கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - இந்து சித்ரா

Wednesday, July 29, 2020


ஒரு கிழமை விடுமுறை. வழமையான நாட்களில் செய்யமுடியா வேலைகளைச்செய்து முடிக்கவேண்டிய பட்டியல் இருந்தும், மனம் ஏனோ "வேலை நாட்களிலும் ஓட்டம், இப்போ விடுமுறையிலுமா?" எனக்கேள்வி கேட்டது. இதைவிட்டால் ஆறுதலாக இந்த வேலையை முடிக்க முடியாது.மனமும் மூளையும் ஒரு மையப்புள்ளியில் கையை குலுக்கிக்கொண்டன.

பாதிநாள் வேலைக்காக, பாதிநாள் எனக்காகின.குணா கவியழகன் எமக்காய் அள்ளிவந்த புத்தகங்களின்முன் ஒரு தேடுதல்.எந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் மீண்டும் மூளைக்கும் மனத்திற்குமான பரிமாற்றம்.

இந்த நிலையை சுலபமாக்கியது என் கணவரின், "மெக்ஸிக்கோ நாவலை படித்துப்பாரும் உமக்கு பிடிக்கும்"என்ற பரிந்துரை.

அந்த நாவலுடன் சூரிய ஒளி என்னைச்சுட பல்கனியில் இதமாய் அமர்ந்தேன்.சுட்டுச் சென்ற காற்றையும் குருவிகளின் கீச்சு கீச்சு சத்தங்களையும் உள்வாங்கி,கண்களால் பச்சை மரங்களை ஒத்திக்கொண்டு இளங்கோ எழுதிய "மெக்ஸிக்கோ" எனும் நாவலின் பக்கங்களை விரித்தேன்.

என் முன்னே அழகாய் விரிந்தது அந்நகரம், காதலின் கொஞ்சலோடு. அந்த இரவுப் பொழுதுகளினுள் கலந்திருக்கின்ற கலாசார வடிவங்களைக்காதலில் தோய்த்து அந்த நேரத்திற்கு இன்னும் அழகு சேர்த்திருந்தார்.

இந்த நாட்டின் பெயர் கேட்ட மாத்திரத்தே இளங்கோ சொன்னது போல போதைவஸ்து ,மாஃபியா கூட்டம் ,துப்பாக்கி சூடுகள் இவைதான் அந்த மண்ணிற்கான பேசும் பொருளாயின. எந்த ஒரு நாடும் சகதியுடுத்திய பக்கங்களை கொண்டிருந்தாலும் அந்தந்த நாட்டிற்குரிய செழுமையையும் கொண்டுதான் இருக்கின்றன.

அதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவம் உள்ளது போல, நாடுகளும் தனித்துவம் கொண்டிருப்பது புவியியல் சிறப்பு.அதனை இளங்கோ பல இடங்களில் எம் கைபிடித்து ,பேனா கொண்டு ஒரு சுற்றுலா கூட்டிச்செல்கின்றார்.

மெக்ஸிக்கோ எனக்கு தெரியாத இடம். ஆனால்,அவர் கதை பேசிச்செல்கின்ற விதம் என் கற்பனையில் அதற்கு ஒரு வடிவம் தீட்டி என்கூடவே வருகின்றது.

சில நாவல்களுடன் எம்மை வலிந்து இணைக்க வேண்டியிருக்கும், இடையிடையே அந்த கதையைவிட்டு விலகியும் சென்றுவிடுவோம். ஆனால் இந்த நாவலெனும் ஆற்றுக்குள் ஒரடி வைத்தேன்,என்னை இழுத்து மூழ்க வைத்தது.

மெக்ஸிக்கோவைப் பற்றிச்சொன்னால் ஃபிரீடாவை பற்றிச் சொல்லாமல் நகரமுடியாது.அதிசயமான பிறப்புக்களில் அவளும் ஒருத்தி.பேசப்படவேண்டிய பெண் அவள்.

நாவலின் நகர்வு என் மனதில் ஒரு முடிவை பின்ன தொடங்கியது. ஆனால் அந்த முடிவின் மாற்றம் நினைத்தே பார்த்திராத ஒரு வளைவுக்குள் புகுந்து முடிகிறது. அதுவே இந்நாவலை வேறு ஓரிடத்தில் தூக்கி நிற்க வைத்துவிட்டது. என் மனதிற்கு பிடித்த நாவல்களுக்குள் இதுவும் நுழைந்து கொள்கிறது.

மெக்ஸிக்கோ நகரை பார்க்கும் ஆசையையும் தூண்டிவிட்டு முடிந்து போகிறது இக்கதை. எனது விடுமுறையை இனிதாக்கிய, இந்த நற்படைப்பைத் தந்த இளங்கோவிற்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

(via Yogakumari Lingeswaran)
Jun 11, 2020

சதுரங்கக் குதிரையும், புனலும் மணலும்..

Monday, July 13, 2020

1.

ஏன் செவ்வியல் படைப்புக்களை வாசிக்கவேண்டுமென்ற இடாலோ கால்வினோவின் பிரபல்யமான கட்டுரையொன்று இருக்கிறது. தமிழில் நிறைய புதினங்கள் 'கிளாசிக்' என்ற அடையாளத்தோடு அண்மையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. காலம் செல்லச் செல்ல செம்மது நன்கு சுவையேறுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழ்ச்சூழலில் பல படைப்புக்கள் காலத்தால் முற்பட்டது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே அவை செவ்வியல்  வடிவத்தை அடைந்துவிடுவது துரதிஷ்டவசமானது. உதாரணத்துக்கு எஸ்.பொ எழுதிய 'சடங்கை' நான் ஒரு கிளாசிக்காக கொள்வேன். ஆனால் 'தீ'யை செவ்வியல் என்ற அடையாளத்தைக் கொடுத்து வெளியிடும்போது அதை எஸ்.பொவை என் ஆசானாகக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவேன். இன்னும் கொஞ்சக் காலம் சென்றவுடன் அவரின் மோசமான நாவலாக நான் கருதுகின்ற 'மாயினி'யையும் ஏதேனும் பதிப்பகம் 'கிளாசிக்' வரிசையில் வெளியிட்டுவிடுவார்களோ என்று சற்று அச்சமாக இருக்கிறது.

அவ்வாறுதான் ஆ.மாதவனின் 'கிருஷ்ண பருந்தை' ஒரு கிளாசிக்காகக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. அதேவேளை அவரின் 'புனலும் மணலும்' நாவலை கிளாஸிக் வரிசையில் வெளிவந்திருப்பதைக் கண்டு சற்று ஆச்சரியமாக இருந்தது. அங்குசாமி என்ற மூப்பனைப் பற்றிய கதை கோட்டையாற்றுப் பின்னணியில் வைத்துச் சொல்லப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளி இன்று பல ஆறுகளில் நீர்வரத்து இல்லாமலும், ஒற்றையடிப்பாதையைப் போல 'சேணமிழுத்து'க்கொள்வதையும் கண்டுவருகின்றோம். இதற்கான ஒரு புள்ளியை இந்த புனலும் மணலும் தொட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
இன்று யானைக்கு அன்னாசிக்குள் வெடிவைத்து கொல்கின்ற 'நாகரிகமான' மனிதர்களாய் நாம் மாறியிருக்கையில், நீராடக்கொண்டுவந்த ஆனை, மணல் தூறப்பட்ட ஆற்றில் சிக்கித்திணறுகையில் அதைக் காப்பாற்ற தன்னுயிரையே அசட்டைசெய்து காப்பாற்றத் துடிக்கின்ற ஒரு மூப்பனாக அங்குசாமியை அங்குபார்க்கிறோம்.

இந்த நாவலின் சிக்கல் என்னவென்றால் அங்குசாமி ஏற்கனவே குழந்தை இருக்கும் தங்கம்மைத் திருமணம் செய்கின்றார். தங்கம்மையும் ஒருகட்டத்தில் நோயில் இறந்துவிட, மிகுந்த வன்மத்தை step daughterஆன பங்கியின் மீது காட்டுகிறார். இதை ஆ.மாதவன் ஒரு பாத்திரத்தின் பார்வையினூடாகக் காட்டியிருந்தார் என்றால்கூட ஒருவகையில் இப்படி மனிதர்கள் இல்லையா எனக் கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குரூபி, உருண்டைக்கண்கள், கிழிந்த உதடு, கறுப்பி என்று பல்வேறு இடங்களில் பங்கி சுட்டிக்காட்டப்படுகின்றார். அதுமட்டுமில்லாது பங்கியின் தாயான தங்கம்மைகூட தனது மகளை அவலட்சணமானவள் என்று எண்ணுவதாக படர்க்கையில் நின்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆக ஒருவரின் அங்கலட்சணங்களை பொதுப்புத்தியாக நின்று கதாசிரியரும் தன் பங்கிற்கு விபரிக்கும்போதுதான் நமக்குச் சிக்கல் வருகின்றது.

இவ்வாறு தன் மீது வெறுப்பையும், வஞ்சினத்தையும் அங்குசாமி உமிழ்ந்தாலும், பங்கி 'அப்பா' என்று அன்பொழுகவே மாடசாமியை அழைக்கின்றார். பல்வேறு உதவிகளை அவருக்கு நோயும்/வயதும் ஏறும் காலங்களில் செய்து கவனித்தும் கொள்கிறார். இந்த நாவலை வாசித்து முடித்தபின்னும் மறக்கமுடியாதிருப்பது மனிதர்களின் இருண்டபக்கங்களை இருட்டாகவே, நம்மால் புரிந்து கொள்ளமுடியாததாகவே நாவலை ஆ.மாதவன் முடித்திருப்பதால் என்பதால் போல் தோன்றியது. அங்குசாமி என்கின்ற மூப்பன் ஏன் தனது மனைவியின் மகளான பங்கியை அப்படி வெறுக்கிறார்.

அதேவேளை அவரின் வாழ்வில் பிறகு வந்துசேரும் ஓரு பதின்மனான தாமோதரனை அதற்கு எதிர்மாறாக ஒரு மகனைப்போல அவ்வளவு நேசிக்கிறார் என்பதே மனிதமனங்களின் ஆழங்களுக்குள் நாம் போய்ப்பார்ப்பதற்கான ஒரு சிறுபுள்ளியை ஆ.மாதவன் முன்வைக்கின்றார் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு மனிதரும் நல்லவராகவும் கெட்டவராகவும் இரண்டு எதிர்மைகளையும் தனக்குள் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் இந்நாவலினூடாக அறிந்து கொள்கின்றோம். ஒருவகையில் இது Yin-Yang ஐப் போன்றது. நாம் இந்த இரண்டில் ஒன்றை மட்டுந் தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியாது, அதேவேளை ஏதோ ஒன்று சற்று மேலோங்கி வரும் காலத்தில் அதன் இயல்பாக நாம் அடையாளப்படுத்தப்பட்டு இந்த வாழ்வை வாழ்ந்து முடித்துவிடக்கூடுமென நாம் மூப்பன் அங்குசாமியின் வாழ்வினூடாகப் பார்க்கின்றோம். புனலும் மணலும் இன்று சூழலியல் சிக்கல்கள் உக்கிரமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வாசிக்கவேண்டிய நாவல் என்றாலும், அவரின் 'கிருஷ்ண பருந்தே' அவரின் மிக முக்கியமான படைப்பெனத் தயக்கமில்லாமல் சொல்வேன்.

2.

புனலும் மணலுமோடு ஒரே வரிசையில் வைத்துப் பேசமுடியாதென்றாலும், இவ்வாறு ஒரு தகப்பன் - 'மகள்' கதையைப் போல, ஒரு தாய் - மகன் கதையைச் சொல்கின்ற நாஞ்சில் நாடனின் 'சதுரங்கக் குதிரையையும்' கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். சிறுவயதில் தகப்பனை இழந்து, காலம் பிந்திப் பிறக்கின்ற நாராயணின் வாழ்க்கை தமிழ்நாடு - மும்பை என தனிமைக்குள் அலையத்தொடங்கின்றது அல்லது அமிழத்தொடங்கின்றது. நாவலை நகுலனுக்குக் காணிக்கை என்கின்றபோதே நமக்கு நாராயணின் கதையை தொடக்கத்திலேயே எளிதாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

நாராயணன் என்ற கதாபாத்திரத்தின் தளம்பலே, உண்மையிலேயே நாராயணன் தனித்து வாழ விரும்புகின்றாரா அல்லது புறக்காரணிகளால் அவருக்குத் திருமணம் நடக்காமல் போகின்றதா என்பதேயாகும். பல்வேறு காலகட்டங்களில் அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் உறவுகளும், நண்பர்களும் முயற்சிக்கையில் சிலது குறிப்பிட்ட காரணங்களால் பிறரால் நிராகரிக்கப்படுவதையும், அதேசமயம் பலவேளைகளில் நாராயணால் நிராகரிக்கப்படுவதையும் நாவலில் நாம் காண்கின்றோம். தனித்துவாழும் வாழ்வு நாராயணின் ஒரு தெரிவெனில் ஏன் அவரால் அதைக் கொண்டாடவோ, நிறைவாகவோ வாழமுடியாது இருக்கின்றது என்ற கேள்வியையும் இந்நாவலை முன்வைத்து நாம் கேட்டுப் பார்க்கலாம்.

நாராயணுக்கு அவரின் மாமாவின் இளையவயது மகள் கல்யாணி மீதே விருப்பு இருக்கிறது. கல்யாணிக்குத் திருமணம் நடந்து அவரின் மகள் திருமணமாகின்றபோதுகூட, கல்யாணி சார்ந்து இவருக்கு  உடல்சார்ந்து மோகக்கனவுகள் கூட வருகின்றன. ஆனால் நாராயணனுக்கு, கல்யாணியிலிருந்து நாவலின் இறுதியில் மும்பையில் சந்திக்கின்ற ராதாவரை ஈர்ப்பிருந்தாலும் ஏன் தன் உள்ளக்கிடக்கையை ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதே வாசிக்கும் எனக்கு அலுப்பைத் தந்திருந்தது. நாராயணைப் போன்றோர் இவ்வுலகில் நிறைய இருக்கக்கூடும். தனிமையில் இருந்தபடி, காமத்தைத் தீர்க்கின்ற காலங்கள் கனிகின்றபோதுகூட அதை எட்டி உதைத்தபடி வீம்பாக வாழ்கின்ற மனிதர்கள் மீது எனக்கு எவ்விதக் கேள்விகளுமில்லை. அவரவர்  வாழ்வு அவரவர்க்கு. ஆனால் என் அலைவரிசை ராஜ சுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தில்' வரும் கதைசொல்லிக்கு அண்மையாகச் செல்வது. வாழ்வு அவ்வப்போது பெரும் அதிர்ச்சிகளைத் தந்தாலும், தனக்கு என்ன வேண்டுமென அவற்றை நாடிச்செல்வது, அதைக் கொண்டாடியபடி தன் தனிமையையும் தனக்குள்ளேயே வைத்திருப்பது. இதன் அர்த்தம் தனித்திருந்து வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருப்பதால், வேறுவகையான சிக்கல்கள்/சோகங்கள் இல்லையென்பதல்ல. ஒருவருக்குத் தரப்பட்ட தேர்வின் நிமித்தம், அவர் அதனூடாக தன் வாழ்வை இயன்றவரை தனக்குப் பிடித்தமாதிரிக் கொண்டுசெல்வது, பிற/பிறரின் மீது அளவுக்கதிகமாக காரணங்களைச் சாட்டாது தம் வாழ்வின் தெரிவுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.

3.

ஆ.மாதவனின் புனலும் மணலும், நாஞ்சில் நாடனின் சதுரங்கக் குதிரையும் அவர்கள் எழுதிய நாவல்களில் உச்சமில்லை என்றாலும் வாசித்து விவாதிப்பதற்கான புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது என்பதையும் தெளிவாக இங்கு கூறிவிடவேண்டும். இன்னுமொரு அம்சம் என்னவென்றால் - நான் ஏற்கனவே பலதடவைகள் சொன்னதுதா ன் - இந்த இரு நாவல்களும் 200 பக்கங்ளுக்குள் முடிந்துவிடுகின்றவையாகவும் இருக்கின்றன. இவ்விரு நாவல்களில் எங்கு ஒவ்வொரு அத்தியாயத்தைத் தொடங்கி, எப்படி முடிப்பது என்று இதன் படைப்பாளிகளுக்குத் தெரிந்திருக்கின்றது. ஆ.மாதவனின் நாவலில் சில அத்தியாயங்கள் இரண்டு பக்கங்களும் இருக்கின்றன. அவ்வாறே அளவுக்கதிகமாய் எல்லாவற்றையும் விபரித்து எங்களைச் சோர்வடையச் செய்யாமலும் இந்த நாவல்கள் நகர்கின்றன.

இன்று எழுதப்பட்டும் பெரும்பாலான நாவல்களின் சிக்கலே வாசிப்பவரை பக்கங்களை எழுந்தமானமாகத் தட்டிச்செல்லும்படியான அலுப்பான நடையில் இருப்பது என்று சொல்வேன். வாசிக்கும் ஒருவரை, விபரிப்போ, பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலோ போதும் போதுமென்று பக்கங்களைப் புரட்டச்செய்தாலே அந்த நாவல் எங்கோ இடறிவிட்டதெனச் சொல்லலாம். எவ்வாறு ஒரு வாசகரை அலுப்படையச் செய்யாமல் எங்கே வெட்டி எங்கே புதிதாய்த் தொடங்குவதென்பதில் ஒரு நாவலாசிரியர்  நல்லதொரு திரைப்பட 'எடிட்டிங்' போல கவனமாக 'வெட்ட' வேண்டும். அதேபோல இந்த இரண்டு நாவல்களும் முடியும் இடங்களையும் அவதானித்தால் கூட, எப்படி ஒரு படைப்பை முடிப்பதென்ற உத்திகளும் நமக்குப் புலப்படும். ஒருவகையில் இந்த நாவல்களின் முடிவுகளே நம்மை இது குறித்து அதற்குள் இருக்கும் பலவீனங்களைத்தாண்டி வாசிக்கவும் உரையாடவும் வைக்கின்றன என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.
....................................

(ஆனி, 2020)

மெக்ஸிகோ - சஞ்சயன் செல்வமாணிக்கம்

Friday, June 26, 2020


பிரபஞ்சனின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். அதிர்வு இருக்காது. ஒரு சாந்தமான அழைப்புடன் தனது கருத்தை ஆழமாகப் பகிர்வார்.

கனடா வாழ் இளங்கோவுடைய 'மெக்ஸிகோ' நாவல், அவரின் நினைவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் முதற்பரிசு வென்றது. நாவலும், பிரஞ்சனின் குரலைப்போன்றதே.



கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிக்க மெக்ஸிகோ செல்லும் கதாநாயகன், அங்கு ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். விடுமுறையை ஒன்றாகவே கழிக்கிறார்கள். காதலாகிறது. இடையிடையே முன்னாள் காதலியும் வந்துபோகிறார். இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் கதை முடியும்போது, கதையின் நாயகனை இறுகத் தழுவி “என்னினமடா நீ” என்று அணைத்துக்கொள்ளத் தோன்றியது.

நன்கு கனிந்தவொரு வாழைப்பழத்தை உண்ணுவதைப்போன்ற இலகுவான உணர்வுடன் நகர்கிறது நாவல். சிக்கல்கள் எதுவுமில்லாத கதை. ஒரு நாள் காலை துயியெழுந்ததில் இருந்து மாலை கண்ணயரும்வரை நடந்தவற்றை சுவராஸ்யமாகச் சொல்வதுபோன்ற ஒரு பயணக்கதை. கதையை ஐந்து ஆறு வரிகளில் சொல்லிவிடலாம்.


ஆனால், பயணம், வாழ்கையனுபவம் என்பதன் ஊடாக நாவலை ரசிக்கவைப்பது உலகைக் கொண்டாடும் இளையோரின் மனங்களும், மெக்ஸிகோ நாடுபற்றிய விபரணங்களும், உரையாடல்களும், பாத்திரங்களின் சுயசிந்தனைகளும் முக்கியமாக நாவலின் இறுதியில் தோன்றும் மனிதரின் விசித்திர மனமுமே.


இன்றைய காலத்துத் தமிழை இந்த இளங்கோவால் அடக்கியாள முடிகிறது. எசமானனின் பின்னே செல்லும் விசுவாசமான நாய்போன்று ஆர்ப்பாட்டமில்லாத அட்டகாசமான மொழியைப் பெற்றிருக்கிறார்.


அத்தியாயம் 35இல், தோழியுடன் காமுறும் பொழுதை, அவளது உடை தோளிலில் இருந்து கழ‌ன்று விழும் நிலையை, அந்தக்கணத்தில் அவரது மனநிலையை, சத்தமில்லாத பூனையின் காலடிகளைப்போன்று லாவகமான மொழியில் எழுதியிருக்கிறார். மொழி நாவலின் பெரும் பலம்.


இளையபல்லவன், காஞ்சனா தேவியையும் மஞ்சள‌ழகியையும் மஞ்சத்தில் கிடத்திய காட்சிகளுக்கு ஒப்பானவை இவை. ஆனால் இங்குள்ள மொழியின் தன்மையை மீண்டும் ஒருமுறை சிலாகித்துக் குறிப்பிடாது இருக்கமுடியாது. காலமற்றம் போன்று, இலக்கியத்திற்கும் மொழிமாற்றம் அவசியம்தான் என்றே நினைக்கிறேன்.


“தான் காதலித்து, தன்னை விட்டுப் பிரிந்த பெண், இன்னொரு ஆணைக் காதலிக்கிறாள் என்பதைத்தான் எந்த ஆணாலும் தாங்கமுடியாது” என்று ஆரம்பிக்கும் ஒரு உரையாடல் 118ம் பக்கத்தில் வருகிறது. மிக அழகான உரையாடல் அது. ஆழமான சிந்தனைகளுக்கும் சுயவிமர்சனங்களுக்கும் இட்டுச்செல்கிறது.


ஆண், பெண் ஆகியோருக்கிடையிலான லௌகீகம்பற்றிய இருபாலாரினதும் சிந்தனைகள மிகவும் நுட்பமாக உரையாடல்களில் புகுத்தியிருப்பதை வாசிக்கும்போது, எம்மில் பலர் பெண்கள் பற்றியிருக்கும் சிந்தனைகளை மீளாய்வுசெய்யவேண்டியிருப்பதை உணரக்கூடும். அதற்கு எமது வயதும், நாம் வளர்ந்த காலமும் சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம்.


தற்காலத்து ஆண் பெண் உறவுகளும் அதுபற்றிய சிந்தனை வடிவங்களையும் எனது காலத்துடன் ஒப்பிட்டு தலையைப் பித்துக்கொள்வதில் அர்த்தமில்லை. காலம் தன்பாட்டில் நகர்ந்துகொண்டிருக்கிறது. நாம்தான் நின்ற இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.


123ம் பக்கத்தில்...

“பெண்கள் ஒருபோதும் தங்கள் ஆட்டங்களில் சுவார‌சியத்தை கைவிடுபவர்களில்லை. ஆட்டம் என்கிற களத்திற்குள் அவர்கள் நுழையும்போது, அவர்கள் எல்லாவிதமான தயார்ப்படுத்தல்களுடனயேயே வருகிறார்கள். புறச்சூழல் கடும் நெருக்கடியைக் கொடுத்தாலும், தம்மிடமிருக்கும் கடைசி வித்தைவரை ஒரு ஆணிடம் காட்டித்தான் விலகிப்போவார்கள்.

அவளுக்குள் இருக்கும் இயற்கையின் பேரருளை, பேரின்பத்தை உணர்கின்ற ஆண்கள் மிக அரிதானவர்கள். மிகுதி அனவரும் தாம் ஆட்டங்களில் தோற்றதாய் மனப்பிரமையுடன் பெண்களைப்பற்றி தேவையில்லாக் கதைகளைப் பரப்பியபடி இருப்பவர்கள்!”


இதைச் சொல்பவள் கதையின் நாயகி.


அவள், தனது உரையாடல்களின் ஊடாக நாவல் முழுவதும், தற்காலத்துப் பெண்களின் சிந்தனைகளை தெளித்தபடியே நடந்துகொண்டிருக்கிறாள். அது ஒருவித புரிதலுக்கும் இட்டுச்செல்கிறது என்பதுதான் உண்மை. இளங்கோவும் இளையவர் என்பதால்தான் அவருக்கும் இதுபற்றிய புரிதல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என் தலைமுறை எழுத்தாளர்களால் இப்படியான விடயத்தை, இந்தளவு, இன்றைய காலத்தின் மொழியில், உணர்வு கலந்து எழுதமுடியாது என்றுதான் சொல்லவேண்டும்.


வாழ்க்கையை பிய்த்து பிய்த்து, கழற்றிப் பூட்டும் உரையாடல்கள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை. அப்படியான பல அத்தியாயங்கள் நாவலின் இறுதிப்பகுதியில் இருக்கிறது. அவற்றை அனுபவம் கலந்த விசாலித்த பார்வையுடனுடன் எழுதியிருக்கிறார் இளங்கோ.


35ம் அதிகாரம் வரை, ஒளிமிகுந்த ஒரு நாள்போன்று நகர்ந்த நாவல் திடீரென்று இருண்டு, 44ம் அதிகாரத்தில் காற்று நின்றுபோன, அதைத்த, புழுக்கமான பொழுதில், மூச்சு முட்டுவதுபோன்று மாறுகிறது. மாரடைப்பு வந்தவன், காற்றுக்காய் நெஞ்சை உயர்த்தி உயர்த்தி அலைவதுபோல அவதிப்பட்டேன்.


38ஆம் அத்தியாயத்திலும், நாவலின் வேறு சில இடங்களிலும் நாவலானது எனக்காவே எழுதியதுபோலிருக்கிறது. இப்படித்தான் ராஜ் கௌதமன் எழுதிய `சிலுவைராஜ் சரித்திரமும். வாசித்துப் பத்தாண்டுகளுக்கு மேலானபின்பும், இன்றுகூட, சிலுவையும் நானும் மிக நெருங்கிய தோழர்கள். சோர்ந்துபோகும் நேரங்களில் முதுகைத் தட்டித்தருபவன். இளங்கோவின் நாயகனும் இந்தப்பட்டியலில் சேர்ந்துகொள்ளக்கூடும்.


தத்துவ விசாரங்கள் நிறையவே இந்த நாவலில் உண்டு. உரையாடல்கள், தனிமனித சிந்தனைகளின் ஊடாக அவை அழகாக வெளிப்படுகின்றன. எனக்குப் மிகவும் பிடித்தது 36ஆம் அத்தியாயம். அங்கு மனச்சாட்சி, மன்னிப்புபற்றிப் பேசப்படுகிறது. அதுபோன்றதே 38ம் அத்தியாத்தில் பேசப்படும் வார்த்தைப்பாம்பு எப்படியானது என்னும் பகுதியும்.


இந்த நாவலின் நாயகன் மெக்சிக்கோவில் அலைவது போன்று, எனக்கும் இந்தியாவில் காடுகள், பாலைவனங்கள், சரித்திர மற்றும் அகழ்வாராய்ச்சிக் தளங்கள், கிராமங்கள், சிற்பங்கள், ஆறுகள், விளிம்புநிலை மனிதர்கள் என்று நாட்கணக்கில் அலையவேண்டும் என்ற ஆசை பல பத்து ஆண்டுகளாக உண்டு. நாவலில் வரும் தோழியைப்போன்று ஒருத்தி கிடைத்தால் மெக்சிக்கோ என்ன உலகையே சுற்றலாம். இல்லையா இளங்கோ?


இந்த நாவலைப்பற்றி ஒரு வசனத்தில் சொல்வது என்றால்...


இலையுதிர்காலத்திற்கு முன்பான இளவேனில் போன்றது.


***


அன்பு இளங்கோ!


அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.


கொண்டாடப்படும் மகத்தான நாவல்களை எழுதியவர்கள் எல்லாரும் மனிதர்களின் தீராத வலிகளைத்தான் எழுதினார்கள். உங்களுக்கும் அவ்வித்தையின் முடிச்சை அவிழ்கத் தெரிந்திருக்கிறது.


***


நன்றி: சஞ்சயன் செல்வமாணிக்கம்

நிகழ்ந்துவிட்ட அற்புதம்: சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி

Friday, June 19, 2020



1.
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்திருந்தாலும் அவரை விரிவாக வாசித்துப் பார்த்தது என்றால் மூன்று/நான்கு வருடங்களுக்கு முன்னராகத்தான் இருக்கும். அந்தக் காலப்பகுதியில் ஒரே தொடர்ச்சியில் அவரது எல்லா நாவல்களையும் வாசித்து முடித்திருந்தேன். எனக்குப் பிடித்தமான அவரது நாவல்களென 'Post Office', 'Women', 'Factotum', 'Hollywood'  என்பவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நாவலாசிரியராக ப்யூகோவ்ஸ்கியை அடையாளப்படுத்துவதை விட, அவரைக் கவிஞராகப் பார்ப்பதே பலருக்குப் பிடித்தமானது. ஆனால் நான் அவரது கவிதைத் தொகுப்புக்களைத் தேடித்தேடி வாசித்தபோது அவை என்னை அவ்வளவு கவரவில்லை. அவை மிக நேரடியான கவிதைகளாக, எவ்வித உள்ளடுக்குகளும் இல்லாது, எளிய சொற்களால் ஆன கவிதைகளாக இருந்ததுபோல எனக்குத் தோன்றியது. முக்கியமாக மெளன வாசிப்புக்கு  அவை உரியவை அல்ல என்று அவற்றைத் தொடக்க காலத்தில் தவிர்த்திருக்கின்றேன்.
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நின்றபோது நண்பர் ஒருவருடைய கவிதைப்புத்தக அறிமுக நிகழ்வுக்குப் போயிருந்தேன். வந்திருந்த எல்லோரும் அவரின் கவிதைகளை உரத்த குரலில் வாசித்தபோது, நான் மட்டும் வழிதவறிய ஆட்டுக்குட்டியாக   கவிதைகள் மெளன வாசிப்புக்குரியவை, நான் இவ்வாறு வாசிக்கமாட்டேன் என மறுத்திருந்தேன். இதையேன் இங்கே சொல்கின்றேன் என்றால், கவிதைகள் என்றாலே உரத்துவாசிக்கக்கூடாது என்று தீவிரமாய் நம்புகின்ற எனக்கு, விதிவிலக்காக இருந்த ஒருவர் ப்யூகோவ்ஸ்கி. அவர் நிகழ்வுகளில் வாசிக்கும் கவிதைகளை அவரின் குரலில் எப்போதும் கேட்டாலும் எனக்குத் திகட்டுவதேயில்லை. ப்யூகோவ்ஸ்கி ஒருவகையான கரகரப்புடனும், அதிகம் அதிர்ந்துபோகாத அதிர்வு எண்ணிலும் அவரது கவிதைகளை வாசிக்கும்போது இதைவிட வேறொருவராலும் கவிதைகளை அற்புதமாக வாசித்துவிடமுடியாது போலத் தோன்றும்.
ஒருகாலத்தில் ப்யூகோவ்ஸ்கியின் நாவல்களைத் தேடி தேடி வாசித்தபோல, அண்மைக்காலமாக அவரைப் பற்றிய எல்லா காணொளிப் பதிவுகளையும் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அதில் குறிப்பிடவேண்டுமென்றால் அவரைப் பற்றிய ஆவணப்படமான "Bukowski: Born into this" ஐச் சொல்வேன். ஆனால் என்னைப் போன்று ப்யூகோவ்ஸ்கியின் தீவிர வாசகராக யாரேனும் இருந்தால், அவர்களை, கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் நீளும் "Bukowski Tapes"ஐப் பார்க்கச் சொல்வேன்.

2.
ப்யூகோவ்ஸ்கி எனக்கு மனிதர்களைப் பிடிப்பதேயில்லை, தனிமையில் இருப்பதே பிடிக்கிறதெனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றார். எனக்குப் பெண்களைப் பிடிக்கும் ஆனால் அவர்களோடு வாழ்ந்துகொண்டிருப்பது கூட மிகவும் கஷ்டமாயிருக்கிறது என்கின்றார். கிட்டத்தட்ட ஒரு பொல்லாப்புமில்லை, சும்மா இரு தத்துவத்தை கடைப்பிடிப்பவர் போல ப்யூகோவ்ஸ்கி நமக்குத் தெரிகின்றார்.
சிலவேளைகளில் தான் மூன்று நாட்களுக்கு மேலாய் தூங்கிக்கொண்டே இருந்ததாகவும், ஆனால் அப்படிச் செய்து எழும்போது தனக்கு அது தொடர்ந்து இயங்குவதற்கான  உயிர்ப்பைத்  தருவதாகவும் சொல்கிறார். உங்கள் எவராலும் இதை விளங்கிகொள்ளமுடியாது. ஏனென்றால் நீங்கள் எல்லோரும் ஓய்வு எடுப்பது என்பதை கொஞ்சம் தூங்குவது, பிறகு எழுந்தவுடன் எதையாவது செய்யவேண்டும், அதன்பின் ஓய்வு எடுப்பது என்று நினைக்கின்றீர்கள். ஆனால் நான் அதைக் குறிப்பிடவில்லை, ஒன்றுமே செய்யாது நாட்கணக்கில்  சும்மா தூங்கி எழுவதைப் பற்றிச் சொல்கின்றேன் என்கின்றார்.  இதை எல்லோராலும் செய்யமுடியும் என்றாலும், நாமெல்லோரும் வாழ்வதற்காகப் பணம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.
ப்யூகோவ்ஸ்கி சிறுவயதில் (6-11வரை) இராணுவத்தில் இருந்த தந்தையாரின் மிகப்பெரும் வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றார். அவரின் தாயார், தகப்பனால் அடிக்கடி தாக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்டிருக்கின்றார். அம்மாவைப் பற்றிய ஒரு கவிதையில், 'ஹென்றி நீ எப்போது சிரித்துக் கொண்டே இரு என்று கூறுவார், ஆனால் வாரத்தில் மூன்று தடவைகளாவது அடிவாங்கும் அம்மா, அடிவாங்கியபின்னும் என்னைச் சிரித்தபடி இருக்கச் சொல்வார்' என்று துயரத்தின் சாயலில் ஒரு கவிதை எழுதியிருப்பார். இவ்வாறு வன்முறையைப் பார்த்த ப்யூகோவ்ஸ்கியிக்கு அரிதாகச் சிலருக்கு வரும் தீவிரமான முகப்பருப் பிரச்சினையும் அவரது பதின்மத்தில் தாக்க முகம் கோரமான ஒரு வடிவத்தைப் பெறுகின்றது. இதன் காரணமாக கிட்டத்தட்ட அவரின் 25 வயதுவரை எந்தப் பெண்ணின் உறவும் இல்லாது இருந்தவர். அவர் முதலில் நேசித்து வாழ்வைப் பகிர்ந்த பெண் அவரை விட பத்து வயது மூத்தவராக இருந்திருக்கின்றார்.
ப்யூகோவ்ஸ்கி பிறகான காலங்களில் ஒரு homeless ஆனவர். பூங்காக்களின் பெஞ்சுகளில் படுத்திருந்து, வீடற்ற பலரோடு வாழ்வைப் பகிர்ந்துகொண்டவர். அதனால்தான் ஓரிடத்தில், எந்தத் திரைப்படமானாலும் எவருமே இப்படியான வீடற்றவர்களைப் பற்றி சரியாக விபரித்ததே இல்லை என்கின்றார். 'நான் ஒரு தப்பித்தலுக்காய் இப்படி வீடற்றவன் ஆனேன், ஆனால் இவர்கள் இந்தச் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள், அவர்களுக்கு எந்தத் தெரிவும் இருக்கவில்லை' என்று உண்மையான அக்கறையோடு விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
13வயதில் இருந்தே எழுத்தின் மீது ஆர்வமிருந்த ப்யூகோவ்ஸ்கி,  எழுதுவதற்கு ஒழுங்கான தாள்கள் இல்லாதபோதுகூட, கதைகளை கிடைக்கும் பத்திரிகைகளின் விளிம்புகளில் பென்சில் கொண்டு எழுதியிருக்கின்றார். இவ்வாறான காலத்தில் அவரின் முதலாவது கதையொன்று பத்திரிகையொன்றில் பிரசுரமாக, ஒரு பத்திரிகை ஏஜெண்ட் பெண், இவருக்கு போஸ்ட்கார்டில் எங்கையோ கஷ்டப்பட்டு விலாசம் கண்டுபிடித்து கடிதம் எழுதுகிறார்.  'உங்கள் கதை நன்றாக இருக்கிறது, நான் உங்களின் ஏஜெண்டாக இருக்க விரும்புகின்றேன். நல்ல உணவோடும், மதுவோடும் ஓரிடத்தில் இது பற்றி சந்தித்துப் பேசுவோமா' என்கின்றார். ஆனால் இந்த இடத்தில்தான் நாம் ப்யூகோவ்ஸ்கியைக் கவனமாகப் பார்க்கவேண்டும். அவருக்கு ஒழுங்கான இடமில்லை, நேரகாலத்துக்குச் சாப்பாடும் கிடைப்பதுமில்லை, ஆனால் அவர் ஏஜெண்டுக்கு திருப்பி எழுதுகிறார்: 'நான் இன்னும் எழுத்தாளனாக ஆவதற்குத் தயாராக இல்லை' என்று. மற்றவர்களாய் இருந்திருப்பின் உடனேயே இந்த offerஐ ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் ப்யூகோவ்ஸ்கி ஒரு கிறுக்கர் மட்டுமில்லை, தனது எழுத்தின் நிலவரமும் கூடவே அறிந்தவர். ஆகவே இப்படிச் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குள் அலைந்து திரியத் தொடங்குகின்றார். தனது காலத்தைய Jack Kerouacற்கு பயணம் செய்து செய்து எழுதும் விருப்பு இருந்தது, தனக்கு அது கூட இருக்கவில்லை. பயணிப்பது, குடிப்பது, நன்கு தூங்குவது இதுவே தனது விருப்பங்களாக இருந்தது என்கிறார். பின்னர் வாரத்துக்கு மூன்று/நான்கு கதைகள் என்றெழுதி அவை எல்லாம் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்டு  திரும்பி வந்தபோது, அவற்றைக் கூட சேமிக்காது குப்பைக்குள் எறிந்துமிருக்கின்றார்.
இவ்வாறு சொல்லும் ப்யூகோவ்ஸ்கி பின்னர் எழுதி வசதியாக வாழத்தொடங்கும்போது ஒழுங்கான உணவில்லாது வாழ்ந்த காலங்களையும் நினைவுகொள்கிறார். அந்தக் காலத்தில் எதையுமே சாப்பிடாது இருபத்தைந்து சதத்துக்கு இனிப்புக்களை வாங்கி இரவில் சாப்பிட்டபடி கழித்த நாட்களைச் சொல்கிறார்.  ஒவ்வொரு சிறுதுண்டும் அப்படி சுவையாக இருந்தது என அதை விபரிக்கும்போது, நம்மாலும் அதன் பேரின்பத்தை உணரமுடிகிறது.

3.
ப்யூகோவ்ஸ்கியின் பத்தி எழுத்துக்களினாலும், கவிதைகளாலும் ஈர்க்கப்பட்ட ஓர் அச்சுப்பதிப்பாளர், ப்யூகோவ்ஸ்கியிடம் முழுநேர எழுத்தாளராக மாறும்படி கேட்கின்றார். ப்யூகோவ்ஸ்கியிற்கோ பயம். பிடிக்காத வேலை என்றாலும், வேலை போனால் மீண்டும் தெருவுக்குள் வாழப் போகவேண்டியிருக்குமே என்று யோசிக்கின்றார். அவரும்,  அந்தச் சிறு பதிப்பாளரும் ஒருநாள் இருந்து அவரின் மாதச் செலவை (1970) எழுதிப் பார்க்கின்றனர். வாடகைக்கு 80 டொலர்கள், குடி/சிகரெட்/சாப்பாடுக்கு 20 டொலர்கள், ஒரு மாதச் செலவு 100 டொலர்கள் என்கிறார் ப்யூகோவ்ஸ்கி. 'சரி  நீங்கள் எழுதுகின்றீர்களோ இல்லையோ உங்களுக்கு 100 டொலர்களை வாழ்நாள் முழுதும் மாதம் மாதம் தருகின்றேன்' என்கின்றார் அந்தப் பதிப்பாளர். இதுவரை சிறுபத்திரிகைகளில் எழுதி வந்த ப்யூகோவ்ஸ்கியிடம் இப்போது நாவல்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது அதையும் விரும்பினால் முயற்சித்துப் பாருங்கள் எனப் பதிப்பாளரால் சொல்லப்படுகின்றது,
அப்படி வேலையைத் துறந்து, உடனேயே மூன்று வாரங்களுக்குள் எழுதிக்கொடுத்த நாவல்தான் அஞ்சல் அலுவலகம் (Post Office). ப்யூகோவ்ஸ்கியிற்கு நிகழ்ந்த இச்சம்பவத்தோடு தொடர்புபடுத்தக் கூடிய இன்னொரு எழுத்தாளர் '2666'  எழுதிய ரொபர்தோ பொலானோ. அவரும் கவிதைகள், கதைகள் நீண்டகாலம் எழுதியபோதும் குறிப்பிட்ட வருமானம் வராததைக் கண்டு,  தனது பிள்ளைகளின் வறுமையை நீக்கும்பொருட்டு அவரின் 40களின் பிற்பகுதியில் நாவல்களை எழுதத் தொடங்கியவர். ஆனால் பொலானோ, ப்யூகோவ்ஸ்கியைப் போலவன்றி, தனது நாவல்கள் பெரும் புகழடைய முன்னரே, அவரின் 50வது வயதில் மரணத்தைச் சந்தித்தவர்.
மேலும், ப்யூகோவ்ஸ்கி தன் வாழ்நாள் முழுதும் தனது படைப்புக்களை இந்தச் சிறு பதிப்பாளருக்கு வழங்கியதோடல்லாது, தனது மரணம் வரை - அவர் புகழடைவதற்கு முன் எழுதிய சிறுபத்திரிகைகளுக்கும்- தொடர்ந்து ஆக்கங்களைக் கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் சிறுபத்திரிகைகளின் அரசன் என்கின்ற ஒரு செல்லப்பெயரும் ப்யூகோவ்ஸ்கியுக்கு இருந்திருக்கின்றது.
பெஞ்சில் படுத்திருப்பதும், பிறகு உடுப்பின் மீதிருக்கும் புழுதியைத் தட்டியபடி நூலகத்திற்குள் நுழையும்போது மற்றவர்கள் அருவெறுப்பான பார்வை பார்க்க, தாஸ்தவோஸ்கியின் 'நிலவறைக் குறிப்புக்கள்' வாசித்தை ப்யூகோவ்ஸ்கி நினைவுகொள்கிறார். அவருக்கு டால்ஸ்டாயின் 'போரும் சமாதானமும்' பிடிக்கும் என்றாலும், தான் எளிய வார்த்தைகளில் கதை சொல்லும் போக்கை ஹெமிங்வேயிலிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். 
ஒரு படைப்பை எப்போது எழுத வேண்டுமென அவரது பிரசித்தி பெற்ற கவிதையான "so you want to be a writer"  இல் சொன்னமாதிரி, எழுதும்போது ஒரு juiciness இருக்கவேண்டும், வாசகரை அலுப்படையச் செய்யக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். மேலும் அந்த எழுத்தை, தான் நகைச்சுவைக்குள்ளால் எடுத்துச் செல்ல விரும்புகின்றேன் என்கிறார். ஆகவேதான் 'அஞ்சல் அலுவலக' நாவலின் முதல் வசனம் இவ்வாறான எளிய வசனத்துடன் தொடங்கின்றது:"It began as a mistake".
ப்யூகோவ்ஸ்கி ஒரு உள்ளொடுங்கிய மனிதரென எளிதாகவே அறிந்துகொள்ளலாம். அவருக்கு எழுத்தும், விரும்பிய நேரத்துக்கு எல்லாம் குடிப்பதும்/புகைப்பதும், வேலை என்று செய்வது எதுவுமே பிடிக்காது என்றாலும், அவர் வறுமையின் எல்லைவரை எட்டிப்பார்த்ததால், அவருக்குக் கிடைத்த தபால் அலுவலக வேலையை விடமுடியாதவராகவும் இருக்கின்றார். ஒருமுறை இராஜினாமாச் செய்தபோதும் பிறகு அதில் தன்னைச் சேர்ந்துக்கொள்ளும்படி கடிதம் எழுதி திரும்பச் சேர்கிறார். அவருக்கு வேலை பறிபோய்விடும் என்ற பயம் தொடர்ந்து இருந்ததால்,   அஞ்சல்களை எப்படித் தரம்பிரிப்பது  என்று வீட்டில் இருந்து கூட பதற்றத்துடன் பயிற்சி பெற்றிருக்கின்றார்.

4.
ப்யூகோவ்ஸ்கியின் 'பெண்கள்' (Women) நாவலை வாசித்தபோது, ஒருவரின் வாழ்வில் இவ்வளவு பெண்கள் வருவார்களா எனத் திகைத்து அரைவாசி பொய்யாக இருக்குமெனவே நினைத்திருந்தேன். ஆனால் அவரது ஆவணப்படங்களைப் பார்க்கும்போது ப்யூகோவ்ஸ்கி தன் வாழ்வில் சந்தித்த பெண்களைப் பற்றித்தான்  அதிகம் எழுதியிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.. ஓரிடத்தில்  இந்தப் பெண்களைத் தான் சந்தித்த வீட்டுக்குக்  கூட்டிக்கொண்டுபோய்  நமக்கு ஒரு ஆவணப்படத்தில் காட்டுகிறார். அங்கேயிருந்தே 'பெண்கள்' என்ற நாவலை எப்படி எழுதினேன் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.
அந்த இடம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் சனங்களின் ஆரவாரமுள்ள இடம். அங்கே நிறையக் குற்றங்களும், போதைமருந்துக் கடத்தல்களும் நடைபெறுவதால், தலைக்கு மேலே அடிக்கடி கண்காணித்தபடி பறக்கும் ஹெலிகொப்டர்கள் பற்றியும் ப்யூகோவ்ஸ்கி நமக்குச் சொல்கிறார். இந்தச் சூழலுக்குள் இருந்தா மிகவும் நெகிழ்வான, எள்ளல் நிறைந்த நாவலை அவர் எழுதினார் என்பது நமக்கு சற்று வியப்பைத் தரக்கூடியது.
அதேபோல ப்யூகோவ்ஸ்கி தன் சுயசரிதையின் சாயலில் அவர் திரைக்கதை எழுதிய Barfly, ஒரு பிரெஞ்சு நெறியாளரால் படமாக்கப்பட்டது. அதில்  ப்யூகோவ்ஸ்கியின் பாத்திரத்தில் நடித்த Mickey Rourke பின்னாளில் பிரபல்யம் வாய்ந்த நடிகராய் இருக்கின்றார்.  ப்யூகோவ்ஸ்கி இந்த திரைப்பட நாட்களில் நடந்த சம்பவங்களையே 'ஹாலிவூட்' (Hollywood) நாவலாகப் பின்னர் எழுதுகின்றார்.  'ஹாலிவூட்' நாவலை வாசிக்கும்  நமக்கு திரையுலகின் உள்ளே நடக்கும் எல்லா போலித்தனங்களும் விளங்குவதோடு, Mickey Rourke பற்றிக் கூட அவ்வளவு நல்லதொரு விம்பம்  கிடைப்பதில்லை. ஆக எவரையும்/எதையும் பற்றிக் கவலைப்படாது ப்யூகோவ்ஸ்கி தனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டே இருந்திருக்கின்றார் என்பது நமக்கு இதிலிருந்து தெரிகிறது.
இன்னொரு இடத்தில், ப்யூகோவ்ஸ்கி தான் எழுதிய எல்லாவற்றையும் குடித்தபடியே எழுதியிருக்கின்றேன் என்கிறார். அதைவிட அதிகமாக வாசிக்கும்போது குடித்திருக்கின்றேன் என்று சிரித்தபடி சொல்கிறார். இவை எல்லாவற்றுக்கும் பயமே காரணம் என்கிறார். அப்படியெனில் எப்படி அவரது கவிதைகளை பார்களுக்குச் சென்று வாசித்திருக்கின்றார் என்கின்றபோது, அங்கே  நன்கு குடித்து, பார்களில் இருப்பவர்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொஞ்சம் கோமாளி வேடம்போட்டபடி பயமில்லாது வாசித்திருக்கின்றேன் என்கிறார். இப்படிச் செய்யும்போது 'உங்கள் integrity இல்லாது போய்விடுமே' என்கின்றபோது, ஆம் அதனால் தான் வருடம் ஒன்றோ அல்லது இரண்டு முறைதான் இப்படி நிகழ்வுகளைச் செய்கின்றேன் என்கிறார். ஆக அது ஒரு நுளம்புக்கடி போல இருக்கின்றதென்கிறார்.
இதைச் செய்வதற்கு பணமே காரணம் என்கிறார். ஏனெனில் நான் சாப்பாடு இல்லாது பல நாட்கள் இருந்தவன், எனக்கு பணத்தின் அருமை தெரியும். திரும்பவும் நான் அப்படி ஒரு நிலைமைக்குப் போக விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார். பீட் (Beat) காலத்தவர்களில் ப்யூகோவ்ஸ்கி அளவுக்கு, பிற்காலத்தில் அவரைப் போல வாழும் காலத்தில் பெரும் புகழடைந்தவர் எவருமே இல்லையெனச் சொல்லலாம். பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் அவரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட, ஹலிவூட்டில் திரைக்கதையாளராக நுழைதலென பெரும் பாய்ச்சல்களை அவரின் படைப்புக்களின் மூலம் ப்யூகோவ்ஸ்கி சாத்தியமாக்கியிருக்கின்றார்.
நிறையப் பெண்களை தன் காதலிகளாகச் சந்தித்த ப்யூகோவ்ஸ்கியிடம் காதல் பற்றிக் கேட்கும்போது, நமது ஒவ்வொரு காதலின் பிரிவின் போது நாம் நம்மைக் கண்டடைவதில்லை. நமது காதலிகள் நமக்குள் கட்டிவைத்த நம்மைப் பற்றிய பிம்பங்களையே தேடுகின்றோம். அதையே நாம் நமது அடுத்த காதலிகளிடம் தேடுகின்றோம், ஆனால் அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாத கானல்( நீர்) என்கிறார்.
வள்ளுவர், 'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்/ எண்ணுவம் என்பது இழுக்கு' என்றார். ப்யூகோவ்ஸ்கியோ நீங்கள் ஒன்றை முயற்சிக்கப் போகின்றீர்கள் என்றால், அதன் ஆழம் வரை நீங்கள் செல்லவேண்டும், இல்லாவிட்டால் அதைத் தொடங்கவே வேண்டாம் என்று கூறுகிறார். அது காதலாய் இருந்தால் என்ன, எழுத்தாய் இருந்தால் என்ன, ஏன் மரணமாய் இருந்தால் கூட என்ன? அதனால்தான் குடியின் நிமித்தம் ப்யூகோவ்ஸ்கியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இனி குடித்தாரென்றால் உயிர் வாழவே முடியாது என்று அவரின் முப்பதுகளில்  வைத்தியர் எச்சரித்தபின்னும், மரணத்தோடு தினம் விளையாடியபடி, 70 வயதுகளுக்கு மேலாய்  தினம் மதுவை அருந்திக்கொண்டும், புகைத்துக்கொண்டும் வாழ்ந்தவர் ப்யூகோவ்ஸ்கி.
எல்லோருக்கும் இப்படி 'அதிசயங்கள்' அவர்களின் வாழ்வில் வாய்த்ததில்லை. ப்யூகோவ்ஸ்கியிற்கு அது நிகழ்ந்திருக்கிறது. ஆகவேதான் அவர் அதற்குப் பிறகு எழுதிய ஆக்கங்களை நம்மால் வாசிக்க முடிகிறது. பிரமிள் ஒரு கவிதைக்கு 'நிகழ மறுத்த அற்புதம்' எனப் பெயரிட்டிருப்பார்.  இவ்வளவு பெருங்குடியோடு நிறைய எழுதிய ப்யூகோவ்ஸ்கியை 'நிகழ்ந்து விட்ட அற்புதம்' எனத்தான் நாம் சொல்லவேண்டும்.
.........................................................
 நன்றி: கனலி (மே, 2020)