கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னின் நினைவுக‌ள்

Wednesday, August 20, 2008

A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beah

உல‌க‌ம் அழ‌கிய‌லோடு இருப்ப‌து போன்றே ப‌ல‌வேளைக‌ளில் நிறைந்த‌ குரூர‌ங்க‌ளோடும் சுழ‌ன்ற‌ப‌டியிருக்கின்ற‌து. ந‌‌ம்மில் ப‌ல‌ருக்கு ந‌ம‌க்கு ம‌ட்டுந் தெரிந்த‌து ம‌ட்டுமே 'உல‌க‌ம்' என்ற‌ எண்ண‌மிருக்கிற‌து. அந்த‌ச் சிந்த‌னையான‌து பிற‌ரை/பிற‌தை நாம் புரிந்துகொள்ள‌வும் விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ வெளியை ஒரு சுவ‌ரைப் போல‌த் த‌டுத்துவிடுகின்ற‌து. சில‌வேளைக‌ளில் நாம் அறியாத‌/ நாம் வாழ்ந்து பார்க்காத‌, ஒரு உல‌கை இன்னொருவ‌ர் விப‌ரிக்கும்போது அதை எப்ப‌டி முழுமையாக‌ விள‌ங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதேபோன்று நாம் க‌ட‌ந்த‌கால‌த்தில் அனுப‌வித்து, ம‌ற‌ந்துவிட்டு ந‌க‌ர‌ விரும்பும் விட‌ய‌ங்க‌ளை நிக‌ழ்கால‌ம் மீண்டும் ஏதோவொருவ‌கையில் நினைவுப‌டுத்துகையில் எப்ப‌டி அவ‌ற்றை உள்வாங்கிக்கொள்வ‌தென்ற‌ அவ‌திக‌ளும இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌. இவ்வாறான‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு வாசிக்க‌த் தொட‌ங்கிய‌ ஒரு நூல்தான் குழ‌ந்தை இராணுவ‌த்தின் க‌தையைச் சொல்லும் A Long way Gone.

த‌ன‌து குழ‌ந்தைமை எவ்வாறு காவு கொள்ள‌ப்ப‌ட்ட‌து என்று த‌ன‌து க‌ட‌ந்த‌கால‌த்தைச் சொல்லும் இஸ்மெயிலில் நினைவுக‌ள் எங்க‌ளைச் சூறையாடிச் செல்கின்ற‌து. அச்சிறுவ‌னைப் போல‌வே என்ன‌ செய்வ‌தென்று குழ‌ம்பி வாசிக்கும் நாமும் அந்த‌ச் சுழ‌லில் த‌த்த‌ளித்த‌ப‌டி சிறு துரும்பாகி உள்ளிழுக்க‌ப்ப‌டுகின்றோம். எவ‌ர் எவ‌ரின‌தோ ந‌ல்ன்க‌ளுக்காய் எதுவுமே அறியாது உல‌க‌மெங்கும் ப‌லிக்க‌டாக்க‌ளாய் -இன்றும் -ஆக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் சிறார்க‌ளுக்குச் சொல்ல‌/ந‌ம்பிக்கை கொள்ள‌ வைக்க‌ எந்த‌ வார்த்தைக‌ளை நாம் வைத்திருக்கின்றோம் என்று நினைக்கும்போது மிகுந்த‌ சோர்வு வ‌ருகின்ற‌து. ம‌னித‌ம‌ற்று குரூர‌மாய்ப் போய்க்கொண்டிருக்கும் உல‌கைப் பார்க்கும்போது, இனி கருணைக்கும் அகிம்சைக்குமான‌ கால‌ம் க‌ட‌ந்துபோய்விட்ட‌து போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

சிய‌ராலியோனில் கிராமப்புற‌த்தில் வாழும் இஸ்மெயில் த‌ன‌து ப‌ன்னிர‌ண்டாவ‌து வ‌ய‌தில் ராப் பாட‌ல்க‌ளைப் பாடும் நிக‌ழ்வில் ப‌ங்குபெற்றுவ‌த‌ற்காய் அடுத்த‌ ந‌க‌ருக்குப் போகின்றான். அதுவே அவ‌ன் இறுதியாய்த் த‌ன‌து கிராம‌த்தைப் பார்க்கும் நாள். எங்கோ தொலைவில் ந‌டைபெற்றுக்கொண்டிருந்த‌ போர் இவ‌ர்க‌ளின் கிராம‌த்தையும் அண்டிக்கொண்டிருப்பதை அறியாது இஸ‌மாயிலும் அவ‌ன‌து மூத்த‌ ச‌கோத‌ர‌ன் ஜூனிய‌ரும் இன்னொரு ந‌ண்ப‌னும் ம‌கிழ்ச்சியுட‌ன் நிக‌ழ்விற்காய்ப் புற‌ப்ப‌டுகின்றார்க‌ள்.

ம‌றுநாள் அடுத்த‌ ந‌க‌ரில் இஸ‌மாயில் த‌ங்கியிருக்கும்போது அவ‌ர்க‌ள‌து கிராம‌ம‌ போராளிக் குழுவொன்றால் தாக்க‌ப்ப‌டுகின்ற‌து. த‌ம‌து குடும்ப‌த்திற்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ற‌றிய‌ விரும்பி திரும்ப‌வ‌ரும் இஸமாயில் உள்ளிட்ட‌வ‌ர்க‌ளை உள்ளே வ‌ர‌விடாது போராளிக‌ள் தாக்குகின்றார்க‌ள். அதே போன்று, கிராம‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் த‌ப்பிப்போனாலும் போராளிக‌ள் சுட்டுக்கொல்கின்றார்க‌ள். கைப்ப‌ற்றும் கிராம‌த்திலுள்ள‌ ம‌க்க‌ளை -இராணுவ‌ம் த‌ங்களைத் தாக்க‌ வ‌ந்தால்- ம‌னித‌க் கேட‌ய‌ங்க‌ளாய்ப் பாவிப்ப‌த‌ற்காய் அவ்வாறான‌ ஒரு எச்ச‌ரிக்கை. இப்ப‌டி த‌ம‌து பெற்றோர்/ஊர‌வ‌ர்க‌ளிலிருந்து பிரிக்க‌ப்ப‌டும் இஸ‌மாயிலும் அவ‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ளும் ம‌ற்றொரு ந‌க‌ரில் அக‌திக‌ளாய்த் த‌ங்குகின்றார்க‌ள். அந்த‌ ந‌க‌ரையும் விரைவில் போராளிக் குழு கைப்ப‌ற்றுகின்ற‌து. பாதுகாப்புக்கென‌ கிராம‌த்திலிருக்கும் சொற்ப‌ இராணுவ‌மும் த‌ப்பியோட‌, தெருவில் நிற்ப‌வ‌ர்க‌ள்/ க‌ண்ட‌வ‌ர்க‌ள் என்று பொதும‌க்க‌ளையெல்லாம் (இராணுவ‌ம் ஊடுருவியிருக்கும் என்ற‌ நினைப்பில்) போராளிக்குழு கொல்கின்றது (உண்மையில் இப்ப‌டிக் கிராம‌ங்க‌ளைக் கைப்பற்றி அங்கிருக்கும் முழும‌க்க‌ளையும் கொல்வ‌த‌ற்கான‌ இன்னொரு கார‌ண‌த்தை, இஸ‌மாயில் குழ‌ந்தை இராணுவ‌மான‌ பின்ன‌ர் கூறுகின்றார்). உயிருக்குப் ப‌ய‌ந்து, இஸ்மாயிலும், ச‌கோத‌ருமாய் ஏழு சிறுவ‌ர்க‌ள் அக‌திக‌ளாய் ஓட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். இஸ‌மாயிலுக்கு ப‌ன்னிர‌ண்டு வ‌ய‌து, ச‌கோத‌ர‌ருக்கு ப‌தினைந்து வ‌ய‌து; மிகுதிச் சிறுவ‌ர்க‌ள் இந்த‌ வ‌ய‌துக‌ளுக்கிடையில் இருக்கின்றார்க‌ள்.

இவ‌ர்க‌ள் ஏழு பேராய் அக‌திக‌ளாய் ஒவ்வொரு ஊரூராய் அலைய‌த் தொட‌ங்குகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளைப் ப‌ராம‌ரித்துக்கொள்ள‌ தெரிந்த‌ எந்த‌க் குடும்ப‌மும் இல்லை. அதைவிட‌ மிகுந்த‌ ப‌ட்டினி. இவையெல்லாவ‌ற்றையும் விட‌க் கொடுமை, இவ‌ர்க‌ள் இப்ப‌டி ஏழுபேராய் அக‌திக‌ளாய் அலையும்போது பிற‌ கிராம‌த்த‌வ‌ர்க‌ள் இவ‌ர்களைப் போராளிக்குழுவென்று (சில‌வேளைக‌ளில் உள‌வு பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் என்று) துர‌த்துகின்றார்க‌ள். சில‌ இட‌ங்க‌ளில் கொல்ல‌க்கூட‌ வ‌ருகின்றார்க‌ள் கெஞ்சி ம‌ன்றாடித் த‌ப்பியோடிய‌ப‌டியிருக்கின்றார்க‌ள். ஒருக‌ட்ட‌த்தில் போராளிக் குழுவினால் பிடிக்க‌ப்ப‌ட்டு இய‌க்க‌த்தில் சேர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். மிக‌ச் சிறுவ‌னாக‌ இருப்ப‌தால் இஸ‌மாயில் த‌ப்பிவிட‌, அவ‌ர‌து ச‌கோத‌ர‌ர் இய‌க்க‌த்தில் ப‌ல‌வ‌ந்த‌மாய்ச் சேர்க்க‌ப்ப‌டுகின்றார். திரும்ப‌வும் அக‌தியாய் ஓட்ட‌ம். கூட‌விருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைப் போரில் இழ‌த்த‌ல். திடீரென்று எங்கையாவ‌து போர் வெடித்து உயிருக்காய்த் த‌ப்பியோடும்போது அருகிலிருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளைப் பிரித‌ல். இப்ப‌டி திசை தெரியாது ஓடியோடி ஒரு க‌ட்ட‌த்தில் ஒரு காட்டிற்குள் இஸமாயில் நுழைந்துவிடுகின்றார். கிட்ட‌த்த‌ட்ட‌ அந்த‌ அட‌ர்ந்த‌ காட்டிற்குள் ஒரு மாத‌ த‌னிமை வாச‌ம். ப‌சியில் கையில் கிடைப்ப‌தையெல்லாம் சாப்பிட்டு உயிர் த‌ப்ப‌ல். குருவி சாப்பிட்டு சாகாம‌ல் இருக்கும் பெய‌ர‌றியாப் ப‌ழ‌ங்க‌ளையெல்லாம் தானும் உண்ட‌ப‌டி எவ‌ரும் கூட‌விருந்து க‌தைக்க‌வியலா மிக‌ப் பெருந்தனிமை. அதிலிருந்து விடுப‌ட்டு ஒருமாதிரியாக‌ வெளியில் வ‌ருகின்றார். தொட‌ரோட்ட‌த்தில் த‌ன‌து பெற்றோர் ச‌கோத‌ர‌ர் இன்னொரு கிராம‌த்தில் த‌ப்பி வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ற‌றிந்து போகின்ற‌போது, அந்த‌க்கிராம‌த்திலுள்ள‌ அனைவ‌ரையும் உயிரோடும்/கொன்றும் எரியூட்டிக் கிராம‌த்தைச் சூறையாடிவிட்டு போராளிக‌ள் போயிருக்கின்றார்க‌ள் என்ப‌து பேரிடியாக‌ விழுகின்ற‌து. இறுதியில் போர் என்றைக்குமாய்த் தீண்டாத‌ ஒரு ந‌க‌ரை நோக்கி -இப்ப‌டி அக‌தியாய் ஓடும்போது வாய்த்த‌ புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு- ப‌ய‌ணிக்கின்றார். அங்கு முகாம் அமைத்திருக்கும் இராணுவ‌ம் இவ‌ர்க‌ளுக்கு அடைக்க‌ல‌ங்கொடுக்கின்ற‌து. இராணுவ‌த்துக்கு கூட‌மாட‌ உத‌விக‌ள் செய‌தப‌டி இவ‌ர்க‌ளைப் போன்ற‌ முப்ப‌துக்கு மேற்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்.

ஏற்க‌ன‌வே நிக‌ழ்ந்த‌துபோல‌ இவ‌ர்க‌ள் இருந்த‌ கிராம‌த்தையும் போராளிக‌ள் சுற்றி வளைக்கின்றார்க‌ள். தின‌மும் முன்ன‌ணிப் போர‌ர‌ங்கிற்குச் செல்லும் இராணுவ‌ம் இழ‌ப்புக்க‌ளுட‌ன் திரும்பி வருகின்ற‌து. ஒரு க‌ட்ட‌த்தில் போராடுவ‌த‌ற்கு ஆள‌ணி போதாம‌ல் இச்சிறுவ‌ர்க‌ளும் இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒன்று த‌ங்க‌ளோடு போரில் ஈடுப‌ட‌வேண்டும் இல்லாவிட்டால் அந்த‌க் கிராம‌த்தை விட்டு போக‌வேண்டும் என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. இனி இப்படி இராணுவ‌ப் பாதுகாப்பிலிருந்த‌ த‌ங்க‌ளைப் போராளிகளும் சுட்டுக்கொல்ல‌த்தான் போகின்றார்க‌ள் என்ற ந‌ம்பிக்கைய‌ற்ற‌ எதிர்கால‌த்தால் இராணுவ‌த்தில் இஸ‌மாயில் உள்ளிட்ட‌வ‌ர்க‌ள் சேர்கின்றார்க‌ள். ப‌யிற்சி கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இஸ்மாயிலுக்கு ப‌தின்மூன்று வ‌ய‌து என்றால், அவ‌ரைவிட‌ எட்டு. ப‌தினொரு வ‌ய‌திலிருக்கும் சிறுவ‌ர்க‌ளுக்கும் கூட‌ ப‌யிற்சி/ஆயுத‌ம் வழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. ஏகே 47ஐ நிமிர்த்திவைத்தால் அதைவிட‌க் குள்ள‌மாய்த்தான் அந்த‌ச் சிறுவ‌ர்க‌ள் இருந்தார்க‌ள் என்று இஸ்மாயில் விப‌ரிக்கின்றார்.

ஒருநாள் போராளிக் குழுவை வ‌ழிம‌றித்துத் தாக்குவ‌த‌ற்காய் இச்சிறுவ‌ர்க‌ள் அனுப்ப‌ப்ப‌டுகின்றார்க‌ள். ச‌ண்டை ஆய‌த்த‌மாவ‌த‌ற்கு முன் இச்சிறுவ‌ர்க‌ளுக்கு வெள்ளைநிற‌ போதைக் குளிசைக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ச‌ண்டை ஆர‌ம்பிக்கின்ற‌து. ந‌டுங்கும் தேக‌த்துட‌ன் ம‌னித‌வுட‌ல்க‌ள‌ ச‌ரிந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார்க‌ள். ஒரு ஆர்பிஜி அடியில் அருகிலிருந்த‌ எட்டு வ‌ய‌துச் சிறுவ‌னின் உட‌ல் பிய்த்தெறிய‌ப்ப‌டுகின்ற‌து. இஸ்மாயிலின் இன்னொரு நெருங்கிய‌ ந‌ண்ப‌னும் கொல்ல‌ப்ப‌டுகின்றான். இனி எதுவும் செய்வ‌த‌ற்கு இல்லையென‌ 'அசைகின்ற‌ எல்லாவ‌ற்றையும்' க‌ண்மூடித்த‌ன‌மாய் சுட‌த்தொட‌ங்குகின்றார் இஸ்மாயில். ஒன்று இர‌ண்டு என்று இவ‌ர‌து துப்பாக்கி ர‌வைப‌ட்டு ம‌னித‌வுட‌ல்க‌ள் ச‌ரிகின்ற‌ன‌. ஒவ்வொருமுறையும் தோட்டாக்க‌ள் முடிந்து மீள‌ நிர‌ப்பும்போது, இற‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளின் முக‌ங்க‌ள் த‌ன‌க்குள் வெறியை இன்னுமின்னும் அதிக‌மாய் ஏற்ப‌டுத்திய‌து என்கின்றார்.

எதையும் தொட‌ங்குவ‌துதான் க‌டின‌ம். தொட‌ங்கினால் எதுவுமே போதையாகிவிடும். அதுவும் அச‌ல் போதை ம‌ருந்தும் எடுத்துக்கொண்டு கொல்வ‌து இன்னும் மிகுந்த‌ போதையாக‌ இருக்கின்ற‌து. ப‌தின்மூன்றில் தொட‌ங்கும் இந்த‌ வேட்டை ப‌தினாறு வ‌ய‌து வ‌ரை கிட்ட‌த்த‌ட்ட‌ தின‌ம் தொட‌ர்ந்தாய் இஸ்மாயில் குறிப்ப்டுகின்றார். போராளிக‌ள் த‌ங்கியிருக்கும் கிராம‌ங்க‌ளைத் தாக்குவ‌து, போராளிக‌ள் ம‌ற்றும் அங்கிருக்கும் ம‌க்க‌ளை முற்றாக‌ கொல்வ‌து (த‌ப்ப‌விடும் ஒவ்வொரு ம‌னித‌னும் த‌ங்க‌ள் உயிரைப் ப‌றித்தெடுத்துவிடுவார்க‌ள் என்று க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌து). 'உங்க‌ள் பெற்றோரைப் ப‌லியெடுத்த‌ போராளிக‌ளை சும்மா விட‌க்கூடாது' என்று இவ‌ர்க‌ளின் குழுத்த‌லைவ‌ரால் ஒவ்வொரு தாக்குத‌லுக்கு முன்னாலும் உசுப்பேற்ற‌ப்ப‌டுகின்றார்க‌ள். வெறித்தனமாய் 'எதிரிக‌ளை'க் கொல்லும் திற‌மைக்காய் இஸ‌மெயிலுக்கு ஜூனிய‌ர் லெப்ரின‌ன்ட் ப‌த‌வி கூட‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் வ‌ய‌தொத்த‌ குழுவிற்குத் த‌லைமை தாங்குப‌வ‌ராக‌வும் ப‌தவி உய‌ர்த்த‌ப்ப‌டுகின்றார். கிராம‌ங்க‌ளைத் தாக்கி அங்கிருக்கும் உண‌வு இன்ன‌பிற‌ பொருட்க‌ளை சூறையாடுவ‌து. போராளிக‌ள் மீண்டும் அக்கிராம‌ங்க‌ளில் த‌ள‌ம் அமைக்காம‌ற் த‌டுக்கும்பொருட்டு கிராம‌ங்க‌ளையே முற்றாக‌ எரிப்ப‌து... இப்ப‌டியாக‌த் தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்துவ‌தும், அவையிலலாத‌ பொழுதுக‌ளில் போதை ம‌ருந்து எடுத்துக்கொண்டு Commando, Rambo, First Blood போன்ற‌ ச‌ண்டைப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பொர் வெறியைத் த‌ங்க‌ளுக்குள் உசுபேற்றிக்கொண்டிருப்ப‌து என்று கால‌ம் க‌ழிகிற‌து.

த‌ப்பியோட‌முடியாது பிடிப‌டும் போராளிக‌ளுக்கு இவ‌ர்க‌ள் செய்யும் அநியாய‌ம் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. ஒரு முறை பிடிப‌ட்ட‌ போராளிக‌ளை, கைக‌ளை பின்ப‌க்க‌மாய் க‌ட்டிவைத்து, இச்சிறுவ‌ர்க‌ளில் யார் குறைந்த‌ நேர‌த்தில் முத‌லில் துப்பாக்கிக்க‌த்தியால் க‌ழுத்தைச் சீவிக்கொல்வ‌து கொல்வ‌து என்ற‌ போட்டி ந‌ட‌க்கின்ற‌து. இன்னொரு முறை க‌டும் இழ‌ப்புக‌ளுட‌ன் கைப்ப‌ற்றும் கிராம‌த்தில் பிடிப‌ட்ட‌ போராளிக‌ளைக் கொண்டே குழிதோண்ட‌வைத்து, அப்ப‌டியே அவ‌ர்க‌ளை அத‌ற்குள் உயிரோடு புதைக்கின்றார்க‌ள் இப்ப‌டி எந்த‌வொரு ம‌னித‌த்த‌ன்மையுமில்லாது போர் இவ‌ர்க‌ளை ஆக்கிவிடுகின்ற‌து. கொல்ல‌ப்ப‌டும் ந‌ணப‌ர்க‌ளை நினைத்து க‌வ‌லைப்ப‌ட‌ முடியாத‌வ‌ள‌வுக்கு போர் வெறி ச‌ன்ன‌த‌மாடுகின்ற‌து. ஓரிட‌த்தில் போராளிக‌ள் த‌ங்கியிருக்கும் கிராம‌த்தைத் தாக்க‌ப்போகும்போது இஸ‌மாயிலின் ந‌ண்ப‌னுக்கு ஒரு ஆசை வ‌ருகின்ற‌து. தாங்க‌ள் பார்த்த‌ ர‌ம்போ ப‌ட‌த்தில் வ‌ரும் ராம்போ மாதிரி போரை நிக‌ழ்த்த‌வேண்டும்ன்று, ராம்போ மாதிரியே உள்ளே ஊடுருவி ம‌திய‌க் க‌ளைப்பில் கிட‌க்கும் ஜ‌ந்தாறு பேரை துப்பாகிக் க‌த்தியால் பின்புற‌மாய் போய் க‌ழுத்தைச் சீவிக்கொலை செய்கின்றான். அதிலும் கொடுமை என்ன‌வென்றால், ராம்போ ப‌ட‌த்தில் செய்வ‌த‌ற்கும் இத‌ற்கும் ஒரேயொரு வித்தியாச‌ம் என்ன‌வென்றால், ராம்போ கொன்ற‌ உட‌ல்க‌ளை ம‌றைத்த‌துபோல‌ ந‌ண்ப‌ன் ம‌றைக்க‌வில்லை அதனால் இன்னும் ப‌ல‌ரை இப்ப‌டிச் ச‌த்த‌மில்லாது கொல்லும் ச‌ம்ப‌வ‌ம் இடைந‌டுவில் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌‌ட்டுவிட்ட‌து என்கின்ற‌ இஸ்மாயிலின் குறிப்புக‌ள். பிம‌ப‌ங்க‌ள் க‌ட்டிய‌மைக்கும் உல‌கு எப்ப‌டி நிஜ‌மாய் ஆகின்ற‌து என்கின்ற‌ குரூர‌ உண்மையை நாம் விள‌ங்கிக்கொள்ள‌வேண்டும். ம‌னித‌ர்க‌ளை எப்ப‌டிப் போர் மாற்றியிருக்கின்ற‌து என்ப‌த‌ற்கு இந்நூலில் குறிப்பிட‌ப்ப‌டும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளைவிட‌ வேறு என்ன‌தான் வேண்டும்?

அதிஸ்ட‌மோ என்ன‌மோ தெரியாது, இஸ்மாயில் ப‌தினாறு வ‌ய‌தில் UNICEFவால், அவ‌ர்க‌ளின் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்துக்காய்(?) (rehabilitation centre) சிய‌ராலியோனின் த‌லைந‌க‌ருக்கு அனுப்ப‌டுகின்றார்க‌ள்.அங்கேயும் இவ‌ர்க‌ள் செய்யும் அட்ட‌காச‌ங்க‌ள் சொல்லி மாளாது. சென்ற‌ முத‌ல் நாள‌ன்றே, இவ‌ர்க‌ள் போராளிக‌ள் ப‌க்க‌த்திலிருந்து வ‌ரும் குழ‌ந்தைப் போராளிக‌ளைச் ச‌ந்திக்கின்றார்க‌ள். எவ‌ரையும் கொன்று ப‌ழ‌கிய‌ இவ‌ர்க‌ளுக்கு அவ‌ர்க‌ளைப் பார்க்க‌ச் ச‌கிக்க‌வில்லை. இவ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்கு என்றிருக்கும் பாதுகாவ‌ல‌ர்க‌ளின் துவ‌க்குக‌ளைப் ப‌றித்து இருத‌ர‌ப்பும் சுட்டுக்கொல்கின்ற‌து. முத‌ல் நாளே ஆறுபேர் ம‌றுசீர்வாழ்வு நிலைய‌த்தில் இற‌ந்துபோகின்றார்க‌ள். மிகுந்த‌ மூர்க்க‌த்த‌ன‌மாய் இவ‌ர்க‌ள் அங்கே வேலை செய்யும் ஆண்க‌ளையும்/பெண்க‌ளையும் துர‌த்திய‌டிக்கின்றார்க‌ள், பொருட்க‌ளை வீசியெறிகின்றார்க‌ள். இன்னும் தின‌மும் போதை ம‌ருந்து எடுத்த‌தால் அதுவில்லாது இவ‌ர்க‌ளால் இருக்க‌வும் முடிய‌வில்லை. த‌ம‌து கையை, த‌லையை சுவ‌ரில் நில‌த்தில் அடிக்கின்றார்க‌ள். இர‌த்த‌ம் பொங்கி த‌ன‌து கையெலும்பு வெளியில் தெரியும்வ‌ரை சீமெந்து நில‌த்தில் ப‌ல‌முறை அடித்த‌தாய் இஸ்மெயில் குறிப்பிடுகின்றார்.. இர‌வுக‌ளில் தூங‌க‌முடியாது தான் கொன்ற‌வ‌ர்க‌ளில் நினைவுக‌ள் வ‌ந்து, இர‌விர‌வாய் மைதான‌த்தைச் சுறறியோடிய‌தாய், வ‌ராண்டாவில் ந‌ட‌ந்து திரிந்த‌தாய் -மிகுந்த‌ உள‌விய‌ல் சிக்க‌ல்க‌ளுக்குள் ஆளான‌தாய்- இஸ்மாயில் எழுதுகின்றார்.

தான் எவ்வ‌ள‌வோ முயன்று குழ‌ந்தை இராணுவ‌மாய் ஆவ‌த‌ற்கு முன்பான‌ ந‌ல்ல‌ நினைவுக‌ளை திருப்ப‌க்கொண்டுவ‌ர‌ முய‌ற்சித்தாலும், தொட‌ர்ந்தும் போர்க்காட்சிக‌ளே த‌ன‌து நினைவிலும் க‌ன‌விலும் தொட‌ர்ந்துகொன்டிருந்த‌து என்றார். இவ்வாறு ப‌ல‌வேறு உள்/உட‌ல் சிக்க‌ல்க‌ளில் உழ‌ன்ற‌போதும் அந்த‌ ம‌றுசீர்வாழவு நிலைய‌த்திலிருந்த‌ வாஞ்சை மிக்க‌ ம‌னித‌ர்க‌ளின் அன்பாலும் ப‌ராம‌ரிப்பாலும் திரும்ப‌வும் த‌ன‌து போரில்லாத‌ உல‌கிற்குத் திரும்பியிருக்கின்றேன் என்கின்றார். அவ‌ருக்கான‌ சிகிச்சை முடிந்த‌பின் த‌ன‌க்கு ஒருவ‌ரும் இல்லையென்று நினைக்கும் இஸ்மாயிலுக்கு அவ‌ர‌து மாமா ஒருவ‌ர் திரும்ப‌க்கிடைக்கின்றார். அவ‌ர்க‌ளோடு த‌லைந‌க‌ரில் வாழ‌த்தொட‌ங்கும்போது, ஜ‌நாவின் குழ‌ந்தைக‌ளுக்கான‌ ஒரு மாநாட்டில் நியூயோர்க்கில் க‌ல‌ந்துகொள்ள‌ வாய்ப்புக் கிடைக்கின்ற‌து. ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ள் நேர்முக‌த்திற்காய் காத்திருக்கும்போது தானொரு குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னாய் இருந்த‌தால், த‌ன்னால்தான் சியராலிய‌னோனில் எப்ப‌டிக் குழ‌ந்தைக‌ளின் வாழ்வு சூறையாட‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைச் சொல்வ‌த‌ற்கு அதிக‌ உரிமையுண்டு என்று கூறிய‌தால் ஜ‌நா க‌ருத்த‌ர‌ங்கிற்கு அனுப்ப‌ப்ப‌டுகின்றார். அங்கே லோறின் என்ற‌ வெள்ளைப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கின்றார். ஜ‌நாவிற்கு நியூயோர்கிற்குப் போகும்போது ப‌னிக்கால‌மாகையால் குளிர்கால‌த்தில் இஸ்மெயில் ப‌டுகின்ற‌ அவ‌திக‌ள் இன்னொரு வித‌மான‌வை.

மீண்டும் சிய‌ராலிய‌ரோனிற்குத் திரும்பிவ‌ந்த‌ சொற்ப‌ மாத‌ங்க‌ளில் இதுவ‌ரை போர் தீண்டாத‌ த‌லைந‌க‌ரையும் போர் தீண்டுகின்ற‌து. தேர்த‌லால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌னாதிப‌தியை (96) க‌விழ்த்துவிட்டு இராணுவ‌த்த‌ள்ப‌தியும் போராளிக்குழுவும் நாட்டைக் கைப்ப‌ற்றுகின்ற‌து. மீண்டும் போர், ப‌ட்டினி, கொலை, கொள்ளைக‌ள், பாலிய‌ல் ப‌லாத்கார‌ங்க‌ள். தான் எங்கை போனாலும் போர் த‌ன்னைத் துர‌த்தாது விடாதுபோல‌ என‌ இஸ்மெயில் அந்த‌ரிக்கின்றார்.. இதுவ‌ரைகால‌மும் இவ‌ரை அர‌வ‌ணைத்து அன்பு காட்டிய‌ மாம‌னும், போர்க்கால‌த்தில் நோயின் நிமித்த‌ம் ம‌ருத்துவ‌ வ‌சதியில்லாது இற‌ந்துபோகின்றார். ஏன் இப்ப‌டி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பிரிய‌ங்காட்டிய‌ எல்லோரும் இற‌ந்துபோகும்போது தான் ம‌ட்டும் உயிரோடு இருக்கின்றேன் என‌ மிகுந்த‌ துய‌ர‌ங்கொள்ளும் இஸ்மாயில் இனி இந்த‌ நாட்டில் தான் தொட‌ர்ந்திருந்தால் கொல்ல‌ப்ப‌டுவேன் அல்ல‌து மீண்டும் இராணுவ‌த்தில் சேர்ந்து ம‌னித‌ர்க‌ளைக் கொல்ல‌வேண்டிய‌ நிலைவ‌ருமென்று நாட்டைவிட்டு த‌ப்பியோடுகின்றார். நியூயோர்க்கிலிருக்கும் லோறினைத் தொட‌ர்புகொண்டு தான் நியூயோர்க் வ‌ந்தால் த‌னக்கு அடைக்க‌ல்ந்த‌ருவாரா என‌க்கேட்கிறார். சிய‌ராலிய‌னோனை விட்டு Guinea விற்குத த‌ப்பியோடுவ‌தோடு இந்நூல் நிறைவுபெறுகின்ற‌து.(எப்ப‌டித் த‌ப்பியோடிய‌து என்ப‌து இன்னொரு அவ‌தியான‌ கிளைக்க‌தை).

1980ம் ஆண்டு பிற‌ந்த‌ இஸ்மாயில் த‌ற்ச‌ம‌ய‌ம் நியூயோர்க்கில் வ‌சித்து வ‌ருகின்றார். குழ‌ந்தைக‌ள் போரில் ஈடுப‌டுவ‌த‌ற்கு எதிரான‌ ஜ‌நாவின் திட்ட‌ங்க‌ளில் ப‌ங்குபெற்றி உரையாற்றியும் வ‌ருகின்றார். த‌ன‌து பெய‌ரிலேயே ஒரு அமைப்பு நிறுவி போரில் ஈடுப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளின் ம‌றுவாழ்வுக்காய் வேலைத் திட்ட‌ங்க‌ளையும் செய்துவ‌ருகின்றார். இது ஒரு இஸ்மாயிலின் க‌தை, இவ்வாறு இன்னுமின்னும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இஸ்மாயில்க‌ளின் க‌தைக‌ள் புதையுண்டு கிட‌க்கின்ற‌ன‌. மீண்டும் போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில், அடைக்க‌ல‌ம் கொடுக்க‌ இஸ்மாயிலுக்கு ஒரு மாமாவ‌து இருந்தார். அவ்வாறு இல்லாத‌ ப‌ல‌ர், மீண்டும் சீர்திருத்த‌ நிலைய‌த்திலிருந்து இராணுவ‌ம்/போராளிக்குழுக்க‌ளில் இணைந்து போர்முனைக்குச் சென்ற‌தாக‌ இஸ்மாயில் குறிப்பிடுகின்றார். இஸ்மாயிலுக்கு போரைத்தாண்டிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த‌துபோல‌ எல்லாச்சிறுவ‌ர்க‌ளுக்கும் வ‌ச‌திக‌ள் கிடைப்ப‌தில்லை என்ப‌தையும் க‌வ‌னிக்க‌வேண்டும். இன்று நியூயோர்க்கில் வ‌சித்துக்கொண்டிருக்கும் தான் மூன்று வித‌மான‌ உல‌கிற்குள் இன்ன‌மும் சிக்கிக்கொண்டிருப்ப‌தாய் இஸ்மெயில் கூறுகின்றார். குழ‌ந்தை இராணுவ‌மாய்ச் சேருவ‌த‌ற்கு முன்பிருந்த‌ ஒரு வாழ்வு, குழ‌ந்தை இராணுவ‌மாய் இருந்த‌ ஒர் உல‌கு, இத‌ற்கு முன‌ ப‌ரீட்ச‌ய‌ப்ப‌டாத‌ புல‌ம்பெய‌ர் வாழ்வு என‌ மூன்று வ‌கையான‌ உல‌குக‌ள் த‌ன்னை அடிக்க‌டி இடைவெட்டுவ‌தாய்க் குறிப்பிடுகின்றார்..

ஊரில் தான் சிறுவ‌ராயிருந்த‌போது, த‌ம‌து கிராம‌த்து முதிய‌வ‌ர் கூறிய‌வொரு க‌தையை இஸ்மாயில் ஓரிட‌த்தில் நினைவுப‌டுத்துவார். வேட்டைக்குப் போகும் ஒருவ‌ன் குர‌ங்கைச் சுடுவ‌த‌ற்காய்த் துப்பாக்கியைக் குறிபார்ப்பான். அப்போது அந்த‌க்குர‌ங்கு கூறும், நீ என்னைச் சுட்டால் உன‌து தாயார் ம‌ர‌ணிப்பார், என்னைச் சுடாம‌ல் விட்டாலும் உன‌து உன‌து த‌ந்தை ம‌ர‌ணிப்பார். அவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் எது உங்க‌ள‌து தேர்வாக‌ இருக்குமென‌ அந்த‌ முதிய‌வ‌ர் கேட்டிருப்பார். இத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்று மிக‌வும் குழ‌ப்பி, இறுதியில் க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ரிட‌ம், குர‌ங்கை விட்டுவிட்டு மான் போன்ற‌வ‌ற்றை வேட்டையாடி இதிலிருந்து த‌ப்பிவிடுவோம் என்று சொன்ன‌தாய் -சிறுவ‌ர்க‌ளாய் இருந்த‌போது- சொல்லியிருந்தோம் என்று இஸ்மாயில் குறிப்பிட்டிருப்பார். இது ச‌ரியான‌ ப‌திலில்லை எனெனில் துப்பாக்கியைக் குறிப்பார்க்க‌த் தூக்கிவிட்டாய் ஆக‌வே உன‌க்கிருக்கும் தேர்வு இர‌ண்டேதான் (குர‌ங்கைச் சுடுவ‌து அல்ல‌து சுடாது விடுவ‌து) என்று அந்த‌ முதிய‌வ‌ர் கூறியிருப்பார். இப்போது வ‌ள‌ர்ந்த‌பின் அக்க‌தையை மீள‌ நினைக்கும்போது, த‌ன‌க்கு அவ்வாறான‌ இர‌ண்டு தேர்வுக‌ள் ம‌ட்டுமே இருப்பின் குர‌ங்கையே தான் சுட்டிருப்பேன் என்கின்றார் இஸ்மாயில். எனெனில் குர‌ங்கைச் சுடாது விட்டால் அது த‌ன‌க்குப் பின் வ‌ருப‌வ்ர்களுக்கும் இவ்வாறான‌ கேள்வியைக் கேட்டு அவ‌ர்க‌ளுக்குப் பிரிய‌மான‌ ஒருவ‌ரைப் ப‌லிகொடுக்க‌ப்போகின்ற‌து ஆக‌வே கிடைக்கும் விளைவுக‌ளை தான் ம‌ட்டும் அனுப‌வித்துவிட்டு பின் வ‌ரும் ச‌ந்த‌திக‌ளுக்கு இவ்வாறான் இர‌ண்டு கொடும் தேர்வுக‌ளைக் கொடுக்க‌வேண்டியிருக்காதுதானே என்கின்றார். குர‌ங்கையொரு போராய் அல்ல‌து குழ‌ந்தை இராணுவ‌மாய்/போராளியாய் உருவ்கித்துப் பார்த்தால் ந‌ம‌க்கும் நிறைய‌ விடய‌ங்க‌ள் விள‌ங்க‌க்கூடும்

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது

Sunday, August 17, 2008

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)
கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது


-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்

2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கியவிருதுக்காய் தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15 தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரிமாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார். ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

'கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல்.வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.உதிரத்தின் நிணத்துடனும்,வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசிவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது என்றார். அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையையாகவும் கவிதை உருமாறும் என்றார்''

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ,ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா,ஆர்.பிரேம்குமார்,செல்சேவிஸ்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா ஆன்டெனிராஜாசிங்,தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன், உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது.தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தை சார்ந்தவர்.சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதிவிருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான 'நாடற்றவனின் குறிப்புகள்' நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர்.போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர். போர்க்கால அவலங்களும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களும் இவரது 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை நூலில் மெளன சாட்சியாய் பதிவாகி உள்ளன. இத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிஞர் இளங்கோ கனடாவிலிருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் உரை மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருந்தது. ஏலாதி இலக்கிய விருது விழாவில் வாசிக்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்

'சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினொரு வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்கு போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாயிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் போர் நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூர்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம் பெயரவும் செய்து கொண்டிருக்கும் போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதிவாழ்க்கையில் நான் ஒரளவு 'ஆசீர்வதிக்கப்பட்டவன்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆகக் குறைந்தது உயிருக்காவது உத்திரவாதமளிக்கும் ஒரு நாட்டிலாவது வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது. எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்ற போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முடிகின்றது.

ஒரு புதியவனுக்கு அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்ற வகையில் ஏலாதி இலக்கிய விருதை ஏற்றுக் கொள்கின்றேன்.

...இறுதியில் நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்.இன்னும் இவ்விருதுடன் வழங்கும் நன்கொடையை தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பில் இதைப் பெற்றுக் கொள்ளும் 'அடையாளம்' சாதிக்கிடம் கேட்டுக் கொள்கிறேன்'

ஏலாதி விருது வழங்கும் விழாவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தக்கலை ஏற்பாடு செய்திருந்தது.


(மின்னஞ்சலில், ஏலாதி இலக்கிய விருதை வழங்கிய நண்பர்கள் நடந்த நிகழ்வைப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. முழுமையான ஏற்புரையை இங்கு வாசிக்கலாம்)

ஏலாதி இலக்கிய விருது பெறும் 'நாடற்றவனின் குறிப்புகள்'

Friday, August 15, 2008

'நாடற்றவனின் குறிப்புகள்' தொகுப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் (தக்கலை) வழங்கும், ஏலாதி இலக்கிய விருதைப் பெற்றுள்ளது.

கூடவே இவ்விருதைப் பகிரும் 'வனப்பேச்சி' கவிதைத் தொகுப்பின் படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனையும் வாழ்த்துகின்றேன்.



மேலதிக விபரங்களுக்கு...

ஏலாதி இலக்கிய சங்கமம் அறிவிப்பு

அலைந்துழல் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும்

Thursday, July 24, 2008

-வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் Love Marriageஐ முன்வைத்து-

அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் Representations of the Intellectual நூலில் ஒரு அத்தியாயம் முழுதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கிப் போகத்தான் செய்கின்றது. தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராவிடத்து எந்த ஏற்றமும்/உயர்ச்சியும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. 'மாற்றம் என்பதே மாறாதது' என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது அந்த மாற்றமானது எந்தத் திசையில் செல்ல‌வேண்டுமென்ப‌தைத் தீர்மானிக்கும் முக்கியபுள்ளியாக விமர்சனங்களைப் பொதுவெளியில் வைத்து திறந்த மனதுடன் விவாதிக்கும் மனப்பாங்கு ஒவ்வொரு சமூகத்திற்கும் அத்தியாவசியமாகின்றது. தமிழ்ச்சமூகத்தில் -முக்கியமாய் ஈழத்தமிழர் மத்தியில்- இந்தக் கூறுகள் மிக அரிதாகவிருக்கின்றதாலேயே குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டி பழங்கதைகள் பேசி திருப்தியடைவதோடு எல்லாமே முடிந்துபோய் விடுகின்றது. இவற்றையெல்லாம் விட, தாம் வித்தியாசமாய் சிந்திக்கின்றோம்/செயலாற்றுகின்றோம் என்பவர்களும், தமது சொந்தவிருப்பின்/அரசியல் நிலைப்பாட்டில் சமூகத்தை முன்னிறுத்தாமல் தம்மை முன்னிறுத்தி தமது சுயமுகங்களை/சுயசொறிதல்களை வெளிக்காட்டும்போது 'இவர்களைவிட அவர்களே பரவாயில்லை' என்ற மனோநிலையும் வந்துவிடுகின்றது.

போர்ச்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் போரையும் அது நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தைப் பார்ப்பதற்கும், அதனோடு சம்பந்தப்படாத பிறர் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. போர்சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் தமது தனிப்பட்ட அனுபவங்கள், வாழத்திணிக்கப்பட்ட சூழல் என்பவற்றை முன்வைத்துத்தான் அதிகம் பேசுகின்றவர்களாய் இருக்கின்றார்கள்; அது ப‌ல‌வேளைகளில் தவிர்க்கமுடியாததும் கூட. ஆனால் போர்ச்சூழலிற்குள் அகப்படாத புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை (அல்லது மிகச்சிறிய வயதில் புலம்பெயர்ந்தவர்கள்) தனிப்பட்ட விருப்பு/வெறுப்பில்லாது தெளிவான ஒரு பார்வையைத் தரக்கூடிய அதிக சாத்தியங்கள் விரிந்துகிடக்கின்றன. அவ்வாறான நம்பிக்கையுடன், இதுவரை ஈழத்துப் போர்ச்சூழல்/புலம்பெயர் வாழ்வு குறித்து கவனிக்கப்படாத புள்ளிகளையும் முன்னிறுத்தும் என்ற எண்ணத்தோடே வாசுகி. கணேசானந்தனின் Love Marraige புதினத்தை வாசிக்கத்தொடங்கினேன்.

இப்புதின‌ம், நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌ங்க‌ள் (arranged marriages) ம‌ற்றும் காத‌ற் திரும‌ண‌ங்க‌ளை அல‌சுவ‌தை மைய‌மாக‌க் கொண்டு சுழ‌ன்றாலும், ஈழ‌த்த‌மிழ்ச் ச‌மூக‌ம் ப‌ற்றிய் ம‌திப்பீடுக‌ளும், போர்ச்சூழ‌ல்க‌ளும் உள்ள‌ட‌க்க‌ப்ப‌ட்ட‌தாய் ந‌க‌ர்கின்ற‌து. ஈழ‌த்திலிருந்து அமெரிக்காவுக்கு வ‌ந்து, காத‌லித்து திரும‌ண‌ஞ்செய்யும் பெற்றோருக்குப் பிற‌ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையைச் சேர்ந்த‌ யாழினியால் இக்க‌தை/க‌தைக‌ள் சொல்ல‌ப்ப‌டுவ‌தாய் எழுத‌ப்ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இருப‌துக‌ளின் ஆர‌ம்ப‌த்தில் வ‌ளாக‌த்துக்குச் சென்றுகொண்டிருக்கும் யாழினியும் அவ‌ரின் பெற்றோரும், புற்றுநோயின் கார‌ண‌மாய் சிகிச்சைக்காய் க‌னடா வ‌ரும் மாம‌னாரின் (கும‌ர‌ன்) நிமித்த‌ம் க‌னடாவுக்கு குடிபெய‌ர்கின்றார்க‌ள். புற்றுநோய் முற்றி வாழ்வின் இறுதிக்க‌ட்ட‌த்திலிருக்கும் கும‌ர‌ன் விடுத‌லைப்புலிக‌ள் இய‌க்க‌த்தில் நீண்ட‌கால‌மாய் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌வ‌ர். நோயின் தீவிர‌ங்கார‌ண‌மாய் வெளிநாடு செல்ல‌ அவ‌ருக்கு இய‌க்க‌ம் அனும‌தி கொடுப்ப‌தாய்ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. ரொறொண்டோவுக்கு த‌ன‌து ப‌தினெட்டு வ‌ய‌தான‌ ம‌க‌ள் ஜ‌ன‌னியின் துணையுட‌ன் கும‌ர‌ன் வ‌ருகின்றார். கும‌ர‌னின் நோயின் நிமித்த‌ம் உல‌கின் ப‌ல்வேறு திசைக‌ளிலிருக்கும் உற‌வின‌ர்க‌ள் ரொறொண்டோவில் கூடுகின்றார்க‌ள். போர் குறித்தோ, உற‌வுக‌ள் குறித்தோ அதிக‌ந்தெரியாது வ‌ள‌ர்ந்த‌ யாழினி, இந்நிக‌ழ்வின் மூல‌ம் த‌ன‌து அடையாள‌ங்க‌ளைத் தேட‌த்தொட‌ங்குகின்றார். யாழினியின் பெற்றோரின் நெருங்கிய‌ உற‌வுக‌ளின் கிளைக்க‌தைக‌ள், ப‌ல‌வேறு பின்ன‌ணிச் சூழ‌ல்க‌ளில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. புதின‌மும் மாறி மாறி க‌னடா, அமெரிக்கா, ஈழமென‌ வெவ்வேறு க‌தாமாந்தர்க‌ளைப் பின்தொட‌ர்ந்து அலைய‌த் தொட‌ங்குகின்ற‌து..

அமெரிக்காவில் பிற‌ந்து த‌மிழ்ச்ச‌மூக‌த்தோடு அவ்வ‌ள‌வு நெருங்கிப்ப‌ழ‌காத‌ யாழினிக்கு, அவ‌ர‌து தாய் முறையிலான‌ மாமாவும், புலம்பெய‌ர்ந்த‌ த‌மிழ்ச்ச‌மூக‌ம் அதிக‌மிருக்கும் ரொறொன்டோவும் அவ‌ரை ஒரு வெளியாளாக‌/அந்நிய‌ளாக‌ வித்தியாச‌ப்ப‌டுத்திக் காட்டுகின்ற‌து. த‌மிழ்ப்பெற்றோருக்குப் பிற‌ந்ததால் ம‌ட்டுமே த‌மிழ‌ராக‌ முடியுமா என்று இங்கே வ‌ள‌ரும் இர‌ண்டாந்த‌லைமுறைக்கு எழ‌க்கூடிய‌ கேள்விக‌ள் யாழினிக்குள்ளும் எழுகின்ற‌ன‌. மேலும் த‌மிழ் மொழி/க‌லாசார‌ம்/ப‌ண்பாடுக‌ளோடு வ‌ந்திற‌ங்கும் கும‌ர‌னின் ம‌க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தான் த‌மிழ‌ராய் இருப்ப‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌ங்க‌ளையும் கொண்டிருக்க‌வில்லையென‌ யாழினி இன்னும் குழ‌ம்புகின்றார் (உரையாடும் த‌மிழை ம‌ட்டும் விள‌ங்கிக்கொள்ப‌வ‌ராக‌ யாழினியின் பாத்திர‌ம் இங்கு சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து).

மேலும் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி விரிவாக‌ அறியாத‌ யாழினிக்கு, போரை, விடுத‌லைப்புலிக‌ளை, அதில் முக்கிய‌ உறுப்பின‌ராய் இருந்த‌ த‌ன‌து மாம‌னாரை எப்ப‌டி விள‌ங்கிக்கொள்வ‌து/உள்வாங்கிக்கொள்வ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌. 74ம் ஆண்டு உல‌க‌த்த‌மிழாராய்ச்சி மாநாடு, 83ம் ஆண்டு ஜூலைக் க‌ல‌வ‌ர‌ம், புலிக‌ளின் ச‌கோத‌ர‌ இய‌க்க‌ப் ப‌டுகொலைக‌ள் என்று எல்லாம் சில‌ கதைமாந்த‌ர்க‌ளினூடாக‌/ச‌ம்ப‌வ‌ங்க‌ளினூடாக‌ யாழினிக்குச் சொல்ல‌ப்ப‌ட்டிருந்தாலும் அவ‌ரால் போரின் ஊற்றுக்க‌ளை விரிவாக‌ விள‌ங்கிக்கொள்ள‌முடியாதிருக்கின்ற‌து. மேலும் ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் இன‌வொடுக்க‌ல் போராட்ட‌த்தை, அத‌ன் உண்மையான‌ கார‌ண‌ங்களை காண‌ ம‌றுத்து, மேலைத்தேய‌ பார்வையினுடாக‌ 'ஆயுத‌ந்தூக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் கெட்ட‌வ‌ர்க‌ளே' என்ற‌ எளிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ பார்வைதான் யாழினிக்கும் இருக்கின்ற‌தோ என்று அய்ய‌முற‌க்கூடிய‌ அள‌வுக்கு யாழியின் பாத்திர‌ம் தெளிவின்மையாய்ப் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து அதேவேளை புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையில் அநேக‌ருக்கு ஏற்ப‌ட‌க்கூடிய‌ ம‌னோநிலையாக‌வும் இதை எடுத்துக்கொள்ளாலாம்.

தொட‌க்க‌த்தில் யாழினி த‌ன‌து மாம‌ன் கும‌ர‌னோடு அந்நிய‌ப்ப‌ட்டு நின்றாலும், கும‌ர‌னின் இறுதிக்கால‌த்தில் அவ‌ருக்குப் பிரிய‌மான‌ ம‌ரும‌க‌ளாக‌ மாறிவிடுகின்றார். போர்/புலி இன்ன‌பிற‌ நியாய‌த்த‌ராசுக‌ளின் எடைபோட‌ல்க‌ளுக்கு அப்பால் ம‌னிதாபிமான‌ம் யாழினியை கும‌ர‌னோடு நெருக்க‌மாக்கிவிடுகின்ற‌து. கும‌ர‌னின் ம‌ர‌ண‌த்திற்குப் பின், கும‌ர‌னின் ம‌க‌ள் க‌னடாவிலிருக்கும் புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர் ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ்செய்வ‌தோடு புதின‌ம் முடிவ‌டைகின்ற‌து (இந்ந‌ப‌ர், ச‌ட்ட‌த்திற்குப் புற‌ம்பான‌ வ‌ழியில் ஏதோவொரு தொழில் செய்து நிதி சேக‌ரித்து புலிக‌ளுக்கு அனுப்புகின்றார் என்ற‌ குறிப்பு இந்நாவலில் வ‌ருகின்ற‌து).

ஜ‌ன‌னியின் திரும‌ண‌த்தை முன்வைத்து த‌மிழ‌ரின் இந்துக்க‌ளின் ச‌ட‌ங்குமுறைக‌ள் விரிவாக‌ப் பேச‌ப்ப‌டுகின்ற‌து. நாவ‌ல் முடியும்போது த‌மிழ்ச் ச‌மூக‌த்தில் ந‌ட‌க்கும் திரும‌ண‌ங்க‌ள் அது நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌மானால் என்ன‌ அல்ல‌து காத‌ற்திரும‌ண‌மானால் என்ன‌ இர‌ண்டும் ஒன்றோடு ஒன்று தொட‌ர்புப‌ட்ட சிக்க‌லான‌ ஒரு முறைபோல‌வே தோற்ற‌ம‌ளிக்கின்ற‌ன. த‌னித்துவ‌மான‌ வித்தியாச‌ங்க‌ளுட‌ன் காத‌ற்திரும‌ண‌மோ அல்ல‌து நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌மோ இல்லையென்ற‌ வாசிப்பையே ப‌டைப்பாளியும் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌ர‌ முய‌ற்சிக்கின்றாரென‌த்தான் சொல்ல‌வேண்டியிருக்கின்ற‌து; அதுவே ய‌தார்த்த‌மும் கூட‌.

புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறையை முன்னிலைப்ப‌டுத்தி எழுத‌ப்ப‌டும் நாவ‌லென்ற‌ வ‌கையில் மிகுந்த‌ ஆர்வ‌த்துட‌னேயே இந்நாவ‌லை வாசிக்க‌த் தொட‌ங்கினேன். கால‌ங்கால‌மாய் க‌ட்டிக்காக்க‌ப்ப‌டும் க‌லாசார‌/ப‌ண்பாட்டுத்த‌ள‌ங்க‌ளுக்குள் இருந்து வ‌ரும் ஒருவ‌ருக்கு இருக்கும் ம‌ன‌த்தடைக‌ளோ, போர்ச்சூழ‌லுக்குளிருந்து வ‌ரும் ஒருவ‌ருக்கு இருக்கும் த‌னிப்ப‌ட்ட‌ சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளின் நிமித்த‌ம் வ‌ரும் ச‌ம‌ர‌ச‌ங்க‌ளோ இல்லாது, மிக‌ச்சுத‌ந்திர‌மாய் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் பேச‌ப்ப‌டக்கூடிய‌ வெளியில் விரிய‌க்கூடிய‌ சாத்திய‌ங்க‌ளைக்கொண்ட‌ இப்புதின‌ம், இறுதியில் இந்து ச‌ம‌ய‌ச்ச‌ட‌ங்குக‌ளை முன்னிறுத்தி திரும‌ண‌ங்க‌ளுக்கு அதிக‌ம் விள‌க்க‌ம் கொடுப்ப‌தோடு ம‌ட்டும் நிற்கும்போது த‌ன‌க்கான‌ ச‌ரிவைத்தானே தேடிக்கொள்கின்ற‌து.. போர் குறித்து இந்நாவ‌லில் சொல்ல‌ப்ப‌டும் செய்திக‌ள் கூட‌ ஒரு க‌ட்டுரையாக‌ எங்கேயும் எடுக்க‌ப்ப‌ட‌க்கூடிய‌ விட‌யங்க‌ள் என்றள‌வில் அவையும் ஒரு எல்லைக்க‌ப்பால் வாச‌க‌ருக்கு 'வித்தியாச‌மாய்' எதையும் த‌ரவில்லை என‌க்குறிப்பிட‌ வேண்டியிருக்கின்ற‌து. மூன்றாம் ந‌ப‌ராய்/அந்நிய‌ராய், ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர்குறித்தும் அத‌ன்பார‌தூர‌மான‌ விளைவுக‌ள் குறித்தும் ஒரு நேர்மையான‌ பார்வையை ப‌டைப்பாளி, யாழினியினுடாக‌ முன்வைப்பார் என்று எதிர்பார்த்து தொட‌ர்ந்து வாசிக்கும்போது அலுப்பே மிஞ்சுகின்ற‌து. இன்னுஞ் சொல்ல‌ப்போனால், புல‌ம்பெய‌ர்ந்த‌ இர‌ண்டாந்த‌லைமுறை ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் போர்குறித்து என்ன‌வித‌மான‌ பார்வைக‌ளைக் கொண்டிருக்கின்ற‌து என்ற‌றிய‌க்கூடிய‌ வெளி கூட‌ இப்புதின‌த்தில் விரிவாக‌ப் பேச‌ப்ப‌டாத‌து முக்கிய‌ ப‌ல‌வீன‌மென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து.

இந்நாவ‌லில் ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ அள‌வுக்கு க‌தாபாத்திர‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌வோ என்று ம‌ய‌க்க‌ம் வ‌ரும‌ள‌வுக்கு நிறைய‌ப் பாத்திர‌ங்க‌ள் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டாலும், எந்த‌வொரு பாத்திர‌மும் வாசிப்ப‌வ‌ரை அதிக‌ம் பாதிப்ப‌தாய்க் காண‌முடிய‌வில்லை. முக்கிய‌மாய் கும‌ர‌ன் என்ற‌ பாத்திர‌த்திற்குக் கொடுக்க‌ப்ப‌டும் அடையாள‌த்தினூடாக‌ ஈழ‌த்தில் சில‌ தசாப்த‌கால‌ போர்ச்சூழ‌ல் வெளிக்கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டிருக்க‌லாம் அல்ல‌து போர்ச்சூழ‌லில் இற‌ந்துபோன‌ கும‌ர‌னின் துணைவியை முன்வைத்து ஏன் ம‌க்க‌ள் அப்ப‌டியாக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்றார்க‌ள் போன்ற‌ புள்ளிக‌ளிலாவ‌து அதிக‌ம் க‌வ‌ன‌ங்குவிக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆக‌க்குறைந்த‌து, மேற்க‌த்தைய‌ நாடுக‌ள் எப்ப‌டி ஆபிரிக்கா/ஆசிய‌ நாடுக‌ளில் ம‌னித‌வுயிர்க‌ள் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் அழியும்போது, -த‌ம‌க்கு ஏதும் ந‌ன்மை ஏற்ப‌டாத‌வ‌ரை- உள்நுழையாது அமைதியாக‌ பார்த்துக்கொண்டிருப்ப‌த‌ன் 'அட‌ர்த்தியான மெளன‌ம்' குறித்தாவ‌து கேள்விக‌ளை ப‌டைப்பாளி எழுப்பியிருக்க‌லாம்.

த‌மிழ்ச்ச‌மூக‌த்தின் திரும‌ண‌ முறைக‌ளைப் ப‌ற்றி விரிவாக‌ப் பேச‌ப்ப‌ட‌ முய‌லும் ஒரு புதின‌த்தில் இவ்வாறான‌ பிற‌ அர‌சிய‌ல்/ச‌மூக‌ப்புள்ளிக‌ள் க‌ட்டாய‌ம் பேச‌ப்ப‌ட‌வேண்டுமா என்ற‌ கேள்விக‌ள் ந‌ம‌க்குள் எழ‌க்கூடும். உண்மைதான், ஆனால் திரும‌ண‌ம்/ப‌ராம்ப‌ரிய‌ச் ச‌ட‌ங்குக‌ள்/ச‌ம்பிர‌தாய‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ங்குவிக்க‌ப்ப‌ட்டிருந்தால், இய‌க்க‌ம்/ ஈழ‌த்தில் ந‌டைபெறும் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி இந்நாவ‌லில் குறிப்பிட்டிருக்க‌த்தேவையில்லை; முக்கிய‌மாய் கும‌ர‌ன் என்கின்ற‌ விடுத‌லைப்புலியின் பாத்திர‌ம் இப்புதின‌த்தில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ அவ‌சிய‌மேயிருந்திருக்காது. ஈழ‌ப்போராட்ட‌ச்சூழ‌ல் விரிவாக‌ பேச‌ப்படாது -தொட்டுக்கொள்ள‌ ஊறுகாய் மாதிரி- த‌மிழ‌ர் போராட்ட‌ம் இப்புதின‌த்தில் பாவிக்க‌ப்ப‌ட்டிருந்தால், அது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் போராட்ட‌த்தை முன்வைத்து வியாபார‌ம் செய்ப‌வ‌ர்க‌ளைப் போன்றே, த‌ன‌து புதின‌த்தையும் இப்ப‌டைப்பாளி மேற்க‌த்தைய‌ ச‌மூக‌த்திற்கு விற்க‌ப்பிரிய‌ப்ப‌டுகின்றாரோவென‌ச் ச‌ந்தேகிக்க‌ வேண்டியிருக்கும். திரும‌ண‌த்தை விள‌க்க‌ப்ப‌டுத்துகின்றேன் என்று ம‌ண‌வ‌றைக்கு முன்னிற்கும் ஐ‌ய‌ர் போட்டிருக்கும் பூணூலிருந்து தாலி இன்னபிற‌ வ‌ரை எல்லாமே விரிவாக‌ எழுதப‌ப‌ட்டிருப்ப‌து வாசிக்கும்போது மிகுந்த‌ அலுப்பைத் த‌ருகின்ற‌து. இங்குகூட‌ இவ்வாறான‌, நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌ங்க‌ளில் சாதி என்ப‌து மிக‌ப்பெரும் ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து என்ப‌தைக்கூட‌ ப‌டைப்பாளி ம‌ற‌ந்துவிடுகின்றார். புலம்பெய‌ர்ந்த‌ சூழ‌லில் சாதி ம‌ட்டுமில்லை, சீத‌ன‌ம் இன்ன‌பிற‌வும் எப்ப‌டி இங்கு பிற‌ந்த‌ அடுத்த‌ த‌லைமுறைக்குள்ளும் காவ‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து ப‌ற்றி விரிவாக‌ எந்த‌க்குறிப்பையும் இதில் காண‌க்கிடைக்க‌வில்லை. உற‌வுக‌ளுக்குள் ந‌ட‌க்கும் (நிச்ச‌யிக்க‌ப்ப‌டும்)திரும‌ண‌ங்க‌ள் என்ப‌தே சாதியைக் க‌ட்டிக்காப்ப‌த‌ற்கேயென்ற‌ எளிய‌ அர‌சிய‌ல் ஏன் ம‌றைக்க‌ப்ப‌ட‌வேண்டும்?

நான் அறிந்த‌வ‌கையிலேயே இந்நாவ‌லில் நிறைய‌ த‌க‌வ‌ற்பிழைக‌ள் இருக்கின்ற‌ன‌. உல‌க‌த் த‌மிழாராய்ச்சி மாநாட்டில் கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌ட்டுத்தான் இற‌ந்தார்க‌ள் என்ற‌ செய்தி இப்புதின‌த்தில் வ‌ருகின்ற‌து (பொலிசார் கூட்ட‌த்தைக் க‌லைக்க‌ மேலே சுட்ட‌போது மின்சார‌க் க‌ம்பிக‌ள் அறுந்தே பொதுமக்க‌ள் இற‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌தே ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு). யாழ்ப்பாண‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் பொறிய‌ல் பீட‌மிருப்ப‌தாய் அடிக்க‌டி சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌து இன்னொரு த‌க‌வ‌ற்பிழை (கும‌ர‌ன் ஒரு பொறிய‌ல் பீட‌ மாண‌வனாயிருந்து இய‌க்க‌த்தில் சேர்கின்றார்). மேலும், திரும‌ண‌த்தில் கூற‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம், ச‌ம‌ஸ்கிருத‌த்தில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து என்று விப‌ரிக்க‌ப்ப‌டும்போது ச‌மஸ்கிருத‌மான‌து, த‌மிழை விட‌ ஆதியான‌து என்ற‌வ‌கையில் எழுத‌ப்ப‌டுகின்ற‌து. இவ‌ற்றை விட‌ முக்கிய‌மாய் இந்நாவ‌லின் மிக‌க்குழ‌ப்ப‌மாய் இருப்ப‌து, கும‌ர‌ன் இயக்கத்தில் இருக்கின்றார் என்று எல்லோருக்கும் அறிவித்த‌ப‌டியே ரொறொண்டோவுக்கு வ‌ருவ‌து. ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டையில் கும‌ர‌னுக்கு க‌னடா வ‌ர‌ அனும‌தி கொடுக்க‌ப்ப‌டுவ‌தாய் புதின‌த்தில் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌னடாவின் குடிவ‌ர‌வுக் கொள்கைக‌ளின்ப‌டி அப்ப‌டியொருவ‌ர் இப்ப‌டி அறிவித்துக்கொண்டு வ‌ருவ‌த‌ற்கான எந்த‌ச் சாத்திய‌ப்பாடும் இருப்பதாய்த் தெரிய‌வில்லை. 'க‌னடாவில் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருமே புலிக‌ள்' என்ற‌ரீதியில் பாராளும‌ன்ற‌த்தில் உள‌றிக்கொட்டிக்கொண்டிருக்கும் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள், ஒருவ‌ர் புலியாக‌ இருந்த‌வ‌ர் என்று அறிவித்துக்கொண்டு வ‌ரும்போது,' க‌னடாவில் தீவிர‌வாதிக‌ள் ஊடுருவிவிட்டார்க‌ள், தேச‌த்திற்கே ஆப‌த்து, நாடாளும‌ன்ற‌த்தையே க‌லை'யென்று அல‌ற‌ப்போகின்றார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்திலேயே கொழும்பில் வைத்து விஸா கொடுக்க‌வே, உரிய‌ அதிகாரிக‌ள் விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தே யதார்த்த‌மாயிருக்கும்.. அதுவும் கும‌ர‌ன் புலியாக‌வே ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை இருக்கின்றார் என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து; ம‌க‌ளும் போராளியாக‌ இருந்திருக்க‌லாம் என்கின்ற‌ மாதிரியான‌ வாசிப்பும் இந்நாவ‌லினூடு வ‌ருகின்ற‌து. கும‌ர‌னும், ஜ‌ன‌னியும் க‌னடா வ‌ருவ‌த‌ற்கு ஏதாவ‌து அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்து (அல்ல‌து உய‌ர்ம‌ட்ட‌த்தில் மிகுந்த‌ செல்வாக்கு இருந்து) விஸா குத்திக் கொடுக்க‌ப்ப‌ட்டிருந்தால‌ன்றி இவ்வாறு ஒரு நிக‌ழ்வு ந‌ட‌த்த‌ல் ய‌தார்த்த‌த்தில் அவ்வ‌ள‌வு சாத்திய‌மில்லை (ஈழ‌த்திலிருந்த‌ சில‌ த‌மிழ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க்கே, புலிக‌ளோடு தொட‌ர்பிருக்கின்ற‌தென‌க் கார‌ண‌ங்காட்டி க‌னடாவுக்கு வ‌ர‌ விஸா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட‌ந்த‌ கால‌ உதார‌ண‌ங்க‌ளையும் நினைவுப‌டுத்திக்கொள்ள‌லாம்).

இன்று மிக‌ச் சிக்க‌லாக‌வும், ப‌ல‌வீன‌மாக‌வும் போய்க்கொண்டிருக்கும் த‌மிழ‌ரின் போராட்ட‌த்தை, எல்லாத் த‌ர‌ப்புக‌ளும் பிழை செய்கின்ற‌ன‌ என்று எளிதாக‌க் கூறித் த‌ப்பியோட‌ முடியாது. தொட‌க்க‌ கால‌த்தில் த‌மிழ‌ரின் உரிமைக்காய் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்திற்கு எவ்வ‌ள‌வு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ளிலிருந்த‌தோ அந்த‌ப் பிர‌ச்சினைக‌ள் இன்ன‌மும் தீர்க்க‌ப்ப‌டாம‌லேயே இருப்ப‌தைச் சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌த்திற்கோ, உல‌க‌நாடுக‌ளுக்கோ ம‌ட்டுமில்லாது, வெற்றி/தோல்விக‌ளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூக‌லிக்கும் 'புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கும்' நினைவுப‌டுத்த‌ வேண்டியிருக்கிற‌து. இந்நாவ‌லில் த‌மிழ‌ர் த‌ர‌ப்பின் தீர்க்க‌ப்ப‌டாத‌ பிர‌ச்சினைக‌ளின் ஆழ‌ங்க‌ளை அல‌சாம‌ல், பொதுப்ப‌டையாக‌/எளிமையாக‌ அனைவ‌ரும் த‌வ‌று செய்கின்றார்க‌ள் என்று எழுதுவ‌து/பேசுவ‌து, ஈழ‌ப்போராட்ட‌ம் குறித்து அவ்வ‌ள‌வு அறியாத‌வ‌ர்க‌ளுக்கு த‌வ‌றான‌ நிலைப்பாட்டை விதைக்க‌க்கூடியதாக‌விருக்கும். முக்கியமாய் த‌மிழ‌ல்லாத‌, ஆங்கில‌ம் போன்ற‌ பிற‌ மொழிக‌ளில் நேர‌டியாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் இவை குறித்து அதிக‌ க‌வ‌ன‌த்தோடு, க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாற்றை ஆழ‌மாய் அறிந்துகொள்வ‌தினூடே நிதான‌மாய் எழுத‌வேண்டியிருக்கிற‌து.

இப்புதின‌த்தின் தோற்றுவாய் இப்ப‌டைப்பாளி த‌ன‌து முதுமாணிப் ப‌ட்ட‌த்துக்காய் எழுதிய‌தையே நாவ‌லாக்கிய‌தாய் புதின‌த்தின் பின்னட்டை கூறுகின்ற‌து. ஆய்வு என்ப‌தே நிறைந்த‌ த‌ர‌வுக‌ளையும், த‌க‌வ‌ற் திர‌ட்டுக்க‌ளையும், ப‌ன்முக‌ப்பார்வைக‌ளையும் உள்ள‌ட‌க்கி எழுத‌ப்ப‌ட‌வேண்டிய‌து. ஐய‌ர், பூணூல் ம‌ண‌வ‌றை, கூறைப்புடைவை,க‌ன்னிகா தான‌ம் என்ப‌வ‌ற்றுக்கு நிறைந்த‌ ஆய்வுக‌ள் செய்து விப‌ரிக்கும் ப‌டைப்பாளி, போர்/போராளிக‌ள்/போராட்ட‌ம் போன்ற‌வ‌ற்றுக்கு அதிக‌ விள‌க்க‌ம் கொடுத்து விரிவாக‌ எதுவும் அதிக‌ம் எழுத‌த் தேவையில்லை என்று நினைத்தாரோ என்ன‌வோ தெரிய‌வில்லை. இவ்வாறான‌ குறைக‌ளுக்கும் அப்பால், ச‌ம‌கால‌ப் பிர‌ச்சினைக‌ளையும் உள்ளட‌க்கிய‌த‌ற்காய் - ப‌ல‌வீன‌ங்க‌ளுட‌ன் என்றாலும் இய‌ன்ற‌ளவு உண்மைக‌ளை ம‌றைக்காம‌ல் எல்லாத் த‌ர‌ப்புக‌ளினதும் அர‌சிய‌ல் ப‌ல‌வீன‌ங்க‌ளைப் ப‌திவு செய்த‌ முய‌ன்ற‌மைக்காய்- ப‌டைப்பாளியைப் பாராட்ட‌லாம். க‌தையின் ந‌க‌ர்வோட்ட‌த்தை ச‌ட‌ங்குக‌ள் என்ப‌வ‌ற்றுக்கு விள‌க்க‌ம் கொடுப்ப‌து சில‌ இட‌ங்க‌ளில் த‌டைசெய்து வாசிப்பிற்கு அலுப்புத் த‌ந்தாலும், த‌மிழ்ச்சூழ‌லில் ஒரு பெண் முக்கிய‌ பாத்திர‌மாக்க‌ப்ப‌ட்டு ப‌டைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியவொன்று. ஆனால் இர‌ண்டாந்த‌லைமுறை புல‌ம்பெய‌ர்ந்த‌ ச‌மூக‌த்திட‌மிருந்து, ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌/விவாதிக்க‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைய‌ல்ல‌, வித்தியாச‌மான‌ கோண‌ங்க‌ளில், புதிய‌ உரையாட‌ல் புள்ளிக‌ளை எதிர்பார்த்து வாசிக்க‌த்தொட‌ங்கும் ஒரு வாச‌க‌ருக்கு இப்புதின‌த்திலிருந்து எடுத்துக்கொள்ள‌/நினைவூட்டிக்கொள்ள‌ அதிக‌ம் எதுவுமில்லையென‌த்தான் சொல்ல‌ வேண்டியிருக்கிற‌து.

குறிப்பு: இப்புதின‌த்தின் ப‌டைப்பாளியான‌ வாசுகி க‌ணேசான‌ந்த‌ன், 70க‌ளில் அமெரிக்காவுக்கு குடிபெய‌ர்ந்த‌ ஈழ‌த்துப் பெற்றோருக்குப் பிற‌ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர். ப‌ல்வேறு ப‌த்திரிகைக‌ள்/ச‌ஞ்சிகைக‌ளுக்கு க‌ட்டுரைக‌ள்/செய்திக‌ள் எழுதிக் கொடுக்கும் ஒரு ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருக்கும் இவ‌ர் த‌ற்ச‌ம‌ய‌ம் நியூயோர்க்கில் வ‌சிக்கின்றார்.

(வைக‌றைக்காய் எழுதிய‌து...)

ப‌ட‌ங்க‌ள்: 1 & 2

யாமம்

Sunday, June 08, 2008

-எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை முன்வைத்து-

அவிழ்க்க‌ முடியாத‌ புதிர்க‌ளும், சிக்க‌ல்க‌ளும் நிறைந்த‌ ம‌ர்ம‌ங்க‌ள் பெருகும் வெளியாக‌த்தான் ஒவ்வொருவ‌ரின் வாழ்க்கையும் இருக்கின்ற‌து. வாழ்த‌ல்/வாழ்க்கையின் அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருக்குமென‌ சிந்திக்க‌த்தொட‌ங்கி முகிழ்ந்த‌ இருத்த‌லிய‌மும், த‌ன‌க்கான‌ புத‌ர் அடுக்குக‌ளில் சிக்கிக்கொண்டு இன்ன‌மும் கேள்வியை ஆழ‌மாக்கிய‌தே த‌விர‌ தெளிவான ப‌தில்களைக்காணாது த‌விர்த்துக்கொண்டுதான் இருக்கின்ற‌து. உல‌கின் 'எல்லாப் பிர‌ச்சினைக‌ளும் தீர்ந்தாலும்' என்றுமே இருக்க‌க்கூடிய‌ பிர‌ச்சினையாக‌ இருத்த‌லிய‌ம் குறித்த‌ தேட‌ல்க‌ள் ஊற்றைப்போல‌ பெருகிக் கொண்டிருக்கும்போலத்தான் தோன்றுகின்ற‌து.

