கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எழுதாமல் இருப்பதுங்கூட ஒருவகையான கலைதான்

Sunday, February 11, 2018

ஆழமான, தொடர்ச்சியான வாசிப்பு ஒரு படைப்பாளிக்கு முக்கியமானதா என்பதில் எப்போதும் சந்தேகமுண்டு. பரவலாய் வாசிக்குமொருவர் எழுதவரும்போது நல்ல படைப்பைத் தருவார் என்றும் எதிர்பார்க்கமுடியாது. சிலவேளை குறைவாக வாசிக்கும் ஒருவர் சிறந்த படைப்பை எளிதாகத் தந்துவிடமுடியும். எனெனில் வாசிப்பு என்பதைவிட அவரவர் அளவில் உற்றுப்பார்க்கும் அனுபவங்கள் என்பது முக்கியமானது; படைப்பிற்கு வளஞ்சேர்ப்பவை.
அப்படியெனில் தீவிர வாசிப்பு எங்கே படைப்புநிலையில் முக்கியம் பெறுகின்றது? தொடர்ச்சியாக ஒருவர் எழுத விரும்புகின்றாரெனில் இவ்வகையான வாசிப்பு அவசியமாகின்றது. ஆகக்குறைந்து ஒரே பின்னணியில், பல்வேறுபேருக்குத் தெரிந்த கதையைச் சொல்ல வரும்போதோ அல்லது ஏற்கனவே வேறு சிலரால் சொல்லப்பட்ட கதையை எழுதும்போதோ மொழியினுள் செய்யக்கூடிய வித்தையைப் புரிந்துகொள்ள வாசிப்பு அவசியமாகின்றது. இல்லாவிட்டால் வாசகர்கள் இந்தப் படைப்பில் என்னவிருக்கிறதென்றோ, இந்தக் கதை ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதெனவோ நினைத்து எளிதாகக் கடந்துபோய்விடுவார்கள்.
தொடர்ச்சியான வாசிப்பு என்பது சிலவேளைகளில் எதையாவது புதிதாய் எழுத விரும்புகின்றவர்க்கு தடை செய்யும் மனோநிலையைக் கொடுக்கக்கூடும். ஏற்கனவே வாசித்த ஒரு படைப்பை ஒருவருக்கு நினைவூட்டி இதைப்பற்றி இனியென்ன எழுதுவதற்கு இருக்கிறதெனச் சோர்வைத் தரக்கூடும்.
ஆனால் வாசிப்பிற்கு இன்னொரு அழகான பக்கமும் இருக்கிறது. ஆகக்குறைந்தது ஒரேமொழியில் எழுதுவதை தன்னியல்பிலேயே தடைசெய்யும். வெவ்வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் ஆர்வத்தைத் தொடர்ச்சியாகக் கொடுக்கும். அவ்வாறு இயலாதபட்சத்தில் கூட, 'எதையும் எழுதாது சும்மா இரு, அதுவே நல்லது' என்று மெல்லிய குரலில் அதட்டி இருக்க வைக்கவும் செய்யும்.
ஒவ்வொரு படைப்பாளியும் அவ்வப்போது உறங்குநிலைக்குப் போவது அவசியம். எழுத்தின் புதிய வடிவங்களுக்கோ அல்லது வேறு தளங்களுக்கோ அடிக்கடி நகர்ந்தாக வேண்டும். இவ்வாறு அவர்கள் போகும்போது அவர்களின் படைப்புக்கான இடத்தை யாரோ ஒருவர் அபகரித்துவிடுவார் என்பதும் ஒருபோதும் நிகழப்போவதில்லை. அசலான படைப்புக்களை உன்மத்தத்தோடு எழுதியவர்கள் மீளவரும்போது, காலமும் வாசகர்களும் திரும்பி இருகரங்கொண்டு அரவணைக்கவே செய்வர்/யும். அவ்வாறு உறங்குநிலைக்குப் போன படைப்பாளிகள் மீண்டும் வரும்போது அவர்களுக்கான சூழல் தமிழ்ச்சூழலில் அப்படியே இருந்ததற்கான எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரின் மீள்வருகை நிகழாதபோதுகூட அந்த இடம் வெற்றிடமாகவே இருந்திருக்கின்றது/இருக்கின்றன.
எழுதுவது மட்டும் அல்ல கலை; அவ்வப்போது எழுதாமல் இருப்பதுங்கூட ஒருவகையான கலைதான்.

(February 11, 2016

இலங்கைக் குறிப்புகள் - 04

Saturday, February 10, 2018

கொழும்பில் றஷ்மியினதும், எனதும் நூல்களை அறிமுகப்படுத்த ஷர்மிளா ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் ஷெரினை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். அவரோடு ஆஸ்திரேலியாவில்(?) இருந்து வந்து ஒரு படப்பிடிப்புக்குழு நின்றதால், அந்தக்குழுவை வழியனுப்பவேண்டியதால் அவர் நிகழ்வு முடியமுன்னரே போயிருந்தார்.

பின்னர் ஒருநாள் அவர் தொலைபேசியில் சந்திப்போமா என அழைத்தார். அதுவரை ஷெரினை அவ்வளவு அறிந்திருக்கவில்லை என்பது நான் சற்று வெட்கப்படவேண்டிய விடயந்தான். கனடாவில் நீண்டகாலம் வசித்த ஒருவர்; ஜக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்புக்களைச் செய்துவிட்டு, ஒருகட்டத்தில் இலங்கைக்குப் போய் ஏதாவது செய்வோமென 90களின் பிற்பகுதியில் சென்றிருக்கின்றார். பிறகு அங்கேயே ஒருகட்டத்தில் அப்படியே தங்கிவிட்டார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்/முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில்(?) சில வருடங்கள் தங்கியிருந்து தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவ்வாறான ஒருவரிடமிருந்து இன்னும் ஆழமான விடயங்களை தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளில் நான் அறிந்துகொள்ள முடிந்தது.

மனித உரிமைகள் சார்ந்து நிறைய வேலைகளை ஷெரின் இப்போது செய்துகொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்கின்றபோதும், யாழில் தங்கிநின்று ஏதாவது செய்வோம் என்று விரும்பியபோது அங்கிருந்த அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட முரண்களையும் விபரித்துக்கொண்டிருந்தார். முக்கியமாய் யாரோ ஒருவரை நேர்காணல் சென்றபோது தான் கால்மேல் போட்டுக்கொண்டிருந்து கேள்விகள் கேட்டது அந்த நபருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதன்பிறகு இவர்களோடு இருந்து அங்கே இயங்கமுடியாது என தெற்கிற்கு நகர்ந்துவிட்டேன் எனவும் சொன்னார்.

நான் சந்தித்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் ஏதோ ஓர் அமர்வு நடந்து ஷெரீனும் பங்குபற்றியிருந்தார். சிங்கள குழுக்களுக்கு முன்னர் நமது தமிழ்க் குழுக்கள் எவ்வித தயாரிப்போ, காத்திரமான விவாதங்களையோ உருவாக்காது ஏதோ வந்தோம்/பேசினோம்/சென்றோம் என இருந்தார்கள் என்ற கவலையையும் பகிர்ந்துகொண்டார்.

நான் ஷெரினைச் சந்தித்தபோது, அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்/முஸ்லிம்/சிங்களப் பாடசாலை மாணவர்கள் போர் பற்றி தமது அனுபவங்களை எழுதிய, ‘மெளன வலிகளின் வாக்குமூலம்’ என்ற ஒரு நூலைத் தொகுத்திருந்தனர். தமிழிலும் சிங்களத்திலும் தயாரிப்புக்கள் முடிந்து நூல் வெளியிடுவதற்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. இதற்கான செலவை ஏற்றவர்கள் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடக்கேட்டபோது, தமிழிலும்/சிங்களத்திலுமே முதலில்வெளிவருவதே முக்கியமென அதை மறுத்தோம் எனவும் ஷெரின் சொல்லியிருந்தார். ஷெரினது வீட்டிலே இன்னொரு நண்பரான ராதிகாவையும் சந்தித்திருந்தேன். சிங்கள ஊடகவியலாரும், சட்டம் படித்தவருமான ராதிகா தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றுக்குப் பிரயாணித்துக்கொண்டிருப்பவராகவும், சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் இருக்கும் இனவெறியையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.

ஷெரின் மனித உரிமை விடயங்களையும் மட்டுமில்லாது, தனது உறவினர்கள் செய்யும் மனதிற்கு உவப்பாக இல்லாத சில விடயங்களையும் வெளிப்படையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் தனது குடும்பம்/பிள்ளைகளை விட்டுவிட்டு தனியே இலங்கையில் இருந்து அவர் தனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டிருந்த அவர், ‘நான் இங்கு இறந்தால் இந்த வீட்டிலிருக்கும் சமையல்கார அம்மாவும், பாதுகாப்பிற்கு நிற்கும் ஒரு ஐயாவும் மட்டுமே தனக்கான ‘சொந்தங்கள்’ என்றார்.

ஷெரினோடும், ராதிகாவோடும் இருந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது, அநேக புலம்பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் ‘கானல் கனவான’ எப்போதேனும் ஒருநாள் இலங்கைக்குத் திரும்பிவருவதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். ‘நீ வருவதென்றால் பயப்பிடாது வா, எங்கள் நிறுவனத்தில் ஒருவேலை (ஆகக்குறைந்தது மொழிபெயர்ப்புச் சார்ந்து) தருகின்றேன்’ என்றார் ஷெரின். இலங்கை போன்ற இன்னமும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கப்படாத சூழலில் ஒரு சிறு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது என்பதே கஷ்டமானது. ஷெரின் கூட சில நாள்களின் முன், நல்ல பணியாளர்கள் என்றாலும், இனத்துவேஷம் வெளிப்பட்ட இரண்டு பணியாளர்களை வேலை நிறுத்தவேண்டி வந்தது என்றார்.

நமது இருவருக்கும் பழக்கமான ஒருவரைப் பற்றிய பேச்சொன்று இடையில் வந்தது. அவரின் மீது மதிப்பிருந்தாலும், அவர் போர்க்காலத்தின் இறுதிக்கட்டம்வரை நின்றவர் என்கின்றபோதும் தன்மீது சுயவிமர்சனம் இல்லாது பல்வேறு அரசியல் கிளைகளில் மாறிமாறிப்போய்க்கொண்டிருக்கின்றார் எனச் சொன்னேன். அவரோடும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தில் இயங்கிய ஷெரீன், தானும் இதுகுறித்து கேள்விகேட்டபோது, அந்த நண்பர் மனம் உடைந்து அழத்தொடங்கியபோது தன்னால் அதற்குப் பிறகு எதுவுமே அது குறித்துப் பேசமுடியவில்லை என்றார். உண்மைதான், இவ்வாறான விடயங்கள் உணர்ச்சிகரமானது மட்டுமில்லை, மிகுந்த சிக்கலானதும் கூட.

இதுவரை அறிமுகம் இல்லாத ஒருவரோடு ஏற்படும் நட்பென்பது சிலவேளைகளில் அழகானது. சில மணித்தியாலங்கள் நிறைய விடயங்களை ஆறுதலாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது, நமது உரிமைகள் பற்றியும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் உண்மையான அக்கறையோடு இருக்கும் ஷெரீன் போன்றவர்களைப் பற்றி ஏன் நமது சமூகத்தில் பரவலான அறிமுகம் இல்லை என்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அவரைப் போன்றவர்களுக்குத் தம்மை ‘விளம்பரப்படுத்த’ விருப்பமில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியுமெனினும், அவரை அறிந்தவர்கள் அவர்களின் பணியை பரவலாகக் கொண்டு செல்லலாம். முக்கியமாய் எல்லா இனங்களோடும் சேர்ந்து இயங்கியபடி,, தமிழர்களின் உரிமை குறித்தும் விட்டுக்கொடுக்காது பேசும் ஷெரீன் போன்றவர்கள் நமது சமூகத்திற்கு முக்கியமானவர்கள்.

ஷெரின் தனது பணிகளுக்கிடையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிணக்குகள், மனஅழுத்தங்கள், பின்னடைவுகள் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, இவ்வளவு எல்லாம் நிகழ்ந்தபின்னும், நீங்கள் நம்பும் விடயங்களுக்காய் அதை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கின்றீர்களே, இப்படி எங்களைப் போன்றவர்களால் தொடர்ந்து இதற்குள் இருந்திருக்கவே முடியாது என்று சொன்னேன். ஆகவேதான் ஷெரீன் போன்றவர்களை எனக்கு நெருக்கமானவர்களாகக் கொள்ளமுடிகிறது போலும்.


(Jan 19, 2018)

சூரியகாந்திப்பூ குறிப்புகள்

Monday, January 29, 2018


கட்சிக்காரன்
இமையத்தின் அண்மைக்காலக் கதைகள் என்னை அவ்வளவாய்க் கவர்ந்ததில்லை. பலரால் விதந்தோந்தப்பட்ட இமையத்தின் நாவலான 'எங் கதெ' பற்றி வேறுவிதமான பார்வை இருக்கின்றதென்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன். அதைவிட விகடனில் என்றாவது ஒருநாள் நல்லதொரு கதை வெளிவந்துவிடுமா என தொடர்ந்து பார்த்தபடியிருப்பேன். வெளியில் நன்றாக எழுதும் படைப்பாளிகள் கூட விகடனில் எழுதும்போது ஏதேனும் நேர்த்திக்கடன் வைத்துவிட்டு படைப்புக்களை அனுப்புகின்றார்களோ என நினைக்குமளவிற்கு எனக்குப் பிடித்த சிலர் விகடனில் எழுதிய கதைகளை வாசிக்கும்போதும் யோசிப்பதுண்டு.

இந்தமுறை விகடனில் இமையம் எழுதிய 'கட்சிக்காரன்' கதை எனக்குப் பிடித்திருந்தது; முக்கியமாய் தி.மு.கட்சிக்காரரான இமையம் தனது கட்சியின் இன்றைய உண்மை நிலையை விமர்சித்து எழுதியிருப்பது. மேலும் தங்கம் தென்னரசு, அவரின் தந்தையான தங்கபாண்டியன் போன்றவர்களை நேரடியாகக் குறிப்பிட்டு, ஒரளவு நேர்மையான அவர்களாலேயே எதையும் இன்றைய தி.மு.கவில் சாதிக்கமுடியாத அவலத்தை சமரசமின்றி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஒரு சிறுகதையிற்குள் விடப்படவேண்டிய மெளனத்தை மட்டுமில்லாது, எல்லாவற்றையும் உரையாடல்களால் சொல்லிவிடுவதையும் இமையத்தின் பலவீனமாய் ஏற்கனவே குறிப்பிட்டு எழுதியிருப்பேன். அதை அவர் இந்தக்கதையில் மீறியிருப்பதால்தானோ என்னவோ இன்னும் இந்தக் கதை பிடித்திருந்ததோ தெரியாது. கிட்டத்தட்ட 19 பக்கங்கள் அளவிற்கு நீளும் 'கட்சிக்காரனை' விகடன் பிரிசுரித்ததைப் பார்க்கும்போது இந்த உலகில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழும் வாய்ப்பிருக்கின்றதை நாங்கள் நம்பத்தான் வேண்டும் போலிருக்கிறது.
(June 2017)


மழையும் புத்தகங்களும்
தொடர்ந்து விடாத மழைபொழிந்து கொண்டிருக்கும் இன்று அன்னா அகமத்தோவாவும், போர்ஹேஸும், காஃப்காவும் சில மணித்தியாலங்களுக்குத் துணையிருந்தார்கள். காஃப்காவின் The Zürau Aphorisms சிறுசிறு குறிப்புகளாய் (109) எழுதப்பட்டதை வாசிப்பது வித்தியாசமான அனுபவமாயிருந்தது. அது போல போர்ஹேஸின் அனைத்துக் கவிதைத் தொகுப்பிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட 200 கவிதைகளுள்ள நூலில், அவரின் ஒவ்வொரு தொகுப்பிற்கான முன்னுரைகளும் சுவாரசியமானவை. அன்னா அகமத்தோவா சிலுவையில் அறையப்பட்டு முழந்தாழிட்ட நிலையில் தலையைக் குனிந்தபடியிருந்தார். எத்தனை துயரை அவர் வாழ்ந்த காலத்தில் அனுபவித்திருந்திருப்பார். அதையும் மீறி மூடிய நாடொன்றில் நடந்தவற்றை உலகிற்கு எடுத்தியம்பிய துணிச்சல்காரி என்றவகையில் அவரின் மீதான நெருக்கம் கூடிக்கொண்டே போனது.

முன்பு நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கு அருகேயும் புத்தகங்கள் விற்கும் கடையொன்றும் இருந்தது. குளிர்காலங்களில் வெளியே போக முடியாத சூழ்நிலையில் மதியவுணவு வேளைகளில் அங்கேயே அதிக நேரத்தைச் செலவழிப்பதுண்டு. அவ்வாறே சில புதிய புத்தகங்களை(மேரி ஆன் மோகன்ராஜ் -The Bodies in Motion, ஜூம்பா லகிரி -Unaccustomed Earth , .வி.எஸ்.நைபால்-Magic Seeds , மார்க்வெஸ்--Memories of My Melancholy Whores என்பவை இப்போது நினைவில் வருபவை) காசு கொடுத்து வாங்காமலேயே பகுதி பகுதியாய் அங்கேயிருந்து வாசித்து முடித்துமிருக்கின்றேன். இப்போதெல்லாம் அங்கே ஆறுதலாய் இருந்து வாசிப்பதற்கான வெளியையெல்லாம் குறைத்துவிட்டார்கள்.

அண்மையில் என்னோடு வந்த நண்பரிடம், இந்த மூலையிலிருந்துதான் அவ்வப்போது கண்ணாடிக்குள்ளால் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வாசிக்கின்றனான் எனச் சொல்லிக்கொண்டிருந்தேன். நம்முன்னாலேயே நடந்த பல பிடித்த விடயங்கள் எல்லாமே எப்போதோ நடந்ததுபோல 'கடந்தகாலமாய்'ப் போய்க்கொண்டிருப்பது ஒருவகையில் துயரமானது அல்லவா?

போர்ஹேஸின் -மேலேயுள்ள- 'காதலின் எதிர்பார்ப்பு' ஐ வாசித்தபோது, முன்னர் இப்படி அந்த புத்தகசாலையில் சென்று வாசித்துக்கொண்டிருந்தகாலத்தில் பறக்கும் நூலகம் என்று எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்தது.
(Sep, 2013)


பயனுள்ள ஓரு மாலை
யாரேனும் புதிய ஒருவரை - முக்கியமாய் இலக்கியம்/சினிமா சார்ந்து- சந்திக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். அதாவது அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்களுடன் அவர்களைச் சந்திப்பதில்லை என்பதில் அவதானமாய் இருக்கவும் தேவையில்லாத ஏமாற்றங்களை அடையாதிருக்கவும் காலம் கற்றுத் தந்திருக்கின்றது. எனெனில் கடந்தகாலம் அவ்வாறான ஏமாற்றங்களைத் தந்திருந்தது. அவ்வாறான ஒரு நிலையுடன் இன்று ரொறொண்டோவில் நடந்த பயிற்சிப்பட்டறையில் சொர்ணவேலைச் சந்திருந்தேன். பயிற்சிப்பட்டறை காலையில் இருந்து தொடங்கியிருந்தாலும், அது முடியும் போதே சென்றிருந்தேன். அதன்பிறகு சமகால (தமிழ்) சினிமா என்கின்ற கலந்துரையாடலிலும் இருந்தேன். சொர்ணவேல் நிறைய விடயங்களைத் தெரிந்த சுவாரசியமானவராய் ஒருவராய்த் தெரிந்ததால் பிறகு சில நண்பர்களுடன் ஒரு கோப்பிக்கடையில் இருந்தும் நீண்ட நேரம் உரையாடிருந்தோம்.

ஜான் ஆபிரகாம், ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் என அவர்களோடான தனிப்பட்ட நட்பு சார்ந்தும், அவர்கள் மீது தனக்குள்ள விமர்சனங்களையும் முன்வைத்த சொர்ணவேலின் பார்வை எனக்கு உவப்பானது. அதைவிட அவர் விரிவாக சிலாகித்து உரையாடிய பிறமொழிப் படங்களும், ஆவணப்படங்களும், குறும்படங்களும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. சொர்ணவேலில் நூலான, 'சினிமா:சட்டகமும், சாளரமும்' பற்றிப் பேசிய தேவகாந்தன் ஓரிடத்தில் இப்படிச் சொல்லியிருப்பார். 'நான் ஒரு தீவிர சினிமா பார்வையாளன் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் சொர்ணவேலில் நூலை வாசிக்கும்போது அவர் குறிப்பிட்ட படங்களில் 50% மட்டுமே பார்த்திருக்கின்றேன் என்பது புரிய, நான் இதுவரை நினைத்த பார்வைக்கே பங்கம் வந்திருக்கின்றது' என வெளிப்படையாகத் தேவகாந்தன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கும், சொர்ணவேலோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் குறிப்பிடும் படங்களில் பெரும்பான்மையான பிறமொழிப் படங்களைப் பார்க்கவில்லையே என்ற கவலை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சொர்ணவேல் எனது வலைத்தளத்தை அவ்வப்போது வாசித்திருக்கின்றார். எனது கதைகளில் ஒன்றான 'கள்ளி' அவருக்குப் பிடித்துமிருந்தது. வாசனையைப் பின் தொடரும் ஒருவனைப் பற்றிய கதையை காட்சிப்படுத்துவது கடினம் என்றாலும் என்றேனும் ஒருநாள் குறும்படமாக்கிப் பார்க்கலாம், சுவாரசியமானது என கதைத்துக்கொண்டிருந்தார்.

இது எல்லாவற்றையும் விட அவருக்கும் எனக்குப் பிடித்த தெரிதா பிடித்திருக்கின்றது. அவரது 'சினிமா: சட்டகமும் சாளரமும்' முன்னுரையிலே தெரிதாவே முக்கியமாய் இடம்பெற்றிருக்கின்றார். தெரிதாவின் மீதான் ஈர்ப்பாலோ என்னவோ முன்னுரையில் இருக்கும் இரண்டு படங்களும் தெரிதாவே இருக்கின்றார். ஆவணப்படங்களில் ஆர்வமும், ஆவணப்படங்களை எடுத்தவருமான சொர்ணவேல் தெரிதா பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த ஆவணப்படங்களில் அதுவுமொன்று.

அயோவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சொர்ணவேல் தற்போது மிஷிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
(Aug 31, 2013)

ஒரு வாசகர் கடிதம்

Sunday, January 28, 2018

அன்பின் இளங்கோ,


தங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிப்பகத்தாரிடமிருந்து வாங்கினேன். சென்ற ஞாயிறு அந்த சிற்றிதழ் கிடைக்கப்பெற்றேன். வடிவம் புதுமாதிரியாக கொஞ்சம் அகலம் அதிகமாக பாடபுத்தகம் போலிருந்தது வசீகரித்தது, உள்ளடக்கங்கள் எல்லாமே அருமை எனினும் தங்களின் துவக்க கட்டுரை ஒரு பிரியமான கவிதையை வாசிக்கும் உணர்வையும், தொட்டிச்செடியின் முதல் மலரொன்று அளிக்கும் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்தது, எனவே உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நிச்சயம் என்னை விட இளையவராக இருப்பீர்கள் என்றெண்ணுகிறேன் எனவே வாழ்த்துகிறேன்.
மொழிநடை அழகு நெடுங்கவிதையொன்றினை வாசிக்கும் உணர்விலேயே இறுதிவரைக்கும் இருந்தேன்.

எளிய வாசகரகளின் பாராட்டுக்களையெல்லாம் கடந்துவந்திருப்பீர்கள் என்றெண்னுகிறேன். இருப்பினும் எனக்கு மனமார பாராட்ட வேண்டும் என தோன்றுவதால் சொல்லிக்கொள்கிறேன்.

என் முகனூல் பக்கத்தில் அகநாழிகை குறித்து பதிவிட்டதில் உங்களின் கட்டுரையினைக்குறித்த பகுதிகளை உங்களுக்கு திரும்பவும் எழுதுகிறேன்..

’’விரியும் மலரைப்போல ஒரு பொழுதைப்பழக்குதல் ’’ இதழின் தொடக்க கட்டுரைக்கான சகல அந்தஸ்துடன் இருந்ததென்றே சொல்லலாம்,

அந்த நாள் அந்தப் பொழுது நம் கண் முன்னே மிக மிக அழகாய் மலர்ந்துவருவதை உணர்ந்தபடியே வாசிக்க முடிந்தது. உண்மையில் அது ஒரு நெடுங்கவிதை வாசிப்பனுபவம்.

தினப்படி வாழ்வின் சாதாரண நிகழ்வுகளை அசாதாரண அழகுடன் அருமையான் மொழிநடையுடன் லாவகமாக சொல்லிச் செல்கிறார், வாகன நெரிசலை மறக்கசெய்யும் பரிச்சயமான பெண்கள், ,இருக்கையை விட்டுத்தருவதின் குழப்பங்கள், உளப்போராட்டங்கள், கர்ப்பிணிப்பெண்ணின் நன்றி உண்டாக்கிய மகிழ்வில் சக பணியாளருக்கான பாராட்டொன்றை தயங்கியபடியென்றாலும் சொல்லிவிடுவது, இப்படி சாமான்யனின் ஒரு நாளை சொல்லிக்கொண்டு போகிறது கட்டுரை ஒரு கதையைபோலவே.

ஒரு நாள் என்பது எதிர்பாரா எதனையுமே தன்னகத்தே வைத்திருக்கலாம் என்பதையும் தோழியுடன் காலைஉணவிற்கு செல்கையிலும் அவளை சந்திக்கும் விழிகளை அவசரமாய் இடைமறித்து அந்த நாளை ஆசிர்வதிக்கப்பட்டநாளாக மாற்றிவிடும் சாமார்த்தியமும், பின்னர் அது அவனின் சாமர்த்தியத்தினால் அந்த அருளப்பட்ட நாள் நிகழவில்லை என்றும் தன்னியல்பிலேயே விரியும் மலரைப்போல அது இயல்பானதென்றும் சொல்வதும் பிரியமான கவிதையொன்றினை வாசிக்கும் உணர்வில் புன்னகைக்க செய்கின்றது.

அந்த அழகிய உணர்விற்கு முரணாக திடீரென் வரும் மாறுபட்ட தொலைபேசி அழைப்பொன்று விரும்பத்தகாத செடியொன்றினை போல வாசிக்கும் நம் மனதிலும் பரவி சட சடவென வளருகிறது.

காரணமின்றி தண்டித்தும், பின்னர் தோள் கோர்த்து இன்பங்களை அறிவித்தும், ரணப்படுத்தியும்,இதயத்தை நசுக்கி கூன் விழச்செய்தும்,வாழ்வு நம்முடன் குரூரமாய் எந்த முடிவிற்கும் நாம் வந்துவிட முடியாதபடிக்கு விளையாடிக்கொண்டிருப்பினும், நேசித்தல் எனும் அற்புதம் அவை எல்லாவற்றிலிருந்தும் நம்மை எழவைத்து விடுகின்றதென்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

நமக்கான ஒருவர் எங்கேனும் இருக்கிறார் என்னும் நம்பிக்கை, சில வார்த்தைகள், ஏன் நமக்காக தயாரிக்கப்பட்டு காத்திருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதுமல்லவா மூழ்கிக்கொண்டிருக்கும் நம்மை முடிசுழற்றி மீண்டும் கரையில் இழுத்துப்போட?

துவக்க கட்டுரை மூலம் இவ்விதழை மிக அழகானதொன்றாக்கிய இளங்கோவிற்கும் சேர்த்து இதோ துவங்கி விட்டிருக்கிறேன் உண்மையிலேயே என் வீட்டுத்தோட்டத்தின் மலர்களுடனும் முன் காலையின் வெம்மையுடனும் கொல்லும் வார்த்தைகளுக்கும் ஆரத்தழுவிக்கொள்ளும் கணங்களுக்கும் இடையே எதிர்ப்பும் கலப்பும் இன்றி இயல்பாய் எனக்கு கையளிக்கப்பட்ட ஒரு அழகிய விடியலோடான நாளொன்றினை இயல்பாக எதிர்கொள்ளவும் என் அன்பினை எனக்கானவர்களென்று நான் நினைக்கும் எல்லாருக்குமாய் அனுப்பி வைக்கவும். 

மிக்க அன்புடனும் வாழ்த்துக்களுடனும்
லோகமாதேவி

பேயாய் உழலும் சிறுமனமே - கொழும்பு

Saturday, January 27, 2018







மஹாகவியின் 'பொருள் நூறு'

மஹாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் மிகவும் கவனத்தைப் பெற்றவை. அன்றைய காலத்தில் குறும்பாக்கள் நிறைய எழுதி பிரசுரமாவதற்குத் தயாராக இருந்த நிலையில், இன்னொரு வகைமையான 'பொருள் நூறு' என்ற பெயரிலும் மஹாகவி எழுதி வைத்திருந்ததாக எஸ்.பொ இந்நூலின் முன்னீட்டில் கூறுகின்றார். 'குறும்பா' அன்றைய காலத்தில் பிரசுரமானபோதும், ஏதோ ஒருவகையில் 'பொருள் நூறின்' கையெழுத்துப் பிரதி தவறவிடப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப்பிறகு சிற்பியின் சேகரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.பொவினால் 'மித்ர' ஊடாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. சிற்பி தன்னிடமிருந்து கையெழுத்துப் பிரதி 'வானம்பாடி'களை தாங்கள் வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் பத்மநாப ஐயரினால் தரப்பட்டதாக இந்நூலின் தொடக்கத்தில் நினைவுகூறுகிறார்.
மஹாகவியின் குறும்பாவிற்குள் ஊடாடும் எள்ளலே இதிலும் கரை புரண்டோடுகிறது. நமக்குப் பழக்கமான/நம்மிடையே இருந்து மறைந்து போன பல்வேறு பொருட்களின் தலைப்புக்களில் நூறு பாடல்கள் இந்நூலில் இருக்கின்றன. நூல் வித்தியாசமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றது. கவிதைகளோடு வந்திருக்கும் படங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வழமையாக எஸ்.பொ 'பரணி' பாடும் கைலாசபதி, சிவத்தம்பி பற்றி இதில் இருந்தாலும், எஸ்.பொவின் முன்னீடு சுவாரசியமாக வாசிப்பதற்கான விடயங்களைக் கொண்டிருக்கிறது. அண்மையில் எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தபோதும் அதிலும் எஸ்.பொவின் முன்னீடு ஈர்த்திருந்தது. முன்னீட்டை எப்படிச் சுவாரசியமாகவும் சர்ச்சையாகவும் எழுதுவதுமென ஆசானிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்,
வடை
--------
படைப்புப் பல படைத்துப் பலருக் கூட்டும்
கடைப் பொது இடத்திலும் கடித்துச் சுவைக்கக்
கிடைப்பன வடைகள் ஆயினும், உள் வீட்டு
அடுப்படி
நெருப்பின் எதிர் நின்று தன் இடுப்பை
ஒடித்தவள் ஒருவனுக் காகச்
சுடச் சுடக் கிடைப்பதன் சுவையே தனித்ததே.
கமரா
--------
கமரா ஒன்றவன் கையில் இருந்ததால்
அமரா வதியைப் படமெடுத் திட்டான்
அவளின்
சிரிப்பினைத் தன் சிறை செய்தே, விருப்பொடு
தலையணை யடியில் வைத்துப் பலபல
கனவுகள் கண்டு களித்தான்.
'இன்பம் எங்கே உளது?' என்றால்
'என் பழந்தலையணைக் கீழ்'! என்றானே.
கோப்பி
--------
மண்ணில் ஏன் பிறக்கிறோம் மறுபடி மறுபடி?
இன்னும் ஏன் இறவாதிருந்தோம்? பண்ணிய
புண்ணியத்திலே போதாக் குறையோ?
-எண்ணி ஏங்கிக் கண்ணீர் உகுத்தே
இப்படிப்
பேசுவோர் எல்லாம் பெரியோர் ஆவர்!
ஆசைகள் கடந்த அந்நியர்! அவர்க்குக்
கோப்பியைப் பாலொடு கலந்து
சாப்பிடக் கொடுத்திடிற் சஞ்சலம் தீருமே!
துப்பாக்கி
--------
'திடும் திடும்'! என்று சுடும் சுடும் என்பார்.
விடும் விடும், இந்த வீண் கதை விளம்பல்,
வேண்டாம்.
அடுப்படி இடத்திலே ஆரணங்குகள்
அப்பளம் சுடுவதற் குதவத்
துப்பும் உளது கொல் துப்பாக்கிக்கே?
பிளா
-------
பிளாவினைப் பிடித்தேன். பெருங்கள் வார்த்தான்.
கள்ளில் அக் காரிகை கதிர் முகம் தெரிந்தது -
கண்டேன்.
பிளாவினை முடித்தேன். பெருங்கள் வார்த்தான்
கதிர் முகம் காசினி முழுதும்
எதிரிலே தெரிய என் ஏற்றம் விழுந்ததே.
பூசுமா
--------
வாஞ்சை யோடெதிரில் வந்தமர்ந்துள்ளாய்.
மூஞ்சியைப் பூசுமா முழுதும் மறைத்தது.
வாயினைப் பூசிய வண்ணம் மறைத்தது.
கண்ணை மை மறைத்ததென் காதலி! இவற்றைக்
கழுவுக!
முகத்திலே ஓவியம் தீட்டும் இம்முயற்சிகள்
சுகப்படா, சுய உருக் காட்டி,
அகப்படு கைக்குள், என் அன்பைப் பெறுகவே.

ஹருகி முரகாமியின் Tsukuru Tazaki யும், நானும்

Friday, January 26, 2018

ஹருகி முரகாமியின் 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' நாவலில் பதின்மங்களில் ஐந்து நண்பர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். ஒவ்வொருவரின் பெயர்களும் நீலம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை என தொடர்புடையதாக இருக்கும். முக்கியபாத்திரமான Tsukuru மட்டும் எவ்வித நிறத்தோடும் தொடர்பில்லாத பெயரோடு இருப்பார். எனவே பிற நண்பர்கள் Tsukuruஐ, நீ நிறமற்றவன் எனக் கேலி செய்தபடியிருப்பார்கள்.
இப்படி நெருக்கமாய் இருக்கும் ஐந்து நண்பர்களும், அவர்களின் 20வது வயதில், சட்டென்று எந்தக் காரணமும் சொல்லாது Tsukuruஐ விலத்தி விடுகின்றார்கள். கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர் ஏன் அப்படி நண்பர்கள் திடீரென விலகினார்களெனக் காரணங்களைத் தேடி ஜப்பானிலிருந்து பின்லாந்துவரை போவதே கதையின் முக்கிய பகுதி.
அப்போது பழைய நண்பர்கள், நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கும்போது, அவர்களின் ஞாபகங்களை அலசுகின்றனர். ஒவ்வொருவரும் முன்பு எப்படியிருந்தனர், அவர்களை மற்ற நண்பர்கள் எப்படிப் பார்த்தனர் என்பது குறித்து விரிவாகக் கதைப்பார்கள்.
சோர்வான முகத்தையுடைய (boring face) , தன்னை யாருமே காதலிக்கமாட்டார்கள் எனத் தன்னைப்பற்றி நினைத்து வைத்திருக்கின்ற Tsukuru ஐ, கனிவான, பிறர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கின்ற நல்ல நண்பனாகவும், அவரை அந்தக் காலத்தில் நேசிக்க விரும்பியதாகக் கூட ஒரு தோழி கூறுவார்.
ஒருவர் தன்னைப் பற்றி நினைத்து வைத்திருப்பதற்கும், பிறர் அவரைப் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என நினைத்துக்கொண்டு என் பதின்மங்களில் எப்படி நான் இருந்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். நம்மை அன்றைய காலங்களில் அறிந்திருக்கின்ற நண்பர்கள் மூலமாக விரிகின்ற நம்மைப் பற்றிய சித்திரம், சிலவேளைகளில் இன்னுஞ் சுவாரசியமாகக் கூட இருக்கும்.
என் பதின்ம காலத்து நண்பரொருவன் பதிவொன்றை இப்போது எழுதியிருக்கின்றான்.
Tsukuru போல... ஒரு நான்.
புனைவுக்கும் வாழ்க்கையிற்கும் அவ்வளவு தொலைவில்லைப் போலும்.

(Oct, 2014)

ஜெயமோகனிற்கான ஓர் எதிர்வினை


இதற்கு முன்பான பதிவுகள் 

(1) மதிப்பீடுகளின் வீழ்ச்சி

(2) மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினை



ஜெயமோகன் எனக்கெனக் கூறும் சில விடயங்கள் முக்கியமானவை. அதுவும் ஒரு படைப்பாளியாக இருந்து கொண்டு அவர் வைக்கும் விமர்சனம் எனக்கும் உவப்பானவை. அந்தவகையில்தான் எனக்கு எஸ்.பொவும், மு.தளையசிங்கமும் முக்கியமானவர்கள். படைப்பாளிகளாய் இருந்துகொண்டு அந்த மனோநிலை ஊடறுத்துச் செல்லும் விமர்சனத்தையே நானும் அதிகம் கவனத்தில் கொள்கின்றவன்.

நிற்க.
ஜெயமோகன் உரையை வைத்து, நானெழுதிய பதிவு 'ஒரு அறைகூவல்' என ஜெமோ சொன்னாலும், அதன் முக்கிய பகுதியிற்கு அவர் இன்னும் வரவில்லை. வேறொரு திசையில் உரையாடலை நகர்த்துகின்றார். என்னுடைய முக்கியமான கேள்வியே தமிழகத்தில் இருந்து அண்மையில் வந்த முக்கிய நாவலை முன்வையுங்கள். உரையாடுவோம் என்கின்றேன்.

அவர் ஷோபாவின் 'பொக்ஸ் கதைப் புத்தகத்தை'ப் பற்றி ஓரிரு வார்த்தைளில் நிராகரிப்பதோடு முடிக்கின்றார். சயந்தனின் 'ஆதிரை'யை முக்கியமான நாவலென அவர் சொன்னபோதும், அன்றே கேட்டிருக்கின்றேன். எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுதும் ஜெமோ ஏன் அது குறித்து, எதனால் அது முக்கியமாகின்றதென விரிவாக எழுதவில்லை என்பது குறித்து. இன்றும் 'ஆதிரை' பற்றி உருப்படியாக அவர் எதையும் விரிவாக எழுதவில்லை.

அதேபோல் அவரது வாசிப்பு ஈழம்/புலம்பெயர்வு சார்ந்து எங்கே இருக்கின்றது என்பது குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. த.அகிலன் இப்போது புனைவு சார்ந்து எழுதுவதையே குறைத்துவிட்டார் (முற்றாகவே எனச் சொல்லலாம்). அவரது 'மரணத்தின் வாசனை' (2009) வந்தே ஏறத்தாழ 10 வருடங்கள் ஆகப்போகின்றன. ஆனால் ஜெமோ சயந்தன், அனோஜன் போல தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரில் அவரும் ஒருவர் என்கின்றார். இது பெரிய முரண் அல்லவா? மேலும் புதியவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கதைகளை அனுப்பச் சொல்லியபோது ஜெமோவின் தீவிர வாசகரான அனோஜன் தன் ‘அசங்க’ கதையை அனுப்பியபோது மட்டுமே அது பற்றிக் கருத்துக் கூறினாரே தவிர, இன்றுவரை அனோஜனின் ‘சதைகள்’ தொகுப்புக் குறித்தோ அவரது பிற கதைகள் பற்றியோ எதையும் பொதுவெளியில் கூறியதை நானறியேன்.

ஆகவேதான் நான் கேள்வி எழுப்புகின்றேன். குணா கவியழகன் பற்றிய ஜெமோவின் பார்வை என்ன? என்னை அவ்வளவு கவராதபோதும், தமிழ்ச்சூழலில் ஒருபகுதியினரால் பெரிதும் பேசப்பட்ட தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' குறித்த அவரது கருத்தென்ன? நம் சூழலில் அதிகம் கவனிக்காது, போரை முன்வைத்து பொதுமக்கள் சார்பில் பேசிய தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' வாசித்தாரா (கவனிக்க ஊழிக்காலத்தையும் அவரது நண்பரின் தமிழினி பதிப்பகம் தான் வெளியிட்டது)?  அதைவிட ஜெயமோகனைப் போல தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் தேவகாந்தனின் நாவல்கள் பற்றி என்னவிதமான அபிப்பிராயத்தை வைத்திருக்கின்றார்? இலக்கியம் என்பது உவத்தல் காய்த்தல் இன்றி பேசுவதாயின் ஜெமோ இவையெல்லாம் குறித்து விரிவாகப் பேசவேண்டும் அல்லவா? ஆகக்குறைந்தது இவற்றை நிராகரிப்பதாக இருந்தால்கூட, ஏன் அவற்றை நிராகரிக்கின்றேன் என்பது குறித்தாவது அவர் பேசியிருக்கவேண்டும்.

ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவல் என் வாசிப்பில் இப்போது பின் தங்கிவிட்டதா இல்லையா என்று ஜெமோ யோசிப்பதைவிட, ஏன் அவரால் நான் முக்கியமாய் முன்வைக்கும் ஷோபாவினது 'பொக்ஸ் கதைப்புத்தகத்திற்கு' நிகராய் தமிழகச் சூழலில் வேறு நாவல்/களை முன்வைக்க முடியாதிருக்கின்றது என்பதே என்னுடைய கேள்வி.

தேவிபாரதியின் 'நிழலின் தனிமை' எப்போது வெளிவந்தது? அதற்குப் பிறகு அவரின் 'நட்ராஜ் மகராஜ்' வந்து தமிழ்ச்சூழலில் உரையாடல் நிகழ்ந்தும் முடிந்துவிட்டது. இப்போது விஷ்ணுபுரம் வட்டம் தேவிபாரதியிற்கு பொன்னாடை போர்த்தியவுடன் அவருக்குத் தேவிபாரதி நினைவுக்கு வருகின்றார். அதுசரி ஜெமோ இதுவரை எங்கே ''நிழலின் தனிமை' குறித்து விரிவாக எழுதியிருக்கின்றார்? எனக்கு 'நிழலின் தனிமை'யை, அது வந்த காலத்திலேயே நல்லா நாவலடா, வாசித்துப் பாரென்று எப்போதோ செல்வம் அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஜெயமோகன் எப்போதும் நான் இவ்வாறான உரையாடலைத் தொடங்கும்போது, வேறு திசையில் கொண்டு போகின்றார். கடந்துமுறை அவரின் அறம் கதைகள் பற்றிய என் பார்வையை வைத்தபோது, நீயொரு காழ்ப்புணர்வு உள்ள, சிங்களவர்களையே விளங்கிக்கொள்ளமுடியாத ஒருவன் என 'ஈழ எழுத்தாளனுக்கு...' என எழுதினார்

நாஞ்சில்நாடன் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவராக என் பெயரை விகடனில் குறிப்பிட்டது,  என் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ தொகுப்பை வாசித்தபின்தான். ஜெமோ என் தொகுப்பை நிராகரிக்கின்றார் என்றால் கூட அது குறித்து எதுவும் எழுதியதாய்க் கூடத் துலங்கல் இல்லை. அதுவல்ல இப்போது இங்கே பிரச்சினை.

இன்றும் அவர் நான் புனைவில் மற்றதைவிட அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறுவதையும், நாவலோடு வாவென்று அழைப்பதையும் நிதானமாய்க் கேட்டுக்கொள்கின்றேன். ஆனால், இந்தப் பதிவில் நான் என் எழுத்தை முன்வைத்து எழுதியதல்ல. தமிழ் நாவல்களைப் பற்றியல்லவா சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஓர் எதிர்வினை புரிவதுதானே நியாயம். அதைத்தாண்டி ஏதேதோ எழுதுவது உருப்படியான ஓர் உரையாடலை ஒருபோதும் வளர்க்கப் போவதில்லை.

(Jan 02, 2018)

மதிப்பீடுகளின் வீழ்ச்சியிற்கான ஜெயமோகனின் எதிர்வினை

Wednesday, January 24, 2018

இப்போதைக்கு இந்த விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. இது தொடர்ந்துசென்று நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் மீதான கவனத்தைக் கலைத்துவிடுமென நினைக்கிறேன். விமர்சனங்களுடன்தான் நான் ஒவ்வொருவரையும் அணுகுகிறேன். இளங்கோ [டி செ தமிழன்] உட்பட இலங்கையில் எந்தப்படைப்பாளி முக்கியமான கதைகளை எழுதினாலும் உடனடியாக அடையாளப்படுத்துகிறேன். இன்றைய சூழலில் சயந்தன், அகிலன், அனோஜன் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அளவுக்குத் தீவிரமாக தமிழகத்தில்இளையோர் எழுதவேண்டிய அவசியம் உள்ளது   என சொல்லமுடியும்தான்  . என்னைப்பொறுத்தவரை நான் சாத்தியக்கூறுகளையே சுட்டிக்காட்டுகிறேன்.என்னால் இப்போதைக்கு எதிர்பார்ப்புகளை மட்டுமே முன்வைக்க முடியும்.
விஷ்ணுபுரம் இலக்கிய்வட்டம்  இலக்கியத்தை உருவாக்குவதற்கான அமைப்பு அல்ல. நாங்கள் நடத்துவது பயிலரங்கும் அல்ல. இது வாசகர்களின் கூட்டம் மட்டுமே. எழுதுபவர்களுக்கு வாசகர்களின் தரப்பிலிருந்து ஒரு கைகுலுக்கல். என் வாசகர்களை இலக்கியத்திற்கான பொதுவாசகர்களாக ஒருங்கிணைப்பதே என் நோக்கம். இலக்கியம் அனைத்து தரப்பிலிருந்தும் கைவிடப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் இத்தகைய ஒரு வாசகர்விழா நம் ஊக்கத்தைத் திரட்டிக்கொள்ள தேவையானதாக உள்ளது.
மற்றபடி, அவருடைய வரிகளில் உள்ள கேள்வி ஒரு கறாரான விமர்சனம் , ஒர் அறைகூவலும்கூட. அதை நான் வரவேற்கிறேன். அதற்கு எதிர்வினையாற்றவேண்டியவர்கள் இங்கே அடுத்த தலைமுறையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே. அவர்கள் விமர்சனங்களற்ற சூழலில், சிறிய விமர்சனங்களைக்கூட நக்கலும் வசையுமாக எதிர்கொள்ளும் ஃபேஸ்புக் மனநிலையில், வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த குரல் கேட்கவேண்டும். .இந்த அறைகூவலை அவர்கள் சாதனை மூலம் எதிர்கொள்ளவேண்டும் என விழைவதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
 Box கதைப்புத்தகம் ஷோபா சக்தியின் வீழ்ச்சியைச் சொல்லும் நாவல். அவர் இன்று மாட்டியிருக்கும் அனைத்து தேய்வழக்குகளும் அதில் தொகுக்கப்பட்டுள்ளன – ஈழம் கண்ட இரு மாபெரும் கலைஞர்கள்  அ.முத்துலிங்கமும் ஷோபா சக்தியும்தான்  என்பதை சொல்லியபடியே இதையும் கூறுகிறேன். டி.செ.தமிழன் இதை நல்ல நாவல் என்பதனால் தமிழிலக்கியச் சாதனைகளின் ஒன்றான கொரில்லாவை நன்றாக இல்லை என்று சொல்லியிருப்பார் என ஊகிக்கிறேன். வேறுநாவல் கோரும் டி செ தமிழன் ஒரு மாறுதலுக்காக தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவலை வாசித்துப்பார்க்கலாம்.மிகை மூலம் உலுக்காமல் எப்படி இலக்கியம் உள்ளத்தின் மொழிவடிவமாகச் செயல்படும் என்பதை காட்டும் படைப்பு அது. அவருக்கு ஒருவேளை கலை என்றால் என்ன என்று புரியவைக்கும்.
டி.செ.தமிழனிடம் நான் எப்போதுமே சொல்லிவரும் ஒன்றுண்டு. அவர் அடிப்படையில் புனைகதையாளர். ஈழ அரசியலின் ஒற்றைப்படையான மூர்க்கமும் கசப்புகளும் அவரை  அலைகழியச்செய்கின்றன. எழுத்தாளனிடம் அரசியல்காழ்ப்புகளை மட்டுமே எதிர்பார்க்கும் கூட்டம் அங்கே அதிகம். அதற்கு ‘சப்ளை’ செய்ய ஆரம்பித்தால் அதுவாகவே முடியவேண்டியிருக்கும். கூடவே மொழிவழி அறிதலைவிட காட்சியூடகத்திற்கு அவர் அளிக்கும் மிகையான இடம் அவருடைய சிக்கல். காட்சியூடகம் இலக்கியவாதிக்கு பெரிதாக எதையும் அளிக்காதென்பது என் எண்ணம் – சம்பிரதாயமான கருத்தாகவும் இருக்கலாம்.  இலக்கியத்தை தீவிரமாக அணுகினால் அவரும்  சயந்தனைப்போல முக்கியமான புனைவுகளை உருவாக்கமுடியும். வருக.


-மதிப்பீடுகளின் வீழ்ச்சி: http://djthamilan.blogspot.ca/2018/01/blog-post.html

-ஜெயமோகனின் எதிர்வினை:  http://www.jeyamohan.in/105022#.WmjPl66nHIV

மதிப்பீடுகளின் வீழ்ச்சி

Monday, January 22, 2018

நண்பரொருவரின் (அனோஜன்) முகநூல் பக்கத்தினூடு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது (2017) உரையைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் தேவையில்லை. விருது விழாவிற்கு வந்தவர்கள் ஜெயமோகனின் நடிப்பைப் பார்க்கவா வந்தார்கள்? பேச்சைத்தானே கேட்க வந்திருப்பார்கள். ஒழுங்காய் இயல்பாய் பேசியிருக்கலாம்.
சரி, நான் சொல்ல வந்த விடயம் வேறு. ஜெயமோகன், 'காலம்' செல்வத்தின் 'எழுதித்தீராப் பக்கங்களில்' இருந்து சில பகுதிகளை அங்கே பகிர்ந்திருக்கின்றார். அந்த மகிழ்ச்சியைப் பகிரத்தான் இது. நிறைய எழுதவேண்டும், எப்போதும் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் வகையைச் சேர்ந்தவர் ஜெமோ. அதற்கு மாறான ஒரு எழுத்து முறையைத்தான் நான் தொடர்ந்து முன்வைத்து வருகின்றவன். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதினால் போதும். அதுதான் எங்கள் ஈழ எழுத்து எங்களுக்கு கற்றுத்தந்திருக்கின்றது என பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். செல்வமும் குறைவாகவே எழுதுகின்றவர். ஆனால் அதை நேர்த்தியாக எழுதி இருப்பதால்தான் 'எழுதித் தீராப் பக்கங்கள்' முக்கியமான ஒரு படைப்பாக நம்மிடையே இருக்கின்றது. ஜெமோ அவர் விரும்பியோ அல்லது விரும்பாமலோ செல்வத்தை நினைவுபடுத்தியதற்கு -அவருக்கு மலேசியாவில் 2006ல் அடிவிழாததற்கு ஏதோ நல்லூழ் என்றமாதிரி- இது எங்களின் நல்லூழ் என நினைக்கின்றேன்.
இல்லாவிட்டால் கனடா என்றவுடன் நிறைய எழுதிய/எப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அல்லவா ஜெமோவிற்கு நினைவிற்கு வந்திருக்கவேண்டும். ஆனால் செல்வம் ஜெமோவிற்கு நினைவிற்கு வருவதற்கு எது காரணம் என்றால் குறைவாக எழுதினாலும் எவரும் அசட்டை செய்து கடக்கமுடியாது செல்வமும், அவரின் 'எழுதித் தீராப் பக்கங்களும்' இருக்கின்றது என்பதால்தான்.
மற்றது ஜெமோ, சுந்தர ராமசாமி 2000களின் தொடக்கத்தில் ரொறொண்டோ வந்து இனித் தமிழ் கனடாவில் இருக்காது என்பதை 'கலைஞனின் தூர நோக்காய்' கண்டடைந்ததைச் சொல்லி வியப்படைகின்றார். தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்லாது என்பதற்கு கலைஞனாக இருக்கவே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதராகவே எவராலும் புறச்சுழலை வைத்து எளிதாக எதிர்வுகூறமுடியும். ஆனால் இன்றும் தமிழ் ஏதோ ஒருவகையில் எங்களில் ஊடாடிக்கொண்டு தானிருக்கின்றது. 
அன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பலநூற்றுக்கணக்கான பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வந்தது என்பது உண்மை. ஆனால் எத்தனை பத்திரிகைகள் இலக்கியம் பேசியது என்பதும் முக்கியமான கேள்வி. இன்றும் கனடாவில் ஏறக்குறைய 10 தமிழ்ப் பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. எதிலுமே இலக்கியம் இல்லை. உரையாடுவதற்கான வெளிகள் இல்லை. மற்றும்படி வெளிவரும் சிறுபத்திரிகைகளின் அளவு குறைந்திருக்கின்றன என்பதென்னவோ உண்மைதான். அன்றைக்கு அரசியலிலும், இலக்கியத்திலும் துடிப்பாய் இருந்த ஒரு பரம்பரை இன்று ஒதுங்கிவிட்டது.
அதுசரி தமிழகத்தில் கூட எத்தனை சஞ்சிகைகள் தீவிர இலக்கியம் பேசிக்கொண்டு இப்போது வெளிவருகின்றன. சிறுபத்திரிகை என்பதே ஏதோ ஒருகட்டத்தில் அதன் ஆயுளை முடித்துக்கொண்டு உறங்குநிலைக்குப் போவதுதானே. ஆனால் இலக்கியம் என்பது அன்று சிறுகுழுவாலே பேசப்பட்டதுபோல இன்றும் ஏதோ ஒருவகையில் - இணையத்தில்- என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பேசப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றது.
ஏற்கனவே கூறியதுபோல, நாங்கள் குறைய எழுதிக்கொண்டிருப்பவர்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் நமது சுவடுகளையும் இங்கே பதித்துக்கொண்டுதானிருக்கின்றோம். அது தமிழில் மட்டுமில்லாது அந்தந்த நாடுகளில் பேசும் மொழியில் கூட நமது 'தமிழ்க்கதை'களைப் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு மான் 'புக்கர் பரிசு' வென்ற அரவிந்த் அடிகாவின் புதிய நாவலோடு போட்டியிட்டு, தனது முதல் நாவலாயினும் அதை நேர்த்தியாக எழுதி அனுக் அருட்பிரகாசம் தென்னாசியா நாவல் வகையில் பரிசு வென்றிருக்கின்றார். அதை நாம் கொண்டாட அல்லவா வேண்டும்?
2015 ஆவணி கோடைகாலத்தில் நள்ளிரவு தாண்டினாலும் அதன் அருமையான கதைசொல்லலில் கிறங்கி ஒரே அமர்வில் வாசித்து முடித்த ஷோபாசக்தியின் 'Box கதைப் புத்தகம்' நாவலைத் தாண்டி, (ஏறக்குறைய இரண்டரை வருடங்களான பின்னும்) தமிழகத்தில் இருந்து எந்த ஒரு நாவலும் வரவில்லை என்பதை என் வாசிப்பின் மீதிருக்கும் நம்பிக்கையில் வைத்துச் சொல்வேன். அதைத்தாண்டியே இன்னும் போகமுடியாது, பேசுவது என்னவோ தாங்கள் மட்டுமே இலக்கியம் வளர்க்கின்றோம் என்றால் என்னைப் போன்றவர்களுக்கு விசர் வராதா என்ன?
'Box கதைப் புத்தகத்திற்கு அடுத்த நிலையில் என் வாசிப்பில் வைத்திருக்கும் குணா கவியழகனின் 'அப்பால் ஒரு நிலத்திற்கோ' அல்லது ஜெமோவும் ஒரு முக்கிய நாவலாகச் சொன்ன சயந்தனின் 'ஆதிரை'க்குக் கூட நிகராக, தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் எந்த நாவல் வந்திருக்கின்றது எனச் சொன்னால் நானும் மகிழ்ச்சியடைவேன். இன்றைக்கும் ஜெமோ தனது தளத்தினூடாகவும், தன் விஷ்ணுபுர வாசகர் வட்டத்தினாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு முயன்றுகொண்டிருந்தாலும் அவரின் வளையத்திற்குள் இருந்து வந்த எந்தப் படைப்பாளி இதுவரை சாதித்திருக்கின்றார்?இலக்கியம் என்பது அடித்து கனியவைப்பதல்ல, அது தானாய் அவரவர்களிடத்தே கனிவதுதான் என்று ஜெமோவிற்குத் தெரியாது இருக்குமா என்ன?

(Dec 21, 2017)