கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'கால‌ம்' இத‌ழில் வெளிவ‌ந்த‌ க‌தை

Tuesday, May 26, 2009


ஹேமா அக்கா
-இள‌ங்கோ


'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.

பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்தில் கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌ ந‌ல்ல த‌ண்ணியும், தார‌ள‌மாய் ல‌க்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன‌ ச‌னிய‌னுக்கு நீங்க‌ள் ச‌ண்டை பிடிக்கிறிய‌ள் என்றொரு ஆமிக்கார‌ன் ச‌ன‌த்தை செக்பொயின்றில் வைத்து ப‌ரிசோதித்துப் பார்க்கும்போது கேட்ட‌தாயும் ஒரு க‌தையிருந்த‌து. அவ‌ன் அப்படிகேட்ட‌திலையும் பிழையில்லைத்தான். ந‌ல்ல‌ தோட்ட‌க்காணிக‌ள், நிறைய‌ ப‌னைம‌ர‌ங்க‌ள், ஆடு மாடுக‌ள் என்று எங்க‌ள் ஊரிலை ச‌ன‌ங்க‌ள் இருந்த‌போது அவ‌னுக்கு அப்ப‌டித் தோன்றிய‌தில் பிழையுமில்லை.

நாங்க‌ள் க‌த்து க‌த்தென்று க‌த்த‌ அண்டை அய‌லிலிருந்த‌ ச‌ன‌மெல்லாம் கிண‌ற்ற‌டியில் கூடிவிட்ட‌து. விழுந்த‌ கிண‌று ஒரு ப‌ங்குக்கிண‌று. ஆனால் ப‌ங்கிருக்கிற‌வைய‌ள், இல்லாத‌வைய‌ள் என்று ஊரிலையிருக்கிற‌ எல்லாச் ச‌ன‌மும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்க‌ள் ஊரின் மண், ச‌ன‌ம் சாதி பார்க்கிற‌ மாதிரி வ‌ஞ்ச‌ம் எதுவும் செய்த‌தில்லை. யார் தோண்டினாலும் ந‌ல்ல‌ த‌ண்ணியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. இல‌ங்கை ஆமியின் ஒபரேஷ‌ன் லிப‌ரேச‌னோடு தொட‌ங்கிய‌ பொம்ம‌ர‌டியிலிருந்தும், ப‌லாலியிலிருந்தும் காங்கேச‌ந்துறையிலிருந்தும் அடிக்கின்ற‌ ஷெல்ல‌டியிலிருந்தும் த‌ப்புவ‌த‌ற்கென‌, நானும் அம்மாவும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் எங்க‌ள் வீட்டு செவ்விளநீர் ம‌ர‌த்தடிப் ப‌க்க‌மாய் வெட்ட‌த் தொட‌ங்கிய‌ ப‌ங்க‌ருக்குள்ளேயே ஆற‌டி வ‌ர‌முன்ன‌ரே தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்திருக்கின்ற‌து. 'டொங்கு டொங்கு' என்று அலவாங்கு போட‌ உறுதியாயிருக்கும் சுண்ணாம்புக் க‌ல்லுக்குள்ளிலிருந்து எப்ப‌டித்தான் இப்ப‌டி ந‌ல்ல‌ சுவையான‌ த‌ண்ணீர் வருகின்ற‌தென்ப‌து என‌க்கும் அந்த‌ வ‌ய‌தில் சரியான வியப்பாய்த்தானிருக்கும். ஹேமாக்கா விழுந்த‌ கிண‌று த‌ண்ணிய‌ள்ளுகின்ற‌ கிண‌று என்றப‌டியால் அந்த‌ள‌வு ஆழ்ப்ப‌மில்லை. ஆன‌ப‌டியால் த‌ப்பிவிட்டா. இப்போ யோசிக்கும்போது ஹேமாக்கா தான் உயிரோடும் இருக்கோனும், ஆனால் அதேச‌ம‌ய‌ம் த‌ன‌து எதிர்ப்பையும் காட்ட‌வேண்டுமென‌ ச‌ம‌யோசித‌மாய் யோசித்துத்தான் இந்த‌க்கிண‌ற்றுக்குள்ளை குதித்திருப்பா போல‌... இல்லை, த‌ன் உயிரை மாய்த்துக்கொள்ள‌ வேண்டும் என்று நினைத்திருந்தால் அவா தன் வீட்டுக்கு இர‌ண்டு வீடுக‌ள் தாண்டிக்கிட‌ந்த‌ ஆழ்ப்பமான‌ கிண‌த்துக்குள்ளையெல்லோ குதித்திருக்க‌வேண்டும். அந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதித்தால் ச‌ன‌ம் உயிரோடு த‌ப்ப‌முடியாத‌ள‌வுக்கு அந்த‌ மாதிரி ஆழ்பப‌மாயும், அடியில் நிறைய‌ப் பாசியுமாயும் அது இருந்தது.

'ஹேமாக்கா வெளியே வாங்கோ, வெளியே வாங்கோ' என்று நாங்க‌ள் கிண‌த்துக்க‌ட்டைச் சுற்றி குஞ்சைப் ப‌ருந்திட்டைப் ப‌றிகொடுத்த கோழி மாதிரி க‌த்திக்கொண்டிருந்தோம். ஹேமாக்கா என்ன‌ க‌ட் வும‌னா இல்லை சுப்ப‌ர் வும‌னா... சும்மா அப்ப‌டியே 'விர்ர்' என்று கிண‌த்துக்குள்ளையிலிருந்து ப‌ற‌ந்துவ‌ர‌. யாரோ ஒராள் ந‌ல்ல‌ மொத்த‌மான‌ க‌யிறையெடுத்து கிண‌த்துக்குள்ளை விட‌ அவா அதைப் பிடித்து ஏறி வ‌ர‌மாட்டேனென‌ அட‌ம்பிடித்துக்கொண்டிருந்தா. அவாவை எப்ப‌டி வெளியே எடுக்கிற‌து என்று எல்லோருக்கும் பெரிய‌ பிர‌ச்சினையாய்ப் போயிட்டுது. அதைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ந்த‌ ச‌ன‌மெல்லாம் ஏன் இந்த‌ப் பெட்டை கிண‌த்துக்குள்ளை குதித்தாள், அத‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌வென்று ஆராய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. பொழுதும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் இருள‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஹேமாக்காவும் கீழே விட்ட‌ க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேயேறி வ‌ர‌மாட்டென‌ அட‌ம்பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறா. யாராவ‌து பெடிய‌னை கிண‌த்துக்குள்ளை இற‌க்கி அவ‌னைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்க‌லாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு கும‌ர்ப்பெட்டையாயிருப்ப‌து 'க‌ற்பு' சார்ந்த‌ பிர‌ச்சினையாக‌வும் ச‌ன‌த்துக்கு இருக்கிற‌து. வ‌ய‌துபோன‌ கிழ‌டுக‌ளை இற‌க்க‌லாந்தான். ஆனால் ஹேமாக்காவின் பார‌த்தை த‌ங்க‌டை தோளிலை தாங்கிக்கொண்டு க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுவ‌த‌ற்குள் கிழ‌டுக‌ளுக்கு சீவ‌ன் இருக்குமா என்ப‌தும் கேள்விக்குரிய‌துதான். ஒரு த‌ற்கொலை முய‌ற்சி த‌ப்பித்துவிட்ட‌து என்ற நிம்ம‌திப்பெருமூச்சை தெரிந்தே செய்கின்ற‌ ஒரு கொலையில் ப‌ரீட்சித்துப் பார்க்க‌ எவ‌ருக்கும் அவ்வளவாய் உட‌ன்பாடில்லை. என‌வே கிழ‌வ‌ர்க‌ளையும் இற‌க்க‌முடியாது. ஆக‌ இவ்வாறாக‌ ஹேமாக்காவை வெளியே எடுப்ப‌து பெரும் சிக்க‌லாகிவிட்ட‌து. வெளியே நிற்கிற‌ ச‌ன‌ம் என்ன‌ செய்வ‌து என்று கையைப் பிசைந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துப் பார்த்து ச‌லித்தே ஹேமாக்கா தான் இந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதிக்கமுன்ன‌ர் த‌ன் முடிவை ஆழ‌ ம‌றுப‌ரிசீல‌னை செய்திருக்க‌லாம் என்று கூட நினைத்திருக்க‌லாம்.

க‌டைசியாய், இர‌ண்டுப‌க்க‌மும் கையிருக்கிற‌ க‌திரையிலை நான்கு க‌யிறைக் க‌ட்டி ஒரு பெட்டியை இற‌க்கிற‌மாதிரித்தான் க‌திரையை இற‌க்கிச்சின‌ம். ஹேமாக்கா க‌திரையிருந்து நாலு க‌யிற்றில் இர‌ண்டு க‌யிற்றைக் கையிர‌ண்டாலும் பிடிக்க‌, வெளியிலிருந்து ச‌ன‌ம் தூக்க‌த்தொட‌ங்கிச்சினம். சூர‌ன்போரிலை சூர‌னையும் முருகையும் அங்கால் ப‌க்க‌ம் இங்கால் ப‌க்க‌ம் ஆட்டுகின்ற‌ மாதிரி கிண‌த்தின்றை உட்சுவ‌ரிலை அடிப‌ட்டு அடிப‌ட்டு ஹேமாக்கா வெளியே வ‌ந்திருந்தா. அவாவைப் பார்க்க‌ச் ச‌ரியாய்ப் பாவ‌மாயிருந்த‌து. ம‌ழைக்கால‌த்திலை ந‌னைகின்ற‌ கோழிக்குஞ்சுக‌ள் மாதிரி பாவாடை ச‌ட்டை எல்லாம் ந‌னைந்து கூனிப்போயிருந்தா. அத்தோடு ச‌ன‌மெல்லாம் ஒரு மாதிரியாய்ப் பார்த்த‌ பார்வை அவாவையின்னும் கூனிக்குறுக‌ச் செய்திருக்கும்.

2.
ஹேமாக்கா கிண‌ற்றில் விழுந்த‌ற்கான‌ கார‌ண‌த்தை ச‌ன‌ம் அல‌சிப் பிழிவ‌த‌ற்கு முன்ன‌ரே என‌க்கு அத‌ற்கான‌ கார‌ண‌ம் தெரிந்திருந்த‌து. உண்மையிலேயே ச‌ன‌ம் ஹேமாக்காவைக் குற்ற‌வாளிக்கூண்டில் ஏற்றினால் நானுமோர் சாட்சியாக‌ ஏறத்தான் வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறான பொழுதில் மவுனமாய் இருந்திருப்பேனே த‌விர‌ ஹேமாக்காவிற்கு எதிராய் எதுவும் சொல்லியிருக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்வேன். எனெனில் ஹேமாக்கா அவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வா; என‌க்கும் அவாவை எங்க‌டை அமமாவிற்கு பிற‌கு அப்ப‌டிப் பிடிக்கும்.

எங்க‌ள் வீட்டையும், ஊரிலையிலிருந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிப்ப‌து ஒரு ரோட்டுத்தான். க‌ல்லு நிர‌ப்பி தார் ஊற்றி ச‌ம‌த‌ள‌மாய் அமைப்ப‌துதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூற‌முடியாது. ஒரு வெள்ள‌வாய்க்காலாய் இருந்து கால‌ப்போக்கில் பரிணாமடைந்து ஒரு ஒழுங்கையாகிவிட்ட‌து என்றுதான் சொல்ல‌வேண்டும். ம‌ழை பெய்து வெள்ள‌ம் ஓடுகின்ற‌ வேலையில் வாழைக்குற்றியில் வ‌ள்ள‌ம் விடுவ‌த‌ற்கு மிக‌ உக‌ந்த‌ இட‌மென‌ச் சொல்ல‌லே இன்னும் சால‌ச் சிற‌ந்த‌து. அவ்வாறு எங்க‌ள் வீடுக‌ளையும், ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிக்கின்ற‌ ஒழுங்கையினூடு நீங்க‌ள் செல்வீர்க‌ளாயின் 'ட‌'வ‌டிவில் நீங்க‌ள் வ‌ல‌து கைப்ப‌க்க‌மாய் திரும்பினால் ஒரு ஹொஸ்ட‌லைக் காண்பீர்க‌ள். அங்கேதான் தூர‌ இட‌ங்க‌ளிலிருந்து வ‌ந்து பெடிய‌ன்க‌ள் ப‌டித்துக்கொண்டிருப்பார்க‌ள். ஹொஸ்ட‌லிலிருந்து பின்ப‌க்க‌மாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்ப‌வும் பூட்டிய‌ப‌டியேதான் இருக்கும். என‌வே ஹெஸ்ட‌லுக்குப் போவ‌த‌ற்கோ அல்ல‌து அங்கிருந்து வெளியே வ‌ருவ‌த‌ற்கோ நீங்க‌ள் உய‌ர‌ம் பாய‌த‌லில் தேர்ச்சி பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். எனெனில் ம‌திலேறிக் குதிக்க‌வேண்டும். என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் ஹொஸ்ட‌லில் ப‌ட‌ம் போடும்போது, ப‌ட‌ம் தொட‌ங்கிய‌பின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக்குதித்துப் போய்விடுவோம். ப‌ட‌ம் தொட‌ங்க‌ப்போகின்ற‌தென்றால் ஹொஸ்ட‌லில் இருக்கும் அண்ணாமார்க‌ள் விசில‌டிப்பார்க‌ள். நாங்க‌ள் முன்னேறிப்பாய்வ‌த‌ற்குத் த‌யாராய் ஹொஸ்ட‌ல் ம‌தில‌டிக்க‌டியில் நின்றுகொண்டு இருப்போம். ஆனால் நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும். இவ்வாறாக‌ நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்திருக்கின்றோம், சில‌ அண்ணாக்களின் பிற‌ந்த‌நாள் கொண்டாட்டங்க‌ளில் க‌ல‌ந்துகொண்டிருக்கின்றோம்.

ஹொஸ்ட‌லிருக்கும் பெடிய‌ங்க‌ளுக்கு சில‌வேளைக‌ளில் க‌ர‌ண்டில்லாவிட்டால் குளிக்க‌த் த‌ண்ணியில்லாது போய்விடும். அப்போது ம‌டடும் பின்ப‌க்க‌ கேற் திற‌க்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் வீட்டுக்கிண‌றுக‌ளில் குளிக்க‌ ஹொஸ்ட‌ல் நிர்வாக‌த்தால் அனும‌திக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால், எங்க‌டை ஊரும் அல்லோல‌க‌ல்லோல‌ப்ப‌ட்டுவிடும். இன்னும் குறிப்பாக‌ச் சொல்ல‌ப்போனால், ஊரிலையிருக்கிற‌ கும‌ர்ப்பெட்டைய‌ளுக்குத்தான் உள்ளூற‌ ம‌கிழ்ச்சி த‌தும்பியோடியபடியிருக்கும். அதுவ‌ரை வீட்டிலை அம்மாமார் 'பிள்ளை த‌ண்ணிய‌ள்ளிக்கொண்டு வாங்கோ' என்றால் ஓடிப்போய் ஒளித்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் கூட ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்றால் வாளியோடு கிண‌த்த‌டிக்கு அடிக்க‌டி போவதும் வருவதுமாய் இருப்பார்கள். கிண‌த்த‌டியில் விழிக‌ளும், புருவ‌ங்க‌ளும் நிக‌ழ்த்துகின்ற‌ உரையாட‌ல்க‌ளுக்கு காப்பிய‌ங்க‌ளின் சுவை கூட‌ நிக‌ரான‌வையா என்ப‌து ச‌ந்தேக‌ந்தான். தாங்க‌ள் இர‌க‌சியாய்ப் பெண்க‌ளால் இர‌சிக்க‌ப்ப‌டுகின்றோம் என்று, ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ளுக்கும் ந‌ன்கு தெரியும். என‌வே ஹொஸ்ட‌லை விட்டு வ‌ரும்போது ஏதோ பெரிய‌ ஊர்வ‌ல‌ம் வாற‌ மாதிரி க‌த்திக் குழறி த‌ங்க‌ளை வ‌ர‌வை ப‌றைசாற்றிக்கொண்டே வ‌ருவார்க‌ள். இன்னுஞ்சில‌ர் உற்சாக‌த்தின் மிகுதியில் சேர்ட் எல்லாம் க‌ழ‌ற்றி கையில் வைத்த‌ப‌டி, த‌ம‌து 'ஆண்மையை' காட்டமுய‌ற்சிப்பார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் எத்த‌னையோ வீடுக‌ளின் வாச‌ல்க‌ளில் இருந்து வெளிவ‌ந்த‌ பெருமூச்சுக்களின் வெப்ப‌த்தில் அடுப்புக‌ளில் தீ கூட‌ ப‌ற்றியெரிந்திருக்க‌லாம்.

இப்ப‌டி குளிக்க‌ வ‌ந்த‌ பொழுதிலோ அல்ல‌து வேறு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலோதான் ஹேமாக்காவிற்கும் சசி அண்ணாவுக்கும் நேச‌ம் முகிழ்ந்திருக்க‌வேண்டும். அவ‌ர்க‌ளுக்கிடையிலான‌ ஊடாட்டட‌ங்க‌ளுக்கு நானொரு தூதுவ‌னாக‌ மாற‌வேண்டியிருந்த‌து. க‌டித‌ப்ப‌ரிமாற்ற‌ங்க‌ள், உட‌ன‌டிச் செய்திக‌ள், திட்ட‌ மாற்ற‌ங்க‌ள் என்று ப‌ல்வேறு ப‌ரிணாங்க‌ளில் ஊழிய‌ம் செய்து அவ‌ர்க‌ளின் காத‌லுக்கு நானொரு த‌விர்க்க‌முடியாத‌ தீவிர‌ தொண்ட‌னானேன். இவ்வாறான‌ ஊழிய‌ங்க‌ளுக்கு ஹேமாக்கா த‌ங்க‌டை வீட்டில் நின்ற‌ மரங்களிலிருந்து விளாம்ப‌ழ‌ங்க‌ள், தோட‌ம்ப‌ழ‌ங்க‌ளையும், ஆல‌ம‌ர‌த்த‌டிச் ச‌ந்தியிலிருந்த‌ முருக‌ன் விலாஸில் எட்னா, க‌ண்டோஸ் வ‌கையான‌ சொக்கிலேட்டுக்க‌ளையும், வாய்ப்ப‌ன்க‌ளையும் போண்டாக்க‌ளையும் ச‌ன்மான‌மாக‌ அளித்து த‌ன‌து அன்பையும் ம‌திப்பையும் வெளிப்ப‌டுத்தியிருந்திருக்கிறார்.

ஒருநாள் இப்ப‌டித்தான் ஹேமாக்காவும், சசியண்ணாவும் ஹெஸ்ட‌ல் ம‌திலடியில் ச‌ந்திப்ப‌தாய் ஏற்பாடு. வ‌ழ‌க்க‌ம்போல‌ நிக‌ழ்வ‌துபோல‌ ஹேமாக்கா என்னை ம‌திலால் தூக்கிப்பிடிக்க‌ நான் விசில‌டித்து சசிய‌ண்ணாவுக்கு சிக்ன‌ல் அனுப்பினேன். இவ்வாறான ச‌ந்திப்புக்க‌ள் ந‌ல்லாய்ப் பொழுதுப‌ட்டு, இர‌வு மூடுகின்ற‌ ஏழும‌ணிய‌ள‌வில்தான் ந‌ட‌க்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் ச‌ன‌ ந‌ட‌மாட்ட‌ம் குறைவாயிருக்கும். அத்தோடு ச‌ன‌ம் த‌ற்செய‌லாய்க் க‌ண்டாலும் யாரென்று முகம் பார்ப்பதற்குள் த‌ப்பியோடக்கூடிய‌தாக‌வும் இருக்கும். நான் ம‌திலுக்குள்ளால் எட்டிப்பார்த்து சசிய‌ண்ணா வாறாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். குர‌லை வைத்துத்தான் அடையாள‌ம் காண‌க்கூடிய‌ள‌வுக்கு அன்று ந‌ல்ல‌ இருட்டு. என்னுடை விசில் ச‌த்த‌ம் கேட்டு வ‌ந்த‌ சசிய‌ண்ணா என்னுடைய கையைப் பிடித்தார். ஆனால் இப்ப‌டி ஒருநாளும் இறுக்க‌மாய்ப் பிடிப்ப‌தில்லையே என்று 'ஆ... கை நோகின்ற‌தென்று' நான் சொல்ல‌, 'யாரடா நீ உன‌க்கென‌ன‌ இந்த‌ நேர‌த்திலை இங்கே வேலை?' என்று ஒரு குர‌ல் கேட்ட‌து. இது நிச்ச‌யமாய் சசிய‌ண்ணாவின் குர‌லில்லை. 'ஐயோ இது ஹொஸ்ட‌ல் வோட‌னின்ரை குர‌லெல்லோ' என்று என‌க்கு உட‌ம்பு ந‌டுங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌து. த‌ப்பியோட‌லாம் என்றால் ம‌னுச‌ன் கையை விடுகிற‌தாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் தூக்குபிடித்துக்கொண்டு நிற்கிறா. 'எத‌ற்க‌டா இப்ப‌ விசில‌டித்தாய்?' என்று அந்த‌ ம‌னுச‌ன் உறுமுகிற‌து. ப‌க‌ல் வேளைக‌ளில் நாங்க‌ள் ப‌க்க‌த்திலையிருக்கிற‌ ப‌ற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது ரெனிஸ் போல் சில‌வேளைக‌ளில் ஹொஸ்ட‌லுக்குள் விழுவ‌துண்டு. அவ்வாறான‌ த‌ருண‌ங்க‌ளில் நாங்க‌ள் ம‌திலுக்கு இங்காலை நின்று 'ப‌ந்தை எடுத்துத்தாங்கோ' என்று க‌த்துவோம். அப்ப‌டியொருத்த‌ரும் எடுத்துத் த‌ர‌ இல்லையெண்டால் நாங்க‌ளாகவே ம‌திலேறிக் குதித்து ப‌ந்தை எடுப்போம். அப்ப‌டி இற‌ங்கியெடுக்கும்போது வோட‌னின் க‌ண்ணில்ப‌ட்டால் ப‌ந்து எடுக்க‌வ‌ந்தோம் என்று சொல்லித் த‌ப்பிவிடுவ‌துண்டு. இப்ப‌ வோட‌ன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு 'யார‌டா நீ யாற்றை மோன‌டா நீ'? என்று வெருட்ட‌, என‌க்கு எல்லா அறிவும் கெட்டு, 'ரெனிஸ் போல் விழுந்துவிட்ட‌து எடுக்க‌வ‌ந்த‌ன்' என்டு வாய்த‌வ‌றி உள‌றிவிட்டேன். இந்த‌ இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட‌ வ‌ருவாங்க‌ள், வேறேதோ விவகார‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து என்று வோட‌னுக்கு இப்ப‌ ந‌ல்லா விள‌ங்கிட்டுது. ச‌னிய‌ன் பிடித்த‌ ம‌னுச‌ன் என்னை விடுவ‌தாயில்லை. இனியும் இப்ப‌டிக்காரண‌ஞ் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லாவ‌ற்றையும் போட்டுக் கொடுக்க‌வேண்டிவ‌ரும் என்ற‌நிலையில் ச‌ட்டென்று வோட‌னின் பிடியிலிருந்து ஒரு கையை உத‌றியெடுத்து ந‌ல்லாய் 'நொங்கென்று' அவ‌ற்றை த‌லையில் குட்டினேன். ம‌னுச‌னுக்கு நொந்திருக்க‌வேண்டும்; மற்றக் கையின் பிடியைத் த‌வ‌ற‌விட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌மாதிரி பின்ன‌ங்கால் த‌லையில்பட எங்க‌டை வீடுக‌ளுக்கு ஓடிப்போய்ச் சேர்ந்திருந்தோம்.

எப்ப‌டிப் ப‌த்திர‌மாய் பொத்தி பொத்தி வைத்தாலும் எந்த‌ விஷ‌ய‌ம் என்றாலும் ஒருநாள் வெளியே வ‌ர‌த்தானே செய்யும். அப்ப‌டித்தான் ஒருநாள் ஹேமாக்கா-சசிய‌ண்ணா காத‌லும் ஹேமாக்கா வீட்டுக்குத் தெரிய‌வ‌ர. இர‌ண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி. அவா பிடிவாத‌மாய் சசிய‌ண்ணாவைத்தான் காத‌லிப்ப‌ன், க‌லியாண‌ங்க‌ட்டுவன் என்று நின்றிருக்கிறா. இர‌ண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டிவைத்திருக்கின‌ம். இனி பிடிவாத‌த்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விட‌த்தான் ஹேமாக்கா இப்ப‌டி கிண‌த்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப‌ ஹேமாக்காவின் காத‌ல் ஊருல‌க‌த்திற்கு எல்லாம் தெரிய‌வ‌ந்துவிட்ட‌து. இப்ப‌டியாக ஹேமாக்கா-சசியண்ணா விடயத்தில் ஒரு முடிவும் காண‌முடியாது இழுப‌றியாக‌ போன‌போதுதான் இந்திய‌ன் ஆமிப் பிர‌ச்சினை வ‌ந்த‌து. ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் பூட்ட‌ ஹொஸ்ட‌லிலிருந்த‌ பெடிய‌ங்க‌ளும் த‌ங்க‌ள் த‌ங்க‌ள் ஊருக‌ளுக்குப் போக‌த் தொட‌ங்கிட்டின‌ம். ஹேமாக்காவின் பெற்றோருக்கும் 'அப்பாடா இந்த‌ப்பிர‌ச்சினை இப்படிச் சுமுக‌மாய் முடிந்துவிட்ட‌தே' என்று பெரிய‌ நிம்ம‌தி. ஊர்ச்ச‌ன‌த்தின் வாய்க‌ளும் இப்போது ஹேமாக்காவின் க‌தையைவிட‌ இந்திய‌ ஆமிப்பிர‌ச்சினையைப் ப‌ற்றித்தான் அதிக‌ம் மென்று துப்பத் தொட‌ங்கிவிட்ட‌து. சண்டை தொடங்கியதால், என‌க்கும் ப‌ள்ளிக்கூட‌ம் இல்லையென்றப‌டியால் நானும் ஹேமாக்கா வீட்டிலைதான் அதிக‌ம் பொழுதைக் க‌ழிக்கத்தொடங்கினேன். இந்தியன் ஆமிக்கும் புலிக‌ளுக்கும் ச‌ண்டை தொட‌ங்கி எங்க‌டை ஊர்ச் ச‌ன‌மெல்லாம் உண‌வில்லாது ச‌ரியாய்க் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில். ம‌க்க‌ளைத் த‌ங்க‌ளுக்குள் உள்ளிழுக்க‌வேண்டுமென்றால் அவ்வ‌ப்போது நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌வேண்டுமென்று -உல‌க‌த்திலுள்ள‌ எல்லா அதிகார‌ அர‌சுக‌ளும் நினைப்ப‌துபோல‌- இந்திய‌ன் ஆமியும் த‌ங்க‌டை முகாங்களுக்குச் ச‌ன‌த்தைக்கூப்பிட்டு சாமான்க‌ள் கொடுப்பான‌கள். ஒரு வீட்டிலையிலிருந்தும் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ பெடிய‌ள் பெட்டைக‌ளை இந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அனுப்புவ‌தில்லை; 'எதுவுமே' ந‌ட‌க்கால‌மென்ற‌ ப‌ய‌ந்தான். ஆக‌வே ப‌த்துவ‌ய‌சுக்குள்ளையிருந்த‌ என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள்தான் ஆமிக்கார‌ன் த‌ருகின்ற‌ நிவார‌ண‌த்துக்கு கியூவிலை நிற்ப‌ம். ஒருமுறை ஆமிக்கார‌ன் த‌ன்ரை ஹெல்மெட்டாலை அள்ளிய‌ள்ளி கோதுமை மாவை நிவார‌ணமாகத் தந்த‌பொழுதில்தான், காவ‌லில் நின்ற‌ இன்னொரு ஆமிக்கார‌ன் என்னைக் கூப்பிட்டு ஒரு கூலிங் கிளாஸைத் த‌ந்தான். என‌க்கென்டால் அந்த‌மாதிரிச் ச‌ந்தோச‌ம். அவ்வ‌ள‌வு பேர் கியூவிலை நிற்கேக்கை என‌க்கு ம‌ட்டும் ஆமிக்கார‌ன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான ஏதோ வித்தியாச‌மானவனாய்த்தானே இருக்க‌வேண்டும். நான் ஊருக்குள்ளை ஓடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிற‌ங்கி ஆமிக்கார‌ன் என‌க்கு 'கூல்டிங்' கிளாஸ் த‌ந்துவிட்டான் என்று பெருமைய‌டித்துக்கொண்டிருந்தேன். 'அது 'கூல்டிங்' கிளாஸ் இல்லைய‌டா கூலிங் கிளாஸ்' என்று ஹேமாக்கா தான் திருத்தினா. 'உங்க‌ளுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்க‌வில்லை என்று பொறாமை அதுதான் நான் சொல்வ‌தை நீங்க‌ள் பிழையெண்டிறிய‌ள்' என்று நான் சொல்ல‌ ஹேமா சிரித்துக்கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிற‌து எவ்வ‌ள‌வு அழ‌கு. அவாவின்ரை ப‌ற்க‌ளின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்ப‌தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவ‌ங்க‌டை வீட்டிலை தனியே இருக்கேக்கை இந்தியன் ஆமிக்கார‌ன்க‌ள் செக்கிங்குக்கு என்டு வ‌ந்தாங்க‌ள். செக்கிங்கில் வ‌ந்த‌ ஆமிக்கார‌ங்க‌ளில் என‌க்கு கூலிங்கிளாஸ் த‌ந்த ஆமிக்கார‌னுமிருந்தான். நான் அப்போதும் அந்த‌ கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த‌ ஆமிக்கார‌ன், bomb bomb என்றான். எங்கையோ குண்டை ஒளித்துவைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல‌ என்று முதலில் நினைத்தேன். No Sir No Bomb என்று ஹேமாக்கா த‌ன‌க்குத் தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்னா...ஆமிக்கார‌ன் bomb bomb என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருந்தான். you bomb என்றான்....ஹேமாக்கா bomb ஒளித்துவைத்திருக்கிறா என்றமாதிரி அவாவோடை மார்பைப் பிடித்தான்....அக்காவிற்கு என்ன செய்வ‌தென்டு திகைப்பு....நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற‌ன் என்று ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வ‌ந்திருக்கோனும். you bomb you bomb என்று சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த‌ அறைக்குள்ளை ஹேமாக்காவைக் கொண்டு போனான்...நான் விளையாடுகின்ற‌மாதிரி பாவனை செய்துகொண்டு ஓர‌க்கண்ணால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த‌ அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் பூட்ட‌ப்ப‌டும். ஆமிக்கார‌னுக்கு 'செக்கிங்குக்காய்' அடுத்த‌ வீட்டுப் போகும் அவ‌ச‌ர‌மோ அல்ல‌து கொக்கி போட்டு அறையை மூடினால் நான் க‌த்தி சனத்தைக் கூட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது...மெல்லிய‌தாய் க‌தவைச் சாத்தினான்...அதனால் அறை முழுதாய் மூடப்ப‌டாது கொஞ்ச‌ம் நீக்க‌லுட‌ன் திற‌ந்த‌ப‌டியிருந்த‌து. you bomb bomb என்டு ஹேமாக்காவின் ச‌ட்டையைக் க‌ழ‌ற்ற‌ச் சொன்னான். பிற‌கு அக்காவைச் சுவ‌ரோடு அழுத்தியபடி ஆமிக்கார‌னின் பின்புற‌ம் அங்குமிங்குமாய் அசைவ‌தும‌ட்டுமே தெரிந்த‌து. ஆமிக்கார‌ன் 'செக்கிங்' முடித்துப்போன‌போது என‌க்கு அவ‌ன் த‌ந்த‌ கூலிங்கிளாஸ் பிடிக்க‌வில்லை. வீட்டை அதைக் கொண்டுபோய் அம்மம்மா பாக்கு இடிக்கிற‌ க‌ட்டையாலை அதை அடித்து உடைத்தேன்.

இந்திய‌ன் ஆமி வெளிக்கிட‌, வ‌ந்த‌ பிரேம‌தாசாவின் ஆட்சிக்கால‌த்தில் சசிய‌ண்ணா ஒருநாள் எங்க‌ள் ஊருக்கு வ‌ந்திருந்தார். எல்லாச் ச‌னிய‌னும் இந்திய‌ன் ஆமிக்கால‌த்தோடு ஒழிந்துவிட்ட‌தென‌ நினைத்த‌ ஹேமாக்காவின் பெற்றோருக்கு, சசிய‌ண்ணா த‌ன‌க்கு ஹேமாக்காவைக் க‌லியாண‌ங்க‌ட்டித்த‌ர‌க்கேட்ப‌த‌ற்காய் வ‌ந்திருந்த‌து அதிர்ச்சியாயிருந்த‌து. ஏற்க‌ன‌வே எடுத்த முடிவையே திரும்ப‌வும் சொன்னார்க‌ள். 'ஏலாது' என்று ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய்ச் சொன்ன‌தோடு, சசிய‌ண்ணா திரும்பி அவ‌ருடைய ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்த‌ ஒருபொழுதில் ஹேமாக்காவைக் காண‌வில்லையென்று ஊரெல்லாம் தேட‌த்தொட‌ங்கியது. பிற‌கு ஹேமாக்கா சசிய‌ண்ணாவோடு சேர்ந்து ஓடிப் போய்விட்டா என்ப‌து எல்லோருக்குந் தெரிய‌வ‌ந்த‌து. 'ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இட‌த்திற்கு ஓடிப்போன‌வா?' என்று அம்மாட்டை நான் கேட்ட‌த‌ற்கு, 'சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்றுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்க‌ளில் அப்ப‌டி ஹேமாககா ஓடிப்போன‌த‌ற்கு சசிய‌ண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற‌ கார‌ண‌த்தை அறிந்தேன். ஊரிலையிருந்து ச‌ன‌ம் கொழும்புக்குப் போய்விட்டு வ‌ருகின்ற‌போது ஹேமாக்காவும், சசிய‌ண்ணாவும் கிளிநொச்சிப் ப‌க்க‌மாய் இருக்கின‌ம் என்று த‌க‌வ‌லை அறிந்து சொல்லிச்சு. நாள‌டைவில் ஹேமாக்காவை ம‌ற‌க்க‌ வைக்கும்ப‌டி போர் எங்க‌டை ஊர்ப்ப‌க்க‌மாய் திரும்ப‌வும் உக்கிர‌மாக‌த் தொட‌ங்கிய‌து.

4.
95ம் ஆண்டு யாழில் நிக‌ழ்ந்த‌ பெரும் இடம்பெய‌ர்வின்போது எங்க‌ளுக்கு முத‌லில் அடைக்க‌லந்த‌ந்த‌து ஹேமாக்க‌வும் சசிய‌ண்ணாவுந்தான். காட்டையும் குள‌த்தையும் அண்டியிருந்த‌ அவைய‌ளின்றை ம‌ண்ணால் மெழுகிப் பூசியிருந்த‌ வீடு உண்மையிலேயே அந்த‌ நேர‌த்திலே சொர்க்க‌மாய்த்தானிருந்த‌து. சில‌ மாத‌ங்க‌ள் ஹேமாக்கா வீட்டையிருந்துவிட்டு நாங்க‌ள் த‌னியே இன்னொரு இட‌த்திற்குப் போயிருந்தோம். ஆனால் அதிக‌மாய் ஒவ்வொரு பின்னேர‌மும் நான் ஹேமாக்கா வீட்டுப்பக்கமாய் வ‌ந்துபோய்க்கொண்டிருந்தேன். ப‌தின்ம‌ங்க‌ளில் நான் இருந்த‌ ப‌ருவ‌ம். எல்லாவ‌ற்றையும் மூர்க்க‌மாய் நிராக‌ரித்துக்கொண்டு நான் ம‌ட்டும் சொல்வ‌து, செய்வ‌தே ச‌ரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த‌ கால‌ம‌து. நானும் சசிய‌ண்ணாவும் அடிக்க‌டி அர‌சிய‌ல் பேசிச் சூடாகிக் கொண்டிருப்போம். அவ‌ருக்கு எங்க‌டை பிர‌ச்சினையில் நிதான‌மாய் இந்தியாவை அணுகியிருக்க‌வேணும் என்ற‌ ஒரு எண்ண‌ம் இருந்த‌து. அதாவ‌து இந்தியாவோடு அணுச‌ர‌ணையாய் இருந்திருந்தால் எங்க‌ளின் பிர‌ச்சினை எப்ப‌வோ தீர்ந்திருக்குமென்ப‌து அவ‌ருடைய‌ அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை. எங்க‌ளின் இந்த‌ முர‌ண் அர‌சியல் விவாத‌ங்க‌ளை சில‌வேளைகளில் செவிம‌டுக்கிற‌ ஹேமாக்கா, 'உங்க‌ள் இர‌ண்டுபேராலையே ஒரு விச‌ய‌த்துக்கு பொதுவான‌ முடிவுக்கு வ‌ர‌முடியாது இருக்கும்போது எப்ப‌டித்தான் எங்கடை ச‌ன‌த்துக்கு எல்லாம் பொதுவாய் வாற‌ தீர்வு கிடைக்க‌ப்போகின்ற‌தோ தெரியாது' என்று சிரித்துக்கொண்டு சொல்லுவா.

ஒருநாள் இப்ப‌டித்தான் வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌ல் பேசி நான் மிக‌வும் கொந்த‌ளித்துக்கொண்டிருநத‌ நேர‌ம். அந்த‌ நேர‌த்தில் சசிய‌ண்ணாவை அடித்தால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை என்ற‌மாதிரி அவர் மீதான கோப‌ம் நாடி ந‌ர‌ம்புக‌ளில் ஏறிக்கொண்டிருந்த‌போது என்னைய‌றியாம‌லே, 'நீங்க‌ள் ஒரு ம‌னுசரே, எங்கடை ஹேமாக்காவை இந்திய‌ன் ஆமி கெடுத்தாப்பிற‌கும் அவ‌ங்க‌ளைச் ச‌ப்போர்ட் ப‌ண்ணிக்கொண்டிருக்கிறிய‌ள்' என்றேன். என‌க்கே நான் என்ன‌ சொன்னேன் என்று அறிய‌முடியாத‌ உண‌ர்ச்சியின் கொந்த‌ளிப்பு. யாரோ க‌ன்ன‌த்தில் ப‌டாரென்று அறிந்த‌மாதிரி ச‌ட்டென்று எங்கள் எல்லோருக்குள்ளும் தாங்கிக்கொள்ள‌வே முடியாத‌ மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் கவிழ்ந்திருந்தது. அதுவரை வாஞ்சையோடு என்னைப் பார்க்கும் ஹேமாக்காவின் விழிக‌ள் அப்ப‌டியே உறைந்துபோயிருந்த‌ன. என்ன‌ வித‌மான‌ உண‌ர்ச்சியென்று இன‌ம்பிரித்தறியா முடியாத‌ள‌வுக்கு நான் குற்ற‌த்தின் க‌ட‌லுக்குள் மூழ்க‌த்தொட‌ங்கியிருந்தேன். எதுவுமே சொல்லாம‌ல் எவ‌ரிட‌மும் முறையாக‌ விடைபெறாது நான் வீட்டை போய்ச் சேர்ந்திருந்தேன்.

அடுத்த‌ நாள் விடிய‌ அம்மா, 'டேய் த‌ம்பி ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு ச‌ன‌ம் சொல்லுது... ஓடிப்போய் என்ன‌ நடந்ததெண்டு பார்த்திட்டு வா' என்று ப‌ட‌பட‌வென்டு கையால் த‌ட்டி எழுப்புகிறா. நான் வோட‌ன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட‌ வேகமாய் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று அறிய‌ சைக்கிளையெடுத்துக்கொண்டு ஓடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்றும் ந‌ட‌ந்திருக்க‌க்கூடாது என்று எங‌கள் ஊர் வைர‌வ‌ரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குள‌த்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வ‌ருகின‌ம். 'ஐயோ ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா எல்லோரும் ஓடிவாங்கோ' என்று, சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்போது க‌த்த‌முடியாது நான் உறைந்துபோய் நிற்கின்றேன். சசிய‌ண்ணா என் கையைப்பிடித்துக்கொண்டு, 'இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை' என்று ந‌டுங்கும் குர‌லில் சொல்லிக்கொண்டு இருந்தது என‌க்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிற‌து. 'ஹேமாக்கா எழும்புங்கோ நான் வ‌ந்திருக்கின்றேன். உங்க‌ளுக்குத் தெரியுமா உங்க‌ளுக்கு அண்டைக்கு ஆமி அப்ப‌டிச் செய்த‌தைப் பார்த்த‌போது நான் அவ்வளவு காலமும் க‌வ‌ன‌மாய்ப் பொத்திவைத்திருந்த‌ கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கின‌வ‌ன்.... நீங்க‌ள் எப்ப‌வும் எங்க‌டை ஹேமாக்காதான். எழும்புங்கோ...எழும்புங்கோ' என்டு ம‌ன‌ம் விடடுக்குழ‌றி அழ‌வேண்டும் போல‌ இருக்கிற‌து. கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ளால் ம‌ன‌தை லேசாக்க‌ அழ‌முடிய‌வதில்லை; உள்ளுக்குள்ளேயே ம‌றுகி உருகி த‌ங்க‌ளின் பாவ‌ங்கள் எப்ப‌வாவ‌து க‌ரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்க‌வேண்டிய‌துதான்.



ந‌ன்றி: கால‌ம் (2009)

மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ. நுஃமான்

Monday, May 25, 2009

உயிர்த் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது

உயிர் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போது
கூலிக்கு மார‌டிப்போரிட‌மிருந்து அவ‌ர்க‌ளைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌
நான் விழித்திருக்கிறேன்

நான் அவ‌ர்க‌ளுக்குச் சொல்கிறேன்:
நீங்க‌ள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்
அங்கு முகில்க‌ளும், ம‌ர‌ங்க‌ளும், கான‌லும், நீரும் இருக்கும்

ந‌ம்ப‌முடியாத‌ நிக‌ழ்விலிருந்து,
ப‌டுகொலைக‌ளின் உப‌ரி மதிப்பிலிருந்து
அவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருப்ப‌தையிட்டு
நான் அவ‌ர்க‌ளைப் பாராட்டுகிறேன்

நான் கால‌த்தைத் திருடுகிறேன்
ஆக‌வே அவ‌ர்க‌ள் என்னைக் கால‌த்திலிருந்து இழுத்தெடுக்க‌ முடியும்
நாம் எல்லோரும் உயிர்த்தியாகிக‌ளா?

நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,
ஒரு சுவ‌ரைத் துணிக்கொடி க‌ட்டுவ‌த‌ற்கு விட்டுவையுங்க‌ள்,
ஒரு இர‌வைப் பாடுவ‌த‌ற்கு விட்டுவையுங்கள்

நீங்க‌ள் விரும்பும் இட‌த்தில் உங்க‌ள் பெய‌ர்க‌ளைத் தொங்க‌விடுவேன்,
ஆக‌வே ச‌ற்றுத் தூங்குங்க‌ள்
புளித் திராட்சையின் ஏணிப்ப‌டியில் தூங்குங்க‌ள்

உங்க‌ள் காவ‌ல‌ரின் குத்துவாளிலிருந்து
நான் உங்க‌ள் க‌ன‌வுக‌ளைப் பாதுகாப்பேன்
தீர்க்க‌த‌ரிசிக‌ளுக்கு எதிரான‌ புத்த‌க‌த்தின் ச‌தியிலிருந்து
நான் உங்ளைப் பாதுகாப்பேன்

இன்றிர‌வு தூங்க‌ச் செல்கையில்
பாட‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளின் பாட‌லாய் இருங்க‌ள்

நான் உங்க‌ளுக்குச் சொல்கிறேன்:
நீங்க‌ள் ஒரு புதிய‌ தேச‌த்தில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்
ஆனால், அதை ஒரு பாய்ந்து செல்லும் பெண் குதிரையின்மீது வையுங்க‌ள்

நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,
நீங்க‌ள் எம்மைப்போல் ஒருபோதும் இன‌ந்தெரியாத‌
தூக்குமேடையின்
சுருக்குக் க‌யிறாக‌ இருக்க‌மாட்டீர்க‌ள்.


ம‌னித‌னைப் ப‌ற்றி

அவ‌ன‌து வாயில் துணிக‌ளை அடைத்த‌ன‌ர்
கைக‌ளைப் பிணைத்து
ம‌ர‌ணப் பாறையுட‌ன் இறுக‌க் க‌ட்டின‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு கொலைகார‌ன் என்று

அவ‌ன‌து உண‌வையும் உடைக‌ளையும்
கொடிக‌ளையும் க‌வ‌ர்ந்து சென்ற‌ன‌ர்
ம‌ர‌ண‌ கூட‌த்தினுள் அவ‌னை வீசி எறிந்த‌ன‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு திருட‌ன் என்று

அவ‌ன் எல்லாத் துறைமுக‌ங்க‌ளில் இருந்தும்
துர‌த்த‌ப்ப‌ட்டான்
அவ‌ன‌து அன்புக்குரிய‌வ‌ளையும்
அவ‌ர்க‌ள் தூக்கிச் சென்ற‌ன‌ர்
பின்ன‌ர் கூறின‌ர்
நீ ஒரு அக‌தி என்று

தீப்பொறி க‌ன‌லும் விழிக‌ளும்
இர‌த்த‌ம் ப‌டிந்த‌ க‌ர‌ங்க‌ளும் உடைய‌வ‌னே
இர‌வு குறுகிய‌து
சிறைச்சாலைக‌ள்
என்றென்றைக்கும் எஞ்சியிரா
ச‌ங்கிலிக் க‌ணுக்க‌ளும் எஞ்சியிரா
நீரோ இற‌ந்துவிட்டான்
ரோம் இன்னும் இற‌க்க‌வில்லை
அவ‌ள் த‌ன் க‌ண்க‌ளாலேயே இன்றும் போரிடுகிறாள்
காய்ந்து போன‌ ஒரு கோதுமைக் க‌திரின் விதைக‌ள்
கோடிக்க‌ண‌க்கில் ப‌சிய‌ க‌திர்க‌ளால்
ச‌ம‌வெளியை நிர‌ப்ப‌வே செய்யும்.


