங்களிலும் மலையேறிப் போய்விடமுடியாது. பனிக்காலங்களில் -மனிதர்களைப்போல-குளிர் தாங்காது தன் தலம் நீங்கி மலையடிவாரம் சென்றுவிடுவான் போலும். கோயிலுக்குள் போக விரும்புவர்களை கோயிலுக்குள் போகச் சொல்லிவிட்டு, காட்டை ஊடுருவி மலையடிவார ஆச்சிரமத்தை அடையும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்குகின்றோம். கோயிலின் சாம்பிராணிப் புகை நம்மைப் பின் தொடர்கின்றது போலும்.

e2

உனக்குத் தெரியுமா? தமிழக நிலப்பரப்பிலிருந்த் மனிதர்களின் ஆதிக்கடவுளாய் முருகன் இருந்திருக்கின்றான், அவனுக்கு அப்போது வள்ளி என்ற குறத்தி மட்டுமே துணையாக இருந்திருக்கின்றாள்; பிறகு இந் நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்தவர்களால் முருகன் அவர்களினதும் கடவுள் ஆக்கப்பட்டு தெய்வானை என்ற இன்னொரு துணையும் உருவாக்கப்பட்டார் என்று எங்கையோ வாசித்திருக்கின்றேன் என்கின்றேன். எங்கே போனாலும் உன் குதர்க்கப் புத்தி மாறாதாக்கும் என்று ஒரு முறைப்புப் பார்வை பார்த்துவிட்டு மலையினிலிருந்து வெண்பஞ்சைப் போல இறங்கிக்கொண்டிருக்கின்றாய். இப்போது மழை மெல்லியதாய் தூறத் தொடங்குகின்றது. மலையில் மழையில் கருஞ்சாம்பர் வானப்பின்னணியில் பசுமை விரிந்த நிலஙகளினுடாக நடந்து செல்லுவது மிகவும் இதமானது. தியான மணடபத்துடன், மரத்தால் செய்யப்பட்ட சிறு கோயில்கள், தங்குமிட விடுதிகளுடன் அந்த ஆச்சிரமம் தென்படத் தொடங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் எழுதலாம்
வெவ்வேறு விதமாக இந்த மழையை
முகில் கவிந்திருந்தபோது
அண்ணாந்து பார்த்து
வானம் விழப்போகுதென்று
நீ சொன்னபோது
இந்தப் பத்தாவது பாடல் பிறந்தது
மழைபற்றிய
பதினொராவது பாடலுக்கான ஆயத்தங்களுடன்
(ப 35)


தியானம் பழகுகின்றவர்களின் நிசப்தத்தினூடே இவ்வழகிய பூந்தோட்டங்களில் அலைந்து திரிவது இதுவரை அனுபவித்திராத அனுபவம். நெற்றியில் விழுந்த மழையின் துளியொன்று இறங்கி உன் உதட்டில் மினுங்குகையில் எமக்கான காலம் உறைகின்றது. நானும் நீயும் சேர்ந்து நனைவதற்காய் வருடங்களாய் காத்திருந்த பெருமழை இப்போது பொழியத் தொடங்குகின்றது.


கவிதைகள்: சோலைக்கிளியின் 'என்ன செப்பங்கா நீ' யிலிருந்து

புத்தக வாசிப்பு

Monday, August 28, 2006

சொல்வதால் வாழ்கிறேன் - அ.மார்க்ஸ்

நல்ல புத்தகங்கள் எப்போதும் நல்லதொரு வழிகாட்டியாக வாசிப்பவருக்கு அமைந்துவிடுகின்றன. சிறுகதைகள் பற்றி எஸ்.பொ ஒருமுறை விவரிக்கும்போது, ஒரு வாசகர் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது 'சா நான் சொல்ல நினைத்ததை இந்தப்படைப்பாளி சொல்லிவிட்டாரே' என்று ஒரு வாசகரை வாயூறச் செய்துவிட்டால் அந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகின்றது என்று கூறியிருப்பார். அப்படி ஒரு மனோநிலையுடன் வாசித்து முடித்த தொகுப்பு அ.மார்க்ஸின் 'சொல்வதால் வாழ்கிறேன்' என்று கட்டுரைகளின் தொகுப்பு.