வெவ்வேறுப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் சில‌ரின் வாழ்வையும் அவ‌ர்க‌ளின் திசை மாறும் விருப்புக்க‌ளையும்/குணாதிச‌யங்க‌ளையும் பின் தொட‌ர்ந்த‌ப‌டி இருக்கின்ற‌து யாம‌ம் நாவ‌ல். யாம‌ம் என்கின்ற‌ அத்த‌ரின் ம‌ண‌மும், இர‌வும் இந்நாவ‌லில் வ‌ரும் அனைத்து மாந்த‌ர்க‌ளுக்குள்ளும் க‌சிந்த‌ப‌டியிருக்கின்ற‌ன. சதாசிவ‌ம் ப‌ண்டார‌ம் நாயொன்றின் பின் அலைவ‌து நேர‌டிச் ச‌ம்ப‌வ‌மாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்டாலும், உண்மையில் இப்புதின‌த்தில் உள்ள‌ எல்லாப் பாத்திர‌ங்க‌ளும் ஏதோ ஒன்றை உருவ‌கித்து அதைத் தேடி ‍-நாயின் பின்னால் ப‌ண்டார‌ம் அலைவ‌துபோல‌த்தான்‍- வாழ்வு முழுதும் அலைந்து கொண்டிருக்கின்றார்க‌ள். ச‌தாசிவ‌ம் ப‌ண்டார‌த்தின் ம‌ன‌து அடிக்க‌டி அலை பாய்ந்தாலும், நாயின் பின்னால் ம‌ட்டுமே பின் தொட‌ர்வ‌து என்ப‌தில் தெளிவாக‌ ஒவ்வொருபொழுதிலும் இருப்ப‌துபோல‌, இந்நாவ‌லின் பிற‌ மாந்த‌ர்க‌ளால் முடிவ‌தில்லை. ஆத‌லால் அவ‌ர்க‌ள் எத‌ற்காக‌வோ தொட‌ங்கும் த‌ம் ப‌ய‌ண‌ங்க‌ளைத் திசை திருப்ப‌ வேண்டிய‌தாகிப் போகின்ற‌து; அவ‌ல‌ங்க‌ளுக்குள்ளும், துரோக‌ங்க‌ளுக்குள்ளும், க‌ண்ணீருக்குள்ளும் சிக்கி மீள‌முடியாத‌ புதிர்களின் சுழ‌ல்களுக்குள் அலைக்க‌ழிந்தபடியிருக்கின்றார்கள்.

அப்துல் க‌ரீம் ரோஜாவின் இத‌ழ்களைக் காய்ச்சி வ‌டிக்கும் அத்த‌ருக்கு வெள்ளைக்கார‌ர்க‌ள் முத‌ல் உள்ளூர்வாசிக‌ள்வ‌ரை வாடிக்கையாள‌ராக‌ இருக்கின்றார்க‌ள். த‌லைமுறை த‌லைமுறையாக‌ ஆண் ச‌ந்த‌திக‌ளால் கைமாறிக்கொண்டிருக்கும் அத்த‌ர் செய்யும் தொழில் இர‌க‌சிய‌ம் அப்துல் க‌ரீமிற்கு ஆண் ச‌ந்த‌தி இல்லாத‌தோடு அழிந்தும் போய்விடுகின்ற‌து. அத்த‌ரை உட‌லில் பூசிய‌வுட‌ன் உட‌ல் ஒரு விநோத‌மான‌ நிலையை அடையவும்செய்கின்றது. காம‌த்தின் அரும்புக‌ள் ரோஜாவின் இத‌ழ்க‌ளைப் போல‌ மேனியெங்கும் விரிய‌த்தொட‌ங்கிவிடுகின்ற‌து. அத்த‌ரின் ந‌றும‌ண‌ம் உட‌ல்க‌ளை ஒரு கொண்டாட்ட‌ ம‌னோநிலைக்கு கொண்டு வ‌ந்து ம‌ர்மம் நிறைந்த முடிவுறாத‌ ஆட்ட‌ங்க‌ளை கிளர்ச்சியுடன் ஆடச்செய்கின்றது.

மூன்று ம‌னைவிக‌ளிலிருந்தும்..., அத்த‌ரின் துணையிருந்தும் கூட‌..., அப்துல் க‌ரீமால் தன‌க்குப் பிற‌கு ஒரு ஆண் ச‌ந்த‌தியை உருவாக்க‌ முடியாது போகின்ற‌து. அதுவே க‌வ‌லையாக‌வும் அலுப்பாக‌வும் மாற‌ த‌ன‌து ம‌னைவிக‌ளின் மீது க‌விழ‌, வெளியாள் ஒருவ‌ரால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் குதிரைக‌ளை வைத்து ஆடும் சூதாட்ட‌த்தில் த‌ன்னைக் க‌ரைத்துக்கொள்கின்றார். எல்லா எண்ண‌ங்க‌ளுமே ஒரு க‌ட்ட‌த்தில் குதிரைக‌ளாக‌வும், சூதாட்டமாக‌வும் மாறிப்போகையில் க‌ட‌ன் நிறைந்து க‌ரீம், வீட்டில் ஒருவ‌ருக்கும் தெரியாம‌ல் ஒருநாள் காணாம‌ற்போய்விடுகின்றார். அதனால் செல்வ‌ச் செழிப்பிலிருந்த‌ மூன்று பெண்களுக்கும் த‌ம‌க்கான‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளோடு த‌ங்க‌ளைத் தாங்க‌ளே பார்க்க‌ வேண்டியிருக்கின்ற‌து. சாம்பிராணித் தூள் செய்கின்றார்க‌ள், மீன் விற்கின்றார்க‌ள், கொல‌ரா வ‌ந்து க‌ரீமின் மூத்த‌ ம‌னைவி ர‌ஹ்மானியை காவுகொள்ள‌, உப்பு அக‌ழ‌ நெடுந்தொலைவுக்கு உப்ப‌ள‌த்துக்கும் இப்பெண்க‌ள் ப‌ய‌ணிக்க‌வும் செய்கின்றார்க‌ள். க‌ரீம் என்ற‌ ஒருவ‌ரின் வாழ்வுக்காய் ஓரிட‌த்தில் இணையும் இப்பெண்க‌ள் தாங்க‌ள் ப‌க‌ல்வேளைக‌ளில் ஆடுகின்ற‌ சோழியாட்ட‌த்தின் காய்க‌ளைப் போல‌ பின் திசைக்கொன்றாய் சித‌றிப்போகின்றார்க‌ள்.

ம‌ற்றொரு திசையில், ப‌த்ர‌கிரி, திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் என்ற‌ ச‌கோத‌ர‌ர்க‌ளைச் சுற்றிக் க‌தை ந‌க‌ர்கின்ற‌து. த‌ம‌து இளைய‌வ‌ய‌தில் த‌ம் தாயை ப‌றிகொடுத்த‌ இச்ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ங்கைச் சித்தியின் மூல‌ம் வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். ப‌த்ரகிரி, இந்தியாவில் முத‌ன் முத‌லில் நிலஅள‌வை அறிமுக‌ப்ப‌டுத்திய‌ லாம்ட‌ன் குழுவில் சேர்ந்திய‌ங்க‌, க‌ணித‌த்தில் ந‌ன்கு தேர்ச்சி பெற்று விள‌ங்கும் திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் இல‌ண‌ட‌னுக்கு மேற்ப‌டிப்புக்காய் ப‌ய‌ணிக்கிறார். அக்கால‌ப் ப‌குதியில் த‌ன‌து ம‌னைவி தைய‌ல்நாய‌கியை அண்ண‌ன் வீட்டில் விட்டுவிட்டு திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் க‌ப்ப‌லேறுகின்றார். தொட‌க்க‌த்தில் மிக‌ அந்நியோன்னிய‌மாக‌ ப‌த்ர‌கிரியின் ம‌னைவி விசாலாட்சியும், தைய‌ல்நாய‌கியும் இருந்தாலும் -ப‌த்ர‌கிரிக்கும், விசாலாட்சிக்கும் இடையில் உட‌லுற‌வு சார்ந்த‌ புது உற‌வு முகிழ்கையில்- வெறுப்பு அவ‌ர்க‌ளுக்கிடையில் ஒரு அழையா விருந்தாளியாக‌ வ‌ந்துவிடுகின்ற‌து. ஒரு குடிகார‌னாக‌, சுக‌போகியாக‌ இல‌ண்ட‌னுக்குப் போகும்வழியில் க‌ப்ப‌லில் திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் ச‌ந்திக்கின்ற‌ ச‌ற்குண‌ம் கால‌ப்போக்கில் விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளுக்காய் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு, இறுதியில் ஜெயிலுக்குள் அடைப‌டுகின்றான். அதேவேளை இல‌ண‌ட‌ன் த‌ன‌க்குரிய‌ ந‌க‌ர‌ல்ல‌வெனத் தொடக்கத்தில் நினைக்கும் திருச்சிற்ற‌ம்ப‌ல‌ம் பின்னர் இல‌ண்ட‌ன் சீமாட்டி உட்ப‌ட்ட‌ ப‌டித்த‌/செல்வ‌ந்த‌ வ‌ர்க்க‌த்தின‌ரிடையே த‌ன்னையும் அவ‌ர்க‌ளில் ஒருவ‌னாக‌ மாற்ற‌ முய‌ற்சிக்கின்றான்.


ப‌த்ர‌கிரிக்கும், அவ‌ர‌து த‌ம்பியின் ம‌னைவியான‌ தைய‌ல்நாய‌கிக்கும் இருக்கும் 'உற‌வு' தெரிந்து, ப‌த்ர‌கிரியின் ம‌னைவி பத்ரகிரியைக் கைவிட்டுச் சொந்த‌ ஊருக்குத் திரும்புகின்றார். ப‌த்ரகிரியால் தைய‌ல்நாய‌கிக்குப் பிற‌க்கும் குழ‌ந்தையும் சில‌ மாத‌ங்க‌ளில் இற‌ந்துவிட‌, தைய‌ல்நாய‌கி உள‌ச்சிதைவுக்கும் ஆளாகின்றார். இல‌ண்டனிலிருந்து திரும்பி வ‌ரும் திருச்சிற்ற‌ம்பல‌ம் ந‌ட‌ந்த‌வையெல்லாம் அறிந்து அடுத்து என்ன‌ செய்வ‌தென‌த் திகைக்கிறார். இவ்வாறாக‌ அவ‌ர‌வர் நினைத்த‌ற்கு மாறாக‌ வெவ்வேறு திசைகளில் ஒவ்வொருவ‌ரின் வாழ்வும் அமைந்துவிடுகின்ற‌து.

இன்னொரு திசையில் கிருஷ்ண‌ப்ப க‌ரையாள‌ரையும், எலிஸ‌பெத் என்ற‌ வெள்ளைக்கார‌ப் பெண்ம‌ணியையும் சுற்றிக் க‌தை ந‌க‌ர்கின்ற‌து. பெருஞ்சொத்திருக்கும் கிருஷ்ண‌ப்ப‌ க‌ரையாள‌ர் த‌ன‌து உற‌வு முறை உள்ள‌ ஒருவ‌ரோடான‌ சொத்துத் த‌க‌றாரொன்றில் அலைவ‌தோடு நாவ‌லில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். சிறுவ‌ய‌திலேயே பெற்றோரை இழ‌ந்து த‌விக்கும் எஸிச‌பெத் வேலைக்காக‌ இந்தியா அனுப்ப‌ப்ப‌டுகையில் ப‌தின்ம‌வ‌ய‌திலேயே பாலிய‌ல் வ‌ன்முறைக்குள்ளாகி பின்னாட்க‌ளில் பாலியல் தொழிலாளியாகின்றார். எலிஸ‌பெத்தோடு த‌ன‌க்குச் சொந்த‌மான‌ ம‌லை வீட்டில் நாட்க‌ளைக் க‌ழிக்கும் கிருஸ்ண‌ப்ப‌ர், காட்டின் அழ‌கில் த‌ன்னைத் தொலைத்து இனிசொத்துத் த‌க‌ராறு வேண்டாமென‌ உறவுக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ம் செய்கின்றார். எலிஸ‌பெத்துக்கும் த‌ன‌க்கு மிச்ச‌மாக‌விருக்கும் ம‌லைவீட்டையும் சூழவிருக்கும் நில‌ப்ப‌ர‌ப்பையும் கிருஸ்ண‌ப்ப‌ர் எழுதிக்கொடுக்கின்றார். அந்த‌ ம‌லைக‌ளில் தேயிலைச் செடியை அறிமுக‌ப்ப‌டுத்தி வெள்ளைக்கார‌ர்க‌ள் காட்டின் இய‌ற்கைச் சூழ‌லைச் சிதைத்து த‌ம‌து செல்வ‌த்தைப் பெருக்க‌த் தொட‌ங்குகின்ற‌தான‌ புள்ளியில் அக்க‌தையின்னும் நீளுகின்ற‌து.

இன்னொரு க‌தையில் சித்த‌ர்க‌ள் மீது ஈர்ப்பு வ‌ந்து ஒரு நாயின் பின் தொட‌ர்ந்து செல்லும் ச‌தாசிவ‌ம் என்ற‌ ப‌ண்டார‌ம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். நாயை மாத‌க்க‌ண‌க்கில் பின் தொட‌ர்ந்து போகின்ற‌ பாதையில் ஒரு பெண்ணோடு உற‌வு முகிழ்ந்து அவ‌ளுக்குப் பிள்ளை பிற‌க்கின்ற‌ ச‌ம‌ய‌த்தில், நாய் வேறு இட‌த்துக்கு ந‌க‌ர, பெண்ணையும் பிற‌க்க‌ப்போகும் குழ‌ந்தையையும் கைவிட்டு ச‌தாசிவ‌ம் ப‌ண்டார‌ம் ந‌ட‌க்க‌த்தொட‌ங்குகின்றார். இறுதியில் ப‌ட்டின‌த்தார் ச‌மாதிய‌டைந்த‌ இட‌த்தில், த‌ன்னையும் இறுக்க‌ப்பூட்டி நீண்ட‌நாட்க‌ளாய் உள்ளேயிருந்து, ஒரு நாளில் ஊர்ச் ச‌ன‌ம் க‌த‌வுடைத்துப் பார்க்கும்போது - எல்லாச் சித்த‌ர்க‌ளையும் போல‌- அக‌ல் விள‌க்கை ம‌ட்டும் ஒளிர‌விட்டு‍ காணாமற் போய்விடுகின்றார்.

இவ்வாறு நான்கு வெவ்வேறுப‌ட்ட‌ க‌தைக‌ளில், ப‌ல்வேறு மாந்த‌ர்க‌ளும் உலாவினாலும் இப்புதின‌த்தின் உள்ளே இழைந்துகொண்டிருப்ப‌து வெள்ளைக்கார‌ர்க‌ள் கீழைத்தேய‌ நாடுக‌ளைக் கைப்ப‌ற்றி காலானித்துவ‌ நாடுக‌ளாக்கிய‌து ப‌ற்றிய‌ சார‌மேயாகும். வாச‌னைத் திர‌விய‌ங்க‌ளுக்காய் இந்தியாவிற்கு வ‌ருவ‌தில் ஆர‌ம்பிக்கும் வெள்ளைக்கார‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் த‌ம‌து கிழ‌க்கிந்திய‌க் கொம்ப‌னிக‌ளை விசாலிப்பதும், காலனித்துவ‌ நாடுக‌ளின் வ‌ள‌ங்க‌ளைச் சுர‌ண்டுவ‌தும்/சூறையாடுவ‌தும் என‌ இக்க‌தைக‌ளின் பின்னால் க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாற்றின் அலைக‌ளே அடித்தப‌டியிருக்கின்ற‌ன‌. க‌ட‌லோர‌ மீனவ‌க்குடும்ப‌ங்க‌ளைத் துர‌த்தி த‌ம‌து துறைமுக‌ங்க‌ளை நிர்மாணிப்ப‌தும், ந‌ன்னீர்க்கிண‌றுக‌ளை த‌ம‌க்கு ம‌ட்டும் உரிய‌தாக்கின்ற‌தும், ம‌லைக‌ளில் ப‌ண‌ங்கொழிக்கும் தேயிலை போன்ற‌வ‌ற்றை அறிமுக‌ப்ப‌டுத்துவ‌துமென‌ பிரிடடிஷ் மேலாதிக்க‌ம் விரிவாக‌ இப்புதின‌த்தில் வித‌ந்துரைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அந்த‌வ‌கையில் இந்த‌ப்புதின‌ம் ஒரு புதுவித‌மான‌ வாசிப்பைக் கோருகின்ற‌து என‌லாம். இன்னுஞ்சொல்ல‌ப்போனால் த‌மிழில் இவ்வாறான‌ காலனித்துவ‌ விளைவுக‌ள் குறித்த நாவ‌ல்க‌ள் மிக‌க்குறைவாக‌வே வ‌ந்திருக்கின்ற‌ன‌ என்கின்ற‌போது 'சில‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்' ஆலையில்லாத‌ ஊரில் இலுப்பைப் பூச்ச‌ர்க்க‌ரை போல‌ அள‌வுக்கு மீறி வித‌ந்தோத்துவ‌தில் விய‌ப்பும் இலலைத்தான்.

ஆனால் இப்புதின‌ம் த‌ன்னை ஒரு வித்தியாச‌மான‌ நாவ‌லாக‌ த‌மிழ்ச்சூழலில் முன்வைக்க‌ முடியாத‌ள‌வுக்கு ப‌ல ச‌ரிவுப்புள்ளிக‌ளையும் கொண்டிருக்கின்ற‌து. முக்கிய‌மாய் இந்நாவ‌லின் க‌தைக்க‌ளன் இன்னும் விரிவாக‌ கால‌னித்துவ‌த்தின் கூறுக‌ளை பேசுவ‌த‌ற்கான‌ வெளிக‌ளைக் கொண்டிருக்கும்போது த‌னிம‌னித‌ர்க‌ளின் வாழ்வுப்புள்ளியில் ம‌ட்டும் வ‌ந்து சிக்கிச் சிதைந்துபோகின்ற‌து. வெள்ளைக்கார‌ர்க‌ளும் கால‌னித்துவ‌மும் இப்புதின‌த்தில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்போடும்போது ஒருவித‌ எதிர்ம‌னோநிலையில் 'ம‌ட்டுமே' அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார்க‌ள். உண்மையில் கால‌னித்துவ‌த்தால் எவ‌ருடைய‌ அதிகார‌ங்க‌ளும், செல்வாக்குக‌ளும் இல்லாது போன‌து என்று யோசித்தால் நாம் காலனித்துவ‌த்தால் எதிர்விளைவுக‌ள் 'ம‌ட்டுமே' உண்டான‌தென‌ அறுதியாக‌ச் சொல்ல‌முடியாது. கால‌னித்துவ‌ம் ந‌ம் நாடுக‌ளுக்கு வ‌ர‌முன்ன‌ர் ந‌ம் நாடுக‌ளில் 'எல்லோருடைய‌ வாழ்வும்' செழிப்பாக‌வும் ச‌ம‌த்துவ‌மாக‌வும் இருந்த‌துமில்லை. அப்போதும் ஒரு இருண்ட‌ வாழ்வே பலருக்குத் திணிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. எத்த‌னையோ உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ர்க‌ள் கால‌னித்துவ‌த்தால் ம‌த‌ம் மாறியோ இன்ன‌பிற‌வாலோ 'சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளுக்குரிய‌' ஒரு சில‌ உரிமைக‌ளையாவ‌து பெற‌ முடிந்திருந்த‌து. ஒரு க‌றுப்ப‌னாய், அடிமைப்ப‌ட்டிருக்கும் நாட்டிலிருந்து இங்கிலாந்து செல்லும் சிற்ற‌ம்ப‌ல‌த்தை ஆங்கிலேய‌ ப‌டித்த‌ உய‌ர்ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்வ‌தைப்போல‌, இந்தியாவிலிருந்த‌ பிராம‌ண‌/வேளாள‌ர் உள்ளிட்ட‌ உய‌ர்ச‌மூக‌ங்க‌ள் த‌லித்துக்க‌ளை அவ‌ர்க‌ளின் திற‌மைக்காய் ஏற்றுக்கொண்டிருந்த‌ன‌வா என்றால் ஏமாற்ற‌மான‌ ப‌தில‌க‌ளையே ந‌ம‌து க‌ட‌ந்த‌கால‌ வ‌ர‌லாறு த‌ருகின்ற‌து. கால‌னித்துவ‌த்தால் மிக‌ மோச‌மான‌ விளைவுக‌ளே வ‌ந்த‌து என்று சொல்ல‌பப‌ட்டிருக்கின்ற‌து; தொட‌ர்ந்து க‌ற்பிக்க‌ப்ப‌ட‌வும் செய்கின்ற‌து. ஆனால் இன்றும் பின்-கால‌னித்துவ‌ சூழ்நிலையையே இந்தியா/ஈழ‌ உய‌ர்வ‌ர்க்க‌ங்க‌ள் விரும்பிக்கொண்டிருக்கின்ற‌து ஏன் என்று யோசிக்கும்போது புல‌ப்ப‌டாத‌ ப‌ல‌ 'அர‌சிய‌ல்க‌ள்' ந‌ம‌க்கு விளங்க‌க்கூடும். இவ்வாறான‌ ப‌ல‌ புள்ளிக‌ளை நோக்கி வாச‌க‌ர்க‌ளை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய‌ யாம‌த்தின் க‌தைக்க‌ள‌ன் கால‌னித்துவ‌ததை ஒரு 'தீய‌' ச‌க்தியாக‌ அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தோடு ம‌ட்டும் நின்றுவிடுவ‌தில் வீழ்ச்சியையும் அடைய‌த் தொட‌ங்கிவிடுகின்ற‌து (கால‌னித்துவ‌ கால‌த்தில், பிற‌கு யார் உட‌னேயே கால‌னித்துவ‌வாதிக‌ளோடு குழைந்தும் கும்பிட்டும் ப‌தவிக‌ளை வாங்கிக்கொண்டார்க‌ள் என்ப‌தையும் யோசித்தும் பார்க்க‌லாம்).