தாய்நாடு

ஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு
என்னைத் தூக்கிலிடு,
நான் ஈச்சையை வ‌ஞ்சிக்க‌மாட்டேன்

இந்த‌ நாடு என‌து.
நீண்ட‌ கால‌த்துக்கு முன்பு ந‌ல்ல‌, கெட்ட‌ ம‌ன‌நிலைக‌ளில்
நான் ஒட்ட‌க‌ங்க‌ளில் பால் க‌ற‌ந்திருக்கின்றேன்

என் தாய்நாடு வீர‌ப்ப‌ழ‌ங்க‌தைக‌ளின் ஒரு பொதிய‌ல்ல‌
அது ஒரு நினைவோ, இள‌ம்பிறைக‌ளின் ஒரு வ‌ய‌லோ அல்ல‌

என‌து தாய்நாடு ஒரு க‌தையோ அல்ல‌து கீத‌மோ அல்ல‌
ஏதோ ம‌ல்லிகைச் செடியின் கிளையில் விழும் வெளிச்ச‌மும் அல்ல‌

என‌து தாய்நாடு, நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வ‌னின் கோப‌ம்
முத்த‌மும் அர‌வ‌ணைப்பும் வேண்டும் ஒரு குழ‌ந்தை.

ஒரு சிறைக்கூட‌த்தில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ காற்று
த‌ன் ம‌க‌ன்க‌ளுக்கும் த‌ன் வ‌ய‌லுக்குமாக‌த்
துக்க‌ம் அனுஷ்டிக்கும் ஒரு கிழ‌வ‌ன்

இந்த‌ நாடு என் எலும்புக‌ளைப் போர்த்தியிருக்கும் தோல்
என் இத‌ய‌ம் ஒரு தேனீபோல் அத‌ன் புற்க‌ளுக்கு மேலால் ப‌ற‌க்கிற‌து

ஈச்சைம‌ர‌த்தின் பாளைக‌ளில் என்னைத் தொங்க‌விடு
என்னைத் தூக்கிலிடு
நான் ஈச்சையை வ‌ஞ்சிக்க‌மாட்டேன்.


நான் அங்கு பிற‌ந்தேன்

நான் அங்குதான் பிற‌ந்தேன்
என‌க்கு நினைவுக‌ள் உள்ள‌ன‌
ம‌னித‌ர்க‌ள் போல‌வே நான் பிற‌ந்தேன்
என‌க்கு ஒரு தாய் இருக்கிறாள்
ப‌ல‌ ஜ‌ன்ன‌ல்க‌ள் உள்ள‌ ஒரு வீடும் உண்டு
ச‌கோத‌ர‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர்
இத‌ய‌ம‌ற்ற‌ ஜ‌ன்ன‌லுட‌ன் ஒரு சிறைக்கூட‌மும் உள்ள‌து
நீர்ப்ப‌ற‌வை எழுப்பிய‌ அலை என‌துதான்
என‌க்கென்று சொந்த‌ப்பார்வை உண்டு
ஒரு மேல‌திக‌ புல் இத‌ழும் உண்டு
உல‌கின் தொலைதூர‌ச் ச‌ந்திர‌ன் என‌துதான்
ப‌ற‌வைக் கூட்ட‌ங்க‌ளும்
அழிவ‌ற்ற‌ ஒலிவ‌ ம‌ர‌மும் என‌துதான்
வாள்க‌ளுக்கு முன்பு நான் இந்த‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்தேன்
அத‌ன் வாழும் உட‌லை ஒரு துய‌ர‌ மேசையாக்கினேன்

நான் அங்குதான் பிற‌ந்தேன்
வான‌ம் த‌ன் தாய்க்காக‌ அழுத‌போது
நான் வான‌த்தை அத‌ன் தாயாக‌ மாற்றினேன்.
திரும்பிவ‌ரும் மேக‌ம் என்னைத் தெரிந்துகொள்வ‌த‌ற்காக‌
நானும் அழுதேன்.
இர‌த்த‌ நீதிம‌ன்ற‌த்துக்குரிய‌ எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்றேன்
அத‌னால் விதியை என்னால் மீற‌முடிந்த‌து
நான் எல்லாச் சொற்க‌ளையும் க‌ற்று
பின்ன‌ர் அவ‌ற்றை உடைத்தேன்
ஒரேயொரு சொல்லை உருவாக்க‌: அதுதான் என் தாய்நாடு


ந‌ன்றி: மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் (அடையாள‌ம் ப‌திப்ப‌க‌ம்)

குறிப்பு: 'இந்நூலில் உள்ள‌ ஏதாவ‌து ஒரு ப‌குதியைப் ப‌ய‌ன்ப‌டுத்துவோர் மொழிபெய‌ர்ப்பாள‌ருக்கோ வெளியீட்டாள‌ருக்கோ தெரிவிக்க‌ வேண்டுகிறோம்' என்ற‌ குறிப்பு நூலில் உள்ள‌து. த‌னிப்ப‌ட்டு எம்.ஏ.நுஃமானிட‌ம் இவற்றைப் ப‌திவிடுவ‌த‌ற்காய் அனும‌தி வாங்கியிருந்தேன். எவ‌ராவ‌து இவ‌ற்றை மீள்பிர‌சுர‌ம் செய்வ‌தாயின் த‌ய‌வுசெய்து உரிய‌வ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி பெற‌வும். ந‌ன்றி

காத‌லும் சாக‌ச‌மும் சில‌ க‌ன‌வுக‌ளும்

Wednesday, May 06, 2009

-Sin Nombre ஸ்பானிய‌ திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-

"…though your sins are like scarlet, they shall be as white as snow… ”
(Isaiah 1:18, NKJ)
காதலும் சாக‌ச‌ங்க‌ளும் இல்லாது வாழ்க்கை ந‌க‌ர்வ‌தில்லை. கால‌ங்கால‌மாய் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌ காத‌ல், அவ‌ர‌வ‌ர் அள‌வில் த‌னித்துவ‌மாய் இருக்கிற‌து. ஒவ்வொருத்த‌ருக்கும் அவ‌ர்க‌ளின் காத‌ல் அனுப‌வ‌ங்க‌ள் சிலிர்ப்ப‌டைய‌ச் செய்வ‌தாக‌வோ, ச‌லிப்பைப் பிதுக்கித் த‌ள்ளுவ‌தாக‌வோ, துரோக‌த்தை நினைவூட்டுவ‌தாக‌வோ அமைந்துவிட‌வும் கூடும். ஒரு கால‌த்தில் புதிய‌ நாடுக‌ளைக் க‌ண்டுபிடிக்க‌ க‌ப்ப‌லில் புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு சாக‌ச‌ ம‌ன‌து அதிக‌ம் வேண்டியிருந்த‌து. இன்னும் சில‌ரோ த‌ம‌து காத‌லுக்காய்ப் பிற‌ நாடுக‌ளைச் சூறையாடியுமிருக்கின்றார்க‌ள். இன்று உல‌க‌ம‌யமாத‌ல் நில‌ப்பர‌ப்புக்க‌ளை இன்னுஞ் சுருக்க‌வும்/சுர‌ண்ட‌வும் செய்ய‌, வ‌றுமையிலிருந்தும் வ‌ன்முறைக‌ளிலிருந்தும்த‌ப்பி ஒரு வ‌ச‌தியான‌ வாழ்வை அமைப்ப‌த‌ற்காய் ம‌க்க‌ள் புல‌ம்பெய‌ர‌ச் செய்கின்ற‌ன‌ர்.


ஹ‌ண்டோர‌ஸில் இருக்கும் ஸ‌யீராவையும் (Sayra), அவ‌ர‌து மாமாவையும் அமெரிக்காவிற்குக் கூட்டிப்போக‌, த‌ந்தை நியூ ஜேர்சியிலிருந்து வ‌ருகின்றார். ஆனால் இவ‌ர்க‌ளிருவ‌ரையும் முறையான‌ வ‌கையில் அமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்ல‌ முடியாது. எனெனில் இவ‌ர்க‌ளிட‌ம் எல்லை க‌ட‌ப்ப‌த‌ற்கான‌ விஸா கிடையாது. ஹ‌ண்டோர‌ஸில் இருந்து மெக்சிக்கோ எல்லை வ‌ரை முத‌லில் போக‌வேண்டும். அதுவே மிகுந்த‌ ஆப‌த்தான‌ பய‌ண‌மாகும். பிற‌கு மெக்சிக்கோ எல்லையிலிருந்து மெக்சிக்கோ‍-அமெரிக்கா எல்லைப் பாதுகாவ‌ல‌ரின் க‌ண்ணில் ம‌ண்ணைத் தூவிவிட்டு அமெரிக்காவுக்கு எல்லை க‌ட‌க்க‌வேண்டும்.

ஸ‌யீராவும், அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் தோட்ட‌ங்க‌ளினூடாக‌வும் குறுகிய‌ பாதைக‌ளினூடாக‌வும் தொட‌ர்ச்சியாக‌ ந‌ட‌ந்து சென்று, சர‌க்குக‌ளை ஏற்றிச்செல்லும் ரெயினொன்றில் ஏறுகின்றார்க‌ள். ரெயினில் உரிய‌தான‌ இருக்கைக‌ள் கிடையாது. மேற்கூரையிலோ அல்ல‌து பொருட்க‌ள் ஏற்றிய‌து போக‌ மிச்ச‌மிருக்கும் சொற்ப‌ இட‌த்திலோ நெருக்கி உட்கார‌ வேண்டும். அவ்வ‌போது ரெயில் த‌ரித்து நிற்கும்போது த‌ண்ட‌வாள‌த்திலேயே ப‌டுத்தும், அருகிலிருக்கும் வ‌ச‌தி குறைந்த‌ இட‌த்தில் குளிய‌ல்/இன்ன‌பிற‌ இய‌ற்கை உபாதைக‌ளைச் செய்வ‌த‌ற்காய் இட‌ங்க‌ளைத் தேடியாக‌ வேண்டும்.


ரெயினின் மேற்கூரையில் ஸ‌யீராவும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் உட்கார்ந்து ப‌ய‌ணிக்கின்றார்க‌ள். இர‌வோ, குளிரோ, காற்றோ எல்லாவ‌றையும் தூக்க‌மில்லாது த‌ம‌து எதிர்கால‌க் 'க‌ன‌வு' வாழ்க்கைக்காய்த் தாங்கிக்கொள்கின்றார்க‌ள். அவ்வ‌ப்போது சில‌ எல்லைக‌ளைக் க‌ட‌க்கும்போது பொலிஸின் கைக‌ளில் பிடிப‌டாம‌ல் ரெயினிலிருந்து இற‌ங்கி ஓடி ஒளிந்தோ அல்ல‌து இல‌ஞ்ச‌ம் கொடுத்தோதான் போக‌வேண்டியிருக்கிற‌து. இவ்வாறாக‌ ஸயிரா குடும்ப‌த்தின‌ரின் ப‌ய‌ண‌ம் ஒரு புற‌த்தில் நிக‌ழ்ந்துகொண்டிருக்க‌, இன்னொரு க‌தை இத‌ற்குச் ச‌மாந்த‌ர‌மாய்ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து.

மெக்ஸிக்கோவில் இருக்கும் ப‌ல்வேறு வ‌ன்முறைக் குழுக்க‌ளில் ஒன்றில் விலி(Willy) உறுப்பின‌ராய் இருக்கின்றார். கொலை, கொள்ளை, போதை ம‌ருந்து க‌ட‌த்த‌ல் என‌ எல்லாவித‌ செயல்க‌ளையும் எவ்வித‌ குற்ற‌வுண‌ர்வும் இன்றிச் செய்கின்றார்க‌ள். த‌ங்க‌ள் எதிராளிக் குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌க‌ளை -நாம் நினைத்தே பார்க்க‌முடியாத‌ அள‌வில்- சித்திர‌வ‌தைக‌ள் செய்து கொலை செய்கின்றார்க‌ள். புதிதாக‌த் த‌ங்க‌ள் குழுவில் உறுப்பின‌ர்க‌ளைச் சேர்க்கும்போதும் அவ‌ர்க‌ள் எவ்வ‌ள‌வு உறுதியான‌வ‌ர்க‌ள் என்ப‌தை அறிய‌, மூர்க்கமான‌ உட‌ல்வ‌தை செய்து தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்க‌ள். தாம் இந்த‌க் குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்ப‌தைப் பெருமித‌மாக‌க் காட்டுவ‌த‌ற்கும், பிற‌ரை அச்சுறுத்த‌ச் செய்வ‌த‌ற்குமாய் -எந்த‌க்கால‌த்திலும் அழிய‌ முடியாத‌வ‌ள‌வுக்கு- த‌ம‌து குழுவின் பெய‌ரைப் ப‌ச்சைக் குத்திக்கொள்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுடைய‌ செய‌ற்பாடுக‌ள் மெக்சிக்கோவில் ம‌ட்டுமில்லாது அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ள் தாண்டிய‌ அள‌வில் இருக்கிற‌து.

ப‌தின்ம‌ வ‌ய‌திலிருக்கும் விலி, ப‌த்து ப‌தினொரு வ‌ய‌திருக்கும் ஒரு சிறுவ‌னை த‌ங்க‌ள் குழுவுக்குக் கொண்டுவ‌ந்து சேர்க்கின்றான். சிறுவ‌னைக் குழுவில் சேர்க்க‌முன்ன‌ர் குழுவைச் சேர்ந்த‌ எல்லோரும் அடித்து உதைத்து அவ‌னை 'வீர‌னா'க்குகின்றார்க‌ள். க‌ள‌ம் ப‌ல‌ காண்ப‌த‌ற்கு 'க‌ன்னி' முய‌ற்சியாக‌ ஏற்க‌ன‌வே பிடித்து வைத்திருந்த‌ எதிர்க்குழுவின‌ன் ஒருவ‌னைச் சுட்டுக்கொல்ல‌ சிறுவ‌ன‌ ப‌ணிக்க‌ப்ப‌டுகின்றான். சிறுவ‌னும், விலியின் உத‌வியோடு தன‌க்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியைச் செவ்வ‌னே செய்து முடிக்கின்றான்.

இவ்வாறு ஒரு கொடூர‌மான‌ குழுவிலிருக்கும் விலிக்கு காத‌லால் வில்ல‌ங்க‌ம் வ‌ருகின்ற‌து. சாதார‌ண‌மாக‌ இவ்வாறான‌ குழுக்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் குழுக்க‌ளைச் சார்ந்த‌ பெண்க‌ளோடு ப‌ழ‌குவ‌தைத் த‌விர்த்து பிற‌ பெண்க‌ளோடு ப‌ழ‌க‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ப‌து உல‌கிலுள்ள‌ அநேக‌ வ‌ன்முறைக் குழுக்க‌ளுக்குப் பொதுவான‌ ஒன்று. இங்கே விலி வெளியிலிருக்கும் ஒரு பெண்ணை நேசிக்கின்றான். தான் ப‌ழ‌க்கியெடுத்த‌ சிறுவ‌னைக் காவ‌லுக்கு விட்டுவிட்டு அப்பெண்ணோடு காத‌ல் ச‌ர‌ச‌மாடுகின்றான். விலிக்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வேலையையெல்லாம் ஒழுங்காக‌ச் செய்யாது விலி காத‌ற்போதையில் மூழ்கிக் கிட‌ப்ப‌தைக் குழுத்த‌லைவ‌ன் க‌ண்டுபிடிக்கின்றான். ஒருநாள் அவ‌ர்க‌ளின் குழுவிருக்கும் இட‌த்துக்கு வ‌ரும் விலியின் காத‌லியை பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்ய‌ குழுத்த‌லைவ‌ன் முற்ப‌ட‌, அதிலிருந்து த‌ப்பிக்க‌ முய‌லும் விலியின் காத‌லியைத் த‌லைவ‌ன் அடிக்க‌ அவ‌ள் த‌லை மோதி இற‌ந்துவிடுகின்றாள். த‌ன் காத‌லிக்கு நிக‌ழ்ந்த‌து குறித்து அறிந்தும் விலியால் ஒன்றும் செய்ய‌முடிய‌வில்லை. குழுவிற்கோ, குழுத்த‌லைவ‌னுக்கோ எதிராக‌ குர‌ல் எழுப்புவ‌ர்க‌ள் நீண்ட‌கால‌ம் உயிரோடு இருந்த‌தாய் அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ர‌லாற்றில் இல்லை. இவ்வாறாக‌ துய‌ர‌த்தையும் வெஞ்சின‌த்தையும் த‌ன‌க்குள்ளே அட‌க்கி வைத்திருக்கும் விலியை, ஒருநாள் கொள்ளை அடிக்க‌ப் போவ‌த‌ற்காய் குழுத்த‌லைவ‌ன் கூப்பிடுகின்றான். கூட‌வே விலி ப‌ழ‌க்கிய‌ சிறுவ‌னும் போகின்றான். இவ‌ர்க‌ள் கொள்ளைய‌டிக்க‌த் தேர்ந்தெடுத்த‌ இட‌ம், ஸ‌யிராவும், த‌க‌ப்ப‌னும் வ‌ந்துகொண்டிருக்கின்ற‌ கூட்ஸ் ரெயின்.

த‌ம‌து ஆயுத‌ங்க‌ளைக் காட்டிப் ப‌ண‌த்தையும் உடைமைக‌ளையும் ப‌றிக்கின்ற‌ விலியின் குழுத்த‌லைவ‌னுக்கு, ச‌யீரா மீது ச‌ப‌ல‌ம் ஏற்ப‌டுகின்ற‌து. ச‌யீராவைதக் குழுத்த‌லைவ‌ன் அடுத்து என்ன‌ச் செய்ய‌ப்போகின்றான் என்ப‌தை உய்த்துண‌ர‌க்கூடிய‌ விலி -பின்விளைவுக‌ள் குறித்து யோசிக்காது- ரெயினின் மேற்கூரையில் வைத்துக் கொன்று விடுகின்றான். கூட‌வே இருக்கும் சிறுவ‌னையும் ஓடிப்போய்விடு என்று துர‌த்திவிடுகின்றான். அடுத்து என்ன‌ செய்வ‌து என்று அறிய‌ முடியாது -தொட‌ர்ந்து அந்த‌ ரெயினிலேயே- ப‌ய‌ணிக்கின்றான். கூட‌ப்ப‌ய‌ணிக்கும் ப‌ய‌ணிகளுக்கு இப்ப‌டியொரு வ‌ழிப‌றிக் க‌ள்வ‌னோடு/கொலைகார‌னோடு ப‌ய‌ணிப்ப‌தில் உட‌ன்பாடில்லை. அவ‌ர்க‌ள் விலியை கொலை செய்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திற்காய்க் காத்திருக்கின்ற‌ன‌ர். அவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் வ‌ரும்போது ச‌யீரா த‌ன் சாம‌ர்த்திய‌த்தால் விலியை ஓடும் ரெயினிலிருந்து காப்பாற்றிவிடுகின்றாள்.

ச‌யீராவுக்கு விலி த‌ன்னைக் காப்பாற்றிய‌வ‌ன் என்ற‌வ‌கையில் விலி மீதோரு ப‌தின்ம‌ ஈர்ப்பு வ‌ருகின்ற‌து. அவ‌னைத் த‌ன‌து ரெயில் ப‌ய‌ண‌த்தில் -ப‌ற‌வையொன்று த‌ன் சிற‌குக‌ளுக்குள் பாதுகாக்கும் குஞ்சாய்- தொட‌ர்ந்து காப்பாற்றியப‌டி வ‌ருகின்றாள். த‌ன் மீதான‌ ச‌யீராவின் ஈர்ப்பை விலி அறிந்திருந்தாலும், த‌ங்க‌ள் குழுத்த‌லைவ‌னைக் கொன்ற‌தால் த‌ன‌க்கான‌ நிலையான‌ வாழ்வு இனிச் சாத்திய‌மில்லை என்ப‌தை விலி ந‌ன்கு அறிந்தே வைத்திருக்கின்றான். அத‌ன் நிமித்த‌ம் ச‌யீரா உற‌ங்கும் ஓர் பொழுதில் ரெயினில் இருந்து இற‌ங்கிப்போகின்றான‌. ச‌யீரா நிம்ம‌தியாக‌ அமெரிக்காப் போய்ச்சேர்ந்துவிடுவாள் என்ற‌ நினைப்பு, அவ‌னைப் பின் தொட‌ர்ந்து வ‌ரும் ச‌யீராவைக் க‌ண்டு குலைகின்ற‌து. ச‌யீராவைக் க‌ண்டு ப‌த‌ட்ட‌மாகி மீண்டும் இருவ‌ரும் ரெயினில் ஏறுவ‌த‌ற்குள் ரெயின் புற‌ப்ப‌ட்டும் விடுகின்ற‌து. விலி ச‌யீராவைக்கூட்டிக்கொண்டுபோய் -த‌ன‌க்கு குழுவால் ஏற்க‌ன‌வே ப‌ழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌ ஒருவ‌ரிட‌ம்- த‌ன‌க்கு உத‌வி செய்யும்ப‌டி வேண்டுகின்றார். இத‌ற்கிடையில் த‌லைவ‌ன் கொல்ல‌ப்ப‌ட‌, பிற‌ உறுப்பின‌ர்க‌ள‌ விலியைத் தேடி சிறுவ‌னுட‌ன் அலைய‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். விலியும், ச‌யீராவும் எல்லை க‌ட‌ந்து அமெரிக்காப் போய்ச்சேர்ந்தார்க‌ளா என்ப‌தும் ச‌யீராவின் த‌க‌ப்ப‌னுக்கும் மாமாவுக்கும் என்ன‌வாயிற்று என்ப‌தும் ப‌ட‌த்தில் தொட‌ர்ச்சியில் வ‌ருப‌வை.

க‌தை என்று பார்க்கும்போது இது ஒரு மிக‌ச்சாதார‌ண‌ க‌தை. ஆனால் அதை ப‌ட‌மாக்கிய‌வித‌ந்தான் அதிக‌ம் வ‌சீக‌ரிப்ப‌தாயிருக்கின்ற‌து. ப‌ட‌ம் முழுதும் ரெயின் தொட‌ர்ந்து வ‌ந்த‌ப‌டியிருக்கின்ற‌து. ரெயின் நுழையும் ஒவ்வொரு புதிய‌ நில‌ப்ப‌ர‌ப்பும் த‌ன‌க்குரிய‌ க‌தையைச் சொல்கின்ற‌து. ரெயினில் இவ்வாறு மேலே குந்திக் க‌ள்ள‌மாய்ப்போப‌வ‌ர்க‌ள் ப‌ற்றி ஊர்க‌ளிலுள்ள‌ ம‌க்க‌ள் ந‌ன்கு அறிவார்க‌ள் போலும். சில‌ ஊர்க‌ளில் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளிலிருந்த‌ ப‌ழ‌ங்க‌ளை ரெயினின் மேல் இருப்ப‌வ‌ர்க‌ள் மீது (உண‌வாக்கிக் கொள்ள)எறிகின்றார்க‌ள். சில‌வேளைக‌ளில் இப்ப‌டி த‌ங்க‌ள் ப‌சியை ஆற்றிக்கொள்ள‌ ஏதாவ‌து கிடைக்கும் என்று ரெயினுள்ள‌வ‌ர்க‌ள் எதிர்பார்க்கும்போது சில‌ சிறுவ‌ர்க‌ள் குறும்புத்த‌ன‌மாய் க‌ற்க‌ளால் எறிகின்றார்க‌ள்.

இந்த‌ எல்லை க‌ட‌த்த‌ல் ப‌ய‌ண‌த்தைத் தொட‌ங்கும்போது, ஒரு போதும் எந்த‌ இட‌த்திலும் மீண்டும் திரும்பிப்போக‌ முடியாது என்ப‌தை அறிந்தே தொட‌ங்குகின்றார்க‌ள். அது எவ்வ‌ள‌வு ப‌த‌ற்ற‌மாக‌வும் ப‌ய‌மாக‌வும் இருக்கும் என்ப‌தை இப்ப‌டியான‌ ப‌ய‌ண‌ங்க‌ளை மேற்கொண்ட‌வ‌ர்க‌ள் ந‌ன்க‌றிவார்க‌ள். மேலும் ஏற்க‌ன‌வே இப்ப‌டி த‌ம‌து 'க‌ன‌வு வாழ்க்கையை' அமைக்க‌ எல்லை க‌ட‌ந்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இடையிலேயே த‌ம‌து வாழ்வை ம‌ர‌ண‌த்திலேயே முடித்துக்கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தையும் இந்த‌ப் ப‌ய‌ண‌த்தை மேற்கொள்ப‌வ‌ர்க‌ள் அறிந்தே வைத்திருக்கின்றார்க‌ள். இவ்வாறான‌ ப‌ய‌ணங்க‌ளைச் செய்ய‌ இவ்வ‌ள‌வு ஆப‌த்துக‌ளுக்கும் அப்பால் உந்தித்த‌ள்ள‌ச் செய்ப‌வை அவ‌ர்க‌ளுக்கு வாய்த்த‌ ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்க்கை என்ப‌தை -ஸ‌யீரா போன்ற‌வ‌ர்க‌ளின் வாழ்வோடு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள்- ந‌ன்கு அறிவார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌த்தில் முக்கிய‌ பேசுபொருளே எல்லை க‌ட‌த்த‌லும் அத‌ன் ஆப‌த்தும் தான். ஆனால் எத‌ற்காய் இவ்வாறான‌ ஒரு தேர்வை இந்த‌ ம‌க்க‌ள் ஆப‌த்துக்க‌ளுக்கிடையில் தேர்ந்தெடுகின்றார்க‌ள் என்ப‌த‌ற்காய்த்தான், அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்விட‌ப் பின்புல‌த்தில் குழுவ‌ன்முறையும் வ‌றுமையும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து போலும். இங்கே விலிக்கும், ச‌யீராவுக்கும் இடையில் முகிழும் மெல்லிய‌ காத‌ல் கூட‌ நாம் ச‌க‌ ம‌னித‌ர்க‌ள் மீது வைக்க‌வேண்டிய‌ அன்பைத்தான் வலியுறுத்துகின்ற‌தோ என‌ எண்ண‌த்தோன்றுகின்ற‌து. எல்லாவ‌ற்றையும் இழ‌ந்து புற‌ப்ப‌டும்போது இப்ப‌டியான‌ ச‌க‌ ம‌னுச‌ அன்பும் இல்லாதுவிட்டால் ப்ர‌வ‌க்கூடிய‌ வெறுமையை எவ‌ராலும் தாங்கிக்கொள்ள‌ முடியாது என்ப‌தே உண்மையான‌து. ப‌ட‌த்தில் ரெயின் ஊட‌றுத்துச் செல்லும் நில‌ப்ப‌ர‌ப்புக‌ளின் ப‌சுமையையும் அத‌ற்கு அப்பால் நீள்கின்ற‌ மிக‌ மோச‌மான‌ வ‌றுமையையும் துல்லியமாக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருகின்ற‌ன‌. விலி, ச‌யீரா, சிறுவ‌னாய் ந‌டிப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் அந்த‌ப் பாத்திர‌ங்க‌ளைப் போல‌ இய‌ல்பாய் ந‌டித்திருக்கின்றார்க‌ள்.

விலியால் வ‌ள‌ர்க்க‌ப்ப‌டும் சிறுவ‌னே, பிற‌கு த‌ன்னை அக்குழுவின் ந‌ம்பிக்கைக்கு உரிய‌வானாக்க் காட்டிக்கொள்வ‌த‌ற்காய் விலியைக் கொலை செய்ய‌ வெறியுட‌ன் திரிப‌வ‌னாக‌ அலைவ‌தும் வாழ்க்கைதான். இவ்வ‌ள‌வு கொடூரமான‌ குழுவிலிருந்த‌ விலியின் ம‌ன‌திலும் அன்பு க‌சிய‌க்கூடியதென‌ க‌ண்டுபிடிப்ப‌வ‌ளாய் -மென்னுண‌ர்வுக‌ளைத் த‌ட்டியெழுப்புப‌வ‌ளாய் ச‌யீரா இருப்ப‌தும்- அதே வாழ்க்கை நீரோட்ட‌த்தில்தான். நாம் யார் யாரைச் ச‌ந்திக்கின்றோம் என்ப‌தில் ந‌ம‌து வாழ்க்கையும் தீர்மானிக்க‌ப்ப‌டுகின்ற‌து என‌ப‌து கூட‌ ஒருவ‌கையில் உண்மைப்போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

மே தினம்

Saturday, May 02, 2009

-NO ONE IS ILLEGAL சார்பாக-

(படங்களின் மேல் அழுத்திப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)


























































"எங்க‌ள் குழ‌ந்தை அழுது, எம‌து இட‌த்தைக் காட்டிக்கொடுத்துவிடுமோமென‌ நாங்க‌ள் ப‌ய‌ந்தோம்"

Tuesday, April 21, 2009

Escape from the Tigers leads to safety – in razor-wire encircled 'transition' camps

By Andrew Buncombe in Manik Farm, Sri Lanka
த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்

புலிக‌ளின் நிலைக்கும், இராணுவ‌த்தின் த‌ரிப்பிட‌த்திற்கும் இடையிலிருந்த ‍ஏற‌த்தாழ‌ இர‌ண்டு மைல் நீள‌மான‌ யாரும‌ற்ற‌ (சூனிய‌ப்)பிர‌தேச‌த்தைக் க‌ட‌ப்ப‌த‌ற்கு, பிர‌பாக‌ரின் குடும்ப‌த்தின‌ருக்கு நான்கு நாட்க‌ள் தேவைப்பட்டிருந்த‌ன‌. சில‌ பைக‌ளிலிருந்த உடைமைக‌ளோடு, பிஸ்க‌ட்டைச் சாப்பிட்டும், ஆற்று நீரைக் குடித்தும், இர‌விர‌வாய் விழித்திருந்து (அவ‌ர்க‌ள்) உயிரைக் காப்பாற்ற‌வேண்டியிருந்த‌து பிர‌பாக‌ர‌ரும், அவ‌ர‌து ம‌னைவியும், த‌ம‌து ஐந்து மாத‌க் குழ‌ந்தை அழுது, தாம் ம‌றைந்திருந்த‌ இட‌த்தைப் போராளிப் ப‌டையின‌ருக்குக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று ப‌ய‌ந்து போயிருக்கின்றார்க‌ள்.

இப்போது, அவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருக்கின்றார்க‌ள். தை மாத‌த்திலிருந்து, பிர‌பாக‌ரும், ர‌திக‌லாவும், அவ‌ர்க‌ளின் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளும், வ‌ட‌க்கிலுள்ள‌ இராணுவ‌ அக்தி முகாமில் - ச‌ண்டையின் கார‌ண‌மாக‌ வ‌லுக்க‌ட்டாய‌மாய் த‌ம‌து வீடுக‌ளை இழ‌ந்து வ‌ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடு- வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு தாங்க‌ள் த‌ங்க‌ள் (சொந்த‌)வீடுக‌ளுக்குப் போவ‌த‌ற்கு முன், இங்கே எவ்வ‌ள‌வு கால‌ம் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌த் த‌ங்கியிருக்க‌ வேண்டுமென‌ ஊகித்த‌றிய‌ முடியாதிருக்கிற‌து. "என‌க்குத் தெரியாது, இது அர‌சாங்க‌த்தைப் பொறுத்த‌தே" என்றார் முப்ப‌து வ‌ய‌தான விஞ்ஞான‌ ஆசிரிய‌ர் ஒருவ‌ர்.

பிர‌பாக‌ரரும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் அதிஸ்ட‌வ‌ச‌மான‌வ‌ர்க‌ள். அர‌சாங்க‌ம் தாம் (அக‌தி) ம‌க்க‌ளுக்கு எல்லாவ‌ற்றையும் செய்துகொண்டிருக்கின்றோமென‌ நிரூபிப்ப‌த‌ற்காய், ஊட‌க‌விய‌லாள‌ருக்ககென‌ காட்சிப்ப‌டுத்த‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ 8500 ம‌க்க‌ளுள்ள‌ 'நிலைமாறும்' முகாமைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே இவ‌ர்க‌ள். ம‌ர‌த்தாலும், உலோக‌த்தாலும் ஆன இங்குள்ள‌ வீடுக‌ள் ஒர‌ள‌வு உறுதியான‌வை. சில‌ பாட‌சாலைக‌ள் ம‌ற்றும் ஒரு ம‌ருத்துவ‌ம‌னையோடு இம்முகாம‌ சுத்த‌மாக‌ இருக்கிற‌து.

ஆனால், கொஞ்ச‌ம் (வாக‌ன‌த்தில்) க‌ட‌ந்துபோனால் நிலைமை முற்றிலும் வேறுவித‌மான‌வை; நிழ‌லேயில்லாத‌ இந்த‌ 'நிலைமாறும்' முகாங்க‌ளிலுள்ள‌ 17000 ற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், தார்ப்ப‌ப்பையால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ குடிசைக‌ளில் சூரிய‌னிலிருந்து த‌ப்ப‌ ஒளிந்துகொள்கின்றார்க‌ள். ம‌க்க‌ள் குடிநீர் ம‌ற்றும் க‌ழிப்பிட‌ வ‌சதியின்மை ப‌ற்றி முறையிடுகின்றார்க‌ள். ஒரு பெண், போரில் அவ‌ரின் த‌க‌ப்ப‌ன் கொல்ல‌ப்ப‌ட்டும், க‌ண‌வ‌ன் காய‌ப்ப‌ட்டும் இருக்கும் கிரியா 'இங்கே (த‌ர‌ப்ப‌டும்) உண‌வு ருசியே இல்லை, போதுமான‌ த‌ண்ணீரும் இல்லை' என்றார். எல்லா முகாங்க‌ளும் முள்ளுக்க‌ம்பிக‌ளால் சூழப்ப‌ட்டு, ம‌க்க‌ள் வெளியே போக‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தும் இல்லை.

அர‌சாங்க‌ப் ப‌டைக‌ளுக்கும், த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளுக்கும் ஏற்ப‌ட்ட‌ போரினால் த‌ம‌து வீடுக‌ளை இழ‌ந்த‌ ‍உள்ளூரில் இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளால்‍ இல‌ங்கை, மிகப் பெரும் பிர‌ச்சினையை எதிர்நோக்கியுள்ள‌து. வ‌ட‌கிழ‌க்கிலுள்ள‌ க‌ரையோர‌ப் பிர‌தேச‌த்தில், இறுதியாய் உள்ள‌ போராளிக‌ளால் சூழ‌ப்ப‌ட்டிருக்கும் 150 000ற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் (இராணுவ‌)அக‌தி முகாங்க‌ளுக்குக் கொண்டு செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ 70, 000 ம‌க்க‌ள் இவ்வாறு வ‌ந்திருக்கின்றார்க‌ள். தை 2008ல் போராளிக‌ளை ஒழிப்ப‌த‌ற்கென‌ தொட‌ங்கிய‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌ட்ட‌ -மெனிக் ப‌ண்ணைக்கு பொறுப்பான‌- இராணுவ‌ அதிகாரி, இந்த‌ எண்ணிக்கை விய‌ப்ப‌ளிக்கிற‌து என்கிறார். "நாங்க‌ள் ஒருபோதும் இவ்வ‌ள‌வு பேர் வ‌ருவார்க‌ளென‌ நினைக்க‌வில்லை' என்றார் லெப்.கேண‌ல் இந்துனில் டீ சில்வா.

அநேக‌மான‌ அக‌திக‌ள், போர் உக்கிர‌ம‌டைய‌ த‌ம‌து வீடுக‌ளிலிருந்து எவ்வாறு வெளிக்கிட்டார்க‌ள் என்ப‌தை பிர‌பாக‌ரின் க‌தையை ஒத்த‌தாக‌வே சொன்னார்க‌ள். சில‌ர், தாங்க‌ள் வெளிக்கிடுவ‌தை புலிக‌ள் த‌டுக்க‌ முய‌ற்சித்தார்க‌ள் என்றும் கூறினார்க‌ள். உத‌வி வ‌ழ‌ங்கும் குழுக்க‌ள், புலிக‌ள் ம‌க்க‌ளைக் கேட‌ங்க‌ளாக‌ பாவிப்ப‌தையும், சில‌ ம‌க்க‌ள் வெளிக்கிட‌ முய‌ற்சித்த‌போது (புலிக‌ளால்) சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள் என்றும் குற்ற‌ஞ் சாட்டியிருக்கின்ற‌ன‌.

திருக்கோண‌ம‌லையைப் பூர்விக‌மாய்க் கொண்ட‌ பிர‌பாக‌ர், இராணுவ‌ம் வ‌ழ‌ங்கிய‌ மொழிபெய‌ர்ப்பாள‌ரும், இராணுவ‌ மேற்பார்வையும் இல்லாது க‌தைத்தார். அவ‌ருடைய‌ இர‌ண்டு அறைக‌ளுள்ள‌ குடிசை எளிமையான‌து. அங்கே ப‌டுக்கை வ‌ச‌திக‌ள் கிடையாது, அக‌திக‌ள் நில‌த்திலேயே தூங்க‌ வேண்டும். ஆனால் ந‌ன்கு காற்றோட்ட‌முள்ள‌ இட‌ம். தென்னோலைக‌ளால் வேய‌ப்ப‌ட்ட‌ கூரை சூரிய‌ ஒளியைத் த‌டுப்ப‌தில் அவ்வ‌ள‌வு ப‌ய‌னுடைய‌தாக‌ இருக்கவில்லை. அவ‌ரும் அவ‌ரைப் போன்ற‌ ப‌ல‌ரும் த‌ங்க‌ளுக்கு த‌ண்ணீர் போதுமாய் த‌ர‌ப்ப‌ட்டாலும், த‌ர‌ப்ப‌டும் பிற‌ உண‌வுப் பொருட்க‌ள் மிக‌வும் குறைவென்றார். அவ‌ர‌து ம‌னைவி குடிசையின் முன்னுள்ள‌ நில‌த்தில் பூச்செடிக‌ளை ந‌ட்டிருக்கின்றார்.

இருந்தும் பிர‌பாக‌ருக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் மிக‌வும் பிர‌ச்சினைக்குரிய‌ விட‌ய‌ம் என்ன‌வென்றால், எவ்வ‌ள‌வு கால‌ம் அவ‌ர்க‌ள் இப்ப‌டியே இங்கே இருக்க‌வேண்டியிருக்கும் என்ப‌து. அர‌சாங்க‌ம், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ஊர்க‌ளுக்குத் திரும்பிப் போக‌ முன்ன‌ர், இங்கிருக்கும் அக‌திக‌ள் புலிக‌ள‌ல்ல‌ என்று சோதிக்க‌வேண்டியிருக்கிற‌து என்றும், (இவ‌ர்க‌ளின் சொந்த‌ கிராம‌ங்க‌ளிலுள்ள‌)மிதிவெடிக‌ளை அக‌ற்ற‌ அத‌ற்கான‌ குழுக்க‌ளை முத‌லில் அனுப்ப‌வேண்டியிருக்கிற‌து என‌வும் கூறுகின்ற‌து. இவ‌ர்க‌ள் இங்கே ஒரு வ‌ருட‌த்திற்கு இருக்க‌வேண்டிவ‌ரும் என்ப‌தை அர‌சாங்க‌ம் ஒத்துக்கொள்கின்ற‌து. சில‌ உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் இதை (ஒரு வ‌ருட‌த்தை) விட‌ இன்னும் நீண்ட‌ கால‌மாய் இருக்க‌க்கூடுமென‌ அஞ்சுகின்ற‌ன‌.

" நான் திரும்ப‌வும் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் இருக்க‌ விரும்புகின்றேன். நாளையே நான் இங்கிருந்து போய்விட‌ விரும்புகின்றேன்" என்கிறார், ஒருகால‌த்தில் புலிக‌ளின் த‌லைந‌க‌ராய் இருந்த‌ கிளிநொச்சியைச் சேர்ந்த‌ ச‌ந்திர‌ன். "நான் இங்கே ஒரு வ‌ருட‌ம் த‌ங்க‌வேண்டியிருப்பின், என‌க்கு விச‌ர் பிடித்துவிடும். இங்கே ப‌ல‌ நெருக்க‌டிக‌ள் இருக்கின்ற‌ன‌, முக்கிய‌மாய் நீர் ம‌ற்றும் க‌ழிப்பிட‌ வ‌ச‌திக‌ள். அத்தோடு உண‌வும் எங்க‌ளுக்கு ஏற்ற‌ ருசியாய் இருப்ப‌தில்லை. எங்க‌ளது எல்லா உடைமைக‌ளும் போய்விட்ட‌ன‌. எங்க‌ளிட‌ம் வ‌ரும்போது என்ன‌ கொண்டுவந்தோமோ அது ம‌ட்டுமே இருக்கின்ற‌து."
31 வ‌ய‌தான‌ ந‌ந்த‌பால‌ன் என்ப‌வ‌ரும், இங்கேயிருந்து போவ‌தையே விரும்புகின்றார். "நாங்க‌ள் போக‌லாம் என்று அர‌சாங்க‌ம் சொல்கிற‌தென்றால், நாங்க‌ள் போவோம். நாங்க‌ள் ஒருவ‌ருட‌த்திற்கு த‌ங்க‌ வேண்டியிருக்குமென்றால், இங்கே நிறைய‌ப் பிர‌ச்சினைக‌ள் இருக்கும்'

இங்குள்ள‌ முகாங்க‌ளின் நிர்வாக‌த்தைப் பார்த்துக்கொள்ளும் பினான்ஸி சார்ள்ஸ், இங்கிருக்கும் அக‌திக‌ள் ஆக‌க்கூடிய‌து ஒரு வ‌ருட‌ம் த‌ங்க‌ வேண்டியிருக்கும் என்கிறார். "நாங்க‌ள் எங்க‌ளால் எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வும் செய்து இவ‌ர்க‌ளை தேர்ச்சியுள்ள‌ குடிம‌க்க‌ளாக்குவோம்" என்கின்ற‌ பினான்ஸி அத‌ற்கான‌ பயிற்சிக‌ளும் இன்ன‌ பிற‌ விட‌ய‌ங்க‌ளும் இம்முகாமில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாய்க் குறிப்பிடுகின்றார்.



Thanks: The Independent

பிற‌ழ்ந்த‌வ‌னின் வாக்குமூல‌ம்

Friday, April 03, 2009

நானொரு கொலைகார‌னென்ப‌தை
எவரும் ந‌ம்ப‌ப்போவ‌தில்லை.
கொலைக‌ளுக்கான‌ சில‌ வ‌ரைமுறைக‌ளை
கைவ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள்
'கொலை...' என்று ஆர‌ம்பித்த‌வுட‌னேயே
ஏற்க‌ன‌வே செய்ய‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ளின்
ப‌ட்டிய‌லுட‌ன் ஒப்பிட‌த் தொட‌ங்குகின்றார்க‌ள்
முக்கிய‌மாய் கொலையைச் செய்த‌வ‌ன்
தான் கொலை செய்த‌தை ஒப்புக்கொள்வ‌தில்லையென‌வும்
இப்ப‌டி கொலையைச் செய்துவிட்டு
வெளியே ந‌ட‌மாடித் திரிவ‌த‌ற்கு
ச‌ட்ட‌த்தில் ஓட்டைக‌ள் இல்லையென‌வும்
தெளிவான‌ வாத‌ங்க‌ளை வைத்து
நான் கொலை செய்ய‌வில்லையென‌ நிரூபிக்கவும் செய்கின்றார்க‌ள்.

ந‌ன்று.
என‌க்கு அண்மைக்கால‌மாய்
எதிர்கால‌ம் 'க‌ட‌ந்த‌கால‌மாக‌வும்'
க‌ட‌ந்த‌கால‌ம் 'எதிர்கால‌மாக‌வும்'
பிள‌வுப‌ட்ட‌ ம‌னோநிலையில்
எதிர்கால‌த்தில் நிக‌ழ்த்த‌ப்போகின்ற‌ கொலையை
ஏற்க‌ன‌வே செய்துவிட்டேன் என்கின்ற‌போது
உங்க‌ளுக்கு பிற‌ழ்ந்த‌வ‌னின் குறிப்புக‌ள் நினைவுககு வ‌ர‌லாம்.

நான் ஏழாவ‌து முறையாக‌
காத‌லித்து கைவிட்ட‌வ‌ளோடு
ஏற்க‌ன‌வே ஆறுபெண்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில்
க‌ருத்த‌ரித்து வ‌ள‌ர்ந்த‌ காத‌ற் சிசுக‌ளைக் கொன்றேனென‌
அழ‌கிய‌லோடு க‌விதை சொல்ல‌ பிரிய‌முண்டெனினும்
கொலைக‌ள் எப்போதும் குரூர‌மான‌வை
இப்போது கிறுக்கிக்கொண்டிருக்கும் க‌ர‌டுமுர‌டான‌
இந்த‌ ஏதோ ஒன்றைப்போல‌.

கொலை செய்தேன் செய்தேனென‌

என‌தெல்லாப் பிர‌திக‌ளிலும்
எழுதிய‌த‌ன் அலுப்புத் தாங்காது
உண்மைக‌ளை அறிவ‌த‌ற்காய்
விம‌ர்ச‌ன‌க் க‌த்திக‌ளோடு அவச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய்
பிரேத‌ப் ப‌ரிசோத‌னைக்கு வ‌ருகின்றீர்க‌ள்
முத‌லில் இஃதொரு க‌விதை இல்லையெனும் நீங்க‌ள்
இங்கே பாவிக்க‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள்
ஏற்க‌ன‌வே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையால்
க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ எழுத்தும் கூட‌
என்கிறீர்க‌ள்.

நான் க‌விதையை அல்ல‌,
கொலைக்கான‌
என் வாக்குமூல‌த்தைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
மேலும்
ஏற்க‌ன‌வே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ சொற்க‌ளனான
ஒரு மொழியில்
வார்த்தைத் திருட்டுக்களைத்தான்
நாமெல்லோரும் செய்துகொண்டிருக்கின்றோமென‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு அண்மையாக‌ நின்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

பிர‌திக்கு அப்பால‌ல்ல‌
அத‌ற்கு உள்ளேதான் எல்லாம் உள்ள‌தென்று
பூத‌க்க‌ண்ணாடியின் துணையோடு மீண்டும் தோண்டுகின்றீர்க‌ள்
அர்த்த‌ம‌ற்ற‌ சொற்க‌ளென்று வெட்ட‌த்தொட‌ங்கினால்
எஞ்சியிருக்கும் தாளின் முற்றுப்புள்ளியிலும் புதிய‌தொரு அர்த்த‌மிருக்கும்
புன்ன‌கை பூச‌ப்ப‌ட்டவென் சொரூப‌ குண‌த்துக்குள்
நான் செய்த‌ கொலையும் ம‌றைந்திருக்கலாம்

இல்லை, இல்லை
இது உன் ம‌ன‌ப்புதிர்க‌ளால் க‌ட்டிய‌மைத்த‌
ச‌துர‌ங்க‌ப் பெட்டிக‌ளில் எம்மைய‌ழைத்து
முடிவுறாத‌ ஆட்ட‌திற்கான‌ முஸ்தீபுக‌ளென்ற‌ப‌டி
நீ கொலையே செய்ய‌வில்லையென‌ பூத‌க்க‌ண்ணாடியோடும்
க‌த்திரிக்கோலுட‌னும் வெளியேறிவிடுகின்றீர்க‌ள்.
ந‌ண்ப‌ர்க‌ளே உங்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றேன்
த‌ய‌வு செய்து நான் செய்துவிட்ட கொலையைக் க‌ண்டுபிடித்து
கொலைகார‌ன் என்றென்னை அடையாள‌ப்ப‌டுத்துங்கள்.
இவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு
எவ‌ரிட‌மும் பிடிப‌டாம‌ல் இருப்ப‌தென்ப‌து
நான் மிக‌வும் க‌டின‌ப்ப‌ட்டு செய்துவிட்ட‌
கொலையை ம‌திப்ப‌ற்ற‌தாக்கி விடுகிற‌து.


ப‌ட‌ம்: Galatea of the Spheres by Salvador Dali

அ.முத்துலிங்கத்தின் உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்

Tuesday, March 24, 2009


'...இவ‌ன் பிற்கால‌த்தில் தேவார‌ம் பாடுவ‌தை நிறுத்திவிட்டு உதைப‌ந்தாட்ட‌த்தில் பிர‌ப‌ல்ய‌ம் அடைந்த‌வ‌ன். அவனுடைய இல‌ட்சிய‌ம் எல்லாம் எவ்வ‌ளவு ப‌ல‌ம் உண்டோ அவ்வ‌ள‌வையும் பிர‌யோகித்து ப‌ந்தை உய‌ர‌த்துக்கு அடிப்ப‌து. குறிப்பாக‌ அது சூரிய‌னிடம் போக‌ வேண்டும்; குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ம‌றைக்க‌ வேண்டும். பார்வையாள‌ர்க‌ள் எல்லாம் க‌ழுத்தை முறித்து இர‌ண்டு நிமிட‌ம் மேலே பார்க்க‌ வேண்டும். எதிர் சைட்டில் க‌விழ்த்து வைத்த‌ ப‌ வ‌டிவ‌த்தில் ஒரு கோல் போஸ்ட் இருப்ப‌தோ, அத‌ற்குள் ப‌ந்தை அடித்தால் ஒரு கோல் கிடைக்கும் என்ப‌தோ, கோல்க‌ளை எண்ணியே வெற்றி நிச்ச்யிக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தோ அவ‌னுக்கு பொருட்டில்லை. பந்து காலில்ப‌ட்டால் அது உய‌ர‌த்துக்கு எழும்ப‌வேண்டும் என்ப‌தே குறிக்கோள்.
(ப‌க்க‌ம் 45)


1.
எல்லோருக்கும் சொல்வ‌த‌ற்கு நிறைய‌க் க‌தைக‌ள் கைவ‌ச‌மிருக்கின்ற‌ன‌. அவ்வாறு த‌ம‌து க‌தைக‌ளை எழுத்தில் ப‌திவு செய்த‌வ‌ர்க‌ள் என்று பார்த்தால் அவ‌ர்க‌ள் மிக‌க்குறைவே. அந்த‌க் குறைவான‌வ‌ர்க‌ளிலும் நுட்ப‌மாக‌வும், சுவார‌சிய‌மாக‌வும் த‌ம் க‌தைக‌ளைப் ப‌கிர்ந்துகொண்டவ‌ர்க‌ளென்றால் இன்னும் மிக‌ச் சொற்ப‌மே. த‌மிழ்ச்சூழ‌லில் சாதார‌ணங்க‌ளின் க‌தையை அசாதார‌ணமாக்கிய‌ க‌தைசொல்லியாக‌ ம‌ட்டுமில்லாது, நாம் க‌ட‌ந்துவ‌ந்த‌/த‌வ‌ற‌விட்ட‌ எளிய‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌ அழ‌கிய‌லோடு ப‌திவுசெய்த‌வ‌ர்க‌ளில் முக்கியமான ஒருவ‌ர் அ.முத்துலிங்க‌ம். பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ் ப‌டைப்பாளிக‌ளின் எழுத்துக்க‌ளின் உள்ளே -உல‌ர்ந்துபோன‌ ந‌தியாய் வ‌ற‌ண்டுபோன‌- அங்கதத்தை மிக‌ முக்கிய‌ கூறாய் த‌ன் ப‌டைப்புக்க‌ளில் முன்னிலைப்ப‌டுத்திய‌வ‌ர் அ.முத்துலிங்க‌ம். இவ்வாறாக‌ அவ‌ர் ப‌டைப்புக்க‌ளில் ஊற்றெடுக்கும் ந‌கைச்சுவையும், எளிமையான‌ வார்த்தைக‌ளிலான‌ க‌தை சொல்ல‌லும், அள‌வுக்க‌திமான‌ வ‌ர்ண‌னையில்லாது ந‌றுக்கென்று ச‌ம்ப‌வ‌ங்க‌ளைக் க‌ட‌ந்துசெல்லலுமே அ.முத்துலிங்க‌த்திற்கு ப‌ர‌வ‌லான‌ வாச‌க‌ர்க‌ளைக் கொண்டுவ‌ந்து சேர்த்துமிருக்கின்ற‌து. ஈழ‌ப்போர் உக்கிர‌ம‌டைய‌ முன்ன‌ரான‌ 83ற்கு முன் (70க‌ளில்) பொருளாதார‌ நிமித்த‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ அ.முத்துலிங்க‌த்தின் எழுத்து ந‌டைக்கு வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ப‌ணிபுரிநத‌/வாழ்ந்த‌ அனுப‌வ‌மும், அந்நாடுக‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லும் இன்னும் வ‌ள‌ஞ்சேர்ப்ப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌.

'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்' ஒரு நாவ‌லென‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டாலும், இஃதொரு புனைவு சேர்ந்தூட்ட‌ப்ப‌ட்ட‌ சுய‌ச‌ரிதைக்குறிப்புக‌ள் என்ப‌தை எளிதாக‌ ஒருவ‌ர் அடையாள‌ங்க‌ண்டுகொள்ள‌ முடியும். இந்நாவ‌ல் ஆர‌ம்பிப்ப‌த‌ற்கு முன்,
'இந்நாவ‌லில் இருப்ப‌து அத்த‌னையும் என் மூளையில் உதித்த‌ க‌ற்ப‌னையே. அதிலே நீங்க‌ள் ஏதாவ‌து உண்மையைக் க‌ண்டுபிடித்தால் அது த‌ற்செய‌லான‌து. அத‌ற்கு நான் பொறுப்பாக‌ மாட்டேன்' என்று வீணாக‌ ஒரு ப‌க்க‌த்தை அ.முத்துலிங்க‌ம் வீண‌டித்த‌ற்கு ப‌தில், இஃதொரு ஆட்டோ ‍ பிகச‌ன் (Auto-Fiction) என்று ஒற்றை வ‌ரியில் எழுதிவிட்டு ந‌க‌ர்ந்திருக்க‌லாம். மேலும் நாவ‌லென‌க் குறிப்பிட‌ப்ப‌டும் (உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்/ நாவ‌ல்/ அ.முத்துலிங்க‌ம்) ஒரு ப‌டைப்பில் 'உண்மை'க‌ளை வாச‌க‌ர் தேடக்கூடும் என்று அ.மு அஞ்சும‌ள‌வுக்கு வாச‌க‌ர் மீது அ.முவிற்கு ந‌ம்பிக்கையில்லையா என்ற‌ கேள்வியும் எழுகின்ற‌து.

ஒரு ப‌டைப்புக்குள் நுழைய‌முன்ன‌ர் இவ‌ற்றையெல்லாம் பார்க்க‌வேண்டுமா என்ற‌ அலுப்பு வாசிக்கும் ந‌ம‌க்கு ஏற்ப‌ட‌லாம். எவ்வாறு ஜெய‌மோக‌னின் ப‌டைப்புக்க‌ளுக்குள் போவ‌த‌ற்கு முன்ன‌ர், எப்ப‌டி அவ‌ர‌து முன்னுரைக‌ள் எம்மைச் சோர்வடையச் செய்யுமோ அவ்வாறே, இவ்வாறான‌ அதிக‌ப் பிர‌ச‌ங்க‌ங்க‌ளும் வாசிப்ப‌த‌ற்கு முன் இடையூறுக‌ளாய் விடுகின்ற‌ன‌. அநேக‌மாய் த‌மிழ்ச்சூழ‌லில் எழுதுகின்ற‌ ப‌டைப்பாளிக‌ள் எல்லோருமே, தம் படைப்புக்கள் தொகுப்பாய் ப‌திப்பிக்க‌ப்ப‌ட்ட‌பின் அது வாச‌க‌ர்க‌ளுக்குச் சொந்த‌மாகிவிடுகின்ற‌து என்ப‌தை மட்டும் அடிக்க‌டி நினைவூட்டிவிட்டு, அதேபோக்கில் வாச‌க‌ர்க‌ளையும் தாம் நினைப்ப‌து மாதிரியே வாசிக்க‌வேண்டும் என்றும் பாட‌சாலை ஆசிரிய‌ர்க‌ளைப் போல‌ அத‌ட்டுகின்ற‌ன‌ர்.


2.
'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்' யாழ்ப்பாண‌த்தில் (கொக்குவிலில்) ஆர‌ம்பித்து கொழும்புக்கு ந‌க‌ர்ந்து பிற‌கு ஆபிரிக்காக் க‌ண்டநாடுக‌ளான‌ சியரா லியோன், சோமாலியா, கென்யாவுக்கும், ஆசிய‌ க‌ண்ட‌ நாடுக‌ளான‌ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கும், பின்ன‌ர் வ‌ட‌ அமெரிக்காக் க‌ண்ட‌ நாடுக‌ளான‌ க‌ன‌டா, ஜ‌க்கிய‌ அமெரிக்காவென‌ ப‌ல‌வேறு நில‌ப்ப‌ர‌ப்புக‌ளை ஊடுருவிச் செல்கின்ற‌து. ஆர‌ம்ப‌த்திலிருந்தே க‌தைசொல்லியே எல்லாக் க‌தைக‌ளிலும் வ‌ருகின்றார். சில‌ இட‌ங்க‌ளில் அவ‌ரே ஒரு பாத்திர‌மாக‌வும், சில‌ இட‌ங்க‌ளில் அவ‌ர் ஒதுங்கி நின்று பிற‌ர‌து க‌தையைக் கூறுப‌வ‌ராக‌வும் இருக்கின்றார். நாவ‌லென்ற‌ வ‌டிவ‌ம் குறித்து ப‌ல‌வேறு வித‌மான‌ நிலைப்பாடுக‌ள் இருக்கும்போது இஃதொரு நாவ‌ல் வ‌டிவ‌ததைச் சேர்ந்த‌தா இல்லையா என்ற‌ வாத‌ பிர‌திவாத‌ங்க‌ளை ஒதுக்கிவைத்துப் பார்த்தாலும், இந்நாவ‌ல் ப‌ல்வேறு சிறுக‌தைக‌ளைக் கொண்ட‌ ஒரு தொகுப்பு என்ற‌ எண்ண‌மே வாசிக்கும்போது வ‌ருகின்ற‌து. நாற்பத்தைந்து அத்தியாங்க‌ள் கொண்ட‌ ஒரு நாவ‌லாக‌ இது இருந்தாலும், ஒவ்வொரு அத்தியாங்க‌ளுக்கும் த‌லைப்பு இட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இன்றைய‌ நாவ‌ல் உல‌கில் இவ்வாறு ஒவ்வொரு அத்தியாங்க‌ளுக்கும் த‌லைப்பிட்டு வ‌ருவ‌து என்ப‌து மிக‌ அரிதே.

இவ‌ற்றையெல்லாம் த‌விர்த்து நாவ‌லுக்குள் நாம் நுழைந்தால் ஒவ்வொரு அத்தியாய‌த்திலும் வாசிப்ப‌வ‌ரை அவ‌ர்க‌ள் அறியாது சிரிக்க‌ வைப்ப‌த‌ற்கு அ.முத்துலிங்க‌த்திற்கு ஒரு ச‌ம்ப‌வ‌மோ, சில‌வேளைக‌ளில் சில‌ வ‌ரிக‌ளோ கூட‌ போத‌மான‌தாயிருக்கின்ற‌து. வாசிக்கும் நீங்க‌ள் இந்நாவ‌லை எத்த‌கைய‌ சூழ்நிலையில் விரித்து வாசிக்க‌த் தொட‌ங்கினாலும் உங்க‌ளைய‌றியாம‌லே சிரிக்க‌ வைத்துவிடும் நுட்ப‌த்தில்தான் அ.முத்துலிங்க‌த்தின் ப‌டைப்புல‌க‌ம் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்தாகிவிடுகின்ற‌து. முத‌ல் அத்தியாய‌த்தில் ந‌ல்லூர்
கோயில் திருவிழாவில் தொலைகின்ற‌ அம்மாவைப் ப‌ற்றிய‌ க‌தை, என‌க்கு சிறுவ‌ய‌தில் வாசித்த‌ முல்க்ராஜ் ஆனந்தனின் பெற்றோரைத் தொலைத்த‌ குழ‌ந்தையொன்றின் க‌தையை நினைவுப‌டுத்தினாலும், இவ்வாறான‌ விழாக்க‌ளில் குழ‌ந்தைக‌ள்/பெற்றோர் தொலைவ‌தும், க‌ண்டுபிடிக்க‌ப்ப‌டுவ‌துமென‌ -சொல‌வ‌த‌ற்கென‌- எல்லோரிட‌ம் நிறைய‌ச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌. முத‌ல் சில‌ அத்தியாங்க‌ள் அம்மா,அய்யா, அக்கா, ஆசிரிய‌ர், பாட‌சாலை போன்ற‌வ‌ற்றைச் சுற்றியும், கைவிசேட‌ம் பெறுத‌ல், போர்ததேங்காய் அடித்த‌ல் போன்ற‌ ஒர‌ள‌வு யாழ்ப்பாண‌த்துக்குரிய‌தான‌ ப‌ண்பாட்டுச் சூழ‌ல் ப‌ற்றியும் பேசுகின்ற‌ன‌.

அறுப‌துக‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌ எஸ்.பொவின் ச‌ட‌ங்கு, யாழ் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின் பாலிய‌ல் சார்ந்த‌ அவ‌திக‌ளை மிக‌ நுட்ப‌மாக‌ ப‌திவு செய்ததோடு, யாழ்ப்பாண‌ப் பெண்க‌ளின் சுய‌ இன்ப‌ம் காணுதல் குறித்தும் பேசியிருக்கின்ற‌து. அதேபோன்று அ.முத்துலிங்க‌த்தின் இந்நாவ‌லிலும் ஒரு அத்தியாய‌ம், ஐம்ப‌துக‌ளில் பாட‌சாலை விடுதிக‌ளிலிருந்த‌ ஆண்க‌ளுக்கிடையிலான‌ ஓரின‌ப்பால் உற‌வுக‌ளைப் ப‌ற்றி (ம‌றைமுக‌மாய்ப்) பேசுகின்ற‌து. ஒருவித‌ அக்க‌றையோடு அ.முத்துலிங்க‌ம் இதைப் ப‌திவுசெய்தாலும், எஸ்.பொ ச‌ட‌ங்கில் ப‌திவு செய்த‌தைப் போல‌வ‌ன்றி, இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தில் ஒரு வித‌ த‌ய‌க்க‌ம் அ.முவிற்கு அவ‌ர‌வ‌ள‌விலேயே இருக்கின்ற‌து என்ப‌து போல‌, வாசிக்கும்போது தோன்றுகின்ற‌து. ஆனால் இந்த‌ விடுதிக‌ளில் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌தையும், ப‌ல‌ பாட‌சாலைக‌ளில் வேறு நாடுக‌ளிலிருந்து (இந்தியா, சிங்க‌ப்பூர்) வ‌ந்து ஆசிரிய‌ர்க‌ள் க‌ற்பித்த‌தையும் அறியும்போது -போரோடு பிற‌ந்த‌ த‌லைமுறையைச் சேர்ந்த‌- எங்க‌ளுக்கு மிக‌ப்பெரும் க‌ன‌வாக‌த்தான் தெரிகின்றது.

மிக‌ இள‌ வ‌ய‌திலேயே (13) க‌தைசொல்லியின் தாயார் இற‌ந்துவிட‌ மூத்த‌ அண்ணாவின் அர‌வ‌ணைப்பிலேயே இவ‌ர‌து குடும்ப‌ம் வ‌ள‌ர்கின்ற‌து. க‌தைசொல்லியின் அண்ணா கொழும்பில் இருக்கும்போது அவ‌ருக்கு வ‌ருகின்ற‌ பெய‌ர் தெரியாத‌ நோயிற்கு, எந்த‌ச் சிகிச்சையும் ப‌ய‌ன‌ளிக்காது அவ‌ர் த‌ன‌து வாழ்வின் இறுதிக்க‌ட்ட‌த்தை அடைகின்ற‌வேளையில், யாரோ த‌ற்செய‌லாய் வ‌ரும் ஒருவரின் அறிவுரையில் அண்ணா ப‌டுக்கும் க‌ட்டிலோடு ஒரு ஆடு க‌ட்டிவிட‌ப்ப‌டுகின்ற‌து. அந்த ஆடு அண்ணாவின் அறைக்குள்ளேயே ஒன்றாக இருந்து சில‌ வார‌ங்க‌ளில் இற‌ந்துபோகையில் எவ‌ராலும் குண‌ப்ப‌டுத்த‌ முடியாத‌ அண்ணாவின் நோய் குண‌மடைகின்ற‌து. அந்த‌ ஆடுதான் நோயை த‌ன்னோடு எடுத்துச் சென்றிருக்கும் என்றும், ஆனால் பிற்கால‌த்தில் அந்த‌ ஆட்டைப் ப‌ற்றிக் கேட்டால் முக‌ம் இருள‌டைகின்ற‌ அண்ணாவின் பாத்திர‌மும் மாய‌ ய‌தார்த்த‌ வ‌கைக்குள் அட‌ங்க‌க்கூடிய‌து. அதேபோன்று பின் அத்தியாய‌ங்க‌ளில் பொஸ்ர‌னில் க‌தைசொல்லியின் மக‌ள் நீண்ட‌ கால‌த்திற்கு க‌ருத்த‌ரிக்காது இருக்கும்போது, அமெரிக்காவின் பூர்வீக‌க்குடிக‌ளின் ந‌ம்பிக்கைப்ப‌டி குதிரைக்கு உண‌வூட்டினால் பெண் க‌ர்ப்ப‌ம‌டைவாள் என்ப‌த‌ற்கிண‌ங்க‌, க‌தைசொல்லியுட‌ன் சென்று ம‌க‌ள் உண‌வூட்டுவ‌தும், பின்ன‌ர் ம‌க‌ளுக்கு ஒரு ம‌க‌ள் பிற‌க்கும்போது எப்போது ம‌க‌ள் க‌ருவுற்றிருப்பார் என்று பின்னோக்கிப் பார்க்கும்போது, கிட்ட‌த்த‌ட்ட‌ குதிரைக்கு உண‌வூட்டிய‌ கால‌த்தில்... என்று க‌தைசொல்லி விய‌ப்ப‌தும் ப‌குத்த‌றிவுக்கு அப்பால் ம‌ன‌ம் நீட்சிய‌டைந்து விய‌ந்துகொள்கின்ற‌ ப‌குதிக‌ளாகும்.

1958ம் ஆண்டு ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌க்க‌ல‌வ‌ர‌த்திலிருந்து கொழும்பிலிருந்து
த‌ப்பி க‌ப்பலில் க‌தை சொல்லி யாழ் செல்கின்றார் . பிற‌கு மீண்டும் ஒரு வ‌ருட‌த்தில் கொழும்புக்குத் திரும்பி, கொழும்புப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌டிக்கும் கால‌த்தில் ந‌ண்ப‌னுக்கு 'காத‌ல் துரோகி'யாவ‌தும், பின்ன‌ர் சாட்ட‌ர்ட் அக்க‌வுண்ட‌ன்ட் ஆகி சிங்க‌ள‌வ‌ர்கள் நிர்வ‌கிக்கும் நிறுவ‌ன‌த்தில் -க‌ண‌க்காய்வாள‌ராக‌ப் ப‌ணிபுரிகையில்- ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சுவார‌சிய‌மான‌வை. இல‌ங்கையில் இருக்கும்போது நிறுவ‌ன‌ங்க‌ளில் க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளில் ந‌ட‌க்கும் தகிடுதித்த‌ங்கள் போன்று ஆபிரிக்கா நாடுக‌ளிலும் ந‌ட‌க்கும்போது அவ‌ற்றை எப்ப‌டி எதிர்கொள்கின்றார் என்ப‌தும், க‌ட‌ந்துபோகின்றார் என்ப‌தையும்... அவ‌ற்றுக்கூடாக‌ அம்ம‌க்க‌ளின் குடும்ப‌ விழுமிய‌ங்க‌ளையும், ப‌ண்பாட்டுச் சூழ‌ல்க‌ளையும் சொல்ல‌ முய‌ல்வ‌துமென‌ நாவ‌லின் ந‌டுப்பாக‌ங்க‌ள் ந‌க‌ர்கின்ற‌ன‌. பெரும் நிறுவ‌ன‌ங்க‌ளில் இருக்கும் அதிகாரிக‌ள் இவ்வாறான‌ திருட்டுக‌ளைச் செய்யும்போது, வ‌ங்கிக‌ளைக் கொள்ளைய‌டிக்கும் கொள்ளைய‌ர்க‌ளை விட‌ வ‌ங்கிக‌ளை நிர்வ‌கிப்ப‌வ‌ர்க‌ளே அதிக‌ம் கொள்ளைய‌டிப்ப‌வ‌ர்க‌ள் என்றொரு க‌விஞ‌ர் ஏதோவொரு புர‌ட்சிச்சூழ‌லில் சொன்ன‌து நினைவில் வ‌ந்துபோகின்ற‌து.

3.
நாவ‌லின் பிற்ப‌குதி கதைசொல்லி எப்ப‌டி க‌ன‌டாவிற்கு வ‌ந்து இன்னொரு புதிய‌ சூழ‌லுக்குத் த‌ன்னை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்றார் என்ப‌தையும், ஐக்கிய‌ அமெரிக்காவிலுள்ள‌ த‌ன‌து ம‌க‌ள்/பேரப்பிள்ளை என்ப‌வ‌ர்க‌ளினூடான‌ அனுப‌வ‌ங்க‌ளையும் பேசுகின்ற‌ன‌. யாழில் அத்தியாவ‌சிய‌மான‌ சைக்கிள், இங்கே பொழுதுபோக்கிற்காய் ஆகிப்போன‌து ப‌ற்றிப் பேசும் ஓர் அத்தியாய‌த்தில், க‌தை சொல்லி சைக்கிளை எப்ப‌டி ஓட‌ப்ப‌ழ‌கினார் என்ற‌ ப‌குதி மிகுந்த‌ ந‌கைச்சுவையான‌து. இந்த‌ அத்தியாய‌ம், வாசிக்கும் எல்லோரையும் அவ‌ர‌வ‌ர் தாங்க‌ள் சைக்கிளை முத‌ன் முத‌லாய் ஓடிப்போன‌ கால‌த்திற்கு இழுத்துக்கொண்டு செல்லும் த‌ன்மை வாய்ந‌த்து.

ஓரிட‌த்தில், க‌தைசொல்லி த‌ன‌து ட‌ய‌ரியில் இற‌ந்துபோன‌ ந‌ண்ப‌ர்க‌ளின் தொலைபேசி இல‌க்க‌ங்க‌ளை அழிக்கும்போது, இப்போது உயிருட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளை விட‌ உயிருட‌ன் இல்லாத‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையே அதிக‌மாய் இருக்கின்ற‌து என்கின்ற‌போது ச‌ட்டென்று உண‌ர்வு நிலை மாறி மிக‌ப்பெரும் வெறுமை ந‌ம்மையும் தொற்றிக்கொள்கின்ற‌து. அதேபோன்று இன்னொரு அத்தியாய‌த்தில் புத்த‌க‌ வாசிப்பைப் ப‌ற்றிக்குறிப்பிடும்போது, க‌தைசொல்லி த‌ன‌க்கு மிக‌ப்பிடித்த‌மாய் ஏதாவ‌து வ‌ரிக‌ளை யாராவ‌து எழுதியிருந்தால் த‌ன‌க்கு கையால் த‌லையில் அடிக்கும் ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌து என்று சொல்லி, இப்போது 'என்னைய‌றியாம‌ல் த‌லையில் அடிப்ப‌தும் அதிக‌மாகிக்கொண்டு வ‌ருகின்ற‌து. என்னுடைய‌ எஞ்சிய‌ வாழ்நாள் ம‌ட்டும் குறைந்து போகின்ற‌து' என்று முடிக்கும்போது ம‌ன‌தொரு க‌ண‌ம் க‌ன‌த்து ந‌க‌ர்கின்ற‌து.

ந‌கைச்சுவையும் -அவ்வ‌ப்போது எள்ள‌லும்- இந்நாவ‌ல் முழுதும் தொட‌ர்ந்து ஒரு ந‌தியாக‌ ஓடி வாசிப்ப‌வ‌ர்க‌ளைக் குளிர‌வைத்துக்கொண்டேயிருக்கிற‌து. இந்நாவ‌லில் வ‌ரும் க‌தா மாந்த‌ர்களின் ப‌ல‌வேறுவித‌மான‌ அழுக்காறுக‌ளையும், க‌ச‌டுக‌ளையும் இந்த‌ப் ப‌கிடி ஆறு அள்ளியெறிந்துகொண்டு போவ‌தால் அநேக‌மான‌ ம‌னித‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் இய‌ல்புக‌ளோடு நேசிக்க‌ முடிகின்ற‌து. அ.முத்துலிங்க‌த்தின் க‌தையுல‌கில் வெறுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ள் என்று எவ‌ருமே இருப்ப‌தில்லை. இங்கும் கொழும்பில் க‌தைசொல்லி த‌ன‌து வேலை நேர்காண‌ல் ஒன்றுக்குப் போவ‌த‌ற்காய் ம‌டித்து வைத்திருந்த‌ புதிய ஆடைக‌ளை, இர‌வில் த‌ங்கி நின்ற‌ ந‌ண்ப‌ன் விடிகாலையில் அப‌க‌ரித்துச் செல்லும்போது ம‌ட்டுமே கொஞ்ச‌ம் கோப‌ம் காட்ட‌ப்ப‌டுகின்ற‌தே தவிர‌ குறிப்பிடும்ப‌டியாக‌ வேறெந்த‌ வெறுப்பின் சாய‌ல் கூட‌ இந்நாவ‌லில் இல்லை. அதேபோன்று கு.வ‌ன்னிய‌குல‌சிங்க‌ம் த‌மிழ் கொங்கிர‌சுக்காய் கொக்குவிலில் போட்டியிட்ட‌போது, தேர்த‌லில் வாக்குப் போடுவ‌தை உற்சாக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காய் ‍-அணிந்து செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே‍ நகைக‌ளைக் கொடுக்க‌- அதை அப்ப‌டியே அப‌க‌ரித்து சுன்னாக‌த்தில் ரெயினேறி கொழும்பில் ம‌க‌னோடு சேர்கின்ற‌ திர‌விய‌ம் மாமி ஒரு க‌ள்ளியாக‌க் கூட‌ச் சித்த‌ரிக்க‌ப்ப‌டாம‌ல் -க‌ள‌வைக் கூட‌ பிடிப‌டாம‌ல் செய்வ‌து என்றறியாத‌ அவர‌து அப்பாவித்த‌ன‌மே- வாசிப்ப‌வ‌ர்க‌ளிடையே ப‌டிய‌விட‌ப்ப‌டுகின்ற‌து. க‌ள்ள‌ம் பிடிப‌ட்டு பொலிஸ் அவ‌ரைக் கொழும்பு ஜெயிலுக்கு கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது கூட‌, அவ‌ர் கேட்கின்ற‌ கேள்வி, 'கு.வ‌ன்னிய‌குல‌சிங்க‌ம் தேர்த‌லில் வெற்றி பெற்றுவிட்டாரா?' என்ப‌துதான். அந்த‌க்கேள்வியோடு அந்த‌ அத்தியாய‌ம் முடிகின்ற‌போது க‌ள‌வு என்ற‌ விட‌ய‌மே அங்கே காணாம‌ற்போய்விடுகின்ற‌து.

இவ்வாறான‌ மிக‌ நுட்ப‌மாய் க‌தையை எப்ப‌டிககொண்டு போவ‌து குறித்தும், எப்ப‌டி முடிப்ப‌து ப‌ற்றியும் அறிந்த‌ ப‌டைப்பாளியான‌ அ.முத்துலிங்க‌ம் சில‌ இட‌ங்க‌ளில் முக்கிய‌மான‌ விட‌ய‌ங்க‌ளைக் கூட‌ -மிக‌ எளிமையாக‌- மெல்லிய‌ ந‌கைச்சுவையால் -க‌ட‌ந்துவிடச் செய்கின்றார். முக்கிய‌மாய் எல்லோரைப் போல‌வும் அம்மாவில் அதிக‌ பாச‌ம் கொள்கின்ற‌ க‌தைசொல்லி, அவ‌ர‌து ப‌தின்மூன்றாவ‌து வ‌ய‌தில் ஏற்ப‌டுகின்ற‌ அம்மாவின் இழ‌ப்பை மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோய்விடுகின்றார். அதேபோன்று 1958 க‌ல‌வ‌ர‌த்தின்போது கொழும்பில் அக‌தியாக்க‌ப்ப‌டுகின்ற‌ க‌தைசொல்லி அந்த‌ அத்தியாய‌த்தோடு சிங்க‌ள‌ ‍த‌மிழ் பிர‌ச்சினையை ம‌ற‌ந்து போய்விடுகின்றார். மீண்டும் இறுதி அத்தியாய‌ங்க‌ளில் 'சுவ‌ர்க‌ளுட‌ன் பேசும் ம‌னித‌ர்' ப‌குதியில் ம‌ட்டுமே மொழி,ஈழ‌ம் ப‌ற்றி நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌ (ஒரு மொழி நீண்ட‌ கால‌மாய் உயிருட‌ன் இருக்க‌வேண்டுமாயின், அந்த‌ மொழியை முன்நிலைப்ப‌டுத்தும் ஒரு அர‌சு வேண்டுமென்ப‌து இங்கே வ‌லியுறுத்த‌ப்ப‌டுகின்ற‌து). 1983 இன‌ப்ப‌டுகொலையின்போது, க‌தைசொல்லி ஈழ‌த்திலிருந்து ஏற்கன‌வே புல‌ம்பெய‌ர்ந்த‌தால் அத‌ன்பின்ன‌ரான‌ கால‌ங்க‌ளை எழுதுத‌ல் க‌டின‌மென‌ எடுத்துக்கொண்டாலும், க‌தைசொல்லி நேர‌டியாக‌ப் பாதிப்புற்ற‌ 58 க‌ல‌வ‌ர‌ம் ப‌ற்றிக்கூட‌ ம‌ன‌தில் ப‌தியும் ப‌டியாக‌ எழுதிவிட‌வில்லை என்ப‌தை ஒரு ப‌லவீன‌மாக‌த்தான் கொள்ள‌வேண்டும்.


அதேபோன்று இந்நாவ‌லில் 'வ‌ளைக்காப்புக்காய் வீடு திரும்பும் ம‌னைவி' (ப 108) குறித்தெல்லாம் வ‌ருகின்ற‌து. ஈழ‌த்தில் வ‌ழ‌க‌த்தில் இல்லாத‌ சொற்றொட‌ர்க‌ள்/வ‌ழ‌க்குக‌ள் வ‌ருவ‌த‌ற்கு அ.முத்துலிங்க‌ம் தன‌து பிர‌தியைத் திருத்த‌க்கொடுத்த‌, த‌மிழ‌க‌த்து 'நாளொன்றுக்கு 2000 சொற்க‌ள் எழுதும்' ந‌ண்ப‌ரோ அவ‌ர‌து துணையோ கார‌ணமாயிருக்கூடும். மேலும் 'கேர்ண‌ல்' (ப 77) என்றெல்லாம் திரிச‌ங்கு நிலையில் சொற்க‌ள் வ‌ருகின்ற‌ன‌. ஈழ‌த்து வ‌ழ‌க்கில் 'கேண‌ல்' என்றோ அல்ல‌து ஆக‌க்குறைந்து இந்திய‌ வ‌ழ‌க்கில் 'க‌ர்ன‌ல்' என்றாவ‌து எழுதாம‌ல், இப்ப‌டி வ‌ருவ‌து அச்சுறுத்துகின்ற‌து. இன்னொரு இட‌த்தில் த‌ன‌து த‌ம்பியை வாச‌க‌ருக்கு அறிமுக‌ப்ப‌டுத்தும்போது 'இவ‌ன் எங்க‌ள் வீட்டின் கோமாளி' என்று அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார். நான‌றிந்த‌வ‌ரை ஈழ‌த்தில், குடும்ப‌த்திலுள்ள‌வ‌ர்க‌ள் த‌ம் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ளை 'கோமாளி' என்று அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தை அறிந்திலேன். இவ‌ன் 'ந‌ல்ல‌ ப‌கிடிக்கார‌ன்' அல்ல‌து 'ச‌ரியான‌ குழ‌ப்ப‌டிக்கார‌ன்' என்று அழைக்கப்ப‌டுவார்க‌ளே த‌விர‌ 'கோமாளி' என்ற‌ வ‌ழ‌க்கு இருப்ப‌தாய் நான‌றியேன். அதேபோன்று க‌ம்ப‌ராமாய‌ண‌த்தில் ஆறுக‌ளைப் ப‌ற்றிப் பேசும் ஆற்றுப்ப‌ட‌லம் என்று ஓரிட‌த்தில் வ‌ருகின்ற‌து. ஆனால் ஆற்றுப்ப‌ட‌ல‌ம் என்ப‌து ஆறுக‌ளைப் ப‌ற்றிப் பேசுவ‌த‌ல்ல‌. அது ஒரு புல‌வ‌ன் தான் அர‌ச‌னொருவ‌னிட‌ம் பெற்ற‌ பொற்கிழியைப் போல‌ இன்னொரு புல‌வ‌னையும் போய்ப் பெறுக‌ என்று ஆற்றுப்ப‌டுத்துவ‌தையே ஆற்றுப்ப‌ட‌ல‌த்தில் உள்ள‌ட‌க்குவதாய் ‍‍ கூட‌வே என்னோடு இந்நாவ‌லை வாசித்த‌ ந‌ண்ப‌ர் குறிப்பிட்டார் (என‌து க‌ம்ப‌ராமாய‌ண‌ அறிவு, அத‌ன் சில‌ ப‌குதிக‌ளை என்னுடைய‌ ப‌த்தாம் வ‌குப்போடு வாசித்த‌து ம‌ட்டுமே).

4.
சிறுக‌தைக‌ளைப் போல‌வ‌ன்றி நாவ‌லுக்கு நில‌ப்ப‌ர‌ப்பு முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. உல‌கில் இன்று விய‌ந்தோந்த‌ப்ப‌டும் எந்த‌ நாவ‌லை எடுத்தாலும், அவ‌ற்றில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ளைப் போல‌வே க‌தை நிக‌ழ்கின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் முக்கிய‌த்துவ‌ம் உடைய‌தாக‌வே இருக்கின்ற‌ன‌. நாம் வாழ்விலே காண‌வே முடியாத‌ பிர‌தேச‌ங்க‌ளில் எல்லாம் நாமும் ந‌டமாடிக்கொண்டிருப்ப‌தான‌ எண்ண‌த்தை எத்த‌னையோ ப‌டைப்புக்கள் ந‌ம‌க்குள் ஏற்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆனால் அ.முத்துலிங்க‌ம் இந்நாவ‌லில் ஆக‌க்குறைந்து அவ‌ருக்கு அதிக‌ம் ப‌ரிட்ச‌ய‌மான‌ அந்த‌க்கால‌த்து யாழ்ப்பாண‌த்தைக்கூட‌ கூட‌ அவ்வ‌ள‌வு விரிவாக‌ காட்சிப்ப‌டுத்த‌வில்லை. கொக்குவில் ப‌குதியில் இருக்கும் ஒழுங்கைக‌ளையும், புகையிலை அவிக்கப்படும் குடிசைகளுக்கும் அப்பால் அவ‌ர‌து ஊர் கூட‌ விரிவாகச் சித்தரிக்க‌ப்ப‌ட‌வில்லை. அது கூட‌ ப‌ர‌வாயில்லை. யாழ்ப்பாண‌த்தவ‌ர்க‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் முக்கிய‌ கூறாக‌ இருந்த‌ சாதி ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் கூட‌ இந்நாவ‌லில் இல்லை. 80க‌ளின் பின்பான‌ ஈழ‌ ஆயுத‌ இய‌க்க‌ங்க‌ளின் எழுச்சியின் பின், சாதி ஒரு ம‌றைபொருளாக‌ இருந்த‌து என்று ஒர‌ள‌வுக்கு ஒப்புக்கொண்டாலும், 50/60க‌ளில் சாதிய‌ ஒடுக்குமுறை மிக‌க் கொடூர‌மாக‌வும், அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெடித்துக் கிள‌ம்பியும் இருந்திருக்கின்ற‌ன‌. ஆக‌க்குறைந்த‌து. பாட‌சாலையில் ஆசிரிய‌ர்க‌ளால்,சில‌ மாண‌வ‌ர்க‌ள் வெறுக்க‌ப்ப‌டுவதையும் ந‌க்க‌ல‌டிக்க‌ப்ப‌டுவ‌தையும் குறிப்பிடுகின்ற‌ அ.முத்துலிங்க‌ம், யாழ் சூழ‌லின் அத‌ன் உண்மையான‌ கார‌ண‌மாக‌ பெரும்பான்மையாக‌ அம்மாண‌வ‌ர்க‌ளின் சாதியே கார‌ண‌ம் என்ப‌தையாவ‌து ஒளிவும‌றைவின்றி நேர‌டியாக‌க் கூறியிருக்க‌லாம். யாழ்ப்பாண‌த்த‌வ‌ர்க‌ளின் ஒவ்வொரு சின்ன‌ச் சின்ன‌ விட‌ய‌த்திலும் சாதி முக்கிய‌ கூறாய் உட்பொதிந்திருப்ப‌தை எவ‌ராலும் எளிதாக உய்த்துண‌ர‌முடியும். இவ‌ற்றையெல்லாம் எழுதாமல் ஒருவ‌ர் யாழ்ச் சூழ‌லை ப‌திவு செய்ய‌ முடியாதா? என்று நாம் கேள்வி எழுப்ப‌லாம். ஆனால் இவ‌ற்றுக்கெல்லாம் நாம் விரும்பியோ/விரும்பாம‌லோ சாட்சியாக‌ இருந்திருக்கின்றோம் என்றால், இன்றைய‌ கால‌த்திலாவ‌து இவ‌ற்றை விம‌ர்சிக்காது நாசூக்காய்த் த‌விர்த்து நாம் யாழ்ப்பாண‌ம் ப‌ற்றிக் க‌தை சொன்னால், அது யாருக்காய், யாரைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள் என்ற‌ கேள்வியை எழுப்புத‌லும் த‌விர்க்க‌ முடியாதே இருக்கின்ற‌து.

இவ்வாறானவ‌ற்றோடு அ.முத்துலிங்க‌த்தின் நாவ‌ல் என‌ச்சொல்ல‌ப்ப‌டும் இதை வாசிப்ப‌வ‌ர்க‌ள், 75 சிறுக‌தைக‌ள் உள்ள‌ட‌க்கிய‌ அ.முத்துலிங்க‌த்தின் சிறுக‌தைக‌ள் (2004) என்ற‌ தொகுப்பை ஏற்க‌ன‌வே வாசித்திருந்தால், இத‌ன் உள்ள‌ட‌க்க‌த்தில் பெரிய‌ மாற்ற‌ம் எதையும் எதிர்பார்க்க‌முடியாது என்ப‌தே மிக‌ப்பெரும் ப‌ல‌வீன‌மாக‌க் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. சிறுக‌தைக‌ளைத் தொட‌ர்ந்து எழுதி வ‌ரும் அ.முத்துலிங்க‌ம் ஒரு நாவலை எழுதியிருக்கின்றார் என்று உற்சாக‌த்தோடு வாசிக்க‌ வ‌ரும் ஒரு வாச‌க‌ருக்கு இந்நாவ‌லில் வ‌டிவ‌த்திலோ, க‌தை சொல்லும் முறையிலே எத்த‌கைய‌ புதிய‌ வளர்ச்சியையும் கண்டறிய் முடியாது இருக்கின்ற‌து. அத்தோடு புன்ன‌கைக்க‌ வைப்ப‌தால் ம‌ட்டுமே ஒரு ப‌டைப்பு சிற‌ந்த ப‌டைப்பாக‌ உல‌கில் கொண்டாட‌ப்ப‌டுகின்ற‌தா என்று பார்த்தால் அவ்வாறிருப்ப‌வை மிக‌ அரிதே என்ப‌தே ய‌தார்த்த‌மாயிருக்கிற‌து. ஈழ‌ப்ப‌டைப்பாளிக‌ளில் பிற‌ரைப் போல‌வ‌ன்றி ப‌ல‌வேறு நாடுக‌ளின் ப‌ண்பாட்டுச் சூழ‌லில் வாழ‌வும், ப‌ல்வேறு உல‌க‌ப்ப‌டைப்பாளிக‌ளை நிறைய‌ வாசிக்க‌வும், ச‌ந்திக்க‌வும் செய்கின்ற‌ அ.முத்துலிங்க‌த்தால் ஏன் இன்னும் ம‌ன‌தை நெருடுகின்ற‌ ப‌டைப்புத்த‌ர‌ முடிய‌வில்லை என்ற‌ வினா அ.முத்துலிங்க‌த்தை வாசிக்கும் ப‌ல‌ வாச‌க‌ர்க‌ளுக்கு எழ‌வே செய்யும். அ.முத்துலிங்க‌ம் ந‌ன்கு ப‌ண்ப‌ட்ட‌ ம‌ண்ணை, வ‌ளமான‌ உர‌த்துட‌ன், வீட்டுக்குள்ளேயே ஒரு பூந்தொட்டியிலே ப‌ல‌ செடிக‌ளை நாட்டித் த‌ந்திருக்கின்றாரே த‌விர‌, க‌ட்ட‌ற்ற‌ எல்லைக‌ளுட‌ன், காடொன்றில் எல்லாக் கால‌நிலைக‌ளுட‌னும் போராடி ஆழ‌ வேர் ப‌ர‌ப்பி கிளை ப‌ர‌ப்புகின்ற‌ ஒரு விருட்ச‌த்தை எப்போது த‌ருவார் என்ப‌தை -இந்த‌ நாவ‌லில் அல்ல‌- இனி வ‌ருங்கால‌ங்கால‌ங்க‌ளில்தான் எதிர்பார்க்க‌ வேண்டியிருக்கின்ற‌து.

என்றாலும் இப்போது என்ன‌, இந்நாவலில் க‌தை சொல்லி ஓரிட‌த்தில் கூறுவார், த‌ன‌க்கு க‌ல்கியை சிறுவ‌ய‌தில் வாசித்த‌போது க‌ல்கியைப் போல‌ எழுத‌வேண்டும் என்றும், பின்ன‌ர் ஜேம்ஸ் ஜோய்ஸை வாசித்த‌போது ஜோய்ஸை எழுத‌வேண்டும் என்றும், இன்னும் கொஞ்ச‌க்கால‌ம் செல்ல‌ புதுமைப்பித்த‌ன் ஆக்கிர‌மிக்க‌ புதுமைப்பித்த‌னைப்போல‌ எழுத‌வேண்டும் என்றும் ஆசைப்ப‌ட்ட‌தாக‌வும் குறிப்பிடுவார். அதைப் போல‌த்தான் அ.முத்துலிங்க‌த்தின் ப‌டைப்புக்க‌ளை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் (என்னைப் போன்ற‌) ஒரு சில‌ராவ‌து அ.முத்துலிங்க‌த்தைப் போல‌ சொற் சிக்க‌ன‌மாக‌வும், எளிமையாக‌வும் அதே நேர‌த்தில் மெல்லிய‌ புன்ன‌கை வ‌ர‌ச்செய்வ‌துமாய் எழுதிவிட‌வேண்டுமென‌ மான‌சீக‌மாய் நினைக்க‌ச்செய்வார்க‌ள் என்ப‌தும் இயல்பே.

க‌ன‌வுக‌ளைச் சாம்ப‌ல் வான‌த்தில் தூவிச்சென்ற‌ இருப‌ற‌வைக‌ள்

Friday, March 13, 2009

1.
உன‌க்கான‌ இட‌ம் இதுவ‌ல்ல‌வென‌ உன‌க்கு ந‌ன்கு தெரியும். ப‌ல‌முறை ப‌ல‌வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் அது நிரூபிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து. ஆனாலும் நீ சாம‌ர்த்திய‌மாய் சில‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்கி அவ‌ற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உன‌து சுய‌ம், உன‌து க‌ர்வ‌ம், உன‌து கோப‌ம் எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை நீ ந‌ன்க‌றிவாய். இனி முதுகை இன்னுமாய் வ‌ளைப்ப‌த‌ற்கு முள்ள‌ந்த‌ண்டும், போலியாய்ச் சிரிப்ப‌த‌ற்கு உத‌டுக‌ளும் இல்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய‌ புதிய‌ முக‌மூடிக‌ளை அணிந்துகொள்வ‌த‌ற்கு நீ த‌யாராக‌ இருக்கிறாய். உன்னுடைய‌ க‌ன‌வுக‌ள் வேறுவித‌மான‌வை என்று நீ செம்ம‌ண் த‌ரைக‌ளில் காற்ச‌ட்டை க‌ழ‌ன்று விழ‌ விழ‌ ஓடிய‌ நாட்க‌ளிலிருந்தே நாம‌னைவ‌ரும் அறிவோம். ஆனால் ஒரு ம‌த்தியான‌ நாளில் உன‌து ம‌ண்ணையும், (அரைக்)காற்ச‌ட்டைக‌ளையும் நீ கைவிட்டு வந்த‌பின், உன‌து க‌ன‌வுக‌ளையும் கைவிட்டு வ‌ந்துவிட்டாயோ என்றுதான் எண்ண‌த்தோன்றுகின்ற‌து. ஆனால் குளிர்கால‌த்தில் பெருங்காற்று வீச‌ உன‌து அறைக்க‌ண்ணாடி ய‌ன்ன‌ல் அல‌றுவ‌துபோல‌, உன‌க்கும் உன‌க்கான‌ க‌ன‌வுக‌ள் அவ்வ‌ப்போது ஞாப‌க‌ங்க‌ளில் வ‌ந்து போகின்ற‌ன‌. நீ த‌னிமையையும், உரையாடும் மெல்லிய‌ குர‌ல்க‌ளையும் விரும்புகின்ற‌வ‌னாய் இருந்திருக்கின்றாய். இப்போது எழும் உன‌து க‌டுமையான‌ குர‌ல்க‌ளில் நீ நீயில்லாத‌வ‌னாகிப் போய்க்கொண்டேயிருக்கின்றாய். உன்னோடு உரையாடும் பிற‌ரோடு அள‌விற‌ந்த‌ அன்போடு உரையாட‌லைத் தொட‌ரும் நீ, ச‌டுதியாய் ஒருபுள்ளியில் ஏதோ சூனிய‌த்தில் த‌னித்த‌லைப‌வ‌னாய் மிக‌ மிக‌ அமைதியாகிப் போகின்றாய். அந்த‌த் திடீர் ம‌வுன‌ம் எதிரே உரையாடிக்கொண்டிருப்ப‌வ‌ரை ம‌ட்டுமல்ல‌ உன்னையும் மிக‌வும் அச்ச‌மூட்ட‌ச் செய்கின்ற‌து. ஆனால் உன்னைப் புரிந்துகொள்ப‌வ‌ர்க‌ளாய் உன்னோடு உரையாடுப‌வ‌ர்க‌ள் இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் மீண்டும் உன்னோடு உரையாட‌ப் பிரிய‌த்தோடு வ‌ருகின்றார்க‌ள். அது உன‌க்குச் ச‌ற்று ஆசுவாச‌மாய் இருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் நீ வித‌ந்து ஏற்றிய‌வையெல்லாம் உன்னை விட்டுத் தொலைதூர‌த்தில் போயிருப்ப‌தைப் பார்க்க‌ உன‌க்கு மிக‌வும் விச‌ன‌மாக‌ இருக்கிற‌து. உண்மையில் அவைக‌ள் உன்னைவிட்டு வில‌கிப்போக‌வில்லை; நீதான் அவைக‌ளை விட்டு வெகுதொலைவுக்கு வ‌ந்துவிட்டாய். பெண்க‌ள், இய‌ற்கை, ப‌ய‌ண‌ம், ம‌து அருந்துத‌ல் (குடித்த‌ல் அல்ல‌) என்று உன‌க்கு விருப்ப‌மான‌ ப‌ட்டிய‌லை எழுதத் தொட‌ங்கினால் அது முடிவ‌ற்றுப் போய்க்கொண்டிருக்க‌க்கூடும். ஒரு குழ‌ந்தையிட‌ம் அத‌ற்குப் பிடித்த‌மான‌து எவை என்றால் அது த‌ன‌க்குத் தெரிந்த‌ எல்லாவ‌ற்றையும் ‍எவ்வித‌ முன்முடிவுக‌ளின்றி சொல்லிக்கொண்டிருக்குமோ அதுபோல‌ நீயும் இந்த‌ உல‌கை ஒருகால‌த்தில் அத‌ன் அழ‌கிய‌லோடும் குரூர‌த்தோடும் சேர்த்தே நேசித்திருக்கின்றாய். ந‌ல்ல‌தும் கெட்ட‌தும், அழ‌கும் அழ‌கின்மையும், ம‌கிழ்ச்சியும் துக்க‌மும் க‌ல‌ந்தவையே 'உண்மையான‌வை' என்றும், அவ்வாறான‌ க‌ல‌வைக‌ளை எதிர்கொள்வ‌தும் அனுபவிப்ப‌தும், க‌ட‌ந்துசெல்ல‌லுமே வாழ்க்கையின் அற்புத‌மென‌ நீ ஒரு கால‌த்தில் சொல்லிக்கொண்டு திரிந்த‌து உன‌க்கு நினைவு இருக்கிற‌தோ தெரியாது என‌க்கு ந‌ன்கு நினைவிலுண்டு. நீ இன்று ஒற்றை இல‌க்கைக் கொண்ட‌வ‌னாய், ஒற்றைத் த‌ன்மைக்குள் எல்லாம் அட‌ங்கிவிடுமென‌ ந‌ம்புப‌வ‌னாய் ம‌ட்டும் க‌ண்ணும் க‌ருத்தாய் இருப்ப‌தைப் பார்க்கும்போது மிக‌வும் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. ஆனால் இதைவிட‌ மிக‌ச் சோக‌மான‌து என்ன‌வென்றால் இவ்வாறு ஒன்றுக்காய் ம‌ட்டுமே ஓடிக்கொண்டிருப்ப‌து உன‌து இய‌ல்பு இல்லை என்ப‌தால் ஒவ்வோரு முய‌ற்சியிலும் நீ தோற்றுக்கொண்டேயிருக்கிறாய். முய‌ற்சிப்ப‌தோ, தோல்விக‌ளைச் ச‌ந்திப்ப‌தோ த‌வ‌று என்று எவ‌ரும் சொல்ல‌ப்போவ‌தில்லை. ஆனால் தோல்விக‌ளிலிருந்து எதையாவ‌து க‌ற்றுக்கொள்ளும்போது தான் உன‌து முயற்சிக‌ள் ஆக்க‌பூர்வ‌மான‌தாய் மாறும் என்ப‌தை நீ ஒருகால‌த்தில் அறிந்த‌தை நீ இப்போது ம‌றந்துவிட்டாய். எனெனில் நீ ஒற்றை இல‌க்குடைய‌ ஒற்றைத் த‌ன்மையுடைய‌வ‌னாய் மாறிவிட்டாய். இத‌ற்காய் நீ உன‌து எல்லா இய‌ல்புக‌ளையும் க‌லைத்து நிற்ப‌வ‌னாய்ப் பார்க்கும்போது, என‌க்கு இலைக‌ளை உதிர்ந்த‌ இலையுதிர்கால‌த்து ம‌ர‌ங்க‌ள்தான் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இலையுதிர்கால‌த்து ம‌ர‌ங்க‌ளுக்கு ப‌ருவ‌ங்க‌ளுக்கேற்ப‌ த‌ங்க‌ளைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளும் இய‌ல்பு உள்ள‌தால் அவை மீண்டும் வ‌ச‌ந்த‌ கால‌த்தில் த‌ங்க‌ளை இலைக‌ளைத் துளிர்க்க‌ச் செய்து, த‌ம் வாழ்வைக் கொண்டாடுப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. ஆனால் நீ அப்ப‌டியில்லை, இலைதுளிர்கால‌ம், வ‌ச‌ந்த‌கால‌ம், இலையுதிர்கால‌ம், ப‌னிக்கால‌ம் என‌ எல்லாக்கால‌ங்க‌ளிலும் ஒற்றை இல‌ட்சிய‌த்தோடே ஓடிக்கொண்டிருப்ப‌தால், உன்னால் உன‌து தோல்விக‌ளின்போது உன்னை மீண்டும் புத்துயிர்வாக்க‌ முடிவ‌தில்லை.

2.
இன்று ஒரு மாதிரியாக‌ நீ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌தன் மூல‌ம் உன‌து இட‌த்தை நிரூபித்துவிட்டாய். ஒரு விட‌ய‌த்தின் வெற்றியை/தோல்வியை பிற‌ரோ பிற‌தோ தீர்மானிப்ப‌தில்லை. அது ந‌ம‌து ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து என‌ நானும் நீயும் பில்லிய‌ட்ஸ் விளையாடிய‌ப‌டி விவாதித்த‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. நாம் ஒரு முயற்சியில் ஈடுப‌ட்டு அதில் நாம் எதிர்பார்த்த‌ விளைவு கிடைக்காவிட்டாலும், எம‌தள‌வில் நாம் முழுதாய் முய‌ற்சித்தோம் என்று வ‌ரும் ந‌ம்பிக்கை, நாம் ஒரு விட‌ய‌த்தில் 'தோற்றிருந்தாலும்', ந‌ம்மைப் பொருத்த‌வ‌ரை அது ம‌கிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌ 'வெற்றியே' என‌த்தான் புதிதாய் வ‌ரைய‌றையும் செய்திருந்தோம். இன்னும் விரிவாய் விள‌ங்குவ‌த‌ற்காய் நாம் ஒவ்வொரு செம்ஸ்ட‌ரிலும் எழுதும் ப‌ரீட்சையை உதார‌ண‌த்திற்கு எடுத்திருந்தோம். ப‌ரீட்சையில் அதிக‌ புள்ளிக‌ள் என்ப‌தில‌ல்ல‌ ந‌ம‌து வெற்றி, நாம் ஒரு ப‌ரீட்சையை திருப்ப‌தியாய் எம்ம‌ள‌வில் செய்திருக்கின்றோம் என்று வ‌ருகின்ற‌ நிம்ம‌தியே ந‌ம‌க்கான‌ வெற்றியென‌ச் சொல்லிய‌ப‌டி ரீடோ ஆற்ற‌ங்க‌ரையிலும், பொறியிய‌ல் பீட‌மிருந்த‌ மெக்க‌ன்ஸி வ‌ளாக‌த்திலும் க‌ண‌ட‌ க‌ண்ட‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு விள‌க்க‌ம் கொடுத்து அவ‌ர்க‌ளைக் 'கொடுமை'யும்ப‌டுத்தியிருக்கின்றோம். ஆக‌ ந‌மதான‌ வரைய‌றுப்பில் ஒரு பாட‌த்தில் குறைய‌ புள்ளிக‌ள் எடுத்தாலும் (சில‌வேளைக‌ளில் தேர்ச்சிய‌டையாம‌ல் போனால் கூட‌) ந‌ம‌த‌ள‌வில் திருப்ப‌தியாய்ச் செய்திருக்கின்றோம் என்றால் எம‌தான வெற்றியே. இவ்வாறாக‌ வெற்றி X தோல்வியை வ‌ரைய‌றுத்த‌ நாம், நீ 'ப‌ண‌த்தைச் சேக‌ரிப்ப‌தில் ம‌ட்டுமே ந‌ம‌து எல்லாப் பெருமித‌ங்க‌ளும், ச‌ந்தோச‌ங்க‌ளும் இருக்கிற‌து' என்கின்ற‌போது கேட்க‌ச் ச‌ங்க‌ட‌மாக‌வே இருக்கிற‌து. இத‌ன் பொருட்டு உன‌து உழைப்பையோ அல்ல‌து பொதுவாக‌ உழைப்பையோ கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌த‌ல்ல‌ என‌து நோக்க‌ம‌. மிக‌க்குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்தின் கார‌ண‌மாக‌ ஏழு நாட்க‌ளாக‌ வேலை செய்ப‌வ‌ர்க‌ளையோ, ஒரு நாளில் 12 ம‌ணித்தியால‌த்துக்கு மேலாய் இர‌ண்டு ஷிப்ட்(shift) செய்ப‌வ‌ர்க‌ளையோ நாமெல்லோரும் ம‌திக்க‌வே செய்கின்றோம் என்ப‌தை நீய‌றிவாய். ஆனால் உன‌து வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எட்டு ம‌ணித்தியால‌ வேலையிலேயே உன‌க்குப் போதுமான‌ ப‌ண‌த்தை உழைத்தும் இன்னும் வேண்டுமென‌ நீ அலைய‌த்தொட‌ங்கிய‌போது உன‌க்கும் என‌க்குமிடையில் விரிச‌ல் வ‌ந்திருக்க‌வேண்டும் போலும். நீ உன‌து எட்டு ம‌ணித்தியால‌ வேலைக்குப் பிற‌கும் புதிய‌ புதிய‌ வேலைக‌ளைச் செய்ய‌த்தொட‌ங்கினாய். அவ்வாறான‌ உதிரிவேலைக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டால் உன‌து சிறுவ‌ய‌துக் க‌ன‌வுக‌ளைப் போல‌ அவையும் நீண்டுகொண்டே போக‌க்கூடிய‌தாக‌ இருக்கும். ஒரு ப‌ல்பொருள் அங்காடியில் போய் எல்லாப் பொருட்க‌ளையும் எடுக்க‌முடிவ‌துபோல‌ உன்னிட‌ம் வ‌ரும் வாடிக்கையாள‌ரிட‌ம் நீயே அவ‌ர்க‌ளின் வாழ்க்கைகுத் தேவையான‌ எல்லாவ‌ற்றையும் செய்து த‌ருகின்றேன் என்கின்ற‌போதுதான் ப‌ய‌முறுத்துகின்ற‌து. எல்லாவ‌ற்றையும்... சாம‌ர்த்திய‌ வீட்டிலிருந்து க‌லியாண் வீடுவ‌ரை ப‌க்கேட்ஜாக‌ (package) கொடுப்ப‌தைப் போல‌, நீ அவ‌ர்க‌ளுக்கு எல்லாவ‌ற்றையும் செய்துகொடுப்ப‌வ‌னாக‌ இருக்கின்றாய். நீ ஒருகால‌த்தில் ப‌ண‌த்தை ருசிப்ப‌வ‌னாக‌ இருந்து, இப்போது ப‌ணம் உன்னை உருசிப்ப‌தாய் இருக்கும்போது, அந்த‌ வெறியில் நீ புதிய‌ ம‌னித‌ர்க‌ளை (உன‌து மொழியில் சொல்வ‌த‌னால் வாடிக்கையாள‌ர்க‌ளை)தேடி ஓட‌த்தொட‌ங்குப‌வ‌னாய் ஆகிவிட்டாய். இப்போது உன்னோடு உரையாடும்போது -தொலைபேசியில் வ‌ரும் ஒரு ரெலிமார்க்கெட்டிங் குர‌லுக்கும்- உன்னுடைய‌ குர‌லுக்கும் அவ்வ‌ள‌வு வித்தியாச‌ம் தெரியாது -மிக‌ இய‌ந்த‌ர‌த்த‌ன‌மாய்ப்- போய்விட்ட‌து. உன‌து எல்லாப் பேச்சும் ப‌ணத்தை இன்னும் இன்னும் எப்ப‌டி அதிக‌மாய்ச் ச‌ம்பாதிப்ப‌து என்ப‌தாய் இருக்கிற‌து. தொலைபேசி -ரெலி மார்க்கெட்டிங்- குர‌லை ஆக‌ இய‌லாத‌ ப‌ட்ச‌த்தில் ச‌ட்டென்று துண்டித்து அடுத்த‌ வேலையைப் பார்க்க‌ப் போய்விடலாம். ஆனால் என்னால் உன‌க்கு அதைச் செய்ய‌முடியாது; எனெனில் நீ என‌க்கு ஒரு கால‌த்தில் எல்லாவ‌ற்றையும் ப‌கிரும் உண்மையான‌ ந‌ண்ப‌னாக‌ இருந்த‌வ‌ன்.

உன‌க்கான‌ புக‌ழ், நீ விரும்பிய‌ அந்த‌ஸ்து எல்லாம் இப்போது வ‌ந்துவிட்ட‌ன. ஒரு கைய‌ட‌க்க‌மான‌ விசிட்டிங் கார்ட்டில் எவ்வ‌ள‌வுதான் எழுத்தை நுணுக்கி நுணுகி எழுதினாலும் நீ செய்துகொண்டிருக்கும் ப‌ல‌வேறு வேலைக‌ளுக்கான‌ விப‌ர‌ங்க‌ளை எழுதிவிடுத‌ல் க‌டின‌மாய் இருக்கிற‌து. உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்காய் இனி வ‌ருங்கால‌த்தில் விசிட்டிங் கார்டுக‌ள் 11 X14 ப‌க்க‌ சாதார‌ண‌ ப‌க்க‌மாய் மாற‌வும் கூடும். நீ விரும்பிய‌ ஒற்றைக் குறிகோளின் உச்ச‌க்க‌ட்ட‌த்தில் ச‌மூக‌ம் முழுதாய் உன்னை ம‌திப்ப‌த‌ற்கு ஏதோ ஒன்று குறைகிற‌தென்றாய். ஒருநாள் நீ சொன்னாய், ச‌மூக‌த்தில் ம‌திப்புள்ள‌ ம‌னித‌ன் என்றால் அவ‌ன் சுற்ற‌ம் சூழ‌ல் சூழ‌ ஒரு பிர‌மாண‌ட‌த் திரும‌ண‌த்தைச் செய்ப‌வ‌னாக‌ இருந்தாக‌ வேண்டும். நீ உன‌து வாடிக்கையாள‌ருக்கு எல்லாவ‌ற்றையும் ப‌க்கேட்ஜாக‌ கொடுப்ப‌தைப் போல‌ திரும‌ண‌த்தை ஒரு ஆட‌ம்ப‌ர‌ ப‌க்கேட்ஜாக‌ செய்வதில் உன‌க்கு எந்த‌ப் பிர‌ச்சினையுமில்லை. ஆனால் என‌க்கிருக்கும் க‌வலை என்ன‌ என்றால் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், வீடியோ, சட‌ங்கு செய்யும் அய்ய‌ர், வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கான‌ விருந்துண‌வு என‌ எல்லாம் சேர்ந்தே வ‌ரும் ப‌க்கேட்ஜ்க‌ளில் இருப்ப‌துபோல‌, ம‌ண‌ம‌க‌ன் தேடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ண‌ம‌க‌னும், ம‌ண‌ம‌க‌ள் தேடுப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ண‌ம‌க‌ளும் சேர்ந்த ஒரு சிற‌ப்புப் ப‌க்கேட்ஜ் வ‌ர‌க்கூடுமோ என்ப‌தே. உன‌து திரும‌ண‌த்தின்போது நீ சீத‌ன‌ம் வாங்க‌வில்லை என்ப‌து சிறு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து ந‌ண்ப‌னின் சில‌ இய‌ல்புக‌ள் இன்னும் மாறாம‌ல் இருக்கிற‌து என்ப‌தில் என்னைவிட‌ வேறு யார் அதிக‌ம் குதூக‌லிக்க‌ முடியும்? எனினும் சில‌ர் நீ உன‌து ம‌ண‌ம‌க‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது பெண் அக்குடும்ப‌த்தில் ஒரெயொரு பிள்ளையாக‌ இருக்க‌வேண்டுமென்ப‌தில் உறுதியாய‌ இருந்த‌தாக‌வும் அத‌ற்கான‌ கார‌ண‌ம் எப்போதோ ஒரு கால‌த்தில் அவ‌ர்க‌ளின் முழுக்குடும்ப‌ச் சொத்தும் உன‌க்கு வ‌ரும் என்கின்ற‌ ம‌றைவான‌ திட்ட‌ம் இருந்த‌தாக‌வும் பேசியிருக்கின்றார்க‌ள். ஆனால் அது குறித்து நான‌திக‌ம் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. எனெனில் எல்லாவ‌ற்றையும் ஆக‌வும் அல‌சி ஆராய்ந்தால் எவ‌னுமே யோக்கிய‌ன் இல்லையென்ப‌தை நாமெல்லோருமே அறிவோம். ஆக‌ குறைந்த‌ப‌ட்ச‌ம் எம்மால‌ இய‌லக்கூடிய‌வ‌ற்றை நாம் ந‌ம்பிய‌வ‌ற்றை கைவிடாதிருப்ப‌து ஒவ்வொரு ம‌னித‌ருக்கு அவ‌சிய‌மான‌து என்ப‌தை உண‌ர்ந்து வைத்திருக்கின்றேன்.

உன‌க்குத் துணையாக‌ வ‌ந்த‌ பெண் அவ்வ‌ள‌வு அருமையான‌வ‌ள் என்ப‌தைவிட‌, நாம் தானே ஒருவ‌ர் ந‌ல்ல‌வ‌ராக‌ அல்ல‌து அல்லாத‌வ‌ராக‌ இருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்குவ‌தாய் இருக்கின்றோம். 'தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ரா' என்ப‌து எவ்வ‌ள‌வு அருமையான‌ வ‌ரிக‌ள். ந‌ம‌தான‌ வாழ்வை நாமே அமைக்கும்போது எல்லா விளைவுக‌ளுக்கும் நாமேதானே பொறுப்பாக‌ முடியும். ஓரிட‌த்தில் நிலையாக‌ இருக்கும் க‌திரையைக் க‌வ‌னிக்காது, நம‌து கால்க‌ள் அடிப‌ட்ட‌வுட‌ன், க‌திரை அடித்துவிட்ட‌தென்று கூறுவ‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மான‌து. ந‌ம‌து கால்க‌ள‌ க‌திரையை அடித்துவிட்ட‌தென்று சொல்வ‌த‌ல்ல‌வா சால‌ச்சிற‌ந்த‌து. இந்த‌த் 'தேற்ற‌ம்' குறித்து விரிவாக‌ உரையாடிய‌து, தே(ர்)மோ டைன‌மிக்ஸ் (Thermo Dynamics) எக்சாமிற்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் அம‌ர்ந்த‌ ஒரு நாளில் என்ப‌து என‌க்கு நன‌றாக‌ நினைவிருக்கிற‌து. இப்போது தேர்மோ டைனமிக்ஸில் என்ன‌ ப‌டித்தோம் என்ப‌து ஞாப‌க‌ அடுக்குக‌ளில் இருப்ப‌தைவிட‌ இந்த‌ விதண்டாவாத‌ங்க‌ள் தான் அதிக‌மாய் நினைவில் ஓடிய‌ப‌டியிருக்கிற‌து. நம்மைப் போல‌வே நாம் ப‌டிக்க‌த் தேர்ந்தெடுத்த‌ துறையும் த‌வ‌றான‌து என்று கூறுவ‌தைவிட‌ வேறென்ன‌ சாட்டைச் சொல்லி ந‌ம்மை நாமே ஆறுத‌ற்ப‌டுத்துவ‌து? என‌க்குத் தெரியும் நான் இப்ப‌டிக்கூறுவ‌து உன‌க்குப் பிடிக்காது என்று. 'வ‌ல்ல‌வ‌னுக்கு புல்லும் ஆயுத‌ம்' என்றிருக்கும்போது இப்ப‌டிச் சாட்டுக்க‌ள் கூறிக்கொண்டிருப்ப‌து என்ப‌து ஒருவ‌கைத் த‌ப்பித்த‌ல் என்றுதான் நீ அடிக்க‌டி கூறுவாய். உண்மையாயிருக்கலாம். போரிலிருந்து, நேச‌த்திலிருந்து, க‌ற்ப‌திலிருந்து என்று எத்தனை வித‌மான‌ விட‌ய‌ங்க‌ளிலிருந்து த‌ப்பித்து ஓடிக்கொண்டிருக்கும்போது இதுவும் இன்னொரு த‌ப்பித்த‌லாய் இருக்கலாம்தான்.

3.
நீ உழைத்துப் பெறும் ப‌ண‌த்தைப் போல‌வே உன‌து துணையையும் ச‌ட‌ப்பொருளாக‌ நினைத்து நட‌த்திய‌போதுதான் எல்லாச் சிக்க‌ல்க‌ளும் உன‌து திரும‌ண‌ வாழ்வில் வ‌ர‌த்தொட‌ங்கின‌. ப‌ண‌த்தைப் போல‌ பெண்ணையும் நீயுன‌து உட‌மையாக்கிய‌போது உயிருள்ள‌ எந்த‌ ஆத்மாவால்தான் தாங்க‌ முடியும்? உன‌து ப‌ண‌ம் சேக‌ரிக்கும் ஆசையில் ப‌க‌ல்- பின்னேர‌ம் என்று ஓட‌ ஓட‌ உன‌து துணை மிக‌ப்பெரும் த‌னிமையில் விட‌ப்ப‌ட்டிருக்கிறாள். திரும‌ண‌மான‌ பெண்ணை ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை, அதுவ‌ரை எல்லாவ‌ற்றையும் க‌வ‌னித்து க‌வ‌னித்துக் கொடுக்கின்ற‌ பெற்றோர் கூட அவ‌ளை வேறொருத்தியாய் பார்க்கும் நிலையை என்ன‌வென்று சொல்வ‌து? ஒருநாள் நீ விட்டுக்கு வ‌ந்த‌போது அவ‌ள் த‌ன‌து மாமியின் ம‌க‌னோடு வீட்டிற்குள் க‌தைத்துக்கொண்டிருந்த‌து உன‌க்குள் ப‌ல ச‌ந்தேக‌ங்க‌ளை விதைக்க‌த் தொட‌ங்கின‌. பிள்ளை இல்லாத‌ப‌டியால்தானே இவ‌ள் இப்ப‌டி ம‌ற்ற‌வ‌ரோடு ப‌ல்லைக்காட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறாள் என்று விரைவில் உங்க‌ளுக்கான‌ பிள்ளையைப் பெறும் முய‌ற்சியில் ஈடுப‌ட‌த்தொட‌ங்கினாய். பிள்ளை வ‌ந்தால் எல்லாப் பிர‌ச்சினையும் தீருமென்ற‌ கால‌ம் கால‌மாய் சொல்ல‌ப்ப‌ட்ட‌த்தை நீயும் ந‌ம்புவ‌தாயிருந்த‌போது, நாம் க‌விதையொன்றில் விவாதித்த‌ வ‌ளாக‌ கால‌த்து ந‌ண்ப‌னாய் நீ இல்லையோ என‌ என‌க்குத் தோன்றிய‌து. உன‌து துணை மீதான ச‌ந்தேக‌ம், அவ‌ள் த‌ன்னை அழ‌குப‌டுத்துவ‌தில், த‌னியே வெளியே செல்வ‌தில், தொலைபேசுவ‌தில் என‌ எல்லாவ‌ற்றிலும் சந்தேக‌ப்ப‌டத்தொட‌ங்கினாய். அவ‌ள் செய்யும் ஒவ்வொரு விட‌ய‌த்திற்கும் நீ விள‌க்கம் கேட்க‌த்தொட‌ங்கினாய்.

ஒரு நாள் நானும் நீயும் செக‌ண்ட‌ க‌ப்பில் (Second Cup) தேநீர‌ந்திக்கொண்டிருந்த‌போது, 'இவ‌ள‌வை வெளியே எல்லாத்தையும் மூடிக்கொண்டு உள்ளே எல்லாவ‌ற்றையும் திற‌ந்துகொண்டு திரிகிறாள‌வை' என்றாய். இதைக்கேட்ட‌ ஆத்திர‌த்தில் 'ஏன் நாங்க‌ளுந்தானே எவ‌ள் திற‌ந்து காட்ட‌மாட்டாளென்று எங்க‌டைய‌ளை துருத்திக்கொண்டு திரிகிறோம்' என்று நான் சொன்ன‌போது உன் க‌ண்க‌ளில் தெரிந்து விய‌ப்பா கோப‌மா என்ப‌து குறித்து நான் அக்க‌றை கொள்ள‌வில்லை. உன‌க்கு ஞாப‌க‌ம் இருக்குமோ இல்லையோ தெரியாது, ஒரு கால‌த்தில் நாங்க‌ளுந்தானே ஒரு பெட்டையாவ‌து எங்க‌ளோடு க‌தைக்கா மாட்டாளா.., சேர்ந்து கூட‌த்திரிய‌ மாட்டாளா என்று ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றோம். ஒருமுறை ந‌ல்ல‌ வ‌டிவான‌ பெட்டை short skirtம், white topமுமாய் ப‌ஸ்சில் ஏறிய‌போது, வ‌குப்புக்காய் க‌ம்ப‌ஸில் இற‌ங்காம‌ல் அவ‌ள் எங்கே இற‌ங்குவாளோ அங்கே போய் இற‌ங்குவோம் என்று, அவ‌ளோடு போய் அவ‌ளை அவ‌ள் வீடு வ‌ரை ப‌த்திர‌மாய்க் கொண்டுபோய் விட்ட‌தை ம‌ற‌ந்துவிட்டாயா? அப்ப‌டித் திரும்பி வ‌ருகையில் ஒரு ப‌ல்ல‌க்கு ம‌ட்டும் இல்லை; இருந்திருந்தால் அவ‌ளை இந்த‌ ந‌க‌ர் பூரா நாங்க‌ள் அடிமைக‌ள்போல‌ தூக்கிக்கொண்டு திரிய‌வும் த‌யாராயிருந்திருப்போம் என்று எங்க‌ள‌ நிலையை நாங்க‌ளே ந‌க்க‌ல‌டித்த‌ அந்த‌ப் பின்னேர‌ப்பொழுதை ம‌ற‌ந்து, எப்ப‌டி 'இவ‌ள‌வை எல்லாவ‌ற்றையும் விரித்துக் காட்டிக்கொண்டு திரிகிறாளாவை' என்கிறாய்.

4.
செய்கின்ற‌ எல்லாவ‌ற்றுக்கும் விள‌க்க‌ங்க‌ள் கொடுத்துக்கொண்டிருக்க‌ முடியுமா என்ன‌? அவ‌ள் சில‌வேளைக‌ளில் உன‌து கேள்விக‌ளுக்கு எதையும்பேசாது ம‌வுன‌மாகும்போது வார்த்தைக‌ள் த‌டிக்க‌ப் பேசிய‌ உன் வ‌ன்முறை மெல்ல‌ மெல்ல‌ உட‌லில் கைவ‌க்கும‌ள‌வுக்கு மாறிப்போய்விட்ட‌து. 911 ஜ‌ அழைப்ப‌தோ, த‌ன‌து பெற்றோரை அழைத்து த‌ன‌து நிலைமைக‌ளைச் சொல்வ‌தோ அவ‌ளுக்குக் அவ்வ‌ள‌வு ஒன்றும் க‌டின‌மான‌ விட‌ய‌மில்லை. உன் மீதான‌ அன்பின் நிமித்த‌மோ அல்ல‌து பெண் என்றால் பொறுத்துதான் ஆக‌வேண்டும் என்ற‌ க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ப‌டியாலோ அவ‌ள் எதுவும் எதிர்வினை செய்யாத‌தை உன‌க்கு வ‌ச‌தியான‌தாய் ஆக்கிக்கொண்டாய். ஒருநாள் இவ்வாறு நீ ஆம்பிளைத்த‌ன‌த்தைக் காட்டிய‌ ம‌றுநாள் நான் உங்க‌ள் வீட்டுக்கு வ‌ந்திருந்த‌போது அவ‌ளின் வ‌ல‌துப‌க்க‌ வாய் மிக‌வும் வீங்கியிருப்ப‌தை அவ‌தானித்திருதிருக்கின்றேன். 'என்ன‌ ந‌ட‌ந்த‌து' என்று கேட்ட‌த‌ற்கு 'ஒன்றுமில்லை ப‌ல்லு வ‌லி அதான்' அப்ப‌டியென்றிருக்கிறாள். ஆனால் மூக்கின் மேலே பிளாஸ்ர‌ர் ஒட்ட‌ப்ப‌ட்டிருந்த‌த‌ற்கும் ப‌ல் வ‌லிதானா காரண‌மா என்று கேட்க‌ விரும்பிய‌ வார்த்தைக‌ளை நான் என‌க்குள் விழுங்கிக்கொண்டேன். இப்ப‌டி மூர்க்க‌மாய் வ‌னமுறை செய்ப‌வ‌ர்க‌ள் மூர்க்க‌மாக‌வே அன்பும் செய்து வ‌ன்முறைக்குள்ளாவ‌ர்க‌ளை த‌ங்க‌ளுக்கு ஏற்ற‌வாறு அடக்கி வைத்திருப்பார்க‌ள் என்ப‌து குறித்து தெளிவிருந்தாலும், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் வாய் திற‌ந்து முறைப்பாடு செய்யாதிருக்கும்வ‌ரை பிற‌ரால் எதுவும் உத‌வ‌ முடிவ‌தில்லை என்ப‌தே ய‌தார்த்த‌மாயிருக்கிற‌து. அத்தோடு அப்போது உன‌து துணை க‌ர்ப்ப‌மாக‌வுமிருந்தாள். ஆக‌வே நானும் 'எல்லோரையும்போல‌' பிளளை பிற‌ந்த‌வுட‌ன் உங்க‌ள் இருவ‌ருக்குமான‌ உற‌வு சுமுக‌மாகிவிடுமென‌ ந‌ம்பியிருந்தேன். பிள்ளை பிற‌ந்து அவ‌னுக்கு ஒரு வ‌யது வ‌ந்த‌வுட‌ன் ஒரு பெரிய‌ பிற‌ந்த‌நாள் விழாவைக் கொண்டாட‌ச் செய்திருந்தாய். சாம‌ர்த்திய‌ வீடுக‌ள் போல‌ பிற‌ந்த‌நாட்க‌ளுக்குப் போவ‌தும் என‌க்குப்பிடிப்ப‌தில்லை என்ப‌தால், நான் மொன்றிய‌லுக்குப் போக‌ இருப்ப‌தால் வ‌ர‌முடியாதிருக்கென‌ ஒரு சாட்டுச் சொன்னேன். நீ என்னோடு நெருங்கிப் ப‌ழ‌கிய‌வ‌ன் என்ப‌தால் உன‌க்கு எது உண்மையென‌ப் புரியுமென‌ என‌க்கு ந‌ன்கு தெரியும். ஆனால் ம‌னித‌ ம‌ன‌து ‍-முக்கிய‌மாய் உன‌து ம‌ன‌து‍- ஏதோ ஒரு கார‌ண‌த்தை, அது பொய்யாக‌ இருந்தாலும் அதைக்கேட்க‌வே விரும்புகிற‌து. வ‌ள்ளுவ‌ரும் சூழ‌லைப் பொறுத்து பொய் சொல்வ‌தையும் ஏற்றுக்கொள்ள‌லாம் என்கிறார். கூட‌க்குடித்து கூழ்ப்பானைக்குள் விழுந்த‌தைவிட‌ அற‌ப்பானைக்குள் விழுந்தெழும்பிய‌து இவ்வாறான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் எப்ப‌டி உத‌வுகிற‌து பார்த்தாயா?

இப்ப‌டி உன‌து துணையை க‌ன்ன‌ம் வீங்கியும், மூக்கும் உடைந்த‌துமான‌ சில‌ வார‌ங்க‌ளின் பின் அவ‌ள் என‌து செல்போனுக்கு அழைத்திருந்தாள். என்னை அழைத்த‌ற்கான‌ விசேட‌ கார‌ண‌ம் எதாவ‌து இருக்கிற‌தா என‌ வினாவிய‌போது எதையோ சொல்வ‌த‌ற்குத் த‌ய‌ங்கிக்கொண்டிருப்ப‌து ம‌றுமுனையின் ம‌வுன‌த்தின் மூல‌ம் விள‌ங்கிய‌து. 'இப்ப‌டியே சும்மா போனை காதில் வைத்துக்கொண்டிருக்காம‌ல் சொல்ல‌ வ‌ந்த‌தைச் சொல்லுங்க‌ள்' என்று வ‌ற்புறுத்திய‌போதுதான், நீ, அவள் என்னோடு ப‌டுத்தாளா? என்று கேட்டு ச‌ண்டைபிடித்த‌தாய் மெல்லிய‌ குர‌லில் சொன்னாள். 'உங்க‌ளை இப்ப‌டிக் கேட்டுவிட்டு ந‌ண்ப‌ன் அடித்தானா?' என்று கேட்டேன். 'இல்லை' என்று எச்சிலை விழுங்கிய‌போது என்ன‌ பிற‌கு ந‌ட‌ந்திருக்குமென்று ஊகித்த‌றிவ‌து அவ்வ‌ள‌வு க‌டின‌மாயிருக்க‌வில்லை. உன்னைப் போன்ற‌ ஆணாக‌வே நானிருப்ப‌தால் துணையாக‌ வ‌ரும் பெண் மீது ச‌ந்தேக‌ம் கொள்வ‌தைப் புரிந்துகொள்ள‌ முடிகிற‌து. எம‌க்கு எம்மோடு இருப்ப‌வை முழுமையாக‌வும், எம‌க்கு ம‌ட்டுமே உரித்தாக‌வும் இருக்க‌வேண்டும் என்று க‌ன‌வுக‌ள் க‌ண்டுகொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தால் உன‌க்கு வ‌ந்த‌ ச‌ந்தேக‌ம் என‌க்கு வ‌ராது/வ‌ர‌ப்போவ‌தில்லை என்றும் சொல்ல‌ப்போவ‌தில்லை. ஆனாலும் ப‌டுக்க‌ வேறு பெண்க‌ள் இல்லாது உன‌து துணையோடு ப‌டுக்க‌ தூண்டில் போடுவேன் என்று நீ நினைத்திருக்கிறாய் என்ற‌போதுதான் உன் மீதான‌ என் ம‌திப்பீடுக‌ள் அத‌ல‌பாதாள‌த்தில் போன‌து போல‌த் தோன்றிய‌து. ரொர‌ண்டோவின் ய‌ங் ஸ்ரிட்டில் இருந்த‌ ஸான்சிபாரில் ஸ்ரிப் டான்ஸ் பார்த்துவிட்டு, விடுதியை மூடிய‌நேர‌த்தில், அங்கே ஆடிய‌ பெண்ணைக் கூட்டிக்கொண்டு வெவ‌ரி மோட்ட‌லுக்குப் போன‌து ப‌ற்றி உன‌க்கு இன்னொரு முறை நினைவூட்ட‌வா? வேண்டாம், திரும‌ண‌த்தின்பின் அநேக‌ரைப் போல‌ நானும் புனித‌மாக‌ப் போகின்றேன், எந்த‌க்கார‌ண‌த்தை முன்னிட்டும் என் துணையிட‌ம் என‌து க‌ட‌ந்த‌கால‌ங்க‌ளைப் பேச‌க்கூடாதென‌ நீ கேட்டுக்கொண்ட‌து இப்போது ஞாப‌க‌த்தில் வ‌ந்து தொலைக்கிற‌து. நான் உன‌து துணையோடு ப‌டுத்தேனா என்று நீ கேட்ட‌தை அவ‌ள் தொலைபேசியில் சொன்ன‌போது, ஏன் அடிக்க‌டி நீ ஸான்சிபாருக்கு திரும‌ண‌த்துக்கு முன்பு போனாய் என்று கேட்கும்ப‌டி அவ‌ளிட‌ம் சொல்ல‌ விரும்பிய‌தை ம‌றுமுனையில் எத‌ற்காக‌வோ அழுத‌ உன‌து ம‌க‌னின் குர‌ல் த‌டுத்து நிறுத்தியிருந்த‌து.

இத‌ன்பிற‌கு ஒருநாள் நாங்க‌ள் த‌ற்செய‌லாய் உன‌து வீட்டுக்க‌ருகிலிருந்த‌ தெருவில் ச‌ந்தித்த‌போது 'வா பாருக்குச் சென்று ம‌து அருந்துவோம்' என்று வ‌ற்புறுத்தி நீயென‌து காரில் ஏறிக்கொண்டாய். ம‌துவின் உச்ச‌த்தில், 'நான் உன் ம‌னுசியோடு ப‌டுத்தேனா என்று கேட்டிருக்கிறாய் நீ ம‌ட்டும் என்ன‌ திற‌மா?' என்று க‌த்தினேன். எதையும் திருப்ப‌ப்பேசாத‌ உன‌து ம‌வுன‌ம் என‌க்கு மிக‌வும் ஆச்ச‌ரிய‌மாயிருந்த‌து. அன்றிர‌வு உன்னை உன‌து வீட்டடியில் இற‌க்கிவிட்டுத் திரும்பிய‌ ப‌த்து நிமிட‌த்தில், 'நீ பாரில் கேட்ட‌ கேள்விக்கு இப்போது ப‌தில் சொல்லுகிறேன் துணிவிருந்தால் என் வீட்டுக்கு வாடா?' என்றாய். உன‌து வீட்டுக்குள் வ‌ந்த‌போது ஒரு பிர‌ள‌ய‌ம் ந‌ட‌ந்த‌மாதிரி எல்லாம் குலைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. வ‌ர‌வேற்ப‌றையிலிருந்த‌ தொலைபேசி இர‌ண்டாக‌ உடைக்க‌ப்ப‌ட்டு அது வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்காலியும் காலில்லாது இருந்த‌து. 'எங்கைய‌டா உன‌து ம‌னுசி?' என்று கேட்ட‌போது உன்ன‌வ‌ள் குசினிக்குள் மூச்சுப்பேச்சில்லாம‌ல் கிட‌ப்ப‌தைச் சைகையால் காட்டினாய். அவ‌ளுக்கு நெற்றியிலும், பின்ன‌ந்த‌லையிலும் காய‌ங்க‌ள் ஏற்ப‌ட்டு இர‌த்த‌ம் க‌சிய‌த்தொட‌ங்கியிருந்த‌து. What the F***.என்று 911ஐ அழைக்க‌த்தொட‌ங்கினேன். அத‌ன்பிற‌கு ச‌ட்ட‌ம் வ‌ரைய‌றுத்த‌ப‌டி எல்லாம் நிக‌ழ்ந்து முடிந்திருந்த‌து. ஆனால் நாம் எவ‌ருமே எதிர்பாராத‌ ஒன்று பிறகு நிக‌ழ்ந்த‌து. உன‌க்குரிய‌ த‌ண்ட‌னை முடிந்து, குறிப்பிட்ட‌ ஊர‌ட‌ங்குட‌ன் நீ வெளியே வ‌ந்த‌ ஒரு ச‌னிக்கிழ‌மை நீ த‌ற்கொலை செய்துகொண்டாய். இத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளைத் தேடிப்போவ‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. எல்லோரும் உன்னைப் போல‌ ஒரு ஒற்றைக் கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்து த‌ங்க‌ளை ச‌ட்ட‌த்தின் தேவ‌ர்களாக் ஆக்கிக்கொண்டன‌ர். ஆனால் உன‌து முடிவுக்குக் கார‌ண‌த்தை ஆராய‌ வேண்டுமெனில் எம்மைப் போர் துர‌த்திய‌ கால‌த்திலிருந்து ஆர‌ம்பித்த‌, எம‌து பிற‌ழ்ந்த‌ ம‌னோநிலைக‌ளை ஆதியோடு அந்த‌மாய் ஆராய‌ வேண்டும்.

ஆனாலும் நாம் வீழ்ச்சியின் நாய‌க‌ர்க‌ளாய் ஆனோம். க‌ட‌ந்த‌கால‌த்தில் நாம் பேசிய‌, வ‌ரைய‌றுத்த‌ எல்லாமே வீழ்ச்சி என்ற‌ புள்ளியில் முடிந்துபோன‌தை என்ன‌வென‌ச் சொல்வ‌து? அப்ப‌டியெனில் நாம் ந‌ம்பிய‌வையெல்லாம் க‌ற்ப‌னையின் விளைநில‌த்திலிருந்தா முளைத்து எழும்பியிருக்கின்ற‌ன‌? நாம் வ‌ளாக‌த்தில் எம‌து துறைக்கு அப்பால் க‌ற்ற‌ அந்திரோபோல‌ஜியும், சோஸியலாஜியும், அர‌சிய‌ல் விஞ்ஞான‌மும் எம‌க்குக் க‌ற்றுத்த‌ந்ததுதான் என்ன‌? உன‌து த‌ற்கொலை என‌து வாழ்வில் இனி நிக‌ழ‌ப்போவ‌து எல்லாம் மிக‌ப்பெரும் வீழ்ச்சியென்றுதான் ம‌றைமுக‌மாக‌க் கூறுகின்ற‌தா? எனெனில் நானும் நீயும் ஒத்த‌ அலைவ‌ரிசையிலே இருந்திருக்கின்றோம். ஒருவ‌ர் நினைத்து உரையாடுவ‌தை இன்னொருவ‌ர் இடைவெளி நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்திருக்கின்றோம். என‌க்கு மிக‌ப்ப‌யமாயிருக்கிற‌து, நாம் ந‌ம்பிய‌வைக‌ள் பிழைத்துப்போய்விடுவ‌தற்குள் கொஞ்ச‌ கால‌மாவ‌து 'வாழ்ந்துவிட்டுப் போக‌ ஆசைப்ப‌டுகின்றேன். இப்போது நான் உன‌து துணையோடும், ம‌க‌னோடுந்தான் சேர்ந்து இருக்கிறேன். என்னைப் போல‌வோ உன்னைப் போல‌வோ அன்றி, எல்லாவ‌ற்றையும் க‌ட‌ந்துபோய் வாழ்வ‌தில் என்றுமே ந‌ம்பிக்கைகொள்கின்ற‌ ந‌ம‌து துணையைப் போல‌ அவ‌ன் வ‌ள‌ர‌ட்டும். என‌க்குத் தெரியும், 'பார்த்தாயா நான் நினைத்த‌துபோல‌ அவ‌ள் உன்னோடு ப‌டுத்துவிட்டாள் தானே' என்று நீ சொல்ல‌ப்போகின்றாய் என்று. ம்...எல்லா ஆண்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரேமாதிரித்தான் சிந்திக்கின்றோம் தானில்லையா?

இங்கே என்னையொரு புனித‌னாய் உருவ‌கித்து எழுதிய‌ பிர‌திக்கு எதிர்மறையான பிரதியை நீ எழுதுவதற்கு உள்ளாய் என்பதும் நானறிவேன். இப்போதெல்லாம் பனி பொழிந்து கொண்டிருக்கும் இந்த வீதியில் யாரோ நள்ளிரவில் நடந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் காலடித்தடங்களை ம‌ட்டும் விட்டு விட்டு தன்னை மறைத்துக்கொண்டு போவது நீயாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய அச்சமெல்லாம் நானில்லாத ஒரு நாளில் நீயெழுதிய பிரதியை எங்களின் பையனுக்கு வாசிக்க‌க்கொடுத்து -அவ‌ன் சொல்ல‌ப்ப‌டாத‌ இன்னொரு உண்மையை- அறிந்த‌ அச்ச‌த்தில் நானும் உன்னைப் போல‌ த‌ற்கொலை செய்துவிடுவோனோ என்ப‌தாக‌ இருக்கிற‌து.

-----------