நண்பரொருவரின் தந்தையாருக்கு விருப்பம் என்பதால் லியோ டால்ஸ்டாயின் 'போரும்
வாழ்வும்', பதினான்கு தொகுதிகளாக இருந்த புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தேன். இதை
சீர் வாசகர் வட்டம் கடந்த வருடம் வெளியிட்டிருந்தது என நினைக்கின்றேன்.
இலங்கையிலிருந்த ஒரு புத்தக விற்பனை நண்பரிடம் நல்லவேளையாக ஒரு தொகுதி 'போரும்
வாழ்வும்' புத்தகங்கள் கைவசம் இருந்தன.
டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா' அவ்வளவு பெரும் நூலாக முதன்முதலாக கண்ட ஞாபகம் இப்போதும் ஞாபகத்திலிருக்கின்றது. நாங்கள் அப்போது போரின் நிமித்தம் யாழ்ப்பாணத்துக்குள் சங்கானைக்கு இடம்பெயர்ந்திருந்தோம். அப்போது அப்பாவின் நண்பரொருவர் (அவர் ஒரு கிராம சேவகர் என்று நினைவு) வீட்டுக்குச் சென்றிருந்தோம். அன்று எனக்கு 12/13 வயதுகள் இருக்கும். என் வயதொத்தவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு அலுமாரியின் லாச்சியைத் திறந்தபோது 'அன்னா கரீனா' முகப்பில் சிரித்துக் கொண்டிருந்தார்.
இத்தனைக்கும் நான் அந்த வயதுக்குள் எங்கள் வீட்டில் இருந்த கடல்புறா (1,2,3), யவனராணி (1,2) போன்ற பெரிய நூல்களை வாசித்து முடித்திருந்தேன். இருந்தபோது. அன்னா கரீனா அதன் பெயரில், முகப்பட்டையால் என்னை நீண்டகாலத்துக்கு விடாது துரத்தியபடி வந்தார். சிலவேளைகளில் அடையமுடியாத விடயங்களில் ஈர்ப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது போல, வாசித்துவிடாத புத்தங்களின் மீது மோகம் கூடிக்கொண்டே போகும் போலும்.
மற்றவர்களின் அலுமாரியைத் தார்செயலாகத் திறந்து பார்க்கும்போது புத்தகங்கள் தெரிந்தால் பரவாயில்லை. ஆனால் வேறேனும் இரகசியமான விடயங்கள் வந்துவிட்டால் கதி என்னவாவது? இப்படித்தான் நான் படிக்கும் காலத்தில் நான் காதலித்துக் கொண்டிருந்த ஒரு பெண் அவரின் தந்தையின் அறை லாச்சியைத் திறந்து பார்த்திருக்கின்றார். அங்கே condom பாக்கெட்டைக் கண்டுபிடித்து, தன் தந்தைக்கு யாரோ எவரோடு affair இருக்கிறது, அது யாரென்று கண்டுபிடித்துதர வேண்டும் என்று என்னை நெருக்கியபடி இருந்தார்.
அதெல்லாம் குடும்பத்துக்குள் ஒரு பாதுகாப்புக்குத்தான் என்று நான் எவ்வளவு சொன்னாலும் அவர் கேட்கவில்லை. எனக்கு அப்போது இருந்த துப்பறியும் அறிவு என்பது சுஜாதாவின் கணேஷ்-வசந்த் மற்றும் தேவிபாலாவின் பரத் -சுசீலாவை வாசித்த கைம்மண்ணளவுதான். அதை வைத்து எப்படி நான் துப்பறிய முடியும். அத்தோடு அந்தக் காதலியின் தந்தையார் வேலையின் நிமித்தம் ஒவ்வொரு நகர் நகராகச் சுற்றிக் கொண்டிருந்தவர்.
துப்பறியும் கதைகளை எழுதிய சுஜாதாவையோ, தேவிபாலாவையோ வாசிக்கும்போது நான் எங்கே மர்மம் துலக்கும் பகுதிகளை கருத்தூன்றி வாசித்தேன். நான் ஆழ வாசித்தது வசந்தும், பரத்தும் பிற பெண்கள் மீது செய்யும் காதல் சில்மிஷங்களை மட்டுமே என்று நான் எப்படி என் காதலிக்கு விளங்கப்படுத்த முடியும்.
இவற்றுக்குப் பிறகு அலுமாரிகளுக்குள் தங்கப்புதையல் இருந்தால் கூட எவருடைய லாச்சியையும் திறந்துபார்க்கக்கூடாது என்ற பேருண்மையை அறிந்துகொண்டேன்.
*
இன்று மாலை நண்பரொருவரைச் சந்தித்தபோது, ஏதோ கதையில் ரஷ்ய இலக்கியங்கள் தனக்கு pessimistic ஆக இருக்கின்றதென்றார். அவருடைய கருத்துக்குள் குறுக்கிடாமல் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ரஷ்ய பேரிலக்கியங்களை விட போரிலக்கியங்களையே விரும்பி வாசித்திருக்கின்றேன். 'வீரம் விளைந்தது', 'இவான் டொனிசோவ்வின் வாழ்வில் ஒருநாள்' என்று ரஷ்யப் புரட்சியைப் பின்னணியாக எழுதியவையே என்னைக் கவர்ந்தவை, எனக்குள் உரையாடல்களை உருவாக்குபவை. அதற்காய் ரஷ்யாவின் இலக்கிய 'மாஸ்டர்களை' மதிக்கவில்லை என்றோ, கீழிறக்கின்றேனோ என்று அர்த்தமல்ல. மாஸ்டர்கள் மீது பெருவிருப்பும், அதைவேளைஅவர்களைத் தாண்டிச் செல்லவேண்டும் என்கின்ற விழைவும் உந்தித்தள்ள, மார்க்வெஸ் போன்ற மாஸ்டர்களை எள்ளல் செய்து விலத்தியபடி ரொபர்தோ பொலானோ, அலெஜாண்டோ ஸாம்பிரா போன்ற சமகாலத்தைய இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் எழுந்தார்களில்லையா? அதுபோலத்தான் ரஷ்ய மாஸ்டர்களைக் காலத்தின் முன் நழுவவிட்டு, என்னை சமகாலத்தவர்களின் எழுத்துக்கள் அதிகம் வசீகரிக்கின்றனவோ தெரியவில்லை. சிலவேளைகளில் தமிழில் ரஷ்ய மாஸ்டர்களைப் போதும் போதுமென்ற அளவுக்கு பிழிந்து எடுத்துவிட்டதால் வந்த ஒருவகைச் சலிப்புத்தான் இதற்கு மறைமுகமான காரணமாக இருக்குமோ தெரியாது.
ஐரோப்பிய மூலமொழியில் இருந்து (ஆங்கிலம் அல்ல) நேரடியாக ஒரு படைப்பை தமிழாக்கிய நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு படைப்பின் மூலமொழியோடு பரிட்சயமாகும்போது அந்தப் படைப்பு எவ்வளவு வாசிப்புச் சாத்தியங்களைத் தருகின்றதென்று வியந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மொழியாக்கும்போது பெற்ற சுவாரசியமான அனுபவங்கள், ஒரு சொல்லின் மூலத்தைத் தேடிச் செல்லும்போது மொழிக்குள் நடக்கும் முகையவிழ்ப்புகள் என பலதைப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் படைப்பாளி மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தால் இத்தனை சிரத்தையாக இந்த தமிழாக்கத்துக்காய் உழைத்திருப்பார் என்று எனக்குள் எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.
மொழியால்தான் சிந்திக்கின்றோம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இந்த நண்பர் எந்த மொழியால் சிந்திப்பார் என்று யோசித்தேன். ஏனெனில் அவர் தமிழை அவரது பதின்மங்களில்தான் முறையாகக் கற்றுக் கொண்டார். சிறுவயதில் கற்றுக்கொண்ட மூலமொழிதான் சிந்திப்பின் முதன்மை மொழியாக இருப்பின், அவர் சிந்திப்பில் எந்த மொழி முதல் மொழியாக வந்து நிற்குமென நினைத்துப் பார்ப்பது எனக்குச் சுவாரசியமாக இருந்தது.
*
டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்' பெற்றுக்கொண்டவர், நான் பிரார்த்தித்துவிட்டு வாசிக்கப் போகின்றேன் என தனது பிள்ளையிடம்
சொல்லியிருக்கின்றார். கடவுள் நம்பிக்கையே இல்லாத அவரை, ஒரு
புத்தகம் பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்வது என்பது எவ்வளவு அழகானது. மேலும்
நண்பர் சொன்னார், எனது அம்மம்மா ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகின்றார் என்றால்,
கோயிலில் படையலிட்டு வழிபட்டு விட்டுத்தொடங்குவார் என்று. ஒரு
புத்தகத்துக்கு/ புத்தக வாசிப்பிற்கு இவ்வளவு மரியாதை கொடுக்கும் காலம் ஒன்று
இருந்திருக்கின்றது போலும்.
இப்போது நூல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. நாங்களே
எழுதுகின்றவர்களாகவும் மாறிவிட்டோம். ஆனால் ஒருகாலத்தில் நூல்கள் சாதாரண
மக்களுக்குக் கிடைப்பதென்பது அரிதாகவும், வாசிப்பதென்பது
ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமேயென இறுக்கமான விதிகளுடன் இருந்திருக்கும்
அல்லவா?
புத்தகங்களை வாசிக்கும் பெண்களைப் போன்று இவ்வுலகில் அழகானவர்கள்
எவருமில்லை என்பது எப்போதோ என்னைப் போன்றவர்களால் உறுதியாக எழுதப்பட்டுவிட்ட
தீர்ப்பாகும். மேலும் வாசிப்பவர் யாராயிருப்பினும், அவர் எம்
கேளிர் என அவர்களை அரவணைத்துக் கொண்டாடச் செய்வோம்.
***********
நன்றி:புகைப்படம் - இணையம்
( Aug 03, 2025)


0 comments:
Post a Comment