இளங்கோ, தனித்து இயங்கும் படைப்பாளி. அடிப்படையில் நான் அவரது எழுத்தின் வாசகன். எனக்குப் பிடித்தமான எழுத்துகளில் அவருடையதும் உண்டு. அதற்கு முக்கியமான காரணம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். வாசிக்கிறவர்களுக்கு விடலைத்தனமான எழுத்து என்று தோன்றக்கூடும்; ஆனால் அப்படியல்ல, அழுத்தந்திருத்தமாகத் தன் கருத்துகளைப் பகிரக்கூடியவர். வெற்றுக் பந்தாக்களும், வெளிச்ச ஒளி வட்டங்களும் ஏற்படுத்திக் கொள்ளாதவர். அவருடைய கட்டுரைகளை மெய்ப்பு நோக்கும் பொருட்டும், திருத்தும்பொருட்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசித்ததில் என்னளவில் நுட்பமாக கவனித்த ஒரு விஷயம், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அக்கறை ஏதுமின்றி அவர் பதிந்திருக்கும் விஷயங்கள். குறிப்பாக, என்னை மிகுந்த சிந்தனைக்குள்ளாக்கியது ‘சில ‘அரசியல்’ பிரதிகள்’ என்ற கட்டுரை. ஈழம், புலம்பெயர்வு, தமிழர் நிலை என்பதை எழுத்தாக்கும்போது அதைத் தங்களுக்கான அடையாளமாகவும், அனுகூலமாகவும் செய்து கொண்டிருக்கிற பலரை இன்று என்னால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படியான அடையாளச் சிக்கல்கள், விளம்பரப்படுத்தல்கள் ஏதுமின்றி, எந்தவித கட்டாயங்களுமின்றி தன்னைப் பதிவு செய்திருக்கிறார் இளங்கோ. ‘பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என தன்னை பாதித்த, தான் சந்திக்க நேர்ந்த, வாசித்த, அனுபவித்த விஷயங்களைப் பற்றி விருப்பு வெறுப்பற்றபதிவாக எழுதியிருக்கிறார். ‘பேயாய் உழலும் சிறுமனமே’ என்ற இளங்கோவின் கட்டுரைத் தொகுப்பு அகநாழிகை வெளியீடாக அடுத்த மாதம் வெளிவருகிறது.
•
பொன். வாசுதேவன்
0 comments:
Post a Comment