இப்புதின‌த்தின் இன்னொரு ப‌ல‌வீன‌ம் என்றால், அது காம‌த்தைப்ப‌ற்றி பேச‌வேண்டிய‌ பொழுதுக‌ளிலெல்லாம் பேசாது ஒன்றிர‌ண்டு வார்த்தைக‌ளோடு த‌ப்பியோடுவ‌து. க‌தாமாந்த‌ர்க‌ளிடையே காம‌ம் பிரவாக‌ரிக்கும் எல்லாப்பொழுதுக‌ளிலும் விரிவாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ அவ‌சிய‌மில்லை; ஆனால் அவை ஒருபொழுதில் கூட‌ விரிவாக‌ப் பேச‌ப்ப‌ட்டு வாசிப்ப‌வ‌ரை அந்த‌ப்புள்ளிக்குள் இழுத்துச் செல்ல‌வில்லை என்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டியிருக்கின்ற‌து. முக்கிய‌மாய் ப‌த்ர‌கிரிக்கும் அவ‌ன‌து தம்பி ம‌னைவுக்குமான‌ உட‌லுற‌வு முகிழ்வ‌தற்குக் கூட‌ 'குறிப்பிடும்ப‌டியான‌' கார‌ண‌ங்க‌ள் நாவ‌லில் இல்லை. வாசிப்ப‌வ‌ருக்கு எங்கேனும் ஒருவீட்டில் இப்ப‌டி அண்ண‌ன் ‍- த‌ம்பி ம‌னைவி சேர்ந்து இருந்தால் உட‌ன‌டியாக‌ உட‌லுற‌வு முகிழ்ந்துவிடுமோ என்ற‌ பொதுமைப்ப‌டுத்திப் பார்க்கின்ற‌ அள‌வுக்குத்தான் அந்த‌ உற‌வு விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து. கால‌ங்கால‌மாய் த‌ன‌க்கான‌ காம‌த்தை அட‌க்கிவைக்க‌ப்ப‌ட்ட‌ பெண், ப‌த்ர‌கிரி குழ‌ம்பும்போது கூட‌, 'த‌ம்பி வ‌ரும்வ‌ரைதானே நீ என்னோடு ப‌டுத்து எழும்பு' என்கின்ற‌ மாதிரியான‌ தெளிந்த‌ குரலில்தான் பேசுகின்றாள் (கால‌னித்துவ‌ கால‌ம் பெண்க‌ளின் காம‌த்தை வெளிப்ப‌டையாக‌ப் பேச‌விட்டிருக்கின்றதென்றால் ச‌ந்தோச‌ந்தான்). இங்கே கூட‌ இந்த‌ உற‌வு குறித்து ப‌த்ரகிரிக்குத்தான் அதிக‌ குழ‌ப்ப‌ம். தைய‌ல்நாய‌கி எவ்வித‌ குழ‌ப்ப‌மில்லாது இருக்கின்றாள். இறுதியில் கூட‌ தைய‌ல்நாய‌கியின் குழ‌ந்தை இற‌ந்துபோவ‌தும், அவ‌ள் உளச்சிதைவுக்கு ஆளாவ‌தும் கூட‌, அவ‌ள் செய்த‌ 'பாவ‌ங்க‌ளுக்கு' கிடைக்கும் ப‌ல‌ன்க‌ள்தான் என‌த்தான் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. ப‌த்ர‌கிரி ஆணாக‌விருப்ப‌தால் அனைத்துப் பாவ‌ங்க‌ளிலிருந்தும் விமோச‌ன‌ம் அளிக்க‌ப்ப‌ட்டு சொந்த‌ ஊருக்கு அனுப்பிவைக்க‌ப்ப‌ட்டு காப்பாற்ற‌ப்ப‌ட்டிருக்கின்றான் என‌வும் வாசிப்புச் செய்யும் சாத்திய‌ம் உண்டு. இந்த‌ இட‌த்திலேயே நாவ‌லுக்குள்ளேயே வைத்து இன்னொரு புள்ளியையும் யோசிக்க‌வேண்டியிருக்கின்ற‌து. தைய‌ல்நாய‌கி உள‌ச்சிதைவுக்கு ஆளாகும்போது பைத்திய‌க்காரியாக்க‌ப்ப‌ட்டு, வைத்திய‌சாலைக்கு அனுப்ப்ப‌டவேண்டுமெனச் சொல்லப்படுகின்றது. அவ‌ள் ஒரு தேவைப்ப‌டாத‌ ஒரு பாத்திர‌மாக‌ நாவ‌லின் பின்ப‌குதியில் வாச‌க‌ர்க‌ள் வாசிக்க‌ப்ப‌டுகின்ற‌மாதிரியான‌ ம‌னோநிலை உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஆனால் ஒரு நாயை முன்னே ஓட‌விட்டு அதை ம‌ட்டும் பின் தொட‌ர்ந்து, ‍த‌ன‌து தாயை மற்றும் உட‌லுற‌வு கொண்ட‌ பெண்ணை /அவ‌ளின் ம‌க‌வை‍ விட்டுச் செல்கின்ற‌ ச‌தாசிவ‌ம் ப‌ண்டாரமாகி ஒரு உய‌ர்நிலைப்ப‌ட்ட‌ 'புனித' ம‌னித‌ராக‌ச் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார். இங்கேதான் ந‌ம‌து ச‌மூக‌ம் அது கொண்டிருக்கும் சிந்த‌னாமுறைக‌ளைப் ப‌ற்றிச் சிந்திக்க‌வேண்டியிருக்கிற‌து. சதாசிவ‌ம் ப‌ண்டார‌ம் நாயை மட்டும் பின் தொட‌ர்ந்து த‌ன‌க்குப் பிடித்ததைச் செய்ய‌ அனும‌திக்கின்ற‌/ஏற்றுக்கொள்கின்ற‌ சமூக‌ம் ஏன் உள‌ச்சிதைவுக்கு உள்ளான‌வ‌ர்க‌ளை/மூளை வ‌ள‌ர்ச்சி குன்றிய‌வ‌ர்க‌ளை/திருந‌ங்கைக‌ளை அவ‌ர்க‌ளின் இய‌ல்புக‌ளோடு ஏற்றுக்கொள்ள‌ ம‌றுக்கின்ற‌தென‌வும் யோசிக்க‌வேண்டியிருக்கின்ற‌து. இப்புதின‌த்தில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே பாத்திர‌ ம‌னோநிலையிலிருக்கும் சதாசிவ‌ம் ப‌ண்டார‌மும், தைய‌ல்நாய‌கியும்(பிற்பகுதியில்) வெவ்வேறு வித‌மாக‌ப்பார்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்றால் ப‌டைப்பாளியாலும் ச‌மூக‌ம் சிந்திக்கும் முறைமையை மீறி சிந்திக்க‌ முடியாதிருக்கின்ற‌தென‌த்தான் எடுக்க‌வேண்டியிருக்கின்ற‌து.

நாவ‌லில் சாப்பிடுவ‌து ப‌ற்றியும், நாயின் பின்னால் அலைந்துதிரிவ‌து ப‌ற்றியும் அலுப்பு வ‌ரும‌ள‌வுக்குத் திருப்ப‌த் திருப்ப‌ விப‌ரிக்கும் ப‌டைப்பாளி காம‌த்தைக் கொஞ்ச‌ வ‌ரிக‌ளில் க‌ட‌ந்துபோவ‌து இன்னும் விய‌ப்பாக‌த்தானிருக்கிற‌து. காம‌ம் குறித்து தின‌மும் பொழுதும் அலைபாய்ந்த‌ப‌டியிருக்கும் கீழைத்தேய‌ ம‌ன‌து ப‌ற்றியும் அது ஒடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் வ‌ன்முறை ப‌ற்றியும் நிறைய‌வே பேச‌வேண்டியிருக்கிற‌து. இங்கேயும் பேச‌வேண்டிய‌தை பேசாம‌ல் போவ‌த‌ன் வீழ்ச்சி தெளிவாக‌த் தெரிகின்ற‌து. ஜெய‌மோக‌ன் போன்ற‌வ‌ர்க‌ளின் ப‌டைப்புகளில் காம‌ம் -அள‌வுக்க‌திக‌மாய்-'ம‌த‌ம்பிடித்த‌லையும் யானையைப் போல‌ எங்கும் அலைகின்ற‌து' என்றால், எஸ்.ராம‌கிருஸ்ண‌னின் யாம‌த்தில் காம‌ம், ஒரு வ‌ற‌ண்டுபோயிருக்கும் நில‌த்தில் சிறுமழை பெய்யும்போது உட‌னேயே அடையாள‌மின்றி உலர்ந்துபோகும் நிலையைப்போல‌ காண்ப‌த‌ற்கு அரிதாக‌த்தான் இருக்கின்ற‌து.

தெரிந்த‌/சொல்ல‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளைச் சொல்வ‌த‌ல்ல‌ ஒரு சிற‌ந்த‌ ப‌டைப்புக்குரிய‌ அடையாள‌ம். அது தெரியாத‌/அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ வரலாற்றின் ‍இருண்ட‌ ப‌க்க‌ங்க‌ளை நோக்கி த‌ன‌து பார்வைக‌ளைத் திருப்பி வாசிப்ப‌வ‌ரை இன்னுமின்னும் அப்ப‌க்க‌ங்க‌ளை நோக்கி இழுத்துச் செல்வ‌தாக‌ வேண்டும். யாம‌த்தில் கால‌னித்துவ‌ கால‌த்தையும், சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் வெளியே எடுத்துவிட்டால் அது ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ 'க‌தைக‌ளை'த்தான் த‌ன்ன‌க‌த்தே கொண்டிருக்கின்ற‌து. இவ்வாறான‌ ப‌ல‌வீன‌ங்க‌ளைத் தாண்டியும், நாவ‌லை அலுப்பின்றி முடியும்வ‌ரை வாசிக்க‌ முடிவ‌த‌ற்கு எஸ்.ராம‌கிருஷ்ண‌ன் என்ற‌ ப‌டைப்பாளிக்குள் இன்னமும் வ‌ற்றிப்போய்விடாத‌ மொழிந‌டை என‌த்தான் சொல்லவேண்டும். ஆனால் அதேவேளை ஏதோ எழுத‌த்தொட‌ங்கிய‌தை வ‌லிந்து எழுதி முடிக்க‌வேண்டும் என்ற‌ நினைப்பில் எழுதிய‌துமாதிரியாக‌ நினைக்க‌த்தோன்றும் ப‌ல‌ ப‌குதிக‌ள் இப்புதினத்தில் வ‌ர‌ச்செய்கின்ற‌ன‌. ஏற்க‌ன‌வே சொல்லப்பட்ட கதையாக/களனாக இருந்தாலும் கூட அதை மீறி அறியாத‌/மறைக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போதே ஒரு ப‌டைப்பு த‌ன‌க்குரிய‌ இட‌த்தை உருவாக்குகின்ற‌து. பிற‌கு வாச‌க‌ர்க‌ள் அதிலிருந்து த‌ம‌க்கான‌ வாசிப்பை நிகழ்த்தும்போது பிரதி பன்முகமான வாசிப்பைக் கோருகின்றது. ஆனால் எஸ்.ராவின் எழுத்துக்க‌ள் மீது மிகுந்த‌ ந‌ம்பிக்கை கொள்ளும் ஒரு வாச‌க‌ர் யாம‌த்தை அவ்வாறான ஒரு நாவ‌லாக‌ அடையாள‌ங்க‌ண்டு கொள்ள‌ மிக‌வும் த‌ய‌ங்குவார் எனத்தான் தோன்றுகின்றது.

புகைப்படங்கள்: www.sramakrishnan.com/gallery.asp

மூன்று கவிதைகள்

Thursday, May 22, 2008

(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிற‌ப்பித‌ழில்- வெளிவந்தவை)

சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு

சிக்கலான ஆட்டமொன்றின்
புதிர்களாகும் நாம்
நிசங்களை
சுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதை
கனவுகளெனப் பெயரிட்டோம்

சரசரவென்று வாழையைப்போல
வளர்ந்த நமது அறிதல்
எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளை
வாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்
பருவமழைநாளில் வடிந்துபோயிற்று

அடியோடு வாழையை இல்லாமலொழிக்க
கீழே வளரும் புகையிலைக்கன்றுகள் விடுவதில்லை
இலைகிழித்து நாருரித்து காற்றின் வசைச்சொல் கேட்டு
நிலைத்திருப்பதன் வேதனையில்
சிறுமீன்குளத்து ஆம்பல்களும் சோர்கின்றன

வோட்டர்பம்ப் இறைக்க
மண்ணெண்ணெய் வாசனை நுகர்ந்து
பாத்திகளில் சேறப்ப
நீரைப்போலச் சுழித்தோடிய சிறுவனுக்கு
குறி ஒரு அடையாளமாவதில்லை

தண்ணென்றிருக்கும்
ஈரப்பலா முலைகளில்
முகம் புதைதிருக்குமென்னிடம்
நீ பிரிந்து போவதற்கான கடைசிவார்த்தைகளை அவிழ்க்கிறாய்
வாசனையற்று உதிர்கின்றன மல்லிகைப்பூக்கள்.

(May 14, 2007)
---------------------------------------
கொழும்பு
(அல்லது A Tale of Hell City)

வந்திறங்கியபோது
எழும்பிய இரண்டு கிபீர்கள்
இது என் நாடல்லவென்ற குரலை
இரைச்சலில் நெரித்துச் செரித்தன
வாசலில்நின்று கப்பம்கேட்டு கடத்திச்செல்லும் சகோதரமுகங்கள்
அந்நியனெனும் அடையாளத்தை
மரணத்தின் மொழியிலென் பயணப்பொதிகளிலெழுதிப்போந்தனர்
இங்கேதான்... இப்படித்தான்... வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
தெருக்களில் குருதிதேடியலையும் வெயில்
வீட்டிற்குள் நுழையாதிருக்கும் ப-த-ட்-ட-த்-து-ட-ன்
சாளரங்களை இறுக்கிச் சாத்துகிறாய்
தாபத்தை வியர்வை கரைத்துக்கொண்டிருந்த நிசப்தப்பெருவெளியில்
நெருங்கிய உதடுகளை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த சுவர்ப்பல்லி
தீராப்பசியுடன் விழுங்கிற்று
'இனந்தெரியாதோரால்' கொல்லப்பட்ட மூவரின் உடலங்களை.

(Oct 03, 2007)
---------------------------------------
வதை

நா பிடுங்கப்பட்டு
வார்த்தைகள் சிதைக்கப்பட்ட நாளில்
மூன்று சிறகுகளுடைய பறவையொன்று
மொழியைக் காவியபடி பறக்கக்கண்டேன்
என்னைப் பிரகடனப்படுத்துவதென்பது
உனதிருத்தலை மறுப்பதல்லவெனும் கதகதப்பான சொற்களை
காற்றின் நாவுகள் ஈவிரக்கமில்லாது விழுங்கிச்செல்கின்றன
எப்போதுமித்தனிமையும் அலட்சியமும்
யாரையோ காயபடுத்திக்கொண்டிருக்க
மொழியைச் சாம்பர்வானத்தில் தூவிச்செல்லும் பறவைமீது
கல்லெறிந்து தம் வன்மத்தைக் கரைத்துக்கொள்கின்றனர்
மூன்றிலொரு சிறகை இலையுதிர்காலவிலையாய்
நீளுமிரவுகளின் மீது உதிர்க்குமென் பிரியபறவையின் செஞ்சொண்டறியும்:
சொற்களோடு இடையறாது போரிட்டுத்தோற்பதை
தனிமையெனப் பெயரிட்டென்னைத் தேற்று'வதை'.

(Oct 23, 2007)

நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்

Thursday, May 01, 2008

சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து சிறுவர் இலக்கியங்களுக்கும் எனது சிறுவயது வாசிப்பில் முக்கிய இடமுண்டு. அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து பொ.ஜங்கரநேசனால் வெளியிடப்பட்ட நங்கூரமும், செங்கை ஆழியான் எனப்படும் செ.குணரத்தினம் ஆசிரியர்களில் ஒருவராய் இருந்த அறிவுக்களஞ்சியமும் நினைவில் வருகின்றன. தொடர்ச்சியாக போர்மேகங்கள் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் வாசிக்கக் கிடைத்திருக்கின்றன என்பது ஒரளவு வியப்புக்குரிய விடயந்தான். பாடசாலையிலும் சில பாடங்களில் முதலிடம் பெறும்போது பரிசளிக்கும் வைபவத்தில் அதிகமாய் சோவியத்து சிறுவர் நூற்களையே பரிசாக வழங்குவார்கள்.. மேலும் எனது சகோதரர்களும் வாசிப்பில் விருப்புடையவர்களாய் இருந்ததால் அவர்களின் சேகரிப்பிலிருந்து எனக்கு இவ்வாறான சஞ்சிகைகள்/புத்தகங்கள் கிடைப்பது இல்குவாகவும் இருந்தது (அப்படி படங்களைப் பார்த்து பார்த்து -ஆங்கிலம் அவ்வளவு பரீட்சயமில்லாது- விளங்கிக்கொள்ளமுயன்ற புத்தகங்கள் ரின்ரின்னுடையவை).

இன்னுஞ் சொல்லப்போனால் போர்ச்சூழலுக்குள் அள்ளுப்பட்டு திரிந்தாலும், போரை நேரடியாக அறிமுகப்படுத்தியது சோவியத்து இலக்கியங்களே என்றுதான் கூறவேண்டும். முழங்காலைத் தாண்டிய நீண்ட அங்கிகளை (coats) அணிந்தபடி நீண்ட துவக்குகளை (ஏகே47) நீட்டியபடி இருக்கும் வீரர்களை முதலில் தரிசித்ததும் சோவியத்து இலக்கியங்களிலேயேதான். கிராமம் கிராமமாய் செஞ்சேனையினர் (Red Army) கால்நடையாகவும், குதிரைகளிலும் அணிவகுத்துப்போகும்போது அவர்களின் பின்னால் போவது மாதிரியும், நாம் மாட்டுப்பட்டுப்போன போரிலிருந்து எங்களை விடுவிக்க எமது போராளிகள் செஞ்சேனை வீரர்களைப்போல அணிவகுத்து வருவார்களெனவும் -முக்கியமாய் இந்திய இராணுவக் காலத்தில்- கனவுகள் கண்டிருக்கின்றேன்.

இவ்வாறான சிறுபராயத்து நினைவுகளை மீண்டும் கிளர்ந்தெழச் செய்தது சரவணனின் ஏழுநிறப்பூ என்ற வலைப்பதிவு. அதன் நீட்சியில், இன்றைய கால சிறுவர்களுக்கு எங்களுக்குக் கிடைத்ததுபோன்று அல்லாது, அவர்கள் வயதுக்குரிய சஞ்சிகைகள்/நூல்கள் மிக அரிதாகக் கிடைக்கின்றன என நண்பரொருவருடன் கவலைப்பட்டுக் கதைத்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணா ஒருவரின் வீட்டுக்குப்போகும்போதெல்லாம், அவர்கள் வீட்டில் நிரம்பியிருக்கும் அற்புதமான வடிவமைப்பிலிருக்கும் ரஷ்ய/உக்ரேனிய சிறுவர் நூற்களைப் பார்க்கும்போது, ரஷ்ய மொழியில் பரீட்சயமுள்ள அவரை, இக்கதைகளை மொழிபெயர்த்துத் தாருங்கள் -எப்போதாவது ஒருகாலத்தில் வெளியிடமுயற்சிக்கலாம்- என்று அடிக்கடி தொந்தரவுபடுத்திக் கொண்டிருப்பேன்.

தமிழில் என் மனதுக்கு மிக நெருக்கமான மொழிநடையைக் கொண்டவரான எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த, அலிஸூம் அற்புத உலகமும் நூலை வாசித்தபோது அதன் எழுத்துநடை வறட்சியாக இருந்தது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பிறகு சிறு சிறுகதைகளை மொழிபெயர்த்து வந்த எஸ்.ராவின் 'கால் முளைத்த கதைகள்' தொகுப்பை, கொழும்பில் அக்காவின் மகளுக்கு வாங்கிக்கொடுத்தபோது அதை முழுமையாக வாசிக்க முடியாமற் போனாலும் -வாசித்தளவில்- அது எனக்குப் பிடித்திருந்தது. ஜெயமோகனின் பனிமனிதன் குறித்து இரண்டு வேறுபட்ட கருத்துக்களைக் கேட்டிருக்கின்றேன். எனினும் நெருங்கிய நண்பரொருவர் ஜெயமோகனை பனிமனிதனில் வாசிக்கத் தொடங்கி வந்த ஆர்வத்தால், ஜெயமோகனின் மற்ற நாவல்களையும் வாசித்து அவரது எழுத்து நடையை தொடர்ந்து வியந்துகொண்டிருப்பவர் என்றபடியால், நல்லதொரு வாசிப்பனுபவத்தை சிறுவர்களுக்கு பனிமனிதன் கொடுக்கக்கூடியது என்றே நம்புகின்றேன். அதுமட்டுமில்லாது நீயும் இப்படி என்னைப் போன்ற வாசிப்புப் புள்ளியிலிருந்து தொடங்கியிருந்தாய் என்றால் ஜெமோவை இந்தளவுக்குத் திட்டிக்கொண்டிருக்கமாட்டாய் என்றும் அந்த நண்பர் கூறுவார். என்ன செய்ய, நான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கியபோது அவரது நாவிற்குள் விஷ்ணு புரண்டு படுக்கத்தொடங்கிய கலிகாலமாயிற்றே!

மேலும் தமிழில் பதிப்பிக்கப்படும் சிறுவர் நூற்களை, இங்கே (புலம்பெயர்ந்த நாட்டில்) பிறந்த சிறுவர்களுக்கு அப்படியே வாசித்துக் காட்டவும் முடியாது. கிழமைக்கு ஒருமுறை -சில மணித்தியாலங்கள்- தமிழ் படிக்கப்போகும் அண்ணாவின் எட்டு வயது மகனுக்கு தமிழைச் சொல்லிக் கொடுககும்போதுதான் தமிழ் எவ்வளவு கடினமான முறையில் கற்பிப்பதற்கு இருக்கின்றது என்று விளங்குகின்றது. எனினும் கிழமைக்கு ஒருமுறை தமிழ் படித்தாலும், அவனுக்கு இருக்கும் ஆர்வத்தால் தமிழை ஒரளவு எழுதவும் வாசிக்கவும் செய்கின்றான் என்பது ஆறுதல் தரும் விடயம். அண்மையில் தெரிதா பற்றிய கட்டுரையை கணனியில் தட்டிக்கொண்டிருந்தபோது, நான் எழுதியவற்றைத் தான் வாசிக்கப்போகின்றேன் எனத் தட்டுத்தடுமாறி ஒரு பந்தியை வாசிக்கத் தொடங்கியிருந்தான். அதைத் கேட்டுக்கொண்டிருந்த அம்மா, 'உனது தமிழ் மானாட மயிலாடவில் நமீதா கதைக்கும் தமிழ் போல இருக்கிறது' என்றார் (அப்படியென்ன நமீதா தமிழ் கதைக்கிறார் என்று மானாட மயிலாடவின் ஒரு எபிசோட் பார்த்தபோது பூஜா நடுவராக வந்திருந்தார் என்பது வேறு விடயம்).

ஈழத்தில் படித்த பாடசாலையில் நூலக வசதி இருந்தாலும், ஓ/எல் வகுப்பு வரும்வரை அதற்குக் கீழேயுள்ள மாணவர்களை அதைப் பயன்படுதத விடமாட்டார்கள் (யாழ்ப்பாணத்துக்காரர்களுக்கு இருக்கும் சொத்துச் சேகரிக்கும் பழக்கம்போல அல்லது வைக்கல் பட்டறை நாய்போல எனவும் இதை வாசிக்கலாம்). அதுமட்டுமில்லை, வகுப்பறையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கூட, புத்தகங்களை வாசிக்க விடமாட்டார்கள். அவ்வாறு வாசிக்கும்போது பின் பக்கத்தால் வந்து உளவறிந்த ஆசிரியர்களிடம் பிடிபட்டு அடிவாங்கிய நாட்கள் நிறையவுண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பாடசாலை சொந்த இடத்தை விட்டு அகதியாய் எங்களோடு அலையத் தொடங்கிவிட்டது. வாசிப்பதற்கு நூலகம் என்ற ஒன்றில்லாதபோது, ஏன் நானே தொடங்கக்கூடாது என்று நடமாடும் நூலகம் ஒன்றை நான் இன்னொரு நண்பனுடன் சேர்ந்து ஆரம்பித்திருந்தேன். பன்னிரெண்டு பதின்மூன்று வயதிற்குள் எனக்கு கொமிக்ஸ் புத்தகங்கள் மீதிருந்த ஆர்வம் போய்விட்டிருந்தது. எனவே என்னிடமிருக்கும் கொமிக்ஸ் புத்தகங்களை விற்றுவிட்டு அதில் வரும் காசைக்கொண்டு அறிவுக்களஞ்சியம், நங்கூரம், தளிர் (இந்தியாவிலிருந்து வந்ததென நினைக்கிறேன்) போன்ற சஞ்சிகைகளையும் பிற நூற்களையும் வாங்கத் தொடங்கினேன். நூலகத்திற்கு அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்று கூட பெயர் வைத்திருந்தேன்.

பழைய கொமிக்ஸ் புத்தகங்களை தனக்குரியதாக வைத்திருக்க விரும்பிய நண்பனொருவன் ஆர்வத்தில் நிறைய வாங்கி, பின் பணவசதியில்லாததால் முழுப்பணத்தைத் தரவுமிலலை. அவனுக்குத் திருப்பித் தர பண்ம் இல்லையென்பதை நேரடியாகச் சொல்லாமல் அவன், நாங்கள் பணத்தை நிலத்தில் புதைத்து வைத்திருக்கின்றோம் தோண்டியெடுத்தவுடன் திரும்பித் தருகின்றேன் என்று காரணம் சொன்னதை உண்மைதானென அந்தப்பொழுதில் நமபியதை நினைக்க இப்போது சிரிப்பாக இருக்கிறது. எனினும் அப்படியும் மனிதர்கள் யாழில் இருந்தார்கள் என்பதைப் பின்னாட்களில் அறிந்திருக்கின்றேன். யாழில் 95ல் நிகழ்ந்த இடப்பெயர்வின்போது தங்களில் பலர் நகை/பணம் என்பவற்றை தங்கள் வளவில் புதைத்துவிட்டு வந்திருந்தோம் என்று நண்பர்கள் இஙகத்தைய வளாக வாழ்வில் சொல்லியிருக்கின்றார்கள். நல்லவேளை நாங்கள் இடம்பெயர்ந்தபோது அதைச் செய்யவில்லை. எங்களிடம் பணமும் நகையும், எங்கள் வீட்டு வளவை விட அளவுக்கதிகமாய் இருந்ததால் புதைக்க இடங்காணாது என்றுதான் எங்களோடே எடுத்து வந்திருந்தோம்.

எமது நடமாடும் நூலகத்திற்கு நிதித்தேவையை நிவர்த்தி செய்வற்காய் இரண்டு விடயங்களைச் செய்திருந்தோம். ஒன்று மாதந்தோறும் பொது அறிவுப்போட்டி நடத்துவது. ஒவ்வொரு வினாக்கொத்துக்கும் (question paper) இரண்டு ரூபாய் அறவிடுவது. அதேபோன்று புத்தகங்கள் திருப்பித் தருவது தாமதமானால் தாமதக் கட்டணம் என்று ஒன்றை வசூலிப்பது. புத்தக வாடகைக்கு இரண்டு ரூபாய் என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ரூபாய் என்று கந்துவட்டிக்காரனே திகைக்கும்படி கட்டணம் அறவிட்டிருந்தோம். காலம் பிந்திய புத்தகங்களோடு எங்களுக்கு பிடித்த பெண்கள் சிரித்தபடி நின்றாற்கூட, கட்டணம் வசூலிப்பதில் ஒருபோதும் பின்னின்றதில்லை (பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற சொல்லாடலை நாங்கள் இந்த விடயத்தில் தவறென்றுதான் நிரூபித்திருக்கின்றோம் போலும்). நான் யாழில் இருந்தவரை இந்த நடமாடும் நூலகம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள இயங்கியிருந்தது. பிறகு மற்ற நண்பர்கள் அக்கறை காட்டவில்லை என்பதைவிட, பின்னாளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எதிர்ப்பாலினரை அறிந்துகொள்வதற்கு, அதிக நேரம் வேண்டியிருந்ததால் செயலிழந்துபோயிருக்கலாம் எனத்தான் தோன்றுகின்றது.


................
அண்மைய நளினி - பிரியங்கா சந்திப்புப் பற்றி பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமேயில்லை. விகடன், குமுதம் போன்ற சனங்களுக்குத் தீனிபோட்டு தமது வணிகத்தைப் பெருக்கிக்கொள்ளும் சஞ்சிகைகள் பற்றிச் சொல்லத்தேவையேயில்லை. விகடனின் முகப்பில் வந்த தலைப்பே, இப்படித்தான் 'நளினி....துரோகி நீ : கனல் கக்கும் கணவர் முருகன்.' சரி தலைப்பு இப்படிப் போட்டிருக்கின்றார்களே, முருகனையோ நளினியையோ நேரடியாகச் சநதித்திருக்கின்றார்கள் போலும் என்று உள்ளே தேடினால் அப்படி எதுவுமேயில்லை. ஏதோ சிறைச்சாலைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை வைத்து, முருகன் நேரடியாகச் சொன்னதாய் எழுதுவதைப் பத்திரிகா தர்மம் என்று நியாயப்படுத்துபவர்களைக் கூப்பிட்டு -உங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களாயிருப்பின் இப்படி எழுதுவீர்களா- என்று கோபத்துடன் கேட்கத்தோன்றுகின்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களாக சிறைக்குள்ளிருப்பவர்களின் உளவியல் குறித்த எந்தக் கரிசனமுமில்லாது இவ்வாறு எழுதும் அரைகுறைகளை வேறு என்ன தான் செய்வது? இதில் நகைச்சுவை என்னவென்றால் அதே வாரம் வந்த குமுதத்தில் நளினியின் பேட்டி வருகின்றது. அதில் இது வடிகட்டின பொய் என்றும், முருகனோடு உறவு சுமுகமாய் இருப்பதாகவும். முருகன் இச்சந்திப்புக்காய் நன்றி சொல்லி பிரியங்காவுக்கு கடிதம் எழுதியதாகவும் நளினி சொல்கின்றார். ஆக, முன்னட்டையில் -சம்பந்தப்பட்ட முருகனோ நளினியோ நேரடியாகச் சொல்லாமல்- 'நளினி....துரோகி நீ' எனப் பிரசுரித்த விகடன் இப்போது என்ன செய்யப்போகிறது?

நளினி - பிரியங்கா சந்திப்புப் பற்றி சாரு நிவேதிதா
நல்லதொரு கட்டுரை எழுதியுள்ளார். சாருவோடோ, இரவிக்குமாராடோ முரண்படுவதற்கு எத்தனையோ புள்ளிகள் இருந்தாலும், இவ்வாறான விடயங்களில் சாருவோ, இரவிக்குமாரோ வேறு சிலரை மாதிரி அபத்தமாய் உளறிக்கொண்டிருக்கமாட்டார்கள் என்பது அவர்களைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.

'பரிக்ஷா' ஞாநிதான் இன்னுந் திருந்துகின்றபாடில்லை. சுபவீக்கு எழுப்பிய கேள்விகளுக்கு அதி அசுரன் போன்றவர்கள் கொடுத்த பதிலடிக்கு மவுனம் சாதித்துக்கொண்டு அடுத்த வேலைக்கு/வேளைக்கு நகரும் ஞாநிகளுக்கு, இப்போது ஏன் ஜெயவர்த்தனாவைக் கொல்லாது ராஜீவ்வைக் கொன்றார்கள் என்று அதிபுத்திசாலித்தனத்தமான கேள்வி ஞானம் வருகின்றது ('ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு கொலை முயற்சி கூட புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக நான் எங்கும் படித்ததில்லை (குமுதம்: ப 140)).

ஞாநி போன்றவர்களின் முக்கிய பிரச்சினையே ஒன்றைப் பேசும்போது மற்றதைப் முன்னிறுத்திப் பேசுவது என்பதே. சுபவீ பிறதோழர்களோடு சேர்ந்து சிங்கள இயக்குநனரைத் தாக்கியிருந்தால் அது குறித்துப் பேசவேண்டுமே தவிர, ஏன் நீ அதைத் செய்யவில்லை. அதைச் செய்தால்தான் இதைச் செய்யலாம் என்பது மாதிரியான 'அறிவுஜீவி'க்கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் நாம் சமூகத்தில் எந்த விடயத்துக்கும் எதிர்வினை செய்யமுடியாது (சிங்கள இயக்குநரைத் தாக்கியது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் குறிப்பிட்டுவிடுகின்றேன்). இப்படி கேட்டுக்கொண்டிருப்பதற்குத்தான் அதி அசுரன்
பலமான அடிபோட்டிருந்தார்...

தீண்டாமை என்பது இரட்டை டம்ளரில் மட்டுமல்ல. கோவிலிலும் இருக்கிறதல்லவா? இந்து மதத்தில், சாஸ்திரங்களில், பார்ப்பனர்களிடத்தில் ஒட்டு மொத்தமாக இருக்கிறதல்லவா? இவற்றை எல்லாம் ஒழிக்கச் சொல்ல வேண்டியதுதானே?

ஞானி அவர்களே நீங்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டுமென்றால், துசாரா பெய்ரீசை தாக்கிய சுபவீ, சாதிவெறிக்கு அடையாளமான பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பாரா? சங்கர மடத்திற்கு வெடிகுண்டு வைப்பாரா? சங்கராச் சாரியை வெட்டிக் கூறுபோடுவாரா? மனு நீதி நூலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பாரா? இராமயணத்தைச் வீட்டு வீட்டுக்குச் கொடுத்து செருப்பால் அடிக்கச் செய்வாரா?

இப்படி எல்லாம் ஒரு நாளும் ஞாநி யாரைப் பார்த்தும் கேட்டதில்லையே ஏன்? இரட்டைக்குவளை உடைப்பு என்ற தீண்டாமையோடு மட்டும் மோதச் சொல்கிறீர்களே, தீண்டாமைகளுக்கு அடிப்படையான சாதியோடும், மதத் தோடும், மதத் தலைர்களோடும், கடவுளோடும் போராடச் சொல்லாதது ஏன்?

இப்போது ஞாநி தினமும் பொழுதும் கருணாநிதியைச் சொறிந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, நாங்களும், ஞாநி இந்தந்த விடயங்கள் இன்னும் தீவிரமாக இருக்கின்றன, எனவே அவற்றைப் பேசிவிட்டு வந்தால்தான் உங்களுக்கு கருணாநிதியை விமர்சிக்க உரிமை இருக்கின்றது என்று சொன்னால் பரிக்ஷா ஞாநி காது கொடுத்துக் கேட்பாரா? எங்கே இடங்கிடைக்கிறதோ அங்கே தான் சொன்ன/கடைப்பிடித்த கொள்கைகளை கைகழுவிவிட்டு, உள்நுழையும் நுட்பந்தெரிந்த ஞாநியிடம் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.

ஒரு கொலையை, பழிக்குப் பழி வாங்கலைக் கண்டிக்கலாமே தவிர, ஏன் ஜெயவர்த்தனாவைக் கொல்லவிலலை என்று கேட்பது, அவராலும் 'இந்தியத் தேசியப் பெருமிதங்களிலிருந்து' இன்னும் முழுமையாக வெளிவரமுடியவில்லையோ எனத்தான் யோசிக்கவேண்டியிருக்கிறது. இப்போது எனக்கிருக்கும் கேள்வி என்னவென்றால், ஜெயவர்த்தனா கொல்லப்பட்டிருந்தால், ஞாநி ராஜீவின் கொலையை - ராஜீவும் அவரது 'அமைதிப்படையும்' ஈழத்தில் செய்த எல்லா அட்டூழியங்களுக்காய்- அவசியமான ஒரு கொலைதான் என ஏற்றுக்கொண்டிருப்பாரா என்பது? ஆக இப்படித்தான் இவர்களின் நடுநிலைமை அவர்களுக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருக்கிறது. ராஜீவின் கொலையை ஒரு துன்பியலாக மட்டும் எடுத்துக்கொண்டு மட்டும் கவலைப்படமுடியாது எனும் ஞாநிக்குச் ஒன்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு படுகொலை என்றவளவில் ராஜீவின் கொலையை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதே தவிர, ராஜீவின் கொலையை இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதற்கு இருக்கும் காரணத்தை விட, அதை நியாயப்படுத்த -இந்திய இராணுவ காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த என்னைப்போன்றவர்களுக்கு - பத்து மடங்கான காரண்ங்கள் வலிகளுடனும் வாதைகளுடனும் உறைந்து இருக்கின்றன என இறுக்கமான குரலில் சொல்லவேண்டியிருக்கிறது. அதேவேளை முழுக்கட்டுரையை வாசிக்கும்போது இரு தரப்பினரும் பழையவற்றை மறந்து நேசக்கரம் நீட்டவேண்டும் என்ற ஞாநியின் அக்கறையை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் அதை வெளிக்காட்ட இப்படி புத்திசாலித்தனமாய் சிந்திக்கின்றோம் என்று அபத்தமான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே மேலுள்ளவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இந்த வெகுசன ஊடகங்களைப் பற்றிய இன்னொரு குறிப்பையும் சொல்லவேண்டும். அண்மையில் ஷோபாசக்தியிடம் நீங்கள் எப்படி இப்படியான சஞ்சிகைகளுக்கு எல்லாம் நேர்காணல் கொடுக்க்முடிகின்றது அறஞ்சாரந்த விடயமல்லவா என்றரீதியில் யாராலோ (யமுனா ராஜேந்திரனா?), கேள்வி எழுப்பப்பட்டபோது, ஷோபாசக்தி, என்ன செய்வது, என்னுடைய நண்பர்கள் அச் சஞ்சிகைகளில் இருக்கின்றார்கள் அதனாற்றான் அவற்றில் வெளிவந்திருக்கின்றன என்றொரு சப்பைக்காரணத்தைத் தந்திருந்தார். ஷோபாசக்தி எப்போது இந்தியா போகின்றார் வருகின்றார் என்ற விபரத்தை நாம் அறிந்துகொள்ள அவருக்குத் தொலைபேசி அழைத்து பணத்தை விரயமாக்க வேண்டியதில்லை; இந்தியா ரூடே, குமுதம், விகடன் என்பவற்றைப் புரட்டிக்கொண்டிருந்தாலே போதுமானது. இப்போது என்னிடமிருக்கும் கேள்வி என்னவென்றால் 'எதிரிகள்'/'துரோகிகள' எங்கேயும் இருப்பதுபோல, நண்பர்களும் கூட எங்கேயும் இருக்கக்கூடுமல்லவா? நாளை ஷோபாசக்தியின் நண்பர்களில் சிலர் தலித்துக்களை கேவலமாக எழுதுகின்ற சஞ்சிகையிலோ, ஆர்.எஸ்.எஸ் சார்புகள் உள்ள பத்திரிகைகளிலோ இருந்தாலும், ஷோபாசக்தி தனது நேர்காணல் வெளிவரும்போது இதே காரணத்தைத்த்தான் சொல்லித் திரிவாரா என்பது? தமது குருவென அ.மார்க்ஸைக் கைகாட்டுகின்ற (சுகனா ஷோபாசக்தியா அப்படிச் சொன்னது என்று மறந்துவிட்டது) ஷோபாசக்தி, இந்தியா ரூடேயிற்கு பேட்டியோ அல்லது கருத்தோ கூறும்போது, -வெங்கட்சாமிநாதன் விவகாரத்தில்- அ.மார்க்ஸ் மலந்துடைத்து இந்தியா ரூடேக்கு அனுப்பிய காகிதத்தைத் திருப்பவும் அ.மார்க்சின் முகத்திலேயே திருப்பி அடிப்பதற்கு நிகரானது என்றுதான் நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது. பெரியாரைத் தங்களின் வழிகாட்டிகளில் ஒருவராக வரித்துள்ள ஷோபாசக்தி பெரியார்- இராஜாஜி நட்பிலிருந்து, 'நண்பர்களோடு' எநதெந்தப் புள்ளிகளில் உடன்பட்டும் விலகியும் இருப்பது என்பதைக் கற்றுக்கொள்ள முயற்சித்தால் ஷோபாசக்திக்கு நலந்தரும்; மேலும் நல்லதொரு படைப்பாளி என்று ஷோபாசக்தியில் நம்பிக்கை கொள்கின்ற எங்களுக்கும் அது வழிகாட்டும்.

------------------------

பெரியார் பற்றி ஜெயமோகன் கொள்கின்ற காழ்ப்புணர்வும், தேவையில்லாத பயங்குறித்தும் அதிகம் இங்கே சிலாகித்து எழுதவேண்டியதில்லை. பெரியாரை முதன்மையான பாத்திரமாகக் கொண்டு ஜெயமோகன் இன்னும் ஒரு நாவல் எழுதாமல் இருக்கின்றாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியம் தரக்கூடிய ஒருவிடயம். ஜெயமோகன் ஒரு மலையாளி என்று இனத்துவேசத்தோடு எழுகின்ற குரல்களைக்கூட, அப்படி ஜெயமோகனை நிராகரித்தல் மிக அபத்தமானது என்ற புரிதலை என்னைப்போன்றவர்களுக்கு (திண்ணை விவாதக்களத்தில் நான் எழுதியதாய் நினைவு) ஏற்பட்டதே பெரியார் கற்பித்த மத, இன, மொழி, சாதி அபிமானங்களை விட்டுத்தள்ளுகின்ற தன்மையால் என்று சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இப்போது
இந்தப்பதிவில் பெரியார் வன்முறையைத் தூண்டக்கூடியவர் என்ற அபத்தமான ஒரு புள்ளியை ஜெமோ வந்தடைக்கின்றார் (எனக்கு ஈ.வே.ரா அவர்கள் மீதுள்ள முக்கியமான மாற்றுக்கருத்து இரண்டுதான். அவரது எதிர்மறை நோக்கு அழிவுத்தன்மை கொண்டது. அடிப்படையில் தீங்கு விளைவிப்பது. இரண்டு அவர் ஒரு மக்கள்க்கூட்டம் மீது முன்வைத்த வெறுப்பு மிக மிக அபாயகரமானது. எந்நேரமும் வன்முறையாக மாறக்கூடியது. வரலாற்றின் தவறுகளை ஒருபோதும் ஒருவகை வரலாற்றுச் சதிகளாகக் காணலாகாது. அவை வரலாற்றின் போக்கில் பலவேறு காரணிகளால் உருவாகி வருபவை. உலகின் மாபெரும் வன்முறைகள் அனைத்துமே வரலாற்றுச் சதி என்ற பிரச்சாரத்தில் இருந்து தொடங்குபவையே...) பெரியார் பற்றி இங்கே வலைப்பதிவுகளில் நண்பர்கள் எழுதிய எத்தனையோ பதிவுகளில் கூட பெரியார் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரில்லை என்பது பற்றி விரிவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. பார்ப்பனியம் மீது க்றாரான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தபோதும், எங்கேயும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று துவேசக்கருத்துக்களைக் கூறியதாய் நான் வாசித்ததில்லை. ஏன் பெரியாரின் பின் திரண்ட இளைஞர் கூட்டத்தை, பெரியார் விரும்பியிருந்தால் பிராமணர்கள் மீது வன்முறையை பிரயோகிக்க கூடிய கூட்டமாய் மாற்றியிருக்க முடியுந்தானே? உணர்ச்சியும் கோபமும் கொப்பளிக்க பேசிய பெரியார் தன்னை நம்பி வந்தவர்களிடம், அது வன்முறையாக மாற்றக்கூடிய ஆபத்தைத்தரும் என்கின்றபோதும் அவ்வாறு நிகழாது மிகுந்த கவனத்துடன் இருந்திருக்கின்றார் என்றால் பெரியாரின் ஆளுமையைப் பாராட்டவேண்டுமே தவிர ஜெமோ மாதிரி அபத்தமான கணிப்புக்களை/கருதுகோளைக் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இன்று பிற மதத்தினர் மீது வன்மத்துடன், கொலைகளையும், பாலிய்ல் வன்புணர்வுகளையும் செய்துகொண்டிருப்பது பெரியாரிய நண்பர்களல்ல, மாட்டை அடித்துச் சாப்பிடுவதே பாவம் என்று சொல்லிக்கொண்டே மனிதர்களைக் கொன்று குவிக்கின்ற, வன்முறையைப் பயில்விக்கின்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீதும், அதன் தலைவர்கள் மீதுந்தான் ஜெமோ இந்தக் குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கவேண்டும். ஆனால் ஜெமோ அப்படிச் செய்யமாட்டார்; பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கவந்த கடப்பாரை என்ற வகையில்தான் எழுதி இன்புற்றுக்கொண்டிருப்பார். ஆக, இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்று பெரியார் விடயத்திலிருக்கும் ஜெமோவை, நாகர்கோயிலுக்கு அருகில் கன்னியாகுமரியில் உயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவன் தன் ஞான ஒளியைப் பாய்ச்சி உய்விக்கவேண்டுமென நாமும் இறைஞ்சுவோமாக.

அடையாளங்களைப் புறக்கணித்தல்

Friday, March 28, 2008

-M.G.Vassanji யின் The Assassin's Songஜ முன்வைத்து-

1.
நம்பிக்கைகள் சிலதோடு வாழ்பவரை விட, அதீத நம்பிக்கைகள் எவற்றிலும் இல்லாது வாழ்பவரைச் சமூகம் அதிகவேளைகளில் புறக்கணித்துவிடுவதாகவே இருக்கின்றது. அதேபோன்று எந்த மதமும் எமக்குச் சம்மதமில்லை என்பவரையோ அல்லது எல்லா மதங்களும் எமக்கு ஒரே மாதிரியானது என்பவரையோ சமூகம் அவ்வளவு எளிதாய் ஏற்றுக்கொள்வள்வதுமில்லை. 'உனக்குரிய தெரிவை, உனக்கான அடையாளத்தை தெளிவாய் முன் வை' என்றுதான் உலகம் வன்முறையான முறையில் கேட்கின்றது. எமக்கான தெளிவான அடையாளம் என்ற ஒன்றில்லாது எல்லாவற்றோடும் இயைந்தும் முரண்பட்டும் கொண்டிருக்கின்றோம் என்றால் ஏளனப் பார்வையை வீசியபடி மனிதர்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு எந்த மதமும் தமக்குரிய தனித்த அடையாளமில்லையெனவும் (அல்லது எல்லா மதமும் தமக்குச் சம்மதமென) நினைத்து வாழும் சூஃபி மாந்தர்களின் வாழ்வைப் பகிர முனையும் புதினந்தான் எம்.ஜி.வசாஞ்ஜி எழுதிய The Assassin's Song என்ற புதினம்.

இப்புதினத்தின் கதை, ஹசன் என்ற கதை சொல்லியின் மூலமாகச் சொல்லப்படுகின்றது. குஜராத்தில் ஒரு சிறுகிராமத்தில் வளரும் ஹசனின் வாழ்வோடு, அம்மக்களின் வாழ்வியல், கலாசாரம் போன்றவை விபரிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் சமாந்தரமாய் கி.பி 12ம் நூற்றாண்டில் ஒரு நாடோடியாக அலைந்து திரிந்த நூர் பஸால் (Nur Fazal) என்ற சூஃபியின் கதையும் மாறி மாறி அத்தியாயங்களுக்குள் சொல்லப்படுகின்றது. இவ்வாறாக மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து அலைந்து திரிந்து இந்தியாவில் தங்கியிறந்துபோன நூர் பஸால் சூஃபியின் வழித்தோன்றல்களே ஹசன் போன்றவர்களாவார்கள். இஸ்லாமிய மதத்தையோ அல்லது இந்து மதத்தையோ சாராது தமக்குரிய கலாசாரங்களுடன், தனித்த வழிபாட்டு முறைகளுடன் இருக்கும் சூஃபியின் கோயிலுக்கு ஹசனின் தந்தையாரே பொறுப்பாக இருக்கின்றார். பலவேறு இடங்களிலிருந்து மக்கள் தமது நோய, இன்னபிற கஷ்டங்களைத் தீர்க்கும் பொருட்டு ஹசனின் தந்தையாரையும், சூஃபியின் சமாதியையும் நாடி வருகின்றார்கள்.

ஒரு கட்டத்தில் பதின்மவயதிலிருக்கும் ஹசனை, அவரது தந்தையார் தனக்குப்பிறகு கோயிலை வழிநடத்தும் குருவாக (Saheb) அறிவிக்கின்றார். குஜராத்தில் பல்வேறு காலகட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரம் நடந்தபோதும் சூஃபி வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்நகரம் வன்முறையால் பாதிப்படைந்ததில்லை. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹசனின் மாமனார் ஒருவரான ராஜ்கோபால் பாகிஸ்தானுக்குச் சென்று தனது பெயரை இக்பால் என மாற்றி முஸ்லிமாக வாழத்தொடங்குகின்றார். ஹசனின் வளரிளம்பருவத்தில் இந்து - முஸ்லிம்களுக்கிடையில் அவர்கள் இருந்த ஊரில் கலவரக்கொதிப்பு மனோநிலை வெடித்துக்கிளம்பும்போது (அது விரைவில் அணைந்தும்விடுகின்றது), ஹசன், தனது தந்தையிடம் நாம் முஸ்லிம்களா அல்லது இந்துக்களா? எவரைத் தெரிவு செய்யவேண்டும்? என வினாவுகிறார். தந்தையார், நாம் எந்த மதத்திற்கும் உரியவர்களில்லை (அல்லது நாம் எல்லா மதங்களாகவும் இருக்கின்றோம்) என்று தெளிவுபடுத்துகிறார்.

ஊரில் இந்து முன்னணி அமைப்பு, ஒன்று சீன-இந்தியா எல்லை மோதலிற்குப் பின், 'இந்தியத் தேசியத்தை' முன்வைத்து வீரியம் பெறுகின்றது. அந்த இந்து முன்னணியின் தலைவர், தம்மிடம் இந்து கலாசாரம் மற்றும் இந்தியத் தேசியம் குறித்து அறிய, வகுப்புக்களுக்கு ஹசனை அனுப்பக் கேட்கும்போது, ஹசனின் தந்தையாரும் மறுக்காது அனுப்பி வைக்கின்றார். ஆரம்பத்தில் பாடங்களைக் கற்பித்தலாயிருக்கும் இந்து முன்னணியினரின் வகுப்புக்கள், பிறகு தடிகள், கத்திகளுடன் சண்டைப் பயிற்சி வகுப்புக்களாய் மாற்றம் பெறுகின்றன. ஹசனின் நடுப்பெயரில் வரும் முஸ்லிம் பெயரைத் தொடர்து கேலி செய்து வரும் இந்து முன்னணியின் தலைவர், ஒருநாள் பயிற்சி வகுப்பின்போது சண்டையில் ஒரு 'இந்து' மாணவனை ஹசன் வென்றது பிடிக்காது ஹசன் மீது காழ்ப்புக் கொள்ளத் தொடங்குகின்றார்.


இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் ஹசன், தான் நம்பிய சூஃபி வழிபாட்டில் சில அபத்தங்களைக் கண்டுகொள்கின்றார். முக்கியமாய் அவர்களின் கோயில், தந்தையார் என்ற எதுவும் 'பரிசுத்தமானதல்ல' என்ற புரிதல்களை வந்தடைகின்றார். தனது தந்தையும், முடிசூட்டப்பட்ட தனது எதிர்கால 'குரு' பதவியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானிக்கும் ஹசன், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின்பேரில் விண்ணப்பிக்கின்றார். எதிர்பாராத விதமாய் ஹவார்ட் வளாகத்திற்கு ஹசனுக்கு அனுமதியும் கிடைக்கிறது. ஹசன், தகப்பனின் விருப்பையும் மீறி அமெரிக்கா செல்கின்றார்; எனினும் திரும்பி வந்து தானொரு சாகிப்பாய் தனது முன்னோரான சூஃபியின் கோயிலில் பணியாற்றுவேன் என்ற வாக்குறுதியையும் தனது தந்தையிற்கு வழங்குகின்றார்.

அமெரிக்காவின் புதிய சூழலுக்கு தன்னைப் பழக்கப்படுத்துவதற்கு ஹசன் தொடக்ககாலங்களில் மிகவும் கஷடப்படுகின்றார். அதேவேளை எவரது கண்காணிப்புமின்றி தனது இயல்போடு இருக்கவிடும் அமெரிக்கச் சூழல் ஹசனுக்குப் பின்னாட்களில் பிடித்துப்போகின்றது. அவரின் பிற நண்பர்களில் அநேகர் குடியும், பெண் நண்பிகளுமெனத் திரிய, கீழைத்தேச நாடொன்றிலிருந்து வரும் ஹசனுக்கு இவற்றை எவ்வாறு எதிர்கொள்வதென்ற சிக்கல்கள் வருகின்றன. அதேசமயம், தான் தனது கிராமத்திலிருந்து அந்நியப்பட்டு விலகிப்போய்க்கொண்டிருக்கும் அவலமும் ஹசனுக்கு உறைக்கின்றது. இவ்வாறான அல்லாடல்களுக்கிடையில் ஒருநாள், 'தாயிற்குச் சுகமில்லை அவசரமாக வரவும்' என்ற தந்தியோடு ஒரு வழிப்பாதை ரிக்கெட்டும் கூடவே ஏற்பாடு செய்து ஹசனின் தந்தையார் அனுப்புகின்றபோது, இது தன்னை இந்தியாவுக்கு அழைத்து அங்கேயே இருத்தவிரும்பும் அப்பாவின் எண்ணமென்ற யோசனையில் ஹசன் இந்தியாவிற்குப் போவதை நிராகரிக்கின்றார். எனினும் தன் மீது மிகவும் பிரியம் வைத்திருக்கும் அம்மாவிற்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்ற சிந்தனை ஹசனைத் தினமும் அலைக்கழித்தபடி இருக்கின்றது. ஒரு கட்டத்தில் எங்கேயும் (அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ) தன்னை முழுமையாக பொருத்த முடியாத அவதியில் மிகவும் மனவுளைச்சலுக்குள்ளாகி மனநோய் வைத்தியரைப் பார்க்கத் தொடங்கின்றார்.


2.
ஹசன் தனது கலாநிதிப் பட்டத்தை முடிக்கின்றகாலகட்டத்தில் இந்திய-ஆங்கிலேய கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த மார்கியைச் (Marge) சந்திக்கின்றார். பிறகு, அந்தப்பெண்ணையே திருமணஞ்செய்து, அப்பெண்ணின் பெற்றோர்களிலிருக்கும் கனடாவின் வினிபெக் நகரில் கல்லூரி பேராசிரியர் வேலையையும் எடுத்துக்கொண்டு ஹசன் தனது குடும்ப வாழ்வைக் கன்டாவிலேயே தொடங்குகின்றார். தனது திருமண விடயத்தை மட்டும் இந்தியாவிலிருக்கும் பெற்றோருக்குத் தெரிவிக்கும் ஹசன், கொஞ்சம் கொஞ்சமாய்த் தனது இந்தியத் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்கின்றார் (இக்காலகட்டத்தில் ஹசன் என்ற தனது பெயரை கிருஷ்ணா எனவும் மாற்றிக்கொள்கிறார்). ஹசனும் அவரது துணைவியாரும் அவர்களின் ஒரே மகன் மீது அளவற்ற பிரியங்களை வைத்திருக்கின்றார்கள். ஒரு நாள் உதைபந்தாட்டம் ஆடியபின் சாலையை கடக்கும் சந்தர்ப்பத்தில் காரொன்றினால் அடிக்கப்பட்டு அவர்களின் பிரிய மகன் கொல்லப்படுகின்றான். நாம் இவ்வளவு காலமும் சந்தோசமாய் வாழ்ந்தோம் எனினும் எனது குழந்தை இறந்ததன் பிறகு என்னால் இங்கே வாழமுடியாதென ஒரு நாள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு ஹசனின் துணைவியார் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வளவு காலமும் அழகாகவும் மகிழ்வாகவும் இருந்த இல்லற வாழ்வுக்கு தனது மகன் மட்டுமா ஒரே அடித்தளமாய் இருந்தாராவென குடும்ப உறவின் அபத்தம் குறித்து ஹசன் யோசிக்கத் தொடங்குகின்றார். தனது துணைவியார் அவரது -கடந்தகால- பாடசாலை நண்பரொருவனோடு வன்கூவரில் சேர்ந்து வாழ்கின்றார் என பின்னாட்களில் ஹசன் அறிந்துகொண்டாலும், அவர் தொடர்ந்து அதே நகரத்திலே தங்கியபடி, கல்லூரியில் கற்பித்தபடி, தனியாளாக வாழந்துகொண்டிருக்கிறார்.

ஒருநாள் வினிபெக்கில் தற்செயலாக சந்திக்கும் தனது ஊர்க்காரரால் ஹசனுக்கும் அவரது தந்தையிற்குமான உறவு மீண்டும் கடிதம் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகின்றது. தனது தாய் இறந்துவிட்டதை ஹ்சன் அறிகின்றார்; தந்தையும் தனது பேரக்குழந்தை இறந்த துயரைக் ஹசனுடன் பகிர்ந்துகொள்கின்றார். 70களில் இந்தியாவை விட்டு வெளியேறிய ஹசன் 2000 வரை இந்தியாவுக்குத் திரும்பி ஒரு முறைகூட போகாதிருக்கின்றார் என்ற அவலம் அவருக்கு உறைக்கின்றது. ஹசனின் தந்தையாரும் தான் சாக முன்னர் ஒருதடவையாவது ஹசனை மீண்டும் தனக்குப் பார்க்க விருப்பமிருப்பதாய்ச் சொல்கின்றார். இந்த நேரத்திலேயே குஜராத்தில் மீண்டும் -கோத்ரா இரெயினை எரித்ததோடு- கலவரம் மோசமாக நிகழத் தொடங்குகின்றது. அதுகுறித்து இணையம்/தொலைக் காட்சி மூலம் அறிகின்ற ஹசன் இதற்கு முன்னர் வன்முறை தீண்டப்படாத கிராமமாய் இருந்த தனது கிராமம் இந்தமுறையும் தப்பும் என நினைத்துக்கொள்கின்றார். எனினும் நிலைமை தலைகீழாகப் போகின்றது. தமது கோயிலில் அடைக்கலமான மக்களைக் காப்பதன் பொருட்டு உரையாட முன்வரும் ஹசனின் தந்தையை, இந்து வன்முறைக்குழு ஒன்று வெட்டிக்கொல்கின்றது. முஸ்லிமாய் மாறிப்போன ஹசனின் இளைய சகோதரன் மன்சூரை (முஸ்லிமாய் ஆனபின் ஒமர்) கோத்ரா இரெயின் எரிப்பில் ஒரு குற்றவாளியாகப் பொலிஸ் தேடத் தொடங்குகின்றது.

இறுதியில் இந்தியாவுக்கு -30 வருடங்களின் பின் - ஹசன் பயணமாகின்றார். உருக்குலைந்து போன தனது கிராமத்தைக்கண்டு மனம் வெதும்புகின்றார். பொலிஸால் தேடப்படும் தனது சகோதரை இரகசியமாகச் சந்திக்கும் ஹசன், பொலிசிடம் அவரைச் சரணடையும்படி வேண்டுகின்றார். கோத்ரா எரிப்புச் சம்பவத்தில் தான் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்கின்ற மன்சூர், பொலிஸில் சரணடைந்தால், தன்னையும் என்கவுண்டர் முறையில் கோத்ராவில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களைப் போல பொலிஸார் கொன்றுவிடுவார்கள் எனப் பயப்பிடுகின்றார். இறுதியாக மன்சூர் தப்பியோடி பாகிஸ்தானுக்குப் போனதாய்ச் செய்தி ஹசனுக்கு வருகின்றது.

இதற்கிடையில் இதுவரை மறைக்கப்பட்ட நூர் பஸால் பற்றிய உண்மையை ஹசன் அறிந்துகொள்கின்றார் (சூஃபியின் வரலாற்றை அறியும் ஆதிப்பிரதிகள் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே வாசிக்கமுடிகின்றமாதிரி ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது). இன்று ஒரு ஞானியாக மதிக்கப்படும் நூர் பஸால் ஒரு Assassin என்பதை ஹசன் அறிகின்றார் (Nur Fazal the sufi, I concluded, had been an Assassin. Everything I read in the book in my hand seemed to confirm this (p 302)). ஈரானின் மேற்குப் பகுதியில் இஸ்மாயில்ஸ் (assassin) என்றொரு சமூகம் இருந்தது(?) எனவும், அவர்கள் பிற முஸ்லிம்கள் செய்யும் தொழுகையையும், ஷரியா போன்ற மதச்சடங்குகளையும் நிராகரிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் எனவும் ஹசன் அறிந்துகொள்கின்றார். இவ்வாறு assassin சமூகத்தில் பிறந்த நூர் பஸால் இந்தியாவுக்கு வந்து அலைந்து திரிந்து அனுபவங்கள் பெற்று ஒரு ஞானியாகி இந்து அரசன் ஒருவனின் (விஸால் தேவ்) மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார். எனினும் இவரொரு Assassin யாய் இருந்தார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும், மிகுதி அனைவருக்கும் அவர் ஒரு சூஃபி ஞானியே (Pir Bawa).

இனி தனது வாழ்க்கையில் என்ன செய்வது என்று யோசிக்கின்ற ஹசன், இன்னமும் தன்னையொரு சாகிப்பாய் -சூஃபி ஞானியின் வழித்தோன்றலாய்- நினைத்துக்கொள்கின்ற மக்களுக்காய் தனது ஊரிலேயே தங்கிவிடத் தீர்மானிக்கின்றார். சீரழிக்கப்பட்ட சூஃபியின் கோயிலையும், மக்களின் வாழ்வையும் கட்டியெழுப்பப் போவதனான ஹசனின் நம்பிக்கைப்பார்வையினூடாக இப்புதினம் முடிகின்றது.

3.
எம்.ஜி.வசாஞ்ஜி, இப்புதினத்திற்கு பின்னிணைப்பாய் -நூர் பஸால் என்ற பாத்திரம்- கற்பனையே என்றும் ஆனால் மத்திய காலத்தில் முஸ்லிம் ஞானிகள் இந்தியாவுக்கு வந்தது வரலாற்று உண்மையெனவும் குறிப்புகள் கொடுத்திருக்கின்றார். இந்தக் குறிப்புகளை ஒரு புறமாய் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இப்புதினம் இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றை நிராகரித்து வேறொரு பார்வையில் நாம் சிந்தித்துப் பார்க்கும் வெளிகளைத் தருகின்றதென்ற புரிதல்கள் எமக்கு வரக்கூடும். எழுதப்பட்ட வரலாற்றையெல்லாம் கலைத்து மாறி மாறி ஆடிப் பார்க்கும் ஆட்டம் என்பதே ஒரு சுவாரசியமான ஆட்டந்தானே. வரலாற்றை மட்டும் பார்த்துத் தேங்கிவிடாது, நிகழ்காலத்திலும் வந்திறங்குவதால் இந்தப் புதினம் இன்னும் அதிக கவனம் பெறுகின்றது. இன்னும், போகின்றபோக்கில் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டு ஆசிரியர் போகின்றாரே தவிர, இந்து, முஸ்லிம் மக்களைப் பற்றி அதிகம் காழ்ப்புணர்ச்சியின்றி - சார்புநிலை எடுக்காது- எழுதப்பட்டிருப்பது இதமாயிருக்கிறது. இப்புதினத்தில் பலரது பாத்திரங்கள் மர்மம் நிறைந்த வெளிகளாக விடப்பட்டிருக்கின்றன. கோத்ரா கலவரத்தில் ஹசனின் சகோதரர் சம்பந்தப்படவில்லையென்பதை மன்சூரைக் கொண்டே மறுதலிக்கப்படுகின்றதே தவிர, ஆசிரியர் எந்த ஒரு தெளிவான முடிவையும் வாசகரிற்கு கொடுக்காத இடைவெளியாக விடுகின்றார். அதேபோன்று ஹசனின் தகப்பனை வெட்டிக்கொல்கின்ற இந்து முன்னணிக்குழுவினர், சூஃபியின் கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்த -இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடில்லாத- மக்களை என்ன செய்தார்களெனற பகுதியும் பூர்த்திசெய்யப்படாதே இருக்கின்றது. (குஜராத்தில் கலவரம் நடந்தபோது, தாம் இந்துக்கள் என்று சொல்லித் தப்ப முயன்ற முஸ்லிம்களை ஆடைகளை அகற்றி அடையாளம் கண்ட அதிவன்முறையையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்). இந்நாவலை வாசித்து முடிக்கும்போது மத அடையாளங்களோடு இருப்பவரை விட, அவ்வாறு எந்த அடையாளங்களுமின்றி இருப்பவருக்கான உலகந்தான் இன்னும் அச்சமூட்டுவதாய்...., பாதுகாப்பில்லாதிருக்கின்றது என்ற உணர்வே மேலோங்குகின்றது.

இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருக்க விரும்பாத (அல்லது இரண்டாகவும் இருக்கவிரும்பும்) சூஃபிகள் சமூகம் பற்றிய இக்கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நினைவலைகள் பால்யங்களை நோக்கி ஓடத்தொடங்கியது. ஈழத்துக் கல்விமுறையில் மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை 'சமயம்' ஒரு கட்டாய பாடமாக இருக்கின்றது. நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாத பெற்றோராயிருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு சமயம் ஒன்றைத் திணித்து கற்பிக்கச் செய்யத்தான் வேண்டும். அத்தோடு தெரிவு என்பது ஒன்றாகவிருக்கும்போது, வெவ்வேறு சமயங்களில் கலப்புத் திருமணஞ்செய்த பெற்றோர் இரண்டு 'சமயங்களை'த் தெரிந்தெடுத்து பிள்ளைக்குக் கற்பித்துவிடவும் முடியாது. அதைவிட அபத்தமாய், 'சமயம்' என்கின்ற கட்டாயப் பாடத்தில் உங்களுக்குரியதாய் நினைக்கும் 'மதம்' குறித்துக் கற்பிப்பார்களே தவிர எல்லா மதங்களையும் அறிந்துகொள்கின்ற கற்கை நெறிகளும் நமது பாடத்திட்டத்தில் இல்லை. சமயத்தோடு இயைந்து வாழும் ஒவ்வொருவரும் தமது நாளாந்த வாழ்வில் தமது சமயம் குறித்து அறிவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. ஆனால் பிறமதங்கள் குறித்து அறிவைப் பரவலாக பெறுவதற்குரிய இடமாக இருக்கும் பாடசாலையோ அந்த வெளியை மறுத்து, 'உனக்குரியதான மதத்தை மட்டும் கற்க' என்று கூறுகின்றது. இவ்வாறான சூழலிலிருந்து வெளியேறும் மாணவர்கள் எங்ஙனம் மத நல்லிணக்கத்தோடோ, பிற மதங்கள் குறித்த சகிப்புத்தன்மையோடோ பாடசாலையிலிருந்து வெளியேற முடியுமென எதிர்பார்க்கமுடியும்? இன்னும், பதின்மங்களில் தமது சுய அறிவை வளர்த்துக்கொண்டு சமயத்தை மறுக்கவிரும்பும் மாணவருக்கு எந்த ஒரு தெரிவையும் எமது கல்விச் சமூகம் வழங்குவதேயில்லை என்பதுதான் எவ்வளவு அபத்தமானது.


(படங்கள்: chapters.ca)
(வைகறையிற்காய் எழுதப்பட்டது)

'வெளி'யை மீறும் பெண்கள்...

Thursday, March 13, 2008

-Volver மற்றும் Aksharayaவை முன்வைத்து-

அகஞ்சார்ந்த பிரச்சினைகள் நம்மைத் தினமும் அல்லாட வைத்துக்கொண்டிருக்கின்றன. பொது விடயங்கள் குறித்து பிறரோடு வெளிப்படையாகப் பகிரவோ, விவாதிக்கவோ முடிகின்ற அளவுக்கு நம்மால் நம் அகமனதின் தத்தளிப்புக்களை அவ்வளவு எளிதாய்ப் பகிரமுடிவதில்லை. சிலவேளைகளில் பகிர்வதற்கான எமது அகமனத்தடைகளை உடைத்து வெளியே வந்தாலும் அதனை எப்படிப் பிறருக்குப் புரியவைப்பதென்ற நிறைந்த சிக்கல்களும் இருக்கின்றன. அதேபோன்று நமது அகமனதை முழுதாய்த் திறந்து வைக்கும்போது நம்மையறியாமலே நமது கள்ளங்களும் கபடங்களும் வெளியே வந்துவிடும் என்ற தயக்கங்களும் நம்மில் பலருக்கு உண்டு. பகிரவேண்டிய விடயங்கள் உரிய நேரத்தில் பகிரப்படாது போனதால் சிதைந்துபோன உறவுகள்..., வாழ்வைத் தொலைத்த மனிதர்கள்..., பால்யங்கள சிதைந்த சிறார்களென... பலரை வாழ்க்கையின் ஏதோவொரு புள்ளியில் நாம் சந்திக்கவும் செய்கின்றோம்.

Pedro Almodovarன், Volverம், அசோக ஹந்தகமவின் Aksharaya (A Letter of Fire)ம், சொல்லப்படவேண்டியவை சொல்லவேண்டிய காலத்தில் சொல்லப்படாமல் போனதால் ஏற்படும் பாதிப்புக்களை வாழ்க்கையின் போக்கில் நின்று பதிவுசெய்கின்றன. சொல்லப்படவேண்டியவற்றை சொல்லாமற்சென்றதால் சொல்லாமல்விடுபவரை மட்டும் அச்சம்பவங்கள் பாதிப்பதில்லை; தொடர்ந்து அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன என்பதைத்தான் இவ்விரு படங்களும் வெளிப்படுத்த அதிகம் முயற்சிக்கின்றன. நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் நமது கடந்தகாலம் நம்மைப் பின் தொடர்ந்து வந்து தன் கொடிய கரங்களுக்குள் இழுத்துக்கொளள முயற்சிப்பதுண்டல்லவா? அவ்வாறுதான் இக்கதை மாந்தர்கள் பலரின் வாழ்வு இருக்கின்றது. சிலர் கடந்தகாலத்தின் கசப்பைப் புரிந்துகொண்டு கடந்துசெல்கின்றார்கள்; வேறு சிலரோ கடந்தகாலத்தில் சிக்குப்பட்டு தமது நிகழ்கால வாழ்வையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்கின்றார்கள்.

பெட்ரோ அல்மொடோவரின் அநேக படங்களைப்போல இதுவும் பெண்களைச் சுற்றியே சுழல்கின்றது (All About My Motherன் சாயல் சற்று இப்படத்திலுண்டு). Raimunda மற்றும் Sole என்ற இரண்டு சகோதரிகள், தீ விபத்தில் கொல்லப்பட்ட தமது பெற்றோரின் கல்லறைகளைச் சுத்திகரித்து அவர்களின் இழப்பை நினைவுகொள்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. கிழக்குக் காற்று வேகமாய் வீசுகின்றது; இவ்வாறான ஒரு பருவத்திலேதான் இவர்கள் தமது பெற்றோரைத் தீவிபத்தில் பலிகொடுத்தவர்கள். அதேசமயம் இப்பெண்களின் பக்கத்துவீட்டுப் பெண்மணியும் (Agustina) கல்லறையிற்கு வருகின்றார். Agustinaவின் தாயார் ஹிப்பி வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்; அடிக்கடி வீட்டை விட்டும் ஓடிப்போகின்றவரும் கூட. இறுதியாக, பக்கத்து வீட்டில் நடந்த தீவிபத்தோடு ஓடிப்போனவர் இன்னும் வீடு திரும்பாமல் Agustinaவால் தேடப்பட்டுக்கொண்டிருப்பவர்.

Raimundaவும் Soleம் தமது கிராமத்திலிருக்கும் அன்ரியொருவரைச் சந்தித்துவிட்டு, அவர்கள் தற்சமயம் வாழ்ந்துகொண்டிருக்கும் மெட்ரிக் நகரிற்குத் திரும்புகின்றனர். இவ்விருவரில் Sole தனது துணையை விவாகரத்துச் செய்துவிட்டு வீட்டோடு சிகையலங்காரக் கடைவைத்து வாழ்வை நடத்திச் செல்பவர். மற்ற மகளான Raimundaக்கு துணைவரும், பதின்மத்தைத் தொட்ட ஒரு மகளுமுண்டு. பெற்றோரின் கல்லறையிலிருந்து வீடு போய்ச்சேருகின்ற Raimundaவிடம், தனக்கு வேலை போய்விட்டதென கணவர் கூற தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து Raimunda கவலை கொள்கின்றார்.

ஒருநாள் வீட்டில் தனியேயிருக்கும் Raimundaவின் கணவன், அவரது மகளை பாலியல் வன்புணர்ச்சியிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றார். 'என்னைத் தொட்டால் கத்தியால் குத்திவிடுவேன்' என்று பயமுறுத்துகின்ற மகளிடம், 'நீ எனக்குப் பிறந்த மகளில்லை'யெனச் சொல்லி வன்புணர்ச்சியிற்குக் கட்டாயப்படுத்தும்போது, மகள் குசினியிலிருக்கும் கத்தியால் தகப்பனைக் குத்திக் கொன்றுவிடுகின்றார். வேலையால் வீட்டுக்கு வருகின்ற Raimundaவிடம் நடந்தததை மகள் விபரிக்கின்றார். என்ன செய்வதென்று முதலில் திகைக்கின்ற Raimunda கணவனின் உடலத்தை வீட்டினில் மறைத்துவைக்கின்றார். பிறகு நேரம் பார்த்து தொலைத்தூரத்திலிருக்கும் ஆற்றோரமாய் கணவனின் உடலை எவருக்குந் தெரியாமல் புதைத்தும்விடுகின்றார். உறவுகள், சுற்ற்த்திடம் தனது கணவன் தன்னைவிட்டு ஓடிப்போய்விட்டாரென Raimunda கூறுகின்றார். Raimundaவின் மகள், கொல்லப்பட்டவர் தனது வளர்ப்புத் தந்தையெனில், யார் தனது உண்மையான தகப்பன் எனக்கேட்கின்றபோது உனது தந்தையார் கிராமத்திலிருந்தார் என்று கூறி அவரது வாயை Raimunda அடைத்துவிடுகின்றார்.

இதேசமயத்தில் கிராமத்திலிருக்கும் Raimundaவின் பிரிய அன்ரி இறந்துபோகின்றார். கணவரின் உடலை மறைக்கிற சிக்கலில் இருக்கின்ற Raimundaவால் அன்ரியின் இறுதி நிகழ்வுக்குப் போகமுடியாது போகின்றது; அவரது சகோதரி Sole மட்டும் போகின்றார். அங்கிருந்து Sole திரும்பிவருகின்றபோது ஒரு அதிசயம் நிக்ழ்கின்றது. Sole இறந்துபோன தனது தாயை அவர்களின் அன்ரியின் வீட்டில் காண்கின்றார். கிராமத்தில் -இவர்களின் அன்ரியின் வீட்டில்- இவர்களது தாய் பேய் வடிவில் வந்து கதைப்பதைக் கேட்டதாய் அயலவர்கள் கூறியிருந்தால் -தனது ஆசைகள் வாழுங்காலத்தில் நிறைவேறாததால்தான் தனது தாய் பேய் வடிவில் உலாவுகின்றாகின்றாரோவென ஆரம்பத்தில் நினைக்கும் Sole, பின்னர் தனது தாய் அந்தத் தீவிபத்தில் இறக்கவில்லை என்ற உண்மையை உணர்கிறார்.

Sole தனது நகர வீட்டுக்குத் தாயை அழைத்துவந்து தலைக்கு வர்ணம்பூசி, ஸ்பானிய மொழிதெரியாத ஒரு இரஸ்யப்பெண்மணி போல பிறர் காணும்போது நடிக்கச் சொல்கின்றார். இதற்கிடையில் Raimunda ஒரு உணவுச்சாலையை வாடகைக்கு எடுத்து வெற்றிகரமாக நடத்தத்தொடங்குகின்றார். Raimundaவின் தாயிற்கு Raimundaவைப் பார்க்க விருப்பமிருப்பினும், Raimunda வளரத்தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தாயை மிக வெறுத்து அவரைச் சந்திக்க விரும்பாதவராய் நகரத்தில் வாழத்தொடங்கியவர் என்ற கடந்தகாலம் தாயைப் பயமுறுத்துகின்றது; எனவே ஒவ்வொருமுறையும் Raimunda, Sole வீட்டிற்கு வரும்போது தாய் ஒளித்துக்கொள்கின்றார்.

இறுதியில் Raimundaவும் தாயும் சந்திக்கின்றனர். அவர்கள் இருவரும் மனந்திறந்து பேசத்தொடங்கும்போது கடந்தகால உண்மைகள் மிகுந்த வலியுடன் வெளிவருகின்றன். Raimundaவின் பிள்ளையினது உண்மையான தந்தை, Raimundaவின் தகப்பனே. இதனால் Raimunda ஒரே நேரத்தில் தனது மகளுக்கு தாயாகவும், இன்னொருவிதத்தில் சகோதரியாகவும் இருக்கின்றார். Raimundaவிற்குத் தனது தாய் மீதான கோபத்திற்குக் காரணம், இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றது என்பதை அறியாது தாய் அசட்டை/கவனயீனத்தோடு இருந்திருக்கின்றார் என்பதேயாகும். ஆரம்பத்தில் இந்த உண்மை தெரியாதிருக்கும் தாய், உண்மையறிந்தவுடன் கோபத்துடன் தனது கணவனைப் பார்க்கப்போகின்றார். அச்சமயம் அவரின் கணவன் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் (Agustinaவின் தாய்) படுக்கையில் ஒன்றாயிருப்பதைக் கண்டு கோபத்துடன் வீட்டிற்குத் தீமூட்டிவிடுகின்றார். அதே சமயம் கிழக்குக் காற்று மூர்க்கமாய் வீசுகின்றது. தப்ப வழியின்றி எரிந்துபோகின்றவர்களை க்டுங்காற்று தீயையெழச்செய்து ஏப்பமிட்டுவிட்டதென உற்றாரும் அயலவரும் நம்புகின்றார்கள். இவ்வாறு தீயை மூட்டிய தாய் வேறொரு கிராமத்தில் சில வாரங்கள் பதுங்கியிருந்துவிட்டு இவர்களின் தனித்திருக்கும் அன்ரி வீட்டுக்கு வருகின்றார். அன்ரியும் காரணங்களையறிந்து தனது வீட்டில் தாயைச் சேர்த்துக்கொள்கின்றார். வெளியாட்களுக்குத் தெரியாமல் உள்ளேயே தாய் வாழத்தொடங்குகின்றார். அவ்வப்போது சில தடயங்கள கண்டுபிடிக்கப்பட்டாலும் பேய் போல அவர் உலாவுகின்றார் எனப் பல மிகை உண்மைகளை நம்புகின்ற கிராமத்தவர்கள் இதையும் நம்பிக்கொள்கின்றார்கள்.
இதேவேளை இவரின் கணவரோடு கொல்லப்பட்ட ஹிப்பி தாயாரின் மகள் -Agustina- புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார். இனி Agustinaவையும் சாகும்வரை -Raimundaவின் அன்ரியைப் பராமரித்ததுபோல- பராமரிக்கப்போகின்றென தாய் கிராமத்தில் தங்கிவிட அவரின் பிள்ளைகளும், பேரப்பிள்ளையும் அக்கிராமத்திற்கு வருவதோடு படம் முடிகின்றது. கை நழுவிப்போன சந்தோசமான நாட்கள் மீண்டும் வருகின்றதுமாதிரியும்... வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் பிறரால் பழிவாங்கப்பட்ட இப்பெண்கள் நிம்மதியாக வாழப்போகின்றதுமான எண்ணங்களைப் பார்ப்பவரிடையே இப்படம் விதைக்கின்றது.

இந்தப்படம் பாலியல் இன்னபிற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் 'வாழ்க்கையைத் தொலைத்துப் போகவேண்டும்' என்ற பொதுப் பார்வையை மறுக்குகின்றது. பெண்கள் அவர்கள் அறியாமலே, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறையைக் கடந்துசென்று தமக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்ந்துபார்க்கலாம் என்ற நம்பிக்கையின் கீற்றை வழங்குகின்றதென்றவகையில் இப்படம் முக்கியமான ஒரு படமே. அதேவேளை தான் தனது தகப்பனால் பாலியல் வன்முறைக்குட்டபட்ட மாதிரி, தனது மகளும் பாலியல் வன்முறைக்குத் தனது கணவனால் பலியாக்கப்படும்போது 'தனது பேசப்படாத மெளனம்' தன்னை மீண்டும் இன்னொருவகையில் வந்து பாதிப்பதை Raimunda பாத்திரத்தினுடாக நாம் அவதானிக்கின்றோம். மேலும் தனது கடந்தகாலத்தின் மூலம் பாடத்தைக் கற்றுக்கொண்ட Raimundaவால் ஒரு கொலை செய்யப்பட்டுவிட்டதே என்ற பதற்றமில்லாது தனது மகளையும் நுட்பமாகக் காப்பற்றமுடிகின்றது. அத்துடன் தனது தாய் தன்னை எதுவுமறியாது அல்லது எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று வளர்த்தது போலவன்றி, Raimunda தனது மகளை வன்முறைகளிலிருந்து தப்புவதற்கான விழிப்புணர்வுடன் வளர்த்திருக்கின்றார் எனபது பார்க்கும் நமக்கும் புரிகின்றது.

கொலைகளை எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நம்பிக்கையுடைய பலரையும் இப்படத்திற்குள் அமிழும்போது அந்த எண்ணத்தை எழச்செய்யாமல் கதையை நகர்த்திச் சென்றிருப்பதில்தான் நெறியாள்கையாளரின்/க்தாசிரியரின் ஆளுமை துலங்குகின்றது. சோகமான/மர்மமான இருண்ட கதை என்றாலும் படம் முழுக்க மகிழ்ச்சியிற்கான வர்ணங்களில் எடுக்கப்பட்டிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை எவ்வளவு அபத்தங்களாலும் அவலங்களாலும் நிரம்பியிருந்தாலும் கிடைக்கின்ற சொற்ப நிமிடங்களையும் வாழ்ந்து பார்க்கப் பிரியப்படுகின்ற மனிதர்களே இப்படத்தில் வருவதால் படம் முழுக்க வரும் வர்ணக்கலவைகள் கண்களுக்கு உறுத்துவதில்லை. Joint புகைக்கின்ற Agustina , பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் (இவர் தான் Raimunda குழிதோண்டி தனது கணவரின் சடலத்தை மறைக்கின்றபோது உதவுகின்றார்) என இப்படத்தில் வரும் அனைவரும் அவர்களின் இயல்பில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதோடு எல்லாப்பெண்களும் நேசிக்கப்படக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள்.

2.
அசோக ஹந்தகமவின் Aksharaya, இளம் வயதில் சீரழிந்துபோகும் குழந்தைகளையும் அதிகார வேட்கையையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. ஒரு நீதிமன்றத்தில் நீதிபதியாக (Magistrate) இருக்கும் தாய், தனது பிள்ளையை மிக அந்நியோன்னியமாக வளர்க்கின்றார். தனது பிள்ளை தனது உடலின் ஒரு பகுதியெனவும், தனது சுவாசத்தையே கருவிலிருக்கும்போது அவனும் சுவாசித்தவன் என்ற நினைப்பும் உடையவர் அத்தாய். அத்தோடு ஒவ்வொரு நாளும் சிறுவன் வளர்ந்துகொண்டிருப்பதை அளந்துகொண்டிருப்பவர். சிறுவன் வளர வளர அவன் தன்னை விட்டு விலகிப்போய்விடுவான் என்ற பயங்களும்/பதற்றங்களும் உடையவர்.


இத்தாயின் (Piyumi) நெருக்கம் எப்படிப்பட்டதெனில் அந்தச் சிறுவனோடு சேர்ந்து நிர்வாணமாய்க் குளிப்பதிலிருந்து, பன்னிரண்டு வயதிலிருக்கும் சிறுவனுக்கு முலைகளைச் சப்பக்கொடுப்பது வரையான நெருக்கமுடையது (இக்காட்சி மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது; அது குறித்த அரசியலைப் பிறகு பார்ப்போம்). இப்படி வளர்கின்ற சிறுவன் பாடசாலைக் கணணியில் இன்னொரு சிறுவனோடு இருந்து, பெண்கள் நிர்வாணமாயிருக்கும் படங்களைப் பார்க்கின்றான். இதெல்லாம் 'கெட்ட' படங்கள் என்கின்றான் மற்றச்சிறுவன். இவனோ இதிலென்ன கெட்ட விசயங்கள் இருக்கின்றது; தான் தனது தாயை இவ்வாறான நிர்வாணத்துடன் பார்த்தவன் என்கின்றான் (பார்க்கும் படங்களிலுள்ள பெண்களின் முலையைத் தனது தாயின் முலையுடன் ஒப்பிட்டுக் கதைக்கவும் செய்கின்றான்). இவ்வாறு இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பாடசாலை முன்றலில் இந்த இரு சிறுவர்களும் தண்டிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு நடுவெயிலில் தண்டனைக்காய் நிறுத்திவைக்கப்படுகையில் பாடசாலைக்கு வரும் பொலிஸ் தங்களைத்தான் தேடி வருகின்றதென நினைத்து இவ்விரு சிறுவர்களும் பாடசாலையை விட்டு ஓடி ஒரு பாழடைந்த கட்டடத்தில் பதுங்கிக்கொள்கின்றார்கள். அவ்வாறு பதுங்கியிருக்கையில் யாரோ நடந்து வரும் காலடிச்சத்தங்களை கேட்டு பொலிசென நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியைத் தற்செயலாய்க் கத்தியாற் குத்தி -நீதிபதியின் மகன்- கொன்றுவிடுகின்றான். மற்றச்சிறுவன் பொலிசிடம் சென்று நடந்ததைக் கூற, கொலைசெய்த நீதிபதியின் மகன் அலைந்து திரிந்து மியூசியமொன்றில் மீண்டும் பதுங்கிக்கொள்கின்றான்.

மியூசியத்தில் அடைக்கலமாகின்ற சிறுவன் அங்கே வரும் ஒரு சிறுமியோடு நட்பாகின்றான். அந்த (தாயிழந்த) சிறுமியின் தந்தையார் மியூசியத்தில் காவலாளியாக வேலை செய்கின்றார். தனது வீட்டுக்குக் சிறுவனைக் கூட்டிச்செல்கின்ற காவலாளி, நீதிபதியிற்கு தொலைபேசுகின்றார். நீதிபதி, தனது மகன் கொலைக்குற்றத்திற்காய்த் தேடப்படுகின்றார் என்று கூறி அச்சிறுவனை காவலாளியின் வீட்டிலேயே ஒளித்து வைக்கும்படி இலஞ்சம் கொடுக்கின்றார். இதற்கிடையில் நீதிபதியின் மகனே குற்றவாளியாக இருப்பதால் பத்திரிகைகள்/பொலிஸ் நீதிபதியைத் தொடர்ந்து கேள்விகளால் தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். அதேவேளை காவலாளி வீட்டில் பதுங்கியிருக்கின்ற சிறுவன் தாய் -தனது பதவியின் பொருட்டு- மகனைப் பிடிக்க உத்தரவுகொடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்து- தன்னோடு மிக நேசமாய் முன்பு இருந்த தாய் இவரில்லையென கோபங்கொள்கின்றான்.

இவ்வாறு கதை ஒருபக்கமாய் நகர்ந்துகொண்டிருந்தாலும் சமாந்திரமாய் இன்னொருவிதமான கதையும் நகர்ந்துகொண்டிருக்கின்றது. இச்சிறுவனின் தந்தையாரும் ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமனற் நீதமானாவார் (Highcourt Judge). அவருக்கும், இச்சிறுவனின் தாயாருக்கும் உற்வு சுமுகமாய் இருப்பதில்லை. எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருக்கின்றார்கள். அச்சிறுவன் பிறந்தபின் 'தாம்பத்ய' உறவு இல்லாது இருவரும் வெவ்வேறு தனித்தனி அறைகளில் வசித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இரகசியங்களை அறிந்த, வீட்டுவேலை செய்து அங்கேயே தங்கியிருக்கும் பெண்ணோடு ஓய்வுபெற்ற நீதமானுக்கு உடல்சார்ந்த உறவு இருக்கின்றது.

இவ்வாறு காவலாளி நீதிபதியிடம் இலஞ்சம் வாங்கி சிறுவனை ஒளித்து வைத்திருந்தாலும் ஒருகட்டத்தில் பொலிஸ் தன்னை நெருங்கத்தொடங்கியதை அறிகின்ற காவலாளி அச்சிறுவனின் தாயிடம் சிறுவனைத் தனது வீட்டிலிருந்து கூட்டிச்செல்லக் கட்டளையிடுகின்றார். இதன் நிமித்தம் மியூசியத்திற்கு இரவில் வருகின்ற நீதிபதிப் பெண், தனது பயங்களை, சிறுவன் மீதிருக்கும் தனது அளவற்ற அன்பைச் சொல்லும்போது, இது சாதாரண தாய் - மகன் உறவைத் தாண்டிய ஒன்று எனக் காவலாளி பதட்டமடைகின்றார். ஒருகட்டத்தில் காவலாளி, 'இச்சிறுவனின் தந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தாரா? அவரெல்லாம் ஒரு தகப்பனா?' எனத் திட்டும்போது, அப்பெண் மூர்க்கமடைந்து மியூசியத்திலிருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களை உடைக்கத் தொடங்குகின்றார். காவலாளியும் பொருட்கள் உடைபடுகின்ற கோபத்தில் அப்பெண்ணை மூர்க்கமாய் அடித்து வன்புணரத்தொடங்குகின்றார். வன்புணர்விற்குப் பின், -பெண் பொருட்களை உடைத்ததால்- தனது வேலை போகப்போகின்றதெனக் கவலைப்படும் காவலாளியிடம், இதுவரை காலமும் சிறைபட்டிருந்த தனது உடலை சுதந்திரமாக்கி எனக்குரியதாக்கி மீளத் தந்துவிட்டாயென எக்காளமாய் அப்பெண் சிரிக்கின்றார். அதே கணத்தில் இதுவரை பனிப்பாளமாய் உருகிக்கிடந்த தனது கடந்த கால இரகசியங்களை அந்த மியூசியத்தில் அப்பெண் உடைக்கத் தொடங்குகின்றார்.

Piyumiயின் தாயார் சிறுவயதில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வேலை செய்துவருகின்றார். அப்பணக்காரத் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தபோது அவரே செவிலித் தாயுமாகின்றார். வளர்கின்ற அந்தப் பணக்கார ஆண், செவிலித் தாயோடு உடலுறவு கொண்டதன் நிமித்தமே Piyumi பிறக்கின்றார். இந்த விசயம் கேள்விப்பட்ட அந்த பணக்காரப் பெற்றோர், இச்சிக்கலிலிருந்து தப்புவிப்பதற்காய் தமது மகனை கேம்பிறிஜுக்கு படிக்க அனுப்புகின்றார்கள். அதேவேளை பிறந்த குழந்தையிற்கும்( Piyumi) நல்ல கல்வி வசதியை ஒழுங்கு செய்துகொடுக்கின்றனர். இவ்வாறு வளர்ந்துவரும் சிறுமி பணக்காரக்குடும்பத்தில் தானுமொரு அதிகாரம் நிறைந்த இராணியாக பிற்காலத்தில் வரும் ஆசையை வளர்த்துக்கொண்டபடியிருக்கின்றார். அவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமெனில் அவ்வீட்டு 'இளவரசனை'த் தனது கைக்குள் கொண்டுவரவேண்டுமெனத் திட்டம்போட்டு உடலைச் சூதாட்டமாய்வைத்து அந்த ஆணோடு ஆட்டத்தைத் தொடங்குகின்றார். இந்த உறவை ஒருபொழுதில் கண்டுபிடிக்கின்ற Piyumiயின் தாயார் கடந்தகால உண்மையை உடைக்கின்றார். Piyumi உறவு வைத்திருக்கும் ஆணே Piyumiயின் தகப்பனாகவும் இருக்கின்றார் என்பதைக் கூறுகின்றார். கொஞ்ச நாட்களில் Piyumiயின் தாய் இறந்துபோனாலும், தனது அதிகாரப்போதையை கைவிட முடியாத Piyumi அந்த ஆணையே திருமணமுஞ் செய்து ஒரு குழந்தையையும் (கொலை செய்த சிறுவன்) பெறுகின்றார். சிறுவன் பிறந்தபின்னே Piyumi தனக்குத் தெரிந்த உண்மையை தனது கணவனிடம் (இன்னொருவிதத்தில் தகப்பனுமாய் இருக்கின்றவரிடம்) உடைக்கின்றார். அந்தவேளையில் தனது கணவனின் ஆண்குறி வலியில் விறைத்து ஒரு இரும்பாயிற்று என்று கூறி Piyumi நக்கலாய்ச் சிரிக்கின்றார். Piyumi தான் நினைத்தை நிறைவேற்றியதால் -அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டதோடு- தனது கணவன் + தகப்பனையும் பழிவாங்கிய திருப்பதியோடு தனது மகனோடு நெருக்கமாகின்றார். எல்லாமே பிறழ்வாய் போன அத்தாயிற்கு மகனோடான உறவும் ஒருவிதமான பிறழ்வாய்ப் போய்விடுகின்றது. தொடர்ந்து என்ன நடக்கின்றது என்பதைப் படத்தைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்காய் விட்டுவிடுவோம்.

சிறுவயது நினைவுகள் (childhood trauma) எப்படி ஒவ்வொருவரையும் பாதிக்கின்றதென ழாக் தெரிதா எழுதியவற்றை வாசித்ததே இக்கதையிற்கான பின்னணி என்று ஒரு நேர்காணலில் கூறுகின்ற அசோகம ஹந்தகம, அதன் நிமித்தமே தெரிதாவின் ஒரு நூலின் தலைப்பையே இப்படத்திற்கும் பெயராக வைத்ததாகக் கூறுகின்றார். எனினும் சிறுவயது பாலியல் துஷ்பிரயோகங்களைவிட இப்படம் பிராய்டிசத்தையே அதிகம் முன்வைக்கின்றது போலத் தோன்றுகின்றது (அல்லது அவ்வாறான காட்சிகளுக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது எனத்தான் சொல்லவேண்டியிருக்கிறது). தாயிடம் குழந்தை பால் குடிக்க தொடங்கும்போது குழந்தையிற்கான பாலியல் உணர்வு தொடங்கிவிட்டதென பிராய்ட் குறிப்பிடுவதை நினைவில் கொள்ளலாம் (அதன் மறுமுனையில் தாயிற்குள்ளும் பல விடயங்கள் நிகழும் சாத்தியமுண்டதென மறைபொருளாய்ப் பார்க்கலாம்). அத்தோடு நெறியாள்கையாளரும், தாயிற்கும் சிறுவனுக்குமான நெருக்கங்களைக் காட்டத்தான் அதிகம் மினக்கெடுக்கிறார் போலவும் இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

படத்தில் தாயும் மகனும் நிர்வாணமாய்க் குளிக்கும் காட்சி மிகுந்த சர்ச்சைகுள்ளாகியிருக்கின்றது. தாய்மையைக் கேலிசெய்கின்றதெனவும், வேறு சில காரணங்களுக்காகவும் இலங்கையில் இப்படம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. அத்தோடு அந்தக்காட்சியிற்காய், படக்குழுவினர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பேரில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும் அசோக ஹந்தகம அந்தக் காட்சி தனித்தனியே எடுக்கப்பட்டு பிறகு பொருத்தப்பட்டிருக்கின்றதென சாட்சியம் அளித்திருக்கின்றார். மேலும் அப்படத்தின் பெண் ஒளிப்பதிவாளரின் மகனே அச்சிறுவனாக நடித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு நெறியாள்கையாளரின் சுதந்திரவெளியில் நாமெவரும் தலையிடமுடியாது என்றாலும் நிர்வாணமாய் அப்பெண்ணை, சிறுவனின் முன் குளியலறையில் காட்டியிருக்கத்தேவையில்லை. இப்படத்தில் எத்தனையோ நுட்பமான காட்சிகளை வைக்கத் தெரிந்த நெறியாள்கையாளர் அந்த நிர்வாணக்காட்சியில்லாமலே பார்ப்பவருக்குத் தான் சொல்லவந்ததைத் தெளிவாய்ப் புரியவைத்திருக்கலாம் (Volverல் பாலியல் துஷ்பிரயோகங்கள் நேரடியாகக் காட்சிப்படுத்தப்படாமலே மிக தத்ரூபமாய் பார்ப்பவருக்குப் புரியவைக்கப்பட்டிருக்கும்). பிரான்சு அரசு இப்படத்திற்கு நிதி கொடுக்கின்றதென்பற்காய் பாலியல் குறித்த உரையாடல்கள் இன்னும் ஆரம்ப நிலையிலிருக்கும் இலங்கை போன்ற நாட்டிலிருந்தபடி அதிரடியாக் காட்டவேண்டுமென்பதற்காய் இவ்வாறான காட்சியை எடுக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. இல்லாவிட்டால் மேலைத்தேயப் பார்வையாளர்களை நோக்காகக் கொண்டு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கின்றாரென்ற குற்றச்சாட்டை அசோக ஹ்ந்தகம ஏற்கவேண்டியிருக்கின்றது. எனினும் மியூசியத்தில் அப்பெண் வெறித்துப் பார்க்கும், முலைகளையுடைய (இந்து) பெண் தெய்வத்தின் காட்சியை எடுத்திருப்பதன் மூலம் கீழைத்தேயத்தில் கடந்தகாலத்தில் மிகவெளிப்படையாக பாலியல் பேசப்பட்டிருக்கின்றது கதையாடலையும் ஹ்ந்தகம வளர்க்க விரும்புகின்றாரெனவும் வாசிப்புச்செய்யும் சாத்தியமும் உண்டு. இங்கே படைப்பாளியின் வெளியில் குறுக்கிடுவதல்ல எனது நோக்கம். ஆனால் இவ்வாறான காட்சியை வைத்ததால், அதிக உரையாடலக்ளை வேண்டி நிற்கும் மற்ற விடயங்கள் கவனிக்காமற் போய்விடும் என்ற நோக்கிலே -குளியலறைக்காட்சியைத் தவிர்த்திருக்கலாம்- எனச் சொல்லவேண்டியிருக்கிறது. இப்படத்தில், சிறுவர்கள - ஏழை/பணக்காரர்கள்- என்ற வித்தியாசமில்லாது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதை நோக்கிக் கேள்வி எழுப்புவதுபோல, 'சுதந்திர இலங்கைக் குடியரசின்' அதிகார அமைப்புக்கள் குறித்தும் எழுப்பப்படும் முக்கியமான கேள்விகள் -தேவையில்லாத சர்ச்சையினால்- முனை மழுங்கிவிடும் ஆபத்துண்டு. முக்கியமாய் நீதிபதியே இலஞ்சம் கொடுத்து தனது பிள்ளையைக் காபாற்றுவதும், ஒரு நீதிபதியாக இருக்கும் பெண்ணையே ஒரு ஆண் சாதாரணமாய் வன்புணரச்செய்யும்போது இந்த நாட்டின் ச்ட்டங்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த நுட்பமான விமர்சனங்கள் இப்படத்தில் எழுப்பப்படுகின்றன என்பதைப் பார்ப்பவர் உணர்ந்துகொள்ள முடியும்.

3.

பெட்ரோ அல்மொடோவரின் Volverம், அசோக ஹந்தகமவின் A leffer of Fireம், அநேக திரைப்படங்களில் நம்மால் பார்க்கமுடியாத பெண்களின் பாத்திரங்களைச் சித்தரிக்கின்றன. தனது மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவனை எரிக்கும் மனைவியை, தனது மகள வன்புணர்விலிருந்து தப்புவதற்காய் கொலை செய்த கணவனின் உடலை சாட்சியங்கள் எதுவுமின்றி அழிக்கும் பெண்ணை, அதிகார வேட்கையுடைய, தனது குழந்தையை அதிகம் நெருங்குவன் மூலம் தனது கணவனை நுட்பமாய்ப் பழிவங்குகின்ற ஒரு மனைவியை/தாயை எனப் பலவேறுபட்ட பெண்களைப் பார்க்கின்றோம். இதுவரைக் காலமும் எழுதப்பட்ட/விவாதிக்கப்பட்ட பெண்/தாயின் பிரதிமைகள் தாய்மை X வேசி என்ற கறுப்பு வெள்ளைப் பார்வைக்குள் கட்டியமைக்கப்பட்டவை குறித்து இவ்விருபடங்களிலும் வரும் பெண்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். இவ்வாறான தெளிவான அடையாளங்களில் சிக்குபவர்களல்ல பெண்கள், அன்பும், தாபமும், பொறாமைகளும், சூழ்ச்சிகளும், அதிகார வேட்கையும் கொண்ட சாதாரண மனிதர்களே பெண்கள் என்ற புரிதல் இவ்வாறான படங்களைப் பார்க்கும்போது நமக்கு வருகின்றன. மேலும் இதுவே அதிகவேளைகளில் யதார்த்தமாயும் இருக்கின்றன. இவ்வாறான் புரிதல்கள் வருகின்றபோது தாய்மையென்று தலையில் வைத்துக் கொண்டாடுவதையோ... வேசி என்று காலால் உதைத்துப் புறக்கணிப்பதையோ விடுத்து, கலாசார காவலர்களெனும் முகமூடிகளையணியாமல் ஆண்கள, பெண்களைப் பெண்களாகவே விளங்கிக்கொள்ள முயலலாம். பெண்களை அவர்களின் இயல்பில் புரிந்துகொள்ளும்போது பெண்களும் தமக்கான கலாசார வேலிகளைத் தாண்டி (முக்கியமாய் திருமணம்/உறவு/'கற்பு'/கண்காணிப்பு) சுதந்திரமான காற்றை சுவாசிக்கத் தொடங்குவார்கள். அந்த விடுதலை -ஆண்கள்- நமக்கான விடுதலையையும் ஏதோ ஒருவகையில் உறுதி செய்வதாய் அமையவும் கூடும்.