கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசோக ஹந்தகமவின் 'இனி- அவன்' குறித்து...

Tuesday, May 21, 2013


1.

போர் எல்லோரையும் பாதித்துவிட்டுச் செல்கின்றது. யுத்தம் ஒன்று முடிந்தபின்னும் 'தோற்றவர்கள்' ஏன் நாம் தோற்றோம் எனத் தங்களுக்குள் கேள்விகள் கேட்பவர்களாகவும், 'வென்றவர்கள்' அவர்கள் ஈட்டிய வெற்றியின் வழிமுறை குறித்து பிறர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். யுத்தத்தினால் வெற்றிகொள்ளப்பட்டு பெறப்படும் 'சமாதானம்' குறித்து அமெரிக்காவும், மேற்கு ஜரோப்பாவும் கொண்டிருக்கும் கருத்துநிலைகளும் மூன்றாமுலக ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் கொண்டிருக்கும் கருத்துநிலைகளும் வித்தியாசமானவை. முக்கியமாய் அமெரிக்காவும் மேற்கைரோப்பியா நாடுகளும் வரலாற்றில் தாம் செய்த காலனித்துவங்களை அவ்வளவாய்க் கணக்கில் எடுப்பதேயில்லை. நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தத்திற்கும், நாடொன்றிற்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தத்திற்கும் இடையில் பெறப்படும் படிப்பினைகளில் கூட வித்தியாசங்களுண்டு. ஆகவேதான் உள்நாட்டு யுத்தமொன்று முடிந்து வரும் 'சமாதான' காலத்தில் கூட, எப்போது என்றாலும் மீண்டும் வெடிக்கக் கூடிய போர் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது.  யுத்தம் ஒன்றை வெற்றி கொண்டவர்கள் உண்மையான அக்கறையோடு சமாதானத்தைக் கொண்டுவராத போது, அவர்கள் அமர்ந்திருக்கும் வெற்றியின் சிம்மாசனங்களின் கீழே பூகம்பம் புகைந்து கொண்டிருப்பதையும், தலைக்கு மேலே துப்பாக்கிகள் வெடிக்கக் காத்திருப்பதையும் கண்டு பதற்றமடைகின்றார்கள். ஆகவேதான் மழைவிட்டும் தூவானம் இன்னும் விடாத பதகளிப்பான சூழ்நிலை,  யுத்தங்கள் வெற்றிகொள்ளப்பட்டதாய்க் கூறப்படும் நாடுகள் பலவற்றில் இருக்கின்றன. அதற்கு அண்மைய ஓர் உதாரணம் ஈழம்.

போராளிகள் பற்றியும் போராட்டக் குழுக்குள் பற்றியும் பலருக்குப் பலவித அபிப்பிராயங்கள் இருக்கின்றன. போராளிகளைப் பிற போராளிகள் பார்ப்பதற்கும் பொதுமக்கள் பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஈழப்போராட்ட வரலாற்றின் தொடக்க காலங்களில் போராளிகளுக்கு மிக உயரிய இடம் மக்களால் வழங்கப்பட்டதையும், அதைப் பின்னாளில் அனைத்து இயக்கங்களும் தம் மேலாண்மைகளால் எவ்வாறு பாழடித்தன என்பதையும், இயக்கங்களில் இருந்தவர்கள் எழுதிய பல்வேறு பிரதிகள் சாட்சியங்கள் அளிக்கின்றன. மூன்று தசாப்தகாலம் நீண்ட போரின்போது மக்கள் ஆயுதங்களின் முன் மவுனிக்க வைக்கப்பட்டார்கள் என்கின்றபோதும், போராட்டப்போன அனைவர் மீதும் மக்களுக்குப் பரிவு இருந்தது. எவ்வளவுதான் தவறிழைத்தாலும் தன் பிள்ளைகளை மன்னித்து மீண்டும் அரவணைத்துக் கொள்ளும் தாய்மார்களைப் போல, என்றேனும் ஒருநாள் போராளிகளும் அவர்களின் தலைமைகளும் தம் அதிகாரங்களின் தளைகளிலிருந்து மீண்டு வருவார்கள் என்று மக்கள் நம்பியுமிருக்கின்றார்கள்.

ஆகவேதான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஒரு பெரும் மக்கள் திரள் போராளிகளோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இயக்கத்தின் மிகப் பெரும் இராணுவ வெற்றிகளின் பின் தளத்தில் மக்களே நின்றிருக்கின்றார்கள். ஆனால் பின்னாட்களில் நடந்ததை -கொடுங்கனவை- மக்கள் மட்டுமில்லை போராளிகள் கூட நினைத்துப் பார்க்கக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் அவற்றை எளிதாய்க் கடந்து போய்விடவும் முடியாது. அது குறித்து நிறையவே பேச வேண்டியிருக்கின்றது. நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களை -எமது எவ்வித அரசியல் கருத்துக்கள் தீர்ப்பெழுதவோ குறுக்கிடவோ செய்துவிடாது- செவிசாய்த்து முதலில் நாம் அமைதியாக கேட்கவேண்டியிருக்கின்றது.

போர் ஒன்று முடிந்தபின் போராளிகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்கின்ற கேள்விகள் எம் அனைவரின் முன்னும் இருக்கின்றது. அவர்களுக்கும் வாழ்க்கையில் நம்மைப் போன்று தேர்ந்தெடுக்க எத்தனையோ தெரிவுகள் இருந்தபோதும், அவற்றையெல்லாம் தவிர்த்து அனைவரும் சுதந்திரமான வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காய் போராடப் போயிருக்கின்றார்கள் என்கின்ற அடிப்படையில் வைத்தே அவர்களைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அதன் பிறகே அவர்கள் போராட்டத்தைச் சரியான திசையில் எடுத்தார்களா அல்லது இல்லையா போன்ற விமர்சனங்களுக்குப் போகவேண்டும். அத்துடன் நம்மை மேய்ப்பர்களாகவும் அவர்களை வழிதவறிய மந்தைகளுமாய்ப் பார்க்கின்ற பார்வைகளைத் துடைத்தெறிந்துவிட்டே நம் உரையாடல்களைத் தொடங்கவேண்டும்.

2.
ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்கின்றார்கள். உண்மையிலேயே 'யுத்தம்' முடிந்துவிட்டதா என்பதை முன்னாள் போராளியொருவரின் வாழ்க்கையை முன்வைத்து அசோக ஹந்தகம 'இனி - அவன்' (இனியவன்) என்கின்ற திரைப்படம் மூலமாகப் பலவேறு கேள்விகளை எழுப்புகின்றார். யுத்தம் முடிந்து, திரும்பிவரும் போராளிகளை எவ்வாறு இச்சமூகம் பார்க்கின்றது என்பதையும் அவர்கள் எவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது என்பதையும், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதையும், போராளியினூடாக நகரும் கதையினூடு பார்ப்பவர்களையும் யோசிக்க வைப்பதில் அசோக ஹந்தகமவே வெற்றி பெற்றிருக்கின்றார் என்றே நினைக்கின்றேன். ஒரு பக்கம் 'எல்லாம் இயல்புநிலைக்கு வருகிறது' என்கின்ற சத்தத்திற்கும், இன்னொருபக்கம் 'மீண்டும் போர் வெடிக்கும்' என்கின்ற முழக்கத்திற்கும் இடையில் முன்னாள் போராளிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றிய உரையாடல்களை இன்னமும் நாம் காத்திரமாகத் தொடங்கவில்லை என்பது ஒருவகையில் துயரமானது. மேலும் அவர்களை நேரடியாகச் சந்தித்தவர்களினதோ அல்லது அப்போராளிகள் நேரடியாக என்ன கூறுகின்றார்கள் என்பதையோ சிறிதுகூட செவிமடுக்காத ஒரு சமூகம் நம்மிடையே உருவாகியிருக்கின்றதென்பது இன்னும் மோசமானது. இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் போராளிகள் மீது ஒரு உரையாடலை நிகழ்த்தவேண்டிய அவசியத்தை 'இனியவன்' திரைப்படம் வெளிக்கொணர்வதை நாம் வரவேற்க வேண்டியிருக்கின்றது.

ஈழத்தில் ஒவ்வொரு பொதுசனத்திற்கும் வெவ்வேறு பார்வைகள் இருப்பதைப் போல ஒவ்வொரு முன்னாள் போராளிகளுக்கும் தாம் பங்குபெற்ற யுத்தத்தில் வெவ்வேறு பார்வைகள் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டோமானால் உடனேயே ஒருவரை முத்திரை குத்தி இவர் இப்படியானவர் என ஒதுக்கிவைக்க மாட்டோம். இவை எல்லாவற்றையும்விட அவர்கள் போரின் சொல்லவொண்ணாத் துயரங்களையும், இழப்புக்களையும் நேரடியாகப் பார்த்தவர்கள். தடுப்பு முகாங்களில் நீண்டகாலம் இருந்தவர்கள். இன்னமும் விடுவிக்கப்படாது சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருப்பவர்களையும் இந்தக்கணத்த்இல் நாம் மறந்து விடவும்முடியாது. இதன் நீட்சியில் அவர்கள் பலவேறு விதமான உளவியல் நெருக்கடிகளையும் சிதைவுகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்கின்ற உணர்வை நாம் அடைவோமாயின் அவர்களை நாம் ஒருபோதும் விலத்திவைத்துப் பார்க்கவே முடியாது.

இன்னமும் பதற்ற நிலையில் இருக்கும் ஈழத்திலாவது முன்னாள் போராளிகளை எவ்வாறு அணுகுவது என்பதிலுள்ள சிக்கல்களை ஒரளவாவது புரிந்துகொள்ள முடியும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் கூட, மீண்டும் சமூகத்தில் இணைகின்றபோது அவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், அவர்களுக்கான நீண்டகால பொருளாதார வசதிக்கான கட்டுமானங்களை அமைத்தல் போன்ற திசைகளில் சிந்திப்பவர்களை மிக அரிதாகவே காணமுடிகிறது. ஆனால் இதே புலம்பெயர் தேசத்தில்தான்,  பலவேறு இயக்கங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் சமூகத்தோடு இணைந்து வாழ முடிந்திருக்கின்றது என்பதை இங்கே நினைவுகூர வேண்டியிருக்கின்றது.. அவர்களிடமிருந்து பெற்ற படிப்பினைகளையும், அவர்கள் தொடக்க காலத்தில் பெற்ற சிக்கல்களையும் இணைத்துக் கொள்வதன் மூலமாகக் கூட, ஒருவகையில் நாம் இன்றைய முன்னாள் போராளிகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு உதவவும் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாய் நாமெல்லோரும் துருவ அரசியல் புள்ளிகளில் சிக்கிக்கொண்டு இன்னமும் பிளவுற்றபடி ஓரடி முன்னால் கூட நகரமுடியாது மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றோம்.

3.
போரைக் களத்தில் நடத்தியவர்களுக்கு மட்டுமா போரில் நடைபெற்றவை குறித்துப் பொறுப்புக் கூறல் இருக்கின்றதா அல்லது அதன் புறச்சூழலில் இருந்த அனைவருக்கும் போரில் நிகழ்ந்தவைகளுக்கு பொறுப்புக் கூறல் இருக்கின்றதா என்பது சற்று சிக்கலான விடயம். அதை இப்போதைக்கு அவரவர்க்கான மனச்சாட்சியில் வழிநடத்தலுக்கு விட்டுவிடுவோம். ஆனால் ஒடுக்குமுறை இருந்ததன் காரணமாகவே  இயக்கங்கள் பல தோன்றக்காரணமாக இருந்ததால் பொதுசனமாகிய நாங்களும் இயக்கங்களிற்கான அனைத்துச் செயற்பாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறவும், மன்னிப்பைக் கேட்கவேண்டிய இடங்களில் மனச்சுத்தியாக  -நமக்குள்ளும் பிற சமூகங்களிடையேயும் -மன்னிப்பையும் கேட்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். அதேவேளை ஒவ்வொரு இயக்கத்திற்கும், அது சார்ந்து இயங்கிய போராளிகளுக்கும் தனிப்பட்ட பொறுப்புக் கூறல் இருப்பதையும், அதைத் தவிர்த்து அவர்கள் இன்னொரு புதிய அரசியல் செய்யும்போது அவர்களின் அறம் குறித்து கேள்விகள் எழுப்புதலும் தவிர்க்க முடியாததே. இதேயிடத்தில் இன்னொரு கேள்வியும் எழுவது இயல்பானதே. தாம் சார்ந்த இயக்கங்களில் இருந்து எழுதும் ஒருவர் நடந்தவற்றை அப்படியே கூறுகின்றாரா அல்லது தனக்கு வேண்டிய உண்மைகளை மட்டுமே கூறுகின்றாரா என்பது. ஒரு முன்னாள் போராளி எந்தவகையிலும் தான் சார்ந்த இயக்கத்தின் அனைத்தையும் கூறுவார் என்பதை நாம் எதிர்பார்க்கமுடியாது, ஆனால் அவர் தான் செயற்பட்ட தளங்களில் நடைபெற்றவற்றை முன்வைப்பவராக தனிப்பட்ட பொறுப்புக் கூறலுக்கு முதலில் தனனை ஈடுபடுத்தவேண்டும். இங்கே எழும் சிக்கல் என்னவென்றால் ஒரு முன்னாள் போராளி தன்னைச் சுயவிமர்சனம் செய்யும்போது வெளிச்சூழலில் இருப்பவர்கள் உடனேயே அவர் இதை மறைக்கிறார் அதைத் தவிர்க்கிறார் என -முதல் அடிவைக்க முன்னரே இழுத்துப் போட்டுத் துவைக்கத் தொடங்குகின்றனர். ஒவ்வொரு தனி மனிதரும் தனக்கான உண்மைகளைக் கூறுகின்றாரே தவிர எல்லோரினதும் உண்மைகளை முன்வைக்கவில்லை என்ற புரிதல் இருந்தாலே போதும். அவரை நாம் முதலில் பேச அனுமதிப்பவர்களாக இருப்போம். மேலும் இவ்வாறு பலரும், தமக்குத் தெரிந்த உண்மைகளை முன்வைக்கும்போது அதிலிருந்து யுத்தம் நடந்த/நடத்தப்பட்ட விதம் பற்றி ஒரு முழுச்சித்திரத்தை நாம் உருவாக்க முடியும்.

இவ்வாறு ஒருவர் தன் சாட்சியங்களை முன்வைக்கும்போது இன்னொரு சிக்கலும் எழுகின்றது.  இச்சூழலோடு நேரடியாகச் சம்பந்தப்படாத ஒருவர் செய்யக் கூடியது என்ன? அவரின் சாட்சியங்கள் கூறி முடிக்கப்பட்டபின் ஒருவர் விமர்சனங்களை முன்வைக்க முடியுமா?  இதற்கான ஓர் உதாரணமாக இன்ஃபிடல் (Infidel) எழுதிய அயான் ஹிருஸி அலியை உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். அவர் அந்நூலில் எழுதியவை அவ்ரது அனுபவங்கள் என்றளவில் நாம் முதலில் அவற்றை மதித்தாகவேண்டும். ஆனால் அதேசமயம் அவர் அதைக் கொண்டு முழு இஸ்லாமையும் மதிப்பிடுவதை - முக்கியமாய் இஸ்லாமே ஓர் அடிப்படைவாத மதம் - என்று பொதுப்படையாக பேசுவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளத்தேவையில்லை. அதேபோன்று ஓர் அடிப்படைவாதத்திலிருந்து தப்பி இன்று இன்னொரு அடிப்படைவாதத்திற்கு (இஸ்லாமிய வெறுப்பு) அவர் துணை போய்க்கொண்டிருப்பதையும் நாம் விமர்சிக்கலாம். இந்த அடிப்படையிலேயே ஒரு முன்னாள் போராளியின் சாட்சியங்களையும் நாம் அணுகலாம். அவரது அனுபவங்களை ஏற்றுக்கொள்வதோடு, அவரின் சாட்சியங்கள் உள்ள உண்மைகளை மறைத்து அதிகாரத்தில் இருப்பவர்க்கு (அது அவர் சார்ந்த இயக்கமாயிருந்தாலென்ன, அரசாயிருந்தாலென்ன) துணைபோவதாய் இருந்தால் நாம் கேள்விகளை எழுப்பி அவரது நேர்மை மீதும், அவரது சாட்சியங்களின் அறம் குறித்தும் இடையீடுகளைச் செய்யலாம்.

4.
இனியவன் திரைப்படத்தில் வரும் போராளியை அவரது ஊரும் உறவுகளும் விலத்திவைக்கின்றது. அது - அவர் தனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்திறங்கும்போதே ஒரு அந்நியனைப் போல பஸ் தரிப்பிடத்திலிருந்து வீடுவரை அவரைப் பார்க்கின்ற மக்களினூடாகத் தெளிவாகக் காட்டப்படுகின்றது. தாய் மட்டுமே முதலில் அப்போராளியை ஏற்றுக்கொள்கிறார். அயல் வீட்டுக்காரர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளைப் போராடுவதற்காய்ப் பலிகொடுத்தவர். அவர் இப்போராளியைப் பார்க்கும்போதெல்லாம் 'என் பிள்ளைகள் எல்லோரும் செத்துவிட்டார்கள் நீ மட்டும் எப்படித் தப்பினாய் பாவி' என இவனைக் கண்டு தூற்றுகின்றார். அந்தவகையில் போராடப் போன பலர் இறக்க, தான் மட்டும் உயிரோடுக்கும் உளவியல் சிக்கல்களும் ஒவ்வொரு முன்னாள் போராளிக்கும் இருக்கின்றது என்பதைக் கொணர்ந்தமைக்காய் அசோக ஹந்தகமவைப் பாராட்டலாம். ஆனால் அதை இன்னும் செழுமைப்படுத்தாமல், அப்படிச் சபிக்கின்றவரை ஓரிடத்தில் இப்போராளி அடித்துத் துரத்துகின்றவராய் காட்டியிருப்பதுதான் சற்றுப் பிரச்சினைக்குரிய பகுதி. இதை இன்னொருவிதமாய் தன் முன்னாள் அதிகாரத்தைக் கைவிடாத ஒரு போராளியாக அவர் இன்னும் இருப்பதாய்க் கூட ஒருவர் பார்க்கமுடியும். எனினும் இப்படத்தில் இக்கதாபாத்திரம் அவ்வாறான ஒருவரல்ல. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் மீது அக்கறை கொள்வதோடு அவரை ஒரு சக மனுசியாகவும் பார்க்கின்றவர் என்கின்றபோது, அவர் நிச்சயம் போரின் நிமித்தம் காவுகொள்ளப்பட்ட அயல் வீட்டவரின் பிள்ளைகளின் இழப்புப் பற்றியும் துயருற்றிருப்பவராகவே இருந்திருப்பார். அந்த முதியவரும் இந்தப் போராளியும் ஏதோ ஒருபுள்ளியில் புரிந்துகொள்வதான காட்சியை இயக்குனர் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்.

ஒழுங்கான ஒரு வேலை இல்லாது, வாழ்வை நகர்த்தமுடியாத இப்போராளியைப் பார்த்து தாயார் தான் புதைத்துவைத்திருந்த தாலிக்கொடியை அடகுவைத்து வேலையொன்றைப் பெறக் கூறுகின்றார். அவ்வாறு ஒரு நகைக்கடையிற்குப் போகும்போதே அவருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலை கிடைக்கின்றது. இந்நிகழ்வு, பிறகு என்றுமே வெளியேற முடியாத பெரும் சிக்கலில் இவரை மாட்ட வைக்கின்றது. இதற்கிடையில் பெருநகரில் இப்போராளி மீண்டும் தன் காதலியைக் காண்கின்றார். காதலி போர் உக்கிரமடைந்த காலத்தில் பலவந்தமாய் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்காய் ஒரு முதியவருக்குத் கட்டிக்கொடுக்கப்பட்டவர். அந்தக் காட்சியில் வெளிப்படையாய், தமிழ் மக்களிடையே போரின் உக்கிரத்திற்குள்ளும் இருந்த சாதிவெறியைக் காட்டியதற்காய் இயக்குநரைப் பாராட்டவேண்டும். அதேபோன்று கணவனை இழந்த அந்தப்பெண் இப்போராளியிடம், 'உனக்கு இன்னமும் விருப்பமிருந்தால் என்னையும் குழந்தையையும் உன்னோடு கூட்டிச் செல்' எனச் சொல்கின்ற காட்சியை ஒரு தமிழ் இயக்குனருக்கு வைக்கும் தைரியம் இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே. 

பாதுகாவலர் தொழிலுக்குப் போகும் போராளியை எவ்வாறு கடத்தல் தொழிலுக்கு நகை அடவுக்கடைக்காரர் பயன்படுத்துகின்றார் என்பதையும் இதற்கு உடந்தையாக எவ்வாறு புலம்பெயர் தேசத்திலிருந்து செல்லும் ஒரு பகுதியினர் இருக்கின்றார்கள் என்பதையும் படத்தின் நீட்சியில் பார்க்கலாம். எல்லாவித இழப்புக்களோடும் அனைததுத் துயரங்களையும் அனுபவித்து, வாழ்வதற்காய் பாலியல் தொழில் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் வந்துவிட்ட அந்தப் பெண் உடல்வன்முறையை அனுபவித்து வீதியின் ஓரத்தில் போடப்பட்டு இருக்கும்போது அப்பெண் மீது அக்கறையுள்ள இப்போராளி காப்பாற்றுகின்றபோது, 'இதென்ன பெரிய விடயம், இனி மேலும் வாழத்தானே வேண்டும்' என அப்பெண் சொல்கின்றபோது அறையும் யதார்த்ததின் முன் பார்வையாளராகிய நாம் தலைகுனிந்தே நிற்கவேண்டியவர்களாகின்றோம்.

5.
இப்படத்தில் அசோக ஹந்தகமக பல விடயங்களில் வழமையான தமிழ்த் திரைப்படச் சூழலில் இருந்து மீறியிருக்கின்றார். பாலியல் தொழில் செய்யும் பெண் நம்மில் ஒருவர்தான் என்கின்ற பார்வையை அப்பெண்ணின் பாத்திரத்தினூடாக கொண்டுவந்திருக்கின்றார். அதேபோன்று மறுமணத்தையும் எவ்வித புரட்சியோ ஆர்ப்பாட்டமோ இல்லாது சித்தரித்திருக்கின்றார். மேலும் ஒரு குழந்தைக்குத் தாயான இப்பெண் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிவருவதை, தன் துணையின் முன்னும் மாமியாரின் முன்னும் அப்பெண் ஆடும் நடனக் காட்சியினூடாக நுட்பமாகக் கொண்டுவருகின்றார். முன்னாள் போராளிகளுக்கு இருக்கும் உளவியல் நெருக்கடிகளை, இரவில் இப்போராளி சைக்கிளில் வரும்போது பின்னால் தொடர்ந்துவரும் மூன்று பெண்களின் மோட்டார்சைக்கிள்கள் மூலமாக, இப்போராளிகளின் வாழ்வு இன்னும் பதற்றங்களின் மீதே நகர்ந்துகொண்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம். இப்போராளியைக் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தும் பெரியவர் அவ்வப்போது கூறும் வார்த்தைகள் இயக்கம் மீதான் கூரிய விமர்சனமாகவும் இருக்கிறது (ஒரு விடயத்தைச் செய்யச் சொல்லும்போது இப்போராளி 'இயலாது' எனக் கூறுவார், அப்போது அப்பெரியவர், நீ இயக்கத்தில் இருந்தபோது எல்லாவற்றையும் எதிர்க்கேள்வி கேட்காது செய்துதானே முடித்தாய், பிறகு இப்ப மட்டும் என்ன?'). அதேபோன்று சிங்கள மக்களின் பிரசன்னம் தமிழ்ச்சூழலில் அதிகரித்திருப்பதையும்  சில காட்சிகளினூடாக அசோக ஹந்தகமக கொண்டு வருகின்றார்.

அதேவேளை இப்படத்தில் எளிதாக விலத்திச் செல்லமுடியாத பல குறைகளும் இருக்கின்றன. திரைப்படத்தின் தொடக்கத்தில் பஸ்சில் வந்து இறங்கும்போதோ அல்லது ஊருக்குள் நுழையும்போதோ எவ்வித இராணுவ பிரசன்னத்தையும் காணவே இல்லை. அவ்வாறான நிலை காட்சிப்படுத்தப்படாதபோது, கதை நிகழும் பின்னணிச் சூழல் எது என்கின்ற சந்தேகம் எழுதல் இயல்பானதே. ஒரு 'சுற்றுலா' ப் பயணியாய் இறுதிப்போர் அவ்வளவாய்த் தீண்டாத தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்லும்போதே இராணுவத்தின் கண்காணிப்பிலிருந்து எவருமே தப்பிவிடமுடியாது என்கின்றபோது, எவ்வாறு  போர் கோரமாய்த் தாண்டவமாடிய இப்போராளி வாழும் இடம் எதிலும் இராணுவத்தையே காணவில்லை என்பது முக்கியமான கேள்வி. இன்று இராணுவத்தால் முற்றுகையிடப்படாத ஒரு தமிழ்ப்பிரதேசத்தைக் காண்பதென்பதே அரிது எனச் சொல்லுமளவிற்கு பல்லாயிரக்கணக்கான இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிலும், புத்தர் சிலைகள் நீக்கமற முளைத்திருக்கும் வேளையிலும் இது தவிர்க்கப்பட்டிருப்பதைப் பெரும் பலவீனமெனவே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கின்றது. முன்னாள் போராளிகளை ஏற்றுக்கொள்வதில் நம் சமூகத்திற்கு இருக்கும் அலட்சியம் மட்டுமில்லை, இவ்வாறான இராணுவக் கண்காணிப்பு இருப்பதால்தான் இத்தகைய முன்னாள் போராளிகளோடு அநேக மக்கள் பழகவோ/பேசவோ விரும்புவதில்லை என்கின்ற யதார்த்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

மேலும், முன்னாள் போராளிகள் இன்னமும் தங்களை ஒழுங்காய் இயல்புவாழ்க்கைக்குள் தகவமைக்க முடியாது திண்டாடுவதை நாமனைவருமே அறிவோம். ஆனால் அப்போராளிகளின் மீது அக்கறை கொள்கின்ற ஒரு படைப்பாளி, ஒரு முன்னாள் போராளி தன் வீட்டில் மறைத்துவைத்திருக்கும் துப்பாக்கியை எப்படிவெளிப்படையாகக் காட்டமுடிகிறது? இயக்குநரின் பொறுப்புணர்வு குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதேசமயம் இவ்வாறு காட்டமுடிகின்ற அவரால் இராணுவத்தின் பிரசன்னத்தையே காட்டமுடியாதிருக்கின்றால் நாம் அவரின் அரசியல் புரிதல்கள் குறித்துச் சந்தேகம் கொள்ள வேண்டியேயிருக்கின்றது. பாதிக்கப்பட்டவரின் மனோநிலையில் நின்று ஒருவர் இப்படத்தை எடுக்கின்றார் என்றால் அவர் இராணுவத்தின் பிரசன்னத்தை நேரடியாகவும், ஆயுதத்தைப் பின்வளவில் ஒளித்துவைத்திருக்கும் காட்சியை மறைமுகமாகவும் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கே நடந்திருப்பதோ அதற்கு எதிர்மாறானது. மேலும் இன்னும் அபத்தமாய் அந்தத் துப்பாக்கியை போராளியின் காதலி தூக்கிவைத்து கண்மூடித்தனமாய்ச் சுட்டுத்தள்ளுவது. இவ்வளவு இழப்புக்களைச் சந்தித்து வந்திருக்கும் ஒரு பெண், எந்தவொரு பொழுதிலும் இப்படியான ஒரு முட்டாள்தனத்திற்குப் போகவே மாட்டார். தனது துணைவரை கதறிக் கெஞ்சியேனும் அவரைக் கொல்ல வருகின்றவர்களிடமிருந்து காப்பாற்றப் பார்ப்பாரே தவிர துவக்கு எடுத்து வீரங்காட்ட மாட்டார். எனெனில் இப்படித் துவக்கு வைத்திருந்தால் பிறகென்ன பின் விளைவுகள் வருமென்று அவருக்கு நன்கு தெரியும். அதுவும் இராணுவத்தின் ஆசியோடு இயங்கும் துணைக்குழுக்கள் மீது துப்பாக்கி காட்டி பயமுறுத்தினால் இவர்களின் எதிர்கால வாழ்வு என்னவாகும் என்று எவரும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

இன்று முன்னாள் போராளிகளைப் புனர்வாழ்வு முகாங்களுக்கு அனுப்பி, சீர்திருத்தம் செய்தனுப்புகின்றோம்  எனக் கூறும் அரசிற்கும் இப்போராளிகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் வரையும் பாரிய பொறுப்புண்டு. ஆனால் அது பற்றிய எந்த விமர்சனத்தையும் இயக்குநர் கொண்டு வரவேயில்லை. ஒரே நாட்டில் நாம் வெவ்வேறு மொழிகள் பேசும் இனங்களாய் இருந்தாலென்ன எல்லோரும்  ஒற்றுமையாக இருப்போம் என கிடைக்கும் மேடை தோறும் முழங்கும் அரசியல் அதிகாரம் படைத்தவர்கள், இவ்வாறான முன்னாள் போராளிகள் மீது எவ்வளவு அக்கறையின்மையாய் இருக்கின்றார்கள் என்பதற்கான எந்தக் காட்சியும் இப்படத்தில் இல்லை. அசோக ஹந்தகம காட்டுவதைப் போலத் தமிழ்ச் சமூகம் முன்னாள் போராளிகள் மீது பாராமுகமாய் இருப்பது உண்மை என்றாலும், இன்று ஈழத்தில் யாருடைய கரங்களில் சர்வ அதிகாரங்களும் இருக்கின்றன என்பதை முதலில் கவனித்தாக வேண்டும். ஆக, இப்படம் பிரச்சினை என்கின்ற ஆலமரத்தின் விழுதுகளை நோக்கி வெட்டரிவாள் வீசுகிறதே தவிர, ஆலமரத்தின் ஆணிவேரை நோக்கி எட்டியே பார்க்கவில்லை. இதுதான் இப்படத்தின் மிகப்பெரும் பலவீனமாய் இருக்கிறது, ஒரளவு ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்த/பார்த்த என்னைப் போன்றவர்களுக்கு இது இன்னும் நெருடலைத் தருகிறது.

இவ்வாறான குறைகளுக்கு அப்பாலும் முன்னாள் போராளியின் இன்றைய வாழ்க்கையினை காட்சியில் கொண்டுவந்தற்காய் அசோக ஹந்தகமவைப் பாராட்ட வேண்டும். எல்லா உண்மைகளையும் அல்லது எல்லோரையும் திருப்திப்ப்டுததக் கூடிய ஒரு படைப்பை ஒரு படைப்பாளியில் வழங்கிட முடியாது என்றாலும், போராளிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் உள்ள அக்கறையினாலும் இப்படத்தை எடுக்க முன் வந்திருப்பதற்காய் இயக்குநனரை நாம் மதிக்க வேண்டும். ஆனால் அந்த அக்கறை -சில தமிழ்நாட்டுக்காரர் எங்கள் போராட்டத்தை விளங்கிவைத்திருப்தைப் போல- ஒரு பக்கமாய் மட்டும் மாறிவிடக்கூடிய அபத்தத்தை அடையாதிருப்பதற்காக நாம் நம் விமர்சனங்களையும் -இயக்குநனரின் அக்கறையையும் மீறி - முன் வைக்க வேண்டியவர்களாகின்றோம். ஆகக் குறைந்தது, நம் தமிழ்ச் சூழலில் இருந்து காத்திரமான உரையாடல்கள் இம் முன்னால் போராளிகளைப் பற்றி இன்னமும் ஒழுங்காய்த் தொடங்காதபோது, தன் படைப்பின் மூலம் இதை நிகழ்த்த நம்மை முன் தள்ளியிருக்கும் அசோக ஹந்தகமவின் கரங்களைப் பரிவுடன் நாம் பற்றிக்கொள்ளலாம்.

இறுதிக்காட்சியில் முன்னாள் போராளியும், பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணும் போகும் மோட்டார் சைக்கிள் பழுதாகி நிற்கும்போது அவர்களுக்கு உதவ சிங்களப் பயணிகள் முன் வருவார்கள். ஆனால் அதை மறுத்து மோட்டார் சைக்கிளைத் தானே திருத்தும் போராளியினூடாக ஈழத்தமிழர் எவரின் துணையுமின்றி சொந்தக்காலிலே நிற்க விரும்பும் வைராக்கியத்தையும், ஒரு வார்த்தை அவர்களுடன் ஆதரவாகப் பேசாத போராளியினூடு இன்னமும் ஓழுங்காய் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படாததையும், அதேசமயம் 'உதவி கேட்டமைக்கு நன்றி' கூறி சிரிக்கும் தமிழ்ப்பெண்ணினூடு உங்களை(சிங்களவரை) நாங்கள் வெறுக்கவில்லை என்பதைச் சொல்வதாய்க் கூட எடுத்துக் கொள்ளலாம். இனி அவன் என்கின்ற அப்போராளியின் வாழ்க்கை என்னவாகப் போகின்றது என்பதோ, தன் உயிர்வாழ்தலுக்காய் பாலியில் தொழில் செய்யும் பெண்ணின் நிலை எவ்வாறு நாளை இருக்கும் என்பதோ, எவ்வளவு தீர்க்கமின்றித் தெரிகிறதோ அவ்வாறே ஈழத்தில் உண்மையான சமாதானம் தோன்றக்கூடிய காலமும் தெளிவற்றே தெரிகிறது என்பதுதான் நம் காலத்தைய பெருஞ்சோகம்.

------------
செப்/19-20 (2012)

நன்றி: எழுநா - இதழ் -01
புகைப்படங்கள்: கூகுள் தேடல்

என் கதைகளின் தொகுப்பு வெளியீடு

Tuesday, April 23, 2013

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்'



வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள்

Saturday, February 16, 2013



-'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு-

1.
யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது.  'வன்னி யுத்தம்' என்கின்ற இந்நூல் ஈழத்தில் இறுதியாய் நடந்து முடிந்த ஆயுதப்போராட்டத்தில், ஒரு நேரடிச் சாட்சியாய் முள்ளிவாய்க்கால் முடிவுவரை நின்ற ஒருவரால் எழுதப்பட்டிருக்கின்றது. இவர் ஓர் சாதாரணப் பொதுமகனாகவும், செயற்பாட்டாளராகவும் இருந்ததால் இந்நூல் இதுவரை சொல்லப்படாத புதியதொரு எழுத்துச் சாட்சியமாய் நம் முன்னே வைக்கப்ப்ட்டிருக்கிறது.

ஒரு நிழல் அரசாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வன்னி நிலப்பரப்பு நீண்டகாலமாய் இருந்திருக்கின்றது. மன்னாரிலிருந்து தொடங்கிய இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் புலிகளையும் மக்களையும் மிகச் சிறிய நிலப்பரப்ப்பான வட்டுவாகல், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதியிற்குள் முடக்கி பெரும் அழிவுகளைக் கொணர்ந்ததை அப்பு (புனைபெயர்) நேரடிச் சாட்சியமாய் இருந்து எழுதியிருக்கின்றார். இந்நூலில் தொடக்கப்பகுதியிலும், இடையிலும் அவ்வப்போது வலிந்து குறிப்பிட்ட சிலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது ஒருவகையில் விமர்சனமிருக்கின்றது. அத்தோடு நடந்ததைக் கூறுவதையே முக்கியமாய் எடுத்துக்கொண்ட இந்நூலிற்கு அந்தப் பகுதிகள் அவசியமும் அற்றது. எனெனில் நடந்ததே என்ன என்பது சரியான முறையில் பதியப்படாமல் இருக்கும் காலகட்டத்தில் நடந்ததற்கு இவர்கள்/இவைகள்தான் காரணங்களென அவ்வளவு எளிதில் ஒரு பகுதியினரை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது இன்னும் அபத்தமாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. மேலும் நடந்தவற்றை அலசுவதும் ஆராய்வதும்,  அரசியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் உரியதே தவிர, இன்னமும் இரத்தத்தின் வர்ணம் காயவோ, இழப்பின் அழுகுரல்கள் ஓயாமல் இருப்பதாகவோ நினைக்கும் ஒருவர் செய்யக்கூடியதல்ல..

நூலை வாசித்து முடிக்கும்போது வரும் வெறுமையையும் விரக்தியையும் எழுத்தில் முன்வைக்கவே முடியாது. ஈழத்தில் இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை எழுத்தில் ஒருவர் முன்வைக்கும்போது, அதை வாசிக்கும்போதே இவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகின்றதென்றால், இப்போர் நிகழ்ந்தபோது இறந்துபோனவர்களும், இப்போது மிஞ்சியிருப்பவர்களும் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பார்கள்/ அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் என எண்ணிப் பார்த்தாலே நாம் இன்னொரு ஆயுதப்போராட்டம் பற்றிய கதையாடல்களைத் தொடங்கவே மறுதலிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. அருகில் இருக்கும் மனிதர்கள் கொத்துக் கொத்துக்காய் எறிகணை வீச்சாலும் துப்பாக்கிக் குண்டாலும், விமானக்குண்டு வீச்சாலும் இறந்துகொண்டிருக்கும்போது, இந்த நூலை எழுதிய ஆசிரியர் அடிக்கடி எல்லோருக்கும் நினைவுபடுத்தியபடி இருக்கும் ஒருவிடயம், 'மரணத்தை விட மரண பயந்தான் மிகவும் பயங்கரமானது. எனெனில் மரணம் ஒருபொழுது மட்டும் நிகழக்கூடியது. மரணபயம் அவ்வாறில்லை' என்கிறார். அதே மாதிரித்தான், இந்த யுத்தம் முடிந்தபின் இன்னமும் அதன் வடுக்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி நாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு யோசித்தோமானால் -அவர்களின் நிலையைப் புரிந்துகொள்வோமானால்- இன்று எழுந்தமானமாய் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டோ, யுத்த களத்திலிருந்தவர்களை குற்றவாளிக் கூண்டிலேற்றி இன்னொருமுறை இறக்கும்படியான மனோநிலையை ஏற்படுத்திக்கொண்டோ இருக்கமாட்டோம் என்பது மட்டும் உறுதி.


2.
மனிதர்கள் கண்முன்னே விழுந்து இறக்க இறக்க அதைப் பார்த்துக்கொண்டு தப்பித்தவர்களின் பிறகான வாழ்வு என்பது எவ்வாறு இருக்கும்? இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள் எழுந்தமானமாய் இறக்கின்றார்கள் என்கின்றபோது எப்படித் தப்பிப் பிழைத்தோம் என்பதே அவர்களுக்குப் பெரும் புதிராகத்தான் இருக்கும். இந்த நூலை எழுதியவர் எறிகணைகள் வீழ்ந்து ஓய்ந்த சொற்ப இடைவெளியில் தரப்பாள் கொட்டகைகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றார்.  ஒரு கொட்டகையில் அந்தச் சிறிய காலப்பகுதியிற்குள் -சேமிப்பிலிருந்த உணவைப் பகிர்ந்தபடி- ஒரு குடும்பம் சற்றுச் சிரித்துக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு அவதியிற்குள்ளும் மனிதர்கள் இன்னமும் சிரிப்பதை மறக்கவில்லையென நினைத்தபடி நடக்கின்றார். இந்நூலின் ஆசிரியர், சற்றுத் தூரம் போயிருப்பார், திடீரரென்று எறிகணையொன்று வீழ்ந்து -சிரித்துச் சாப்பிட்டபடி இருந்த- முழுக்குடும்பமே சிதறிப் பலியாகின்றது. இவ்வாறாக மிகுந்த கொடூரத்துடன் போர் நிகழ்கிறது. இன்னொரு சமயத்தில் இந்தச் நேரடிச் சாட்சியிருக்கும் பதுங்குகுழியிற்கு இவரது நண்பர் வந்து கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த நண்பர் தான் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்குப் போகின்றார். அந்த இடைவெளிக்குள் எறிகணை வீழ்ந்து இவரின் நண்பர் இறந்து போகின்றார். இந்நூல் முழுக்க இப்படிக் கண்ணெதிரே சிதறி இறக்கும் மனிதர்களைப் பற்றியே நிறையக் குறிப்புக்கள் இருக்கின்றன. குழந்தையைப் பற்றியபடி தலை சிதறி இறந்த தாய் முதல், சாப்பிடுவதற்கு உரலில் எதையோ இடித்துக்கொண்டிருந்த சிறுமி தசைகளாகிப் போவது வரை இந்நூலே இரத்தத்தின் சாட்சியாகவே எழுதப்பட்டிருக்கின்றது.  வாசித்து முடிக்கும்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நாகரீகமானதா என்ற கேள்வியையும், நம் மனச்சாட்சி அதிர்வதையும் ஒருபோதும் நிறுத்தவே முடியாது.

ஆக இவ்வாறான எத்தனையோ அழிவுகளிலிருந்து தப்பி இறுதி யுத்தத்திலிருந்து வெளிவந்திருப்பவர்களின் வாழ்க்கை என்பது எந்த விதிகளினாலும்/நம்பிக்கைகளாலும் சமனப்படுத்திவிடமுடியாது. இவ்வளவு உயிரிழப்புக்களின் பின்னும் ஒருவர் தப்பியிருக்கின்றார் என்றால் அதொரு அதிசயமாய்த்தானிருக்கவேண்டும் என்பது இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரவே செய்வர். அதே போன்று இது தப்பிவந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளிலிருந்து வந்த ஒருவரினது சாட்சியம் மட்டுமே என்கின்றபோது முழு மக்கள் கூட்டத்தினரும் தம் ஒவ்வொருவரினதும் கதையைச் சொல்ல/எழுதத் தொடங்கினால் நம்மால் அவற்றின் அதிர்வுகளைத் தாங்கவே முடியாதிருக்கக் கூடும்.

இவ்வளவு கொடும் அனுபவங்களினூடு தப்பி வந்தவர்களின் வடுக்களுக்கு என்னமாதிரியான ஆறுதலை நாம் வழங்கப்போகின்றோம். இந்நூலின் ஆசிரியர், மரணத்தைவிட மரணபயமே இன்னும் கொடூரமானது என்பதுபோல யுத்தத்தைப் போலவே யுத்தம் நடந்தபின் அதன் அனுபவங்களோடு இருப்பதென்பது இன்னும் அவலமானது. இரண்டு தலைமுறையே போருக்கு காவு கொடுத்த நாம், இன்னொரு தலைமுறையை போரின் வடுக்களுக்கு  காவு கொடுக்கவேண்டியிருக்கின்றதோ என அஞ்ச வேண்டியிருக்கின்றது. யுத்தம் முடிந்த மூன்று வருடங்களான பின்னும், இன்னும் உருப்படியான காயங்கள் ஆற்றும்  எந்தவொரு  வேலைத்திட்டமும் செய்யப்படவேயில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். மேலும் இன்னுமே இராணுவக் கண்காணிப்பும், கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய ஒடுக்குமுறையும் இருக்கும் ஈழத்தில் எப்படி ஆகக்குறைந்தது அங்கிருக்கும் பாதிக்கபப்ட்ட மக்கள், தம் சக உறவுகளோடோ அயலவர்களோடு நடந்தவற்றை மனம் விட்டுக் கதைக்க முடியும்? எதைக் கதைத்தாலும் எவரைப் பார்த்தாலும் சந்தேகிக்கவேண்டிய நிலையில் சூழ்நிலையில் வாழும்போது எந்தவகையில்தான் யுத்ததிற்குள் வாழ்ந்த மக்கள் தம் மனதிலுள்ள பாரங்களை இறக்கிவைக்க முடியும்?


3..
இந்நூல் எழுதப்பட தொனி குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றன, சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து வரும் முக்கியமான ஒரு சாட்சியத்தின் முன், விமர்சனத்தை வைக்கவேண்டுமா என்கின்ற தயக்கங்களும் இருக்கின்றன.  இந்த ஆசிரியர் தொடக்கத்திலிருந்தே ஒரு குறிப்பிட்டவரைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவர்களை வன்னிக்குள் இருந்த வலதுசாரிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் அடையாளப்படுத்துகின்றார். அது எந்தவகையிலும் இச்சாட்சிய நூலிற்கு அவசியமில்லையெனவே நினைக்கின்றேன். எனெனில் யாரை யாரையெல்லாம் இத்தகைய அழிவுகளுக்குக் குற்றஞ்சாட்டவேண்டுமென்பதை வாசிப்பவர்கள் தாங்களாகவே அறிந்து கொள்வதற்கான வெளியை விட்டிருக்கலாம். மேலும் இந்த அழிவுகளுக்கு நாமெல்லோருமே முதலில் கூட்டுப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.  இப்பொறுப்பு ஈழத்தில் யுத்த பிரதேசத்திலிருந்தவர்க்கு மட்டுமில்லை, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஈழம் பற்றிய பிரக்ஞையுடன் தமிழ்நாட்டில் இருந்தவர்கள் என அனைவரையும் சேரும். அந்தக் கூட்டுப்பொறுப்பை எடுக்காத எந்த ஒருவரிடமிருந்தும் இனி ஈழம் பற்றி வரும் கருத்துக்களை நாம் சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டியிருக்கிறதென்பதையும் ஒரு கவனக்குறிப்பாக சொல்ல விழைகிறேன்.

வெவ்வேறு ஆயுதப்போராடங்கள் நடந்த நாடுகளின் வரலாற்றை மானுடவியலூடாக கற்கின்ற நண்பர் ஒருவர் கூறியது போல, புலம்பெயர்ந்தோ அல்லது அந்த யுத்தப்பகுதியிலிருந்து வெளியே இருக்கும் நமக்கு, வெளியிலிருந்து எதையும் சொல்லும்/செய்யும் பல்வேறு தெரிவுகள் இருக்கின்றன. ஆனால் ஈழத்தில் யுத்ததிற்குள் அகப்பட்டு இன்று உயிரோடு எஞ்சியிருக்கும் மக்களுக்கு அவ்வாறான எந்தத் தேர்வுகளுமில்லை (There is no luxury of choices). அவர்கள்,  தங்களுக்கு வாய்க்கக்கூடிய வளங்கள்/சூழலோடு தொடர்ந்து வாழ்ந்து  போகத்தான் வேண்டியிருக்கும். அவ்வாறான அவர்களின் வாழ்க்கை முறையை, தெரிவுகள் பல உள்ள சூழலில் வாழும் என்னைப்போன்ற புலம்பெயர்ந்தவர்கள் கட்டாயமாக விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தாயகத்திலிருப்பவர்க்கும் புலம்பெயர்ந்தவர்க்கும் இடையே விழுந்துகொண்டிருக்கும் இடைவெளி இன்னும் பெரிதாக விரிசலாவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது போய்விடும்.

இந்த நூலை வாசித்து முடித்தபோது இரண்டு விடயங்கள் என் முன்னே தாண்டிப்போக முடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. ஒன்று  இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடக்கப்படும் எந்தப் போராட்டத்திற்கும் மனமுவந்து ஆதரவு கொடுக்கமுடியுமா என்பது.  இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால இணைந்து வாழமுடியுமா? என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. எனெனில் இவ்வளவு அழிவுகள் நிகழ்ந்த சமகாலத்தில் நாம் கையறு நிலையில்தான் இருந்தோம் என்ற குற்றவுணர்விலிருந்தே அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய், எதைத்தான் பேசிவிடமுடியும்?

இந்நூலை மிகுந்த துயரத்தோடு வாசித்துக்கொண்டிருந்தாலும், இந்நூலின் ஆசிரியர் காயப்பட்டு காலை நகர்த்தமுடியாது, இனி தானும் தன் மனைவியும் சாகப்போகின்றோம் என எண்ணி மனைவிக்குத் தாம் வாழ்ந்த காலங்களை நினைவுபடுத்திக்கொண்டிருந்த இடத்தில் கண்கள் தானாகக் கலங்கியதைத் தடுக்கவேமுடியவில்லை. அவ்வாறாறு இறந்துபோன/காயப்பட்ட ஒவ்வொருவருக்குமாய் கலங்கினால் கடல்களைத்தான் நாம் கடன்வாங்கவேண்டியிருக்கும்.  ஈழத்தின் இன்றும் நடந்ததைச் சொல்லி அழவும் முடியுமால், மறக்கவும் முடியாமல் தம மனதில் ஆழமனப்படிமங்களாய் நினைவுகளை வைத்திருக்கும் மக்களின் ஒவ்வொரு பெருமுச்சின் பின்னும் சொல்லப்படாத ஆயிரமாயிரம் கதைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் என்றென்றைக்கும் மறந்துவிடவும் முடியாது.


நன்றி: அம்ருதா - மாசி/2013

பனி

Monday, January 21, 2013


-இளங்கோ
ஓவியம்: கருணா

அவன் பழைய கிங்ஸ்டன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற பகுதியில் நடந்து கொண்டிருந்தான். மெல்லியதாகப் பெய்த பனி, அணிந்திருந்த கறுப்பங்கியின் மேல் மல்லிகைப் பூவைப் போல விழுந்து கரைந்து போய்க்கொண்டிருந்தது.  வானத்தை மூடியிருந்த கருஞ்சாம்பல் போர்வை ஒருவகையான நெகிழ்வை மாலை நேரத்துக்குக் கொடுக்க, இலைகளை உதிர்த்த மரங்கள் தலைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்பது போலத் தோன்றியது.  எல்லா இழைகளும் அறுக்கப்பட்டு தானும் தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவனுக்குள் பரவத் தொடங்கியது. தலைவிரிகோல மரங்களைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய நடமாடும் மரமெனத் தன்னை உருவகித்தும் கொண்டான்.

இன்னகாரணம் என்றில்லாது கண்களிலிருந்து நீர் கசியத்தொடங்குமளவுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தான். கண்ணீரைக் கையால் துடைக்காது, அது விழுகின்ற பனியோடு சேர்ந்து கரைந்து போய்க்கொண்டிருந்ததை அசட்டை செய்து நடந்தபடியிருந்தான். மெல்லிய தூறலாய் விழும் பனியை நாவை நீட்டி ருசிப்பது அவனுக்கு எப்போதும் பிடித்தமான செயலென்பதால் இன்றும் பனியைச் சுவைத்துப் பார்த்தான். உவர்த்தது. இது பனியின் இயல்பல்லவே, தன் நினைவுதான் அதைக் கசப்பாக்குகிறது போலும் என யோசித்தான். இப்படியே நெகிழ்ந்தநிலையில் தொடர்ந்தும் நடந்து போனால், வாகனங்கள் நூறு கிலோமீற்றருக்கு மேலாய் விரையும் நெடுஞ்சாலையில் குதித்துவிடக்கூடுமென அஞ்சி இடதுபக்க வீதிக்குள் இறங்கினான். 86ம் இலக்க பஸ் வந்துகொண்டிருந்தது, சட்டென்று ஏறி அதனுள் அமர்ந்து கொண்டான்.

அவன் கனடாவிற்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஒழுங்கான விஸா இல்லாது வரும் பெரும்பான்மையினரைப் போலவே அவனும் வந்து சேர்ந்திருந்தான். வருகின்ற வழியில் கள்ளங்கள் செய்ததற்கு பயப்பிட்டதை விட,  கனடாவிற்கு வந்தபின் பயணத்திற்காய் பலரிடம் வாங்கிய கடன் காசுதான் இன்னும் அச்சுறுத்தியது. அது போதாதென்று இவனின் தாயார்  'வெளிநாட்டுக்குப் போய் மாறிவிடாதை, உனக்குப் பின் இரண்டு தங்கச்சிமார் இருக்கினம் என்பதை மறந்துவிடாதே' என அடிக்கடி நினைவுபடுத்தியுமிருந்தார். அம்மாவின் இந்த நச்சரிப்புத் தாங்காமலே, 'அங்கை போனவுடனையே ஒவ்வொரு காலையும் ஒரு தங்கச்சிக்கெனத் தாரை வார்த்து, உழைத்துக் காசு அனுப்புகிறேன் கவலைப்படாதையனை' என எரிச்சலுடன் இவன் சொன்னான்.

மொன்றியல் விமான நிலையத்தில்தான் முதலில் வந்திறங்கினான். 'எங்கே பாஸ்போர்ட்?' எனக் கேட்க, இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாகநடக்கின்றதெனச் சொல்லி கனடா இமிக்கிரேசனில் இரண்டு கைகளையும் உயர்த்தினான். கிரேஹவுண்ட் பஸ் எடுத்து ரொறொண்டோவிற்கு அடுத்த நாளே வந்து சேர்ந்திருந்தான். இவனுக்குத் தெரிந்த உறவினரொருவர் ரொறொண்டோவில் இருந்தது நல்லதாய்ப் போய்விட்டது. ஓர் அறையுள்ளஅபார்ட்மெண்டில் ஏற்கனவே இருந்த மூன்று பேருடன் நான்காவது ஆளாக இணைந்தான். ரொறொண்டோ போயிறங்கிய இரண்டாம் நாளே, தன் தாய் கூறியதை மறந்துவிடாது, 'அண்ணை எனக்கொரு வேலை எடுத்துத் தாங்கோ' என உறவுக்காரரிடம் கேட்டான். 'உன்னுடைய வயசுக்கு ஸ்கூலுக்குப் போறதை முதலில் பார். இல்லாட்டி பிறகு எங்களைப் போல கிச்சனுக்குள்ளேதான் முடங்கிக் கிடக்கவேண்டும்'  எனச் சிவா அண்ணா கூறினார். 

வெஸ்ட் ஹில் உயர்கல்லூரிக்குப் படிப்பதற்காய் செப்ரெம்பரிலிருந்து போகத் தொடங்கியிருந்தான். பாடசாலை முடிந்த மாலை நேரத்தில் ஒரு வேலையும் கிடைத்திருந்தது. 'கைகளைத் தூக்கிய கேஸ்' இன்னும் முடியாததால் சிவா அண்ணாவின் நம்பரில்தான் வேலை செய்தான். போகத் தொடங்கியிருந்த வேலைத்தளத்தில் ஆடைகள் தோய்ப்பதற்கான இரசாயனக்கலவையைத் தயாரிப்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. இவனது தொழில், அந்தக் கெமிக்கலை நான்கு 2-லீற்றர் கலன்களில் நிரப்புவதும், அதை எடுத்து ஒழுங்காய் பெட்டிக்குள் அடுக்கி வைப்பதும் என்பதாய் இருந்தது. வேலை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் ஒவ்வொரு முப்பது செக்கன்களில் நான்கு கலன்கள் நிரம்ப நிரம்ப எடுத்து, முதுகு வலிக்க வலிக்க அடுக்கவேண்டும். கொஞ்சம் நேரம் பிந்தினாலும் கலன்கள் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். இது போதாதென்று கண்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடி எப்போதும் அணிந்து கொண்டும் இருக்கவேண்டும். தப்பித் தவறி கெமிக்கல் சிந்தி கண்களைப் பாதித்து விடக்கூடாதென்பதற்கான முற்பாதுகாப்பு இது.

வேலைக்குப் போன முதல்நாள், வேலை முடியும்போது துடைப்பத்தைத் தந்து வேலை செய்த இடத்தைக் கூட்டிச் சுத்தமாக்கச் சொன்னார்கள். இலங்கையில் இருந்தபோது தும்புக்கட்டை இருந்த திசைக்கே போகாதவனுக்கு இது ஒரு மானப் பிரச்சினையாகப் போய்விட்டது. வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் செய்வார். அவருக்கும் ஏலாதென்றால் தங்கச்சிமார்தான் வீட்டைக் கூட்டுவது பெருக்குவது எல்லாம் செய்வது. கனடாவில் இப்படியாயிற்றே தன் விதியென நொந்து நிலத்தை உதைத்தான். ஊரில் பெடியங்களுக்கு இருக்கும் எழுதப்படாத சொகுசான வாழ்க்கையைக் கண்டு, பொம்பிளைப்பிள்ளைகள் மனமெரிந்து சாபம் போட்டுத்தான் தன்னைப் போன்றவர்களுக்கு இந்தநிலை இப்போது வந்திருக்கின்றதோ என யோசித்தும்பார்த்தான்.

பாடசாலைக்குப் போக ஆறு மணித்தியாலம், வேலைக்கு எட்டு மணித்தியாலம், பஸ்சில் போய்வர இரண்டு மணித்தியாலம் என ஒருநாளில் பதினாறு மணித்தியாலங்கள் இப்படியாகப் போய்விடும். சனி ஞாயிறுகளிலும் சும்மா இருக்காது வீடு வீடாகப் போய் பேப்பர் போடவும் தொடங்கியிருந்தான். இவன் கனடா வந்து ஒரு வருடம் ஆனபோதுதான் சிவா அண்ணா ஒரு யோசனை கூறினார். 'இப்படி நாங்கள் நான்கு பேரும் வீணாய் வாடகைக்கு பணத்தைச் செலவிடுவதை விட, ஒரு வீட்டை நான்கு பேருமாய்ச் சேர்ந்து வாங்கி மோட்கேஜ் கட்டுவோம்' என்றார். இவன் உட்படஎல்லோரும் தலா 3000 டொலர்கள் டவுன் பேமெண்ட் போட்டு வீடொன்றை மோர்னிங்சைட் பக்கமாய் வாங்கினார்கள். யாரேனும் ஒருவர் முதலில் திருமணம் செய்யும்போது, வீட்டை விற்றுவிட்டு எல்லோரும் சமனாகக் காசைப் பிரித்துக் கொள்வோம் எனவும் தீர்மானித்திருந்தனர்.

ஒருநாள் பாடசாலைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது பிலிப்பைன்காரப் பெட்டை ஒருத்தி தன் கையுறையைத் தவறவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி போய்க் கொண்டிருப்பதைக் கண்டான். இவன் ஓடிப்போய் நிலத்தில் வீழ்ந்திருந்த கையுறையை எடுத்து, முன்னே போய்க்கொண்டிருந்த அவளின் தோளைத் தட்டிக் கொடுத்தான். 'மிக்க நன்றி.  இது என் அம்மம்மா மூன்று வருடங்களுக்கு முன் கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தது. இப்போது அம்மம்மா உயிரோடு இல்லை. அவரின் நினைவாகஇதை வைத்திருக்கின்றேன். தொலைத்திருந்தால் அம்மம்மாவைக் கைவிட்டது போல வருந்தியிருப்பேன். மீண்டும் நன்றி' என்றாள். 'நீங்கள் அதிஷ்டம் செய்தவர்கள். உங்களின் நெருங்கிய உறவுக்காரர்கள் எல்லோரும் இங்கிருக்கின்றார்கள். எனக்கென்றுதான் எவரும் இங்கு இல்லை' என இவன் சொன்னான். 'Aaah..I am really sorry to hear it' என உண்மையிலே இவன் நிலை கண்டு வருந்தினாள் அவள்.  பிறகு ஒருநாள்  ஹலோவீனுக்கு தன் தம்பியோடு 'Trick or Treat' கேட்க, இவன் இருந்த வீட்டுக் கதவைத் தட்டினாள். 'நீ எங்களுக்கு அருகில்தான் வசிக்கின்றாய் என்பது எனக்குத் தெரியாதே' என இவன் கதவைத் திறந்ததைப் பார்த்து அவள் சொன்னாள். 'பேய்கள் அருகில் வசித்தால் தான் என்ன, தொலைவில் வசித்தால் தான் என்ன?பேய்கள் எப்போதும் பேய்கள் தானில்லையா?' எனச் சிரித்தபடி இவன் கூறினான்.

அவ்வப்போது பாடசாலையில் இருவரும் சந்தித்துக் கதைத்துக் கொண்டார்கள். அவளுக்காகவே இவன் பாடசாலை தொடங்குவதற்கு அரை மணித்தியாலம் முன்பாக கல்லூரிக்குப் போகத் தொடங்கினான். பாடசாலை முடிந்து மாலையில் நின்றும் அவளோடு ஆறுதலாகப் பேசலாம் என்றாலும், மாலை நேர வேலை அதற்கு இடங்கொடுப்பதில்லை. ஒருநாள் அவள் Thanks Giving டின்னருக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள். இவன் தனிமையில் இருக்கின்றான் என்றெண்ணியோ என்னவோ தெரியாது, கட்டாயம் வரவேண்டுமென கைகளைப் பிடித்தபடி சொன்னாள். இவன் தன்னை அவளின் குடும்பத்துக்கு அலாதியாக அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காய் Levis ஜீன்ஸும், CK ஷேர்ட்டும் அணிந்து கொண்டு போயிருந்தான். கனடா வந்து ரீவியை அவ்வப்போது பார்த்ததில் Thanks Giving டின்னருக்கு விருந்தாளிகளாகப் போகின்றவர்கள் அநேகமாய் வைன் போத்தல்களைக் கொண்டு போவதை அவதானித்திருந்தான். அவள் வீட்டுக்குப் போகமுன்னர் லிக்கர் ஸ்ரோரிற்கு போய் கொஞ்சம் விலை கூடிய வைனையும் வாங்கினான். தான் வைன் வாங்கும்போது தெரிந்த தமிழ் முகங்கள் எதுவும் கடையில் தெரிகிறதா எனச் சுற்றுமுற்றும் நோட்டமும் விட்டான். தெரிந்த சனம், தான் வைன் வாங்குவதைக் கண்டு, இந்தக் கதை இலங்கைக்குப் போனால், இவன் முழுநேரக் குடிகாரன் ஆகிவிட்டான் எனப் புலம்பி புலம்பி தன்னுடைய தாய் மனுசி கோயில் கோயிலாக ஏறக்கூடுமெனகிற பயந்தான் இதற்குக் காரணம். தாய்க்காரி அங்கேயிருக்கின்ற கோயில்களில் வைக்கின்ற நேர்த்திக்கும், அபிசேசங்களுக்கும் இவன் தானே மாய்ந்து மாய்ந்து உழைத்து, அதற்கும் பணம் அனுப்ப வேண்டியிருக்கும்.

அவளின் வீட்டுக்குள் போனபோது ஒரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. ஏதோ பிலிப்பையின்சையே அப்படியே கனடாவிற்குத் தூக்கிக் கொண்டுவந்தமாதிரி வீடு முழுக்கச் சனமாய் இருந்தது. அவளின் அம்மா, 'நீ சோறு சாப்பிடும் பழக்கமுடையவனா?' என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 'ஓம். ஒருநாளைக்கு ஒருமுறை...' என்றான் இவன். 'நாங்கள் மூன்று நேரமும் சாப்பிடுகின்றவர்கள். அதனால்தான் திடகாத்திரமாய் இருக்கின்றோம்' என்றார். இவனுக்கு அவரின் உடலின் அளவைப் பார்த்தபோது சூமோ வீரர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதைத்தான் திடகாத்திரம் என்று இவா கூறுகின்றாவோ என நினைத்து இவனுக்குச் சிரிப்பு வந்தது. 'எங்களின் குடும்பத்தின் எண்ணிக்கையைப் பார்த்து, இதைவிட தனியே இருப்பது நல்லதென யோசிக்கின்றாயோ' எனக் கேட்டபடி இவனை அவள் விருந்திற்குக் கூட்டிச் சென்றாள். 'அப்படி என்றில்லை, எப்போதும் இல்லாத ஒன்றுக்காய்தானே மனம் ஆலாய்ப் பறக்கும்' என்றான் இவன்.

பிறகான நாட்களில், இவன் ஆட்கள் குறைவாக இருக்கும் ஷோக்களுக்கு அவளோடு படம் பார்க்கச் சென்றான். ஆட்கள் நிறையக் கூடும் கிளப்புகளுக்கும் நிலவு ஒளிந்த இரவுகளில் அவளைக் கூட்டிச்சென்று நெருக்கமாய் நடனமும் ஆடினான்.  இலங்கையில் இருக்கும் தன் குடும்பத்திற்கு ஆறு நாள், இவளுக்கு ஒரு நாளென சனிக்கிழமைகளில் வேலை செய்வதையும் தவிர்த்தான். செஞ்சோற்றுக் கடன் போல,  இரண்டு தங்கச்சிமாருக்குச் செய்யவேண்டிய கடமைகள் முன்னே இருக்க, அதுவரை அவள் காத்திருப்பாளா என்பது குறித்த நிச்சயமின்மைகளும் தெரிந்தன. இதற்கிடையில் இவனுடைய  கல்லூரி நண்பர்கள், 'எந்தப் பெட்டையோடு என்றாலும் திரியடா, ஆனால் பிலிப்பீனோ பெட்டைகளோடு மட்டும் சகவாசம் வைத்துக்கொள்ளாதே. செல்லம் கொஞ்சிக் கொஞ்சியே கறக்கவேண்டியதை கறந்துவிட்டு வெறுங்கையோடுதான் அனுப்புவார்கள்' எனவும் எச்சரித்தார்கள். வேலை செய்கிற பக்டரியில் இருக்கிற சூப்பர்வைசர் தன்னைத் திட்டிக்கொண்டும் சுரண்டிக்கொண்டும் தானே இருக்கிறார். அதையே சகித்துக் கொண்டுதானே இருக்கிறேன். இவள் என்னிடம் இருந்து எதைச் சுரண்டிக் கொண்டு போனாலும் செல்லம் கொஞ்சித்தானே கொண்டு போகப்போகிறாள்; போனால் போகட்டும் என எண்ணிக் கொண்டான். நண்பர்கள் கூறியதுபோலஅவள் எதையும் இவனிடமிருந்து சுரண்டவும் இல்லை, தானாகக் கழற்றிக் கொள்ளவும் இல்லை. இவன் தான் அவள் உறவை வெட்ட வேண்டியதாகப் போயிற்று.

 சிவா அண்ணன் திருமணம் செய்யப் போகின்றேன் என்றார். அவர் இந்த வீட்டில் மூன்று  இளந்தாரிப் பெடியங்களோடு மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்து இருக்க அவ்வளவாய் விரும்பவில்லை. வசிக்கும் வீட்டை விற்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. இவன் மோர்னிங்சைட்டிலிருந்து ஐம்பது கிலோமீற்றர்களுக்கு அப்பாலிருந்த மிஸிசாக்கா பக்கமாய் இடம்பெயர்ந்தான். அவளோடு உறவைத் தொடரமுடியாமற் போனதற்கு தூரம் மட்டும் ஒரு காரணமில்லை; நீண்டகால உறவாய் அது இருக்கமுடியாது என்ற யதார்த்தமே இவனை இன்னும் பயமுறுத்தியது. தங்கைகள் இருவருக்கும் திருமணஞ் செய்துவைத்த பின்தான் எதையும் தனக்காய்ச் செய்யலாம் என்கிற சம்பிரதாயம் ஒருபக்கம் துன்புறுத்தியது. கலாச்சாரமும், தன் சமூகமும் தன்னை எல்லாத் திசைகளிலும் இறுக்குகின்றது என்பதை எல்லாம் விரிவாக விளக்கிச் சொல்லாது, தான் மிஸிசாக்காவிற்கு இடம்பெயர்கிறேன் என்பதை மட்டும் இவன் அவளுக்குச் சொன்னாள். அவளுக்கும் இனி என்ன நிகழும் என்பது விளங்கியிருக்கக் கூடும். 'உடலின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளை கிளர்த்தி, என்னுடன் தன் உடலைப் பகிர்ந்தவள் அவள்' என்கின்ற நினைவை இவன் தனக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

மீண்டும் சனிக்கிழமைகளிலும் வேலைக்குப் போகத் தொடங்கினான். பகுதி நேரமாய் ஹம்பர் கொலீஜுக்கு படிக்கப் போனான். ஒரு தங்கச்சிக்கு பிரான்சில் இருந்து பொருத்தம் ஒன்று பொருந்தி வர பாரிஸூக்கு நிறையச் சீதனக்காசு கொடுத்து தங்கச்சியை அனுப்பி வைத்தான். பிரான்ஸ் போன தங்கச்சி சிலவருடங்களின் பின், தன் கணவனின் உறவுகள் யாரோ சுவிசர்லாந்திலிருக்கும் ஒருவருக்குப் பெண் தேடுகின்றனர் என்று அறிந்து இவனுக்குச் சொன்னாள். ஆனால் அவர் ஏதோ இயக்கத்திலிருந்தவர் என்றாள். 'முன்னாள் இயக்கமோ இன்னாள் இயக்கமோ, ஆள் ஒழுங்கானவராய் இருந்தால் போதும்' என்று அவரைப் பற்றி விசாரித்து அறிந்து, தன் மற்றத் தங்கச்சியை சுவிசர்லாந்திற்கு அனுப்பி வைத்தான். 'இயக்கத்திலிருந்தார்களோ அல்லது இல்லையோ, ஆனால் சீதனம் வாங்குகின்ற கலாசாரத்தை மட்டும் மறக்காமல் இருக்கின்றார்கள்' என்று இவன் சீதனமாய் அனுப்பக் கேட்டகாசின் அளவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

தங்கச்சிமார் இரண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போனபிறகு இலங்கையில் தாயும் தகப்பனும் மட்டும் தனியே இருந்தார்கள். இவன் ஹம்பர் கொலீஜில் இரண்டு வருடங்களில் படித்து முடிக்க வேண்டிய பாடங்களை ஐந்து வருடங்களாய் எடுத்து, டிப்ளோமா பெற்றான். பட்டமளிப்பு விழாவிற்கென தன் தாயையும் தகப்பனையும் இலங்கையிலிருந்து எடுப்பித்தான். வந்த அவர்களை 'இனி அங்கே போய் என்னசெய்யப்போகின்றீர்கள்' எனக் சொல்லிவிட்டு அவர்களைத் தானே கனடாவிற்குள் வைத்து ஸ்பொன்சரும் செய்தான். வீட்டுக்கு வருகின்ற சனம் எல்லாம் 'இவனுக்கு எப்போது திருமணம்?' என்பதை மட்டும் மறக்காமல் கேட்டு விட்டுச் செல்வார்கள். தாய் மனுசியும்,'தம்பி நான் கண்ணை மூடுகிறதுக்குள்ளை பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டு கண்ணை மூடோனுமடா' என சின்னத்திரை சென்டிமென்டில் அடிக்கடி சொல்லத் தொடங்கிவிட்டார். பிலிப்பைன்காரியைத் திருமணம் செய்வோமோ என்றுகூட இவன் ஒருகணம் நினைத்தான். ஆனால் அவளைத் திருமணஞ்செய்தால் தமிழ் ஆண்களுக்குக் கிடைக்கக்கூடிய செளகரியங்கள் ஒன்றும் கிடைக்காது என்று ஆழமாய் யோசித்து அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

ஊரிலே பெண் பார்ப்பதே எல்லா வழிகளிலும் மிகச் சிறந்ததென முடிவெடுத்து, அப்போது அதிகபடங்களில் நடித்துக்கொண்டிருந்த சிநேகா மாதிரி ஒரு பெண் பார்க்கச் சொன்னான். 'சிநேகா மாதிரி என்றால் என்னமாதிரி?' என அங்கே இவனுக்காய்ப் பெண் பார்த்துக்கொண்டிருந்த சித்தப்பா ரெலிபோனில் கேட்டார். அப்போதுதான், சினிமாவே பார்க்காத சித்தப்பாவை பெண் பார்க்க புரோக்கராய் வைத்திருப்பது எவ்வளவு ஆபத்து என்பது விளங்கியது. அவர் அப்படிக் கேட்டதால் வந்த எரிச்சலில், 'பார்த்திபன் கனவில் வந்த சிநேகா மாதிரி' என்றான். 'சரி தம்பி, நான் உந்தச் சினிமாப் படம் ஒன்றும் பார்ப்பதில்லை தானே, சித்தி தான் ஒன்றுவிடாமல் எல்லாம் பார்க்கிறவா. அவாவிடம் கேட்டு சிநேகாவைத் தெரிஞ்சு கொள்கிறேன்' என்றார் சித்தப்பா. இவன் இதைச் சொன்னதன் பிறகுதான் அந்தப் படத்தில் வருகிற சிநேகாவிற்கு இடுப்பைத் தொடும் வரை இருந்த தலைமயிர் உண்மையானதா அல்லது போலியானதா என்ற சந்தேகம் வந்தது.

இரண்டு வருட டிப்ளோமா கோர்ஸை ஹம்பர் கொலிஜீல் செய்ததை, நான்கு வருடம் யூனிவசிற்றியில் கஷ்டப்பட்டு டிகிரி வாங்கிய அளவுக்கு கதையை மாற்றினான். மெஷின் ஒப்பிரேட்டராய் வேலை செய்வதை 'மெஷின் எஞ்சினியர்' என்று புதுப்பெயரும் கொடுத்தான். தகுதிகளைப் பொலிஷ் ஆக்கஆக்க தரப்படும் சீதனத்தின் அளவையும் கூட்டலாம் என்பதே இதற்குக் காரணம். தங்கச்சிமாருக்குச் சீதனம் கொடுத்தபோது மனமெரிஞ்சு எரிஞ்சு கொடுத்ததன் கடந்தகாலத்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். 'கொடுத்தகாசை எப்படியேனும் திருப்பி எடுக்கத்தானே வேண்டும்' எனப் பிறகு தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டான்.

 சுகந்தியின் பொருத்தத்தோடு இவனின் ஜாதகம் பொருந்தியிருந்தது. சுகந்தியின் புகைப்படத்தைப் பார்த்தபோது சிநேகாவின் எந்தச் சாயலும் இல்லாமலிருந்தது. சிலவேளைகளில் நேரில் பார்க்கும்போது சிநேகா போல இருக்கக்கூடுமெனத் தன்னைத் தேற்றிக் கொண்டான். சுகந்தியை இலங்கையில் போய் கலியாணங்கட்ட வேலையில் இரண்டு வாரங்கள்தான் விடுமுறை கொடுத்திருந்தார்கள். புது மெஷின் ஒன்றை பக்டரியில் இறக்கியிருந்ததால், அதற்கு மேல் லீவு தரமாட்டோம் என உறுதியாய்க் கூறியிருந்தார்கள். இலங்கைக்குப் போகமுன்னர், சுகந்தியை பிறகு கனடாவிற்கு ஸ்பொன்சர் செய்யும்போது, ஒரு பிரச்சினையும் வரக் கூடாதென்பதற்காய் லோயரைப் பார்க்கச் சென்றான். லோயர் 'திருமணத்திற்காய் இலங்கை போக முன்னரே கடிதங்களை மாறி மாறி உங்களுக்குள் அனுப்பிக் கொள்ளுங்கள்' என்றார். தொலைபேசியில் சுகந்தியோடு கதைப்பதை பேப்பர் ஸ்டேட்மென்டில் சான்றாதாரங்களாய் வைத்திருங்கள் என்றும் சொன்னார். திருமணம் நடக்கும்போது இன்ன இனன கோணத்தில் படங்கள்  எடுக்கவேண்டுமெனக் கூறிவிட்டு, கட்டாயமாய் ஒரு புகைப்படம் தாலியை போகஸ் பண்ணி நன்கு தெளிவாய் எடுக்கவேண்டும், மறந்துவிடாதீர்கள் எனவும் பயமுறுத்தினார். இதைவிட ஹனிமூன் போகும்போது நிற்கும் ஹொட்டலுக்குக் கட்டும் பில்,  இரண்டு பேரும் இயற்கைக் காட்சிகளின் பின்னணியில், சற்று நெருக்கமாய் நின்று கொஞ்சப் படங்கள்... எனஒரு நீண்டபட்டியலையக் கொடுத்தார். இவனுக்கு இதையெல்லாம் பார்த்து, இன்னும் கொஞ்சக் காலம் போனால் 'ஹனிமூனில் கட்டிலில் என்ன நடந்தது?' என்பதற்கும் புகைப்படச் சான்று இமிக்கிரேசன்காரன் கேட்பான்போல என்று தோன்றியது.

இவன் இலங்கைக்குப் போய் தன் விருப்புக்கேற்றமாதிரி இல்லாது, கனடா இமிக்கிரேசனின் 'யாப்புக்கு' ஏற்றமாதிரி திருமணத்தைச் செய்துகொண்டான். நுவரெலியாவிற்கு இவனும் சுகந்தியும் ஹனிமூனுக்குப் போனார்கள். 'இந்த ஹொட்டலுக்குத்தான் சிறிமா பண்டாரநாயக்காவின் குடும்பம் விடுமுறைக்கு வருகின்றவர்கள்' என ஹொட்டல் மானேஜர் சொன்னார். 'பரவாயில்லை, மாமா நல்ல வசதியான இடமாய்ப் பார்த்துத்தான் புக் செய்திருக்கின்றார்' என இவன் சிரித்தபடி சுகந்திக்குச் சொன்னான். இரவு சுகந்தியோடு முதன்முதலாக முயங்கியபோது, இவனுக்கு வேலை செய்யுமிடத்தின் மெஷின் சத்தம்தான் மூளைக்குள் ஓடியது. கனடாவில் வேலை, காசு என ஓடியோடி தன் மென்னுணர்வுகளைத் தொலைத்துவிட்டேன் எனச் சலித்துக்கொண்டான். இனி கனடா போய் நிறையத் தமிழ் படங்கள் பார்த்துத் தன் காதல் உணர்வை மீட்டெடுக்க வேண்டுமென அந்தவேளையிலும் தனக்குள் சபதமும் எடுத்தான்.

சுகந்தி கனடா வந்தபோது, கனடாவிலிருப்பவர்களுக்கெனஒரு ரிசெப்ஷன் வைத்தான். சுகந்திதான் எதையோ பறிகொடுத்தவள் போலச் சோகமாய் இருந்தாள். இப்போது எல்லாம் புதிதாக இருக்கும் போகப் போகஎல்லாம் சரியாகிவிடுமென இவன் நினைத்தான். நிறையத் தமிழ்ப்படங்களைப் பார்த்து 'காதல்' உணர்வை வளர்த்தபோதும் சுகந்திக்கு பெரிதாய் அந்தவிடயத்தில் ஆர்வமிருக்கவில்லை. கலியாணஞ்செய்வதே முக்கியமாய் அதற்கென நினைத்துக் கொண்டவனுக்கு இப்படி சுகந்தி இருப்பதைக் கண்டு எரிச்சல் வந்தது. ஒருநாள் நேரே கேட்டும் விட்டான். 'நீங்கள் இப்படி ஹய்வேயில் போகின்ற வேகத்தில் எல்லாம் வேண்டும் என்றால் என்னால் எப்படி சமாளிக்கமுடியும்' என அவள் ஒரு சாட்டுச் சொன்னாள்.  ஓ...அதுதான் சிக்கலா என்று ரெசிடென்சியல் ஏரியாவில் போகின்றமாதிரி 40 கிலோமீற்றர் ஆமை வேகத்தில் கட்டிலில் திருவிளையாடலைக் காட்டினான். அப்போதும் சுகந்தி முன்னர் மாதிரியே அதே துலங்கலைக் காட்டினாள்.

அதுவும் சிலநாட்களில் இவனின் ஆக்கினை தாங்காமல், 'உங்களுக்கு என்னுடைய உடம்புதானே வேண்டும்' என்று சொல்லிவிட்டு ஆடைகளை எல்லாம் கடகடவென்று களைந்துவிட்டு நிர்வாணமாய்க் கிடப்பாள். என்ன செய்தாலும், தன் கண்ணை மூடாது, விழிகளால் வெறித்தபடி இவனின் அசைவுகளை அவதானித்தபடியே இருப்பாள். இவனுக்கு கோயில்களில் நாக்கை நீட்டியபடி கையில் சூலாயுதங்களோடு நிற்கும் அம்மன் சிலைதான் அந்தநேரத்தில் சுகந்தியைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும்.

சுகந்தி கனடாவிற்கு வந்து ஆறேழு மாதங்கள் இருக்கும். ஒருநாள்,  இவன் வேலை செய்துகொண்டிருந்தபோது இவனது செல்லுக்குச் சுகந்தியிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. 'உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டு, 'எனக்கு டிவோர்ஸ் வேண்டும். எனக்குக் கனடா பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போகப் போகின்றேன்' என்றாள். இவனுக்கு மேல்தளத்தில் ஓடிக்கொண்டிருந்த மெஷின் தன் தலையில் விழுந்தமாதிரி இருந்தது. அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டை அரக்கப் பரக்க ஓடிவந்தான். சுகந்தி, தான் ஒருவரை இலங்கையில் காதலித்ததாகவும், வீட்டில் ஒருவருக்கும் அந்தப் பெடியனைப் பிடிக்காததால்தான் இவனைத் திருமணம் செய்யச் சம்மதித்தாகவும் கூறினாள். 'அப்படியெனில் ஏன் என்னை விருப்பமில்லாமல் கலியாணஞ் செய்தனீர்?' என இவன் திரும்பிக் கேட்டான். 'உங்களைத் திருமணம் செய்யும்போது எல்லாவற்றையும் மறந்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. எப்போதும் அவன் நினைப்பே இருக்கிறது. அவன் அளவுக்கு என்னை ஒருவராலும் நேசிக்கமுடியாது' என்றாள் உறுதியாய். 'உங்களின் நாசமாய்ப்போன காதலுக்கு, நானா பலிக்கடா ஆனேன்' என இவன் கோபத்தில் சுகந்தியைப் பார்த்துக் கத்தினான். அந்த நேரத்திலும் இவனுக்குள் ஓர் எண்ணம் ஓடியது. 'அப்படியெனில் நீர் என்னைக் கலியாணங்கட்டும்போது வேர்ஜின் இல்லையா?' எனக் கேட்டான். 'இப்போது தானே எங்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது. அதையறிந்து நீங்கள் என்னசெய்யப் போகின்றீர்கள்?' என்றாள் சுகந்தி.

இதெல்லாம் நடந்து ஒரு வாரத்தில் சுகந்தி கனடாவிலிருந்த தன் பெரியம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். சுகந்தி போகும்போது தன் வாழ்வையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள் என  இவன் கவலைப்பட்டான். உறவுகள் மட்டுமில்லை நண்பர்களும் கூட, 'ஒரு பொம்பிளைப் பிள்ளை இலங்கையில் இருந்து வந்து ஆறேழு மாதங்களில் விட்டு விட்டுப் போகின்றாள் என்றால் இவனில்தான் ஏதோ பிழையிருக்கிறது' என இவன் காதுபடவே கதைக்கத் தொடங்கினார்கள். இவனுக்கு இதையெல்லாம் கேட்க அவமானம் அவமானமாய் இருந்தது. மனம் ஆறுதலடைவதற்காகவேனும் சுகந்தியைப் பார்த்து நான்கு வார்த்தை தூசணத்தில் திட்டலாம் என்றாலும் அதற்கும் மனம் ஒப்பவில்லை. சுகந்தி இவனுக்கு என்ன தவறைச் செய்தாள்? அவள் ஒருவனை மனதார விரும்பியிருக்கிறாள் என்பதை விடவேறெதுவும் செய்யவில்லையே. 'நானுந்தானே ஒரு காலத்தில் பிலிப்பைன்காரியைக் காதலித்திருக்கின்றேன். என்னால் பிலிப்பைன்காரியைப் பிரிந்து வரமுடிந்தமாதிரி சுகந்தியால் அவள் காதலித்தவனை விட்டு வரமுடியவில்லை அவ்வளவு தான் வித்தியாசம்' என நினைத்துக்கொண்டான்.

ஆனால் இவனால் சுகந்தியை அவ்வளவு எளிதாய் மறக்கமுடியவில்லை. மனைவி எங்கே எனக் கேட்டு மற்றவர்கள் நினைவுபடுத்தியது ஒருபுறமிருந்தாலும் இவனளவில் கூடசுகந்தியின் நினைவுகளைத் தூக்கியெறியமுடியாதிருந்தது. 'எல்லோருடைய வாழ்விலும் ஒரு பெண் மறக்கமுடியாதவள் ஆகிவிடுகின்றாள்' என எங்கையோ படித்தது இவனுக்குள் நினைவில் இருந்தது. 'அவ்வாறு தன் வாழ்வில் மறக்கமுடியாத பெண் சுகந்தி' என எண்ணிக்கொண்டான். அவளுடைய செல்லம் கொஞ்சும் மழலைக்குரல் மெஷின் சத்தத்தை விடவும் இவனுள் அதிகம் ஒலிக்கத் தொடங்கியது. கனடா வந்த தொடக்கநாளில் காலில் கொலுசு போட்டுக்கொண்டு சுகந்தி திரிந்த பொழுதுகள், இருட்டிலும் ஒரு மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த அவளது மூக்குத்தி,  இடுப்பில் கறுப்புப் பொட்டைப்போல இருந்த ஒரு மச்சமென எல்லாமே இவனை விடாது துரத்தத் தொடங்கின. அவ்வப்போது மூளை விறைக்கத் தொடங்கியவனாக மாறிப் போகத் தொடங்கினான். இரவில் நித்திரை ஒழுங்காய் வராது பகலில் வேலை செய்யவும் கஷ்டப்படத் தொடங்கினான். இவனின் தடுமாற்றங்களைக் கண்டு வேலைத்தளத்தில் நின்ற ஒருத்தன்தான் கொஞ்சம் மரிஹுவானா பாவித்துப்பார் என அறிமுகப்படுத்தினான்.

முதலில் தன் நினைவு தறிகெட்டு அலைவதை ஒழுங்காக்கவேண்டும் என்று போதையைப் பாவித்தவனுக்கு பிறகு அது இல்லாமல் இருக்கமுடியாது போலத் தோன்றியது. வேலைக்குப் போவது ஒழுங்கில்லாது போக, கையில் காசும் இல்லாது கஷ்டப்படத் தொடங்கினான். நாலைந்து மாதங்களில் சுகந்தி விவாகரத்துப் பெற்று திரும்பவும் இலங்கைக்குப் போய்விட்டாள். சுகந்தி இனி என்றும் அருகில்  இருக்கமாட்டாள் என்ற நினைப்பு இவனை இன்னும் அதிகம் அலைக்கழிக்கத் தொடங்கியது.

நான் அப்போதுதான் வின்சரில் நான்காண்டுகள் படிப்பதாய்ப் பாவனை செய்துவிட்டு ரொறொண்டோவிற்குத் திரும்பி வந்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்காமல் எல்லாத் திசைகளிலும் மனம் நொந்து அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பெப்ரவரி மாதத்திலிருந்து நான் காதலித்துக் கொண்டிருந்தவளும் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள். என்ன காரணமெனக் கேட்டு அவளுக்கு ஆக்கினை மேல் ஆக்கினை கொடுத்தபோதுதான், ஒருநாள் அவளின் தோழி தொலைபேசியில் அழைத்து, '....... இன்னொருவரைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறாள். அவளை இனியும் தொடர்புகொண்டு தயவு செய்து தொல்லை கொடுக்கவேண்டாம்' என்றாள். ஒழுங்கான வேலை இல்லை, குளிர்க் காலநிலை என எல்லாமே மனதிற்கு இனம்புரியாத அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க, இப்போது எல்லாமுமாய் இருந்த அவளும் இல்லையென்றபோது எதையும் சிந்திக்கமுடியாதளவுக்கு எனக்கு மூளை இறுகத் தொடங்கியது.

'...... யாரையோ காதலிக்கத் தொடங்கிவிட்டாள்' என்ற செய்தியை அறிந்த மூன்றாம் நாள், வேலை தேடப் போகின்றேன் என வீட்டில் கூறிவிட்டு டவுன்ரவுணுக்குப் போனேன். காலையிலிருந்து வெளியே குளிருக்குள் அலைந்து, சட்டென்று ஒருகணத்தில் இனி வீட்டுக்கு என்றைக்குமாய்த் திரும்புவதில்லையென முடிவு செய்தேன். யூனியன் ஸ்ரேசனில் 'கோ' பஸ்ஸை எடுத்து தமிழாக்கள் அவ்வளவு இல்லாத்அ ஒரு நகருக்குப் போனேன். அங்கே போய்ச் சேரும்போது இரவு ஒன்பது மணியாகியிருக்கும். ஒவ்வொரு கடைகளுக்கும் இடையில் இருந்த இடைவெளிகளில் வீடுகளைத் தொலைத்த ஒரு சிலர் படுத்திருப்பது தெரிந்தது. ஒன்றிரண்டு பேர் குளிரைப் புறக்கணித்துப் பாடிக் கொண்டுமிருந்தார்கள். என்னால் குளிரைத் தாங்கமுடியாதிருந்தது. கதவுகள் சாத்தியிருந்த மூடப்பட்ட மொன்றியல் வங்கியிற்குள் படுப்பதற்காகப் போனேன்.

முகம் முழுதும் தாடி வளர்ந்து நீண்டதலைமுடியுடன் ஒருவர், காசு எடுக்கும் ஏடிஎம் மெஷினடியில் படுத்திருந்தார்.  நான் வந்த சத்தம் கேட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். சட்டென்று எனக்கு கடந்தகாலம் மின்னலாய் வெட்டிப் போனது.  இது சடகோபன் அண்ணா. நான் வெஸ்ட் ஹில்லில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இவர் பதின்மூன்றாம் தரம் படித்துக் கொண்டிருந்தவர். அவரின் கதை கூட எனக்குத் தெரியும். பின்னாளில் சுகந்தியோ யாரையோ கலியாணங்கட்டி அந்தப் பெண் அவரை விட்டு இலங்கைக்குப் போனதுவரை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் சடகோபன் அண்ணாவை இப்படியான நிலையில் சந்திப்பேன் என நினைத்தும் பார்க்கவில்லை. அவரின் கதையை அறிந்தபோது கூட, 'ஒரு பெட்டைக்காய் இப்படி யாரும் தம் வாழ்வைத் தொலைப்பார்களா?' என என் நண்பன் நக்கலடித்ததும் நினைவுக்கு வந்தது. ஆனால் சடகோபன் அண்ணாவுக்கு என்னை நினைவில் இல்லை. அவர் யாரோ பாங் மெஷினில் காசு எடுக்க வந்திருக்கின்றார் என நினைத்திருக்கின்றார். 'Can you buy a coffee for me?' எனக் கேட்டார். அவரின் கோலமே அவர் வீட்டை விட்டு எப்பவோ ஓடிவந்து விட்டார் என்பதைச் சொல்லியது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இனி வீட்டை என்றுமே திரும்பிப் போவதில்லை என முடிவு செய்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றும் ஒரே குழப்பமாய் இருந்தது. முதலில் சடகோபன் அண்ணாவிற்கு கோப்பி வாங்கிக்கொடுப்போம் என 'செகண்ட் கப்'பில் கோப்பி ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரைத் திரும்பிப் பார்க்காது நடக்கத் தொடங்கினேன்.

வெளியே இப்போது பனி கொட்டத் தொடங்கியிருந்தது. இலைகளில்லாத மரங்கள் அங்கும் இங்குமாய்த் தெரிந்தன. நான் அணிந்திருந்த கறுப்புக் குளிரங்கியின் மேல் பனி விழுந்து கரைந்து கொண்டிருந்தது. அடக்கப்பட்டஎல்லா உணர்வுகளும் மடைதிறந்தாற் போல எனக்கு கண்ணீர் வரத்தொடங்கியிருந்தது. எதற்காய் அழுதுகொண்டிருக்கின்றேன் எனவும் தெரியவில்லை. நான் கண்ணீரைக் கவனிக்காமல் நடந்து போய்க் கொண்டிருந்தேன். உதடுகளில் விழுந்த பனி கண்ணீரோடு சேர்ந்து உவர்ப்பது போலத் தோன்றியது.

மனம் விட்டு அழஅழஎ ல்லாம் வெளிப்பது போலத் தோன்றியது. பதினாறு வயதில் ஒருவரைக் காதலித்து அது தொலைந்துபோனபோது சாவதற்கு மாடியில் இருந்து குதிக்கமுயற்சித்தது நினைவில் வந்தது. அடுத்தமுறை கச்சிதமாய் தற்கொலையைச் செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தபோது, என் நண்பன் ஒருவன் என்ன காரணத்திற்காகவோ, நான் முயற்சித்த நான்காம் நாள் தற்கொலை செய்திருந்தான். 

இப்போது இன்னொரு காதலில் தோற்று வீடே வேண்டாம் எனத் தீர்மானித்து வீதிக்கு வந்தபோது சடகோபன் அண்ணாவை இந்தநிலையில் சந்திக்க வேண்டியிருந்தது. என் ஒவ்வொரு காதல் தோல்வியின் பொருட்டும், நான் பலியாவதற்கு முன் யாரோ எனக்காய்த் தம் வாழ்வைப் பலி கொடுக்கின்றார்களோ என்ற நினைவு எனக்குள் ஓடியது.

சடகோபன் அண்ணாவையும், என் நண்பனையும் நினைத்து நெஞ்சு ஒருகணம் நடுங்கி விதிர்விதிர்த்தது. நான் அப்போது பாலமொன்றைக் கடக்கவேண்டியிருந்தது. கீழே நதி உறைந்தும் உறையாத மாதிரி ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் குதித்துவிடுவேனோ என்று எனக்கே என்னில் நம்பிக்கை இல்லாது இருந்தது. பஸ்சொன்று எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தது. உடனேயே ஓடிப்போய் அதற்குள் ஏறிக்கொண்டேன். வீட்டை திரும்பிப் போய்ச் சேர நள்ளிரவு பன்னிரண்டரை மணியாகிவிட்டது. அம்மா நித்திரை கொள்ளாது எனக்காய் காத்துக்கொண்டிருந்தார். 'இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தாய்?' எனக் கேட்டார். 'சடகோபன் அண்ணை வீட்டை போயிருந்தேன்' என்றேன். 'சடகோபனா, அவன் யார்?' என்று அம்மா என்னிடம் திருப்பிக் கேட்கவே இல்லை.

...........................................
(2012)
நன்றி: அம்ருதா (தை, 2013)