The Boat People by Sharon Bala
'படகு மக்கள்' (The Boat People), கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத்தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக வழக்காடும் பிரியாவினதும், அவர்களின் வழக்கை விசாரிக்கும் ஜப்பானிய பின்புலத்தைக் கொண்ட கிரேஸினதும் கதைகள் சமாந்திரமாக இதில் கூறப்படுகின்றது.
மகிந்தனுக்கு அழகான குடும்பமொன்று கிளிநொச்சியில் இருந்தது. இந்நாவலில் இறுதி யுத்தத்திற்கு முன்பான சமாதான காலத்தில் இருந்த மகிந்தனது வாழ்வு விரிவாகப் பேசப்படுகின்றது. மகிந்தனின் மனைவியான சித்ரா, செழியன் பிறக்கும்போது இறந்துவிடுகின்றார். பின்னர் எப்படியோ இறுதி யுத்தத்தின் அருந்தப்பில் தப்பிப் பிழைத்த மகிந்தன், தனதும் தனது மகனினதும் நல்வாழ்வின் பொருட்டு இந்தக் கப்பல் பயணத்தை கனடாவுக்காக மேற்கொள்கின்றான். மகிந்தனது வழக்கை விசாரிக்கும் கனடிய அரசு சார்பான வழக்கறிஞர்கள் மகிந்தன் உள்ளிட்ட அனைவரினதும் உண்மை விபரங்களை இலங்கை அரசுக்கு அனுப்பிச் சரி பார்க்கின்றனர். ஒருவர், தனது சொந்த நாட்டிலிருந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லையென அகதியாகத் தப்பி வரும்போது, அந்த நபரின் உண்மை விபரங்களை தப்பி வந்த நாட்டுக்கு அனுப்பி உறுதிப்படுத்தல் அறமான விடயமா என்கின்ற கேள்வியை மகிந்தனுக்காக வழக்காடும் பிரியா கேட்கின்றார். அதுவரை இல்லாத ஒரு புதிய முறையை கனடிய அரசு இந்த அகதிகள் விடயத்தில் செய்து பார்ப்பது மனிதவுரிமைகளில் அக்கறை கொள்கின்ற பிரியாவை மனம் நோகச் செய்கின்றது.
இவ்வாறு மகிந்தனும், செழியனும் பிரிக்கப்பட்டதால், மகிழ்ந்தனின் மன உளைச்சல்கள் பேசப்படுவதோடு, மகிந்தன் உள்ளிட்ட பிறர் தமது எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைகளோடு மாதக்கணக்குகளில் தடுப்பு முகாங்களில் இருக்கும் அவதியையும் இந்நூலில் ஆசிரியரான சாரோன் பாலா விரிவாகப் பேசுகின்றார். அதேவேளை சமாந்திரமாக இவர்களின் வழக்கை விசாரிக்கும் கிரேஸின் குடும்பப் பின்னணியும் பேசப்படுகின்றது. கிரேஸ் ஜப்பானியப் பின்புலத்தில் இருந்து வந்தவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது கனடாவிலிருந்த ஜப்பானியர்கள் அனைவரும் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பப்பட்டு ஜப்பானிய அரசுக்கு ஆதரவாளர்கள் என்கின்ற கண்காணிப்பின் வளையத்தில் வைக்கப்பட்டவர்கள். அந்த வழித்தோன்றல்களில் இருந்து வந்த கிரேஸே மிதவான கனடிய அரசின் கட்டளைகளுக்குப் பணிகின்றவராக, கப்பலில் வந்த அகதிகளை சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார்.
அவர் மட்டுமில்லை அரச தரப்பு வழக்கறிஞரான இந்திய வம்சாளிப் பெயருள்ள மிஸ்.சிங்கும் மிகக் கடுமையான கேள்விகளை ஈழத்தமிழ் அகதிகளை நோக்கி நீதிமன்றத்தில் வீசுகின்றார். இந்தப் புதினத்தில் அடைக்கலந்தேடி வந்தவர்களின் பின்னணி வாழ்க்கை மட்டுமின்றி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளும் ஆழமாக அலசி ஆராயப்படுகின்றது. இப்படி அடைக்கலந்தேடி வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி கனடாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி அமைப்பான புலிகளின் தாலியென்று அந்த சிங் வம்சாவளிப் பெண்மணி வாதாடுகின்றார். இல்லை அது புலிகள் அணியும் தாலியல்ல, அது அனைவருக்கும் பொதுவான தாலி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க நீண்டகாலம் எடுக்கின்றது. அதனால் அந்தப் பெண்ணின் வழக்கு நெடுங்காலத்துக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. அவர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்.
மகிந்தனின் வழக்கும் சிக்கலான நிலைக்குப் போகின்றது. கிளிநொச்சியில் ஒரு மெக்கானிக்காக இருக்கும் மகிந்தன், புலிகளின் வாகங்களைத் திருத்திக் கொடுத்தவர் என்று குற்றஞ் சாட்டப்படுகின்றார். அந்த வாகனத்திலேயே குண்டுகள் நிரப்பப்பட்டு கொழும்பில் ஒரு தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டதென கனடிய அரச வழக்கறிஞர்கள் நிரூபிக்க முயல்கின்றனர். மகிந்தன் அந்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்ததென விபரிக்க முயல்கின்றான். புலிகள் தமது வாகனத்தைத் திருத்தக் கேட்டபோது வேறு வழியில்லாது தான் திருத்திக் கொடுத்தேனே தவிர அந்த வாகனத்தை குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியது தனக்கு தெரியாது என்று மகிந்தன் கூறுகின்றான். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும்போது புலிகள் சொல்வதைக் கேட்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை என்று மகிந்தன் சொல்வதை நீதிமன்றம் கேட்கத் தயாரில்லாததால், மகிந்தனின் வழக்கு ஒத்திவைக்கப்படுகின்றது. அவ்வாறே இந்த நாவலும் மகிந்தன் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்படப் போகின்றாரா அல்லது கனடிய மண்ணில் வாழ அனுமதிக்கப்படுகின்றாரா என்ற தெளிவான பதில் தெரியாது முடிவடைகின்றது.
சாரோன் பாலா மகிந்தன், பிரியா, கிரேஸ் உள்ளிட்ட பல சிக்கலான பாத்திரங்களை பல்வேறு பரிணாமங்களில் சிந்திக்கக்கூடிய நிகழ்வுகளினூடாக அவர்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றார். தனது வழக்கு தோற்கப் போகின்றது, தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகின்றேன் என நம்பும் மகிந்தனின் நண்பனொருவன் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்கின்றான். அது மகிந்தனை இன்னும் உளாவியல் சிக்கலின் ஆழத்துக்குள் தள்ளிவிடுகின்றது. அதேபோன்று சிலருக்கு வழக்கு வெற்றிகரமாக முடிந்து போக, தாம் எப்போது தடுப்பு முகாங்களில் இருந்து வெளியே போய் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியுமென்று பலர் யோசிக்க அவர்களை வெறுமை பெரும் சுழலென மூடிக்கொள்கின்றது. இவ்வாறு ஒரு உக்கிரமான தடுப்பு முகாம் வாழ்வை, வழக்குகளுக்குப் போகும்போது கால்களிலும் கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுச் செல்லப்படும் பல பாத்திரங்களை நம்முன்னே உலாவ விடுகின்றார் சாரோன்.
கனடாவுக்கு அகதிகள் கப்பல்களில் காலங்காலமாக வந்து கொண்டிருக்கின்றனர். உலக மகா யுத்தங்களில் அகதிகளாக ஐரோப்பாவிலிருந்து தப்பி வந்திருக்கின்றனர். இன்னும் வரலாற்றை சற்று முன்னோக்கிப் பார்த்தால், 1899 இல் 7,500 டோக்பார்ஸ் ரஷ்யாவில் இருந்து அகதிகளாக வந்திருக்கின்றனர். அன்றைய ஜார் மன்னன் இம்மக்களை ஒடுக்கத் தொடங்க, அவர்கள் கனடாவுக்கு வந்திறங்கியிருக்கின்றனர். இம்மக்கள் கனடாவுக்கு வர உதவி செய்தவர் பிரபல்யம் வாய்ந்த எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய். அவர் 'புத்துயிர்ப்பு' என்ற நாவலை எழுதி அது விற்கப்பட்ட பணத்தில் டோக்பார்ஸை கனடாவுக்கு அனுப்பியிருந்தார்.
அவ்வாறே பிரித்தானியா - அமெரிக்கா சிவில் யுத்தத்தின்போது பலர் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றனர். அமெரிக்காவின் மிகப்பெரும் துயரார்ந்த வரலாற்றுச் சித்திரமான கறுப்பின் அடிமைகள் தமது விடுதலைக்காக கனடாவைத் தேடியே அமெரிக்காவிலிருந்து முதன்முதலில் தப்பி வந்திருக்கின்றனர்.
இவ்வாறு அடைக்கலந் தேடி வந்த அகதிகளை கனடா எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இருகரம் கூப்பி வரவேற்றதா என்றால் இல்லையெனத்தான் சொல்லவேண்டும். இந்தியாவில் இருந்து 1914 இல் Komagata Maru என்ற கப்பலில் வந்த முந்நூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். அதற்கு மன்னிப்பை கனடாவின் இருவேறு பிரதமர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்தபின் பொதுவெளியில் கேட்டிருக்கின்றார்கள்.
ஈழத்து அகதிகள் முதன்முதலில் வந்த கப்பல் 1986இல் கனடாவில் கிழக்குக்கரையில் இறங்கியது. அன்று கனடிய மக்களிடையே அவ்வளவு எதிர்ப்பு இந்த அகதிகள் மீது இல்லையென்றாலும், அன்றைய பிரதமராக இருந்த மல்ரோனி கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவுகொள்ளத்தக்கது - Canada was built by immigrants and refugees, and those who arrive in lifeboats off our shores are not going to be turned away” என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால் பின்னர் ஈழத்தில் இறுதி யுத்தம் முடிந்து கப்பல்களில் 2009-2010 இல் புறப்பட்ட மக்களை இதே கனடா மிக மோசமாக வரவேற்றது. பொதுவெளியில் வந்து அந்த அகதிகள் தமது கதைகளைச் சொல்லமுன்னரே, இந்தக் கப்பலில் வந்த அனைவருமே 'பயங்கரவாதிகள்' என அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களின் அபிப்பிராயத்தை அரசே குழப்பியது. அது மட்டுமின்றி கப்பலில் வந்த 500 இற்கு மேற்பட்ட மக்களை தடுப்பு முகாங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆண்கள், பெண்களை மட்டுமில்லை, குழந்தைகளாக 10 வயதுகளில் இருந்த சிறுவர்களைக் கூட விசாரணை என்ற பெயரில் ஒரு வருடத்துக்கு மேலாக சிறைக்குள் வைத்து கனடா தனது மனிதாபிமான முகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டியது.
கிட்டத்தட்ட இன்று பதினைந்து வருடங்கள் முடிந்தபின்னும், அந்தக் கப்பலில் வந்த மூன்றில் இரண்டு பங்கு அகதிகளே கனடாவில் சட்டபூர்வமாக வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மற்ற மூன்றிலோரு பங்கினர் எவ்வித உரிய ஆவணங்களும் இல்லாது கனடாவுக்குள் இருக்கின்றனர். இலங்கைக்கு மீண்டும் சென்றால் தமது உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று சொன்னபோதும் சிலர் இலங்கைக்குத் திருப்பி 'பயங்கரவாதிகள்/குற்றவாளிகள்' என்று சொல்லப்பட்டு அனுப்பப்பட்டிருந்தனர்.
இப்படி இந்த கப்பல் வந்ததன் பின், கனடாவின் அகதிகளுக்கான முக்கிய சட்டத்தை அன்றைய வலதுசாரி அரசாங்கம் திருத்தி எழுதியது. ஒருகாலத்தில் கனடா என்கின்ற நாடு குடிவரவாளர்களாலும் அகதிகளாலும் கட்டியெழுப்பட்டது என்று பெருமையாகச் சொல்லி, நாம் ஒருபோதும் அகதிநிலை கோரி வந்தவர்களைத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்ற ஒரு பிரதமரின் வார்த்தைகள் வெறும் கடந்த கால நினைவுகளாக உதிர்ந்து போயிற்று.
ஈழப்பிரச்சினை பற்றி ஆங்கிலத்தில் எழுதப்படும் பல நாவல்கள் 83 இனக்கொலையையே முக்கிய பேசுபொருளாக எடுத்து அதை மட்டுமே சுற்றிக் கட்டியமைக்கப்பட்டிருக்கும். 'படகு மக்கள்' என்கின்ற இந்த நாவல் இறுதி யுத்தத்தை களமாகக் கொண்டு இயன்றளவு தான் எடுத்துக்கொண்ட பின்னணிக்கு நியாயம் சேர்ப்பதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. இதில் மனிதாபிமானம் பற்றியும்,சமத்துவ வாழ்வு பற்றியும் பேசியபடி அனைத்துத் தரப்பையும் அவர்கள் செய்த தவறுகளுக்காக விமர்சிக்கவும் தயங்கவில்லை என்பதை முக்கிய ஓர் அவதானமாக நாம் வைக்க முடியும். நியாயத் தராசின் எந்த முள்ளின் பக்கம் சாயவேண்டும் என்கின்ற எவ்வித முற்சார்பும் இல்லாது எழுத, யுத்ததிற்கு வெளியே இருந்து அதேவேளை யுத்தத்தோடு தொடர்புடைய சாரோன் பாலா போன்ற ஈழத்தமிழரின் இரண்டாம் தலைமுறையால்தான் முடியும் போல இருக்கின்றது.
நமது நாட்டில் நடந்த யுத்தத்தை மட்டுமின்றி நாம் ஏன் அகதிகளாக மேற்கத்தைய நாடுகளுக்கு புகலிடம் தேடி வந்தோம் என்பதையும் இந்த நாவல் எவ்வித அதீத நியாயப்படுத்தல்களும் இல்லாது இயல்பாக முன்வைக்கின்றது. அத்துடன் சூரியக் கடல் (Sun Sea) என்கின்ற கப்பலில் 2010 இல் ஈழத்தமிழர்கள் வந்தபோது ஏற்பட்ட எதிர்ப்புக்குரல்களுக்கு மறுப்பாக அப்படி வந்த அகதிகளுக்கும் ஒரு குரல் இருக்கின்றது, அதைக் கேட்கவேண்டும் என உரத்துச் சொல்கின்ற ஓர் புனைவு ஆவணமாகவும் இது இருப்பது கவனிக்கத்தக்கது. சரி/பிழை, நியாயம்/அநியாயம் என்கின்ற துவிதப் பிரிப்புக்களுக்கு அப்பால் ஏன் அந்த மக்கள் மூன்று மாதங்களுக்கான கடும்பயணத்தில், ஒழுங்கான உணவோ/குளிப்போ/கழிப்போ இன்றி கனடாவைத் தேடி வந்தார்கள் என்பதைக் கனடிய பொதுப்புத்தி கொஞ்சமேனும் யோசிக்க இந்த நாவல் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.
**********
(நன்றி: எழுநா)
0 comments:
Post a Comment