File0001

அ.மார்க்ஸ் பலவேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சொல்ல வந்த விடயங்களை ஆக அதிகம் நீட்டி முழங்காமல் நறுக்குத் தெரித்தாற்போல சுருக்கமாகவும் எளிமையாகவும் அ.மார்க்ஸ் எழுதி முடித்து விடுகின்றார். ஒரே கருத்தை ஒன்பது விதமாய் எழுதி 9X9 தத்துவ/அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதுகின்றவர்கள் அ.மார்க்ஸின் பரந்த வாசிப்பையும் அவ்விடயங்களைச் சொல்ல அவர் பயன்படுத்தும் -வாசகரைப் பயமுறுத்தாத- மொழி குறித்தும் நிதானமாய் யோசித்துப் பார்க்கலாம்.

கடந்து சென்ற நூற்றாண்டின் பக்கங்களை எழுந்தமானமாய் எட்டிப்பார்க்கும் முதலாவது கட்டுரை(தொகுப்பில் இருப்பதில் இதுதான் சற்று நீளமான கட்டுரை) பல விவாதத்திற்கான புள்ளிகளைக்கொண்டுள்ளது. அதேபோன்று பிரமீளின் கதைகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை வித்தியாசமான கோணத்தில் பிரமீளை அணுகுகின்றது. பிரமீளுக்கு ஆன்மீகம் மீதான நம்பிக்கை இருந்தாலும் அவர் பிற ஆன்மீக எழுத்தாளர்களைப் போல எழுதவில்லை எனவும், தமிழில் பன்முகத்துடனும், விளிம்புநிலை மனிதர்களை முக்கிய கதாபாத்திரங்களாய் கொண்டும் எழுதியிருக்கின்றார் என்று ஒரு கட்டுரை பேசுகிறது. அதே போன்று இந்துத்துவவாதிகளின் பெருந்தெய்வ வழிபாடுகளுக்கு எதிராய் சிறுதெய்வ வழிபாடுகளை நாம் முன்னிறுத்த வேண்டிய அவசியமிருந்தாலும், அவை மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமைந்துவிட முடியாது என அ.மார்க்ஸ் விவாதிக்கின்றார். வள்ளலார், நாராயணகுரு போன்றவர்கள் மதங்களுக்குள் மட்டும் தேங்கிப்போனவர்கள், அதற்கப்பால் அவர்களால் நீட்சியடையமுடியவில்லை என்பது போன்ற அவதானங்கள் முக்கியமானவை.

பெளதீகப் பேராசிரியராக இருந்த அ.மார்க்ஸ், ஈழப்போராளியொருவரின் பாதிப்பில் அரசியல்/இலக்கிய திறனாய்வுத்தளத்துக்கு வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒவ்வொரு மனிதருக்கு, ஒவ்வொரு அமைப்புக்கு என்று தனிப்பட்ட அரசியல் உள்ளதுபோல, காலச்சுவடுக்கு, ஜெயமோகன்-வசந்தகுமார்-தேவசகாயகுமார் & கோவுக்கு, திண்ணை & விளக்கு கோவுக்கு உள்ள அரசியல் போல என்னால் அதிகளவு உடன்பட முடிகின்ற அரசியலைப் பேசுகின்ற குழு நிறப்பிரிகைக்குழுதான். குழுவாக இயங்கியபோது மட்டும் அல்ல, இப்போது தனித் தனியாக இயங்கும்போதும் அவர்களது ஆளுமைகள் மிகவும் வசீகரிக்கின்றன. (அ.மார்க்ஸ், ரமேஷ்-பிரேம், ரவிக்குமார், பொதியவெற்பன், பொ.வேல்சாமி, சமயவேல்....).

எந்த அமைப்பும் சிறிது சிறிதாக வளர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப உச்சத்தை அடைந்து பிறகு பிளவுபடுவதும் வெடிப்பதும் இயற்கையானது. அந்த அளவில் நிறப்பிரிகை குழுவின் பிளவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும் இன்று தனித்தனியாக இயங்கும் நிறப்பிரிகை நண்பர்கள் தமக்குப் பின்பான அடுத்த சந்தியினர் குறித்தும் அக்கறைப்படவேண்டும். தமது சிந்தனைகளின் நீட்சிகளை தொடர்ந்து வரும் சந்தியினருக்கு வழங்க, ஆகக் குறைந்தது இவ்வாறான் உரையாடல்களையும், கட்டுடைப்புக்களையும் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டாவது இருக்கவேண்டும்.

'சொல்வதால் வாழ்கிறேன்' தொகுப்பில் -நான்- அடிக்கோடிட்டு வாசித்த சில பகுதிகள் கீழே

-பின் நவீனம் எதையும் இயற்கை என ஏற்றுக்கொள்வதில்லை. எந்த விவரணமும், சொல்லும் முறையும் நடுநிலையானதல்ல. எல்லாமே கலாச்சார ரீதியாகக் கட்டமைக்கப்படுபவை, கருத்தியல் தளத்தில் கட்டப்படுபவை. இதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு. எல்லாவிதமான கதை சொல்லாடல்களையும் 'இயற்கை நீக்கம்' (de-naturalisede-toxing) செய்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடு.
(ப 53)

-இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற வரலாற்றுப் பின்னணியைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள் முக்கியமானவை (ஆலா, லங்காபுரி ராஜா, கோடரி...முதலியன). சிங்கள இனவெறியை எதிர்த்துத் தமிழர்கள் நிற்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் அதே சமயத்தில் இறுக்கமான அடையாளங்களுடன் இனவிடுதலை என்கிற பெருங்கதையாடலை முன்வைத்துக் 'குழு மனிதவாதிகளாக' அவர்கள் மாறும்போது மாற்று இனத்தாருக்கு மட்டுமின்றிச் சொந்த இனத்திற்கெதிரான வன்முறையாளர்களாகவும், அடாவடிக்காரர்களாகவும் மாறிப்போகின்ற நிலையையும் புனைவு நியாயங்கள் சிதறாமல் செதுக்கித் தருகின்றார். 'தத்துவம் ஒவ்வொன்றும் கோடரிதான்' என்பது அவர் கூற்று. புத்த பகவான் சொன்னதுபோல (இப்படிப் பெருங்கதையாடலாக இறுகும்) ஒவ்வொரு வழிகாட்டு நெறிமுறையும் மற்றவர்களைக் கொலை செய்யவே பயன்படும்.
(ப 44)

-இந்த நூற்றாண்டில் சுயமாய்ச் சிந்தித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் எனச்சொல்லத்தக்க ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தன் வாழ்நாள் இறுதிவரை (1973) தேசப்படம், தேசியக்கொடி, அரசியல் சட்டம், கடவுளரின் புனித உருவங்கள், கம்ப இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்கள் ஆகியவற்றை அழிப்பவராகவும் அவமானம் செய்தவராகவும் இருந்தார் என்பதும் தேசத்திற்கும், மொழிக்கும், மரபுகளுக்கும், இந்து மதத்திற்கும் விசுவாசமற்ற சுயமரியாதை மிக்கத் தன்னிலைகளை உருவாக்குவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கன. பன்நூற்றாண்டுகளாக இங்கே மேலாண்மை செய்துவந்த பார்ப்பனியம் சற்றே கதிகலங்கியது இந்த நூற்றாண்டில்தான், அதுவும் பெரியாரைக் கண்டுதான்.
(ப 21)

-'டாட் காம்' களில் குறிப்பாகத் 'திண்ணை' டாட்காமில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களில் உள்ளார்ந்து நெளிந்து செல்லும் இந்துத்துவ இழையை, கலாச்சார ஏக்கத்தை 'டாட் காம்' வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

தமிழக எழுத்துலகை ஆக்கிரமித்திருக்கும் உயர்சாதி எழுத்தாளர்களின்/அறிவுஜீவிகளின் பிடி சற்றே நெகிழத் தொடங்கியுள்ளதையும், இதுகாறும் ஒடுக்கப்பட்டு கிடந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள் தன்னம்பிக்கையோடு செயற்படத்தொடங்கியிருப்பதையும் கண்டு, பழைய பீடங்கள் விசத்தையும், வெறியையும் கக்கத் தொடங்கியிருக்கின்றன....
(ப 88)

-மதநீக்கம் - பார்ப்பன நீக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைச் சரியாக வற்புறுத்தியவர் பெரியார். அரசியல் சமூகக் களத்தில் பார்ப்பன நீக்கம் என்ற குரலை திராவிட இயக்கம் முன் வைத்தது. தமிழ் இலக்கியத் தளத்தில் நவீனங்கள் பேசிய நமது உயர்சாதி எழுத்தாளர்கள் இத்தகைய பார்ப்பனீய நீக்க முயற்சியை மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வியக்கத்தக்க அளவிற்கு சர்வதேசப் பார்வை கொண்டவரும், இரசியப் புரட்சியை கூர்ந்து அவதானித்து வாழ்த்தியவருமான பாரதியால் கூட இங்கே உருவான பார்பனரல்லாதோர் இயக்கத்தைச் செரிக்க முடியவில்லை. கடும் வார்த்தைகளால் சாடுகிறார். தமிழ் நவீனத்துவத்தின் எல்லைக் கல்லாகச் சுட்டிக்காட்டப்படும் 'மணிக்கொடி' இதழ் பார்ப்பனரல்லாதவர் இயக்கத்தைக் கடுமையாகச்சாடி வந்தது. 'சுயமரியாதைக்காலிகள்' எனத் தொடர்ந்து எழுதியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது. 'தலைவர் அவர்களேங் தாமில்ப் பெருங்குடி மக்களேய்ங்....' எனத் திராவிட இயக்க மேடைப் பேச்சைக் கேலி செய்து கவிதைகள் எழுதினார் ஞானக்கூத்தன். ஏதோ திராவிட இயக்கம் என்றாலே வெறும் மேடைப் பேச்சுதான் என்பதைப்போல, இன்றைய இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் குறையாத தொனியுடன் மதமாற்றத்தையும் கிண்டலடித்தார் புதுமைப்பித்தன். மார்க்சீய அணுகுமுறையையும் அடித்தள மக்கள் இலக்கியங்களையும் 'முற்போக்கு' என்றும் 'வரட்டுத்தனம்' என்றும் இவர்கள் அளவிற்கு இழிவு செய்தவர்கள் எவருமில்லை
(ப 72)

-நம்மைப் பொறுத்தவரை பாரதி மீதோ, பித்தன் மீதோ அதீதப் பற்றுக் கொண்டவர்கள் அல்ல. பாரதியில் ஒலிக்கும் பார்ப்பனீயத்தையும், புதுமைப்பித்தனில் வெளிப்படும் சாதீய, மதவாதக் கூறுகளையும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நம் கண்டிக்காதிருந்ததில்லை. அதேசமயத்தில் இவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. இலக்கியத் 'திருஉரு'க்களை (icons) விமர்சனம் செய்யக்கூடாது என்பது எத்தனை மோசமோ அத்தனை மோசம் அவர்களின் எழுத்துக்களை ஏகபோகம் ஆக்குவது. நாம் இரண்டையும் எதிர்ப்போம்.
(ப 94)