கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசித்தவை

Saturday, February 23, 2008

வரலாறு என்பது அந்தந்தக்கால அதிகார வர்க்கத்தின் விருப்பு வெறுப்புகளை அதிகளவு பிரதிபலிக்கின்றது என்றாலும் நம் அனைவருக்கும் வரலாறு ஏதோ ஒருவிதத்தில் அவசியமாகின்றது. ஆகக்குறைந்தது கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளிலிருந்து தப்பிப்போவதற்காகவேனும் வரலாற்றைக் கற்றல் முக்கியமாகின்றது. போர் மிகக்கொடூரமாய் திணிக்கப்படும் எமது தேசத்தில் வரலாறு மீதான வாசிப்புக்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டேயுள்ளன. எண்பதுகளில் போர்ச்சூழலோடு பிறந்த/வளர்ந்த சமுகத்திற்கு அதற்கு முன் ஈழத்தில் நிகழ்ந்த சாதியெதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த மிகக்குறைந்த அறிதலே இருக்கின்றது. போர் அரக்கன் எல்லாவற்றையும் தீராப்பசியுடன் தின்றுவிழுங்கும் காலகட்டத்தில் இருந்துகொண்டு வரலாற்றை வாசித்தல் என்பது கூட ஒருவகையில் அபத்தந்தான். எனினும் எமக்கு என்றொரு பூர்வீகநிலம் ஈழம் என்ற அழகிய தீவில் இருந்தது என்பதற்காகவும், எப்படி எமது இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை எதிர்காலச்சந்ததிக்குத் தெரியப்படுத்தவேனும் பிரதிகளில் வரலாறு தொடர்ந்து ஆவணப்படுத்தப்படல் அவசியமாகின்றது.

'இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்' என்ற சி.அ.யோதிலிங்கம் எழுதியுள்ள நூல், இலங்கையில் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே முகிழத்தொடங்கிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப்பற்றி உரையாடுகின்றது. சோல்பரி, டொனமூர் போன்ற அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களோடு, சென்ற மாதமளவில் கைவிடப்பட்ட புலிகள் X இலங்கை குடியரசு ஒப்பந்தம் வரை இந்நூல் விரிவாக அலசுகினறது. ஒவ்வொரு யாப்பின் அலகுகள் குறித்தும் பேசும் அதேநேரம் ஒவ்வொரு யாப்புச் சீர்திருத்தமும் ஏன் இறுதியில் தோல்வியடைந்தது என்ற புள்ளிகள் குறித்தும் இந்நூலில் விவாதிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. மேலும், இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு, இனித் தீர்வுகள் வரையப்படுகின்றபோது சிறுபான்மை இனங்களாக உள்ள முஸ்லிம் மக்களினதும், மலையக மக்களினதும் அபிலாசைகளும் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் இதில் பேசப்படுவது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. தனியே யாப்புகள், அவற்றின் குறைபாடுகள் என்ற எல்லைக்குள் சுருங்காது, 'இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, அதிகாரப் பங்கீடு விடயங்களில் சர்வதேச அனுபவங்கள்' என்று குறிப்பிட்டு அமெரிக்கா, இந்தியா, சுவிஸலாந்து, சோவியத் யூனியனின் அரசியல் யாப்புகள் குறித்தும் கவனம் குவிக்கப்பட்டிருப்பது நல்லதொரு விடயமாகும்.

ஈழத்தமிழர் வரலாற்றில் சாதி மேலாண்மையாக இருந்த கட்சியாக குற்றஞ்சாட்டப்படுகின்ற தமிழர் கூட்டணி கூட 1972ல் ஆறம்சக்கோரிக்கையில், 'சாதியையும், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் அரசியல் யாப்புச் சட்டம் மூலம் ஒழித்தல் வேண்டும்' என்பதை ஒரு கோரிக்கையாக முன்வைத்ததையும் கவனிக்கவேண்டும். மேலும் இந்நூலில் யாழ்ப்பாணத்தமிழரின் பூர்வீகம் குறித்து ஆராயும் பகுதியும் சுவாரசியமானது. யாழ்ப்பாணத்தவர்களின் பூர்வீகம் குறித்து பல்வேறு கருதுகோள்கள் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளினடிப்படையில் முன்வைக்கப்பட்டாலும், கேரள மாநிலமென இப்போது அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தவர்களாய் இருக்கக்கூடுமென்பது கவனிக்கத்தக்க ஒரு புள்ளியாகும். ஆரம்பத்தில் தமிழ் (சேரன் ஆண்ட) நிலப்பரப்பாக இருந்த பிரதேசம், பின்னாளில் தமிழ், சமஸ்கிருதக் கலப்பில் மலையாள மொழியை உருவாக்கி கேரளாவாக மாறியதாய் ஆய்வுகள் கூறுகின்றன. மொழி, இன்ன்பிற என்பவை மிகவிரைவில் அழியவோ திரிபடையவோகூடியதென்றாலும் ஒரு சமூகத்தின் கலாசாரம்/பண்பாடு என்பவை அவ்வளவு இலகுவில் அழியமுடியாது. அந்தவகையில் கலாசாரம்/பண்பாடு/ உணவுப்பழக்கங்களில் மிக நெருக்கமான உறவுகள் கேரளாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் உள்ளதை நாமறிவோம். மிக விரிவான ஆய்வுகள் இவ்விரு பிரதேசங்களிலும் செய்யப்படுங்கால் சுவாரசியமான பல உண்மைகள் எதிர்காலத்தில் சிலவேளைகளில் வெளிப்படவும்கூடும். மேலும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் சுத்திகரிப்புத் தொழிலைச் செய்வதற்காய்க் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 'அருந்ததியர்' சமூக மக்கள் பற்றிச் சில குறிப்புகள் இந்நூலில் வருகின்றது. விளிம்புநிலை மனிதர்களாக்கப்பட்ட இச்சமூக மக்கள் பற்றிய ஆய்வுகளும், ஆவணங்களும் இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்தளவே (அல்லது முற்றாகவே இல்லை) போலத்தான் தெரிகின்றது. இந்தப்புள்ளி குறித்து, இனி இலங்கையின் இனங்களைப் பற்றி எழுதும் அரசியல் ஆய்வாளர்களும், சமூகவியலாளர்களும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும் ('அருந்ததியர்: வாழும் வரலாறு', மாற்கு எழுதி, பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்ட நூலையும் ஈழத்திலிருக்கும் அருந்ததியர் வரலாற்றிற்கு உசாத்துணை நூலாகக் கொள்ளலாம்).

சி.அ.யோதிலிங்கத்தின், 'அரசறிவியல்: ஓர் அறிமுகம்', 'ஒப்பியல் அரசாங்கம்' போன்ற பிற நூல்களை வாசித்திருந்தாலும், அவை உயர்தர வகுப்பு மாணவர்களைக் கவனத்திற்கொண்டு எழுதப்பட்டதால் என்னை அவ்வளவாய் ஈர்த்ததில்லை. இந்நூலும் மாணவர்களை முக்கிய வாசகர்களாய்க்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் பிறரும் அலுப்பில்லாது வாசிக்க முடிகின்ற பிரதியாய் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்று கிழக்கு மாகாணங்களில் சிங்களக்குடியேற்றங்களால், தமிழர்களின் எத்தனையோ பூர்வீகநிலங்கள சூறையாடப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இழக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்டுபிடிக்கவும் எமக்கான நியாயங்களை சர்வதேசத்தின் முன் எதிர்காலத்தில் கேட்கவும் இவ்வாறான விடயங்கள் ஆய்வுத்தரவுகளின் அடிப்படையில் ஆவணமாக்கப்படவேண்டும். மேலும் இந்நூல், தமிழில் அரசியல் குறித்து எழுதப்படும் பல பிரதிகள் போலவன்றி -ஏதோ ஒரு பக்கத்தை மட்டும் நியாயப்படுத்துவதில் நிற்காது- முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் குறித்தும் அக்கறையான பார்வைகளை முன்வைப்பதால் முக்கியமானது ஆகின்றது.

(2)
'அமைதி குலைந்த நாட்கள்' என்ற கவிதைகளின் தொகுப்பு, எண்பதுகளில் வெளிவந்த புதுசு இதழ்களிலிருந்து வந்த கவிதைகளைக் கொண்டு நா.சபேசனால் தொகுக்கப்பட்டிருக்கின்றது. தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியில் உயர்தரவகுப்பு படித்த மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுசு சஞ்சிகையில் ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். ஒவ்வொரு சஞ்சிகையும் புதிதாய் மலரும்போது அதனோடு புதிய படைப்பாளிகள் முகிழ்கின்றார்கள். அதேபோன்று ஊர்வசி, ஒளவை போன்ற கவிஞர்கள் புதுசு சஞ்சிகையினூடாக வெளியுலகத்திற்கு வந்தவர்கள். இன்னும் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதி சிறுகதையாளர்கள் என்று அடையாளப்படுத்தபட்ட ரஞ்சகுமார், உமா வரதராஜன் போன்றவர்களின் கவிதைகளை இதில் காணக்கிடைப்பது கூட சுவாரசியமானதுதான்.

புதுசில் வந்த கவிதைகள் ஒருகாலகட்டத்தின் பதிவுகள். மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் போன்ற தொகுப்புகளை இன்று வாசிக்கும்போது, அவற்றிலுள்ள பல கவிதைகளுக்கான இடம் இல்லாது போகின்றதுபோல, 'அமைதி குலைந்த நாட்கள்' தொகுப்பிலும் பல கவிதைகளுக்கான இடம் இன்றைய கவிதையுலகில் இல்லை என்பது இயல்பானதே. எனினும் அவ்வாறு இருப்பில்லாது போகின்ற கவிதைகளுக்கு அவற்றை அவற்றுக்குரிய காலத்தோடு வைத்து வாசிக்கும்போது அவற்றுக்கான இடமும் அரசியலும் இருக்கின்றது என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மிகக்குறைந்த இதழ்களே (11) வந்த புதுசு சஞ்சிகையில் இவ்வளவு படைப்பாளிகள் எழுதியிருக்கின்றார்களே என்று கவனிக்கும்போதுதான் புலம்பெயர் சூழலில் இன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த சஞ்சிகைகளே வெளிவருகின்ற அவலம் உறைக்கின்றது. புலம்பெயர் சூழலில் 80களின் பிற்பகுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் நிறைய சஞ்சிகைகள் பல்வேறு அரசியலை முன்வைத்து வெளிவந்திருக்கின்றன. அவற்றினூடாக புதிய பல படைப்பாளிகள் வளர்ந்திருக்கின்றார்கள். இன்று இணையம் அதற்கான வெளியை ஓரளவு திறந்திருக்கின்றதெனினும் இணையத்தில் ஆறவமர அமர்ந்து வாசிக்க எத்தனைபேருக்கு நேரமும் பொறுமையும் இருக்கின்றதென்ற வினா எழுவதும் தவிர்க்கமுடியாததே.

(3)
'விமரிசன முறையியல்' என்ற நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை தலைவராக இருந்த (இருக்கும்?) சோ.கிருஷ்ணராஜாவால் எழுதப்பட்டிருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருக்கும் விமர்சன அலகுகள் குறித்து இச்சிறு நூல் உரையாடமுயல்கின்றது. இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கக்கூடிய நூல் இது என்றாலும், கலை கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா என்ற இந்நூலிலிருக்கும் ஒரு பகுதி முக்கியமானது. உழைக்கும் மக்களோடு பிறந்த பல கலைகள், பிறகு 'மனிதனின் உழைப்பு கலையுடனான நேரடித்தொடர்புகளை படிப்படியாக அறுத்துக்கொள்ள, கலையும் தன் கருத்தில் மாற்றத்தைப் பெறலாயிற்று. 'உயர்ந்தோர் மாட்டே உயர்கலைகள்' என்ற கருத்து உருவாகி வலுப்பெற்றது. பரத நாட்டியமும், சாஸ்திரிய சங்கீதமும் 'உண்மையான கலைகளாக' மாற, கிராமியக் கலைகள் தம்மூலச் சிறப்பை இழந்தன' என்று சோ.கிருஸ்ணராஜா குறிப்பிடும் புள்ளிகள் கவனத்திற்குரியது.

இந்நூலில் பல்வேறு மேலைத்தேய விமர்சனமுறைகள் பற்றி பேசப்பட்டாலும், மேல் நாட்டவர்களின் பெயர்களை மட்டும் சொல்வதோடு அநேக இடங்களில் இந்நூல் சுருங்கிவிடுவதை ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும். மேலும் தமிழ்ச்சூழலிலும் மிகவிரிவாக விவாதிக்கப்பட்ட அமைப்பியல்/பின் அமைப்பியல் (விமர்சன) முறைகள் பற்றி ஒரு சில வரிகளோடு நின்றுவிடுவது நூலுக்கு ஒரு முழுமையைத் தராது தடுத்துவிடுகின்றது. எனினும் விரிந்த வாசிப்பும், அதை எழுத்தில் பிறரும் விளங்கக்கூடியதாய் முன்வைக்கக்கூடிய தகுதியையும் உடைய கிருஸ்ணராஜா போன்றவர்கள் இவை குறித்து இன்னும் விரிவாக எழுதவேண்டும். இல்லாவிட்டால் ரோலன் பார்த் கூறிய readable textற்கும், pleasure of textற்குமிடையிலுள்ள வித்தியாசங்களைக்கூட அவ்வளவாய்ப் பிரித்தறிய பலர் முன்வைக்கும் அரைகுறை விமர்சனங்களைப் பின் தொடரும் அவலம் நமக்கு வந்துவிடும். மேலும் காலத்திற்கேற்ப தம்மை தகவமைக்காவிட்டால் தமது பிரதிகள் வலுவிழந்துவிடும் என்ற உண்மை புரிந்து, தமது பிரதிகளை பின் நவீனத்துவ பிரதிகளாக கட்டியமைக்க கஷ்டப்படும் ஜெயமோகன் போன்றவர்களை இனங்காணவும், புதிய விமர்சன முறைகளை உரிய முறையில் உள்வாங்குதல் நமக்கு அவசியம். இந்நூலில் குறிப்பிடுகின்ற 'மீள் உருவாக்கம் செய்ய முடியாத பண்பே கலையின் தனித்துவமாகும். லியனார்டோ டாவின்சியின் ஓவியங்களோ அல்லது மைக்கல் ஏஞ்சலோவின் படைப்புக்களையோ, அல்லது சித்தன்னவாசல் ஓவியங்களையோ ஒருவர் பிரதி செய்யலாம். ஆயினும் அப்பிரதிகள் மூலத்தின் தனித்துவத்தைப் பெறுவதில்லை' போன்ற புள்ளிகளிலிருந்தும் ழாக் தெரிதா கட்டவிழ்ப்பு/கட்டுடைப்பு (deconstruction) என்ற தனது வாசிப்பை வந்தடைகின்றார். ஒவ்வொரு பிரதியும் வளருகின்றபோது அது தன்னளவில் கட்டவிழ்ப்பையும் -அதே காலத்திலேயே- கொண்டிருக்கின்றது; பிரதிக்கு உள்ளேயே கட்டவிழ்ப்புச் சாத்தியமே அன்றி வெளியிலிருந்து கட்டவிழ்ப்பு நடக்கமுடியாது என்ற தெரிதாவின் பிரதிகள் மீதான வாசிப்புமுறைகள் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும். 'விமரிசன முறையியல்' எழுதப்பட்ட காலகட்டத்தை (1992) முன்வைத்துப் பார்க்கும்போது தெரிதா, ரோலன் பார்த் போன்றவர்கள் குறிப்பிடப்படாததை ஓரளவு ஏற்றுக்கொள்ளமுடியுமெனினும், தொடர்ந்து அடுத்துவரும் பதிப்புகளிலாவது இவ்வாறானவர்களின் புதிய வாசிப்பு/விமர்சனப்போக்குகளையும் சோ.கிருஸ்ணராஜா இனங்கண்டு அடையாளப்படுத்துவாரென நம்புவோமாக.

(வைகறைக்காய் எழுதப்பட்டது)

தெரிதாவைப் பின்தொடர்தல்...

Monday, February 18, 2008

-Derrida ஆவணப்படத்தை முன்வைத்தும், பிறவும்-

தத்துவங்கள் குறித்து தொடர்ச்சியாய் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. புதிய புதிய சிந்தனையாளர்கள் காலந்தோறும் தோன்றி தாம் விளங்கிக்கொண்ட செல்நெறிகளை நமக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். தத்துவவியலின் முக்கிய கேள்வியாக 'இருத்தல்' என்பது என்ன? என்பதாக இருக்கின்றது (what is 'being'?). அதற்கான பதில்களைத் தேட உத்வேகத்தோடு கிளம்பும் தத்துவவியல், தனது வேர்களை மனித இருத்தலின் திசைகளை நோக்கி இன்னுமின்னும் ஆழமாக ஊடுருவவும் செய்கின்றது. நமக்கான சொற்பகால வாழ்வில் தத்துவவியலின் பங்கு எத்தகையது என்பது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தத்துவங்கள் மீதும் தத்துவவாதிகள் மீதும் காலந்தோறும் நுரைத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் ஈர்ப்பு மட்டும் ஒருபோதும் குறைவதில்லை. இருபதாம் நூற்றாண்டின் முக்கிய சிந்தனையாளராக விதந்துரைக்கப்படும் ழாக் தெரிதாவை (Jacques Derrida) மையமிட்டு 'தெரிதா ' (Derrida) படம் சுழல்கின்றது. அதன் சுழன்றாடும் சுடர்களில் நாமும் கரைந்தும்..., சிலவேளைகளில் அதனிலிருந்து வெளியே பலவந்தமாய் எறியப்பட்டும்..., பல்வேறு உணர்வுகளோடு கலந்துபோய்விடுகின்றோம்.

எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல என்ற தெரிதாவின் வார்த்தைகளோடு படம் ஆரம்பிக்கின்றது. எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியது என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா. இவ்வாறாக ஆரம்பிக்கின்ற படம் தெரிதாவின் நாளாந்த பொழுதுகளை சில வாரங்களாய்ப் பின் தொடர்ந்து செல்கின்றது.

அல்ஜீரியாவில் பிறந்த தெரிதா, தனது பத்தாவது வயதிலேயே இனவாதம் (racism) என்னவென்பதை அனுபவித்தவர். பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்த அல்ஜீரியப் பாடசாலைகளில் யூதர்கள் படிக்கமுடியாது என்று பாடசாலைகளிலிருந்து பிரான்ஸ் அரசாங்கத்தால் வெளியேற்றப்படுகின்றார்கள். அந்த நாட்களை நினைவுபடுத்தும் தெரிதா, பெரியவர்கள் மட்டுமில்லை தம்மோடு படித்த சிறுவர்கள் கூட தெருக்களில் 'dirty Jews' என்று கேலி செய்ததுதான் தன்னை மிகவும் பாதித்தது என்கின்றார். அதே சமயம் யூதர்களை முற்றுமுழுதாகக் கொண்ட பாடசாலையில் பின்னாளில் படித்தபோது தனக்கு யூத இனத்தின் மீதும் பிடிப்பற்றுப் போய்விட்டது என்கின்றார். Anti-semeticகாகவோ அல்லது யூதனாகவோ இல்லாது, இரண்டிலும் உடன்படாத வெளித்தள்ளப்பட்ட தனியன் தானெனத்தான் தெரிதா தன்னை அடையாளப்படுத்துகின்றார். அதேபோன்று பாடசாலை போவதே தனக்குப்பிடிப்பதில்லை எனவும் அது எப்போதும் தனக்குள் பதற்றத்தை (anxious) தருவதாய் சிறுவயதிலிருந்தே இருந்ததென்கின்றார். அதே பதற்றம், தான் பின்னாட்களில் பல்கலைக்கழகங்களின் வாசல்களை கலந்துரையாடல்/உரையாடலிற்காய் மிதிக்கும்போதும் தன்னோடு கூடவே வருகின்றதென்கின்றார்.

தத்துவங்களைப் படிக்கும் ஒருவர், எந்த ஒரு படைப்பாளியினதும் சுயசரிதை நூலை (autobiography) தனது ஆய்வுகளிற்காய் எடுத்துக்கொள்ளக்கூடாது என்கின்ற தெரிதா, எந்த ஒரு தத்துவவாதியும் தனது சுயவரலாற்றை எழுதக்கூடாதென்கின்றார். அவ்வாறு எழுதினால் கூட சில குறிப்பிட்ட விடயங்களைக் கவனமாகத்தவிர்த்து எழுதவேண்டும்; இல்லையெனில் அத்தத்துவவாதியின் பிற பிரதிகள் அவரது சுயசரிதையோடு ஒப்பிட்டுப்பார்க்கப்படும் அபாயமுண்டென்கின்றார். தெரிதா கூட தனது புகைப்படங்கள் உட்பட்ட, தனிப்பட்ட விடயங்களை மிகக் கவனமாய் வெளியுலகிற்கு வெளிவிடாது 60களின் பிற்பகுதிவரை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு பொதுக்கலந்துரையாடலை சில நண்பர்களோடு சேர்ந்து ஒழுங்கு செய்தபோது பொதுவில் தனது புகைப்படம் வெளிவருவதைத் தடுக்கமுடியவில்லையெனவும், காலப்போக்கில் ஓரளவு தனது புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதை ஏற்றுக்கொள்ளத்தொடங்கியதாகவும் கூறுகின்றார் (இவ்வாறு தனது புகைப்படம், தனிப்பட்ட குறிப்புகள் வெளிவராது தடுத்துக்கொண்டிருக்கும் இன்னொருவர் என்று நினைக்கும்போது மிலன் குந்தேரா நினைவுக்கு வருகின்றார்). தெரிதா தன்னைப் புகைப்படங்கள் எடுப்பது விருப்பமில்லையெனவும் (தனது படங்களின் அநேகமானவற்றை அழித்திருக்கின்றார்) மற்றும் எழுத்தாளரின் படங்கள் ஒரு குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் நின்று புத்தகங்களுக்குப் பின்னட்டையில் வருவதையும் எள்ளல் செய்கின்றார் (ஒன்று, எழுதிக்கொண்டிருக்கும் பாவனையில் வரும் அல்லது முகம் மட்டும் காட்டுகின்றதாய் வரும்).

இவ்வாறு சிந்தனையாளர்கள் தமது தனிப்பட்ட குறிப்புகளை பொதுப்பார்வைக்குத் தரக்கூடாதென்கின்ற தெரிதா எப்படி தன்னைப் பற்றிப்படம் எடுப்பதை அனுமதித்தார் என்பது முரண்நகையானது என்பதைவிட ஒருவித பரீட்சார்த்த முயற்சி எனத்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதாவது ஒரு தத்துவவியலாளரிடம் எந்தளவு தனிப்பட்ட தகவல்களைப் பெறமுடியும் -பார்ப்போம், நீங்கள் எவ்வளவுதான் என்னிடமிருந்து தனிப்பட்ட குறிப்புகளை எடுக்கின்றீர்கள்- என்ற சவாலாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக தெரிதாவையும் அவரது மனைவியையும் இருத்தி உங்கள் காதல்/திருமணம் பற்றிக் கூறுங்கள் என்று கேட்கப்படும்போது, எங்களிடம் இருந்து தரவுகளையும், திகதிகளையும் மட்டுமே பெறமுடியும். அதற்கப்பால் நீங்கள் எவ்வளவு கேட்டாலும் எங்களிடமிருந்து எதுவும் வராது என்று தெரிதா கூறுகின்றார்... அல்லது superficial யாய்த்தான் சொல்ல முயற்சிப்போம் என்று தெரிதா அந்த உரையாடலை முறிக்கின்றார்.

வீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்த அவ்வளவு புனரமைக்கப்படாத ஒரு எளிமையான வீட்டில்தான் தெரிதா வாழ்கின்றார். தெரிதா வாழ்ந்த காலத்திலேயே அவரின் படைப்புக்களின் archives, பிரான்சில் ஒரு வளாகத்திலும், அமெரிக்காவில் கலிபோர்னியா (Irvine?) வளாகத்திலும் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பார்வையிடும் தெரிதா சாம்பல், கறுப்பு நிறத்திலிருக்கும் அவை எனக்கான சமாதியை நினைவுபடுத்துகின்றன; இப்போதே எல்லோரும் எனக்காக துக்கம் அனுட்டிக்கத்தொடங்கிவிட்டீர்கள் போலத்தோன்றுகின்றதென நகைச்சுவையாகப் பேசுகின்றார் (Archive Fever என்றொரு நூலை தெரிதா எழுதியதும் கவனிக்கத்தக்கது). ஆவணங்கள் என்பது கடந்தகாலத்தைப் பார்க்கவல்ல, எதிர்காலத்திற்கு ஏதேனும் உதவிசெய்யக்கூடியதாக இருக்கவேண்டும்; இல்லையெனில் அதனால் எதுவும் உபயோகமில்லையென்கின்றார். அதேபோன்று அமெரிக்க வளாகத்தில் தங்கியிருந்த காலங்களில் தான் கண்டுகொண்ட 'அமெரிக்கத்தனம்' பற்றியும் பகிடி செய்கின்றார். ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்கும்போது மாணவர்களோ அல்லது சக பேராசிரியர்களோ, இன்னும் விரிவாகச் சொல்ல முடியுமா (could you please elaborate...) என்பது போன்று தாங்கள் பிரான்சில் கேட்பதில்லை என்கின்றார். இது தாங்கள் தம்பாட்டில் மேலும் தேடி அறிவதைத் தவிர்த்து, ஒருவித சோம்பல் நிலையின் அறிகுறியெனக் குறிப்பிடுகின்றார். அதேபோன்று அமெரிக்காவில் பிரபலமாகவிருக்கும், Seinfield வகை sitcom கட்டவிழ்ப்பு வகையாயெனக் கேட்கப்படும்போது, தன்னால் அதை ஒரு கட்டவிழ்ப்பு முறைக்குள் பார்க்கமுடியவில்லை, தயவுசெய்து கட்டவிழ்ப்பு (Deconstruction) குறித்து இன்னும் ஆழமாய் வாசிக்கவும், வீட்டுவேலை (homework) செய்யவும் முயலுங்கள் என்கின்றார். இன்னும், ஹெகல், ஹெய்டேக்கர் போன்ற தத்துவவாதிகளிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று தெரிதாவிடம் கேட்கும்போது, அவர்களுடைய sexual life எந்தமாதிரியானது எனத்தான் கேட்பேன் என்கின்றார். அதாவது போர்னோ வகைப்பட்டதல்ல; எப்படி அவர்கள் தத்துவ உரையாடல்களோடு sexual lifeஜ கொண்டுநடத்தினார்கள் என்பதை அறிய விரும்புகின்றேன் என்கிறார். அதேபோன்று கேள்விகேட்பவர் (அவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாய் வருகின்றார்), இதே கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா என்று வினாவும்போது, அவ்வாறு கேட்கப்படும்பட்சத்தில் தனது பதில் வேறுமாதிரியாக இருக்கும் எனவும் தன்னை அறிய விரும்பும் முயற்சியை துண்டிக்கின்றார். அத்துடன் தனது பிரதிகளை வாசிப்பவர்களுக்கு தனது sexual life பற்றி ஓரளவு அறியக்கூடியதான குறிப்புகள் இருக்கின்றது என தெரிதா குறிப்பிடுகின்றார்.

ஓரளவு ஆவணப்படத்திற்கான தன்மையில் இப்படம் எடுக்கப்பட்டாலும், உண்மையில் எந்த ஒரு வகைக்குள்ளும் அடங்கிவிடாத ஒரு 'திரைப்படமாகத்தான்' இது இருக்கிறது. முக்கியமாய் தெரிதா, இத்திரைப்படம் தனது தனிப்பட்ட வாழ்வைக்கண்டுபிடிக்கும் ஒரு பதிவாகப் போய்க்கொண்டிருக்கும் ஒவ்வொரு புள்ளியையும் கவனமாக இடைவெட்டி பொதுவெளிக்குள் கொண்டுபோய்விடுகின்றார். காதல் பற்றி என்ன கருத்து என்று கேட்கப்படும்போது காதல் பற்றிய பொதுவான எண்ணம் எதுவும் தனக்கில்லையென்கின்றார். ஆனால் பிறகு, அவர் நிறைய வாசிப்புச்செய்த பிளேட்டோவிலிருந்து எல்லாத் தத்துவவாதிகளும் காதலைப்பற்றி நிறையக் கதைத்திருக்கின்றார்கள் எனத் திருப்பிக்கேட்கப்படும்போது, காதலை 'யார்' (who) மற்றும் 'என்ன' (what) என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலம் புரிந்துகொள்ளவேண்டும் என்கின்றார் (Is being 'someone' or 'something'). நாம் ஒருவரைக் காதலிக்கும்போது காதலிக்கப்படும் அந்த நபர் அவராக இருப்பதை முழுதாய் ஏற்றுக்கொள்கின்றோம் என்றால் who என்ற கேள்வியையும், ஒருவரின் அந்தஸ்து, பணம், அழகு என்பவற்றுக்காய் காதலிக்கத்தொடங்குகின்றோம் என்றால் what என்ற் கேள்வியை முன்வைத்து உரையாடவேண்டும் என்றும் விரிவாக தெரிதா விளக்குகின்றார்.

இப்படத்தில் சில காட்சிகளை முன்வைத்து, தெரிதா எழுதிய நூல்களின் முக்கிய விடயங்கள் பின்னணியில் பேசப்படுகின்றன. அவ்வாறான விடயங்களை செரித்துக்கொள்ள குறிப்பிட்ட பிரதிகளை வாசித்தாலன்றி விளங்கிக்கொள்ளல் அவ்வளவு சாத்தியமில்லை. தெரிதா தனது மாணவர்களினதும், சக பேராசிரியர்களினதும் கேள்விகளுக்கு (வயது/அனுபவம்) வித்தியாசமில்லாது அனைவரோடும் உரையாடல் நடத்தியதோடு எல்லோராலும் அணுகக்கூடிய மனிதராகவும் இருந்திருக்கின்றார். தெரிதாவின் 'கட்டவிழ்ப்பு' தெரிதா விரிவாக அறிமுகப்படுத்தியதில் முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது (மற்றொன்று differAnce). கட்டவிழ்ப்பை விளங்கிக்கொள்வது எப்படியென்றே நிறையப்பிரதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. தெரிதா கூட கட்டவிழ்ப்பு என்னவென்பதை வரையறுப்பதற்குச் செலவிட்ட நேரத்தைவிட கட்டவிழ்ப்பு என்பது எதுவாக இருக்கமுடியாது என்பதற்கே அதிக நேரத்தைச் செலவிட்டவர் என்ற விமர்சனங்களும் உண்டு. ஒவ்வொரு பிரதியையும் கட்டியமைக்கும்போதே கட்டவிழ்ப்பும் அதற்குள்ளேயே ஆரம்பித்துவிடத் தொடங்கிவிடுகின்றது என்ற எளிய புரிதலில் இருந்து நாம் ஆரம்பிக்கலாம் (... participating in the construction of what it, at the same time, threatens to deconstruct). கட்டவிழ்ப்பு என்பது பிரதிக்கு வெளியிலிருந்து பிரயோகிக்கக்கூடிய ஒரு முறையோ அல்லது (விமர்சன) அலகோ அல்ல என்கின்றார் தெரிதா. ஒவ்வொன்றும் தனக்கான கட்டவிழ்ப்பை தனக்குள்ளே கொண்டிருக்கின்றது; அது எந்நேரமும் நிகழ்ந்துகொண்டிருப்பதும் கூட (It may already be located there, already at work). தெரிதா, ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனம்/சனநாயக அரச அமைப்புக்கள் என்பவை முற்றுமுழுதாகக் 'தகர்க்கப்படவேண்டியவை' என்று கட்டவிழ்ப்பை முன்வைத்துச் சொன்னாரில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் நோக்கத்திற்காய் ஒன்று கூடுவதைக்கூட ஏற்றுக்கொள்ளவதாய்ச் சொல்கின்றார், ஆனால் அதே சமயம் totality யாகி முழு அதிகாரமும் ஓரிடத்தில் குவிவதை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கவும் செய்கின்றார்
(...Now, this doest not mean that we have to destroy all forms of unity whatever they occur. I have never said anything like that. Of course, we need unity, some gathering, some configuration. you see, pure unity or pure mulitplicity - when there is only totality or unity and when there is only multiplicity or disassociation - is a synonym of death).

கட்டவிழ்ப்பை இன்னும் எளிதாக்க தெரிதா கூறுகின்ற உதாரணத்தைப் பார்ப்போம். அவர் ஐ.நா சபையை எடுத்துக்கொள்கின்றார். ஐ.நா சபையானது சர்வதேசச் சட்டங்களை (international law) தன்னகத்தே கொண்டுள்ளது. இன்று பல நாடுகளில் போர்கள் நடந்தபடியும், சில நாடுகளில் போர்கள் நடக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருக்கும்போது ஐ.நா சபை தலையிடவேண்டியிருக்கின்றது. ஆனால் அவர்களால் தாங்கள் நினைத்தமாதிரி தலையிடமுடியாது. ஏனெனில் சர்வதேசச் சட்டங்கள் என்ற ஒன்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றது; அது நல்லதொரு விடயமும் கூட. ஆனால் இன்னொருவகையில் பார்த்தோமானால் ஐ.நாவின் இலக்குகளும், செயற்பாடுகளும், மொழிகளும் மேற்கத்தைய பார்வையில் (தத்துவ அடிப்படையில்) கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது மேற்கத்தைய நாடுகள் எப்படி தமது நாடும் இறையாண்மையும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனவோ அதையேதான் ஐ.நாவின் சர்வதேச விதிகளில் உள்ளடக்கியுள்ளன. அந்த அடித்தளங்களைத்தான் நாம் கட்டவிழ்ப்புச் செய்யவேண்டும் என்கின்றார் அதற்காய் 'புதிய சர்வதேசம்' (new international) என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்துகின்றார். அது எப்படியெனில்...Not a new way of associating citizens belonging to given nation-states, but a new concept of citizenship, of hospitality, a new concept of the state, of democracy. In fact, it is not a new concept of democracy, in the tradition of the concept of democracy....என்கின்றார் தெரிதா. அதாவது ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய அமைப்பை/இன்னபிறவற்றை, முற்றாகத் தகர்த்து மீளக்கட்டியமைக்கப்படவேண்டும் என்பதல்ல தெரிதாவின் கட்டவிழ்ப்பு. இப்போது இருப்பவற்றை இன்னும் காலத்திற்கேற்ப செழுமைப்படுத்தவேண்டும் என்கின்றார் (கவனிக்க: மீண்டும் இது எளிய புரிதல்). இதையேதான் தெரிதா, 'சனநாயகத்திற்காய் காத்திருத்தலிலும்' (democracy to come) கூறுகின்றார்; ஆதிகாலத்துக் கிறீக்கின் வளமான மரபுகளுடன் கட்டியமைக்கப்பட்ட சனநாயகம் தொடர்ச்சியாக கட்டவிழ்ப்புச் செய்யப்படவேண்டும் என்று தெரிதா மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றார் (இன்னும் சனநாயகத்திற்காய் காத்திருப்பதில் 'gift' மற்றும் 'justice' ஐ முன்வைத்து தெரிதா விளக்குவது விரிவானது; அதை இங்கே தவிர்த்துக்கொள்கின்றேன்). அதேபோன்று ஒரு பிரதியில் மையமான பாத்திரங்களையல்ல, விளிம்புகளில் 'ஒதுங்கி' நிற்கும் பாத்திரங்களையே (eccentric) கவனப்படுத்தவேண்டும் என்கின்றார். ஏனெனில் அவையும் ஒரு 'பிரதியை' தாங்கி நிற்கும் முக்கியமான அடித்தளங்கள் என்கின்றார். அத்தோடு ஒரு எழுத்தாளர் நூற்றுக்கணக்கில் எழுதிய பக்கங்களின் பிரதியைவிட, தத்துவங்களில் ஆர்வமுள்ள ஒருவர் அப்பிரதியில் ஒதுங்கி/ஒதுக்கப்பட்டிருக்கும் சிறு பகுதியிலிருந்தே மிக விரிவான வாசிப்புக்களை ஆரம்பிக்கமுடியும் என்கின்றார் (தனக்கு பிளோட்டோவை ஒவ்வொருமுறை வாசிக்கும்போது புதிய புதிய வாசிப்புக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றதென்பதை தெரிதா பல இடங்களில் கவனப்படுத்துகின்றார்). மேலும் ஒருவரால் எல்லாவற்றிலும் நுழைதல் சாத்தியமில்லை, அவரவர் அவருக்கான 'தெரிவுகளில்' தேர்ந்தெடுத்து விரும்பியதை ஆழமாய்க் கட்டவிழ்ப்புச்செய்யலாம் என்கின்றார்.

2.
சமகாலத்தில், நான் வசிக்கும் ஒன்ராறியோ மாகாணத்தில் கறுப்பின மாணவர்களுக்காய் தனிப்பட்ட பாடசாலைகள் கொண்டுவரப்படவேண்டும் என்ற விவாதத்தை -கட்டவிழ்ப்புக்கான - ஒரு உதாரணமாய் எடுத்துக்கொள்கின்றேன். கறுப்பின மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைநடுவில் வெளியேறும் (dropout) வீதம் 40% என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே நமது பாடசாலை அமைப்பில் எங்கேயோ மிகப்பெரும் சரிவு இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் விளங்குகின்றது. ஆனால் அதேசமயம் தனிப்பட்ட பாடசாலைகளை கறுப்பினத்தவருக்காய் அமைப்பதால் இந்த dropout வீதம் குறையலாம் என்று வைத்துக்கொண்டாலும், ஏற்கனவே விளிம்புநிலை சிறுபான்மையினராக இருக்கும் எங்களைப்போன்றவர்கள் அவ்வாறான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது இன்னும் பொது மைய நீரோட்டத்திலிருந்து எளிதாக அகற்றபடும் ஆபத்துக்களும் உண்டு. மேலும், தான் புத்திசாலித்தனமாய் கேள்வி கேட்கின்றேன் என்று நினைத்துக்கொள்ளும் நமது வெள்ளையின பிரிமியரான (மாநில முதலமைச்சர்?) Dalton McGuinty இவ்வாறான பாடசாலைகள் ஆரம்பிப்பதை அவ்வளவு சுலபமாக அனுமதிக்கப் போவதுமில்லை (அவரது முக்கிய கேள்வி: நீங்கள் கறுப்பினப்பாடசாலை ஆரம்பிக்க கோரிக்கை விடுகின்றீர்கள். ஆனால் உங்களால் ஒன்ராறியோவிலிருக்கும் 40,000 கறுப்பின மாணவர்களுக்கும் பாடசாலைகள் அமைத்துக்கொடுக்க முடியுமா? என்பது அவரது வாதம்).. ஆகவே நாம் இன்றைய காலகட்டத்தின் புறநிலைகளை வைத்துச் சிந்திப்போமானால், நமக்கு முன்னாலிருக்கும் பாடசாலை அமைப்பையே கட்டவிழ்ப்புசெய்யவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அமைப்பும் அது கட்டமைக்கும்போதே தனக்கான கட்டவிழ்ப்பையும் கொண்டிருக்கின்றது. நாம் கல்வியமைப்புக்குள்ளிருக்கும் குறைகளை முன்வைத்து -வெளிக்காரணிகளை உபயோகிக்காது- உரையாடவேண்டும். அவ்வாறு நாம் கட்டவிழ்ப்புச்செய்யும்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் குறைகளை நிவர்த்திசெய்யவருவார்கள், அவ்வாறு முடியாதவிடத்து கறுப்பினத்தவர்களுக்கான தனிப்பட்ட கல்லூரிகளுக்கான தேவை தானாகவே சமூகத்தில் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும்.


உதாரணமாய், இந்தப்புள்ளி குறித்து உரையாடியபோது, first generation கிறீக் தோழி சொன்னது: இன்னும் நமது பாடத்திட்டங்கள் பல்லினக்கலாசாரங்களைக் கற்றுக்கொள்வதாய்/ விவாதிப்பதாய் விரிவான முறையில் மாற்றியமைக்கப்படவேண்டும். பல்லினக்கலாசாரங்கள் அதிகளவில் உள்ளடக்கப்படும்போது அவ்வினங்களின் பிள்ளைகள் இன்னும் ஆர்வமாய்க் கற்கவும் பாடசாலைக்கு வரவும் செய்வார்கள். அதாவது தமக்குத் தெரிந்த, பழக்கமான விடயங்களை/கலாசாரத்தை/பழக்கவழக்கங்களை கற்றலும் விவாதித்தலும் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியது.

இவ்வாறான திருத்தங்களைத்தான் தெரிதா, கல்வி நிறுவனங்கள் மீதும் (ஏன் தத்துவவியல் சம்பந்தப்பட்ட புதிய துறைகள் ஆரம்பிக்கும்போதும், ஏற்கனவே இருப்பதைத்தான் மீண்டும் ஆரம்பிக்கின்றோம் என்றால் அதை நிராகரிக்கவேண்டும் என்கின்றார்) முன் வைக்கின்றார். கட்டவிழ்ப்பை கல்வி நிறுவனங்கள் (institutions) மீது முன்வைக்கின்ற தெரிதா இருக்கின்ற அமைப்பை இல்லாமற் செய்வதற்கல்ல அதையின்னும் திருத்தமாக்கிக்கொள்ளவே கட்டவிழ்ப்பு இன்றியமையாதது என்கின்றார். தான் ஒவ்வொரு வளாகத்திற்குப் போகும்போதும் அங்கே ஏதேனும் புதிய விடயத்தை நுழைத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடே போகின்றேன் என்றும் அவ்வாறு தான் நினைத்து எல்லா இடங்களில் நடக்காதுவிட்டாலும் தான் வளாகங்களுக்குப் போய்க்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை என்கின்றார். 'தெரிதா' படம் திரையிடலின் பின் நிகழும் உரையாடலில், தெரிதாவிடம் உங்களின் கட்டவிழ்ப்பு எப்படி விளங்கப்பட்டிருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள் என ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. ஒருவர் அதை சரியாக விளங்கிக்கொள்ளாவிட்டாலும் கட்டவிழ்ப்பு என்பது என்னவென்று அறிய விரும்புகின்றார் என்றால் அவரைத் தான் மதிக்கின்றேன் என்றும் எனினும் கட்டவிழ்ப்பு தனது சூழலில் விளங்கிக்கொள்ளப்பட்ட விதம் குறித்து தனக்கு அவ்வளவு சந்தோசமில்லையெனவும் (i'm not happy)கூறுகின்றார்.

சிந்தனையாளர்கள் என்பவர்கள் அவர்களின் எழுத்துக்களைப் போல இறுக்கமானவர்களாயும் விளங்கிக்கொள்ள கடினமானவர்களாயும் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியின் பார்வைகளை 'தெரிதா' திரைப்படம் மறுக்கின்றது. தெரிதா மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவராகவும், எல்லோரின் கேள்விகளையும் (எவர்/யார் கேட்கின்றார் என்ற பிரக்ஞையின்றி) உள்வாங்கிப் பொறுமையாகப் பதிலளிப்பவராகவும் இருக்கின்றார். அதைவிட அவர் தனது எழுத்து/வாசிப்புப் பற்றிக்கூறுவது என்னையும் அதிகம் அவரிடத்தே வைத்துப் பார்க்கக்கூடியதாக இருந்ததையும் குறிப்பிடவேண்டும். தான் எழுதுவது விவாதிப்பது குறித்தெல்லாம் இரவில் யோசித்து இது என்ன விசர்த்தனமானது, எல்லாவற்றையும் கிழித்து எறியவேண்டும் என்று தான் நினைப்பதாகவும்... மற்றவர்களோடு செய்யும் உரையாடல்கள்/விவாதங்கள் என்பவையெல்லாம் தேவையற்றது/விதண்டாவாதமானது என்று பலவேளைகளில் அரைவிழிப்பில் நினைப்பதாகவும் கூறுகின்றார். வெளியே பொங்கி அலைபுரண்டோடும் வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு, அதற்கேற்றவாறு நம்மைத் தகவமைத்துக்கொள்ள, எழுத்து/வாசிப்பிலிருந்து அநேகர் தப்பியோட விரும்புகின்றோம். ஆனால் வாசிப்பும்/எழுத்தும் சிலவேளைகளில் தனது ஆழமான விழுதுகளை நம்மில் பதித்துவிட்டது என்பதைக் காலந்தாண்டி அறியும்போது அது வன்முறையாய் நம்மைச் சிலவேளைகளில் சிதைத்தபடியும் இருக்கின்றது.


...தொடர்பாய் வாசித்தவை/உதவியவை:
(1) Deconstruction in a nutshell: A Conversation with Jacques Derrida
(2) The Post Card-From Socrates to Freud and Beyond
(3) பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும் (விடியல் பதிப்பகம்)

குறிப்புகள்:
(அ) இப்படத்தை முதற்தடவை பார்த்தபோது பல பகுதிகள் அவ்வளவாய் விளங்கவில்லை. இரண்டாம் முறை ஒருவாரத்திற்குப் பிறகு பார்த்தபோது ஓரளவு செரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
(ஆ)மேலே குறிப்பிட்ட Deconstruction in a nutshell: தெரிதாவின் deconstructionஐ ஓரளவு எளிதாய் விளங்கிக்கொள்ளக்கூடிய நூல். ஏனெனில் தெரிதா நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் பொதுவில் பங்குபற்றிய விவாதமும், அது குறித்த விரிவான குறிப்புகளும் இந்நூலில் இருக்கின்றது.
(இ) Deconstruction ற்கு தமிழில் கட்டுடைப்பு/கட்டவிழ்ப்பு/சிதைவாக்கம் என்ற பல சொற்கள் பாவிக்கப்படுகின்றன். எனக்கு கட்டவிழ்ப்பு ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அண்மையில், தமிழகத்து பதிப்பாளர் நண்பரோடு தொலைபேசியில் உரையாடியபோது, அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட/வெளியிடும் நூல்களில் இந்தச் சொல்லுக்கு தமிழில் சரியானதைக் கண்டுபிடிப்பது கடினமாயிருக்கின்றது என்று கூறினார். சிதைவாக்கம் என்பதை deconstructionற்கு அவர்கள் பாவிக்கப்போகின்றார்கள் என நினைக்கின்றேன்.
(ஈ) இங்கே தெரிதா உரையாடிய அனைத்தும் நான் விளங்கிக்கொண்டளவில்தான் குறிப்பிடுகின்றேன். இதை இப்படியே வாசித்து புரிந்துகொள்வது ஆபத்தானது. தயவு செய்து மூலப்பிரதிகளைத் தேடி வாசியுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள்.

சில இறகுகளின் பயணம்

Saturday, February 16, 2008

-மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நாவலை முன்வைத்து-

'We have art, so that we shall not be destroyed by the truth'
-Nietzsche

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கின்றதோ அதேயளவுக்கு அபத்தமாக அமைந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் கூறியது. நமது தனிப்பட்ட தேர்வுகளே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று சார்த்தரும் நிறைய எழுதினார். எமக்கான பொழுதுகளை எமது தேர்வுகள்தான் தீர்மானிக்கின்றன என்ற புரிதல் இருந்தாலும் நம்மால் வாழ்வின் அபத்தங்களை எளிதாய்த் தாண்டிப்போய்விட முடிகின்றதா என்ன? எனவேதான் தொடர்ந்தும் மனித மனங்களின் சிக்கலான புதிர் நிறைந்த ஆட்டங்களை நாம் சுவாரசியமாகப் பார்த்தபடியும் விவாதித்தபடியும் இருக்கின்றோம். வாழ்க்கையெனும் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் சில பாத்திரங்களின் அசைவுகளை மைக்கல் ஒண்டாஜ்ஜியின் Divisadero நம்முன் விரித்து வைக்கின்றது. ஆட்டமொன்று நடக்கும்போது வெளியிலிருக்கும் நமக்கு இந்த நகர்வு சரியாயிருக்கிறது/தவறாயிருக்கிறது என்று தெரிந்தாலும் நம்மால் குறுக்கிட முடிவதில்லை போல, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் பாத்திரங்களும் அதன் போக்கில் நகரும்போது உறைந்த நிலையிலிருந்து நாம் ஆட்டத்தின் அனைத்து நகர்வுகளையும் அவதானித்தபடி நமக்குள்ளே ஒரு ஆட்டத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்கின்றோம்.

மைக்கல் ஒண்டாஜ்ஜியில் அநேக நாவல்களில் மிகப்பெரும் தனிமையையும், மர்மத்தின் சுழல்களும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதுபோல இந்நாவலிலும் அவற்றுக்கான இடங்கள் இருக்கின்றன. வட கலிபோர்ணியா நகருக்கு ஒதுக்குப்புறமாய் தோட்டக்காணிகளும், நிறையக் குதிரைகளும் இருக்கும் கிராமப்புறமே நாவலின் முற்பகுதியில் பின்னணியாகின்றன. ஆன் (Anne), ஆனின் தந்தையார், கிளேயர் (Claire) மற்றும் கூப் (Coop) என்ற நான்குபேரைச் சுற்றியே கதை ஆரம்பத்தில் சுழல்கின்றது. ஆனின் தாயார், ஆன் பிறக்கின்றபோது பிரசவித்திலேயே இறந்துவிடுகின்றார். அதேசமயத்தில் வைத்தியசாலையில் அநாதையாக இருக்கும் கிளேயரையும் ஆனின் தகப்பன் தத்தெடுத்து ஆனோடு சேர்த்து வளர்க்கத்தொடங்குகின்றார். ஆனும் கிளேயரும் இரட்டைச் சகோதரிகள் போல அக்கிராமத்தில் வளர்கின்றார்கள். இவர்களோடு சேர்ந்து ஐந்து வயது கூப்பும் வளர்கின்றார். கூப்பின் பெற்றோர்கள் வாடகை கொலைக்காரர்களால் எதோ ஒரு காரணத்திற்காய் கொல்லப்பட்ட, அநாதையாக்கப்பட்ட கூப்பும் ஆன், கிளேயரோடு சேர்ந்து வளரத்தொடங்குகின்றார். ஆன் புத்தகம் வாசிப்பில் ஆர்வமுள்ளவராகவும், கிளேயர் குதிரைகளோடு அதிகம் மினக்கெடுபவராகவும், கூப் வீடு/பண்ணையில் மராமத்துத்துப்பணிகள் செய்வதில் ஆர்வமுடியவராகவும் நாவலில் சித்தரிக்கப்படுகின்றார்கள். தாய் ஒருவரின் பாசம் என்பது எப்படிப்பட்டது என்று சிறுவயதிலிருந்தே அறியாது வளரும் இம்மூவருக்கும், ஆனின் தகப்பனே ஒன்றிணைக்கும் புள்ளியாக இருக்கின்றார். சகோதரர்கள் என்ற உணர்வோடு சிறுவயதில் வளர்கின்ற ஆன், கிளேயர், கூப்புக்கு வயது ஏற ஏற கிராமததுச்சூழலும், பருவமும் அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாய்ப் பிரிக்கின்றது. 15 வயது ஆனுக்கு 20வயதிலிருக்கும் கூப் மீது ஈர்ப்பு வர, பின்னாட்களில் உடல்களைப் பகிர்ந்துகொள்கின்ற காதலும் காமமும் கலந்த ஒரு உறவாய் அது மாறிப்போய்விடுகின்றது..

ஒருநாள் இவ்வாறு நெருக்கத்திலிருக்கும் ஆனையும் கூப்பையும் காண்கின்ற ஆனின் தகப்பன் சன்னதமாடி மிக மோசமான முறையில் கூப்பைத் தாக்கத்தொடங்குகின்றார். கூப் எதையும் திருப்பிப் பேசாது ஆனின் தகப்பனின் அனைத்து வன்முறைகளையும் தாங்கிக்கொள்கின்றார். அந்தச் சம்பவத்தோடு ஆன் தனது பதினாறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போகின்றார்; அதன்பின் ஒருபோதும் அந்தக்கிராமத்துக்குத் திரும்பி வரவேயில்லை. அவ்வாறே கூப்பும் ஒரு நாடோடியாக நெவேடா பாலைவனங்களில் அலையந்து, பிற்காலத்தில் ஒரு நுட்பமுள்ள சூதாட்டக்காரனாய் மாறுகின்றார். கிளேயர் மட்டும் தனது தகப்பனைக் கவனித்தபடி ஒரு வழக்கறிஞரின் உதவியாளாராக அருகிலுள்ள ஒரு நகரில் வேலை செய்கின்றார். கிட்டத்தட்ட இருபது வருடங்களின் பின் கூப் சூதாட்டத்தின் நிமித்தம் ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கும்போது, கிளேயர் கூப்பை க்ண்டு உதவி செய்யப்போவதுடன் நாவலின் முதற்பகுதி முடிகின்றது.

இரண்டாம் பகுதியில், எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமிருக்கின்ற ஆன், பிரான்சிலிருக்கும் ஒரு எழுத்தாளரை (Lucian Segura) பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதும் நோக்கத்தோடு பிரான்சின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் அந்த எழுத்தாளர் வாழ்ந்த வீட்டுக்குப்போகின்றார். அங்கே தங்கியிருக்கும் காலத்தில் ரஃபேல் என்ற ஒரு ஆணோடு நெருக்கம் வந்து அவரோடு சேர்ந்து ஆன் வாழத்தொடங்குகின்றார். ரஃபேலின் சிறுவயது நினைவுகள் அந்த எழுத்தாளரோடு கழிந்திருக்கின்றதென்பது ஆனுக்கு இன்னும் ரஃபேலுடனான உறவு சுவாரசியமூட்டுகின்றது. இரண்டாம் பகுதி முழுதும் லூசியன் என்ற எழுத்தாளரைப் பற்றியும், ரஃபேலின் சிறுவயது நினைவுகள் பற்றியுமே பேசப்படுகின்றது. ஆச்சரியமாக எழுத்தாளார் லூசியனின் வாழ்வு மற்றும் பின்புலம் என்பவை ஆனின் இளவயது வாழ்வுக்கு நெருக்கமாய் இருக்கின்றது. தான் எதை எழுத/எண்ணத் தொடங்கினாலும் அது தனது சகோதரியான கிளேயரின் நினைவுகளோடே தொடங்கும் என்று நினைக்கும் ஆன் தனது கடந்த காலத்துக்கு போவதை ஒருபோதும் விரும்பாதவராக இருக்கின்றார். கிளேயரின் ஆளுமை தனது இருப்பில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றதென்பதையும் ஆன் அறியாதவருமல்ல. ஆனோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் ரஃபேலோ அல்லது அதற்குமுன் ஆன் சந்தித்த ஆண்களோ, ஆனின் கடந்த கால வாழ்வு பற்றிக் கேட்கும்போது ஆன் அதைத் தவிர்க்கவே செய்கின்றார். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறான ஆண்களை மூர்க்கமாய் நிராகரித்தே ஆன் செல்கின்றார்.. அநேக பொழுதுகளில் கூப்பை, கிளாரவை நினைத்துகொள்ளும் ஆன திருப்பி அவர்களைச் சந்திக்கவோ தொடர்பில் இருக்கவோ விரும்பவில்லை என்பதோடு, ரஃபேலிடம் தனக்கு சகோதரிகள் எவரும் இல்லையெனத்தான் கூறவும் செய்கின்றார். அத்தோடு தனது கடந்தகாலத்தின் நிழல் தன்னோடு தொடர்ந்து வருவதைத் துண்டிக்கும் நோக்கத்தோடு தனது இளமைக்காலப்பெயரை மாற்றியே ஆன் வாழத்தொடங்குகின்றார்.

பிரான்ஸ் எழுத்தாளர் லூசியனின் வாழ்வும் ஒரு கிராமப்புறச் சூழலில் கழிகின்றது. லூசியனின் பதின்மவயதில் அவர்களின் வீட்டுக்கருகில் புதிதாய்த் திருமணமாகிய மேரியும் (Marie), ரமோனும்(Ramon) குடியேறுகின்றார்கள். ரமோன் சற்று முரட்டுத்தனமானவராக அதிகம் பேசிக்கொள்ளாதவராக இருக்கின்றார். மேரிக்கு, லூசியனின் வயதே (16) இருக்கின்றது. லூசியனின் தாயார் மேரியையும் தனது பிள்ளையாக நினைத்து வாசிக்கவும், நடனங்களைக் கற்றுக்கொடுக்கவும் செய்கின்றார். பிற்காலத்தில் லூசியன் திருமணம் செய்து முதலாம் உலகப்போரில் பங்குகொண்டு மீண்டும் தனது கிராமத்துக்கு திரும்பிவருகின்றபோது மேரி நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருப்பதையும், ரமோன் ஒரு குற்றத்தின் நிமித்தம் ஜெயிலில் இருப்பதையும் கண்டுகொள்கின்றார். பிறகு இறக்கும்வரை மேரியைத் தனது பராமரிப்பில் வைத்து லூசியன் காப்பாற்றுகின்றார். நாவலின் இடையில் ஏற்கனவே மேரிக்கும், லூசியனுக்கும் நட்புக்கு மேற்பட்ட ஒரு உறவு முகிழ்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. பிற்காலத்தில், போர்க்காலத்தில் diphtheria நோயால் பாதிக்கப்பட்டு அதிசயமாகத் தப்பி வருகின்ற லூசியன் அந்நோய் குறித்து விரிவாகக் குறிப்புகளும் எழுதுகின்றார். இறுதியில் அந்நோய் அவரின் கிராமத்தில் பரவும்போது அதன் காரணமாய் இறந்தும்போகின்றார். மேரி-ரமோனின் பிள்ளையான ரஃபேலே லூசியனோடு இறுதிக்காலத்தில் கழித்த ஒரு உயிருள்ள சாட்சியாக நாவலில் காட்டப்படுகின்றார்.

இந்த நாவலின் பல பாத்திரங்கள் -சாதாரண வாசிப்பில் எதிர்ப்பார்க்கின்ற - முழுதான வடிவத்தைத் தந்து முடிவான முடிவுகள் என்று எதையும் தருவதில்லை. வாழ்கை என்பது எப்போதும் ஓடிகொண்டிருக்கும் நதிதான். ஏதோ ஒரு கணத்தில் கால நனைக்கும் நம்மால் கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ, ஏன் நிகழ்காலத்தைக் கூட முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாது எனபதே யதார்த்தமானது. எனவே ஒவ்வோரு பாத்திரங்களும் ஏதோ ஓரிடத்தில் நாவலிருந்து நழுவிப்போய்விடுகின்றார்கள். நாவல் முடியும்வரை எப்போதாவது ஓரிடத்தில் திரும்பிவந்து தமது கதையை நிறைவுசெய்வார்கள் என்று நினைத்து வாசித்துமுடிக்கும்போது அவர்கள் மீண்டும் திரும்பியே வருவதில்லையென்கின்றபோது, அட இன்னும் அந்தப் பாத்திரத்தை ஆழமாய் வாசித்திருக்கலாமோ என்று எண்ண முடியாமல் இருக்க முடிவதில்லை. மேலும் நிகழ்காலத்தில் எம் முன்னே விழுந்து கிடக்கும் கடந்தகாலத்தின் சிறகுகள் ஒவ்வொன்றும் நமக்கான கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் என்கின்றபோதும், அந்தச் சிறகுகளைக்கொண்டு முழுப்பறவையும் அது பறந்துகொண்டிருந்த வெளியையும் முழுமையாக நினைவுபடுத்தலென்பது அவ்வளவு சாத்தியமானதில்லை. அவ்வாறான ஒரு நினைப்புடனேயே இந்நாவல் முழுதும் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றதோ என்று தான் யோசிக்கத்தோன்றுகின்றது.

ஆன், கிளார, கூப் ஒரளவு முக்கிய பாத்திரங்களே தவிர அவர்கள்தான் முக்கிய பாத்திரங்கள் என்றில்லை. மையங்களற்ற பாத்திரங்களைக்கொண்டு மையங்களற்ற வகையில்தான் ஒண்டாஜ்ஜி தனது போக்கில் இந்நாவலை எழுதிக்கொண்டே போகின்றார். மூன்றாம் பகுதி முழுதும் ஒவ்வொரு சிறுகதைகளாக தலையங்கமிட்டே எழுதப்பட்டிருக்கும். திடீதிடீரென்று ஒவ்வொரு பாத்திரங்களும் தமது நிலையில் நின்று கதையைச் சொல்லத் தொடங்கும்போது, விளங்கிக்கொள்வதற்கான வாசிப்புக்கான நேரம் நிறையக் கோரப்படுகின்றது. முதலாம் பகுதியில் மகள்களின் பாத்திரங்கள் (ஆன் மற்றும் கிளேயர்) பேச, தந்தை அதிகளவில் மெளனமாகிவிடுகின்றார். அதேபோல இரண்டாம் பகுதியில் மெளனமாக்கப்பட்ட தந்தைகளின் பிரதிநிதியாக நின்று தந்தையாகிய (லூசியன்) அதிகம் பேசத்தொடங்குகின்றார். எல்லாப் பாத்திரங்களும் தமக்கான தனிமையையும் இரகசியங்களையும் கொண்டிருப்பதால், அவற்றை வாசகர் தமக்கு விரும்பிய பாத்திரங்களாக நிரப்பிக்கொள்ளும் வெளியும் வாசகருக்கு இந்நாவலில் வழங்கப்படுகின்றது. உதாரணமாக பதினைந்து வயதில் ஓடிப்போகின்ற ஆன், 34 வயதில் ஒரு எழுத்தாளாராக நாவலில் மீண்டும் அறிமுகப்படுத்தபடுகின்றார். அந்த இடைப்பட்ட காலம் பற்றிய வெளியை வாசகர் தனக்கு உரியதாக வாசித்துக்கொள்ளும் ஒரு சூழலைப்போல நிறைய இடங்கள் நாவலுக்குள் இருக்கின்றன.

கூப்பை ஆபத்திலிருந்து கிளேயர் காப்பாற்றுகின்றபோது கூப் ஒருவித குழப்பநிலையில் இருக்கின்றார். கிளேயரை ஆன் எனவே அழைக்கவும் நினைவுகொள்ளவும் செய்கின்றார். பிறகு கூப்புக்கும் கிளேயருக்கும் என்ன நிகழ்ந்தது என்பதும், கிளேயர் தனத் தந்தையிடம் கூப்பை அறிமுகம் செய்வாரா என்பதும் நாவலில் திறந்தவெளியாக இருக்கின்றது. அதேபோல் அடிக்கடி தனது ச்கோதரி கிளேயரையும், கூப்பையும், தனது தந்தையையும் நினைவுபடுத்திக்கொள்கின்ற ஆன் மீண்டும் அவர்களைச் சந்திப்பாரா அல்லது கடந்தகாலத்தைத் துண்டிக்க தனது பெயரை மாற்றியதுபோல எல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்ந்துகொண்டு போவாரா என்பதும் நிரப்பப்படாத வெற்றிடமாகவே இருக்கின்றது. நம்மிடம் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் வாழ்க்கையில் தெளிவான பதில்கள் இருப்பதில்லை போல இந்நாவலிலும் பல இடங்களில் எழும் கேள்விகளுக்கு எந்தத் தெளிவான முடிவுகளும் கிடைப்பதில்லை. நாம் சிலவேளைகளில் நமக்கான வாழ்க்கையைத்தான் திருப்பவும் வாசிக்கின்றோமா என்ற மனக்கிளர்ச்சியும் அலுப்பும் ஒரே நேரத்தில் வந்துபோவதை இந்நாவலை வாசிக்கும்போது தவிர்க்கவும் முடிவதில்லை.

தனி மனிதத்தேர்வுகள்: துரோகங்களும், துயரங்களும்...

Monday, January 07, 2008

-உனையே மயல் கொண்டும், பிறவும்...-

குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல் (Living Together) இன்னபிற, திருமணம்/குடும்ப அமைப்புக்களுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், இன்றும் குடும்பம் என்ற அமைப்பு முழுமையாக உடைக்கப்படாமலே -இன்னுமின்னும்- இறுக்கமடைந்து வருகின்றது. மேலும், ஒரளவு அடிப்படை உரிமைகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப அமைப்புக்களின் உள்ளேயே அதிகாரமும் வன்முறையும் அதிகளவு பிரயோகிக்கப்படும்போது, சட்டங்களுக்கு உட்படாத சேர்ந்து-வாழ்தல் போன்றவற்றினூடாக வன்முறை/அதிகார துஷ்பிரயோகம் நிகழ்த்தப்படும்போது சட்டரீதியாக எதையும் அணுகுகின்ற போக்கும் இல்லாதுபோய்விடுகின்றது என்பது கவனத்திற்குரியது. ஆண்-பெண்-அரவாணிகள் இன்னமும் ஒரு சமத்துவமான சூழலில் வாழமுடியாத நிலை இருக்கும்போது ஆகக்குறைந்தது திருமணம் என்ற 'சட்டம்' அங்கீகரிக்கின்ற ஒரு அமைப்பை தமது பாதுகாப்பின் நிமித்தம் பலர் நாடுகின்றார்கள். பொருளாதாரரீதியில் தன்னைத்தானே எவரின் துணையின்றியும் இன்றைய சூழலில் பொருந்தி வாழமுடியும் என்று நினைக்கின்ற பெண்கள்/ஆண்கள் திருமணம் என்ற அமைப்பை உடைத்து, சேர்ந்து-வாழ்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு நகர முயல்கின்றனர். எனினும் அமைப்புக்குள்ளோ/ அமைப்பின்றியோ எவர் வாழ்ந்துகொண்டிருந்தாலும், இருப்பின் அர்த்தம் எதுவென்ற கேள்வி எல்லோரையும் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கின்றது.

உனையே மயல் கொண்டு என்ற நாவல், குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. கலாநிதிப் பட்டத்திற்காய் ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரனையும், அவர் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்களையும் சுற்றிக் கதை நகர்கின்றது. பதினெட்டு வயதில் திருமணமாகி, ஒரு வருடத்திற்குள் குழந்தையொன்றையும் பெற்று, அடிக்கடி மனோநிலை மாறுகின்ற ஷோபனாவின் மீதான ஈடுபாடு காலப்போக்கில் சந்திரனுக்குக் குறைகின்றது. மேலும் அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் ஷோபனாவோடு, குழந்தை பிறந்ததற்குப் பின்பாக ஒரிருமுறைகளே சந்திரனால் உடலுறவில் ஈடுபட முடிகின்றது. அவ்வாறான திருப்தியின்மையில் இருக்கின்ற சந்திரனுக்கு விவாகரத்துப் பெற்ற ஜூலியாவுடன் நெருக்கம் அதிகரிக்கின்றது. சந்திரன் ஏற்கனவே திருமணமானவன் என்றறிந்தும் மனத்தடையில்லாது ஜூலியாவுக்கு சந்திரனோடு இயல்பாய்ப் பழக முடிகின்றது.

இவ்வாறு முக்கோண உறவுகளாய் கதை நகர்ந்துகொண்டிருக்கையில், ஷோபனாவை உளவியல் நிபுணரிடம் கூட்டிச்செல்ல சந்திரன் முயற்சிக்கின்றார். உளவியல் ஆலோசனை பெறுவதே தீண்டத்தகாத விடயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் ஷோபனாவை வைத்தியரிடம் கூட்டிச்செல்லுதல் அவ்வளவு இலகுவான விடயமல்ல. உளவியல் ஆலோசனைகளின்போது ஷோபனாவால் முழுமையாக குடும்ப உறவில் ஈடுபடமுடியாததற்கு, அவர் 83 ஜூலைக் கலவரத்தில் சிங்களக்காடையர்களால் நிர்வாணமாக்கப்பட்டு வெருட்டப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது (அதன் நீட்சியில் ஷோபனாவிற்கு bipolar disorder இருக்கின்றதென நாவலில் குறிப்பிடப்படுகின்றது). மேலும் கலவரத்தால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரும் ஷோபனாவின் குடும்பத்திலிருந்து அவரது தமையன் இனப்பிரச்சினை எழுச்சிபெற்ற காலங்களில் போராளிக்குழுவில் சேர்ந்து இன்னொரு போராளிக்குழுவால் கொல்லப்பட்ட பாதிப்பின் படிவும் ஷோபனாவில் இருக்கக்கூடும் என்றும் கதையின் ஓட்டத்தில் சொல்லப்படுகின்றது (ரெலோ-புலிகள் மோதல்). இவ்வாறு பல்வேறு உளவியல் அழுத்தங்களோடு இருக்கும் ஷோபனாவிற்கு உடலுறவு உட்பட எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாதிருக்கின்றது. ஷோபனாவின் இந்த உளவியல் பிரச்சினையை(bipolar disorder) அறிந்துகொள்கின்ற சந்திரனுக்கு, தான் ஷோபனாக்குத் தெரியாமல் இன்னொரு உறவில் ஈடுபட்டு வருவது யோசிக்க வைக்கின்றது. என்ன என்றாலும் தன்னை நேசிக்கும்... தன்னிடம் முழுமையாக ஒப்படைத்த ஷோபனாவிற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று சந்திரன் சிந்திக்கத்தொடங்குகின்றார். இதற்கிடையில் சந்திரன் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுகளை எழுதுவதில் மும்முரமாய் ஈடுபடுகையில் ஜூலியா இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழக்த் தொடங்குவதும் சந்திரனுக்குத் தெரியவருகின்றது. இனித் தான் நல்லதொரு 'ஆண்பிளையாக' இருக்க முயற்சிக்கலாம் என்று நினைக்கின்றபோது ஷோபனா சந்திரனின் இன்னொரு உறவைக் கண்டுபிடிக்கின்றார். இவ்வாறு பல்வேறு சிக்கல்களில் அகப்படுகின்ற சந்திரன் வேலையின் நிமித்தம் இன்னொரு நகருக்கு மனைவியின் கட்டளையின்படி செல்வதோடு நாவல் முடிகின்றது (நீ மெல்பேண் வருவாய்தானே?..../ எனக்கு தற்போது மன ஆறுதல் ஏற்பட சில காலம் தேவை' ப 147).

நாவல் இருவேறு திசைகளை நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது. உளவியல்ரீதியான பிரச்சினை வெளிப்படையாகத் தெரிகின்ற ஷோபனாவிற்கும் சந்திரனுக்கும் இடையில் ஒன்றுமாய்.., இன்னொரு பக்கத்தில் சந்திரனுக்கும் ஜூலிக்குமான நெருக்கங்களுக்கிடையில் கதை விரிகின்றது. நாவலில் ஷோபனாவின் உளவியல் பிரச்சினைக்கு காரணம் தேட டொக்ரர் கந்தசாமியிடம் ஆலோசனைப்பெறப்போகின்ற சந்திரன் -தான் இரண்டு பெண்களுக்கிடையில் தத்தளிக்கும்- தனது உளவியல் பிரச்சினை குறித்து எதையும் பகிர்ந்ததாய்க் காணவில்லை. தமிழ்ச்சமூகம் உளவியல் பிரச்சினைகளை அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளுகின்றது என்கின்ற புரிந்துணர்வு இருக்கின்ற சந்திரன், இவ்வாறு தனது மனைவிக்குத் தெரியாது ஈடுபடுகின்ற உறவு, மனைவிக்குத் தெரியவரும்போது தனது துணை இதைவிட இன்னும் ஆழமான மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுவார் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார்.

சந்திரனின் தனது பேராதனை வளாகக் காதலை பொருளாதார வசதியின் நிமித்தம் நிராகரிக்கின்றபோது, 'நீ ஒரு அசலான யாழ்ப்பாணத்தான்' என்று ஒரு சிங்கள நண்பன் கூறுவதை சந்திரன் தனது புலம்பெயர் -ஆஸ்திரேலியா- வாழ்விலும் மிகவும் கவனத்துடனேயே கடைப்பிடிக்கின்றார். தன்னைவிட வயதுமூத்த ஜூலியா உடலுறவில் தரும் உயரிய இன்பத்தைப் போல, அதற்குப்பின் அரசியல் தத்துவம் இன்னபிறவற்றை தன்னுடன் உரையாடுவது குறித்து மனம் மகிழும் சந்திரன் பதினம்வயதில் நிற்கின்ற ஒரு பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது இவற்றை அந்த வளரிளம்பெண்ணால் ஈடுகட்டமுடியாது என்று ஆழமாய் யோசிக்கமுடியாது போந்தது எந்தவகையில் என ஆராய வேண்டியிருக்கின்றது. மேலும் தான் இன்னொருவருடன் உறவில் ஈடுபடுவதை, தமிழ் நண்பர்களிடையே சந்திரன் பகிரப் பயப்பிடுகின்றார். அவர்கள் ஒரு கொலையைப்போலத்தான் எடுத்துக்கொள்வார்களென தனது இந்திய நண்பனிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கின்றார். இங்கேதான் சந்திரனின் இன்னொரு அசலான யாழ்ப்பாண முகம் வெளிப்படுகின்றது. தனது இருத்தலுக்கு தமிழ் அடையாளத்தை எளிதாய் சுவீகரித்து, கொழும்பிலிருந்து ஒரு இளம்பெண்ணைத் தனது துணையுமாக்குகின்ற சந்திரனுக்கு தனது மனதுக்கு/சமூகத்துக்கு எதிரான விடயமொன்றைச் செய்யும்போது மட்டும் தமிழ் அடையாளம் வெறுப்பூட்டுகின்றது.
மேலும் ஜூலியாவை இன்னொரு ஆணுடன் நெருக்கமாய் காண்கின்ற சந்திரன் -வெறுப்பில்- பாலியல் தொழில் செய்யும் விடுதியை நாடிச் செல்கின்றார். அங்கே காத்திருக்கின்ற நேரத்தில் 'ஞானம்' பிறந்து -நல்லவேளை எந்தப் பெண்ணும் எனக்குப் பிடிக்காமல் போனது. ஜூலியாவின் மீது ஏற்பட்ட கோபத்தினால் என்னையே கெடுத்திருப்பேன்' ப -138- என வெளியேறுகின்றார். சந்திரன் பாலியல் விடுதியை விட்டு வெளியேறிவிட்டார்;ஆனால் கதைசொல்லி இன்னும் நகரவில்லை. இதற்கடுத்து மேலைத்தேய பாலியல் விடுதிகள் பற்றி வாசிப்பவர்களுக்கு கதைசொல்லி விரிவுரை செய்யத்தொடங்குகின்றார். தனிப்பட்ட விருப்பின் பேரிலேயும் அரசாங்கத்தின் அனுமதியுடந்தான் இவர்கள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் எனவும் எழுதச்செய்கின்ற கதைசொல்லி, பாலியல் தொழில்/பாலியல் தொழிலாளி என எழுதாமல் விபச்சாரம்/விபச்சாரி என எழுதுவதிலேயே அவரது நிறத்தை வெளிக்காட்டிவிடுகின்றார். மேலும் 'தனிப்பட்டமுறையில் விபச்சாரியுடன் உறவு கொள்ள சந்திரன் விரும்பவில்லை' (ப 139) எனச் சந்திரனை ஒரு புனிதபிம்பமாக ஆக்கவும் கதைசொல்லி மிகவும் கஷ்டப்படுகின்றார்.

நாவலின் முக்கிய குறையாக ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்க்கப்படாமல் சிதைக்கப்பட்டதைக் குறிப்பிடவேண்டும். சந்திரனே முக்கியபாத்திரமாகவும், கதை சொல்லி ஒரு ஆணாகவும் இருக்கும்போது ஒரு பெண்ணின் பாத்திரத்தை வளர்ப்பது கடினமானது என்றபோதும், இன்னொரு பக்கத்தில், ஜூலியாவின் பாத்திரத்தின்போது, அவரது மூதாதையர்களின் ஜரிஷ் பின்புலம் குறித்தும் அவரது முன்னைய உறவுகள் குறித்து விரிவாக நாவலில் பேசப்படுவது குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது. இதை இன்னொருவகையாய், ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்த்தெடுக்கும்போது, நாவலில் சந்திரனுக்கான முக்கிய இடம் இல்லாது தானாகவே ஒழிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால், ஷோபனா இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கின்றார் எனவும் ஒரு வாசகர் எடுத்துக்கொளும் வாசிப்புச் சாத்தியமுண்டு. ஓ.எல் பரீட்சையில் சித்தியடையாத ஷோபனாவை, கலாநிதிப்பட்டம் செய்துகொண்டிருக்கின்ற சந்திரன் தனது துணையாக எவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொண்டார் எனவும் கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது (கதையில் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இவ்வாறான தேர்வுக்கு யாழ்ப்பாணியர்கள் எதிர்பார்க்கும் கொழுத்த சீதனத்தைத் தவிர வேறெதுவும் இருக்குமுடியாதெனத்தான் வாசிக்கும்போது நினைக்கத்தோன்றுகினறது). எனெனில் ஜூலியாவுடனான உறவிலிருக்கும்போது அரசியல் தத்துவம் இன்னபிற ஈடுபாடுகளை ஜூலியா பேசும்போது சந்திரனின் பாத்திரம் மனமுவகை கொள்கின்றது. தனக்கான அலைவரிசையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காது இருக்கும் சந்திரன் (அல்லது சந்திரனைப் போன்றவர்கள்) ஷோபனா போன்றவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளில் இல்லாது இயல்பாய் இருந்தாலும் இன்னொரு உறவைத் தேடி (இங்கே உடல்தேவைக்குப் பதிலாக, உளத்தேவைக்காய்) போகமாட்டார்கள் என்பதை எங்ஙனம் நம்புவது?

மேலும் சந்திரனின் இன்னொரு அறிவுஜீவி முகம் வேறொரு இடத்தில் வெளிப்படுகின்றது. காய்கறிக்கடையில் சந்திக்கும் வயது முதிர்ந்தவர், 'தம்பி உங்களைப்போல இளம்பிள்ளையல் படிக்க வரலாம். எங்களைப்போல வயதானவர்கள் மருத்துவ வசதியில்லாமல் சாக வேண்டியதா?' என்று கூறும்போது சந்திரன் மகாத்மாகிவிடுகின்றார். இப்படிப்பட்ட 'பொய் பித்தாலாட்டங்கள்' காட்டி வருகின்றவர்கள் மீது சந்திரனுக்கு (அல்லது கதைசொல்லிக்கு) கோபம் வருகின்றது. இந்தச் சந்திரன் தீவிரமான போர்சூழலுக்குள் வாழ முயன்றிருந்தால், என்ன காரணம் காட்டியாவது ஈழத்தை விட்டு புலம்பெயரும் பிறரின் சோகத்தை விளங்கிக்கொள்ள முயன்றிருப்பார். ஆனால் அவர்தான் அசல் யாழ்ப்பாணத்தவர் ஆயிற்றே. படிப்பை முன்வைத்து பறந்துவந்துவிடுவார். படிப்பை மூலதனமாக்க முடியாதவர்கள் எப்படித் தப்பியோடிவருவது என சந்திரன் இன்னொரு ஆய்வை இன்னொரு கலாநிதிப் பட்டத்திற்காய்ச் செய்யவேண்டுமெனச் சொல்லவேண்டியிருக்கின்றது.

சந்திரனின் பாத்திரம் ஒரு சராசரி யாழ்ப்பாண அறிவுஜீவியாக வார்க்ப்பட்டதையும், ஆண்மய்ய பார்வையினுடாக நாவல் படைக்கப்பட்டதன் பலவீனங்களையும் மீறி, புலம்பெயர் சூழலை மையமாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதால் கவனத்துக்குரியதாகின்றது. மேலும் நமது சமூகம் எளிதாய்ப் புறக்கணிக்கும் உளவியல் பிரச்சினை என்பது ஏதேனும் ஒருவகையில் குடும்ப வாழ்வைச் சிதைக்கக் காரணமாகக்கூடுமென நாவல் சொல்லவரும் புள்ளி முக்கியமானது. நமது தமிழ்ச்சமூகத்தில் பெற்றோராகும், ஆண்/பெண் பிறகு, தமது தனிப்பட்ட வாழ்வு குறித்து அக்கறை கொள்ளாதுபோகும் திசைகள் நோக்கி நாம் நமது உரையாடலை வளாத்தெடுக்கவேண்டும். உடலுறவு/தங்களுக்கென தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல்/தங்களுக்குப் பிடித்ததைச் செய்யாதிருத்தல் போன்றவற்றோடு குழந்தைகளே தமக்கான அனைத்துமென பெற்றோர்கள் மாறும்போது, -மத்தியவயதுகளில் பெற்றோராக இருப்போருக்கு- தமக்கிடையிலான உறவு மீதான சோர்வும்/சலிப்பும் வருவதைத் தடுப்பற்கான மாற்றுவழிகள் குறித்து நிறைய யோசிக்கவேண்டியிருக்கின்றது.


2.

மிலன் குந்தேராவின் (Milan Kundera) நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமான The Unbearable Lightness of Being மனித வாழ்வின் இருத்தலின் மீதும் குடும்பம் என்ற அமைப்பின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றது. மூளை சத்திரசிகிச்சை நிபுணனாக இருக்கும் நாயகன் தோமஸ், ஒரு பெண் பித்தனாக? (womanizer) இருக்கின்றான். அவனது வாழ்வும் தெரேஸா, சபீனா என்ற இரு பெண்களைச் சுற்றியே நகர்கின்றது. பெண்களோடு உடலுறவு கொள்வதற்கும் நேசிப்பதற்கும் தெளிவான எல்லைகள் இருக்கின்றதென நினைத்து வாழ்வை அதன்பாட்டில் கொண்டாடிக்கொண்டிருப்பவன். அவனது பெண்பித்து நிலைமையைத் தெரிந்துகொண்டு திருமணம் செய்கின்ற தெரேஸாவிற்கு திருமணத்தின்பின்னும் தோமஸ் ஒரு பெண் பித்தனாக இருப்பதை அறிந்து உளவியல்ரீதியில் ஒரளவுக்கு சிதைவிற்குள்ளாகின்றார். பின்னாட்களில் ரஷ்யா(சோவியத் ஒன்றியம்) செக்கோசிலாவாக்கியா (பின்னாட்களில் செக்) நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்கின்றபோது, சுதந்திரத்தை/உயிரைத் தக்கவைப்பதற்காய் சுவிஸிற்கு தோமஸும், தெரேஸாவும் தப்பியோடுகின்றார்கள் (அமெரிக்காவாயிருந்தாலென்ன, ரஷ்யாவாயிருந்தாலென்ன, இந்தியாவாயிருந்தாலென்ன அயல் நாடுகளில் மீது ஆக்கிரமிப்புச் செய்வதும், அந்நாடுகளில் கலாசாரங்களைச் சிதைப்பதும் அளவுகளில் அவ்வளவு வேறுபடுவதில்லையே. அமிலன் குந்தேரா ரஷ்யா மீது தொடர்ந்து கடுமையான விமர்சங்களை வைத்துவருபவர் என்பது கவனிக்கத்தக்கது) செக்கில் இருந்தபோது ஒரு சுயாதீனப்புகைப்படப்பிடிப்பாளராய் இருந்த தெரேஸாவுக்கு, தொழில் தேடி சுவிஸில் அலையும்போது தோட்டம்/நிர்வாணப்படங்களை எடுத்தால் மட்டுமே பிரசுரிப்போம் என்கின்ற சுவிஸ் பத்திரிகைத் தொழில் வெறுக்கின்றது. மேலும் சுவிஸ் வந்தும் தோமஸ் பெண்பித்தனாக அலைவதைப் பார்த்து சோர்வு வந்து, தேரேஸா மீண்டும் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருக்கும் செக்கிற்கு திரும்பிச்செல்கின்றார். ஏன் திரும்பிப்போகின்றாய் எனக் கேட்கப்படும்போது, செக்கில் தோமஸ் ஒரு பெண்பித்தனாக இருந்தபோதும் தான் தனித்தியங்க முடிந்திருந்தது. எனக்கு அவனது அன்பு மட்டுமே அப்போது போதுமானதாயிருந்தது. இப்போது எல்லாவற்றின் நிமித்தமும் தோமஸைச் சார்ந்திருக்கவேண்டியிருக்கிறது. எனக்கு வேண்டியது அவனது அன்பு மட்டுமே, நான் தனித்தியங்கவே விரும்புகின்றேன் என்று தெரேஸா கூறுகின்றார்.

பெண் பித்தனாக தோம்ஸ இருந்தாலும், அவனுக்கு பிற உறவுகள் உடலுறவுக்காய்த் தேவைப்படுகின்றதே தவிர, நேசத்திற்கு எனப்பார்க்கும்போது அவனது தேர்வு தெரேஸாவாக இருக்கின்றது. தெரேஸாவோடான அன்பு அவனளவில் உணமையானது, அதை வேறு எவரும் ஈடுசெய்யவும் முடியாது. தெரேஸா செக்கிற்கு மீண்டும் போனதை அறிந்த தோமஸும் செக்கிற்குள் மீண்டும் நுழைகின்றான். சில அரசியல் காரணங்களால் மீண்டும் வைத்திய நிபுணராய் தொழில் செய்யமுடியாது கட்டடவேலை/வர்ணம் பூசுதல் என்பவற்றைத் தோமஸ் செய்துவருகின்றான். தெரேஸாவாலும் தான் முன்பு பணியாற்றிவந்த பத்திரிகையில் இயங்கமுடியவில்லை. ஆரம்பத்தில் செய்துவந்த மதுபானப் பணியாளர் (bartender) வேலையைத்தான் செய்கின்றார் இதற்கிடையில் தோமஸ் மீண்டும் ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடுபடுவதை அறிந்து கோபத்தில் -ரஷ்ய உளவாளி என நம்பப்படுகின்ற- ஒருவரிடம் தன்னைத் தெரேஸா இழக்கின்றார். ஓர் இரவில் தனியே அவ் ஆடவனின் வீட்டிற்குப்போகும் தேரேஸாவை, அந்த நபர் உடலுறவுக்கு அழைக்க தான் அதற்காய் வரவில்லையென மறுக்குகின்ற தெரேஸா, பிறகு தோமஸின் மீதிருக்கும் கோபத்தில் ரஸ்யரோடு இணங்கிப்போகின்றார். எனினும் அந்த உடலுறவு ஒரு பாலியல் வன்முறையைப் போலவே தெரேஸாவுக்குத் தெரிகின்றது. இறுதியில் தான் முழுமையாக நேசம் கொள்ளக்கூடிய ஒருவர் தோமஸே என உணர்ந்து, தோமஸிடம் வந்து மீண்டும் செக்கிலிருந்து வேறு நாட்டுக்குப்போய்விடுவோம் என்கின்றார். எனினும் இவர்களிலிருவரின் கடவுச்சீட்டுக்களும் ரஷ்ய அதிகாரிகளால் பறிக்கப்பட்டதால் அவர்களால் வேறு நாட்டுக்குத் தப்பியோட முடியாது போக, ஒரு கிராமப்புறத்திற்குச் சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். இயற்கையோடு இயைந்து விவசாய வாழ்வு செய்து தமக்கான சந்தோசத்தை கண்டெடுக்கின்ற இவ்விணை, முடிவில் ஒரு ட்ரக் விபத்தில் இறந்துபோவதுடன் நாவல்/படம் முடிவடைந்து விடுகின்றது.

அமிலன் குந்தராவின் இந்நாவல் இருத்தலியத்தையும், குடுமப அமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. பெண்களை இலகுவில் ஈர்த்துவிடக்கூடிய தோமஸ் ஏன் திருமணத்துக்குச் சம்மதித்தான் என்று வாசிப்பவர்கள் யோசிக்கவேண்டியிருக்கின்றது. எவ்வாறு ஒருவன்/ஒருத்தியின் இருப்பு இருந்தாலும் (ஃபிரைடாவும் இங்கே நினைவுக்கு வருகின்றார்) அவர்கள் நம்பிக்கைகொள்கின்ற/சரணாகதி கொள்கின்ற ஒரு இடம் இருக்கத்தான் செய்கின்றது. அதேயேதான் தோமஸ் தெரேஸாவிடம் தேடியிருக்கின்றான். தோமஸ் மட்டுமில்லை, கண்ணன்களாய் பிருந்தாவனத்தில் புல்லாங்குழல் வாசித்து இன்புற்றிருந்த பலர் பின்னாட்களில் யாரோ ஒருவரிடம் சரணாகதியடைந்த கதைகள் நமது தமிழ்ச்சூழலிலும் நிறைய இருக்கின்றன.

3.
மெட்ரோ (Metro) என்கின்ற இந்திப்படமும் குடும்பம்/திருமணம் அமைப்புக்களின் அபத்தம் பற்றி ஒரளவு பேசுகின்றது. மூன்று கிளைக்கதைகள் அப்படத்தில் இருந்தாலும், திருமணம் செய்த ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவர், தான் தலைமையதிகாரியாக இருக்கும் வேலைத்தளத்திலிருக்கும் பெண்ணோடு அடிக்கடி உடலுறவில் ஈடுபடுகின்றார். இவ்வாறு தனக்காய் நேரத்தை ஒதுக்க மறுக்கும், தன்னைப் புறக்கணிக்கும் கணவனால் சலிப்பு ஏற்படும் அவரின் மனைவி இன்னொரு ஆணுடன் நட்புடன் பழகத் தொடங்குகின்றார். அந்த ஆணோடு உடலுறவுக்குப் போகும் ஒரு கட்டத்தில் அப்பெண் தனது 'தவறை' உணர்ந்து திரும்பிப்போகின்றார் (ஆணென்றால் சாவகாசமாய் உடலுறவில் ஈடுபடுவதும், பெண் என்றால் பிறரோடு எவ்வளவு பழகினாலும் 'கற்புக்கரசியாகவே' இருக்க விரும்பும் இந்தியத்திரைப்படங்களின் அரசியலை தற்சமயம் மறந்திருப்போம்). இதே சமயம் கணவனின் திருட்டுத்தனம் தெரியவரும்போது மனைவியும் தனது ஆண் நட்புப்பற்றிப் பேசுகின்றார். எனினும் அங்கே ஆண் தனது தவறைப் பெரிதாக எடுக்காது, ஆடவன் மீதான அப்பெண்ணின் நட்பை மட்டுமே கொச்சைப்படுத்திப் பேசுகின்றான் (என்னோடு பகிர்ந்த கட்டிலிலையா... நீயும் அவனோடு சேர்ந்து பகிர்ந்தாய் என்று இன்னபிற வசனங்கள் அதில் வரும்).


இறுதியில் வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போகும் அந்த ஆடவன், இப்பெண்ணை தன்னோடு சேர்ந்து வாழ அழைக்கின்றான். எனினும் கணவன் எவ்வளவு தவறுச் செய்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற தமிழ்/இந்திய கலாசாரப்பெண்ணாய் அப்பெண் இருப்பதால், அந்த ஆடவனோடு சேர்ந்து வாழ்வதை மறுத்து கணவனோடு சேர்ந்து வாழத் தங்கிவிடுவதோடு படம் முடிந்துவிடுகின்றது. கணவன் தன்னை நேசத்தோடு கவனிக்காது போகும்போது, மனைவியும் தனக்குரிய வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டாள் என்ற ஒரு சிறுகல்லையேனும் எடுத்துப்போட்டதற்காய் இப்படத்தைப் பாராட்ட வேண்டும். எனினும் இவ்வாறு தனது கணவன் இன்னொரு பெண்ணோடு உறவில் இருந்த நம்பிக்கைத் துரோகத்தை மறந்து, அந்தப்பெண்ணால் மீண்டும் நிம்மதியாக கணவனோடு சேர்ந்து வாழமுடியும் என்பது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என்பதை நினைவில் இருத்திக்கொள்வோம்.

4.
இங்கே உன்னையே மயல் கொண்டு என்ற நாவலோடு, அலன் குந்தராவின் The Unbearable Lightness of Beingஐயும், மெட்ரோ திரைப்படத்தையும் இணைத்துப் பேசவேண்டியதற்கு ஆகக்குறைந்து அவை ஒருவித ஆண்மய்ய/ஆணின் நிலைவழி நகர்ந்திருந்தாலும் பெண் பாத்திரங்களுக்கான வெளி கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பதற்கே ஆகும். மேலும் நவீனத்துவ காலம் தாண்டி சிந்திக்கத்தலைப்படுகின்ற படைப்பாளிகள் யதார்த்ததை மட்டுமே அப்படியே கொடுத்துவிட்டு தப்பித்துவிடமுடியாது. மாற்றுக்கள் குறித்த புள்ளிகளை நோக்கியும் நகருகின்றபோதே படைப்புக்கள் இன்னும் வளமையானதாகவும் முன்னோக்கி நகரக்கூடியதாகவும் இருக்கும். அலன் குந்தாரவின் நாவல் மனிதவாழ்வின் இருப்புக்குறித்த கேள்வியையும் தனக்குரிய மாற்றுத்தேடலையும் நம் முன்னே வைக்கின்றது. மெட்ரோ படம் குடும்ப அமைப்பின் போலித்தனம் குறித்து கேள்விகளை எழுப்ப முடிந்திருந்தாலும், இறுதியில் அது மீண்டும் குடும்ப அமைப்புக்குள் -எல்லாம் இயல்பாகிப் போய்விடுமென- அடங்கிவிடுவதால் சரிவைச் சந்திக்கத் தொடங்குகின்றது. உனையே மையல் கொண்டு நாவலின் முடிவு ஒரு திறந்தவெளியாக, வாசகர் தமக்கான முடிவைத் தேடும் சாத்தியத்தைத் தந்திருந்தாலும், அங்கே ஷோபனாவின் பாத்திரம் பிற பாத்திரங்கள் போல வளர்க்கப்படாததால் சந்திரன் என்ற ஆணின் வழியே நின்று சிந்திக்கவேண்டியிருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பற்றியும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியும் விரிவும் ஆழமான உரையாடல்கள் நிகழத்தபட்டுக்கொண்டிருக்கையில் படைப்பாளி இதுதான் யதார்த்தமாய் நடக்கின்றதென மட்டும் கூறித்தப்பிவிடமுடியாது. ஷோபனாவை நாவலில் அதிகம் பேசவிடாததால், ஷோபனாவின் மீது ஒருவித பரிதாபம் வருவதைத் தவிர வேறு எதையும் கதைசொல்லி வாசகருக்கு விட்டுச்செல்லவில்லை என்பதே இந்நாவலில் முக்கிய பலவீனமாய் இருக்கின்றது. ஆகக்குறைந்தது ஷோபனா அல்லது ஷோபனாக்களுக்கு நாம் வாழும் சமூகம் எந்தவகையான மாற்றீட்டை முன் வைக்கின்றது/ முன் வைக்க முடியுமெனதெனக் கூறாது, ஷோபனாவின் பாத்திரத்தினூடாக தான் தெளிவாய் இருக்கின்றேன் என முடிவில் சொல்வதோடு கதைசொல்லி தப்பிவிடுகின்றார். (சந்திரன் - ஜூலியாவின் நெருக்கம் தெரிந்து ஷோபனா தற்கொலை முயற்சிசெய்து தப்பியவுடன், தான் இப்போது தெளிவாக இருக்கின்றேன் என நாவலில் கூறுகின்றார். அது வார்த்தைகளில் மட்டுமே சாத்தியம். சாதாரணமாய் தற்கொலை முயற்சிக்குப் போகின்றவர்கள் அதிலிருந்து மீண்டுவர ஓரிரு வருடங்களாவது ஆகுமென்று அம்முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எளிதாகப்புரிகின்ற விடயம்.) .

நாவலின் நடை வாசிப்புச் சிக்கலில்லாது நகர்கின்றது. மேலும் உடலுறவுகள் போன்ற சித்தரிப்புக்களில் சிறுபிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவது போல அதிக வெளியை எடுக்காது சுருக்கமாய் அவ்வாறான இடங்களிலிருந்து நகர்ந்துவிடுவது நாவலிற்கு கச்சிதமான வடிவத்தைக் கொடுக்கின்றது. முக்கிய பாத்திரத்திற்கு எதிரான மற்றப்பாத்திரமும்/பாத்திரங்களும் வலுவாய் நிறுத்தப்படும்போதே பிரதி இன்னும் விரிந்த தளத்தில் தனக்கான கதையை எழுதியக்கூடியதாக இருக்கும். நடேசனின் இனிவரும் நாவல்களில் அதற்கும் முக்கியத்துவம் கொடுப்பாரென நம்புவோமாக.

(34/408/4Aற்கு...)

புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்...

Sunday, December 16, 2007

Aqsa Parvez கொலையை முன்வைத்தும், பிறவும்...

இன்னொரு கலாசாரத்தை/பண்பாட்டை/பழக்கவழக்கங்களை புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பலவேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள் புதிய நாட்டின் காலநிலை/கலாசாரம்/சட்டதிட்டங்களுடன் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவேண்டியிருக்கிறது. போர்/பொருளாதாரம் போன்ற... என்ன காரணங்களாய் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, தமது சொந்த நாட்டைப் பிரிந்துவந்த உளைச்சலோடு புதிய சூழலுக்குத் தங்களைப் பழக்கவேண்டிய அழுத்தமும் இருக்கின்றது. மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களை இன்னுமின்னும் எளிதாகச் சுரண்டிக்கொண்டிருக்கும். ஒரு வேலையில் திருப்தியான சம்பளத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களது 'கனவு வேலை'க்குப் போக எளிய பத்து வழிமுறைகளென எழுதி/பேசி உங்களுக்கு ஆசை காட்டிக்கொண்டிருக்க நீங்கள் இயந்திரமாய் மாறி மாறி இடையறாது இயங்கிக்கொண்டிருப்பது அவசியமாகிவிடுகின்றது. வாய்ப்புக்கள் திறந்தநிலையில் இருக்கையில் அவற்றை எல்லாவிதத்திலும் உபயோகப்படுத்துவதை விரும்பாமல் இருக்குமா மனித மனங்கள்?

இயந்திரத்தனமான வாழ்க்கையிற்குள் மூழ்கியிருந்தாலும் நீங்கள் தனியாள் அல்ல. உங்கள் ஒவ்வொரு அசைவும் நுட்பமாய் கவனிக்கப்படுகின்றது. திருமணவிழாக்களில்/ஒன்றுகூடலில்/ வழிபாட்டுத்தலங்களில் உங்களைப் பற்றிய கதைகள் சிறகுகளுடன் பறக்கத்தொடங்குகின்றன. இவ்வாறான கதைகள்/கிசுகிசுக்கள் உங்கள் காதிற்குள் விழத் தொடங்கும்போது உங்களது சுதந்திரமான எல்லைகளைச் சுருக்கத் தொடங்குகின்றீர்கள். அவ்வாறு ஒடுங்கத் தொடங்குகையில், அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள்.


கூட்டுக்குடும்பம்/கூட்டுக் கலாசாரம்/உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (அவற்றினூடாக சாதி நுட்பமாக தமிழ்ச்சமூகத்தில் புகுத்தப்படுவதும் கவனிக்கத்தது) கலாசார பின்புலங்களிலிருந்து புறப்பட்டு வரும் பலருக்கு தனிமனித உரிமைகள், தனிப்பட்ட விருப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேலை நாடுகள் ஒரு கலாசார அதிர்வை ஏற்படுத்துகின்றன. அந்த அதிர்வை எப்படி எதிர்கொள்வது என்பதும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து எப்படி இடையறாது உயிர்த்திருத்தல் என்பதும்தான் கவனிக்கபபடவேண்டியது.

அண்மையில் கனடாவில் hijab (பர்தா?) அணியவில்லை என்ற காரணத்துக்காய் (அது முக்கிய காரணமே தவிர அதுமட்டுமில்லை காரணம்) பதினாறு வயது பெண் (Aqsa Parvez) ஒருவர் தகப்பனால் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்ட பதின்ம வயதுப்பெண்ணின் நண்பர்கள், இந்தப்பெண் பர்தா மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதால் பலமுறை தகப்பனால் உடல்/உள வன்முறைக்கு ஆளாகப்பட்டிருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். மேலும் பர்தாவும், தளர்வான ஆடைகளும் அணிந்தபடி வீட்டிலிருந்து வெளிக்கிட்டு, பாடசாலையில் இறுக்கமான ஆடைகளை அணிந்தும்... பிறகு வீடு நோக்கிச் செல்லும்போது மீண்டும் பர்தா மற்றும் தளர்வான ஆடைகள் அணிபவர் அந்தப்பெண் என்றும் அவரின் நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள். இவ்வாறான முரண்பாடுகளின் நீட்சியிலேயே அந்தப்பெண் கொல்லப்பட்டிருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது.

இந்தக் கலாசார அதிர்வு/ மற்றும் புதிய சூழலுக்குப் பழக்கப்படுதல் என்பவை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல. புலம்பெயர்ந்த எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து ஒரேவிதமான ஸ்ரிரியோ வகை கருத்துக்களை பரப்ப விரும்பும் ஊடகங்களுக்கு..., பார்த்தீர்களா முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் காட்டுமிராண்டித்தனமானவர்கள் எனக் கூற அவல் கிடைத்துவிட்டது. அந்த நுண்ணரசியல்தான் கனடாவில் எத்தனையோ விடயங்கள் நிகழ்ந்தும் புறக்கணித்த சி.என்.என் (CNN) இந்தச்சம்பவத்தை அடிக்கடிக் காட்டச் செய்திருக்கின்றது (அதற்காய் இஸ்லாமிய அடிப்படைவாதம் விமர்சிக்கக்கூடாது என்பதல்ல அர்த்தம்) . இந்தச் சம்பவம் நடக்கும் சில மாதங்களுக்குமுன் ஒரு தமிழ்த் தந்தை அவரது மகள் ஒரு ஆண் நண்பரோடு (இருவரும் டேட்டிங் செய்தார்களென வாசித்தாய் நினைவு) இருந்த சமயம் அவர்களை நோக்கி வானை ஏற்ற முயன்றதையும், அவரது மகள் சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றார் என்பதையும் நினைவில் இருத்தவேண்டும். சில வருடங்களுக்கு முன் வன்கூவரில், ஒரு சீக்கிய பின்புல பெண், சாதி குறைந்த ஒருவரை நேசித்ததால், மிக நுட்பமாக இந்தியாவிற்குக் கூட்டிச்செல்லப்பட்டு அவரது தகப்பனாலும், சகோதரகளாலும் கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது சிபிசி(CBC) தொலைக்காட்சியில் ஆவணபடுத்தப்பட்டு, பரவலான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டதையும் நாமனைவரும் அறிவோம். எனவே இந்த குடும்ப வன்முறை, கலாசாரவிதமாய் ஒடுக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதல்ல என்ற புரிதலோடே இவ்வாறான விடயங்களை அணுகவேண்டியிருக்கிறது (சில கனடிய ஊடகங்கள் -ரொரண்டோ ஸ்ரார் போன்றவை- முஸ்லிம் சமூகம் என்று பார்க்காது பொதுவாய் அனைத்துப்புலம்பெயர் சமூகங்களுக்கும் உரிய பிரச்சினையெனப் பேசுவது ஆறுதல் தருகின்றது).


2.
தாம் புலம்பெயர்ந்து வந்த நாட்டின் கலாசாரத்தோடு சிறிதும் மாறாமல் இருக்கப்போகின்றவர்களுக்கோ அல்லது அப்படியே புலம்பெயர்ந்து வந்து புதிய நாட்டின் கலாசாரத்தை முற்றுமுழுதாய் எந்தக்கேள்விகளுமில்லாது ஏற்றுக்கொள்பவர்களுக்கோ இவ்வாறான பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை. இரண்டு கலாசாரங்களுக்கிடையில் (தாய்நாடு X புலம்பெயர்ந்த நாடு) சிக்கிக்கொண்டு எதை எதை தமக்குரியதாக தேர்ந்தெடுப்பது என்று நினைத்து அலைக்கழிப்பவர்களுக்க்த்தான் இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

இந்தக் கலாசார அதிர்வுகளை எதிர்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களில் பெற்றோருக்கே முழுப்பொறுப்பு இருக்கின்றதென அவர்களை நோக்கி சுட்டுவிரல்களைக் காட்டுவதிலோ, அல்லது இந்தக்காலத்துச் சிறுசுகளே இப்படித்தானென பெருமூச்சுவிட்டபடி இளையவர்களை நோக்கி முழுதாய் குற்றஞ்சாட்டுவதிலோ.. உருப்படியாக நம்மால் எதையும் சாதிக்கப்போவதில்லை. நம் அனைவருக்கும் பொறுப்புகளும் சகிப்பத்தன்மையும் பிறரை விளங்கிக்கொள்ளலும் அவசியம் என்ற புள்ளியிலே நாம் இவற்றை அணுகவேண்டியிருக்கின்றது. பெற்றோர்கள் அனைத்துச் சுதந்திரம் கொடுத்தும், அதை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்று விளங்காது பிள்ளைகள் சீரழிந்துபோன நிகழ்வுகள் இங்கே நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. அதேவேளை புதிய சூழலுக்கு ஏற்பத்தான் தங்கள் பிள்ளைகள் மாறிகொண்டிருக்கின்றார்கள் என்று புரியாமல் பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பருவவயது மாற்றம் இன்னபிற சுழற்சி வட்டங்களுக்குள் திணறிக்கொண்டிருக்கும் பிள்ளைகள், தமது பெற்றோர்களும் தம்மை வளர்க்க வைக்க அவர்கள் வாழும்/பழகும் சூழலிற்குள் சிக்கிக்கொண்டு பல விதமான அழுத்தங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பலவேளைகளில் மறந்துவிடுகின்றார்கள். நம்மைபோன்ற கலாசார பின்புலங்களோடு வருகின்ற பெற்றோர்களில் அநேகர், பிள்ளைகள் மட்டுந்தான் தமது எதிர்காலமென நினைத்து பிள்ளைகளை வளர்க்கத் தொடங்குகின்றார்கள். எனவே பிள்ளைகள் தமது விருப்புக்களுக்கு எதிராய் சிறிது நகரும்போதுகூட உடனேயே அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றார்கள். பிறகு இரண்டு தரப்பினரும் மன உளைச்சல்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் ஆளாகுகின்றனர்.

இங்கே, Aqsa Parvez கொல்லப்பட்டதை எதன் பொருட்டும் எவரும் நியாயப்படுத்தமுடியாது. மேலும் பர்தா அணிவது பற்றி, வ.கீதா ஒரு கலந்துரையாடலில் கூறிய கருத்தையே எனது கருத்தாகவும் இங்கே பதிவு செய்கின்றேன். பர்தா அணிவது குறித்து முஸ்லிம் சமூகமே தீர்மானிக்கவேண்டியது. குறிப்பாய் முஸ்லிம் பெண்களுக்குரிய தேர்வே தவிர பிறர்க்கு உரியதல்ல. ஒரு முஸ்லிம் பெண்ணேதான் அவர் hijab அணிய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அவரது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கவேண்டுமே தவிர நாங்களல்ல. இவ்வாறான தேர்ந்தெடுக்கும் ஒரு சுதந்திரமான வெளி முஸ்லிம் பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று மட்டுமே -வெளியாட்களாக- நாங்கள் வற்புறுத்தவேண்டும்.

இரண்டு சம்பவங்களை எடுத்துக்கொள்வோம்.
(1) உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலங்களில், ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்க முடிந்திருந்தது. அதில் பெற்றோர் X பிள்ளைகள் என்ற புள்ளியில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. அநேகமானவர்கள் பிள்ளைகளையே பிறாண்டிக்கொண்டிருந்தார்கள். கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு தாய், தனது மகள் இன்று நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றிருக்கின்றார்... ஆண்கள்/பெண்கள் என்று பலவேறு கலாசாரப்பின்புலங்கள் உள்ள நண்பர்களோடு போயிருக்கின்றார்..என்னிடம் அனுமதி கேட்டுத்தான் எனது பிள்ளை சென்றார் என்று கூறியிருந்தார். மேலும், இவ்வாறு இரண்டு தரப்பையும் அழுத்தாத புரிந்துணர்வுடன் நாம் பிள்ளைகளை அணுகவேண்டுமென அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் நமது பண்பாட்டைக் காக்கும் ஆகிருதிகள் சும்மா விடுவார்களா என்ன? இதெல்லாம் ஒரு பிள்ளை வளர்ப்பா? இப்படிப் போகின்ற பிள்ளை அங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா அதாம் இதாமென்று வானொலியில் வந்து அலட்டத் தொடங்கியிருந்தார்கள்.

(2) ஈழத்தில் பைலாப்பாட்டுக்களில் கலக்கிய ஏ.ஈ.மனோகரன், நித்தி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வுக்கு போயிருந்தேன்/தோம். இவ்வாறான நிகழ்வுகளை கர்நாடக சங்கீத சபாக்களைப் போல இறுக்கமாய் இருந்து பார்ப்பதில் நம்மவர்கள் வல்லவர்கள்.. அந்நிகழ்வில் மேடையில் பாடிக்கொண்டிருப்பவர்களே -சபையின் இறுக்கத்தைப் பார்த்து- எழும்பி ஆடுங்களென அறைகூவல் விடுத்தபோது வளாக நண்பர்கள் எழும்பி ஆடத் தொடங்கியிருந்தார்கள். அப்படி ஆடிக்கொண்டிருந்தபோது பெற்றோர்/உறவினர்களோடு வந்திருந்த சில பெண்களும் தங்கள்பாட்டில் எங்களுக்கருகில் வந்து ஆடத்தொடங்கினார்கள். உடனே நமது கலாசாரக்காவலர்கள் அதெல்லாம் அப்படியிருக்கூடாதென அந்தப்பெண்களை சிறிது நேரத்திற்குள்ளே திருப்பி அனுப்பியிருந்தார்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்கள் தமது பெற்றோரின் அனுமதியுடன் ஆட வந்திருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோரைவிட நமது கலாசார காவலர்களுக்கு இவ்வளவு அக்கறையா என வியக்கத்தான் வேண்டியிருந்தது.

இவை எளிய உதாரணங்கள். இங்கே வரும் இலவசப்பத்திரிகையான மெட்ரோவில் ஒரு பெண் -பத்தி எழுத்தாளர்- கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. நாம் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கூறி முழுமையான மனிதர்களாய் வளர்த்துவிட முடியாது. ஒன்றேயொன்றைத்தான் நாம் உறுதியாக... பிள்ளைகளுக்குச் செய்யமுடியும். அவர்களாய் அனுபவங்களினுடாக வாழ்வைக் கற்றுக்கொள்ளும்போது என்ன நடந்தாலும் திரும்ப வரும்போது உங்களை ஏற்றுக்கொள்வோம் எனத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்று கூறுகின்றார்.

அண்மையில் ராப் பாடகர் நாஸும் (Nash) ஒரு நேர்காணலில், இன்றைய இளைஞர்கள் எம்மைப் பார்த்து பெரியவர்கள் குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அலுப்புத்தருவது என்ன என்றால், தாங்கள் இளைஞர்களாய் இருந்தபோது தாங்கள் ஒரு தவறும் செய்யாத மாதிரி இந்தப்பெரியவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதுதான் என்று வெளிப்படையாக நாஸ் கூறியிருக்கின்றார். இன்றைய இளைய சமுதாயத்தைப் பற்றிக் குறை கூறும் வளர்ந்தவர்கள் - சற்று நிதானமாய் தமது கடந்துவந்த இளமைப் பருவங்களை நினைத்துப் பார்ப்பார்கள் என்றால்- பிள்ளைகளை இன்னும் நெருக்கமாய்ப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சொன்ன உதாரணத்தைப் போல, பிள்ளைகள் தாங்கள் செய்யவிரும்புவதைச் செய்யப்போகின்றோம் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்கும்போது பெற்றோர்கள் மறுத்தால் என்ன செய்வார்கள்..? அதை உடைத்து வெளியேறத்தான் செய்வார்கள். இவ்வாறு ஒரு பொதுவெளியில் ஆண்களோடு பெண்கள் ஆடுவதை மறுத்ததை நினைக்கும்போது, பெற்றோருக்குத் தெரியாது டான்ஸ் கிளப்புகளில் ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள்/ஆண்கள் நினைவுக்கு வருகின்றார்கள். ஒரு கட்டத்தில் கிளப்புக்களில் நிறைய மதுபானம் அருந்தியும் தாம் என்ன செய்கின்றோம் என்று அறியாது சீரழிந்துபோன பலர் இருக்கின்றார்கள். வெள்ளம் தலைக்கு மேலே வந்ததன்பிறகு ஒப்பாரி வைப்பதைவிட, ஒருவித புரிதலோடும், மெல்லிய கண்காணிப்போடும் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போது அவர்கள் சீரழியாமற் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் அல்லவா?. இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

3.
அண்மையில் வந்த ஒரு பேப்பர் இதழில் (Issue 83), P.கருணாகரமூர்த்தி என்பவர் (பொ.கருணாகரமூர்த்தியும் இவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) 'இரண்டு முத்தங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் 'சுளுக்கெடுத்தவன்' கதையில் ஆரம்பித்து, அன்ரன் செக்கோவோடு முடிச்சிட்டு, ஈழத்துச் சம்பவங்களோடு அந்தக் கட்டுரை விரிகின்றது. அதில் கனகா என்ற பெயரில் இருக்கும் பெண்களைப் பற்றிய பல 'சுவாரசியமான' விடயங்களைச் சொல்கின்றார். அனுராதபுரத்தில் - பலருக்கு ஆசை நாயகியாக இருந்த sex bomb- கனகா, வடமராட்சியில் -'அட்டகாசமான மார்புகள் மற்றும் மேல்பாதியை எப்போதும் காற்றாட வைக்கும் - இன்னொரு கனகா என்று பல பேரைப் பற்றிக்கூறுகின்றார்.

(கட்டுரைக்கு அப்பால்) இதை விட ஈழத்தில் - இனப்பிரச்சினை தீவிரமாவதற்கு முன்னர்- முக்கியமாய் யாழ்ப்பாணத்தில் சிங்கள மற்றும் மலையகப்பிள்ளைகளை எல்லாவிதமாய் சுரண்டிய ஒரு 'மூத்த சமூகம்' நமக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதை நாமனைவரும் அறிவோம். போர் வந்து நம்மை அசைக்காவிட்டால் அந்த மற்றப்பக்க அத்தியாயம் தொடர்ந்து புதிது புதிது மாற்றப்பட்டு எழுதப்பட்டே கொண்டிருக்கும்.. கூடவே பல அப்பாவிகளின் வாழ்வு சீரழிக்கப்பட்டே கொண்டிருக்கும். ஆகவே எமது மூத்த தலைமுறை/பெற்றோர்கள் எந்தக்கூத்தையும் செய்யாது புனிதர்களாக இருந்தவர்களாகவுமில்லை. ஊருக்கொரு சண்டியர்களைப் பற்றி நாவலே எழுதக்கூடியவளவுக்கு சண்டியர்கள் ஒருகாலத்தில் ஈழத்தில் நிறைய இருந்திருக்கின்றார்கள் மட்டுமில்லை, இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர், சண்டியர்களும் சாதிவெறியர்களும் -ரெட் குரூப், தீனா குரூப், etc- என்று மீளவும் கோவணத்தை இறுக்கக்கட்டியபடி தலைநிமிர்ந்துமிருக்கின்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு. எனவே தொடர்ச்சியாய் இவ்வாறு 'நல்ல விடயங்களை' நம்மினத்தின் மரபின் நீட்சியாய்க் கொண்டிருந்த நம் மூத்தோர்கள்தான்... அட நமது இளைய சந்ததி வீணாய்ப்போகின்றதென தொட்டதற்கெல்லாம் அலறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதுகூடப் பரவாயில்லை, இந்த 'இரண்டு முத்தங்கள்' கட்டுரையை, கருணாகரமூர்த்தி எப்படி முடிக்கின்றார் எனப்பாருங்கள், ' ... வெட்டவெளியில் பட்டப்பகலில் ஒரு தமிழச்சி முத்தமிடுவதென்பது சற்று நெருடலைத் தந்தாலும், நான் சுளுக்கெடுக்கிறவனையும் வெகுவாக இரசித்தேன்' என்கிறார். கனகா என்கின்ற sex bomb..., காற்றாட மேற்பகுதியை தாரளமாய்த் திறந்து வைக்கின்ற வடமராட்சிக் கனகா... எல்லோரையும் தெரிந்த/இரசிக்கின்ற கருணாகரமூர்த்தியிற்கு ஒரு தமிழச்சி பட்டப்பகலில் வெட்டவெளியில் முத்தமிடுவது மட்டும் நெருடலைத் தருகின்றதே அது ஏன்? அங்கேதான் நமக்குள்ளிருக்கும் கலாசார அடிப்படைவாதம் பல்லிளிக்கத் தொடங்குகின்றது.


எங்கள் திருமணத்தில், மணப்பந்தலில் கூறைச்சேலையும் உடல்முழுக்க நகைகளையும் போட்டு வெட்கபட்டபடி இருக்கும் ஒரு மணப்பெண்ணைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், தேனிலவில் இந்தப் பெண் ஆடைகளையும் நகைகளையும் கழற்ற அனுமதிப்பாரா என்ற சந்தேகித்தால் கூட -நம் கலாசாரம் தெரியாத மேற்கத்தையவர் இப்படிக் கேட்கிறார்- பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் sex bomb கனகாக்களை எல்லாம் நன்கு தெரிந்த கருணாகரமூர்த்தியிற்கு தமிழ்ச்சி ஒருத்தி வெட்டவெளியில் முத்தமிடுவதைச் செரிக்கத்தான் கஷ்டமாயிருக்கின்றது. என்ன கொடுமையடா இது?

3.

கொல்லப்பட்ட Aqsa Parvez, வீட்டில் ஒரு ஆடை... வெளியில் பிடித்தமான ஆடை என்று அணிவது என்று அவர் மட்டுமே செயததில்லை. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் வீட்டுக்குத்தெரியாமல் இருக்க என, பாடசாலையில் வந்து தொள்தொளவான ஆடைகள் மாற்றி -கறுப்பினத்தவர்களின் நாகரீகத்திற்கேற்ப- அணிந்ததைப் பார்த்திருக்கின்றேன். வளாகத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தாங்கள் தயாரித்தளித்த நாடகங்களில் கூட நண்பர்கள் பொதுவில் முன்வைத்திருக்கின்றார்கள். நான் காதில் கடுக்கன் போட்டுத்திரிந்த காலங்களில் - வீட்டால் அவ்வளவு பிரச்சினை வராது என்று தெரிந்தும்- ஒரு விதமான மனத்தடையோடே பெற்றோர்/சகோதரகளுக்கு முன் அதை அணியாமல் தவிர்த்திருக்கின்றேன். எனவே எல்லோரும் கலாசார அதிர்வுகளினூடாக நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாகத்தான் செய்கின்றோம்.

இந்த முஸ்லிம் பெண், வீட்டிலிருக்கமுடியாது என்று இரண்டாவது முறையாகவும் வீட்டை விட்டு வெளியேறி தனது உடமைகளை மீண்டும் சேகரிக்கச் சென்ற சமயமே கொல்லப்பட்டிருக்கின்றார். கொஞ்சம் நிதானமாகவும், வெளிப்படையாகவும் இந்த விடயத்தை இந்தப்பெண்ணின் குடும்பம் அணுகியிருந்தால் எத்தனையோ பேரின் வாழ்வு சிதையாமல் தடுத்திருக்கலாம் (குடும்பவன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் போகும் shelter ற்கு போவதான எண்ணத்தில் இந்தப்பெண் இருந்திருக்கின்றார் எனச்செய்திகள் கூறுகின்றன). சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் எனது தோழியொருவரின் தங்கை ஒருவர் வீட்டிலிருந்து காண்மற் போயிருந்தார். அந்தப்பெண்ணை அவர்களின் முழுக்குடும்பமே தேடிக்கொண்டிருந்தது (அந்த அந்தரமான பொழுதில் தோழியின் தாயார் என்னோடு உரையாடியபோது என்ன ஆறுதல் சொல்வதென்று தவிர்த்ததும் இப்போதும் நினைவினிலுண்டு). பிறகு தோழியின் சகோதரி ஒரு ஷெல்ட்டரின் இருக்கின்றார் என்றறிந்ததும் அந்தக்குடும்பம் நிம்மதியடைந்தது. வீட்டில் பெற்றோரால் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒடுக்குமுறை இல்லாதபோதும் இந்தப்பெண் அடிக்கடி வீட்டை விட்டு மறைவதும் வருவதுமாய் இருக்க, ஒருகட்டத்தில் ஷெல்ட்டரில் இருந்து அழைத்து வருவதை தோழியின் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் ஷெல்ட்டர் வாழ்வு நாம் நினைப்பது போல் அவ்வளவு இலகு அல்ல என்று உணர்ந்து பின்னாட்களில் அந்தப்பெண் தோழியின் குடும்பத்தோடு இணைந்துகொண்டார். இதே முறையை இந்த பாகிஸ்தானிய குடும்பத்தினர் செய்திருந்தால் ஒருவரின் வீணான மரணத்தைத் தடுத்திருக்கலாம். எங்கள் எல்லோருக்குள்ளும் அடிப்படைவாதம் இருக்கின்றது. அது மதம் சார்ந்தும் மொழி சார்ந்தும் சாதி சார்ந்தும் கூடவே வந்தபடி இருக்கின்றது. அதனுள் இருந்து எப்படி விடுபவது என்பதே நமக்கு முன்னாலுள்ள முக்கியமான கேள்வி. இந்தப்பிள்ளையும் பெற்றோரும் சமரசம் செய்யக்கூடிய ஒரு புள்ளி நிச்சயம் இருந்தேயிருக்கும். கனடா போன்ற பல்கலாசார சமூகத்தில் சகிப்பத்தன்மையோடு வாழ்கின்ற நாம் வன்முறையில்லாது எந்த விடயத்தையும் சமரசம் செய்துகொள்வதற்கான வெளி நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது என்பதை ஏன் இலகுவில் நாமனைவரும் மறந்துபோய்விடுகின்றோம்?

எமதேயான நம்பிக்கைகள்/விருப்புக்கள் மட்டுமே மிகச்சரியாக இருக்குமென இறுக்கமடையும்போது நாம பிறர் உரையாவதற்கான வெளிகளை அடைத்தே விடுகின்றோம். நாம் எமது நம்பிக்கைளோடு, எமக்குப் பிடித்ததைச் செய்வற்கு சுதந்திரம் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களாயிருப்பின், அதே நம்பிக்கைகளோடு இருக்கவும் விரும்பியதைச் செய்யவும் பிறரிற்கும் உரிமை இருக்கின்றது என்பதை வசதியாய் மறந்துவிடுகிறோம். இங்கே தான் நினைத்ததே சரியென்று நினைத்த தந்தையொருவர் மகளை இழந்திருக்கின்றார், கொலைகாரர் ஆகியிருக்கின்றார். ஒரு குடும்பமே சின்னாபின்னமாகி நிற்கின்றது.

பத்து வ்ருடங்களுக்கு முன் நான் வானொலியில் கேட்ட பெற்றோர் X பிள்ளைகள் தலைமுறை இடைவெளி உரையாடல்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சி வரையில் நீண்டுகொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நிச்சயம் இதுவொரு நல்லவிடயமே. நாம் தொடர்ந்து த்லைமுறை இடைவெளிகள் பற்றியும், புதிய கலாசாரத்தைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் தொடர்ந்து உரையாடும்போதே பலவிடயங்கள் குறித்து நாம் தெளிந்துகொள்ள முடியும். ஆகக்குறைந்து ஒருவர் ஏற்கனவே செய்துவிட்ட தவறை நாம் இன்னொரு முறை திருப்பச் செய்யாது அதன் வலிகளிலிருந்து தப்பிப் போய்விடவாவதுமுடிகின்றது. நாம் எல்லோரும் பிறந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்தது அதைவிட செழிப்பான ஒரு வாழ்வைத்தேடித்தான்..எனவே அப்படியொரு வாழ்வை நாம் அமைக்க விரும்புகின்றபோது பலவற்றை விலத்தியும் சில்வற்றை நமது வாழ்வில் சேர்த்துக்கொள்ளலும் அவசியமாகின்றது. எந்த விடயம் என்றாலும் -அது மொழியாய் இருந்தாலென்ன, கலாசாரமாய் இருந்தாலென்ன, மதமாய் இருந்தாலென்ன- அது திணிக்கப்படாது இயல்பாய் உள்வாங்கப்படும்போதே அது நீடித்து நிற்கும். வற்புறுத்தித் திணிக்கப்படும் எதுவும் அதன் எதிர்விளைவை நாம் திணிப்பதைவிட இன்னும் மோசமாய்க் காட்டும் என்பதை ஒருபோதும் மறந்தோ/மறுத்தோ விடமுடியாது.

குறிப்புகள்:
- இதை பெற்றோர் X பிள்ளைகள் என்று இரண்டுபக்கமாய் எழுத விரும்பியிருந்தாலும், பிள்ளைகள் பக்கம் அதிகம் சார்ந்து நின்று எழுதியதாகத் தெரிகின்றது. ஒரு பெற்றோருக்கான அனுபவம் எனக்கில்லை என்பதால் இருக்கலாம்.
- ஒரு ஒழுங்கான அமைப்பிற்குள் கொண்டுவராமலே எழுத முயன்றேன். எனெனில் இவ்வாறான விடயங்களுக்கு முடிந்த முடிவென்பது எதுவுமேயில்லை. ஒவ்வொருவரைப் பொறுத்தும் அது தனித்துவமும் தனிப்பட்டதுமான விடயமாகும்.

- யாரோ ஒருவர், Aqsaவின் சம்பவத்தின் பிறகு, அனைவரும் முஸ்லிம்களின் ரக்ஸிகளைப் (taxi) புறக்கணிக்கவேண்டும் என எழுதியிருக்கின்றார். இவ்வாறான எதிர்ப்பிலிருக்கும் அரசியலையும் காழ்ப்புணர்வையும் நாம் மத/மொழி/கலாசார அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுபோல எதிர்க்கவே வேண்டும்.

அறிந்ததும் கரைந்ததும் குறித்து...

Tuesday, December 11, 2007

கரைதல்: .../.../...
ஃபிரைடா காலோ பற்றிய The Life and Times of Frida Kahlo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். Frida என்ற Salma Hayek நடித்த திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இவ் ஆவணப்படத்தில் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லைத்தான். எனினும் ஃபிரைடாவின் உறவினர்கள், மாணவர்கள், ஃபிரைடாவின் ஓவியங்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள், ஃபிரைடா உறவுகொண்டவர்கள் போன்ற மனிதர்களின் குரல்களினூடாகக் கேட்கும்போது ஃபிரைடா மீண்டும் உயிர்த்து வருவதான நினைப்பு வருகின்றது. 


இந்த ஆவணப்படத்தைப் பார்த்த சில நாட்களில் The Diary of Frida Kahlo: An intimate self-portrait என்ற ஃபிரைடாவின் அற்புதமான டயரிக்குறிப்பினை வாசிக்க முடிந்திருந்தது. ஓவியங்கள்/கவிதைகள்/உரைநடைகள் என ஃபிரைடா ஸ்பானிஸ் மொழியில் எழுதிய பக்கங்கள் அப்படியே அதில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பகுதியாக ஆங்கில மொழிபெயர்ப்பும், ஃபிரைடா தனது குறிப்புகளை எழுதிய சந்தர்ப்பங்களுக்கான தொகுப்பாளரின் குறிப்புகளும் இன்னும் ஃபிரைடாவை அதிகம் அறிந்துகொள்ள வைக்கின்றன. 18 வயதில் மிகப்பெரும் விபத்தைச் சந்தித்து, கிட்டத்தட்ட 30ற்கும் மேலான அறுவைச்சிகிச்சைகளை தனது வாழ்க்கைக் காலத்தில் செய்து, கலகக்காரியாய் விளங்கிய ஃபிரைடா பற்றி முடிவில்லாது நிறைய எழுதிக்கொண்டேயிருக்கலாம். அதிக கலைஞர்களைப் போல ஃபிரைடாவும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் திறமைகளுக்காய் அடையாளங் காணப்பட்டவரல்ல. ஆனால் தனது குறுகியகால வாழ்வை (45 வருடங்கள்) கொண்டாடியவர் மட்டுமில்லாது தனது நாடு/கலாசாரம் மீது அதீத பற்றுயுடையவராகவும், ஒரு கொம்யூனிஸ்டாகவும் காலம் முழுவதும் இருந்தவர்.



ஒன்றிரண்டு விடயங்களையேனும் ஃபிரைடாவின் ஆளுமை குறித்துச் சொல்லவேண்டியிருக்கின்றது. அநேக கலைஞர்களுக்கு பிரான்ஸ், அமெரிக்கா மீதிருக்கும் மோகத்தைப்போல ஃபிரைடாவிற்கு இந்த நாடுகளுக்குச் சென்று வாழும் விருப்பு என்றுமே இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகவும் அலுப்பைத்தருமிடங்கள இவைகளென நிராகரிக்கச் செய்கின்றார் எனத்தான் சொல்லவேண்டியிருக்கின்றது. அதுவும், பிரான்ஸிலுள்ள அறிவுஜீவிகள் பற்றிக்குறிப்பிடும்போது, 'இவர்கள் இரவிரவாய் கலாசாரம், புரட்சி, தத்துவம் என்று உரையாடிக்கொண்டேயிருப்பார்கள். விடியப்பார்க்கும்போது சாப்பிடுவதற்கு உணவு எதுவுமேயிருக்காது, எனெனில் இவர்களில் எவருமே வேலைக்குப்போவதில்லை' என்றும், அங்கிருக்கும் கலைஞர்களில் அநேகர் அலுப்பைத் தரக்கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டிருகின்றார். 


பெண்ணியம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், ஃபிரைடாவும் பெண்விடுதலைக்கு ஒரு குறியீடாய் முன்வைக்கப்பட்டார் என்று வாசித்திருக்கின்றேன். எந்த அடிப்படையில் பெண்ணியவாதிகள் ஃபிரைடாவை முன்வைத்தார்கள் என்று தெரியாதபோதும், ஆண்கள் வாழக்கூடிய வாழ்வை பெண்களும் கட்டற்ற சுதந்திரத்தோடு வாழமுடியும் என்பதற்கு ஃபிரைடா ஒரு யதார்த்த உதாரணம் என்ற புரிதலையே நான் எடுத்துக்கொள்கின்றேன் (சிமோன் தி பூவா இன்னொரு உதாரணம்). ஃபிரைடாவிற்கு -bi-sexualயாய்- பல ஆண்கள்/பெண்களோடு உறவுகளிலிருந்தாலும், அவர் அடிமனதில் ஒரு ஆணிற்காய்த்தான் (டியாகோ ரிவேரா) காலம் முழுக்க ஏங்கிக்கொண்டிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். ...நீ எனது தோழன்/நீ எனது தந்தை/ நீ எனது துணை/ நீயே நான்/ நீயே பிரபஞ்சம்... என ரிவேராவிற்காய் உருகிக்கவிதைகளை ஃபிரைடா தனது டயரிக்குறிப்புகளில் எழுதியிருக்கின்றார்.

மற்றும் Salma Hayekன் ஃபிரைடா திரைப்படத்தில், ரொட்ஸ்கி (Trotsky), ஃபிரைடாவின் வீட்டை விட்டுப்போவதற்கு, ஃபிரைடாவோடான ரொட்ஸ்கியின் நெருக்கம் என்று காட்டப்பட்டபோதும், அது மட்டும் உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை. ஆரம்பத்தில் நான்காம் அகிலம்/ரொட்ஸ்கியோடு நெருக்கமாய் இருந்த ரிவேரா பின்னர் ரொட்ஸ்கியோடு முரண்படத்தொடங்கியதும் ரொட்ஸ்கி வேறிடம் நோக்கி நகர்வதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் முரணாய், ரொட்ஸ்கியோடு ஃபிரைடாவிற்கு (ஃபிரைடாவின் சில ஓவியங்களில் ரொட்ஸ்கியிற்கும் இடமுண்டு) நெருக்கமிருந்தபோதும், மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ என்றுதான் குறிப்பிட்டு கம்யூனிசத்தை அடையாளப்படுத்துகின்றாரே தவிர, ரொட்ஸ்கியை அந்தப்பெயர்களுக்கிடையில் சேர்க்கவில்லை. இறுதிக்கால ஃபிரைடாவின் டயரிக்குறிப்புகளில் கூட ஸ்ராலினின் பெயரைக் குறிப்பிட்டு கம்யூனிசத்தைப் போற்றுகின்றாரே தவிர, ரொட்ஸ்கியைப் பற்றி எழுதிய எதையும் காணமுடியவில்லை..

ஃபிரைடாவின் ஓவியங்களே ஒரு சுயவரலாற்று நாவலுக்கு நிகரானதுதான். தன் சுயமழித்தல் மூலம் தன்னை அடையாளப்படுத்தும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மிகவும் உக்கிரம் வாய்ந்தவை. வரையப்பட்ட -150ற்கு மேற்பட்ட- ஓவியங்களில் மூன்றிலொரு பங்கு சுய ஓவியங்களே (self-portrait) என்பது கவனிக்கத்தக்கது. நிர்வாணமாய் வரையப்பட்ட ஓவியங்கள் கூட இச்சையைத் தூண்டுபவனவாயின்றி உடல் சார்ந்த வாதைகளை பார்ப்பவரிடையே படியவிடுபவை. நிர்வாண மொடல்களை வைத்து ஓவியங்கள் வரைந்த டியாகோ ரிவேராவிற்கு எதிர்ப்புள்ளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஃபிரைடா முயன்றிருக்கின்றார் என்றும், தன் உடலை வெளிப்படையாக அதன் வலி/வாதைகளுடன் முன் வைக்கத் தயங்கவில்லை என்ற மாதிரியான வாசிப்புகளுக்கும் சாத்தியமுண்டு. அத்துடன் பிற கலைஞர்களால் நிர்வாணமாய் வரையப்படும் அதிகமான பெண்ணுடல்கள் அழகியல்தன்மையில் தான் வரையப்பட்டிருக்கின்றன/இரசிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கவனத்திற்குரியது.

சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மொன்ரியலில் வீடொன்று வாங்க முயற்சித்தபொழுதில், அவரோடு சேர்ந்து சில வீடுகளைப் பார்த்தபோது, சென்று பார்த்த ஒரு வீடு முழுவதும் ஃபிரைடாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டதைக் கண்டிருக்கின்றேன். இவ்வாறு உடல்சார்ந்த வாதையை அழுத்தமாய்ப் படிமமாக்கும் ஃபிரைடாவின் ஓவியங்களை எப்படித் தினமும் பார்த்துக்கொண்டு இயல்பான வாழ்வியலுக்குள் அலைந்து திரிய அந்த வீட்டிலிருப்பவர்களால் முடிகின்றது எனத்தான் வியந்திருக்கின்றேன்.

----------

அறிதல்: .../.../...
மனுசருக்கு சிரித்து சிரித்து ஆஸ்மா இழுக்கத் தொடங்குமா? மனம் விட்டுச் சிரித்தால் மட்டுமில்லை, நீண்ட நேரத்துக்கு தொலைபேசினால் கூட மூச்சிழுக்க அவஸ்த்தைப்பட்டு inhaler தேடவேண்டியதாகிப்போய்விடும் விசித்திரமான உடலமைப்பு எனக்குரித்தானது. சார்ளி சாப்பிளின், மொடர்ன் ரைமஸ் (modern times) பார்த்து வந்த சிரிப்பில் இரண்டு மூன்று முறை குறுகிய நேர இடைவெளியில் இன்கேலரை எடுக்கவேண்டியதாகிப்போய்விட்டது. இனியும் தொடர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால், மருந்து overdose ஆகிப்போய்விடும் என்ற பயத்தில் அரைகுறையில் நிறுத்திவிட்டு தூங்கப்போய்விட்டேன் (பிறகு இடைவெளி விட்டு விட்டு பார்த்துமுடித்தேன்). 1930களில் வந்த அந்தப்படத்தில் எவ்வளவு நவீனமாயும், நாசூக்காயும் விடயங்களைத் தட்டிக்கேட்டும் சாப்ளின் எடுத்திருக்கின்றார் என்று நினைக்கும்போது வியக்க முடியாமல் இருக்கமுடியவில்லை. மனிதர்களுக்குப் பதிலாய், இயந்திரங்கள் மாற்றீடு செய்வதை சமூக நோக்கோடு விமர்சிப்பதோடு, அதிகார அமைப்பை தொடர்ந்து கேலி செயதபடி (இங்கே பொலிஸ்) இந்தப்படத்தில் இருக்கின்றார். செம்மறியாட்டுக் கூட்டத்தைக் காட்டிவிட்டு அப்படியே சடுதியாக வேலைத்தளத்திலிருந்து வெளியேறும் மனிதக்கூட்டத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் ஆரம்பக்காட்சியே ஒரு அருமையான தொடக்கம். மந்தைக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கறுப்பாடு மாதிரித்தான், சாப்ளினும் சமூகத்தோடு ஒத்தியங்காத வெளியாளாக (outsider/other) இப்படம் முழுதும் -எல்லாவற்றையும் எள்ளல் செயதபடி- வருகின்றார்.



இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், படத்திற்கப்பால் இன்னொரு பிரதியாக விரியக்கூடியவை. அதுவும் மெளனக் காட்சிகளால் பார்ப்பவரை அப்படியே ஒன்றிக்க வைப்பது அவ்வளவு எளிதானதுமல்ல. இந்தப்படத்தில் பெண் பாத்திரமாய் நடிக்கும் Paulette Goddardயே நிஜவாழ்வில் சாப்ளினுக்கு துணையாக நீண்டகாலமாக இருந்தவர். இவர்களிருவரும் சேர்ந்து நடித்த இன்னொரு படம் The great dictator . Moderm Timesல் சில இடங்களில் உரையாடுவது மாதிரிக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் இறுதியில் அவையெல்லாம் வெட்டப்பட்டன என்பதும், வழமைபோல சாப்ளினின் படங்களில் அவர் தனியே போவது போலல்லாது அந்தப்பெண்ணோடு - வாழ்வு எவ்வளவு கடினமாயிருந்தாலும்- சேர்ந்து வாழ்வோமென நடந்துபோவதுடன் படம் முடிகின்றது. முதலில் எடுக்கப்பட்ட முடிவில், Paulette ஒரு கன்னியாஸ்திரியாவது மாதிரியும், சாப்ளின் தனியே பயணிப்பதாகவும் எடுக்கப்பட்டதாய் -படத்திற்குப்பின்பான காட்சிகள்- கூறுகின்றன. மொழிகளற்ற வெளியில் பலரது மனங்களை அசைத்துப்பார்த்த சாப்ளினின் படங்களைப் பார்க்கும்போது, இன்னமும் தமிழ்ச்சூழலில் சினிமா என்னும் ஊடகம் பொழுதுபோக்கிற்கு என்பதற்கு அப்பால நகராத நிலையை நினைக்கத்தான் பரிதாபமாய் இருக்கின்றது. திரைப்படங்களைப்போல, மொழிகளைத்தாண்டிச்சென்று எல்லோரோடும் உரையாடும் வலுவான ஊடகம் வேறு எதுவும் இருக்கின்றதா என்ன?

------

உரையாடல்: .../.../...
தான் சாப்பிடக்கூப்பிட்டாலின்றி உணவு மேசைக்கு ஒருபோதுமே வந்துசேராத எனது 'பெருமை' குறித்து அம்மா புலம்பிக்கொண்டிருந்தார். திரைப்படங்களை வெளியே பார்க்கப்போகும்போது மட்டுமே சாப்பிடப்போகின்றேன் என்று கேட்பவன் என்று உபரியாகவும் மெச்சிக்கொண்டிருந்தார். இப்படி 'திரைப்படம்' என்ற புள்ளியிலிருந்து அம்மாவின் கடந்த காலங்களுக்கு நனவிடை தோய்ந்து போக முடிந்திருந்தது. தானும், சித்தியுமாய் பல மணி நேரங்கள் பேருந்தில் பயணித்து யாழ் நகரத்திரையரங்குகளில் படம் பார்த்த காலங்கள் அவருக்குள் திரளத் தொடங்கியது; அப்படியே குடும்ப வரலாறுகளும்.

வெளியே ஸ்நோ பொழியத்தொடங்கியிருந்தது, சஞ்சிகையையொன்றைப் புரட்டிக்கொண்டு அம்மாவை பேசவிட்டிருந்தேன். கரையுடைத்த நதியாய் அம்மாவின் பால்ய காலங்கள நகரத் தொடங்கியிருந்தது. பல சுவாரசியங்கள் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் பனிக்குள்ளிலிருந்து இலைதுளிர்காலத்தில் துளிர்க்கும் செடிகளாய் அரும்பத்தொடங்கியிருந்தன. அம்மாவின் மாமா முறையான ஒருவர் குடியென்ற பெருங்கடலில் மூழ்கி முப்பத்தைந்து வயதிலேயே வாழ்வைத் தொலைத்திருக்கின்றார். கோர்ட்டில் வேலை செய்தபடியால் நன்கு குடித்துவிட்டு, தனது தோழர்களையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துவிடுவாராம். எந்த நேரமும் அவரின் துணைவியார் (அவாவை எனக்கு நினைவிருக்கிறது, சோடா மாமியென்று நாங்கள் அழைப்போம்) இரவு பகலென்று பாராது அவித்துக் கொட்டிக்கொண்டேயிருப்பாராம். குசினியை விட்டு வெளியே சோடாமாமி வருவதே அரிது என்றார் அம்மா. ஆனால் இவை அனைத்தும் அவரது துணை இறக்கும்வரை. துணை இறந்தபின் சோடா மாமி வாழ்வைக் கொண்டாடியிருக்கின்றார். எங்கள் குடும்பத்தில் அவரைப்போலத் திரையரங்குகளில் நிறையப்படம் பார்த்த ஆட்கள் குறைவு என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார் (அநேகமாய் யாழ் நகரிற்கு அவர் போனார் என்றால் என்று இரண்டு படங்களை ஒரேநாளில் பார்த்துவிட்டு வ்ருவாராம்)

அதேபோல், -ஈழத்தில்- எனக்குத் தெரிந்தவளவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இன்னொரு செய்தி ஆசசரியமாயிருந்தது. (ஆகக்குறைந்தது தனது பெயரை எழுதத தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நம்பியிருந்தேன்) எங்கள் மாமா முறையான ஒருவருக்கு கையொப்பம் இடவோ அல்லது துப்பரவாய் வாசிக்கவோ தெரியாது .... ஆனால் மனுசன் பயங்கர சுவாரசியமான மனிதராய் அவரது இளமைக்காலங்களில் இருந்திருக்கின்றார். நண்பர்களோடு சேர்ந்து இளநீர்க்குலை/ கள்ளுமுட்டி, களவாடுவது/வெட்டுவது (வீட்டில் பயங்கர அடிவிழுந்தாலும் அசட்டை செயவதில்லை) என்று பெரிய விளையாட்டு எல்லாம் செய்திருக்கின்றார். இது போதாது என்று வேள்விக்கு என்று யாரோ வளர்த்த கொழுகொழு கிடாயை ஒருமுறை இரவோடு இரவாய் களவெடுத்துக்கொண்டு போய் இவரும் இவரது நண்பர்களும் இறைச்சியடித்து விருந்துண்டிருக்கின்றார்கள். தமது கிடாயைக் காணாது, கிடாயை வளர்த்தவர்கள் மாமாவிலும் அவரது நண்பர்களிலும், ஐயம் வந்து இவர்களைத் தேடியபோது இவர்கள் நல்ல குடியோடும் விருந்துண்ட களைப்போடும் எங்கையோ படுத்துக்கிடந்திருக்கின்றார்களாம். கிடாய்க்காரன் மூளைசாலியாய் எல்லோரின் கைகளையும் பிடித்து முகர்ந்து முகர்ந்து பார்க்க -கறி வாசம் வருவதா என்று- இவர்கள் இன்னும் கண்ணை மூடிக்கிறக்கமாய் கிடந்திருக்கின்றார்கள். பிறகு நடந்தது... வழமைபோல நமக்குத் தெரிந்த கதைதான்.

அம்மா குடும்பத்தினர் முன்பு இருந்த வீடு மண்வீடானதால், வீட்டில் ஒரு அறையில் தன்னுடைய சேமிப்பையெல்லாம் ஒரு மாமா பேணிக்குள் போட்டு புதைத்துச் சேகரித்துக்கொண்டிருந்தாராம். (மண்ணில் புதைத்திருக்கும், ஆனால் தோண்டியெடுக்காமல் காசு போடலாம்/எடுக்கலாம்). காசு புதிது புதிதாய் போட்டாலும், தனது சேமிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டிருக்க, யாரோ தான் தங்கள் கைக்காரியத்தை காட்டுகின்றார்கள் என்று தெளிந்து வீட்டிலிருந்தவர்களிடம் மாமா விளக்கம் கேட்டிருக்கின்றார். எவருமே தாங்கள் எடுப்பதில்லையென 'உண்மை' பேசியிருக்கின்றார்கள். கள்ளனைப் பிடிக்கவேண்டும் என்பதற்காய் சேமிப்பு உண்டியலுக்குள் ஒரு தவளையைப் போட்டு விட்டிருக்கின்றார். இதையறியாது கைவிட்டு காரியத்தைச் செய்யப்போன இன்னொரு மாமா, அய்யோ பாம்பு என்னைக் கடித்துவிட்டதென கத்திய கத்தில் பல நாட் கள்ளன் ஒருநாள் பிடிபடுவானென -தவளையால்- பிடிபட்டாராம். இப்படி பல சுவாரசியமான கதைகளை அம்மா சொல்லிக்கொண்டே போனார். ஒரு கட்டத்தில், ஒரு நாவலாய் எழுதகூடிய அளவுக்கு உங்கள் குடும்பத்து வரலாறு சுவாரசியமாக இருக்கின்றதெனச் சொல்லிக்கொண்டேன். அம்மா புன்னகைத்துகொண்டார்; இப்போது மனதுக்குள் -அசுரக்காற்று அடிக்காது- தனித்து பூவைப்போல விழும் எனக்குப் பிடித்த பனி பொழியத் தொடங்கியிருந்தது.

-------------

பகிர்தல்: .../.../...
நாம் தொலைத்த வாழ்வு/சொந்த நாடு பற்றி எவரும் பேச/எழுதத்தொடங்கினால் நம்மைப்போல எந்த நாட்டையும் முழுதாய்ச் சொந்தங்கொண்டாட முடியாத நாடற்றவர்களுக்கு, மிகுந்த சுவாரசியமாய் இருக்குந்தானே. அப்படி இலயிப்புடன் வாசித்த ஒரு புதினம், இஸபெல் அலண்டேயின், My Invented Country: A Nostlagic Journey Through Chile. தொடர்ந்து வாசித்துக்கொண்டுபோகுபோது, சிலியில் இருக்கின்றானா அல்லது நான் பிறந்த நாட்டில்' இருக்கின்றேனா என்ற மாதிரியான உணர்வுகள் வருமளவுக்கு, கலாசாரம்/மனிதர்கள்/ நம்பிக்கைகள் பொதுவாய் இருந்தன. க்டவுள் நம்பிக்கை/சாத்திரம்/அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றில் மிகுந்த விருப்புடையதுபோல, பெண்களை ஒடுக்கிக்கொண்டும், உடலுறவு இன்னபிற பற்றி உரையாடுவதை tabooவாய் பார்ப்பதிலிருந்து அதிக ஒத்த தன்மைகள் தமிழர்களுக்கும், சிலி மக்களுக்கும் இருக்கின்றதெனத்தான் சொல்லவேண்டும். நனவிடைதோய்தலாய் இருந்தாலும், அளவுக்கதிகமாய் நாட்டுப்பாசத்தில் உருகிவிடாமல் விமர்சனங்கள் வைக்கவேண்டிய இடங்களில் இஸபெல் அலண்டே தனது நாடு பற்றி விமர்சிக்கவும் செய்கின்றார். ஸ்பானியர்கள் எவ்வாறு அங்கிருந்த பூர்வீகக்குடிகளை ஒழித்தார்கள், தங்களோடு வற்புறுத்திக் கலக்கச்செய்தார்கள் என்பது பற்றியும் விலாவரியாக இஸபெல எழுதுகின்றார்.


அவரின் மாமா முறையான சல்வடோர் அலெண்டே இடதுசாரி அரசை சிலியில் அமைத்தபோது, Paula என்ற பெண்களுக்கான க்லாசார இதழில் ஆசிரியப்பொறுப்பை இஸபெல அலண்டே ஏற்று, பெண்களுக்கான முக்கிய பிரச்சினைகளுக்கான உரையாடல்களை (domestic violence, abortion, diet, sex, etc) துணிச்சலாக -ஆண்களின் பலவிதமான விமர்சனங்களுக்கிடையில்- நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார் (பெண்ணியம் என்பது என்னவென்று அறியாமலே தானொரு கலகக்காரியாக -தனது தம்பிகளுக்கு கொடுக்கும் அனைத்தும் சலுகைகள் தனக்கும் கிடைக்கவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களையும்/சிந்தனைகளையும் இஸபெல் நூலின் ஆரம்பக்கட்டங்களில் குறிப்பிடுகின்றார்). சல்வடோர் அலண்டேயைக் கவிழ்த்த சிஜஏயின் பெருமைகளை கிழிகிழியென்று இஸ்பெல் கிழிக்கின்றார். அதேபோல், சல்வடோர் அலண்டே முன்வைத்த சில சீர்திருத்தங்கள் அவர் நினைத்தற்கு எதிர்மாறான சில விளைவுகளை மக்களிடையே கொண்டுவந்தது என உண்மைகளைப் பேசவும் செய்கின்றார் (வாழ்க்கைச்செலவு ச்டுதியாகக்கூடியது). அலெண்டேயின் காலத்தில், ஒவ்வொரு நாளும் பாண் வாங்கப்போகும்போது பாணின் விலை அதிகரித்துக்கொண்டுபோவது இன்னபிற பிரச்சினைகளைப்பற்றியும் பேசுகின்றார். எனினும் உண்மையான அக்கறையோடு நாட்டுக்கு உழைக்க விரும்பிய சல்வடோர் அலண்டேயிற்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே இஸபெல எழுதுகின்றார் (இன்றைய பொழுதில் வெனிசுலாவில் சாவோஸிற்கு நிகழ்ந்துகொண்டிருப்பதை ஒப்பிட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கு உண்டு). பிறகு இராணுவக்கிளர்ச்சியில் General Pinochet, சிலி மக்களுக்கு சிஜஏயின் உதவியுடன் நல்லாட்சி கொடுத்தது கடந்தகாலத்தின் மறக்கமுடியாத வரலாறு. இராணுவக்கிளர்ச்சியில் தானும் கொல்லப்படக்கூடுமென்ற பயத்தில் வெனிசுலாவிற்கு இஸபெல் புலம்பெயர்கின்றார். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் அங்கே வாழ்ந்த அவருக்கு நாடு விட்டு வந்த கவலை, ஒழுங்காய் வேலை கிடைக்காத மன அழுத்தம் என்ற இன்னபிறவற்றை அகதியொருவரின் நிலையில் நின்று இஸ்பெல விபரிக்கின்றார் (இலத்தீன் அமெரிக்காவில் அநேக நாடுகளில் ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும் அதன் வித்தியாசம்/கலாசாரம்/ இன்னபிற நுண்ணிய அவதானங்களை சிலி X வெனிசுலாவை வைத்து இஸபெல் எழுதுகின்றார். ஒரே மொழி/கலாசாரம் ஒன்றாகவேவிருக்கும் இஸ்பெலிற்கே இத்தனை பிரசிச்னைகள்/அழுத்தங்கள் வரும்போது மொழி/கலாசாரம் அவ்வாறு பழக்கப்டாத, புலம்பெயர்ந்த எம்மைப்போன்ற அகதிகளின் survival கதைகள் விரிவாக பதிவுசெய்யப்படக்கூடியவை.



தனது கடைசிப்பெயரில் அலெண்டே என்ற இடதுசாரியின் பெயரை வைத்துக்கொண்டும், தான் இப்போது ஏன் கலிபோர்ணியாவில் இருக்கின்றேனென வாசகர்கள் நீங்கள் கேள்விக்கேட்கக்கூடுமெனவும் கூறி இஸபெல -தனது காதலால் மட்டுமே- இடம்பெயர்ந்தேன் என்று காரணம் கூறி, தனது துணை பப்புவா நியூகினியாவில் இருந்தால் தான் அங்கேதான் வசித்துக்கொண்டிருப்பேன் எனக்கூறுகின்றார். அதைவிட அமெரிக்காவில் தான் முழுதாக ஒட்டமுடியாத காரண்ங்களை விரிவாக இந்நூலில் குறிப்பிடுகின்றார். அமெரிக்க்ர்கள் எல்லாவற்றிலும் விரைவுதான், அது உணவாயிருந்தால் என்ன, உடலுறவாயிருந்தால் என்ன? எல்லாமே வேகந்தானென எள்ளலுடன் எழுதுகின்றார். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம், பிரைவேசி காப்பற்றப்படுவதில் அமெரிக்கா தனக்குப்பிடித்திருக்கின்றது எனவும், எனினும் தன்னைப்போல ஒருவர் தெருவில் இறந்துகிடந்தால் கூட அதைக்கவனிக்காமல் போகக்கூடியவர்களாய் நிறைய அமெரிக்கர்கள் இருக்கின்றார்களெனவும் இஸபெல குறிப்பிடுகின்றார். அதேபோல் அமெரிக்காவில் இருக்குகின்ற இனத்துவேசத்தைப்பற்றியும் குறிப்பிடும் இஸபெல் அதேவேளை தங்கள் நாட்டைப்போல துவேசத்தை இயல்பென (சிலி மக்களுக்கு அரபியர்கள்/ஆசியர்கள் மீது வெறுப்பிருக்கிறதென்கிறார்) ஏற்றுக்கொள்ளாது, அமெரிக்க மக்கள் அதுகுறிதத விழிப்புணர்வுடன் உரையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அது தனக்கு நிறைவாயிருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

பலவிதமான் சுவாரசியமாய் சம்பவங்களை இப்புதினத்தில் இஸ்பெல் கூறியிருந்தாலும், சல்வடோர் அலெண்டேயைப் பற்றிக்கூறத்தொடங்கியபின் தான் நான் மிகுந்த சுவாரசியமாய் வாசிக்கத்தொடங்கினேன் இந்த நனவிடைதோயதலில் நேரடியாக வாசகரோடு உரையாடுவதான தொனியில் இஸபெல எழுதிக்கொண்டுபோவது புதினத்தோடு இன்னும் ஒன்றிணைந்துபோகின்றது. இஸபெல அலண்டேயைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலிப்பெண்மணி ஒருவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, தற்சமயம் சிலியில் பெண் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சிலியில் கலாசாரத்துக்குப்பொறுப்பான முக்கியமான பதவியில் இஸபெல் நியமிக்கபப்ட்டிருக்கின்றார் என்று கூறிக்கொண்டிருந்தார். இன்னும் எனக்கு வாசிப்பதற்கு இஸ்பெல அலண்டேயின் நாவல்கள் தன்னிடம் இருந்தாலும் -ஒரு நூலைத்தவிர- மிகுதி அனைத்தும் ஸ்பானிஸில் இருக்கின்றதென்றார் (இஸபெல் ஸ்பானிஸில்தான் எழுதுகின்றார், ஆங்கிலம் அவருக்கு அவ்வளவு பரீட்சயமில்லை). பிறகு இஸபெல அலெண்டே, Paula என்ற இளவயதில் (28 வயதில்) நோயால இறந்துபோன அவரது மகளைப் பற்றி எழுதிய நாவலான Paula பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தான் அந்நூலை வாசித்த காலத்தில் அந்நாவலின் தாக்கத்தால் தான் அழுதுகூட இருக்கின்றேன் என்றும் இப்போதும் அந்நாவலை நினைத்தால் ஏதோ செய்கின்ற மாதிரியாய் இருக்கின்றதென்றார். இப்படி வேற்றுமொழி நண்பர்க்ளிடம் உரையாடுகின்ற சந்தர்ப்பத்தில்தான் எங்கள் மொழியிலும் நல்ல எழுத்துக்கள் இருக்கின்ற்ன எனக்கூறி உரையாட எமக்கு அவ்வளவாய் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் இல்லையென்ற உண்மை உறைக்கின்றது.
........