கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பாலைகள் மீது பறக்கும் துயரப்பறவைகள்

Wednesday, October 10, 2012


-இரவியின் 'பாலைகள் நூறு' கதைகள் மீதான வாசிப்பு-

1.
வரலாற்றின் துயரங்களில் நாங்கள் சாட்சிகளாக நின்றிருக்கின்றோம். சிலவேளைகளில் அவ்வாறு நிற்க வற்புறுத்தவும் செய்யப்பட்டிருக்கின்றோம். திணிக்கப்பட்ட யுத்தத்தை எவ்விதத் தேர்வுகளுமில்லாது ஏற்றுக்கொள்ள எங்கள் தலைமுறை நிர்ப்பந்திக்கவும்பட்டிருக்கிறது. ஆனால் இரவி போன்றவர்கள் எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வில் அழகிய இளவேனில் காலங்கள் மலர்ந்திருக்கின்றன. கோயில்களில் திருவிழாக்கள் இரவிரவாய் நடந்ததைக் கண்டு களித்திருக்கின்றார்கள். கீரிமலைக் கேணியிலும், கசூனாக் கடற்கரையிலும் பயமின்றிக் குளித்த அனுபவம் அவர்களின் தலைமுறைகளுக்கு வாய்த்தும் இருக்கின்றது. அதேபோன்று, இந்த வாழ்வின் வசந்தங்கள் கருகி எரிவதை நேரடிச் சாட்சிகளாய்ப் பார்த்தவர்களும் அவர்களே. தமக்குப் பின் வரும் தலைமுறைகள் ஒடுக்குதலின்றி நிம்மதியாக வாழவேண்டுமென ஆசைப்பட்டு, சுயநலமின்றிப் போராட்டக்களங்களைத் தேர்ந்தெடுத்த முன்னோடிகளும் அவர்களே.

காலம் செல்லச் செல்ல எதிரி ஒருவனே என்ற நிலை மறைந்து, எதிரிகள் பல்கிப் பெருக யாரோடு பொருத யாரிடமிருந்து தப்பிக்க, என மனம் நொந்து போராட்டம் செல்லும் திசை கண்டு மனம் வெம்பியுமிருக்கின்றார்கள். போராட்டத்திற்காய் காதலைத் துறந்து களத்தில் இறங்கியவர்கள், இறுதியில் மாற்று இயக்கத்தவர்களே தோழர்களைத் துரத்திச் துரத்திச் சுட, 'எம் போராட்டமும் போயிற்று நம் காதலும் போயிற்று' என வாழ்வின் வெறுமைக்குள் விழுந்தவர்களும் இரவியின் தலைமுறையைச் சேர்ந்தவர்களே. பின்னர் போராட்டக் களங்களிலிருந்து வேறு வழிகளின்றி முற்றாக வெளியேறியுமிருக்கின்றார்கள்.

இத்தொகுப்பிலுள்ள அநேக கதைகள் வாழ்வின் அழகிய வசந்தங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றன என்பதையும் பிரியமான மனிதர்கள் எவ்வாறு சலனமற்று உதிர்ந்துபோகின்றார்கள் என்பதையும் பதிவு செய்கின்றன. சோளகம் எப்போதும் போலத்தான் வீசுகின்றது. ஆனால் அது மகிழ்ச்சியிற்கும் துயரத்திற்குமான படிமங்களாக இரவியின் கதைகளில் மாறி மாறி வருகின்றது. இத்தொகுப்பிலுள்ள பதினெட்டுக் கதைகளும் ஒரு காலத்தின் பதிவுகள் எனலாம். ஆனால் எல்லாக் கதைகளிலும் சொல்ல முடியா ஒரு துயரம் உறைந்து போய்க் கிடக்கிறது. தகப்பனை இழந்த சிறுவர்கள், புலம்பெயர்ந்து போகும் நண்பர்களுக்கு விடைகொடுக்கும் மனிதர்கள், வெளிநாட்டில் ஒழுங்காய் ஒரு வாழ்வு கிடைக்காது உழல்கின்ற அகதிகள், மொழி பரிட்சயமற்ற தேசத்தில் உடல் உழைப்பைச் சுரண்டுகின்ற சொந்த இனத்தையே சேர்ந்த மனிதர்கள், அனைவருடனும் இனிமையாகவும், மனிதாபிமானத்துடனும் இருக்கும் வேற்றினத்து ஒருவரின் தற்கொலைச் சாவு என பற்பல மனிதர்களிடையும் பல்வேறு பின்புலங்களிலும், பல்வேறு உணர்வுத் தளங்களினூடும்  'பாலைகள் நூறு' தொகுப்புக் கதைகள் நகர்கின்றன.

'மகிந்தாவின் சாவு' என்கின்ற கதை என்னளவில் முக்கியமான ஒரு கதை. கதைசொல்லியான தமிழர் தன் குடும்பத்தினரோடு கொழும்பின் ஒதுக்குப்புறத்திலிருக்கும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார். அந்த வீடு மகிந்தா என்கின்ற சிங்களவருக்கு உரியது. போர் நடந்துகொண்டிருக்கும் காலம். டென்சில் கொப்பேகடுவ கண்ணிவெடியில் மாண்ட காலத்தில், சிங்களவர் பெரும்பான்மையினராக அயலில் இருக்க, ஒரு குழு கோபத்தில் கதைசொல்லியின் வீட்டைக் கற்களால் தாக்குகின்றது. ஆனால் இவை எதற்கும் அஞ்சாது மகிந்தா தமிழ்க் குடும்பத்தினரைக் காப்பாற்றுகின்றார். கல்லெறியும் கும்பலை இழுத்து அடித்து, 'உனக்கு புலியை அடிக்கவேண்டும் என்றால் யாழ்ப்பாணத்துப் போய் சண்டைபிடி, இப்படி அப்பாவிக் குடும்பங்களைத் தாக்காதே' எனச் சொல்கிறார். இது போல பிரேமதாசா இறந்த காலத்திலும், கொழும்பில் தமிழர்கள் வெளியே வர அஞ்சிய நேரத்தில், மகிந்தா கயிற்றுக் கட்டிலை கதைசொல்லியின் வீட்டின் முன் போட்டு படுத்துக்கொண்டு எவரும் அவர்களைத் தாக்க விடாது பாதுகாப்பளிக்கிறார். மகிந்தாவின் மனிதாபிமானத்தால் அயலவர்கள் பலரும் இத்தமிழ்க் குடும்பத்திற்கு நண்பர்களாகின்றார்கள். ஆனால் ஒருநாள் மகிந்தா தற்கொலை செய்துகொள்கின்றார். மகிந்தாவின் மரணத்தின் பின் அயலவர்கள் மெல்ல மெல்ல இனம் சார்ந்த வன்மத்தைக் காட்டத் தொடங்க, இனி இவ்விடத்தில் வசிக்கமுடியாதென தமிழரான கதைசொல்லி வேறிடம் நோக்கி நகர்வதோடு கதை முடிகின்றது. மகிந்தாவைப் போன்றவர்கள் இக்கதையில் வருவது போல மட்டுமின்றி, 83 ஜூலைக் கலவரங்களிலும் பல தமிழர்களைக் காப்பாற்றியிருக்கின்றார்கள். மேலும் இயலாமையோடு சக மனிதர்கள் ஒடுக்கப்படுவதைப் பார்தது வருந்தியுமிருக்கின்றார்கள். இந்தக் கதை, சிங்களவர்களை ஒற்றைப் படையாக புரிந்துகொண்டு ஒரு ஜாடிக்குள் போட்டு எல்லோரையும் குலுக்க முடியாது என்பதற்கு  நல்லதொரு உதாரணம்.

யாழ்ப்பாணத்தவர்கள் அநேகருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களை வேலை நிமித்தம் வன்னிக்கோ, கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது மலையகத்திற்கோ அனுப்பிவிட்டால் ஏதோ அந்த இடங்களில் தம் வாழ்வு பறிபோயிற்று என்கின்றமாதிரியான மனோபாவம் அவர்களில் அநேகருக்கு வருவதுண்டு. இத்தொகுப்பில் இரண்டு கதைகள் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஒரு கதையில் கதைசொல்லிக்கு கிளிநொச்சியில் ஆசிரியர் வேலை கிடைக்கிறது. முதலில் கிளிநொச்சிக்குப் போவதா வேண்டாமா எனக் கதைசொல்லி குழம்பினாலும், நாட்போக்கில் கிளிநொச்சியில் ஆசிரியராகப் பணிபுரிதல் பிடித்துப் போகிறது. குளிப்பதற்கு நீரோடைகளும், சுற்றித் திரிவதற்குக் காடுகளும், பாடங் கேட்கின்ற கள்ளமில்லா பிள்ளைகளும் கதைசொல்லியின் மனதை நிரப்பிக் கொள்கின்றனர். ஆனால் அந்த அழகான வாழ்வு நெடுங்காலம் நீடிக்கவில்லை. பொம்மரடிக்கிறது. செல்கள் சீறியபடி விழுந்து வெடிக்கின்றன, இயல்புநிலை பாதிக்கப்படுகிறது. பொம்மரடியில் ஒரு காலை இழந்த பள்ளிச் சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது, அந்தச் சிறுவன், 'நான் இறந்துவிடுவேனா சேர்' என்கிறான். கூட இருந்த இன்னொரு ஆசிரியர் உடைந்துபோய் அழத் தொடங்குகின்றார். எதற்காய்ப் பலியிடப்படுகின்றோம் என்று அறியாமலே பலிவாங்கப்படும் வாழ்வுதான் எத்தகை கொடுமையானது. அந்தக் கால் இழந்த சிறுவனிடமிருந்து எழும் படிமத்தை விலத்தி நாம் எளிதாய்க் கடந்து போய்விடமுடியாது. அது நம் மனச்சாட்சிகளின் கதவை -போர் குறித்து பேசும் ஒவ்வொரு உரையாடல்களிலும்- ஓங்கி அறைந்தபடிதான் இருக்குமல்லவா?

நம் சமூகத்தில் ஆசிரியர்களை உயர்வான இடத்தில் வைத்திருக்கின்றோம். ஆனால் எல்லா ஆசிரியர்களும் அதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கின்றார்களா? அப்படி இல்லை என்ச் சொல்கின்ற கதைதான் 'குதிரை முடக்கு'. இக்கதையில் வரும் கதைசொல்லி ஓ/எல் பரீட்சையில் முதலிருமுறை தோற்று, மூன்றாவது முறை நல்ல பெறுபேறுகளுடன் சித்தியடைந்து உயர்கல்வி கற்கப் பாடசாலைக்கு வருகின்றார். ஆனால் இவரைப் போன்றவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவர்கள் 'குதிரை ஓடி' பாஸானாவர்கள் என்கின்ற சித்திரத்தோடே அவர்களுக்குக் கற்பிக்கின்றார்கள். தொடர்ந்து வார்த்தைகளால் அம்மாணவர்களை வாதை செய்கின்றார்கள். ஒருநாள் பொறுமை எல்லை மீறிப்போய் ஆசிரியரைக் கதிரையால் தூக்கியடிக்கின்ற நிலைக்கு கதை சொல்லி போய்விடுகின்றார்.

ஆசிரியர்கள் எவ்வளவு கொடுமையானவர்களாய் இருந்தாலும் அவர்களை மதிக்கத்தான் நம் சமூகம் தொடர்ந்து வலியுறுத்துக்கின்றது, எவ்வளவு கொடுமைக்காரனாய் கணவன் இருந்தாலும் நீ பணிந்துதான போகவேண்டும் என மனைவிக்கு அறிவுரை கூறும் சமூகத்தைப் போல.  சில ஆசிரியர்கள் பல மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்து சரியான திசையைக் காட்டியிருக்கின்றார்கள். வேறு சில ஆசிரியர்கள் இந்தக் கதையில் வரும் ஆசிரியர்களைப் போன்று மாணவர்களின் வாழ்க்கையைப் பாழடித்துமிருக்கின்றார்கள், இக்கதையில் கதைசொல்லி குறிப்பிடுகின்ற துரையப்பா பிள்ளை மண்டபமும், வயலிலிருந்து சோளகம் வீசும் வகுப்பறைகளும் கொண்ட பாடசாலையிலேயே நானும் ஒருகாலத்தில் படித்திருக்கின்றேன். ஆனால் எனக்கு இதைப் போன்ற சம்பவம் நடந்தபோது பாடசாலை இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. எங்களுக்கு ஒரு ஆசிரியர் வாய்த்திருந்தார். அவருக்கு எப்போது கோபம் வரும் எதற்காய்க் கோபம் வரும் என்பதை ஒருபோதும் கணித்துவிடமுடியாது. தினமும் யாரோ ஒரு மாணவரின் கொப்பி வகுப்பறையைத் தாண்டிப் பறக்கும். எல்லாப் பக்கமும் திறந்த ஓலைக்கொட்டில் வகுப்பென்பதால் கொப்பி அன்றன்றைய காற்று வீச்சுக்கேற்ப வெவ்வேறு தூரங்களில் போய்க் கிடக்கும். பிறகு அந்த வகுப்பு முழுதும் தண்டிக்கப்பட்ட மாணவன் வெளியே நிற்கவேண்டும். தினமும் அவரது வகுப்புத் தொடங்குகிறதென்றால் எங்களுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிடும். இன்றைக்கு யார் அவர் கையில் மாட்டுப்படப்போகின்றோம் என்று நினைக்கவே நேரம் போய்விட எப்படி ஒழுங்காய்ப் பாடம் படிக்கமுடியும்?

'யாவும் கற்பனை' என்கின்ற கதை புலம்பெயர் தேசத்தில் நிகழும் கதை. கதைசொல்லி தன் பால்யகாலத்து நண்பனை நண்பனை நீண்டகாலத்திற்குப் பிறகு சந்திக்கின்றார். அந் நண்பரோ மதம்மாறி, அம்மதத்தின் நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவர். தம்மை மதத்தின் பெயரால் ஒடுக்குவது மட்டுமின்றி, உலகை இன்னுமே அறியாத தம் பிள்ளைகளையும் மதத்தின் பேரால் எதையும் இயல்பாய்ச் செய்யவிடாது அடக்கிவைத்திருக்கின்றார்கள். கதைசொல்லி, பிள்ளைகளையாவது அவர்கள்பாட்டில் விடு என  அவருடன் விவாதிக்கின்றார். ஒருமுறை ஒரு நிகழ்விற்குப் போகும்போது நண்பரின் மதத்தைச் சேர்ந்த ஒருவர், தன் பழைய இயக்கக் கதையைச் சொல்கிறார். அதாவது அவர் ஒரு இயக்கத்தில் இருந்தபோது, இன்னொரு இயக்கத்தில் இருந்தவரை பிடித்து வந்திருக்கின்றார். பிறகு பிடித்துவந்தவரையே பங்கர் வெட்டச் சொல்லிவிட்டு, அதற்குள்ளேயே அவரைச் சுட்டுவிட்டு அங்கேயே தாட்டுமிருக்கின்றார்.  இக்கதையைச் சொல்கிறவர், தான் இது நடந்தபோது இப்படிச் செய்ததற்காய் வருந்தவில்லை. பிறகுதான் மிக வருந்தினேன். ஆனால் இப்போது இந்த மதத்தில் சேர்ந்ததால் எனது எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன என்கிறார். இதைக் கதைசொல்லியால் தாங்கமுடியவில்லை. அவ்வளவு எளிதாக இச்சம்பவத்தைக் கடந்து போய்விடமுடியுமா என மனங்குமுறுகிறார். ஒரு பக்கத்தில் கதைசொல்லியின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளதென்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இன்று முன்னொருகாலத்தில் ஏதோவொரு இயக்கத்தில் இருந்தவர்கள் அவரவர் செய்த தவறுகளைத் தாண்டிச் சென்று, தொடர்ந்து வாழ ஏதோ ஒன்று பிடிமானமாக வேண்டி இருக்கின்றது. ஒரு சிலர் தம் தவறுகளுக்காய் குடித்துக் குடித்து அழிந்துமிருக்கின்றார்கள். சிலர் தம் தவறுகளை வெளியே கூறினால் சமூகம் எப்படித் தங்களை எடுத்துக்கொள்ளும் எனத் தெரியாது, தம் தவறுகளைத் தங்களுக்குள்ளேயே பூட்டி மறுகிக்கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவும் செய்கின்றார்கள். ஆக இந்தக்கதையில் வரும் ஒருவர் இன்னொரு மதத்திற்கு மாறி தன் பாவங்களுக்கு ஏதோவொருவகையில் மன்னிப்பை வேண்டியிருக்கின்றார் என்பதை என்னால் எதிர்மறையாகப் பார்க்கமுடியாதிருக்கின்றது. இவ்வாறான மனிதர்கள் விலத்தி வைக்கவோ கேலி செய்யப்பட வேண்டியவர்களோ அல்ல,  அவர்கள் தம் தவறுகளை ஏற்றுக்கொள்கின்றபோது, புரிந்துகொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதே என் நிலைப்பாடாகும்.

2.
இரவி நல்லதொரு கதைசொல்லி.  இரவியை இரஞ்சகுமார், உமா வரதராஜனின் தொடர்ச்சியில் வைத்தே நான் பார்க்கின்றேன். அலுப்பான வாழ்வைக் கூட அற்புதமான மொழியால் அழகாக்கக் கூடியவர்கள் இவர்கள் மூவரும். வாசிக்கும் நமக்குப் பரிட்சமற்ற சூழலாயினும் தம் எழுத்து நடையால் நம்மை அந்தச் சூழலுக்குள் எளிதாக இழுத்துச் செல்லக் கூடியவர்கள்.  இவர்களுக்குப் பின்னால் எழுத வந்த தலைமுறை இவர்களிடமிருந்து சிலவற்றையாவது கற்றுக் கொண்டிருக்கவேண்டுமென இவர்களின் கதைகளை வாசிக்கும்போது நினைத்துக் கொள்வதுண்டு. முக்கியமாய் இறுதியில் ஒரு எதிர்பாராத அல்லது அதிர்ச்சியான முடிவைக் கொண்ட கதைகளை இவர்கள் அவ்வளவாக எழுதியவர்கள் அல்ல. இரண்டாவது, நகைச்சுவையும் எள்ளலும் கதைக்கேற்ற வகையில் சிறுபகுதியாக இருக்குமே தவிர முழுக்கதையுமே அவ்வாறான ஒரு நடையைக் கொண்டு எழுதியவர்களுமல்ல. முக்கியமாய் இன்றைய புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் அநேகர் சம்பவங்களினூடாக கதைகளை நகர்த்திச் செல்கின்றார்கள். அவ்வாறு சம்பவங்களுக்கு முக்கியத்தைக் கொடுக்கும்போது பின்னணிச் சூழலை மெருகூட்டவோ நிலவியலைச் செதுக்கவோ அதிகம் மினக்கெடுவதில்லை. ஆகவேதான் இன்றைய காலத்துப் பெரும்பான்மையான ஈழக்கதைகள் பாதிப்பை ஏற்படுத்தாது, ஒரு சம்பவமாய் மட்டும் வாசிக்கும் அனுபவத்தைத் தருகின்றதாய் அமைந்துவிடுகின்றன.

இரவி தன் முன்னுரையில் இத்தொகுப்பிலுள்ள மூன்று கதைகளைப் பற்றிய பின்னணியைத் தருகின்றார். ஒரு கதை கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவனால் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்டு தன்னால் செம்மைப்படுத்தப்பட்ட கதை என்றும், இன்னொரு கதை ஒரு பெண் நண்பர் தன் கொப்பியில் எழுதித் தந்ததை தான் கதையாக மாற்றினேன் எனவும் எழுதுகிறார். இவ்வாறு எழுதப்பட்ட குறிப்புக்களின் நேர்மைக்காய் இரவியை நாம் முதலில் மதித்தாகத்தான் வேண்டும். ஆனால் இதை இரவி தனது கதைகளாய்ச் சொந்தம் கொண்டாடுவதையும் அதை அரங்கியல்படி நியாயப்படுத்துவதையும் தான் ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதை இங்கே மனவருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.  கதைகளின் தரம் எவ்வாறு இருப்பினும் அதை மாற்றி எழுதியவுடன் அக்கதைகள் இரவிக்கு ஒருபோதும் சொந்தமாக முடியாது. அது அவர்களின் (எழுதியவர்களின்) படைப்பே. நாம் அதை எந்த வகை வியாக்கியானத்தை முன் வைத்தும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது. இரவி நியாயம் கற்பிக்கின்ற அரங்கியலில் கூட நாடகத்திற்கேற்ப கதை மாற்றப்பட்டால் கூட, மூலக்கதை என எழுதியவருக்கே உரிமை கொடுத்து அவரையும் முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பதையும் நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.

மேலும் இக்கதைகளின் மூலம் தேடி நான் இக்கதைகள் பிரசுரிக்கப்பட்ட பழைய இதழ்களைத் தேடியபோது அங்கே கிடைத்த விடயங்களும் எனக்கு அவ்வளவு உவப்பானதல்ல. உதாரணமாக 'நாச்சியார் திருமொழி'  கதை பவானி என்கின்ற -இக்கதையை கொப்பியில் எழுதியவரின் பெயரிலேயே பதிவாகி- புதுசு (09) சஞ்சிகையில் வெளியாகி இருக்கின்றது. மேலும் அந்தக் கதையிற்கும் இத் தொகுப்பிலிருக்கும் கதையிற்கும் பிற்பகுதியில் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. இத்தொகுப்பில் இருக்கும் கதையின் இறுதியில், பாசமாயிருக்கும் தகப்பனே மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்று முடிந்திருக்கும். இப்படியான எந்தக் குறிப்பும் அசல் பிரதியில் இல்லை. ஆக, பிரசுரமான ஒரு கதையை திரும்பவும் -பல பகுதிகளை அப்படியே எடுத்துக் கொண்டு- இன்னொரு கதை எழுதபட்டிருக்கின்றது. இது மிகவும் மோசமானது. இரவி தனக்கு இப்படியான கருவில் எழுதவேண்டுமென நினைத்திருந்தால் புதிய கதையொன்றை எழுதியிருக்கலாம் அதைவிட்டு. ஏற்கனவே பவானி என்ற பெயரில் பிரசுரமான கதையில் கைவைத்தது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று 1985ம் ஆண்டு பத்தாவது இதழான புதுசுவில் வந்த ' பாலை நிலம்' கதைக்கும் இப்போது பிரசுரமான கதைக்கும் இடையில் மாற்றம் சில இருக்கின்றன. சில பகுதிகள் விலத்தி வைக்கபட்டிருக்கின்றது. முக்கியமாய் இந்தப் பகுதி... "அவர்களின் வீடு பறைமேளப் பின்னணியில் இருக்கும் போலப்பட்டது. அப்படி இருக்குமளவிற்கு எங்கள் போராட்டம் எவ்வளவு 'வலு'ப்படுத்தப்பட்டிருக்கிறது. போராடப் புறப்படுகின்றவர் ஒரு இறந்தவராகக் கருதப்படுமளவிற்கு, போராட்டம் எங்களுடையது என்று கொஞ்சம் கூட நினைக்காதவளவிற்கு, போராட என்று புறப்படுகின்றவரும் யாருக்கும் தெரியாமல் இரவில் இருளில் ஒரு துண்டு எழுதி வைத்துவிட்டு ஓருகின்ற அளவுக்கு, ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வாழ்கின்ற அளவிற்கு எப்படிக் கேவலமாகிப் போனோம்'  என இன்னும் நீளும் பகுதியில் புதிய 'பாலை'யில் இல்லை. இதையேன் விரிவாகக் குறிப்பிடுகின்றேன் என்றால் இது எமது ஆயுதப்போராட்டக் காலம் பற்றிய முக்கியமான ஒரு விமர்சனக் குறிப்பு. நமது போராட்டம் மக்களிடமிருந்து அந்நியமாகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கான சாட்சியம் இது.  இரவி இன்று வந்தடைந்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கு சிலவேளைகளில் இப்பகுதி உவப்பாய் இருக்காதென்றாலும் இவ்வாறு கடந்த காலத்து கதையைத் தணிக்கை செய்திருக்க வேண்டியதில்லை. எல்லோரும் காலத்தோடு மாறுதல் அடைதல் இயல்பே. அதற்காய் நாம் எப்படியிருந்தோம் என்கின்ற அடையாளங்களை மறைத்துத்தான் நம் மாற்றங்க்ளைக் காட்டவேண்டும் என்கின்ற அவசியம் இல்லைத்தானே. ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே இவ்வாறு தணிக்கைகளும், மறைப்புக்களும் நிகழும் என்றால், பிறகு நாம் கடந்த கால வரலாற்றை எல்லாம் அதிகாரத்திலிருப்பவர்கள் மாற்றிவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லாமற் போய்விடும்.

மேலும் 50 களுக்கு மேற்பட்ட கதைகளை இரவி எழுதியதாக தொகுப்பிற்கான குறிப்பில் கூறப்படுகின்றது. இத்தொகுப்பில் 18 கதைகள் மட்டுமே தொகுக்கபட்டிருக்கின்றன. ஆக இவ்வாறான ஒரு தொகுப்பில் மற்றவர்களின் (ஒரு மாணவன் மற்றும் பெண் தோழரின்) கதைகளைச் சேர்த்துத்தான் தொகுப்பை நிரப்பவேண்டிய அவசியமும் இரவி இருந்திருக்காது எனவே நம்புகிறேன்.அவ்வாறிருந்தும் பிறர் எழுதிய கதைகளைச் சேர்த்திருப்பதால், நல்லதொரு சிறுகதை ஆசிரியரான இரவி சற்று இடறி வீழ்ந்துபோன இடமாகவே இதனை நான் கணிக்கிறேன்.

இத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாலும் இத்தொகுப்பு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. இரவி என்கின்ற சிறுகதை ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள இத்தொகுப்பில் பல விடயங்கள் இருக்கின்றன. இத்தொகுப்பை வாசித்த பொழுதுகளில் கதைகள் நிகழும் சூழலுக்குள்ளே நானும் ஒரு கதாபாத்திரம் போல உணர்ந்திருக்கின்றேன்; இருந்திருக்கின்றேன். அவ்வாறு ஒரு வாசகரை உள்ளிழுப்பது அவ்வளவு எளிதல்ல. அமைதி நிறைந்த வளமான வாழ்வு எவ்வாறு பின்னாட்களில் ஈழத்தில் சூறையாடப்பட்டது என்பதற்கான ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை அறிவதற்காகவேனும் இத்தொகுப்பை நிச்சயமாக அனைவரும் வாசித்துப் பார்க்கவேண்டும்.

(இதன் சுருக்கிய வடிவம், ஒக்ரோபர் மாத 'அம்ருதா'வில் வெளிவந்தது)

ஆக்டோவியா பாஸின் சில கவிதைகள்

Friday, October 05, 2012


ஞானஸ்தானத்தின் விளைவுகள்

இளைய ஹசன்
ஒரு கிறிஸ்தவரை மணப்பதற்காய்
ஞானஸ்தானம் பெற்றான்.
அவன் ஒரு கடலோடியாய் இருந்தபோதும்,
மதகுரு
எரிக் என அவனிற்குப் பெயரிட்டார்.
இப்போது
அவனுக்கு இரண்டு பெயர்கள்
மனைவி மட்டும் ஒருவர்

Results of Baptism

Young Hassan
In order to marry a Chiristian
Got baptizied.
As though he were a Viking,
The Priest
Named him Eric,
Now
He has two names
And only one wife.


நீரின் திறப்பு

ரிஷிகேஷியிற்குப் பிறகு
கங்கை இன்னும் பச்சையாக இருக்கிறது
கண்ணாடித் தொடுவானம்
மலையுச்சிகளைப் பிரிக்கிறது
பளிங்குகளின் மேல் நாம் நடக்கிறோம்.
மேலும் கீழுமாய்
நிசப்தத்தின் மிகப் பெரும் வெளி.
நீல ஆகாயத்தில்
வெள்ளைக் கற்களில், கரு மேகங்களில்
நீ சொன்னாய்:
        எல்லா வளங்களுமுள்ள நாடு.
அன்றைய இரவு என் கரங்கள் நகர்ந்தன
உன் முலைகளில்.

The Key of Water

After Rishikesh
the Ganges is still green.
The glass horrizon
breaks am\ong the peaks.
We walk upon crystals.
Above and Below
great gulfs of calm.
in the blue spaces
white rocks, black clouds.
You said:
Le pays est plein de sources.
That night I laved my hands in your breasts.


இளமை

அலையின் பாய்ச்சல்
வெண்மையாய்
ஒவ்வொரு மணியும்
பசுமையாய்
ஒவ்வொரு நாளும்
இளமையாய்
மரணம்.


Youth

The leap of the wave
Whiter
Each hour
Greener
Each day
Younger
Death


தூரத்து அயலவர்

நேற்றைய இரவு
ஒரு ஆஷ் மரம்
(எதையோ) சொல்ல இருந்தது –
ஆனால் சொல்லவில்லை

Distant Neighbour

Last night an ash-tree
Was about to say -
But it didn't


விடியல்

காற்றின் கரங்களும் உதடுகளும்
நீரின் இதயம்
ஓர் இயுகலீப்டஸ்
முகில்களின் கூடாரங்கள்
ஒவ்வொரு நாளிலும் பிறக்கும் வாழ்வு
ஒவ்வொரு வாழ்விலும் பிறக்கும் இறப்பு

நானெனது விழிகளைத் தேய்க்கின்றேன்:
ஆகாயமிறங்கி நிலத்தில் நடக்கிறது.

Daybreak

Hands and lips of the wind
Heart of the water
A eucalyptus
Campground of the clouds
The life that is born every day
The death that is born every life

I rub my eyes:
The sky walks the land

 (Original poems : Octavio Paz-Selected Poems: A bilingual edition edited by Charles Tomlinson)
நன்றி: ஜீவநதி (கனடாச் சிறப்பிதழ்)

நினைவுகளில் வாழ்பவர்கள்

Thursday, September 20, 2012



1.
அண்மையில் ஈழம் சென்றிருந்தேன். அக்கா குடும்பத்துடன் கொழும்பில் நீண்டகாலமாய் வசித்து வருகிறார். பயணத்தின் ஒருபகுதியாக ஊருக்குச் சென்று பார்ப்பதாய்த் திட்டம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக எவருமே வசிக்க அனுமதிக்கப்படாத இடம் எங்கள் ஊர். 1990களின் தொடக்கத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலினால் இடம்பெயரத் தொடங்கி, பிறகு யாழ்ப்பாணத்திலேயே பல்வேறு இடங்களுக்குள் அகதிகாய் அலைந்து இறுதியாய் கனடாவிற்கு வந்திறங்கிய வாழ்வு என்னுடையது. இப்போது ஊரைச் சற்று உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கி, சென்று பார்க்க விடுகிறார்கள் என்பதால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்திருந்தோம். ஊர் இன்றும், எவரும் தீண்டுவாரின்றி மரங்கொடிகளும் பற்றைகளும் போர்த்திக் கிடந்தன. வீடுகளும் கூரைகள் எதுவுமின்றி முன்னோர் காலத்தில் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற ஓர் அடையாளம் என்றளவில் மட்டுமே எஞ்சியிருந்தன. பலரின் வீட்டின் அறைகளில், ஹோல்களில் நடுவேயே மரங்கள் முளைத்துவிட்டிருந்தன. 20 வருடங்கள் என்பது அவ்வளவு கொஞ்சக் காலம் அல்லவே தானே.

ஊரினதும் வீட்டினதும் புகைப்படங்களைப் முகநூலில் பகிர்ந்தபோது ஒரு நண்பர் கேட்டிருந்தார், அங்கே போய் வீட்டைப் பார்த்தபோது என்ன உணர்வு தோன்றியதென்று.  உண்மையிலேயே அங்கு ஒருகாலத்தில் எனக்கிருந்த வாழ்வையும், ஊரவர்களையும் போரின் நிமித்தத்தால் இழந்துவிட்டிருந்தேன் என்பதில் சற்றுக் கவலைதான். ஆனால் இதைவிட எத்தனையோ கொடுமைகளையும், என்றுமே அழிக்கமுடியா பெரும் வடுக்களையும் பின்னாளில் ஈழத்திலிருந்த மக்களுக்குப் போர் கொடுத்திருக்கிறது என எண்ணும்போது  ஊரும் வீடும் பிரிந்த எனது துயரம் பெரிதேயல்ல எனத்தான் நினைக்கிறேன்.

வீட்டைப் பார்த்துவிட்டு, யாழில் நின்ற சில நாட்களில் வெவ்வேறு இடங்களில் தெறித்து வாழும் ஊரவர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் சென்றிருந்தோம். நம் உரையாடல்களின் வழி இழந்தபோன வாழ்வை மீட்டபடியிருந்தோம். சிலபேர் 95 யாழ் முற்றுகையின்பின் வன்னிக்குள் சென்று வாழ்ந்தவர்கள். அண்மைய பேரழிவில், தம் நெருங்கிய உறவுகளைப் பறிகொடுத்தவர்களும் அவர்களில் அடக்கம். துக்கம் விசாரிக்கவேண்டும் என்று மனம் அவாவினாலும், அவர்களிடம் போய் உங்கள் மகன் எப்படி இறந்தார் என்றோ அல்லது உங்கள் துணைவர் எப்படி இறந்தார் என்றோ கேட்பது மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதால், அநேகமாய் வேறு விடயங்களையே கதைத்துக் கொண்டிருந்தோம். இழப்பும் வறுமையும் அவர்களைச் சூழ்ந்திருப்பதைக் கண்டபோது சோர்வாகவே இருந்தது. ஒரு காலத்தில் ஒன்றாய் எங்களுடன் சேர்ந்து விளையாடியவர்கள், ஒழுங்கைகளில் வெயில் குடித்து அலைந்தவர்கள், பசித்தபோது சாப்பாடும் மோரும் தந்தவர்களென... அவர்களை இன்று வேறொரு நிலைமையில் பார்க்கும்போது மிகவும் அந்தரமாகவே உணர்ந்தேன்.. இந்தப் பயணத்தின்போது என்னத்தைக் காவிக்கொண்டு மீளவந்தேன் என்று யோசிக்கும்போது, இத்தகைய சூழலுக்குள்ளும் வாழத்துடிக்கும் அவர்களின் மிகப்பெரும் நம்பிக்கையைத்தான் எனத்தான் கூறுவேன்.

2.
இலக்கியம் சார்ந்தியங்கும் சில நண்பர்களையும் இந்தப் பயணத்தில் சந்திக்க முடிந்தது என்னளவில் முக்கியமாய் இருந்தது. உமா வரதராஜன், நிலாந்தன், ச.இராகவன், துவாரகன், யோ.கர்ணன், அஜந்தகுமார், உதயகுமார் போன்ற சில நண்பர்களைக் குறுகிய பொழுதில் சந்திக்க முடிந்திருந்தது. இன்னும் அ.யேசுராசா, கருணாகரன், றியாஸ் குரானா, தீபச்செல்வன் போன்றவர்களைச் சந்திக்க விரும்பியும் நேரம் இடம் கொடுக்காது போனதில் சந்திக்காதது சற்றுக் கவலைதான். இந்த நண்பர்களையும், இன்னும் பலரையும் சந்தித்ததில் ஈழத்திலிருந்து ஒலிக்கும் பன்மைக்குரல்களை கேட்க முடிந்திருந்தது. எவ்வாறு புலம்பெயர் தேசங்களில் அரசியல் சார்ந்து பல்வேறு குரல்கள் இருக்கின்றனவோ, அவ்வாறே பல்வேறு குரல்கள் ஈழத்திலும் இருக்கின்றன என்பது நான் அவதானித்த ஒரு விடயம், ஆகவே எவரும் முழுமையாக எவரையும் அடையாளப்படுத்திவிடமுடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஆக, அவரவர் அவரவர்க்கான குரலில் பேச விழைகிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டு அக்குரல்களை அணுகவேண்டும் எனத்தான் நினைக்கிறேன். முக்கியமாய் கிழக்கு மாகாணத்தில் நான் நினைத்துக்கொண்டு இருந்ததற்கு மாறாக, புலம்பெயர் தேசத்தில் முன்வைக்கப்படும் குரல்களுக்கு மாற்றாக வேறு குரல்களையும் கேட்டதில் என்னளவில் ஒரு சிறு அதிர்ச்சி எனத்தான் கூறவேண்டும்.

ஈழத்தில் பல்வேறுமுனைகளிலிருந்தும் பல்வேறு சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் பலர் தமது படைப்புக்களை நூலாக்கிக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்றபோது பெருமளவில் அபுனைவுத் தொகுப்புக்கள் ஈழத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. பல நண்பர்கள் தத்தம் பிரதேசங்களில் தமக்குரிய வளங்களுடன் இலக்கியக் கலந்துரையாடல்களையும், புத்தக வெளியீட்டுக்களையும் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் ஒரு பொது நிகழ்வு அது புத்தக வெளியீட்டாய் இருந்தாலானென்ன, கலந்துரையாடலாய் இருந்தாலென்ன இராணுவத்திடம் அனுமதி பெற்றே நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை இருக்கின்றதென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஈழத்து அரசியல் நிலைமை பேசுபவர்கள், ஈழத்தில் இயல்புநிலை திரும்பவேண்டுமென விரும்புபவர்கள் மற்றும் புலம்பெயர் தேசத்திலிருந்து எடுத்துக்கொண்டு இலக்கியக் கூட்டங்களை ஈழத்தில் நடத்த விரும்புபவர்கள்... இவ்வாறான தடைகளைப் பற்றியும் உரத்துப் பேசவேண்டும். அண்மையில் ஒரு நண்பர் இலக்கியக்கூட்டம் நடத்திமுடிக்க, இராணுவம் அவரை விசாரிக்க வீடு தேடிப் போயிருக்கிறதென்பது அங்குள்ள யதார்த்தமாய் இருக்கிறது.

3.
உமா வரதராஜனின் எழுத்துக்களை அவரது 'உள்மனயாத்திரை' தொகுப்பு வாசித்ததிலிருந்து மிகவும் பிடிக்கும். அண்மையில் அவரது எல்லாச் சிறுகதைகளையும் தொகுத்து 'உமா வரதராஜன் கதைகள்' என வெளியிட்டிருக்கின்றார்கள். 'மூன்றாம் சிலுவை' என்றொரு நாவலையும் எழுதி கடும் விமர்சனங்களையும் அவர் சந்திருக்கின்றவர். உமா எந்த நாவலையும் எப்படியும் எழுதுவதில் எனக்குக் கேள்விகளில்லை. ஆனால் 'உள்மனயாத்திரை' எழுதிய உமாவிடமிருந்து அவரின் நாவலில் வேறெதையோ எதிர்பார்த்தேன். அது 'மூன்றாம் சிலுவை'யில் கிடைக்கவில்லை என்பது ஒரு வாசகராக என்னளவில் ஏமாற்றமாய் இருந்தது..

ச.ராகவன் என்னை பொறுத்தவரை ஈழத்தில் இப்போதிருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். அவருடன் பேசிக்கொண்டிருப்பதே மிகவும் சுவாரசியமான விடயம். சிறுகதைகளைப் பற்றி, எங்களின் முன்னோடி எழுத்தாளர்களை மற்றும் சமகாலப் படைப்பாளிகளைப் பற்றியெனப் பலதும் பத்துமாய்க் கதைத்துக்கொண்டிருந்தோம். ஈழத்தின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து ஏன் இலத்தீன் அமெரிக்கக் கதைகளைப் போல -தொன்மமும் படிமங்களும் நிறைந்த கட்டிறுக்கமான- மாய யதார்த்தக் கதைகள் வெளிவரவில்லை என்பதைப் பற்றி  நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. அவ்வாறான முயற்சியில் ஈடுபடும் எழுத்தாளர்களாக,  ஈழத்தில் திசேராவையும் இராகவனையும் முன்னர் கவனப்படுத்தி ஒரு கட்டுரையில் எழுதியுமிருக்கின்றேன். ஆனால் சிலவேளைகளில் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைகள் எழுதியும் இராகவன் சிக்கலில் மாட்டுவதுண்டு. அண்மையில் கூட அப்படியொரு கதை இந்தியச் சஞ்சிகையில் எழுதி சர்ச்சைக்குள்ளானதாய்க் கேள்விப்பட்டேன். 'விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு' என்ற அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு சென்ற வருடம் வெளிவந்திருக்கின்றது.

துவாரகன் என்கின்ற குணேஸ்வரன் ஒரு கவிஞராக இருப்பதுடன் நிறைய அபுனைவுக் கட்டுரைகளை எழுதிவருகின்றார். முக்கியமாய்ப் புலம்பெயர் படைப்புலகம் குறித்து நிறையத் தகவல்களைச் சேகரித்து விரிவாக எழுதி வரும் ஒருவர். புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்து அவர் எழுதிய 'அலைவும் உலைவும்' கட்டுரைகளின் தொகுப்பு ஒரு முக்கிய தொகுப்பு. இந்த வருடமும் 'புனைவும் புதிதும்' என ஏற்கனவே எழுதிய ஆய்வுக்கட்டுரைளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார். யோ. கர்ணன் அண்மையில் கவனம் பெற்றுவருகின்ற ஒரு சிறுகதைப் படைப்பாளி. 'தேவதைகளின் தீட்டுத்துணி' என்கின்ற முதலாவது தொகுப்பிற்குப் பிறகு இப்போது 'சேகுவரா இருந்த வீடு' என்கின்ற இரண்டாவது தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார். ஈழப்போராட்டம் மீதான பல்வேறுபக்க பார்வைகளை - முக்கியமாய் இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை- கர்ணனின் எழுத்துக்களினூடாக நாம் வாசித்தறிய முடியும்.

3.
ஊரிலிருந்தபோது எனக்கு மாவிட்டபுரமும் கீரிமலையும் நெருக்கமான கோயில்களாக இருந்தன.  வேறு பல கோயில்கள் அருகிலிருந்தாலும் ஏனோ இவற்றுக்கு நிறையத் தடவைகள் போயிருந்தேன். கீரிமலைக்கு அருகிலேயே அம்மா பிறந்து வளர்ந்த ஊரும் இருந்தது. அங்கே போய்ப் பார்த்தபோது அதன் நடுவில் இராணுவத்தின் 'பண்ட்' போயிருந்ததன் அடையாளம் தெரிந்தது. குடிக்கும் நீருள்ள கிணற்றின் உள்ளே, இடைநடுவில் இருந்து அரசமரம் ஒன்று பெரிதாக வளரத் தொடங்கியிருந்தது. சும்மாவே அரசமரமில்லாத இடங்களிலேயே இரவிரவாக புத்தர் சிலைகள் முளைக்கும்போது, துலக்கமான அரசமரத்தைக் கண்டு புத்தர் இந்தக் கிணற்றடியில் வந்து சேராதிருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன். கீரிமலைக்கு அப்பாவோடு அடிக்கடி ஆடி அமாவாசைத் தினங்களில் சென்றிருக்கின்றேன். ஒருமுறை கீரிமலைக் கேணியில் தவறி வீழ்ந்துமிருக்கின்றேன். இப்போது கீரிமலையைப் பார்க்க முடியுமெனினும், அதனருகில் இருக்கும் இந்து சமுத்திரத்தில் முன்னரைப் போல கால் நனைக்க அனுமதியில்லை. மேலும் முன்னர் திருவடி நிழலாக இருந்த இடம் இப்போது 'ஜம்புகோளப் பட்டினமாய்' மாறியுமிருந்தது. மற்றது கீரிமலைக் கோயிலின் புராதனக் கோபுரம் இப்போது இல்லையெனச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

அப்படியே மாவிட்டபுரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை தூரத்தில் தெரிந்தது. எங்கள் மாமா அங்கேதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் எனக்கு நினைவு தெரிந்தமுதல் சீமெந்துத் தொழிற்சாலை இயங்கியதற்கான எந்தத் தடயங்களுமில்லை. இப்போதும் அப்படியே இருக்கிறது. ஆனால் தோண்டிக்கொண்டிருக்கும் முருகைப்பாறைகளின் வேலை மட்டும் இன்னும் முடியாது -யார் யாரோ எல்லாம் மண்ணைக் கிளறிக்கொண்டிருக்கின்றார்கள்- எனக் கேள்விப்பட்டேன். அது 'யார் யாரோவாக' இருந்தாலும் ஒரு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காலடி வைப்பவர்கள் நாம் யாரென்பதை ஊகித்தும் அறிந்து கொள்ளலாம்.

மாவிட்டபுரம் கந்தசாமிக் கோயிலின் கொடிக்கம்பத்தைக் காணவில்லை. தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள் என்றார்கள். அவ்வளவு பெரிய கொடிக்கம்பத்தைக் களவெடுத்துக் கொண்டுபோனவர்கள் எங்கே விற்றிருப்பார்கள் என யோசிக்கச் சற்றுத் திகைப்பாய்த்தானிருந்தது. மாவிட்டபுரமும் அழிவின் இடிபாடுகளுக்கிடையே இருக்கின்றது. மாவிட்டபுரத்தின் ஐந்து தேர்கள் பவனிவரும் தேர்த்திருவிழாவும், பிரமாண்டமான சப்பரத்த்திருவிழாவும் இன்னமும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது என ஞாபக அலைகளில் இருக்கின்றன. இன்று ஒரு சிறு தேரும், இன்னொரு தேர் கீழ்ப்பகுதியும் இருக்கக் கண்டேன். சப்பரம் இருந்தற்கான அடையாளத்தைக் காணவில்லை..

நான் படித்த பாடசாலையில், ஒவ்வொருமுறையும் மஞ்சத்திருவிழா அன்று மாவிளக்குப் போட மாவிட்டபுரம் கோயிலுக்குப் போவார்கள். சிறுவர்களாய் இருந்த நாங்களும் அந்தக் காலத்தில் உற்சாகமாய்ப் போவோம். மூத்த மாணவர்கள் சுதந்திரமாய் காதல் செய்யும் நாட்களாய் மாவிட்டபுரத் திருவிழா நாட்கள் இருந்ததை கச்சானையோ, கோன் ஜஸ்கிறிமையோ சுவைத்துக் கொண்டு பார்த்துமிருக்கின்றேன்.இந்நினைவுகளே சிலவருடங்களுக்கு எழுதிய ஒரு கவிதைக்கும் விதை போட்டிருந்தது.

மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரல்நீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
(2006)

ஆக நாமெல்லோரும் நினைவுகளில் அல்லவா வாழ்பவர்கள். அந்த நினைவை மீண்டும் யதார்த்த்தில் நிகழ்த்திப் பார்க்கும் எத்தனங்களும் -என்னைப் போல சிலரால்- இவ்வாறான பயணங்களின் மூலம் பரீட்சித்தும் பார்க்கப்படுகின்றன, ஆனால் அவை அநேகமான வேளைகளில் மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாய் துயரத்தை இன்னும் பெருக்கிவிடுவதாகவே அமைந்துவிடுகின்றன. ஆகவேதான் சிலவேளைகளில் நினைவுகளுக்குப் பதிலாக எழுத்தில் அடைக்கலம் புகவேண்டியும் இருக்கிறதோ என்னவோ.

--------------------------------
நன்றி: அம்ருதா (செப்/2012)

'அரசியல் இஸ்லாம்'

Friday, August 17, 2012


1.
யமுனா ராஜேந்திரனின் 'அரசியல் இஸ்லாம்'  என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாமோடு சம்பந்தப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் ஒரு தொகுப்பு எனலாம். பாலஸ்தீனப் பெருங்கவியான மஹ்முத் தர்வீஸிலிருந்து, ஈரானிய இயக்குநனரான அப்பாஸ் கியரோஸ்மியின் படங்களைப் பற்றி மட்டுமில்லாது,  ஃபூக்கோ, ழான் போத்ரிலார் போன்றோர் முஸ்லிம் நாடுகளின் மீது முன்வைத்த கருத்துக்களை இடையீடு செய்வதுவரை பல்வேறு தளங்களில் யமுனா எழுதியிருக்கின்றார். இன்றைய இஸ்லாம் பற்றி அறிய விரும்புகின்றவர்களுக்கு 'அரசியல் இஸ்லாம்' என்கின்ற நீண்ட கட்டுரை நல்லதொரு திறப்பெனலாம்.  இஸ்லாமிலிருக்கும் பன்மைக்குரல்களை தலிபானின் அடிப்படைவாதத்தால்  நாம் மூடி மறைக்க முடியாது என்பதற்காகவேனும் 'அரசியல் இஸ்லாமை'யும், 'சதாம் விட்டுச் செல்லும் மரபை' யும் வாசிக்க வேண்டும். அதேவேளை இஸ்லாமை முன்வைத்து ஒரு பகுதியாகப் பரவிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தை செப்ரெம்பர் பதினொன்றையும், இலண்டன் சுரங்கப் பாதையில் நடந்த குண்டுவெடிப்புக்களையும் முன்வைத்து விரிவாக யமுனா எழுதுகின்றார். அது மட்டுமின்றி ஈரானியப் புரட்சி 60களில் நிகழ்ந்தபோது ஃபூக்கோ முன்மொழித்த கருத்துக்கள், எப்படி பின்வந்த ஈரானிய அடிப்படைவாத அரசினால் நிராகரிக்கப்பட்டு ஈரானியப் பெண்ணியல்வாதிகளும், இடதுசாரிகளும் துடைத்தழிக்கப்பட்டார்கள் என்பதையும் இத்தொகுப்புக் கவனப்படுத்துகின்றது. 

'அழிவின் பின்பான பயணம்' என்கின்ற இலண்டன் சுரங்கப்பாதைக் குண்டுவெடிப்புக்குப் பிறகு யமுனா தான் பயணிக்கும் இலண்டன் சுரங்கப்பாதையினூடாக பயணித்து எழுதுகின்ற கட்டுரை வாசிப்பவருக்கு நெருக்கத்தைத் தரக்கூடியது. இக்குண்டு வெடிப்பிற்கான காரணங்களை எல்லாத் திசைகளிலிருந்தும் அலசும் யமுனா, இறுதியில் 'இம்மாதிரி இளைஞர்களும், தாய்மார்களும் நான் வாழும் இலண்டன் புறநகரில் மட்டுமல்ல பாக்தாத், பலூஜா பேருந்துகளிலும் மேட்ரிட்டிலும் நியூயோர்க் சுரங்க இரயில்களிலும் பயணம் செய்தபடிதான் இருப்பார்கள். நமது கண் முன்பே அவர்கள் மரணமுறுகிறபோது நமது மனம் சுக்கல் சுக்கலாகித்தான் போகிறது' என முடிக்கும்போது நாமிருக்கும் இடத்தின் அமைதிக்காய் மட்டுமில்லை உலகின் பதற்றமிருக்கும் எல்லா நாடுகளிலிருக்கும் மக்களைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என்கின்ற புரிதலுக்கு வந்திருப்போம். 

கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரம் எதுவாக இருக்கும் என்பதை ஒரு அடிப்படைவாதியான தியோ வான்கோ, ஒரு முஸ்லிம் இனத்தவரால் ஹொலண்டில் கொல்லப்பட்டதை முன்வைத்து 'வின்செண்ட் வான்கோவின் இரத்தம்'  என்கிற கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. இஸ்லாமில் பெண்கள் பணிந்துபோதல் பற்றி எடுக்கப்பட்ட குறும்படமான Submissionற்காய் தியோ ஒரு முஸ்லிம் அடிப்படைவாதியால் கொல்லப்படுகின்றார். பெண் ஒடுக்குமுறை குறித்து உரத்துப் பேசப்படவேண்டும் என்பதில் மறுபேச்சில்லை என்றாலும், பெண்களை ஒடுக்குதல் முஸ்லிம் சமுகத்தில் மட்டுமா இருக்கின்றதா ஏனைய மத/இன மக்களிடையே இல்லையா என யமுனா எழுப்புகின்ற கேள்வியும் முக்கியமானது. இக்கட்டுரையில் சீக்கிய சமூகத்தின் வழிபாட்டிடமான குருத்துவாராவில் பாலியல் பலாத்காரமும் கொலைகளும் நடைபெறுகின்றன எனச் சித்தரித்து இலண்டனில் அரங்கேற்றப்பட்ட Dishonourஐ  நிகழ்த்தவிடாது எப்படி சீக்கியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதையும் நாம் கவனித்தாகவேண்டும்.  இறுதியில் அந்நாடகத்தை அரங்கேற்றாது விலத்திக்கொள்வதாக அந்நாடகாசிரியர் தெரிவித்துமிருக்கின்றார். 

இத்தொகுப்பில் யமுனா குறிப்பிடாவிட்டாலும் இதே பிரச்சினைதான் தீபா மேத்தா வர்ணாசியில் 'வோட்டர்' படத்தை எடுத்தபோது இந்து அடிப்படைவாதக் கும்பல் படத்தை எடுக்கவிடாது தடுத்துமிருந்தது. ஆக, முஸ்லிம் மதமென்றில்லை, எல்லா மதங்களும் தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி வன்முறையைத்தான் கையாள்கின்றது என்பதை நாம் கவனித்தாக வேண்டும். மேலும் பல்வேறு உதாரணங்களைக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரை இஸ்லாம் பற்றிய வெறுப்புணர்வில் இருப்பவர்களை சற்றுத் தம் கோணங்களை மீறிச் சிந்திக்க வைக்கும் என்றே நினைக்கின்றேன். அதேபோன்று அடிப்படைவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்கின்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டியவர்களாகின்றோம். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை எவ்வாறு தீர்வாக அமையாதோ அவ்வாறே ஒரு அடிப்படைவாததிற்கு இன்னொரு அடிப்படைவாதத்தால் நாம் தீர்வுகளைக் கண்டுவிடமுடியாது. இங்கே ஒருவர் முஸ்லிம் எதிர்ப்பைச் செய்து ஒரு அடிப்படைவாதியாக இருக்க, அவரைக் கொலை செய்கின்ற மற்றொருவரும் இன்னொரு அடிப்படைவாதியாக இருக்கின்றார்; இறுதியில் இருவரின் வாழ்க்கையும் பறிபோய்விடுகின்றன என்பதுதான் பரிதாபம். இக்கட்டுரைக்கு 'வின்செண்ட் வான்கோவின் இரத்தம்' என யமுனா தலைப்பிடுவதுதான் சற்றுக் குழப்பமாக இருக்கின்றது. கொல்லப்பட்ட அடிப்படைவாதியான தியோ வான்கோ, வின்செண்ட் வான்கோவிற்கு ஏதோ ஒருவகையில் உறவுக்காரராக இருக்கின்றாரே தவிர, இருவருக்கும் சிந்தனை அடிப்படையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றது; இவ்விருவரையும் புதிதாய் அறிகின்ற ஒரு புதிய வாசகருக்கு ஓவியரான வின்செண்ட் வான்கோ பற்றிய தவறான புரிதலை இதுதரக்கூடும்; தலைப்பை மாற்றியிருக்கலாம்.

 2.
ஃபூக்கோ பற்றியும் ழான் போத்திரிலார் பற்றியும் யமுனா எழுதிய கட்டுரைகள் சில புள்ளிகளில் முக்கியமானது என்றாலும் அவை ஏதோ முன்முடிவுகளோடு எழுதப்பட்டதோ என்கின்ற தொனியைத் தருகின்றன. ஃபூக்கோ ஈரானில் கலாசாரப் புரட்சி நிகழும்போது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார் என்பதை நாமனைவரும் அறிகின்ற உண்மை. அது பின்னாளில் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்ந்தபோது அதுகுறித்து வெளிப்படையாக ஃபூக்கோ ஓர் உரையாடலை நிகழ்த்தவில்லை என்பதை நாம் அவர் மீதான விமர்சனமாக முன்வைக்கலாம். ஆனால் ஃபூக்கோ தொடக்கத்தில் தெரிவித்த கருத்துக்களை நாம் விமர்சிக்க முடியாது. எனெனில் இன்று நம்மில் பலர் 'அரபு வசந்தங்களை' வரவேற்றபடிதான் இருக்கின்றோம். அவை நாளை எந்தப்புள்ளியில் போய்ச் சேரும் என்பது எவருக்குமே தெரியாது. அத்தகைய ஒரு புள்ளியிலேயே ஃபூக்கோவும் ஈரானியப் புரட்சியை அவர் விரும்பும் மிகப்பெரும் கலாசாரப் புரட்சியாக பெண்களுக்கு ஓரினப்பாலருக்கு அதிக நன்மைகளை விளைவிக்குமென நம்பி, தன் கருத்துக்களை முன்வைக்கின்றார்.

ஃபூக்கோவின் இந்நம்பிக்கையைப் புரிந்துகொள்ள எனக்கு தெரிதாவே உதவுகின்றார். எனெனில் அவரே 'எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல' எனக் குறிப்பிட்டு விரிவாகப் பேசுகின்றவர். மேலும் 'எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியதும்' என்பதை தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நாம் நினைத்துக்கொள்கின்ற எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே எதிர்காலம் என்கின்றார் தெரிதா. ' (http://www.djthamilan.blogspot.ca/2008/02/blog-post_18.html). இதே நிலைப்பாடிலோ அல்லது இதற்கு கிட்டவாகவோ ஒரு எதிர்காலத்தை ஈரானியப் புரட்சியின்போது ஃபூக்கோவும் எண்ணியிருக்கக் கூடும். அதன்வழி தன் கருத்துக்களை முன்வைத்திருக்கவும் கூடும். 

ஆகவே ஃபூக்கோ மீது அவரது ஆரம்பக் கருத்துக்களுக்காய் நாம் விமர்சனம் வைப்பது எந்தளவுக்கு நியாயமானது என யமுனா யோசிக்கவேண்டும். அதே போன்று ழான் போத்ரிலாரைப் பற்றியும் 'பிம்ப அரசியலில்' மிகவும் எளிமைப்படுத்திய பார்வையை யமுனா முன்வைக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது.  ழான் போத்ரியாரைப் பற்றி நான் மிகவும் குறைவாகவே வாசித்திருக்கின்றேன். அவரின் ஒரு புத்தகம் பற்றிய என் வாசிப்பை இங்கே (http://www.djthamilan.blogspot.ca/2008/05/blog-post_08.html) பதிவு செய்திருக்கின்றேன். நான் வாசித்த போத்ரிலாருக்கும் யமுனா முன்வைக்கும் போத்ரிலாருக்கும் வித்தியாசங்கள் வாசிப்பில் இருக்கின்றன.


3.
யமுனாவை உயிர்நிழலில் அவரெழுதிய காலங்களிலிருந்து அவதானித்தே வருகின்றேன். அவரின் தொடக்கக்கால கட்டுரைகள் நீளமாகவும் மிகவும் வறட்சித்தன்மையாகவும் எனக்குத் தெரிந்தது என்பதை மறைக்காது குறிப்பிடவேண்டும். அன்றைய காலத்தில் மட்டுமின்றி இன்றும் அப்படியே நீளம் நீளமாகவும் உலர்ந்த தன்மையிலும் எழுதும் இன்னொருவர் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றார். அவர் பெயரைக் கூறலாந்தான். ஆனால் தான் மட்டுமே செய்கின்ற புரட்சியைக் குலைக்க வந்த குரங்குகள் என வசை பொழிந்தொரு கட்டுரை எழுதிவிடுவார் என்பதால் அவர் பெயரை இங்கே தவிர்க்கின்றேன். ஆனால் பிறகான காலங்களில் யமுனாவின் கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசித்து வந்திருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை அவரின் கட்டுரை மொழி பின்னாளில் மாறியிருக்கின்றதெனவே நினைக்கின்றேன். யமுனாவின் கட்டுரைகளில் சிலபொழுது விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் பரந்த வாசிப்பு, பல விடயங்களை ஒரு கட்டுரையில் இணைக்கின்ற நேர்த்தி என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆக நான் பின் தொடர்கின்ற ஒரு கட்டுரையாளர் பற்றிய எனது விமர்சனத்தையும் வைத்தாக வேண்டும் அல்லவா? 

புலம்பெயர்ந்த தேசத்துக்கு வரும் பல இந்தியப் படைப்பாளிகள் அவ்வப்போது சில அதிரடி அறிக்கைகள் விடுவார்கள். சிலர் இங்கே வரும்போது அறிக்கை எறிவார்கள், வேறு சிலர் இந்தியாவிலிருந்தே வெடிப்பார்கள். இதை வெங்கட்சாமிநாதன், இடையில் தேவசகாயகுமார், 'என்றும்' ஜெயமோகன் என இந்த வரிசையில் முன்னணியில் நிற்க அடிபடுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அந்த எறிகுண்டு எப்படியிருக்குமெனில்  'தமிழகத்திலேயே என்னைவிட வேறெவருமே ஈழப்படைப்புக்களை இந்தளவு விரிவாகவும் ஆழமாகவும் நிறையவும் வாசித்தவர்கள் இல்லை' என்பது. எனக்கு இவ்வாறான 'காமடிகளை'க் கேட்கும்போது, இனி இந்தியாவுக்கு இலங்கையிலிருந்தோ, சிங்கப்பூர், மலேசியாவிலிருந்தோ அல்லது புலம்பெயர்தேசங்களிலிருந்தோ செல்பவர்கள் இந்தியாவில் போய் இறங்கியவுடன், 'ஆமாம், என்னைவிட இந்தியப்படைப்புக்களை வேறெவரும் வாசித்ததில்லை, நாங்கள் கூறுவதே சரி, நீங்கள் ஒருவரும் எதிர்த்து வாய் திறக்கக்கூடாது' என உரத்துச் சொல்லவேண்டும் என நினைப்பேன். அப்போதெனினும் இவர்களின் வாய்த் துடுக்கு அடங்குகிறதா எனப் பார்க்கவேண்டும். ஆம் நண்பர்களே, இறுதியில் அதுதான் நிகழ்ந்தது. அண்மையில் கனடாவுக்கு வந்த யமுனாவும் இவ்வாறான ஒரு அதிரடி 'ஸ்டேட்மெண்டை' வீசினார் எனக் கேள்விப்பட்டபோது.....!
.............

புஷ்பராணியின் 'அகாலம்'

Tuesday, August 07, 2012

-புஷ்பராணியின் ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை முன்வைத்து-


ஈழப்போராட்டத்தின் சாட்சிகளில் ஒன்றாய், முதன் முதன்முதலாக ஒரு
பெண்ணுடைய அனுபவங்களிலிருந்து 'அகாலம்' முகிழ்ந்திருக்கின்றது. ஈழப்போராட்டத்தின் தொடக்ககால முன்னோடியான புஷ்பராணியைப் பலர் ஏற்கனவே அறிந்திருப்பார்கள்.அவருடையஅனுபவங்களினூடாகவே 'அகாலம்' என்கின்ற இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.1970களில் ஈழத்தில் நடந்த அகிம்சைப் போராட்டங்களில் பங்குபெற்றி அதன் நீட்சியில் ஆயுதம் ஏந்திப் போராடுதலே விடுதலைக்கான ஒரு வழி என்கின்ற ஆரம்பப் புள்ளிவரை வந்த ஒரு செயற்பாட்டாளராக புஷ்பராணி தன்னை இந்நூலில் நிலை நிறுத்திக் கொள்கிறார். 

இந்நூலில் 1975ம் ஆண்டு நடந்த உலகத் தமிழாராய்ச்சி படுகொலைகள் பற்றிய விபரங்களை நேரே நின்ற பார்த்த ஒரு சாட்சியாக புஷ்பராணி எழுதுவது மிக முக்கியமான ஒரு பதிவாகும். இதுவரை ஒருசாரார் தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்த 9 பேரும் மின்சாரக் கம்பி தாங்கி இறந்தார்கள் எனவும், இன்னொரு சாரார் பொலிஸின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் இறந்தார்களெனவும் தமக்குத் தெரிந்தமாதிரி எழுதிக்கொண்டிருக்கும்போது புஷ்பராணி உள்ளதை உள்ளபடி 'அகாலத்தில்' உரைக்கின்றார். 1975ம் ஆண்டு ஜனவரி 10ல் 'மாநாட்டில் வந்த ஊர்திகளில் ஒரு ஊர்தியில் கட்டப்பட்டிருந்த உலோகத்தாலான கொடிக்கம்பம் மின்சாரக் கம்பியைத் தொட்டதினால் ஊர்தியில் வந்த இருவர் முதலில் பலியானார்கள். அதனால் ஏற்பட்ட குழப்பத்தைக் காவல்துறையினர் பயன்படுத்திக் கொண்டார்கள். மாநாடு குறித்து அரசிற்கு ஏற்கனவே இருந்த புகைச்சல் அங்கே கண்ணீர்ப் புகைக்குண்டுகளாகவும், துப்பாக்கிக் குண்டுகளாகவும் வெடித்தன. மொத்தமாக ஒன்பது தமிழர்கள் அன்று கொல்லப்பட்டனர் ('அகாலம்' ப55)'.

இவற்றையெல்லாம் விட, தான் நம்பிய இயக்கத்திற்காய் புலோலி வங்கிக் கொள்ளையின் மூலம் கிடைத்த நகைகளைக் கொழும்புக் கடத்த உதவியதற்காய் புஷ்பராணி கைது செய்யப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதை பொலிஸாரினால் செய்யப்படுகின்றார்.  தன் கடும் சிறை அனுபவங்களினூடும் புஷ்பராணி, தான் நம்பிய இயக்கத்து உறுப்பினர்களை காட்டிக் கொடுக்காது இலட்சியப் பிடிப்புள்ள உறுதியான ஒரு தோழியாக இருந்திருக்கின்றார்.  பின்பு வெலிக்கடைச் சிறையில் அத்தனை அவலங்களோடும் சிங்களத் தோழிகளோடு அவருக்கு முகிழும் நட்பு மற்றும் அனைவரையும் நேசிக்கும் மிகச் சிறந்த மனிதப்பண்பு என இந்நூலில் புஷ்பராணியின் அனுபவங்களை விரிவாக வாசிக்க முடியும்.

வெலிக்கடைச் சிறைக்கு புஷ்பராணி கொண்டு செல்லப்படும்போது அங்கே கைதிகளாக இருந்த தமிழ் இளைஞர்கள் புஷ்பராணியைச் சித்திரவதை செய்த பொலிஸாரைக் கொலை செய்வோமென சூளுரைக்கின்றார்கள். கூறியது போலவே அந்தப் பொலிஸ்காரர்கள் பின்னாளில் இயக்கங்களினால் கொல்லப்படுகின்றார்கள். இந்நூலில் அச்சம்பவங்களை விபரிக்கும் புஷ்பராணி இக்கொலைகளை ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது மறுதலிக்கின்றாரா என்பது வாசிப்பவருக்குச் சற்று மங்கலாகவே தெரிகிறது. அதே போன்று நூலை முடிக்கும்போது புஷ்பராணி கூட்டணியினர் மீது அதிகம் சாய்ந்து விடுபவராகச் சென்றுவிடுவதும் சற்று வியப்பாய்த்தானிருக்கிறது. உணர்ச்சியரசியலை ஊட்டி ஒரு தலைமுறையையே ஆயுதங்களின் பக்கம் திரும்பி, என்றுமே நிகழமுடியாத ஒரு பெருங்கனவைத் திணித்தவர்களான கூட்டணியினரை அவ்வளவு எளிதாக ஈழப்போராட்டம் என்னும் வரலாற்றிலிருந்து விடுதலை செய்துவிட முடியாது என்பதை நாமனைவரும் அறிவோம். கூட்டணியினர் ஏனைய இயக்கங்களைப் போல ஆயுதந்தாங்கியவர்கள் இல்லை என்றாலும் அடுத்த தேர்தலைத் தமிழீழத்தில் சந்திப்போம் என முழங்கி, பின்னால் வந்த எல்லா தலைமுறைக்கும் போர் என்னும் சாபத்தை வாங்கித் தந்தவர்கள் அவர்களல்லவா? இன்னும் நூலில் கூட்டணியினர் பலர் தொடக்க காலத்தில் புலிகள் மற்றும் ரெலோவினால கொல்லப்பட்டார்கள் என்பதைப் பதிவு செய்கின்ற புஷ்பராணி பிறகான காலங்களில் கூட்டணியில் இருந்தவர்கள் இலங்கை அரசாலோ அல்லது அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்களாலோ கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை எங்கும் பதிவு செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறான சில விமர்சனங்களுக்கு அப்பாலும், இந்நூலில் பல சம்பவங்களை, போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்து இன்று வரலாற்றில் இல்லாமலே போனவர்களை எல்லாம் விரிவாக புஷ்பராணி பதிவு செய்திருப்பதை மிக முக்கியமானதாய்க் கொள்ளவேண்டும். இறுதியில் புஷ்பராணி 'எனது அன்பான வாசகரே' என்ற அத்தியாயத்தில் 'ஆயுதப் போராட்டத்திற்கான எண்ணக் கருவை எமது சமூகத்தில் விதைத்த முன்னோடிகளில் ஒருத்தி என்றவகையில் நான் உங்கள் முன் வெட்கித்து நிற்கின்றேன். ஆயுதப் போராட்டத்தில் நல்ல போராட்டம், மோசமான போராட்டம் என்று எதுவுமே கிடையாது. ஆயுதம் மோசமானது மட்டுமே. அது எவர் கையிலிருந்தாலும் அழிவைத் தவிர வேறொன்றிற்கும் அது பயன்படாது' என்று கூறுவது கவனத்தில் கொள்ளவேண்டியது. இன்னமும் ஈழத்தில் முடிந்துவிடாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஏதோ ஒருவகையில் முன்னேடுக்க விரும்பும் அனைவரும் -முக்கியமாய் ஈழத்தில் ஒடுக்குமுறைக்குள் வாழ்கின்ற அடுத்த தலைமுறை- புஷ்பராணியின் நூலிருந்து தனக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரலாற்றின் இன்னொரு வட்டத்தில் நுழைந்து மீண்டுமொரு பேரழிவிற்குள் மக்களைக் கொண்டு செல்வதாகவே முடிந்துவிடும் அபாயமே நம் முன்னால் இருக்கின்றது.

புஷ்பராணியின் அரசியல் செயற்பாடு தொடங்குவதே, அன்று கீரிமலையில் புத்தவிகாரை கட்டப்பட்டதற்கும் அதைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றங்கள் நடத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே தொடங்குகின்றது. இன்றும் மகிந்த ராஜபக்சே அதையேதான் இன்னொருவிதமாய்ச் செய்வதாக புஷ்பராணி இந்நூலில் குறிப்பிடுவும் செய்கின்றார். ஆக வரலாறு மீண்டும் ஒரு வட்டத்தில் முடிந்து அதே விதமான இன்னொரு வட்டத்தில் தொடங்குவதை நாம் அவதானிக்க முடியும். ஆனால் தமிழர்கள் தாம் கடந்தகாலத்தில் செய்த தவறுகளை இன்னொரு முறை செய்ய முடியாது. ஒடுக்குமுறைக்கும் அநியாயங்களுக்கும் எதிர்ப்புக் காட்டவேண்டுந்தான் ஆனால் அது கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து புதிய சிந்தனைகளின் வழி நகரவேண்டும் என்பதை முன் நிபந்தனையாகக் கொள்ளுதல் வேண்டும்.  இந்நூலில் இருந்து முக்கியமான ஒரு கற்றலாய் 'உணர்ச்சி அரசியலில்' இருந்து விடுபடுதலாக இருக்கவேண்டும்..இல்லாவிட்டால் இவ்வெதிர்ப்பு அரசியல் எதிர்காலத்தில் எளிதாக வன்முறை அரசியலுக்குள் நுழைந்துவிடுகின்ற அபாயம் இருப்பதை நாமனைவரும் அறிவோம்.

முன்னுரையில் கருணாகரன் குறிப்பிடுவதைப் போல புஷ்பராணி 'தன்னுடைய சாதி, தன்னுடைய குடும்ப நிலைமை, தன்னுடைய திருமண வாழ்க்கை எனச் சகலதைப் பற்றியும் அவர் முற்றிலும் வெளிப்படையாகவே பேசுகிறார். எதற்கும் அவர் கூச்சப்படவில்லை. எதையிட்டும் அவர் தயக்கங்களைக் காட்ட விரும்பவில்லை. எதையும் மறைக்கவேண்டும் என்று அவர் உணரவில்லை. திறக்கப்பட்ட புத்தகமாகவே தன்னுடைய அனுபவங்களை அவர் விரித்து வைக்கிறார்' என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவருமே எளிதாக அறிவர். இத்தகைய விடயங்களில் இதுவரை ஈழப்போராட்டத்தின் வரலாற்றை எழுதிய ஆண்கள் கூட சற்றுப் பின் தங்கியே நிற்கின்றார்கள் என்பதை ஒரு அவதானமாக நாம் முன்வைக்க முடியும். ஒரு ஆணுக்கு அரசியல் மட்டுமே உலகமாக இருக்கும்போது, ஒரு பெண்ணுக்கு அவளது அரசியலோடு முழு வாழ்க்கையையுமே தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் எல்லாவற்றையும் பேசவேண்டியிருக்கின்றது என்பதே யதார்த்தம். அந்த வித்தியாசமே புஷ்பராணியின் 'அகாலத்தை' இன்னும் முக்கியப்படுத்துவதாய் இருக்கின்றது. நம் ஈழப்போராட்ட தலைமை முழுதுமே ஆண்களாலே காலத்துக்குக் காலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு அல்லது பெண்களுக்கு போராடத்தின் தலைமைக்கான வகிபாகம் உரியமுறையில் வழங்கப்பட்டிருந்தால்  எம் போராட்டம் இத்தகைய அழிவுக்குச் சென்றிருக்காதோ எனச் சிந்திப்பதற்கான தொடக்கப் புள்ளியாக புஷ்பராணியின் 'அகாலத்தை' நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு நேர்காணலில் 'நான் எப்போது அடிமையாயிருந்தேன், விடுதலை பெற' என மிகுந்த ஓர்மத்துடன் கூறும் புஷ்பராணி என்கின்ற தொடக்ககாலப் போராளியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது.

அதேபோன்று, நம்பிக்கை தராத இன்றைய காலத்து ஈழத்து நிலைமையை... 'எங்களது முற்றங்களிலிருந்து ஆயுதப்படையினர் எப்போது நீங்குவார்கள் என்பதும் தெரியாது. தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வுகள் கிட்டும் என்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.  இலங்கை அதிபரின் குரலில் சமாதானத்தின் தொனியை அல்லாமல் வெற்றியின் எக்காளத்தையே நான் காண்கிறேன் (ப 192)' எனப் புஷ்பராணி எழுதுகின்றார். இது புஷ்பராணியின் குரல் மட்டுமில்லை இன்றைய ஈழத்து யதார்த்தம் அறிந்த பெரும்பான்மையானவர்களின் குரல்களாகவும் இவையே இருக்கின்றன என்பதே உண்மையாகும்.

(நன்றி: 'அம்ருதா, ஓகஸ்ட், 2012)