கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 44

Monday, August 19, 2024

 கோடை காலம் வந்தால் பல்வேறு வகையான பழங்களையும், பூக்களையும் பண்ணைகளுக்குச் சென்று பறித்துக் கொள்ள முடியும். பெர்ரிகளுடன் தொடங்கும் பருவம், இறுதியில் அப்பிள்கள் பறிக்கும்வரை உற்சாகமாக‌ நீளும். ஹலோவீனோடு பூசணி அறுவடை முடிய‌ தோட்டங்கள் இலையுதிர்கால உறங்குநிலைக்குச் செல்ல ஆரம்பிக்கும்.

லாவண்டர் பண்ணைகளுக்குப் போவதென்பது என் நெடுங்கால விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. நான் வசிக்கும் நகரில் இருந்து எங்கேயாவது நீண்ட பயணம் செல்லும்போது அது நினைவுக்கு வரும். ஆனால் அப்போதெல்லாம் தேடிப் போகும்போது லாவண்டர் பண்ணைகள் காணாமற் போய்விடும். லாவண்டர்களிலும் பல வகை இருந்தாலும் இங்கே 'இங்கிலிஷ்' லாவண்டர்களும், 'பிரெஞ்' லாவண்டர்களும் பிரபல்யமானவை. இவற்றில் ஒன்று கோடையில் தொடக்கத்திலும், மற்றது நடுக்கோடையிலும் பூக்கத் தொடங்கி நறுமணம் பரப்புவை. 'இங்கிலிஷ்' லாவணடர்கள் ரோஸ்மேரியின் மணத்துக்கு அண்மையாகவும், பிரெஞ் லாவண்டர்கள் பைன் மரங்களின் வாசத்துக்கு கிட்டவாகவும் இருப்பவை.

இந்தக் கோடையில் நீண்ட பயணமொன்று போய்த் திரும்பி வந்துகொண்டிருக்கையில், ஒரு லாவண்டர் பண்ணைக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அன்று நல்ல காலமோ என்னவோ அந்தப் பண்ணையில் ஒரு சிறு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். இசைஞர்கள் பாடல்களை இசைக்க‌, கேலிச்சித்திர ஓவியர்கள் காட்டூன் படங்களை வரைந்து கொண்டிருந்தார்கள், இன்னொருபுறத்தில் பாடசாலை மாணவிகள் ஜிம்னாஸ்டிக் செய்து வந்தவர்ளுக்கு உற்சாகம் கொடுத்தப்டியிருந்தார்கள். அத்தோடு லாவண்டரில் செய்யப்பட்ட பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

நான் லாவண்டர் கலந்து செய்த லெமனேட்டை ஒரு மரத்தின் கீழ் உறிஞ்சிக்கொண்டு பாடகரொருவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான இணை அருகில் வந்தமர்ந்தார்கள். இருவரும் அவர்களின் 70களின் பிற்பகுதியில் இருந்தார்கள். ஆண் நடப்பதற்கு உதவி செய்யும் உபகரணத்தோடு வந்திருந்தார். அவர்கள் தமது கடந்தகாலங்களை சுவாரசியமாகச் சொல்லத் தொடங்கினார்கள்.

ஒரு வாகனத்தை (RV) எடுத்து கனடா/அமெரிக்க நிலப்பரப்பு எங்கும் வருடக் கணக்கில் திரிந்திருக்கின்றார்கள். இந்தப் பெண்மணி தனது இருபதுகளில் (1970களில்) ஸ்பெயின், மொராக்கோ போன்ற நாடுகளில் பெண் தோழிகளுடன் பயணித்தபோது, ஓரிடத்தில் கடத்தப்பட்டு விற்கப்படும் நிலைக்குப் போன கதையை விபரித்தார். அவரின் துணைவரோ மிகுந்த நகைச்சுவையானவர். இவர் கதைக்கும் ஒவ்வொரு விடயத்துக்கும் நகைச்சுவையாக ஏதாவது சொல்லியபடி இருந்தார். இந்தக் கடத்தல் கதையைப் பெண்மணி சொன்னபோது, 'இவள் இளமையில் அப்படியொரு அழகி, ஆனால் அழகுக்கு ஏற்ற அறிவு இல்லை, அதனால்தான் மாட்டுப்பட்டு இருக்கின்றாள்' என்று சொல்லிவிட்டு 'உம்மென்று' இருந்தார். அவரின் மனைவிக்கோ கதை சொல்லும் சுவாரசியத்தில் இந்த எள்ளல் முதலில் விளங்கவில்லை அல்லது இப்படி எத்தனை கேலிகளை அவர் தன் வாழ்வில் சந்தித்திருப்பாரோ தெரியாது.

இறுதியில் எனக்கும் பயணிப்பதில் பேரார்வம் இருக்கின்றதெனச் சொன்னபோது, அந்தப் பெண்மணி இளமையாக இருக்கும்போது தொலைதூரங்களுக்கும், வயதேறும்போது அருகிலுள்ள இடங்களுக்கும் சென்று பார்க்கும் முறைமையைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் எனச் சொன்னார். அவரின் கணவரோ, 'வாழ்க்கையில் எந்தப் பொழுதிலும் நகைச்சுவையை மட்டும் விட்டுவிடக்கூடாது. அதுவே வாழ்க்கையிற்கு மிக முக்கியம் என்பதே தான் கண்டறிந்த உண்மை' என்றார். நம்மை வாழ்வு நெருக்கி நொறுக்கும்போதெல்லாம் பெருமூச்சுவிட்டு தப்பிவரும்போது நகைச்சுவை உதவுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன். சொன்னவர் கூட, ஓரடி எந்த உதவியுமில்லாமல் நடக்க மிகக் கஷ்டப்படுக் கொண்டிருந்தார், ஆனால் பேசும் ஒவ்வொரு பொழுதும் அவருக்குள் நகைச்சுவை நதிபோல ஓடிக்கொண்டே இருந்தது.

000000000

நானும் நண்பரொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவரின் சுவாரசியமான எழுத்தைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருப்போம். வாழ்க்கை எப்படி இருந்தாலும் இப்படித்தான் இறுதியில் ஆகும் என்கின்ற ஒரு துயரம் அந்த எழுத்தில் உள்ளோடிக் கொண்டிருக்கும். ஒருவகையில் தொடர்ந்து அப்படியான எழுத்துக்களை வாசிக்க வாசிக்க, துயரத்தில் முடியும் வாழ்வின் அபத்தம் நம்மிலும் கவிழத் தொடங்கும். வாழ்க்கையில் துயரங்களைத் தவிர்க்க முடியாது, ஆனால் அதனால் ஏற்படும் வலிகளைக் குறைக்க முடியும் என்கின்ற புத்தரைப் போற்றுபவன் நான்.
 

அவ்வாறு துயரத்தில் மூழ்கடிக்கும் எழுத்துக்களையோ/ திரைப்படங்களையோ இப்போது இயன்றளவுக்குத் தவிர்க்க முயல்வேன். நான் பேசிக் கொள்ளும் நண்பரோ அவ்வளவு துயரங்களுக்குள் போய்க் கொண்டிருப்பார். ஆனால் அவருக்குள் உள்ளூறும் நகைச்சுவையும், வாழ்வை இரசிக்கும் பார்வையும் எனக்கு நான் லாவண்டர் பண்ணையில் சந்தித்த முதியவரை நினைவுபடுத்தும்.

அதனால்தான் எனக்கு மிலான் குந்தேராவின் நாவலான‌ 'இருத்தலின் தாங்கமுடியாத மென்மை' என்ற தலைப்பின் மீது அவ்வளவு வியப்பிருக்கின்றது. துயரம் மட்டுமில்லை, சிலவேளைகளில் மகிழ்ச்சி/வியப்பு கூட அவ்வளவு மிருதுவாக இருக்கும்போது நம்மால் தாங்க முடியாது போய்விடுகின்றது. ஒரு மழலையின் சிரிப்பு, காதலியின் முத்தம், நண்பனின் தழுவல் எவ்வளவு மென்மையாக இருக்கின்றதோ அந்தளவுக்கு அது தாங்கமுடியாத 'கனமாக' நம்மில் தங்கிவிடுகின்றது அல்லவா. அது மென்மைதான், ஆனால் அதற்கு அந்தளவு ஒரு 'பாரம்' வந்து நம்மை நிலைகுலையச் செய்து விடுகின்றது.

பிரான்ஸ் காஃப்கா எழுத்துக்களில் அவ்வளவு இறுக்கமானவராவும், நடக்காதவற்றை அதிகம் சிந்திக்கும் ஒருவராகவும் நமக்கு காட்சியளிக்கக்கூடியவர். ஆனால் அவர் காதலிகளுக்கு எழுதிய கடிதங்களில் எவ்வளவு 'ஜோவியலான' மனிதராக இருக்கின்றார் என்பதை நாம் பார்க்கமுடியும். திருமணம் பக்கம் போகாதவராக, தனது காதலியை இரண்டுமுறை திருமணஞ்செய்யப் போய் கைவிட்டு வந்தவராக அவர் இருந்தாலும், அவர் குழந்தைகளின் மீது அவ்வளவு பிரியம் வைத்திருப்பவராக அவரின் காதலிகளே தமது பதிவுகளில் எழுதியிருக்கின்றனர். அப்படியெனில் நாம் எந்த காஃப்காவை நம்மோடு எடுத்துச் செல்ல முடியும். அவ்வளவு விசித்திரமாகவும், சிக்கலாகவும் இருப்பதால்தான் காப்ஃகா தீர்ந்து போகமுடியாதவராக இன்னமும் -அவர் மறைந்த ஒரு நூறாண்டுக்குப் பிறகும்- நம்மிடையே உலாவிக் கொண்டிருக்கின்றாரோ தெரியாது.

அவ்வாறுதானே நகுலனும் நம்மிடையே இருக்கின்றார். அவருடைய காலத்தில் அவரைப் போல தமிழ்ச் சூழலில் எத்தனை பேர் பிறந்து காலமாகிப் போயிருப்பார்கள். ஆனால் நகுலனைப் போன்ற உள்ளொடுங்கிய‌, எழுத்தில் தன்னிலைகளின் உரையாடல்களை மட்டும் முன்வைத்தவரை இப்போதும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம் அல்லவா? நகுலன் காலத்தைய மற்றவர்கள் காலத்தில் தூசிகளாகப் போனபோது நகுலன் தனது பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டல்லவா இருக்கின்றார். 

 

ஒரு கட்டு வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும், புகையிலையும், வாய் கழுவுவதற்கு நீரும், ஒரு புட்டி பிராந்தியும், பிளாஸ்க் நிறைய ஜஸ்கட்டிகளும், தீப்பெட்டியும் சிகரெட்டும், பேசுவதற்கு நண்பா நீயிருந்தால், இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டென்றவர், தன்னைத்தானே அறிந்திருப்பார் அல்லவா? அப்படியொரு ஞானம் பெற்றிருந்தால், நகுலன் எவ்வளவு நகைச்சுவையான ஒருவராக, எப்படியொரு சிரித்த மனிதராக தனிப்பட்ட‌ வாழ்வில் இருந்திருப்பார்.

கோடை காலத்தில் லாவண்டர்களும், கார்னேஷன்களும், சூரியகாந்திகளும் பூத்துக் குலுங்கிச் சிரிக்கின்றன. இப்படி பண்ணையில் விரிந்த பரப்பில் மலராது நம் வீட்டில் மலரும் செவ்வரத்தைகளும், கனகாம்பரங்களும் நமக்காய்க் காத்திருக்கின்றன‌. பல்வேறு வர்ணங்களில் மனிதர்களும், மலர்களும் ஒவ்வொரு பருவங்களிலும் நம்மைத் தேடி வருகின்றன/ர். அப்போது மனதாலும், முகத்தாலும் நாம் சிரித்துக் கொண்டிருக்கின்றோமெனில், நாம் அதிசயங்களில் உலகில் நீந்தத் தொடங்குகின்றோம். புத்தர் அடைந்த ஞானத்தின் ஒரு மிடறை அந்தக் கணத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தமாகும்.

*********************

 (Aug 2024)

0 comments: