கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 46

Sunday, September 15, 2024

 சில மாதங்களுக்கு முன் அந்த இடத்துக்குப் போனபோது ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் கடந்தவாரம் அந்த இடத்தைவிட்டு முற்றுமுழுதாக நீங்கியபோதும் ஏதோ ஒரு திரைப்படத்துக்கான காட்சியொன்றை முழுநாளும் சூட் செய்ததைப் பார்த்தேன்.

ஒரு பெண் அலுவலகத்தில் இருந்து ஒரு லக்கேஜ்ஜூடன் வெளியேறுகின்றார். அவருக்கான கார் காத்து நிற்கின்றது. காருக்குள் ஏறுவதற்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அந்த அழைப்பை எடுத்துப் பேசிவிட்டு, காரின் டிரங்கிற்குள் லக்கேஜ்ஜை வைப்பதுதான் அன்றைய காட்சி. அதைப் பலவிதமான கோணங்களில் காலையிலிருந்து மதியம்வரை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஒரு எளிய காட்சிக்காக இவ்வளவு காட்சிகளா? இத்தனை பேர் (15 பேருக்கு மேல்) நின்று இதை மணித்தியாலக்கணக்கில் எடுக்கவேண்டுமா என நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் எந்த ஒரு creative art ம் அப்படித்தான். அது பல்வேறு படிநிலைகளைக் கடந்துதான் இறுதி வடிவத்தை அடைகின்றது. எந்த ஒரு நல்ல படைப்பை வாசிக்க/பார்க்க/கேட்கச் செய்தாலும், அதில் இருந்து வெட்டியெறியப்பட்ட பகுதிகள் என்னவாக இருக்கும் என்ற ஒரு யோசனை எனக்குள் போய்க் கொண்டிருக்கும். அகற்றப்பட்ட பகுதிகள் அந்த நேரத்தில் வந்த சிந்தனையில் உதிர்த்ததுதானே? இல்லாவிட்டால் first place இல், அது ஏன் எழுதவோ/காட்சிப்படுத்தவோ வேண்டி இருந்திருக்கும்.

ஒருமுறை எரித்திரியா நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அவர் அரசியல் அகதியாக எகிப்திற்குப் போய், இஸ்ரேலுக்குப் பாலைவனத்தினூடாக ஒரு கிழமைக்குப் போன கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் தனியாக அல்ல, அப்போதுதான் மணமாகிய தனது காதலியுடன் பயணித்திருக்கின்றார். அவர்களை எல்லை கடத்திக் கொண்ட ஆயுததாரிகளுடன் சண்டைவந்து அருந்தப்பில் வந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவ்வளவு துயரமான கதை. அவர்களுக்கு இப்போது மூன்று பிள்ளைகள். எந்தப் பிள்ளையும், இப்படி ஒரு கடுமையான பெற்றோரின் பயணத்தைக் கேட்டல் எளிதல்ல என நினைத்தேன். அவரின் காதலியை, நீ அவளைத் திருமணம் செய்யவில்லை, பொய் சொல்கின்றாய் எனச் சொல்லி அந்தப் பெண்ணைத் தனித்தெடுத்து புசிக்க விரும்பிய மானிடர்களின் கதையும், காப்பாற்றிக் கொண்டுவந்த சாகசமும் அதில் கலந்திருந்தது.

இவ்வாறுதான் பலரின் கதைகள் இருக்கின்றன. இரத்தமும் சதையுமான கதைகளைக் கேட்க நாம் நம் கண்களையும்/செவிகளையும் திறந்து வைக்க வேண்டியிருக்கின்றது. கலையின் மேதமைக்கும்,படைப்பின் அழகியலுக்கும் முன்னாள் நாம் சமரசம் செய்யத் தேவையில்லை என்றாலும், நாம் நமதல்லாத பிறரின் கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கின்றோமா என நம்மை நாம் கேட்க வேண்டியிருக்கும்.

'வாழை' படத்தில் கடைசி 20 நிமிடங்களை அழுகையில் மூழ்கடித்துவிட்டார்கள் என்றொரு விமர்சனம் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு நீண்ட அழுகைக் காட்சிகள் மட்டுமில்லை, வன்முறைக் காட்சிகளும் எனக்கு உவப்பில்லாதவைதான். அந்தக் காரணத்தினால்தான், ஈழத்தவர்களாகிய நாம் போரின் பெரும் அழிவுக்குள்ளானபோதும், எழுத்தில் விலாவரியாக வன்முறைகளும்.சித்திரவதைகளும் நேரடியாக எழுதப்படுவதைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றேன். ஆனால் 'வாழை'யில் நாம் பார்க்கவேண்டியது. யாருடைய பார்வையில் இருந்து இந்தப் படம் காட்சிப்படுத்தப்படுகின்றது என்பது. அது அந்த சிறுவனின் பார்வையில் என்பது நமக்கு நன்கு தெரியும். ஒரு சிறுவனுக்கு அப்படித்தான் செத்தவீடு படிமமாகத் தங்கியிருக்கும். மேலும் இது ஒருவரின் இறப்பல்ல, 20 பேர்களில் இறப்பு. எனவே ஊரே சாவுக்காடு போலத்தான் தெரியும். ஆனால் அதைக்கூட மாரி கலையாகத்தான் மாற்றுகின்றார்.

