கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காஃப்கா எழுதாத கடிதம்

Friday, May 22, 2015


ஒருநாள் சென்னைப் புத்தகக் கண்காட்சியிற்கு வெளியில் புல்வெளியில் இருந்து நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தபோது, சாரு நிவேதிதா நடந்துபோய்க்கொண்டிருந்தார். நண்பரொருவர் ஸ்பானிய எழுத்தாளர் (சாருவின் நடையில் சொல்வதென்றால் எஸ்பஞோல்) போகின்றார், கவனிக்கவில்லையா எனக் கேட்டார். எனக்கு முதலில் விளங்கவில்லை. தனியே போய்க்கொண்டிருந்த சாருவை முன்னரே சுட்டிக்காட்டியிருந்தால் போய் அவரோடு கதைத்திருக்கலாம் எனச் சொன்னேன். ஆகக்குறைந்தது எப்போதும் படை, பரிவட்டம், பல்லக்குச் சூழச்செல்கின்றவர் என எண்ணியிருந்த எனக்கு இப்படித் தனித்துப்போனதை ஒரு படமாவது எடுத்திருக்கலாமெனத் தோன்றியது. பிறகு சாரு பற்றியே நிறையக் கதைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் அருகில் நிறுத்தியிருந்த காருக்குள் ஒருவர் ஏறியதும் எங்களைப் பார்த்து மெல்லச் சிரித்து கைகாட்டுவதும் தெரிந்தது. அது எஸ்.ராமகிருஷ்ணன். சரி அவருக்கு நாங்கள் யாரெனத் தெரியவா போகின்றது, சும்மா இரண்டு மூன்று பேர் இலக்கியம் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என எழுந்தமானமாய் கைகாட்டியிருப்பார் என நினைத்துக்கொண்டேன்.

அடுத்தநாள் உயிர்மை 'ஸ்டாலுக்கு'ப் போனபோது எஸ்.ராமகிருஷ்ணன் இருந்தார். அவரிடம் கனடாவிலிருந்து வந்திருக்கின்றேனென வணக்கம் சொன்னேன் (அவரை ஏற்கனவே கனடாவில் நேரில் சந்தித்திருக்கின்றேன்). நீங்கள் நேற்று புல்வெளியில் இருந்தது கதைத்துக்கொண்டிருந்ததைக் கண்டேன் என்றார். முதல்நாள் நாங்கள் சாருவைப் பற்றிக் கதைத்ததும் அவரின் காதில் விழுந்திருக்குமா என யோசனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

எஸ்.ரா எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளராய் ஒருகாலத்தில் இருந்தார். எனது வளாக காலத்தில் வாசித்த அவரின் உபபாண்டவமும், பால்யநதியும் எனக்குள் அன்றைய காலத்தில் கவிழ்ந்திருந்த பெருந்தனிமையை விலத்தத் துணையாயிருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். அவரின் யாமமும், துயிலும் பற்றி விரிவாக எனது வாசிப்பை எழுதியுமிருக்கின்றேன். இப்போதும் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரா என்று அன்றுபோல துணிந்து கூற முடியுமா என்று தெரியவில்லை.

அவரின் 'நிமித்தம்' வாசிக்கத் தொடங்கியபோது, பின்னட்டை பதிப்பாளர் குறிப்பு மட்டுமின்றி எஸ்.ராவின் முன்னுரையும் முழுக்கதையையும் சொல்லிவிட்டாற்போல உணர்ந்து கொஞ்சப் பக்கங்களுக்கு அப்பாலே அந்த நாவலைத் தொடரமுடியாது போனது. ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் 'சஞ்சாரம்' நாவலிற்குள் -முன்னுரை எதையும் வாசிக்காது- நேரடியாகவே நுழைந்திருந்தேன். சிறு சிறு கதைகளாக அவ்வப்போது அருமையான தெறிப்புக்கள் இருந்தாலும் ஒரு முழுநாவலாகப் பார்க்கும்போது அது அவ்வளவாய் என்னைக் கவரவில்லை. ஒவ்வொரு எழுத்தாளரையும் அவர் முன்னே எழுதிய படைப்புக்களோடு ஒப்பிடுவது நல்லதா அல்லதா என்று தெரியாவிட்டாலும், இவ்வளவு காலமும் இத்தனை புத்தகங்கள் எழுதிய ஒருவரிடம் ஏதோ வித்தியாசமான ஒன்றையே வாசிப்பு மனோநிலை கேட்கின்றது.

ஆனால், சஞ்சாரத்தின் பின், நான் வாங்கி வந்திருந்த எஸ்.ராவின் ''காஃப்கா எழுதாத கடிதம்' என்ற அபுனைவுத்தொகுதியை வாசித்தபோது, பழைய எஸ்.ராவைக் கண்டுபிடித்தாற்போல சிறு நிம்மதி வந்தது. அதிலும் அவர் இயற்கையையும் தனிமையையும் எழுதிக்கொண்டு போகும் கட்டுரைகளிலெல்லாம், ஒவ்வொரு படைப்பாளியையும் அறிமுகப்படுத்தும்போது, அந்த எழுத்தாளரின் படைப்புக்களோடு தொடர்புடைய/சமாந்தரமாய் வாசிக்கக்கூடிய பிறரையும் குறிப்பிடும்போது தேடலுடைய வாசகர்களை அவர் கவனத்தில் கொள்கின்றார் என்பதில் மகிழ்ச்சி வந்தது. புத்தரையும், ஸென்னையும், இயற்கையையும் நெருக்கமாய்ப் பார்க்கும் ஒருவருக்கு, அதே அலைவரிசையிலே நின்று பேசும் இந்தத் தொகுப்பு இன்னும் பிடிக்கவும்கூடும்.

அ-புனைவுகளை அநேகமாய் எங்கிருந்தோ இடையில் தொடங்கி நேரமெடுத்து ஆறுதலாகவே வாசித்து முடிப்பேன். 'காஃப்கா எழுதாத கடிதம்' ஐ ஒரு ஒழுங்கில் வாசித்ததும், அதை ஒரேதடவையில் வாசித்ததும் சற்று விதிவிலக்காய் இருந்தது. ஏற்கனவே பெரும்பாலான கட்டுரைகளை எஸ்.ராவின் இணையதளத்தில் வாசித்திருந்தாலும், சோர்வின்றி திரும்பவும் அவற்றை மீண்டும் பயணிக்க முடிந்திருந்தது. நீண்டகாலத்தின்பின் எஸ்.ரா என்னோடு நெருக்கமாய் கூடவே நடந்து வந்த அழகிய சிறுபயணம் இது.

'தொடர்ந்த வாசிப்பின் வழியேதான் என்னைப் புத்துருவாக்கம் செய்துகொள்கின்றேன். பயணமும் புத்தகங்களும்தான் எனது இரண்டு சிறகுகள்' எனச் சொல்கின்ற எஸ்.ராவிற்கு, தொடர்ச்சியாக எழுதாமல் அவ்வப்போது சற்று இடைவெளிவிடுவதும் கூட உங்களைப் புத்துணர்ச்சி செய்யக்கூடுமென -அவர் மீது இன்னமும் நம்பிக்கையிழக்காத- ஒரு வாசகராய்ச் சொல்லிக்கொள்ளவும் விரும்புகின்றேன்.

பயணக்குறிப்புகள் - 08 (India)

Monday, May 11, 2015

அறிதலை அறிதலென்று அறியாது அறிதல்

திருவண்ணாமலையில் நின்ற சமயம் என்னைச் சந்திப்பதற்காய் வெவ்வேறு நகர்களிலிருந்து நண்பர்ள் சிலர் வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து வந்த ஒரு நண்பர் அடுத்தநாள் வேலை நிமித்தம் திரும்பவேண்டியிருந்ததால்  வந்த அன்றே அவர் ஊர் திரும்பிவிட்டார். நானும் மற்றொரு நண்பரும் அடுத்தநாள் விடிகாலையில் கிரிவலப் பாதையைச் சுற்றுவது என்று முடிவு செய்தோம். விடிகாலையில் கிரிவலம் சுற்றுவது அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் விடிகாலை 4.30 மணிக்கு கிரிவலம் சுற்றுவதாய்த் தீர்மானித்திருந்தோம். என் 'விடிகாலைத் தவத்தை'ப் பற்றி கனடாவிலேயே நன்கு அறிந்த, கூடவேயிருந்த மற்ற நண்பர் 'இதெல்லாம் நடக்கிற காரியமா...' என நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். ஆனாலும் நண்பா, 'அப்போது பார்த்த அவனில்லை நான், நாளை விடிகாலைத் தவத்தைக் கலைத்துக் காட்டுகிறேன்' என மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டேன்.

கிரிவலம் சுற்றுவதற்கு வருவதாய்க் கூறிய தோழி, 4.30 மணியளவில் இருந்தே தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியதோடு அல்லாது, ஒவ்வொரு 1/2 மணித்தியாலத்திற்கு ஒருமுறை அலாரம் போலவும் விடாது அழைத்தும் பார்த்தார். ஒருமாதிரியாக 7.30யிற்கு போனால் போகட்டுமென தவத்தைக் கலைத்து அலைபேசியை எடுத்தேன். இனியும் நீ வரவில்லை என்றால் இப்படியே தான் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டுவிடுவேன் என்றார். தவத்தைக் கலைப்பதை விட பெண்களின் சாபத்தை வாங்கினால் வாழ்வு இன்னும் மோசமாகிவிடும் என்று அவரோடு 8.00 மணியளவில் இணைந்து கொண்டேன்.

நமது கிரிவல யாத்திரையை ரமணாச்சிரமத்திலிலிருந்து தொடங்கினோம். யாராவது முன்னே நடந்து போய்க்கொண்டிருந்தால் அவர்களின் பின்னால் போனால் எளிதாக நடந்து முடிக்கலாமென நினைத்தோம். அப்படியெவரும் முதலில் அகப்படவில்லை. இப்படி நன்கு விடிந்தாப்பிறகு யார் கிரிவலம் சுற்றப்போகின்றார்கள்? ஆனால் ஒரு சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் தான் ஷீரடி சாய்பாபா(?)வின் ஆச்சிரமத்திற்குப் போகப்போகின்றேன், கையால் சக்கரவண்டியைச் சுற்றி கை வலித்துப்போய்விட்டது எங்களைத் தள்ளிக்கொண்டு வரமுடியுமா எனக்கேட்டார். தோழியும் நானுமாய் அவரைத் தள்ளிக்கொண்டு கிரிவலத்தைச் சுற்றத்தொடங்கினோம்.

இவ்வாறு நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு நண்பரைச் சந்தித்தோம். அவர் சிறுகிராமங்களிலிருந்து வந்த மாணவர்களுக்கு திருவண்ணாமலையைக் காட்டிக்கொண்டிருந்தார். ஏழெட்டு மாணவர்களை ஒவ்வொருவரையும் இடைவெளி விட்டு தனியே கிரிவலப்பாதையிற்கு எதிர்ப்புறமாய நடக்கவிட்டு, பாதையில் தெரியும் எல்லாவற்றையும் அவதானிக்கச் சொல்லியிருந்தார். ஒரு பாழடைந்த கேணியின் (குளத்தின்) படிக்கட்டுக்களில் இருந்து அவர்கள் தமது அனுபவங்களை எழுதிக்கொண்டிருந்தார்கள். என்னையும், தோழியையும் பயணங்கள் பற்றி நம் அனுபவங்களை அந்த மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளச் சொன்னார். புதிய நிலப்பரப்புக்ளை, கலாசாரங்களை, வெவ்வேறுவகையான மனிதர்களைச் சந்திக்க வைக்கும் பயணங்கள் எப்போதும் எங்கள் மனதை விசாலமடையச் செய்யக்கூடியவை. மேலும், எமக்குள் நிகழும் மாற்றங்களை பயணிக்கும்போது சிலவேளை அறியமாட்டோம். ஆனால் பயணம் முடிந்தபின்னர் நமக்குள் நிறைய மாற்றங்களை உணர்வோம் எனச் சொன்னேன்.

அந்த மாணவர்களை கிரிவல அனுபவங்களைக் கூறச்சொன்னபோது, அவர்கள் எவ்வளவு நுட்பமாக கிரிவலப்பாதையைக் கவனித்திருக்கின்றார்கள் என்பது புரிந்தது. சூரிய ஒளியில் துலக்கம் பெறும் காட்சிகளிலிருந்து, சிறு சிறு ஒலிகள் நினைவுபடுத்தும் ஞாபகங்கள், பெண்கள் தனியாகவும், எதிர்ப்புறமாகவும் நடக்கும்போது தென்பட்டவர்களின் முகக்கோணங்கள், பசியோடு வெறுமையான வயிற்றில் நடக்கும்போது உணவகங்களின் சாப்பாட்டு வாசனையின் அருமை எனப் பலதை விவரித்துச் சொன்னபோது, நாங்கள் இதுவரையில் கிரிவலப்பாதையில் நடந்தபோது எதை அனுபவித்தோம் என நினைத்து வெட்கமே வந்தது. நிறைய எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாய் அலைய அதனோடுதான் நிறையநேரம் போராடிக்கொண்டிருந்திருக்கின்றேன் என்பது ஞாபகம் வர ஒருவகை சோர்வே எனக்குள் எஞ்சியது. ஆனபோதும், எங்களின் நடைக்கு அந்த மாணவர்கள் அழகான வர்ணங்களை அள்ளிவீசினர் என்று அவர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

கிரிவலப்பாதையில் நடக்கும்பொது காலணி அணிந்தோ, ஓய்வெடுத்தோ நடக்கக் கூடாதென நினைக்கின்றேன். நாங்கள் இதையெல்லாம் செய்ததோடு, ஒரு தெருக்கடையில் இட்லி,தோசை சாப்பிட்டு, இன்னொரு கடையில் பழச்சாறு அருந்தித்தான் உலாவை நிகழ்த்திக் கொண்டிருந்தோம். இடையில் இலங்கை அரசியல் பற்றியும் பேசிக்கொண்டு போனோம். இப்போது நான் நேரடியாக அரசியல் பேசுகின்ற செய்திகளை/ஆக்கங்களை விரிவாக வாசிப்பதில்லையெனவும், ஆயுதபோராட்டங்களின் மீது நம்பிக்கையற்றும் போய்விட்டதெனவும் கூறினேன். நண்பரோ, ஒடுக்குமுறை கொடூரமாய் இருக்கும்போது ஆயுதம் ஏந்துவது தவிர்க்கமுடியாதல்லவா? என்றார். உண்மைதான், இன்னமும் எல்லாவித நெருக்கடிகளும் அப்படியேயிருக்கும், இலங்கை போன்ற நாட்டில் எதுவும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் ஆயுதங்கள் எவ்வளவு பேரழிவைத்தரும் என்ற தலைமுறையின் சாட்சியங்களான இருந்த என்னால் இன்னொரு ஆயுதப்போராட்டம் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை என்றேன்.

தொடர்ச்சியில், இப்போது எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழப்போராட்டம் பற்றிய நூற்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். 'வன்னி யுத்தம்', 'ஊழிக்காலம்', 'கொலம்பஸ்சின் வரைப்படம்' போன்றவற்றில் இருக்கும் நம்மை உள்ளே ஈர்த்துக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை என்பது அண்மையில் வெளியான 'ஆயுதஎழுத்தில்' இல்லையெனவும், அப்புனைவின்(?) பெரும் பலவீனமே அதுதான் எனவும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

மேலும், ஈழப்போராட்டம் என்பது தன்னளவில் மிகச்சிக்கலானது. அதை ஒற்றைப்பாதைகளாலும், உறுதியான முடிவுகளாலும் உரையாடிக்கொண்டிருப்பவர்கள் இன்னும் அச்சத்தைத் தருகின்றார்கள் என்று அதற்கு உதாரணமாக தமிழகத்தின் ஒரு ஊரில் சந்தித்த ஒரு தோழியின் அனுபவத்தைச் சொன்னேன். புலிகள் இயக்கத்தில் அவரது சகோதரர்கள் இயங்கிக்கொண்டிருந்தார்கள். புலிகளின் கட்டாய ஆட்பிடிப்பில் இந்தத் தோழியும் பிடிக்கப்பட்டார். புலிகள் கடைசிநேரத்தில் செய்த பல விடயங்களை அவர் நேரில் பார்த்திருக்கின்றார். அவ்வாறிருந்தும், கடந்த கார்த்திகை மாதத்தில் அவரிருந்த இடத்தில் கோலமாய் நினைவுச்சின்னங்கள் வரைந்து மாவீரர் தினத்தை இங்கே அனுஷ்டித்திருக்கின்றார். அந்தப் புகைப்படங்களை அவரே காட்டியுமிருந்தார். இவ்வாறுதான் நமது அரசியல் மிகச் சிக்கலானது. இதைப் போன்ற பலரின் அனுபவங்களை எப்படிப் புரிந்துகொள்வதென்று தெரியாது, நேரடி அரசியல் பேசிக்கொண்டிருக்கும் எல்லாத்தரப்பும் எனக்குச் சோர்வையே தரக்கூடியவர்கள் எனச்சொன்னேன்.

இப்படி ஒருமாதிரியாக கிரிவலப்பாதை நடையையும் அரசியலைக் கலந்து முடித்தோம். ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இன்னொரு நண்பரைச் சந்தித்தேன். நான் ரமணாச்சிரமத்தில் தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, உள்ளே நெருக்கமாய்ப் போயும் படமெடுக்கமுடியுமெனச் சொன்னபோதுதான் அவரோடான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.அவரை மீண்டும் ஆறுதலாய்ச் சந்திக்க முடிந்தது நல்லதொரு அனுபவம்.
அவர், தன்னை தென்னாபிரிக்காவிற்கு காந்தி சென்றசமயம், தமிழகத்திலிருந்து போன ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழரின் சந்ததியில் வந்த ஒருவர் என்றார். தாயும், தகப்பனும் வெவ்வேறு மதத்தவர் என்பதால் இரண்டு மதத்திற்குள்ளும் வளர்ந்திருக்கின்றார் போலும். அவ்வவ்ப்போது இந்தியாவிற்கு வருகை தந்தபோது, திருவண்ணாமலை அந்தளவு ஈர்த்துவிட, தென்னாபிரிக்காவில் இருந்த எல்லாவற்றையும் துறந்துவிட்டு, கடந்த 2 வருடங்களாக திருவண்ணாமலையிலேயே வசித்துவருகின்றார்.

தமிழ்ப்பெயர் இருந்தாலும் தமிழில் அவரால் பேசமுடியவில்லை. இங்கேயே இருப்பதால் விரைவில் தமிழ் கற்றுவிடுவீர்கள் எனச் சொன்னேன். நேரமிருக்கும்போது தனது இருப்பிடத்திற்கு தேநீர் அருந்த வாருங்களென அன்புடன் அழைததார். திருவண்ணாமலை ஆலயத்திற்குள் சென்று பார்த்தீர்களா என அவர் கேட்கத்தான், மூன்று நாட்களுக்கு மேலாய் திருவண்ணாமலையில் நின்றும் ஆலயத்திற்குள் போகவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவர் இப்படி சிவன் மீது அளவிறந்த பற்றுள்ளவர் என்று ஏற்கனவே அறிந்திருந்தாலும், பின்னாளில் அவரொரு பாதரெனவும் தெரிந்துகொண்டேன். வெவ்வேறு மத நம்பிக்கைகள் கலக்கின்ற இடத்தில் தோன்றிய அபூர்வப்பூ அவராய் இருக்கவும்கூடும்.

இந்தப் பயணந்தான் எத்தனை ஆச்சரியங்களைத் தந்துகொண்டிருக்கின்றது

தேமாப்பூ குறிப்புகள்

Tuesday, April 21, 2015

The Hungry Ghosts

ஷ்யாம் செல்வதுரையின் 'The Hungry Ghosts' சிங்கள-தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தவரும் தற்பாலினருமான சிவனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரமும் பிற பாத்திரங்களுடோ முரண்களோடும் அதனால் வரும் பதற்றங்களோடும் சிலவேளைகளில் மூர்க்கத்தோடும் இருக்கின்றன. சிறுவனான சிவன் தன் வாழ்வில் பிறரில் நலங்களுக்காய்த் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலிபீடத்திற்கு முன் வைக்கப்படும் ஒருவனாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார். கதையின் முதற்பாகம் 83 இனக்கலவரத்தோடு முற்றுப்பெற, இரண்டாம் பாகம் ரொறொண்டோவில் நிகழ்கின்றது.

ரொறொண்டோவிலிருந்து பிறகு வன்கூவருக்கும், திரும்பவும் இலங்கையிற்கும் என நீளும் நாவலை சுவாரசியமாக வாசித்துக்கொண்டு போகலாம். ஒவ்வொரு பாத்திரமும் தான் தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் குற்றங்களுக்கு அடுத்த பிறப்பிலாவது நல்வினை கிடைக்காதா என ஏங்குகின்றன. ஆனால் அந்த ஏக்கங்களும் அதற்காய்ச் செய்ய முயலும் பிரயச்சித்தங்களும் இன்னுமின்னும் குற்றங்களைப் பெருக்குவதை ஒவ்வொரு பாத்திரமும் செய்வதறியாது திகைத்துப் பார்த்தபடியிருக்கின்றன.

ஜேவிபி காலம், புலிகள், சந்திரிக்கா அரசு, யோர்க் பல்கலைக்கழகம், ஸ்காபரோ, மெட்ரோ ரொறொண்டோ என நாம் பரீட்சயம் கொண்ட/கொள்கின்ற பின்னணிச் சூழல் கதையை வாசிக்கும் நம்மை நெருக்கமாய் உணர வைக்கின்றது. ஆனால் தெரிந்த பின்னணியில் தெரியாத கதையை ஷ்யாம் எழுதியிருப்பாரோ எனத் தேடும்போது சிலவேளை ஏமாற்றம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் தற்பாலினரின் உறவுகள் -முக்கியமாய் புலம்பெயர்ந்த தற்பாலினர்- எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாகவும் அங்கேயும் இருக்கக்கூடிய காதல், பொறாமை, கோபம் பற்றி நுட்பமாகவும் உறவுகள் குறித்துப் பேசும் பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.

ஷ்யாம் உறவுகளில் இருக்கும் சிறுசிறு விடயங்களைக் கூட நுண்ணியதாய் அவதானித்து வைக்கும்போது இரசிக்க முடிகின்றது. ஆனால் கதையில் -முக்கியமாய் இலங்கை/புலம்பெயர் வாழ்வு என வாழும் சிவனின் பாத்திரம் - கொஞ்சமேனும் நகைச்சுவை உணர்வில்லாது ஏன் மிகச் சீரியஸாக எப்போதுமிருப்பதாய் வார்க்கப்பட்டிருக்கிறதென்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். முடிவுவரை சுவாரசியமாய் நகரும் நாவல் இறுதியில் சற்று தளம்பினாற் போலிருந்தது. முடிவை வேறு வகையாக முடித்திருக்கலாம் எனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும் தவறாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் எனத் துணிந்து சொல்லலாம்.

A Fine Balance

அண்மையில் வாசித்த ஆங்கில நாவல்களில் A Fine Balance (by Rohinston Mistry) போல பாதித்த நாவல் எதுவுமேயில்லை. எழுத்துக்கள் குறுக்கப்பட்ட மலிவுப்பதிப்பிலே 600 பக்கங்கள் நீள்கின்ற இந்நாவலோடு கடந்த ஒருவாரமாக பயணித்துக் கொண்டிருந்தேன்.இந்தியாவில் 75ம் ஆண்டு எமர்ஜென்சிக் காலப் பகுதியில் நகரும் நாவல். கிராமப்புறங்களில் ஒடுக்கப்படும் தலித்துக்கள், நகரில் மிரட்டப்படும் மத்தியதர வர்க்கம்....என வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் நால்வரின் கதை அல்லது அவர்களின் வாழ்க்கை இடைவெட்டும் புள்ளிகள்.

வெவ்வேறு வாழ்க்கைச் சூழல் எப்படி இவர்களிடையே தொடக்கத்தில் வெறுப்பையும், புரிதலின்மையையும் உருவாக்கிறது என்பதிலிருந்து அவர்களுக்கிடையில் முகிழும் நட்பு வரும் நீண்டு முடிவில் ஒரு பெரும் சரிவை/ அபத்தத்தை நோக்கிப் போகின்றது. இந்திய அரசு /உயர்சாதி வன்முறை, தலித்துக்களிலிருந்து தொடங்கி, இறுதியில் இந்திராவின் கொலையோடு சீக்கியர்களைத் தெருத்தெருவாக கொன்று குவிக்கின்றது வரை பரவுகின்றது என்பதை அறிவதற்காகவேனும் இந்நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும்.

எமர்ஜென்சிக் காலத்தைப் பற்றிக் கொடூரங்களை, ஒரு கொலைகாரன் எப்படி பிறகு சாமியாராக மாறுகின்றான் என்பதை, சாதிக் கொடூரங்களுக்குள் தப்பி வரும் தலித்துக்கள் எப்படி பிச்சைக்காரர்களாக ஆக்கப்படுகின்றார்கள் என்பதை, எல்லா மனிதர்கள் மீதும் பேரன்பு வைக்கின்ற ஒருவன் எப்படி பிறர் மீது நிகழும் அநியாயங்களைப் பார்த்து பின்னாட்களில் தற்கொலை செய்கின்றான் என்பதையெல்லாம் வாசிக்கும்போது பரவும் வெறுமையை அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விடமுடியாது.

கிளிநொச்சி - படுவாங்கரை

தீபச்செல்வனின் 'கிளிநொச்சி: போர் தின்ற நகரம்', தீபச்செல்வன் யுத்தம் முடிந்தபின் தன் உறவுகள்/நண்பர்கள்/அயலவர்களைத் தேடிச்செல்கின்ற சம்பவங்களை உருக்கமாய் முன்வைக்கின்றது. அழிவுகளின் போது மட்டுமல்ல அழிவுகளின் பின்னும் வாழ்கின்ற வாழ்வு எவ்வளவு துயரமானது என்பதற்கு இதுவும் சஞ்சயன் எழுதிய 'படுவான்கரையும்' நம் முன் வைக்கப்படுகின்ற சாடசியங்கள்.

சப்வேயில் 'கிளிநொச்சி'யை வாசித்தபோது தானாய் எழுந்த கண்ணீர்த்துளிகளை முன்னால் இருப்பவர்க்கு மறைக்க கஷ்டப்பட்டது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் இவ்வளவுக்கு அப்பாலும் இனி எதைச் சாதித்து எதைப் பெற்றாலும் இந்நினைவுகளின் 'வடுக்களுக்கு' மருந்திடமுடியுமா என்கின்ற அயர்ச்சியே வந்தது. 'கிளிநொச்சி'யை வாசித்தபோது இன்றைய தீபச்செல்வனை என்னால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆனால் அதற்காய் அவரின் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதல்ல அர்த்தம். அவரை இன்னொரு எதிர்முனையில் ஒதுக்கிவைப்பதை விட, சகோதர வாஞ்சையுடன் நமது முரண் உரையாடல்களை அவருடன் தொடங்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.

The Panic Button

கும் காங்கேசனின் 'The Panic Button' நாவல் எனக்குப் பரிட்சயமான ஸ்காபரோ/டவுன்ரவுன் ரொறொண்டோ/கென்னடி சப்வே போன்ற இடங்களில் நிகழ்வதால் வாசிக்கச் சுவாரசியமாக இருந்தது. ஆனால் கதையென்றால்... அம்மா இரண்டு ஆண்களைக் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். அப்பா விஸா பிரச்சினையால் 25 வருடங்களுக்குப் பின் இலங்கையிற்கு வருகின்றார் (அதுவரை அவர்கள் தந்தையை நேரில் காணவில்லை என்ற லொஜிக் ஒருபக்கம் இடிக்கிறது). தமையனுக்குத் திருமணம் நடக்கும்போது தம்பிக்கு ஒரு வெள்ளைப் பெண்ணோடு காதல் வருகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள், அப்பா- மகன் முரண்பாடுகள்.

வாசுகியின் 'Love Marriage'  நாவலைப் போலவே இங்கும் திருமணம் ஒருவகையான 'ஃபான்சியாக' விபரிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறையின் இளையவர்களின் வாழ்விலும் மரபுரீதியான திருமணம் முக்கியமாய் இருப்பது போலத் தெரிகிறது. ஆனால் என்ன பிரச்சினையென்றால் அவர்கள் நினைப்பது/விபரிப்பது போல இத்தகை திருமணங்கள் இயல்பில் இல்லை என்பதுதான். கனடாவில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் பேசிய இளைய தலைமுறையைச் சேர்ந்த சிவகாமிக்கு இருக்கும் 'அடையாளம் தேடல்' குறித்த பிரக்ஞை கூட, கும் காங்கேயனுக்கு இல்லாது ஒரு மேற்கத்தைய பார்வையினூடு கதையைக் கொண்டு செல்லல் அலுப்புத் தரக்கூடியது மட்டும் அல்ல கவலை தருவதும் கூட.

Magic in the Moonlight

Monday, April 20, 2015

வூடி அலனின் திரைப்படங்கள் எப்போதும் இருத்தல் சார்ந்த கேள்விகளை எழுப்புவது. ஒவ்வொரு மனிதர்களும் தமது பகுத்தறிவின் மூலம் தமக்கான வாழ்வையும், உறவுகளையும் கட்டியமைக்க முயல்கின்றார்கள். ஆனால் பகுத்தறிவு நமக்கான விடுதலையைத் தந்துவிடுமா, நம்மை மகிழ்ச்சியாகவோ அல்லது ஆகக்குறைந்தது நிம்மதியாக வாழ விடுமா என்பதைத் தேடும் ஒரு படந்தான் Magic in the Moonlight.

மாந்தீரிகவாதியான ஸ்ரான்லி பல வித்தைகள் செய்து பார்வையாளர்களை வசியம்செய்தாலும் அவரொரு பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கையற்றவர். எந்த ஒரு 'வித்தை'யையும் பகுத்தறிவால் அவிழ்த்துவிடமுடியுமே தவிர உண்மையில் அதற்கப்பால் 'அமானுஷ்ய' சக்திகள் இல்லை என்று தீவிரமாக நம்புகின்றவர். மனிதர்களின் சிந்தனைகளுக்கு அப்பால் சக்திகள் இருக்கின்றன எனக் கூறுகின்றவர்களை கேலியும் செய்கின்றவர்.

இவ்வாறான ஸ்ரான்லியிடம் அவரின் நண்பரொருவர் உதவி கேட்டு வருகின்றார். ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில், 'மனிதர்களின் மனதை வாசிக்கும்' ஒரு பெண் நுழைந்து எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கின்றார், அவரை ஒரு போலியென அக்குடும்பத்தில் நிரூபிக்கவேண்டும் என நண்பர் ஸ்ரான்லியிடம் கேட்டுக்கொள்கிறார். மேலும் இந்தப் பெண்ணின் மீது பணக்காரவீட்டு ஆண்களில் ஒருவர் ஏற்கனவே காதலில் வீழ்ந்தும் விட்டிருக்கின்றார் என்பதும் கூறப்படுகின்றது.

ஸ்ரான்லி, இப்படி மனித மனங்களை வாசிப்பதென்பது போலியான விடயம், நான் அங்கு வந்து இதைப் பொய்யென நிரூபிக்கின்றேன் என நண்பருடன் புறப்படுகின்றார். எல்லாமே பகுத்தறிவிற்கு உட்பட்டதென தீவிரமாய் நம்பும் ஸ்ரான்லியையும் அந்தப் பெண் தன் 'மாந்தீரிகத்தால்' கொஞ்சம் கொஞ்சமாக நம்பவைக்கின்றார். ஒருகட்டத்தில் ஸ்ரான்லி மனித அறிவால் எட்டமுடியாது, அதற்கு அப்பாலும் விடயங்கள் இருக்கின்றதென நம்பத் தொடங்குகின்றார். இந்தப் பெண் உண்மையிலே மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவள் என பத்திரிகையாளர்களை அழைத்துச் சொல்லவும் செய்கின்றார். பத்திரிகையாளர்கள் 'நீங்கள் முன்னர் இப்படியான விடயங்களே இல்லை என தீர்க்கமாய்க் கூறியவர், அவர்களை எள்ளலும் செய்தவர், இப்போது இதையெல்லாம் உண்மையென நம்பத் தொடங்கிவிட்டீர்களா?' எனவும் கேட்கின்றனர். 'ஆம், முன்னர் அப்படித்தான் இருந்தேன், ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இதையெல்லாம் நம்பத்தொடங்கிவிட்டேன், உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கின்றேன்' என்கின்றார்.

இறுதியில் என்ன நடக்கிறது, மாந்தீரிகமா, பகுத்தறிவா தம்மைச் சரியென நிரூபித்துக்கொள்கிறதென்பதை படத்தின் முடிவில் அறிந்துகொள்ளலாம். வூடி அலன், இங்கே மாந்தீரிகத்தை ஒரு தளமாய் எடுத்துக்கொண்டாலும், அவர் அதனூடாக பரிசோதித்துப்பார்ப்பது மனித மனங்களைத்தான். ஸ்ரான்லி என்கின்ற பெரும்புகழ்பெற்ற மாந்தீரிகவாதி, தன்னை ஒத்த அறிவுடைய ஒரு துணையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் ஒரு மகிழ்ச்சியான வாழ்வை வாழவில்லை என்பதை இந்த மாந்தீரிகம் செய்யும் பெண்ணைக் காணும்போது கண்டறிந்துகொள்கின்றார். அந்தப் பெண் தந்து கொண்டிருப்பது உற்சாகமான நாட்கள் என்றாலும் அவருடைய 'அறிவு' இதைக் காதலென பெயரிட்டுக்கொள்ள மறுக்கிறது. இந்த அற்புத அனுபவங்களைக் கூட, அறிவின் வழி ஆய்ந்து ஆய்ந்து மீண்டும் தன்னை உற்சாகமில்லாத ஒரு தனிமை வாழ்விற்குள் இழுத்துச் செல்ல விரும்புகின்றார். ஆனால், அவரது அன்ரியொருவர் ஸ்ரான்லியின் அறிவிற்கும், காதலுக்கும் இடையில் தள்ளாடும் மனதை எளிதாகப் போட்டுடைக்கின்றார்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தம் புதிய உறவுகளை அமைத்துக்கொள்ளும்போது, தமக்கான அதேபடிநிலையிலேயே தமது துணைகளைத் தேர்ந்தெடுத்தால் வாழ்வு இதமாய் இருக்குமென நம்புகின்றனர். உண்மையிலே அப்படி நாம் நம் உறவுகளை அறிவின் வழி தேர்ந்தெடுக்கும்போது நமக்கு 'நிலைத்த' மகிழ்ச்சி கிடைப்பது சாத்தியந்தானா என வூடி அலன் நம்மிடையே கேட்க முனைகின்றார். கொஞ்சம் மாந்தீரிகம், கொஞ்சம் பொய்கள், கொஞ்சம் கற்பனைகள் இருந்தால் வாழ்வு இன்னும் அழகாகியும் விடக்கூடுமல்லவா? ஸ்ரான்லி என்னும் பகுத்தறிவின்படி எல்லாவற்றையும் ஆராயும்/தேர்ந்தெடுக்கும் ஒருவருக்குள், அவரளவிற்கு அறிவோ, வசதியோ இல்லாத ஸோபி என்கின்ற அழகான கண்களையுடைய அப்பாவித்தனமுள்ள பெண் எல்லா நிலைகளையும் எளிதாய் உடைத்தெறிந்து உள்நுழைந்து கொள்கிறாள். ஸ்ரான்லி, ஸோபியின் 'மனங்களை வாசிக்கும்' திறனை நம்பிக்கொள்வது கூட, அவரின் 'பகுத்தறிவை' மறைத்து/மறைந்து எழும்பிய காதலினால்தான் என்பதை பார்வையாளர் எளிதாக விளங்கிக்கொள்ளவும் முடியும்.

வூடி அலனின் படங்களில் முரண் உரையாடல்களாலேயே அழகான காதல்கள் கட்டியெழுப்பப்படுவதை நாம் அவதானிக்கமுடியும். ஆனால் இந்தப் படத்தில் அவ்வாறான தீவிர உரையாடல்கள் பாத்திரங்களிடையே நிகழத்தப்படவில்லை என்பதோடு, காதல் கூட அழகாக மனதைத் தொடும்படியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதை இப்படத்தின் ஒரு பலவீனமாகத்தான் கொள்ளவேண்டும். ஒருவகையில் அவரின் முன்னைய படங்களைப் போன்று அவ்வளவு பாதிப்பையோ, நினைவில் இருத்திக்கொள்ளக்கூடிய நுட்பமான காட்சிகளோ இல்லாத ஒரு திரைப்படமாகவே இது இருக்கிறது.Vicky Cristina Barcelona, Midnight in Paris, Rome with Love, Blue Jasmine போன்று இருத்தலியத்தையும், காதலையும் நுட்பமாக செதுக்கிய பாத்திரங்களினூடாக மீண்டும், வூடி அலன் மீண்டு வருவதை அவரின் விரைவில் வரவுள்ள Irrational Man ல் எதிர்பார்க்கின்றேன்.

Stanley: "The more I watch her, the more I'm stunned. Could she be real? I'm beginning to question my own common sense."

Aunt : "You've always been so certain about the world and I've always tried to teach you that we don't know."
.....

பயணக்குறிப்புகள் - 07 (Cuba)

Thursday, April 16, 2015

"Sometimes a lonely trip ends up pretty cool, like I met you."

எதையும் எதிர்பார்க்காத வாழ்க்கை நிறைய அமைதியைத் தரும் என்பதைப் போல, எதையும் திட்டமிடாத பயணங்களும் எமக்கு நிறைவான அனுபவங்களைக் கொண்டு வரக்கூடும். பயணிப்பது என்பதே வாழ்வில் அரிதாக இருக்கும் எனக்கு, தனித்துப் பயணிப்பவரைப் பார்த்தால் வியப்பு ஏற்படுவதுண்டு. தனியே பயணிப்பதில் அச்சம் என்பதைவிட, அப்படிப் பயணிக்கும்போது வரும் தனிமையைப் பற்றியே மிகவும் அஞ்சியிருக்கின்றேன்.

நண்பரொருவரோடு திட்டமிட்ட பயணம் -நண்பனின் வேலை நிமித்தம்- தனித்துப் பயணிப்பதற்கான முதல் சந்தர்ப்பம் வாய்த்தபோது, செல்வதற்குத் தயக்கமாயிருந்தது. அப்போதுதான் எனக்குத் தெரிந்த ஒரு தோழி கோஸ்டா ரிக்காவிற்கு தனித்துப் போய்விட்டு வந்திருந்தார். விமானத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு backpacker யாய் புறப்பட்டிருந்தார். திரும்பி வந்து அவர் கூறிய அனுபவங்களோடு, என்னையும் தனியே போகச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.

என்னதான் நடந்தாலும், வாசிப்பு எங்கும் கைவிடாது என்ற நம்பிக்கையில் பத்திற்கு மேற்பட்ட புத்தகங்களைக் கூட எடுத்துக்கொண்டு முதன்முதலில் தனித்துப் புறப்பட்டேன். அந்த அனுபவம்- ஏற்கனவே தெரிந்த நண்பர்களுடன் பயணிப்பதைப் போல- தனித்துப் பயணிப்பதிலும் இனிமை இருக்கிறதென நிறையக் கற்றுத் தந்திருந்தது.

இம்முறை எது வருகின்றதோ அதையெல்லாம் முழுமையாக -எதிர்க்காது- அனுபவிப்பது என்று மட்டும் நினைத்துப் பயணித்திருந்தேன். எவரும் முதலில் வந்து கதைக்கமுன்னர் அவர்களோடு பேசத் தயங்கும் ஒருவன், இம்முறை அந்தத் தயக்கத்தையும் சென்றிங்கியபோதே களைந்துவிட்டேன். சிலவேளைகளில் அந்த நண்பர் என்னைவிட தனிமையைக் கூட நேசிப்பவர் போலத் தோன்றியதால் என்பதால் என நினைக்கின்றேன்.

இதற்கு முன்னர் தனித்துப் பயணித்தபோது ஒருவரை நண்பராக்கியது இன்னும் சுவாரசியமானது. கடலில் 'கானாய்' வலித்துச் சென்றபோதே இடைநடுவில் அவரைச் சந்தித்தேன். 'இப்படியே அடுத்த சிறுநகருக்குச் செல்வோமா'?' எனக் கேட்டார். அந்த நகருக்கு படகு வலித்துச் சென்றதும், கையில் காசில்லாதபோதும் அங்கே சந்தித்த உள்ளூர்வாசிகள் நமக்கு மது வாங்கி அருந்தத் தந்ததும், நாங்கள் அங்கேயே நிறையநேரம் கழித்ததால் எங்களைக் காணவில்லையென விடுதியில் பணிபுரிந்தவர்கள் தேடியதுமென ஒரு கதையாய் எழுதக்கூடிய சம்பவங்கள் அவை. அப்படித் தொடங்கிய நட்பு இன்னொரு பயணத்தைச் சேர்ந்து செய்யவேண்டுமெனக் கனவுகளை வளர்த்தபடி இப்போதும் அவருடன் தொடர்கிறது.

இம்முறை சந்தித்த நண்பருக்கு சைக்கிள் ஓடுவதிலும் ஸ்நோர்கிளிங் (snorkelling) செய்வதிலும் மிகுந்த விருப்பு. அவருடன் கூடவே எடுத்து வந்த உபகரணங்களை எனக்கும் தந்து ஸ்நோர்கிளிங் கற்றுத்தந்தார். என்றாலும் அவரின் ஆழ்கடல் தேடல்களைத் தடுக்கக்கூடாதென அவரை தூரச் செல்லவிட்டு நான் கரைக்கருகில் நின்று 'முத்து'க்குளித்தேன். கடலின் 'உலகு' அவ்வளவு அழகானது. நிச்சயம் நீ தவறவிடக்கூடாதென்றார். அவர் ஆழம் சென்று புகைப்படங்களும், விடீயோக்களும் எடுத்துக்கொண்டு வந்து எனக்கு காட்டிக்கொண்டிருப்பார். புதிதாக பார்த்த மீன்களையும், தாவரங்களையும் மகிழ்ச்சியுடன் குழந்தையைப் போலச் சொல்லிக்கொண்டிருப்பார். 'பறவைகளைத் தேடிப் போய் பதிவு செய்கின்றவர்களைப் போல, நீங்கள் புதிதாய்க் காணும் மீன்களைப் பற்றிய குறிப்புக்களைப் பதிவு செய்யுங்கள், அது சுவாரசியமாக இருக்கும்' என்றேன்.

எமது இந்தப் பயணத்தில் கட்டுமரத்தில் சென்று 2 மணித்தியாலம் பார்ப்பதை இலவசமாகத் தந்திருந்தார்கள். நானும் நண்பரும் சேர்ந்து கட்டுமரத்தில் சென்றபோது, அவரிடம் இந்த catamaran என்ற வார்த்தை எனது தாய்மொழியான தமிழில் இருந்தே ஆங்கிலத்திற்கு வந்தது என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். நாங்கள் அவ்வளவு சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சும்மா விட்டுவிடமுடியுமா என்ன?

இந்த நண்பரோடு நள்ளிரவு தாண்டி மிக நெருக்கமாக உரையாடினேன். எவரோடும் அவ்வளவு எளிதாய் -நான் எழுதிக்கொண்டிருப்பவன்- என்பதைப் பகிர்வதில்லை. இவரோடு பகிர்ந்துகொண்டேன், அது போலவே கடந்துவந்த பல்வேறு கதைகளையும். சிலநாட்களுக்கு முன் நட்பாகிய ஒருவரோடு இவ்வளவு விடயங்களைப் பகிர முடியுமா என்று கூட சற்று வியப்பாயிருந்தது.

நண்பரும் தன் சிறுவயது நினைவுகள் உட்பட பலதைப் பகிர்ந்து கொண்டார். சிறுவயதுகளில் தனக்கு நீந்த ஆசையிருந்தாலும், தனது தந்தையார் வேலை முடிந்து வரும்வரை காத்திருப்பதையும், நீச்சல் குளத்திற்குச் சென்றாலும் தந்தையார் வேலையின் களைப்பின் நிமித்தம் நீருக்குள் இறங்காது வெளியில் இருப்பார் எனவும், யாரேனும் வேறு ஆட்கள் வரும்வரை தான் நீச்சலிற்காய் ஆவலாய்க் காத்திருந்ததையும் கூறினார். இப்போது, நீருக்குள் இறங்க ஆசையுள்ள காலத்தில் தானும் ஒரு குழந்தை பெற்று அந்தப் பிள்ளைக்கு நீரின் வற்றாத இரகசியங்களைக் கற்றுக்கொடுக்க ஆசைப்படுவதாகவும் சொன்னபோது அவருக்குள் இருந்த மென்மனதைக் கண்டுகொண்டேன்.

சைக்கிளோட்டுவதில் மிகுந்த விருப்புடைய அவர் எப்படி தனக்கான சைக்கிளை பல்வேறு நாடுகளிலிருந்து பாகங்களை வாங்கி வடிவமைத்தார் என விபரித்தார். ஒவ்வொருவரின் கைகளின் அளவைப் பொறுத்து சைக்கிள் வேறுபடுமெனவும், வேகம் கூட அதில் அடங்கியிருக்கிறதென நுட்பமான விடயங்களைச் சொல்லிக்கொண்டே போனார். ஒருகட்டத்தில் இதெல்லாம் விசர்த்தனமாய் ஏதோ உளறுவதுபோல உனக்குத் தெரியுமெனவும் சொன்னார். நான் அப்படியில்லை எனச் சிரித்துக்கொண்டு மறுத்தேன். Friesம் Burgerம் Beerம் சாப்பிட்டு/அருந்தி இரவுகளில் நீண்டு போய்கொண்டிருந்தன உரையாடல். ஆனால் நாமிருவரும் தனிமையை அதிகம் விரும்புபவர்கள் என்பதையும் கண்டுகொண்டோம். அதீத கொண்டாட்ட மனோநிலையில் இருப்பவர்களுடன் இணையாது அவர்களை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டும் இருந்தோம்.

ஒருநாள் நண்பரும் நானும் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணைக் கண்டேன். திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் ஒருவித அழகு அவரிடம் இருந்ததை மறைக்காது சொல்லவேண்டும். அழகை இரசிப்பதற்கு நண்பர் சிலவேளை இடைஞ்சலாய் இருந்துவிடுவாரோ என்ற தயக்கத்தினால் நண்பரை 'இந்த வீதி இடதா வலதா திரும்புகின்றது?' எனப் பார்க்கச் சொல்லி முன்னே போகச் சொல்லிவிட்டு, நான் மரமொன்றின் நிழலில் நின்று -அழகை இரசிப்பதற்காய்- ஓய்வெடுப்பதாய்ப் பாசாங்கு செய்தேன். சில சந்தர்ப்பங்கள் இன்னொருமுறை கதவைத் தட்டாது அல்லவா?

மாலைவேளைகளில் உள்ளூர்மக்கள் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று கொண்டிருப்போம். அவர்களோடு எப்போதும் ஏதாவது கதைக்க விரும்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் நாங்கள் சுற்றுலாப் பயணிகள் என்று நினைத்ததாலோ என்னவோ அவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரேவிதமான கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நண்பருக்கு ஒருகட்டத்தில் இதனால் அலுப்பு வந்துவிட்டது. ஆனால் அவரிடம், 'நான் கதைகளை எழுத விரும்புகின்றவன், இவர்களில் யாரேனும் ஒருவர் வித்தியாசமான கதையைச் சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் நான் ஒருபோதும் இவர்களின் கதைகளைக் கேட்கச் சலிக்கப் போவதில்லை' என்றேன்.

ஒருமுறை இப்படி ஒரு உள்ளூர் நண்பரொருவரோடு நாங்கள் மாலைவேளையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு பெண் எங்களை நிறுத்தி, ஸ்பானிஸ் ஏதோ கூறினார். அந்த உள்ளூர் நண்பர் கொஞ்சம் மொழிபெயர்த்தார்; 'இந்தப் பெண் உங்களை ஏற்கனவே தெரிந்தவர்' என்று கூறுகின்றார் என்றார். 'எனக்கு இப்படியான ஒரு பெண்ணைச் சந்தித்ததாய் நினைவினில்லை. எவரோடும் கதைக்கவும் இல்லை' என்றேன். நண்பரும் தனக்கு நினைவில்லை என்றார். அந்தப் பெண் இன்னும் துல்லியமாகச் சொன்னார்....'இவர்கள் இருவரும் சைக்கிள் ஓடிக்கொண்டு போனார்கள். இவர் சைக்கிளை நிறுத்தி என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்தது எனக்கு நன்கு தெரியும்' என்றார். பெண்கள் நுட்பமாய் அவதானிப்பவர்கள் என்பது தெரியும். ஆனால் இப்படி எங்களின் பலவீனங்களை எடுத்துச்சொன்னால் என்ன செய்வது? எனது நிலை இக்கட்டாகிப் போயிற்று. நான் பகல் வேளையொன்றில் சைக்கிளில் இரசித்த அதே பெண்.

'உங்களின் அழகு என்னை அப்படி அசரவைத்தது, அதுதான் இயற்கையை எதிர்க்க விரும்பாது உங்களைத் திரும்பி திரும்பிப் பார்த்தேன்' என உண்மையைச் சொல்ல முடியுமா என்ன? 'ஓ நீங்களா அவர். இப்போது மாலையில் பார்க்கும்போது வேறுவிதமாய் இருக்கின்றீர்கள். அதுதான் அடையாளங்காண முடியாது இருக்கிறதென'ச் சொல்லி மழுப்பினேன். இப்போது நண்பருக்கும் விளங்கியிருக்கும், ஏன் தன்னை இவன் முன்னே போகச் சொல்லி அந்த மரநிழலில் தரித்து நின்றான் என்பதும். அதற்காகவெல்லாம் கவலைப்படமுடியுமா என்ன? ஆக, சந்தர்ப்பம் இரண்டாவது முறையாக மீண்டும் தட்டியது என்க.

இப்போது Holguin னில் சந்தித்த நண்பர் ஒரு மின்னஞ்சல் இப்படியாக அனுப்பியிருந்தார்.

This is because most of the time I ride a bike and a snowboard alone - friends always have something better to do: shopping, they are tired, etc. Sometimes a lonely trip ends up pretty cool, like I met you.
........
.............
Now it is cold outside so you will have more time to finish your book, especially that you have a lot of new experiences from Cuba :-)

ஆம், நண்பரே...ஒருநாள் அதையும் எழுதுவேன்.
நடந்ததை நடக்காதமாதிரியும், நடக்காததை நடந்தமாதிரியும்!

பயணக்குறிப்புகள் - 06 (India)

Sunday, April 12, 2015

இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாடல்!

புத்தகக்கண்காட்சியினுள் ஒரு கடையைக் கண்டபோது நண்பரொருவர் உள்ளே இருக்கின்றாரா எனத் தேடிப் பார்த்தேன். அவரோடு அவ்வளவு பரிட்சயமில்லை என்றாலும், அவரது படைப்புக்களை ஏற்கனவே வாசித்து ஒருவித நெருக்கத்தை உணர்ந்திருந்தேன். பிறகு அவர் ஊடகமொன்றில் வேலை செய்யத் தொடங்கியபோது என்னையும் அதில் எழுத அழைத்திருந்தார். எனக்கு அவர் படைப்புக்கள் பிடிக்கும் என்றாலும், அவர்பணிபுரிந்த இடத்தின் அரசியல் -முக்கியமாய் ஈழத்தமிழர் குறித்த அதன் நிலைப்பாடு- உடன்பாடில்லாததால் நேரடியாகக் காரணத்தைச் சொல்லாது மென்மையாக மறுத்துவிட்டிருந்தேன். ஒருநாள் புத்தகக் கண்காட்சியில் தற்செயலாய், எனக்குச் சென்னையைச் சுற்றிக்காட்டிக்கொண்டிருந்த நண்பரின் பைக்கில் ஏறும்பொழுதில், நான் தேடிக்கொண்டிருந்த இந்த நண்பரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபோது இரவு வீட்டுக்கு வாருங்கள், வீட்டில் எவரும் இல்லை. இரவிரவாய்/விடியவிடிய ஆறுதலாய்க் கதைக்கலாம் என அழைத்தார்.

நானும், மற்ற நண்பரும் தங்கியிருந்த விடுதியிற்கு முதலில் போய், அங்கிருந்து எங்கள் முடிவைச் சொல்கின்றோம் என புறப்பட்டோம். நாங்கள் பிறகு அவரை அழைத்தபோது, அவரும் மற்ற நண்பர்களும் டாஸ்மாக்கில் ஓய்வெடுப்பதாகச் சொன்னார்கள். நாங்களும் ஓய்வெடுக்கத்தான் விரும்புகின்றோம், அது விடுதியாயிருந்தாலென்ன? டாஸ்மாக்காயிருந்தாலென்ன? களைப்புப் போக்க ஓரிடம் இருந்தால் போதுமென சைதாப்பேட்டையிற்குப் போனோம்.


நாங்கள் டாஸ்மாக்கை அடைந்தபோது, நம் நண்பர் இன்னுஞ்சில நண்பர்களோடு சேர்ந்து முதலாவது அமர்வை முடித்திருந்தார். இரண்டாவது அமர்வைத் தொடங்குவதற்குள் இரவு பத்து மணியாகிவிட்டது, அரங்கை மூடிவிடவேண்டுமென ஊழியர்கள் அடிக்கடி வந்து நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். பகிர்வதற்குத் தேவையான ஆயத்தங்கள் இருந்தால் எங்கும் வாசிப்பை நிகழ்த்தலாம் என்பதால் அங்கே தேவையானவற்றை வாங்கிக்கொண்டு நண்பரின் வீட்டுக்குப் புறப்பட்டோம். நான்கைந்து பைக்குகளில் அந்த இரவில் ஏதோ இந்தத் தெருக்களே எங்களுக்குச் சொந்தமென்ற நினைப்பில் நாமெல்லோரும் போய்க்கொண்டிருந்தது உற்சாகமாயிருந்தது. வாசிப்பு அரங்கில் இருந்த மற்ற நண்பர்களுக்கு இரவிரவாய் இலக்கியம் கதைக்க விருப்பமிருந்தாலும், அவரவர் இல்லாள் பிறகு அவர்களின் இல்வாழ்வையே கேள்விகளால் வேள்வி செய்துவிடுவார்களே என்ற பதற்றங்களுடன் தத்தம் வீடுகளை நோக்கி நகரத்தொடங்கினர்.

ஓர் அறையில் நாம் கொண்டுவந்தவற்றைப் பரப்பிவிட்டு, சுவர்களில் சாய்ந்திருந்தபடி பேசத்தொடங்கினோம். எப்போது பசிக்கிறது என்றாலும் சொல்லுங்கள் உடனே சோறு வைத்துவிடலாம் என்றார். அப்போதுதான் 'ஐ' படம் வந்திருந்தது. நண்பர் படம் பார்த்து மெர்ஸலாயிருந்தார். நான் பார்த்த திரைப்படங்களில் இதுவல்லவா படம், எமி ஜாக்சனின் முன் எந்த அழகியும் நிற்க முடியாதென்றார். ஆக, அப்படியாக 'ஐ' படத்தின் பாடல்களைப் பின்னணியில் இசைக்கவிட்டபடி பேசிக்கொண்டிருந்தோம். 'மெட்ராஸில்' ஏதோ விளிம்புநிலைப் பாத்திரத்தைக் கொண்டுவிட்டதாய் எல்லோரும் கூறுகின்றீர்களே, சத்தமேயில்லாதே ஷங்கர் அந்தப் பாத்திரத்தை 'ஐ' யில் கொண்டுவந்துவிட்டாரென உற்சாகமாயப் பேசிக்கொண்டிருந்தார். நான் அப்போது 'ஐ' படத்தைப் பார்க்கவில்லை. பின்னர் அதை ஏவிஎம் தியேட்டரில் பார்த்தபோது சாதாரண ஒரு படத்தை, திருநங்கைகளை கேவலமாகச் சித்தரித்தன் மூலம் இன்னும் மோசமான ஒரு திரைப்படமாக்கிவிட்டனர் என்ற விம்பமே எனக்குள் தங்கியது என்பது வேறுவிடயம்.

எந்த வீட்டிற்குச் சென்றாலும் உடனே கைவைப்பது புத்தக அலுமாரிகளில்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த அறையிலே நண்பரின் புத்தக அலுமாரியுமிருந்தது. போர்ஹேஸையும், மார்க்குவெஸையும் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருந்தாலே இந்த வாழ்வுக்குப் போதுமென்றார். நிறைய சிறு சஞ்சிகளைகள் -சி.செல்லப்பாவின் எழுத்து- உட்பட அவரின் சேகரத்திலிருந்தன. வாசக மனதுதான் எவ்வளவு அற்புதமானது. போர்ஹேஸ் எந்தப் பொழுதிலும் மார்க்வெஸ்ஸின் படைப்புக்களைப் பாராட்டியதில்லை. ஆனால் நம்மால் இருவரையும் மனமுவந்து ஏற்று பக்கத்திலிருத்தி வாசிக்கமுடிகிறது என நினைத்துக்கொண்டேன்.


நேரம் ஆக ஆக, நண்பர் தன் கடந்தகாலங்களில் மூழ்கிக்கொண்டார். சிலரோடு நிறையப் பழகினாலும் மனந்திறந்து பேச முடியா கண்ணுக்குத் தெரியாத் தடைகள் இருக்கும். நானும் நண்பரும் இதுதான் நம் முதல் சந்திப்பு என்ற நினைப்பில்லாது நிறைய நெருக்கமான விடயங்களை பகிரத் தொடங்கினோம். அவர் தன் பாடசாலை நாட்களில் மூழ்கத்தொடங்கினார். முக்கிய இரண்டு இலக்கியவாதிகளின் உச்சக்கட்டத்தில் அவர்களோடு நெருக்கமாய் பழகமுடிந்தது தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றார். இந்த வருடத்து வாசிப்பிற்கு 'கரம்ஸோவ் சகோதரர்களும்', 'மகா பாரதமும்' போதும் என்றார். நான் ஜெயமோகன் எழுதுகின்ற 'வெண்முரசா' என்றேன். இல்லை, இது பழைய மகாபாரதம் என மறுத்தார். பின்னர் நண்பர் சில இதழ்கள் வெளியிட்ட சிறுபத்திரிகையைப் பார்த்தபோது, அவர் என்னைவிட ஒவ்வொரு இதழிலும் ஜெயமோகனை நிறையத் திட்டியெழுதியிருந்தது தெரிந்தது. பரவாயில்லை இந்த விடயத்தில் கொஞ்ச நல்லவனாக நான் இருக்கின்றேன் என்ற 'அற்ப திருப்தி' வந்தது. நண்பரோடு பழகிய கொஞ்சநேரத்திலேயே கண்டுகொண்டது, அவர் எதையென்றாலும் முழுமையாக அனுபவிக்கக் கூடியவர். அதில் தன்னைத் தோய்த்துக் கரைத்துவிடக்கூடியவர். எனக்கும் அப்படி இருப்பதிலே மிகுந்த விருப்பமெனினும் அடுத்து என்ன அடுத்து என்ன என அலைபாயும் மனது இன்னமும் எனக்கு உரித்து.

நேரம் நள்ளிரவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. எங்களோடு இருந்த நண்பருக்கு தூக்கம் வருவதாகக் கூற, நண்பர் சோறு வைத்து, அப்பளம் பொரித்து, ஏற்கனவே வைத்திருந்த கறிகளுடன் சாப்பிடத்தொடங்கினோம். சில இலக்கியவாதிகள் பற்றிப் பேச்சு வந்தது. அவர்களில் சிலர் பெண்களோடு நடந்துகொண்டவிதம் பற்றி பேச்சும் வந்தது. இவர்களின் தனிப்பட்ட வாழ்வு எங்களுக்கு முக்கியமா என்று அதை விலத்தி நான் வந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அதை பொதுவெளியில் பேசும்போது நாம் அவர்களின் பக்கம் நிற்கவேண்டியது அவசியம் என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்துமில்லை. மேலும் இவ்வாறு நடப்பதற்கும், இலக்கியம் படைப்பதற்கோ வாசிப்பதற்கோ எந்தத் தொடர்பும் இருக்கவேண்டிய அவசியமுமில்லை. இது எல்லாச் சாதாரண மனிதர்களும் செய்யக்கூடியதுதான். 'இலக்கியவாதி' என்ற ஒரு 'அடையாளம்' எளிதாய் இவற்றுக்கு உதவுகிறது. அவ்வளவே. ஆகவேதான், எவரெனினும் தான் ஒருவர் இலக்கியவாதி எனக் கூறி தன்னை மேனிலையாக்கம் செய்வதை தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே வருகின்றேன்

இலக்கியம்/கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் இருக்கின்றவர்களால், எளிதாய் எந்த மனிதரினதும் உள்மனதிற்குள்ளும், அவர்களின் நுண்ணுணர்வுகளில் தளங்களிற்குள்ளும் போய் இறங்குவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை. நண்பரும் ஓரிடத்தில் கூறினார், எந்த வீட்டுக்குத் தான் சென்றாலும், அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கின்றதா, சண்டைபிடித்துக்கொண்டு வாழ்கிறதா என எளிதாய்க் கண்டுபிடிக்க முடியும் என்று. மேலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பகிரமுடியாத சில விடயங்களையும் நீட்டித்துச் சொன்னார். இது சற்று உயர்வுநவிற்சியாக இருந்தாலும், எப்போதும் பிரச்சினைகளுள்ள மனிதர்களுக்குள், அன்புக்காய் ஏங்கிக்கொண்டிருப்பவர்களிடையும் நாம் இலகுவாய் நெருக்கமாகிவிட முடியும். எனவே 'இலக்கியவாதிகள்' எனப்படுவோர் பலரின் வாழ்வில் குறுக்கிடுவது/இடையீடு செய்வது பிறரை விட இன்னும் எளிதாகிவிடுகின்றது.

இவ்வாறு எங்கெங்கோ தீவிரமாய்ப் போய்க்கொண்டிருந்த உரையாடலில் என்னோடு வந்திருந்த நண்பர் 'உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்று நம் இலக்கிய சம்பாசணையிலிருந்து விலகி தூங்கச் சென்றுவிட்டார். நான் இந்த நண்பருக்கு கேரளாவுக்குப் போகும் என் பெருங்கனவை விரித்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயில்களுக்கு எல்லாம் நிச்சயம் போகவேண்டும் என்று கூறிவிட்டு, ஒரு மலையாள பக்திப் பாடலை இசைக்கவிட்டார்.

அது- கண்ணன் முதல் நாளிரவில் தன் லீலையைச் செய்துவிடடுப் போனபின், அடுத்த நாள் காலையில் ருக்மணி(?)யின் கோலத்தைக் கண்டு அவரின் தோழி இரவு நடந்ததைக் கண்டுபிடிப்பதைப் பற்றிய பாடல். நண்பர் மலையாளப் பாடலை சொல் பிரித்து பொருள் வகுத்து சொல்லச் சொல்ல, ஒருகட்டத்தில் அவர் விளக்கப்படுத்தமுன்னரே எனக்கும் சற்று மலையாளம் விளங்கியதுமாதிரி உணர்ந்தேன். ஏதோ இனி அஸினோடு மலையாளத்திலேயே சம்சாரிக்க முடியுமென்ற மகிழ்ச்சி கணப்பொழுதில் மனதில் வெட்டிவிட்டுப் போனது.

நண்பர் தூங்கப்போவாமா எனக் கேட்டார். நீங்கள் செல்லுங்கள், நான் இணையத்தில் கொஞ்சநேரம் சஞ்சாரித்துவிட்டு வருகின்றேன் எனச் சொன்னேன். பொழுதும் விடியத் தொடங்கியிருந்தது. யன்னலுக்குள்ளால் வெளியே பார்த்தபொழுது யாரோ சிலர் தெருவை கூட்டத் தொடங்கியிருந்தனர்.

பயணத்தின் அழகு என்பதே எதிர்பாராத் தருணங்களில்தான் வெளிப்படுகின்றது. இப்படியாக ஓரிரவு நெருக்கமானதாவும், மனம்விட்டுப் பேசக்கூடியதாகவும் மாறிப்போனது மகிழ்ச்சியாக இருந்தது.

பயணக்குறிப்புகள் - 05 (India)

Monday, March 23, 2015

-பரதேசியின் கனவு

கொச்சினில் Paradesi Synagogue என்கின்ற ஓரிடம் இருக்கின்றது. அங்கே பல்வேறு வரலாற்றுப்புகழ் பெற்ற இடங்களும் சம்பவங்களும் புதைந்து இருக்கின்றன. அத்துடன் cobbleகற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தல்களையும், விற்பனை செய்வதையும் செய்கின்றனர். நானுமொரு பரதேசி ஆனபடியால் எனக்கு அந்தத் தெருக்களில் நடந்து திரிவது பரவசமான நிலையைத் தந்துகொண்டிருந்தது. ஒருவகையில் கனடாவின் Old Montreal ஐ இது நினைவுபடுத்தியது. அதுவும் கிட்டத்தட்ட இதேமாதிரித்தான், கலரிகளால் நிரம்பியிருக்கும். ஒவ்வொரு கலரிக்கும் உள்ளே போய்விட்டு வரவே நிறைய நேரம் எடுக்கும் என்பதோடு பல்வேறு வகைப் பாணியிலான ஓவியங்களை அருகருகிலேயே கண்டு இரசிக்கவும் முடியும்.

கொச்சினில் சந்துகளில் சுவரோவியங்களை (murals)   இளைஞர்களும், யுவதிகளும் சேர்ந்து உற்சாகமாக வரைவதைப் பார்த்தேன். ஓவியக்கூடங்களில் முன்வாசலில் இருந்து மகிழ்ச்சியாக பலர் கதைத்துக்கொண்டிருந்தார்கள். செதுக்கப்பட்ட சிற்பங்கள் விற்கப்பட்ட கடைகளில் நின்ற பெண்கள் கூட ஒருவகையில் அசைகின்ற கலைப்பொருட்கள் போலவே தென்பட்டனர். புத்தர் சிலைகளை விற்றுக்கொண்டிருந்த ஒருகடையில் நின்றவரைப் பார்த்தபோது "விழிமூடிப் பிரார்த்திக்கும் அழகில்/ துளித்துளியாய்ப் புத்தரின் சாந்தத்தை / மனதிற்குள் இறக்குபவள் நீயல்லவா' என்று எப்போதோ எழுதிய கவிதையொன்றுதான் ஞாபகத்திற்கு வந்தது. அப்படி பொழுதை அழகாக்கிக்கொண்டிருந்தவர்க்கு நன்றி செலுத்தும் விதமான சிற்பமெதுவும் வாங்கமுடியவில்லையென்றாலும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை வாங்கி என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஒரு கண்காட்சியறையில், பல்வேறுபட்ட கலைஞர்களை அவர்களின் சிறுவயது ஊர்கள்/வீடுகளுக்கு அழைத்துச்சென்று படமெடுத்து அவர்களின் நினைவுகளின் வரிகளோடு சில புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிலெனக்கு இருவர் தமது கடந்தகால நினைவுகளைக் கூறியிருந்தது பிடித்தமாயிருந்தன.

எழுத்தாளரான தான்யா ஆபிரகாம், தான் வாழ்ந்த வீட்டைப் பற்றிச் சொல்லும்போது, 'இது ஒரு வரலாற்று வீடு. எனது முன்னோர்கள் நடந்து திரிந்த வீடு, பெற்றோர்கள் (எங்களை) நேசித்த, சகோதரகள் நடனமாடித் திரிந்த வீடு. அவர்கள் அப்படிச் செய்யும்போது, நான் ஒரு மெளனமான இடமாக இதைப் பாவித்துக்கொண்டேன். அங்கே சூரியஒளி ஊடுருவ, தூண்கள் உறைந்திருந்தன. அவற்றோடு சேர்த்து நான் கனவு கண்டேன்.. எப்படி வாழ்வது, சிரிப்பது, நேசிப்பது என்பது பற்றி....இந்தக் கணத்தைப் போல, இப்போதும் எப்போதும்' என்கின்றார்.

ஓடுகளால் வேய்ந்திருந்த அந்த நாற்சார வீட்டில், சூரிய ஒளி ஊடுருவ நிலம் பார்த்து சுருள் சுருளான தலைமயிரோடு தான்யா உட்கார்ந்திருந்த புகைப்படத்தில் நானும் ஒரு நிழலாகி அவரருகில் நிற்பது போன்ற பிரமையே எனக்கு ஏற்பட்டிருந்தது. சிலவேளை சாதாரண ஒரு புகைப்படமாய் தாண்டிப்போயிருக்கக்கூடிய சாத்தியமுள்ள இதை, தான்யாவின் வார்த்தைகள் இன்னும் ஆழமாய் ஊடுருவிச்செல்ல, எழுத்துக்கு இருக்கும் இடம் புரிந்தது.

இவ்வாறு சுவாரசியமான பலரின் புகைப்படங்கள் இருந்தன. சிறுவயதிலிருந்தே மோகினியாட்டம் ஆடுபவர், வீட்டு மரமொன்றின் கதை சொன்ன (அவர் அம்மரத்தின் மேல் ஏறி நின்றே புகைப்படம் எடுத்திருந்தார்) இன்னொருவர் என பல்வகைப்பட்டவர்களின் புகைப்படங்களும், அவை பெருக்கும் நினைவுகளும்.

என்னைக் கவர்ந்த இன்னொரு புகைப்படம் எழுத்தாளரும் கார்ட்டுனீஸ்டுமான பொனி தோமஸ் கல்லறைக்குள் நின்று எடுத்த புகைப்படம். அது என்னைக் கவர்ந்ததற்கு, அவர் மார்குவெஸ்ஸின் தீவிர இரசிகர் என்பதும் ஒரு காரணம். இதில் அவர் மார்குவெஸ்ஸின் நாவலில் நடந்தது எப்படி தனது தீவான ஊரில் நிஜமாக நடந்தது என்பது பற்றிக் கூறுகின்றார்.
மார்குவெஸ்ஸின் Of Love and Other Demons நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும் அதில் வரும் சிறுமியிற்கு மனப்பிறழ்வு இல்லாமலே பல்வேறு கொடும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு எப்படி கஷ்டப்படுத்தப்படுகின்றார் என்றும், இறுதியில் தேவாலயமொன்றில் சிகிச்சை அளிக்கப்படும்போது அங்கிருக்கும் இளம் பாதிரியார் ஒருவருக்கு இப்பிள்ளை மீது மெல்லிய காதல் வருகின்றது என்பது பற்றியும். தேவாலயத்தில் அளிக்கப்படும் 'சாத்தனை விரட்டும்' சிகிச்சையில் ஏற்கனவே பலர் இறந்திருந்தாலும், இப்பிள்ளையும் அச்சிகிச்சையின் மூலம் இறக்கவே போகின்றார் என்று வாசிக்கும் நாம் நினைக்கும்போது, சிகிச்சை நாளுக்கு முன்பாகவே அவர் தலைமயிர் அறுக்கப்பட்டு தூக்கத்தின்போது இறந்திருப்பார். அது இயற்கையான இறப்பா அல்லது கொலையா என்று சந்தேகம் வரும்படியாக மார்க்குவெஸ் எழுதியிருப்பார். ஆனால் அந்தப்பிள்ளை இறந்தபின்னும், அவருக்கு தலைமயிர் வளர்ந்துகொண்டிருப்பதாய், இன்னும் இறக்கவில்லை போன்று ஒருவித மாயயதார்த்ததில் நாவல் எழுதப்பட்டிருக்கும்.

அது போலவே பொனி தோமஸ் தனது தீவிலும் நிலக்கிழாரின் மகளொருவர் இளம்வயதில் இறந்ததாகவும், மிகுந்த தாராளமனதுடைய அந்தப் பிள்ளையின் மரணம் ஊர் மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், பிறகு தற்செயலாக அவரின் இறந்த உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காய் தோண்டியபோது, அந்தப் பிள்ளையின் உடல் பழுதாகாமல் அப்படியேயிருந்ததாகவும், அவருக்கு தலைமயிர் முளைத்திருப்பதைக் கண்டதாகவும் ஒரு 'செய்தி' தீயாக எங்கும் பரவியதாகக் கூறுகின்றார்.

தனது ஊரில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொனி தோமஸ், பின்னர் 95ல் மார்குவெஸின் Of Love and Other Demons நாவலை வாசிக்கும்போது, கொலம்பியா என்னும் உலகின் இன்னொரு மூலையிலிருந்து மாந்தீரிக யதார்த்தம் என்ற மைதொட்டு எழுதிய மார்கவெஸ்ஸின் கதை உலகின் மறுபக்கத்தில் ஒரு தீவில் நடந்த நிகழ்வாக இருந்திருக்கின்றதே என வியக்கின்றார். எழுத்து என்பதன்  அழகும், ஆழமும் இதுவன்றோ.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மனதை விரிக்கத் தொடங்கியபோது, இவர்களுக்கெல்லாம் எப்போது விரும்பினாலும் திரும்பக்கூடிய ஓரு வீடிருக்கிறதே. எனக்கு நான் சிறுவயதுகளில் வளர்ந்த வீடு முற்றாக அழிவுற்று, மரங்கள் வீட்டின் அத்திவாரங்களுக்கு மேலாய் வளர்ந்து ஒரு ஞாபகமாக மட்டுமே எஞ்சியிருக்கின்றது என்ற சிறுதுயர் எட்டிப்பார்த்தது.

அது சில கணங்கள் மட்டுமே. நாமெல்லாம் பரதேசிகள்; பிறரின் வாழ்வில், கலையில் நமது விம்பங்களைப் பார்த்து மனம் நெகிழ்பவர்கள் அல்லவா? மேலும், அலைந்துகொண்டிருக்கும் வாழ்வென்பது எல்லோருக்கும் வாய்ப்பதுமில்லைத்தானே.

பயணக்குறிப்புகள் - 04 (Cuba)

Wednesday, March 18, 2015

ஒரு குதிரை 'வீரனின்' அவலக்கதை

Holguin லில் (Cuba) சைக்கிளில் சுற்றிக்கொண்டு திரிந்தபோது ஓர் உள்ளூர்க்காரரைச் சந்தித்தோம். அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிகார், ரம்மிலிருந்து, விரும்பினால் எங்களுக்கு கடலுணவுடன் விருந்தும் அளிக்கத் தயாரெனச் சொன்னார். உங்கள் வீட்டுக்கு  எங்களை அழைத்து வந்ததற்கு நன்றி, இப்போதைக்கு மலையிலுள்ள -முன்பு பூர்வீகக்குடிகள் வசித்த- குகைகளை மட்டும் பார்க்க இன்னொரு பொழுது வருவதாகச் சொல்லி விடைபெற்றுக்கொண்டோம்.

மாலைப் பொழுதொன்றில், மலையேறிப் பார்ப்பதற்காய் இரண்டு குதிரைகளோடு அவர் தயாராக இருந்தார். என்னோடு கூடவே திரிந்த நண்பர் ஒரு ஐரோப்பாக்காரர். இந்த நாட்டுக்கு அவர் வந்ததும் இதுவே முதன்முறை. கியூபாவிற்கு சிலமுறை ஏலவே பயணித்தவன் என்ற மிதப்போடு, குதிரையிலேறி ஏற்கனவே நீர்வீழ்ச்சியிற்குப் போனவன் என்றும் என் அனுபவத்தையும் சேர்த்து உயர்வுநவிற்சியுடன் எடுத்து விட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் ஐரோப்பாக்காரர் என்றபோதும், இதுவரையில் குதிரையில் ஏறவில்லை என்று அவர் சொன்னபோது எனக்குச் சற்று ஆச்சரியமாயிருந்தது. 'ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாக எதையாவது அறிவேண்டும், அப்போதுதான் அது நினைவில் மறவாதிருக்கும், உங்களுக்கு இம்முறை குதிரைப்பயணம்' என்று அவரிடம் சொன்னேன்.

இரண்டு குதிரைகளோடு எங்களுக்காய்க் காத்துக்கொண்டிருந்த உள்ளூர்க்காரர் ஒரு சைக்கிளோடு வந்திருந்தார். குதிரைகளும் மலையேற்றத்திற்கு பழகிய மாதிரி தெரியவில்லை. எங்கையோ மேய்ந்துகொண்டிருந்த குதிரைகளை இழுத்துக்கொண்டு வந்தமாதிரி இருந்தது. எங்கள் ஊர்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைப்போல, இங்கே குதிரைகள் அலைந்துகொண்டிருப்பதை எங்கும் காணலாம்.

ரிஸ்க் எடுப்பதெல்லாம், எனக்கு தேத்தண்ணியில் பணிஸைத் தோய்த்துச் சாப்பிடுவதைப் போல என்பதால் இவை எது குறித்தும் அச்சப்படாமல் குதிரையேற்றத்திற்குத் தயாரானேன். நானேறிய குதிரையோ ஒரு முரட்டுக்குதிரை. அது முன்னே போனதை விட, திரும்பிப் போன தூரந்தான் அதிகம். உள்ளூர்க்காரரோ சிறு தடி ஒன்றை முறித்துத்தந்து 'இப்படிப் பின்னால் தட்டு, குதிரை தன்பாட்டில் முன்னே போகும்' என்றார். முரண்டுபிடிக்கும் குதிரையிற்கு சற்றுப் பலமாகத் தட்டவும் பயமாயிருந்தது, அது கோபத்தில் வேகமெடுத்தால் என் நிலைதான் என்னாவது?

கரடுமுரடான சரளைக்கற்கள் பாவியிருந்த ஒழுங்கைகளில் போய்க்கொண்டிருந்தபோது, குதிரையிலேறி போர் பிடித்தவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டேன். எனக்கென்றால் உயிரே போகின்றமாதிரி உடலின் பின்பாகங்கள் வலித்தன. இப்படியான ஒரு பாதையில் போய் யுத்தம் செய்யவேண்டும் என எனக்கு ஒரு நிலை வந்திருந்தால், யுத்தகளத்திற்குப் போகமுன்னரே  நான் உடல்வலியில் இறந்துபோயிருப்பேன் என நினைத்துக்கொண்டேன். என் எண்ணங்கள் வேகமெடுத்தாலும் எனது குதிரை செல்லவேண்டிய பாதையை விட்டு விலகி அடிக்கடி குச்சொழுங்கைகளுக்குள் போகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளூர்க்காரர் 'கா-பாயோ கா-பாயோ என்று கூறு, அது சொல்வழி கேட்கும்' என்றார். நான் மெல்லிய குரலிலிருந்து கடும்குரல் வரை கத்திப் பார்த்தேன். அது கேட்பதாய்க் காணோம்.

இந்தக் குதிரையிற்கு ஊர்முழுக்கத் தெரிந்தவர்கள் போலும். எல்லோர் வீட்டின் முன்னாலும் நின்று நின்று ஓய்வெடுத்துச் சுகம் விசாரித்துக் கொண்டிருந்தது.
எனக்கு வந்த விசருக்கு, ஒருக்காய் பின்பக்கம் இறுக்கித் தட்டி 'கா-பாயோ' என்றேன். அவ்வளவுதான். அது காற்றைப் போல ஓடத்தொடங்கியது. ஆனால் நாம் போக வேண்டிய பாதையில் அல்ல. நாலைந்து வீடுகள் பக்கம் பக்கமாய்க் கட்டப்பட்டிருந்த குச்சொழுங்கை ஒன்றிற்குள்ளால்.

வீட்டுச் சனம் எல்லாம் சிரிக்கிறதுகள். இதைவிட எனக்கு அவமானம் என்னவென்றால், நான் இந்த ஐரோப்பாக்கார நண்பருக்கு ஏற்கனவே குதிரையில் போன வீரன் எனக் கதை சொல்லியிருந்தேன். அந்த நண்பரின் முன்னும் தலைகுனிய வேண்டியிருக்கிறதே என்று. குதிரையிடம் 'கா-பாயோ' என்று அதட்டுவதை விட்டுவிட்டு, நான் மனசுக்குள் மானசீகமாய் 'என்ரை குஞ்சல்லோ, என்னை அவமானப்படுத்துகிறதென்றால் தனியே வைத்து அவமானப்படுத்து, ஆனால் இப்படி பப்ளிக்கில் வைத்து செய்யாதே' எனக் கெஞ்சினேன். அது எங்கே கேட்டால்தானே. ஏதோ தன் காதலியை யாரோ நாலைந்து வீட்டுக்கு அப்பால் சிறைவைத்தது மாதிரியும், அவரை விடுதலை செய்கின்ற பாவனையிலும் அல்லவா ஓடியது.

நான் இனி குதிரையை நம்பி எதுவும் நடவாது என்று கையில் அகப்பட்ட மரத்தைக் கட்டிப்பிடிக்கப் பார்த்தேன். ஆனால் குதிரை இன்னும் வேகமாய் ஓடியது. ஒன்று நான் மரத்தில் தொங்கவேண்டும். இல்லை குதிரையோடு சேர்ந்து அள்ளுப்பட்டுப் போகவேண்டும் என்ற நிலை. கடைசியாய் ஒரு வீட்டின் பின்வளவில் கட்டியிருந்த இன்னொரு குதிரையைக் கண்டுதான் ஓட்டத்தை நிறுத்தியது. சரி, காதலிக்கு 'ஹாய்' தான் கூறிவிட்டாய், திரும்பலாம்தானே என்றால் அதுதான் இல்லை. கிட்டப்போய் கொஞ்சிக்கொண்டு விட்டுவரமாட்டேன் என் முரண்டு பிடித்து நின்றது.

பிறகு ஒருமாதிரி அந்த வீட்டில் நின்ற ஒருபெண்தான் சிரித்தபடி ஸ்பானிஸில் கதைத்தபடி குதிரையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து ஒழுங்கையிற்குள் விட்டுவிட்டார். குதிரை இப்படிச் செய்துவிட்டதில் கோபமிருந்தாலும், சிலவேளை குதிரை இந்த அழகான பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தத்தான் இப்படி தெறிகெட்டு ஓடியிருக்கிறது என நினைத்து அதை மன்னித்தும் விட்டேன்.

ஒழுங்கையிற்கு வந்து பார்த்தால், உள்ளூர்க்காரரும், நண்பரும் சிரித்துக்கொண்டு நிற்கின்றார்கள். நான் இனி இந்தக்குதிரையோடு மலையேறப்போவதில்லை, திரும்பிப் போகப்போகின்றேன் என்று அறுதியும் உறுதியுமாய்க் கூறிவிட்டேன். நண்பர்தான், வேண்டுமெனில் குதிரையை மாற்றிக் கொஞ்சதூரம் வந்துபார், ஆகக்கஷ்டமென்றால் திரும்பிப்போய்விடுவோம் என்றார்.

நான் நண்பரிடம் நீங்கள் முதல் தடவைதான் குதிரையில் ஏறுகின்றீர்கள் என்கின்றீர்கள். ஆனால் நிதானமாய்க் குதிரையை ஓட்டமுடிகிறதே, எப்படி என்றேன். அவர் தான் நிறைய படங்களில் குதிரையேற்றத்தைப் பார்த்திருக்கின்றேன்; அதை இங்கே பிரயோகித்துப் பார்த்தேன் என்றார். நானுந்தான் நிறையக் குதிரைகளை ரீவியில் பார்த்திருக்கின்றேனே, ஏன் எதையும் கற்கவில்லை என யோசித்தேன். பிறகுதான் குதிரையைவிட குதிரையில் போகும் பெண்களைத்தான் உற்றுப் பார்த்திருக்கின்றேன் என்ற உண்மை உறைத்தது.

இப்படியே எங்களோடு மலையேறினால் அடுத்தநாள்தான் போய்ச்சேர முடியும் என்பதாலோ என்னவோ, உள்ளூர்க்காரர் இன்னொரு வயதுபோன ஐயாவையும் எங்களுடன் கூட வரச்சொன்னார். அவர் தன் குதிரையில் எங்களோடு வர, பிறகு குதிரைச்சவாரி எளிதாகப் போனது. 'கஷ்டப்பட்டு' குதிரையேற்றம் செய்த எங்களுக்கு அந்த ஐயா இளநீரும் வெட்டித்தநதார்.
இவ்வாறாக நான் மீண்டுமொரு 'வெற்றி' பெற்ற குதிரை வீரனானேன்.

பயணக்குறிப்புகள் - 03 (India)

Monday, March 16, 2015

சூட்டிங் பார்க்கப்போன கதை

சென்னையை நானும் இன்னொரு நண்பருமாய் பஸ்சில் சுற்றிக்கொண்டிருந்தோம். சென்னையில் பார்க்கவேண்டிய இடங்களென பயணிப்பவர்க்கெனக் குறிப்பிட்ட சில கோயில்களைப் பார்ப்பதே எங்கள் நோக்கமாய் இருந்தது. நண்பர் திருத்தணிகைக்காரர், சினிமாத் துறையில் இருப்பவர். சில வருடங்களுக்கு முன் சினிமாத் துறையில் தீவிரமாய் இருந்து, இடையில் தங்கை/தம்பிகளின் பொருட்டு ஊர் திரும்பி உழைத்து அவர்களைக் 'கரையேற்றி'விட்டு இப்போது மீண்டும் சினிமாவில் முழுமூச்சில் இயங்க வந்திருப்பவர். நாங்கள் திருவல்லிக்கேணியில் நின்றபோது எங்களுக்குப் பொதுவான இன்னொரு நண்பர் தரமணியில் சூட்டிங்கொன்று நடக்கிறது, அங்கே வாருங்களெனச் சொன்னார்.

என்னோடு இருந்த நண்பர் சினிமாத்துறையிலிருந்தாலும், சென்னையைக் கரைத்துக் குடித்தவரல்ல. தரமணிக்குப் போவதற்காய் பஸ்களை மாறி மாறியேறி ஏறிப் பார்த்தோம். இப்படி தவறாகத் திசை தொலைந்து போய்க்கொண்டிருந்ததிலும் ஒரு நன்மை விளைந்திருந்தது. ஏதோ ஓரிடத்தில் நின்றபோது நிறையப் பொலிஸ்காரர்கள் நின்று வீதியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு முக்கிய இடம்போலும். போக்குவரத்து நிறுத்தப்பட்டு சில கார்கள் சட்டென்று விரைந்துபோக, அதில் ஒன்றில் -கண்ணாடி கீழிறக்கப்பட்ட காரில் - பன்னீர்செல்வம் போய்க்கொண்டிருந்தார். தமிழக முதல்வரை இப்படி எளிதாய்ப் பார்த்துவிட்டேன், இன்னும் 'மக்களின் முதல்வரை'த்தான் பார்க்க முடியவில்லையே என நினைத்துக்கொண்டேன். மக்களோடு மக்களாய் கரைந்து நிற்பதால் காணமுடியவில்லைப் போலும்.

சென்னை வந்த புதிதில் சுவர்களை மேய்ந்துகொண்டு திரிந்தபோது இன்னொரு நண்பரிடம் இப்படி ஜெயலலிதாவைப் பற்றி அனைத்து இடங்களிலும் பதிவு செய்து வைத்திருக்கின்றனரே, சும்மா ஒரு முதல்வர் என்பதற்காகவேனும் பன்னீர்செல்வத்தின் பெயரையோ படத்தையோ எங்கும் காணவில்லையே என்றேன். நண்பரோ சிரித்துக்கொண்டு அப்படி ஒருவன் சுவரில் எழுதினான் என்றால் ஒழுங்காய் இருந்துவிடமுடியுமா? என்றார். அம்மா, உணவகத்தையும், டாஸ்மாக்கையும் ஒழுங்காய் நடத்தி மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு எதற்கு அவசியமில்லாக் கேள்விகள் என்று அத்தோடு 'அரசியல்' பேசுவதைத் தவிர்த்துவிட்டேன்.

பஸ்சில் இப்படி மாறி மாறி ஏறித்தொலைந்தால் அடுத்தநாள்தான் தரமணிக்குப் போய்ச் சேரமுடியும் என்பது எங்கள் இருவருக்கும் விளங்கியதால், ரெயினெடுத்து தரமணிக்குப் போனோம். தரமணியில் நின்று, மற்ற நண்பரை அழைத்தால், அங்கேயில்லை இந்திராநகருக்கு அருகில் ஷூட்டிங் நடக்கிறதென்றார். இப்படியே அலைந்தால், இனி அப்படியே கனடாவுக்குப் பிளைட் எடுக்கவேண்டியதுதான் என்று நினைத்தேன். என்றாலும் தரமணியைப் பார்த்தவுடன், இந்தப் பெயரில்தானே நமது அன்ட்ரியா படமொன்றில் நடிக்கிறார் என்பது நினைவுவர அன்ட்ரியா இந்தப் பக்கம் படப்பிடிப்பிற்கு வருவாரா, காத்திருப்போமா என்றேன். நண்பரோ திசை தொலைத்த குழப்பத்தில், தண்டவாளத்தில் தலையை வை என்றால் கூட செய்கின்றேன், ஆனால் இங்கேயெல்லாம் ஆன்ட்ரியாவிற்காய்க் காத்திருக்கமுடியாதென இந்திரா நகருக்கு இழுத்துச் சென்றுவிட்டார். அப்படி அங்கே ரெயினிலிருந்து இறங்கி நடந்துகொண்டிருந்தபோது ரோஜா முத்தையா நூலகம் இருப்பதையும் கண்டேன்.

ஒருமாதிரியாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கண்டுபிடித்து யுரேகா யுரேகா என்று கத்தாத குறைதான். எங்களின் மற்ற நண்பர் சூட்டிங் நடந்துகொண்டிருக்கும் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இன்னுஞ்சிலரை அறிமுகப்படுத்தினார். தம்பி ராமையா மாலை நேர படப்பிடிப்பிற்காய் தயாராகிக்கொண்டிருந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு இடத்தைக் கண்டுபிடித்ததற்காய், நண்பர் production ஆட்களிடமிருந்து தேநீரும் வாங்கித் தந்து களைப்பையும் போக்கினார்.

நாயகனுக்கும் நாயகியிற்கும் ஏதோ ஆலமரக் காட்சி. நாயகன் கொஞ்சம் பேசி கோபித்துவிட்டுப் போவதைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். பாடசாலை முடிந்துபோன மாணவர்கள் உற்சாகமாய் நின்று இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடைவெளியில் நடிக்கும் நாயகனோடு புகைப்படங்களும் அவர்கள் எடுக்க, சூரியன் மறைவதற்குள் காட்சிகளை எடுத்து முடிக்கவேண்டுமென பரபரப்போடு எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது காலசுப்பிரமணியமும், சரவணனும் தெருவில் நடந்துபோய்க்கொண்டிருப்பதையும் பார்த்தேன் அவர்களுக்கு வணக்கம் சொல்ல விருப்பமிருந்தபோதும், தன்னைப் பார்க்காது உனக்கு என்ன உருப்படாத இலக்கியப்பேச்சு என நாயகி கோபித்து விடப்போகின்றாரோ என்ற அச்சத்தில் அமைதியாகிவிட்டேன்.

நாயகன் பெயரைச் சொன்னபோது, அவரைக் கேள்விப்பட்டிருந்தாலும் என்ன படத்தில் நடித்திருக்கின்றாரென மறந்துவிட்டேனென நண்பர்களிடம் கூறியபோது 'மைனா'வை நினைவுபடுத்தினர். நாயகியையும் எங்கேயோ பார்த்திருக்கின்றேனே யாரவர் எனக் கேட்பதற்குள் கூட்டத்தில் நின்ற ஒரு நடமாடும் விக்கிபீடியா, இவர் பேராண்மையில் ஐந்து நாயகிகளில் ஒருவர், பரதேசியில் இரண்டு நாயகிகளில் ஒருவர், அரவானில் இவரே தனித்த நாயகி' என பக்கத்தில் நின்ற யாருக்கோ சொல்லி எனக்கும் கூடவே அறிவூட்டினார். இவரைப் பார்க்க சின்னப்பிள்ளை மாதிரி இருக்கிறார், என்ன இவருக்கு ஒரு பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்குமா என்றேன். நண்பரோ இல்லை இருபத்தைந்தளவு இருக்கும் என்றார். அவர் பாவாடை சட்டையில் இருந்ததாலும், ஆலமரத்தைச் சுற்றி சூட்டிங் நடந்ததாலும் எனக்கு 'ஆத்தங்கரை மரமே' நினைவு வந்ததாலும் மிக இளமையாகத் தோன்றியதோ தெரியாது.

நாயகனோடு எல்லோரும் விழுந்து விழுந்து படம் எடுத்துக்கொண்டிருந்தனர். யாரோ ஒரு பையன் ரேஸிங் பைக் ஒன்றைக் கொண்டு வந்து நாயகனை ஓட்டச்சொல்லி பின்னால் அமர்ந்து இமயமலையைத் தொட்டுவிட்ட குதூகலத்தோடு போய்க்கொண்டிருந்தான். ஆனால் ஒருவரும் நாயகியின் பக்கம் நகர்வதாயில்லை. என்னதான் இருந்தாலும் தமிழனுக்கு இவ்வளவு வெட்கம் வேலைக்கு ஆகாது என நினைத்து, நண்பரிடம் நாயகியிடம் என்னை அறிமுகப்படுத்திவிடுங்கள் எனக் கேட்டேன்.

நண்பர் என்னை நாயகியின் அருகில் கூட்டிச்சென்று, இவர் ....., கனடாவிலிருந்து வந்திருக்கின்றார் என்றார். நான் கொஞ்சம் திருத்தி, கனடாவிலிருந்து உங்களைப் பார்ப்பதற்காய்தான் இங்கே (படப்பிடிப்பிற்கு) வந்திருக்கின்றேன் என்றேன். பிறகு கொஞ்சநேரம் அரவானில் இப்படி நடித்திருந்தீர்கள், பரதேசியில் அப்படி அசத்தினீர்கள் எனச் சிலாகிக்கத் தொடங்கினேன்ன். பக்கத்திலிருந்த நண்பர், அட பரதேசியே, இப்போது அரை மணித்தியாலம் முன்னர்தானே இந்த நாயகி எந்தப் படங்களில் நடித்ததென்றே தெரியாமல் இருந்தாய், இப்படிப் படங்காட்டுகின்றாயே என வியந்திருப்பார். அதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் நமது 'சுயமரியாதையிற்கு' ஆகாது என்று நான் 'பொளந்து' கட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நாயகி, உங்களுக்குப் பிடித்த நாயகி யார் எனக் கேட்டார் (கவனிக்க: நாயகி நன்கு தமிழ் பேசுபவர்). எனக்கு, இந்தக்கணத்தில் பிடித்தவர் நீங்கள்தான் எனச் சொல்லப் பிரியப்பட்டாலும், அஸின் என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன்.

அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் என்னோடு அவ்வளவாய் முகங்கொடுத்துப் பேசவில்லை. அவரோடு புகைப்படம் எடுக்க விரும்பினாலும், ஏன் போய் அஸினோடு எடுக்கவேண்டியதுதானே? என அவர் சூடாய்க் கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் அதற்கும் பின்வாங்கிவிட்டேன்.

சரி, அன்பான நாயகியே, நான் உங்களுக்காய் விழித்து இருந்து நிச்சயம் இப்படம் வெளிவரும்போது பார்த்துவிடுகின்றேன். கோபிக்கவேண்டாம், சிரியுங்கள்; அதுவல்லவா உங்களுக்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

(பி.கு: இதில் எவை நடந்தன/நடக்கவில்லை என்பதை நாயகியோடு பேசும்போதிருந்த நண்பர் மட்டுமே அறிவார். மற்றது, இந்தப் படத்தின் இயக்குநருக்கு நன்றியும் கூறவேண்டும். நான் சென்னையை விட்டு பிற இடங்களுக்குப் போனபோது அவரது பிளாட்ஸிலேயே எனது luggagesஐ வைத்திருந்தேன். இடந்தந்து உதவியமைக்காய்)

எஸ்.பொ என்னும் 'காலமாகாத' ஆளுமை

Sunday, March 01, 2015

2011ல் கனடாவில் இயல்விருது வழங்கும் விழா. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரையிற்கு வழங்கப்படுகின்றது.  எந்த சபை மீதிருக்கின்றேன் என்ற எவ்வித அக்கறையுமில்லாது எஸ்.பொ உரையாற்றுகிறார். அறிஞர் குழாம் என அழைக்கப்படும் குழுவிற்கு அவ்வளவு பிடிக்காத ஒருவகையான பேச்சு. ஆனால் அதுதான் எஸ்.பொவின் தனித்துவம். அந்த தனித்துவமே அவரை ஓய்வு உளைச்சலின்றி தமிழ் ஊழியத்திற்காய் காலமாகும்வரை இயங்க வைத்திருக்கின்றது.

எஸ்.பொவின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சிலகுறிப்புகளுமே' என் வாசிப்பின் திசையை மாற்றியதென அடிக்கடி நினைப்பதுண்டு. 'ஆண்மை' தொகுப்பில் பதினைந்தாவது கதையான 'மித்தி'யை அவ்வளவு எளிதாய் எவரும் கடந்துபோய்விடவும் முடியாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இளம்வயதில் மரணித்துப்போன தன் மகன் மித்ரவுடன் எஸ்.பொ நிகழ்த்தும் அந்தரங்கமான உரையாடலே அந்தக் கதை.  'ஆண்மை'யிலிருந்து எஸ்.பொவை வாசிக்கத் தொடங்கிய நான் பின்னர்  'தீ'யும், 'சடங்கும்' வாசிக்கத் தொடங்கியபோது எஸ்.பொ  இன்னும் என்னை வசீகரித்திருக்கின்றார். ஈழத்தமிழருக்குள்ளிருந்தும் இவ்வகையான புதுவகை மொழியாடலோடும், பாலியலை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மையும் வியப்பைத் தந்திருக்கின்றது.

ஈழப்படைப்பாளிகளில்,  இளமையிலிருந்து காலமாகும்வரை தொடர்ச்சியாக இயங்கிய படைப்பாளிகள் எத்தனைபேரென்று பார்த்தால் கையை விரித்தே எண்ணி முடித்துவிடலாம். அதிலும் ஈழத்தில் இருந்து எழுதிவிட்டு,  புலம்பெயர்ந்தபின்னும் படைப்பின் மொழியை இழக்காமல் இருந்தவர்கள் என்று பார்த்தால் இன்னும் அரிதானவர்களே எஞ்சுவர்.  எஸ்.பொ அந்த அரிதான வகையைச் சேர்ந்தவர். ஆகவேதான் ஈழத்திலிருந்தபோது 'தீ'யும் 'சடங்கும்' 'வீ'யும், '?'யும் எழுதிய அவரால, புலம்பெயர்ந்து வந்தபின்னும் 'ஆண்மை'யும், 'நனவிடைதோய்தலும்', வ'ரலாற்றில் வாழ்தலை'யும் எழுத முடிந்திருக்கின்றது.

ஈழத்தில் இருந்தபோது எப்படி முற்போக்கு இலக்கியவாதிகளோடு முரண்பட்டு தனக்குச் சரியென நினைப்பதிலும் எந்தச் சபையென்றாலும் உரத்துச் சொன்னாரோ, அதேபோன்று புலம்பெயர்ந்தபின் சர்ச்சைக்குரிய 'புத்தாயிரத்தில் (2000ல்) புலம்பெயர்ந்தோரே தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்குவார்' எனவும் கிடைத்த எல்லாத்தளங்களிலும் சொல்லவும் செய்தார். ஆனால் எவ்வாறு எஸ்.பொ ஒருகாலத்தில் முன்வைத்த 'நற்போக்கு இலக்கியம்' பின்னாளில் தன்னியல்பில் காலவதியாகிப் போனதோ, அவ்வாறே 'புலம்பெயர்ந்தோர் தலைமை தாங்குவார்' என்பதும் தன்னியல்பில் உதிர்ந்துபோனது. ஆனால் அதேசமயம்  ஈழ/புலம்பெயர் படைப்புக்கள் பற்றி தமிழகத்தில் ஒற்றைப்படையாக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தனியாளாக நின்று சலிப்பின்றிப் பதில் கொடுத்துமிருக்கின்றார்.

எஸ்பொ நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என ஒவ்வொரு தளத்திலும் தன் சுவடுகளை ஆழமாகப் பதித்தவர். இவ்வளவிற்கப்பாலும் ஒரு பெரும் வாசிப்பாளராக இருந்தார். அதுமட்டுமின்றி 'மித்ர' பதிப்பகத்தை தன் மகன்களோடு சேர்ந்து தொடங்கி நூற்றுக்கணக்கான ஈழ/புலம்பெயர் படைப்பாளிகளின் நூற்களை வெளியிட்டுமிருக்கின்றார்.   எஸ்.பொ, இந்திரா பார்த்தசாரதியுடன் இணைந்து 94ல் வெளியிட்ட புலம்பெயர் படைப்புக்களின் தொகுப்பான 'பனியும் பனையும்' முக்கியமானதொரு நூல். புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஒரு குறுக்குவெட்டான பார்வையை இதை வாசிக்கும் எவரும் கண்டுணர முடியும்.

தன்னைத்தானே விமர்சிக்காத , உரசிப்பார்க்காத எந்தப் படைப்பாளியும் அவ்வளவு எளிதில் முன்னே நகர்ந்து போய்விடமுடியாதென்பதற்கிணங்க, எஸ்.பொ 'சடங்கு' நாவலில் தன்னையோ ஒரு பாத்திரமாய் -பட்டதாரி ஆசிரியராயிருந்தாலும்- குடிகாரனாயும், சாறம் அணிந்து கொண்டு ரெயினில் வருகின்ற ஒருவராகவும் சித்தரிக்கின்றார். அவரின் நாடகமான 'முறுவலில்' விசுவாமித்திரையும் மேனகையையும் பாத்திரமாய்க் கொண்டு அவர்களின் உறவை வர்ணித்துவிட்டு, மூன்றாம் குரலாய் 'சீச்சி...என்ன எல்லாம் ஓரே ஆபாசமாய்க் கிடக்குது. எஸ்.பொ. எழுதினால் இப்படித்தான்' என்றும் தன்னையே எள்ளல் செய்துகொண்டும் போகின்றார்.

எஸ்.பொ எழுத்தாளுமையை வியக்கின்ற அதேசமயம், அவரால் ஏன் இறுதிவரை கைலாசபதி, சிவத்தம்பி மீதான கோபங்களை கைவிடமுடியாதிருந்தது என்பதும் சற்று வியப்பானது. இத்தனைக்கும் எஸ்.பொ தன்னை எவரும் உதாசீனம் செய்துவிடாத ஒரு நிலையை இலக்கிய உலகில் அடைந்தபிறகும், தன்னைப்போன்றே விமர்சனத்துறையில் கைலாசபதியிற்கும், சிவத்தம்பியிற்கும் முக்கிய இடம் இருக்கிறதென்பதை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மேலும் எஸ்.பொ முன்வைத்த 'நற்போக்குவாதம்' என்பது முற்போக்குவாதத்திற்கான ஒரு எதிர்வினையாக இருந்ததேயன்றி அவர் அதை ஒரு துறையாக வளர்க்கவுமில்லை.

இந்த இடத்தில் மிகக்குறைந்த வயதில் மறைந்தபோன மு.தளையசிங்கம் முற்போக்குவாதம், நற்போக்குவாதம் என்ற இரண்டு போக்குகளையும் நிராகரித்து அவர்  மூன்றாம்போக்காய் தனது வாதத்தை 'முற்போக்கு இலக்கியம்', 'மூன்றாம் பக்கம்' என்ற நெடுங்கட்டுரைகளில் வைத்திருக்கின்றார்.  தனது நிலையை உறுதிப்படுத்த மு.த 'மெய்முதல்வாதத்தை' எழுதியிருக்கின்றார். அதை இன்னும் நீட்சித்து விரிவாக 'மெய்யுளாக'வும் எழுதிப் பார்த்திருக்கின்றார். அந்தவகையில் மு.தவோ ஒப்பிடும்போது எஸ்போ முன்வைத்த நற்போக்குவாதம் ஒரு எதிர்வினை என்பதற்கப்பால் எதையும் தனித்துவமாகக் கொண்டதில்லை. இன்னும் எளிதாகச் சொல்லப்போனால்  'முற்போக்குவாதம் - (சிவத்தம்பி+கைலாசபதி) = நற்போக்குவாதம்' எனத்தான் அவர் சொல்லியுமிருக்கின்றார்.  அதுமட்டுமின்றி முற்போக்குவாதம் நீர்த்துப்போனபோது, தான் முன்வைத்த நற்போக்குவாதத்திற்கு, அதற்குப் பிறகு ஆயுள் நீட்சிக்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை என்பதையும் எஸ்.பொவே ஒத்துக்கொண்டிருக்கின்றார்.

எஸ்.பொ அடிப்படையில் ஒரு விமர்சகரல்ல. அவர் நீண்டதூரம் பயணிக்க விரும்பியது புனைவின் வழியேதான் என்பதை அவரின் எழுத்துக்களினூடாக நாம் எளிதாக் அடையாளங்கண்டு கொள்ளமுடியும் . தவிர்க்கமுடியாத வகையில் அவர் அன்றையகாலத்தில் விமர்சகக் கோலம் பூணவேண்டியிருந்தது. ஆனால் எஸ்.பொ தனக்கு அவ்வளவு உவப்பில்லாத விமர்சனத்திற்குள் சிக்கிக்கொள்ளாது  பின்னாளில் வெளியே வந்திருக்கின்றார். அதனால்தான் அவரால் பின்னாட்களில் ஆண்மையையோ நனவிடைதோய்தலையோ எழுதமுடிந்தது. 

யாழ்ப்பாணச் சமூகத்தையே அவரது படைப்புக்கள் நிறைய பிரசவித்திருக்கின்றதென்றாலும், யாழ்ப்பாணத்தைத் தாண்டி வேறிடங்களில் வாழ்ந்த அனுபவம், தன்னையொரு மூன்றாம் மனிதராக இருந்து யாழ் சூழலைப் பார்க்க வைத்திருக்கின்றதென எஸ்.பொ கூறியிருக்கின்றார். ஈழத்துச் சூழலில் இன்னொரு முக்கிய படைப்பாளியான டானியலின் படைப்புக்களையோ அல்லது டானியலை சிறுபான்மைத்தமிழர்களின்(தலித்துக்களின்) முன்னோடியாகக் கொள்ளவோ எஸ்.பொவினால் அவ்வளவு எளிதாக முடிந்ததில்லை என்பதும் வியப்பைத் தரும் ஒரு விடயந்தான்.

எஸ்.பொ தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் எழுத்துலகிலேயே வாழ்ந்தவர். நிறைய எழுதியவர், வாசித்தவர். பல்வேறு தளங்களில் ஆழமாய் இயங்கியவர். எனவே அவரைப் பற்றி எழுதவும் ஆராயவும் நிறைய விடயங்கள் நமக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். கைலாசபதி, சிவத்தம்பி, தளையசிங்கம், எஸ்.பொ போன்ற ஆளுமைமிக்க மூத்த தலைமுறையின் இறுதி மரத்தையும் இப்போது இழந்துவிட்டோம் ஆனால் அவர்கள் தொடர்ந்துவரும் தலைமுறைக்கு வேருமாகி விழுதுமாகி முன்னே நின்று வழிகாட்டுவார்கள். என் ஆசான்களில் ஒருவராகிய எஸ்.பொவிற்கு எனது அஞ்சலி.

('அம்ருதா' - மார்கழி, 2014)