கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆவிகள் பேசுகின்றன - ஓர் எதிர்வினை

Wednesday, August 21, 2024

 "ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

‍-
ஜெயமோகன்

மாம். ஜெயமோகன் நாங்கள் எதுவும் எழுதவில்லை. எங்களின் ஆவிகள்தான் இதையெல்லாம் எழுதியிருக்கின்றன. 2016 இல் வெளிவந்த என்னுடைய 'பேயாய் உழலும் சிறுமனமே' தொகுப்பில் திரை என்ற பகுதி முழுவதுமே சிங்கள நெறியாளர்களின் திரைப்படங்களைப் பற்றியே எழுதியிருப்பேன். பிரசன்ன விதானகேயின்' நீயும் நீயின்றியும்', அஷோக ஹந்தகமவின் 'இனி அவன்', விமுக்தி ஜெயசுந்தரவின் 'இரண்டு உலகங்களுக்கிடையில்' உட்பட பல சமகால சிங்களப் படைப்பாளிகளின் திரைப்படங்களே அதில் இருக்கின்றன‌. அதுமட்டுமில்லாது அண்மையில் வந்த பிரசன்னாவின் 'காடீ' திரைப்படத்தை பயணத்திடையே, அதைத் தவறவிடக்கூடாதென்று கொழும்பில் திரையரஙகில் சென்று பார்த்து அது குறித்தும் விரிவாக ஜெமோ இருக்கும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் 'அம்ருதா'வில் எழுதியிருக்கின்றேன். மேலும் கெளதம சித்தார்த்தன், பிரசன்னாவின் 'நீயும் நீயின்றியும்' மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப எடுக்கப்பட்ட திரைப்படம் என்று ஒரு கட்டுரை எழுதியபோது, சித்தார்த்தன் எனது நண்பர் என்கின்றபோதும் ஒரு கடும் எதிர்வினையை அந்தக் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்தெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன் எழுதியிருக்கின்றேன். எனவே இந்த 'ஆவிகள்' எதையும் எழுதவில்லை என்று ஜெமோ சாட்டுச் சொல்லியெல்லாம் தப்பவும் முடியாது.

ரொறொண்டோ சர்வதேச திரைப்பட விழாக்களில் (TIFF ) விமுக்தி, அஷோக ஹந்தகமவின் திரைப்படங்களுக்காகவே சென்று பார்த்துமிருக்கின்றேன். ஏன் எனது முதல் நூலான 'நாடற்றவனின் குறிப்புகள்' வெளியீட்டின்போதும், தர்மசிறி பண்டாரநாயக்காவின் ஒரு படைப்பை திரையிட்டுமிருக்கின்றேன். மேலும், பிரசன்னவின் ஒரு தீவிர இரசிகனாக என்னைப் போன்றவர்களை இப்படி அவமானப்படுத்தி எழுதுவதை என் 'ஆவி' கூட மன்னிக்காது.

எவ்வளவு சான்றுகள்/உசாத்துணைகள் கொடுத்து பக்கம் பக்கமாக எழுதினாலும் ஜெயமோகன் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை அவருடனான கடந்தகால‌ உரையாடல்களில் நான் கற்றுக்கொண்ட பாடம். எனக்கு எல்லாமே தெரியும் என்கின்ற ஒருவரோடு உரையாட‌லின்போது எந்தக் கதவைத்தான் அங்கே சென்று உங்களால் திறந்துவிட முடியும். இப்போது இதை எழுதுவது கூட‌ ஜெமோ சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு வழி தவறாது நடக்கும் அவர் மேய்த்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு அல்ல. ஜெமோவை வாசித்துக்கொண்டு, மற்றவர்கள் சொல்வதையும் செவிமடுக்கக் கூடிய திறந்த உள்ளங்களுடன் இருப்பவர்க்காகத்தான் இதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஜெமோவை நன்கறிந்தவன் என்பதால், அவர் இப்படி எழுதுவதால் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நேர்நிலைகளில் மூழ்கிக் கிடப்பதாகச் சொல்லும் ஒருவரால் எப்படித் தொடர்ந்து எதிர்மனநிலைகளை உற்பத்தி செய்ய முடிகின்றது என்கின்ற ஒரேயொரு ஆச்சரியத்தைத் தவிர வேறொன்றும் அவர் குறித்து இல்லை.

ஆனால் ஜெமோ உடனே தமக்கு உவப்பான கருத்தைச் சொன்னவுடன் அவருக்குக் கடிதங்களும்/பதிவுகளும் எழுதும் நம்மவர்கள், இவ்வாறான பல உண்மைகள் தெரிந்தபின்னும், அவர் அபத்தமாய் எழுதுவதைச் சகித்துக்கொண்டு ஒரு மெளனம் சாதிப்பார்களே, அந்த 'அழகியல்' மனோநிலை எனக்கு வருகின்றபோது, நானும் ஞானமடைந்து விடுவேன். அந்த ஞானத்தை அடைவதற்கான பயணந்தான் இப்படியெல்லாம் எழுதிப் பார்க்க விழைவதென்றும் எடுத்துக் கொள்ளலாம்.

********

 (1) ஜெயமோகனின் பதிவு: https://www.jeyamohan.in/201521/ 

 

 (2) எனது முகநூல் எதிர்வினையும், பின்னூட்டங்களும்: https://www.facebook.com/elanko.dse/posts/pfbid02THf3LHAPn3muDzfmziQYCJtchxPd9SiJx9D9FVkQQvc6BCVbwEHJLWSFuSGWmP7Dl

 

(3) மேலேயுள்ள எனது பதிவு எழுதப்பட்டபின் ஜெமோவின் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட கடிதத்திற்கு ஜெமோவின் பதில்: https://www.jeyamohan.in/201688/


(Jun 11, 2024)

0 comments: