கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

G-20 ரொறொண்டோவில் ந‌ட‌ந்த‌து என்ன‌? ப‌குதி ‍- 03

Thursday, July 08, 2010

1.
ஞாயிறு, Jun 27...

ச‌னிக்கிழ‌மை நிக‌ழ்ந்த‌ வ‌ன்முறைக‌ளும், வ‌கைதொகையில்லாக் கைதுக‌ளும் விடிகின்ற‌ ஞாயிறுக்கு மிகுந்த‌ அட‌ர்த்தியைக் கொடுக்கிற‌து. ஞாயிறின் விடிகாலையில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும் சேர்த்து கிட்ட‌த்த‌ட்ட‌ 900 பேர் சிறைக்குள் இருக்கின்றார்க‌ள் என்ற‌து என்ற‌து பொலிஸ். இதுவ‌ரை க‌ன‌டா வ‌ர‌லாற்றில் முன் எப்போதும் நிக‌ழாத‌ அதிக‌ள‌வு கைது என்ற‌ செய்தியையும் வ‌ர‌லாறு இந்நாளில் எழுதிக்கொள்கிற‌து.G20 மாநாடு கோலாக‌ல‌மாக‌ மூட‌ப்ப‌ட்ட‌ அர‌ங்கினுள் ஞாயிறின் பிற்ப‌க‌ல் வ‌ரை ந‌ட‌ந்தாலும், தொட‌ர்ச்சியாக‌ எதிர்ப்புத் தெரிவிப்ப‌த‌ற்கான‌/ஒன்று கூடுவ‌த‌ற்கான‌ ம‌னித‌வ‌லு எதிர்ப்பாள‌ர்க‌ளிட‌ம் இருக்க‌வில்லை. கைதாகிய‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து/ந‌ட‌க்கின்ற‌து என்று பார்ப்ப‌த‌ற்கும், எப்ப‌டி அவ‌ர்க‌ளை விடுத‌லையாக்குவ‌து என்ப‌திலும் ப‌ல‌ரின் ப‌க‌லில் பொழுது க‌ழிகிற‌து.

ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌ சில‌ வ‌ன்முறை நிக‌ழ்வுக‌ளால் க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை எதிர்கொண்ட‌ அர‌சும்/பொலிசும் இப்ப‌டி ஞாயிறு அமைதியாக‌ விடிகிற‌தேயென‌ நிம்ம‌திப் பெருமூச்சு விட்டிருக்க‌க் கூடும். ஞாயிற்றுக்கிழ‌மை ரொறொண்டோவின் மைய‌த்தில் திற‌ந்திருந்த‌ க‌டைக‌ள் ப‌ல‌, ச‌னி நிக‌ழ்வால் த‌ம் க‌டைக‌ளைப் பூட்ட‌ ந‌க‌ர் வெறிச்சோடிப்போயிருந்த‌து. மெட்ரோ ரொறொண்டோவில் இருந்த‌ ம‌க்க‌ள் த‌ம் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளுக்காய் அங்குமிங்குமாய் போவ‌தையும், அன்றைய‌ நாளில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ காற்ப‌ந்தாட்ட‌தைப் பார்க‌ளில் பார்க்க‌ப் போகின்ற‌ இர‌சிகர்க‌ளைத் த‌விர‌ ந‌க‌ர் க‌ளையிழ‌ந்து கிட‌ந்தது.

ம‌திய‌த்திற்கு பின்பான‌ பொழுதுக‌ளில் சில‌ர் தெருக்க‌ளில் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌த் தொட‌ங்குகின்ற‌ன‌ர். கிட்ட‌த்த‌ட்ட‌ 40-50 வ‌ரையான‌ ஒரு எதிர்ப்புக் குழு Spadina-Queen ச‌ந்தியை அடைத்து ஆர்ப்பாட்ட‌ம் செய்கிற‌து. மிக‌வும் அமைதியான‌ முறையில் எதிர்ப்புக் காட்ட‌ப்ப‌டுகிற‌து. பொலிஸ் அவ‌ர்க‌ளை ஒரு திசையில் த‌டுத்து நிறுத்துகிற‌து. ஆனால் நேர‌ஞ்செல்ல‌ செல்ல‌ ச‌ன‌ம் அச்ச‌ந்தியில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என‌ விடுப்புப் பார்க்க‌க் கூடுகிற‌து. இப்போது கூட்ட‌ம் 200ற்கு கிட்ட‌வாக‌ ஆகிற‌து. ச‌டுதியாக‌ பொலிஸ் ஒரு புதிய‌ முய‌ற்சி செய்து ச‌ந்தியில் கூடி நின்ற‌வ‌ர்க‌ளை நான்கு ப‌க்க‌மாய் பொலிஸ் சூழ்கிற‌து. அவ‌ர்க‌ளை வெளியே செல்ல‌விடாது த‌ன‌து க‌ர‌ங்க‌ளை இறுக்குகிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 4 ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாய் பொலிஸ் இந்த‌ முற்றுகையை வைத்திருக்கிற‌து. ஒருக‌ட்ட‌த்தில் க‌ல‌வ‌ர‌ம் த‌டுக்கும் பொலிஸ் இந்த‌ ம‌க்க‌ளைப் பொறுப்பெடுத்து அவ‌ர்க‌ளை மிக‌ச்சிறிய‌ இட‌த்தில் ஒடுக்கி வைக்கிற‌து. 'நாங்க‌ள் சாதார‌ண‌மானவ‌ர்க‌ள் எங்க‌ளைப் போக‌விடுங்க‌ள்' என்ற‌போதும் எவ‌ரும் வெளியே செல்ல‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. 'எங்க‌ளால் இந்த‌ முற்றுகைக்குள் நிற்க‌முடியாது' என்ப‌வ‌ர்க‌ள் முற்றுகைக்குள் வெளியே எடுக்க‌ப்ப‌ட்டு கைக‌ள் பிளாஸ்ரிக் நூலால‌ க‌ட்ட‌ப‌ப்ட்டு இன்னொரு வ‌ரிசையில் நிறுத்த‌ப்ப‌டுகிறார்க‌ள். அத‌ற்கு பொலிஸ் சொன்ன‌ நியாய‌ம்: 'disturbance of peace'. உண்மையில் அந்த‌ 200ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் 90% மான‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ பொதும‌க்க‌ள். காற்ப‌ந்தாட்ட‌த்தைப் பார்த்துவிட்டு வ‌ந்த‌வ‌ர்க‌ள், மாலை உட‌ற்ப‌யிற்சிக்காய் உலாத்த‌ப்போந்த‌வ‌ர்க‌ள், க‌டைக‌ளில் பொருட்க‌ள் வாங்க‌ச் சென்ற‌வ‌ர்க‌ள்' போன்ற‌வ‌ர்க‌ளே இக்கூட்ட‌த்தில் க‌ணிச‌மாய் இருந்த‌ன‌ர். கூடும் ஒரு கூட்ட‌த்தை பொலிஸ் கலைக்க‌ விரும்பினாலோ, த‌டிய‌டிப் பிர‌யோக‌ம் செய்ய‌ப் போகின்ற‌தோ என்றாலோ ஆக‌க்குறைந்த‌து 3 த‌ட‌வையாவ‌து எச்ச‌ரிக்கை கொடுக்க‌ப்ப‌ட்டே செய‌ற்பாட்டைத் தொட‌ங்க‌வேண்டும் என்கின்ற‌ விதியிருக்கிற‌து. ஆனால் இந்த‌ எச்ச‌ரிக்கை எதுவும் கொடுக்காம‌லேயே பொலிஸ் த‌ன் முற்றுகையை இங்கே நிக‌ழ்த்தியிருந்த‌மை க‌வ‌னிக்க‌த்த‌து.

இப்ப‌டி முற்றுகை ம‌ணித்தியால‌க்க‌ண‌க்கில் நீண்ட‌போது பெரும‌ழையும் பொழியத்தொட‌ங்குகின்ற‌து. அன்றைய‌ தின‌ம் Thunder Storm Warning கொடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌து க‌வ‌னிக்க‌த்த‌து. இவ்வாறு இந்த‌ ம‌க்க‌ள் முற்றுகையிட‌ப்ப‌ட்டு பெரும‌ழையில் நின்ற‌போது அவ‌ர்க‌ளுக்குரிய‌ எந்த‌ அடிப்ப‌டை உரிமைக‌ள் கூட‌ விட்டுக்கொடுக்க‌வில்லை. இய‌ற்கையின் உபாதையிற்கோ அல்ல‌து தாக‌த்திற்கு த‌ண்ணீர் குடிக்க‌வோ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. கிட்ட‌த்த‌ட்ட‌ 3 ம‌ணித்தியால‌ங்க‌ள் மேலாக‌த் தொட‌ர்ச்சியாக‌ பெய‌த‌ மழையில் ந‌னைந்தப‌டியும் ந‌டுங்கிய‌ப‌டியும் பொதும‌க்க‌ள் ந‌டுவீதியில் நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.

இந்த‌ 4 ம‌ணித்தியால‌ய‌ பொலிஸ் 'நாட‌க‌த்தை' இங்கிருக்கும் உள்ளூர் தொலைகாட்சி(CityTV) நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்பிக்கொண்டிருந்த‌து. ஏன் இப்ப‌டி சாதார‌ண‌ ம‌க்க‌ளை முற்றுகையிட்டு ம‌ணித்தியால‌க்க‌ண‌க்கில் வைத்திருக்கின்றீர்க‌ளென‌ ஊட‌க‌விய‌லாள‌ர் பொலிஸிட‌ம் கேட்ட‌போது அதைப் ப‌ற்றி எதுவும் கூறாது சும்மா ம‌ழுப்பிக்கொண்டிருந்த‌து பொலிஸ். G20 மாநாட்டை முன்னிட்டு இதுநாள்வ‌ரை த‌டுப்பு வேலிக்கு அருகில் போனால் கைது செய்யும் உரிமை பொலிசுக்கு இருக்கிற‌து என்ற நிலையிலிருந்து சாதார‌ண‌ வீதிக‌ளில் ந‌ட‌ந்தால் கூட‌ உங்க‌ளை எந்த‌க் கேள்வியுமில்லாது முற்றுகையிட்டு வைத்திருக்கும் உச்ச‌ அதிகார‌ நிலைக்கு பொலிசின் கொடுங்க‌ர‌ங்க‌ள் நீள‌த்தொட‌ங்கிய‌து (அப்ப‌டியொரு ச‌ட்ட‌ம் இருக்க‌வில்லை; ஆனால் அப்ப‌டியொரு அதிகார‌ம் த‌ங்க‌ளுக்கு இருந்த‌தாய் காட்டிக்கொண்ட‌தாய் Liar பிளேய‌ர் பிறகு ஒப்புக்கொண்டார்.)

ச‌னிக்கிழ‌மை நிக‌ழ்ந்த‌ சில‌ வ‌ன்முறை நிக‌ழ்வுக‌ளால் G20 எதிர்ப்பாள‌ருக்கு எதிராக‌ மாறிய‌ பொதும‌க்க‌ளின் ம‌னோநிலை இப்போது இந்த‌ த‌ன்னிச்சையான‌ அதிகார‌ ஆண‌வ‌ப்போக்கால் பொலிசுக்கு எதிராக‌ மாறுகின்ற‌து. மேலும் இம்முற்றுகை நிக‌ழ்ந்துகொண்டிருக்கும்போது சிறைக‌ளில் இருந்து சில‌ர் விடுத‌லை செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் சிறையின் உள்ளே இருக்கும் நிலைமைக‌ள் குறித்தும், தாங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌து குறித்தும் சொல்வ‌து தொலைக்காட்சியில் நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்ப‌டுகிற‌து. பெண்க‌ள் தாங்க‌ள் -ஆண் பொலிஸ் காவ‌லுக்கு நிற்க‌- க‌த‌வுக‌ளில்லாத‌ க‌ழிப்ப‌றைக‌ளிற்குப் போக‌வேண்டியிருக்கும் நிலையைக் கூறுகின்ற‌ன‌ர். த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ 20 ம‌ணிக‌ளுக்கு மேலாய், முறையான‌ உண‌வு கொடுக்க‌ப்ப‌டாது வைத்திருக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர் என்ப‌தோடு சில‌ under-age பெண்க‌ளை ஆண் பொலிஸ் உட‌ல் தேடுத‌லும் (body checkup) செய்திருக்கின்ற‌து என்றும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. முற்றுகை நிக‌ழ்வும், சிறைக்குள் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ளும் தெருவில் ந‌ட‌க்கும் த‌ங்க‌ளுக்கும் ஏதாவ‌து ந‌ட‌க்க‌லாமென்ற‌ அச்ச‌த்தை சாதார‌ண‌ ம‌க்க‌ளிட‌ம் விதைக்கிற‌து.

2.
திங்க‌ட்கிழ‌மை பொலிசின் கைதுக‌ள்/முற்றுகை ப‌ற்றியும் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ மேல‌திக‌ அதிகார‌ம் குறித்தும் ஊட‌க‌ங்க‌ள்/அர‌சிய‌ல்வாதிக‌ள்/ம‌னித‌ உரிமைவாதிக‌ள் கேள்விக‌ளை எழுப்புகின்ற‌ன‌ர். இம்முற்றுகையினுள் ஆர்ப்பாட்ட‌க்காராக‌ அல்லாது சாதார‌ண‌ ஒருவ‌ராக‌ அக‌ப்ப‌ட்ட‌ ரொறொண்டோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ பேராசிரிய‌ர் எவ்வாறு ப‌ல்வேறு அடிப்ப‌டை உரிமைக‌ள் மீற‌ப்ப‌ட்ட‌ன‌ என்று த‌ன‌ அனுப‌வ‌ங்க‌ளை எழுதுகிறார். இதுவ‌ரையான‌ நிக‌ழ்வுக‌ளில் க‌ள்ள‌ ம‌வுன‌ம் காத்த‌ ஒன்ராறியோ மாநில‌ முத‌ல்வ‌ர் Dalton McGuinty பொலிசின் செய‌ல்க‌ளை நியாய‌ப்ப‌டுத்துகிறார். பொலிசின் த‌லைவ‌ர் பிளேய‌ர் Black Bloc ஐ  'தீவிர‌வாதி'க‌ளென‌ குறிப்பிட்டு குற்ற‌ஞ்சாட்டுகிறார். இதுவ‌ரை பொலிசுக்கு/ந‌டுவ‌ண் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ பேசிய‌ ரொறொண்டோ மேய‌ர் த‌ன‌து குர‌லைச் ச‌ற்று மாற்றுகிறார். எனெனில் ரொறொண்டோவில் ந‌ட‌க்கும் G20ற்கான‌ அனைத்துப் பொறுப்புக்க‌ளும் த‌ங்க‌ளுக்கென‌ கூறிய‌ பிர‌த‌ம ம‌ந்திரி வ‌ன்செய‌ல்க‌ளின் பின் உடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக‌ளுக்கு ந‌டுவ‌ண் அர‌சு ந‌ஷ்ட ஈடு கொடுக்காதென‌ ம‌றைமுக‌மாய்ச் சொல்கிறார்.
மேய‌ர் David Miller, 'நாங்க‌ள் ரொறொண்டோவில் G20 ந‌ட‌த்த‌வேண்டாமென‌ச் சொன்ன‌போதும் ந‌ட‌த்திக் காட்டிய‌ ஹார்ப்ப‌ர் அர‌சு இப்போது ந‌ஷ்ட‌ ஈடு த‌ருவ‌தில் இழுத்த‌டிக்கிற‌தென‌' இன்னொரு நாட‌க‌த்தை அர‌ங்கேற்றுகிறார்.

பொலிசின் அராஜ‌க‌த்தையும், வ‌கைதொகையில்லாக் கைதுக‌ளையும் க‌ண்டித்து ஒரு க‌ண்ட‌ன‌ப்பேர‌ணி பொலிஸ் த‌லைமைய‌க‌த்திற்கு முன் திங்க‌ள் (Jun 28) மாலை கூடுகின்ற‌து. 1000ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டு பொலிசுக்கு எதிரான‌ த‌ம‌து எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற‌ன‌ர். பிற‌கு இப்பேர‌ணி குயின்ஸ் பார்க் வ‌ரை ப‌ல்வேறு வீதிக‌ளில் ந‌ட‌ந்துசென்று க‌லைகின்ற‌து. பொலிசின் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மீதான‌ பொது விசார‌ணை (Public Inquiry) ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வேண்டுமென‌ அழுத்த‌ம் ப‌ல‌மாக‌ப் பிர‌யோகிப்ப‌டுகிற‌து.

இத‌ற்கு அடுத்த‌ வார‌ம் Gay Pride Parade ந‌ட‌க்க‌விருக்கிற‌து. அத‌ற்கு பொலிசும் த‌ன் ப‌ங்க‌ளிப்பை ஒவ்வொரு வ‌ருட‌மும் கொடுக்கின்ற‌து. மில்லிய‌ன்க‌ண‌க்கில் ம‌க்க‌ள் ப‌ங்குபெறும் இந்நிக‌ழ்விற்கான‌ கூட்ட‌மொன்றிற்கு பொலிஸ் த‌லைவ‌ர் வ‌ந்த‌போது அவ‌ரை முற்றுகையிட்டு Queer ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரைப் பொலிஸ் த‌லைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்ய‌ச் சொல்கின்ற‌ன‌ர். பிற‌கு சென்ற‌ வியாழ‌ன் Canada Dayயின்போது 1000ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்ட‌ இன்னொரு க‌ண்ட‌ன‌ப்பேர‌ணி குயின்ஸ் பார்க்கில் தொட‌ங்கி பொலிஸ் த‌லைமைய‌த்தைப் போய்ச் சேர்கிற‌து. ரொறொண்டோ பொலிசின் அத்துமீறிய‌ அராஜ‌த்தை எதிர்த்து மொன்றிய‌லிலும்  Anit Capitalists என்ற‌ குழு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிற‌து. இவ்வாறு ப‌ல‌ எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் பல்வேறு ப‌குதிக‌ளில் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.

