குட்டிக்கதை சொல்லட்டுமா என்று எதுகை மோனையுடன் இங்கே ஒரு influencer இருக்கின்றார். அவரின் அழகிய தமிழ் கேட்பதற்கு இனியது என்று இருந்திருக்கலாம். ஆனால் விதி வலியது. அது அவர் நமக்கருகில் 'மதுரை பாண்டியர்கள்' இருக்கின்றார்கள், பாசக்கார மதுரைக்காரர்களைப் போல, சாப்பாடும் இனிது என்று ஒரு காணொளியைப் பதிவு செய்ய எனக்கும் அங்கு போக ஆசை வந்துவிட்டது.
அத்தோடு விஜயனின் குடியேற்றத்தோடு சிங்கள இனம் இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும்போது, அவன் ஈழத்தின் பூர்வீக இளவரசியான குவேனியை அதிகாரத்தைக் கைப்பற்ற முதலில் மணம் செய்து அவரைத் துரத்தியபின், யாரை மணம் செய்தான்? ஒரு பாண்டிய இளவரசியைத்தானே. ஆகவே நமக்கு மட்டுமில்லை, சிங்களவர்க்கும் பாண்டியர்கள் உறவுக்காரர்களே என்று பாண்டியாஸில் தரப்போகும் ஆட்டுக்கறியின் சுவையைக் கனவு கண்டபடி இதைச் சொன்னேன்.
உணவகத்தை நெருங்கியபோதுகூட, இலங்கையில் சிங்கள மன்னர்களுக்கு வாரிசுகள் இல்லாதபோது பாண்டிய இளவரசர்களும், வழித்தோன்றல்களும் இலங்கைக்கு வந்து ஆண்டிருக்கின்றார்கள் என கண்டி இராச்சியத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்; மதுரை நாயக்கர்களிலிருந்துதான் இந்த பண்டாரநாயக்க, சிறிமாவோ, சந்திரிக்கா எல்லாம் வந்தவர்கள் என்று வரலாற்றை மேலும் அவர்கள் மீது விசிறியெறிந்தேன். ஆங்கிலேயர் வந்தபோது கடைசிமன்னனாக இருந்த 2ம் இராஜசிங்கன் கூட தமிழ் மன்னன்தான். ஆகவேதான் அவனை வெள்ளையர்கள் வேலூர் சிறையில் கொண்டுபோய் கதையை முடித்தனர் என நமது அரசியல் ஆய்வாளர்கள் போல மூச்சுவிடாது கதைக்க மதுரை பாண்டியர்கள் வந்துவிட்டது.
அங்கே நாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் மெனு இருக்காதது கண்டு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. தலைவாழையிலை விரித்துவிட்டு சைவமா அசைவமா என்று கேட்டனர். திருப்பதி லட்டே இப்போது அசைவம் என்பதால் எதற்கு வீண் பிரச்சினை என்று நாமெல்லோரும் அசைவம் என்று ஒருமித்த குரலில் குரல் கொடுத்தோம்.
சாப்பாடு ஒரளவு நல்லாகத்தான் இருந்தது. குட்டிக்கதை சொல்லட்டுமா மாதிரி ஒரு காணொளி செய்தால், உங்கள் கருத்தை எப்படி சொல்வீர்களென நண்பர்களிடம் கேட்டேன். ஒரு நண்பர் தான் திரும்பி வரமாட்டேன் என்றார். இன்னொரு நண்பர் யாரேனும் புதிதாக வந்தால் இங்கே அழைத்துவருவேன் என்றார். நான் எனது உண்மையான கருத்தைப் பதிவு செய்ய விரும்பியபோதும், இவர்களுக்கு அவ்வள்வு 'வரலாற்றை'ச் காதில் இரத்தம் வடிய வடியச் சொன்னதால், பரவாயில்லை, இன்னொருமுறை பரிமாறும் பெண்களின் புன்னகைகளுக்காக வரலாமென என் உணவு விமர்சனப் பார்வையை முடித்துவிட்டேன்.
விலையும் buffet போன்றது. கொஞ்சமாய் கிள்ளிச் சாப்பிடும் எனக்கு ஒருபோதும் buffet சரிவராதது. நல்லாய்ச் சாப்பிடுபவர்கள் இப்படியான meals பிடிக்கக்கூடும். பாயாசம் தந்தார்கள். அதன்பிறகும் மேலதிகக் காசு கொடுத்து குல்ஃபி வாங்கிக் குடித்தோம். நண்பர் பெசண்ட் நகரில் குல்ஃபி குடித்த ஞாபகம் வருகின்றதென்றார். எனக்கு மாட்டுத்தாவணியில் ஜிகர்தண்டா வாங்கித் தந்த கிரஷ்ஷின் நினைவு வருகிறதெனச் சொல்லமுடியுமா என்ன? அடக்கி வாசித்தேன்.
மதுரை பாண்டியாஸில் சாப்பிட்டு வந்து மாலை 'நாத சங்கமம்' இசைநிகழ்வுக்குச் செல்வதாக இருந்தது. மன்னாரில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமையவிருக்கும் பல்கலாசார மையத்துக்கான நிதி சேகரிப்புக்கான் நிகழ்வு என்பதால் போக இருந்தேன். அதை நடத்திய அன்புநெறியில் அண்ணாவும் ஒரு பங்கேற்பாளர் என்பதால் குடும்பமாக போக இருந்தோம். ஆனால் மதுரை பாண்டியர்கள் இப்போதுதான் விழித்தெழத் தொடங்கினார்கள்.
என்கின்றபோதும் அந்த 'நாத சங்கமம்' அப்படி அரங்கு நிறைந்த நிகழ்வாக பலர் இருக்கை கிடைக்காது நின்று பார்த்தார்கள். ஒரு நல்ல நோக்கத்திற்காக, உண்மையான அர்ப்பணிப்புடன் ஒரு அமைப்பு செயலாற்றும் என்றால், மக்கள் எப்படியும் வந்து ஆதரவு கொடுப்பார்கள் என்பதை இன்னும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தென்னிந்திய கலைஞர்கள் இல்லாது முற்றுமுழுதாக நமது கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பலர் நிகழ்வு பற்றி நேர்மறையான கருத்துக்களையே சொல்லியிருந்தார்கள்.
மரத்தை நட்டுவிட்டு உடனேயே பழம் பறிக்கவேண்டும் என்று ஆசைப்படாது களங்களில் செயலாற்றினால் அதற்கு எப்போததெனினும் பலன் கிடைக்கத்தான் செய்யும். அது அரசியலாக இருந்தால் என்ன, எழுத்தாக இருந்தால் என்ன, நற்பணிகளாக இருந்தால் என்ன.
ஜேவிபியும், அநுரவும் வென்றுவிட்டார்கள் என்றால் அது அவர்களின் நீண்டகால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. அவ்வாறு களத்தில் கடுமையாகவும், நம்பிக்கையுடனும் நீண்டகாலம் பணியாற்றாமல், நாங்களும் அவர்களைப் போல வெற்றிக்கனிகளை இதோ இப்போதே பறிக்கப் போகின்றோம் என்று ஓடுகின்றவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுண்டு: கான மயிலாடக் கண்ட வான்கோழி போல நீங்கள் ஆகிவிடக்கூடாது!
*****
(Sept, 2024)
0 comments:
Post a Comment