எமக்கு அந்தத் துயரக்காட்சி தொடங்கும்போதே பெரும் இறப்பு நடந்துவிட்டதென்று சொல்கின்றார். அந்தச் சிறுவனின் சகோதரி இறந்துவிட்டார் என்பதுகூட நமக்கு
'வணிக' அதிர்ச்சியாக சட்டென்று சொல்லப்படுவதில்லை. நண்பனின் மரணத்தைப் பார்த்து அதிரும்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு வயதான ஆச்சியின் மூலம், இந்தச் சிறுவனின் சகோதரி மரணம் பார்வையாளருக்குச் சொல்லப்பட்டுவிடுகின்றது. 
இது பட்டினியால் வாடிய ஒரு சிறுவன் எப்படி பெருந்துயரத்தை எதிர்கொள்கின்றான் என்பதற்கான காட்சி.

அவனது பட்டினி, அவனுக்குப் பிடித்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்பதையே பொறுமையாக உள்ளெடுத்து உணரமுடியாமல் செய்திருக்கின்றது என்பதாகும். மேலும் அப்படித்தான் சிறுவனின் உலகினில் காட்சிகள் உறைந்து போயிருக்கும். அவ்வளவு கூக்குரல்களும், ஓலங்களுக்கும் அப்பாலும் அவனுக்குள் இருந்த பசி அப்படிப்பட்டது.

நான் சிறுவயதுகளிலேயே மரணத்தைப் பார்த்திருக்கின்றேன். மரணம் என்றால் வயதாகி இயல்பாக வரும் மரணங்களை அல்ல. இளவயது மரணங்களை. அதுவும் கோரமான படுபயங்கரமான மரணங்களை. என்னுடைய எட்டுவயதில் திலீபன் 12 நாட்கள் உணவோ நீரோ அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இறந்திருந்தார். அவர் உண்ணாவிரதம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொருநாளும் அந்த விபரங்கள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டபடி இருக்கும். அவர் இறந்தபின் அவரின் உடலை நீண்டதூர வரிசையில் நின்று பார்த்திருக்கின்றேன். ஒரு மனித உடல் இவ்வளவு சுருங்கியும், கருமையாகியும் போயும் இருக்கமுடியுமா என்று அன்று ஒரு எட்டு வயதுச் சிறுவனாகிய எனக்கு வந்த அதிர்ச்சியை உங்களால் எப்படிச் சொன்னாலும்/ எந்த வார்த்தையால் விபரித்தாலும் புரிந்துகொள்ள முடியாது. இவறையெல்லாம் தாண்டி உங்களின் கலைக்குரிய மொழியில்/ அழகியல் காட்சிப் படிமத்தில் காட்டு என்று என்னிடம் நீங்கள் கேட்டால் அது எத்தகைய வன்முறையாக இருக்கும்?

அவ்வாறு சிறுவயதில் இறந்தமுகங்கள் பலதைப் பார்த்ததால், பின்னர் வளர்ந்தபிறகு எந்த மரணவீட்டுக்குப் போகவும் என்னால் எளிதில் முடிவதில்லை. அப்படிப் போனால் கூட இறந்தவர்களின் முகங்களை நேரடியாகப் பார்க்க முடியா ஒரு trauma எனக்கு இப்போதும் இருக்கின்றது.ஆகவேதான் சொல்கின்றேன், உங்கள் மேதமைகளைக் காட்டமுன்னர் ஒருவர் இன்று தனது கதைகளைச் சொல்லும் இடத்தை அடைந்ததற்கான கடந்தகாலத்தை அறிய முயலுங்கள். இன்று ஒரு 'வசதி'யான வாழ்க்கைக்கு வந்துவிட்டோம் என்பதற்காக எங்கள் வாழ்க்கையில் நடந்த உளவடுக்களை நாங்கள் மறந்துவிட்டா உங்களுக்கான 'நாசூக்கான' கலையின் மொழியில் பேசவேண்டும்.

மாரி ஏன் தொடர்ந்து இவ்வாறான படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்? ஏன் நாங்கள் இத்தனை காலமான பின்னும் போரின் பின்னணியில் கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் எங்களால் எமது கடந்த கால உளவடுக்களை இன்னமும் கடந்துவரமுடியவில்லை என்றுதானே மறைமுகமாய்ச் சொல்கின்றோம்.

ஏன் எங்களுக்கு மார்க்வெஸ் எழுதிய 'Love in the Time of Cholera' போன்ற அவ்வளவு காதல்கதைகளைச் சொல்ல விருப்பமில்லையா என்ன? பாருங்கள் அந்த அழகிய காதல் கதையில் கூட மார்க்வெஸ் கொலம்பியாவின் உள்ளூர் போரைக் கொண்டு வருகின்றார் அல்லவா? நீங்கள் ப்ளோரோண்டினோவின் 600 மேற்பட்ட காதலிகளை/காதல்களை இரசிக்கலாம். ஆனால் எனக்கோ அந்தக் குண்டுச்சத்தங்களிடேயே சிவில் யுத்தம் நடக்கும்போது ப்ளோரோண்டினோ ஒரு கைம்பெண்ணோடு உறவுகொள்வாரே அந்தக் காட்சியே, ப்ளோரோண்டினோ தனது 50 வயதுக் காத்திருப்பின் பின் தன் முதல் காதலியான ஃபேர்மினாவைக் கைபிடிப்பதைவிட இப்போதும் பசுமையான நினைவாகத் தங்கி நிற்கின்றது.

மேலும் உரையாடல்களின்போது, இது என் தனிப்பட்ட கருத்து என்றெல்லாம் சொல்லித் தப்பிப் பார்க்காதீர்கள். எல்லாமே அரசியல்தான். அது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் கூட. ஆகவேதான் பெண்கள், இரண்டாம் அலை பெண்ணியத்தின்போது Personal is Political என்று தெளிவாக எப்போதோ முன்வைத்திருந்தார்கள்.

**************

( Aug 25, 2024)

0 comments: