கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 33

Sunday, May 26, 2024

 ஓவியம்: இயல்


ழை நாட்கள் வரத் தொடங்கி விட்டன. கண்ணாடியில் படியும் நீர்த்திவலைகளைப் போல நினைவுகள் உருண்டோடுகின்றன‌. விட்டு விலகி வந்த வெயில் நிலத்தில் கொன்றையும், வாழ்ந்து கொண்டிருக்கும் பனி நிலத்தில் செர்ரியும் பூக்கின்ற காலமிது. நம் மொழியில் மாரி, தூறல், சாரல், ஆலி, சோனை, பெயல், அடை மழை , கனமழை, ஆலங்கட்டி, துளிமழை என மழைக்குத்தான் எத்தனையெத்தனை பெயர்கள். ஒவ்வொன்றையும் அதனதன் பெயர்களில் சொல்லி அழைக்கும் போது மனம் சிலிர்க்கத்தானே செய்யும்.

மழையையும் மலர்களையும் போல மலர்ந்து மகிழத்தானே இந்த வாழ்க்கை. ஆனாலும் வசந்தத்தின் தளிர்கள் முகிழ்கையிலும், சிலருக்குத் துயரம் பனியைப் போலக் கரைந்து போகாமல் இருக்கலாம். எதை அரவணைத்து, எதை விலத்திப் போகவென ஒவ்வொரு சுமையும் மனதை அழுத்தவும் கூடும்.

இந்த நாட்களில் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்கின்ற எண்ணங்கள் அவனுக்குள் கடலில் பெய்யும் ஆழி மழையாகின்றது. வேலை என்கின்ற இந்த கியூபிக்கில் இருந்து தன் சுயமழிகின்றதெனும் சுயவிரக்கம் விடாத சோனை மழையாகிச் சுழன்றடிக்கின்றது. நினைவுகளின் அடைமழை மனதுக்குள் பொழிந்து மூச்சுத்திணற வைக்க முன்னர் அலுவலகத்தில் இருந்து தப்பியோட விரும்புகின்றான். முழுநாளையும் சும்மா ஓரிடத்தில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டாடத் தெரிந்தவனுக்கு வெளியுலகோடு தொடர்புகொள்ளல் என்பது கனமழைதான். அந்தப் பாரம் அவனில் ஏறுகையில் சிலுவையைச் சுமக்கும் ஆலங்கட்டி மழையின் நிலையாகிவிடும். அதனோடு சலிப்பும் இணைய‌, புயல் மழைக்கான எல்லாக் குணங்களுடன் சீறிச் சினக்கவும் செய்வான். கோபமும், வெறுமையும் பின்னர் மெல்ல மெல்ல பெயல் போலக் கரைந்து போகும். அது சாரலாக மாறும்போது வாழ்வு மீண்டும் அத்தனை தத்தளிப்புக்களுக்கு அப்பாலும் அவனுக்குச் சுவைக்கும்.

பிடித்தமில்லா விடயங்களில் மூழ்குவது ஒருவகைத் துன்பம் என்றால், பிடித்தமான மனிதர்களுக்கென நேரமொதுக்க முடியாத அவதி இன்னொருபுறம். சின்னச் சின்ன அழகான தருணங்களைக் கண்டடைவதை விட, தீர்க்கவே முடியாத சிலந்திவலைச் சிக்கல்களுக்குள் பெரும்பாலும் நீத்த வேண்டியிருக்கின்றது. எளிமைக்குத் திரும்புதலும், இயற்கையை அரவணைப்பதும் வெகுதூரமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு ஒரு சிறுவன் கேவிக் கேவிப் பார்ப்பதைக் கண்டு இரவுகளில் இவன் அடிக்கடி திடுக்குற்று எழவும் செய்வான்.

யாரோ ஒருவர் தொலைதூரத்திலிருந்து தொலைபேசியில் அழைத்துக் கொண்டேயிருக்கின்றார். நேரகாலம் இல்லாது நள்ளிரவில், விடிகாலை இரண்டு, நான்கு மணிக்கென்றெல்லாம் அழைப்பு வரும். மெஸேஜ்களில் கூட அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றார். யார் இந்த அறிமுகமில்லாத‌மனிதர் இப்படிப் பெயரைத் தெரிந்துகொண்டு அழைக்கின்றார் என்று திகைத்து ஒருநாள் அழைப்பை எடுத்தால், தன் இயல்பில் எதை எதையோ அவர் பேசிக்கொண்டு போகின்றார். தமிழ்ல்தான் பேசுகின்றார் என்றாலும் ஒரு வார்த்தை கூட அவர் சொல்வதை இவனால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்புப் போதும் போல, தன் மனதில் உள்ள அனைத்தையும் அடைமழையைப் போலச் சொல்வதற்கு.

சிலவேளைகளில் இன்றைக்கு ஒரு குளிசையா அல்லது இரண்டு குளிசையா போடவேண்டும் என்று அவர் இவனிடம் கேட்கின்றார். மற்றவேளைகளில் தன்னிடம் இரண்டு மூன்று திருமணப் பொருத்தங்கள் இருக்கின்றன, எவரைத் தேர்ந்தெடுப்பதென்றும் வினாவுகின்றார். யார் இவர், எங்கிருந்து வந்திருக்கின்றார் என்று இவனுக்குத் திகைப்பாகவே இருக்கின்றது. எதற்கு இந்த தேவையில்லாத வீண்வேலை என்று அந்த இலக்கத்தைத் தடை செய்துவிடலாமோ என்று தோன்றுகின்றது. பிறகு மனது நெகிழ்ந்து, விடிகாலைகளில் அழைப்பை எடுத்துப் பேசப்போவதில்லை என்றாலும், அவர் அடிக்கடி அழைத்துப் பார்க்கும் அந்தச் சந்தர்ப்பதைக் கூட கொடுப்பதால் என்ன குறைந்துவிடப்போகின்றது என்று இலக்கத்தைத் தடைசெய்யாது விட்டுவிடுகின்றான். சிலவேளைகளில் இன்னும் கொஞ்சக் காலத்தில் இப்படியொருவராகத்தான் இவனும் மாறப்போகின்றான் என்று இந்த அறிமுகமில்லாத மனிதரை இவ்வுலகு தனக்கு அறிமுகப்படுத்துகின்றதோ தெரியாதென இவன் யோசிக்கின்றான். எதிர்காலம் கொஞ்சம் வேகமாக ஓடிவந்து நிகழ்காலத்தில் ஒருவனுக்கு எதிரே வந்து நிற்றலும் சாத்தியமில்லை என்று யார் விளம்புவார்.

தொடரூந்தில் இருந்து இறங்கி மழைத்துளிகள் தீண்டிவிடக் கூடாதென்று உடலை மூடக் கஷ்டப்படும்போது, எதிரே ஒரு பெண், 'மழையே உனது எல்லாப் பருவங்களோடும், வடிவங்களோடும் எனக்குள் வந்திறங்குக' என்று ஓர் ஆசிர்வாதத்தை வானிலிருந்து இறைஞ்சுவதைப் போல எது குறித்தும் அக்கறையில்லாது மழையில் தெப்பலாக நனைந்தபடி போகின்றாள். அந்த முகத்தில் தெரியும் விகசிப்பு என்பது அந்தக் கணத்தில் அவளும் மழையும் மட்டுமே இந்தப் பூமியில் இருக்கின்றார்கள் என இரண்டறக் கலந்தததால் மட்டுமே சாத்தியமாகியிருக்கும். யாரெனத் தெரியாத அணங்கே, இந்தக் கணத்தில் உனதிந்த விடுதலையை நேசிக்கின்றேன், இது எல்லோராலும் முடியாதென அவளை மானசீகமாய் அரவணைத்துக் கொள்கின்றான்.

இவளைப் போன்றவர்களுக்காகத்தான் இந்த இளவேனில் காலத்தில் கொன்றையும், செர்ரிக்களும் பூக்கின்றன!

***************

(Apr 12, 2024)

0 comments: