கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 45

Tuesday, August 20, 2024

 னிதர்களுக்கு எப்போது கடந்தகால நினைவுகள்/உறவுகள்/பிறழ்வுகள் பெருக்கெடுத்து, வாழ்வு நிலைகுலையும் என்பது தெரியாது. பெரும்பாலும் 'நல்லாய் இருந்த மனிதனுக்கு இப்படி ஆயிற்றே' என்று பச்சாபப்பட்டுக் கொண்டு நாம் அவ்வாறான பொழுதுகளில் கடந்து போயிருப்போம். ஆனால் இந்த‌ நிலை தடுமாறும் காலத்தை அனுபவித்தவர்களுக்கே அதன் வலியும், வேதனையும், மீண்டெழுதலின் இரகசியமும் தெரிந்திருக்கும்.

அவ்வாறான ஒரு கடலோர மனிதனை ஜோ.டி.குருஸின் 'யாத்திரை'யில் நாம் பார்க்கின்றோம். புனைவில் பெயரிடப்படாத ஒரு மனிதனின் வாழ்வை அவனின் சிறுவயதுகளில் இருந்து இதில் பின்தொடர்கின்றோம்.. கடலோரக் கிராமம் ஒன்றில் பிறந்து, மதத்தில் கத்தோலிக்கத்தவனாக‌ இருந்தாலும், அந்த சிறுவன் மூதன்னைகளின் கதைகள் சொல்லப்பட்டு வளர்க்கப்படுகின்றான். பின்னர் ஒரு பாதிரியாராக மாற விரும்பும் அவனின் ஆசையை தேவாலயங்களில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும், பாலியல் சுரண்டல்களும் அங்கிருந்து அவனை வெளியே ஓடச் செய்கின்றது. பாதிரிகளையும், புனிதர்களையும் நம்பாமல் அந்தச் சிறுவன் இயேசுவோடும், கர்த்தரோடும் நேரடியாகப் பேசத் தொடங்குகின்றான்.

கல்வி கற்று கடல் வணிகம் சார்ந்த உயர்பதவிகளை அடைந்தாலும் கடலோர மக்கள் தமது பெறுமதியை உணராது வீணே தேவாலயத்துக்கும், குடிக்கும் அடிமையாகிக் கிடக்கின்றார்களே என்று மனம் வருந்தும் இளைஞனாகிவிட்ட அந்தச் சிறுவன் அந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களை உயர்த்தும் வழிகளைத் தேடச் செல்கின்றான்.

இந்தக் காலத்திலேயே அவனது திருமணம் நடந்து, அது சிக்கலாகின்றது. வழக்கு மேல் வழக்கு, பொலிஸ் கைதுசெய்யத் தேடுதல் போன்றவற்றை -ஒரு தசாப்தகாலம் வரை- அனுபவித்துவிட்டு வந்து, இப்போது இன்னொரு திருமணம் செய்தபின் இரண்டு பிள்ளைகளும் அவனுக்குப் பிறந்துவிட்டனர். ஏதேனும் ஒருவகையில் வலைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யவேண்டுமென்று, அதுவரை எழுத்தின் பக்கம் வராத இந்த‌மனிதனை ஒரு பதிப்பாளர் வழிகாட்ட நாவலொன்றும் வெளிவந்துவிடுகின்றது. கடலோர மக்களின் வாழ்வைப் பதிவு செய்த முக்கிய நாவலென்று பாராட்டுப் பெற்றாலும், அவன் சார்ந்த ஊர்க்காரர்களும் தாங்கள் இதனால் அவமதிக்கப்பட்டுவிட்டோம் என்று அந்த ஊரிலிருந்து அவனைத் தள்ளிவைக்கின்றனர். எப்போது ஊருக்குத் தனித்துப் போனாலும், தனக்கு வெட்டு விழுந்துவிடும் என்ற பயத்தோடே அவனது வாழ்க்கை நகரத் தொடங்கின்றது.

என்றாலும் இந்த எழுத்தாளன் கடலோடும், காற்றோடும், வேப்பமரங்களோடும் பேசுவதைக் கைவிடுவதில்லை. அது அவனது அகத்தேடலுடன் சார்ந்தும், அவனது கடலோர முதாதையர்கள் பற்றியதுமாக இருக்கின்றது. கடல்வணிகம் சார்ந்த வேலையில் அவன் உயர்நிலையில் இருந்தாலும், தனக்குச் சரி என்பதில் தீர்மானமாக இருப்பதால் அந்த நிறுவனத்திலிருந்தும் விலக வேண்டியதாக இருக்கின்றது.

 

ழுத்தாளனின் அகத்தேடல் உக்கிரமாகின்றபோது, அவனைச் சுற்றியிருப்பவர் எவராலும் அவனைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றது. சிலர் அவனைக் குடியில் அமிழச் சொல்கின்றனர்; வேறு சிலர் ஏதாவது உளவியல் சிகிச்சை பெறச் சொல்கின்றனர். அவனின் மனைவியும், ஒரு குடும்பத்துப் பெண்ணாக, சமூகத்துக்காக உழைத்தல், எழுதுதல் என்பவற்றில் ஈடுபடாமல், அவன் லெளதீக வாழ்வில் மட்டும் கவனஞ்செலுத்த வேண்டுமென விரும்புகின்றாள்..அவனுக்குள் தீவிரமாயிருக்கும் இந்தத் தேடலைப் பிள்ளைகள் மட்டும் புரிந்துகொள்கின்றனர். பிள்ளைகள் 'அப்பா நீங்கள் எங்கேயாவது உங்களுக்குப் பிடித்தமாதிரி பயணியுங்கள்' எனச் சொல்கின்றனர்.

அவன் இனி எதுவும் எழுதுவதில்லை என்று முடிவுசெய்து, இந்தியாவின் தென்கிழக்கு முனையில் இருக்கும் ஒரு தீவுக்கு தனிமை வாழ்க்கைக்கு எல்லாவற்றையும் விட்டுச் செல்கின்றான். கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு மேலாக அலைகளின் ஓசையையும், பறவைகளின் குரல்களையும் கேட்டபடி தன் அகத்தின் பாடலைக் கண்டடைகின்றான். எதுவாக இருக்க விரும்புகின்றான் என்பதில் அவனுக்கு குழப்பங்கள் இருக்கின்றது. ஒரு நல்ல குடும்பத் தலைவனாகவோ, சமூகத்துக்குப் பணியாற்றுகின்றவனாகவோ, எழுத்தாளானாகவோ அல்லது என்னதைத்தான் இந்த மனம் விரும்புகின்றது என்ற கேள்விகளுக்கான பதில்களை அவன் இந்தத் தனிமை வாசத்தில் கண்டடைகின்றான்.

'குடும்பம் ஒரு சுகமான சிலுவை. சில மணித்துளிகளில் கடந்துபோகும் குடும்பச் சிக்கல்கள், உறவுகளின் துன்பம் இவற்றை நினைத்து வாழ்வை வீணாக்காதே.எல்லா வேதனைகளுக்கும் விடியல் உண்டு. இந்தத் தீவுக்கு வரும்போது எழுதக்கூடாது என்ற முடிவோடுதானே வந்தாய். உன்னால் முடிந்ததா? திரும்பவும் சொல்கின்றேன் உனக்கு முடியாதவற்றை உன்னால் கட்டுப்படுத்தவே முடியாது. அமைதிப்படு, உன் ஆன்மாவின் குரலைக் கேள்' என்று தனது அகத்தோடு எழுத்தாளன் உரையாடலை நடத்தி பூரண அமைதியை அடைவதோடு இந்தப் புனைவு முடிவு பெறுகின்றது.

ஜோ.டி.குருஸ் இதைப் புனைவாக எழுதினாலும், அவரின் கடந்தகாலம் எதுவும் அறியாத என்னைப் போன்றவர்களே, இது அவரின் தன்வரலாற்று சார்ந்த நாவலென எளிதாகச் சொல்லிவிடலாம். குருஸின் 'ஆழிசூழ் உலகு', 'கொற்கை', 'அஸ்தினாபுரம்' போன்றவற்றை வாசித்தவர்களுக்கு/அதன் பின்னணி அறிந்தவர்க்கு 'யாத்திரை'யை எளிதாக விளங்கிக் கொள்ளமுடியும். இந்த நாவலில் வரும் சிறுவன்/இளைஞன்/மத்தியவயதுக்காரன் போல பலருக்கு மதம் சார்ந்த, இனம் சார்ந்த அடையாளப் பிரச்சினைகள் வருவது இயல்பானதும் கூட. 


நா
ம் எதுவாக இருக்கின்றோம் என்று ஒரு கிளையைப் பற்றிக் கொள்ளும்போது
, அந்த 'அடையாளம்' நமது வேரில்லை என்கின்றபோது நமது அகம் சரியத் தொடங்குகின்றது. ஆகவே அடையாளங்களை உதிர்த்து உதிர்த்து நம்மைப் புதிதாக மாற்றியமைத்தபடி இருக்க வேண்டியிருக்கின்றது.. ஒருகாலத்தில் கடலோரக்கிராமத்தில் சிறந்த வீரனாக இருந்து, பின்னர் ஜெயிலுக்குள் அடைபட்டு, சிறைமீண்டபின் அமைதி வழியிலே நமது உரிமைகைப் பெறவேண்டும் என்று போராடுகின்ற ஒரு கடலோரத் தலைவன் கொல்லப்படுகின்றான். அவ்வாறு கொல்லப்பட்டவனின் மகனைத் தற்செயலாக ஒரு வைத்தியசாலையில் இந்த நாவலில் வரும் கதைசொல்லி சந்திக்கின்றார். அவன் தனது தகப்பனின் கதையைச் சொல்கின்றேன், நீங்கள் அதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் என்கின்றபோதே இந்த எழுத்தாளனின் ஒரு நாவல் எழுதப்படுகின்றது. 'நமது பிள்ளைகள் இதைப் படிக்கட்டும். பெருமையை எழுதி எந்தப் பிரயோசனமும் இல்ல. வாழ்க்கையை எழுதுங்க. அடுத்த சமூக மக்களும் நம்மளப் பற்றித் தெரிஞ்சி கொள்ளட்டும்' என்று அந்த இளைஞன் சொல்கின்றான்.

இந்த நாவலின் மூலம் ஜோடி குருஸை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. இடையில் அவருக்குள் நடந்த அரசியல் தளம்பல்களைக் கூட ஒரு எழுத்தாளனின் அகமனதோடான போராட்டம் என்றவகையில் குருஸைத் தோளணைக்க முடிகின்றது. நாம் எங்கையோ அந்தரத்தில் பறந்து கொண்டு, நாம் எதுவாக மாற‌ ஆசைப்படுகின்றோம். அவ்வாறாக ஆகுதல் எளிதல்ல. நமது கனவுகள் நமக்கு மட்டும் உரியவையல்ல. அந்தக் கனவுகள் குடும்பம், சமூகம், இன்னபிற காரணிகளால் கலைக்கப்படும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

அதன் நிமித்தம் நம்மை எதிர்நிலையில் வைத்துப் பார்த்து மறுகாமல், நம்மால் இயன்றதை நிம்மதியாகச் செய்ய முடியுமெனில் நாம் பாக்கியவான்கள் ஆவோம். இந்தப் புனைவில் கதைசொல்லி அவரது 'ஆன்மாவின் குரலோடு' ஒரு மானசீக உரையாடலைச் செய்யும்போது, 'நீ கடந்து வந்திருக்கும் காலம், எங்களைப் பொறுத்தவரை ஒரு நொடிப் பொழுதுக்குச் சமம்' எனச் சொல்கின்றது. ஆம் ஆன்மாக்களுக்கு மட்டும் அல்ல, இந்தப் பூமிக்கும் நமது இந்த வாழ்வென்பது நொடிப்பொழுது போன்றதுதான்.

சிறுவனாக இருப்பதிலிருந்து கதைசொல்லியோடு உரையாடும் குமரியும், நாச்சியாரும், சந்தனமாரியும் ஒரு தெய்வீகத் தன்மையை அடைந்துவிட்டாலும், அவர்களும் ஒருகாலத்தில் மானிடர்களாக வாழ்ந்திருக்கவே சாத்தியம் அதிகமுண்டு. 'தச்சன் மகனாகிய யேசு சொன்னது, உன் சிலுவையைச் சுமந்து கொண்டு நீ முன்னே செல்' என்று கதைசொல்லி தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத்தான் புத்தரும் 'உனக்கு நீயே ஒளி' என்கின்றார். சிலுவையோ, ஒளியோ எதுவென்றாலும் அது நமக்குரித்தானதாக இருக்கவேண்டும். இரவல் சிலுவையோ அல்லது ஒளியோ நம்மை ஒரு காலத்திலும் வழிநடத்தபோவதில்லை.

*****************

(Aug 2024) 

(புகைப்படங்கள் : நன்றி இணையம்)

 

0 comments: