கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கருநீல தேவதையின் மச்சங்கள்

Monday, June 03, 2024


சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு பேச்சினிடையே நண்பன், 'திருமணமான ஆண்கள் இன்னொரு பெண்ணிடம் போய்விட்டு வரும்போது சிலவேளைகளில் அதை பெண்கள் ஏதோ ஒரு நிமித்தம் மன்னித்துக் கொள்கின்றார்கள். ஆனால் அப்படி திருமணமான பெண்கள் இன்னொரு ஆணிடம் போய்விட்டு வந்தால் எந்த ஆணாலும் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லையே, அது ஏன்?' எனக் கேட்டான். நான் இந்த ஆண்மைய சமூகம் இன்னபிற வரலாற்று/மானுடவியல் காரணிகளை முன்வைத்து விளக்க முயன்றேன். நண்பனோ, இவை ஒருபுறமிருக்கட்டும், ஆனால் இதிலுள்ள‌ ஆண்/பெண் சிந்தனை முறைகளைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றாயா என்றான்.  பெண்களைத் தமது  உடைமையாக்கும் ஆண்களின் சிந்தனைதான், ஒரு பெண் அப்படி இன்னொரு ஆணிடம் போய்விட்டு வந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என்று சொன்னேன். இல்லை, ஆணுக்கு காதலையும் காமத்தையும் தன் வசதிக்கேற்ப பிரித்துப் பார்க்க முடியும். ஆனால் உறவிலிருக்கும் பெண், இன்னொரு ஆணைத் தேடிப்போனால் அவள் காமத்தால் மட்டுமே போவதில்லை; தனது காதலையும் சேர்த்துத்தான் அந்தக் காமத்தோடு கூட்டிச் செல்கின்றாள். அந்த விடயம் ஒன்றே ஆணால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது என்று சொன்னான்.

இந்தக் கருத்துக்குச் சமாந்தரமாக கே.ஆர்.மீராவின் 'தேவதையின் மச்சங்களில்' வரும் ஏஞ்சலா இருக்கின்றாள். குழந்தையுள்ள ஏஞ்சலாவுக்கு நரேந்திரன் என்கின்ற திருமணமான ஆணோடு உறவு ஏற்படுகின்றது. நரேந்திரன் ஏஞ்சலாவுக்காக தன் குடும்பம், குழந்தைகளை எல்லாம் விட்டு வந்துவிடத் தயாராக இருக்கின்றான். அப்போது ஒருகட்டத்தில் ஏஞ்சலா ‘பெண்கள் காதலையும் காமத்தையும் ஒன்றாகவே கொண்டு வருகின்றார்கள், அதை ஆண்களைப் போலப் பிரித்துப் பார்ப்பதில்லை’ என்கின்றாள். அதுமட்டுமில்லாமல் நான் உன்னிடம் நிரந்தரமாக வந்து,  நாங்கள் இருவரும் திருமணமும் செய்துவிட்டால் நானும் உன் மனைவியைப் போல சலிப்பான இன்னொரு பெண்ணாகிவிடுவேன் என்கின்றாள்.

நாங்கள் இப்படியே இந்த‌ இரகசிய உறவில் என்றும் இருப்போம் என்று கூட ஏஞ்சலா சொல்வதில்லை. நரேந்திரன் மூலம் ஒரு குழந்தை உருவானதும், அவனையும் தன்னைவிட்டு விலகிப் போகச் சொல்கின்றாள். அவள் மேலும் மேலும் புதிய உறவுகளைத் தேடிப் போகின்றாள். ஒருவகையில் ஏஞ்சலாவை ஏஞ்சலாவினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எவரையும் ஏமாற்றாமல், எவருக்கும் போலி வாக்குறுதிகள் கொடுக்காமல், தன்னியல்பிலே தனக்கான வாழ்வை தேர்ந்தெடுக்கின்ற‌ ஏஞ்சலாவையும் இந்தச் சமூகம் சும்மா விடுவதில்லை. அதற்காக அவள் கொடுக்கும் விலை அவளின் உயிர். எல்லாக் காலத்திலும் ஆண்கள் தமது பலவீனங்களை மறைத்து 'ஆண்மை'யுள்ள உயிரிகளாகத் தம்மைப் பறைசாற்ற, பெண்களையே காவு கேட்கின்றார்கள்.


இன்று ஆண் என்கின்ற பாலினத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முற்றுமுழுதான ஒரு சுதந்திரமான பெண் எப்படியிருப்பாள் என்பதை ஆண்களாகிய நாம் கற்பனையே செய்து பார்த்திருக்கமாட்டோம். அப்படி தம்மைச் சுதந்திரமுள்ள பெண்ணாக, கற்பனை பண்ணுகின்ற பெண்களும் ஒருவகையான‌ மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள்ளும், திணிக்கப்பட்ட கருத்தியல்களுக்கும் இடையில் இருந்தே அதை யோசிக்க வேண்டியிருக்கின்றது.. ஒரு காலத்தில் 'ஆணும்/பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழும்போது' எப்படி ஒரு பெண் சாதாரணமாய் இருக்கக்கூடும் என்பதற்கான சில புள்ளிகளை மீராவின் 'தேவதையின் மச்சங்களும்', 'கருநீலமும்' நமக்குக் காட்டுகின்றன.

இக்குறுநாவல்களில்
வரும் பெண்கள் இருவருமே அனைத்துவிதமான தளைகளுக்குள்ளும், அல்லாடல்களுக்குள்ளும் நடுவில் இருந்தபோதும் தமக்குப் பிடித்தமான ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுக்கின்றனர். நமது அம்மாக்கள்/சகோதரிகள்/காதலிகள், அவரவர் அவரவர்க்கு விரும்பிய வாழ்வுமுறைகளைத் தேர்ந்தெடுக்கவும், அவை குறித்து எவ்வித குற்றவுணர்ச்சியும் அடையாமலும் இருப்பார்கள் என்றால், எவ்வாறான வாழ்க்கையை அவர்கள் தெரிவு செய்வார்கள் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது நமது சிந்தனையின் எல்லைகளைத் தாண்டிய ஒரு வடிவில் இருக்குமென்பதால் நாம் அதை நினைத்துப்பார்க்கவே அச்சப்படுகின்றோம். ஆனால் என்றோ ஒரு காலம் பெண்களும் நம்மைப் போன்ற சரிநிகர் அதிகாரங்களோடு வாழ நேர்கின்றபோது ஆண்களாகிய நாம் இதுவரை கட்டிவைத்த எல்லா கோட்டைகளும், நுண்ணிய கண்காணிப்புக்களும் சிதறிப்போய்விடுவதை எவராலும் தடுத்துவிடவும் முடியாது.

'
தேவதையின் மச்ச'ங்களிலும், 'கருநீல'த்திலும் வருகின்ற பெண்கள் மட்டுமில்லை, மீராவின் மற்றைய புனைவுகளான‌'மீராசாது'விலோ, 'யூதாஸின் நற்செய்தி'யிலோ, 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நானி'லோ வரும் பெண்களும், அவர்களின் காதல்களும் சாதாரணமாக இருப்பதில்லை. நம்மால் புரிந்துகொள்ள முடியாத, பித்தேறிய/ உக்கிரமான காதல்களாக அவை இருக்கின்றன.

கே.ஆர்.மீரா ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமகாலத்துப் பெண்களின் உறவுகளைப் பற்றி மட்டும் பேசவில்லை, இன்றைய ஆண்களால் கற்பனையே செய்ய முடியாத நாளைய‌ பெண்களின் காதல்களையும் தனது எழுத்தில் வரைந்து பார்க்கின்றார். இன்றைக்கு அவை விதிவிலக்குகளாக இருந்தாலும், நாளை பெண்கள் தமக்கானதை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் காலம் வரும்போது இந்தப் பெண் பாத்திரங்கள் பொதுத்தன்மையுடையதாக ஆகிவிடக்கூடும். அதுவரைக்கும் தம் தெரிவுகளில் தெளிவுடைய இவ்வாறான உக்கிரமான பெண்களை இன்னும் அவ்வளவாகச் சந்திக்கவில்லை என்று வேண்டுமானால் நாங்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டு 'ஆசுவாசபட்டு'க் கொள்ளலாம். ஆனால் கருநீல தேவதையின் மச்சங்களுள்ள பெண்களைச் சந்திக்கும் காலம் நமக்கு அவ்வளவு வெகு தொலைவிலும் இல்லை.

*********

தேவதையின் மச்சம்/ கருநீலம் ‍ கே.ஆர்.மீரா (தமிழில் மோ.செந்தில்குமார்)

Feb, 2024)

சல்மான் ருஷ்டியின் 'கத்தி'

Saturday, June 01, 2024

 

சல்மான் ருஷ்டியின் 'கத்தி'யை (Knife: Meditations After an Attempted Murder) வாசித்துக் கொண்டிருக்கின்றேன். உயிர் போகுமளவுக்கு 15இற்கு மேற்பட்ட கத்தி குத்துக்களை வாங்கி ஒரு கண்ணை இழந்துவிட்ட பிறகும், வலிகள்/வடுக்கள்/உளச்சிதைவு என பலவற்றை அனுபவித்த பிறகும் ருஷ்டியின் எழுத்துக்கள் முன்பிருந்த அதே வீரியத்துடன் எழுந்து வருகின்றன. குத்திய 23 வயது நபரை ‘The A’ என்று ஒரு பெயரிலியாகவே அழைப்பது மட்டுமில்லாது, அந்தக் கொலைகாரரை மன்னிக்கும் மனோநிலையும் ருஷ்டிக்குள் ஏதோ ஒருவகையில் இதில் கனிந்து வருகின்றது. இந்நூலின் முதலாவது அத்தியாயமான ‘மரணம் என்னும் தேவதை'யில் அந்தக் கத்திக்குத்து நடந்த நிகழ்வையும், அதுவரை இருந்த இயல்பு வாழ்க்கை இனி என்றைக்கும் இல்லையாகிப் போனதையும் மிகத் துல்லியமாக விபரிக்கின்றார். நமக்குள்ளும் எதுவென்று சொல்ல முடியாப் பாரம் ஏறிவிடச் செய்கின்றது.

அந்தக் கொலைகாரர் தன்னைத் தாக்க வருகின்றார் என்று உணர்ந்த பிறகும் மேடையில் இருந்து ஏன் தான் தப்பியோடவில்லை/ திருப்பித் தாக்குவதற்கான எந்தச் சிறுமுயற்சியும் செய்யவில்லை என்பதைத் தொடக்க அத்தியாயத்தில் ருஷ்டி அசைபோடுகின்றார். விழுந்த 15 இற்கு மேலான குத்துக்கள் அனைத்துமே அவரின் முன்பக்கத்தில்யே விழுந்திருக்கின்றன. கழுத்தில் பலமான குத்தல்கள். இரத்தம் கொப்பளிக்கத் தொடங்க, வைத்தியசாலை செல்லும்வரை பெருவிரலால் தன் கழுத்தை அழுத்தி வைத்திருந்தவரை மட்டுமின்றி அந்த வைத்தியசாலையில் இருந்து ஹெலிகொப்டரில் இன்னொரு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் அப்படி கழுத்தில் கட்டைவிரல் வைத்திருந்தவரையும் 'thumb' men என்று நகைச்சுவையாகச் சொன்னாலும், அவர்களைப் போன்றவர்களின் ஆபத்துக்கால உதவிகளாலேயே ருஷ்டி மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றார் என்பது வாசிக்கும் நமக்கு நன்கு புரிகின்றது.

இப்படி அவலமான சூழ்நிலையை விபரிக்கும்போது கூட, ருஷ்டிக்கு அவர் வாசித்த பல நூல்கள் நினைவுக்கு வருகின்றன. மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டு காலத் தனிமையில்' தொடக்கமான “Many years later, as he faced the firing squad…” வாக்கியத்தை குறிப்பிடுகின்றார். என்னுடைய அந்த கடைசி இனிமையான இரவை நினைக்கும்போது, எதிர்காலத்தின் இருள் எனது நினைவுகளில் படிகின்றது. ஆனால் இப்படி நடக்கப்போகின்றது என்று என்னை நான் எப்படி எச்சரிக்க முடியும்? என்னால் இதை ஒரு கதையாக மட்டுந்தான் உங்களுக்குச் சொல்ல முடியும் என்கின்றார்.

அவருக்குப் பிடித்த பிரேஸிலிய எழுத்தாளரின் நாவலின் முக்கிய பாத்திரம், கல்லறைக்குள் இருந்து கதை சொல்லும். இவ்வாறு மார்க்வெஸ்ஸை மட்டுமில்லை, கத்தி/கொலைகார கத்தி மாறுவதற்கு காஃப்கா உள்ளிட்ட பலரின் நூல்களிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டுகின்றார்.

40 வருடங்களுக்கு முன் பத்வா கொடுக்கப்பட்டபோது வராத மரணம், ஏன் இப்போது தனது 75 வயதில் வந்திருக்கின்றதென கேள்வி எழுப்புகின்றார். இத்தனைக்கும் அந்தக் கொலைகாரர் இவரின் சர்ச்சைக்குள்ளான 'சாத்தானின் வசனங்களை' வாசிக்கவேயில்லை. ருஷ்டி குறித்த இரண்டொரு காணொளிகளையும், அவரின் ஏதோ ஒரு நூலின் பக்கங்களையும் மட்டும் இந்தக் கொலைகாரர் வாசித்திருக்கின்றார்.

பல்வேறு நாடுகளின் அரசியல் பிரச்சினைகளால் தஞ்சம் கேட்டு வந்த எழுத்தாளர்களுக்கென்று ஒரு தெருவையே ருஷ்டியின் நண்பர்கள் அமைத்திருந்தார்கள். அப்படி அரசியல் தஞ்சம் பெறும் எழுத்தாளர்களை எப்படி அரவணைக்கவேண்டுமென்று ருஷ்டி 20 வருடங்களுக்கு முன் ஒரு உரையற்றியபோது கேட்டவர்களே இப்படி அந்தத் தெருவில் நிறைய வீடுகளை இவ்வாறு அரசியல் தஞ்சம் பெறும் எழுத்தாளர்களுக்கென்று அமைத்திருந்தார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு நிகழ்வுக்காய்ப் பேசுவதற்கு ருஷ்டி வந்தபோதே அவரைக் கொலைகாரர் தேடி வந்திருக்கின்றார் என்பதுதான் அவலமானது.


காஃப்காவின் ‘விசாரணை’யில் ‘கே’யின் கழுத்தை ஒருவர் பிடிக்க, மற்றவர் கேயின் இதயத்தில் சுழற்றிச் சுழற்றிக் கத்தியால் குத்துவார். கே இறக்கும்போது அவர்களில் ஒருவர் ‘"Like a dog!" he said, it was as if the shame of it should outlive him. என்று சொல்வதாக அந்த நாவல் முடியும். ருஷ்டியும் மீண்டும் உயிர் தப்பாமல் போயிருந்தால் ‘விசாரணை’ நாவலின் நாயகன் 'கே' போல ஒரு முடிவை அடைந்திருப்பார். அதிஷ்டவசமாக அவர் தப்பிப் பிழைத்ததால் நமக்கு அந்த வலியின் கதையைச் சொல்கின்றார்.

ருஷ்டி ஓரிடத்தில் என்னிடம் கத்தியோ, துப்பாக்கியோ இல்லை, என் வசம் மொழி மட்டுமே இருக்கின்றது. என்னுடைய எதிர்ப்பைக் காட்டும் 'கத்தி' இந்த நூலாகும். மிகத் தெளிவாக, எந்தக் கதையாடலையும் என் எழுத்தால் கையாள முடியும் என்கின்றார்

*********

(Apr, 2024)

கார்காலக் குறிப்புகள் - 34

Friday, May 31, 2024

ஓவியம்:  Gva


சில வாரங்களுக்கு முன் ஈழத்தில் நாங்கள் படித்த பாடசாலையில் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தோம். இப்போது அங்கே கற்றுக் கொண்டிருக்கும், விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ‘ஊட்டச்சத்து மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை’யாக அதை அமைத்திருந்தோம்.


நாங்கள் படித்த பாடசாலை பெண்களும், ஆண்களும் கற்கின்ற ஓர் ஊர்ப் பாடசாலை. நகரத்துப் பாடசாலைகளுக்குரிய வளங்கள் எமக்குக் குறைவென்றாலும், விளையாட்டிலும், கலைகளிலும் எமக்குரிய தனித்துவங்களை உடையவர்கள். விளையாட்டில் பெண்கள் பெற்றுக்கொள்ளும் அடைவுகள் தனித்துக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.


அதேசமயம், பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பதால், பெண்களுக்குரிய உடல்சார்ந்த பிரச்சினைகள், ஊட்டச்சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும் முக்கியமானவை என்பதால், வழமையான பயிற்சிப் பட்டறையுடன் அவர்களுக்கும் தனித்து ஒரு பகுதியை இந்நிகழ்வில் செய்திருந்தோம்.

இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையாக இருப்பதை நமது பாடசாலைச் சூழலை அவதானித்த ஊரிலிருந்த நண்பர்கள் தெரிவித்தார்கள். இந்தத் துறையில் அனுபவமுள்ள இரண்டு வைத்தியர்கள் எவ்வித கட்டணமும் இன்றி பயிற்சிப் பட்டறையைச் செய்வதற்கு இசைந்தார்கள். இது முதல் முயற்சி. நாங்கள் 30 40 மாணவர்கள் வந்தாலே போதும் எனத்தான் திட்டமிருந்தோம். நிகழ்வை 3 மணித்தியாலங்களுக்குள் அமைத்திருந்தோம். மாணவர்கள் உரைகளைக் கேட்பதாக மட்டுமில்லாது அவர்களும் நிகழ்வில் ஒரு முக்கிய பாகமாக இருக்கவேண்டுமென விரும்பியிருந்தோம். மேலும் வந்திருந்த மாணவர்களுக்கு ஆரோக்கியமில்லாத Junk Food வழங்குவதில்லையென்பதில் கவனமாக இருந்தோம். உள்ளூரிலேயே தயாரித்து வழங்கப்பட்ட மோதகம், உளுந்து வடை, பால் போன்றவற்றை வழங்கும் உணவுப் பட்டியலில் சேர்த்திருந்தோம்.

நாம் எதிர்பார்த்தற்கு மேலாக 100 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் மட்டுமில்லை, பயிற்சியாளர்களும் இது உபயோகமுள்ளதாக இருந்ததைத் தெரிவித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் ஒரே வகுப்பு மாணவர்களாக இணைந்து இதற்கு முன்னும் வெவ்வேறு உதவிகளைச் செய்திருந்தோம். எனினும் இயன்றளவு எமது பாடசாலையைத் தாண்டி ( எமது பாடாசாலைக்கு உதவி செய்ய வெவ்வேறு Batch மாணவர்கள் இருப்பதால்) நாம் தேவை இருக்கும் பிற பாடசாலைகளுக்கே (பளை,மன்னார், தென்மராட்சி) என இதுவரை செய்திருந்தோம்.

இந்நிகழ்வை ஒரு பரிட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்திருந்தோம்.இவ்வாறு ஊரிலிருக்கும் பாடசாலை/ஊர்களுக்கும் உதவி செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் தனியே நிதிசார்ந்த உதவியை மட்டும் செய்யாது இவற்றைப் போல பலவற்றைச் செய்யலாம். நாங்கள் படித்து வெளியே வந்தபோது, எமக்கு நிதிமேலாண்மை குறித்தோ, உறவுகள்/உறவுச்சிக்கல்கள் குறித்தோ எவ்வித அறிவும் இருக்கவில்லை. அவற்றைப் பள்ளிக்காலங்களில் அறிந்திருந்தால் வீணாகக் காலங்களை பின்னாட்களில் விரயமாக்கி இருக்கத் தேவையில்லை என்று நினைப்பதுண்டு.


மேலும் முறைசார்ந்த கல்வியைக் கற்றலைப் போல, விளையாட்டு/கலைகள் போன்றனவும் ஒரு மனிதர்க்கு எவ்வளவு அவசியம் என்பதை படிக்கும் காலங்களிலேயே எடுத்துரைக்கலாம். அவரவர் அவரவர்க்குரிய துறைகளை பின்னாட்களில் தெரிவு செய்ய இவை ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடும்.

அன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வந்து பலர் எமக்கு பயிற்சிப் பட்டறைகள் செய்ததால்தான் எனக்கு நாடகம், மிருதங்கம், சதுரங்கம் போன்றவற்றில் மேலதிக ஆர்வம் வந்தது. இவ்வாறான பல விடயங்கள் நகரப் பாடசாலைகளில் படிப்பவர்க்கு எளிதாகக் கிடைக்கும். எங்களைப் போன்ற‌ ஊர்ப் பாடசாலைகளில் படிப்பவர்க்கு இவற்றை அறிவதற்கு/பழகுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் அதேசமயம் இவ்வாறான விடயங்களை 'இவர்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிக் கொடுக்காது, ‘நாங்கள் இதை அறிவோம், எங்களை இவ்வாறான விடயங்கள் மாற்றியது/மகிழ்ச்சியைத் தருகின்றது, முடிந்தால் நீங்கள் அறியுங்கள்/கற்றுக் கொள்ளுங்கள்’ என்கின்ற மனோநிலையில் இவற்றைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அவ்வாறே புலம்பெயர்ந்து இருப்பவர்களும் ஊரில் ஏதேனும் நற்காரியங்கள் செய்யப்போகின்றார்கள் எனில் ‘நாங்கள் கொடுக்கின்றோம்/நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்' என்கின்ற மனோநிலையை முற்றாகத் தவிர்த்து, 'நாமனைவரும் பகிர்ந்து கொள்ளுவோம், வாருங்கள்’ என அழைப்பதாக இருக்கவேண்டும்.

*************


(Apr 29, 2024)