கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரஞ்சித்-ரஜினி ‍-காலா-தூத்துக்குடி

Tuesday, June 09, 2020

சென்ற வருடம் எனக்குப் பிடித்த படைப்பாளியொருவரைச் சந்தித்திருந்தேன்.  அப்போதுதான் 'காலா' திரைப்பட போஸ்டர்  முதன்முதலில் வந்திருந்தது. ரஜினி ஜீப்பில் மேல் அமர்ந்திருக்க அவரது கால் நம்பர் பிளேட்டைத் தொடுவதாக கீழே தொங்கியபடியிருக்கும். இந்த நண்பர், அம்பேத்கரின் வாகன இலக்கத்தை இப்படி ரஜினியின் காலால் 'காலா' அவமானப்படுத்துகிறது என்றார். அதன் நீட்சியில் ரஞ்சித், ரஜினியின் கபாலி, காலா என பேச்சு நீண்டபடியிருந்தது. தன்னையொரு தலித் படைப்பாளியாக எவ்வித தயங்குமுமின்றி முன்வைக்கும் நண்பர், ரஞ்சித் ரஜனி படங்களை இயக்குவது பற்றி விமர்சித்துக்கொண்டேயிருந்தார். நானும் எதிர்முனையில் இருந்து ரஞ்சித்தை கைவிடாது அவர் சார்பாகப் பேசிக்கொண்டிருந்தேன். அஃதொரு நட்புமுரண் உரையாடல், நண்பரும் தலித்தாக இருந்தபோதும் அப்படி ரஞ்சித் படங்கள் மீது விமர்சனங்கள் வைத்தது அவரில் இன்னும் மதிப்பை உயர்த்தியிருந்தது என்பதும் உண்மையே.

அவரின் முக்கிய விமர்சனம், ரஞ்சித் தனது அரசியலை ரஜினி போன்ற ஒருவரினூடாக முன்வைக்கக்கூடாது என்பது. நான் பிறிதொருதிசையில் நின்று ரஞ்சித் தனது குரலை அது பரவலாகக் கேட்கக்கூடிய ஊடகம்/விம்பத்தினூடாகப் பேசுகின்றார் என்பது. இற்றைவரை தலித் படைப்பாளிகளையே நுழையவிடாத சினிமா உலகத்தினுள் நுழைந்து ரஞ்சித்  செய்துகொண்டிருப்பது ஒருவகையில் பெரும் பாய்ச்சல் என்றும், இலக்கிய உலகில் தலித் இலக்கியம் என்று ஏற்கனவே அழுத்தமாகத் தடம் போடப்பட்ட பாதையிற்குள் நின்று, அதற்கு நிகராக சினிமாவிற்குள் தலித்தியத்தைப் பார்ப்பது சரியான மதிப்பீடில்லை என்று வாதிட்டுக்கொண்டிருந்தேன்.

மேலும் நவீனத்துவ கால 'இலட்சியவாதத்தை' எல்லாம் நாம் இப்போது பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால். ரஞ்சித் போன்ற நமது நட்புசக்திகளையெல்லாம் எதிர்முனையில் தள்ளிவிடுவோம் எனவும் சொல்லியிருந்தேன். மற்றும்படி ரஞ்சித் மீதான உங்கள் சில விமர்சனங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடிகிறது, ஆனால் அது ரஜினியை ரஞ்சித் பாவித்துக் கொண்டிருக்கின்றார் என்பதற்காய் மட்டும் ரஞ்சித்தை இப்போது விமர்சிப்பது அவசியமில்லை என்பதே என்னுடைய நிலைப்பாடெனச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

முக்கியமாய் தலித்துக்களுக்கோ, அவர்களின் வாழ்வியலுக்கோ, அவர்களைப் பற்றிய ஓர் உரையாடலுக்கோ இயல்பான சூழ்நிலையை அமைத்தே தராத தமிழ்ச்சினிமாச் சூழலில் ரஞ்சித்தின் நுழைவும், விரும்பியோ/விரும்பாமலோ ரஜினி இணைந்து ரஞ்சித்துடன் இரண்டு படங்களில் அடுத்தடுத்து பணியாற்றுவதோ முக்கியமான திறப்பென்பதே என்னுடைய அன்றையதும் இன்றையதுமான நிலைப்பாடாக இருக்கிறது.

சென்ற வருடம் இப்படி ரஞ்சித்தை விமர்சித்து காரசாரமாய் உரையாடிய நண்பர், ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புகைப்படம் போட்டு தம்பி ரஞ்சித்தென காலா படத்திற்கு வாழ்த்தியிருப்பதை இப்போது பார்த்தேன்.

ஆக, காலா படத்தில் ரஞ்சித்தின் வெற்றி என்பதைவிட, ரஞ்சித் பேசிய அரசியல், இப்படியாக  சென்ற வருடம் ரஞ்சித்தை விமர்சித்த  இந்த நண்பரையே இணைய வைத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். அதையே இங்கே முக்கியப்படுத்த விரும்புகின்றேன்.


ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' படமே எனக்குப் பிடித்தமானது. 'கபாலி' என்னைக் கவரவில்லை. 'அட்டைக்கத்தி' இன்னும் பார்க்கவில்லை. ஆக இப்படி ரஞ்சித்தின் படங்களையே ஒழுங்காகப் பார்க்காத எனக்கு ரஞ்சித்தை விட்டுக்கொடுக்கக்கூடாதென்பதற்கு அவர் பேசும் அரசியலும் அவர் வளர்ந்து/வந்த சூழ்நிலையையுமே எனக்கு முக்கியமாகப்பட்டது. இப்போது ரஞ்சித் போட்டுக்கொடுக்கும் பாதையினூடு இன்னொரு புதிய இளைஞர் அலை தனக்கான அரசியலைப் பேசியபடி திரையுலகினுள் உள்ளே நுழையக்கூடும். அப்படி நுழைவதே ரஞ்சித்தின் உண்மையான வெற்றியாக இருக்கும்.

'காலா'வை முதல்நாளன்றே பார்த்துவிட்டேன். அதுபற்றி எனக்கு mixed feelingsயே உள்ளது. அதாவது அது பேசும் அரசியல் மிக உவப்பானதாகவும்,   அதேவேளை திரைப்படங்களுக்கென்றே தனித்துவமாய் இருக்கும் கலை அமைதி குறித்து சிக்கலான பார்வையும் எனக்கு இதில் உள்ளது. அதை இப்போது விரித்துப்பேசுதல் அவசியமுமற்றது. ஆறுதலாய் 'காலா' அலை அடித்தோயும்போது உரையாடலாம்.

ஆனால் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்போல சினிமாவிற்குள்ளும், வெளியே தந்திரமாக அரசியல் பேசிக்குழப்பங்களை ஏற்படுத்தும் ரஜினியை, ரஞ்சித் இதில் 'வைச்சுச் செய்திருக்கின்றார்' என்றே கூறுவேன்.

ரஞ்சித்திடம் ஒரு கேள்வி:
'காலா' படம் வந்தவுடன் (அல்லது முதலோ தெரியவில்லை) ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் ஒருவர் கேட்பார்...நீங்கள் இப்படி அரசியல் பேசும் திரைப்படங்களை எடுப்பவர் என்கின்றபோது, அதைவிடுத்து உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆவணப்படங்களை எடுக்கலாமே எனக் கேட்பார். அப்போது நீங்கள் அருமையான பதிலைச் சொல்லியிருப்பீர்கள். எங்கள் மக்களிற்குள் போய் ஆவணப்படங்களை எடுக்கலாந்தான். ஆனால் அது ஒருபோதும் பரவலாகப் போய்ச் சேரப்போவதில்லை. அதைவிட இப்படியே  எவ்வளவுகாலந்தான் எதையும் மாற்றாமல் ஒடுக்கப்பட்டவர்களிடம் போய் உரையாடிக்கொண்டிருப்பது. நாங்கள்  நம்மை ஒடுக்குபவர்களிடம் அல்லவா மாற்றம் வேண்டுமெனில் பேசவேண்டும். ஆகவேதான் திரைப்படங்களாய், என் அரசியலைப் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனக் கூறுவீர்கள். அந்தப் பதில் எனக்கு மிகப்பிடித்த குரல். மாற்றங்களை ஏற்படுத்துவதற்காய் அதிகாரத்தை நோக்கி  பேசுவதற்காய்  ஊடகம்/சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்துவதையும்,  பிறரது இசை/நாடகம்/ஆவணப்படங்களுக்கு ஆதரவளிப்பதன் ஊடாகவும் அதை நீங்கள் செய்து காட்டியும் வருகின்றீர்கள்.

இப்போது என்னுடைய கேள்வி என்ன என்றால், அதிகாரத்திற்கு நெருக்கமாய், ஒரு அபத்தமான குரலாய், விரைவில் தானே ஒரு அரசியல் அதிகாரமாய் மாறிவிடத்துடிக்கும் ரஜினியை உங்களின் 'காலா' திரைப்படம் ஒரு சிறுதுளியாவது தீண்டியிருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆமெனில், இந்தத் திரைப்படத்தில் நடித்த சூட்டோடு சூடாக 'காலா' முன்வைக்கும் அரசியலுக்கு முற்றிலும் எதிரான திசையில் நின்று, எப்படி ரஜினியால் தூத்துக்குடி சம்பவம் குறித்து இப்படிப் பேசியிருக்கமுடியும்?

...........................

(ஜுன், 2018)

என்னைப் போன்ற யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளல்

Sunday, June 07, 2020

சில நாட்களுக்கு முன் தற்செயலாய் ஒரு செய்யுளை வாசித்திருந்தேன்.  நீங்கள் நினைப்பது சரிதான் ,  அது ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் . அந்தப் பாடல் தந்த பரவசத்தில் ஒரு கதை எழுதுவதற்கான விதை இதற்குள்ளே இருக்கிறதேயென்று அதன் மூலத்தைத் தேடிப் போனபோது இறுதியில் சென்று வீழ்ந்தது 'யாழ்ப்பாண வைபவ மாலை'யில்.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றை  (பிற பகுதிகளையும் தொட்டும்) நாம் ஆதியில் இருந்து வாசிக்கக் கூடியதான ஒரு நூலாக மாதகல் மயில்வாகனத்தார் எழுதிய இந்நூலே இருக்கின்றது. ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்தில் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை போர்த்துக்கேயரிடமிருந்து (பறங்கியரிடமிருந்து) ஒல்லாந்தார் ஆட்சியைக் கைப்பற்றும் காலம் வரை நடந்த நிகழ்வுகளை விபரமாகப் பதிவு செய்கிறது.

இந்த நூலை ஏற்கனவே மேலோட்டமாக வாசித்ததாலும் இதுவரை 'எழுததெண்ணி' இதுவரை வாசித்திருக்கவில்லை. ஒரு பாடலுக்காய் உள்நுழைந்தவன், பின்னர் சிவா சின்னப்பொடி எழுதிய 'நினைவழியா வடுக்கள்' என்ற அனுபவக்குறிப்புகளும், அருளர் பிற்காலத்தில் பிதற்றிய சாதிய வெறுப்பும் நினைவு வர யாழ்ப்பாணத்தில் சாதிகள் வந்த பரம்பிய வரலாற்றை 'யாழ்ப்பாண வைபவமாலை'யில் இருந்து வாசிப்பது சுவாரசியமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் சில சாதிகள் தமிழ்நாட்டோடு தொடர்புடையவல்ல எனச் சொல்லப்படுகிறது. அவை எப்படி வரும் என்பதைப் பார்ப்பதற்காய் பிறகு 'யாழ்ப்பாண வைபவமாலை'க்கு முன்னும் பின்னுமாக இருந்த சில நூல்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன்.

'யாழ்ப்பாண வைபவமாலை' எழுத மயில்வாகனத்தாருக்கு ஆதாரமாக இருந்த நூல்களில் 'வையா பாடலும்' , கைலாய மாலை'யும் இருந்திருக்கின்றன. அவை செய்யுள்களாகவும் அன்றைய அரசர்களைப் போற்றிப் பாடுவதாகவும் இருக்கின்றன. 'யாழ்ப்பாண வைபவமாலை'யில் தான் முதன்முதலில் அரசர்கள், ஆதிக்கசாதியினர் மட்டுமில்லாது பிற சாதிகளைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு 'வையா பாடலையும், கைலாய மாலை'யும் படித்தபின் 'யாழ்ப்பாண வைபவமாலை' யை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களையும் தேடத் தொடங்கினேன்.

ஆச்சரியமாக ஞானப்பிரகாச சுவாமிகள் 'யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' என்று நூலை எழுதியிருக்கின்றார். இந்த நூல்தான் நேரடியாக இன்னொரு நூலுக்கான விமர்சனம் எனத் தலைப்பிலே சொல்லி அதை விமர்சித்து 'உண்மை'களை வேறுபடுத்த வந்த ஈழத்து முதல் விமர்சன நூலாகவும் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

ஞானப்பிரகாசரின் 'யாழ்ப்பாண வைபவ விமர்சனம்' எவ்வளவு முக்கியமானதோ அதைவிட நான் முக்கியமாக கொள்வது இராசநாயகம் எழுதிய 'Ancient Jaffna'.  நம்மிடையே இருந்த மிகச் சிறந்த ஆய்வாளாராக இராசநாயகத்தைக் கொள்ளலாம். அவ்வளவு ஆதாரபூர்வமாக 'யாழ்ப்பாண வைபவமாலை'யைக் கட்டுடைத்து எழுதுகிறார். ஆங்கிலத்தில் மட்டும் எழுதியதோடு நிற்காது, அதை பிற்காலத்தில் 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்று எல்லோரும் வரலாற்றை விளங்கிக் கொள்ளவேண்டுமெனத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருக்கின்றார் (நான் வாசித்தது தமிழில் இருப்பது). இராசநாயகம் இலண்டனுக்குச் சென்று 'யாழ்ப்பாண வைபவமாலை'யையும் 'கைலாயமாலை'யும் பிரதியெடுத்து வந்திருக்கின்றார். பின்னர் 'கைலாயமாலை'யைத் தனது குறிப்பிக்களுடன் மீள்பதிப்பும் செய்திருக்கின்றார்.

இராசநாயகம் இப்படி 'Ancient Jaffna' வை எழுதியபோதும், ஞானப்பிரகாச சுவாமிகளின் ஆதரவுடன் முத்துத்தம்பிப்பிள்ளை என்பவரும் 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்கின்ற இன்னொரு நூலை 1918ல் வெளியிடுகின்றார். அந்த நூலுக்கு கோலாம்பூரில் இருந்த ஒரு தனவந்தர் நிதியுதவியும் அளிக்கின்றார்.

இந்தளவு நூல்களும் யாழ்ப்பாண வைபவமாலையை மூலநூலாகக் கொண்டு எழுதப்பட்டவை. அதுபோல இன்னொரு முக்கியமான நூலாக க.வேலுப்பிள்ளை எழுதிய 'யாப்பாண வைபவ கெளமுதி' (1918) இருக்கின்றது. அது அவ்வளவு விபரமாக எழுதப்பட்டுள்ளதுடன் பிற நூல்களைப் போல  இடைநடுவில் நிற்காது,  ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அது நீண்டு செல்கின்றது.

இவை அனைத்தையும் தொடர்ச்சியாக வாசித்தபோது, பல தடவைகளில் ஒரே நூலைத்தான் வாசிக்கின்றேனோ என்கின்ற 'தோற்றமயக்கம்' தான் ஏற்பட்டது. ஏனெனில் எல்லாமே 'வரலாற்றை'க் கூறுவதால் அது அவ்வளவு மாறுபடாதுதானே இருக்கும். ஞானப்பிரகாசரும், இராசநாயகமும், முத்துத்தம்பிப்பிள்ளையும்  மாதகல் மயில்வாகனத்தார் 'யாழ்ப்பாண வைபவமாலை'யில்  உற்சாகமிகுதியில் வரலாற்றுடன் கர்ணபரம்பரைக் கதைகளைப் புகுத்தும்போது அதைத் தெளிவாக வெளியே நமக்கு எடுத்துக்காட்டுகின்றனர்.

முக்கியமான ஒன்று ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை வென்று யாழை அரசாள்கையில், பூதத்தம்பியின் கதையென மயில்வாகனத்தார் எழுதியிருப்பது உண்மையில் நிகழ்ந்ததை அல்ல.  ஆனால் நமது யாழ் சமூகமோ அந்தக் கதையையே பிறகு காலங்காலமாக கதையாகச் சொல்லி வருகின்றது. அதற்காய் பூதத்தம்பி என்பவரோ அந்திராசி என்பவரோ  வரலாற்றில் இல்லை என்பதல்ல அர்த்தம். ஆனால் பூதத்தம்பியும் அந்திராசியும் போருக்குப் போவது பூதத்தம்பியின் மனைவியான அழகவல்லியின் மீது அந்திராசி கொண்ட மையலால் அல்லவென ஞானப்பிரகாசரும், இராசநாயகமும் மறுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அந்தப் போர் நிகழ்ந்த முறையைக் கூட அவ்வளவு தெளிவாக விபரிக்கின்றனர். அந்திராசி என்பவர் ஒரு சிங்களவரே தவிர தமிழர் அல்லவெனவும்  இவர்கள் இருவரும் உறுதியாகச் சொல்கின்றனர் (ஆனால் பிறகு வந்த நமது கதைகளில் அது யாழில் இருந்த இரண்டு சாதிகளுக்குள் இருந்த முறுகலாக இந்நிகழ்வு காட்டப்பட்டிருக்கின்றது).

இன்னொன்று குளக்கோட்டனின் கதை. குளக்கோட்டனை யாழ்ப்பாண வைபவமாலை, வையா பாடலை மூலமாகக் கொண்டு மனுநீதிச் சோழனின் மகனெனச் சொல்கின்றது. ஆனால் அதை குளக்கோட்டன் அவ்வாறு மனுநீதிச்சோழனின் மகனல்ல, முற்றிலும் வேறொரு மன்னன் என இவர்கள் இருவரும் நிரூபிக்கின்றனர். குளகோட்டனே வன்னியர்களை தமிழ்நாட்டிலிருந்து கோயில் வேலைகளுக்காய் அழைப்பித்தவன் என்றும் அந்த வன்னியர்களே பிறகு இன்றிருக்கும் வன்னியை ஆள்பவர்களாக மாறியவர்கள் என்பதையும் இவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வப்போது  வன்னியர்கள் பிறகு ஈழத்துக்குக் கடல்பயணங்களில் மூலம் வந்திருக்கின்றனர். அப்படி ஒருமுறை வரும்போது வன்னியர்கள் வந்த படகுகள் கடலில் மூழ்கியதால் கரையில் காத்திருந்த வன்னியப்பெண்கள் தம் கணவர்கள் இறந்தது அறிந்து தீமூட்டி இறந்ததால் நாச்சிமார்கள் ஆகினார்கள் என்றும் அதுவே பிறகு ஈழத்தில் நாச்சிமார் கோயில்களில் வழிபாட்டுக்குரியவர்களாகவும் அவர்கள் ஆனார்கள் எனவும் இவர்கள் சொல்கின்றனர்.

அவ்வாறே இந்த ஒர் பிரதேசத்தை ஆண்ட வன்னிய தலைவர் ஒருவருக்கு உதவி செய்ய வந்த நம்பிகள் தலைவனின் மகளை ஒரு வன்னிய தலைவன் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றார். அதன் நிமித்தம் நம்பித்தலைவர் வன்னித்தலைவரை கொன்றுவிட, தன் கணவன் இறந்த துயரில் போக்கிடமின்றி வன்னித்தலைவரின் மனைவியும் தற்கொலை செய்துவிடுகின்றார். பிறகு நம்பித்தலைவருக்குத் தண்டனை கொடுக்க யாழ் அரசன் வந்து அவனைச் சிரச்சேதம் செய்து விட,  அந்தக் குடிகளே ஒதுக்கப்பட்டு சிதறுண்டபோதே யாழில் ஒரு புதிய சாதி பிறக்கின்றது (அதைப் பற்றி சிவா சின்னப்பொடியின் நூலும் தொட்டுச் செல்கின்றது).

இன்று யாழ் சாதியமைப்பைப் பார்த்தால் அதில் சில சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதற்கும் இலங்கையில் இருப்பதற்கும் தொடர்பில்லாதவை. அவற்றை இராசநாயகமும், சுவாமி ஞானப்பிரகாசரும் சிங்கள சமூகங்களிடையே இருந்து வந்த சாதிகள் என வரையறுக்கின்றனர். ஞானப்பிரகாசர் ஒரளவு இவர்கள் தமிழர் தரப்பிலிருந்து வந்திருக்கலாமென்று இரண்டு பக்கக் கதைகளைச் சொன்னாலும், இராசநாயகம் நளவர், கோவியர், தனக்காரர் போன்ற சாதிகள் சிங்களக் குடிகளில் இருந்து வந்தவர்கள் என்று உறுதியாகச் சொல்கின்றார்.

கோவியர் சிங்களக் கோவிகம ஆதிக்கசாதியில் இருந்து வந்தவர்கள் எனவும், சங்கிலியன் தனது ஆட்சியில் சிங்கள மக்களை அகற்றியபோது அவ்வாறு போக விரும்பாத சிங்களமக்களே வெள்ளாளருக்கு அடிமைகளாக மாறினார்கள் எனச் சொல்கின்றார். கோவியர் வெள்ளாளருக்குக் குறைந்தவர்  அல்ல என்பதால்தான் அன்று கோவியர் வீட்டில் நடக்கும் மணவிழாக்களுக்கு வெள்ளாளர் உணவருந்திச் செல்வது வழக்கம் என்றும், வேறு சில பழக்க வழக்கங்களையும் இராசநாயகம் முன்வைக்கின்றார். அதுபோல நளவர், கோவியர், தனக்காரர் போன்றவர்கள் சிங்களக் குடிகளிலிருந்து வந்தவர்கள் என்பதால் இன்றும் (இந்த நூல் எழுதப்பட்ட அன்றைய காலத்தில்)  இந்தச் சாதிப்பெண்கள் தாம் அணியும் சேலையை சிங்களப் பெண்கள் அணிவதுபோல சேலைத் தொங்கலைத் தோளிற்போடுகின்றனர் எனவும் எழுதுகின்றார்.

இதேபோல கோவியர்  சாதி பற்றி குறிப்பில் ஞானப்பிரகாசர் இவ்வாறு இவர்கள் சிங்களவராக இருந்திருக்கூடுமென்பதை ஒப்புக்கொண்டாலும், இன்னொரு பார்வையையும் முன்வைக்கின்றார். வெள்ளாளர்களுடன் இந்தியாவிலிருந்து குடிமைத்தொழில் செய்ய வந்த கோவியர்கள் கோயில்களைப் பராமரிப்பவர்களாக இருந்ததாகவும், பின்னர் பறங்கியர் அநேக கோயில்களை இடித்துத்தள்ளியபோது வேறுவழியின்றி உயிர்வாழ்தலுக்காய் தங்களை அடிமைகளாக வெள்ளாளர்களுக்கு விற்றுக்கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல்வேறு கட்டுடைப்புக்களைச் செய்வதற்கு இந்த நூல்களில் பல விடயங்கள் இருக்கின்றன. நான் இந்த நூல்களை புனைவுகளுக்கான புள்ளிகள் இருக்கின்றதா என்ற சுவாரசியத்துடனேயே வாசித்திருந்தேன். இதன் அர்த்தம் அதற்காய்  இவ்வாறான விடயங்கள் முக்கியம் கொள்ளக்கூடாதென்பதில்லை. இது ஆய்வாளர்க்குரியது. நாம் யாழ்ப்பாண வைபவமாலையில் இருந்தே எவ்வளவோ விடயங்களையும் கட்டுடைத்துப் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு வன்னியர்கள் வந்து ஆதிக்குடிகளோடு சண்டையிட்டு வன்னியைத் தமதாக்கின்றனர். அப்போது வன்னியின் ஒவ்வொரு திசையிலும் ஆண்டுகொண்டிருந்தவர்கள் பூர்வீகக்குடிகள் எனச் சொல்லப்படுகின்றது அவர்கள் பறையர், சாணகர், வேடவர் போன்ற தலைவர்கள் எனக்  குறிப்பிடப்படுகின்றனர். மேலும் பறையர்கள் தமிழ்ச்சமூகத்தில் சாதி தொடங்கமுன்னர் இருந்த ஆதிக்குடிகள் என்ற புள்ளிகளும் இந்த நூல்களில் சொல்லப்படுகின்றது.

இதை எல்லாவற்றையும் விட, இந்த நூல்களில் நான் கண்டு இன்னொரு சுவாரசியமான விடயங்கள் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களுக்கு இருந்த சிங்களப் பெயர்களாகும். அதை இராசநாயகமும், ஞானப்பிரகாசரும் மட்டுமில்லை யாழ்ப்பாண வைபவமாலையை ஒல்லாந்தர் காலத்தில் எழுதிய மயில்வாகனத்தாரும் ஒப்புக்கொள்கின்றார். ஒருகட்டத்தில் இதை வாசிக்கும்போது யாழ்ப்பாணத்தில் இன்று முக்கியமான நகர்களாக இருக்கும் பெரும்பான்மையான இடங்கள் சிங்களவர்க்குரியது அல்லது சிங்களவர் வாழ்ந்த பிரதேசங்கள் என்ற உண்மை புலப்படும். ஞானப்பிரகாசர் இன்னும் தெளிவாக இன்று சிங்களப் பெயர்கள் தமிழுக்கு பெருமளவில் மாற்றப்பட்டாலும், அன்றைய காலத்தில் காணிகளுக்கு இருந்த சிங்களப்பெயர்கள் இன்னும் (உயில்களில்) இருக்கின்றதென நிரூபிக்கின்றார்.

ஆக, ஒருவகையில் யாழ்ப்பாண அரசர்களினதும், ஆதிக்கச்சாதியினரும் பெருமைகளைப் பேசும் இந்த நூல்களின் மூலமே நாம் யாழ்ப்பாணம் என்பது இறுக்கமான சாதிகளுக்கும், ஒற்றைக்கலாசாரத்துக்கும் உரிய நிலப்பரப்பு இல்லையென்பதை எளிதாக நிரூபிக்க முடியும்.

ஆனாலும் என்ன ஒரு குறிப்பிட்ட யாழ்ப்பாணிகள் இதையெல்லாம் இப்போது பேசவேண்டுமா என வருவர். இன்னுஞ் சிலர் சிங்களப் பேரினவாதம் முக்கியமில்லையா என கேட்பார்கள். இன்னொரு தரப்போ நீங்கள் இருக்கும் நாட்டில் வெள்ளை இனவாதம் இல்லையாவென எப்போதும் இருக்கும் 'அந்த மற்றொன்றை'ப் பேசக் கேட்பார்கள்.

ஆக, நானும் உங்களைப் போன்ற யாழ்ப்பாணிதான்.  யாழ்ப்பாணிக்குரிய எல்லாக் குணாதிசயங்களும் கொண்டமைந்தவன் என்பதால் நீங்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை என்பதையும் குறிப்பிட்ட விரும்புகின்றேன்.
..........................................................................

இதை எழுதுவதற்கும்,  மேலதிகமாய் வாசிக்க விருப்புபவர்களுக்குமான நூல் பட்டியல்:
(1) யாழ்ப்பாண வைபவ மாலை - மயில்வாகனப் புலவர்
(2) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் -  சுவாமி ஞானபபிரகாச சுவாமிகள்
(3) Ancient Jaffna ( தமிழில் யாழ்ப்பாணச் சரித்திரம்) -  செ.இராசநாயகம்
(4) யாழ்ப்பாண வைபவ கெளமுதி - க.வேலுப்பிள்ளை
(5) யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
(6) வையா பாடல் -வையாபுரி

(Dec 14, 2019)

மெக்ஸிக்கோ -

Thursday, June 04, 2020


வாசிப்பு - 01
நாவல் பிடித்திருந்தது.இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். மிகைப்படுத்தல் என்று எண்ணி விடாதீர்கள்.முடித்து வைத்தவுடன் மனம் சின்ன நெகிழ்வுடன் என்னயறியாமல் கண் கலங்கி சில நிமிடங்கள் சிந்தனைகள் எங்கோ சென்றன.கடைசி பக்கங்களின் முடிவு எதிர்பாராத திருப்பம்.

காதலில் மூழ்கித்தோய்ந்த முழுமையான அனுபவங்களோ, பிரயாணம், பயணங்களில் பெரிதாக ஆர்வமோ இல்லாத என்னால் பெருமளவு பக்கங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் சுவாரசியமானதாகக் கடக்கக்கூடியதாக இருந்தது.

இடையிடையில் இரவு, பெண்கள்,அழகு, சமூகம் பற்றி மெலிதான நகைச்சுவையுடனான உங்கள் தத்துவப் பார்வையே அதிகம் என்னைக் கவர்ந்தது. நாவலை முடித்து சில.நிமிடங்கள் பின் எனக்கு நினைவு வந்த நாவல் "பட்டு".

நன்றி: பாரதி வடிவேல்

.........................

வாசிப்பு - 02

இது ஒரு பயணக்குறிப்பு என்பதைத் தாண்டி இத்தனை நாட்களாக மனவெளியை அரித்துக்கொண்டிருந்தது அப்படியே வெளிக்கொட்டினாற்போல வாசகனுக்குள் பொருத்தியது வெற்றி.

ஆளில்லா நள்ளிரவின் மென்காற்று போல ஒவ்வொரு அணுவாய் கலந்து அப்படியே உள்ளிறங்குமொரு போதை போல.

உணர்வுகளைப் புரட்டிப்போட்டு ஏதோவொரு ஆழத்திற்குள் மூழ்கடித்து ஒரு சாகசமே நிகழ்த்திப்போய்விட்டது. ஓரிரு இடங்களில் தொண்டைக்குழி உலர்ந்துபோனதென்னவோ மறுக்கவியலாது.  

நன்றி கயூரி புவிராசா

சென்னை புத்தகக் கண்காட்சி - 2020

Friday, May 29, 2020

சென்னை புத்தகக் கண்காட்சி என்பது தொலைவில் இருப்பவர்க்கு கிளர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அது இன்னொருவகையில் ஒரு அபத்தமான அரங்கில் நாங்கள் இருக்கின்றோம் என்ற உணர்வையும் நேரில் போகும்போது தரக்கூடியது. வாசிக்கவும், எழுதவும் விரும்பும் எனக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதென்பது பெருங்கனவாக ஒருகாலத்தில் இருந்தது. 5 வருடங்களுக்கு முன் அது முதன்முதலில் சாத்தியமாகியபோது கனவு நடந்தேறிய இதம் இருந்தாலும், அடிக்கடி கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்ற உணர்வை அது தரவில்லை. அபத்தம் எனக்கூறியது என்னவெனில் நாம் வாசித்து வியந்த பெரும் எழுத்தாளர்கள் எல்லாம், அவ்வளவு கவனிக்கப்படாத பாவப்பட்ட‌ ஜென்மங்களாக அங்கே அலைந்துகொண்டிருப்பார்கள்.

இம்முறை கண்காட்சிக்குப் போனபோது, எழுத்தாளர்களுடன் உரையாடுவதைவிட அவர்களைச் சுற்றி நடப்பதை அவதானிப்பது எனக்குச் சுவாரசியமாக இருந்தது. மனுஷ்யபுத்திரன், சாருவுக்கு எல்லாம் வாசகிகள் உண்மையிலே வருகின்றார்களா என நானும், இன்னொரு நண்பரும் வேவு பார்த்துக்கொண்டிருந்தோம். அதிக நேரம் நின்றால் மனுஷ்யபுத்திரன் எங்களைப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தளத்தில் 'உளவுபார்க்க வந்தவர்கள்' என்று போட்டுவிடக்கூடுமென வந்த நண்பர் எச்சரித்தார். சாரு நின்ற 'ஜீரோ டிகிரி' பதிப்பகத்தில் நானும்,  இன்னொரு நண்பரும் அதிரடியாக‌ நுழைந்தபோது, சாரு எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

'இலங்கையில் வாகன‌ங்கள் ஹோன் அடிப்பதில்லை' என அபத்தமாய் அவர் குமுதத்தில் எழுதியதைச் சுட்டிக்கட்டியது அவருக்குத் தெரிந்துவிட்டதோ என்று எனக்கும் சற்றுப் பயம் வந்தது. எனினும் சாருவின் அனைத்து நாவல்களையும் தவறவிடாது வாசித்தவன் என்றவகையில் அவரின் ஒரு நூலிலாவது கையெழுத்திட்டு வாங்கவேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அதை பிறகு அதை மறந்துவிட்டேன் என்பது கவலை தரக்கூடியது. மனுஷ்யபுத்திரனைச் சூழ அவ்வளவு வாசகிகள் இருக்காததுபோல, சாருவைச் சுற்றியும் அவரது குழுவினரைக் காணாதது, அவரும், அராத்தும் மட்டுமே நான் பார்க்கும்போதெல்லாம் 'அரட்டை' அடித்துக்கொண்டிருந்தது பெரும் ஏமாற்றமாய் இருந்தது. அடுத்தமுறை என் ஸ்பானிஷ் தோழியுடன் போயாவது சாருவைக் கொஞ்சம் எஸ்பஞோல் பேசிக் குளிரவைக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

தமிழகச் சூழல்தான் கண்காட்சியில் இப்படி ஈயோட்டிக் கொண்டிருக்கின்றதென நினைக்க, நமது ஈழத்து/புலம்பெயர் எழுத்தாளர்கள் இன்னும் தலைமறைவு இயக்கமாய் இருந்தார்கள். நிறையப் பேர் சென்னைக்கு வந்திறங்கியிருக்கின்றார்கள் என்று தமிழக நண்பர்கள் சொன்னார்கள்,  ஒருவரையும் காணக் கிடைக்கவில்லை. ஆனால் 'காலம்' செல்வத்தார் சென்னைக்குள் கால்வைத்தவுடன் எல்லாம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து,'வயதான பிறகும் உன் ஸ்டைலும், திமிரும் இன்னும் குறையவே இல்லை' என்ற கணக்காய் ஒரு 'டானாக' வந்து செல்வம் இறங்கினார்.

பல்வேறு அரசியல், இலக்கிய பிரிவுகள் அவரைத் தமக்கானவையாக‌ சுவீகரித்துக் கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தன. நான் அவரோடு 'டாக்ஸி'யில் திரிந்தபோது ஓர் அரசியல்வாதியைப் போல (அல்லது 'செக்கச் சிவந்த வானம்' பிரகாஷ்ராஜ் போல) இந்த விடயங்களை 'டீல்' பண்ணிக்கொண்டுவந்தார். அவர் படுகின்ற அவதியைப் பார்த்து அரசியல்வாதியின் கையாட்கள் போல, நானும் மற்றொரு நண்பரும் 'உங்களைக் கஷ்டப்படுத்தும் இவர்களைப் போட்டுத்தள்ளவா' என்று வன்முறையின் எல்லைக்கு வருமளவுக்கு அவரைச் சிலர் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

இப்படி உணர்ச்சியின் கொந்தளிப்பில் இருந்த செல்வத்தார் என்னை ஒருநாள் விடிகாலை எழும்பி வரச்சொன்னார். சரி பெரிய தலைமாட்டிவிட்டது இன்று போட்டுத்தள்ளிவிட வேண்டியதுதாதென தாடியை வருடியபடி ஒரு அடியாளின் பாவனையுடன் அவர் நின்ற விடுதிக்குச் சென்றேன். அவரோ, 'நீ நிறையப் பாவங்களைச் செய்துவிட்டாய், உன்னை இன்று சென் தோமஸ் தேவாலயத்துக்கு அழைத்துச்சென்று பாவமன்னிப்பு கேட்கச் செய்யப்போகின்றேன்' என்று அழைத்துச் சென்றார். சாந்தோமில் மன்னிப்பு 5 நிமிடங்களில் முடிந்துவிடும் என்று நினைத்த எனக்கு பிரார்த்தனை 1 மணிவரை நீள எனது பாவங்கள் இவ்வளவு நீளமா எனக் கவலை வந்துவிட்டது.

அதிலும் எப்போது இருப்பது, எப்போது எழும்புவது, எப்படிப் பாடலைப் பாடுவது என்று என்னைத் தயார்ப்படுத்துவதில் நான்பட்ட கஷ்டம் இருக்கே! ஆனால் அழகிய தமிழில் பிரார்த்தனைகளும், பாடல்களும் நிகழ்ந்தது மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. இலங்கையில் நாம் பாவிக்கும், ஆனால் இந்தியாவில் அவ்வளவு பாவிக்கப்படாத உம், உமது போன்ற பழந்தமிழில் ஃபாதர் பேசியதும், போகிப்பண்டிகையில்  எரிப்பது எவ்வளவு சூழலை  மாசுபடுகின்றது என்று சூழலியல் பேசியதும் பிடித்திருந்தது.

அடியாளாக மாறும் என் கனவை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒரு பாவியாக்கிவிட்டார் என்ற கவலையோடு செல்வத்தார் நின்ற விடுதியில் நானும் போய் உறங்கச் சென்றுவிட்டேன். அப்போது அருகில் நித்திரைக் கலக்கத்தில் இருந்த செல்வம், 'கன்னி, கன்னி' என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கே இந்த வயதிலே ஒன்றுமே ஒழுங்காக இயங்கவில்லை, இவருக்கு இந்த வயதிலும் பெண்கள் தேவைப்படுகின்றதோ என்ற  எரிச்சலே முதலில் வந்தது. கன்னி தேவையென்றால் சாந்தி தியேட்டர் பக்கமோ, பரங்கிமலை ஜோதித்தியேட்டர் பக்கமோ ஒதுங்கக்கூடும். அங்கே ஒளிந்திருந்து இவரைக் கையும் களவுமாய்ப் பிடிப்போம் என மனதினுள் திட்டம் போட்டேன்.

பிறகு தூங்கி எழுந்தபின்னும், நண்பர் தளவாய் சுந்தரத்துடனும் 'கன்னியில் அமர்ந்து போனால்தான் சொர்க்கம் போல இருக்கும் ' என்று குசுகுசுப்பதையும், நான் அருகில் போகும்போதெல்லாம் எதுவும் தெரியாதுபோல முகத்தை வைத்திருப்பதையும் கண்டேன். இவர் கன்னியைத் தேடிப்போகும்போது நான் இவரைப் பிடிக்கின்றேனோ இல்லையோ, நல்ல ஒரு துப்பறியும் கதைக்கான வித்து இதில் இருக்கின்றதென எனக்கு இன்னும் சுவாரசியம் கூடிவிட்டது.

 'எழுதித் தீராக் கதைகளில' தான் பிரான்ஸில் நிர்வாண விடுதிக்குப் போனார் என்று பார்த்தால், 'சொற்களில் சுழலும் உலகம்' என்று எழுதிவிட்டு இவருக்கு இந்த வயதில் இப்போது கன்னிகள் தேவைப்படுகிறதோ என்று எனக்குள் கறுவிக்கொண்டேன். பாவமன்னிப்பு வாங்க என்னை இழுத்துச் சென்றவர், தேவகன்னிகைகளைக் காண மட்டும் ஏன் என்னை அழைத்துச் செல்ல மறுக்கின்றார், இனி 'காலம்' இதழுக்கு எழுதுவதில்லை என்று அப்போதே தீர்மானித்துக்கொண்டேன்.

நான் அவரை இப்படி வேவுபார்க்கத் தொடங்கிவிட்டேன் என்று அவருக்குத் தெரிந்ததாலோ என்னவோ, பிறகு நான் சென்னையில் இருக்கும்வரை 'கன்னி' என்ற கோர்ட் வேர்ட்டை பாவிக்காமல் செல்வத்தார் இருந்தார். நானும் பிறகு நான்கைந்து நாட்களில் இலக்கியவாதிகளின் சகவாசம் போதுமென்று இலங்கைக்குப் புறப்பட்டுவிட்டேன்.

பிறகுதான் தெரிந்தது, அவர் 'கன்னி' என்று சொன்னது கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் என்றும், அதில் ஏறி ஜெயமோகனைப் பார்ப்பதைத்தான் நானறியாமல் செல்வத்தார் இரகசியமாகத் திட்டமிட்டார் என்பதும். அவரவர் அன்னை வேளாங்கண்ணிக்கோ, சபரிமலைக்கோ வருடந்தவறாது போவதுபோல செல்வத்தாரின் எந்த இந்திய யாத்திரையும், கன்னியாகுமரி பார்வதிபுரத்துக்குப் போகாமல் நிறைவேறுவதில்லை என்ற உண்மை எனக்கு உரைத்தது. ஜெயமோகனின் பேரால் (ஜெமோவே எழுதியிருக்கின்றார்) எத்தனையோ சிலுவைகளை செல்வத்தார் சுமந்திருக்கின்றார். ஆகவே அங்கேபோய்த்தான் செல்வத்தார் தன் 'பாடு'களை இறக்கிவைக்க வேண்டும்.

அது புரிகிறது.

ஆனால், என் பாவத்தை இறக்கிவைக்க தேவாலயத்தை விட‌, ஒரு தேவமங்கையின் ஆசிர்வதிக்கும் இதமான கரங்கள்தான் பொருத்தமானது என்று தெரியாத செல்வத்தார் இலக்கிய ஊழியம் செய்துதான் என்ன பயன்?

.................

(Feb 06, 2020)

இயற்கையின் உபாசகர்கள்

Wednesday, May 27, 2020


எல்லவில் இருக்கும் மலையில் (Ella Rock) ஏறுவது அவ்வளவு எளிதானதல்ல என்பது ஏறும்போதுதான் தெரிந்தது. அதற்கு முதல் எல்ல இரெயின் ஸ்ரேஷனின் தண்டவாளத்தால் நடந்து அடுத்த ஸ்ரேஷனான கிதல் எல்ல வரை 3 கிலோமீற்றர்கள் நடக்கவேண்டும். இடையில் ரெயின் வருகின்றதா என அவதானமாக நடக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை அள்ளிக்கொண்டு போய்விடும்.

இதன்பிறகும் ஒரு 5 கிலோமீற்றர்கள் தேயிலைத் தோட்டங்கள், சற்றுச் செங்குத்தான சிறு பாறைகளுக்கிடையில்தான் மேலே ஏறிப்போகவேண்டும். நாங்கள் ஏறியதுபோல வெயில்நாட்களாக இருந்தால் நிறையத்தண்ணீரும், இடையில் சாப்பிடுவதற்கு பழங்கள், சொக்கிலேட்டுக்கள் எடுத்துச் செல்லுதல் பயணத்தைக் களைப்படையாமல் வைத்திருக்கும். இது எல்லாவற்றையும்விட  எங்களைப்போல அல்லாது, வெயில் வரமுன்னர் அதிகாலையிலேயே  மலையில் ஏறினால் அற்புதமான சூரிய உதயத்தையும் பார்க்கமுடியும்.

நானும் நண்பரும் நடந்துபோகும்போது ரெயின் இடையில் வந்தபோது, அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த பெண்மணி எச்சரிக்கை செய்ய நான் பயந்து போய் தண்டவாளத்தின் கரையில் பதுங்கிக்கொண்டேன். எங்களுக்குப் பின்னால் நடந்துகொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப்பெண்ணோ, காதலன் ரோஜாப்பூவுடன் எதிரில் வந்துகொண்டிருப்பதுபோல மிக நிதானமாக எதிரில் வரும் ரெயினை எதிர்கொண்டு செல்ஃபியை எடுத்துவிட்டு கரைக்குப் பாய்ந்தார்.

இப்படி தண்டவாளங்களுக்கிடையில் நடந்தபோது நண்பர் காலைமாறி கற்களுக்குள் வைக்க, அவரின் பாதம் பிரண்டது. அவ்வளவு வலி அவருக்கு. இனி தொடர்ந்து நடக்கமுடியுமா என்பதே சந்தேகமாய் இருக்க, எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வழிகாட்டி சிங்கள இளைஞன், தன் வசம் வைத்திருந்த வலி கொல்லும் ஸ்பிரேயை அடித்துவிட்டுச் சென்றார்.
நண்பர் வலியோடு வர ஏறிச்சென்று பார்த்த பயணம் இது. திரும்பும் வழியில் வலிதாங்காது அவர் துடித்து, சப்பாத்தைக் கழற்றிப் பார்ப்போமா எனக் கேட்க, இல்லை இப்போது பார்த்தால் கீழே இறங்கவே முடியாது, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களெனச் சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்திருந்தேன். கீழே வந்து தொடர்ந்து நடக்காமல் ஓட்டோ ஒன்றைப் பிடித்து பார்மஸிக்குப் போனால் கால் அப்படி வீங்கிப்போயிருந்தது. இவ்வளவு வலியோடு எப்படி நடந்தார் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மலையில் ஏறுவதற்கு, கிதல் எல்லவுக்கு அருகில் போகும்போது ஓர் அருவி பாய்ந்துகொண்டிருந்தது. நண்பரோ, அமைதியான இந்த அருவியில் நாளை காலை வந்து நீராடுவோம் என்றார். நாங்கள் திரும்பும்வழியில் ஓர் அழகான பெண் அந்த அருவியில் குறுக்குக்கட்டோடு குளித்துக்கொண்டிருந்தார். அர்ஜூனனுக்கு மாமரத்தில் இருந்த மண்கிளி மட்டுமே இலக்காகத் தெரிந்ததுபோல், எனக்கும் அவருக்கு அருகில் அவரது கணவர் இருப்பது கண்ணுக்குத் தெரியாது, அவர் மட்டுமே தெரிய ஏதோ ஒரு உற்சாகத்தில் கையை அசைத்து ஹாய் சொல்லிவிட்டேன். அவர் அதிர்ச்சியில் முதலில் உறைந்துபோனாலும், பிறகு மெல்லியதாய்ப் புன்னகைத்தார். அவரது கணவர் இருப்பது தெரிந்து நான் பயத்தில் உறைந்துபோய் அந்தப் பக்கமாய் மீண்டும் பார்க்காது தண்டவாளத்தில் ரெயின் வந்தாலும் பரவாயில்லை என்று அதற்குள் பாய்ந்துவிட்டேன்.

'அடுத்த நாள் அருவியில் குளிக்கும் எனது ஆசை உன்னாலே இப்போதே கருகிவிட்டது' என நண்பர் தொடர்ந்து திட்டியபடி வந்தார். இலக்கியத்தில் அழகியல், இரசனை என்றால் எல்லோரும் பாராட்டுகின்றார்கள், நிஜ வாழ்க்கையில் அப்படி இருந்தால், இளநீரைச் சீவுவது போல அனைவரும் கத்தியோடு வந்துவிடுகின்றார்கள் என்பதுதான் எவ்வளவு துயரமானது.

செங்குத்தான மலையேற்றத்தில் நாங்கள் கஷ்டப்பட்டபோது, எங்கிருந்தோ வந்த ஒரு நாய் எங்களுக்கு உதவி புரிந்தது. அதிலும் நண்பர் கால் வேதனையோடு தவிர்த்தபோது, இன்னும் கொஞ்சத்தூரந்தான் இருக்கின்றதென எங்களுக்கு வழிகாட்டி போல முன்னே சிறிதுதூரம் ஓடிவிட்டு வாலை ஆட்டிக்கொண்டு அவர் காத்துக்கொண்டிருப்பார். அப்படி அவரின் உற்சாகத்தைப் பார்த்துத்தான் நாம் கஷ்டத்தைக் குறைத்து எங்களால் ஏறவேண்டியிருந்தது. மேலே அழகிய இயற்கைக்காட்சி விரிந்திருந்தது. நிறைய அந்நியநாட்டுப் பயணிகள் இருந்து அடுத்து எங்கு போவதெனக் கலகலவென்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் அமைதியாக இருந்து இயற்கையை இரசிக்க தனியிடத்தைத் தேடிப் போகவேண்டியிருந்தது. மேலே ஒன்றிரண்டு கடைகளில் உடனேயே பழங்களைக் கொண்டு சுவையான ஜூஸைகளையும், தண்ணீரையும் விற்றுக்கொண்டிருந்தார்கள். எல்லயின் மலைக்கு ஏறியவர்கள், நேரமிருப்பின் அதன் இடதுபக்கம் இருக்கும் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும் சிறுகாட்டினிடையே நடந்து பார்க்கலாம். எத்தனையோ தசாப்தங்களாக இருக்கக்கூடிய மரங்களினூடாக உலாவுவது என்பதும், அவற்றைத் தழுவிக்கொள்வது என்பதும் மிகுந்த ஆனந்தம் தரக்கூடியது.

இப்படி இந்த மலையேற்றத்தில் பல்வேறு சாகசங்களைச் செய்தாலும், நான் இதைவிட  9 Arches Bridgeற்குப் போவதே எல்ல வந்ததன் இலட்சியமெனச் சொல்லி அந்தரப்பட்டுக் கொண்டிருந்தேன். நண்பரோ, 'இப்படி கடினமான ஒரு  மலையேற்றம் செய்திருக்கின்றோம், அதைவிட 10 நிமிட நடையில் அந்த பாலத்திற்குப் போவதில் என்ன சாதனை இருக்கப்போகின்றது' என்றார். நானோ, 'எல்லவில் மலையேற்றம் செய்தேன் என்று, யாழ்ப்பாணத்தில் ஏதேனும் பற்றைப்பக்கமாய் நின்று படம் எடுத்துப்போட்டால் கூட சனம் நம்பிவிடும், ஆனால் எல்லவிற்கு வந்து 9 Arches Bridge இற்குப் போகவில்லை என்றால் நான் எல்லவிற்குப் போகவில்லை என்றே சனம் சொல்லி எள்ளல் செய்யும். அதுவும் இந்த Instagram எல்லாம், இலங்கை என்றால் எல்ல போகவேண்டும், அதிலும் இரெயின் வரும்போது 9 Arches Bridgeஇல் இருந்து ஒரு படம் 'க்ளிக்'க வேண்டும். இல்லாவிட்டால் மதிப்பே இல்லாதுபோய்விடும்' என்றேன்..

அடுத்தநாள் நண்பரின் கால்வலி மறையாத காரணத்தால், அதிகதூரம் நடத்தல் சாத்தியமில்லை என்பதால் ஒரு ஓட்டோவில்  பாலத்துக்குக் கிட்டவாகப் போய் இறங்கினோம். நாங்கள் அந்தப் பாலத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான்  ரெயினொன்று பாலத்தினூடாகக் கடந்து கொண்டிருந்தது. அடுத்த ரெயின் வரும்வரை அங்கே காத்திருந்து படம் எடுக்க, ரெயினிற்கு முன் குதித்துத் தற்கொலை செய்ய வரும் ஒருவரால்தான் அவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கமுடியும்.  நாங்கள் அருகில் சுடச்சுட அவித்துக்கொண்டிருந்த சோளப்பொத்திகளை வாங்கிச் சுவைத்தபடி, ஒரு Instagram  உலகம் எப்படி புகைப்படங்களினால் இயங்குகின்றது என்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினோம்.

இறுதியில் நானும் அந்த அருட்பெருஞ்சோதியில் கலந்து  9 Arches Bridge இற்கு அருகில் நின்று படம் எடுத்து, இலங்கைக்குப் போயிருக்கின்றேன் என்று உலகுக்கு நிரூபிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்தேன்.
................................

(Feb, 2020)

9 grader nord - இசைக்குழு

Tuesday, May 26, 2020


9 grader nord (நி கிராதர் நூர்) என்பது நமது தமிழ்ப் பிள்ளைகள் முதன்மையாக இருக்கும் ஓர் இசைக்குழு (band). எப்போதும் தனித்துவமான திசைகளைக் கலைகளில் தேடுபவர்களை எனக்கு நிறையப் பிடிக்கும். அவர்கள் தமக்கான பிரபல்யம், பொருளாதார வசதிகள் பற்றி அவ்வளவு கவலைப்படாது தம் இயல்பில் கலையில் ஊறியிருப்பார்கள். மாயா (M.I.A),அப்படித்தான் ஒருகாலத்தில் "Galang" என்ற single trackயோடு வந்தபோது அவர் மீது பிடித்த பித்து இன்னும் இறங்காது எனக்குள் இருக்கிறது.

பழக்கப்பட்டுப்போன இசைக்கும், பரிட்சயமான குரல்களுக்கும் பழகிய நமக்கு புதிய முயற்சிகள் முதலில் உள்ளே இறங்காது. மாயாவைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது இதெல்லாம் இசையா என கேலி செய்து கொண்டிருந்த நண்பரை, மாயாவின் நேரடி இசை (Live ) நிகழ்வுக்குக் கூட்டிக்கொண்டுபோனதன்பின் மாயாவின் இரசிகராக அவர் மாறியிருந்தார். இசை மட்டுமில்லை, மாயா அந்த அரங்கை எப்படி ஒரு intimate இசை நிகழ்வாக மாற்றினார் என்பதை நேரில் கண்டுகளித்தவர்கள் நாங்கள்.

அதுபோலவே 9 grader nordஇன் இசையை இப்படி ஒரு அறைக்குள் இருந்து கேட்பதை விட, அவர்கள் பாடும்போது அரங்கில் நேரில் இருந்து கேட்பது வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்லுமென நம்புகின்றேன். போலச் செய்தல் இலக்கியம் உள்ளிட்ட எந்த கலையிலும் செய்தல் எளிது. அரிதானவர்களே அதைத் தாண்டி, புதிதாய் எதையோ தேடிப் போகின்றார்கள். அப்போது அவர்களின் படைப்புக்கள் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியுடன் அவர்களை நம் வாழ்வில் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரமுடிகிறது.


எட்வாட் முங்கின் (Edward Munch) ஓவியமான 'அலறலை'ப் (scream) போல இன்னொரு பிரல்யம் வாய்ந்த ஓவியம் 'நோயுற்ற குழந்தை' (sick child). இந்த ஓவியம் முங்கின் வாழ்வோடு மிகுந்த நெருக்கமுடையது. அவரும் அவரது சகோதரியும் காசநோயால் பதின்மத்தில் பாதிக்கப்பட்டு, முங் தப்பிவிட, சகோதரியோ அவரின் 15வயதில் மரணமாகின்றார். இந்த நிகழ்வு முங்கின் வாழ்வு முழுதும் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருந்தது. முங்கின் 'நோயுற்ற குழந்தை' ஓவியத்தில் இருப்பது அவரது சகோதரி. இந்த ஓவியத்தின் மூலம் இறவாத்தன்மையாக அந்த நிகழ்வை முங்க் மாற்றியிருக்கின்றார்.

9 grader nord இசைக்குழு (நோர்வேஜியப் பெயரைத் தமிழாக்கினால் வருவது, உலக வரைபடத்தில் இலங்கை அமைந்திருக்கும் '9 டிகிரிஸ் வடக்கு') ஒரு சந்தர்ப்பத்தில் முங்கின் ஓவியங்களின் பாதிப்பில் ஓர் இசைக்கோர்வையைத் தயாரிக்கச் சொல்லிக் கேட்கப்பட்டபோது, இதன் முன்னணிப்பாடகரான மீரா இந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

சிறுவயதிலேயே இந்த ஓவியத்தைப் பார்த்தபோது அது தன்னை மிகவும் பாதித்தது என்கிறார். ஓவியத்தில் இருக்கும் குழந்தை ஏதோ ஒருவகையில் தனது நோயை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் அவரைப் பராமரிக்கும் பெண்ணால் அதைத் தாங்க முடியாது இருப்பதாலேயே தலைகுனிந்து நோயுற்ற குழந்தையை நேரே பார்க்காது இருக்கின்றார் என்கின்றார்.

ஆகவே, இந்த 'நோயுற்ற குழந்தை' ஒரு தாலாட்டுப்பாடலாகப் பாடப்படுகின்றது. தாலாட்டுப்பாடல்கள் பிறப்பை மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவை. வழக்கத்துக்கு மாறாக மீரா இந்தத் தாலாட்டுப் பாடல், ஒரு குழந்தை இந்த உலகைவிட்டுப் போகும்போது கடைசியாகப் பாடுகின்ற பாடல் என்கின்றார்.

நோர்வேயின் பிரபல்யம் வாய்ந்த முங்கின் ஓவியமும், நமது தமிழ் மொழியும் இணைந்து இசையாகும்போது அது யூனிவேர்சல் நிலையை அடைகிறது. அதுவும் நிலமெங்கும் பனி மூடத்தொடங்கி மனசும் பரிசுத்தமாகும் நிலையில் கேட்பதற்கு மிகப் பொருத்தமான பாடல் இது என்பேன்.

...........
(1) 'The Sick Child' ஐக் கேட்பதற்கு
https://www.youtube.com/watch?v=TIKIjFr0bVQ

(2) 9 grader nord இன் புதிய இசைத்தொகுப்பான "Jaffna" விலுள்ள பத்துப்பாடல்களையும் கேட்க sportify இன் இந்த இணைப்பைத் தட்டுங்கள்.
https://open.spotify.com/album/05w6PGViE6ZQZQMOXZjn96

(Dec, 2019)

கியூபாப் பயணம்

Sunday, May 24, 2020

கியூபாவில் புரட்சி நடந்து இன்று  கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் ஆகப் போகின்றதென்றாலும், கியூபா அதன் தூய்மையான கடற்கரைகளுக்காகவும், ஹாவானாவிலிருக்கும் புராதன நகருக்காகவும் இன்று அதிகம் நினைவு கொள்ளப்படுகின்றது. ஸ்பானியக் கலாச்சாரத்திற்குரிய இசையும், உணவும், மதுவும் கியூபாவின் எந்தத் தெருவிற்குள் நுழைந்தாலும் நாம் எளிதாக அவதானிக்க முடியும்.

கியூபாப் புரட்சியின்போது ஃபிடல் காஸ்ரோ, சே குவேரா உள்ளிட்ட எண்பதிற்கும் மேற்பட்டவர்கள் 'கிரான்மா' என்கின்ற படகில் மெக்ஸிக்கோவிலிருந்து புறப்பட்டு கியூபாவை வந்தடைக்கின்றார்கள். எனினும் அவர்களின் தரையிறக்கம் அவ்வளவு சுமூகமாய் நடக்கவில்லை. அவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்து நின்ற பாட்டிஸ்டாவின் படைகளுடன் சண்டை மூள்கின்றது. இறுதியில் சதுப்புநிலங்களிலும், உவர்நில மரங்களிடையேயும் பதுங்கி ஒளிந்து தப்பிவந்தவர்கள் பன்னிரண்டு பேர்கள் மட்டுமே. பெரும் எண்ணிக்கையான தோழர்களை இழந்து புரட்சியிற்கான முதலடியே பெரும் சறுக்கலாய் இருந்தபோதும், தமது கனவுகளோடு தொடர்ந்து மலைகளில் ஒளிந்திருந்து புரட்சியை இவர்கள் நடத்திக்காட்டியது ஒரு அதிசயம் போலத்தான் இன்று தோன்றும்.

கியூபாவின் கிழக்குக்கரையில் தரையிறங்கித் தப்பிப் பிழைத்தபின், ஒரு கெரில்லா இயக்கமாய் மூன்றாண்டுகளாய் வளர்ந்திருக்கின்றார்கள். பின்னர், சான்டா கிளாராவில் பெரும் தாக்குதலை சேயின் தலைமையில் இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வென்றபோது, கியூபாவில் புரட்சி சாத்தியமென்கின்ற நிலை வந்துவிட்டது.

இதற்கு முன் 1953ல் காஸ்ரோவும், அவரது தோழர்களும், ஜூலை 26ல் சாண்டியகோ டீ கூபாவில் ஆயுதத் தாக்குதலை நடத்திப் பிடிபடுகின்றார்கள். சட்டம் பிடித்த காஸ்ரோ, தனக்காகவும் நண்பர்களுக்காகவும் தானே வாதாடுகின்றார். அதிலேயே 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற பிரபல்யமான வாக்கியத்தைச் சொல்கிறார். எனினும் ஃபிடல் உள்ளிட்ட பலருக்கு பத்து வருடச் சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. பிறகு இரண்டு வருடங்களாகத் தண்டனை குறைக்கப்பட்டு காஸ்ரோ மெக்ஸிக்கோ சென்று, சே, ராகுல் உள்ளிட்ட தோழர்களுடன் திரும்பிவந்து,  'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் புரட்சியை நடத்திக் காட்டியது கடந்தகால வரலாறு.

ஒரு காலத்தில் பாட்டிஸ்டாவின் ஜனாதிபதி வாசல்தலமாக இருந்த  'மாளிகை' இன்று புரட்சியின் மியூசியமாக (Museum of the Revolution)ஹாவானவில்  இருக்கின்றது.1957 மார்ச்சில், இங்கே மாணவர்கள் ஜனாதிபதி பாட்டிஸ்டாவை கொலை செய்த எடுத்த முயற்சி தோற்று, கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜோஸே மார்டி உள்ளிட்ட பல மாணவர்கள் கொல்லப்படுகின்றார்கள். இன்றும் இந்த இடத்தில் அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் அடையாளத்தைக் காணமுடியும். இந்தச் சம்பவம் ஹெமிங்வே பற்றிய திரைப்படமான "Papa: Hemingway in Cuba"வில் கூட சித்தரிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
பின்னர் 1959 ஃபிடல் காஸ்ரோ தலைமையிலான படை ஹாவானாவிற்குள் நுழைந்தபோது பாட்டிஸ்டா இந்த மாளிகையிலிருந்தே தப்பியோடுகின்றார். . இப்போது ஹாவானாவிலிருக்கும் தேசிய நூதனசாலையில் புரட்சியின்போது (ஜூலை 26 இயக்கம்)பாவித்த பொருட்களைக் காட்சியிற்கு வைத்திருக்கின்றனர்.

கியூபா என்கின்ற நாடு, வெளியுலகிற்கு ஒரு புரட்சியின் அடையாளமாக இன்னும் வீழ்ந்துவிடாது இருந்து கொண்டிருக்கின்றதென்றால், இலக்கிய வாசகர்களுக்கு கியூபா என்றவுடன் , ஹெமிங்வே நீண்டகாலம் வசித்த ஒரு நாடு என்பதும் நினைவிற்கும் வரும். இன்றும் ஹெமிங்வே தங்கி நின்ற ஹொட்டல், அவர் அடிக்கடி மதுபானம் அருந்திய பார் என எங்கும் ஹெமிங்வேயின் நினைவுகளை அழியவிடாமல் நினைவுபடுத்தியபடி இருக்கின்றனர்.

ஹெமிங்வேயிற்குப் பிடித்த பார்களில் ஒன்று Floridita. அவர் இறந்தபின் அவரின் இருப்பை நினைவூட்ட, அவர் அமர்ந்து மது அருந்துவதுபோல சிலை ஒன்றை வடிவமைத்திருக்கின்றனர். ஹெமிங்வேயிற்காகவே சனம் அலை போல இங்கு குவிந்து கொண்டிருந்தபோதும், அவரின் 'சாகச' எழுத்துக்குள் ஒளிந்திருக்கும் அமைதியைப்போல ஒரு பெண் ஹெமிங்வேயுடன் அமர்ந்து நிதானமாய் தனக்கான பானத்தை அருந்திய கணத்தைத் தரிசிக்க முடிந்தது அழகு வாய்ந்த தருணம் எனத்தான் கூறவேண்டும்..

அதேபோல, ஹாவானாவிலிருக்கும் Ambos Mundos ஹொட்டலில், எர்னெஸ்ட் ஹெமிங்வே 1930களில் அதிக வருடங்களைக் கழித்திருக்கின்றார். ஸ்பானிய உள்நாட்டுப்போரை நேரடிச் சாட்சியாகப் பார்த்திருந்த ஹெமிங்வே, இந்த இடத்திலிருந்தே 'யாருக்காக மணி ஒலிக்கிறது' (For Whom the Bell Tolls) என்கின்ற நாவலை எழுதத் தொடங்கியிருக்கின்றார். இன்று இந்த ஹொட்டலின் முதல்தளத்தில் ஒருபகுதி ஹெமிங்வேயின் நினைவுகளுக்காகவே என ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

ஹாவானாவின் அழகுகளில் ஒன்று எங்கும் நிரம்பியிருக்கும் இசை. அநேகமான உணவகங்களில் live band இருக்கும். ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எங்களுக்காக பாடிய பாடல்களிடம், ஒரு புரட்சிப் பாடலைப் பாட முடியுமா என்றபோது, சே குவேரா பற்றிய பாடலைப் பாடினார்கள். ஆர்ஜெண்டீனா என்கின்ற ஒரு தொலைதூர நாட்டில் பிறந்து,  இன்னொரு நாடான கியூபாவிற்கு வந்து புரட்சியிற்குத் துணை நின்ற சே குவேராவை நினைவூட்டாத ஓரிடம் இல்லையென்கின்றமாதிரி எங்கெங்குகாணினும் சேயே கியூபாவில் நிறைந்திருக்கின்றார்.

இதமான காலநிலை, அழகான கடற்கரைகள்,  புராதன நகர்கள்,  புரட்சியின் அடையாளங்கள், இனிமையான இசை, அருமையான உணவு என்பவற்றை அனுபவிக்க கியூபாவிற்கு ஒருமுறை பயணித்துப் பார்க்கலாம்.
................................

(Feb 25, 2018)

சேர்ஜியோ (Sergio)

Thursday, May 21, 2020

பாரிஸில் 1968 இல் மாணவர் புரட்சி நடக்கும்போது முன்னணிப் போராட்டக்காராக இருந்த பிரேஸிலியர் ஒருவரை வாழ்க்கை எங்கெங்கோ சுழற்றியடிக்கிறது. பிறகு ஐ.நா.சபையில் இணைந்து பல்வேறு நாடுகளில் அதன் பிரதிநிதியாகப் பயணிக்கின்றார். கம்போடியாவின்  -கம்பூச்சியா கம்யூனிஸ்ட்டுக்களோடு-  ஆபத்து நிறைந்த சாகசங்கள் செய்து, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த அகதிகளை மீண்டும் சொந்த இடங்களில் இருத்த முயற்சிக்கின்றார். கிழக்கு திமோர் தனிநாடாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன், இரண்டு வருடங்கள் ஐ.நா.சபை அதன் அரசு நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது, அதனை திமோரில் வழிநடத்திச் செல்பவராக இருக்கின்றார்.

அடிப்படையில் ஓர் இடதுசாரியாக சேர்ஜியோ இருப்பதால், ஐ.நாவில் பணியாற்றும்போதும், இயன்றளவு மக்களின் சார்பில் நின்று பார்க்க முயல்கின்றார். அதை அவர் கிழக்கு திமோர் போராளிகளோடு அதிகாரத்தைப் பகிரும்போது, தெளிவாக நாங்கள் உங்களோடு ஆட்சி நிர்வாகத்தைப் பகிர்கின்றோமே தவிர, நாங்கள் ஆள்பவர்கள் என்கின்றார். சேர்ஜியோவின் நண்பரொருவர் அந்த நாட்களை நினைவுகூரும்போது, ஒருபோதும் சேர்ஜியோ, போராளிக்குழுவின் எண்ணத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செய்ததுமில்லை என்கின்றார்.

இவ்வாறு இருக்கும் சேர்ஜியோ இறுதிப் பணியாக அமெரிக்க ஆக்கிரமித்துவிட்ட ஈராக்கில் நான்கு மாதம் பணியாற்றப் போகின்றார். ஈராக்கியப் போரை எதிரிக்கும் ஒருவராக இருந்தாலும், நடந்ததை மாற்ற எந்த அதிகாரமும் இல்லை, ஆகக்குறைந்தது இனியாவது மக்களுக்கு ஏதாவது செய்யலமா என்று போகின்றார். ஒருபோதும் சொகுசு அறைகளுக்குள் இருந்து முடிவுகளை எடுக்க விரும்பாத சேர்ஜியோ எப்போதும் மக்களின் விருப்புக்களை நேரில் சந்தித்துப் பார்க்க விரும்புகின்றவராக இருக்கின்றார். அதன் நிமித்தம், அமெரிக்கா ஆக்கிரமிப்பின் மீது கோபத்தில் இருக்கும் மக்களின் திட்டுக்களையும் வாங்கிக்கொள்கின்றார்.

இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தின், ஐ.நா. அலுவலகம் மீதான குண்டுவெடிப்பில் சேர்ஜியோ கொல்லப்படுகின்றார். கிழக்கு திமோரை இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இருந்து பிரித்துக்கொடுத்தவர், அவர் கொல்லப்படவேண்டியவர் என ஒசாமா பின் லாடன் உள்ளிட்ட பலரால் சேர்ஜியோ இலக்கு வைக்கப்படுகின்றார். வழமையாக ஐ.நா. அலுவலகங்களுக்கு இருக்கும் அமெரிக்காவின் அதிபாதுகாப்பையும் சேர்ஜியோ விலத்திவைக்கின்றார். ஐ.நா.சபை தனித்தியங்கும் அமைப்பு, அமெரிக்காவின் இருப்பு எமது வளாகத்தில் இருப்பது மக்களை இன்னும் ஐ.நாவை விலத்திவைக்கும் என்று பாதுகாப்புச் சேவையையும் சேர்ஜியோ விலத்திவைக்கும் காலங்களில் இந்தக் குண்டுவெடிப்பு நடக்கிறது.

குண்டு வெடிப்பு நடந்து கட்டிட சிதைப்பாடுகளில் சிக்கி மீட்பு முயற்சியில் தோற்ற மூன்றரை மணித்தியாலங்களின் பின் இறக்கின்றார். அப்போதும் கூட சேர்ஜியோ தனது காதலி உட்பட வேலை செய்யும் மற்றவர்களின் நிலை பற்றியே தொடர்ந்து வினாவுகிறார். அதிலும் ஒரு இராணுவவீரர் இவருக்காய் இந்தம் மீட்புவேலையில் பிரார்த்தனை செய்யத்தொடங்கும்போது, நிறுத்தச் சொல்லி தனது உயிர் போகும் இறுதிநேரத்திலும் சொல்கிறார். மற்ற இராணுவ வீரர், இது ஒருவர்  தான் தலைமை தாங்கும் குழுவை மீட்கவிரும்பிய ஒருவர், தன் உயிரை முதல் கொடுக்கும் அரிய பண்பு எனச் சொல்கிறார்.

சேர்ஜியோவாக இருந்தாலும், அல்லது சிரியாவில் உயிரைக் கொடுத்த பத்திரிகையாளரான மெர்வின் கொலின்ஸாக (Private war) இருந்தாலும், ஏதோ ஒருவகையில் அமெரிக்க/ஜரோப்பிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள் இவர்களைப் பற்றிப் பேசும் திரைப்படங்களில்  blur ஆக்கப்படுவதை நாம் காணலாம். மூலகாரணங்களுக்குப் போகாமல் நாம் இந்த உதிரி மனிதர்களை வைத்து இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை/யுத்தங்களை ஒருபோதும் அணுகமுடியாது. ஆனால் இவ்வாறாகத் தமது உயிரைப் பணயம் வைத்துப் போகும் மனிதர்களாலேயே ஒரளவாவது போர் நிகழும்/நிகழ்ந்த இடங்களில் மக்களுக்கான தேவைகள்/மீள்குடியிருப்புக்கள் சாத்தியமாக்கப்படுவதையும், அங்கே நிகழும் கொடூரங்கள் சற்றேனும் வெளிச்சத்துக்கு வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு தீவிர கலகக்காரனாக பாரிஸ்-68ல் எழுந்த சேர்ஜியோ இறுதிவரை மக்களுக்காகவே தமது பயணத்தைத் தொடர்ந்து இருக்கின்றார். அதற்கு அவரது இடதுசாரித்தன்மை நிச்சயம் உதவியிருக்கும். அதேசமயம் சேர்ஜியோ மணமானவராக இருந்தபோதும் பல்வேறு நாடுகளில் நிறையக் காதலிகளையும் கொண்டிருந்திருக்கின்றார். இது வேறுவகையான சூழல், வேறுவிதமான உரையாடல்களுக்கும் கொண்டு செல்லக்கூடியவை.

சேர்ஜியோ பற்றிய திரைப்படம் நேற்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கின்றது. அவரைப் பற்றிய ஆவணப்படம், இதே நெறியாளரால்  10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டிருக்கின்றது. இரண்டையும் சேர்த்துப் பார்ப்பது சுவாரசியமானது. உணர்ச்சிகள்/தடுமாற்றங்கள்/நம்பிக்கைகள் என கண்ணீர்த்துளிகளோடு அசல் மனிதர்கள் பேசும் ஆவணப்படங்கள், திரைப்படங்களை விட ஏதோ ஒருவகையில் நமக்கு நெருக்கமாகிவிடவும் கூடியது.

(Apr 18, 2020)

அசோகமித்திரனின் 'தண்ணீர்'

Tuesday, May 12, 2020

எழுதும் மொழியைச் சிரமமுமில்லாமலும், கிளிஷே இல்லாமலும் பயன்படுத்த எல்லோராலும் முடிவதில்லை. மொழியைக் கஷ்டப்படுத்தாது பாவிப்பதென்பது, நீண்ட வாக்கியங்களைப் பாவிக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல. அது நீண்டதோ, சுருங்கியதோ சொல்லும் மொழியில் குழப்பங்கள் இல்லாது சொல்லிச் செல்வதைக் குறிப்பிடுகிறேன். அதேபோல கிளிஷே என்பது தேய்வழக்குகள் பற்றியது. சொல்வளம் எமக்குச் சுருங்கியதாக இருக்கும்போது நாம் ஒரே சொற்களையே பாவிக்கவேண்டிய அபத்தம் ஏற்படும். இந்த விடயத்தில் உரைநடைக்காரர்களை விட, கவிதைகள் எழுதுபவர்கள் இன்னும் திணறுவதை நாம் அவதானிக்கமுடியும்.

தமிழில் இவ்வாறு எழுதும் மொழியைக் கஷ்டப்படுத்தாதும், அதேவேளை தேய்வழக்குக்களை அதிகம் பாவிக்காது நீண்டகாலம் எழுதிய ஒருவராக அசோகமித்திரனைக் கொள்ளலாம். நேற்று மீண்டும் ஒருமுறை அவரின் 'தண்ணீர்' நாவலை வாசித்தபோது, அது இன்னும் நிரூபணமாகியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல், மொழியில் எந்த இடறலையும் தராது வாசிப்பில் சுகானுபவத்தைத் தந்திருந்தது. இத்தனைக்கும் அசோகமித்திரன் கடினமான சொற்களையோ, நீண்ட வாக்கியங்களையோ பாவிப்பவருமில்ல. எளிய சொற்கள் ஆயினும் அவை தேய்வழக்குகளாக எம்மை சோர்வடையச் செய்யாது, அவர் எழுதிச் செல்வதில்தான் அவரின் எழுத்தின் திறமை தெரிகிறது. 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு விட்ட இந்த நாவலை, ஏற்கனவே சிலமுறை வாசித்தும் விட்ட நாவலை, மீண்டும் புதிதாக வாசிப்பது போன்ற பிரமையை அசோகமித்திரன் தருவது எவ்வாறு என்றே யோசித்திருக்கின்றேன்.

ஜமுனா, சாயா என்கின்ற வீட்டை விட்டுப் புறப்பட்டு, தனித்து வாழும் பெண்கள் இருவரின் சிக்கலான வாழ்க்கையை, சாதாரண வாசகரும் புரிந்து அனுதாபம் கொள்ளமட்டுமின்றி, இவ்வாறும் மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள வைப்பதில்தான் அசோகமித்திரன் தனித்து மிளிர்கிறார். எழுபதுகளில் ஒரு பெண் கர்ப்பமாகி, அந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்ற கேள்விக்கு அவ்வளவு அச்சப்படாது தன் பிள்ளையோடு வாழப்போகின்றார் என்பதை அசோகமித்திரன் எவ்வித அதிர்ச்சியோ, பெரும் பிரகடனமோ இல்லாது வாழ்வின் இயல்புகளில் இதுவும் ஒன்றெனச் சொல்லிச் செய்வதோடு, வாசகர்களையும் ஜமுனாவைப் புரிந்துகொள்ள வைப்பதுதான் தண்ணீரை இன்றும் வாசிக்க புத்துணர்ச்சி தருவதாக இருக்கிறாதென நினைக்கின்றேன். ஆனால் தண்ணீர் நாவலின் உச்சக்கட்டம் என்பது என்னைப் பொறுத்தவரை இறுதி அத்தியாயங்களில் நிகழ்வதல்ல, அது நாவலின் முக்கால்வாசியிலே நிகழ்ந்துவிடுகின்றது.

அது எப்போது நிகழ்கிறது என்றால், ஜமுனா அவரின் சகோதரியான சாயா வீட்டை விட்டு வெளியேறியபின், தற்கொலைக்கு கயிறை மாட்டைத் தூக்குப் போடுவதற்குத் தயாராக இருக்கும்போது, அவர் வாடகைக்கு இருக்கும் வீட்டுப் பெண்மணி அதைக் கண்டுபிடிக்கும்போதாகும். அந்தத் தருணத்தில் வீட்டுப்பெண்மணி, ஜமுனா எந்நேரமானாலும் தற்கொலை செய்துவிடுவார் என்ற அச்சத்தில் ஜமுனாவை வீட்டை விட்டுப் போகச் சொல்லும்போது, ஜமுனா, அயல்வீட்டு ஆசிரியரிடம் இதைப் பகிரும்போது, அந்த ஆசிரியர் தன் அனுபவங்களைப் பேசும் இடத்தையே இந்நாவலின் மிக உச்சமானதாக நான் கொள்வேன்.

அந்த ஆசிரியர் தனது பதினைந்தாவது வயதில், நாற்பத்தைந்து வயது இருக்கும் ஒருவருக்குக் கட்டிக்கொடுக்கப்படுகிறார். அவரின் துணைவரோ எப்போதும் இருமிக்கொண்டு இருக்கும் கடும் நோயாளி. அந்த ஆசிரியர் முதன்முதலில் அவரின் கணவரோடு தனித்து விடப்படும்போது, நிகழும் சம்பவங்களை அந்த ஆசிரியர் வர்ணிக்கும்போது, யமுனா தான் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறார். ஏனெனில் வெளியே அவ்வளவு தெரியாது ஆசிரியரின் வாழ்க்கை ஒரு நரக வாழ்வு. ஆனால் இந்த வாழ்வை வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமுள்ளவர் அந்த ஆசிரியர்.

இந்த இடத்தில் அசோகமித்திரன் எதையும் அதிகம் பேசிவிடுவதில்லை. வாசிக்கும் நமக்கு ஜமுனாவின் தற்கொலைக்கு சாயாவின் வெளியேற்றம் என்பதே ஒரு காரணமாகச் சொன்னாலும், ஜமுனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை நாம் கடைசி அத்தியாயத்தில் தெளிவாக விளங்கிக்கொள்கின்றோம். ஆனால் நாவல் முடியும்போது ஜமுனா தெளிவாக இருக்கின்றார். நீளும் வாழ்வு எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும் அதை அதன் எல்லா முகங்களோடும் எதிர்கொள்ளத் தயாராவதை அவர் அவதானிக்கமுடியும். ஆக, ஜமுனா தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் தங்கையின் வெளியேற்றம் அல்ல. அவர் கர்ப்பமாகி விட்டதை அறிந்துகொண்டதுதான் என்பதை அசோகமித்திரன் இறுதியில் எமக்குச் சொல்லாமல் சொல்கின்றார்.

அதேவேளை ஜமுனாவால் அவர் கர்ப்பத்திற்குக் காரணமான ஆணோடு எந்தப் பொழுதிலும் சேர்ந்து வாழமுடியாது என்பதையும் அசோகமித்திரன் நமக்கு எளிதாக உணர்த்தியும் விடுகிறார். இப்போது நமக்கு இந்த நாவல் நகரத்தில் 'தண்ணீர்' ஒழுங்காய்க் கிடைக்காததன் அவதியைச் சொன்னாலும், இந்த நாவலுக்குள் மறைமுகமாகச் சொல்லப்படுவது வேறொரு பெருந்துயரத்தைதான் என்பது விளங்கிவிடுகின்றது. மனிதர்கள் தண்ணீருக்காய் அலைவதைப் போல, நேசத்துக்காகவும், பிற மனிதர்களின் அரவணைப்புக்காகவும் இன்னும் தாகத்துடன் அலைகின்றார்கள் என்பதும் இந்தநாவலினூடு மறைந்து கிடப்பதைக் காண்கின்றோம்.
.................

(Apr 15, 2020)

சில புத்தகங்கள், சில அவதானங்கள்

Saturday, May 09, 2020

இந்த வருடம் வாசிப்பின் உற்சாகமான ஆண்டாகத் தொடங்கியிருக்கின்றது. முக்கியமாய் ஈழத்தவர்  பலரின் நூல்களை  வாசித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. விமர்சனங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உற்சாகப்படுத்தல்களும் அவசியமானது. இவை இந்த படைப்பாளிகள் தொடர்ந்து எழுத்து மனோநிலையுடன் இருந்து எழுத  அவர்களை உந்தித்தள்ளும்.  சிறுகதைத் தொகுப்பாயின், மூன்று நான்கு கதைகள் நன்றாக இருந்தாலே அது என் வாசிப்பைப் பொருத்தவரை, கவனிக்கத்ததொரு தொகுப்பாக மாறிவிடும்.

அண்மையில் அப்படி வடகோவை வரதராஜனின் 'நிலவு குளிர்ச்சியாக இல்லை' தொகுப்பில் இருந்த 12 கதைகளையும் உற்சாகமாக வாசித்திருந்தேன். ஒரு முழுத்தொகுப்பாக எனக்கு முழுமை தந்த தொகுப்புக்கள் மிகக்குறைவு. இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு என்றாலும், ஒரு நிறைவான வாசிப்பாக இருந்தது சற்று ஆச்சரியமானதுதான். இத்தொகுப்பில் கதைகளுக்கு முன் வரதராஜனின் 'ஒரு வார்த்தை', பிறரின் அணிந்துரைகள் இன்றையகாலத்தில் அவசியமற்றவை என்பதையும், வாசகரோடு தொகுப்பு நேரடியாக உரையாடும் சுதந்திரத்துக்கு இடையூறு செய்பவை என்பதையும் அவர் இப்போது அறிந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நீக்ரோக்கள்' என்று பாவிப்பது ஒரு இனத்தின் மீதான மிகமோசமான வசை என்பதையும் தவிர்த்துவிட்டால் இது மிக முக்கியமான தொகுப்பு என்பேன்.

எஸ்.பொ எழுதியவற்றில் 'நனவிடை தோய்தலை' முதல் வாசித்தபோது என்னைக் கவரவில்லை. ஏனென்றால் அது எனக்குரிய காலத்துக்குரியதாக இல்லாததால், ஒரு விலகல் இருந்தது. எனினும் பின்னர் வாசித்தபோது அது என்னை ஈர்த்துக்கொண்டது. அவ்வாறு 'நனவிடை தோய்தலுக்கு'ப் பிறகு, அ.இரவியின் 'காலமாகி வந்த கதைகளை'ச் சொல்வேன். அது நான் அலைந்து திரிந்த இடங்களையும், யாரெல்லாம் தெரியாது தற்செயலாகக் கடந்துபோன மனிதர்களையும் பற்றி விபரித்தாலும், அது எனக்கு சற்று முந்தைய தலைமுறையினர்க்கு இன்னும் பிடித்திருக்கக்கூடியது. பிறகு, புலம்பெயர் தேசத்தில், மொழியே தெரியாது சிக்கித்திணறி வாழ்வை அமைத்துக்கொண்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கதைகளை செல்வம் அருளானந்தத்தின் 'எழுதித் தீராப் பக்கங்கள்' சொல்லிப் போந்தது.

இவ்வாறான எழுத்துக்களை கட்டுரைகள் வகைக்குள் அடக்கமுடியாது. அவை போல சிறுகதைகள் எனச் சொல்லவுமுடியாது. மேற்கூறிய படைப்பாளிகள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ, அவ்வாறு நான் எழுதிய எழுத்துக்களை 'அனுபவப்புனைவு' என்ற வகைக்குள்ளே வைத்துக் கொள்கின்றவன். இவை நமது அனுபவங்களின் நீட்சியில் கிளர்ந்து எழுதுபவை, ஆனால் அந்த அனுபவங்களை எழுதும்போது பிறகு புனைவாகி விடுவது உண்டு என்பது எண்ணம். ஆகவேதான் செழியன் இவ்வாறு அனுபவப் புனைவுகளை அரசியல் சார்ந்து 'வானத்தைப் பிளந்த கதை'யாக எழுதியபோது, பலர் அதில் உண்மைகளைத் தேடி அலைந்து நிராகரிக்கவும் முற்பட்டனர். இவ்வாறான அனுபவங்களை எழுதிய அனைவரும், அந்த அனுபவங்களைத்தாண்டி தாம் சேர்த்து எழுதிய புனைவுகளை நன்கு அறிந்திருப்பார்கள். ஆகவேதான் நான் இவற்றை அனுபவப்புனைவுகள் என்று வரையறுக்க விரும்புகின்றேன்.

நான் விரும்பி வாசித்தவையாக 'நனவிடைதோய்தல்', 'காலமாகி வந்த கதைகள்', 'எழுதித் தீராப் பக்கங்கள்' இருந்தாலும், நான் மிக நெருக்கமாய் வாசித்த இன்னொரு அனுபவப்புனைவு இருக்கிறது. அது உமாஜி எழுதிய 'காக்கா கொத்திய காயம்'. இது ஏன் எனக்கு பிடித்தது என்றால் இது என் காலத்தைய கதைகளைப் பேசுகிறது. சயந்தனின் 'ஆறாவடு' வந்தபோது என் காலத்தைய ஒரு கதைசொல்லி எழுதவந்திருக்கின்றார் என மகிழ்ந்தது போல, உமாவினது 'காக்கா கொத்திய காயத்தை' வாசித்தபோது எமக்கான ஒரு 'நனவிடைதோய்தல்' வந்துவிட்டது என்ற ஒரு நிறைவு ஏற்பட்டது. அநேகமான எல்லாப் பதிவுகளும் யாரோ ஒரு மனிதரைச் சுற்றி அது அன்றைய காலத்துக்கு நிகழ்வுகளுக்குள் ஊடறுத்துச் செல்கின்றது. இதில் உமா இந்த மனிதர்களை வியந்து பாராட்டுவதையும், அதேசமயம் அவருக்கு இயல்பாக இருக்கும் ஒரு விலகல்தன்மையினால், இந்த மனிதர்களை இன்னும் அதிகம் அறிந்திருக்கலாமோ/பழகியிருக்கலாமோ என்ற எண்ணத்தையும் வாசிக்கும் நமக்கிடையில் விட்டுச்செல்கின்றார். இதிலிருக்கும் 'நிராகரிப்பின் வலி'யிலிருந்து, 'ஆதலினால் காதல்' செய்வதிலிருந்து, 'பங்கர்' வெட்டுவதிலிருந்து, 'கடவுளைத் தேடி; அலைவத்லிருந்து, 'அப்பா'வரை நான் எனது சாயல்களை அதில் காட்டப்படும் மனிதர்களில் காண முடிந்திருந்தது.

அனுபவப் புனைவில் சுவாரசியம் இருக்கின்றன என்றாலும், அதற்கு ஒரு பலவீனமும் இருக்கின்றது. இவ்வாறான  பதிவுகளால் கற்பனையின் ஒரு எல்லைக்கு அப்பால் போகமுடியாது என்பதாகும். இல்லாவிட்டால் அவை முழுப்புனைவாக மாறிவிடும். ஓர் உதாரணத்துக்கு ஒரு மனிதரைப் பற்றி உமாவின் பதிவைப் போல விரியும் ஜேகேயின் 'சமாதானத்தின் கதை'யும் சமாதானம் என்கின்ற ஒரு மனிதரைப் பற்றியே சொல்கின்றது. ஆனால் அது புனைவாக இருப்பதால் தன் சிறகுகளை யதார்த்த்திலிருந்து மேலும் விரித்துப் பார்க்கும் சுதந்திரத்தைக் கொடுக்கின்றது. இதை அனுபவப்புனைவுகளில் முயற்சிக்க முடியாது. அப்படி ஓர் எல்லையைக் கடந்துவிட்டால் அது வேறு வடிவத்தை எடுத்துவிடும்.

இப்படி அனுபவப்புனைவாக இல்லாது, அனுபவங்களை மட்டுமே சொல்கின்றேன் என்று எழுதப்பட்ட இன்னொரு தொகுப்பு 'குப்பி. வெற்றிச்செல்வியே இந்தச் சம்பவங்களின் நம்பகத்தன்மையை மீண்டும் அந்தச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டவர்களோடு கதைத்து உறுதிப்படுத்தியதாக நூலின் தொடக்கத்தில் சொல்கின்றார். ஆகவே இதற்கு, அனுபவப்புனைவுகளுக்கு இருக்கும் மெல்லிய புனைவின் சாயல் கூட இல்லாது இருக்கின்றது. 'குப்பி'யில் போராட்டப்போன விடுதலைப்புலி போராளிகளின் கதைகள் பல்வேறு காலகட்டங்களில் வைத்துச் சொல்லப்படுகின்றது. இவ்வாறான போராளிகளின் சாகசங்களையும், தியாகங்களையும் அன்றையகால 'வெளிச்சம்', 'எரிமலை', 'உலகத்தமிழர்' போன்ற பத்திரிகைகள்/சஞ்சிகைகள் வாசித்தவர் நன்கு அறிந்திருப்பர். களத்தில் மரணமடையும் ஒவ்வொரு முக்கிய போராளிபற்றியும் பதிவுகள் இவற்றில் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். சற்றுப் பிரச்சார வகையாக இருந்தாலும், அதில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களை  அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும். குப்பியில் இருப்பவை சிறுசிறு சம்பவங்கள். ஆனால் நடந்தவை என்பதால் வாசிக்க அலுப்புத் தராது இருக்கின்றது.

ஓரு 'கதை'யில் புலிகள் படகில் போய் மன்னாரில் ஒரு தாக்குதலை நடத்துகின்றனர். தாக்குதலை நடத்திவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் திரும்பவேண்டும். ஏனெனில் அது இலங்கை இராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்ட இடம். அதில் ஒரு பெண் போராளி காயப்பட அவரால் வள்ளத்தினால் ஏறமுடியாது போக,  படகு அவரை விட்டுவிட்டுப் புறப்பட்டுவிடுகிறது. காயப்பட்ட போராளியை ஒரு முஸ்லிம் தாய் காப்பாற்றுகிறார். காயத்தின் நிமித்தம், வெளியே வந்த குடலை கழுவி உள்ளே பத்திரமாய் விட்டு, தைக்கமுடியாத அவதியால் எதையோ வைத்து கட்டிவிட்டு, இராணுவத்துக்குத் தெரியாது, தனது மகனின் உதவியோடு ஒரு படகில் வைத்து புலிகளின் கட்டுபாட்டுப் பகுதியை நோக்கித் தள்ளிவிடுகின்றார். இது இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ் முஸ்லிம் உறவு மிகவும் மோசமான காலத்தில் நடக்கின்றது. இதுதான் மனிதாபிமானம். இவ்வாறான சம்பவங்களை நாம் மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலமே சமூகங்களிடையிலான நல்லிணக்கங்களைப் பேசமுடியும். இதை நேரடியான அரசியல் செய்யாது. ஆனால் இலக்கியம் காயப்பட்ட மனங்களையும், குரோதமான மனிதர்களையும் மெல்லச் சலனமடையச் செய்யும்.

இவற்றோடு என்னைக் கவர்ந்த இன்னொரு தொகுப்பு ஜே.கேயின் 'சமாதானத் கதை'. ஜேகேயின் அனுபவங்கள் சார்ந்து எழுதப்படும் பதிவுகள் பிடிக்குமென்றாலும், அவரது சிறுகதைகளின் என்னை அவ்வளவு கவர்வதில்லை என ஜேகேயின் 'சமாதானத்தின் கதை' காலச்சுவடில் பிரசுரமானபோது எழுதியதாய் ஞாபகம். ஆனால் தொகுப்பாய் பார்க்கும்போது எனக்கு இந்தச் சிறுகதைத் தொகுப்பு பிடித்திருக்கின்றது. முக்கியமாய் 'வெம்பிளி ஒவ் ஜெப்னா', 'விளமீன்', 'உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்'  போன்ற கதைகள் கவனிக்கக் கூடியவை. இப்போது 'சமாதானத்தின் கதை'யை தொகுப்பில் இன்னொருமுறை வாசிக்கும்போது அந்தக் கதையும் முன்னரை விடப் பிடித்திருந்தது. ஜேகே கதைகள் நம்மவர் அநேகர் எழுதும் அதிர்ச்சி முடிவுகளை நோக்கி ஒருபோதும் நகர்வதில்லை. ஒருவகையில் அசோகமித்திரனின் தடத்தில் வருகின்ற ஒரு கதைசொல்லியாகக் கொள்ளலாம். அதிர்ச்சியான சம்பவங்கள் இருந்தால் கூட அதைக் கதையின் முதலிலே கூறிவிட்டே கதையை எழுதுகிறார்.

இதைத் தெளிவாக 'வெம்பிளி ஒவ் ஜெப்னா, விளமீன் போன்ற கதைகளில் காணலாம். ஆனால் இப்படியாக அதிர்ச்சியாக முடிக்காதபோதும், நேர்த்தியான கதைசொல்லலில் அவை நமக்குப் பிடிக்கின்றது. ஒரு குறையாக நிறைய ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் சொல்வதைச் சொல்லலாம். ஒருகாலத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா (சுஜாதாவிலும் கொஞ்சம் இருக்கிறது) போன்றோரை வாசித்தபோது தமிழகத்து ஆங்கில உச்சரிப்போடு எழுதப்படுவதை வாசித்து, அர்த்தங்களை விளங்கிக்கொள்வதற்குள் மூளை விறைத்துப் போய்விடுவதுண்டு. ஒவ்வொரு நாடுகளிலும் உச்சரிப்பு என்பது வேறுவகையாக இருக்கும்போது, எதை ஜேகே சொல்லவருகின்றார் என்பது, நமது உச்சரிப்பு பழக்கமில்லாதவர்க்குக் குழப்பம் வரலாம். அவசியமாய் ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதிவிடலாம் என நினைக்கிறேன்.

இவ்வாறாக 'நிலவு குளிர்ச்சியாக இல்லை', 'காக்கா கொத்திய காயம்' (தலைப்பை வேறுவிதமாக வைத்திருக்கலாம்), 'குப்பி', 'சமாதானத்தின் கதை' போன்றவை ஈழத்தவர்களால் நல்ல படைப்புக்களைத் தரமுடியும் என்பதை எளிதாக நிரூபிக்கின்றன. இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தொடர்ந்து உற்சாக எழுதவேண்டும். ஏனெனில் நல்ல படைப்பாளிகள் விரைவில் உறங்குநிலைக்குப் போய்விடும் ஒரு சாபம் எங்கள் ஈழச்சூழலில் இருக்கின்றது. அதை இவர்கள் கடந்துபோவார்கள் என்பதில் நம்பிக்கை வைக்கின்றேன்.
..................................................

(நன்றி: ' அம்ருதா', 2020)