கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நான், ஜெஸி மற்றும் நீங்கள்

Wednesday, October 08, 2014


நீங்கள் முன்பு படித்த வளாகத்திற்கு, பின் எப்போதாவது போனதுண்டா? ஒருகாலத்தில் உங்களுக்கு நெருக்கமாயிருந்த இடங்கள் அந்நியமாகிப் போயிருப்பதை உணர்ந்திருக்கின்றீர்களா? அல்லது புதிய மாணவர்களின் மலர்ச்சியான முகங்களைப் பார்த்தபின், இன்னும் கொஞ்சக் காலம் வளாகத்தில் இருந்து படித்திருக்கலாமோ என்று யோசித்திருக்கின்றீர்களா? கடந்த காலம் விட்டுச் சென்ற சுவடுகள் அழியாமல் இருப்பதும், ஆனால் அதை பின் தொடர்ந்து போக முடியாதென யதார்த்தம் உணர்த்தவும், என்ன செய்வதென்று திகைக்கவும் செய்கின்ற ஒருவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்களா? அப்படியாயின் நீங்கள் உங்களை ஜெஸியில் அடையாளங கண்டுகொள்ள முடியும்.



கலைத்துறையில் பட்டம் பெற்றுவிட்டு, இன்னொரு வளாகத்தில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் துறையில் ஜெஸி வேலை செய்துகொண்டிருக்கின்றார். வாழ்க்கையும் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சேர்ந்து வாழ்ந்த காதலி பிரிந்து போகின்றார், ஆடைகளைத் துவைக்கச் செல்லும் இடத்தில் யாரோ ஒருவர் அனைத்து ஆடைகளையும் களவாடியும் செல்கின்றார். வாழ்க்கை என்பது ஆச்சரியங்களினால் மட்டுமில்லை, எதிர்பாராத நெருக்கடிகளினாலும் சூழ்ந்ததென சோர்ந்து போயிருக்கும் ஜெஸியிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அவருக்குக் கற்பித்த, மார்க்சியத்தில் ஈடுபாடுடைய பேராசிரியர் கற்பித்தலிருந்து ஓய்வுபெறப் போகின்றார் எனவும், தனது பிரிவு உபசார விழாவில் ஜெஸியும் கலந்துகொள்ளவேண்டுமென அழைப்பு விடுகின்றார். விழாவில் கலந்துகொள்ள அவ்வளவு பிரியப்படாதபோதும், வாழ்வின் தினசரி நெருக்கடியிலிருந்து தப்பிவிடலாமென்பதால் தான் படித்த வளாகத்திற்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு ஜெஸி போவதற்குச் சம்மதிக்கின்றார்.
பதின்மம் மெல்லியதாகக் கரைந்து முடிகின்ற ஒருகாலத்தில் வளாகம் சென்றிருக்கின்றீர்களா? அப்படியானால் என்னோடும், என்னை அடையாளங் கண்டுகொள்கின்ற ஜெஸியோடும் சேர்ந்து சற்று வாருங்கள். ஜெஸியைப் போலவே மீண்டும் நீண்ட காலங்களுக்குப் பின் வளாகம் செல்லும் உங்களையும் அந்தச் சூழல் வசீகரிக்கவே செய்யும். வாழ்வில் கசப்பான காலங்களைச் சந்தித்திருந்தாலும் வாழவு இன்னும் சலிக்காது உயிர்ப்புடன் இருப்பதைப் போல, உங்களுக்கு வளாகம் எவ்வகையான நினைவுகளைத் தந்திருந்தாலும், நீங்கள் நுழையும்போது உங்களையறியாது goosebumps களைத் தருவதை இப்போது உணர்கின்றீர்களல்லவா?
ஜெஸி வளாகத்திற்குள் நுழையும்போதே ஒரு பதினமராகிவிடுகின்றார். வழி நெடுக இருக்கும் பெஞ்சுகளில் ஏறிக்குதிக்கிறார். கடந்து போகும் அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கின்றார். உற்சாகமிகுதியில் புல்வெளியில் படுத்துக் கிடந்தபடி திறந்த வானத்தை மனம் நிறைந்து இரசிக்கிறார். இனி ஜெஸியைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. நீங்கள், நான், ஜெஸி எல்லோரும் கிட்டத்தட்ட ஒருவராகப் போய்விடுகின்றோம்.
நாம் இப்போது எமக்குப் பிடித்த பேராசிரியரைச் சந்திக்கின்றோம். பிரிவுபசார நிகழ்வில் பேராசிரியரின் நண்பர்களுடன் அளாவுகின்றோம். அங்கே தற்செயலாக அந்த நண்பர் ஒருவரின் மகளையும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு நீங்கள் எப்படியும் பெயரிட்டுக் கொள்ளல்லாம். எளிதாக இருப்பதற்கு ஸிபி என அவளை அழைத்துக் கொள்கின்றேன். ஆரமப அறிமுகத்திற்குப் பிறகு அவளை நீங்கள் சந்திக்கும் எத்தனையோ பெண்களில் ஒருவரென மறந்தும் விடுகின்றீர்கள்.
இடையில் நீங்கள் நீளுமொருவிரவில் ஒரு வித்தியாசமான மனிதனை வளாகத்துப் பெஞ்சில் சந்திக்கின்றீர்கள். அவன் உங்களுக்கு விநோதமானவாத் தெரிந்தாலும், அவனை உங்களுக்குப் பிடித்துவிடுகின்றது. அவன் எளிதில் உங்களுடைய அலுப்பான வாழ்க்கையைக் கண்டுகொண்டதில் இன்னும் ஆச்சரியமடைகின்றீர்கள். இந்த இரவு இப்படியே முடிந்துவிடக்கூடாதென, இசை அதிரும் மாணவர்களின் கொண்டாடத்திற்குக் கூட்டிச் செல்கிறான். மகிழ்ச்சியாயிருக்கும் மாணவர்களிடையே உங்களை ஒருவராகப் பொருத்திக் கொள்ள முடியாதிருக்கின்றது. நீங்கள் அங்கிருந்து விடைபெற விரும்புகின்றீர்கள்.
அப்போது தற்செயலாய் ஸிபியை மீண்டும் சந்திக்கின்றீர்கள். அவளுக்கு உங்கள் வரவு ஆச்சரியமாயிருக்கின்றது. இவ்வாறான இடங்களிற்குரிய ஆடையை நீங்கள் அணிந்திருக்கவில்லையெனக் கூறிவிட்டு, உங்கள் கழுத்துப் பட்டியை நெகிழ்த்துவிடுகின்றாள். நெகிழ்ந்தது உங்கள் கழுத்துப்பட்டி மட்டுமல்ல, நீங்கள் இறுக்கி மூடியிருந்த இதயத்தின் வாசல்களுமே. எனினும் வெளியே போகவே இன்னும் விரும்புகின்றீர்கள்.விநோதமான உங்கள் நண்பன், ஸிபியிற்கு உங்கள் மீது ஏதோ ஈர்ப்பு இருக்கிறதெனச் சொல்லி, நீங்கள் சுதாகரிப்பதற்குள்ளேயே, ஸிபியுடன் அடுத்தநாள் காலை தேநீர் அருந்துவதற்கான சந்திப்பையும் ஏற்பாடு செய்துவிடுகின்றான்.
ஸிபியைச் சந்திக்கக் காத்திருக்கின்றீர்கள். இடையில், நீங்கள் வளாக காலத்தில் வாசித்த பெரும்புத்தகம் ஒன்றை வாசிக்கும் ஒருவனைக் கண்டு நெருக்கம் கொள்கின்றீர்கள். ஸிபி உற்சாகமாய் வருகின்றாள். தேநீருடன், அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்குகின்றீர்கள். உங்களுக்குப் பரிட்சயமான இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் கடந்தகால நினைவுகளை ஸிபியுடன் உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கின்றீர்கள். ஸிபி இரண்டாமாண்டு மாணவி என்றாலும் அறிவுக்கூர்மையுடைய பெண். உங்களுக்கு நிகராக எல்லாவற்றையும் கதைக்க, நீங்கள் இன்னும் நெருக்கத்தை உணர்கின்றீர்கள். அவளுக்குப் பிடித்தமான நாடக மேடையில், அவள் தன் நினைவுகளைப் பகிர்கிறாள். மகிழ்ச்சியின் விளிம்பில் உங்களை முத்தமிட விரும்புகின்றாள். உங்களுக்கு அச்சமாயிருக்கின்றது. உங்கள் தயக்கத்தைப் புரிந்துகொண்ட ஸிபி நெற்றியிலும், கன்னங்களிலும் முத்தமிட அனுமதி கேட்கின்றாள்.
வளாகததிற்குள் இருந்த கொஞ்சநாட்களிற்குள் இந்த வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று தோன்றுகின்றது. அதற்கு ஸிபிதான் முக்கிய காரணம் என்பதையும் நினைவுபடுத்தத் தேவையும் இல்லை. ஸிபியிடமும், வளாகத்திடமிருந்தும் விடைபெற்றுக் கொள்கின்றீர்கள். ஸிபி, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்கிறாள். கடிதம் என்பது மின்னஞ்சல்களோ, ரெக்ஸ் மெஸேஜ் போன்ற நவீன தொழில்நுட்பத்தினால் விளைந்தவற்றையல்ல அவள் குறிப்பிடுவது. கையால், மை நிறைந்து எழுதபட்ட எழுததுக்கள் என நினைவுபடுத்துகின்றாள். அதுமட்டுமில்லாது செவ்வியல் மற்றும் ஓபரா இசைகளை அறிமுகப்படுத்துகின்றாள். எப்படி உரிய முறையில் கேட்பது எனவும் கற்றுத் தருகின்றாள். எழுதும் கடிதங்களினால் மட்டுமே நீங்களிருவரும் தொடர்பில் இருக்கின்றீர்கள்.

ஸிபியின் கடிதங்கள் இப்போதும் உங்களின் வாழ்க்கையின் ஒருபகுதியாகிவிட்டது. கலை என்பது எப்படி வாழ்க்கையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நகர நெருக்கடி வாழ்க்கையிற்குள் இருந்தபோதும் தெளிவாக உணர்ந்துகொள்கின்றீர்கள். நகரத்தில் தனித்திருந்தாலும், வெளியில் காணும் எல்லோரையும் பார்த்து முகம் மலர்ந்து சிரிக்கின்றீர்கள். அவர்கள் பதிலாய்த் தரும் சிரிப்பில் ஸிபியை நினைவு கூருகின்றீர்கள்.

இப்போது சட்டென்று இந்த உறவு எங்கே போய் முடியப்போகின்றதென்று யோசிக்கத் தொடங்குகின்றீர்கள். 19 வயதில் இருக்கும் பெண்ணோடு 30களில் இருக்கும் உங்களுக்கான வயது வித்தியாசம் நெருடலைத் தருகின்றது. வெவ்வேறு காலங்களில் நீங்களும் அவளும் என்ன வய்தில் இருப்பீர்களென தாளில் எழுதியெழுதிப் பார்க்கின்றீர்கள்.நீங்கள் 80களில் இருக்கும்போது அவளுக்கு 70 வயதாக இருக்குமென நினைத்து அந்த நினைவுகளை சற்று ஒதுக்கி வைக்கின்றீர்கள்.

ஒருநாள் ஸிபி உங்களை நேரில் காணவேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். உங்களை அவளின் கடிதங்கள் நெகிழ்த்தியதுபோல, அவளையும் நீங்கள் எழுதியவை மலர வைத்திருக்குமல்லவா? உங்களுக்கு அவள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்ற தயக்கம் இருக்கிறது. நிறைய யோசித்தபின், வருவது வரட்டுமென ஸிபியைச் சந்திக்க, நீங்கள் படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். உங்கள் எதிர்பாராத வருகை ஸிபியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அவளது மாணவ அறையில் நீங்கள் இருவரும் இருந்து நிறையக் கதைக்கின்றீர்கள். தற்செயலாய் ஸிபி vampire வகை Twilight நாவல்களைப் படிப்பதைப் பார்த்து ஆச்சரியப்படும் நீங்கள் ஸிபியோடு ஒரு விவாதத்தைத் தொடங்குகின்றீர்கள். இவ்வளவு அறிவுக்கூர்மையுள்ள ஸிபி இவ்வாறான நாவல்களை வாசிப்பாள் என்பதை நம்பமுடியாதிருக்கின்றது. ‘இதையேன் வாசிக்கிறாய்?’ என்று கேட்கின்றீர்கள். ‘வாசிக்கும் எல்லாவற்றுக்கும் ஏதாவது காரணம் இருக்கவேண்டியிருக்கா, பிடித்திருக்கிறது வாசிக்கிறேன்’ எனகிறாள் ஸிபி. நீங்கள் தொடர்ந்து அது வாசிப்பதற்குரிய நாவலே இல்லை என விவாதிக்கின்றீர்கள். ‘நாவலை வாசிக்காமல், அது குறித்துக் கருத்துச் சொல்வது தவறு, உனக்குப் பிடிக்காதவை எல்லாவற்றையும் எரிக்கச் சொல்லிவிடுவாய் போலிருக்கிறது, இவ்வாறு விவாதிப்பதே ஆபத்து’ என்கிறாள்.

உங்களை ஏதோ ஒருவகையில் ஸிபி தீண்டிவிடுகிறாள். நான் இந்த நாவல்களை வாசிக்கும்வரை உன்னோடு பேசப்போவதில்லையென நாவலையெடுத்துக்கொண்டு போய் வாசிக்கத் தொடங்குகின்றீர்கள். அடுத்த நாள் ஸிபியைச் சந்தித்து, ‘வாசித்து முடித்துவிட்டேன், இதுவே நான் ஆங்கிலத்தில் வாசித்த மிக மோசமான நாவல் ‘என்கின்றீர்கள். ‘அப்படியாயின் மற்றமொழிகளில் இதைவிட மோசமான நாவல்கள் இருக்கின்றதா’ எனத் துடுக்குத்தனமாய் ஸிபி கேட்கிறாள். ‘தெரியவில்லை, ஆனால் இந்த நாவலை மற்ற நாவல்களில் மொழிபெயர்க்கும்போது இதுவே அந்தந்த மொழிகளிலும் மோசமான நாவலாய் இருக்கும் என்பது உறுதி’ என பதிலிறுக்கின்றீர்கள். இங்கேதான் நீங்கள் ஒரு வளாகத்து மாணவர் இல்லையென்பதையும், அதேபோல் நீங்கள் ஒரு முதிர்ச்சியடைந்த ஒரு ஆணாக மாறவில்லை என்பதையும் காலம் உங்களுக்குச் சுட்டி நிற்கின்றது.

அன்றிரவு ஸிபி தன்னோடு தங்கியிருந்த தோழியை வெளியே அனுப்பிவிட்டு, உங்களை தன் அறைக்கு அழைக்கிறாள். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, ‘இதுதான் எனக்கு முதன்முறை என்னைக் கவனமாகக் கையாளு’ என்கின்றாள். உங்களுக்கு ஸிபி மீது நட்பை மீறிய காதல் இருக்கிறது. ஏன் காமம் கூட அவ்வப்போது தலைதூக்கிப் பார்ப்பதுண்டு. ஆனால் இத்தனை வயது வித்தியாசமுள்ள பெண்ணோடு, உறவுக்குப் போவது நெருடலாயிருக்கின்றது. நீங்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தவிர்க்கப் பார்க்கின்றீர்கள். ‘எனக்கு எல்லாம் தெரியும், நான் நிறைய யோசித்தே மனமுவந்து என்னைத் தருகின்றேன்’ என்கிறாள் ஸிபி. நீங்கள் அவளை வேறு வழியில் திசை திருப்ப முயல்கின்றீர்கள். ஸிபியிற்கு தன் ஆசை நிராகரிப்பட்டதால் கோபம் வருகின்றது. இனி என்னைச் சந்திக்காதேயென உங்களை அறையை விட்டு வெளியே போகச் சொல்கின்றாள்..

உங்களுக்கு இந்த இரவு மிக நீண்ட இன்னொரு துயர் மிகுந்த இரவாய்ப் போய்விடுகின்றது. பாரிற்குப் போய் நிறைய மதுவை அருந்துகின்றீர்கள். அங்கே உங்களுக்கு ஆங்கில இலக்கியம் படிப்பித்த, புத்தகங்கள் மீது காதல் வரச் செய்த உங்கள் ஆங்கிலப் பேராசிரியையைச் சந்திக்கின்றீர்கள். அவருக்கும் அன்றைய இரவு நிம்மதியற்றதாக இருந்திருக்கும் போலும். இரவிரவாய் நிறையக் கதைத்து, பேராசிரியையின் வீட்டுப் படுக்கையறை வரை போகச் செய்கின்றது. நீங்கள் அவரோடு நெருக்கமாய் இருந்த பொழுதில், ‘நீங்கள்தான் கவிதையை இந்தளவிற்கு வாழ்வோடு நெருக்கம் கொள்ளமுடியும்’ என சொல்லித் தந்தவர் என நெகிழ்கின்றீர்கள். அவர், ‘கவிதையும் வாழ்க்கையையும் ஒன்றென முட்டாள்தனமாய் ஒப்பிட்டுக்கொள்ளாதே’ என் இன்னொரு பாடத்தைக் கற்பித்து விடியமுன்னரே தன் வீட்டை விட்டுத் துரத்திவிடுகின்றார்.

நீங்கள் இப்போது மீண்டும் உங்களின் அலுப்பான வாழ்க்கையிற்குள் நுழைந்துவிட்டீர்கள். இடையில் ஸிபியோடு சந்தித்த இன்னொரு மாணவனின் தற்கொலையைக் காப்பாற்ற படித்த வளாகத்திற்குச் செல்கின்றீர்கள். அவனுக்கு, ‘புத்திசாலியாக இருப்பதால் இளமையில் சாகலாம் என்று நினைக்காதே, வயது முதிர்ந்து கூட இயற்கையாகச் சாகலாம்’ என்று அறிவுரை கூறுகின்றீர்கள். நீங்கள் வளாக காலத்தில் கனதியான புத்தகங்களை வாசித்ததுபோல, வாசிக்கும் அவனிடம் இன்னும் மனச்சிக்கல்களை ஏற்படுத்தும் புத்தகங்களை பிடுத்தெறிந்துவிட்டு, மனதை இன்னொருபக்கம் திருப்பக்கூடிய, vampire வகை நூற்களை வாசிக்கச் சொல்கின்றீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ஸிபியைச் சந்திக்கவே இல்லை.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள் திரும்பவும் புத்தக உலகிற்குள் மூழ்கின்றீர்கள். உங்களின் புத்தக வாசிப்பு, புத்தகக் கடையில் வாசிக்கும் பெண்ணொருத்தியுடன் நட்பைக் கொண்டு வருகிறது. புத்தகங்கள் எப்போதும் எங்களை வேறு உலகில் எங்களையறியாமலே வாழ வைக்கின்றன. புத்தகங்களுடன் எனக்குரிய உலகிற்குள் இருந்துவிட்டேன். இப்போதுதான் கொஞ்சம் வெளி வாழ்க்கையிற்கும், வெளி மனிதர்களோடும் பழக முயற்சிக்கின்றேன்’ எனத் தன் தவிப்பைச் சொல்லும் அனா உங்களுக்குரிய நெருக்கமான அலைவரிசையில் இருப்பதைக் கண்டுகொள்கின்றீரகள்.

பிறகான காலங்களில் உங்களுக்குரிய காதலை அனாவால் மட்டுமே தரமுடியுமென்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆனால் ஸிபியின்றி, அனாவின் அருமையை உணர்ந்திருக்க முடியாது என்பதும் உங்களுக்கும் நன்கு தெரிகிறது. ஸிபி உங்கள் வாழ்வில் வந்ததை நினைவுகூருமுகமாகவும், அவள் தந்த அழகிய நாட்களுக்கு நன்றி செலுத்தவும் அவளுக்கு vampire வகையான ‘டிராகுலா’ புத்தகத்தை அனுப்பி வைக்கின்றீர்கள்.

ஸிபி அந்த நூலைப் பார்த்து மகிழ்ச்சியடையும் தருணத்தில் உங்களுக்கான இன்னொரு நாள் அழகாகின்றது. நீங்கள் ஸிபியையோ அல்லது ஸிபி உங்களையோ மறப்பது அவ்வளவு எளிதன்று. எனெனில் எதையும் எதிர்பார்க்காத காதல் என்பது அடியாழங்களில் புதையுண்டு போகாது என்றுமே உயிர்ப்புடன் இருப்பதுதானில்லையா?

( Liberal Arts திரைப்பட பாதிப்பில் எழுதியது)
நன்றி: எனில்

அன்னாவும், ஸோஃபியாவும், நம் வாசிப்புக்களும்...

Tuesday, September 23, 2014

1.
தஸ்தயேவ்ஸ்கியின் அன்னாவையும், டால்ஸ்டாயின் ஸோஃபியாவையும் புரிந்துகொள்வது என்பது மிகவும் சிக்கலானது. அதேபோன்று தஸதயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் மதிப்பிடும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அதன் பின்னணிகளையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். படைப்பாளிகளைப் போல, அவர்களின் துணைகளினூடாக வரும் 'கதைகளும்'  வாசகர்களைச் சலனமடையச் செய்கின்றன. இவற்றில் பல படைப்பாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் 'திருவுரு'க்களை மேலும் செதுக்குகின்றன. சில அவர்கள் மேல் ஏற்றப்பட்ட விம்பங்களைச் சிதைக்கவும் செய்கின்றன.

படைப்பாளிகள் நமது அகவுலகத்தில் தத்தம் படைப்புக்களினூடாக நெருக்கம் கொள்கின்றனர். அதேவேளை இந்த நெருக்கமானது, படைப்பின் உச்சத்தினூடாக நிகழ்த்திக்காட்டப்படுகின்றதே தவிர, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துகொள்வதனால் உண்டானதல்ல என்பதைப் பலர் மறந்தே போய்விடுகின்றனர். படைப்பாளி என்பவர் கூட, படைப்பின்போது வேறொரு மனிதராக மாறிவிடக்கூடியவராக இருப்பினும், பின்னர் நம்மைப் போன்ற சாதாரண மனிதராக வந்துவிடக்கூடிய ஒருவரே. ஆகவே அந்தப் படைப்பாளி சாதாரண மனிதர் செய்யக்கூடிய எல்லாத் தவறுகளையும் செய்யும்போதோ, தனது பிழைகளை அவர்  திருத்தத்தெரியாது திகைக்கும்போதோ, நாம் வேறொருவிதமான விம்பத்தை அவருக்குக் கொடுக்கக்கூடியவராக ஆகிவிடுகின்றோம்.

எவ்வகைக் கலையானாலும், படைப்பு மனம் ஒருவரை குழந்தையாகவோ, மனம் சிதறச்செய்கின்றதாகவோ அல்லது நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத நிலைகளுக்கோ உருமாற்றம் செய்யவும்கூடும். ஆனால் படைப்பினூடாகத் தரிசிக்கும் அந்த நிலையிலேயே, நாம் படைப்பாளிகளைச் சந்திக்கும்போதோ அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அறியும்போதோ இருக்கவேண்டும் என்றெதிர்ப்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.


2.
'படைப்பை பார், படைப்பாளியைப் பாராதே'  என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாடல். ஆனால் நம் தமிழ்ச்சூழலில் அதை கேலிக்குரியதாக்கிய பெருமை, இதன் உண்மையான அர்த்தத்தை விளங்காதவர்களால் மட்டுமில்லை, இதை முன்னிலைப்படுத்திய சிலராலும் நிகழ்ந்திருக்கின்றது என்பதே அவலமானது.  'படைபைப் பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எழுதியவர் மற்றும் வாசிப்பவருக்கு ஒரு படைப்பை முன்வைத்து  எத்தகைய பெரும் சுதந்திரத்தைத் தருகின்றது என அநேகர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. படைப்பை எழுதியபின்னர், அது படைப்பாளிக்குச் சொந்தமில்லை. அதை முன்வைத்து எவ்வகையான வாசிப்பையும் வாசகர் செய்வதற்கான ஒரு வெளி திறந்துவிடப்படுகின்றது. வாசகர், தனக்குரிய வாசிப்பில் அந்தப் பிரதியை எவ்வகையாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதை படைப்பாளி, இது நானெழுதிய படைப்பு இப்படித்தான் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்தமுடியாது. அவ்வாறு ஒரு படைப்பாளி தன் படைப்புக் குறித்து விளக்கந் தந்தாலும், அந்தப்படைப்பை எழுதியவர் என்றவகையில் உரிமைகோரி எதையும் கூறமுடியாது. அவரும் இன்னொரு வாசகராகவே கருத்துச் சொல்லமுடியும்.

உதாரணத்திற்கு ஜெயமோகன் 'அறம்' வரிசைக் கதைகள் எழுதியபோது, அழகாய் வளர்த்தெடுக்கப்படும் 'சோற்றுக்கணக்கு' கதையில் வரும் முஸ்லிம் பாத்திரத்திற்கு சாதியைத் திணித்திருக்கத் தேவையில்லை என என் வாசிப்பை முன்வைத்திருந்தேன். அதற்கு ஜெயமோகன் 'ஈழ எழுத்தாளருக்கு...' என்ற தலைப்பில் ஏன் சாதியை அங்கே தான் கொண்டுவருகின்றேன் என்பதற்கான விளக்கங்களோடு, வழமையாய் விரித்தெழுதும் அவரின் பழக்கத்தினால் 'சிங்களவர்களையே புரிந்துகொள்ளமுடியாத காழ்ப்புணர்வு கண்டவன்' என்பதுவரை என்னை இழுத்திருப்பார். இலக்கியம் சார்ந்து வரும் சர்ச்சைகளில் பிறரைச் சீண்டிப் பார்ப்பதும் ஒருவகை 'அறமே' என்பதால் அவை குறித்துக் குறையேதுமில்லை.

ஆனால் நான் ஜெயமோகன் தன் படைப்புக்குறித்துச் சொல்வதை அவரும் இந்தக்கதைகளின் ஒரு வாசகர் என்றவகையிலேயே பார்ப்பேனே தவிர, அவர் அந்தக் கதைகளை எழுதியவர் என்றவகையில் எந்த உரிமையும்  அவருக்குக் கொடுக்கப்போவதில்லை. அதாவது அவர் இந்தக்கதையை எழுதியவர் என்பதால், அவர் கூறும் பார்வையில்தான் இந்தக் கதையை வாசிக்கவேண்டும் என்கின்ற எந்த உரிமையும் அவருக்கு இல்லை என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

ஒரு புனைவை வாசிப்பதன் மூலம் ஒருவர் தனக்கான சொந்தப் பிரதியை உருவாக்கிக்கொள்ள முடியும். அந்தச் சுதந்திரத்தன்மையை படைப்பாளியால் கூட  மறுக்க முடியாது. அந்தவகையிலேயே திரைப்படங்களையும் நமக்கான பார்வையில் புரிந்துகொள்ள முடியும்.  ஒரு இயக்குநர் அறிந்தோ/அறியாமலே வைக்கும் காட்சிகளைக் கொண்டே, நாம் நம் பார்வையினால் வேறுபட்ட ஒரு படமாய் அதை வளர்த்தெடுக்க முடியும். இது ஜிகர்தண்டாவிற்கு எம்டிஎம் எழுதிய பார்வையிலும் பார்க்கலாம். ராஜன்குறையின் 'கதாநாயகனின் மரணம்' திரைப்படஞ் சம்பந்தமான தொகுப்பில் இன்னும் ஆழமாய் அவதானிக்கலாம்.

அது மட்டுமின்றி, 'நான் நீங்கள் நினைக்கும் அர்த்தங்களில் இவற்றையெல்லாம் எழுதவில்லை' என அண்மையில் காலச்சுவடில் வெளிவந்த அசோகமித்திரனின் குரலைத் தவிர்த்துவிட்டு, 'தண்ணீர்' நமது வாசிப்பில் ஒரு குறியீட்டு நாவலாய்த் தெரிந்தால் அப்படியே நாம் வாசித்தும்/வரித்தும் கொள்ளலாம். எம்.ஜி.சுரேஷ் பல்வேறு வகைமையான நாவல்களை எழுதுகின்றேன் என ஒவ்வொரு நாவல்களுக்கும் பின்னட்டைக் குறிப்பு எழுதி விளம்பரப்படுத்தியது எவ்வளவு அபத்தமோ, அவ்வாறே அசோகமிததிரன் தனது படைப்புக்களில் நீங்கள் நினைக்கும் வகையில் தான் எழுதவில்லை என்றவுடன் எமது வாசிப்புக்களைக் கைவிடுவதும் என்க.

ஆக தமிழ்ச்சூழலில் 'படைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதே' என்பதோடு மேலதிகமாய் 'உங்களுக்கான பார்வையை உருவாக்கும்போது அதில் படைப்பாளி குறுக்கீடு செய்தால் கூட, உங்களுக்கான வாசிப்பை எந்தவகையிலும் கைவிடத்தேவையில்லை' என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டியிருக்கின்றது.

சர்ச்சைகளும் சமாதானமும் இலக்கியத்தில் மூக்கும் சளியும் என்பதால், பின்னாளில் ஜெயமோகன் நானெழுதிய கதையிற்கு ஒரு குறிப்பு எழுதியிருப்பார். 'கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?' என்ற தலைப்பை, 'விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு' எனக் குறிப்பிடுவார். நான் கதையின் பாத்திரத்திற்கு 'கோபிகா' எனத் தெரிவு செய்ததற்கு என்னளவில் ஒரு காரணம் இருந்தாலும், அது ஜெயமோகன் கூறும் அர்த்தத்தில் அல்ல. ஆனால் நான் அதைக் குறிப்பிட்டு ஜெயமோகனின் வாசிப்பில் குறுக்கீடு செய்யமுடியாது. அவர் வாசிப்பில் உருவாக்கிய பிரதியிற்கு அப்படியொரு அர்த்தம் இருக்கும்போது அதில் நான் இடையீடு செய்து, இப்படித்தான் வாசிக்கவேண்டுமென கோருதல் ஒருவகை வன்முறை. படைப்பு எழுதி முடிந்தகணத்திலேயே 'படைப்பாளி இறந்துவிட்டார்'. இனி இருப்பது வாசிப்பவர்களின் பிரதி மட்டுமே.


3.
மீண்டும் படைப்பாளிகளின் துணைகளுக்கு வருகின்றேன். அன்னாவினதும், சோபியாவாவினதும் சுய அனுபவங்களினூடாக வரும் கதைகள் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் திருவுருக்களை அசைத்துப் பார்க்கின்றன. ஆனால், நாம் மறந்தது என்னவெனில், நமக்குத் தெரிந்த தஸ்தயேவ்ஸ்கியும்,டால்ஸ்டாயும், கரம்ஸோவ் சகோதரர்கள், புத்துயிர்ப்பு, அன்னா கரினீனா, போரும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் போன்றவற்றினால் அறிமுகமானவர்களே தவிர, சாதாரண தனிப்பட்ட வாழ்வினால் அறிமுகமானவர்கள் அல்ல. உயர உயரப் பறந்தாலும், பறவைகள் நிலத்திற்கு என்றேனும் வந்தாக வேண்டும் என்பதுபோல, படைப்பு வெளியில் எங்கெங்கோ சுதந்திரமான அலைந்த மனிதர்களின் கால்கள் நிலத்தில் பாவும்போது நாம் கட்டிவைத்த விம்பங்கள் உடைதலும் இயல்பே.

கலைஞர்கள் பெரும்பாலானோர் வாழ்வு அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருப்பதுமில்லை. துயரங்களும், தத்தளிப்புக்களும் இவற்றின் நீட்சியில் தம் சுயமழித்தலும் அநேகரின் வாழ்வில் இயல்பாயிருந்திருக்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் மட்டுமில்லை, வேர்ஜீனியா வூல்ப்விலிருந்து சில்வியா பிளாத் என நீண்டு நம் தமிழ்ச்சூழலில் ஜி.நாகராஜன், ஆத்மநாம், சிவரமணி எனக் குறிப்பிடுவதற்கு நிறைய உதாரணங்களிருக்கின்றன. 

நாம் தஸ்தயேவ்ஸ்கியினதும், டால்ஸ்டாயினதும் தனிப்பட்ட வாழ்வை அவதானிப்பதாயின் அவர்களுக்குக் கிடைத்த துணைகளான சோபியாவும், அன்னாவும் இவர்கள் இருவரினதும் படைப்புக்களால் ஈர்க்கப்பட்டோ அல்லது இந்தப் படைப்புக்கள் மீது மதிப்பு வைத்தோ துணைகளானவர்கள். அவர்களினாலேயே இவ்வாறு ஒருவகையான விமர்சனம் வைக்கப்படுகின்றதென்றால், சிலவேளைகளில் சாதாரண 'லெளதீக' விடயங்களில் ஆசைப்படுகின்ற துணைகள் இவர்களுக்குக் கிடைத்திருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கிடைக்கும் துணைகளோடு போராடிப் போராடியே சிலவேளைகளில் தஸ்தயேவ்ஸ்கியினதோ, டால்ஸ்டாயினதோ சிறந்த படைப்புக்கள் எழுதப்படாது, நாம் இவற்றை இழந்திருக்கவும் கூடும்.

ஜெயமோகன் இப்போது வாஸந்தியிற்கு எழுதிய எதிர்வினையிலும்  நான் ஜெயமோகனோடு உடன்படுகின்ற புள்ளிகளே அதிகம் இருக்கின்றன. வாஸந்தியின் கட்டுரை மிக எளிமையாக ஒருவரை அடித்துத் துவைக்கவேண்டுமென்பதற்காய் எழுதியது என்பதை உடனேயே வாசித்துப் புரிந்துகொள்ளமுடியும். டால்ஸ்டாய் ஆன்மீகத்தைத் தேடியவர் எனினும் 80வயதிலும் உடலுறவு வைத்துக்கொண்டவர் என வாஸந்தி குறிப்பிடும்போதே 'ஆன்மீகத்தின்' எளிய புரிதலுக்கு அப்பால் வாஸந்தியால் நகரவே முடியவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் ஜெயமோகனோடு பெரும்பாலும் உடன்படுகின்ற எனக்கும் கேள்விகளுண்டு. சோபியாவின் குரலும் கேட்கப்படவேண்டும் என்பதற்காய் வாஸந்தி டால்ஸ்டாயை கீழிறக்குவது போல, ஏன் ஜெயமோகனும் டால்ஸ்டாயை மேன்நிலையாக்கம் செய்வதற்காய் சோபியாவைக் கீழிறக்கவேண்டும் என்பதே. டால்ஸ்டாய் தன்னளவில் தனித்து நிற்கமுடிவதுபோல,  வெவ்வேறு தளங்களாய் இருந்தாலும், சோபியாவும் தன்னளவில் தனித்து நிற்கக்கூடிய ஒருவரே என்பதை ஏன் மறுதலிக்கவேண்டும். சிலவேளை ஒரு பெண்ணுக்குரிய/தாய்க்குரிய 'கடமை'களைச் செய்ய வேண்டிய அவசியமோ, டால்ஸ்டாயோடு வாழவோ வேண்டியிராத சந்தர்ப்பத்திலோ, சோபியா ஒரு தனிப்பட்ட ஆளுமையாக உயர்ந்திருக்கலாம் என்பதை ஏன் நாம் மறுக்கவேண்டும்?

நாம் ஒருபோதும் டால்ஸ்டாயினதோ, தஸ்தயேவ்ஸ்கியினதோ படைப்புக்களையோ (படைப்புக்கள் என்ற சமதளத்தில் இருந்தபோது கூட) ஒப்பிட்டு ஒன்றையொன்று கீழிறக்குவதில்லை. அவையவை தம்மளவில் தனித்துவமானவை என்று எடுத்துக்கொண்டே, விமர்சனங்கள் இருந்தாலும் அந்தப் பிரதியிற்குள் நின்றே கருத்துக்களை முன்வைக்கின்றோம். அதேபோன்று டால்ஸ்டாயையும், சோபியாவையும் ஒரே தராசில் வைத்து நாம் ஒப்பிடத்தேவையில்லை அல்லது ஒருவரைத் தாழ்த்துவதன் மூலம் இன்னொருவரை உயர்த்தத் தேவையில்லை.

இப்படியும் யோசித்துப் பார்க்கலாம். காலங்காலமாய் சோபியா, அன்னா என படைப்பாளிகளுக்கு உரிய துணைகளாக எத்தனையோ பெண்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இவ்வாறு டால்ஸ்டாய் போலவோ, தஸ்தயேவ்ஸ்கி போலவோ, எழுத விரும்பும் பெண்களுக்கு  எத்தனை ஆண்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றோம் என எண்ணிப் பார்த்திருக்கின்றோமா? இத்தனைக்கும் பெண் படைப்பாளிகள் சமூகம் 'பெண்'ணிற்கு எனக் கூறப்படும் 'கடமை'களைச் செய்யவேண்டிய் அழுத்தத்தின் மேல் நின்றே எழுதுகின்றார்கள். மேலும், குடும்பமாகி குழந்தைகள் பெறும்போது தாய்மை எனும் பெருஞ்சுமையை விரும்பியோ/விரும்பாமலோ ஏற்றுக்கொண்டே எழுதவும் வேண்டியிருக்கின்றது. அதுவும் சில நூற்றாண்டுகள் முந்திய காலத்தில் நிறையக் குழந்தைகளைப் பெற்றும், அவை இடைநடுவில் இறக்கவும் பார்த்துக்கொண்டிருந்த சோபியாவினதும், அன்னாவினதும் அகவுலகங்களையும் விளங்கிக்கொண்டே, அவர்கள் தஸ்தயேவ்ஸ்கி மீதோ, டால்ஸ்டாய் மீதோ வைக்கும் விமர்சனங்களையும் பார்க்கவேண்டியிருக்கின்றது.

எங்களுக்கு தாஸ்தயேவ்ஸ்கி மீதும் டால்ஸ்டாய் மீதும் அளப்பரிய காதல் இருக்கலாம். ஆனால் அதற்காய் சோபியாவினதும் அன்னாவினதும் குரல்களை முற்றாக உதறித்தள்ளிவிட்டுத்தான் இவர்களை நேசிக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமுமில்லை.

இந்த வாழ்வையும் மனிதர்களையும் ஆழமாய் நேசிக்கக் கற்றுத்தரும் டால்ஸ்டாயையும், தஸ்தயேவ்ஸ்கியும், தமது துணைகளின் குரல்கள் -அவர்களை மதிப்பிறக்கும் தொனியாக இருந்தாலும் கூட- அதையும் நிதானமாய்க் கேட்க வேண்டும் என்பதையுந்தானே சொல்லித்தரப் பிரியப்பட்டிருப்பார்கள்.
................

(2014)

பிரிய அடேல்

Thursday, September 18, 2014

நீ அந்தப் பெருமரத்தின் அருகிலிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. சூரிய ஒளி பிரகாசமாகத் தெறிக்கிறது. இலைகள் சிறகுகள் விரித்த சிறுபறவைகள் போல உதிர்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் அழகோடு ஒன்றிக்க முடியாமல் நீ உன் உணர்ச்சிகளோடு போராடிக் கொண்டிருக்கிறாய். உனதிந்த அப்பாவித்தனத்தை ஏன் காலம் இவ்வளவு விரைவாகப் பறித்துப் போகிறது.  அவ்வளவு எளிதில் எவரையும் கடந்துவிடச் செய்யாத உனது அழகான விழிகளில் ஏன் இவ்வளவு துயரம் ததும்பிக் கிடக்கிறது.

அடேல், உனது அடையாளங்களைத் தேடியலைந்த பதின்மவாழ்க்கையை நீ மட்டுமில்லை, நாமெல்லோருமே வளர்ந்துவிடும்போது தொலைத்து விடுகிறோம் அல்லவா? உனது அவ்வளவு சீர்செய்யப்படாத கேசமென்பது கூட நீ யாரென்பதை அடையாளப்படுத்துகிற ஓரு விடயமில்லையா? நீ பாடசாலை அமைப்பை வெறுத்தபடி, ஆனால் நிறையக் கற்றுக்கொள்வதற்கு அதைத் தவிர வேறெந்த சிறந்த அமைப்புமில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறாய். உனக்கிருக்கும் ஆகப்பெரும் கனவு, சிறு பிள்ளைகளுக்கு ஆசிரியராக ஆவது அல்லவா? பாடசாலை அமைப்பின் அபத்தத்தை நன்குணர்ந்த உன்னிடம் கற்கும் பிள்ளைகளுக்கு அழகான ஓர் உலகை கையளிப்பாய் என்றெழும் நம்பிக்கையில், உன் கரங்களை மிருதுவாய்ப் பற்றவேண்டும் போலத் தோன்றுகிறது.

நம் எல்லோரினதும் - முக்கியமாய் பதின்மவயதுகளில்- மிகப்பெரும் மூச்சுத்திணறல் என்னவென்றால் எமது அடையாளம் எது என்பது. மேலும் இயல்பாய் எழும் பாலியல் சார்ந்து, எந்த அடையாளத்திற்குள் எம்மை நிலை நிறுத்துவது என்பதும் கூட. பதிமன்ங்களில் எதிர்ப்பால் ஈர்ப்பென்பதே சிக்கலான ஓன்றாகப் பார்க்கப்படும்போது, தற்பால் உறவோ, இருபால் உறவோ இயல்பாய் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் எவ்வளவு நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது.

ஆண்களை எளிதாய் வசீகரிக்ககூடியவளாய் இருந்தாலும், உனக்கு எதிர்ப்பால் உறவு பொருத்தமானதில்லையென உணர்கிறாய். உன்னுடலைப் பரிசோதனைக் களமாய் அதற்காய் திறந்து வைத்துதும் அதை எளிதாய்ப் புரிந்துகொள்கிறாய். உனக்கான பாலியல்பு சார்ந்து நீ தேடலைத் தொடர்கிறாய். உன்னை விட வயது கூடிய எம்மாவைக் கண்டுகொள்கிறாய். உங்களின் உக்கிரமான காமம் எல்லோரையும் சரசரவென்று பற்ற வைத்துக்கொள்ளக் கூடியது. எம்மா ஓரு ஓவியையாக இருந்தும், அவளது நட்புகள் மிக உயர்ந்த அறிவுஜீவி மட்டத்தில் இருந்தபோதும், நீ அவளின் உயர்வில் உன் மகிழ்ச்சியைக் காண்கிறாய். எம்மாவினதும், அவளின் நட்புக்களினதும் அறிவார்ந்த உரையாடல்கள் உனக்கு அலுப்பைத் தருகின்றன. நீ அதை விரும்பி ஏற்றுக்கொண்டவளில்லை; அது உனக்குரியதல்ல எனவும் கண்டுகொள்கிறாய். எனினும் இவையெல்லாம்  எம்மாவின் மீதிருக்கும் காதலிற்கும் காமத்திற்கும் முன் ஒரு பொருட்டேயல்ல என்பதையும் நீ நன்குணர்ர்ந்தவள்.

எம்மா, உன் தொழில் சார்ந்தில்லாது வேறு விடயங்களிலும் உன்னைக் கவனஞ் செலுத்தச் சொல்கிறாள். உனக்குரிய வாசிக்கும், எழுதும் திறமையைக் கண்டு, கதைகளை எழுதச் சொல்கிறாள். நீயோ அவை என் அந்தரங்திற்குரியது என்கிறாய். என்றாலும் எம்மாவின் மீதிருக்கும் நேசத்தினால், எழுத முயற்சிக்கின்றேன் என்கிறாய்.

உனது உலகும் கனவுகளும் எளிமையானது. எம்மாவோடு மனது நிறையக் காதல் செய்வது. சிறுவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியை ஒருவராக ஆவது.

எந்தக் கணத்தில் உனக்கும் எம்மாவிற்கும் இடையில் விரிசல் வந்ததெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. எம்மா வீட்டிற்கு வரத் தாமதமாகும் பொழுதுகளில் தனிமை உன்னை இராட்சத நிழலாகச் சூழகிறது. யாரெனும் ஓருவர் உனக்கு மனம் விட்டுப் பேச, வெறுமையை விரட்டத் தேவையாயிருக்கிறது. உனது சக ஆண் ஆசிரியரோடு பொழுதுகளைக் கழிக்கிறாய். அது சிலவேளைகளில் உடல் சார்ந்து பகிரும் பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. நீ உன் தனிமையை விரட்ட உன்னுடலை மீண்டும் பரிசோதனைக் கள்மாக்கிறாய். அது முற்றுமுழுதான பகிரல் இல்லை என்பதும், ஆணுடலால் உனக்கு விரும்பிய நிறைவு கிடைக்காதென்பதும் நீயறிவாய். ஆனால் உனக்கு வேறு வழிகளேயில்லை. எனெனில் நீ தனிமையை இன்னொரு துணையாக உன் பதின்மங்களிலிருந்தே தேர்ந்தெடுத்தவள்.

எம்மா, உனது இருபால் உறவைக் கண்டுகொள்கிறாள். கோபம் மிகக் கொண்டு உன்னை வீட்டிலிருந்து வெளியே போகச் சொல்கிறாள். 'நான் என் தனிமையின் பொருட்டு தவறுகள் செய்துவிட்டேன், என்னை மன்னி...என் காதல் என்பது எப்போதும் உன்னோடு'தான் எனக் கெஞ்சுகிறாய். 'என்னை வெளியே போகச் சொல்லாதே, என்னால் உன்னை விட்டும் எங்கும் போகமுடியாது' எனவும் மன்றாடுகிறாய். ஆனால் எல்லா மன்னிப்புக்கோரல்களும் காற்றில் கரைந்து போகின்றன. நீ வழியற்றவளாய் வெளியே துரத்தப்படுகிறாய்.

இப்போது வருடங்கள் பல கழிந்துவிட்டன. நீ விரும்பியமாதிரி ஆசிரியையாகியும் விட்டாய். இன்னமும் தனித்தே இருக்கிறாய். இடையில் சில உறவுகள்/நட்புகள் வாய்த்தாலும் எதுவும் எம்மாவுடன் வாய்த்ததைப் போல காமமும் காதலும் நிறைந்ததாய் இல்லை.. எனவே அவர்களோடு தொடர்ந்து வாழ்வில் பயணிக்கத் தயங்கி எல்லோரையும் இடைநடுவிலேயே வெட்டியும் விடுகிறாய். வழமை போல நீ விரும்பியோ/விரும்பாமலோ தனிமை உன்னை மீண்டும் நெருக்கமானதாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

நீண்டகாலப் பிரிவின் பின், ஒருமுறை எம்மாவைச் சந்திக்கிறாய். எம்மா இப்போது வேறொரு தளத்தில் இருக்கிறாள். அவளுக்கென்று துணையும், குடும்பமும் வாய்த்துவிட்டன.

உன்னிடம் இப்போதும் அதே அப்பாவித்தனமும், கடந்த காலத்தை அப்படியே நிகழ்காலத்திற்கு இழுத்துக் கட்டிக்கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையுமிருக்கிறது.

காதலும், காமமும் பொங்கி வழிகிறது. 'நீதான் எனது எல்லாம்' என எம்மாவிடம் சொல்லப் பிரியப்படுகிறாய். அதை ஒருவகையில் எம்மாவிற்கு உணர்த்தவும் செய்கிறாய். ஆனால் எம்மா தனக்கு ஏற்கனவே ஒரு குடும்பமிருப்பதை நினைவுபடுத்துகிறாள். என்றாலும், என் வாழ்வில் உன்னோடிருந்த காலங்களை என்றைக்குமாய் மறக்கமுடியாது, அவ்வளவு இனிமையானது' எனக் கூறி எம்மா உன்னிடமிருந்து என்றென்றைக்குமாய் விடைபெறுகிறாள்.

நீ பதின்மத்திலிருந்த அதே பெண்தான். விழிகள் முழுதும் கண்ணீர் ததும்பி வழிகிறது. அழுவதைத் தவிர இந்த குரூர உலகிலிருந்து தப்புவதற்கு  வழிகள் எதுவுமேயில்லையென மழை பெய்தால் போல அழுகிறாய். உன் கண்ணீர்த்துளிகள் நம் எல்லோரினதும் நெஞ்சை நிரப்பி விடுகின்றன. இரவுகளுக்கெல்லாம் இன்னும் கனம் கூடிவிடுகின்றன. இவ்வளவு வெகுளியான பெண்ணிற்கு அவள் விரும்பியமாதிரியான ஒரு வாழ்க்கை கிடைக்க விடாத காலத்தின் மீது நமக்கும் கோபம் வருகிறது.

பிரிய அடேல், துயரத்தின் நிமித்தம் நடுங்கும் கரங்களோடு நீ பற்ற வைக்கும் சிகரெட்டுக்களைப் போலத்தான் நம் பலரின் வாழ்வும் தினமும் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. அளவிறநது பொங்கும் நேசத்தை, நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் மீது அப்படியே காட்ட முடியாது தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத சக்திகள்தான் என்ன? எல்லா அவமானங்களையும் தாண்டி, சந்தித்த தலைக்குனிதல்களையும் மீறி நீ யாசித்தது, மிக எளிமையான ஓரேயொரு விடயம், காதல் மட்டுமே. ஆனால் அதுவே உனக்கு விரும்பியமாதிரி கையளிக்கபடாது போனதுதான் எவ்வளவு துயரமானது. அது மட்டுமின்றி, உனது தவறுகளைக் கூட மன்னிக்க எம்மாவினால் முடியாதபோது, எல்லாவற்றின்மீது சாபம் போடவே மனது விரும்புகிறது.

அடேல் நீ இப்போதும் அந்தப் பெருமரத்தின் பெஞ்சில், உடலைக் குறுக்கிப் படுத்துக்கொண்டு பரந்த வானத்தை வெறித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நான் உனக்கு உதிருமிலைகளை அல்ல, வசந்தகாலத்துப் பசிய இலைகளையும் வர்ணமயமான பூக்களையுமே பிரியங்களோடு தரவிரும்புகிறேன்.

உன் கண்ணீரின் அர்த்தம் விளங்கியவர்கள் இந்த உலகில் இல்லாமலா போய்விடுவார்கள். ஒழுங்காய் வாராப்படாது, தான்தோன்றித்தனமாய் விடப்படும் உன் கேசத்தை அழகெனவும், அதில் தன் முகம் புதைக்கவும் ஒருவர் வருவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

எவ்வாறாயினும் உன்னில் இருக்கும் அப்பாவித்தனத்தை என்றென்றைக்குமாய் கைவிட்டுவிடாதே. மேலும் செய்த தவறுகள் குறித்தும் அதிகம் கவலைப்படாதே. கடந்துபோனவை கடந்தவைதானல்ல்வா? நம்மால் என்னதான் இனிச் செய்யமுடியும்?  மேலும், நமது தவறுகளே நாம் ஓரிடத்தில் தேங்கியிருக்கவில்லை என்பதை இன்னொருவிதமாய் நமக்கு நிரூபிப்பவை. எனவே பிறர் உன்னை மன்னிக்க மறுத்தாலும் உன்னை நீயே மன்னிக்கக் பழகிக்கொள்.அது போதும்.

கதகதப்பான நிறமென நீலத்தைப் பெயரிட்டுக்கொள்ளலாம்.. ஆனால் வாழ்க்கை என்பது வர்ணங்கள் பலவின் கூட்டுக்கலவையினால் உருவாவது.

சாம்பல் வர்ணத்தை (உன்) அப்பாவித்தனத்தின் நிறமாய் நான் பெயரிட்டுக்கொள்கிறேன்.

ஆம், சாம்பல் வெகுளித்தனத்தின் வர்ணம் என்பேன்.


(Jul 09,2014)
('Blue is the warmest colour' திரைப்படம் பார்த்த பாதிப்பிலெழுதியது)

(நன்றி: 'எனில்' இணைய சஞ்சிகை)

'அம்ருதா' இதழில் வந்தவை...

Tuesday, September 16, 2014

கனவுகளைக் கனவுகள் எனவும் சொல்லலாம்

மார்க‌ழியின் மாலையொன்றில
ச‌ந்தித்த‌போது அது எதுவாக இருந்த‌தென்ப‌து
நினைவினிலில்லை;
கெதியாய் இருள்மூடி ப‌னிபொழிந்த‌ மூன்று ம‌ணியாக‌
இருந்திருக்கூடுமென்றபோது....
நான் - நினைவூட்ட‌லின் வ‌ன்முறை குறித்தும்
நீ - நினைவில் வைத்திருக்க‌வேண்டிய‌ வ‌ர‌லாற்றின் அவ‌சிய‌ம் ப‌ற்றியும்
விவாதித்த‌ப‌டி ப‌னிமூடிய‌ குளிராடையைத் த‌ள‌ர்த்திய‌ப‌டியிருந்தோம்
இக்க‌ண‌த்தை நினைவில் வைத்திருப்ப‌தைப் போன்று
முன்னே பின்னே நக‌ர்ந்த‌ ந‌க‌ரும் கால‌த்தை
நினைவு நூல‌க‌த்தின் அக‌ர‌வ‌ரிசையில் தேடியெடுக்க‌
ஏன் எவ‌ரும் துல்லிய‌மாக‌ எழுத‌வைக்க‌வில்லையென்ற‌ப‌டி
தேநீருட‌ன் சான்ட்விட்சுக்கான‌ காய்க‌ளை வெட்ட‌த்தொட‌ங்கினோம்

இன்ன‌வின்ன‌ வேலைக‌ளை இவ‌ரிவ‌ர் செய்ய‌வேண்டுமென்ற‌
எந்த‌க்க‌ட்ட‌ளையையும் ம‌வுன‌ம் க‌ற்பிக்காத‌தை
ந‌ம‌க்குரிய‌ நேச‌மென‌ப் பெய‌ரிட்ட‌ழைக்க‌லாம்
அன்றைய‌ இர‌வுண‌விற்கான‌ கோழியை வெட்டி
Ovenக்குள் வேகவைத்த‌ பொழுதிற்கிடையில்
*ஒற்ற‌னில் அமெரிக்கா வ‌ந்த‌ கதைசொல்லியின் அனுப‌வ‌த்தையும்
இறுதியின் எல்லோரையும் என்றென்றைக்குமாய் பிரிந்துபோகும்
அவ‌னின் மெல்லிய‌ துய‌ரையும் ப‌கிர்ந்த‌போது
ப‌னியைப்போல‌ நான் உருக‌க்கூடிய‌வ‌னாக‌யிருந்தேன்
நீராயென் வெறுமைக‌ளை நீ நிர‌ப்ப‌க்கூடிய‌வ‌ளாயிருந்தாய்

கால‌மெனும் நான்காவ‌து ப‌ரிமாண‌ம்
தெப்ப‌மாய் மித‌க்க‌த் தொட‌ங்கிய‌போது
நாம் எம‌க்கான‌ துடுப்புக்க‌ளைத் த‌வ‌ற‌விட்டு
ந‌தி வ‌ற்றுமென‌க் காத்திருந்தோம்
இப்போது குளிராடையைத் த‌ள‌ர்த்துவ‌த‌ற்கோ
கையுறையைக் க‌ழ‌ற்றி விர‌ல்க‌ளைக் கோர்ப்ப‌த‌ற்கோ நேர‌மின்றி
ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ளுக்குள் த‌னித்து நீந்துவ‌தைத்த‌விர‌ வேறு வ‌ழியில்லை
மார்க‌ழி மாலையொன்றில் நாம் ச‌ந்திந்த‌போது
அது எதுவாக‌ இருந்த‌தோ அது இப்போதும் அவ்வாறே இருக்க‌வும்கூடும்
நாம்தான் எதுவெதுவாக‌வோ மாறிவிட்டோம் என்ப‌தைத் த‌விர‌.

* அசோக‌மித்திர‌ன் எழுதிய‌ நாவ‌ல்
--------------------------------------

பறக்கும் நூலகம்

குளிர்காலத்தில்
புத்தகசாலைக்குள் நுழையும் நீங்கள்
பக்கங்களில் தன்னைத் தொலைத்த
வெளிர்நீல ஆடையணிந்த ஒருத்தியைக் காணக்கூடும்
அவளின் கவனத்தை ஈர்த்தொரு புன்னகையைப்பெறும்
முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கையில்
சலிப்பில் ஏதேனுமொரு சஞ்சிகையைப் புரட்டிக்கொண்டு
வெளியில் பொழியும் கடும்பனியைத் திட்டுவதுபோல
உங்களை நீங்களே நிதானமாய் நிர்வாணமாக்கவும் முடியும்

புத்தகக்கடையில் வேலை செய்யும் ஆணை/பெண்ணை
மோகித்துக்கொண்டிருப்பவள்/ன்
பலநூறு புத்தகங்களை
ஒரேநேரத்தில் வாசித்துவிடுபவனாய்/ளாய் இருக்கலாம்

தொடைகளுக்குள் பறக்கத்துடிக்கும் வண்ணத்துப்பூச்சியை
மறைத்து வைத்திருந்தவளின் உச்சந்தலையில்
ஆரம்பிக்கும் முத்தத்திலிருந்து
மலரத்தொடங்குகின்றது
வாசிக்கமுடியா வர்ணங்களில் கனவுகளின் நூலகம்.
-----------------------

வாதை

மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்

ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை

கமபளிப்போர்வைக்குள்
வெப்பந்தேடி அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்

எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றுத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்

வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.

(நன்றி: 'அம்ருதா' - மே மாத இதழ்)

எருக்கம்பூ குறிப்புகள்

Friday, September 12, 2014

பகிர்ந்தமையிற்கு நன்றி (Thanks for Sharing)  

நாம் வாழ்க்கையில் எதற்கோ நம்மையறியாமல் அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் அந்தப் போதையிலிருந்து (addiction) வெளிவருதல், சிலவேளைகளில் நாம் விரும்பினால் கூட அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. மதுவருந்தல், போதைப்பொருள் பாவித்தல் போன்றவற்றை துருத்திக்கொண்டு தெரியும் போதையான விடயங்கள் என்றாலும், தமிழ்ச் சமூகத்தில் அரசியல் பேசுவதில் கூட பலருக்கு ஒருவகை addiction இருக்கிறதென நினைப்பதுண்டு.

'பகிர்ந்தமையிற்கு நன்றி' என்கின்ற இத்திரைப்படம் பாலுறவிற்குப் போதையாகின்றவர்களைப் பின் தொடர்ந்து பார்க்கின்றது. இவ்வாறு பாலுறவிற்குப் போதையாகின்றவர்கள், தமது நிலைமை விளங்கி தமது கதைகளைக் கூறி போதையிலிருந்து விடுபடுவதற்கான கவுன்சிலிங் பெறுகின்றார்கள். ஒருவர் பாலுறவில் அதீத நாட்டங்காரணமாய் தான் வேலை செய்யும் வைத்தியசாலை மருத்துவரையே இரகசியமாக விடீயோ எடுத்து மாட்டுப்படுகிறார். இன்னொருவர் பாலியல் சார்ந்து எல்லாப் போதையிலிருந்தும், ஐந்து வருடங்களாக விலகி இவ்வாறான போதையிலிருப்பவர்க்கு ஆலோசனை வழங்கி உதவியும் புரிகின்றார்.

ஆனால் இவ்வகையான போதையிலிருந்து விலகினாலும் அது எப்போதும் மீண்டும் பற்றக்கூடிய தீயைப் போல ஐந்து வருடங்களாக ஒழுங்காக இருந்தவரும் மீண்டும் பாலின்பப் போதையிற்கு அடிமையாகின்றார். வாழ்வில் அடுத்த காலடியென நினைத்து காதலில் விழும்போது, இவ்வாறான பாலியல் போதையிற்கு அடிமையானவர்களை காதலிப்பவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் முதலில் ஒளிக்கிறார். பிறகு ஒருகட்டத்தில் உண்மையைப் பேசும்போது காதலி -புற்றுநோயால் மார்பகத்தை இழந்த cancer survivor என்றாலும்- இந்தப் போதை விடயத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாதிருக்கின்றது.

எல்லோருடைய வாழ்வும் மீண்டும் தலைகீழாகிறது. ஆனால் இவ்வாறான போதையிற்கு அடிமையானவர்கள் தாங்களாகவே ஒரு சிறு சமூகமாய் இருந்து பிரச்சினைகளில் மாட்டுப்படுபவர்களுக்கு மாறி மாறி உதவி செய்கின்றனர். வெளிச்சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மறுத்தாலும் இச்சிறு சமூகம் அவர்களைத் தாங்கிக்கொள்கிறது/புரிந்துகொள்கின்றது. அவர்களின் வாழ்வு இவ்வாறான ஒரு குறுகிய வட்டத்தில் தொடர்ந்து நகர்ந்து போகின்றது.

இந்தப் படம் அவ்வளவு சிறப்பான படம் என்றில்லாதுவிட்டாலும், போதையிற்கு அடிமையாகின்றவர்களைப் பற்றியும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை பற்றியும் யோசிக்க வைக்கிறது. அவர்கன் போதையின் அடிமையிலிருந்து மீண்டு வரும்போது கூட, இந்தப் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது என்பதையும் கவனப்படுத்துகிறது.

தவறுகள் செய்யாத வாழ்க்கையென்பது நம் எவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நாமறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறுகளுக்கே நாம் எப்போதும் மன்னிப்பை யாசிப்பவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு மன்னிப்புக்களை எதிர்பார்க்கும் நாம் இவ்வாறான போதைகளிற்கு அடிமையானவர்களையும் சற்று அரவணைத்துக்கொள்ளலாம். ஆகக்குறைந்து அவர்களும் நம்மைப் போன்று ஒரு இயல்புவாழ்க்கையைத்தான் யாசித்துக்கொண்டிருப்பார்கள் என்பதையாவது, அவர்களைக் கேலி செய்யாது நம் மனதில் இருத்திக்கொள்ளலாம்


ராஜீவ்காந்தி சாலை

அளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.


பிறகு (With You, Without You)

இத்திரைப்படம். மட்டுமில்லை படத்தின் பிறகான பிரசன்னாவோடான உரையாடலும் இன்னும் திரைப்படத்தோடு ஒன்றிக்க வைத்தது. கடந்தகால வன்முறையின் வரலாற்றை மறந்து (அல்லது உதறித்தள்ளி விட்டு) இனங்களுக்கிடையிலான மேலோட்டமான மீளிணக்கம் எப்படி தோல்வியுறும் என்பதை தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான உறவின் மூலம் மிக ஆழமாக பிரசன்னா இத்திரைப்படத்தில் தந்திருக்கின்றார்.

மிகக் குறைந்த பாத்திரங்களோடும், ஒரு குறுகிய பின்னணி நிலவியலோடும், மிகச் சொற்ப உரையாடல்களோடும் எப்படி மனதைப் பிசையுமொரு படத்தைத் தரலாம் என்பதற்கு இதொரு இன்னொரு உதாரணம். சிக்கலான படிமங்களோடும், எல்லாவற்றையும் 'சொல்லிவிடும்' எத்தனிப்புக்களுமின்றி பல்வேறு இடங்களில் விடப்படுகின்ற வெளியிலிருந்தும் பார்வையாளர் தமக்கான ஒரு பிரதியை(படைப்பை) உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கின்றது என்பது என்னளவில் முக்கியமானது. எவற்றிலிருந்தும் நாம் தப்பிவிடமுடியும் ஆனால் நமது மனச்சாட்சிகளிடமிருந்து என்றைக்குமாய்த் தப்பிவிடமுடியாது என்பதை ஒரு பெரும்பான்மை இனத்திடமிருந்து வரும் தெளிவான குரல் கவனிக்கத்தக்கது.

சிலரின் படைப்புகளைப் பார்த்து/வாசித்துவிட்டு அவர்களோடு உரையாடினால், இதைவிட அவர்களைச் சந்திக்காது விட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசிப்போம். எனக்கு இந்தப் படத்தைப்போலவே பிரசன்னாவோடு நிகழ்த்திய உரையாடலும் அதிக நெருக்கத்தைத் தந்தது. இன்று அறியப்பட்ட நெறியாள்கையாளராக இருந்தாலும், நாம் சுட்டும் தவறுகள்(விமர்சனம்) போன்றவற்றை மிகப் பணிவாகக் கேட்டும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பிரசன்னாவில் பிடித்த இன்னொரு விடயம். இவர்களும் இவர்களின் படைப்புக்களுமே இன்னும் தாம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய வன்முறையை அறியாத (அல்லது அறிய விரும்பாத) பெரும்பான்மையினத்தவரின் மனச்சாட்சிகளை அசைக்க நம் முன் வைக்கப்படும் நம்பிக்கைக் கீற்றுக்கள் என நம்புகிறேன்.

"With you Without you" - What a movie. I am not only very impressed by the movie but also the conversation with the director. This movie again reminds us that there is no real reconciliation without knowing the history of violence between two ethnic communities in Sri Lanka. This movie have lots of metaphors and as well as leave enough space to audience to think beyond the movie. It is very hard to create a movie with handful of characters and a fixed small landscape, but this movie also impress us with less dialogues. I am also very moved with the conservation with Prasanna. Yet he is known director everywhere, he is very humble to hear audience's point of views. Thanks Prasanna Vithanage, Though there is long way to travel to resolve our ethnic conflicts, but you give a ray of hope that there are still few sinhalese people worrying (or in other words feeling guilty) of what happened to Tamil people in Sri Lanka.

'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' யிற்கு ஒரு எதிர்வினை

Wednesday, September 03, 2014


கெளதம சித்தார்த்தனின் 'பிரசன்ன விதானகே: மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி!' சில வாரங்களுக்கு முன்னர் வாசித்தபொழுது, அது குறித்து சிலவற்றை எழுத விரும்பியபோதும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இப்போது எல்லா பரபரப்புக்களும் ஒய்ந்திருப்பதால் அதுகுறித்து சிலவற்றைப் பேசலாம் என நினைக்கின்றேன்.

எனது மதிப்பிற்குரிய நண்பர் கெளதம சித்தார்த்தன் என்றாலும், இத்தகைய விடயங்களில் சமரசம் தேவையில்லை என்பதால் எதையும் மனந்திறந்து உரையாடலாம் என நினைக்கிறேன்.

கெளதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரையே கட்டியிருக்கும் மாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னால், அதைத் தவிர்த்து மிகுதி எல்லாம் எழுதியது போன்ற பாவனையில் எழுதப்பட்டிருக்கின்றது என்பது கவலையான விடயமே.

சரி, இப்போது அவர் சற்று பிரசன்ன விதானகேயின் படத்தைப் பற்றிக் குறிப்பிடும் சில  இடங்களைச் சற்றுக் கவனிப்போம்...

1) "விதானகேவும் with you…. படத்தில் பூடகமாக முன் வைக்கிறார். சிங்கள ராணுவம் அல்லது சிங்களப் பேரினவாதத்தின் குற்ற உணர்வுகளாக முன் வைத்து மன்னிப்பும் கேட்கிறார். சரி Past is Past எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இனி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போம், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வோம் என்பது போன்ற ஒரு பார்வையை முன் வைத்துப் பார்க்கிறார்."

கடந்தவை கடந்தவை என்றோ, எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்ற பார்வையோ அந்தப் படத்தைப் பார்த்தபொழுது எனக்கு வரவில்லை. பெரும் போருக்குப் பின்னரான காலத்தை, அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை, போர் நிகழாத நிலப்பரப்பில் வைத்து எடுக்கப்படுகின்ற கதையின் பின்னணியை மறந்துவிட்டு சித்தார்த்தன் பார்த்தால் எல்லாமே தலைகீழாய்ப் பார்க்கும் பார்வையே ஏற்படச் செய்யும். இது இன்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற இணக்க அரசியலை, தனிப்பட்ட இரண்டு மனிதர்களின் சாதாரண வாழ்வின் மூலம் உடைத்தெறிகின்ற படம். இறுதியில் அந்தப் பெண் செய்கின்ற தற்கொலைகூட ஒருவகையில் சிங்களப் பேரினவாதத்திற்கு/சிங்களவர்களுக்கு கொடுக்கின்ற மிகப்பெரும் தண்டனைதான்.

எல்லாவற்றையும் இழந்தபின் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல, தன்னிடம் இருக்கின்ற கடைசி துருப்பை அந்தப்பெண்  முன்னாள் இராணுவத்தினனிற்கெதிராகப் பயன்படுகின்றார் என ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? ஏற்கனவே வேறொரு தமிழ்ப்பெண் பாலியல் வல்லுறவிற்குட்பட்டபோது, நடந்ததைச் சொல்லாது தப்பிவந்து குற்றவுணர்வில் துடிக்கின்ற இந்த முன்னாள் இராணுவத்தினனிற்கு இதைவிட எந்தப் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட முடியும்?

உண்மையில் இந்தக் காலம் தமிழரின் தரப்பு எல்லாவற்றையும் இழந்து கையாலாகாமல் நிற்கும் துயர்மிக்க காலம். சிங்களப் பேரினவாதம் சாதாரண  சிங்கள மக்களையும் ஊடுருவி நிற்கும் காலம். அண்மையில் இலங்கை அரச சார்பாய் இயங்கும் ஒருவர் ஒரு நிகழ்வில் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது. 'சந்திரிக்காவின் காலத்தில் சிங்களக் கிராமங்களுக்கு நாங்கள் பயமில்லாமல் நுழைய முடிந்திருந்தது. அங்கே நாம் மேடைகளில் எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறும்போது யாரும் இடைநடுவில் குழப்பினால் கூட, எங்களைக் காப்பாற்றி அனுப்பிவைக்க மக்கள் இருந்தார்கள். இன்றைய (மகிந்த) காலத்தில் நம்மால்  சிங்களக் கிராமங்களில் சாதாரணமாய்க் கூட உள்நுழைய முடியாது' எனக் கூறியிருந்தார்.

எனவே இன்றைய காலத்தில் நாம் நியாயங்களைப் பேசுவதன் மூலம், அவர்களின் மனச்சாட்சிகளை ஊடுருவவே முடியாது. தமிழர்களுக்கு நிகழ்ந்த பேரழிவுகளின் குற்றவுணர்வைப் பெருக்குவதன் மூலமே சிறு காலடியேனும் இது குறித்து முன்வைக்க முடியும். அதையே பிரசன்னா இப்படத்தில் ஏதோ ஒருவகையில் பார்வையாளர்களின் மனங்களைச் சலனமடையச் செய்கின்றார். அநேகமான சிங்கள மக்களிடையே, 'இப்போதுதானே போர் முடிந்துவிட்டது, புலிகள் அழிந்துவிட்டனர், சமாதானமும் சுபீட்சமும் பெருகுகிறதே' எனற சிந்தனையே இருக்கிறது. அதையே தான் எவ்வளவு அபிவிருத்தி நடந்தாலும், எத்தகைய மாடமாளிகைகள் எழும்பினாலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவ்வளவு எளிதாய் -அது சாதாரண குடும்ப உறவில் கணவன்/மனைவியாய் ஆனால் கூட- நெருங்கிவிட முடியாது என்பதைத்தானே இப்படம் ஒருவகையில் நம்முன் வைக்கின்றது.

(2) "தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் அதன் பண்பாடுகளும் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்த விமர்சனமேதுமின்றி, அப்படி எதுவும் நடக்காதது போன்ற ஒரு தோற்றத்தைப் படம் முழுக்கக் கட்டமைக்கிறார். படத்தின் பின்புலத்தில் திரும்பிய புறமெங்கும் கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. போரினால் பெரியளவில் தமிழர்களிடையே மனரீதியாக பாதிப்பு எதுவும் இல்லை; பொருளாதார ரீதியிலான பாதிப்பு வேண்டுமானால் உள்ளது என்கிற தோற்ற மாயையை தொடர்ந்து உருவாக்குகிறார்."

இக்கதை நிகழும் பரப்பு, போர் மிகமோசமாக நடந்த நிலப்பரப்போ அல்லது தமிழர்கள் கணிசமாக வாழும் வடக்கு/கிழக்குப் பகுதிகளோ அல்ல. அப்படியிருக்கும்போது எதை கெளதம சித்தார்த்தன் எதிர்ப்பார்க்கின்றார் என்றே தெரியவில்லை. போர் என்பது நமது கற்பனைகளுக்கு எவ்வளவு அப்பாற்பட்டவையோ அப்படியே அச்சூழலிற்குள் இருப்பவர்கள் வாழ்வும் நம்மால் சிநதித்தே பார்க்க முடியாத விசித்திரங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது. மிக மோசமான போர் நடந்த சூழலிற்குள் விஜய படம் பார்த்த சம்பவங்கள் முள்ளிவாய்க்கால் சூழலில் இருந்தவர்களால் பதியப்பட்டிருக்கின்றன. போரின் அழிவுகளைப் பார்த்தபின்னும், எதுவுமே இனி செய்வதற்கில்லை என்ற சூழலிலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து நாட்களை நகர்த்தியதை எழுதியிருக்கின்றார்கள். எனவே போர்ச் சூழல் என்பது சாத்தியமற்றதை எல்லாம் சாத்தியமாக்குகின்றது. இப்படியெல்லாம் இருந்திருக்க முடியுமா என எங்கள் சிந்தனைகளை எல்லாம் கேள்விக்குட்படுத்துகின்றன.

எனவே போர்ச்சூழலின் பின் மட்டுமல்ல, போர்ச்சூழலிற்குள் கூட ' கந்தசஷ்டிக் கவசமும் தமிழ் கும்தலக்கிடி பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உட்டாலக்கிடி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன' போன்ற சந்தர்ப்பங்கள் நிகழலாம். இதையெல்லாம் ஒரு காரணமாய்க் காட்டி இத்திரைப்படத்தை நிராகரிக்கவே முடியாது.

(3) "தமிழ்ப்பெண்ணின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் சிங்களராணுவ வீரன் என்னும் குறியீடு முழுக்க முழுக்க மேலோட்ட மான வெகுஜனப் பார்வை கொண்டது. இதைக் குற்றவுணர்வுகளின் அழகியல் என்கிறார். ஒரு இனத்தை மிகக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு குற்றவுணர்வுகளுடன் கூடிய சில சில நல்லிணக்கங்களையும் சமரசங்களும் செய்யும் காட்சிகளை உருவாக்குவதற்குப் பெயர்தான் குற்றவுணர்வுகளின் அழகியலா?"

 இத்திரைப்படத்தில் வரும் இராணுவத்தினன், தமிழ்ப் பெண்ணைக் கூட்டாய்ப் பாலியல் வன்புணர்வு செய்த நண்பனைத் தப்ப வைக்க பொய்ச்சாட்சி சொல்கின்றானே தவிர, அவன் அந்த நிகழ்வின் ஒரு பங்காளியல்ல. ஆனால் அதுவே அவனைப் பெரும் குற்றவுணர்ச்சியில் தள்ளுகின்றது. ஒருகட்டத்தில் இராணுவத்திலிருந்து நீங்க அந்த நிகழ்வே காரணமாகின்றது. ஆக இந்தப் படம் இன்னும் தமிழ் மக்களைக் கொன்றவர்களையோ, பாலியல் வன்புணர்வு செய்தவர்களின் ஆழமான பகுதியிற்குள்ளோ இறங்கவே இல்லை. மேலும் இப்படிப் பொய்ச்சாட்சி சொல்லிய இராணுவத்தினனை (கவனிக்க அவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடவேயில்லை) மன்னிப்பதற்கே இன்னும் இந்தப் பெண்ணால் முடியவில்லை.

இத்தனைக்கும் இந்த பெண் வழியற்ற நிலையில் ஏதோ ஒருவகையில் உதவுகின்ற ஆணாகிய இவனையே அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதற்குள், இத்தகைய பேரழிவை நிகழ்ததிய இலங்கை அரசையோ, அதற்கு ஏதோ ஒருவகையில் மெளனித்து ஆதரவளித்த பெரும்பான்மை சிங்கள மக்களையோ ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்ட இலங்கையிற்குள் பாதிக்கப்பட்ட மக்களால் வாழமுடியுமா? என்ற கேள்வியைத்தானே பிரசன்னா நுட்பமாக எழுப்புகின்றார்.

(4) "ஒரு இனத்தைக் கொன்றொழித்துவிட்டு எஞ்சியவர்களை, ‘நாங்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறோம், நாம் அனைவரும் ஒரே மக்கள், வந்து எங்களுடன் சார்ந்து ஒன்று கலவுங்கள்..’ என்று ராஜபக்சே கூறுவதற்கும் விதானகே கூறுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்: நாங்கள் குற்றவுணர்வில் இருக்கிறோம் என்று விதானகே வாக்குமூலம் கொடுப்பது மட்டும்தான்."

இப்படி எழுந்தமானமாய் கெளதம் சித்தார்த்தன் எழுதும்போது, தயவு செய்து இன்னொருமுறை 'உணர்ச்சி'களை அடக்கிவைத்துவிட்டு பொறுமையாகத் திரைப்படத்தைப் பாருங்கள் என்பதை விட சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

(5) இக்கட்டுரையில் இடையில் சட்டென்று To Kill a Mocking Bird நாவலை சித்தார்த்தன் கொண்டுவருகின்றார். குற்றவுணர்ச்சி என்ற ஒரு காரணமாய் இருக்கக்கூடும். அந்நாவல் எழுதப்பட்ட காலம் 1960கள். அதுவரை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த, அமெரிக்க கறுப்பின மக்கள் தமது உரிமைகள் கேட்டு  எழுச்சி பெறுகின்ற காலகட்டம். ஆதிக்க வெறி கொண்ட பெரும்பான்மை வெள்ளையின மக்களிடையே இருந்து வந்த ஒரு நம்பிக்கை கீற்றுத்தான் இந்த நாவல். இப்போது அதற்கான மதிப்பும், இடமும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அது தன் எல்லைக்குள் நின்று  அன்றைய காலத்தில் ஒரளவுக்கு உண்மையைப் பேசிய நாவல். எதுவுமற்றிருப்பவர்க்கு கிடைக்கின்ற சிறுதுளி வெளிச்சத்தின் அருமை தெரியும். ஆகவேதான் அதைக் கறுப்பின மக்கள் அந்தக்காலத்தில் முக்கியப்படுத்தினார்கள். பின்னர் கறுப்பின மக்களே தம் வாழ்வை தாமே எழுதும்போது இதற்கான முக்கியத்துவம் இல்லாமற் போவதும் இயல்பானதே. அவ்வாறே பிரசன்னாவும் எல்லாம் இழந்து நிற்கும் தமிழ் மக்கள் மீது தன் எல்லைக்குள் இருந்து ஒரு திரைப்படத்தை எடுக்கிறார். அதே சமயம் அவருக்கு தான் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவன் இல்லை என்பதும் நன்கு தெரிகிறது. எனவேதான் சோமீதரனின் பதிவில் பின்னூட்டம் இடும்போது, தமிழ்மக்களின் துயர் நன்கறிந்த சோமீயை திரைப்படம் எடுக்க உற்சாகப்படுத்துகின்றார்.

(6) "தமிழச்சி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறாள். ஆனால் சிங்களன் தமிழ் பேசுவதில்லை. இதுதான் பேரினவாதம். என் மொழிதான் நீ பேசப்பட வேண்டும் என்னும் Reconciliation. ‘அவன் அவள் மீது எல்லையற்ற காதல் கொண்டு தமிழ்மொழி கற்றுக் கொள்வது போல ஒரு காட்சி வைக்க முடியாதா? அப்படி வைத்தால் இக்கதையின் ‘கலைப் புனிதத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமா? "

இதென்ன கொடுமை....சிங்களவருக்கு உண்மையான காதல் தொடக்கத்தில் இருந்தே இருக்கவில்லை (காதலிக்கும் உணர்விருந்தால் அவர் இத்தனை காலம் தனித்திருக்கவும் தேவையில்லை; அதே போன்று இயந்திரத்தனமாய் ரெஸ்லிங்கை முன்னர் பார்த்ததுபோல, திருமணத்தின் பின்னும் எவ்வித மாற்றமும் இல்லாதே பார்க்கிறார்). எனவே இவ்வாறான பாத்திரத்திற்கு எப்படி 'காதலை' ஊட்டமுடியும்? ஆதிக்க இனத்திற்குரிய மற்றும் ஆணுக்குரிய நீ என் இடத்திற்கு வரவேண்டுமே தவிர, நான் உன்னிடத்திற்கு வரமாட்டேன் என்கின்ற அடம்பிடிப்பில் எப்படி ஒரு சிங்களவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளப் போகின்றார். இதுதான் நடைமுறை யதார்த்தம். ஒருவேளை உண்மையான காதல் இருந்தால் ஒருவர் அப்படி தமிழைக் கற்று வரக்கூடும். ஆனால் இந்தப் பாத்திரம் அப்படிப்பட்டது அல்லவே. பிறகேன் அப்படி எதிர்ப்பார்க்க வேண்டும்?

(6) "அதேபோல, தமிழ்பெண்ணின் கதாபாத்திரமும் பெரும் முரண்பாடுடனேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போரின்கொடூரமான தாக்குதலினால் சிங்கள இனத்தின் மீதான ஓயாத மன வெறுப்பாலும், கடும் வறுமையாலும் உழல்பவள். டக்கென்று ஒரு சிங்கள இனத்தவரை திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பாது. அடுத்த நொடியே தனது உடலைக் கொடுத்துவிடும் அதிசயமும் நிகழாது. (அந்த உடலுறவுக் காட்சி வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழின் மூன்றாந்தர மசாலா இயக்குனர்கள் கூட ‘கலை’யாக இக் காட்சியை வடிவமைத்திருப்பார்கள்) மேலும், தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது."

இது அடுத்து கெளதம் சித்தார்த்தன் செய்யும் நகைச்சுவை. அவளுக்கு வேறு தெரிவு இல்லையென்றுதான் இதை முடிவெடுக்கிறாள் என்றுதானே காட்சி காட்சியாக தன்னிடமிருக்கும் ஒவ்வொரு நகையாக அடகுவைப்பதை நிதானமாய் பிரசன்னா காட்டுகின்றார்.

உடல் சார்ந்த இயற்கையை எல்லாம் 'அரசியல்' செய்யக்கூடாது கெளதம சித்தார்த்தன்.

ஒரு பெண் ஆணுடன் முதன்முறை உடலுறவில் ஈடுபடும்போது உற்சாகமாகவும் ம்கிழ்வாகவும் இருப்பதைப் பார்த்து ஆண் இவள் இதற்கு முன் நிறைய அனுபவித்திருப்பாளோ என சந்தேகம் கொள்வதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்னால் பெரிதாய் வித்தியாசம் காணமுடியவில்லை. அதைவிடக் கொடுமை 'தேசிய இன அரசியல் பேசும் அப்பெண்ணை ‘விஜய் படங்களின் ரசிகையாக’ மாற்றியிருப்பது பெரும் Irony யாக இருக்கிறது' என நீங்கள் கூறுவது. கொஞ்சம் விட்டால் தேசிய அரசியல் பேசும் ஒருவர் இயற்கைக் கடன்களைக் கூட கழிக்ககூடாது என்று கூறிவிடுவீர்கள் போலிருக்கிறது. என்னுடைய அச்சம் இப்போது என்னவென்றால், அஸின் இரசிகனாக இருக்கும் நான் எழுதும் இந்த எதிர்வினையையே அதை வைத்தே நீங்கள் நிராகரித்துவிடுவீர்களோ என்பதுதான்.

(7) "இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்குப் போவதுதான் ஒரே தீர்வாக முன் வைக்கிறார் விதானகே. அப்படியானால், ஈழத் தமிழர்களின் நலனுக்காக முன் நிற்கும் நாடு என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். ஈழத் தமிழர் நலன் சார்ந்த இந்திய வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும், தமிழ் நாட்டு வெகுஜன அரசியலும் நுண்ணரசியலும் எல்லோரும் அறிந்ததே. சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் ஈழப் பெண்ணிற்கு ‘அகதி’ என்ற காரணத்துக்காக மருத்துவப் படிப்பு மறுக்கப்பட்ட அலட்சியம் தோய்ந்த பூமிக்கு வரத்தான் அவள் ஆசைப்படுகிறாள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு NRI இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு, தனது மொழி பேசும் அகதியை அலட்சியப்படுத்தும் புண்ணியபூமி தான் அவளுக்கு ஆறுதல் கொடுக்குமென எண்ணுகிறாள். ஏன் கனடா, லண்டன் போன்ற நாடுகளுக்குப் போவது பற்றி அவள் கனவு காணவில்லை?"

என்னுடைய ஞாபகம் சரியென்றால் (சென்ற வருடம் ஒரேயொரு முறைமட்டுமே படத்தைப் பார்த்தது) அவர்கள் இந்தியாவிற்குப் போவது கோயில்களைப் பார்ப்பதற்கு என்பதாகவே காட்சியிருக்கும். அவள் மனம் சோர்ந்து ஒடுங்கியிருப்பதைக் கண்டே ஆண் இந்த முடிவை எடுக்கிறார் (இந்தக் காட்சியில் ஆணுக்கு மெல்ல மெல்லமாக காதல் அரும்புவதைக் கூட அழகாக பிரசன்னா எடுத்திருப்பார்). எனவே சித்தார்த்தன் முன்வைக்கும் பெரும் 'பூகோள அரசியல்' எல்லாம் இங்கு எடுபடாது.

அவ்வாறே சித்தார்த்தன் சொல்வதுபோல இந்தியாவிற்குப் போவதாய் இருந்தால் கூட, ஏன் கனடா, இங்கிலாந்து போகக் கேட்கவில்லை என்று கேட்பது இன்னும் அபத்தம். எனெனில் அவர்களிடம் அவ்வாறு போவதற்கான எந்தப் பணமும் இல்லை என்றுதானே படம் முழுக்கக் காட்டப்பட்டிருக்கிறது. நகைக்கடையை விற்றுவிட்டுத்தானே இந்த இந்தியப் பயணமே சாத்தியமாகிறது. கனவு வேண்டுமானால் அந்தப் பெண் 'ஒரு சனியனும் வேண்டாம் என்று செவ்வாய்க் கிரகத்திற்கு போவதாய்க் கூட காணலாம். ஆனால் யதார்த்த்தில் (கதையின் நீட்சியில்) அவர்களால் இந்தியாவிற்குப் போவதே சாத்தியமான ஒரே வழி.

(8) "ஆனாலும் இறுதிக் காட்சியில் அவருக்குள்ளிருக்கும் தார்மீகமான போராளி விழித்துக் கொள்கிறான். தன் இனத்தை அழித்தொழித்தவர்களுடன் இணைந்து அல்லது சார்ந்து வாழவே முடியாது என்பதையும் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும் நல்லிணக்கம் குறித்த பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்கி தமிழ்ப்பெண் செல்வியை தற்கொலை செய்ய வைக்கிறார்."

ம்...இறுதியாக நானும் கெளதம் சித்தார்த்தனும் உடன்படும் ஒரு புள்ளிக்கு வந்துவிட்டோம். ஹொந்தாய்.

ஆனால், பிறகு பழையபடி வேதாளம்...

(9) "சிங்களரோடு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் இல்லையெனில் சாவதைத் தவிர வேறு வழியில்லையென்ற விமர்சனம் இதற்குள் கட்டமைகிறது.

அவர் இன்னும் சற்று விசாலமாக யோசித்திருந்தால், தமிழ்ப் பெண்ணைச் சாகடிக்காது, அவனிடமிருந்து பிரிந்து, தனது நிலத்தில் சுதந்திரமாக அவள் விரும்பும் ‘விஜய் பாடல்களுடன்’ கொண்டாட்டமாக வாழ வைத்திருக்கலாம்."

அந்தப் பெண்ணிற்கு தனியே வாழும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருந்தால், அவள் ஒருபோதும் ஒரு சிங்களவரையே மணந்திருக்க முடியாது. அவளுக்கு வேறு தெரிவுகளில்லலாதுதானே சிங்களவரை மணக்கிறாள் எனத்தானே படத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

அந்தப் பெண்ணிற்கு கடந்தகாலத்தை முற்றாக மறக்க முடியுமென்றால், அவளால் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சிங்களக் கணவனோடு வாழ முடிந்திருக்கும்.

அதேபோல, அவனைத் துறந்துவிட்டு தனியே விஜயின் பாட்டுக்களோடு கொண்டாட்டமாய் வாழ முடியுமென்றால், அவனை விலத்தித் தனியே வாழ முடிந்திருக்கும். ஆனால் அவளால் இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க முடியாது என்பதாலேயே அவள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றாள்.

இதுதான் இன்று ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையல்லவா? இதைவிட எப்படி அப்பட்டமாய் இன்றைய சூழலைக் காட்ட முடியும்? இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழர்களால் முற்றுமுழுதாக கடந்த காலத்தை மறந்துவிட்டு வாழ முடியாது. அதேபோல, சிங்களவர்கள் பெரும்பான்மையான ஒரு நாட்டில் தனித்துப் பிரிந்துபோவதற்கான எந்த சிறு சமிக்ஞைகளும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. ஆக இந்தப் பெண் தேர்ந்தெடுத்த தற்கொலையைப் போலத்தான் மிகவும் சிக்கலான காலத்தில்  தமிழர்கள் இன்று ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா?

கெளதம சித்தார்த்தன் இப்படியும் சிந்தித்தும் பார்க்கலாம்.

மற்றும்படி  இதில் அவர் அஷோக ஹந்தகமவின் 'இனி அவன்' படத்திற்கு வைத்த விமர்சன்ம் உள்ளிட்ட தமிழ்மக்கள் மீது அக்கறையின் பாற்பட்டு வைக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கு உடன்பானதே.  ஆனால் இத்திரைப்படத்தை நான் சித்தார்த்தனின் பார்வையினூடாகப் பார்க்கவில்லை என்பதற்காகவே இந்தக் குறிப்பு.

ஈழத்திலுள்ளவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத இன்றைய சூழ்நிலையில் -நான் ஏற்கனவே கூறியதுபோல- பிரசன்ன விதானகேயின் கரங்களைக் கோர்த்து நடக்கவே விரும்புகின்றேன். அதுவும் நான் நம்பிக்கை வைத்த விமுத்தி ஜெயசுந்தரா ('இரண்டு உலகங்களுக்கிடையில்' படம் பற்றிய பார்வையும் 'உன்னத்திற்கே' எழுதியிருக்கின்றேன்) போன்றவர்களே இன்று 'இலங்கையிற்கு வாருங்கள்' என் இலங்கையரசு சார்பாய் சுற்றுலாப் படங்களை எடுக்கும் காலத்தில் பிரசன்னா போன்றவர்கள் மின்மினிப்பூச்சிகள் என்றாலும் அவர்களின் பறத்தல் எனக்கு முக்கியமானது.


கெளதம சித்தார்த்தனின் கட்டுரை:(http://www.keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/26915-2014-08-01-06-14-16)  

(
August 13, 2014)

தற்செயல்களின் அழகு

Sunday, July 27, 2014

-அ.முத்துலிங்கத்தோடு ஒரு சிறு சந்திப்பு-

'In Our Translated World' வெளியிடப்பட்டு மாதங்கள் சில ஆகிவிட்டபோதும், அதன் பிரதியைப் பெறுவதில் ஒவ்வொர்முறையும் ஏதோ 'சகுனப்பிழை' ஏற்பட்டு கையில் கிடைக்காமலே போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி அ.முத்துலிங்கத்திற்கு -வந்து பெறமுடியுமா- என மின்னஞ்சல் அனுப்பவதும், பிறகு ஏதேதோ காரணங்கள் போகாமல் விடுவதும் நிகழ்ந்திருக்கிறது.

அவருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுப்பு வந்திருக்கவேண்டும். அண்மையில் இங்கு பா.கிருஷ்ணனுடன் நடந்த சந்திப்பில் எனக்கான பிரதியைக் கையோடு கொண்டு வந்திருக்கின்றார். அப்போது நான் இன்னொரு நாட்டில் இருந்துகொண்டு, இன்று நான் பார்த்த பெண்களில் அதிகம் கவர்ந்திழுத்தவர் யார் என்ற தீவிர ஆராய்ச்சியில் மூழ்கியிருந்திருக்கின்றேன். கடந்த ஞாயிறும், 'வருகிறேன்' என அ.முவிற்குச் சொல்லிவிட்டு, மாலையில் கவிதைகளை விட, ஏரியில் மறையும் சூரியனைப் பார்ப்பதே முக்கியமென நண்பருடன் புறப்பட்டுவிட்டேன்.

நேற்றுத்தான் எனக்குச் 'செவ்வாய் தோசம்' முடிந்திருக்கவேண்டும். வாய்ப்புக் கிடைத்தது.

ஐந்து நிமிடங்களுக்குள் பிரதியைப் பெற்றுவிட்டு திரும்பிவிடலாம் என நினைத்துக்கொண்டுதான் போனேன். உரையாடத் தொடங்க அது ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக நீடித்துக்கொண்டு போனது. இதுநாள் வரை சந்திக்கும்போதெல்லாம் வணக்கமும் சுகமும் விசாரித்துவிட்டு நகர்ந்துகொண்டிருந்த நான் இவ்வளவு நேரம் அ.முவோடு உரையாடியது ஓர் ஆச்சரியமான நிகழ்வுதான்..

இப்போது அவர் வாசித்துக்கொண்டிருந்த நாவல்களை தன் Ipad த் திறந்து காட்டிக்கொண்டிருந்தார். முதலாவதே நிரோமி டீ சொய்சாவின் 'தமிழ்ப் பெண்புலி'. அது குறித்து எதையோ சொல்ல வாயெடுத்தேன், பிறகு ஏதேதோ நினைவுகள் பயமுறுத்த அமைதியாகிவிட்டேன். 'தமிழ்ப் பெண்புலி' குறித்த என் பார்வையை எழுதியதற்கே நிரோமி 'பணம் கொடுத்தார்' என்றெழுதிய ஒருவர் என்னை விட அ.முவோடு 'அதிக நட்பாய்' இருக்கின்றபடியால், இதையும் அறிந்தால், அ.முவை இன்னும் 'புகழ்ந்து' அவர் எழுதிவிடுவார் என்பதால் இந்நூல் பற்றித் தொடர்ந்து கதைப்பதைத் தவிர்த்துவிட்டேன்.

மைக்கல் ஒண்டாச்சி, ஷியாம் செல்வதுரை, ஜூம்பா லகிறி, சிமமண்டா அடீட்சி என நாங்கள் நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். English Patient, Funny boy போன்ற சிறந்த நாவல்களை எழுதிய மைக்கல் ஒண்டாச்சியும், ஷியாமும் பின்னைய நாவல்களில் சரிவு நிலைக்கு வந்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறதென அ.மு சொன்னார்.எல்லாப் புக்ழபெற்ற எழுத்தாளர்களுக்கும் முக்கியமான படைப்பாய் ஒரு நாவலே அதிகம் இருக்கிறதென்றேன். மேலும், அ.மு Hungry Ghosts ஐ அரைவாசிக்கு மேலாய்த் தாண்டமுடியவில்லை என்றபோது, நானும் இந்நாவலில் நிறைய எதிர்பார்த்தேன், முக்கியமாய் முடித்தவிதத்தில் நாவல் எங்கையோ தவறிவிட்டதென என் பார்வையைச் சொன்னேன். மொழியில் சாகசம் செய்யவேண்டும், ஷியாமின் இந்த நாவலில் குறிப்பிடத்தக்கதாய் எதுவுமில்லையென, அண்மையில் நியூயோர்க்கரில் வந்த கதையொன்றில் தனக்குப் பிடித்த வாக்கியங்களைத் தான் அடிக்கோடிட்டிருந்தவற்றை எடுத்துக் காட்டினார்.

Interpreter of Maladies எழுதிய ஜூம்பா லகிறியின் அண்மையில் வந்த நாவலான Lowland ம் அப்படியே என்றார். எனக்கு வாசித்தவளவில் அது சற்று சுவாரசியமாக இருந்தது. அதையின்னும் முடிக்காததால் எதையும் தீர்க்கமாய் இப்போது சொல்லமுடியவில்லை என்றேன். ஜூம்பா லகிறியின் The Namesake' ஐ மீரா நாயர் திரைப்படமாக அழகாக மாற்றியிருந்தார் என அ.மு வியந்து சொன்னார். முக்கியமாய் நாவலில் தாய் பாத்திரம் சிறிது; மகன் பாத்திரமே கதை சொல்லும். ஆனால் திரையில் தாய் பாத்திரம் விரிவாக்கப்பட்டு தாயினூடாக கதை சொல்லும் முறையாக மாற்றப்பட்டதென்றார். நாவலைப் படமாக்குவதில் அநேகம் நாவலே திரைபடத்தை விட நன்றாக இருக்கும், ஆனால் மீரா நாயரினால் நாவலை விட திரைப்படம் அழகாக வந்திருக்கிறதென்றார் (மீரா நாயரின் அண்மைய திரைப்படமான The Reluctant Fundamentalistம் நாவலை அடிப்படையாகக் கொண்டது. படம் பார்த்துவிட்டேன். நாவல் எப்படியிருக்குமென வாசித்துப்பார்க்கவேண்டுமென ஆவலைத் தந்த திரைப்படம்).நான் Namesake திரைப்படத்தை மாத்திரமே பார்த்தவன் என்பதால் இந்த நுட்பமான வித்தியாசம தெரியவில்லை, என்றாலும் லகிறியின் unaccustomed earth என்னை அவ்வளவாய் கவர்ந்ததில்லையெனச் சொன்னேன்.

ஒண்டாச்சி, லகிறி போன்றவர்களின் நாவல்கள் ஏற்கனவே சிறுகதை வடிவில் நியூயோர்க்கரில் வநது வாசித்திருந்ததால், பிறகு நாவலாக வந்தபோது ஈர்க்கவில்லையோ தெரியாதென அ.மு சொன்னார். அநேகமானவர்கள் நாவல்களை எழுதிக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் சிலபகுதிகளை சிறுகதைகளாக்கியோ அல்லது சுருக்கியோ வெளியிடுவது இயல்புதானே, ஹருக்கி முரகாமியின் 18Q4 கூட நாவலாக வரமுன்னர் இப்படி வந்தபோது வாசித்திருக்கின்றேன் என்றேன். சிலவேளைகளில் ஒண்டாச்சியோ, லகிறியொ, முரகாமி செய்ததைப் போல நாவலின் பல்வேறு அத்தியாங்களைக் கோர்த்து சிறுகதையாக்கியது போல அல்லாது, அப்படியே தங்களின் நாவலின் பகுதிகளை முன்னரே வெளியிட்டதால் நாவல் வாசிக்கும் சுவாரசியம் இல்லாமற் போய்விட்டதோ தெரியவில்லை.

நாவல்களின் பகுதிகளை முன்னரே வெளியிடுவது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்று அ.மு சொன்னபோது, விகடனில் அவர் எழுதும் தொடரில் இறுதியாய் வந்த அத்தியாயத்தை நான் ஏற்கனவே வேறெங்கோ வாசித்து பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படியே நம் கதை திசையெட்டும் அலைந்தபோது , நாஞ்சில்நாடனின் விகடன் பட்டியலில் உமது படம் வரவில்லை? நான் தேடிப்பார்த்தேன், ஏன்?' என்று அ.மு கவலைப்பட்டார். எனக்கும் கவலைதான் இல்லையா என்ன? அடிக்கடி முன்னட்டைகளில் எனக்குப் பிடித்த அஸினின் வர்ணப்படம் வருகின்ற ஒரு பத்திரிகையில் பாஸ்போர்ட் சைஸிலாவது என் படம் வருகின்றபோது அவரின் தீவிர இரசிகனாக எனக்கும் பெருமிதமாகத்தானே இருக்கும். ஆனால் இது எனக்கும், அ.முவிற்கும் புரிகிறது. விகடன்காரர்களுக்கு இது விளங்கவில்லையே? (இப்படி எதையும் முகநூலில் எழுதவும் இப்போது பயமாயிருக்கிறது. 'பட்டியல் சர்ச்சை' பற்றி ஜூலை அம்ருதா கட்டுரையில் நான் முகநூலில் எழுதிய ஒரு சிறுபதிவைப் பிரசுரித்திருக்கின்றார்கள். அதுகூடப் பரவாயில்லை, அதில் நண்பர் யாருக்கோ சொன்ன பதிலான, 'எனக்கு இரசிகைகள் கூடிவிடுவார்கள் எனத்தான் விகடன் படம் போடாது இருட்டடிப்புச் செய்திருக்கின்றது' என்று எழுதிய கொமண்டையும் அல்லவா சேர்த்துப் பிரசுரித்திருக்கின்றார்கள்)

முகநூலிலிருந்து, டொமினிக் ஜீவாவிற்குக் கொடுத்த இயல்விருதுவரை, கோணங்கியிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த ரமேஷ்-பிரேம் வரை..., எழுதத் தொடங்கும்போது பாவித்த சொற்களையே திரும்பத் திரும்பப் பாவிக்கின்றேன் என வருகின்ற என் சோர்வுவரை நிறையத் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தோம். வைதேகியின் தமிழ்ப்பற்றும், அவர் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் பழந்தமிழ் இலக்கிய நூற்கள் பதினெட்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் விதத்தையும் பற்றியும் நிறைய அ.மு சொன்னார். தமிழ் என்பது தொடர்ந்தும் தனிமனிதர்களாலே தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்திருப்பது குறித்தும், உதாசீனம் செய்யும் அரசு/நிறுவனங்கள் குறித்தும் பேசினோம்.

வைதேகி போன்று தமிழ் மீது பற்று வைத்திருப்பவர்கள் குறித்து உங்களைப் போன்றவர்கள் விரிவாக எழுதவேண்டும் என அ.மு சொன்னபோது. என் சங்க இலக்கிய அறிவு மிகவும் குறைவானது எனக்குறிப்பிட்டேன்., இப்போதும் நான் 'காலம்' செல்வத்தின் தொலைபேசி அழைப்புக்களை எடுக்காமல் தவிர்ப்பதற்கு செல்வம் நீ இப்போது சங்க இலக்கியத்தில் என்ன படிக்கிறாய் எனக்கேட்டு, கமபன் பாடிய ஏதாவது ஒரு பாட்டிற்குப் பொருள் சொல்லெனக் கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்தினால் என்பதை அ.முவிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

இப்படி எல்லாப் பக்கமும் கதைத்த நாம், எங்களிருவருக்கும் மிகவும் பிடித்த ஜெயமோகனைப் பற்றிக் கதைக்காமல் விட்டுவிடுவோமா என்ன?

நாங்கள் பேசிக்கொண்டிருந்த மேசையிலேயே 'முதற்கனல்' கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. அதை, முதலாவது முறை வாசித்துவிட்டு இரண்டாந்தடவையாக வாசித்துக்கொண்டிருந்தார். அ.மு, ஜெமோ குறித்து வியக்காமல் இருந்தால்தான் வியப்பு. நானும், ஜெயமோகன் எழுதும் வேகத்தைப் பற்றி வியந்து சொல்லிக்கொண்டிருந்தேன். சிறுவயதில் திருமூலர்தான் மனதின் வேகத்தை விட எழுதக்கூடியவர் என்று அறிந்திருக்கின்றேன். பதின்மவயதில் எனக்குப் பிடித்தவரான பாலகுமாரன் இப்படி நிறைய எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் ஜெயமோகனின் வேகத்திற்கு முன்னே எனக்குத் தெரிந்த எவ்ரும் நிற்கவேமுடியாது என் உறுதியாய்ச் சொன்னேன். வேகமாய் எழுதுவது மட்டுமில்லை, சொன்னதைத் திருப்பி எழுதாது, அதிகம் வேற்றுமொழிக்கலப்பில்லாது எழுதுவதுதான் இன்னும் வியப்பைத் தருகிறதென்றார் அ.மு.

ஜெயமோகன் மகாபாரதம் எழுதும் வேகத்தையும் ஆழத்தையும் பார்க்கும்போது, ஒரு குழுவே பின்னால் இருந்து இயங்குவது போலிருக்கிறது என்றுதான் எங்கள் இருவருக்கும் சந்தேகம் வந்தது. மகாபாரதம் எழுதுவதோடு மட்டுமின்றி, அதே நேரத்தில் திரைப்படங்களிற்குக் கதை எழுதுகிறார், இரண்டு பேரோடு சண்டைபிடிக்கிறார், மேலும் மூன்று பேருக்கு அறிவுரை கூறுகிறார், இதெல்லாம் ஒரு தனிமனிதரால் செய்யக்கூடியதா என்ற கேள்வி எனக்கும் நிறைய நாளாக உண்டு. இதற்குள் அ.மு, ஜெயமோகன் இப்படி தினம் தினம் எழுதிக்கொண்டிருந்தாலும், அவர் இணையத்தில் பிரசுரிப்பதைவிட ஒரு மாதம் முன்னே பிரசுரிப்பதற்கான அத்தியாயங்களை கைவசம் வைத்திருக்கின்றார் என்றபோது அ.மு அன்போடு தந்த கேக்கைச் சாப்பிட்ட கொண்டிருந்த நானப்படியே உறைந்துவிட்டேன்.

ஏதாவது புதிதாய் என் புத்தகம் வெளிவருகிறதா எனக்கேட்டார். சென்ற வருடம் 2 புத்தகங்கள் கொண்டு வருவதற்கான முயற்சியில் இருந்தேன். இந்த வருடத்திற்குள் எதையாவது ஒன்றையாவது செய்யும் விருப்பமிருக்கிறதென்றேன். நானோ, என் பதிப்பாளரோ இம்முறையேனும் உறங்குநிலைக்குப் போகாதிருக்கக் கடவ.

'உங்களை எல்லோரும் இந்தியாவிற்கு வர அழைக்கின்றார்களே நீங்கள் போகலாமே?' எனக் கேட்டேன். கனடாவிற்கு வந்ததன்பிறகு இன்னும் இந்தியா போகவில்லை, ஆனால் அங்கே போக சற்றுப் பயமாயிருக்கிறது. நிறையக் குழுக்கள் இருக்கின்றார்கள். சர்ச்சைகளில் சிக்கவேண்டியிருக்கும் என்றார். 'நீங்கள் அங்கே போய் நிரந்தரமாகத் தங்கப் போவதில்லைத்தானே. இதெல்லாம் பெரியவிடயமில்லை' என்றேன். அண்மையில் கூட, ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்காய், விமான ரிக்கெட்டோடு தங்குமிட வசதியெல்லாம் தங்கள் செலவிலே செய்து தருகின்றோம் என்று கேட்டிருக்கின்றார்கள். நான் தான் போகவில்லை' என்றார். 'நிச்சயம் ஒருமுறை செல்லுங்கள். முக்கியமாய் புத்தகக்கண்காட்சிகள் நடக்கும் நேரங்களில் போனீர்களென்றால் நிறையப் பேரை ஒரேயிடத்தில் சந்திப்பதும் எளிதாக இருக்கும்' என்றேன். அப்படிப் போகும்போது தனியே போக அலுப்பாயிருக்கும், ஓர் உதவியாளர் தேவையென்று கூறி என்னையும் செலவில்லாது அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்ல நினைத்தேன். அவரும், நானும் சேர்ந்து போய் ஜெயமோகனைச் சந்தித்து மகாபாரத வேகத்தையும் சற்றுக் குறைக்கலாம். வாசிப்பவர்களும் பாவமல்லவா. அவர்களுக்கும் சற்று ஓய்வு வேண்டுமில்லையா?

இதை எல்லாவற்றையும்விட, அ,முவின் எழுத்துக்களை மட்டுமின்றி அவர் சார்ந்தியங்கும் இயல்விருதுவரை விமர்சனங்கள் வைத்து, அவர் எழுதிய ஒரேயொரு நாவலையும் அது நாவலில்லையென கிழித்து எழுதியவனோடு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாய் அதன் சுவடுகள் இன்றி அவரால் இயல்பாய் உரையாட முடிந்திருந்ததும் என்னளவில் சற்று வியப்பானது. மேலும் In our translated worldன் colourful hardcover/normal copy என இரண்டு பிரதிகளைப் பத்திரமாய் வைத்துத் தரவும், முதற்கனலின் ஜெயமோகன் கையெழுதிட்ட செம்பதிப்பையும், வைதேகியின் நூலையும் மனமுவந்து தந்து வழியனுப்பியபோது ஒரு மெல்லிய நெகிழ்வு எனக்குள் பரவியிருந்தது.

தற்செயலான நிகழ்வுகள் அழகானவை மட்டுமில்லை. எமக்கான பிரமைகளைச் சிலவேளைகளில் தகர்க்கவும் தாண்டவும் வைக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன போலும்.

(முகநூலில்-Elanko Dse- ஜூலை 24 எழுதியது)

கள்ளி

Wednesday, July 16, 2014


ஏதோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான்.  ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உடல்களின் கடலில் இருந்து, கவனத்தைத் திசை திருப்பி இந்த வாசம் இதுவரை அறியாத இன்னொரு உலகிற்கு மெல்ல மெல்ல என்னை அழைத்துச் சென்றுகொண்டிருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல அந்த வாசம் என்னைத் தொடர்வதை விட,  நான் அதற்குப் பின்னே தொடர்ந்து போகின்ற நிலை ஏற்படத் தொடங்கியது. அந்த வாசத்திற்காகவே சரியாக நேரத்தைக் கணக்கிட்டு மாலை நேரத்துச் சப்வேயில் ஏறுபவனாக மாறிப்போனேன். சிலவேளைகளில் பாதாளச் சுரங்கத்திற்குள் முன்னரே வந்திருந்தாலும், சரியான நேரம் வரும்வரை காத்திருந்து முன்னர் வரும் இரெயின்களை எல்லாம் போகவிட்டு, குறிப்பிட்ட ரெயினில் மட்டும் ஏறிச் செல்லத் தொடங்கினேன். ஆனால் இந்த நேரக்கணக்கிலும் ஒரு சிக்கல் வந்திருந்தது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் செலவு கூடிய நகர்களில் ஒன்றான ரொறொண்டோவில்தான், உலகில் மிகவும் மோசமான பாதாள இரயில் சேவையும் இருக்கிறது. அவ்வப்போது சேவை தாமதமாவதும், அதற்கு மாற்றீட்டாய் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதும் வழமையான ஓரு நிகழ்வு. தொடக்கத்தில் சேவைகள் குழம்பும்போது கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள் திட்டிய நானும் நாட்போக்கில் களைப்படைந்து, பின்னர் ஒரு பபிள்கம்மை எடுத்து வாயில் போட்டு எனது கோபத்தையும் சேர்த்து சப்பத்தொடங்கிவிடுவேன்.

இவ்வாறாக வாசத்தைப் பின் தொடர்வது பின்னேரங்களில் மட்டுமில்லாது எந்நேரமும் ஆக அது ஆகிப்போனதில்தான் எனக்குப் பிரச்சினை வரத் தொடங்கியது. இரவுகளில் கூட கனவுகளில் நான் அந்த வாசத்தைப் பின் தொடர்கின்றவனாய் மாறத் தொடங்கியிருந்தேன். இதுவரை என் கனவுகள் எழுந்தமானமாய் என்னால் கட்டுப்படுத்த முடியாது வெளிக்கிளம்பியதைப் போலவன்றி இந்த வாசம் என் கனவுகளைக் கட்டுப்படுத்தவும், திசைகளைத் திருப்பவும் தொடங்கியிருந்தது.. இக்கனவுகளில் எப்போதும் சூரியகாந்தித் தோட்டங்களின் இடையிலோ அல்லது லாவண்டர் தோட்டங்களில் நடுவிலேயோ ஒரு பெண் ஓடிக்கொண்டிருப்பவளாகவும், அவளின் முகம் எப்படி இருக்கும் எனக் கண்டுபிடிப்பதில் நான் தோற்றுக் கொண்டிருப்பவனாகவும் இருந்துகொண்டிருந்தேன். என்றேனும் ஒருநாள் அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டுபிடித்தால் நான் இந்த வாசனையைப் பின் தொடர்வதைக் கைவிட்டு விடுவேன் என நம்பவும் தொடங்கியிருந்தேன்.

கனவுகளுக்குள் நுழைந்து இன்னுமிச்சிக்கலை ஆழப்படுத்துவதை விட, இவ்வாசனை வந்த மூலத்தில் வைத்தே பிரச்சினையைக் களைவோம் என ஒருநாள் முடிவு செய்தேன். முதலில் மாலை நேரத்து பிதுங்குத்தள்ளும் ரெயினில் நான் அடிக்கடி சந்திக்கும் பெண்களை மனதிற்குள் பட்டியலிட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இந்த வாசனையைப் பரப்பக் கூடியவர்கள் என்று நான் நம்பியவர்களை, நினைவில் வைத்திருப்பதற்காய் அவர்கள் ஒவ்வொருவரிலும் வித்தியாசமாக என்னைக் கவர்ந்த விடயங்களை ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கினேன். விஞ்ஞான பாடத்திற்கு அத்தியாவசியமான மூலகங்களின் ஆவர்த்தனப்பட்டியலைப் போல, இயற்கையாகவே தலைமயிர் பொன்னிறம் உடையவர், புருவத்தில் ரிங் குத்தியிருப்பவர்,  அடர்ந்த சிவப்பு நிறத்தில் உதட்டுக்கு வர்ணம் பூசுபவர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன் தலைமயிரின் வடிவத்தை மாற்றிக் கொண்டிருப்பவர், குதியுயர்ந்த காலணிகளை அணிந்தபடி எப்போதும் நெரிசலில் யாரோ ஒருவரின் காலை மிதித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பவர், பின்னங்கழுத்தில் டிராகன் டட்டூ குத்தியவர் என இப்படி அட்டவணைப்படுத்திக் கொண்டு போகவே, பேப்பர் ஒரு பக்கத்தையும் தாண்டி நீண்டு கொண்டிருந்தது. இதை இன்னும் எளிதாக்க என் கடந்தகால வாழ்க்கையில் சிலிர்க்க வைத்த பெண்களின் பெயர்களை இவர்களுக்குச் சூட்டத் தொடங்கினேன். தமிழே பேசமுடியாத முகங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பது அபத்தம் தான் என்றாலும் தரணியெங்கும் தமிழ்ப் பரப்பும் பணியை இன்னொருவிதத்தில் செய்துகொண்டிருந்ததில் எனக்குள் கொஞ்சம் சந்தோசமும் எட்டிப்பார்த்தது.

பெயர்களை வைப்பது எளிது. ஆனால் இவர்களில் யாரிடமிருந்து வாசனை வருகிறதென்பது கண்டுபிடிப்பதுதான் கடினம். என் மூக்கின் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும், ஆகக் குறைந்து சற்று அருகில் நெருங்கிப்போய்ப் பார்த்தால் 'உண்மை'யைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்தச் சன நெரிசலுக்குள் எப்படி ஒவ்வொருத்தருக்கும் அருகில் போய் நின்று மூக்கைச் சுழட்டித் துழாவிப் பார்க்க முடியும். இரண்டு கால்களை நெருக்கி வைக்கவே சிறு இடம் கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருக்கையில், எப்படித்தான் நினைத்த இடத்திற்கு நகர முடியும். தலைக்கு மேலே தொங்கும் ஒன்றிரண்டு கம்பிக்கே சனம் -கடைசியாய் இருக்கும் ஒரு ரிக்கெட்டுக்காய் தியேட்டரில் அடிபடுவது போல- அல்லற்பட்டுக் கொண்டு நிற்கும்போது, வாசத்தின் ரிஷிமூலத்தைத் தேடுவதென்பது பகல் கனவாய்த்தானிருக்கும். 

இப்படி சப்வேயில் பயணிக்காத பொழுதுக்கும், வாசனையைப் பின் தொடரும் கனவுகள் வராத இரவுகளுக்கும் இடையில் கிடைத்த சொற்பநேரத்தில், யோசிக்க முடிந்ததில் ஒரு தீர்வைக் கண்டடைந்தேன். இப்படியான வாசத்தைப் பின் தொடர்பவனாக நான் மட்டும் இருக்கமுடியாது. வேறு பலரும் இருப்பார்கள். ஆகக் குறைந்தது இந்த வாசனையின் ஊற்றின் இருப்பிடமாய் இருப்பவர், தான் அனுப்பும் சமிக்ஞையை யார் கவனத்தில் கொள்கிறார் எனப் பார்க்கவும் விரும்புவார் அல்லவா? அவரைக் கண்டுபிடிப்போம் எனத் தீர்மானித்து சனம் மிதமாக இருக்கும் ஒரு வாரவிறுதியைத் தேர்ந்தெடுத்தேன். மாலை நேரந்தான். ஆனால் இப்போது பிதுக்கித் தள்ளும் சனம் இல்லை. வழமைக்கு மாறாய் ஒன்றிரண்டு இருக்கைகள் காலியாகக் கூட இருந்தன. நானேறும் குறிப்பிட்ட அந்த நேரத்து ரெயினிற்குள் நுழைந்தபோது எனக்குப் பரிட்சயமான வாசம் வந்துகொண்டிருந்தது. சுற்று முற்றும் விழிகளை எறிந்து பார்த்தேன். வழமையாகச் சந்திக்கும் முகங்கள் எதையும் காணவில்லை. அப்படியாயின் இந்த நறுமணம் நான் நினைக்கின்ற பெண்களிடமிருந்து வரவில்லையா என்கின்ற ஏமாற்றந்தான் முதலில் என்னைத் தாக்கியது. 

இரக்கூன் தெருவைக் கடக்கும்போது தன் தற்காப்புக்காய் மிக மோசமான நாற்றத்தை சுரந்துவிட்டுப் போகும். ஆனால் அது கடந்தபின்னும் நீண்ட நேரத்திற்கு அந்த வாசனை பரவியபடியே இருக்கும். சிலவேளை அவ்வாறுதான் இந்தச் சப்வேயிலும் நான் தேடிய பெண் தன் வாசனை விட்டுவிட்டுப் போய்விட்டாரோ என யோசித்தேன். ரெயினுக்கான டோக்கனைப் போட்டுவிட்டு உள்ளே வந்தாயிற்று அதற்காகவேனும் கொஞ்சத் தூரமாவது பயணித்துவிட்டுத் திரும்புவோம் எனத் தீர்மானித்து 'நவ்' பேப்பரையும் எடுத்துக்கொண்டு காலியிருக்கையொன்றில் அமர்ந்தேன்.

எனக்கு எப்போதும் ஓரு பழக்கமிருக்கிறது. புதுப் புத்தகம் என்றால் என்ன புதுப் பத்திரிகை என்றால் என்ன உடனேயே நுகர்ந்து விடுவது. அந்த வாசனை நான் அந்தப் புத்தகத்திற்குள் இருக்கும் எழுத்துக்களோடு பரிட்சயம் ஆக முன்னரே என்னோடு நட்பாகிவிடும். பிறகு புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை ஒரு துணையாக வந்திருக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு வாசனை. சிலவேளைகளில் அந்த வாசனையே ஒரு புத்தகம் நல்லதொரு வாசிப்பைத் தருமா இல்லையா என்பதைக் கூட சொல்லிவிடக்கூடும்.

'நவ்' 'வை எடுத்த போதும், உடனேயே நுகர்ந்து பார்க்க ஆசையிருந்தும் ஆட்கள் பார்த்துவிடுவார்களே என்ற தயக்கத்தில் அதை ஒத்திப் போட்டேன். பக்கங்களைப் புரட்டுவதும் அவ்வப்போது சில செய்திகளை வாசித்தபடியும் இருந்தபோது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணின் கண்களும் இந்தப் பக்கங்களில் மேய்வதைக் கண்டேன். '.நவ்'வின் பிற்பக்கங்களில் அழகான பெண்கள் மிகக் குறைந்த ஆடைகளுடன் 'எங்களை அழையுங்கள்' எனக் கூறியபடி சிரித்துக்கொண்டிருப்பார்கள். அழைத்துப் பேசுவதற்கு மட்டும் இவ்வளவு கட்டணமா என்று ஒரு காலத்தில் வாய் பிளந்துண்டு. ஆனால் எல்லா வியாபார விளம்பரங்களிலும் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில்தான் நிறைய விடயங்கள் உட்பொதிந்து இருக்கின்றன என்பதைப் பின்னர் அறிந்தபோது திறந்த வாய் தானாய் மூடிக்கொண்டது.  ஒரு சஞ்சிகையை முழுதாய் வாசிக்காமல் வைப்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.  எனினும் பக்கத்திலொரு பெண் இருக்கும்போது, 'அழைப்புவிடும் பெண்களின்' பக்கங்களைப் பார்ப்பது சற்று அந்தரமாக இருக்கும். அந்தப் பக்கங்களைப் புரட்டாமலே மடியில் சஞ்சிகையை வைத்துக் கொண்டு கண்களை மூடினேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் பிடித்த வாசத்தைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

'நீ வாசிக்கவில்லையெனில் பேப்பரைக் கொஞ்ச நேரம் இரவல் பெற முடியுமா?' என ஒரு குரல் ஒலித்தது.

சூரியகாந்தித் தோட்டத்திலும் லாவண்டர் நிலப்பரப்புக்களிலும்,  நான் பின் தொடரும் பெண்தான் இன்று கதைக்கவும் தொடங்கிவிட்டாரோ என்றுதான் முதலில் நான் நினைத்தேன்.

'ஓ...! நீ உறங்கிவிட்டாய் போலும்!' என மன்னிப்புக் கோரும் மெல்லிய குரல் கேட்கவும் நான் விழிகளை விரித்துப் பார்த்தேன்.

அருகிலிருந்த பெண்தான் கதைத்திருக்கின்றார். நான் அதற்குள் வழக்கமான என் கனவுக்குள் மூழ்கிவிட்டிருக்கின்றேன்..'தாராளமாக, நீ வாசிக்கலாம்' என பேப்பரை அவரிடம் நீட்டினேன்.

நாம் எந்தப் பக்கங்களைத் தவிர்த்தேனோ அவர் அந்தப் பக்கங்களுக்கே நேரடியாகப் போய், யாருடையதோ தொலைபேசி இலக்கத்தைத் தேடுவது போல நிதானமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கும் அந்தப் பக்கங்களை அவரோடு சேர்நது பார்க்க மனம் குறுகுறுத்தாலும், அவர் அதைப் பார்த்துவிட்டால் என்ன நினைப்பாரோ என்கின்ற அந்தரமும் ஒருங்கே சேர, கொதிக்கின்ற உலையாய் தவித்துக்கொண்டிருந்தேன். இவரும் 'எங்களை தொலைபேசியில் அழையுங்கள்' எனக்கூறும் பெண்களைப் போலத் தொழில் செய்கின்றாரோ என என் மனம் விழித்துக்கொண்டது.

இப்படி நான் அல்லாடிக்கொண்டிருக்கையில், திடீரென்று அவர் 'வாசனைகளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருப்பது என்பது குதூகலமும் துயரம் ஒருங்கே சேர்ந்ததுதான் அல்லவா?' என்றார்.

எனக்கு அவர் என் மனதை இப்படியாக வாசித்தது, அவர் நவ் பேப்பரின் இறுதிப்பக்கங்களைப் பார்த்ததைவிட இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை எளிதாக நம்பவும் முடியவில்லை.

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஹவானா போயிருந்தபோது மந்திரக்காரி மாதிரியான தோற்றத்தில் பெரும் ஹவானா சுருட்டைப் பிடித்தபடி ஒரு மனுசி இருந்தார். அவர் எங்களுக்கான சீட்டுக்களை எடுத்து வாசித்து எதிர்காலத்தைக் கணிப்பார் என்றும் எங்களின் சுற்றுலா வழிகாட்டி கதை மேல் கதை சொல்லி நம்பவும் வைத்திருந்தார். அவரிடம் எனக்குப் பிடித்த நடிகையான அஸினை நான் எப்போதாவது சந்திக்க வாய்ப்பிருக்கா என்கின்ற முக்கியமான கேள்வியைப் பத்து பெஸோ கொடுத்துக் கேட்டேன். அடுத்த வருடத்திற்குள் அஸின் கனடா வருவார், நீ சந்திக்க மட்டுமில்லை அவரோடு சேர்ந்து டின்னருக்குப் போவாய் என உறுதியாய்க் கூறியிருந்தார். இதைக் கேட்ட சந்தோசத்தில் இன்னும் ஐந்து பெஸோ மேலதிகமாய் அந்த மனுசிக்குக் கொடுத்து விட்டு வந்திருந்தேன். ஆனால் அஸினோ அடுத்த வருடம் கனடா வரவில்லை. இலங்கைக்குத்தான் போயிருந்தார். என்னோடு டின்னர் வருவதற்குப் பதிலாக இலங்கை ஜனாதிபதியின் துணைவியாரோடு எங்கையோ போய்ச சாப்பிட்ட படமும் வெளிவந்ததைக் கண்டு நான் நொந்து போனதுதான் மிச்சம்.


ஆக கடந்தகால வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்ட நான், இன்னொரு முறை இப்படி 'மனதைப் படிப்பவர்களிடம்' ஏமாறத் தயாராக இருக்கவில்லை. என்றாலும், அவரிடம் 'எப்படி நான் வாசனைகளைப் பின் தொடர்கின்றவன் என்று உனக்குத்த் தெரியும்?' எனக் கேட்டேன். 'வாசனைகளைப் பின் தொடர்பவர்கள் தங்களுக்கென்று சில தனித்துவமான சமிக்ஞைகளை வைத்திருக்கின்றார்கள். என்னால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும் நானும் அவ்வாறாக வாசனையைப் பின் தொடர்பவர்களில் ஒருத்தி தான்' என்றாள்.

வாசனைகளைப் பின் தொடர்வது ஒருவிதமான நோயோ என நினைத்துக்கொண்ட எனக்கு அப்படி வேறு சிலரும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.

'ஆம்,  நான் பஞ்சாப்பில் இருந்தபோது சிறுவயதில் இருந்தே கோதுமைகளின் வாசனையை எங்கு சென்றாலும் பின் தொடர்பவளாக இருந்திருக்கிறேன். அதுவும் கோதுமை அறுவடைக் காலத்தில் மிகவும் உச்சமான குதூகலத்தையும், அறுவடை முடிந்தபின் மிகப் பெரும் வெறுமையையும் அனுபவித்திருக்கின்றேன். பின்னாளில் வாசனை இல்லாது என் வாழ்வு முழுமையடையாது போல ஏதோ ஒரு வாசனையைப் பின் தொடர்ந்தபடியே இருக்கின்றேன். உனக்கு அப்படி சிறுவயது நினைவுகள் இல்லையா?' என என்னைப் பார்த்துக் கேட்டாள்.

நினைவுகளைச் சுழற்றிப் பார்க்கையில், சிறுவயதில் பனம்பழத்தினதும் விளாம்பழத்தினதும் வாசனையைப் பின் தொடர்ந்தவனாக நானும் இருந்தது தெரிந்தது.  எங்கள் வீட்டில் இருந்து மூன்று வீடுகள் தள்ளி இருந்த விளாமரத்தில் பழங்கள் பழுப்பதை என்னால் நுகர முடிந்திருக்கிறது.. இப்படி வாசனையை மோப்பம் பிடிப்பதைப் பார்த்து, ‘உனக்குப் பாம்பின் தன்மையடா' என அம்மாவே அடிக்கடி கூறியிருக்கின்றார்.  இவளுக்கு இதைச் சொன்னால் நானொரு பாம்பு மனிதன் என நினைத்துக்கொள்வாளோ என்கிற அச்சத்தில் அப்படியேதும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லையென இதை மறைத்தேன். மேலும் பிறகான காலத்தில் ஆட்லறிகளினதும், கிபீர்க் குண்டுகளினதும் வாசனையை நுகர்வதே வாழ்வதற்கான ஒரேயொரு வழியாக ஆகிப்போனதை எப்படி இவளுக்கு உணர வைப்பது. எனினும் அரசியல் இன்றி இவ்வுலகில் எதுவும் அசையாது என்பதால், 'உங்களின் இராணுவம் எங்களின் நாட்டுக்குள் வந்தபோது அவர்களிடமிருந்து தனித்துவமான மணம் வந்ததை அறிந்திருக்கின்றேன். ஆனால் அது எனக்குப் பிடிக்காத வாசம், வெறுப்பைத் தருகின்ற நாற்றம்' என்றேன். சற்று நேரம் முன்னரே அறிமுகமான ஒருத்தியிடம் இப்படிக் காட்டமாகக் கூறியது தவறோ என சொன்னதன் பிறகுதான் உறைத்தது.


எனக்கு இந்திய இராணுவ கால அனுபவத்தினால் பஞ்சாபிகள் மீது  சற்று வெறுப்பு இருந்தது. ஆனால் இவள் மீது ஏனோ அதையும் தாண்டி ஏதோ ஈர்ப்பு ஏற்பட்டது போலத் தோன்றியது. ஆனால் அவள் ஏன் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களை உற்றுப் பார்த்தாள் என்பது மர்மமாயிருந்த்து. சிலவேளை இவளும் அவர்களைப் போன்ற தொழில் ஏதேனும் செய்கின்றாளோ என்கின்ற சந்தேகம் வந்தது. வாய் விட்டுக் கேட்கலாந்தான், ஆனால் இப்படிக் கேட்டுவிட்டால், நான் இதுவரை கஷ்டபட்டுக் கட்டியமைத்த ‘நல்ல மனுஷன்' பிம்பம் காற்றில் பறந்துபோய்விடுமே என்பதுதான் சங்கடமாய் இருந்தது.

 பூடகமாய்த்தான் இதைக் கேட்க வேண்டும் என நினைத்து 'நீ என்ன வேலை செய்கின்றாய்?' என்றேன்.

 'நான் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களைப் பார்த்ததால் உனக்கு இப்படிக் கேட்கவேண்டும் போலத் தோன்றியதா என்றாள் சட்டென்று.

இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவள் எப்படி என் மனதில் தோன்றுவதை எல்லாம் உடனே உடனே அறிந்து கொள்கிறாள்?

'இல்லை, நானும் வேலை ஒன்று தேடிக்கொண்டிருக்கிறேன்....அதுதான் கேட்டேன்' எனச் சமாளித்தேன்.

'சரி, நீயென்ன எனது உறவா இல்லை என்னைக் காதலிப்பவனா... உண்மையைச் சொல்வதில் நானேன் தயங்கவேண்டும். ஆமாம் நானும் இந்தப் பெண்களைப் போலத்தான் தொழில் செய்து சம்பாதிக்கின்றேன், அதிலேதும் உனக்குப் பிரச்சினையா?' என்றாள்.

மயிர் நீக்கின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை நம் பரம்பரை எனச் சொல்லித் தரப்பட்ட எனக்கு இதற்குப் பிறகு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனவே மவுனத்தைத் தேர்ந்தெடுத்தேன். அவள் மேலும் தொடர்ந்தாள்...

'ஆனால் நான் என் வாடிககையாளர்களை நேரடியாகச் சந்திப்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே உரையாடுவேன். உங்களைப் போன்ற ஆண்களுக்குத்தானே சற்றுக் கிறக்கமாய்க் கதைத்தாலே எல்லாவற்றிலும் உச்ச நிலைக்குப் போய்விடுவீர்களே. கொஞ்சம் குரலில் கிறக்கமும், மொழியில் நெருப்பும் இருந்தால் போதும். ஆதனால் இந்த வேலை பெரிய கஷ்டமில்லை' என்றாள்.

எனக்கு அவள் இப்படிச் சொன்னது இன்னும் அந்தரமாகப் போய்விட்டது. ஏதோ என் வீட்டுக்குள் வந்து பார்த்தது மாதிரியல்லவா எல்லாவற்றையும் போட்டுடைக்கிறாள். இனி இவளோடு கவனமாகக் கதைக்கவேண்டும் என எச்சரிக்கை நிலைக்குப் போயிருந்தேன்.

'இப்படி நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன் என்றால் எல்லா ஆண்களும் நிறையக் கேள்விகள் கேட்பார்கள். நீயின்னும் அதைத் தொடங்கவில்லையே?' என்றாள்.

ஏற்கனவே என் இரகசியங்களை அறிந்த அவளின் முன் அம்மணமாக நிற்பதாய் உணர்ந்துகொண்டிருக்கின்றவனுக்கு இது ஒரு கேடா என நினைத்துக்கொண்டேன்..செஸ்டர் ஸ்ரேசனை ரெயின் நெருங்கிக்கொண்டிருந்தது. இது, தான் இறங்குவதற்கான தரிப்பிடம் என அவள் சொன்னாள். என்னைப் போல வாசனைகளைப் பின் தொடர்கின்றவள் என்பதில் ஒரு நெருக்கத்தை உணர்ந்து அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்போமோ என முதலில் யோசித்தேன். அது அவ்வளவு நல்லதில்லையென நினைத்து எனது இலக்கத்தை 'நவ்' பேப்பரின் ஓரத்தில் கடகடவென எழுதிவிட்டு அவளிடம் கிழித்துக் கொடுத்தேன். 'நீயும் அவர்களில் ஒருவன் தானோ' என நினைத்தாளோ தெரியாது, ஆனால் வாங்கிக் கொண்டாள்.

அவள் என்னை எப்போதாவது தொலைபேசியில் அழைப்பாளென எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. என்னைப் போல எத்தனை பேரைக் கண்டிருப்பாள். நான் கொடுத்த இலக்கத்தை அந்தக்கணமே  கசக்கியெறிந்துவிட்டுப் போயிருக்கக் கூடும். ரெயில்கள் ஒரு தரிப்பிடத்தில் மட்டும் தங்கி நிற்காதது போல, அவளைப் போன்றவர்களும் ஓடிக் கொண்டிருக்க விருப்பமுடையவர்களாக இருக்கக்கூடும். என்னைப் போன்ற பயணிகள் தான் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் தினமும் இறங்கி சலித்துப் போன வாழ்க்கையை வாழவேண்டியிருக்கிறது..

அடுத்த வாரவிறுதி வந்தபோது, வீட்டிலிருந்தால் பஞ்சி இன்னொரு போர்வையாய் என்னைப் போர்த்திவிடுமென்பதால் அவசரமவசரமாய் வாசனையை நுகரப் புறப்பட்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரங்கள் எல்லாம் மஞ்சளாய் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. நான் இரெயினுக்குள் என்னுடைய வழமையான நேரத்திற்கு ஏறிப் பயணித்தபோது, அவள் செஸ்டர் ஸ்ரேசனில் ஏறுவதைப் பார்த்தேன். 'என்ன ஆச்சரியமாக இருக்கிறதா' என்றாள். ' அப்படி இல்லையே...' என, அவள் என்னை இதுவரை தொலைபேசியில் அழைக்காத ஏமாற்றத்தை மறைத்துப் பதில் சொன்னேன். அவளுக்கு இது விளங்கியதோ என்னவோ தெரியாது. 'வாசத்தைப் பின் தொடரும் நமக்கு தொலைபேசி அழைப்புக்கள் அவ்வளவு முக்கியமில்லை. வாசம் சொல்லாத செய்தியையா தொலைபேசி சொல்லிவிடும்? என்றாள். உண்மைதான், இந்த நறுமணம் எனக்கு ஏதோ இரகசிய அழைப்புக்களை விடுத்துக்கொண்டிருப்பதால்தானே மற்ற அனைத்தையும் மறுத்து இதன் பின்னால் நான் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன் என நானும் நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக ஒவ்வொரு வாரவிறுதியும் சந்தித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வாசனைகளினூடாக அனுப்பப்படும சிக்கலான சமிக்ஞைகளை அறிவதில் இன்னும் தேர்ச்சி பெறுவதைப் பற்றி நிறையக் கதைத்தோம். எனது நாட்கள் வாசனைகள் நிரம்பிய அழகிய உலகமாய் இருந்தது. நான் கொஞ்சங் கொஞ்சமாய் நண்பர்களை வழமையாகச் சந்திக்கும் கோப்பிக்கடைகளில் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். வருகின்ற தொலைபேசி அழைப்புக்களையும் தவிர்த்து, வாசத்தின் மொழியினூடு வரும் அழைப்புக்களோடு பேசவும் தொடங்கியிருந்தேன். ஒருமுறை அவளிடமிருந்து கோதுமை வாசம் வருவது போலத் தோன்றியது. 'நீ கோதுமை மணத்தை உடையவள்' என்றேன். இல்லை நான் நீராலானவள். உன்னைப் போன்றவர்கள் நினைக்கும் வாசங்களுக்கு ஏற்ப மாறிவிடக் கூடியவள்' எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.

ஒருநாள் அவளைச் சந்தித்தபோது சற்றுப் பதற்றமாயிருந்தாள். வாசங்களைப் பற்றிக் கதைப்பதை மறந்து விட்டு, யாரோ அவளைப் பின் தொடர்வது போன்ற அச்சத்திலிருந்தாள். மெல்லிய குரலில் 'உன்னோடு கொஞ்ச நாளைக்கு வந்து தங்கியிருக்க முடியுமா?' என்றாள். நான் அப்போது ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டின் நிலவறையில் வாடகைக்கு இருந்தேன். ‘அதுவல்ல பிரச்சினை, உன்னை என்னறையில் வைத்திருக்கலாம். ஆனால் நான் நேசித்துக்கொண்டிருப்பவள் நோர்வேயில் தற்சமயம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?' எனக் கேட்டேன். 'நீ அவளுக்கும் வாசனையின் மொழியைச் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். அது தெரிந்திருந்தால் அவள் எதற்காய் நான் இப்படிக் கேட்கிறேன் என்பதை மட்டுமில்லை, என்ன சிக்கலில் மாட்டியிருக்கின்றேன் என்பதையும் புரிந்திருப்பாள்' எனச் சொல்லிவிட்டு எனக்கொரு முத்தத்தைத் தந்துவிட்டு செஸ்டர் ஸ்ரேசனில் இறங்கிப் போகத் தொடங்கினாள். இந்த முறை பனம்பழத்தின் வாசனை அவளிலிருந்து வீசுவது போலத் தோன்றியது. இரெயின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. நான் அவள் இறங்கிப் போகும் ஸ்ரேசனிலிருந்து பனம்பழத்தின் வாசனையைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு அவளை நான் சந்திக்கவில்லை என்பது மட்டுமின்றி எனக்குப் பிடித்த அந்த வாசனைகளும் எனனை விட்டுபோய்விட்டன. மீண்டும் மீண்டும் நினைவிலும் நுகர்விலும் கொண்டு வர எத்தனை பிரயத்தனப்பட்டாலும் என்னால் அந்த வாசனையை மீளக் கொண்டுவர முடியவில்லை. இப்போது எல்லாம் சனம் பிதுங்கும் நெரிசலில் மனிதர்களின் வியர்வை நாற்றத்தைத்தான் என்னால் நுகர முடிந்தது. அவளும் இல்லாது போனதன்பின், வாரவிறுதிகளில் குறிப்பிட்ட ரெயினுக்காய் காத்திருந்து வாசனையைத் தேடிப் போவதை எல்லாம் நிறுத்திவிட்டிருந்தேன். நான் சந்தித்த அந்தப் பெண் தான் இந்த வாசனையைக் காவிய கடைசிப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒரு முதியவர் இறக்கும்போது ஒரு நூலகமே இல்லாமற் போய்விடுகின்றதெனும் சீனப் பழமொழியைப் போல இந்த நறுமணத்தின் இறுதித் தூதுவர் செஸ்டர் ஸ்ரேசனில் இருந்து நீங்கிப் போயிருக்க வேண்டும். ஆனால் அவள் நேரடியாக இருக்காதபோதும் முன்னர் எப்படி என்னால் அந்த வாசனையை சப்வே ரெயினுக்குள் நுகர முடிந்தது என்பதுதான் அதிசயமாயிருந்தது. சிலவேளைகளில் அவளோடு தொலைபேசியில் கதைக்கும்  வாடிக்கையாளர்களின் மூலந்தான் ரெயினில் வாசம் பரவியபடி இருந்ததோ தெரியவில்லை. நேரே சந்திக்காமல் காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்பவர்கள், வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதைப் பிறகு அறிந்துகொண்டேன்.  அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் நான் விரும்பும் வாசத்திற்கேற்ப அவளால் வாசனைப் பரப்ப முடிந்திருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை, வாரவிறுதியில் வரப்போகும் ஓய்வை எண்ணித் திளைத்தபடி ரெயினில் 'மெட்ரோ' பேப்பரை வாசித்துக்கொண்டு போனேன். இலங்கையில் யாரோ ஒரு ராஜபக்சே தன் மனைவி நாய் வேண்டியதற்காய் ஐரோப்பாவிற்கு தனி விமானம் அனுப்பியிருந்ததை ஒரு செய்தியாய்ப் போட்டிருந்தார்கள். மனைவி மீது இவ்வளவு பிரியமாயிருக்கும் ராஜபக்சேக்கள் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் சற்றேனும் மனிதாபிமானத்தோடு இருந்திருக்கலாமென நினைத்துக் கொண்டேன். செஸ்டர் ஸ்ரேசனைத் தாண்டும்போது அவளின் ஞாபகம் வந்தது. எனது தொலைபேசி இலக்கதைக் கொடுத்திருந்தபோதும் அவள் ஏன் என்னை அழைக்கவில்லை எனவும் யோசித்தேன். ஆகக் குறைந்தது அவளிடம், நான் நீண்டகாலம் தேடி அலைந்த வாசனையை அவளை இறுதியாச் சந்தித்தபின் காணாமற் போய்விட்டதென்பதைச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். ஒரேயொரு முறையாவது எனக்குப் பதின்மங்களில் பிடித்த ஈரப்பலா வாசனையை அவளின் உடலில் இருந்து நுகர்ந்து பார்க்கவேண்டுமெனவும் ஆசை கிளர்ந்தது.

இவ்வாறு நினைவுகள் அலைக்கழிக்க, மெட்ரோவின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.  பஞ்சாப்பில் பிறந்த ஜஸ்மீட்ற் என்பவர் வன்கூவரில் நீண்டகாலம் வசித்தவர் என்றும், அங்கே முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்ததால் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு ஓடிவந்தவர் எனவும், ரொரண்டோவிற்கு சிலமாதங்களுக்கு முன் வந்து தலைமறைவாக வாழ்ந்த அவரை யாரோ நேற்று இரவு டொன்வெலி வீதியிலுள்ள பாலத்தின் கீழே கொன்று போட்டிருக்கின்றனர் எனவும் போடப்பட்டிருந்தது. செய்தியோடு பிரசுரிக்கப்பட்ட புகைப்படம் நான் சந்தித்த பெண்ணின் சாயலில் இருந்ததைப் பார்த்து மனம் அதிர்ச்சியில் உறைந்தது.  மேலும் இது தற்செயலாய் நடந்த கொலையல்லவெனவும், கெளரவக் கொலையாக இருக்குமெனவும் கிடைக்கப்பெறும் ஆதாரங்களினூடாக பொலிஸ் சந்தேகிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அவளை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று சந்தேகித்ததால் தான் என்னோடு கொஞ்சநாள் வந்து இருக்கலாம் எனக் கேட்டிருக்கின்றாள் போலும். நான் தான் அவளின் சிக்கலை விளங்கிக் கொள்ளாமல், என் கெளரவத்தைப் பார்த்து அவளைக் கைவிட்டிருக்கின்றேன். அவளைக் கொன்றவர்கள் மட்டுமில்லை,  நானுங்கூட என் கெளரவத்தின் பொருட்டு ஒரு கொலை நிகழக் காரணமாயிருக்கின்றென நினைக்க மிகுந்த கவலையாயிருந்தது.

ஒரு பெண்ணின் அகால மரணம் நிகழும்போது உலகில் இருந்து ஒரு வாசனை இல்லாமற் போகின்றது. நம் இதிகாசத்திலும் சூர்ப்பணகையின் மூக்கை வெட்டியது கூட அவள் தனக்குப் பிடித்தமான ஒருவனின் வாசனையைப் பின் தொடர்ந்து போய்விடக்கூடாது என்கின்ற அச்சத்தினால்தான் நிகழ்ந்திருக்கின்றது போலும்.

பொறுப்பற்றதன்மையால் ஒருத்தியைக் கொலை செய்துவிட்டென குற்றவுணர்வுடன் நோர்வேயில் படித்துக்கொண்டிருந்த காதலிக்கு நடந்ததைத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தேன். கணங்கள் கழியக் கழிய என் அறை எங்கும் கோதுமையின் வாசனை பரவத் தொடங்கியது. எனக்குத் திடீரென்று, அருகில் இல்லாமலே காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்புபவர்கள் நினைவில் வந்தார்கள். மேலும் வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும் என்பதும் ஞாபகத்தில் வந்தது. அப்படியாயின் என் காதலி இவர்களில் ஒருத்திதானோ? ஆக தொலைவில் இருக்கும் அவள் என்னை வாசனைகளால் எந் நேரமும் பின் தொடந்து கொண்டிருக்கின்றாளா? இப்போது கோதுமை வாசம் போய் ஈரப்பலா வாசம் கமிழத் தொடங்கியிருந்தது. எனக்குப் பயத்தில் உடல் வேர்க்கத் தொடங்கியது.. அப்படியாயின் நான் உண்மையாகவே அந்தப் பஞ்சாபிப் பெண்ணைச் சந்திக்கவேயில்லையா?

.......................
('அம்ருதா' - ஜூலை, 2014)
நன்றி: ஓவியம்: ராஜா சேகர்