பொலிஸ் மீதான‌ எரிச்ச‌லில் ம‌க்க‌ளும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளும் இருக்கின்றார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தில் வ‌ழ‌மையாக‌ ஒவ்வொரு வ‌ருட‌மும் Gay Pride Paradeல் க‌ல‌ந்துகொள்ளும் பொலிஸ் த‌லைவ‌ர் Paradeன்  எந்நிக‌ழ்விலும் ப‌ங்குபெற‌வில்லை. பொலிஸ் Pride Paradeன் ஒரு ப‌குதியாக‌க் க‌ல‌ந்துகொண்டாலும், பொலிசை 'இப்பேர‌ணியிலிருந்து வெளியே போ' என்று கூறிய‌ சுலோக‌ அட்டைக‌ள் சில‌ரால் எழுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

நேற்று வ‌ந்த‌ அறிக்கையின்ப‌டி G20 முன்னிட்டு 1070 பேர் கைது செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். 250 பேரின் மேல் குற்ற‌ஞ் சாட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 800வ‌ரையானோர் எவ்வித‌ குற்ற‌ங்க‌ளுமில்லாது  விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. இன்ன‌மும் சிறையில் 20 பேருக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் G20 ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் முடிந்து ஒரு வார‌த்திற்குப்பின்னும் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌ர். சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்னும் ப‌ல்வேறு ம‌னித‌ உரிமைக்குழுக்க‌ள் பொது விசார‌ணை வேண்டுமென‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பை நிக‌ழ்த்தியிருக்கின்ற‌து. ந‌ம்மில் ப‌ல‌ருக்கு G20 எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌து குறித்து ப‌ல்வேறுவித‌மான‌ கேள்விக‌ள் இருந்தாலும், பொலிஸுக்கு மேல‌திக‌மாக‌க் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ அதிகார‌ங்க‌ள் குறித்தும் அதை அவ‌ர்க‌ள் துஷ்பிர‌யோக‌ம் செய்த‌து குறித்தும் ஒன்றிணைந்த‌ குர‌லே இருக்குமென‌ ந‌ம்புகிறேன்.


ரொறொண்டோ இப்ப‌டித்தான் சில‌நாட்க‌ளாய் 'பொலிஸ் ந‌க‌ராக‌' இருந்தது



Black Blocல் பொலிஸ் Under cover ஆக‌ இருந்திருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌ம் இங்கே எழுப்ப‌ப்ப‌டுகிற‌து. பொலிஸ் ஏற்க‌ன‌வே இவ்வாறான‌ 'ச‌தி'க‌ளில் ஈடுபட்டிருப்ப‌து ஆதார‌ங்க‌ளோடு நிரூபிக்க‌ப்ப‌ட்டுமிருக்கிற‌து என்ப‌தையும் நாம் அவ்வ‌ள‌வு எளிதாக‌ ம‌ற‌ந்தும் விட‌முடியாது.

இத்தொட‌ரை எழுதுவ‌த‌ற்கு உத‌விய‌வை:

(1) CitvTV
(2) Toronto Star
(3) TVO
(4) ஒளிப்ப‌ட‌ங்க‌ள்/காணொளி எடுத்தாள‌ப்ப‌ட்ட‌ உரிய‌ த‌ள‌ங்க‌ள்

G-20 ரொறொண்டோவில் ந‌ட‌ந்தது என்ன‌? ப‌குதி-2

Friday, July 02, 2010

-ஜூன்-26...

ச‌னிக்கிழமை விடிகாலையிலே ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்துகொண்ட‌ ப‌ல‌ரின் வீடுக‌ளை நோக்கி பொலிஸ் குவிகிற‌து (பொலிசால் இவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே குறிப்பு எடுக்க‌ப்ப‌ட்டிருப்பார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்). தேடுத‌ல் ந‌ட‌த்த‌ எவ்வித‌ உரிய ப‌த்திர‌மும்(warrant) இல்லாது ப‌ல‌ வீடுக‌ளில் சோத‌னை ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து; ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள். அல‌ன் பூங்காவிலிருந்து குயின்ஸ் பார்க்கிற்கு செல்ல இருந்த No One Is Illegalன் பேச்சாள‌ர் (spokesperson) ஹ‌ச‌னும், இன்னொருவ‌ரும் -சீருடை அணியாத‌- பொலிசால் கைவில‌ங்கிட்டு கைது செய்ய‌ப்ப‌ட்டு அடையாள‌ இல‌க்க‌மில்லாத‌ வாக‌ன‌த்தில் ஏற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள். ஹசனும், அவரது தோழியும் விடிகாலையில் நடந்த முறையற்ற கைதுகள் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தச் செல்கின்றபோதே கைது செய்யப்படுகிறார்கள். இவர்களின் கைதால் குயின்ஸ் பார்க்கில் நடைபெறவிருந்த ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பு இர‌த்துச் செய்ய‌ப்ப‌டுகிற‌து. கைதுசெய்ய‌ப்ப‌ட்ட ஹசனின் தோழியை -சீருடை அணியாத‌ பொலிஸ்- ரக்ஸியில் ஏற்றி ரொறொண்டோ நகருக்குள் 40-50 நிமிட‌ங்க‌ள் வைத்து ஓடித்திரிந்துவிட்டு வீதியின் ஒரு மூலையில் இற‌க்கிவிடுகின்றார்க‌ள்.

இத‌ற்கிடையில் G20 த‌ற்காலிக‌ சிறைச்சாலைக்கு முன், கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள் கூடி ப‌த்திரிகைக‌ளுக்கும், வெளி உல‌கிற்கும் ந‌ட‌ந்த‌வை ப‌ற்றிக் கூறுகின்றார்க‌ள். தமது நண்பர்கள், உரிய அனும‌தியோ/கார‌ண‌ங்க‌ளோ இன்றி கைதுசெய்யப்படுவது எந்தவகையில் நியாயம் எனக் கேட்கிறார்கள். நேர‌ஞ் செல்ல‌ச் செல்ல‌ நிறைய‌ப்பேர் சிறையின் முன் கூடி கைது செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை விடுத‌லை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறார்க‌ள். நிறைய‌ப் பொலிஸ் சிறைச்சாலையின் முன் கூடுகின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த் த‌டுப்பு பொலிஸ் ஒருக‌ட்ட‌த்தில் க‌ண்ணீர்ப்புகைகையையும், பிளாஸ்ரிக் தோட்டாக்க‌ளையும் ஏவுகிறார்க‌ள். ப‌ல‌ G20 எதிர்ப்பாளர்கள் இந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தின்போதும் கைது செயய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

எனினும் ஏற்க‌ன‌வே தீர்மானித்த‌ப்ப‌டி குயின்ஸ் பார்க்கிலிருந்து மாபெரும் பேர‌ணி ஒன்று ம‌திய‌ம் 1.00 ம‌ணிய‌ள‌வில் தொட‌ங்குகின்ற‌து. வெள்ளி நிக‌ழ்ந்த‌துபோல‌வே ப்ல‌வேறுவிதமான‌ தொழிலாள‌ர் அமைப்புக்க‌ள், சிறுபான்மையின‌ அமைப்புக்க‌ள் சேர்ந்து ஊர்வ‌ல‌த்தை ந‌க‌ர்த்துகின்ற‌ன‌ர். முன்ன‌ணியில் செல்லும் பெண்க‌ள் அமைப்பு 'தேவால‌ய‌ங்க‌ளோ அர‌சோ எம்மை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது' என‌ குர‌லெழுப்புகிறார்க‌ள். ஹ‌ர்ப்ப‌ரின் அர‌சாங்க‌ம் 3ம் உல‌க‌நாடுக‌ளில் ந‌ட‌க்கும் க‌ருத்த‌டைக்கு இதுவ‌ரை வ‌ழ‌ங்கிவ‌ந்த‌ உத‌விகளை நிறுத்துவ‌தாக‌ அறிவித்த‌தை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருக‌ட்ட‌த்தில் ஊர்வ‌ல‌ம் பல்வேறு ப‌குதிக‌ளாக‌ப் பிரிகின்ற‌து. முக்கிய‌மாய் வெள்ளி அல‌ன்ஸ் பூங்காவில் த‌ம்மை முற்றுமுழுதாக‌ க‌றுப்பு ஆடைக‌ளாலும் முக‌மூடிக‌ளாலும் மூடிய‌ அதே குழு (Black Bloc என பின்னர் ஊடகங்களால் அடையாளங் காட்டப்பட்டனர்) குயின்ஸ் பார்க்கிலும் இருந்த‌து. அது த‌னியே ஊர்வ‌ல‌த்திலிருந்து பிரிந்து ஆனால் பிற‌ரை த‌ங்களைச் சுற்றி பாதுகாப்பிற்காய் வ‌ரும்ப‌டி கேட்கின்ற‌து. குயின் (Queen), ய‌ங் (Yonge), பே (Bay), கொலிஜ்(Collge) என்கின்ற ரொறொண்டோ ந‌க‌ரின் முக்கிய‌ வீதிக‌ளில் இருக்கும் பெருந்தேசிய‌ நிறுவ‌னங்க‌ளின் க‌டை க‌ண்ணாடிக‌ளை உடைக்கிற‌து. Urban Outfitters, American Apparel, Adidas Store, Starbucks, Rogers போன்ற‌வ‌ற்றின் க‌டைக‌ளும், ப‌ல‌ வ‌ங்கிக‌ளும் இவ‌ர்க‌ளும் முக்கிய‌ குறிக‌ளாகின்ற‌ன‌.இக்க‌டைக‌ளுக்கு இடையில் அப்பாவியாக‌ இருந்த‌ சிறு வ‌ர்த்த‌க‌ க‌டைக‌ள் சில‌வ‌ற்றின் க‌ண்ணாடிக‌ளும் உடைக்க‌ப்ப‌ட்ட‌தை திங்க‌ட்கிழ‌மை சென்று பார்த்த‌போது தெரிந்த‌து. இத‌ன் தொட‌ர்ச்சியில் பொலிஸ் கார்க‌ள் பல்வேறு சந்திகளில் எரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. மொத்த‌மாக‌ 4 பொலிஸ் கார்க‌ள் எரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவ‌ர்க‌ள்தான் முதலாளித்துவ‌ எதிர்ப்பின் கோப‌த்தில் எரித்தார்க‌ள் என்ற‌ ‍சாதார‌ண -AntiG20 ஊர்வ‌ல‌த்தில் ப‌ங்குபெறாத‌- ம‌க்க‌ளும் சிரித்த‌ப‌டி எரியும் பொலிஸ் கார்க‌ளை ப‌ட‌ங்க‌ளாய் எடுக்கிறார்க‌ள்,த‌ரித்து நின்று இர‌சிக்கிறார்க‌ள். ஆக‌ எல்லோருக்கும் பொலிஸின் அதிகார‌ம் மீதான‌ எரிச்ச‌ல் உள்ளுக்குள் ஊறிய‌ப‌டித்தான் இருந்திருக்கிற‌து போலும். எந்த‌ தெருவில் போனாலும் நூற்றுக்க‌ண‌க்காய் சீருடையிலும் ம‌ற்றும் சீருடை இல்லாதும் நிற்கும் பொலிஸ், கார்க‌ள் எரிந்த‌ நீண்ட‌நேர‌த்தின் பின்னே ஆற‌ அம‌ர‌ ஏன் வ‌ந்தார்க‌ள் என்ப‌து முத‌ல் கேள்வி. ம‌ற்றது எரிக்க‌ப்ப‌ட்ட‌ 20/30 நிமிட‌ங்க‌ளுக்குப் பின்னே தீய‌ணைப்புப்ப‌டையே வ‌ந்து சேர்கின்ற‌து. எந்த‌ அவ‌ச‌ர‌ உத‌வி என்றாலும் நிமிட‌ங்க‌ளில் பொலிசுட‌ன் வ‌ர‌க்கூடிய‌ தீய‌ணைப்புப்ப‌டைக்கு இவ்வ‌ள‌வு நேர‌ம் ஏன் எடுக்கிற‌து என்ப‌து இன்னொரு கேள்வி.


இங்கே Black Bloc 'அமைப்பு' ப‌ற்றி மிக‌ச் சுருக்க‌மாக‌ப் பார்ப்போம். Black Bloc என்ற‌ பெய‌ர் ஜேர்ம‌னியில் அணுச்ச‌க்தி ப‌ரிசோத‌னைக்கு எதிராக‌ கூடிய‌ எதிர்ப்பாள‌ர்க‌ளிலிருந்து தொட‌ங்குகின்ற‌து. தொட‌ர்ந்து பெருந்தேசிய‌ நிறுவ‌ங்க‌ளுக்கும், உல‌க‌ வ‌ங்கி போன்ற‌வ‌ற்றிற்கும் எதிர்ப்புத் தெரிவித்து ப‌ல‌ இட‌ங்க‌ளில் இவ்வ‌மைப்பின‌ர் த‌ம‌து இருப்பைக் காட்டியிருக்கின்றார். 1999ல் மிக‌ப் பிர‌சித்தி பெற்ற‌ சியாட்டில் (Anti WTO)ல் இவ‌ர்க‌ள் பல‌ பெருந்தேசிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளைச் சேத‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். Black Bloc எப்ப‌டி இய‌ங்குகிற‌து என்ப‌து குறித்து இன்னும் தெளிவான‌ ஆதார‌ங்க‌ள் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை. இது அமைப்ப‌ற்ற‌தாக‌வும், த‌லைவ‌ர் போன்ற‌வை இல்லாது இய‌ங்குகின்ற‌ன‌ என‌வும், நில‌வ‌ர‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ 'உறுப்பின‌ர்க‌ள்'ஓரிட‌த்தில் கூடி இய‌ங்குப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள் என‌ச் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. உறுப்பின‌ர்க‌ளைச் சேர்க்கும்போது இர‌க‌சிய‌மான‌ முறையில் சேர்க்க‌ப்ப‌ட்டு செய‌ற்பாடுக‌ளின் போது ஒருவித‌ ச‌ங்கேத‌ மொழி அவ‌ர்க‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. ரொறொண்டோவில் த‌ம‌து செய‌ற்பாடுக‌ளை நிக‌ழ்த்தும்போது 'umberlla' என்ற‌ சொல் ப‌ய‌ன்ப‌ட்ட‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

சாதார‌ண‌ G20 எதிர்ப்பாள‌ர்க‌ள் அமைதியான‌ முறையில் த‌ம‌து எதிர்ப்பைக் காட்டுவ‌த‌ற்கு மாறாக‌, எதையும் செவிம‌டுக்காத‌ அர‌சிட‌ம்/பொலிசிட‌ம் வ‌ன்முறையான‌ வ‌ழிக‌ளே ச‌ரியாக‌ இருக்கும் ந‌ம்புப‌வ‌ர்க‌ளாக‌ இவ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். முத‌லாளித்துவ‌த்திற்கு/ பொலிசுக்கு/கால‌னித்துவ‌த‌ற்கு எதிரான‌வ‌ர்க‌ள் என‌த் த‌ங்க‌ளைப் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தும் இவ‌ர்க‌ளின் பிர‌சித்த‌மான‌ கோச‌மாக‌ 'முதலாளித்துவ‌ம் கொல்ல‌ முன்ன‌ர், முத‌லாளித்துவ‌த்தைக் கொல்' என்ப‌து இருக்கிற‌து. எப்ப‌டி க‌றுப்பாடை அணிந்து த‌ங்க‌ளை வேற்றாட்க‌ளாக‌ காட்டிக்கொள்கிறார்க‌ளே அவ்வ‌ளவு விரைவாக‌ அதைக் க‌ளைந்து த‌ம்மைச் சாதார‌ண‌மான‌வ‌ர்க‌ளாய் த‌ங்க‌ள் அவ‌தார‌த்தை மாற்றியும் கொள்கிறார்க‌ள்.

வெள்ளி வ‌ரை அர‌சு/பொலிசுக்கோ அல்ல‌து G20 எதிர்ப்பாள‌ருக்கோ ஆத‌ர‌வு நிலை என்ற‌ அந்த‌ர‌மான‌ நிலையிலிருந்த‌ பொதும‌க்க‌ளின் 'ம‌னோநிலை' Black Blocன் வ‌ன்முறையின் பின் அர‌சு/பொலிசுக்கு ஆத‌ர‌வாக‌ மாறுகின்ற‌து. ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்துகொண்ட‌ அனைவ‌ரும் வ‌ன்முறையை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ளாய் இருக்க‌வில்லை என்ப‌தும் உண்மை. ஆனால் ஏன் இக்க‌டைக‌ளை உடைக்கின்றீர்கள் என்று Black Bloc இட‌ம் ஊட‌க‌ம் ஒன்று கேட்கும்போது இப்பெருநிறுவ‌ன‌ங்க‌ள் சாத்தான்க‌ளைப் போன்ற‌து' என்று அவ‌ர்க‌ளில் கூறிய‌தில் உண்மை இல்லாம‌லும் இல்லை. அமைதியான‌ முறையில் G20 எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்த‌ சில‌ர் க‌டை உடைப்பு நிக‌ழ்வின்போது, 'நீங்க‌ள் அர‌சு G20 பாதுகாப்பிற்காய் செல்வு செய்த‌ 1.24 பில்லிய‌ன் டொல‌ரை நியாய‌ப்ப‌டுத்தப்போகின்றீர்க‌ள்' என‌ எச்ச‌ரிக்கை செய்த‌தையும் நாம் இங்கு குறிப்பிட்டாக‌ வேண்டும்.

வ‌ன்முறையோடு வாழ்ந்த‌ ந‌ம்மைப் போன்ற‌ 3ம் உலக‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க்கு பொலிஸ் கார்க‌ளை எரிப்ப‌து நிக‌ழ்வ‌து என்ப‌து பெரிய‌ விட‌ய‌ம‌ல்ல‌; ஆனால் க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் இருப்ப‌வ‌ர்க்கு இது அதிர்ச்சிதான். பொலிஸ் கார்க‌ளை எரித்த‌வுட‌ன் உல‌க‌ எங்கும் இச்செய்தி ப‌ர‌வுகின்ற‌து. இந்த‌ தீவிர‌ எதிர்ப்பாள‌ர்க‌ளும் G20 எதிரான‌ த‌ம‌து செய்தியை வெளி உல‌கிற‌கு தெளிவாக‌ அறிவிக்கின்ற‌ன‌ர். இப்போது G20 நாட்டுத் த‌லைவ‌ர்க‌ள் உள்ளே என்ன‌ உரையாடுகின்றார்க‌ள் என்ப‌தைவிட‌ தெருக்க‌ளில் இந்த‌ -Black Bloc- எதிர்ப்பாள‌ர்க‌ள் என்ன‌ செய்ய‌ப்போகின்றார்க‌ள் என்று ஊட‌க‌ங்க‌ளும் உள்ளூர் ம‌க்க‌ளும் உல‌க‌ ம‌க்க‌ளும் அவ‌தானிக்க‌ச் செய்கின்ற‌ன‌ர்.

ச‌னிக்கிழ‌மை ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் த‌ம் கையை மீறி ந‌ட‌ந்த‌தை (அல்ல‌து அவ‌ர்க‌ளாக‌வே அப்ப‌டி ந‌ட‌க்க‌ட்டுமென‌ இருந்திருக்க‌லாம், இவ்வ‌ள‌வு பில்லிய‌ன் பாதுகாப்புக்குச் செல்வு செய்து ஒன்றுமே நிக‌ழ்வில்லை என்றால் அர‌சும் பொலிசும‌ல்ல‌வா ம‌க்க‌ளிட‌ம் ப‌தில் சொல்ல‌வேண்டும். எனெனில் இந்த‌ப்ப‌ண‌ம் அனைத்தும் உழைக்கும் ம‌க்க‌ளின் வ‌ரியிலிருந்து அல்ல‌வா சுர‌ண்ட‌ப்ப‌ட்ட‌து) பொலிஸ் அதிகாரி கேள்விக‌ளால் துளைக்க‌ப்ப‌டுகின்றார். ரொறொண்டோ மேய‌ர் கையால‌க‌த்த‌ன‌த்துட‌ன் இந்த‌ வ‌ன்முறை ரொறொண்டோவிற்கு வெளியில் வ‌ந்த‌வ‌ர்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌து என்கிறார். அன்றைய‌ இர‌வே பொலிஸ் த‌ன் அதிகார‌த்தின் க‌ர‌த்தை இறுக்குகிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 400 மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு அடைக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். ப‌ல‌ அப்பாவி ம‌க்க‌ள் வீடுக‌ளில் எவ்வித‌ அனும‌தியுமின்றி விசாரிக்க‌ப்ப‌டுகின்றன‌ர். அவ்வாறு ஊர்வ‌ல‌ம் எதிலும் ப‌ங்குபெறாத‌ மிருக‌ வைத்திய‌ர் ஒருவ‌ர் கைக‌ள் க‌யிறால் க‌ட்ட‌ப்ப‌ட்டு 1/2 ம‌ணிக்கு மேலாய் அவ‌ருக்கே தெரியாத‌ ஒருவ‌ர் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தைத் த‌ருமாறு பொலிஸால் மிர‌ட்ட‌ப்ப‌டுகிறார். ப‌ல‌ர் நித்திரையிலேயே வைத்து கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள். இதுவ‌ரை எப்போதுமே நிக‌ழ்ந்திராத‌ பெரும் பொலிஸ் தேடுத‌ல் வேட்டை ரொறொண்டோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ வ‌ளாக‌த்தில் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ 70ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மிக‌வும் கொந்த‌ளிப்பான‌ ப‌க‌லாக‌வும் இர‌வாகவும் ஜூன் 26 ச‌னி க‌ழிகிற‌து.

(தொட‌ரும்)
ந‌ன்றி: ப‌ட‌ங்க‌ள்

G-20 ரொறொண்டோவில் நடந்தது என்ன?

Tuesday, June 29, 2010

பதின்மூன்று முட்டாள்க‌ள் மைதான‌த்தில் கிரிக்கெட் விளையாட‌ ப‌தின்மூன்றாயிர‌ம் பேர்க‌ள் அதை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்க‌ள் என்றொரு பெர்னாட் ஷோவின்  ந‌கைச்சுவைத் துணுக்கு ஒன்று இருக்கிற‌து. அதுபோல‌வே G-20 என்ற‌ பெய‌ரில் 20 நாட்டின் த‌லைவ‌ர்க‌ள் சொகுசாக‌ இருந்து க‌தைத்து த‌ங்க‌ளை க‌ட‌வுள‌ரின் அவ‌தார‌மாக‌ 'ஏழை' நாடுக‌ளுக்கு காட்ட‌ ரொறொண்டோவில் கூடினார்க‌ள். எல்லாமே அவ‌ர்க‌ள் நினைத்த‌ப‌டித்தான் ந‌ட‌ந்த‌து... ஜூன் 25ம் திக‌தி வ‌ரைக்கும். க‌ட‌வுள‌ர்க‌ள் என்றால் சும்மாவா? பில்லிய‌ன் டொலர் க‌ண‌க்கில் ($1.24 Billion) பாதுகாப்புக்குச் செல‌வு செய்து, க‌ட‌வுள‌ரின் மாநாட்டுக்கு அர‌ங்குக‌ளைச் சுற்றி வான‌ளாவிய‌ வேலிக‌ளை அடைத்து, அது போதாதென்று காலாட்ப‌டை, க‌வ‌ச‌ந்தாங்கிய‌படை, குதிரைப்ப‌டை, ந‌வீன‌ தொழில்நுட்ப சைக்கிள் ப‌டையென்று ப‌ல்வேறு த‌டுப்புப் ப‌டைக‌ளையும் உருவாக்கியிருந்தார்க‌ள். இதைவிட‌ க‌ண‌க்கில்/க‌வ‌ன‌த்தில் வ‌ராத‌ உள‌வுப்ப‌டை,  பொதுமக்களைப்போல க‌ல‌ந்துவிட்ட‌ உள்ளூர்ப்படை, ஏதும் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ந்தால் குருவிக‌ளாய் ம‌னித‌ர்க‌ளைச் சுட்டுத்த‌ள்ள‌ சினைப்ப‌ர் ப‌டை என‌ ந‌க‌ரின் மூலை முட‌க்கு எல்லாம் குமிந்துகிட‌ந்தார்க‌ள் ந‌ம் க‌ட‌வுள‌ரின் பாதுகாவ‌ல‌ர்க‌ள்.

ஆனால் விளையாட்டில்தான் 13பேர் முட்டாள்க‌ள் விளையாட‌ 13000 பேர் வேடிக்கை பார்ப்பார்க‌ள்; G-20 என்ப‌து ப‌ல‌ரின் நாளாந்த‌ வாழ்வையும், அடிப்ப‌டை உரிமைக‌ளையும் ப‌றிக்கும் நிக‌ழ்வ‌ல்ல‌வா? க‌ட‌வுள் என்றாலும் வினையாகிப்போனால் எதிர்வினை செய்து அனைவ‌ருக்குமான‌ சுத‌ந்திர‌த்தை  உறுதிசெய்வ‌தற்கு G20 எதிர்ப்பாள‌ர்கள் (Anti G20) ஒன்று கூடினார்கள். இறுதியாய் தம் விளையாட்டு மைதான‌த்தில் தாமே ஆடி தம் 'வெற்றி'யை உலகுக்கு எடுத்தியம்ப விரும்பிய‌ க‌ட‌வுள‌ரை முற்றாக ம‌ற‌ந்து, அனைவரும் இந்த‌ எதிர்ப்பாள‌ர்க‌ள்/அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ளைப்  ப‌ற்றியே பேச‌த்தொட‌ங்கின‌ர். 'எங்க‌ளுக்கு G20 மாநாடு, விளையாட்டில் ஒலிம்பிக்ஸைப் போல கோலாகலமானதென' அர‌சு வழங்கவிருந்த சலுகைகளை வாங்க‌ ப‌ல்லிளித்துக் கொண்டிருந்த‌ பெருநிறுவனங்களான வ‌ங்கிக‌ளையும் சேத‌ப்ப‌டுத்தி ஒரு செய்தியைச் செப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்க‌ள் அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ள்.


ஜூன் 25ற்கு முன்...
G20 மாநாடு ஜூன் 26ல் ரொறொண்டோவில் தொடங்குவதற்கு முன்ன‌ரே ப‌ல்வேறு அமைப்புக்கள் தம் எதிர்ப்பைக் காட்டுவ‌த‌ற்காய் பல ஊர்வ‌ல‌ங்க‌ளை ந‌க‌ரின் முக்கிய‌ப‌குதிக‌ளில் நடத்தத் தொடங்கியிருந்தன.. ஜூன் 24 க‌ன‌டா நாட்டின் பூர்வீக‌க்குடிக‌ள் த‌ம‌து நில‌ங்க‌ள் தொட‌ர்ந்து ஆக்கிர‌மிப்ப‌தையும், G20யின் நிகழ்ச்சி நிரலையும் எதிர்த்து நகரின் முக்கிய வீதிக‌ளில் ஊர்வலமாகச் சென்று ஒன்ராறியோ பாராளும‌ன்ற‌ வளாக‌மான‌ குயின்ஸ் பார்க்கைச் சென்ற‌டைந்த‌ன‌ர். நீங்க‌ள் என்ன‌ செய்தால் என்ன‌ இந்த‌ வீதிக‌ள் எம‌க்குரிய‌ன‌ என்று பொலிஸ் என்ற‌ அதிகார‌ அமைப்பு ம‌றைமுக‌மாய் எல்லோருக்கும் உண‌ர்த்த‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌. சைக்கிள்க‌ளில், குதிரைக‌ளில், த‌ங்க‌ள் அடையாளம் பொறிக்கப்பட்ட கார்களில், ஏன் சாதார‌ண ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும வாகங்களிலென, எங்கும் பொலிஸே நீக்க‌ம‌ற‌ நிறைந்திருந்த‌ன‌ர். போதாதற்கு வானில் வானூர்திகளாகவும் பறந்துகொண்டிருந்தனர். உங்க‌ளால் இப்ப‌டி சும்மா க‌த்த‌வே முடியும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்க‌ள் கைக‌ளில்தான் என்று சொல்லாமற் சொன்னார்கள்.

ஜூன் 25 - ‍ வெள்ளி...

மிக‌ப்பெரிய‌ பேர‌ணியொன்று ப‌ல‌வேறு அமைப்புக்க‌ளினால் அல‌ன் பூங்காவில் (Allan Gardens) பிற்பகல் 2.30 மணியளவில் தொட‌ங்க‌ இருப்ப‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 2000ற்கு மேலான‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டார்க‌ள் (நாங்க‌ளும் க‌ல‌ந்துகொண்டோம்). அன்றுதான் ஒன்றாரியோ பாராளும‌ன்ற‌த்தில் இர‌க‌சிய‌மாக‌ பொலிசுக்கு அதிக‌ அதிகார‌ம் கொடுக்கும் ச‌ட்ட‌மொன்று இய‌ற்ற‌ப்பட்ட‌து பொதுவெளியில் க‌சிய‌த் தொடங்கியது. ஜூன் 2ல் இச்ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கிற‌து; அது என்ன‌வெனில் மாநாட்டு அர‌ங்கு வேலிக்கு 5 மீற்ற‌ர் தொலைவுக்கு அப்பாலே ஒருவ‌ர் ந‌ட‌மாட‌முடியும். அப்ப‌டியொருவ‌ர் அதையும் மீறி வ‌ந்தால் அவ‌ரை விசாரிக்க‌வும், அடையாள அட்டை கேட்க‌வும், பொருட்க‌ளைப் ப‌ரிசோதிக்க‌வும் பொலிசுக்கு உரிமையுண்டு. இவ்வாறு செய்ய‌ப்படுவ‌தை ஒருவ‌ர் -தன் தனிமனித அடிப்படை உரிமையை முன்வைத்து- ம‌றுப்பாரானால் அவ‌ரை பொலிஸ் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரமுண்டு. ஒரு 22 வ‌ய‌து இளைஞ‌ன் இவ்வாறு த‌ன் அடையாள‌த்தைக் காட்ட‌ ம‌றுத்து கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌போதே பொலிஸ் த‌லைவ‌ரால் இச்ச‌ட்ட‌ம் ஏற்க‌ன‌வே இய‌ற்றப்பட்ட‌து குறித்து பொதுவெளியில் தெரிவிக்க‌ப்ப‌டுகிறது. கிட்டத்தட்ட 3 வாரங்களாக இது குறித்து எந்த பொது அறிவிப்பும் வெளியிடாது கள்ள மவுனம் காக்க காசுக்கடவுளரின் பாதுகாவலர்களால் மட்டுமே முடியுமே. க‌ட‌வுள‌ர்க‌ள்தான் ப‌க்த‌ர்க‌ளுக்கு இர‌க‌சிய‌மாய் அருள் பாலிப்பார்க‌ள் என்றால் பொலிஸும் தம் கடவுளரின் கடைவாய்ச் சிரிப்புக்காய் பொதும‌க்க‌ளைப் பலிகொடுக்க இர‌க‌சிய‌மாய் இச்ச‌ட்ட‌த்தை இய‌ற்றியிருந்தார்க‌ள் போலும்!

அல‌ன் பூங்காவில் குழுமியிருந்த‌ ம‌க்க‌ள் ந‌க‌ர‌த்தெருக்க‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ப் போகத்தொட‌ங்குகின்ற‌ன‌ர். No One Is Illegal என்ற‌ அமைப்பினூடாக‌ நாங்க‌ளும் ந‌ட‌க்க‌த் தொட‌ங்குகின்றோம். பூங்காவில் முற்றுமுழுதாக‌ த‌ங்க‌ளை க‌றுப்பு உடையால் ம‌றைத்த‌ ப‌ல‌ரைக் காண்கிறோம் (எங்க‌ளை ப‌ட‌ம் எடுக்க‌வும் அவ‌ர்க‌ள் அனும‌திக்க‌வில்லை‍ இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி கீழே சொல்கிறேன்). ஒவ்வொரு அமைப்பும் அர‌சையும் அதிகார‌த்தையும் எதிர்த்துக் கோசம் போடுகின்றன.. "No One Is Illegal, Canada is Illegal" என்கின்ற‌ கோச‌மும் எழுகின்றது. இது நிச்சயம் அதிகார அடிவருடிகளுக்குக் கோபத்தையோ/எரிச்சலையோ ஏற்படுத்தியிருக்கும். புதிதாய் உரிய அனுமதியின்றி வருபவர்களை Illegal Immigrants என்று அடையாளங்குத்தி திருப்பி அனுப்பச் செய்கின்ற அரசு, தன் மூதாதையர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து, ஒடுக்கியே தனக்கான அரசை ஸ்தாபித்தபோது, Canada is Illegal என்பதில் எவ்விதத் தவறுமேயில்லைத்தானே. கோச‌ம் எழுப்ப‌ப்ப‌டாத‌போது ராப் பாட‌ல்க‌ளால் அதிகார‌த்தை முக்கிய‌மாய் பொலிசை திட்டுகிற‌/கேலி செய்கிற‌ வ‌ரிகள் மிகப்பெரும் சத்தத்தில் ஓடுகின்ற‌ன‌. கூட்ட‌ம் ந‌கர‌ ந‌க‌ர சைக்கிள் பொலிஸ் இருபுற‌மும் வேலி அடைத்து எங்களைச் சூழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். நாங்க‌ள் போகின்ற‌ வீதிக்கு குறுக்காய் திடீரென‌ ஒரு பொலிஸ் கார் த‌ன் அலார‌த்தை அல‌ற‌விட்டு த‌ன்னைவிடுவென‌ அதிகார‌ம் காட்டுகிற‌து. ஏற்க‌ன‌வே அள‌வுக்க‌திக‌மான‌ பொலிஸின் பிர‌ச‌ன்ன‌த்தாலும் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ அதிகார‌த்தாலும் எரிச்ச‌லும் கோப‌ம‌டைந்திருந்த ஊர்வலக்குழுக்கள் பொலிஸ் காரைச் சூழ‌த்தொட‌ங்குகின்ற‌து.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள‌வேண்டும். ஊர்வ‌ல‌த்தில் வ‌ந்த‌ அரைவாசிக்கும் மேற்ப‌ட்டோர் கையில் க‌ம‌ராக்க‌ள் இருக்கின்ற‌ன‌. மேலும் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். எந்த‌ அத்துமீற‌லும் உட‌னே ப‌ட‌மாக்க‌ப்பட்டு அதேவேக‌த்தில் பொதுவெளியில் ப‌ர‌வத் தொட‌ங்கிவிடும். அலாரம‌டித்த‌ பொலிஸ் காரை ஊர்வ‌ல‌க்கார‌க‌ள் சூழ‌ந்த‌தைப் போலவே க‌ம‌ராக்க‌ளும் சூழ‌கின்ற‌ன‌. ப‌ட‌மெடுக்கின்ற‌ன‌. த‌ன் அதிகார‌ம் இனி ஆகாதென்ற‌ நிலையில் பொலிஸ் காரின் அலார‌ம் நிறுத்த‌ப‌ட்டு அமைதியாகின்ற‌து. இந்த‌ தெருக்க‌ள் உங்க‌ளுக்கு ம‌ட்டுமில்லை; நாங்க‌ள் ஊர்வ‌ல‌ம் போகும்போது அது எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌து என்ப‌தை மறைமுக‌மாக‌ பொலிசுக்குத் தெளிவுப‌டுத்தப்ப‌டுகிற‌து.

இப்ப‌டிக் காரைச் சூழ்ந்து எல்லோரும் நின்றால் ஏதாவது அச‌ம்பாவித‌ம் நிக‌ழ்ந்துவிடக்கூடுமென்ற‌ எச்ச‌ரிக்கையில் சுற்றி நிற்ப‌வ‌ர்க‌ளைத் தொட‌ர்ந்து ந‌ட‌ந்துபோகுமாறு சில‌ பெண்க‌ள் அறிவுறுத்துகிறார்க‌ள். தொட‌ர்ந்து கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌டுகிற‌து; ஊர்வ‌ல‌ம் ந‌க‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. சில‌ நிமிட‌ங்க‌ளில் எங்க‌ளுக்குப் பின்னே கூட்ட‌ம் அல்லோலக‌ல்லோலப்ப‌டுகிற‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று க‌ம‌ராவுட‌ன் ஓடும்போது பொலிஸ் ஒரு க‌றுப்பின‌ இளைஞ‌னை நில‌த்தோடு சாய்த்து கைதுசெய்கிற‌து. கூட்ட‌ம் கொந்த‌ளிக்க‌த் தொட‌ங்குகிற‌து. அங்கே நிற்கும் பொலிஸைச் சுற்றி ஊர்வ‌ல‌க்கூட்ட‌ம் சுற்றிவ‌ளைக்க‌த் தொட‌ங்குகிற‌து. Let him GO என அவ‌ரை விட‌ச்சொல்லி கூட்ட‌ம் க‌த்துகிற‌து. ப‌ட‌மெடுத்துக்கொண்ட‌வ‌ர்களையும் பொலிஸ் முர‌ட்டுத்த‌ன‌மாய் ந‌ட‌த்துகிற‌து. No One Is Illegal சார்பாக‌ பொலிஸ் அராஜ‌க‌த்திற்கு எதிராக‌ ஏற்கனவே கோச‌ம் எழுப்பிக்கொண்டிருந்த‌ பெண்ணை பொலிஸ் குறிவைத்து தாக்குகிற‌து. அவ‌ருக்கு க‌ண்ணருகில் காய‌ம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது.. அந்த‌ இளைஞ‌னை கைதுசெய்வ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்ன‌வென்று அறியாத‌போதும் அவ‌ர் காது கேளாத‌/ வாய் பேசாத ந‌ப‌ர் என்று அறிந்தோம்.

இவ‌ரை பொலிஸ் ஊர்வ‌ல‌த்தின் இடையே புகுந்து கைது செய்த‌தாக‌சொல்ல‌ப்ப‌டுகிற‌து. இவ்விளைஞன் கைது செய்யப்படும்போது அவர் வாய் பேசமுடியாதவர், தயவு செய்து அவரின் கைகளை இறுக்கக்கட்டினால் அவரால் (சைகையால்) பேசமுடியாது என அவரின் நண்பி கூறியபோதும் பொலிஸ் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது. அவர் பேசுவதை விளங்கி பொலிசுக்கு தெரிவிக்க தன்னையும் கூட்டிச்செல்க என அவ்விளைஞனின் தோழி கேட்டபோதும் பொலிஸ் மறுக்கிறது. நேற்று அவரின் வழக்கறிஞர் 'இது கிட்டத்தட்ட சாதாரண வாயால் பேசும் ஒருவரை அவரைப் பேசமுடியாது செய்ய duct tape ஒட்டுவதற்கு நிகர்த்த மனித உரிமை மீறல்' எனக் கூறியிருக்கிறார்.

ஊர்வ‌ல‌ம் எங்கே முடியுமென‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளால் கேட்க‌ப்ப‌ட்ட‌போதும் அது செல்லும் வீதிக‌ளோ, முடியும் இட‌மோ தெளிவாக‌க் கூற‌ப்ப‌டாது, இய‌ன்ற‌வை பாதுகாப்பு வேலிக்க‌ருகில் செல்வ‌து என‌ ஊர்வலத்தை வழி நடத்துபவர்களால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. எனினும் பெருந்தொகையான‌ பொலிஸ் பிர‌ச‌ன்ன‌த்தால் வேலியை நெருங்க‌முடியாது, ஊர்வ‌ல‌ம் மீண்டும் தொட‌ங்கிய‌ இட‌த்திற்கு (அலன் பூங்காவிற்கு) வ‌ருகின்ற‌து. வீட‌ற்ற‌வர்களுக்கு (Homeless People) ஆத‌ர‌வு (Solidarity) கொடுக்கும் வ‌கையாக‌ கூடார‌ங்க‌ள் சிலவற்றை அங்கேயே அமைத்து 40ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அவ்விர‌வு அங்கேயே த‌ங்குகின்ற‌ன‌ர்.

( தொடரும்)

ஒற்றைக்கால் புறாவும் புர‌ண்டு ப‌டுக்கும் ஆமைக‌ளும்

Monday, June 28, 2010

-மெலிஞ்சிமுத்த‌னின் 'வேருல‌கு' நாவ‌லை முன்வைத்து-

1.
ஈழ‌த்த‌மிழ‌ரின் வாழ்வென்ப‌து ஈழ‌த்திலும் புல‌த்திலுமென‌ ப‌ல்வேறு சிக்க‌ல்க‌ளைத் தின‌மும் ச‌ந்திப்ப‌து. நான்கு புற‌மும் க‌ட‌ல் சூழ்ந்த‌ தீவொன்றில் இருந்து வ‌லுக்க‌ட்டாய‌மாய் புல‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் க‌தைக‌ளில் அநேக‌ம் க‌ண்ணீரின் உவ‌ப்பு உடைய‌ன‌வை. புதிய‌ வாழ்வு தேடிப்புற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ ஈழ‌த்த‌மிழ‌ரின் உயிர்க‌ள் க‌ட‌லிலும்,ப‌னியிலும் காணிக்கையாக‌க் கொடுக்க‌ப்பட்டு நினைவுக‌ள் ம‌ட்டும் மித‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறு புதிய‌ வாழ்வு தேடி அக‌தியாய்ப் புல‌ம்பெய‌ரும் ஒருவ‌ன் விமான‌நிலைய‌த்தில் பிடிப‌ட்டு நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு விசாரிக்க‌ப்ப‌டுவ‌தில் இருந்து தொட‌ங்குகின்ற‌து மெலிஞ்சி முத்த‌னின் 'வேருல‌கு' குறுநாவ‌ல். க‌தைசொல்லியான‌ சீல‌ன் நிர்வாணியாக்க‌ப்ப‌ட்டு அடையாள‌த்துக்காய் புகைப்ப‌ட‌மும், கைரேகையும் பொலிஸால் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. த‌ன்னைப் புற‌வுல‌காய் அடையாள‌ங்காண‌ முய‌ற்சிக்கும் உங்க‌ளால் த‌ன் த‌னித்துவ‌மான‌ க‌ன‌வுகளுக்குள் நுழைய‌முடியுமா என‌ சீல‌ன் அவ‌ர்க‌ளை ம‌ன‌துக்குள் கேலி செய்கின்றான்.

சீல‌ன் ஈழ‌த்திலிருந்து பிரான்சிற்கு புல‌ம்பெய‌ர்ந்த‌ ஓர் அக‌தி. ஊரில் இருக்கும்போது ப‌ழ‌க்க‌மான‌ ப‌வானி சீல‌னுக்கு த‌ங்கிமிட‌த்தை வ‌ச‌தி செய்து கொடுக்கிறார். அவ்வீட்டில் வ‌சிக்கும் ப‌வானி உட்ப‌ட‌ அனைவ‌ரும் குறைந்த‌ வ‌ருமான‌த்தில் த‌ங்க‌ள் வாழ்வை ந‌க‌ர்த்திச் செல்ப‌வ‌ர்க‌ள். மேலும் ஊரிலிருக்கும் த‌ம் குடும்ப‌ம்/உற‌வுக‌ளுக்கு ப‌ண‌மும் அனுப்ப‌வேண்டிய‌வ‌ர்க‌ள். மிகுந்த‌ அவ‌ஸ்தைக‌ளுட‌ன் இவ‌ர்க‌ளுட‌ன் கால‌ம் க‌ழிக்கும் சீல‌னுக்கு இர‌ண்டாம் முறையும் அக‌தி அந்த‌ஸ்து பிரான்சில் நிராக‌ரிக்க‌ப்ப‌ட பிரான்ஸிலிருந்து வேறு நாடுக்கு க‌ள்ள‌மாக‌ வெளிக்கிட‌த் த‌யாராகிறார். ப‌வானி சீல‌னைத் திரும‌ண‌ம் செய்யும் த‌ன் விருப்பைத் தெரிவிக்கிறார். தான் காத‌லியாக‌ ப‌வானியை நினைத்துப் ப‌ழக‌வில்லையென‌க் கூறி சீல‌ன் ம‌றுத்தாலும், இத‌ற்கு இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம் உண்டு. அது சாதி. ப‌வானி, ஊரில் ப‌னையேறும் தொழிலைச் செய்யும் பிறேம‌னின் ம‌க‌ள்.

ஸ்பெயினிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும் ப‌ய‌ண‌ம் இடைந‌டுவில் பிடிப‌ட்டுத் த‌டைப‌ட‌, வெறுமையோடு சிறைக்குள்ளிருக்கும் சீல‌னுக்குள் ஊர்ப‌ற்றிய‌ நினைவுக‌ள் ஊற‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. ஸ்பெயினிலிருந்து க‌தை க‌ட‌ல்க‌ளையும் க‌ண்ட‌ங்க‌ளையும் தாண்டி அரிப்புத்துறையில் போய் இற‌ங்கி ந‌க‌ர‌த் தொட‌ங்குகின்ற‌து. அருவியாறு பாயும் அரிப்புத்துறையில் போரும் வ‌றுமையும் மாறி மாறித் த‌ம்மை விஞ்சுகின்ற‌ வாழ்க்கை சீல‌னுக்கு. பெரிய‌ம்மா குடும்ப‌த்தோடு அதிக‌ கால‌ம் க‌ழிக்கும் சீல‌னுக்கு அருகிலிருக்கும் க‌ண்ம‌ணி மாமி குடும்ப‌த்துட‌ன் நெருங்கிப் ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. க‌ண்மணி மாமியின் குடும்ப‌த்தை முன்னிலைப்ப‌டுத்திய‌ப‌டி 'வேருல‌கு'  ப‌ல்வேறு திசைக‌ளில் ப‌ய‌ணிக்க‌த் தொட‌ங்குகின்ற‌து. க‌ண்ம‌ணி மாமி, மாமா, அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளான‌ ச‌சிய‌க்கா, சின்ன‌ன், அத்தான்பிள்ள‌ ம‌ற்றும் ‍க‌ண்ம‌ணி மாமி வீட்டில் வேலை செய்கின்ற‌‍ உலுந்தையின் பாத்திர‌மும் அதிக‌ம் விவ‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவ‌ர்க‌ளோடு சேமாலைய‌ண்ண‌ன், ச‌ந்தியாக்கிழ‌வ‌ன், பொன்னுக்கிழ‌வி போன்றோரும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார்க‌ள். இம்மூவ‌ரும் சீல‌னின் வாழ்வில் ஆழ‌மான‌ பாதிப்பை ஏதோவொரு வ‌கையில் ஏற்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள்.

க‌ண்ம‌ணி மாமி குளிப்ப‌தை இர‌க‌சிய‌மாக‌ இர‌சிக்கும் உலுந்தை, வ‌ள‌ர்ந்த‌ த‌ன் ம‌க‌ளான‌ ச‌சிய‌க்காவுட‌ன் ஒரே அறையில் ப‌டுத்து கைக‌ளால் அளைகின்ற‌ (க‌ண்ம‌ணி)மாமா, ச‌சிய‌க்காவின் நெருப்புச் சுழியேற்றும் மார்புக‌ளை நினைத்துத் த‌ன் காற்ச‌ட்டைக‌ளை ந‌னைக்கும் க‌தைசொல்லியான‌ சீல‌ன் என‌ எல்லோருக்குள்ளும் காம‌ம் ப‌ல்வேறு புள்ளிக‌ளில் குறுக்கிடுகின்ற‌ன‌. க‌ண்ம‌ணி மாமியின் இருளான‌ அறையினுள் ஆமைக‌ள் புர‌ள்வ‌தைப் போல‌ இவ‌ர்க‌ள் எல்லோருக்குள்ளும் காமம் ஒரு இர‌க‌சிய‌ ந‌தியாய் ந‌க‌ர்ந்த‌ப‌டியிருக்கின்ற‌து. ஆனால் 'வேருல‌கு' காம‌த்தை ம‌ட்டும் உரையாடும் புனைவ‌ல்ல‌. போர் சார்ந்த‌ வாழ்க்கையின் உள்ளும் காம‌ம் த‌ன்ன‌ளவிள் க‌சிந்த‌ப‌டியிருக்கும் என்ப‌தைப் ப‌டைப்பாளி சுட்டிக்காடிவிட்டு புற‌ச்சூழ‌லுக்குள் ந‌க‌ர்ந்துவிடுகின்றார்.

ஈழ‌த்தில் ப‌ல்வேறு இய‌க்க‌ங்க‌ள் வெடித்துக் கிள‌ம்புகின்ற‌ கால‌ம். 'தோழ‌ர்' என‌ த‌ங்க‌ள் இய‌க்க‌த்த‌வ‌ரை அழைத்துக்கொள்ளும் இய‌க்க‌ம் ஒன்றுக்கு க‌ண்ம‌ணி மாமி குடும்ப‌த்தின‌ர் ஆத‌ர‌வு கொடுக்கின்றன‌ர். ந‌ள்ளிர‌வுக‌ளில் க‌ண்ம‌ணி மாமி, வீட்டில் புட்டு அவித்துக் கொட்ட‌க் கொட்ட‌, சுட‌ச்சுட‌ எழுத‌ப்ப‌டும் சுவ‌ரோட்டிக‌ள் ப‌க‌ல் வேளைக‌ளில் உண‌ர்ச்சிக‌ர‌மாய் போராட்ட‌த்திற்கு சுவ‌ர்க‌ளில் அழைப்பு விடுகின்ற‌ன‌. அவ்வாறான‌ கால‌ப்ப‌குதியில் இய‌க்க‌த்தில் இருக்கின்ற‌ சேமாலைய‌ண்ண‌னுக்கும் ச‌சிய‌க்காவிற்கும் காத‌ல் அரும்புகின்ற‌து. அவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்கின்ற‌ நாளில் இராணுவ‌ம் ஊர்புக‌ ச‌ன‌ங்க‌ள் அக‌தியாகின்ற‌ன‌ர். இடையில் க‌ண்ம‌ணி மாமி வீட்டில் வேலை செய்யும் உலுந்தை (க‌ண்ம‌ணி)மாமாவிற்கு க‌த்தியால் குத்திவிட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வாறு மாமா குத்த‌ப்ப‌ட்ட‌த‌ற்கு மாமாவிற்கு உலுந்தையின் அக்காவோடு இருந்த‌ இர‌க‌சிய‌ உற‌வென்று ஊரில் பேசிக்கொள்கின்றார்க‌ள். ஆனால் எவ‌ருக்குத் தெரியாத‌ -சீல‌னுக்கு ம‌ட்டுந்தெரிந்த‌‍- மாமியின் உட்பாவாடையை க‌ள‌வாக‌ எடுத்து இர‌க‌சிய‌மாய் இர‌சிக்கின்ற‌ உலுந்தையின் இன்னொரு க‌தையும் வேருல‌கில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து.

உலுந்தையின் அக்காவோடு த‌ன் க‌ண‌வ‌னுக்கு இருந்த‌ தொட‌ர்புப‌ற்றிப் பேசும் ஊர் வாயை மூட‌ முடியாத‌ க‌ண்ம‌ணி மாமி சாவ‌த‌ற்குக் கிண‌ற்றுக்குள் குதிக்கிறார். இதை முத‌லில் க‌ண்டாலும், அவ‌ரை விட‌ சாதியின் ப‌டிநிலையில் குறைந்திருக்கின்ற‌ பிறேம‌னால் கிண‌ற்றுக்குள் குதித்து க‌ண்ம‌ணி மாமியை விட‌ காப்பாற்ற‌ முடியாதிருக்கின்ற‌து. சேமாலைய‌ண்ண‌ன் வ‌ரும்வ‌ரை காத்திருக்க‌வேண்டியிருக்கிற‌து. 'எங்கிருந்தோ எழும் மிடுக்கும' என்று ம‌ஹாக‌வி பாடிய‌தைப் போல‌ இழ‌ப்புக்க‌ள், இட‌ம்பெய‌ர்த‌ல்க‌ள் போன்ற‌ துய‌ர்க‌ளுக்கும் அப்பால், உயிர்ப்புட‌ன் அரிப்புத்துறைச் ச‌ன‌ம் தொழில் செய்ய‌ க‌ட‌லுக்குப் போக‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர். ஒரு நாள் க‌ட‌லுக்குள் தொழில் செய்ய‌ப் புற‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌குக‌ள் இராணுவ‌த்தால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌ல‌ங்க‌ளோடு க‌ரை திரும்புகின்ற‌ன‌. அன்று ஊரில் 12 பேர் வித‌வையாயிற்றார்க‌ளென‌க் க‌தைசொல்லி கூறுகின்றார். அதில் போன‌ சேமாலைய‌ண்ணன் உட்ப‌ட ஒருசில‌ரின் உட‌ல்க‌ள் த‌விர‌ மிகுதி உட‌ல்க‌ள் அடையாள‌ங் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. சேமாலைய‌ன்ண‌ன் உயிருட‌ன் வ‌ருவார் என்று ச‌சிய‌க்காவும், க‌ண்ம‌ணி மாமியும் ந‌ம்புகின்றன‌ர். க‌ர்ப்ப‌ணியாயிருக்கும் ச‌சிய‌க்காவிற்கும் குழ‌ந்தை இற‌ந்து பிற‌க்கின்ற‌து.

இவ்வாறான‌ கொடுங்க‌ன‌வுக‌ள் சூழ‌ந்த‌ கால‌த்தில், மாமாவைக் குத்திவிட்ட‌ உலுந்தையை சீல‌ன் ஓரிட‌த்தில் ச‌ந்திக்கின்றார். த‌ன்னோடு கூட‌வே வ‌ரும்ப‌டி அழைக்கின்ற‌ உலுந்தையோடு போகின்ற‌ சீல‌ன், த‌ண்ணீர் அள்ள‌த் த‌னித்து வ‌ருகின்ற‌ ஒரு இராணுவ‌த்தின் த‌லையை உலுந்தை வெட்டுவ‌தை நேர‌டிச் சாட்சியாக‌ப் பார்க்கின்றார். எநத‌ அற‌த்தைச் ச‌ம‌ன்பாடாக‌ வைத்தும் கொலையை நியாய‌ம் செய்ய‌முடியாது ந‌ம்புகின்ற‌ சீல‌னுக்கு உலுந்தையின் இச்செய‌ல் மிகுந்த‌ அதிர்ச்சியைத் த‌ருகின்ற‌து.

பூச்சியாடும் தானுமாய்த் திரிகின்ற‌ பொன்னுக்கிழ‌வி ப‌ல‌ தொன்ம‌க் க‌தைக‌ளை சீல‌னுக்குக் கூறுகின்றார். அதிலொரு க‌தை அல்லி ராணியின் க‌தை. அரிப்புத்துறையில் குறுநில‌ அர‌ச‌ர்க‌ளாய் இருந்த‌ ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌ அல்லியையும் அவ‌ள‌து க‌ண‌வ‌னையும், அல்லியில் ஆசை வைக்கும் ஓர் அதிகாரி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌க் கொல்கின்றான். ஆனால் அல்லிக‌ளுக்கு ம‌ர‌ணம் நிக‌ழ்வ‌தேயில்லை; துரோகிக‌ளை அழிப்ப‌த‌ற்காக‌ கால‌ந்தோறும் அல்லி ராணி உயிர்த்த‌ப‌டியேயிருக்கிறாள் என்கிறார் பொன்னுக்கிழ‌வி. த‌ன‌க்குள்ளே அதிக‌ம் பேசுகின்ற‌ ச‌ந்தியாக் கிழ‌வ‌னை, ஊர் ம‌ன‌ம்பிற‌ழ்ந்த‌வ‌ர் என்று கூறிக்கொண்டாலும் சீல‌னுக்கு அவ‌ரே எதையும் அதிக‌ம் அறிந்த‌வ‌ரென்று அவ‌ருட‌ன் நெருங்கிப்ப‌ழ‌குகிறான்.

ஒருநாள் ச‌ந்தியாக் கிழ‌வ‌ன் காணாம‌ற்போகின்றார். ச‌ன‌ம் முற்றுமுழுதாய் ஊர் விட்டு அக‌தியாக‌ இட‌ம்பெய‌ர்கிற‌து. பொன்னுக்கிழ‌வி என்ன‌ நிக‌ழ்ந்தாலும் ஊரைவிட்டு நீங்குவ‌தில்லையென‌ ச‌ந்தியாக் கிழ‌வ‌னின் மீள்வ‌ருகைக்காய் ஊரிலேயே த‌ங்கிவிடுகின்றார். ஆமைக‌ள் மீண்டும் புர‌ண்டு புர‌ண்டு இருட்டு அறைக‌ளில் ப‌டுக்கின்ற‌ன‌. பூனைக‌ளும் எவ்வ‌ள‌வு த‌டுத்தும் குட்டிக‌ளைப் போடுவ‌தை வீடுக‌ளில் நிறுத்துவ‌தாய் இல்லை. ச‌சிய‌க்கா அக‌தி முகாமில் இருக்கின்ற‌ செல்வனோடு எங்கையோ வ‌ன்னிப்ப‌க்க‌மாய் ஓடிப்போய்விடுகின்றார்.

த‌ற்செய‌லாய் ஒருநாள் சீல‌ன் சேமாலைய‌ண்ண‌னை உயிருட‌ன் காண்கிறார். அவ‌ர் த‌ன்னை மீன்பிடிக்க‌ க‌ட‌லுக்குள் போன‌போது கைது செய்த‌ இராணுவ‌ம் த‌ள்ளாடி முகாமிலும் பின்ன‌ர் வெலிக்க‌டையிலும் வைத்திருந்து விடுவித்த‌து என்கின்றார். வ‌றுமையின் நிமித்தம் கூலித்தொழிலாளியாக‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் வேலை செய்து 'முட்டாள்' என‌ப்ப‌ட்ட‌ம் வாங்கி த‌ற்போது இராணுவ‌த்தோடு சேர்ந்திய‌ங்கும் இய‌க்க‌ம் ஒன்றோடு ச‌ம்ப‌ள‌த்திற்காய் சேர்ந்திருக்கின்றேன் என்கிறார். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலான சோக‌மாய், சேமாலைய‌ண்ணனை இராணுவ‌ம் பிடிப‌டமுன்ன‌ர் சேர்ந்து இய‌ங்கிய‌ இய‌க்க‌ம், சேமாலைய‌ண்ணன் விடுத‌லையாகி வ‌ந்த‌போது க‌ரைந்து காணாம‌ற்போய்விட்ட‌து. 'ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌ம் என்ற நீரோட்ட‌த்தில் தெறித்து வெறும் குமிழிக‌ளாய் ச‌ல‌ன‌ற்றுப் போன‌ எத்த‌னையோ துளிக‌ளில் ஒருதுளிதான்' சேமாலைய‌ண்ண‌ன் என்று நினைத்து க‌வ‌லைப்ப‌டுகிறார் சீல‌ன்.

ஒருநாள் அல்லி ராணி அருவியாற்றில் நீராடுவ‌தை சீல‌ன் காண்கிறார். நெருங்கிப் போய்ப்பார்க்கும்போது அது -க‌ண்ம‌ணி மாமியின் ம‌க‌ளான‌‍- சின்ன‌ன் என்ப‌து தெரிகின்ற‌து. அல்லிக‌ள் மீண்டும் தோன்றுவ‌து துரோகிக‌ளைப் பூண்டோடு அழிக்க‌வே என்ற‌ பொன்னுக்கிழ‌வியின் தொன்ம‌க் க‌தை க‌ட‌ந்து போகின்ற‌து. சின்ன‌ன் ஒருநாள் சேமாலைய‌ண்ண‌னை ஏழு துண்டாய் வெட்டிவிட்டு ந‌தியில் இற‌ங்கி இர‌த்த‌க்க‌றையைக் க‌ழுவிக்கொள்கிறார்.

2.
வேருல‌கின்' க‌தாபாத்திர‌ங்க‌ள் குறித்தும் அவை ந‌க‌ரும் திசை குறித்தும் ஒரு எளிமையான‌ வ‌ரைபட‌த்தை இவ்வாறு வ‌ழ‌ங்கினாலும் இக்குறுநாவ‌லில் வ‌ரும் ப‌ல‌ பாத்திர‌ங்க‌ள் த‌ம்ம‌ள‌வில் த‌னியே விரிந்து ப‌ல‌ க‌தைக‌ளைக் கூற‌க்கூடிய‌ன‌. முக்கிய‌மாய் சேமாலைய‌ண்ண‌ன், உலுந்தை, ச‌சிய‌க்கா த‌ங்க‌ளின் க‌தையைத் த‌ம‌த‌ள‌வில் சொல்ல‌க்கூடிய‌ இடைவெளிக‌ளை ப‌டைப்பாளி த‌ந்திருக்கின்றார். அதிக‌மான‌ உரையாட‌ல்க‌ளாலும்,எளிமையான‌ மொழியிலும் எழுத‌ப்ப‌டும் பெரும்பான்மையான‌ ஈழ‌ப்ப‌டைப்புக்க‌ளிலிருந்து வில‌கி நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளோடும், மிக‌ இறுக்க‌மான‌ உரைந‌டையோடும் 'வேருல‌கு' த‌னித்துவ‌மாய் மிளிர்கின்ற‌து. 'காடு ப‌ச்சை மேக‌ங்க‌ளாய் அவ‌தார‌மெடுத்திருந்த‌ அவ்விட‌த்தில் வான‌ம் இற‌ங்கித் த‌ன் கூர‌ல‌கால் ந‌தி நீர் அருந்திக்கொண்டிருந்த‌து' (ப‌26), 'க‌ட‌ல் ப‌ல‌ கோண‌ல்மாண‌ல்க‌ளின் அழ‌கு. காம‌த்தையும் கோப‌த்தையும் ஒருங்கே சேர்த்த‌ திமிற‌லின் வ‌டிவ‌ம். க‌ட‌ற்க‌ரை முழுவ‌தும் கேட்டுக்கொண்டிருக்கின்ற‌து ஒரு ப‌டுக்கைய‌றையின் முன‌க‌ற்ச‌த்த‌ம்' (ப‌25) 'பொறுக்க‌ப்ப‌டாத‌ எருக்க‌ட்டிக‌ளோடு பொக்கிளிப்பான் வ‌ந்த‌தொரு முக‌த்தைப் போல‌க் கிட‌ந்த‌து ப‌ன‌ங்கூட‌ல்' (ப‌58) என்ப‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ள்.

ஈழ‌த்தின் உள்ளே போரினால் ந‌டைபெறும் இட‌ம்பெய‌ர்வுக‌ள் ப‌ல்வ‌கைப்ப‌ட்ட‌து. ஒர‌ள‌வு வ‌சதியான‌வ‌ர்க‌ள் இட‌ம்பெய‌ர்ந்து த‌ங்க‌ள் உற‌வின‌ர் வீடுக‌ளிலோ வேறு வீடுக‌ளிலோ த‌ங்கிவிடுவ‌து ஒருவ‌கை. இன்னொரு வ‌கையின‌ருக்கு இவ்வாறான‌ வ‌ச‌திக‌ள் கிடைப்ப‌தில்லை. ஆக‌வே அவ‌ர்க‌ள் இட‌ம்பெய‌ரும்போது யாராலும் க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌ கைவிட‌ப்ப‌ட்ட‌ நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளில் குடில்க‌ளை அமைத்து முகாங்க‌ளை நிறுவிக்கொள்வார்க‌ள். இவ்வாறான‌ அக‌தி முகாங்க‌ளில் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் கூட‌ இருப்ப‌தில்லை. இய‌ற்கைக்க‌ட‌னிற்காய் ப‌ற்றைக‌ளைத் தேட‌வேண்டியிருக்கும். ம‌ழை, வெள்ள‌ம் போன்ற‌வை நிக‌ழும்போது இன்னொருவ‌கையான‌ சிர‌ம‌ங்க‌ளை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும். இதுவ‌ரை எழுத்தில் அவ்வ‌ள‌வு ப‌திய‌ப்ப‌டாத‌ இந்த‌ இர‌ண்டாம் வ‌கையான‌ அக‌திமுகாம் வாழ்வு 'வேருல‌கில்' மிக‌ அழுத்த‌மாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'வ‌றுமை உறிஞ்சிய‌ செரிக்காத‌ வ‌யிறுக‌ளும், க‌ன்ன‌ங்க‌ள் ஒட்டி முன்னோக்கி நிற்கும் ப‌ற்க‌ளும், குழி விழுந்த‌ க‌ண்க‌ளும், அவிந்த‌ வாய்க‌ளும், ந‌ர‌ம்பு புடைத்திருக்கும் நெற்றிப் ப‌ள்ள‌ங்க‌ளும்' இவ்வாறான‌ அக‌தி முகாம் வாழ்க்கைக்குள் இருந்த‌வ‌ர்க‌ளுக்கு 'கொடையாக‌' அளிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து.

இப்புனைவில் போராட்ட‌த்தில் உண்மையாய் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் விருப்பு வெறுப்பின்றி இய‌ல்பாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். கால‌மும் வ‌றுமையும் திசை மாறிப்போக‌ சேமாலைய‌ண்ண‌னைத் துர‌த்தினாலும், அவ‌ர் ஒரு வேற்றாளாக‌ இக்குறுநாவ‌லில் சித்த‌ரிக்க‌ப்ப‌டாது முக்கிய‌மான‌து. 'துரோகி' என‌ப்பெய‌ரிட்டு ஒழித்துக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ அநேக‌ரிலும், இர‌த்த‌மும் ச‌தையுமான‌ த‌மிழ்ம‌க்க‌ளின் விடுத‌லை சார்ந்த‌ க‌ன‌வுக‌ளே இருந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தை சேமாலைய‌ண்ண‌ன் பாத்திர‌ம் காட்டுகின்ற‌து. சேமாலைய‌ண்ண‌ன போல‌ கால‌த்தின் சுழியில் சிக்குப்ப‌ட்டு சின்னாபின்னாமாகிப் போன‌வ‌ர்க‌ள்தான் எத்த‌னை பேர்? அதேபோல‌ எதிரிக‌ளாக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மீது நாம் நிக‌ழ்த்திய‌ மிக‌க்கொடூரமான‌ வ‌ன்முறையின் ப‌டிம‌ந்தான் உலுந்தையின் பாத்திர‌ம். த‌னியே வ‌ரும் இராணுவ‌த்தின் க‌ழுத்தை வெட்டி த‌லையை கிணற்று வாளிக்குள் வைத்து இர‌த்த‌ம் தெறிக்க‌க் கொண்டு ஓடுகையில் நாம் இழந்துபோயிருந்த‌ ம‌னிதாபிமான‌ம் நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து.

நான்கு கால்க‌ளின் க‌தையைச் சொல்ல‌ப்போகின்றேன் என்று இக்குறுநாவ‌லின் இடையில் க‌தைசொல்லி சொல்வ‌து இந்த‌ நான்கு காலிலிருந்து நீளும் ஆயிர‌க்கான‌ கால்க‌ளின் துய‌ரத்தைத்தான்; ஒற்றைக் காலிழ‌ந்த‌ புறா, ஒரு காலை மிதிவெடிக்கு ப‌லி கொடுத்த‌ ஒரு கூத்துக்க‌லைஞ‌ன் ம‌ற்றும் இராணுவ‌த்தின் ப‌குதியிற்குள் வ‌ந்து சுட‌ப்ப‌ட்டு ம‌ர‌ணித்த‌ ஒரு போராளியின் கால்க‌ள். இந்த‌க் கால்க‌ள் த‌ம‌து க‌தையை ம‌ட்டும் ந‌ம‌க்குக் கூறுவ‌ன அல்ல‌, அத‌ற்குப் பின்னால் நாம் த‌வ‌ற‌விட்ட‌ ப‌ல‌ கால்க‌ளின் க‌தையையும் அக்க‌றையுட‌ன் க‌வ‌னிக்க‌ச் சொல்கின்ற‌ன‌.

ஈழ‌த்தின் நிக‌ழ்கால‌க் க‌தையைச் சொல்ல வ‌ரும் ஒருவ‌ருக்கு மிகுந்த‌ சிர‌ம‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஏதோவொரு புள்ளியில் ப‌டைப்பாளி ஒரு சார்பை எடுக்க‌வேண்டிய‌ நிலையை வ‌ந்த‌டைய‌வே செய்வ‌ர். ஆனால் போரை வெறுக்கின்ற‌, கொலைக‌ளை எந்த‌ அற‌த்தின் பொருட்டும் நியாய‌ப்ப‌டுத்த‌ விரும்பாத‌ ஒரு ப‌டைப்பாளி தான் சொல்ல‌வேண்டிய‌ க‌தையை ம‌ட்டும் கூறிவிட்டு எவ‌ரின் மீதும் தீர்ப்பு எழுதாது வில‌கிவிடுவார். அந்த‌வ‌கையில் மெலிஞ்சி முத்த‌னின் 'வேருல‌கு' இருப்ப‌து குறிப்பிட‌வேண்டிய‌து. 'ஒற்றைக் காலிழ‌ந்த‌ புறாவே துய‌ர‌த்துட‌ன் அலையாதே, உன‌க்குப் ப‌ற‌ப்ப‌த‌ற்கு சிற‌குக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் ம‌ற‌ந்துவிடாதே' என்று பெரும் இழ‌ப்புக்க‌ளின் பின்னால் வ‌ரும் விர‌க்தியிற்கு அப்பாலும் வாழ்வின் மீது ந‌ம்பிக்கை கொள்ள‌ச் சொல்கிற‌து இப்புனைவு. இதனால்தான் அண்மைக்கால‌த்தில் வெளிவ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளில் க‌வனிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்பாக‌வும் ப‌ல்வேறு வாசிப்புக்க‌ளைச் செய்ய‌க்கூடிய‌ புனைவாக‌வும் வேருல‌கு தெரிகின்ற‌து.

(தீராந‌தி - ஜீன்,2010 இத‌ழில் இத‌ன் சுருக்கிய‌ வ‌டிவ‌ம் பிர‌சுர‌மான‌து)

"நான் உயிர்வாழ்வ‌த‌ற்காய் ஆசீர்வதிக்க‌ப்ப‌ட்டிருக்கின்றேன்" - கணேஸ்வ‌ரி ச‌ந்தான‌ம்

Wednesday, May 26, 2010

ந‌ன்றி: IRIN
த‌மிழாக்க‌ம்: டிசே த‌மிழ‌ன்

க‌ணேஸ்வ‌ரி ச‌ந்தான‌ம் (31),சுத‌ந்திர‌ த‌மிழ் நாடு அமைப்ப‌த‌ற்காய் 25 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாய் போராடி,அண்மையில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளில் இணைந்திருந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பெண்க‌ளில் ஒருவ‌ர்.

-ப‌ல‌ நாடுக‌ளால் தீவிர‌வாத‌ அமைப்பென‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌‍- இய‌க்க‌த்தில் இணைந்த‌ இவ‌ர், ச‌மாதான‌ கால‌த்தில் இய‌க்க‌த்திலிருந்து வில‌கி, ச‌க‌ போராளி ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ் செய்து ஒரு குழ‌ந்தையையும் -மீண்டும் இய‌க்க‌த்தில் 20006ல் அழுத்த‌த்தால் இணையும்போது- பெற்றிருந்தார். இன்று ஆயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் மீண்டும் த‌ங்க‌ள் வீடுக‌ளுக்குத் திரும்புவ‌தைப் போல‌, தானும் ஒரு ந‌ல்ல‌தொரு எதிர்கால‌த்தை க‌ட்டிய‌மைக்க‌ முடியுமென‌ இவ‌ர் ந‌ம்புகிறார்.

'நான் 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் த‌மிழ் ம‌க்க‌ளின் விடுத‌லைக்கான‌ போருக்காய் புலிக‌ளிட‌ம் சேர்ந்தேன் என‌து பெற்றோர் என‌து முடிவு குறித்து அவ்வ‌ள‌வு ச‌ந்தோச‌ம‌டைய‌வில்லை. போரின் கார‌ண‌மாக‌ நான் பாட‌சாலையிலிருந்து வில‌கினேன். ஒரு ப‌ர‌த‌ நாட்டிய‌க்காரியாக‌ வ‌ருவ‌தே என‌து குழ‌ந்தைப் ப‌ருவ‌க் க‌ன‌வாக இருந்த‌து; ஆனால் என‌து க‌ன‌வு ஒருபோதும் நிறைவேறிய‌தில்லை.'

'கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து வ‌ருட‌த்திற்கு மேலாக‌ இய‌க்க‌த்தில் இருந்த‌பின், 2002ல் ஏற்ப‌ட்ட‌ ச‌மாதான‌க் கால‌த்தில் நான் புலிக‌ளிட‌மிருந்து விலகினேன். புலிக‌ளின் போராளியொருவ‌ரை ம‌ண‌ந்து, ஒரு குழ‌ந்தையையும் பெற்று நாங்க‌ள் ம‌கிழ்ச்சியான‌ த‌ம்ப‌திக‌ளாக‌ இருந்தோம்.

'ஆனால் 2006ல் வாழ்வின் இய‌ல்புநிலை மாறி நான் மீண்டும் இய‌க்க‌த்தில் இணைய‌ அழுத்த‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டேன். இக்கால‌க‌ட்ட‌த்தில், கிராம‌த்தில் மிக‌க் க‌டுமையான‌ ப‌யிற்சி என‌க்கு ம‌ற்ற‌ப் பெண்க‌ளோடு த‌ர‌ப்ப‌ட்டு, ம‌ற்றைய‌வ‌ர்க‌ளை விட‌ சிற‌ந்த‌தொரு போராளியாக‌ என்னை நான் நிரூபித்துக் காட்டினேன்.'

'அதே நேர‌ம் இது மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து எனெனில் நான் என‌து குடும்ப‌ம் ப‌ற்றி மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட்டேன். இப்போரில் நான் கொல்ல‌ப்ப‌ட்டால் யார் என‌து குடும்ப‌த்தைக் க‌வ‌னிப்பார்க‌ள் என‌ எப்போதும் நான் யோசிப்பேன். போர்க்க‌ள‌த்தில் நான் நிற்கும்போதும்,என‌து குடும்ப‌ம் ப‌ற்றிய‌ நினைவுக‌ளே எப்போதும் என‌து ம‌ன‌தில் இருந்த‌ன‌.இன்னொரு புற‌த்தில் இது நான் தீர்மானித்து தெரிவு செய்யும் ஒன்றாக‌ இருக்க‌வில்லை; நான் தொட‌ர்ச்சியாக‌ ச‌ண்டைபிடித்தேன். க‌ட‌வுளிட‌ம் எனது க‌ண‌வ‌னையும் ம‌க‌னையும் வாழ‌ விடும்ப‌டி நான் பிரார்த்தித்தேன். பின்ன‌ர், என‌து குடும்ப‌மும் நானும் எங்க‌ள் கிராம‌த்திலிருந்து இட‌ம்பெய‌ர்ந்தோம். இன்னொரு ம‌க‌னைப் பிர‌ச‌வித்த நான் இப்போது என‌து க‌ண‌வ‌ரைப் போல‌வே தொழில் எதுவுமின்றி இருக்கின்றேன்.'

'போர் மிக‌வும் கொடூர‌மாயிருந்த‌து, நிறைய‌ காய‌ங்க‌ளும், இழ‌ப்புக்க‌ளும். நான் என‌து பிள்ளைக‌ளை ப‌டிப்பித்து ந‌ல்ல‌ பிள்ளைக‌ளாக்க‌ விரும்புகிறேன். க‌ச‌ப்பான‌ க‌ட‌ந்த‌கால‌த்தை ம‌ற‌ந்துவிட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ன்னித்துவிட்டும் அமைதியான‌ வாழ்வை நான் (வாழ‌) விரும்புகிறேன்.

'நான் போர்க்க‌ள‌த்தில் ச‌மராடியிருக்கிறேன்,ஆனால் என்னால் எவ்வித‌க் காய‌ங்க‌ளுமின்றி த‌ப்ப‌ முடிந்திருக்கிற‌து, அதேவேளை என‌து ச‌க‌போராளிக‌ள் நிறைய‌ப் பேர் அந்த‌ இட‌த்திலேயே இற‌ந்திருக்கின்றார்க‌ள். இது ஒரு க‌ட‌வுளின் அதிச‌ய‌ம். நான் உயிர்வாழ்வ‌த‌ற்காய் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்டிருக்கிறேன்.'

மூன்று க‌விதைக‌ள்: சென்ற‌ வ‌ருட‌ நினைவுக‌ளிற்கு...!

Tuesday, May 18, 2010

க‌பால‌ங்க‌ளைக் காவிச்செல்லும் ப‌ற‌வைக‌ள்

ந‌ள்ளிர‌விலழும் குழ‌ந்தைகளை கதகதப்பாக்க
சிமினி விள‌க்குக‌ளை காவிய‌ப‌டி
ப‌ற‌க்கும் சாம்ப‌ல் ப‌ற‌வைக‌ள்
எனது குற்றங்களின் குறுகுறுப்பை
தாங்க‌ முடியாத் துய‌ர‌த்தில்
த‌வ‌றவிடுகின்ற‌ன‌ விள‌க்குக‌ளை

சித‌றிய‌ எண்ணெய்த்துளிக‌ளிலிருந்து
முத்துக்குமாரிலிருந்து முருக‌தாச‌ன்வ‌ரை
எண்ண‌ற்றோர் தீ மூட்டிக்கொள்ள‌
நூற்றாண்டுக‌ளாய் நில‌த்தினுள்
உறைந்துபோயிருந்த‌ போர் அரக்கன்
விழிக‌ள் விரித்து
இன்ன‌மும் உட‌ல‌ங்க‌ள் தாவென்று உக்கிர‌த்துட‌ன்
த‌ன் அக‌ண்ட‌ வாயைப் பிள‌க்கிறான்
வ‌ன்னிப் ப‌துங்குகுழிக‌ளுக்குள்.

அவ்வைக்கு க‌ள்ளோடு தமிழூட்டி
முன்னோர் காலத்தில் ச‌ந்த‌திக‌ளைப் பிர‌ச‌வித்தபடி
காடுகளில் அலைந்த ஆதித்தாயே
குழ‌ந்தைக‌ளின் குருதி குடித்தும்
எவரினதும் தாகம் தீராக்கண்டு
எல்லாப் பூர்வீகப் பிரதிகளும்
தம்மைத் தாமே எரிக்க
எமதெல்லோரினதும் அடையாளமாகிறது மகாவம்சம்

உடலங்கள் புதைந்த சதுப்புநிலத்தில்
இன்னமும் கொய்வதற்கு மிஞ்சியுள்ள
தலைகளுக்காய் காத்திருப்பவர்களின்
கைகளில் 'சமாதானம்' இருக்க
அரசர்களும் அதிகாரங்களும்
கவனிக்கவும் கதைக்கவும்படும் காலத்தில்
நாயொன்று கவ்விக்கொண்டுவந்த
எலுமிச்சை குத்தப்பட்ட வைரவரைப்போல
அநாதரவாயினர் மக்கள்

பறவைகள் காவிச் செல்லும்
சிமினி விளக்குகளுக்காய் குழந்தைகள் காத்திருந்த காலம்போய்
நேற்றுச் சரிந்து வீழ்ந்த உடலுக்கு
கொள்ளியிட எந்தப் பிசாசு நெருப்புக்கொண்டுவருமென்று
காத்திருக்கும் விழிகளின் கோரம் தாங்காது
நான் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் எண்ணெய் ஊற்றி
எரியூட்டிய எனது கபாலத்தை.

(Feb 26, 2009)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
எவருமே நெருங்கவியலா
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.

(Nov 07,2007)

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் இருப‌த்தைந்தை.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

Monday, May 10, 2010

செம்மஞ்சளாய்
இலைகள்
உதிர்ந்துகொண்டிருந்த பருவத்தில்
முன்பொருமுறையும் சென்றிராத
சிறுதீவுக்கு பயணித்திருந்தேன்

ஒரு மதுபானவிடுதியின்
இருட்டுமூலையில்,எனது
கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலில்
தோலின் நிறத்தை
நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்.

திடீரென
dance floorன் மையத்தில்
இழுத்துச்சென்று
ஆட்டத்தின்
எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம்
இணைந்தாடச்சொல்கின்றாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளம்பாதிருப்பவர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்திற்குரியவன்;
ஆடுகின்றேன்.

வாரமொன்று களிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த ஒற்றையிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத்துயரை
காவிச்செல்கின்றது

இந்த நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன்கலாச்சாரத்து கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முள்சத்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை.

சித்திரை 05/05

நஞ்சு

Saturday, May 08, 2010

thami

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
பனிக்குள் பத்திரப்படுத்திக் கையளிக்க
மாயன்காலத்தவர்கள்
போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன

காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்துபோனவர்களின் நினைப்பொழிந்து
போர்பற்றிய பயங்களிலிருந்து விடுபடலாமென்று
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகின்றான் தோழன்

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்காலக்குறிப்புக்கள் களைந்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.




(Jan 30, 2007)
Photo: Thami (Eelam)




இரண்டு உலகங்களுக்கு இடையில்...

-விமுக்தி ஜெயசுந்தராவின் Between Two Worldsஐ முன்வைத்து-

1.
திரைப்ப‌ட‌ங்க‌ள் என்ப‌து பொழுதுபோக்கிற்கு ம‌ட்டுமே என்றொரு விம்ப‌ம் த‌மிழ்ச்சூழ‌லில் பொதுப்புத்தியில் ப‌திந்திருக்கின்ற‌து. அவ்வாறான‌ சூழ‌லிலிருந்து வ‌ரும் நெறியாள‌ர்க‌ளும் பொதுப்புத்தியைத் த‌விர்த்து புதிய‌ க‌ள‌ங்க‌ளில் த‌மிழ்த்திரைப‌ட‌ச்சூழ‌லை ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு அக்க‌றை கொள்வ‌துமில்லை.. ஆக‌வேதான், வ‌ழ‌மைக்கு மாறாய் ஆடல், பாட‌ல், ச‌ண்டைக்காட்சிக‌ள் குறைவாக‌ வ‌ரும் திரைப்ப‌ட‌ங்க‌ளைக் கொண்டாட‌வேண்டிய‌ அவ‌ல‌ச்சூழ‌ல் த‌மிழில் இருக்கிற‌து. எனினும் இவ‌ற்றுக்கு அப்பால் இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ த‌லித்துக்க‌ள், பெண்க‌ள், அர‌வாணிக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்கள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் மிக‌ மோச‌மாக‌ நுண்ணிய‌த‌ள‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌ முடியும்.த‌மிழ்ச்சூழ‌லோடு ஒப்பிடும்போது மிக‌ச்சிறிய‌ பார்வையாள‌ர் வ‌ட்ட‌த்தையும் மோச‌மான‌ த‌ணிக்கைச் சூழ‌லையும் கொண்ட‌ சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌ச்சூழ‌லிலிருந்து அற்புத‌மான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் ப‌ல்வேறு பின்புல‌ங்க‌ளை முன்வைத்து வ‌ர‌த்தொடங்கிவிட்ட‌ன‌. அதிகார‌த்தின் அமைப்புக‌ளுக்கு அறைகூவ‌ல் விடுத்தப‌டி ப‌ல இளைய‌ நெறியாள‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ -முக்கிய‌மாய் போருக்கும்/அர‌ச அதிகார‌ங்க‌ளுக்கும் எதிரான‌ க‌தைக‌ளைத் துணிவுட‌ன்- திரைப்ப‌ட‌மாக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ர். இன்று ப‌ல்வேறு நாடுக‌ளில் நிக‌ழும் திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் சிங்க‌ள‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌தும், விருதுக‌ளைப் பெறுவ‌தும் புதிய‌ க‌ள‌ங்க‌ளைப் ப‌ரீட்சித்துப்பார்த்த‌ சிங்க‌ள‌த்திரைப்ப‌ட‌ச்சூழ‌லிற்குக் கிடைத்த‌ அங்கீகார‌மென‌ எடுத்துக்கொள்ள‌லாம்.

அவ்வாறான‌ சிங்க‌ள‌ நெறியாள்கையாளர்களில் ஒருவ‌ராக‌, த‌ன‌து இருபத்தேழாவது வ‌ய‌தில் The Forsaken Land திரைப்ப‌ட‌த்தை இய‌க்கிய‌த‌ன் மூல‌ம் பல‌ர‌து க‌வ‌ன‌ததைத் திருப்பிய‌ ஒருவ‌ர் விமுக்தி ஜெய‌சுந்தரா. இல‌ங்கையின் தென்ப‌குதியில் பிற‌ந்த‌ விமுக்தி திரைப்ப‌ட‌த்துறை சார்ந்த‌ க‌ல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்ன‌ர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்ட‌வ‌ர். இப்போது மீண்டும் -நான்கு வ‌ருட‌ இடைவெளியின்பின்- த‌ன‌து இர‌ண்டாவ‌து ப‌ட‌மான‌ Between Two Worlds என்ற‌ ப‌ட‌த்தோடு வ‌ந்திருக்கின்றார்.. ஏற்க‌ன‌வே வெனிஸ் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிட‌த்தெரிவான‌ இத்திரைப்ப‌ட‌ம் இமமாத‌ம் ரொற‌ண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌விழாவிலும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. .மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளையும், நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளாலான‌ கவித்துவ‌க்காட்சிக‌ளையும் கொண்ட‌ விமுத்தியின் ப‌ட‌ங்க‌ளில் சாதார‌ண‌மாய் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதில் நுழைந்துவிட‌முடியாது..மிக‌ மெதுவாக‌வும், நேர்கோட்டுத்த‌ன்மை அற்ற‌ காட்சிக‌ள் ஒன்றுக்கு ஒன்று தொட‌ர்பில்லாது அடிக்க‌டி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்ப‌ட‌ங்களைப் பார்க்க‌த் த‌ன்னைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளாத‌ ஒரு பார்வையாள‌ரை இத்திரைப்ப‌ட‌ங்கள் த‌ம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிட‌வே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்ப‌ட‌ம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன், ஒரு சிறு அறிமுக‌த்தை விமுக்தி த‌ரும்போது, "ஏற்க‌ன‌வே இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ப‌ல‌ர் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டினமான‌ ப‌ட‌ம் என்றே கூறியிருக்கின்றார்க‌ள். இது ப‌ல‌ puzzleக‌ளைக் கொண்ட‌ ஒரு திரைப்ப‌ட‌ம். ப‌ட‌ம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌ம் பார்வையாள‌ருக்குரிய‌ திரைப்ப‌ட‌ம்; .puzzleக‌ளை மாற்றி மாற்றி அடுக்குவ‌த‌ன் மூல‌ம் பார்ப்ப‌வ‌ர் த‌ன‌க்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும். ஒருவ‌ர் உருவாக்கும் க‌தையும், ப‌ட‌த்தைப் பார்க்கும் ம‌ற்றொருவ‌ர் உருவாக்கும் க‌தையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற‌ எந்த அவ‌சிய‌மும் இல்லை. இதை இன்னொருவித‌மாய் இது த‌ன்ன‌ள‌வில் பார்ப்ப‌வ‌ரின் சூழ‌லுக்கும், அனுப‌வ‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ க‌ண‌ந்தோறும் மாறிக்கொள்ளும் பிர‌தியென‌ எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ஒற்றைத்த‌ன்மையிலும், நேர்கோட்டுக்க‌தைச் சொல்ல‌லிலும் ஊறியிருக்கும் ந‌ம்மில் எத்த‌னைபேர் இத்திரைப்ப‌ட‌ம் த‌ரும் சுத‌ந்திர‌த்தை அனுப‌விக்க‌த் த‌யாராக‌ இருக்கின்றோம்? கட்டற்ற சுத‌ந்திர‌ம் என்ப‌து சில‌ருக்குப் பிடிக்காதுபோல‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌வித‌மும் ப‌ல‌ருக்குப் பிடிக்காது போக‌வும் கூடும்.

2.
ஒருவ‌ன் ம‌லையுச்சியிலிருந்து க‌ட‌லுக்குள் வீழ்வ‌துட‌ன் ஆர‌ம்பிக்கும் முத‌ற்காட்சி, அவ‌ன் திரும்ப‌வும் ம‌லை மீதேறி ந‌க‌ருக்குள் நுழையும்போது ந‌க‌ர் க‌ல‌வ‌ர‌த்தின் அந்த‌ர‌த்தில் மித‌க்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. தெருவில் போகின்ற‌வ‌ர்க‌ளை அடித்துத் துவைத்து க‌டைக‌ளையெல்லாம் நொறுக்கிய‌ப‌டி குழுக்குழுவாய் இளைஞ‌ர்க‌ள் கூக்குர‌லிட்ட‌ப‌டி இருக்கின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த்தின் ந‌டுவில் ப‌யந்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி ஒரு பெண்ணிருப்ப‌தைப் பார்த்து, க‌ட‌லில் விழுந்து ந‌க‌ர் மீண்ட‌ இளைஞ‌ன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீன‌ச்சாய‌லுடைய‌ பெண்ணை இவ‌ன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்த‌னின் வானில்(Van) ஏற்றிய‌ப‌டி நீண்ட‌வீதியினூடாக‌ கிராம‌ப்புற‌த்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்க‌ள். 'உன்னை வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர் யாரென்று தெரியுமா' என அந்த‌ப் பெண்ணிட‌ம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற‌ சாய‌லுடைய‌ ஒருவ‌ன்' என்கிறாள் அந்த‌ப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வ‌ன்புண‌ர‌ இவ‌ன் துடிக்கின்ற‌போது, வானை ஓட்டிக்கொண்டு வ‌ருகின்ற‌வ‌ர் அதற்கு இடைஞ்ச‌லாய் இருப்ப‌து புரிகின்ற‌து. இப்ப‌ய‌ண‌த்தின்போது சீனாவில் ஒரு நகரில் ப‌ல‌ தொலைத்தொட‌ர்புச்சாத‌ன‌ங்க‌ளைத் த‌க‌ர்த்த‌ப‌டி போராளிக‌ள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்க‌ப்ப‌டும் வானொலியில்- சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து (ம‌றைபொருளாய் இல‌ங்கையிலிருக்கும் போராளிக‌ள் என்றும் அர்த்த‌ம் கொள்ள‌லாம்). ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில், இவ்வாறு காம‌த்துட‌ன் பித்தேறியிருக்கும் இவ‌னை அடித்துப்போட்டுவிட்டு அந்த‌ப்பெண்ணும், சார‌தியும் வானில் ஏறித் த‌ப்பிப்போகின்றார்க‌ள்.

இவ‌ன் மீண்டும் த‌ன‌து கிராம‌த்திற்குப் ப‌ஸ்சில் போகின்றான். ஊரிலிருப்ப‌வ‌ர்க‌ள் 'ஊருக்கு ஏன் இவ்வ‌ளவு விரைவில் திரும்பி வ‌ந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவ‌ர்க‌ள் சுட்டுப்போட்டுவிடுவார்க‌ள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவ‌து ஒளிந்துகொள்' என்கின்றார்க‌ள். அவ‌னைப் போன்ற‌ ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் அதிகார‌ அமைப்பின் வ‌ன்முறைக்குப் ப‌ய‌ந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்ப‌க்க‌மாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு சிறுவ‌னின் துணைகொண்டு இவ‌ன் அறிகின்றான். .தானும் அவ‌ர்க‌ளோடு ப‌துங்கிவாழ‌ இவ‌ன் த‌யாராகின்ற‌போது, தான் வ‌ந்த‌ வான் குள‌மொன்றில் க‌விழ்வ‌தைக் காண்கின்றான். இவ‌ன் விரைவாக‌ ஓடிப்போய் குள‌த்தைப் பார்க்கின்ற‌போது அங்கே வான் விழுந்த‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌மும் இல்லை.. குள‌த்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதிய‌வ‌ரிட‌ம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குள‌த்தினுள் இப்போது விழ‌வில்லை. ஆனால் முன்னோர் கால‌த்தில் இப்ப‌டியோரு ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌து எதுவும் இனி நிக‌ழாது என்றும் அறுதியிட்டுக் கூற‌முடியாது' என்கிறார். இப்போது அடுத்த‌ காட்சி மாறுகின்ற‌து.

3.
ஒரு முதியவ‌ரும் இளைஞ‌னும் ந‌ல்ல‌ வெறியில் க‌ட‌லையொட்டிய‌ குன்றொன்றில் அம‌ர்ந்திருக்கின்றார்க‌ள். முதிய‌வ‌ர் க‌தையொன்றைச் சொல்ல‌ப்போவ‌தாய்க் கூறுகின்றார். ஆனால் க‌தையின் ந‌டுவில் எதுவும் கூறி க‌தையை வேறு வித‌மாக‌ மாற்றக்கூடாது என்று இளைஞ‌னை எச்ச‌ரிக்கின்றார். க‌தை: ஒரு நாட்டின் அர‌ச‌னுக்கு இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும் ஒரு ம‌க‌ளும் இருக்கின்றார்க‌ள். எதிர்கால‌த்தில் இந்த‌ அர‌ச‌னின் ம‌க‌ள் திரும‌ண‌ஞ்செய்து அவளுக்குப் பிற‌க்கின்ற‌ ஆண் குழ‌ந்தை, அவ‌னின் இரு மாம‌ன்க‌ளையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்ப‌ற்றுவான் என்று சோதிட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்றார்க‌ள். இத‌ன் நிமித்த‌ம், எவ‌ரையும் திரும‌ண‌ஞ்செய்து குழ‌ந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரச‌னின் ம‌க‌ள் ஒரு தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌டுகின்றாள். ஆனால் ஏதோவொரு வ‌கையில் அவ‌ள் கர்ப்ப‌ம‌டைந்து ஒரு ஆண் குழ‌ந்தையைப் பெற்று விடுகின்றாள். வ‌ள‌ர்ந்துவ‌ரும் அந்த‌ இள‌வ‌ர‌ச‌னைக் கொல்ல‌ இர‌ண்டு மாம‌ன்க‌ளும் முய‌ல்கின்றார்க‌ள். இறுதியில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ விதம் ப‌ற்றிப் ப‌ல‌ க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று: இள‌வ‌ரச‌ன் குறித்த‌ ச‌ரியான‌ அடையாள‌ந்தெரியாத‌தால், அந்நாட்டிலுள்ள‌ அவ‌ன் வ‌ய‌தொத்த‌ அனைத்து இளைஞ‌ர்க‌ளையும் கொலைசெய்ய‌ அவ‌ன‌து மாம‌ன்மார்க‌ள் க‌ட்ட‌ளையிட்டார்க‌ள் என்று க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ர் கூறுகின்றார். அதைக் க‌தை கேட்ட‌ இளைஞ‌ன் ம‌றுத்து, அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் நீராடிக்கொண்டிருந்த‌போது அவ‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இள‌வ‌ர‌ச‌ன் தப்பிப்போய் ஒரு ம‌ர‌ப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் என‌வும், அவ‌ன் இன்ன‌மும் அந்த‌ ம‌ர‌ப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து என்றும் க‌தையை வேறுவித‌மாய் முடிக்கின்றான்.

4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் த‌ன் வ‌யதொத்த‌ -ப‌துங்கியிருக்கும்- இளைஞ‌ர்க‌ளைத் தேடும் இவ‌ன், த‌ன‌து அண்ணியின் வீட்டுக்குள் வ‌ருகின்றான். க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு விழி திற‌க்க‌முடியாத‌ இவ‌னுக்கு அவ‌ர் முலைப்பால் விட்டு காய‌ம் ஆற்றுகின்றார். இடையில் இவ‌னுக்கு அண்ணி மீது உட‌ல்சார்ந்த‌ ஈர்ப்பு வ‌ர‌ அண்ணி அவ‌னை உத‌றித்த‌ள்ளுகின்றார். 'என‌து ராஸ்க‌ல் அண்ண‌ன் இனியும் திரும்பி வ‌ருவான்?' என்று நீங்க‌ள் நினைக்கின்றீர்க‌ளா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவ‌னோடு ப‌ற்றைக‌ளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவ‌ன் சிறுவ‌னின் துணையுட‌ன் ஒளிந்திருக்கும் இளைஞ‌ர்க‌ளைத் தேடிப் போகின்றான். சிறுவ‌ன் ஒரு ம‌ர‌ப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்ச‌த்த‌ங்க‌ள் கேட்கின்ற‌ன‌. இவ‌ன் சிறுவ‌னின் ம‌ன்றாட்ட‌த்தையும் அல‌ட்சிய‌ம் செய்து ம‌ர‌த்த‌டிக்குப் போகின்றான். அந்த‌ ம‌ர‌ம் இள‌வ‌ர‌ச‌ன் தான் கொல்ல‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌ப்ப‌ ஒளிந்து கொள்வ‌தாய்த் தொம‌க்க‌தையில் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ ம‌ர‌ம்.

இத‌ற்கிடையில் கிராம‌ம் எங்கும் கைக‌ள் ம‌ட்டும் வெளியே தெரியும் உட‌ல‌ங்க‌ள் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிராம‌த்துக் குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் பீதியுட‌ன் உறைந்த‌ நிலையில் இவ‌ற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். நாய்க‌ள் மாடுக‌ள் எல்லாம் கூட‌வே சுட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு முழு மாட்டைக் கோர‌மாய் கிழித்துண்ணும் க‌ரிய‌ நாய் சூழ‌லின் கொடூர‌த்தை ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துகின்ற‌து.. கிராம‌த்தில் எல்லா இய‌ல்ப‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌ன‌. இளைஞ‌ர்க‌ள் காணாம‌ற்போய்க்கொண்டிருக்கின்ற‌ க‌தையை வெளியே சொல்ல‌முடியாத‌ க‌ன‌த்த‌ சோக‌த்தை த‌ங்க‌ள் தொண்டைக்குழிக‌ளுக்குள் அட‌க்கிய‌ப‌டி கிராம‌த்த‌வ‌ர்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க‌ள்.அதேவேளை கிராம‌த்த‌வ‌ர்க‌ளின் நீர்த்தேவைக‌ளைப் பூர்த்திசெய்யும் குள‌மும் ந‌ஞ்சூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. பதுங்கியிருக்கும் இளைஞ‌ர்க‌ள் வெளியே வர, இவனும் அந்த இளைஞ‌ர்க‌ளும் ஒன்றுசேர்ந்து அக்குள‌த்தைச் சுத்திக‌ரிக்கும் ப‌ணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குள‌த்தைச் சுத்திக‌ரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைக‌ளில் ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள் கூடி நிற்கும் இளைஞ‌ர்க‌ளைத் அடித்தும் சுட்டும் கொல்ல‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். எல்லோரும் கொல்ல‌ப்ப‌ட‌ இவ‌ன் ம‌ட்டும் த‌ப்பிப்போய் ம‌ர‌ப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன‌ இவ‌னைத் தேடி சிறுவ‌னும், இவ‌ன‌து அண்ணியும் அலைய‌த்தொட‌ங்குவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிவுபெறுகின்ற‌து.

காட்சிக‌ளை அப்ப‌டியே ப‌திவாக்குவ‌து என்றால் இப்ப‌டித்தான் இத்திரைப்ப‌ட‌த்தின் க‌தையிருக்கும். விமுத்தி குறிப்பிட்ட‌துபோல‌ பார்ப்ப‌வ‌ர் இந்த‌ puzzleக‌ளை எப்ப‌டி அடுக்கித் த‌ன‌க்கான‌ ப‌ட‌த்தை உருவாக்குகின்றார் என்ப‌தில்தான் ப‌ட‌த்தின் முழுமை த‌ங்கிருக்கிற‌து. திரையிட‌லின் பின் ப‌ட‌ம் குறித்த‌ கேள்விக‌ளுக்கு, 'இந்த‌ப்ப‌ட‌த்தின் மூல‌ம் எந்த‌க் க‌தையைச் சொல்ல‌ விரும்புகின்றீர்க‌ள்?' என்று பார்வையாள‌ரிடையே இருந்து வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'நீங்க‌ள் யோசியுங்க‌ள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவார‌த்தில் உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி ப‌தில‌ளித்திருந்தார்.. 'சில‌வேளைக‌ளில் இந்த‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளின் ஜ‌தீக‌க் க‌தைக‌ளோடு இணைத்துப் பார்த்து இல‌ங்கைய‌ர்க‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும், அத‌னாற்றான் எங்க‌ளால் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டின‌மாய் இருக்கிற‌தா?' என்றொருவ‌ர் கேள்வி எழுப்பிய‌போது, 'இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ க‌தை ம‌காவ‌ம்ச‌த்தில் வ‌ருகின‌ற‌து. ஆனால் ம‌காவ‌ம்ச‌த்தை வாசித்தால்தான் இந்த‌ப் ப‌ட‌ம் விள‌ங்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை' என்றும் விமுக்தி க‌வ‌னப்ப‌டுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வ‌ர்த்த‌க‌ ஹொலிவூட் ப‌ட‌ங்க‌ளுக்கு தான் எதிரான‌வ‌ன் என்ப‌தை விமுக்தி ப‌திவு செய்த‌போது, அப்ப‌டியாயின் இத்திரைப்ப‌ட‌த்திற்கான‌ பார்வையாள‌ர்க‌ள் யாரென‌ வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'அது குறித்து நான் அக்க‌றைகொள்ளவில்லை. என்ன‌ளவில் எத்த‌கைய‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாரில்லை. ஆக‌க்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமான‌து' என்று விமுத்தி தெளிவாக‌வே கூறியிருந்தார்.

5.
இனி, என‌க்கு விள‌ங்கிய‌மாதிரி உருவாக்கிக்கொண்ட‌ க‌தை: இர‌ண்டுவித்தியாச‌மான‌ உல‌கு என்ப‌தை விமுக்தி ய‌தார்த்த‌திற்கும் புனைவுக்குமான‌ உல‌க‌ம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது க‌ன‌வுக்கும் ந‌ன‌வுக்கும் இடையிலான‌ உல‌க‌ம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த‌ க‌ன‌வு X ந‌ன‌வு என்கின்ற‌ இர‌ண்டு உல‌கை அவ்வ‌ளவு எளிதாக‌ எவ‌ராலும் வித்தியாச‌ப்ப‌டுத்த‌ முடியாது. நாம் ய‌தார்த்த்தில் இருக்கும்போதே ச‌ட்டென்று க‌ன‌வுல‌க‌த்திற்குப் போய்விட‌முடியும். இங்கே த‌ன்னை த‌டுத்துநிறுத்த‌ முய‌ல்கின்ற‌ சிறுவ‌னை இவ‌ன் த‌ரையில் அடித்துக்கொள்வ‌தும், த‌ன‌க்கு புண‌ர‌ முத‌லில் ச‌ம்ம‌த‌ம் த‌ராத‌ அண்ணியை க‌ல்லொன்றால் ச‌த‌க் ச‌த‌க் என்று இர‌த்த‌ம் பீறிட இவன் கொல்வ‌துமான‌ காட்சி யதார்த்த‌தில் நிக‌ழ்வ‌துபோல‌க் காட்ட‌ப்ப‌ட்டிருந்தாலும் இவைய‌னைத்தும் இவ‌னின் உள்ம‌ன‌தில் உருளுகின்ற‌ உல‌கில் வ‌ருப‌வையே. எனெனில் இறுதிக்காட்சிக‌ளில் இவ‌ன் பொந்தில் இருக்கின்ற‌போது தேடி உயிருட‌ன் மீள‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இச்சிறுவ‌னும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு ப‌டிம‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌தில் பெருவிருப்ப‌ம் உள்ள‌தென்ப‌தால் எதையும் நேர‌டியாக‌ச் சொல்வ‌தற்காய் அதிக‌ நேர‌ம் செல‌வ்ழிப்ப‌தில்லை. அவ‌ர‌து முத‌ற்ப‌டமான‌ Forsaken Land லிலேயே, போரைப் ப‌ற்றிச் சொல்ல‌ப்பட்டாலும் போரின் நேர‌டி அழிவுக‌ளை எந்த‌வொரு காட்சியிலும் காட்சிப்ப‌டுத்தியிருக்க‌ மாட்டார்.. அதுபோல‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் அடிக்க‌டி ஒரு ப‌டிம‌மாய் வ‌ரும் க‌வ‌ச வாக‌ன‌மும் (ராங்கியும்) அது குறிப்பார்க்க‌த் திருப்புகின்ற‌ நீண்ட‌ குழாயும், 'ச‌மாதான‌ கால‌ம்' என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ கால‌த்திலும் போர் வாச‌ற்ப‌டியில் நின்று, எப்போதோ மீண்டும் நிக‌ழ‌த் த‌யாராகின்ற‌தென‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். இந்த‌ப் ப‌ட‌த்திலும் அவ்வாறான‌ ப‌டிம‌ங்க‌ளையே விமுக்தி ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌த்தில் வ‌ரும் இவ‌ன் ஒரு முன்னோர் கால‌த்தில் நிக‌ழ்வ‌தாய்க் கூற‌ப்ப‌டுகின்ற‌ க‌தையில் வ‌ருகின்ற‌ இள‌வ‌ர‌ச‌னின் இன்னொரு ப‌டிம‌மே. இங்கே வ‌ரும் அண்ணியும் கூட‌. அவர் மூன்றாம் முறையாக‌ இவ‌ன‌து காய‌த்தை ஆற்றுவ‌த‌ற்காய் த‌ன‌து முலைப்பால் கொடுக்கும்போது, இவ‌ன் கேட்கின்றான் எப்ப‌டி 'உங்க‌ளுக்குப் பிள்ளையில்லாம‌லே முலை சுர‌க்கிற‌து?' என்று. இதை நாம் அந்த‌ ஜ‌தீக‌க் க‌தையில் தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ இளவ‌ர‌சி எவ‌ருமேயின்றி எப்ப‌டி ஒரு ஆண் குழ‌ந்தைக்குத் தாயாகின்றாள் என்ப‌தோடு பொருத்திப் பார்க்க‌லாம். அதே மாதிரி இள‌வ‌ர‌ச‌னின் தோழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ நிக‌ழ்கால‌த்தில் இவ‌ன‌து ஊரைச் சேர்ந்த இளைஞ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒரு கிள‌ர்ச்சி/க‌ல‌க‌ம் அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்று அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ள் கொண்டாடுகின்ற‌போதும், இவ‌ன் பொந்தில் இருப்ப‌து என்ப‌து, போராட்ட‌த்திற்கான‌ கார‌ணி இன்ன‌மும் அழிந்துவிட‌வில்லை என்ப‌தைக் குறியீடாக‌க் கொள்ள‌லாம். இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை ஈழ‌த்தில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டுவித‌மான‌ உள்நாட்டுப் போர்க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்க‌லாம்.. திரைக்க‌தை மேலோட்ட‌மாய் த‌னியொருவ‌னின் க‌தையைச் சொல்வ‌தாக‌ இருந்தாலும், அது ஒரு போராடிய ச‌மூக‌த்தின் க‌தையைத்தான் சொல்கின்ற‌து என்ற‌ நுட்பமான பார்வையை நாம் வ‌ந்தடைய‌ முடியும். ஈழ‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ த‌மிழரின் ஆயுத‌ப்போராட்ட‌ம், சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் 'சே குவேரா' (ஜேவிபி) கிள‌ர்ச்சிக‌ளுட‌ன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்த‌வ‌ரை அதிக‌மாய்ப் பொருந்திப் போவ‌து ஜேவிபியின் கிள‌ர்ச்சிக்கால‌ம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌போது ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள இளைஞ‌ர்க‌ள் மிக‌ மிலேச்ச‌த்த‌ன‌மாய் எந்த‌வித‌ சாட்சிக‌ளோ விசார‌ணைக‌ளோ இன்றி கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கையின் தென்பாகம் எங்கும் ச‌ட‌லங்க‌ள் க‌ட‌லில் மித‌ந்த‌தாக‌வும் அரைகுறையாய் புதைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் பின்வ‌ந்த‌ க‌தைக‌ள் சாட்சிய‌ம் கூறியிருக்கின்ற‌ன‌. இன்றைய‌ த‌மிழின‌ அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூர‌க்க‌ர‌ங்க‌ள் இருந்த‌ன‌வோ அதேபோல் சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் கிள‌ர்ச்சிக்கால‌த்தை ஒடுக்க‌வும் இந்தியாவின் இர‌த்த‌க்க‌ர‌ங்க‌ள் நீண்டிருந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம்.

மானுட‌ விடுத‌லைக்கான‌ கல‌க‌ங்க‌ள் எவ்வ‌ளவு கொடூர‌மாய் அதிகார‌த்தின் க‌ர‌ங்க‌ளால் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் அவை என்றேனும் ஒருகால‌த்தில் மீண்டும் திரும்பி வ‌ருவ‌த‌ற்கான‌ நிக‌ழ்த‌க‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையே இப்ப‌ட‌ம் உள்ளுறை உவ‌மமாக‌க் கூறுவ‌தாக‌த் தோன்றுகின்ற‌து.. இப்ப‌ட‌த்தில் ஒரு முதிய‌வ‌ர் அடிக்க‌டி வ‌ந்து வ‌ர‌லாற்றில் நிக‌ழ்வுக‌ள் அடிக்க‌டி மீள‌ நிக‌ழ‌க்கூடிய‌வை என்ப‌து இச்சாராம்ச‌த்தோடு இணைந்துபோக‌க்கூடிய‌துதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன‌, இந்த‌ப் ப‌ட‌மாய் இருந்தாலென‌ன‌ அவ‌ருக்கு மிக‌ப்பெரும் வெளியைக் காட்சிப்ப‌டுத்துவ‌து பிடித்திருக்கின்ற‌து. Forsaken Landல் பொட்ட‌ல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த‌ பெரு நில‌ப்ப‌ர‌ப்பு. அத்தோடு அதிக‌ காட்சிக‌ளில் க‌மரா அப்ப‌டியே அசையாம‌ல் ச‌ல‌ன‌ம‌ற்றிருக்கின்ற‌து; அது காட்டுகின்ற‌ வெளியில் ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள், பிற‌கு ம‌றைந்தும் போய்விடுகின்றார்க‌ள்.. அக‌ண்ட‌காட்சிகளாய் விரியும் ப‌ல‌ காட்சிக‌ளில் வ‌ந்துபோகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் மிக்ச்சிறிதாக‌த் தெரிகின்றார்க‌ள். இந்த‌ப் ப‌ட‌க்காட்சிக‌ள் ந‌ம‌து ம‌ன‌தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய‌வை. நம‌து வாழ்வில் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள் போகின்றார்க‌ள், ஆனால் ந‌ம‌து வாழ்வு தொட‌ர்ந்து ஒரேயிட‌த்தில் நின்று இவை எல்லாவ‌ற்றையும் ச‌ல‌ன‌ம‌ற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌துபோல‌.

விமுக்தியின் பட‌ங்க‌ளை -ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌தைப் போன்று- சாதார‌ண‌ப் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் வேக‌த்திலோ, அதிர‌டியான‌ திருப்ப‌ங்க‌ளையோ எதிர்பார்த்தோ பார்க்க‌ முடியாது. முத‌ல் வ‌ரும் காட்சிக்கும் அடுத்த‌ காட்சிக்கும் க‌ட்டாய‌ம் தொட‌ர்பு இருக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌த்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்த‌ள்ளும் அதேவேளை சில‌ காட்சிக‌ள் மிக‌ மிக‌ மெதுவாக‌ ந‌க‌ர்கின்ற‌போது ச‌ற்று அலுப்பு வ‌ர‌ச்செய்வ‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இன்று விமுத்தியின் ப‌ட‌த்தை பார்த்து ஒரு க‌தையை உருவாக்கும் ஒரு பார்வையாள‌ர் நாளை அத‌ற்குத் தொட‌ர்பில்லாத‌ இன்னொரு க‌தையைத் த‌ன்ன‌ளாவில் உருவாக்கிக்கொள‌ள‌வும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிர‌தி வாசிக்கும் க‌ண‌ந்தோறும் த‌ன‌க்கான‌ க‌தையை மாற்றிக்கொள்ளும் மாய‌த்தை உள்ள‌ட‌க்கினால் எப்ப‌டியிருக்குமோ அப்ப‌டியே விமுத்தியின் இப்ப‌ட‌மும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்க‌ளின் குறுக்குவெட்டுக்க‌ளால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள‌ முனைகின்ற‌து. இந்த‌க் மாய‌ வித்தை சில‌ருக்கு வ‌ன‌ப்பூட்ட‌லாம், வேறு சில‌ருக்கு அலுப்பூட்ட‌லாம். அது க‌தைசொல்லியின் த‌வ‌றும‌ல்ல‌, க‌தைகளைச் ச‌துர‌ங்க‌க் க‌ட்ட‌த்தில் ந‌க‌ர்த்த‌ விரும்பும்/விரும்பாத‌ ந‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்புக‌ள் சார்ந்த‌வை.


நன்றி: 'உன்னதம்' & 'வைகறை'‌‌‌‌

ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் - 03

Wednesday, May 05, 2010

இதைவிட‌ ஈழ‌த்திலிருந்து அண்மைக்கால‌மாய் தொட‌ர்ச்சியாக‌வும் காத்திர‌மாக‌வும் எழுதும் அனாரைத் த‌விர்த்து நாமின்று ச‌ம‌கால‌ ஈழக் கவிதைக‌ள் குறித்து பேச‌முடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்காத‌போதும் சிறுக‌தைக‌ளில் த‌னித்து மிளிரும் திசேராவும், க‌விதைத்த‌ள‌த்தில் ப‌ஹிமா ஜ‌கானையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து. அதேபோன்று ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலிருந்து எழுதும் ம‌ல‌ர்ச்செல்வ‌னின் பெரிய‌ எழுத்திலும் சில‌ ந‌ல்ல‌ க‌தைக‌ள் இருக்கின்ற‌ன.

ம‌ஜீத்தின் 'புலி பாய்ந்த‌போது இர‌வுக‌ள் கோடையில் அலைந்த‌ன‌', க‌ருணாக‌ர‌னின் 'ப‌லியாடு' என்ப‌வற்றையும் வாசிக்காத‌போதும் -வாசித்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளின் அடிப்ப‌டையில்- அவையும் ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌த்தில் முக்கிய‌ம் வாய்ந்த‌வை போன்றே தெரிகின்ற‌ன‌. அதேபோன்று யாழிலிருந்து வெளிவ‌ந்த‌ பா.ச‌த்திய‌மூர்த்தியின் ந‌.ச‌த்திய‌பால‌னின்  'இப்படியாயிற்று நூற்றியொராவ‌து த‌ட‌வையும்', புலத்திலிருந்து வெளிவந்த கலாமோகனின் 'ஜெயந்தீசன் கதைகள்' மற்றும் இரவி அருணாசலத்தின் 'காலமாகி வந்த கதை'யும்', வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவலும் வாசிப்பில் உள்ள‌ட‌க்க‌வேண்டிய‌வை.

நீண்ட‌கால‌மாய் புனைவுத்த‌ள‌த்தில் இய‌ங்கிவ‌ரும் பொ.க‌ருணாக‌ர‌மூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்' கவனிக்கத்தககவை. பொ.கருணாக‌ர‌மூர்த்தியிட‌ம் ம‌ர‌பு சார்ந்த‌ க‌தைசொல்லி அவ்வ‌ப்போது வெளிப்ப‌ட்டு வாசிப்ப‌வ‌ருக்கு இடைஞ்ச‌ல் கொடுத்தாலும், அதை வெளிப்ப‌டையாக‌ உண‌ர‌முடியாத‌வ‌ளவுக்கு அவ‌ரின் க‌தைக‌ளில் அங்க‌த‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து. அவ‌ரின் ப‌டைப்புக்க‌ள் குறித்து அவ‌ரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாக‌ப் பேசியிருப்ப‌தால் அவ‌ற்றைப் பற்றி இங்கே பேசுவ‌தைத் த‌விர்க்கிறேன்.

மேலும் தொகுப்புக்க‌ளாய் வெளிவ‌ராத‌போதும் (என்னை) மிக‌வும் வ‌சீக‌ரித்த‌ க‌தைக‌ளை எழுதிய‌ மைக்க‌ல், பார்த்தீப‌ன், சித்தார்த்த‌ சே குவேரா  போன்ற‌வ‌ர்க‌ளையும் க‌விதைக‌ளில் பிர‌தீபா தில்லைநாத‌ன், துர்க்கா போன்ற‌வ‌ர்க‌ளையும் நாம் இந்த‌ இட‌த்தில் த‌வ‌ற‌விட‌ முடியாது; அவ்வாறு குறிப்பிட‌த்த‌க்க‌ நீண்ட‌ ப‌ட்டிய‌ல் நம்மிடையே இருக்கிறது. ற‌ஞ்சினி, தேவ‌ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேர‌ங்க‌ருதி- இங்கே த‌விர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்ன‌ம்பல‌ம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.

ப‌ல்வேறு ப‌டைப்பாளிக‌ளின் ப‌டைப்புக்க‌ளைத் தொகுத்து இல‌ண்ட‌னிலிருந்து ப‌த்ம‌நாப ஜ‌ய‌ர் (க‌ண்ணில் தெரியுது வான‌ம்), பிரான்சிலிருந்து ஷோபா ச‌க்தி, சுக‌ன் (ச‌ன‌த‌ரும‌போதினி, க‌றுப்பு), க‌ன‌டாவிலிருந்து தேவ‌காந்த‌ன் (கூர்), த‌மிழ‌க‌த்திலிருந்து அ.ம‌ங்கை (பெய‌ல் ம‌ண‌க்கும் பொழுது), சுவிஸிலிருந்து ர‌ஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட‌ தொகுப்புக்க‌ள் ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் குறித்த‌ ப‌ல‌வேறு குறுக்கு வெட்டு முக‌ங்க‌ளைத் த‌ருகின்ற‌ன‌.

3.
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் ச‌காப்த‌த்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இல‌க்கிய‌ம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகால‌த்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்ப‌தும் பிற‌கு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிக‌ழ்ந்து கொண்டிருக்கின்ற‌து. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்ட‌ள‌வில் எங்க‌ளைவிட‌ கணிசமானோர் இல‌க்கிய‌ச் சூழ‌லில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வ‌ந்து நிர‌ப்பிவிடுகின்றார்க‌ள்.

மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவிய‌த்து ஒன்றிய‌ம்) உட்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவ‌ந்த‌ அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை த‌ங்க‌ளுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்ப‌து கூட‌ வ‌ர‌லாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய‌ கால‌மே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.

க‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ கால‌த்தில் க‌விதை, சிறுக‌தை போன்ற‌வ‌ற்றில் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளை ப‌திவு செய்த‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ உல‌க‌ம் நாவ‌லக‌ளிலோ விம‌ர்ச‌ன‌ம் உள்ளிட்ட‌ அபுனைவுத்த‌ள‌த்தில் அதிக‌ள‌வு ச‌ல‌ன‌ங்க‌ளை ஏற்ப‌டுத்த‌வில்லை என்றே எடுத்துக்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. நாவ‌ல்க‌ள் என்று பார்க்கும்போது ஷோபா ச‌க்தியின் 'கொரில்லா', 'ம்', தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'நிலாச்சமுத்திரம்', ந‌டேச‌னின் 'வ‌ண்ணாத்திக்க்குள‌ம்', 'உனையே ம‌ய‌ல் கொண்டு', விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி', அ.முத்துலிங்க‌த்த்தின் 'உண்மை க‌ல‌ந்த‌ நாட்குறிப்புக‌ள்'. ர‌குநாத‌னின் 'ஒரு ப‌ன‌ங்காட்டுக்கிராம‌த்தின் க‌தை', எஸ்.பொவின் 'மாயினி' போன்ற‌வையே ஒர‌ள‌வாவ‌து க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்புக்க‌ளாய் இருக்கின்ற‌ன.

இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்ற‌வையே முக்கிய‌முடைய‌ ப‌டைப்புக்களாகின்ற‌ன‌. வ‌ண்ணாத்திக்குள‌ம் சிங்க‌ள/த‌மிழ் உறவுக‌ளை அதிக‌ ரொமான்டிசை செய்த‌துபோல‌ இருக்க‌, உனையே ம‌ய‌ல் கொண்டு ஒரு ஆணாதிக்க‌ப் பிர‌தியாக‌வும் யாழ்ப்பாணியக் கூறுக‌ள் அதிக‌ம் கொண்ட‌தாக‌வும் தெரிகின்ற‌து. ப‌ன‌ங்காட்டுக் கிராம‌த்தின் க‌தை ஈழ‌த்துப் ப‌ஞ்ச‌ம‌ர் வாழ்வைச் சொல்ல‌ முற்ப‌டும் ஒரு ப‌டைப்பு என்றாலும் அதில் சில‌ விட‌ய‌ங்க‌ள் திருப்ப‌ச் திருப்ப‌ச் சொல்வ‌து ஒருவித‌ அலுப்பை ஏற்ப‌டுத்துகின்ற‌து. சிற‌ந்த‌ க‌தை சொல்லியாக‌ த‌ன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக‌ மோச‌மான‌ த‌மிழ்த்தேசிய‌ பிர‌ச்சார‌க் க‌தையாக‌ மாயினியைத் த‌ந்திருக்கின்றார். அ.முத்துலிங்க‌த்தின் உண்மை க‌ல்ந்த‌ நாட்குறிப்புக்க‌ள், அவை த‌னித்த‌ள‌வில் சிறுக‌தைக‌ளாய் இருக்கின்ற‌தே த‌விர‌ ஒரு நாவ‌லுக்கான‌ வெற்றியை அது அடைய‌வே இல்லை. விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.

ஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எம‌து ப‌டைப்புக்க‌ள் த‌ம‌து த‌ள‌த்தை உல‌க‌ அள‌விற்கு விசாலிக்க‌வில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான‌ விம‌ர்ச‌ன‌ ம‌ர‌பு தொட‌ர்ச்சியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌வில்லை என்ப‌து முக்கிய‌ கார‌ண‌மாய்த் தோன்றுகின்ற‌து. ந‌ம் ப‌டைப்பாளிக‌ள் ச‌க‌ ப‌டைப்பாளிக‌ளிடையோ வாச‌க‌ர்க‌ளிடையோ விரிவான‌ உடையாட‌ல்க‌ளை நிக‌ழ்த்தாது த‌ங்க‌ளின் சாள‌ர‌ங்க‌ளை இறுக்க‌ முடிக்கொண்டிருப்ப‌து இருப்ப‌து இன்னொரு கார‌ண‌மாக‌ இருக்க‌க்கூடும். ம‌ற்றும்  -இதைச் சொல்வ‌தால் சில‌ருக்கு  கோப‌ம் வ‌ர‌க்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அர‌சிய‌ல், சினிமா தொட‌க்கும் இல‌க்கிய‌ம் வ‌ரை இந்தியா மீதான் அடிமை மோக‌த்திலிருந்து வெளியே வர‌வில்லை என்ப‌தையும் கூற‌த்தான் வேண்டியிருக்கிற‌து.

(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில்  வாசிக்கப்பட்ட கட்டுரை; சில திருத்த‌ங்கள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து - Apr, 2010)