கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சி.மோகனின் 'கமலி'

Sunday, June 27, 2021

ஒவ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் இணையவெளியில் சந்திக்கொள்ளும் நிகழ்வில் புதிதாய் ஒரு நண்பரை இணைத்திருந்தோம். அவர் ஆபிரிக்காவில் இருந்த நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழ்ந்தவர். எனவே அவர் அந்த அனுபவங்களை விரிவாகப் பகிர எங்களுக்கு அது மிகுந்த சுவாரசியமாக இருந்தது. அவர் இருந்த நிலப்பரப்பில் ஒரு இனக்குழுமத்தில் பெண்கள் முதலில் வெவ்வேறு ஆண்களுடன் இரு குழந்தைகளைப் பெற்றபின்னரே 'திருமணம்' என்ற பந்தத்தில் இணைந்துகொள்வது ஒரு பண்பாடாக இருந்தது எனச் சொன்னார். ஆகவே இவர் தனது ஒரேயொரு காதலியை மணந்து அவரோடு மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனச் சொன்னபோது எங்கள் கலாசாரம் குறித்து அங்கிருந்த பெண்களுக்கு இப்படியுமா எனப் பெரும் வியப்பாக இருந்தது என்றார்.


மனிதர்கள் உண்மையிலே polygamy இயல்புத்தன்மை உடையவர்கள், ஆனால் ஒழுக்கம்/அறம் போன்றவற்றால் monogamyஇற்குள் தங்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள் என்ற உரையாடல் நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கின்றது. தமிழில் தி.ஜானகிராமனின் பெரும்பாலான நாவல்கள் மனிதர்களுக்கு இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை விசாரணை செய்கின்றதாக அமைந்திருக்கின்றது. அவ்வாறு கமலி என்கின்ற திருமணமான பெண்ணுக்கு திருமணத்துக்கு அப்பால் வரும் இன்னொரு உறவைப் பின் தொடர்ந்து செல்லும் ஒரு குறுநாவலாக சி.மோகனின் 'கமலி' இருக்கின்றது.

கமலி என்கின்ற கமலாம்பிக்கை ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் முதுகலை படித்தவர். அதுவரை அவ்வளவு பிரபல்யம் இல்லாதிருக்கும் ஜோசியக்காரரான கமலியின் தந்தை கமலியின் வருகையோடு புதிய உயரங்களை அடைகின்றார். தனது மகள் பிறந்த அதிஷ்டமே தனது வாழ்வு செழித்தது என்று நினைக்கின்ற தந்தை, கமலிக்கு சல்லடை போட்டு ஒரு பொருத்தமான கணவனையும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார். இவர்களுக்கு நந்திதா என்கின்ற குழந்தையும் இருக்கும்போது, கமலிக்கு அவரின் கணவர் ரகுவரால் அறிமுகப்படுத்தப்படும் அவரை விட 16 வயதான கண்ணனோடு ஒரு இயல்பான போக்கிலே ஓர் உறவு முகிழ்ந்துவிடுகின்றது.

திருமணம் என்ற இறுக்கமான அமைப்பில் மட்டுமில்லை, காதல் என்கின்ற 'எல்லாச் சுதந்திரமும்' இருக்கின்ற நிலையில்கூட, ஒரு கட்டத்திற்குப் பிறகு பலருக்கு அவர்களுக்கிடையில் இருக்கும் உறவென்பது அலுத்துப்போவதை நாம் பார்த்திருக்கின்றோம். இங்கே திருமணம் என்கின்ற அலுப்பான வாழ்க்கையிற்குள் சில வருடங்களுக்குள் நுழைகின்ற கமலிக்கு ரகு ஒரு திறப்பை உண்டாக்கின்றார். இந்த ஜென்மம் உன்னோடு தொலைபேசியில் பேசியபடி மட்டும், அடுத்த ஜென்மம் நாம் விரும்பியமாதிரி இணைந்து வாழலாம்' என்று சொல்கின்ற கமலிக்குப் பிறகு உடல் சார்ந்த பகிர்தல்களும் கண்ணனுடன் நிகழ்கின்றன.

இந்த நாவலை நேரடித்தன்மையில் சி.மோகன் இந்த மனிதர்களின் அன்றாடங்களுக்குள் நுழைந்து எழுதிச் செல்கின்றார். தொடக்கத்தில் சற்று கட்டுரைத்தன்மை போலத் தொய்வு ஏற்பட்டாலும், பின்னர் நாவல் சுவாரசியமான நடைக்குள் புகுந்துகொள்கின்றது. அதேபோன்று தமிழில் இதேபோன்ற வகைப்பாட்டில் நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை சி.மோகன், கமலியினதும், கண்ணனினதும் ஊடாக தி.ஜானகிராமனின் நாவல்களைப் பேசவைக்கின்றார். 'அம்மா வந்தாள்', 'அடி' மட்டுமல்ல, தி.ஜாவின் முழுநாவல்களையும் வாங்கி வாசித்துப் பார்க்கின்றவராக கமலியின் பாத்திரம் இங்கே சித்தரிக்கப்படுகின்றது.

தி.ஜானகிராமனின் 'அடி' என்கின்ற அவரின் இறுதிநாவலை வாசித்த நமக்கு தி.ஜா அதுவரை எழுதிய நாவல்களிலிருந்து இதில் வேறொரு முடிவை எடுத்திருப்பது நன்கு தெரியும். 'அடி'யில் வரும் திருமணமான செல்லப்பாவிற்கு, பட்டு என்கின்ற அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணோடு உறவு வருகின்றது. பின்னர் அதை செல்லப்பாவின் மனைவி மங்களம் கண்டுபிடிக்கின்றபோது, தனது 'குற்றத்தை' ஒப்புக்கொண்டு எல்லோரு முன்னும் பாவமன்னிப்புக் கேட்கும் ஒரு பாவியைப் போல இறுதியில் செல்லப்பா ஆகிவிடுகின்றார்.

ஆனால் சி.மோகனின் 'கமலி'யில் எந்தப் பொழுதிலும் கமலி தன் திருமணத்துக்கு அப்பாலான உறவு குறித்து மனச் சஞ்சலமோ, குற்ற உணர்வோ அடைவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த இன்னொரு உறவுக்காய், தனது கணவனான ரகுவையையோ, அங்கே தானொரு இராணி போல இருக்கும் சிம்மாசனத்தையோ விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லாத ஒரு பெண்மணியாகவே இருக்கின்றார். முக்கியமாய் அவரின் கணவர் ரகுவுக்கு, இப்படி ஒரு மேலதிக உறவு கமலிக்கு இருக்கிறது என்று சந்தேகம் வரும்போதெல்லாம் சாமர்த்தியமாய் அவற்றையெல்லாம் இல்லாமற் செய்து, என்றுமே தான் ரகுவின் நம்பிக்கைக்குரிய மனைவிதான் என்பதை கமலி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

இறுதியில் ஏற்படும் முடிவு கூட கமலி தன்னியல்பிலேயே ஏற்றுக்கொண்டதுதான். அது குறித்துக் கூட அவருக்கு எந்தக் குற்றவுணர்ச்சியோ தயக்கங்களோ இல்லை. ஆகவே அது அவருக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது. 'அடி'யில் வரும் செல்லப்பா போல அவர் எவர் முன்னும் மண்டியிடாமலே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறார். மிக ஆச்சாரமான, அம்பாள் பக்தையான கமலாம்பிகைகளுக்குக் கூட மனம் என்னும் விசித்திரம் எதையெதையோ எல்லாம் செய்ய வைக்கின்றது என்கின்ற வியப்பு எழாமல் நாம் இந்த நாவலைக் கடந்துசெல்ல முடியாது.

'கமலி'யை வாசித்துக்கொண்டிருந்தபோது தி.ஜானகிராமனின் நாவல்கள் மட்டுமில்லை, சமகாலத்தவர்களான தமிழ்நதி எழுதிய 'கானல்வரி'யும், உமா வரதராஜனின் 'மூன்றாம் சிலுவை'யும் நினைவுக்கு வந்தபடியஏ இருந்தன. அவையும் இவ்வாறான உறவுச்சிக்கல்களையும் பேசுகின்றன, ஆனால் வெவ்வேறான தளங்களில் நின்றபடி!

கமலியை சி.மோகன் எழுதிச் செல்கின்ற நடையும், விபரிப்புக்களும் அலுப்படையச் செயயாதவை. ஆனால் இதை சி.மோகனின் உன்னத நாவலாகக் கொள்ளமாட்டேன். ஒருவகையில் இது கமலி என்கின்ற பெண்ணின் வாக்குமூலமாகக் கூட வாசித்துப் பார்க்கலாம். ஆனால் கமலி போன்ற பெண்களை நம்மைப் போன்ற ஆண்களால் முற்றுமுழுதாக உணர்ந்து எழுதிடமுடியுமா என்று கேள்வியும் இதை வாசித்து முடிக்கும்போது எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
..................................

(Mar 01, 2021)

தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)

Friday, June 25, 2021

1.


ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா.  அவர்  பல நூற்றுக்கணக்கனோர்  பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் பிரதியான  'தனுஜா'வை ( ஈழத் திருநங்கையின் பயணமும், போராட்டமும்) வாசிக்கத் தொடங்கியபோது, அது இற்றைவரை தமிழ்ச்சூழலில் வெளிவராத  ஒரு நூலென்ற எண்ணம் தொடக்கத்திலே வந்துவிட்டது. 


எல்லா privilagesம் இருக்கும் ஆண்களாகிய நாங்களே எமது வாழ்வில் நடந்தவற்றை எமக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் கூடப் பகிரத் தயங்குகின்றபோது, நமது சமூகத்தில் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட திருநங்கையான ஒருவர்  இவ்வளவு நேர்மையாக தன்னை முன்வைக்க முடியாமென  ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர இதை வாசித்தபோது வந்தது. 


தனுஜாவின் சிறுவயது, ஆணுடலுக்குள் சிக்குப்பட்ட பெண்ணின் கையறுநிலை என்றால், பின்னர் ஒரு பெண்ணாக 'நிர்வாணம்' செய்தபின், தனது இந்த நிலைக்காக அவமதித்த ஆண்களை அவர் 'பழிவாங்கும்' சந்தர்ப்பங்களைக் கூட நம்மால் அவ்வளவு எளிதால் செரித்துக்கொள்ளமுடியாது. ஆனால் இதுதான் நான், என்னை உங்களைப் போன்ற ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நமது புரிதல்களைத் தொடர்ந்து கேள்விக்குட்படுத்திக்கொண்டே தனுஜா இருக்கின்றார்.


2.


ஒவ்வொரு வாரவிறுதியிலும் நண்பர்கள் சிலர் மெய்நிகர் உலகில்  இலக்கியம் சார்ந்து கூடிப் பேசுவதுண்டு. அவ்வாறு ஒருமுறை சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் பற்றிய பேச்சுவந்தது. அதன் தொடர்ச்சியில் சாருவின் எழுதிய 'உன்னத சங்கீதம்' போன்ற கதைகளுக்காய் சாருவை நிராகரிக்கின்றேன் என்று ஒரு நண்பர் சொல்ல அதுகுறித்து பேச்சு இழுபட்டது. விளாடிமோர் நபகோவின் 'லொலிடா'வின் மிக மலினமான கதை 'உன்னத சங்கீதம்' என்பதும், அந்தக் கதை குறித்தே அன்றே புலம்பெயர் பெண்கள் பெரும் எதிர்ப்பை அறிக்கையாக/தொகுப்பாக முன்வைத்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே. 


நான் சாருவின் அனைத்துப் புனைவுகளையும் தேடித்தேடி வாசிக்கின்ற ஒருவன். அவரின் மொழியின் எளிமைக்கும், அங்கததற்குமாய் அவரை இன்னும் விடாது பின் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றவன்.  ஒரு வளர்ந்த ஆணுக்கு, ஒரு சிறுமியோடு சலனம் வருவது சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அந்தச் சிறுமியின் பார்வையை முற்றாக மறுத்து ஒரு வளர்ந்த ஆணின் பார்வையிலும், வரலாற்றுப் பிழைகளோடும் (இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்வது என்றும்) genuine இல்லாது எழுதப்பட்டதால் உன்னத சங்கீதத்தை எனக்கும் நிராகரிக்கக் காரணம் இருந்தது. அதை அந்த நண்பர்களின் கூடலில் சொல்லியுருமிருந்தேன்.


எனினும் அடுத்த நாள் ஒரே இருக்கையில் தனுஜாவின் இந்த நூலை வாசித்தபோது நான் சரியாகத்தான் பேசுகின்றேனோ என்பதில் சந்தேகங்கள் எழுந்தன. தனுஜா ஒரு ஆணாகப் பால்நிலை சார்ந்து பிறந்ததால், அவரைப் பெண்ணாக  இருக்க மறுக்கும் சமூகத்தில், தன்னைப் பெண்ணாக உணரவைக்கும் ஆண்களை எல்லாம் ஒருவித கருணையுடன் அவர் எதிர்கொள்கின்றார். தனுஜா தனது 12 வயதோடு ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்துவிட்டாலும், அவரின் இந்த ஆணின் உடலுக்குள் அடைபட்ட பெண் தன்மையால், அவர் அதற்கு முன் வாழ்ந்த இந்தியாவிலும், இலங்கையிலும் உடல் சார்ந்த வாதைகளுக்கு உட்படுகின்றார். இந்த நூலில் தனுஜா வயது வந்த ஆண்களோடு தனது சில அனுபவங்களை பாலியல் வன்புணர்ச்சிகளாகவும், சிலவற்றை அவ்வாறில்லாதும் குறிப்பிடும்போது குழந்தைப் பிராயத்திலே ஏற்படக்கூடிய பாலியல்  விழிப்புக்களைப் பற்றி நான் அறிந்துகொண்டவை சரியா என்ற கேள்விகளும் எழுந்துகொண்டிருந்தன.  


3.


தனுஜாவின் இந்த நூலின் ஒவ்வொரு பகுதியை வாசிக்கும்போதும் இந்தளவுக்கு ஒருவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அதைவிட முக்கியமாக பிறர் எவ்வளவு வன்முறையை/இழிவுகளைத் தனக்குச் செய்திருந்தாலும் எவரையும் தேவையில்லாது கீழிறக்காது எழுத முடிகிறதென்ற வியப்பே வந்துகொண்டிருந்தது. தனுஜா தனது உடல் சார்ந்த போராட்டங்களை மட்டுமில்லாது, திருநங்கை சமூகங்களுக்கிடையில் இருக்கும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும், பிணக்குப்பாடுகளையும் மறைக்காது முன்வைக்கின்றார். ஒருவகையில் நாமும் பலவீனமுள்ள மனிதர்கள்தான் என்பதை,  தான் சார்ந்த சமூகத்தைப் பற்றியும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் சிலவற்றைப் பேசும்போதும், நமக்குத் தனுஜா புரியவைக்க முயல்கின்றார். இதுவே இந்தப் பிரதிக்கும் இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றது.


ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கைக்கு வசதியின் நிமித்தமும், இளமையின் நிமித்தமும் பொறாமை கொண்டு ஏதாவது தவறைச் செய்தாலும், அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்கல் வரும்போது, அந்தச் சர்ச்சைகளை மறந்து நம்மைப் போன்றவர்களுக்கு நம்மைவிட வேறு யார் உதவப்போகின்றார்கள் என்று ஆதரவு அளிக்கின்ற சந்தர்ப்பங்கள்  அற்புதமானவை. 


ஜேர்மனியில் வசிப்பவராக இருந்தாலும் தனுஜாவின் புலம்பெயர் வாழ்வைச் சொல்கின்ற அனுபவங்கள் பெரும்பாலும் சுவிஸிலும், கனடாவிலும் நடக்கின்றவையாக இருக்கின்றன. முக்கியமாக கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்கின்றவராக அதுவும் நான் வசிக்கும் அதே நகரில் இருந்திருக்கின்றார் என்பது இன்னும் சுவாரசியம் தரக்கூடியது. அதிலொருவர் குறும்படங்களில் நடிப்பவர். அவரைத் தனுஜா வன்கூவரில் சந்தித்து பிறகு அவரோடும் அவர் குடும்பத்தோடும் ரொறொண்டோவில் வசிக்கத் தொடங்குகின்றார் (குறும்பட உலகு சிறியது என்பதால் அவர் யாரென்பது அடையாளங்காண்பதும் அவ்வளவு கடினமில்லை). 


கிட்டத்தட்ட ஒரு சிறைபோல அவர் வீட்டுக்குள் இங்கு வைக்கப்பட்டிருந்தாலும், பிற எதைப்பற்றியும் கவலைப்படாது அப்படி ஒரு 'குடும்பப் பெண்'ணாக மட்டுமே இருப்பதே அவருக்கு போதுமாக இருக்கின்றது. ஏனெனில் இந்த ஆண் அவரை ஒரு முழுமையான பெண்ணாக ஏற்றுக்கொள்கின்றார் என்பதே தனுஜாவுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. இன்னொரு கனேடிய தமிழ் ஆண், அவரை மலேசியாவுக்குப் போவதற்கான பயணத்தின் செலவை ஏற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லி தனுஜாவைக் கூட்டிக்கொண்டு இலங்கையின் தென்பகுதி முழுவதும் திரிகிறார். அவர் திருமணஞ் செய்த ஆண். தனது மனைவியின் உறவினர்களைக் காணச் செல்கின்றபோது மட்டும் இவரைக் கைவிட்டுவிடுகின்றார். இவ்வாறு தனக்கான துணையைக் கண்டடைந்துவிடுவேன், ஒரு அற்புதமான வாழ்வை வாழப்போகின்றேன் என்று தனுஜா நம்புகின்ற ஒவ்வொரு பொழுதும் காதலின் நிமித்தம் கைவிடப்படுகின்றார்.


பிறகு அவருக்கு ஆண்களை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடிகிறது. நீயும், நான் கண்ட இன்னொரு அந்த ஆண்தானே என ஒருவித பரிகாசப் புன்னகையுடன்  எல்லா ஆண்களையும் எதிர்கொள்கின்றார். தன்னைப் பெண்ணாகப் பெருமையாக முன்வைத்து வாழ்வின் சவால்களை சந்திக்கின்றார். ஒருகாலத்தில் பெற்றோரினாலும், உறவுகளாலும் ஒடுக்கப்பட்ட தனுஜாவைப் பிறகு அவரின் குடும்பம் ஏற்றுக்கொள்கின்றது. இடையில் இவரின் பெண் தன்மையைப் புரிந்துகொள்ளபோது இவரின் குடும்பம் ஒடுக்கியபோதும், தனுஜாவின் குடும்பம் அவரைத் தம்மோடு வைத்துக்கொள்வது கூட கவனிக்கத் தக்கது. கெளரவமும்,  சாதித்திமிரும், அடியுதைகளும், வார்த்தைகளால் அதைவிட வன்முறைகளும் செய்துகொண்டிருக்கும் தனுஜாவின் தந்தைகூட அவரைத் தமது குடும்பக் 'கெளரவத்தின்' காரணமாக வெளியே போகச் சொல்லாதுதான் விட்டுவைத்திருக்கின்றார்.


திருநங்கைகளுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனுஜா தனது அடையாளஞ்சார்ந்து செய்கின்ற தேடல்களும், தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்களாக இருக்கின்றன. இதுவரை -நாமாக திருநங்களைகளைப் பற்றிப் பேசுகின்றபோது- வைத்திருந்த நிறையக் கற்பிதங்களை உடைத்துச் செல்கின்ற பிரதியாக இந்த சுயவரலாற்று நூல் இருக்கின்றது. தனுஜா தன் அடையாளம் சார்ந்து சுவிஸ், மலேசியா, இந்தியா என்று எங்கெங்கோ  எல்லாம் அலைந்து தன்னைத் தேடி அலைகிறார். தனக்குப் பிடித்தமான விடயங்களைச் செய்கின்றார். 


நான் பெண்ணாக உணர்கின்றேன், என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது கேட்காதவர்களை, பிறகு அவ்வளவு அழகாக எதிர்கொள்கின்றார். அத்துடன் திருநங்கைகளைக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, அதே திருநங்கைகளைக் காமத்தின் பொருட்டு தேடிப்போகின்ற எண்ணற்ற தமிழ் ஆண்களை இந்த நூலில் காண்கின்றோம். உள்ளூர ஒன்றை விரும்பியபடி, ஆனால் அதை 'நாகரிகமாய்' மறைத்தபடி, நமது ஆண் உள்ளங்களை நாமே மீண்டும் கண்ணாடியில் பார்ப்பதுபோல இந்த ஆண்கள் நம்மைக் கடந்துபோகின்றார்கள். 


4.


இன்னமும் முப்பதையே தொட்டுவிடாத தனுஜா கடந்து வந்திருக்கின்ற பாதை மிக நீண்டது. நாம் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் இவ்வாறு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கமுடியாதவளவுக்கு அவ்வளவு கடுமையான பாதையது. அவர் தன்னை 'நிர்வாணம்' செய்துகொள்கின்ற அறுவைச் சிகிச்சைகளைப் பற்றிய விபரிப்புக்கள் அவ்வளவு வலிமிகுந்தது. ஆனால் அந்த கடின வழியைக் கடந்துவந்து, எதன் பொருட்டும்/எவர் பொருட்டும் தன்னைச் சமரசம் செய்யாது தனுஜா தனது கதையை வெளிப்படையாக முன்வைக்கின்றார் என்பதற்காய் நாம் அவரின் கரங்களை நன்றியுடன் பற்றி  அரவணைத்துக்கொள்ளவேண்டும். எத்தனையோ சீழ்களையும், கீழ்மையும் கொண்ட ஒரு சமூகத்தில், தன்னை அதிலிருந்து வெளியேற்றாது, தானும் அதில் ஒருவரே என தன்னையும் முன்வைத்து அதே சமயம் தான் சந்தித்தவர்களைக் கூட அதிகமாய் தாழ்த்தாது, இவ்வளவு அனுபவங்களுக்கிடையிலும் மிகுந்த கம்பீரமாக முன்வைக்கின்றார் என்பதே இந்த நூலில் இன்னொரு சிறப்பம்சம்.


கொழும்பில் தன்னை அடித்த ஒரு மாமாவை தனுஜா நீண்ட வருடங்களின் பின் இலங்கையில் சந்திக்கின்றார். மாமா ஏன் என்னை எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' எனக் கேட்கிறார் (தனுஜாவின் பெண்மைத்தன்மையின் நிமித்தம் சிறுவயதில் இந்த மாமாவின் வன்முறை மிகுந்த கொடுமையானது). அப்படி அந்தப் பெண்தன்மையை வெறுத்த மாமா தனுஜாவை முத்தமிடுகிறார். வாயில் பாம்பு கடிப்பதைப் போல அதிர்ந்துபோனேன் என்று சொல்கின்ற தனுஜா 'இவ்வளவு தானடா உங்கள் குடும்பப் பாசம்? இவ்வளவு தானடா உங்களது தமிழ்ப்பண்பாடு' என நினைத்துக்கொள்கிறார்.


பிறகு அவரோடு உடலுறவில் ஈடுபடுகிறார். நீங்கள் என்னை எவ்வளவோ அடக்கி வைத்திருந்தாலும், நான் எனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பெண்ணாக மாறிவிட்டேன். என் ஆன்மா விரும்பியதை நான் சாதித்து விட்டேன்' என்பதை அந்த உடலுறவின் மூலம் அவருக்கு அறிவித்தேன்' என்கின்றார் தனுஜா.


இப்படிச் சிறுவயதில் கொடுமை செய்த மாமாவுக்கு அவர் வித்தியாசமான ஒரு 'பழிவாங்கலை'ச் செய்கின்றார். ஆனால் வாசிக்கும் நமக்கோ அதிர்ச்சி வருகின்றது. அதையும் புரிந்துகொள்கின்ற தனுஜா இறுதியில் இவ்வாறு கூறுகின்றார்:

"ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. பொது அறங்களால், பொது நீதியால், பொதுக் கலாசாரங்களால், பொது இலக்கியங்களால், பொதுத் தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுதும் வஞ்சிக்கப்படவர்களான எங்கள் பயணம் புதிர்வட்டப் பாதை. இந்தப் புதிரை  யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள் கூட அவிழ்த்ததில்லை."


.................................................


(நன்றி: ‘கலைமுகம்’-  ஜனவரி-மார்ச், 2021 -  இதழ் 71)

சோ.தர்மனின் 'பதிமூனாவது மையவாடி'

Monday, June 21, 2021

 

சிறுவர்கள், பதின்மர்களாகி இளைஞர்களாவது பற்றி நிறைய நாவல்கள் வந்திருக்கின்றன. சோ.தர்மனின் 'பதிமூனாவது மையாவாடி' கருத்தமுத்து என்கின்ற சிறுவன் இளைஞனாகும் பருவத்தைப் பின்பற்றிப் போகின்றது. ஊரிலிருந்து ஒன்பதாம் வகுப்புப் படிப்பதற்காய் கிறிஸ்தவப் பாடசாலைக்குப் போகும் கருத்தமுத்து விடுதியில் தங்குகின்றான். அங்கிருந்து அவனது வாழ்வு படிப்பு என்பதோடு அல்லாது, மனிதர்களை, புதிய சூழலை அறிவதென வெவ்வேறு திசைகளில் நீள்கிறது. விடுதியிற்கு அண்மையில் அமையும் மையவாடி அவன் வாழ்க்கையின் பெரும்பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போதிமரத்தைப் போல அமைகின்றது. அங்கு பிணங்களை எரிக்கும் அரியான் பல்வேறு விடயங்களில் மிகச் சிறந்த ஓர்  'ஆசிரியராக' அமைகின்றார்.

 

பாடசாலைக் காலத்திலே ஒரு சில பாதிரிமார்களையும், கன்னியாஸ்திரிகளையும் கண்டுகொண்டாலும், இந்துப் பின்னணியில் வந்த கருத்தமுத்துக்கு பாதர்மார்களின் சுரண்டல்களும், கன்னியாஸ்திரிகளின் பாலியல் வறட்சியும் கண்களுக்கு அதிகம் உறுத்துகிறது. கர்த்தரரின் பொருட்டு மக்களுக்குச் சேவை செய்ய வந்த அவர்களின் செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்படுகின்றது. கருத்தமுத்து தனக்கான காமத்தைக் கண்டுகொள்கின்ற மூன்று பெண்களும் கிறிஸ்தவப் பின்னணியில் இருப்பதும் தற்செயலாகவே அமைந்தென்றே வாசிப்பு மனம் எண்ணட்டுமாக.

 

பாதிரிமார்கள் குடும்பப் பெண்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். சாமர்த்தியமாய் குடும்பங்களைப் பிரிக்கின்றார்கள். அதிகார வேட்கையில் மக்களுக்கான சேவையைச் செய்யாது தமக்குள் அடிபடவே பொழுதுகளைப் பார்க்கின்றார்களென கருத்தமுத்துவினூடாக சோ.தர்மன் ஒரு சித்திரத்தை வாசிக்க வைக்கின்றார். அதன் உச்சபட்சமாக 2% இருக்கும் கிறிஸ்தவர்கள், நாட்டில் 40% கல்வி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களென பிரச்சாரம் போல அடிக்கடி கதாபாத்திரங்கள் அலுக்குமளவுக்கு பேசிக்கொள்கின்றார்கள்.

 

இத்தனைக்கு அப்பாலும் ஏதோ ஒருவகையில் சாதியாலோ அல்லது வசதி வாய்ப்பில்லாமலோ ஒரு இந்துவைக் கல்வி கற்பதற்கான வசதிகளைக் கொடுத்துக்கொண்டிருப்பது ஒரு கிறிஸ்தவ பாடசாலை என்பதைப் போகின்றபோக்கில் -அழுத்தமாக அதைப் பேசாது கதைக்காது- கடந்து போகின்றபோதுதான் நாவலின் 'அரசியல்' உறுத்தச் செய்கின்றது.

 

கருத்தமுத்துவினூடாகவும், அவர் சந்திக்கும் பாத்திரங்களினூடாகவும் கிறிஸ்தவ நிறுவனங்கள் விமர்சனம் செய்யப்படுவது தவறுமல்ல. நிறுவனமாக்கப்படும் எந்த மத/கல்வி அமைப்பும் பின்னர் அதிகாரத்திற்குள்ளும், பாலியல் சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்படுவது கிறிஸ்தவ மதத்தில் மட்டுமில்லை, புத்தமடலாயங்களிலும் நடைபெறுபவைதான். இந்து மதத்தில் நடைபெறுபவற்றை எல்லாம் சொல்லவேண்டியதில்லை. இந்து மதம் ஒர் முழுமையான அதிகாரத்திற்குள் (வத்திக்கான் போன்று) இல்லாதிருப்பதால் இந்தளவுக்கு ஊழல்களும் சுரண்டல்களும் நடைபெறுவதிலிருந்து ஒரளவுக்குத் தப்பியிருந்தாலும், நமது சாமியார்களின் கதைகளையும், காமகோடிகளின் அறிவுரைகளையும்  தொடர்ந்து அறிந்தபடியேதானே இருக்கின்றோம்.

 

நிறுவனப்பட்ட மதங்களான கிறிஸ்தவம் போன்றவை விமர்சனங்களிலிருந்து தப்பவேண்டியதில்லை. ஆனால் அதை அரசியல் பிரச்சாரமாக்காமல் இயல்பிலே கதையைச் சொல்லிச் சென்றிருந்தால் இந்த நாவல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் ஏஞ்சல் தனது கன்னியாஸ்திரி ஆடையைத் துறந்து சேவைக்காகவும், கருத்தமுத்துக்காகவும் திருச்சபையிலிருந்து வெளியே வருகின்றார். இவ்வாறான ஒரு சில சம்பவங்கள்தான் இந்த நாவலை ஒரளவு சாய்வின்றி வாசிக்க முடிகின்றது. இந்த நாவலில் இடதுசாரி நம்பிக்கையுள்ளவர்களாய் வரும் இளைஞர்களை ஆயுதங்களை மறைத்துவைத்திருக்கும் வன்முறையாளர்களாக மட்டும் சித்தரித்து பொலிஸ் ஜீப்புக்களில் ஏற்றப்படுபவர்களாக காட்டப்படுவது சற்று அச்சமூட்டுவதுங்கூட.  பாஞ்சாலைத் தொழிலாளியாக (அறிமுகத்தில்) 20 வருடங்களாக இருந்த சோ.தர்மனா இப்படியெல்லாம் எழுதுவது என்று நமக்கு வியப்பு வருகின்றது.

 

சோ.தர்மனின் 'கூகை' வாசித்தபோது நானடைந்த வியப்பு இன்னும் மறக்காமல் இருக்கின்றது. 'சூல்' கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியவுடன் என்னை உள்ளிழுக்காதுவிட்டதனால் நிறுத்திவைத்திருக்கின்றேன். 'பதிமூனாவது மையவாடி' பிரச்சாரத்தன்மைக்கு முன்னிடம் கொடுத்ததால் கலைத்தன்மையை அதன்போக்கிலே இழந்துவிடுகின்ற அபாயத்தையும் அடைகிறது.

 

ஒருவர் தன் மதத்தை எப்படி நேசிக்கின்றார் என்பது இன்னொரு மதத்தின் மீதான சகிப்புத்தன்மையில் இருக்கிறது என்று கூட ஒருவகையில் மதிப்பிட்டுக்கொள்ளலாம். இன்னொரு மதத்தை வெறுத்துக்கொண்டு, நாம் சார்ந்திருக்கும் மதங்களை எப்படியேனும் காப்பாற்றிவிடமுடியாது. அதனால் எந்த ஆன்மீக ஈடேற்றந்தான் நடந்துவிட முடியும்? ஒரு மத நம்பிக்கையாளரை விட இலக்கியவாதிக்கு நிச்சயம் விரிந்த மனதுதான் இருக்கும். இங்கே சோ..தர்மன் ஓர் இலக்கியவாதியாக அல்ல, ஒரு மத நம்பிக்கையாளராக தன்னை நிரூபிக்க முயற்சித்து தோற்றுக்கொண்டிருக்கின்றார் என்பதுதான் சோகமானது. அது அவருக்குரிய அடையாளம் இல்லை என்பதை நாம் மட்டுமில்லை அவரது இலக்கிய மனமும் நன்கறியும்.

 

..............................


(Jan 29, 2021)

மைக்கல் ஒண்டாச்சி

Sunday, May 30, 2021

 "There is a story, always ahead of you. Barely existing. Only gradually do you attach yourself to it and feed it. You discover the carapace that will contain and test your character. You will find in this way the path of your life.”

― Michael Ondaatje, The Cat's Table

 

மைக்கல் ஒண்டாச்சி இலங்கையில் பிறந்தவர். அவரது தந்தைவழி வேர் தமிழ் அடையாளத்தைக் கொண்டது. மைக்கல் ஒண்டாச்சியின் சுயசரிதைச் சாயல் கொண்ட நூலான Running in the Familyஐ வாசிப்பவர்கள் அவரது தந்தை வழி தமிழ் அடையாளங்களை எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். மைக்கலின் பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றபோது, மைக்கல் பதினொரு வயதில் இங்கிலாந்திற்குச் சென்றவர். இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குப் போகும்  அந்தக் கப்பல் பயண அனுபவத்தை, பின்னர் ஒருவகையான மர்மப் பயணமாக cat's tableஇல் மைக்கல்  புனைவாக்கியிருப்பார்.

 

இங்கிலாந்திலிருந்து கனடாவிற்கு அவரது சகோதரருடன்  தனது இருபதுகளில் புலம்பெயர்ந்த மைக்கேல் ஒண்டாச்சி, அன்றிலிருந்து இன்றுவரை கனடாவில் வசித்து வருகின்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பேராசிரியரின் உற்சாகத்தாலேயே எழுத்தின் பக்கம் கவரப்பட்டிருக்கின்றார்.  தனது படைப்புக்களும் தனிப்பட்ட  ஆர்ப்பாட்டமில்லாத வாழ்வும் என்றிருந்த மைக்கலுக்கு அவர் எழுதிய நாவலான English patient பெரும் கவனத்தைக் கொடுக்கின்றது. மான் புக்கர் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்நாவல் அதன்பிறகு திரைபபமாக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளைப் பெற, மைக்கேல் ஒரு உலகப்புகழ்பெற்ற எழுத்தாளராகிவிடுகின்றார். இந்தப் பரவலான கவனம் குறித்தும் அதிகம் கூச்சப்படுகின்றவராகவே மைக்கல் இருக்கின்றார்.

 

அவரின் English Patient உலகப்போரின் பின்னணியில் எழுதப்பட்டதென்றால், Anil's Ghost இலங்கையைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. 'அனிலின் பேய்'  இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் போயிருந்த அனிலின் கதையைச் சொல்கின்றது. படிப்பின் பின் இலங்கை திரும்பிவருகின்ற அனில் புராதன வரலாற்று அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்றார். அந்தசமயம் சமகாலத்தில் கொன்று புதைக்கப்பட்ட ஒரு எலுப்புக்கூட்டை அகழ்வின் இடையே கண்டுகொள்கின்றார். அதற்கு  'கடலோடி' என்று ஒரு பெயரை வைத்து அந்த மனிதர் யாராக இருக்கும் என்று தேடிப்போவதாக இந்த நாவல் விரியும். இந்த  பயணத்தில் இலங்கையில் சமகால அரசியல் பேசப்படுகின்றது. அனிலோடு கூடவே பயணிக்கும் அவரின் நண்பர் இந்த எலும்புக்கூட்டின் மர்மத்தின் உண்மையைக் கண்டுபிடிக்கும் நிமித்தம் கொல்லப்படுகின்றார் என  இந்த நாவல் நீளும்.

 

Anil's Ghost, English Patient, In the Skin of a Lion  போன்ற மைக்கல் ஒண்டாச்சியின் கவனம் பெற்ற நாவல்களைத் தவிர்த்து அவரின் பிற நாவல்களில் சிலவற்றை இங்கே  சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

Divisadero

 

வாழ்க்கை எவ்வளவு அழகானதாக இருக்கின்றதோ அதேயளவுக்கு அபத்தமாக அமைந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சங்க இலக்கியம் கூறியது. நமது தனிப்பட்ட தேர்வுகளே நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று சார்த்தரும் நிறைய எழுதினார். எமக்கான பொழுதுகளை எமது தேர்வுகள்தான் தீர்மானிக்கின்றன என்ற புரிதல் இருந்தாலும் நம்மால் வாழ்வின் அபத்தங்களை எளிதாய்த் தாண்டிப்போய்விட முடிகின்றதா என்ன? எனவேதான் தொடர்ந்தும் மனித மனங்களின் சிக்கலான புதிர் நிறைந்த ஆட்டங்களை நாம் சுவாரசியமாகப் பார்த்தபடியும் விவாதித்தபடியும் இருக்கின்றோம். வாழ்க்கையெனும் சதுரங்க ஆட்டத்தில் நகர்த்தப்படும் சில பாத்திரங்களின் அசைவுகளை மைக்கல் ஒண்டாச்சியின் Divisadero நம்முன் விரித்து வைக்கின்றது. ஆட்டமொன்று நடக்கும்போது வெளியிலிருக்கும் நமக்கு இந்த நகர்வு சரியாயிருக்கிறது/தவறாயிருக்கிறது என்று தெரிந்தாலும் நம்மால் குறுக்கிட முடிவதில்லை போல, மைக்கல் ஒண்டாச்சியின் பாத்திரங்களும் அதன் போக்கில் நகரும்போது உறைந்த நிலையிலிருந்து நாம் ஆட்டத்தின் அனைத்து நகர்வுகளையும் அவதானித்தபடி நமக்குள்ளே ஒரு ஆட்டத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்கின்றோம்.

 

மைக்கல் ஒண்டாச்சியின் அநேக நாவல்களில் மிகப்பெரும் தனிமையும், மர்மத்தின் சுழல்களும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதுபோல இந்நாவலிலும் அவற்றுக்கான இடங்கள் இருக்கின்றன. வட கலிபோர்ணியா நகருக்கு ஒதுக்குப்புறமாய் தோட்டக்காணிகளும், நிறையக் குதிரைகளும் இருக்கும் கிராமப்புறமே நாவலின் முற்பகுதியில் பின்னணியாகின்றன. ஆன் (Anne), ஆனின் தந்தையார், கிளேயர் (Claire) மற்றும் கூப் (Coop) ஆகிய நான்குபேரைச் சுற்றியே கதை ஆரம்பத்தில் சுழல்கின்றது.

 

இந்த நாவலின் பல பாத்திரங்கள் -சாதாரண வாசிப்பில் எதிர்ப்பார்க்கின்ற - முழுதான வடிவத்தைத் தந்து முடிவான முடிவுகள் என்று எதையும் தருவதில்லை. வாழ்கை என்பது எப்போதும் ஓடிகொண்டிருக்கும் நதிதான். ஏதோ ஒரு கணத்தில் கால நனைக்கும் நம்மால் கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ, ஏன் நிகழ்காலத்தைக் கூட முழுதாகத் தெரிந்துகொள்ள முடியாது எனபதே யதார்த்தமானது. எனவே ஒவ்வோரு பாத்திரங்களும் ஏதோ ஓரிடத்தில் நாவலிருந்து நழுவிப்போய்விடுகின்றார்கள். நாவல் முடியும்வரை எப்போதாவது ஓரிடத்தில் திரும்பிவந்து தமது கதையை நிறைவுசெய்வார்கள் என்று நினைத்து வாசித்துமுடிக்கும்போது அவர்கள் மீண்டும் திரும்பியே வருவதில்லையென்கின்றபோது, அட இன்னும் அந்தப் பாத்திரத்தை ஆழமாய் வாசித்திருக்கலாமோ என்று எண்ண முடியாமல் இருக்க முடிவதில்லை. மேலும் நிகழ்காலத்தில் எம் முன்னே விழுந்து கிடக்கும் கடந்தகாலத்தின் சிறகுகள் ஒவ்வொன்றும் நமக்கான கடந்தகாலத்தை நினைவுபடுத்தும் என்கின்றபோதும், அந்தச் சிறகுகளைக்கொண்டு முழுப்பறவையும் அது பறந்துகொண்டிருந்த வெளியையும் முழுமையாக நினைவுபடுத்தலென்பது அவ்வளவு சாத்தியமானதில்லை. அவ்வாறான ஒரு நினைப்புடனேயே இந்நாவல் முழுதும் பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றதோ என்றுதான் யோசிக்கத்தோன்றுகின்றது.

 

இந்நாவலில் ஆன், கிளார, கூப் ஒரளவு முக்கிய பாத்திரங்களே தவிர அவர்கள்தான் முக்கிய பாத்திரங்கள் என்றில்லை. மையங்களற்ற பாத்திரங்களைக்கொண்டு மையங்களற்ற வகையில்தான் ஒண்டாச்சி தனது போக்கில் இந்நாவலை எழுதிக்கொண்டே போகின்றார். மூன்றாம் பகுதி முழுதும் ஒவ்வொரு சிறுகதைகளாக தலையங்கமிட்டே எழுதப்பட்டிருக்கும். திடீதிடீரென்று ஒவ்வொரு பாத்திரங்களும் தமது நிலையில் நின்று கதையைச் சொல்லத் தொடங்கும்போது, விளங்கிக்கொள்வதற்கான வாசிப்புக்கான நேரம் நிறையக் கோரப்படுகின்றது. முதலாம் பகுதியில் மகள்களின் பாத்திரங்கள் (ஆன் மற்றும் கிளேயர்) பேச, தந்தை அதிகளவில் மெளனமாகிவிடுகின்றார்.

 

அதேபோல இரண்டாம் பகுதியில் மெளனமாக்கப்பட்ட தந்தைகளின் பிரதிநிதியாக நின்று தந்தையாகிய (லூசியன்) அதிகம் பேசத்தொடங்குகின்றார். எல்லாப் பாத்திரங்களும் தமக்கான தனிமையையும் இரகசியங்களையும் கொண்டிருப்பதால், அவற்றை வாசகர் தமக்கு விரும்பிய பாத்திரங்களாக நிரப்பிக்கொள்ளும் வெளியும் வாசகருக்கு இந்நாவலில் வழங்கப்படுகின்றது. உதாரணமாக பதினைந்து வயதில் ஓடிப்போகின்ற ஆன், 34 வயதில் ஒரு எழுத்தாளாராக நாவலில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றார். அந்த இடைப்பட்ட காலம் பற்றிய வெளியை வாசகர் தனக்கு உரியதாக வாசித்துக்கொள்ளும் ஒரு சூழலைப்போல நிறைய இடங்கள் நாவலுக்குள் இருக்கின்றன.

 

நம்மிடம் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் வாழ்க்கையில் தெளிவான பதில்கள் இருப்பதில்லை போன்று இந்நாவலிலும் பல இடங்களில் எழும் கேள்விகளுக்கு எந்தத் தெளிவான முடிவுகளும் கிடைப்பதில்லை. நாம் சிலவேளைகளில் நமக்கான வாழ்க்கையைத்தான் திருப்பவும் வாசிக்கின்றோமா என்ற மனக்கிளர்ச்சியும் அலுப்பும் ஒரே நேரத்தில் வந்துபோவதை இந்நாவலை வாசிக்கும்போது தவிர்க்கவும் முடிவதில்லை.

  

Running in the Family

 

மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றையபொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாச்சி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.

 



நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாச்சி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், திருமணத்துக்கு அப்பாலான பல்வேறுவிதமான உறவுகள் குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொண்டபடி குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாச்சியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாச்சி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பறங்கிய இனத்தவர்கர்களாக  இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாச்சியின் பெற்றோரினது திருமணம் நடைபெறுகின்றது.

 

மெர்வின் ஒண்டாச்சியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயினிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயினை மேலே செல்லவிடாது தடுப்பதென..., குடியோடும்/குடியின்றியும் செய்யும் மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், இலங்கையின் இன்னொரு முனையான திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். 'மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்...' இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாச்சி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

 

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாச்சியின் இந்த நூலில் ஒண்டாச்சியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாச்சியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவி புரிகின்றது (மைக்கல் ஒண்டாச்சியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை 'நாசூக்காய்ப்' பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது.

 

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பல்கலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாச்சி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாச்சி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.

 

இச்சுயசரிதை சார்ந்த புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் அதேவேளை வாழ்வைக் கொண்டாடுகின்றவிதமாகவும் மைக்கல் ஒண்டாச்சி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்காய் கூட அதிகம் ஒண்டாச்சி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றனபோலும்.

 

மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாச்சியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாச்சியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.

 

Coming Through Slaughter

 

அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை.

 

நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் போல்ல்டனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.

 

ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள் நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், 'மாமா' வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார்.

 

தனது கோபங்களையும் காமம் இல்லாத பொழுதுகளையும், ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே 'வித்தியாசமாய்ப்' பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies....Bullets of music delivered onto the bed we were on...(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.

 

இதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களின் பின், தனது முப்பத்தொராவது மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ, திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்களளோ நாவலில் குறிப்பிடப்படவதில்லை. ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது.

 

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும் விடுகின்றன,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது.

 

எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாச்சியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாச்சி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden's Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.

 

The Cat's Table

 

சிறுவர்களாக இருந்த நாம் எந்தக் கணத்தில் பெரியர்வர்களின் உலகினுள் பிரவேசிக்கின்றோம்? உடலில் ஏற்படும் மாற்றங்களைப் போல மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஸ்தூலமானதுமல்ல. அப்படியெனில் அந்த மாற்றம் பெரியவர்களாக வளர்ந்த நம்மால் நினைவுகொள்ளக்கூடியதாக இருக்கின்றதா? 'யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் நமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கி விடுகிறது' என போர்ச்சூழலில் குழந்தைகளின் நிலையை சிவரமணி பதிவு செய்திருக்கின்றார். மைக்கல் ஒண்டாச்சியின் 'பூனையின் மேசை' நாவல் மைக்கல் என்கிற பதினொரு வயதுச் சிறுவன் எப்படி பெரியவர்களின் உலகினுள் நுழைகின்றான் என்பதைப் பல்வேறு சம்பவங்களினூடாக விபரிக்கின்றது. மைக்கல் மட்டுமில்லை, அவன் வயதொத்த கஸிசியல், ரமாடின் போன்றவர்களும் மூன்று வாரங்கள் நீளும் கப்பல் பயணத்தினால் வளர்ந்தவர்களின் உலகிற்குள் விரும்பியோ விரும்பாமலோ அடித்துச் செல்லப்பட்டுகின்றார்கள்.

 

மைக்கல் எவரது துணையுமின்றி தனியே இங்கிலாந்திலிருக்கும் தாயை நோக்கி Orsonary எனும் பெயருடைய கப்பலில் பயணிக்கின்றார். மைக்கலுக்கு 'மைனா' என்கின்ற செல்லப்பெயரும் உண்டு. அது அவரின் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பட்டப் பெயர். மைக்கல் கப்பலில் சந்திக்கும் இன்னொரு நண்பரான கஸிசியஸ், மைக்கல் படித்த சென்.தோமஸ் கல்லூரியில் ஒருவகுப்பு மேலே படித்தவர். மிகுந்த குழப்படிக்காரர்; பாடசாலை நிர்வாகத்தால் அவ்வப்போது கஸிஸியஸ் தண்டிக்கப்படுபவர். அதற்கு நேர்மாறான அமைதியான சுபாவமுடையவர் ரமடீன். ஆனால் ஆஸ்மா நோயால் அவதிப்படுபவர். இம்மூன்று சிறுவர்களும் கப்பலில் நண்பர்களாகின்றார்கள். ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் இடங்களையோ சம்பவங்களையோ கண்டுபிடிப்பதே சுவாரசியமானதென கப்பலின் திசைகளெங்கும் அலைந்து திரிபவர்கள். கப்பலும் அறுநூறுக்கு மேற்பட்ட பயணிகளைத் தாங்கக் கூடியவளவுக்கு மிகவும் பெரியது.

 

அநேக இடங்களில் இருப்பதைப் போன்று கப்பலிலும் அந்தஸ்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்களுக்கென பல்வேறு வகுப்புக்கள் இருக்கின்றன. உயர்தர வகுப்பிலிருக்கும் பகுதியிற்கு பிறர் போகமுடியாது. உணவருந்தும் இடத்திலும் இந்த வகுப்புப் பிரிவினைகள் இருக்கின்றன. (கப்பல்) கப்ரனின் உணவு மேசை அந்தஸ்து கூடியது. அந்த மேசையிலிருந்து வசதியில் குறைந்து குறைந்து போக இறுதியில் வருவது 'பூனை மேசை'. அங்கேதான் மைக்கல் உணவருந்துவது. அந்தச் சாப்பாடு மேசை அந்தஸ்தில் குறைந்ததென்றாலும் சுவாரசியமான பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் சந்திக்கும் ஓரிடமாக இருக்கின்றது.

 

மைக்கல் எனப்படும் மைனாவும் அவரது நண்பர்களும் அங்கேதான் பியானோ கலைஞரை, புறாக்களை தன் மேலங்கிக்குள் வைத்திருக்கும் பெண்மணியை, மூலிகைத் தாவரங்களை வளர்க்கும் ஆயுள்வேத வைத்தியரை, அவ்வளவு அதிகம் பேசாத தையற்காரரை, பழுதாக்கிப் போகும் கப்பல்களை நுட்பமாக உடைப்பவரை, இங்கிலாந்திற்கு ஆங்கிலம் கற்பிக்கப்போகும் ஆசிரியரை... எனப் பலரை அந்தப் 'பூனை' மேசையில் சந்திக்கின்றனர். பியானோக் கலைஞரான மாஸப்பா, இச்சிறுவர்களுக்கு பியானோ கற்றுக் கொடுப்பதோடு, 'நீங்கள் உங்கள் விழிகளைத் திறந்து வைத்திருந்தால் இந்தக்கப்பல் பயணம் மிகுந்த வீரதீரச் செயலுடையதாக இருக்கும்' என்கின்றார். பழுதடைந்த கப்பலை உடைப்பவரான நெவில், அந்தக் கப்பலில் பிறர் பார்க்கச் சாத்தியமில்லாத பகுதிகளை எல்லாம் இச்சிறுவர்களுக்கு எப்படிப் பார்ப்பதென வழிகாட்டுகின்றார். மூலிகைகள் வளர்க்கும் டானியல் கப்பலின் இருண்ட தளத்தில் தான் வளர்த்த மூலிகைகளை பத்திரமாக இங்கிலாந்திற்குக் கொண்டு செல்வதை மைனாவிற்குக் காட்டுகின்றார்.

 

மைக்கல் ஒண்டாச்சியின் நாவல்கள் எப்போதும் மிக மெதுவாகவே தொடங்கும். சில பத்துப் பக்கங்களைத் தாண்டினாலே கதையைத் தொடர்ந்து வாசிக்கச் சுவாரசியம் வரும். ஆனால் 'கொழும்பில் இருந்து கப்பல் பயணம் தொடங்குகின்றது' என்று இந் நாவல் ஆரம்பிக்கும்போதே நமக்குத் தெரிந்த சூழலில் கதை நிகழ்கிறது என்பது இன்னும் நெருக்கமாய் உணர வைத்தது. சென்.தோமஸ் கல்லூரி பற்றிய விபரிப்பு, பொரலஸ்கமுகவில் மைக்கல் இருக்கின்ற வீட்டுச் சூழ்நிலை, சமையற்காரருடனும், அங்கே வீட்டுவேலைக்கு இருப்பவருடனும் இருக்கும் நெருக்கம், அவர்கள் மைக்கலுக்குக் காட்டும் புறவாழ்வியல்... என மைக்கல் ஒண்டாச்சி அழகாக விபரித்துச் சொல்கின்றார். மைனா என்கின்ற மைக்கலின் பாத்திரம், பதினொரு வயதில் இலங்கையை விட்டுச் சென்றாலும் தனக்கு இன்றும் எந்த நாட்டோடும் ஒட்டாத ஒரு நாடோடி வாழ்வே எஞ்சியிருக்கின்றது என்று கூறுகின்றது. இது தாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்த பலரும் தங்களுக்குள் பொருத்திப் பார்க்கக்கூடிய ஒரு முக்கிய செய்தியாகவும் இருக்கின்றது.

 

இந்நாவலுக்குள் திகிலூட்டும் பல விடயங்கள் நிகழ்ந்தாலும் இஃதொரு துப்பறியும் நாவலல்ல. சிறுவர்கள், எப்படி அவர்கள் அறிந்தோ அறியாமலோ பெரியவர்களின் உலகினுள் நுழைகின்றார்கள் என்பதே முக்கிய அம்சமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இந்தத் விடயங்கள் சிறுவர்கள் பார்வையில் இருந்து சொல்லப்படுவதால் 'திகிலூட்டும்' விடயங்களாய்த் தெரிகின்றதோ தெரியவில்லை. இதேவிடயம் வளர்ந்த ஒருவரின் பார்வையில் சொல்லப்பட்டால் அது வேறு மாதிரியாகக் கூட இருந்திருக்கலாம். சிலர் பெரியவர்களாக வளரும்போது அந்த மாற்றம் இயல்பாக நடக்கின்றது. சிலருக்கு அப்படி நிகழ்வதில்லை, அவர்கள் பலவற்றை விலையாகக் கொடுத்துத்தான் வளர்ந்தவர்களாகி விடவேண்டியிருக்கின்றது.

 

மைக்கல் ஒண்டாச்சி தனது அநேக நாவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு நாடுகளுக்கு நிலவியல் இடப்பெயர்ச்சி செய்வதைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். The English Patient இத்தாலியிலிருந்து  ஆபிரிக்காப் பாலைவனத்திற்கும், Divesardo அமெரிக்காவிலிருந்து சட்டென்று பிரான்சிற்கும் இடம் பெயர்ந்து விடுகின்றன. The Cat's table இல் அவ்வாறான துல்லியமான இடப்பெயர்ச்சி சடுதியாக நிகழவில்லையெனினும், இலங்கையின் இருந்து புறப்படும் கப்பலில் நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து சுயெஸ் கால்வாயைக் கடந்தவுடன் சட்டென்று வளர்ந்தவர்களின் உலகிற்கு, இலண்டனுக்குச் சென்றுவிடுகின்றது. பின்னர் சிறிது காலம் கனடாவின் வன்கூவருக்கும் சென்றுவிடுகின்றது.

 

இங்கு நிலப்பெயர்வை விட, ஒரு மனிதரின் வாழ்க்கைக் காலப் பெயர்வு சடுதியாக ஏற்படுகின்றது எனக் குறித்தலே சாலப் பொருத்தமாகும்.. Anil's Ghost பிறகு சுவாரசியமாக வாசித்த மைக்கல் ஒண்டாச்சியின் நாவல் The Cat's Table என்பதையும் கூறியாக வேண்டும். இக்கதையைப் போன்றே மைக்கலும் தன் பதினொராவது வயதில்தான் இலங்கையில் இருந்து இங்கிலாந்திற்குச் சென்றிருக்கின்றார் என்பது, மைக்கல் ஒண்டாச்சி தன் வாழ்வில் நடந்த கப்பல் கதையைத்தான் கூறுகின்றாரோ என்கின்ற மயக்கத்தை வாசிக்கும் நமக்குத் தரக்கூடும். புனைவொன்றில் நிஜங்களும் கற்பனைகளும் கலந்திருப்பது இயல்பானதே. உண்மைகளைப் பொய்கள் போலவும், நிகழாததை நிகழ்ந்துபோல நம்பும்படியாக எழுதும்போது நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. அந்த வித்தை அறிந்த படைப்பாளி மைக்கல் ஒண்டாச்சி என்பது அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

 

மைக்கல் ஒண்டாச்சி, சூனாமி அழிவின் பின் இலங்கைக்குப் போகின்றார். அங்கே ஒரு ஊரின் பெயர் தனது குடும்பப் பெயரைப் போல இருப்பதைக் காண்கின்றார் அங்கிருக்கும் ஊரவர்கள் கோயில்களுக்கு வேண்டிய புனிதப்பொருட்களைச் செய்துகொடுக்கின்றவர்களாக இருப்பதைப் பார்க்கின்றார். தனது பறங்கிய குடும்பப்பெயரிற்கு அண்மையாக இருக்கும் ஊர், இதென்பதால் ஒண்டாச்சி என்பதற்குப் பதிலாக அதையே தன் குடும்பப் பெயராக மாற்றலாம் என ஓரிடத்தில் நகைச்சுவையாகச் சொல்கின்றார். அவர் சொன்ன அந்த ஊர் இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள ஒந்தாச்சிமடமாகும்.

............................................................

 (நன்றி: 'கனலி', ஏப்ரல் - 2021)